என்றுமுள்ள செந்தமிழ் (51-60)

என்றுமுள்ள செந்தமிழ்

அந்தணர்க்கு அகரம் ஆயிரம் கட்டுவதாலும் கோயில்கள் ஆயிரம் அமைப்பதாலும் பலன் இல்லை!

(51)

திருமூலர் ஏனைய சித்தர்களைவிட தலைசிறந்த சித்தர்.  காலத்தால் முந்தியவர். மூவாயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார். திருமூலர் மனித நேயத்தையும் சிற்றுயிர்கள் இடத்தும் கருணை காட்டவேண்டும் என்பதையும் வற்புறுத்துகின்றார். இறைவன் உலகத்தையும், நுகர் பொருள்களையும் உயிர்கள் பெற்று இன்புறுவதற்கே படைத்தளித்தான். உயிர்களிடமிருந்து இறைவன் அன்பு ஒன்றைத் தவிர வேறு யாது ஒன்றும் பெற விரும்புவதில்லை. ஆனால் சமயவாதிகள், சடங்கு நெறியில் பற்றுக் கொண்டு நின்று, மனிதனின் பசிக்கு உணவிட விரும்பாது இறைவனுக்குப் படையலிட்டு மகிழ்கின்றனர்.

இறைவன் மனிதன் அளிக்கும் உணவையும், படையலையும் உண்டு மகிழ்கின்றானா என்றால் இல்லை. இறைவன் கவனத்திலும் கணக்கிலும் அவனுக்குப் படைக்கப்படும் படையல் இடம் பெறுவதில்லை. அவன் கணக்கில் இடம்பெற விரும்பினால் பசித்திருப்போருக்கு உணவு அளியுங்கள். அதுவே அவனைச் சென்றடையும் அரிய பெருநெறி என்கிறார் திருமூலர்.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே                                    (திருமந்திரம் – 1857)

உலகில் இரு கோயில்கள் உண்டென்கிறார் திருமூலர். அவை,  (1) படமாடுகின்ற கோயில் (2) நடமாடும் கோயில். நடமாடும் கோயிலாவது உயிர்கள். குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக எழுதி வைத்து வழிபட்டமையால் படமாடக் கோயில் என்றார். ஆண்டவனுக்கு ஈவதை அடியார்க்கு ஈந்தால் அஃது ஆண்டவனைச் சேரும்.  நடமாடும் கோயிலாகவுள்ள அடியார்க்குச் செய்யும் பூசை படமாடக் கோயில் இறைவனுக்குச் செய்யும் பூசையாகும்.

தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான அடியவர்களுக்குச் (வறியவர்களுக்கு) சென்று சேராது. ஆனால் நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனை நேரடியாகச் சென்று சேரும் என்கிறார் திருமூலர்.

இன்று கோயிலில் இருக்கும் இறைவனுக்கு ஆடம்பரமாகச் செலவு செய்து வழிபாடு செய்தலே பெரு வழக்காக இருக்கிறது. அடியவர்களுக்குக் (வறியவர்களுக்கு) கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் இல்லை.

திருமந்திரம் போன்ற சித்தர் இலக்கியங்கள் மக்கள் சமுதாயம் நலன் பெற வேண்டுமென்ற நோக்கில் தான் படைக்கப்பட்டவை.  தொன்றுதொட்டு இக்காலம் வரை அங்ஙனமே இலக்கியங்கள் உருவாகின்றன. திருமந்திரம் இந்தப் பொதுவிதிக்கு விலக்கு அல்ல.

திருமூலர் அவருக்குப் பின்னர் வந்த சித்தர்களைப் போல புரட்சிகரமான கருத்துக்களை தாம் பாடிய பாடல்கள் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவ மன்னர்கள் காலத்திலும் அதன் பின்னர் இடைக்காலச் சோழர்கள் காலத்திலும் சைவம் சமணத்தையும் பவுத்தத்தையும் தோற்கடித்து எழுச்சி பெற்றது.

சமண மதத்தவனான  பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 முதல் 630 வரை) சைவ நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் தன் நோய் தீர்க்கப்பெற்று சைவ சமயத்துக்கு மாறினான் என அறிகிறோம்.

பாண்டிநாட்டை ஆண்ட கூன்பாண்டியன் என்ற நின்றசீர் நெடுமாறன் சமண சமயத்தைச் சார்ந்திருந்ததால் பாண்டிய நாட்டில் சைவ சமயம் குன்றி இருந்தது. சம்பந்தர்  சமணர்களோடு அனல்வாதமும் புனல் வாதமும் செய்து   வெற்றி பெற்றார். திருஞானசம்பந்தரின் அருளினால் நெடுமாறனை மெல்லப் பற்றிய  வெப்பு நோய் குணமாகியது.  இதனால் நெடுமாறன் சமண சமயத்தை நீக்கி சைவத்தில் சேர்ந்தான் என்கிறார்கள்.

பல்லவ,  சோழ மன்னர்கள் காசி, வங்காளம் (முதலாம் இராசேந்திரன்) போன்ற தேசங்களில் இருந்து பிராமணர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டு வந்து எண்ணாயிரம், திருபுவனம், ஆயகுடி, முக்சூடல் போன்ற ஊர்களில் அவர்களுக்கு இறையிலி மான்யங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதி மங்கலங்கள் என்ற புதிய குடியிருப்புகளில் குடியேற்றினார்கள். பிராமணர்கள் வேதம் படிக்க வேத பாடசாலைகளை நிறுவி அவற்றுக்கு நிவந்தம் எழுதி வைத்தார்கள்.

தமிழ் படிக்க யாரும் பள்ளிக்கூடங்கள் கட்டியதாக செய்தி எதுவும் இல்லை. வீட்டுத் திண்ணைதான் தமிழர்களது பள்ளிக்கூடங்களாக இருந்தது. அங்கு நிகண்டு, பாரதம், இராமாயணம், கூட்டல், கழித்தல் ஆசிரியரால் சொல்லிக் கொடுக்கப்பட்டது. வசதி படைத்தோரே இலக்கியம், இலக்கணம் படித்தார்கள்.

திருநாள் பெருநாட்களிலும் வெற்றி விழாக்களிலும் வெளியூர் செல்லும் போதும் மூவேந்தரும் பிராமணர்க்குத் துலைநிறை (துலாபாரம்) பொன் (இரணிய கருப்பம்) ஆவாயிரம் (கோசகஸ்ரம்) முதலிய தானங்களைச் செய்து வந்தனர். (தேவநேயப்பாவாணர் எழுதிய தமிழர் மதம் – பக்கம் 93)

முதலாம் இராச இராசனின் இராசகுரு ஈசானக் குருதேவர், விக்கிரம சோழனுக்கு சுவாமி தேவர்,  மூன்றாம் குலோத்துங்கனுக்கு  சிவாச்சாரியார். முதலாம் இராசேந்திரனின் இராசகுரு சர்வசிவ பண்டிதர். இராசாதி இராசகுலதுங்கனுக்கு சோமேசுவரர் இராசகுருவாக இருந்தனர்.  தமிழ் மன்னர்கள்  வானுயர்ந்த  கோயில்களையும் கோபுரங்களையும் பெருத்த பொருட்செலவில் கட்டினார்கள்.

ஆனால் திருமூலர் இவற்றால் பயன் இல்லை என்கிறார்.  பேர் கொண்ட பார்ப்பார் தங்குமிடம் அகரமாகும்.  பார்ப்பார்  குடியிருப்புக்கள் ஆயிரம் அமைத்து அவற்றை அவர்களுக்குக்  கொடுப்பதால்  பயன் யாது? திருக்கோயில்கள் ஆயிரக் கணக்கில் கட்டி முடிப்பதால்  பயன் யாது?  யாவரும் புகழ்ந்தேத்தும் சிவஞானியாகிய அடியார் ஒருவருக்குப் பகற்பொழுது உண்ண உணவளித்தால் வரும் பயனுக்கு இவ்வறப் பயன்கள் சிறிதும் ஈடாகாது என்கிறார்.

அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென்
சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கிலென்
பகரு ஞானி பகலூண் பலதத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயந் தானே!

அருச்சனை அபிசேடம் செய்தால், தேர் செய்தால், தேர்த் திருவிழா செய்தால், தீர்த்தத் திருவிழா செய்தால் புண்ணியம் கிடைக்கும் அது மறு உலகுக்கு உதவும் என மக்கள் நினைக்கிறார்கள்.  மாறாக மக்களது பசிப்பிணி போக்கக் கொடுத்தால் அதனால் எந்தப் பயனும்  இல்லை என நினைக்கிறார்கள்.

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து வாடும் வன்னி மக்களுக்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு வேளை உணவு நல்கும் பொருளாதார வல்லமை புலம்பெயர் தமிழர்களிடம் இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையினர் அந்த மக்களைப் பற்றிச் சிறிதேனும் சிந்திப்பது இல்லை. கவலைப்படுவதும் இல்லை. (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்

(52)

சித்தர் பாடல்கள் சமுதாய சீர்திருத்தத்தை இலக்காகக் கொண்டவை என்பதைப் பார்த்தோம்.  இன்றும் சமுதாயத்தை சீரழிக்கும் சாதி, சாத்திரம், சடங்கு, சமயம் தீண்டாமை போன்றவற்றைச் சித்தர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர். மக்கள் சாதி, சாதிக்குள் சாதி எனப் பிரிந்து சண்டையிட்டுக் கிடந்ததை சித்தர்கள் அஞ்சாது கண்டித்தனர். மேலும் சித்தர்கள் பல தெய்வ வழிபாடுகளையும்  உருவ வழிபாடுகளையும் கோயில், குளம் போன்றவற்றையும் மிகக் கடுமையாக வெறுத்தனர். ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாதவனை  ஆயிரம் திருநாமம் பாடி ஆயிரம் வடிவம் கற்பிப்பதை சித்தர்கள்  பொய்யென அறிவுறுத்தினார்கள்.  உள்ளத்தில் உறையும் ஒருவனைக்  கோயில் கருவறையில் தேடுவதைப் பார்த்து சித்தர்கள் நகைத்தார்கள்.

சித்தர்கள் அகத்தில் கண்கொண்டு கடவுளை உள்ளத்தில் கண்டு மகிழ்வதே உண்மையான பேரானந்தம் எனக்கருதினர்.  ஊனுடம்பாகிய ஆலயத்தில் உள்ளமாகிய பெருங் கோயில் சிவனைக் கண்டு தெள்ளத் தெளிந்திருக்க வேண்டும் என வற்புறுத்தினர். மனிதர்கள் அக நாட்டம் கொண்டு, புற வழிப்பாட்டை வெறுத்து வாழ்ந்தால் சமுதாயம் ஏற்றத்தாழ்வு அற்றதாகிவிடும் என்பதை உணர்ந்தனர். என்னுள்ளே இருக்கும் தேவன்தான் பிற மனிதர்களிடமும் உறைகிறான் என்ற உணர்வு ஏற்படின்  அனைவரும் சமம் என்ற உண்மை புலப்படும்.

உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தவர்க்குச் சீவன் சிவலிங்கம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
கள்ளப்புலன் ஐந்தும் காளாமணி விளக்கே     (திருமந்திரம்)

எமது மனமே பெரிய கோயில். அக் கோயிலின் கருவறை தசையால் ஆன உடம்பு. அன்பர்களின் குறிப்பறிந்து கொடுத்தருளும் இறைவனுக்கு வாயே கோபர வாசல். நன்கு அறிந்த ஞானிகட்கு ஆன்மாவே சிவலிங்கமாகும். மனதைத் திருட்டு வழியில் இழுத்துச் செல்லும் அய்ந்து புலன்களும் அழகிய விளக்காகும்.

சித்தர்களில் கடும்போக்காளர்  எனப் பார்க்கப்படுபவர் சிவவாக்கியார். அவரும் இதே கருத்தைப் பாட்டாகப் பாடியிருக்கிறார்.

நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?

சுட்ட சட்டியும் அதில் வேகுகின்ற கறியைக் கிளறுகின்ற கரண்டியும் அந்தக் கறிச்சுவையை அறியாதது போல, பரம்பொருள் நம் உள்ளத்தே இருக்க அதை அறியாமல் கற்சிலைக்கு நான்கு வகை மலர்கள் சாற்றுவதும் அதைச் சுற்றி வந்து முணு முணுக்கும் மந்திரம் எங்குள்ளது? நட்ட கல் பேசுமோ? பேசாது!

திருமூலர் மற்றும் சிவவாக்கியாரின் கருத்தை ஒட்டிய கருத்தை திருநாவுக்கரசர் தாம் பாடிய தேவாரத்தில்  வெளிப்படுத்துகிறார்.

காயமே கோயி லாகக் கடிமன மடிமை யாக
வாய்மையே தூய்மை யாக மனமணி யிலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய வாட்டிப்
பூசனை யீச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே.                    (திருநாவுக்கரசர் – நான்காம் திருமுறை)

இந்த உடம்பையே கோயிலாகவும் உலகியலை நீக்கிய மனம் அடிமையாகவும் தூய்மை உடைய மனமே பரம்பொருள் தங்கும் கருவறையாகவும் இறைவனின் அருட்சத்தியான மனோன் மணியே அவன் இலிங்க உருவமாகவும் அமைய, அடியேனுடைய அன்பே நெய்யும் பாலுமாக அவ்விலிங்க மூர்த்தியை மனம் நிறைவு பெற அபிடேகித்துப் பூசிக்கும் அப்பெருமானுக்கு எங்கள் வணக்கங்களையே நிவேதனப் பொருள்களாகப் படைத்தோம் என்பது இதன் பொருள்.

திருமந்திரத்தைத் தோத்திர பாடல்களாவோ சாத்திரப் பாடல்களாகவோ பார்க்க விரும்பாதவர்கள் அதனை அதன் இலக்கியச் சுவைக்காகப் படிக்கலாம். விளக்கு என்ற சொல்லை வைத்து திருமூலர் எப்படிச்  சொல்விளையாடல் செய்கிறார் என்பதற்குக் கீழ்க் கண்ட பாடல் சான்று.

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்கு உடையான்கழல் மேவலும் ஆமே.                                     (திருமந்திரம் 2816 )

விளக்கப் பிளந்து         –     உடம்பு

விளக்கினை ஏற்றி       –     உயிர் ஆற்றல்

விளக்கினுக்குள்ளே      –     மனம்

விளக்கினை தூண்டி      –    அறிவு

விளக்கில் விளக்கை      –    ஆன்மா

விளக்குடையான் கழல்    –    இறை பாதம்—ய

உடல் என்ற விளக்கின் உள்ளே ஒளியாக மற்றொரு விளக்கு உண்டு. அதன் பெயர் ஆன்மா. உடலின் உள்ளே சென்று ஆன்ம ஒளியைத் தூண்டி ஆன்மாவின் மூலம் இறைவனை அறிய முயற்சிப்பவர்கள்  இறைவனின் சொரூப நிலையை அடையலாம். விளக்கைத்  தூண்டுங்கள் உங்களின் உள்ளே இருக்கும் விளக்கைத் தூண்டுங்கள். இறை ஒளி உங்களில் ஒளிரட்டும்.  (வளரும்)


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply