என்றுமுள்ள செந்தமிழ் (21-40)

என்றுமுள்ள செந்தமிழ்

சோழர் கால தமிழ் இலக்கிய கல்வி வளர்ச்சி

(21)

பிற்காலச் சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் வடமொழிக் கல்விக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டதைப் பார்த்தோம். வேத பாடசாலைகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. இருந்தும் கிபி 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழநாட்டில் பேரரசாகத் தோற்றம் பெற்ற சோழர் ஆட்சி தமிழ் இலக்கிய வளர்ச்சி தொடர்ந்தது. தமிழ்மொழி கற்றறிந்த மன்னர்களும் இருந்தனர்.

சங்க காலத்தில் அகப்பாடல்களும் புறப்பாடல்களும் இயற்றப்பட்டன. சங்கம் மருவிய காலத்தில் காப்பியங்கள் மலர்ந்தன. அதனைத் தொடர்ந்து நீதி நூல்கள் தோற்றம் பெற்றன. பல்லவர் காலத்தில் பக்தி இலக்கியம் தளைத்தோங்கியது. முதலாம் இராசராசன் ஆட்சிக் காலத்தில் நாயன்மார்கள் பாடிய தேவார திருவாசகங்கள் நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டன.

இன்று மேன்மைகொள் சைவ நீதி தளைக்க உருவாக்கப்பட்ட சைவ ஆதீனங்கள் சில தேவார திருவாசகங்கள் ஓதப்படுவதை எதிர்க்கின்றன. கோயில் குடமுழுக்கு விழாக்களில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு தருமபுரம், திருப்பனந்தாள் ஆதினங்கள் உயர்நீதிமன்றம் சென்று வழக்காடி தடை வாங்கியிருப்பதை இங்கே பதிவு செய்தே ஆகவேண்டும். இது தமிழ்மொழி பயன்பாட்டுக்கு தமிழர்களே கோடரிக்காம்பாகச் செயல்படுவதைக் காட்டுகிறது.

இந்த இடத்தில் தமிழ்மொழி வளர்ச்சி பற்றிச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கலாம் என நினைக்கிறேன். தமிழர் ஆட்சி, தமிழ்மொழி வளர்ச்சி தமிழ் இலக்கிய வளர்ச்சி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து செல்பவை. தமிழ்மக்களை தமிழ்மன்னர்கள் ஆண்டபோது தமிழ்மொழி வளர்ச்சி கண்டது. தமிழ்மொழி வளர்ச்சி கண்டபோது தமிழ் இலக்கியம் வளர்ச்சி கண்டது. அப்படி இல்லாத போது அதற்கு எதிர்மாறான விளைவுகள் ஏற்பட்டன.

தமிழ் இலக்கிய வளர்ச்சியை வரலாற்றுக் கண்ணோடு பார்க்கும் ஆசிரியர்கள் அதனை கால வாரியாகவும் பொருள் வாரியாகவும் அல்லது இரண்டையும் இணைத்து வரையறை செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கால அடிப்படையில் பழங்காலம், இடைக் காலம், பிற்காலம், இக்காலம் எனப் பகுப்பர். அல்லது சங்க காலம், சங்கம் மருவிய காலம், களப்பிரர் காலம், பல்லவர் காலம், நோழர் காலம், நாயக்கர் காலம், அய்ரோப்பியர் காலம், இக்காலம் எனவும் பகுப்பர். சிலபோது பொருள் அடிப்படையில் சங்க இலக்கிய காலம், நீதி இலக்கிய காலம், பக்தி காலம், உரையாசிரியர் காலம், சமய சாத்திரகாலம், சிற்றிலக்கிய காலம் எனப் பகுப்போரும் உண்டு.

தமிழறிஞர் மு.வரதராசன் தாம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற ஆய்வு நூலில் தமிழ்,லக்கிய வளர்ச்சியை காலவாரியாகவும் பொருள்வாரியாகவும் பின்வருமாறு வகுத்துள்ளார்.

பழங்காலம்

சங்க இலக்கியம் – கிமு 500 முதல் கிபி 250 வரை அகம் புறம் பற்றிய பாடல்கள்.

நீதி இலக்கியம் – கிபி 150 முதல் கிபி 500 வரை.
திருக்குறள் முதலிய நீதி நூல்கள். கார் நாற்பது போன்ற வெண்பா நூல்கள்.
பழைய காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொளாயிரம் முதலியன.

இடைக்காலம்

பக்தி இலக்கியம் – கிபி 600 முதல் கிபி 900 வரை.
நாயன்மார் ஆழ்வார் பாடல்கள். கலம்பகம் போன்ற பலவகை நூல்கள்.

காப்பிய இலக்கியம் – கிபி 900 முதல் 1500 வரை
சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய சமண பவுத்த நூல்கள்.
இறையனார் களவியல் முதலிய இலக்கண நூல்கள்.
சேக்கிழார், கம்பர், ஒட்டக் கூத்தர், அவ்வையார் முதலியவர்கள்
இயற்றிய நூல்கள். உலா, பரணி, பிள்ளைத் தமிழ்.

உரை நூல்கள் – கிபி 1200 முதல் 1500 வரையில்
இளம்பூரணர், பேராசிரியர் முதலானவர்கள்.
வைணவ விளக்க நூல்கள், சைவ சித்தாந்த சாத்திர நூல்கள்.
சிறு நூல்கள். தனிப்பாடல்கள்.

புராண இலக்கியம் – கிபி 1500 முதல் கிபி 1800 வரை.
புராணங்கள், தலபுராணங்கள். இஸ்லாமிய இலக்கியம். கிறித்துவ தொண்டு, வீரமாமுனிவர் முதலானவர்கள். உரைநடை வளர்ச்சி.

இக்காலம்

பத்தொன்பதாம் நூற்றாண்டு

கிறித்தவ இலக்கியம். இராமலிங்கம் வேதநாயகர் முதலானவர்கள்.
நாவல் வளர்ச்சி கட்டுரை வளர்ச்சி.

இருபதாம் நூற்றாண்டு

பாரதி, பாரதிதாசன், கல்கி, புதுமைப்பித்தன்.
சிறுகதை, நாவல், நாடகம். வாழ்க்கை வரலாறு, கட்டுரை,
ஆராய்ச்சி முதலானவை.

சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி என்ற அய்ம்பெருங்காப்பியங்கள். முதல் இரண்டு காப்பியங்களும் சங்கம் மருவிய காலத்தவை. எஞ்சியவை சோழர் காலத்தவை. சமண காப்பியமான வளையாபதி இன்று கிடைக்கவில்லை. அதன் ஆசிரியர் யார் என்பதும் தெரியவில்லை. இந்த நூலில் உள்ள பாடல்களை உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டி எழுதியுள்ளார்கள். அந்தவிதத்தில் 72 பாடல்கள் கிடைத்துள்ளன.

உ.வே. சாமிநாதையர் எழுதிய என் சரித்திரம் என்ற நூலில் வளையாபதியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த நூலை திருவாவடுதுறை மடத்து நூலகத்தில் வளையாபதி ஏட்டுச் சுவடியை தாம் பார்த்ததாகவும் அந்தக் காலத்தில் அத்தகைய பழைய நூல்களில் தனக்குப் பற்று உண்டாகவில்லை என்றும் பிற்காலத்தில் பழைய நூல்களை ஆராய வேண்டுமென்ற மனநிலை உண்டான பிறகு அதனைத் தேடிப் பார்த்தபோது அந்தச் சுவடி மடத்து நூலகத்தில் காணப்படவில்லை என எழுதியுள்ளார். நல்லூர் ஆறுமுக நாவலர் தான் பதிக்க இருந்த நூல்பட்டியலில் வளையாபதி காப்பியத்தையும் சேர்த்திருந்தார். வளையாபதி காணாமல் போனதற்கு அதீத சைவ சமயப்பற்றே காரணமாகும். சைவம் தலையெடுத்த போது சமண, பவுத்த இலக்கியங்கள் நீருக்கும் நெருப்புக்கும் இரையாகின.

குண்டலகேசியை இயற்றியவர் பெயர் நாதகுத்தனார். குண்டலகேசி ஒரு பவுத்த காப்பியம். சீவகசிந்தாமணியைத் திருத்தக்க தேவர் என்ற சமண முனிவர் எழுதினார். சீவகன் எட்டுப் பெண்களைத் திருமணம் புரிந்த வரலாற்றைக்கூறி அவன் வீடுபேறு அடைந்த கதையைக் கூறுகிறது.

அய்ம்பெரும் காப்பியங்கள் போல் தமிழில் அய்ஞ்சிறு காப்பியங்கள் உண்டு. உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி போன்ற சமண, பவுத்த காப்பியங்கள் குறிப்பிடத்தக்கவை. தோளாமொழித்தேவர் 2331 பாடல்களைக் கொண்ட சூளாமணியை இயற்றினார். மேருமந்திர புராணத்தை வாமனாச்சாரியார் இயற்றினார்.

பிற்காலச் சோழர் காலத்தில் (10 – 13 ஆம் நூற்றாண்டு) பல இலக்கண நூல்கள் இயற்றப்பட்டன. சமண துறவியான அமுதசாகரர் இயற்றிய யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலவிருத்தி, நாற்கவிராசநம்பி இயற்றிய நம்பியகப் பொருள், குணவீரபண்டிதரின் நேமிநாதம் மற்றம் வச்சணந்தி மாலை, அய்யாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலை புத்தமித்திரரின் வீரசோழியம், வடமொழித்தண்டியின் தண்டியலங்காரம்; பவணந்தி முனிவரின் நன்னூல் ஆகியன இயற்றப்பட்டன. இந்நூல்களுக்கு பெரும்பாலும் தொல்காப்பியமே முதல் நூலாக விளங்கியது. (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

பேரறிஞர் அண்ணா

22

பேரறிஞர் அண்ணாவின் இலக்கியப் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்த புதையல்கள்.

சேடி இல்லாத இராசகுமாரி
சோடி இல்லாத மாடப்புறா
மோடி செய்யாத வேதாந்தி
உலகிலே இருக்க முடியாது

இந்த உரையாடல் பேரறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி நாடகத்தில் இடம் பெற்றவை. பின்னர் அந்த நாடகம் அதே பெயரில் 1948 இல் திரைப்படமாக வெளிவந்தது. திரைப்படத்துக்கும் கதை, உரையாடல் இரண்டையும் அண்ணாவே எழுதியிருந்தார்.

சம்பூர்ண இராமாயணம், அரிச்சந்திரா, சிவகவி போன்ற புராணப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் சாதி வேற்றுமை, மூடநம்பிக்கை போன்றவற்றைச் சாடி வரையப்பட்ட கதை வேலைக்காரி. பெரிய மனிதர், பக்திமான் என்ற போர்வையில் சமுதாயத்தில் இரட்டை வேடம் போட்டுத் திரிபவர்களின் முகமூடியை அண்ணா இந்தத் திரைப்படம் மூலம் கிழித்துக் காட்டினார். வேலைக்காரித் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிச் சாதனை படைத்தது.

வேலைக்காரி நாடகத்தைப் பார்த்த கல்கி கிருஷ்ணமூர்த்தி அறிஞர் அண்ணாவை தமிழ்நாட்டின் பேர்நாட் ஷோ என வருணித்து எழுதியிருந்தார். வேலைக்காரித் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு திறனாய்வு எழுதிய கல்கி அந்தப் படத்துக்கு அண்ணா எழுதிய உரையாடல்கள் “உறையில் இருந்து உருவிய வாள் போல் மின்னியது” என மனம் திறந்து பாராட்டியிருந்தார். எதுகை மோனையோடு எழுதப்பட்ட உரையாடல் தமிழ் உரைநடைக்கு முன்னர் இல்லாத அழகையும் இனிமையையும் சேர்த்தன.

வேலைக்காரி மட்டுமல்ல அண்ணாவின் படைப்புகளான பார்வதி பி.ஏ. குமாஸ்தாவின் பெண், இரங்கோன் ராதா, ஓர் இரவு இன்னபிற அவர் எழுதிய தலைசிறந்த படைப்பு இலக்கியங்கள் ஆகும்.

மராட்டியத்தை ஆண்ட மாவீரன் சிவாஜி சனாதனதர்மக் கொடுமையால் மகுடம் சூட்ட முடியாதபடி சூழ்ச்சி வலை பின்னப்பட்டதை எடுத்துக்காட்டி ‘விதையாது விளையும் கழனிகளிடம் கவனம் தேவை’ என எச்சரித்து அண்ணாவே காகப்பட்டராக நடித்தார். சிவாஜி கண்ட இந்துராஜ்யம் என்ற நாடகம்; காலத்தால் என்றும் அழியாத ஒன்றாகும்.

அண்ணாவின் அடுக்குமொழி மேடைப் பேச்சும் எழுத்தும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தது.

தந்தை பெரியாரின் சீடராகப் பொது வாழ்வைத் தொடங்கிய அண்ணா அவர்கள், பெரியாரது சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை தமக்கே உரிய தனிப் பாணியில் பேசியும் எழுதியும் கற்றோரையும் மற்றோரையும் – குறிப்பாக இளையோரைக் கவர்ந்தார்.
இலக்கியத்தில் அண்ணா எந்தத்துறையையும் விட்டு வைக்கவில்லை. கட்டுரை, கடிதம், கதை, புதினம், நாடகம், திரைப்படம் என அவர் தொடாத துறை இல்லை எனலாம். அவர் விட்டுவைத்த துறை கவிதை மட்டுமே!

அண்ணா எழுதிய ஆரியமாயை, அவர் பேசிய ஏ தாழ்ந்த தமிழகமே இரண்டும் கால வெள்ளத்தால் அழிக்க முடியாத வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். 1942 ஆம் ஆண்டு அண்ணா எழுதிய நீதி தேவன் மயக்கம் என்ற நாடகம் தமிழ் இலக்கிய உலகம் இதுவரை கண்டிராத புதிய படைப்பு! ஒரு புதிய புரட்சி!

‘இரக்கமெனும் ஒரு பொருள் இல்லா அரக்கன்’ என இராவணனைக் கம்பன் வருணித்த சொற்றொடரை மட்டும் கருப்பொருளாக்கிக் கம்பனைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து, “நான் இரக்கமில்லா அரக்கன் என்றால் – கௌதமரின் மனைவி அகலிகையை, பொய் வேடம் பூண்டு கற்பழித்த இந்திரனை – நீங்கள் ஏன் இரக்கமில்லா அரக்கன் எனச் சொல்லவில்லை’’ என அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளை இராவணன் மூலம் தொடுத்து நீதி தேவன் பதில் அளிக்க முடியாமல் மயங்கிய காட்சியை நாடகத்தில் அண்ணா தீட்டியிருந்தார். மக்கள் மனதில் இன்றும் நிறைந்திருக்கும் ஒப்பரிய படைப்பு இதுவாகும்.

விடுதலை யின் ஆசிரியராக, குடிஅரசின் எழுத்தாளராக, திராவிட நாடு மற்றும் காஞ்சி இதழ்களின் ஆசிரியராக இருந்து அவர் வடித்த கட்டுரைகள் பெருமிதமானவை!

அண்ணா திராவிடநாடு கிழமை ஏட்டிலும் பின்னர் காஞ்சி ஏட்டிலும் தம்பிக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை. அந்தக் கடிதங்களின் மொத்த எண்ணிக்கை 290 ஆகும். Homeland மற்றும் Homerule  ஆங்கில இதழ்களின் மூலம் அண்ணா தம்பிக்கு வரைந்த கடிதங்கள் மொத்தம் 26 ஆகும். அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்களின் மொத்தப் பக்கங்கள் 3000 க்கும் அதிகமாகும்.

டால்ஸ்டாய், பெர்னாட்ஷா, நேரு, காந்தி ஆகியோரின் கடிதங்கள் வரலாற்றுப் புகழ் வாய்ந்தவை. தமிழ் உலகில் கடித இலக்கியத்தைத் தோற்றுவித்த பெருமைக்கு உரியவர் அண்ணா ஆவர். ஆங்கில இலக்கிய உலகிற்கு மட்டுமே அறிமுகமான திறனாய்வுத் துறையினை ஒரு புதிய கோணத்தில் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் அண்ணவேதான். வாழ்க்கையைத் திறனாய்வுதான் இலக்கியம். மக்களுக்காக எழுதப்படுவதுதான் இலக்கியம். இந்த இலக்கணத்துக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா!

மகாகவி பாரதியார் எவ்வாறு தமிழ்க் கவிதைக்கு அழகும் இனிமையும் புதுமையும் சேர்த்தாரோ அதே போல் அண்ணா உரை நடைக்கும் மேடைப் பேச்சுக்கும் அழகும் இனிமையும் புதுமையும் சேர்த்தார். அவரது மேடைப் பேச்சைக் கேட்க கற்றோரும் மற்றோரும் அலை அலையாகக் கூடினார்கள்.

அண்ணாவின் அழகான அடுக்குமொழிப் பொன்மொழிகள் புகழ் வாய்ந்தவை ஆகும்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு;
தம்பீ! கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு;
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு;
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்;
சட்டம் ஒரு இருட்டறை; வக்கீலின் வாதம் அந்த இருட்டைப் போக்கும் விளக்கு
திரௌபதிக்கு துச்சாதனனா சேலை தரமுடியும்?
புள்ளிமான் குட்டிக்கு புலியா பால் தரமுடியும்?
பச்சைக் கிளிக்கு வர்ணம் பூசுவதா?

சேர, சோழ, பாண்டியர் தமிழை வளர்த்தார்கள். புலவர்களும் பண்டிதர்களும் தமிழை வளர்த்தார்கள்;. சமயங்களும் ஆன்மீக மடங்களும் தமிழை வளர்த்தன. அவர்கள் தமிழை மக்களிடம் கொண்டு சென்றார்கள்! ஆனால் அண்ணாவோ மக்களைத் தமிழிடம் கொண்டு வந்தார்! ஆங்கிலமும் வடமொழியும் ஆட்சி செய்த தமிழ் மண்ணில் தமிழ்த் தாய்க்கு மகுடம் சூட்டியவர் அண்ணா! பண்டிதர்களிடம் சிறைபட்டுக் கிடந்த தமிழை விடுதலை செய்து பாமரர்களுக்கும் சொந்தமாக்கியவர் அண்ணா!

நமஸ்காரம், அக்ராசனர், சபாநாயகர் என்ற வார்த்தைகளை மாற்றி வணக்கம், தலைவர், பேரவைத் தலைவர் என்ற தூயதமிழ்ச் சொற்களைச் சலங்கை கட்டி நடமாடவிட்டவர் அண்ணா!

அகநானூறு அறிந்தவர்கள், புறநானூறு படித்தவரகள், கற்றார் போற்றும் கலித்தொகை கற்றவர்கள், சங்கத் தமிழில் கரைகண்டவர்கள், புலவர்கள், பண்டிதப் பெருமக்கள் இந்தி தமிழ்நாட்டுக்குள் நுழைந்த போது – அன்னை தமிழுக்கு இடர் வந்த போது – அது குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் சுயநலச் சூறாவளியில் சிக்குண்டு மொழியுணர்வை இழந்து சும்மா இருந்த காலத்தில் அண்ணாவும் அவரது தம்பிமாருமே “எப்பக்கம் வந்திடும் இந்தி? எத்தனை பட்டாளம் அது கூட்டிவரும்” என ஆர்ப்பரித்து இந்தியை விரட்டி அடித்தார்கள். அண்ணா மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்தியை அரசமொழியாக ஏற்றுக்கொள்ளாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

அண்ணாவின் எழுத்தும் மேடைப் பேச்சும் 1967 ஆம் ஆண்டு அவர் தொடக்கிய திமுக தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிப்பதில் பெரும்பங்கு வகித்தது.

சுயமரியாதைத் திருமணம் செல்லும்படி சட்டம், சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல், தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை தமிழும் ஆங்கிலமும்தான்; அரச அலுவலக மொழிகள், மதச் சார்பற்ற அரசில் எந்த மதக் கடவுளர் படங்களுக்கும் இடமில்லை என்பவை முதல்வர் அண்ணாவின் நடவடிக்கைகள் ஆகும். குறுகிய காலம் ஆட்சிப் பொறுப்பில் அவர் இருந்தாலும் என்றென்றைக்கும் வரலாறாக வானோங்கி நிற்கக் கூடியவை ஆகும்.

இவற்றைவிடப் பெருமை என்னவென்றால் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுகவும் அதிமுகவும் அண்ணா பெயரைச் சொல்லியே ஆட்சியை மாறி மாறிப் பிடித்து வருகின்றன!

‘தேமதுரத் தமிழோசை தெருவெல்லாம் முழங்கவேண்டும்’ என்று இனிய கனவு கண்டவர் கவியரசு பாரதியார். முப்பத்து ஒன்பது வயதுக்குள் தன் பாட்டுத் திறத்தால் தமிழை வையத்தில் பாலிக்க வைத்தவர்.

பேரறிஞர் அண்ணா என்றுமுள செந்தமிழால் தமிழ் இலக்கிய உலகில் புதுமை செய்தவர். புரட்சி செய்தவர். கால வெள்ளத்தால் அழியாத அவரது அற்புதப் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்த புதையல்கள். (பேரறிஞர் அண்ணாவின் 100 ஆவது ஆண்டு நினைவாக இக்கட்டுடரை வெளிவருகிறது)


என்றுமுள்ள செந்தமிழ்

(24)

தமிழ்மொழிக்கு இனிமை சேர்த்த பாரதியார்

நக்கீரன்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்!

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா”

“வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!”

இவ்வாறு தமிழ் மொழியின் வண்மையையும் தண்மையையும் பாரதியார் மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மேலும் –

“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

என்று மகாகவி பாரதியார் பெருமிதத்தோடு பாடியிருக்கிறார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு பன்மொழிப் புலமை இருந்தது. அவரது தாய் மொழியான தமிழைத் தமிழ்ப் பண்டிதர்களிடம் கற்றார். காசி பல்கலைக் கழகத்தில் (1898-1902) இந்தியும் வடமொழியும் கற்றார். ஆங்கில மொழிக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு அவருக்கு ஆங்கிலம் படித்திருந்தார். தன் கைப்பட இந்து நாளேட்டுக்கு ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதியிருக்கிறார். பாரதியார் புதுவையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததால் பிரஞ்சுமொழியும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

எனவே தமிழ்மொழியை ஏனைய மொழிகளோடு ஒப்பீடு செய்து “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” எனத் தீர்ப்பு வழங்கும் தகைமை அவருக்கு இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்றும் “வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!” என்றும் அறுதியிட்டுக் கூறினார்.

பாரதியார் இந்த மண்ணுலகத்தில் 39 (1882-1921) அகவை மட்டுமே வாழ்ந்து மறைந்தவர். அவர் வாழ்ந்த காலம் குறுகியது என்றாலும் பாரதியாரே உச்சி மீது வைத்துப் பாராட்டிய கல்வியில் பெரிய கம்பன், நெஞ்சை அள்ளும் சிலம்பு படைத்த இளங்கோ, வானுயர் வள்ளுவர் இவர்களோடு ஒப்பிட்டுப் பேசக் கூடியவர். தமிழ் மொழிக்கும் தமிழினத்துக்கும் ஒரு புதிய நீர்மையையும் சீர்மையையும் உண்டாக்கியவர். தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதிய எழுச்சியையும் மொழிப் புரட்சியையும் செய்தவர். தனது பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலிக்கச் செய்ததோடு தமிழ்த் தேசியத்துக்குப் பூபாளம் பாடியவர். அவரது அழியாத கவிதைகளில் சுவை, நயம், வளம், சொல் யாவும் புதிதாக இருந்தன.

“………………………………………..பெண்ணரசின்
மேனி நலத்தினையும் வெட்டினையுங் கட்டினையும்
தேனி னினியாள் திருத்த நலத்தினையும்,
மற்றவர்க்குச் சொல்ல வசமோ? ஓர் வார்த்தை
கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான் கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்”

வேறு மொழியில் உலகக் கவிஞன் யாராவது பெண்ணின் மேனி நலத்தினையும், வெட்டினையும், கட்டினையும் இவ்வாறு வருணித்திருப்பான் என்பது அய்யமே!

“காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் -அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்குக்
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிள நீரும்,
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போல – நிலாவொளி
முன்பு வரவேணும் – அங்கு
……………………………………………………
பாட்டுக் கலந்திடவே -அங்கேயொரு
பத்தினிப் பெண் வேணும் –
எங்கள் கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் ……..”

தமிழகம் கைவிட்ட நிலையில் வாழ்நாளெல்லாம் பட்டினியோடு போரிட்ட ஒரு கவிஞனின் ஆசை சிறகடித்துப் பறக்கிறது!

தமிழரும் தமிழ்மொழியும் நலிவுற்று தமிழ் படித்தோரை தாழ்வாகப் பார்க்கும் கால கட்டத்தில் பாரதியார் பிறந்தார்.

கிபி பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சோழப் பேரரசு வீழ்ச்சியுற்று இருந்த இடம் இல்லாது மறைந்து போயிற்று. அதன் பின்னர் 12 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ் நாட்டில் பாண்டியர்கள் எழுச்சி பெற்றார்கள். அவர்களும் தேவகிரி யாதவர், வாராங்கல்லை ஆண்ட காகாத்தியர், துவாரசமுத்திரத்தில் இருந்த போசகர் ஆகியரோடு ஓயாது போரில் ஈடுபட்டு தக்கணத்து அரசியலையும் தமிழகத்து அரசியலையும் நலிவடையச் செய்தனர்.

15 ஆம் நூற்றாண்டு தொடக்கம் மாறி மாறி தமிழகத்தை தெலுங்கு நாயக்கர், கன்னடியர், தஞ்சை மராட்டியர், நாவாப்புகள், போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர், பிரான்சுக்காரர், ஆங்கிலேயர் போன்ற அயலார் ஆண்டனர்.

சோழ, பாண்டியர் ஆட்சிகள் வீழ்ச்சியடைந்த பின்னர் கற்றோரும் மற்றோரும் போற்றக் கூடிய இலக்கியம் ஒன்று கூடப் படைக்கப்படவில்லை.

புலவர்கள் தோன்றவில்லை என்பதல்ல காரணம். ஏராளமான புலவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் படைத்த சிற்றிலக்கியங்களும் தலபுராணங்களும் காலவெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரைசேரவில்லை.

சங்ககாலப் புலவர்கள் விழுமிய கருத்தாளமுள்ள பாடல்களைப் பாடினார்கள். சொல் அலங்காரத்தைவிட கருத்துக்கு முதன்மை இடம் கொடுத்தார்கள்.

.இடைக்காலப் புலவர்கள் கருத்தைவிட சொல் அலங்காரத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். சொற்களால் ஆகிய ஆடை அணிகளை அணிவித்து மகிழ்ந்தனர். கருத்தைப் பற்றிய கவலை அவர்களுக்கு இருக்கவில்லை.

இந்நிலை பாட்டுக்கொரு புலவன் பாரதி தோன்றும் வரை நீடித்தது. இதனை பாரதியாரே சொல்கிறார்.

கன்னனோடு கொடை போயிற்று! உயர்கம்ப
நாடனுடன் கவிதை போயிற்று!

தாழ்வுற்று வறுமை மிஞ்சி இருந்த தமிழுக்கு மீண்டும் வாழ்வு தந்தவர் பாரதியார். தமிழ்மொழி இருந்த சிறப்பையும் அது தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்த வாழ்வையும் பின்னர் யாவும் அழிவுற்றதையும் பாரதியார் மனம் நொந்து பாடியிருக்கிறார்.

“இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு
கூறத் தகா தவன் கூறினர் கண்டீர்!

“புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழில் இல்லை!

சொல்லவும் கூடுவதில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினி சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்!

என்றந்த பேரை உரைத்தான் – ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்த்திங்கு சேர்ப்பீர்!

பாரதியார் கனவு கண்டது போல உலகின் எட்டுத்திக்கும் தமிழர்கள் இன்று பரந்து வாழ்கிறார்கள். ஆனால் கலைச் செல்வங்கள் யாவும் சேர்த்தோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். பொரும் தேட வேண்டும் என்ற அவா எம்மிடம் மேலோங்கி இருப்பது போல் மொழி பேணப்பட வேண்டும் என்ற ஆசை எம்மிடம் இல்லை. அதனால்தான் நாம் குடிபுகுந்த நாடுகளில் மட்டும் அல்லாமல் தமிழகத்திலும் மெல்லத் தமிழ் செத்துக் கொண்டிருக்கிறது. வழிபாடு வடமொழியில், வழக்காடு மன்றம் ஆங்கிலத்தில், ஆட்சி ஆங்கிலத்தில், இசை தெலுங்கில் இவ்வாறு இன்றும் தமிழர் வாழ்வில் பிறமொழி மேலாண்மையே தலை தூக்கி நிற்கிறது.


என்றுமுள்ள செந்தமிழ்

உலகில் வாழும் மொழிகளில் தமிழ் 15 ஆவது இடத்தில்

(25)

தமிழ் மொழி பல நூற்றாண்டுகளாகவே வந்தேறி அரசுகளால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. பிறமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பால் தமிழினமும் தமிழ்மொழியம் வீழ்ச்சியுற்று தாழ்வு அடைந்தன. சோழப் பேரரசு, விசய நகர அரசுகளால் கோயில்களில் இருந்து தமிழ்மொழி வெளியேற்றப்பட்டது. நாயக்கர் ஆட்சியில் தமிழிசை இசைமேடைகளில் இருந்து தெலுங்கு இசையால் அகற்றப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியில் ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும் அரசமொழியாகவும் நடுவர்மற்ற மொழியாகவும் ஏற்றம் பெற்றது. தமிழ்மொழி ஒதுக்கப்பட்டது.

தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகப் படியாமல் பல்கலைக் கழகம்வரை படித்து பட்டம் பெறலாம் என்ற நிலையிருக்கிறது. அண்மைக்காலத்தில்தான் தமிழ்மொழி கட்டாய பாடமொழியாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்மொழி கற்கை மொழியாக ஆக்கப்படவில்லை.

தமிழ் மொழியைத் தமிழகத்தின் அனைத்து தொடக்கப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ஆங்கில மொழியோடு கட்டாயபாடமாக கற்பிக்கும் சட்டம் (Tamil Nadu Learning Act, 2006) 2006 இல் யூன் மாதம் தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேடப்பட்டது.

இச்சட்டம் தமிழ் மொழியை கற்கை மொழியாக்கவில்லை. தமிழிவழி அனைத்துப் பாடங்களையும் கற்க வலியுறுத்தவில்லை. இச்சட்டத்தின் படி தமிழகத்தில் இயங்குகிற தனியார் மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் இச்சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. இச்சட்டம் அரசு உதவி பெறாத பாடசாலைகள் மற்றும் சிறுபான்மையினர் நடத்தும் பாடசாலைகளுக்கும் பொருந்தும்.

2006 – 2007 கல்வி ஆண்டிலிருந்து முதலாம் வகுப்பில் இருந்து படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக பயிற்றுவிக்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டாய மொழிப்பாடங்களாக அமையும். ஆனால் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் வழக்கம் போல ஆங்கிலத்தில் மட்டும் பயிற்றுவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் பல்கலைக் கழகத்தில் மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்புகள் ஆங்கிலமொழி மூலமே கற்ப்பிக்கப்படுகின்றன. இதனால் ஆங்கில வழிப் பள்ளிகள் பணச் செழிப்பில் புருளுகின்றன. தாய்த் தமிழ்ப் பள்ளிகள் கூரை கூட இல்லாது வறுமையில் மூழ்கிக் கிடக்கின்றன.

கல்வி சிறந்த தமிழ்நாட்டில் ஆட்சியில் ஆங்கிலமும் இந்தியும் கோயில்களில் சமற்கிருதமும் இசையில் தெலுங்கும் கோலோச்சுகின்றன.

தமிழ் வழக்கறிஞர்கள் தமிழில் வழக்காடும் உரிமை கூட இல்லாதிருக்கின்றனர்.

‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று எழுதி வைத்து விட்டு எதிலும் தமிழ் இல்லை என்ற நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

தமிழில் உயர் கல்வி வழங்குகின்ற உரிமையை இந்திய அரசின் தொழில் நுட்ப ஆணையம் தடுக்கின்றது. தமிழில் வழக்காடும் உரிமையை உச்ச நீதிமன்றம் தடுக்கிறது. இந்திய மத்திய அரசு சென்னை உயர்நீதி மன்றம் என்று தமிழில் பெயர்ப்பலகை வைக்கக் கூட அனுமதி மறுக்கிறது.

அடிமைத் தமிழக அரசோ அனைத்து அரசு ஆணைகளையும் ஆங்கிலத்தில் பிறப்பிக்கிறது.

தமிழ்நாட்டில் பெரும்பான்மை வணிக நிலையங்களின் பெயர்ப் பலகைகள் ஆங்கிலத்தில் மட்டும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. பெயர்களும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. தப்பித்தவறித் தமிழிலும் பெயர்கள் எழுதப்படும் போது அவை சின்ன எழுத்தில் ஆங்கிலப் பெயருக்குக் கீழே எழுதப்படுகின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் பிறமொழிப் பெயர்ப் பலகைகளை அழிக்கும் போராட்டத்தை தமிழ் உணர்வாளர்கள் நடத்தினர். போராட்டத்தில் இராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். கடைகளின் ஆங்கிலப் பெயர்களையும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளையும் கரி பூசி அழித்தனர். இதையடுத்துப் பொது அமைதிக்கு ஊறு விளைவித்ததாகவும் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி இராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மதுரையிலும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் உணர்வாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் பின்னணியில் Ethnologue என்ற அமைப்பு உலக மொழிகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை மனதுக்குச் சற்று ஆறுதல் அளிக்கிறது. இந்த அமைப்பு 1996 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பன்னாட்டு மொழியுரிமை அறிவித்தல்;படி ஒரு மொழியின் வரலாற்றுத் தன்மை, அதன் எல்லை, உடன்பாடு போன்றவையை அடிப்படையாக வைத்து மொழிகள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன.

மொழி ஒரு இனத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் சொல்கிறது. உலகில் இன்று 6,912 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. இதில் பாதி விரைவில் அழிந்தொழிந்து போகும் பட்டியலில் இருக்கின்றன. 2,261 மொழிகள் எழுத்துருவைப் பெற்றுள்ளன. ஏனைய மொழிகள் பேச்சு வழக்கில் மாத்திரமே உள்ளன. உலக வழக்கும் இலக்கிய வழக்கும் கொண்ட மொழிகள் 250 அளவில் இருக்கின்றன.

ஆசியாவில் மட்டும் 2,200 மொழிகள் பேசப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் 2,000 மொழிகளும், பசுபிக் நிலப்பரப்பில் 1,300 மொழிகளும் அய்ரோப்பாவில் 230 மொழிகளும் பேசப்படுகின்றன. இந்தோனிசியாவில் ஆகக் கூடுதலாக 694 மொழிகள் உள்ளன. அடுத்ததாக பப்புவா நியூ கினியில் 673 மொழிகள் காணப்படுகின்றன. இந்தியா நைசீரியாவை (455) அடுத்து 4 ஆவது இடத்தில் (337) இருக்கிறது.

உலகளவில் இத்தனை மொழிகள் இருப்பதற்கு ஒரே காரணம் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் வாழ்வதுதான்.

ஒவ்வொரு மொழிக்கும் மொழிக் குடும்பம் உண்டு. அந்த மொழிக் குடும்பத்தில் தாய்மொழி எனும் மூலமொழியும் அதற்கு அடிப்படையான பிறிதொரு மொழிக் குடும்பத்துடன் உறவும் உண்டு. ஆக உலகம் பல மொழி பேசும் பல இனக் குழுக்களின், பல நிறத்தவர்களின் உறைவிடமாகும்.

இந்த நிலையில், உலகில் வாழும் மொழிகள் என்ற அடிப்படையில் தமிழ்மொழி 15 ஆவது இடத்தை பெற்றுள்ளது. சிங்களம் 68 ஆவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மூத்த மொழி என்ற பெருமையை தமிழ் பெற்றுள்ளது. தமிழ் செம்மொழியாக 2004 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ், தென்னிந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதி மற்றும் இலங்கையின் மலைநாட்டுப் பகுதி என்பவற்றில் தமிழ் மொழி புழக்கத்தில் உள்ளது. தமிழ் மொழிக்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. போர்ச்சுக்கல், நெதர்லாந்து அய்க்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இதற்கான சான்றுகள் உள்ளன.

ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாக வேற்று இனத்தவர்களது பாதிப்புக்குள்ளான தமிழ் மொழி பல இடையூறுகளைக் கடந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிடலாம். இருந்தும் தமிழ் மொழிக்கு கருப்புப் பக்கமும் இருக்கிறது.

செந்தமிழின் தனித்தன்மை மற்றும் அதன் தூய்மை காக்கப்படாது, குறிப்பாக தமிழ்நாட்டு ஊடகங்களில் பேரளவாகவும் புலம்பெயர் நாடுகளில் சிறிதளவாகவும் காணப்படுகின்றன.

தமிழகத்தில் செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றில் மொழித்தூய்மை காக்கப்படுவதில்லை. தமிழோசை நாளிதழ் மக்கள் தொலைக்காட்சி போன்றவை விதி விலக்காக உள்ளன. பேச்சிலும் எழுத்திலும் ஆங்கிலம் மற்றும் வடமொழிச் சொற்கள் தேவைக்கு அதிகமாகக் கலக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் பிற மொழிச் சொற்கள், ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் பேசுவோர் எழுதுவோர் விழுக்காடு குறைவாகவே காணப்படுகிறது. ஆனால், அகவை வந்தவர்கள் சரி, குழந்தைகள் சரி ஒரு தமிழ்ச் சொல்லும் கலக்காமல் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிறார்கள். அதற்குக் காசு கொடுத்துப் பயிற்சியும் பெறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் பேசுபவன் அறிவாளி, தமிழில் மட்டும் பேசத் தெரிந்தவன் அறிவிலி, தமிழில் மட்டுமே பேசுவேன் என்பவன் தமிழ்வெறியன் என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது. கனடாவிலும் இதே நிலைதான்.

தமிழகத்தில் இருந்து வெளியாகும் நாளிதழ்கள், கிழமை ஏடுகள் தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. திரைப்படங்களிலும் தமிங்கிலம் கலக்கப்படுகிறது.

வயிற்றைத் தமிழ் மண்ணுக்கு வைத்து நெஞ்சை வடமொழிக்கு வைத்துள்ள இரண்டகர்களே இத்திருப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

மொழித் தூய்மை காக்கத் தவறியதால் மலையாளம் பிறந்தது
26

தமிழ்மொழி நிலைத்து வாழ வேண்டும் என்றால் அதன் தூய்மை காக்கப்பட வேண்டும். மொழித்தூய்மை காக்கத் தவறிய காரணமாகவே தமிழ் கூறும் நல்லுலகம் கடந்த காலங்களில் குறுகி வந்திருக்கிறது.

பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்த படி இருப்பது போல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்
ஆரியம் போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்
சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!

(மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்தின் சில அடிகள்)

பற்பல உயிர்களையும் பற்பல உலகங்களையும் தன்னுள் இருந்து படைத்தும் காத்தும் அழித்தும் எல்லாம் செய்தும் எல்லையில்லா இறைவன் எப்போதும் போல் குறைவின்றி இருப்பது போல் நீ இருக்கிறாய். எப்படி? கன்னடம், இன்பம் கொடுக்கும் தெலுங்கு, அழகு மிகும் மலையாளம், துளு என்று நான்கு மொழிகள் உன் வயிற்றில் இருந்து உதித்து எழுந்து ஒரு மொழி பல மொழி ஆகிவிட்டாலும் வடமொழியாம் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாமல் நிற்கும் உன் சிறந்த இளமைத் திறம் தான் என்னே? அதனை வியந்து வியந்து என்ன செய்வது என்பதையே மறந்து வாழ்த்திக்கொண்டே இருக்கிறோம்.

“இன்பம் கொடுக்கும் தெலுங்கு, அழகு மிகும் மலையாளம், துளு என நான்கு மொழிகள் உன் வயிற்றில் இருந்து உதித்து எழுந்து ஒரு மொழி பல மொழி ஆகிவிட்டாலும் வடமொழியாம் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாமல் நிற்கும் உன் சிறந்த இளமைத் திறம் தான் என்னே?” என்று மனோன்மணியம் சுந்தரனார் வியந்தாலும் தமிழ் மொழி ‘கன்னித்தன்மையை’ இழந்து நான்கு பிள்ளைகளுக்குத் தாயாகி விட்டதைத்தானே இது காட்டுகிறது?

கன்னடமும் களி தெலுங்கும் பழந்திராவிட மொழியில் இருந்து பிரிந்தவை எனக் கொண்டாலும் மலையாள மொழி நிச்சயமாக தமிழில் இருந்தே ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பின் பிரிந்தது என்பது கல்ட்வெல் போன்ற மொழியறிஞர்களின் துணிவாகும்.

இன்றைய மலையாளமொழி பேசும் நிலப்பரப்பு பண்டைய காலத்தில் சேர நாடாக விளங்கியது.

சங்க இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றிப் புகழ்பெற்ற புலவர்களான பரணர், கபிலர் உட்பட பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.

அய்ம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் சேர நாhட்டு இளவரசர் இளங்கோ அடிகளால் இயற்றப்பட்டது. சிலப்பதிகாரமே தமிழில் எழுதப்பட்ட முதல் காப்பியம் ஆகும். சைவ சமய அடியார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் பெரிய புராணம் குறிப்பிடும் 63 நாயன்மார்களில் ஒருவர். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் தமிழிலே திருவரங்கப் பெருமானைப் பற்றி 31 பாசுரங்கள் பாடியுள்ளார். அவை திருமொழி என்றழைக்கப்படும்.

இதில் வியப்பு என்னவென்றால் இன்றைய மலையாளிகள் தங்களைச் சேரர் பரம்பரை என்பதையோ மலையாளமொழி தமிழ்மொழியின் கிளை மொழி என்பதையோ ஒப்புக்கொள்வதில்லை.

தமிழ் இலக்கியங்களில் கேரளம் என்பது சேர நாடாகவே குறிக்கப்பட்டது. தமிழ்மொழி மலையாளமொழியாக மாற்றம் பெற்றதற்கு சமற்கிருத மொழிக் கலப்பே காரணம் ஆகும்.

மலையாளமொழி ஒன்பதாம் நூற்றாண்டில்தான் தமிழிலிருந்து வேறுபட்டு ஒரு தனி மொழியாக உருப்பெற்றது. சேரநாட்டின் ஆட்சி மொழியாகவும் அவை மொழியாகவும் இருந்த தமிழ் பின்னர் நம்பூதிரிகளின் வரவால் வடமொழி மேலாண்மைக்கு உள்ளாகியது.

அரேபியர்களுடான வணிகம், போர்த்துகீசியர் வரவு ஆகியவற்றால் ரொமானிய மற்றும் செமிட்டிக் மொழியின் தாக்கத்தையும் மலையாளத்தில் காணலாம். அது ஒரு தனி வரலாறு. பின்னர் அதுபற்றி ஆராய்வோம்.

திராவிட மொழிகளின் தொடக்கம் தொடர்பான தெளிவான முடிவு ஏதும் தற்போது இல்லை. இந்தியா முழுவதும் திராவிடர் வாழ்ந்தார்கள் என்பதற்கு இந்து நதிப் பள்ளத்தாக்கிலிருந்து அழிந்த நாகரிகத்தின் தடயங்கள், நால் வேதங்களில் ஒன்றான ‘இருக்கு” வேதத்திற் காணப்படும் திராவிடச் சொற்கள் ஆகியவை சான்றாக உள்ளன.

மிகப் பண்டைக் காலத்தில் இந்தியா முழுவதிலும் பழந்திராவிடம் என்ற ஒரு மொழி வழக்கில் இருந்தது பேச்சு வழக்கில் இருந்த அந்த மொழியிலிருந்து பிரிந்த மொழிகளே திராவிட மொழிகள் என்று அழைக்கப்படுகின்றன.

திராவிட மொழிகள் வட இந்திய திராவிட மொழி, மத்திய இந்திய திராவிட மொழி, தென் இந்திய திராவிட மொழி எனப் பகுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இன்று 23 கும் மேற்பட்ட திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அதற்கும் அதிகமாக சில மொழிகள் இருக்கத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக நீலகிரி மாவட்டத்திற் பேசப்படும் குறும்பம், பணியம் போன்ற நன்கு அறியப்படா மொழிகள் பட்டியலிற் சேர்க்கப்படவில்லை.

தென் இந்தியா முழுவதும் 19 கோடி அளவிலான மக்களால் திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. இக்குடும்பத்தினுள் அடங்கும் மொழிகளில் ஒரேயொரு மொழியான பிராகுவியைத் தவிர மற்றைய 22 மொழிகளும் இந்தியாவின் தென்பகுதியிலும் கிழக்கு மத்திய பகுதிகளிலுமே பேசப்படுகின்றன. பிராகுவி மொழி பூகோள அடிப்படையில் தனிமைப்பட்டு பாகிஸ்தானில் உள்ள பலுஸ்திஸ்தான் (கைபபூர் ஹைதரபாத் மாவட்டங்கள்) எட்டு இலட்சம் அளவிலான மக்களாற் பேசப்படுகிறது. பிற மொழி செல்வாக்கால் பிராகுவி பேசும் மக்கள் தொகை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் நீலகிரிப் பக்கம் போவோமானால் அங்கு தமிழ் மொழிக்கு மிகவும் நெருங்கிய மொழியான இருளம் உட்பட வடுகம் துடவம், குடகம், கோத்தம் என ஐந்து மொழி பேசும் மக்களைச் சந்திக்கலாம். சற்று விலகிச் சென்றால் 6 ஆவது மொழி ஒன்றைப் பேசும் மக்களைச் சந்திக்கலாம். அதாவது துளு மொழி பேசம் மக்களையும் சந்திக்கலாம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு ஆகிய ஆறும் திருந்திய மொழிகள் என்றும் ஏனையவை திருந்தா மொழிகள் என்றும் கல்ட்வெல் வகைப்படுத்தியுள்ளார். எஞ்சியவை இன்று வடபுலத்தில் வாழும் மக்களால் பேசப்படும் மொழிகளாகும்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளும் மாநில மொழிகள் என்ற தகைமையைப் பெற்றுள்ளன. எஞ்சிய இலக்கிய வளம் குறைந்த 19 மொழிகளுள் 10 இலட்சம் மக்களுக்கு மேற்பட்டோரால் பேசப்படும் மொழிகள் கோண்டி, துளு, ஓராவுண் ஆகிய 3 மொழிகள் மட்டுமே. நான்காவது இடத்தில் 8 இலட்சம் மக்களாற் பேசப்படும் பிராகுவி வைக்கப்பட்டுள்ளது.

இசைக்குரிய மொழி தெலுங்கு என இருந்தாலும் தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணச் சிறப்பால் தமிழே திராவிட மொழிகளில் முதலில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழியாகும். இலக்கிய வளத்தை அளவு கோலாகக் கொண்டு பார்த்தால் சமஸ்கிருதம் நீங்கலாக எந்த இந்திய மொழியும் தமிழுக்கு ஈடாக மாட்டா.

புவியியல் அடிப்படையில் அதிக நாடுகளில் பேசப்படும் திராவிட மொழியும் தமிழ்தான். திராவிட என்ற சொல் கூட கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து பிராகிருதி, பாளி ஆகிய மொழிகளில் தமிழைக் குறிக்கும் தாமில, தாவிட, த்ராவிட ஆகிய சொற்களின் சமஸ்கிருத வடிவமே ஆகும். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

தமிழில் மணிப்பிரவாள நடை

27

அன்றைய சேர நாட்டில் தமிழோடு வடமொழி கலந்த காரணத்தாலேயே சேர நாட்டுச் செந்தமிழ் திரைந்து மலையாளம் என மாற்றம் பெற்றது என எழுதியிருந்தேன். மலையாள மொழிக்கு எனத் தனி இலக்கணம், தனி எழுத்துக்கள் உருவாகின.

பிற மொழிச் சொற்கள் கலப்பதால் “மொழி அழியும்” அல்லது “திரிபு அடையும்” “புதிய மொழிகள்” தோன்றும் என்பதற்கு மலையாளம் ஒரு அடையாளம். எனவே தமிழ் மொழியாம் செம்மொழியோடு எம்மொழியும் கலவாது அதன் தூய்மை காப்பது எமது கடமையாகும்.

தமிழ்நாட்டிலும் இந்த மொழிக் கலப்பால் தமிழ்மொழி நலிவுற்றது.

தமிழ் மீது சமற்கிருதத்தின் பாதிப்பு வௌ;வேறு காலகட்டங்களில் வௌ;வேறு வீச்சுடன் அமைந்துள்ளது. சங்க காலந்தொட்டே தமிழ் – சமற்கிருதம் இரண்டுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது.

தொல்காப்பியத்தில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்ற சொல் வகைப்பாட்டில் வடசொல் வடமொழிகளில் இருந்து தமிழுக்கு வந்த சொற்களைக் குறிக்கிறது. கிபி 7 ஆம் நூற்றாண்டு வரை தமிழில் வந்து சேர்ந்த வட மொழிச் சொற்கள் பெரும்பாலும் வட இந்தியாவில் பேச்சு வழக்கில் இருந்த பிராக்கிருதம் அல்லது

அல்லது பாலி மூலம் கொண்டவை ஆகும்.

கிமு 250 ஆண்டளவில் தமிழ்மொழி எழுதப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால் சமற்கிருதம் கிபி 1 – 3 ஆம் காலப்பகுதியிலேயே எழுதப்பட்டதற்கான சான்றுகளே உள்ளன.

ஆகையால் தமிழுக்கு சமற்கிருதத்துக்கு இணையான அல்லது அதை விடத் தொன்மையான எழுத்து வரலாறு உண்டு என்பது புலனாகிறது.

கிபி 7 ஆம் நூற்றாண்டிலிருந்தோ அல்லது அதற்குச் சற்று முன்னர் இருந்தோ சமற்கிருதத்தின் உண்மையான பாதிப்புக் காலம் தொடங்கிற்று என்று கொள்ளலாம். இக்கால கட்டத்தில் சமற்கிருதம் அரசியல், இலக்கியம், சமய, கல்வி, தத்துவத் துறைகளில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தது. குறிப்பாக சமய தளத்தில் மிகப் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது எனலாம்.

தமிழ் உரைநடையில் மணிப்பிரவாள நடை புகுந்தது. மணிப்பிரவாளம் என்பது மணியும் பவளமும் சேர்த்து கட்டப்பட்ட மாலை போல தமிழும் சமற்கிருதமும் சரிக்குச் சரி கலந்து உருவான இலக்கிய நடை ஆகும். சமற்கிருதம் இறைவனுடைய மொழியாக போற்றப்பட்ட இக்காலத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதுவது கற்றோரிடம் கருத்து ஊடாடலுக்குத் தேவை என்ற நிலையை உருவாக்கியது.

மணிப்பிரவாள நடையில் தமிழ் எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்களும் கலந்து எழுத்தப்பட்டன. சமற்கிருத ஒலிகளைக் குறிக்கக் கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன.

அக்காலத்திய மணிப்பிரவாள நடைக்கு எடுத்துக்காட்டாக “உபதேசரத்னமாலை” என்னும் நூலிலிருந்து ஒர் பகுதியைக் கீழே காணலாம்.

மணவாளமாமுனிகள் தமக்காசார்யரான பிள்ளையுடைய ப்ரசாதத்தாலே, க்ரமாசுதமாய் வந்த அர்த்த விசேஷங்களைப் பின்பற்றாருமறிந்து உஜ்ஜீலிக்கும் படி, ப்ரபந்தரூபேன உபதேசித்து ப்ரகாசிப்பிக்கிறோமென்று ச்ரோத்ரு புத்தி ஸமாதாநார்த்தமாக ப்ரதிஞ்ஞை பண்ணி யருளுகிறார்.

ஸ்ரீபுராணம் என்பது சமணர்கள் எழுதிய மணிப்பிரவாள நூல்களில் ஒனறாகும்.

கேளீர் குமாரர்காள், யான் பகவானுடைய மூலதாஸன, நாகலோகத்து வஸிப்பேன், “நமக்கு பக்தராகின்ற இந்தக் குமாரர்கட்கு வேண்டும் விபரங்களைக் கொடுப்பாயாக’ என்று பகவான் அருளிச் செய்ய, யான் உங்கட்கு வேண்டும் விபரங்களைத் தருவான் வேண்டி வந்தேன். (ஸ்ரீபுராணம் – ஆதி புராணம்)

தமிழுடன் மிகுதியான வட சொற்கள் கலந்த நடையே மணிப்பிரவாள நடை என்று நினைப்பது தவறு. வடமொழி இலக்கணப்படி அமைந்த கூட்டுச் சொற்கள், கூட்டு ஒலிகள், நீளமான தொடர்கள் யாவும் அப்படியே எடுத்தாளப் பெறும். அவற்றைப் படித்து அறிய வட சொற்களின் பொருள் மட்டும் அறிவது போதாது. வடமொழிக்கு உரிய இலக்கணத்தையும் அறிய வேண்டும். ஆதலின், இரு மொழிப் புலவர்கள் மட்டுமே மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட நூல்களைக் கற்க முடியும்.

தொடக்கத்தில் மணிப்பிரவாள நடைக்கு எதிரப்பு இருந்தது. சமண சமயத்தை எதிர்த்து நின்ற திருஞான சம்பந்தர் சமணர்கள் கையாண்ட மணிப்பிரவாள நடையையும் எதிர்த்துள்ளார் என்பதற்கு அவரது பாடல்களில் சான்றுகள் உண்டு.

மணிப்பிரவாள நடையை, சமணர்கள் வளர்த்த காரணத்தினால் மட்டும் திருஞானசம்பந்தர் எதிர்த்தார் என்று கருதுவது பொருந்தாது. அந்நடை, தமிழ் மரபிற்கு ஒவ்வாமல் இருந்ததாலும் இரு மொழியில் வல்லவர்களால் மட்டுமே அறிந்து கொள்ளக் கூடியதாய் இருந்ததாலும் அதை எதிர்த்தார் எனக் கொள்ளலாம்.

ஞானசம்பந்தர் தன்னைச் செந்தமிழ்;வல்ல, தமிழ்ஞானசம்பந்தன் என்று சொல்வதோடு நில்லாமல் தமிழ்மொழியைச் சங்கத் தமிழ், சங்கமலித் தமிழ் என வாய்க்கு வாய் போற்றிப் பாடியதோடு தமிழ்மொழி வழிபாட்டை எதிர்த்த சமணர்களை ‘செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்” எனக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தார். இவ்வாறு எதிர்த்தும் மணிப்பிரவாள நடை வளர்ந்து வந்து தமிழ் உலகில் நுழைந்து செல்வாக்குப் பெற்றது.

நாலாயிர திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்கள் வட சொல்லும் தமிழ்ச் சொல்லும் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது.

வைணவ சமய்த்தில் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட உரைநடை நூல்களை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று: ஆழ்வார்களின் பாடல்களுக்கு அமைந்த வியாக்கியானங்கள். மற்றொன்று; ஆழ்வார்களின் வரலாற்றையும் அவர்களுக்குப்பின் தோன்றிய வைணவப் பெரியோர்களைப் பற்றிய வரலாற்றையும் கூறுகின்ற ‘குருபரம்பரா ப்ரபாவம்’ என்று வழங்கும்

ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் சமயத் துறையில் இருள் பரவிக் கிடந்தது. ஆழ்வார்களின் பிரபந்தமும் மூவர் தேவாரமும் வெளிப்பட்ட போதிலும் அவை பொருள் விளக்கத்தோடு மக்கள் நடுவே பரவவில்லை.

கற்றவர்களிடம் வடமொழி வேதங்கள் உபநிடதம் பகவத்கீதை ஆகியவை பரவி, வடமொழி செல்வாக்குப் பெற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் இராமானுசர், ஆதி சங்கரர், வில்லிபுத்திரர் போன்ற வைணவ – சைவப் பெரியோர்கள் தோன்றினார். இவர்கள் மணிப்பிரவாள நடையிலேயே எழுதினர். வடமொழியில் தேர்ச்சி பெற்ற இராமனுசர் ஆழ்வார்களின் பிரபந்தங்களுக்கு மணிப்பிரவாள நடையிலேயே உரை எழுதினார்.

இந்நடை 15 ஆம் நூற்றாண்டு வரைக்கும் அதிக செல்வாக்கோடு விளங்கியது. பின்னர் மணிப்பிரவாள நடையில் எழுதுவோரும் படிப்போரும் அருகினர். பயில்வாரின்றி அவை ஒதுங்கிக் கிடக்கவே பொதுமக்களிடம் அவற்றைப் பரப்புவோர் இன்மையால் தேங்கி நின்றன. இதனால் அந்நடை வெல்வாக்கிழந்து வழக்கொழிந்து போனது.

கிபி 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கேயர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் காலடி வைத்தனர். போர்த்துக்கேய நாட்டில் இருந்து வந்த மத குருமாரில் ஒருவரான என்றீக் என்றீக்கசு என்ற அடிகளார் 1554 ஆம் ஆண்டு முதன் முதலாக தமிழ் மொழியில் கிறித்துவப் பாடல்களை அச்சடித்து வெளியிட்டார். கிறித்தவத்தின் வரவு அதுகாறு வரையும் சமற்கிருதம் பெற்றிருந்த இறைமொழி என்ற நிலையை பெரிதும் ஆட்டம் காண வைத்தது. (வளரும்)

என்றுமுள்ள செந்தமிழ்

28

நக்கீரன்

தமிழர்களின் பொற்காலமான சங்க காலத்திலேயே தமிழ்மக்களை தமிழ் அரசர்கள் ஆண்டார்கள். சங்க காலத்துக்குப் பின்னர் களப்பிரர், பல்லவர், துருக்கி சுல்தான்கள், மொகலாயர்கள், கன்னட நாவாப்புக்கள், விஜயநகரத் தெலுங்கர்கள், நாயக்கர்கள், மராத்தியர், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என பல இனத்தவர்கள் தமிழகத்தை கைப்பற்றி ஆண்டார்கள். தமிழீழ அரசை போர்த்துக்கேயர்கள் (1619 – 1658) ஒல்லாந்தர் (1658 – 1796) ஆங்கிலேயர் (1796 – 1948) ஆண்டார்கள். இதனால் சங்க காலத்துக்குப் பின்னர் தனித்தமிழ் முற்றுப்பெற்று வடமொழி உட்பட அயன்மொழிச் சொற்கள் தமிழில் புகுந்து கொண்டன.

தொல்காப்பியர் தமிழில் பிறமொழி பற்றிய முதல் குறிப்பைத் தந்திருக்கிறார். அவர் தமது தொல்காப்பியத்தில் இரண்டாவதாக அமைந்துள்ள சொல்லதிகாரத்தில் செய்யுள் இயற்றுவதற்கு உரிமை படைத்த சொற்களாக இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நான்கினைக் குறிப்பிடுகிறார்.

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே………. (தொல்.சொல், 397)

நால்வகைச் சொற்களுள் இயற்சொல் என்பது செந்தமிழ் நாட்டில் வழங்குவதும் எல்லா நாட்டவர்க்கும் பொருள் இயல்பாகத் தெரியக் கூடியது ஆகும்.

தமிழில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள், ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் என இவ்விருவகையும் திரிசொல் எனப்படும்.

திசைச் சொல் கொடுந்தமிழ் நாட்டுச் சொல் ஆகும். தொல்காப்பியர் “செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமை இசைக்கும் சொல்லே” (செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளிலும் தாம் குறித்த பொருளை விளக்கி நிற்கும் சொற்கள். தாயை தள்ளை என்றும் தந்தையை அச்சன் என்றல் போன்றவை) எனக் கூறுவார்.

வட சொல் என்றது ஆரியச் சொல்லையும் வட நாட்டுச் சொல்லையும் குறிப்பதாகும். வடநாட்டுச் சொல்லாவது பிராகிருதம் என்னும் வட திரவிடச் சொல். அஃது ஆரியத்திற்கு முந்திய பிராகிருதம். அக்காலத்துத் தமிழில் வழங்கிய அல்லது புகுத்தப்பட்ட அயன் மொழிச் சொல் ஆரியச் சொல் ஒன்றே என்பதால் அதைத் திசைபற்றி வட சொல் என்று பிரித்துக் கூறினார்.

களப்பிரர், பல்லவர் காலத்தில் சமண, பவுத்த மற்றும் வைதீக சமயங்கள் வழியாக வடமொழியின் தாக்கம் தமிழில் ஏற்பட்டது. பல வடமொழிச் சொற்கள் தமிழில் புகுந்தன. எனவேதான் தொல்காப்பியர் நால்வகைச் சொற்களில் வடமொழியையும் சேர்த்துள்ளார். ஆனால் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்த நேரிட்டால் அவை தமிழ் ஒலிக்கு ஒப்ப மாற்றம் செய்ய வேண்டும் என விதி செய்தார். அதாவது வடமொழி ஒலிகளை நீக்கி தமிழ் எழுத்துக்களோடு அமைந்த சொற்கள் படைக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு கமலம், திலகம், அரி, அரண், பங்கயம் போன்றவை. மேலும் சிதைந்தது வரினும் இயைந்தன வரையார் என்றார். இதன் பொருள் பிரயாணம் – பயணம், ரிஷி – இருடி என சிதைந்து வந்துள்ளன. இவை போன்றவற்றை நீக்கமாட்டார்.

தொல்காப்பிய விதிக்கு ஒப்பவே ஜனகன் – சனகன் எனவும் லஷ்மணன் – இலக்குவன் எனவும் விபீஷணன் – விபீடணன் எனவும் ஹனுமான் அனுமான் எனவும் கம்பர் (கிபி 12 ஆம் நூற்றாண்டு) ஒலி மாற்றம் செய்தார்.

எத்தனை வேற்றுமொழிகளின் தாக்கம் இருந்தாலும் தமிழ் மொழி இன்றும் சீரிளமையோடு இருப்பதற்குக் காரணம் அதன் இலக்கண அமைப்புத்தான். தமிழ் இலக்கணத்தைச் செய்யுள் வடிவில் முதன் முதலில் இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார்.

தொல்காப்பியர் தமிழுக்குச் செய்த தொண்டு மிகவும் போற்றுதற்குரியது. தமிழ் இலக்கணத்தை ஒழுங்கு படுத்தி மூன்று அதிகாரங்களாகப் பிரித்து எழுதியுள்ளார்.

அவை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்று அழைக்கப்படுகின்றன. அத்துடன் ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இரண்டாயிரத்து அய்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பனையோலையில் எழுத்தாணியால் எழுதப்பட்ட தொல்காப்பியம் என்ற இலக்கண நூலில் எழுத்து, சொல், பொருள் பற்றிய நுட்பமான விளக்கங்கள் படிப்பவர்க்கு மலைப்பைத் தருகிறது

எழுத்ததிகாரத்தில் நூல்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல் மற்றும் குற்றியலுகரப் புணரியல் ஆகியன விளக்கப்படுகிறது.

நூல் மரபில் தமிழ் மொழியின் வளத்தைப் பற்றியும், எழுத்துக்கள் எப்படிப் பிரிக்கப்படும் என்பது பற்றியும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. குற்றெழுத்து நெட்டெழுத்து எப்படிப் பிரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொழி மரபில் எந்த எழுத்துக்கள் சொற்றொடர்களுக்குள் வரக்கூடாது என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பிறப்பியலில் சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. புணரியலில் எப்படிச் சொற்களை வாக்கியங்களில் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. உருபியலில் உருபுகள் எவ்வண்ணம் சேர்க்கப்பட வேண்டும் என்பது பற்றி மிக விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிர் மரபியலில் எப்படிப் புள்ளிகள் வைக்கப்பட வேண்டும் என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது. எழுத்துக்களுக்கு மேல் புள்ளி வைப்பது என்பது தமிழ் மொழிக்குள்ள சிறப்பு. இந்தப் புள்ளி வைக்கும் முறை மகேந்திரபல்லவன் காலத்துக் கல்வெட்டுக்களில் இருந்ததாக அறியக்கிடக்கிறது.

சொல்லதிகாரத்தில் கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் ஆகியன விளக்கப்பட்டுள்ளன.

பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் ஆகியன விளக்கப்பட்டுள்ளன.

புலவர்கள் தொல்காப்பிய இலக்கண மரபை கட்டிக் காத்து வந்ததால் இன்றும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் படித்துப் பொருள் கொள்ளுமாறு உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

களப்பிரர், பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் ஆகியோரது ஆட்சியில் வடமொழி ஆட்சி மொழியாக இருந்ததைக் கல்வெட்டுகள் மூலம் அறியக்கிடக்கிறது.

ஏழாம் நூற்றாண்டு முதல் கல்வெட்டுகளில் தமிழ் ஆட்சி மொழிக்கிணையாக வைக்கப்பட்டாலும் வடமொழிக்கு இருந்த செல்வாக்குக் குறையவில்லை.

தொல்காப்பிய இலக்கணத்துக்கு மாறாக தமிழில் வடமொழியின் நேரடிக் கலப்பு அதாவது ஜ, ஷ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே வந்திருக்கவேண்டும். வட்டெழுத்தில் சமற்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமற்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். பக்தி இலக்கியங்களில் இந்தச் சொற்கள் இல்லை. ரோஷம் என்பதை ஆண்டாள் உரோடம் என்று சொல்கிறார்.

மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதற்கொப்ப மணிப்பிரவாள நடை வழக்கொழிந்து போனாலும் தமிழோடு வடமொழி உட்பட அயன்மொழிச் சொற்கள் பலவற்றைச் பெய்து எழுதும் வழக்கமும் பேசும் வழக்கமும் இன்றும் தொடர்கிறது. தமிழகத்தில் தமிழ்மொழி படும் பாடு பெரும்பாடாக இருக்கிறது. செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தமிழோடு வடமொழி, ஆங்கிலம் இரண்டையும் கலக்கின்றன. தமிழோசை, மக்கள் தொலைக்காட்சி போன்றவை விதிவிலக்காக இருந்தாலும் எஞ்சியவை மொழிக் கலப்புச் செய்கின்றன.

கனடிய ஊடகங்களும் சோற்றுக்குள் கல்லைக் கலப்பது போல் தூய தமிழ்ச் சொற்கள் இருக்க வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக-

சர்வதேசம் (அனைத்துலகம் அல்லது பன்னாடு)

பிரஜை (குடிமகன்) பேட்டி (செவ்வி அல்லது நேர்காணல்)

தினம் (நாள்)

வருடம் (ஆண்டு) ஆரம்பம்

(தொடக்கம்) அங்கீகாரம் (ஒப்புதல்)

என்ற சொற்களைக் குறிப்பிடலாம். கேட்டால் மக்களுக்கு விளங்கும் மொழியில் எழுதுகிறோம் அல்லது வாசிக்கிறோம் என மக்கள் தலையில் பழியைப் போடுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. மக்களுக்குத் தமிழ் விளங்கும். இவர்களுக்குத்தான் எது தமிழ், எது வடமொழி என்பது விளங்குதில்லை! (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்
வீழ்வது தமிழ் என்றாலும் வாழ்வது நானாகட்டும்!
30

முதலில் 9 ஆவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் சனவரி 2010 இல் நடைபெறும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அய்ந்துமுறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு திடீரென தமிழ்மொழி மீது ஏற்பட்ட காதலுக்கு என்ன காரணம்?

அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தமிழக முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. உலகத் தமிழினத் தலைவர் தான்தான் எனச் சொல்லிக் கொள்ளும் கருணாநிதி முதல்வராக இருக்கும் போது உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடைபெறவில்லை. இந்த வசையைப் போக்கவே ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோவையில் நடைபெறும் என்று காஞ்சியில் நடைபெற்ற அண்ணாவின் 101 ஆவது ஆண்டு விழாவில் அறிவித்தார்.

ஆனால் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறும் இடத்தையும் நாளையும் அறிவிப்பதற்கு உரிமையுடைய அனைத்துலகத் தமிழ் ஆராய்சிக் கழகத்தின் தலைவரான நெபுரா சுரோஷிமா ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை தமிழகத்தில் நடத்துவதானால் ஒரு ஆண்டு கால அவகாசம் கேட்டார். ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்கு நீண்ட காலம் வேண்டும் என்பது யப்பானிய தமிழ் அறிஞரான நெபுரா கரோஷிமாவின் நிலைப்பாடு. ஆனால், அவசர அவசரமாக தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தி முடிக்க வேண்டும் என்பது தமிழக முதல்வரின் நோக்கம். “வீழ்வது தமிழ் என்றாலும் வாழ்வது நானாகட்டும்!” என அவர் நினைக்கிறார்.

எனவே மாநாட்டின் பெயர் உலகத் தமிழ் செம்மொழி மாநாடாக மாற்றப்பெற்று எதிர்வரும் 2010 யூன் 24 – 27 வரை அது நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் முன்னர் நடைபெற்ற மூன்று தமிழாராய்ச்சி மாநாடுகளின் போது தமிழக அரசின் சாதனைகள் தான் அதிகம் பேசப்பட்டன. இந்த மாநாடும் தமிழக முதல்வர் கருணாநிதியின் சாதனைகளைப் பட்டியலிடும் மாநாடாகவும் கருணாநிதி போற்றி பாடும் மாநாடாகவும் செம்மொழிக்குப் பதில் கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநாடாகவும் மாறிவிடும் என்றே தமிழ் உணர்வாளர்கள் அஞ்சுகிறார்கள்.
என்றுமுள செந்தமிழ் மொழிக்கு மாநாடு நடத்தத்தான் வேண்டும். அதில் யாருக்கும் இரண்டுபட்ட கருத்து இருக்கவேண்டியதில்லை. ஆனால் இப்படியான மாநாட்டை யார் நடத்துகிறார்?; யாருக்காக நடத்தப்படுகிறது? என்பதுதான் கேள்வி. மாநாட்டை நடத்துபவருக்கு முதலில் அதற்கான அருகதை இருக்க வேண்டும். அடுத்து அதற்கான சூழ்நிலை இருக்க வேண்டும். முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்த அருகதையற்றவர்.

“வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்” என எதுகை மோனையில் பேசும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்குத் தமிழில் பெயரில்லை. அழகிரி, ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அறிவுநிதி எல்லாமே கலப்பு மொழிப் பெயர்கள். ஸ்டாலின் பேரப்பிள்ளைக்குப் பெயர் அன்பா! அதென்ன அன்பா? இது செம்மொழிச் சொல்லா? இல்லையென்றால் எந்த மொழிச்சொல்?

முதல்வர் கருணாநிதியின் பேரர்களான கலாநிதி தயாநிதி இருவருக்கும் சொந்தமான ‘சன்’ தொலைக்காட்சியில் தமிங்கிலம் கோலோச்சுகிறது. தூய தமிழுக்கு அதில் மருந்துக்கும் இடம் இல்லை. தமிழினப் பகைவர்கள்தான் அதில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். கேட்டால் எங்களது நோக்கம் தமிழ்வளர்ச்சி அல்ல. எங்களது நோக்கம் கோடி கோடியாப் பணம் சேர்ப்பது எனப் பதில் வருகிறது.

தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்கைமொழியாக இல்லை. அரச திணைக்களங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத் தமி;ழ்நாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.

ஆண்டுக் கணக்காக சிங்கள இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலக்கம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளி வாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 25,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உணவு, மருந்து இன்றி பல மாதங்கள் பதுங்கு குழிகளுக்குள் அடைந்து கிடந்தனர். சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வானூர்திகள் மருத்துவமனைகள் மீதும் பள்ளிகள் மீதும் வீசிய குண்டுகளில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்தபோது மீண்டும் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகள் இராணுவ இலக்குகள்தான். அவை குண்டு வீச்சில் இருந்து தப்ப முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராசபக்சே மார் தட்டினார்!

முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் வகைதொகையின்றி எதிரியின் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் பொட்டுப் பூச்சிகள் போல் கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டில்லியில் முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காக தவம் கிடந்தார். இந்த இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது!

ஈழத் தமிழினத்தை பதவி ஆசை காரணமாக காட்டிக்கொடுத்தவர் கருணாநிதி என்பது ஈழத்தமிழரின் ஒட்டுமொத்த எண்ணமாகும். அதனால் அவர் இன்று அரசியலில் ஒரு அழுதொழுநோயாளியாக அருவருப்போடு பார்க்கப்படுகிறார். சோனியா காந்தி, மன்மோகன் சிங் கைகளில் பூசப் பட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் குருதி கருணாநிதியின் கைகளிலும் நனைந்திருக்கிறது. 1974 இல் தனது பாவத்தைக் கழுவ துரையப்பா நாவலருக்கு விழா எடுத்த போன்றது கருணாநிதி இந்தச் செம்மொழி மாநாடு எடுப்பது! அன்று சிங்கள அரசின் அடிவருடி துரையப்பாவுக்குத் துணைபோன சிவத்தம்பி இன்று கருணாநிதியோடு கைகோர்ப்பது இயல்பானதுதான். முற்றிலும் எதிர்பார்க்கப்பட்டதே.

சிவத்தம்பி தனது கடைசிக் காலத்தில் தமிழர்களிடம் இருந்து துரோகப்பட்டம் வாங்கியே தீருவேன் என ஒற்றைக் காலில் நிற்கிறார். கெடுகுடி சொற் கேளாது என்பார்கள். இந்தப் பொன்மொழிக்கு சிவத்தம்பி இலக்கணமாக விளங்குகிறார்.

முன்னர் சோற்றோடு கற்களைக் கலப்பது போல தமிழ்மொழியோடு வடமொழி மற்றும் பிறமொழி கலந்து எழுதுவது பற்றி எழுதியிருந்தேன். இதில் ஊடகங்கள்தான் தமிழ்மொழிக் கொலையில் முன்னணி வகிக்கின்றன எனவும் எழுதியிருந்தேன்.

தமிழகத்தில் இருந்து வெளியாகும் பல இதழ்களில் ஆனந்தவிகடன், குமுதம் இந்த இரண்டும் விற்பனையில் முன்னுக்கு நிற்கின்றன. அதே நேரம் தமிழைக் கொலை செய்வதிலும் இந்த இதழ்கள் முன்னுக்கு நிற்கின்றன.

இந்த இதழ்கள் வலிந்து தமிழில் பிறமொழிச் சொற்களைத் திணிக்கின்றன. அன்னையைத் தமிழ்வாயால் ‘மம்மி’ என்றும் தந்தையை டடி என்றும் குழந்தை அழைக்கிறது. அழகுக் குழந்தையை ‘பேபி’ என்று அப்பா அழைக்கிறார். மாமாவை அங்கிள் என்றும் மாமியை அன்ரி என்றும் அழைக்கிறார்கள். இப்படி இன்னுயிர்த் தமிழைக் கொன்று தொலைக்கிறார்கள். தமிழைத் தமிழாகவும் ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் பேச வேண்டும். எழுத வேண்டும். இரண்டையும் போட்டுக் கலந்து தமிழின் கற்பைக் கயவர்கள் சூறையாடக் கூடாது.

மொழி என்பது ஓர் இனத்தின் ஒட்டு மொத்த குறியீடு. அதனைத் தொடர்பு கருவியாக பொதுவுடமை பேசுவோர் பார்ப்பது மேலோட்டமானது. ஓர் இனத்தின் வாழ்வியல், பண்பாடு, கலை, நாகரிகம் முதலான பல அடிப்படை விழுமியங்களை மொழி தாங்கி நிற்கின்றது. மொழி அழிந்தால் இனம் அழியும். இனம் அழிந்தால் நாடு அழியும். இதைத்தான் வரலாறு சொல்கிறது. ஒரு மொழியை அழித்தால் அம்மொழியைப் பேசும் இனத்தையே அழித்து விடலாம் என்பது பாசீச கொள்கையாகும்.

தமிழினத் தலைவர் குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர் ஆட்சியில் தமிழ்படும் பாட்டுக்கு ஆனந்தவிகடன், குமுதம் போன்ற இதழ்கள் நல்ல எடுத்துக்காட்டாகும்.

செப்டம்பர் 17, 2008 இதழில் ஆனந்த விகடன் எழுதிய சரோசா திரைப்பட திறனாய்வை ஆய்ந்ததில்,
தனித்துவமான மொத்த சொற்கள் 346.
தனித்துவமான மொத்த ஆங்கிலச் சொற்கள் 69.
ஆங்கிலக் கலப்பு விழுக்காடு 19.94 (அய்ந்தில் ஒரு சொல்!)

கலந்துள்ள ஆங்கிலச் சொற்கள்:

Underplay, out, acting, action, English, innings, editing, episode, over, factory, group, climax, commitment, colorful, comedy, comedian, good night, cool, chemical, successful, car, cinema, serial, serious, second, treatment, dull, tanker, tragedy, damage, thrill, thriller, theory, theatre, plus, purse, photo, bomb, bottle, brother, buildup, BGM, balance, midnight, missing, mega, match, language, lorry, logic, like, license, lighting, location, just, geographical, jolly, score, scene, shot, share, humour.

இவ்விழுக்காடு வேறு ஊடகங்களுக்கும் பொருந்தும். ஆங்கிலத்தோடு பிற மொழிச் சொற்களையும் (உட்டாலக்கடி, டாலடிக்கிறார்) நீக்கிப் பார்த்தால் எவ்வளவு விழுக்காடு தமிழ் மிஞ்சும்? தமிழ்ப் பகைவர்கள் நடத்தும் இப்படியான இதழ்களை காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் தமிழர்கள் தமிழ் சீரழிவதையிட்டுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்
ஒரு புறம் எழுச்சி மறுபுறம் வீழ்ச்சி!
31

தமிழினத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. அதன் மேல் எல்லை மூவாயிரம் ஆண்டுகள் என மதிக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் கல்தோன்றி மண்தோன்றாமுன் தோன்றிய மூத்த குடி என உயர்வு நவிர்ச்சியாகச் சொல்லப்படுகிறது.

தமிழினம் வாழ்வியல் நெறிமுறைகளுக்கு இசைந்து விளங்கியதால் தமிழர் பேசிய மொழியும் இலக்கிய இலக்கணக்கங்கள் பெற்று வளர்ந்து இன்றும் சீரும் சிறப்போடும் விளங்குகிறது.

தமிழர்கள் தங்கள் வாழ்வியலை இரண்டாகப் பிரித்தார்கள். ஒன்று அகத்திணை மற்றது புறத்துணை. அகத்துணை என்பது காதலும் கற்பியலும் கலந்த வாழ்க்கை. புறத்துணை என்பது வண்மையும் வன்மையும் கலந்தது.

இன்று கடைச் சங்க காலத்து இலக்கியங்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களே கிடைத்துள்ளன. தொல்காப்பியம் இடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட இலக்கண நூலாகும். முதற்சங்க நூல்கள் எதுவும் இன்று கிடைத்தில. முதல், இடைச் சங்க கால நூல்கள் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட கடல்கோள்களின்போது நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போயிருக்கலாம்.

தொல்காப்பியர் தனது நூலில் தனக்கு முன் இருந்த இலக்கண ஆசிரியர்களை மேற்கோள் காட்டுகிறார்.

அவர்களை என்மனார் புலவர், உயர்மொழிப் புலவர், யாப்பறி புலவர், நுணங்குமொழிப் புலவர், நூனவில் புலவர், சொல்லியற் புலவர், தொன்னெறிப் புலவர் என உவகைப் பொங்க நன்றி பாராட்டுகிறார்.

எள்ளில் இருந்து எண்ணெய் எடுப்பது போல் இலக்கியத்தில் இருந்துதான் இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும். எனவே தொல்காப்பியர் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இலக்கியம் தோன்றியிருக்க வேண்டும்.

தமிழுக்கு இருக்கும் இந்தச் சிறப்புக்காரணமாகவே அது செம்மொழி என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

செ‌ன்னை‌யி‌ல் ரூ.76 கோடி செல‌வி‌ல் 17 ஏ‌க்க‌‌ரி‌ல் த‌மி‌ழ் செ‌ம்மொ‌ழி ஆ‌ய்வு மைய‌ம் அமை‌க்கப்பட இருக்கிறது. இதற்கான நிலத்தை தமிழக அரசும் செலவு முழுவதையும் நடுவண் அரசு ஏற்றுக் கொள்ளும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் 41 பண்டைய தமிழ் இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு (2010) பங்குனி மாதம் முதல் மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியிடப்படும் என அறியக்கிடக்கிறது.

ஒரு நூலுக்கு 3 ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். திருக்குறளுக்கு மட்டும் 18 மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளனர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் சார்பில் 10 பெரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 130 மாநாடு, பயிலரங்கு, கருத் தரங்கு நடத்தப்பட்டுள்ளன. ஒப்பிலக்கிய நோக்கில் ஆய்வு மாணவர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் மத்தியில் செம்மொழி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே பயிலரங்குகளின் நோக்கம் ஆகும். பயிலரங்கில் கலந்து கொள்பவர்களை பயிலரங்கு முடிந்த பிறகு செம்மொழி குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படுவர். இதுதவிர தமிழ் முனைவர் படிப்பதற்கு பதிவு செய்யும் மாணவர்களில் தமிழகம் முழுவதும் தகுதி அடிப்படையில் ஆண்டிற்கு 10 பேரை தேர்வு செய்து மாதந்தோறும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டமும் செயல் படுத்தப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

இதுதவிர பெரிய அறிஞர்கள் தமிழ் குறித்து ஆய்வு செய்து நூலாக சமர்ப்பிக்க ரூ.2 1/2 இலட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.

செம்மொழி என்ற பெயரில் 3 மாதத்திற்கு ஒரு முறை வெளியாகும் காலாண்டிதழ் வெளியிடப்பட உள்ளது. பழைய சங்க இலக்கியங்களைக் காட்சி குறும்படங்களாக வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 25 காட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தொல்காப்பியம் முற்றோதுதலை இசை முறையில் படிக்க 5 குறுந்தகடுகள் தயாரிக்கப் பட்டுள்ளன. சங்க இலக்கிய பாடல்களை இசையோடு சொல்லித்தரும் குறுந்தகடும் தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருப்பதால் உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் தமிழுக்குத் தனிப் பீடம் அமைக்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

இவ்வாறு என்றுமுள செந்தமிழை செம்மைப்படுத்தும் பணிகள் ஒருபுறம் நடந்தாலும் தமிழின் தூய்மையைக் கெடுத்தே தீருவோம் என்று சிலர் படாதபாடு படுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழோடு பிறமொழிச் சொற்களைச் சேர்த்து எழுதியும் பேசியும் வருகிறார்கள். வானொலி எப்படியோ தெரியாது. அதை நான் கேட்பதில்லை.

சன், ஜெயா, ராஜ் போன்ற தொலைக்காட்சிகளில் தோன்றும் கலைஞர்கள் மட்டுமல்ல அவற்றில் பங்கு கொள்ளும் சிறுமியர் தொடங்கி அகவை வந்தவர்கள் வரை எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் அல்லது தமிழை ஆங்கிலத்தோடு கலந்து பேசுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களுக்குத் தமிழ்பற்று இல்லை. மற்றைய காரணம் பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளின் கற்கை மொழி தாய்மொழி தமிழில் இல்லாது ஆங்கிலத்தில் இருக்கிறது.

இந்தியை எதிர்த்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. மாணவர்களின் இந்தி எதிர்ப்பே திமு கழகம் ஆட்சியைக் கைப்பற்றக் காரணமாக இருந்தது. ஆனால் இன்று அந்த மாநித்தில்தான் தமிழ்மொழி கற்கை மொழியாக இல்லை. ஒரு மாணவன் தமிழை ஒரு பாடமாகப் படியாது பல்கலைக் கழகம்வரை படித்து பட்டம் வாங்கலாம் என்ற பரிதாப நிலை தமிழ்நாட்டில்தான் உண்டு. மாறாக தமிழீழத்தில் மழலைப் பள்ளி தொடக்கம் பல்கலைக் கழகம் வரை தமிழே கற்கை மொழி! அண்மைக் காலத்தில்தான் தமிழை தமிழ்நாட்டில் ஒரு பாடமாகப் படிப்பது தொடக்கப்பள்ளியில் இருந்து கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. ஏனைய பாடங்கள் ஆங்கிலத்தில்தான் கற்பிக்கப்படுகிறது.

“ஜெயலலிதா போன்றவர்களை தமிழர்கள் வரவேற்று ஆட்சியில் அமர்த்தி அழகு படுத்தினர். ஆனால் இவர்கள் தமிழுக்காக எதையும் செய்யாமல் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர்” இவ்வாறு நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் குற்ற்ம் சாட்டுகிறார்.
“நாம் தமிழர் இயக்கம் உலகத் தமிழர்களுக்கான இயக்கமாகும். தமிழர்களையும் தமிழையும் பாதுகாக்க எந்த ஒரு இயக்கமும் தோன்றவில்லை. ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். ஒரு மொழி அழிந்தால் அந்த மொழியின் இனம் அழியும் என்பது வரலாறு. தமிழ் தற்போது ஆங்கிலமாகவே உள்ளது. எங்களில் உயிருக்கு நிகரான தாய்மொழி தமிழில் வேறு மொழி கலப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

வந்தவர்களை வாழ வைக்கும் இனம் தமிழ் இனம். தமிழர்கள் தாக்கப் பட்டால், தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலை உள்ள. தமிழர்கள் எந்த ஒரு சிக்கலிலும் இந்தியர்களாகவே உள்ளனர். ஆனால் மற்ற மாநிலத்தவர்கள் அந்தந்த மாநிலத்தவர்களாகவே உள்ளனர்.

இதுவே தமிழ் இனம் அழிவதற்கான காரணமாக உள்ளது. இதனால் ஆதிதிராவிடர்கள் தலைமை பொறுப்புகளுக்கு வரமுடியாத நிலையே உள்ளது. தமிழ் முன்பு பயிற்று மொழியாக இருந்து, தற்போது மொழி பாடமாகத் திகழ்ந்து, அதுவும் மாறி விருப்ப பாடமாக உருவாகி உள்ளது.
தமிழ்மொழி செம்மொழித் தகைமை பெற்றுள்ளது என்று கோவையில் மாநாடு நடத்துகிறார் தமிழக முதல்வர். அந்த மாநாட்டுக்கு முன் தமிழகம் முழுவதும் உள்ள ஆங்கில விளம்பர பலகைகளை அகற்றித் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்கக் கட்டளையிட வேண்டும்.”

தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருந்தபோது விளப்பரப் பலகைளை அகற்றித் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது வெற்றி பெறவில்லை. தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருந்தாலும் அவர் ஒரு தமிழ் ஆசிரியராக இருந்ததே தோல்விக்குக் காரணம் ஆகும். (வளரும்)


தமிழ்நாட்டில் வேலைக்காரியோடு பேசுமொழி எந்த மொழி?
32

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

இதற்குக் காரணம் இருக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கூலித் தொழிலாளர்களாக வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் தங்களது தாய்மொழியான தமிழை இழந்து தங்கள் அடையாளத்தைத் தொலைத்து விட்டார்கள். அவர்களது பெயர்கள் கூட சிதைந்துவிட்டன. இந்த நிலைமை பியூஜி, மொறேஷியஸ், தென் ஆபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், மடகஸ்கார், றீயூனியன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தாய்மொழி தமிழுக்குப் பதில் இந்தி படிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். இந்த முயற்சியில் இந்திய நடுவண் அரசு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் தமிழக அரசு புலம்பெயர் நாடுகளுக்குத் தமிழ் ஆசிரியர்களும் பாடப்புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் எம்ஜிஆர் தொடக்கி வைத்த தமிழ்ப் பணியைத் தொடரவில்லை. அதனைக் கைவிட்டு விட்டார்கள். இவர்கள் தமிழ்மொழி வளர்ச்சிக்கு வாயளவில் ஆதரவு அளித்தார்களே ஒழிய நடைமுறையில் பெரிதாக எதனையும் செய்யவில்லை.

தமிழ்நாட்டுக்கு வெளியே ஒரு கோடி தமிழ்மக்கள் வாழ்கிறார்கள். இலங்கை, சிங்கப்பூர் நாடுகள் நீங்கலாக வேறு எந்த நாட்டிலும் தமிழ்மொழிக்கு அரச ஒப்புதல் கிடையாது.

கனடாவில் அண்ணளவாக 30,000 தமிழ் மாணவர்கள் மேல்நிலைப் பள்ளி, பல்கலைக் கழகங்கள் எனப் படிக்கிறார்கள். இவர்களில் மூன்றில் ஒரு விழுக்காட்டினரே தமிழை ஒரு பாடமாகக் கற்கிறார்கள். அதாவது மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளைதான் தமிழ் படிக்குது. மிச்சம் இரண்டும் தமிழ் படிப்பதில்லை.

மாணவர்களது இந்த அலட்சியத்தைப் போக்கும் வண்ணம் இங்கு வாழும் தமிழ்மக்களிடையே, தமிழ்ப் பெற்றோர்களிடையே தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கோடு தமிழ் கலை தொழில்நுட்பக் கல்லூரி 2005 ஆம் ஆண்டு தொடக்கம் ரொறன்ரோ நகரின் பல பகுதிகளில் தமிழ் மொழிக் கிழமை என்ற நிகழ்ச்சியை ரொறன்ரோவின் பல பகுதிகளில் சிறந்த முறையில் நடத்தி வந்தது.; தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்தால் அதில் பெறப்படும் சித்திகள் பல்கலைக் கழக நுழைவுக்குப் பயன்படும் என்ற செய்தி இந்த நிகழ்ச்சியில் வற்புறுத்தப்பட்டது.

இந்த தமிழ் மொழிக் கிழமை நிகழ்ச்சிகளில் முன்னாள் அதிபர் பொன். கனகசபாபதி, ஆசிரியர் சண்முகம் குகதாசன் மற்றும் தமிழ்க் கலை தொழில் நுட்பக் கல்லூரி ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டு தமிழ்மொழியின் சிறப்பையும் அதனைப் படிப்பதின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்கள். இந்த முயற்சிக்கு நானும் எனது முழு ஆதரவை நல்கியிருந்தேன். இவ்வாறு பலரது ஆதரவும் உழைப்பும் இருந்தும் இந்த முயற்சிக்குத் தமிழ்ப் பெற்றோர்களிடம் இருந்தும் மாணவர்களிடம் இருந்தும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு தமிழ் மொழிக் கிழமையின் குறிக்கோளை தமிழ் இளையோர் கையில் எடுத்து தமிழ் மரபுத் திங்கள் என்ற பெயரில் சென்ற தை மாதம் முழுதும் நிகழ்ச்சிகளை நடத்தி அதன் இறுதி நாளைப் பெரிய விழாவாகக் கொண்டாடினார்கள். இந்த முயற்சியில் எல்லோரும் நன்கு அறிந்த தமிழ் உணர்வாளர் நீதன் சண்முகநாதன், இளவரசன் போன்றோர் முக்கிய பங்கு வகித்தார்கள்.

வெற்றிகரமாக நடந்த இந்த விழாவில் குறைகள் இல்லாமலும் இல்லை. விழா மண்டபம் நிறைந்திருந்தாலும் மக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். குறிப்பாக நடன ஆசிரியர்களும் அவர்களது மாணவர்களும் தங்கள் நடனம் முடிந்தவுடன் மண்டபத்தை விட்டு ஓட்டமும் நடையுமாக ஓடிவிட்டார்கள். இதனால் விழாவின் கடைசிக் கட்டத்தில் அரங்கம் வெறிச்சோடிப் போய்விட்டது.

மேலும் விழா தொடர்பாக வெளியிட்ட தமிழ் மரபுத் திங்கள் என்ற கையேடு முழுவதும் ஆங்கிலத்தில் இருந்தது. அறிவிப்புக்கள் கூட ஆங்கிலத்திலும் இருந்தது. தமிழ்விழாக் கொண்டாடினாலும் சரி, வேறெந்த விழா கொண்டாடினாலும் சரி விழா ஏற்பாட்டினர் ஆங்கிலத்தை விடவே மாட்டோம் என மல்லுக்கு நிற்கிறார்கள்! இப்படித் தமிழை ஓரங்கட்டிவிட்டு ஆங்கிலத்துக்குச் சிறப்பிடம் கொடுப்பவர்கள் அதனை நியாயப்படுத்துவதற்குச் சொல்லும் காரணம் தமிழ் தெரியாத மாணவர்கள் தமிழ்பற்றி ஆங்கிலத்தில் படிக்க வாய்ப்பு அளிக்கிறோம் என்பதே. இது எப்படி இருக்கிறது என்றால் வறுமையை ஒழிப்பது எப்படி என்பதை அய்ந்து நட்சத்திர உணவகத்தில் கூடி விவாதிப்பது போன்றது.

தமிழ்த் தெரியாது எனவே அப்படிப்பட்டவர்கள் தமிழ் பற்றி அறிந்து கொள்வதற்கு ஆங்கிலத்தில் பேசுவோம் எழுதுவோம் என்றால் ஒரு மாணவன் ஏன் தமிழ் கற்க வேண்டும். தமிழ் தெரியாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஆங்கிலம் என்று அந்தப் பிள்ளை நினைத்தால் அதில் தவறு இல்லை.

புலம் பெயர்ந்த நாடுகளில்தான் தமிழ்மொழிக் கல்வி அருகி வருகிறதென்றால் பலத்த பொருட் செலவில் செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசின் ஆட்சியிலும் தமிழ் சுருங்கி வருகிறது.

தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை மாநகரில் ஒரு மத்திய அரசுப் பள்ளியில் காதாரக் கேட்ட இந்த உரையாடலைப் படியுங்கள்.
எங்கேயோ கேட்ட குரல்!

மீனா – பிரசன்ட் மிஸ்
ரோஷ்னா – பிரசன்ட் மிஸ்
புனிதா – பிரசன்ட் மிஸ்
புனிதா ஆர் யூ நியூ அட்மிஷன் ? எஸ் மிஸ்
உனக்கு செகண்ட் லாங்வேஜ் தமிழ்தானே, புனிதா?
நோ! டமில்…? நோ மிஸ் – ஐ கேவ் டேக்கன் ப்ரெஞ்ச்
இஸ் இட்? இன் வாட் லாங்வேஜ் டூ யூ ஸ்பீக் வித் யுவர் பேரண்ட்ஸ்?
இன் இங்கிலீஷ் மிஸ்.
வித் யுவர் கிராண்ட் பேரண்ட்ஸ்?
இன் இங்கிலிஷ் ஒன்லி மிஸ்.
தென் ஹ_ ஸ்பீக்ஸ் இன் டமில் அட் ஹோம்?
மை சர்வண்ட் ஸ்பீக்ஸ் இன் டமில் (எங்கள் வீட்டு வேலைக்காரி மட்டும் தமிழில் பேசுகிறார்)
இஸ் நாட் டமில் யுவர் மதர் டங் ?
மை மதர் டங் இஸ் டமில் ஒன்லி ! பட் அட் ஹோம் ஒன்லி வித் மை சர்வன்ட் ஐ ஸ்பீக் இன் டமில்.

ஆக தமிழ்நாட்டில் தமிழ்மொழி வேலைக்காரியோடு பேசுவதற்கு மட்டும் பயன்படும் மொழியாக இருக்கிறது. மேலே காட்டிய எடுத்துக்காட்டுப் புறநடை என்று சொல்லிவிட முடியாது.

தமிழகத்தில் தமிழ்மொழி அலுவலக மொழியாக இல்லை. நீதிமன்றத்தில் வழக்குரை மொழியாக இல்லை. கோயில்களில் வழிபாட்டு மொழியாக இல்லை. பள்ளிகளில் கற்கை மொழியாக இல்லை. இதனால்தான் பாரதி மனம் நொந்து பாடினான் –

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளா ரடீ! – கிளியே!
நாளும் மறந்தா ரடீ!

இந்த அழகில் தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் செய்வதாகச் சொல்லிக் கொண்டு நடத்தப்படும் செம்மொழி மாநாடு முதல்வர் கருணாநிதிக்கும் கனிமொழிக்கும் புகழ் தேடித்தர நடத்தப்படுகிறதே ஒழிய அதனால் தமிழ்மொழிக்கு பயன் இல்லை எனத் தமிழ் உணர்வாளர்கள் எண்ணுகிறார்கள். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

தமிழ்மொழியில் புகுந்துள்ள பிறமொழிச் சொற்கள் களையப்பட வேண்டும்

33
தமிழ்மொழிக்கு விழா எடுப்பதில் தமிழர்களை யாரும் வெல்ல முடியாது. தமிழ்விழா, முத்தமிழ் விழா, தமிழிசை விழா என எந்தப் பக்கம் பார்ப்பினும் ஆண்டு முழுதும் உலகனைத்தும் தமிழ்மொழிக்கு விழா எடுக்கப்படுகிறது.

ஆங்கில மொழிக்கு இப்படி ஆங்கிலேயர்கள் விழா எடுக்கிறார்களா? இல்லை என்பதே பதிலாக வருகிறது.

எனக்குத் தெரிந்தமட்டில் வில்லியம் சேக்ஸ்பியர் என்ற ஒப்பற்ற ஆங்கில நாடக ஆசிரியருக்கு மட்டும் அவ்வப்போது விழா எடுக்கப்படுகிறது. அப்படியான விழாக்களில் அவர் எழுதிய நாடகங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்படுகின்றன.

ஆங்கில மொழியைக் கற்பிப்பதில் பிரித்தானிய அரசு அக்கறை காட்டுகிறது. தங்கள் வெளிநாட்டு தூதுவராலயங்கள் மூலம் ஆங்கிலத்தைக் கற்க ஒழுங்கு செய்கிறது. நூல் நிலையங்களையும் நடாத்துகிறது.

எதிர்வரும் யூன் மாதத்தில் தமிழக அரசு மிகப் பெரிய அளவில் செம்மொழி மாநாடு நடத்துகிறது. வெளிநாடுகளில் இருந்து நூற்றுக் கணக்கான தமிழறிஞர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இவ்வாறு செம்மொழி மாநாடு நடத்துகிற தமிழகத்தில் தமிழ் வாழ்கிறதா என்றால் இல்லை என்பதே விடையாக இருக்கிறது.
தமிழகத்தில் இயங்கும் தொலைக் காட்சிகள் தமிழ்மொழியின் தூய்மையைக் கெடுத்தே தீருவதெனக் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றன.

தொலைக்காட்சி கலைஞர்கள் ஆகட்டும் அதில் கலந்து கொள்ளும் பார்வையாளர்கள் சரி பாதிக்குப் பாதி ஆங்கிலம் பேசுகிறார்கள். பள்ளியில் படிக்கும் மாணவன் தொடக்கம் பல்கலைக் கழகப் பேராசிரியர் வரை தமிங்கிலத்திலேயே பேசுகிறார்கள்.
இசை, நடனம் இவற்றின் நுட்பத்தை விளக்க ஆங்கில மொழியையே யன்படுத்துகிறார்கள். ஏன் சமைப்பது எப்படி? என வகுப்பு நடத்துவோரும் தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்தே பேசுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மக்கள் தொலைக்காட்சி ஒன்று மட்டும் தூயதமிழில் எல்லா நிகழ்ச்சிகளையும் நடாத்துகிறது. இந்தத் தொலைக் காட்சியின் நிறுவனா பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஆவர். அவருக்கு இருக்கிற தமிழ்ப் பற்று முத்தமி;ழ் அறிஞர் கருணாநிதிக்கு இல்லாமல் இருக்கிறது.

முதல்வர் கருணாநிதியின் சொந்தத் தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சி ஆகட்டும் அவரது பேரப்பிள்ளைகள் நடத்தும் சன் தொலைக்காட்சி ஆகட்டும் தமிழைக் கொலை செய்தே தீருவோம என சூளுரைத்து எல்லா நிகழ்ச்சிகளையும் தமிங்கிலத்திலேயே நடத்துகின்றன.

செம்மொழி மாநாடு நடத்த வேண்டியதுதான். ஆனால் அதற்கு முதல் தூய தமிழ்மொழிப் பயன்பாட்டை நடைமுறைப் படுத்த வேண்டும். அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இரான் நாட்டு ஊடகங்களில் “pizza” என்ற சொல் அப்படியே பாரசீக மொழியில் கையாளப்பட்டது. ஆனால் ஈரானிய அரசு தலையிட்டு அந்தச் சொல்லை அப்படியே பயன்படுத்துவதற்கு தடை விதித்து விட்டது. அதற்கு ஈடான பொருள்தரும் பாரசீக மொழிச் சொல்லை உருவாக்க உத்தரவு பிறப்பித்தது. இது பற்றிய செய்தி ஏடுகளில் வெளிவந்தன.

TEHRAN, Iran — Iranian President Mahmoud Ahmadinejad has ordered government and cultural bodies to use modified Persian words to replace foreign words that have crept into the language, such as “pizzas” which will now be known as “elastic loaves,” state media reported Saturday. (http://www.christianforums.com/t3222344/)

ஒரேயொரு பிறமொழிச் சொல் ஆனால் ஈரானிய அரசு வாழாது இருக்கவில்லை. இரானிய நாட்டின் ஆட்சித்தலைவரே தலையிட்டு “pizza” என்ற சொல்லுக்குப் பதில் நெகிழ்ச்சியான அப்பத்துண்டு என்ற பொருள்தரும் பாரசீகச் சொல்லைப் பயன்படுத்துமாறு உத்தரவி;ட்டார்.

ஈரான் நாட்டின் அரசமொழி பாரசீக (குயசளi) மொழியாகும். அது பொது நிருவாகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. பழைய பாரசீக மொழி கிமு 514 அளவில் தோற்றம் பெற்றது. கிபி 250 வரை அதுவே அரசமொழியாக விளங்கியது. கிபி ஏழாம் நூற்றாண்டில் ஈரானை அரேபியர்கள் தாக்கிக் கைப்பற்றினார்கள். அதன் விளைவாக மக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டார்கள். அரபு மொழியே அரசமொழியாகவும் இலக்கிய மொழியாகவும் விளங்கியது. ஆனால் பாரசீக மொழி நீதிமன்ற மொழியாகத் தொடர்ந்து இருந்தது. பாரசீக மொழி அரபு மொழியில் இருந்து ஏராளமான சொற்களைக் கடன் வாங்கியது. அதன் அரிச்சுவடியே அரபு அரிச்சுவடிக்கு மாற்றப்பட்டது.
ஒரு சொல் என்றாலும் அதனை பாரசீகமொழிப்படுத்த ஈரானிய அரசின் ஆட்சித்தலைவரே தலையிட்டு ஆணை பிறப்பிக்கிறார்.
ஆனால் தமிழில் பிறமொழிச் சொற்கள் மிக எளிதாகப் புகுத்தப்படுகின்றன. இந்தப் பணியில் தமிழ்நாட்டில் இருந்து வரும் ஊடகங்களின் திருப்பணி சொல்லி மாளாது.

தமிழக அரசு அதனை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சக் காலத்துக்கு முன்னர் தமிழகத்தில் தமிழர்களால் தயாரித்த படங்கள் ஆங்கிலப் பெயர்களோடு புற்றீசல் போல் வெளிவந்தன. அவற்றுக்கு தடை விதிப்பதற்குப் பதில் தமிழக அரசு தமிழில் வெளிவரும் படங்களுக்கு வரி விலக்கு அளித்தது!

தமிழர்கள் நீண்ட காலமாகப் பிறமொழி பேசும் மக்களோடு தொடர்பு வைத்திருந்த காரணத்தால் தமிழில் பிறமொழிச் சொற்கள் புகுந்தன. அது இன்றைய வழக்கிலும் நிலைபெற்று விட்டன.

யவனர்களோடு தொடர்பு இருந்த காலத்தில் அந்த மொழிச் சொற்களை அப்படியே கையாளாது அதன் பொருள் தரும் சொற்களை தமிழில் உருவாக்கினார்கள். எடுத்துக்காட்டாக யவனர்களது கண்டுபிடிப்பான நாழிகை வட்டில் (றயவநச உடழஉம) கிரேக்க சொல்லின் பொருளை தமிழ்ப்படுத்தியதன் காரணமாகப் பிறந்த சொல்லாகும். இது போலவே இரண்டரை நாழிகையைக் குறிக்கும் ஓரை என்ற சொல்லும் கிரேக்க மொழிச் சொல்லேயாகும்.
இஸ்லாமிய அரசுகள் தமிழ்நாட்டின் சில பகுதிகளைப் பிடித்து ஆண்டதால் பாரசீக மொழிச் சொற்களும் உருது மொழிச் சொற்களும் தமிழில் புகுந்தன. 65 பாரசீக மொழிச் சொற்கள் தமிழில் புகுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. உருது மொழிச் சொற்கள் மொத்தம் 961 தமிழில் புகுந்துள்ளன.

பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து தமிழ்நாட்டிடையும் தமிழீழத்தையும் போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் பிடித்து ஆண்டதால் அந்த மொழிச் சொற்கள் தமிழில் கலந்துள்ளன.

ஆங்கிலேயர்கள் 300 ஆண்டுகள் எம்மை ஆண்ட காரணத்தால் 219 ஆங்கிலச் சொற்கள் தமிழில் கலுந்துள்ளன.

தமிழ்நாட்டை கன்னடர், தெலுங்கர், மராத்தியர் பிடித்து ஆண்டதால் அந்த மொழிச் சொற்களும் தமிழில் புகுந்துள்ளன.

பிறமொழிச் சொற்களை முற்றாகக் களைய முடியாது விட்டாலும் முடிந்த மட்டும் அவற்றை நீக்க வேண்டும். குறிப்பாக ஆங்கிலச் சொற்களை அப்படியே (health, junction, junior, cinema, theatre, magazine, police ) பயன்படுத்தப் படுவது சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட வேண்டும்.

இது போலவே குழந்தைகளுக்குப் பெற்றோர் பிறமொழிப் பெயர்களை கண்டபடி வைப்பதை சட்ட மூலம் தடை செய்தல் வேண்டும்.
ஆண் குழந்தைகளுக்கு நூறு பெயர்கள் பெண் குழந்தைகளுக்கு நூறு பெயர்கள் ஆக மொத்தம் 200 பெயர்களுக்குள் ஏதாவது ஒரு பெயரைப் பெற்றோர் தேர்ந்தெடுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.

எங்கும் எதிலும் தமிழ் என்று சொல்லப்படுகிறதே யொழிய இன்று எதிலும் தமிழ் இல்லை என்பதே உண்மை. செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசு தமிழ்மொழி வளர்ச்சிக்கு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


என்றுமுள்ள செந்தமிழ்
தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை!

34

தமிழ்மொழியை ஏற்றியும் போற்றியும் பாடாத புலவர்களே கிடையாது. தமிழ்விடு தூது என்ற நுலை எழுதிய பெயர் தெரியாத புலவர் ஒருவர் பினவருமாறு பாடியிருக்கிறார்.

“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”

இந்த தமிழ் விடு தூது என்ற ஏட்டுச் சுவடியைத் தேடிக் கண்டு பிடித்துப் பதித்தவர் எல்லோராலும் தமிழ்த் தாத்தா என்று புகழப்படும் உ.வே. சாமிநாதர் ஆவார். ஒரு பெரிய பணக்காரர் காலம் செய்த கொடுமையால் கைப்பொருள் யாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டார். அவரிடம் இருந்த பொருள்கள் எல்லாம் கடன்காரர்களின் கடனை அடைக்க ஏலத்தில் விலைபோயின. ஆனால் அவரிடம் இருந்த ஓலைச் சுவடிகளை மட்டும் கைவிட மனமில்லாமல் தன்னோடு வைத்துக் கொண்டார். உ.வே. சாமிநாதர் ஏட்டுச் சுவடிகளைத் தேடி ஊர் ஊராய் அலைகிறார் எனக் கேள்விப்பட்டு அந்த ஏட்டுச் சுவடிகளை அவரிடம் அவரது மாணாக்கர் மூலம் ஒப்படைத்தார். பணம் எதுவும் வாங்கவில்லை. அது மட்டுமல்ல சாமிநாதரைப் பார்க்க வெட்கப்பட்டு கடைசிவரை அவரைப் பார்க்காமல் இருந்து விட்டார்.

திருமூலர் பற்றை முற்றும் துறந்த துறவி. ஆனால் அவரால் கூட தமிழ்ப் பற்றைத் துறக்க முடியவில்லை.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே

எனத் தமிழ்மொழியை வியந்து போற்றுகிறார்.

 பிற்காலக் கவிஞர்களான பாரதியும் பாரதிதாசனும் தமிழ்மொழியை வேண்டு மட்டும் பாராட்டிப் பாடியிருக்கிறார்கள். தமிழ்மொழிக்கு வாழ்த்துப் பா பாடிய முதல் கவிஞர் பாரதிதான்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் (பாரதியார் கவிதைகள்  தேசியகீதம்)

என்று பாரதியார் புகழ்ந்து பாடுகிறார்.

பாரதியார் குழந்தைகளுக்காகப் பாடிய ‘பாப்பா பாட்டில்’ குழந்தைகளுக்குப் பலவிதமான அறிவுரைகளைக் கூறுகிறார். தாய்நாட்டின் பெருமைஇ தாய்மொழியின் பெருமை ஆகியவற்றையும் குழந்தைகளுக்கு எளிய தமிழில் எடுத்துரைக்கிறார். அவ்வாறு கூறும் பொழுது தமிழ்ச் சொற்களின் பெருமையினை எடுத்துரைக்கிறார்.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!                      (பல்வகைப்பாடல்கள், பாப்பா பாட்டு)

பாரதியாரை மிஞ்சும் வண்ணம் தமிழோடு கொஞ்சிக் குலாவியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்கு பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!       பாரதிதாசன் கவிதைகள் – இன்பத் தமிழ்)

இவ்வாறு தமிழை வாழ்த்திய பாரதிதாசன்தான் “தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று பாடினார்.

இப்போது ஒரு செய்தி வந்திருக்கிறது. செம்மொழி மாநாடு நடைபெற இன்னும் இரண்டு திங்கள் எஞ்சியிருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இரு நூறுக்கும் அதிகமான வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு பயணச் சீட்டு, உணவு உறைவிடமும் அரச செலவில் கொடுக்கப்படுகிறது. ஓசியில் வருவதை யார்தான் விடுவார்கள்?

தமிழகத்துக்கு வருகை தரும்போது தமிழ்நாட்டின் தமிழ்த் தெருக்களில் தமிழ் இல்லை என்றால் வெட்கக்கேடு இல்லையா? சென்னை பூந்தமல்லி ரோடுஇ அண்ணா சாலையில் தமிழ் பெயர்ப் பலகைகள் முழுமையாக இல்லை. இதனால் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் மே 31 நாளுக்குள் தமிழுக்கு முக்கிய இடம் கொடுக்து எழுதி வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள்தான் வணிக நிறுவனங்களின் பெயர்;ப் பலகைகளில் முக்கியமாக இடம் பிடித்துள்ளன. ஆனால் தமிழகத்தில் ஆங்கிலம்தான் முக்கிய இடம்பிடித்துள்ளது. யூன் 23 ஆம் நாள் முதல் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்னதாக அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்;ப் பலகைகளிலும் தமிழ் முக்கியமாக இடம்பெற வேண்டும். இதற்கான கடைசித் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. யூன் முதலாம் தேதி முதல் தமிழுக்கு முக்கிய இடம் கொடுக்காத பெயர்;ப் பலகைகள் அப்புறப்படுத்தப்படும்.

இதற்காக 537 ஆங்கில வணிகச் சொற்களுக்கு ஏற்ற தமிழ் சொற்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை மாநகராட்சி வணிக நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது. அதில் காணப்படும் ஆங்கிலப் பெயர்களுக்கு ஈடான தமிழ்ப்பெயர்கள் சில பின்வருமாறு.

பார்                                       –   மதுக் கூடம், அருந்தகம்
பஜார்                                   –   கடைத் தெருஇ கடை வீதி
கம்ப்யூட்டர்  சென்டர்       –   கணினி மையம்
கூல்டிரிங்க்ஸ்                    –  குளிர் பானங்கள், குளிர்; குடிநீரகம்
டிபார்ட்மென்டெல் ஸ்டோர்  –  பல்பொருள் அங்காடி
எலெக்டிரிக்கல்ஸ்                    –  மின் பொருளகம்
எலெக்ரானிகஸ்                       –  மின்னகம், மின்னணு பொருளகம்.
என்ஜினீயரிங் இண்டர்ஸ்ரீஸ் –  பொறியியல் தொழிலகம்
பேன்சி ஸ்டோர்           –  புதுமைப் பொருளகம்
பாஸ்ட் பூட்                   –  உடனடி உணவு, விரைவு உணவகம்
ஐஸ்கிரீம்                      –  பனிகுழைவு, பனி பாலேடு
போட்டோ ஸ்டூடியோ      –  நிழற்பட நிலையம்
பிளாசா                               –  கடைத் தொகுதி
ரெடிமேட் சென்டர்         –  அணியபாட்டுக் கடை
ஸ்நாக்ஸ்                         –  நொறுக்குத் தீனி
ஸ்டார்; ஓட்டல்            –  நட்சத்திர உணவகம்இ உயர்; உணவு உறைவுலகம்
ஸ்வீட்ஸ் ஸ்டால்         –  இனிப்பகம்
டியூசன் சென்டர்          –   தனிப் பயிற்சி நிலையம்

வெட்கம் அல்லது சோகம் என்னவென்றால் தமிழ்மொழி மேம்பாட்டுக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒன்று உருவாக்கப்பட்டு அந்தத் துறைக்கு தனி அமைச்சரையும் அரசு நியமித்து உள்ளது.

நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும் என்பதற்கான முயற்சி முன்னரும் பலமுறை மேற்கொள்ளப்பட்டன. மு. தமிழ்க்குடிமகன் தமிழ் ஆட்சிமொழிஇ தமிழ்ப் பண்பாடுஇ இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த போது (1996 – 2001) எடுக்கப்பட்ட முயற்சி வெற்றி பெறவில்லை. அது போலவே 2005 இல் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் அடங்கிய தமிழ் பாதுகாப்பு இயக்கம் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பெயர்ப் பலகைகளை அழிக்கச் சென்னையில் நடத்திய போராட்டமும் பயன் அளிக்கவில்லை. இப்போது எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில் சென்னை மாநகராட்சி மேயர் ஏற எத்தனிக்கிறார். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

வடமொழியே தமிழ்மொழிக்குத் தாய் என்ற மாயையை  உடைத்தெறிந்த கால்டுவெல் அய்யர்!

35

இந்தத் தொடரை நீங்கள் படிக்கும் போது கோவையில் யூன் 23 – 27  நாள்களில் நடைபெறும் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து முடிந்திருக்கும்.  பல கோடி செலவில் தமிழக அரசால் நடத்தப்படும் இந்த விழாவில் 300 க்கும் கூடுதலான தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள். அரசியல் மட்டத்தில் இந்த மாநாட்டுக்குப் பலத்த எதிர்ப்பு இருந்தாலும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு இந்த மாநாடு   ஓரளவாவது பயன்படும் என்ற எண்ணம் உண்டு.

உலகமொழிகளில்  கிரேக்கம்  இலத்தீன் இரண்டும்  செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டனர். அதன் விளைவாக வடமொழியும் செம்மொழியாகக் கருதப்பட்டது. 1816 இல் எல்லிஸ் என்ற அறிஞர் தென்னிந்திய மொழிகள் வடமொழியல்லாத மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார்.

கால்டுவெல் அய்யர்  ஸ்கொட்லாந்து நாட்டில் பிறந்து (1814 – 1892) கிறித்துவ மதத்தைப் பரப்ப  தமிழகத்திற்கு 1838 இல் வந்தார். திருநெல்வேலியில்  50 ஆண்டுக்காலம் தங்கிக் கிறித்துவச் சமயப்பணி ஆற்றினார். அவர் தமிழ் மொழியை வட மொழியுடனும் தெலுங்கு, மலையாளம், கன்னடம்  போன்ற திராவிட மொழிகளுடனும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தார். அவருடைய ஆய்வு அதுவரை இருந்த மொழியியல் நம்பிக்கைகளை உடைத்தெறிந்தது.

பண்டிதர்களிடம் வேர் ஊன்றியிருந்தது. கால்டுவெல் அய்யரின்  ஆராய்ச்சி வேறு உண்மைகளைக் கூறியது.  1856 இல்

திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் (The Comparative Grammar of the Dravidian Languages)   என்ற அரிய நூலை எழுதி வெளியிட்டார்.

திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் வெளி வந்த பின்னரே

தமிழ்மொழி வடமொழிக் குடும்பத்திலிருந்து  வேறுபட்டது. அது, திராவிட மொழிக் குடும்பத்தின் தாய்மொழி,  அதிலிருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகள் தோன்றின. தமிழ் வடமொழியின் துணையில்லாமல் தனித்தியங்கும் தன்மை வாய்ந்தது என்றும் தமிழ், வடமொழியின் கலப்பை எந்த அளவுக்கு நீக்குகிறதோ அந்த அளவுக்குத் தூய்மை அடைந்து சிறந்து விளங்கும்” என்றும் அவர் எண்பித்தார்.

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை (1855 – 1897) அத்தகையதொரு மொழியியல் கருத்தைத் தாம் இயற்றிய மனோன்மணியம் என்னும் நாடகநூலின் தமிழ்த்தெய்வ வணக்கப் பாடலில் பாடியிருந்தார்.

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவமும்
உன்உதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகுவழக்கு அழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

கன்னடம், களிதெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழ் என்னும் ஒரே வயிற்றில் தோன்றிய மொழிகள். வடமொழி உலக வழக்கில் அழிந்தொழிந்து போன மொழி, தமிழ் என்றும் இளமையோடு வாழும்மொழி என்பதே இதன் பொருளாகும்.

மனோன்மணியம் சுந்தரம்பிள்ள திருவாங்கூர் பல்கலைக் கழகக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். தமிழை தெய்வத்தாய் என்று அழைத்த பெருமை இவரையே சாரும்.

பின்னர் பரிதிமாற்கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்) தாம் எழுதிய “தமிழ் மொழியின் வரலாறு” எனும் நூலில் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தினார்.  இவர்களைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கத்தினைத் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தொடங்கினார். இவ்வியக்கத்தினைத் தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போன்றோர் கட்டி வளர்த்தனர்.

தமிழின் தொன்மையையும் வளமையையும் வேர்ச்சொல்லாய்வின் வாயிலாக உலகறியச் செய்தவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார். தமிழ்

முதல் செம்மொழி என்ற கருத்தினைப் பாவாணர் The Primary Classical Language of the World என்ற தம் நூலில் விளக்கியுள்ளார். அவர் எழுதிய இன்னொரு நூல்  ஒப்பியல் மொழி நூல் என்பதாகும். அந்த நூலை எழுதுவதற்கு கால்டுவெல் அய்யரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலே அடிப்படை என பாவாணரே பதிவு செய்துள்ளார். இதனால்  கால்டுவெல் அய்யரின்  அளப்பரிய தமிழ்த் தொண்டு எத்தகையது என்பதை அறிய முடியும்.

கால்டுவெல் அய்யர் காலத்திற்கு முன்பே, வடமொழியில் வல்ல தமிழறிஞர்கள் வடமொழியில் காணப்படாத தமிழ்மொழியின் தனி இயல்புகளைக் கண்டறிந்து கூறினர். இவர்களுள், கிபி 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாதவச் சிவஞான முனிவர் குறிப்பிடத்தக்கவர். இவர் எழுதிய தொல்காப்பியப் பாயிரவிருத்தியில், “தமிழ்மொழி புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா” என்று அறுதியிட்டுக் கூறினார்.

இருபத்தாறாயிரத்து முந்நூற்று அய்ம்பது அடிகளில் உருப்பெற்றுள்ள சங்க இலக்கியம், சிறந்த உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழை உயர்த்துகிறது. தமிழர் பண்பாட்டின் விளைவாக விளங்கும் இம்மொழி இந்தியத் திருநாட்டில் ஒப்பற்றது. தனித்தியங்கும் ஆற்றலையும், தமிழ்மண்வாசனை கமழும் உயர்தரம் கொண்ட இலக்கியக் கொள்கையினையும் யாப்பியல், பாவியல், அணியியல் முதலிய இலக்கணங்களையும் பெற்று விளங்குவது. சங்கச் செய்யுள் என்பது மொழியியல், யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமைபெற்ற வெளிப்பாடாகத் திகழ்வது. தமிழர் பண்பாட்டின் நனி சிறந்த கூறாகத் திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளரால் படியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், செப்பமும் முழுமையும் வாய்ந்த படைப்பாகவும் திகழ்கிறது. இவ்வகையில், சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும்” எனத் தமிழறிஞர்  கமில் சுவலபில் குறிப்பிடுகிறார்.

உலகப்புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஏ.கே. இராமாநுசன் மேலே கூறப்பெற்ற கருத்தினை வழிமொழிவதுடன், இந்தியச் செம்மொழிகள் இரண்டினில் வடமொழி வழக்கில் இல்லை என்றும் தமிழ்மொழி தொன்றுதொட்டு வழங்கிவரும் சிறப்புக்குரியது என்றும் கூறியுள்ளார்.பாணினியின் அட்டாத்தியாயி என்னும் வடமொழியின் மூல இலக்கண நூலுக்குப் பேருரை கண்ட காத்தியாயனர், பதஞ்சலி ஆகியோர் தமிழ் தொடர்பான தம் அறிவினைப் புலப்படுத்தியுள்ளனர். கிரேக்கம், ஈபுரு, சீனம், சப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட உலக மொழிகளில் காணப்படும் பற்பல தமிழ்ச் சொற்களைத் துறைவல்ல அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். மேலை, கீழை நாடுகளுடனும் தமிழ்மக்கள் கொண்டிருந்த பண்பாட்டு, வணிகத்தொடர்புகளை நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் ஆராய்ச்சி அறிஞர்கள் நிலைநாட்டியுள்ளனர்.

இடைக் காலத்தில் பிறமொழி மற்றும் பண்பாட்டினரின் படையெடுப்புக்களால் தமிழ் நலிந்த நிலையில் தாழ்வுற்றுக் கிடந்தது. அதிலிருந்து மீண்டு அதன் தொன்மையையும் தொடர்ச்சியையும், சிறப்பையும் தமிழர்கள் தாம் அறிந்தும் பிறரும் அறியக்கூடியவாறு நிலைநிறுத்தத் தொடங்கிய காலப்பகுதி தமிழ் மீட்சிக் காலம்  ஆகும்.

இக்காலப் பகுதி கிபி 1856  முதல் தொடங்கியதாகக் கொள்ளலாம்.  ஏட்டில் செல்லரித்துப் போய்க்கிடந்த சங்க நூல்களை  உ.வே. சாமிநாத அய்யர், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ள போன்றோர் அச்சேற்றிப் பொதுமக்கள் மத்தியில் உலா வரச் செய்தனர். இவற்றால் தமிழின் தலையெழுத்து  மாறத் தொடங்கியது. தமிழின் பெருமையும் தமிழரின் நாகரிகச் சிறப்பும் வெளியுலகத்துக்கு தெரியத் தொடங்கியது.

தமிழுக்கு இவ்வளவு சீரும்  சிறப்பும் இருந்தும் தமிழ்ப் பெற்றோர்கள்  தமிழ்மொழியைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கத்  தயங்குவதையும் பிறமொழிகளின் மீது ஈர்ப்புடையவர்ளாக  இருப்பதையும் பார்க்கிறோம்.

தமிழைப் புலம்பெயர் நாடுகளில் பரப்பும் பொறுப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். புலம்பெயர் நாடுகளுக்கு ஆசிரியர்களை அனுப்பியும் பாட நூல்களை வழங்கியும் தமிழ் கற்க வழிசெய்ய வேண்டும். புலம்பெயர் மாணவர்கள் தமிழ்நாட்டுக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் தமிழைக் குறுகிய காலத்தில் எழுதப் படிக்க வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

செம்மொழி மாநாடு நடத்துவதோடு நின்றுவிடாது நடைமுறையில் தமிழ்மொழி வளர ஆவன செய்ய வேண்டும்.


என்றுமுள்ள செந்தமிழ்

இத்தாலியில் பிறந்த வீரமாமுனிவர் தமிழ் படித்துத் தொன்னூல் எழுதினார்

36
சேர, சோழ, பாண்டிய அரசுகளின் மறைவுக்குப் பின்னர் மொகலாய மற்றும் விஜயநகர பேரரசின் படையெடுப்பாலும் அதனைத் தொடர்ந்து குடியேற்ற நாடுகளின் மேலாண்மை காரணமாகவும் தமிழ்மொழி வளர்ச்சி குன்றியது. தமிழ் மன்னர்களது ஆதரவில்லாததால் தமிழ்மொழி சைவ ஆதீனங்களது மடங்களில் முடங்கத் தொடங்கியது.

இருந்தும் மேலைநாடுகளில் இருந்து சமயம் பரப்ப வந்த கிறித்தவ குருமார் மக்களது தாய்மொழியில் தங்கள் சமயத்தை பரப்ப எண்ணியமதால் அவர்கள் தமிழ்மொழியைப் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்போதுதான் தமிழ்மொழியின் தொன்மை, தொடர்ச்சி, இலக்கியச் சிறப்பு, இலக்கணக் கட்டமைப்புப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. அது மட்டுமல்ல தங்கள் சமயத்தைப் பரப்பும் குறிக்கோளுக்கு அப்பால் தமிழ்மொழியின் சிறப்புக் காரணமாக அதனைத் துறையறக் கற்றுத் தமிழிலேயே இலக்கிய, இலக்கண நூல்கள் இயற்றவும் தலைப்பட்டார்கள். அந்த நூல்களை ஏடுகளில் எழுத்தாணி கொண்டு எழுதாது தாளில் எழுதி அச்சேற்றினார்கள்.

இக் குருமார்களில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர் என்றழைக்கப்படும் பெசுகிப் பாதிரியார் (Costanzo Giuseppe Beschi (1680 – 1746) குறிப்பிடத்தக்கவர். இயேசு சபையைச் சேர்ந்த இவர் 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

மதம் பரப்பும் முயற்சிக்காகத் தமிழைக் கற்றுக்கொண்ட இவர் தமது பெயரினைத் தைரியநாதன் என்று மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும் நன்கு தமிழ் கற்று அதன் மீது கொண்ட காதலாலும் தனது இயற்பெயரின் பொருளைத் தழுவி செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார். பெயரால் மட்டுமல்ல பண்பாட்டாலும் தமிழராகவே வாழத் தொடங்கினார்.

1822 இல் முதன் முதலாக இவருடைய வரலாற்றைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை இரண்டு நூற்றாண்டின் முன்னர் வழக்கில் இருந்த தமிழ் உரைநடையில் கீழ்வருமாறு எழுதியுள்ளார்.

இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்த, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்ட, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும் வெள்ளைப்பாகையும் இளங்காவி யுத்தரிய முக்காடும் கையினிற் காவி யுருமாலையும் காதில் முத்துக் கடுக்கனும் கெம்பொட்டுக் கடுக்கனும் விரலிற்றம்பாக்கு மோதிரமும் கையிற் றண்டுக் கோலும் காலிற் சோடுடனும் வந்து பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து உபய வெண்சாமரை வீசவும் இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின் மேலுட்காருவார்.

வீரமாமுனிவர் அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். எழுத்துச் சீரமைப்பு உட்பட இவர் தொடாத துறைகளே இல்லை எனலாம்.

சதுரகராதி              – இதனை நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார். இது தவிர, ‘தமிழ் – இலத்தீன் அகராதி, போர்த்துகீசியம் – தமிழ் – இலத்தீன் அகராதி என்னும் வேறு இரண்டு அகராதிகளையும் தொகுத்தளித்தார். அவற்றுள் தமிழ் – இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் செய்துள்ளார். போர்த்துகீசியம் – தமிழ்- இலத்தீன் அகராதியில் 4400 போர்த்துகீசியச் சொற்களுக்குத் தமிழிலும் இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இந்த அகராதிகளின் துணையால் அயல்நாட்டினர் தமிழைக் கற்பதற்கும் தமிழர் பிற மொழிகளைக் கற்பதற்கும் வழி திறக்கப்பட்டது.

தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய அய்ந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.

கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத் தமிழை விளக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும் இரட்டை வழக்கு மொழியான தமிழில் பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது போற்றுதற்கு உரியது எனலாம். இந்த நூல் கிறித்தவம் தமிழ் மொழிக்குச் செய்த கொடைகளில் ஒன்றாக அமைந்தது என்றால் மிகையாகாது.

திருக்குறளில் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
பரமார்த்த குருவின் கதை என்பது, தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். பரமார்த்த குருகதைகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாக் கதைகளை நையாண்டி செய்தது. எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கதை தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் படிப்பிக்கப்பட்ட பாலபாடத்தில் இடம்பெற்றிருந்தது.

திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.

தேம்பாவணி காவியம் மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது. இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணனைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சான்றாக இருக்கிறது. இந்தப் பாடல் எருசலேம் நகரை வருணிக்கிறது.

பயனினால் மறைநூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும்
வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும்
முயலினால் அலையை ஒக்கும் முனினி ஒன்னாக் கொக்கும்
நகரினை ஒக்கும் வீடே.

வளனாருக்கும் மரியாவுக்கும் திருமணம் நிகழ்வது குறித்த ஒரு பாடலில் வரும் ஒலி பற்றிய வருணனை கேட்கக் கேட்க இனிமை பயக்கும். இதோ அந்த ஒலிப்பாடல்:

முடுகு முரசு ஒலி முடுகு முழவு ஒலி
முடுகு முருடு ஒலி முடிவு இலா
கடுகு பறை ஒலி கடுகு கலம் ஒலி
கடுகு கடம் ஒலி கனிவு எழா
தொடுகு குழல் ஒலி தொடுகு குரல் ஒலி
தொடுகு துதி ஒலி தொடுதலால்
படுகு முகில் ஒலி படுகு கடல் ஒலி
படுதல் இல மணம் ஆயதே.

முடுகுகின்ற முரசொலியும் மத்தள ஒலியும் முருட்டின் ஒலியும் முடிவில்லாமல் ஒலிக்கவும் விரைந்து எழுகின்ற பறையின் ஒலியும் கடத்தின் ஒலியும் கனிவோடு எழுந்து ஒலிக்கவும் இயக்குகின்ற நாதசுர ஒலியும் மக்கள் பாடும் குரலொலியும் வாழ்த்தொலியும் ஒன்றாக இணைவதனால் மேகத்தில் எழும் இடியொலியும் கடலில் எழும் அலையொலியும் கெடுமாறு எவ்வகையிலும் குறைபடுதல் இல்லாத திருமணம் நிறைவேறியது.

கிறித்தவ குருமார்கள் தமிழ்மொழிக்குச் செய்த இன்னொரு பெருந்தொண்டு தமிழ் அச்சுக்கலையை அறிமுகப்படுத்தியது கிறித்தவ குருமார்களே. 1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் ‘அடியார் வரலாறு’ என்னும் நூலை அச்சிட்டர்கள். இந் நூல்தான் தமிழகத்தில் அச்சேறிய (அதற்கு முன்னர் அத்தோபர் 20,1578 இல்கொல்லம் கேரளாவில் தம்பிரான் வணக்கம் என்ற நூல் அச்சிடப்பட்டது) முதல் தமிழ் நூல்.

தமிழ் அறிஞர்கள் வீரமாமுனிவரை போற்றிப் புகழ்ந்துள்ளார்கள்.

”தமிழ் உரைநடைக்குத் தந்தை தத்துவ போதகரே என்பர். அது உண்மை எனினும் இவரால் அது வளம் பெற்று மிக்குயர்ந்தது” – தவத்திரு. தனிநாயகம் அடிகளார.

”18 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்புலவருள் வீரமாமுனிவரும் ஒருவர்” என்று ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எழுதிய அறிஞர் கால்டுவெல் எழுதியுள்ளார்.

திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ஜி.யு.போப் (G.U.Pope), இவரைத் ‘தமிழறிஞருள் மிகச் சிறந்தவர்’ என்று போற்றியுள்ளார்.

”திராவிட மொழியியல் வல்லுநர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த முன்னோடி வீர மாமுனிவரே” என்று செக் நாட்டுத் தமிழறிஞர் ‘கமல் சுவலமில்’ பாராட்டியுள்ளார்.

எமிலியோ தேவி என்ற இத்தாலி அறிஞர் ”கீழ்த்திசை அறிஞருள் மிகவும் புகழ் பெற்றவர் வீர மாமுனிவர்” என்று கூறியுள்ளார்.
இத்தாலியில் பிறந்து தமிழகம் வந்த வீரமாமுனிவரால் தமிழ் கற்று தமிழில் ஒரு தொன்னூல் இயற்ற முடியுமென்றால் தேம்பாவணி என்ற ஒப்பற்ற காவியத்தைப் படைக்க முடியுமென்றால் இங்கு தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்க் குழந்தைகள் தமிழில் எழுதப் படிக்கப் பேசப் பழக முடியாதா?


 என்றுமுள்ள செந்தமிழ்

வடமொழியே தமிழ்மொழிக்குத் தாய் என்ற மாயையை உடைத்தெறிந்த கால்டுவெல் அய்யர்!

37

இந்தத் தொடரை நீங்கள் படிக்கும் போது கோவையில் யூன் 23 – 27 நாள்களில் நடைபெறும் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து முடிந்திருக்கும். பல கோடி செலவில் தமிழக அரசால் நடத்தப்படும் இந்த விழாவில் 300 க்கும் கூடுதலான தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள். அரசியல் மட்டத்தில் இந்த மாநாட்டுக்குப் பலத்த எதிர்ப்பு இருந்தாலும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு இந்த மாநாடு ஓரளவாவது பயன்படும் என்ற எண்ணம் உண்டு.

உலகமொழிகளில் கிரேக்கம் இலத்தீன் இரண்டும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டனர். அதன் விளைவாக வடமொழியும் செம்மொழியாகக் கருதப்பட்டது. 1816 இல் எல்லிஸ் என்ற அறிஞர் தென்னிந்திய மொழிகள் வடமொழியல்லாத மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார்.

கால்டுவெல் அய்யர் ஸ்கொட்லாந்து நாட்டில் பிறந்து (1814 – 1892) கிறித்துவ மதத்தைப் பரப்ப தமிழகத்திற்கு 1838 இல் வந்தார். திருநெல்வேலியில் 50 ஆண்டுக்காலம் தங்கிக் கிறித்துவச் சமயப்பணி ஆற்றினார். அவர் தமிழ் மொழியை வட மொழியுடனும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திராவிட மொழிகளுடனும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தார். அவருடைய ஆய்வு அதுவரை இருந்த மொழியியல் நம்பிக்கைகளை உடைத்தெறிந்தது.

“வடமொழியே பிறமொழிகளுக்குத் தாய், அதிலிருந்தே மற்றமொழிகள் தோன்றின, அது தேவமொழி” என்னும் கருத்துக்களும் நம்பிக்கைகளும் வலிமையாகவும் பரவலாகவும் பரப்பப்பட்டிருந்தன. தமிழ் மொழி வடமொழியின் துணையில்லாமல் இயங்க இயலாது என்ற நம்பிக்கை வடமொழிப் பண்டிதர்களிடம் வேர் ஊன்றியிருந்தது. கால்டுவெல் அய்யரின் ஆராய்ச்சி வேறு உண்மைகளைக் கூறியது. 1856 இல் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் (The Comparative Grammar of Dravidian Languages)  என்ற அரிய நூலை எழுதி வெளியிட்டார்.

திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் வெளி வந்த பின்னரே தமிழ்மொழி வடமொழிக் குடும்பத்திலிருந்து வேறுபட்டது. அது, திராவிட மொழிக் குடும்பத்தின் தாய்மொழி, அதிலிருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகள் தோன்றின. தமிழ் வடமொழியின் துணையில்லாமல் தனித்தியங்கும் தன்மை வாய்ந்தது என்றும் தமிழ் வடமொழியின் கலப்பை எந்த அளவுக்கு நீக்குகிறதோ அந்த அளவுக்குத் தூய்மை அடைந்து சிறந்து விளங்கும்” என்றும் அவர் எண்பித்தார்.

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை (1855 – 1897) அத்தகையதொரு மொழியியல் கருத்தைத் தாம் இயற்றிய மனோன்மணியம் என்னும் நாடகநூலின் தமிழ்த்தெய்வ வணக்கப் பாடலில் பாடியிருந்தார்.

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவமும்
உன்உதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகுவழக்கு அழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

கன்னடம், களிதெலுங்கு,  மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழ் என்னும் ஒரே வயிற்றில் தோன்றிய மொழிகள். வடமொழி உலக வழக்கில் அழிந்தொழிந்து போன மொழி தமிழ் என்றும் இளமையோடு வாழும்மொழி என்பதே இதன் பொருளாகும்.

மனோன்மணியம் சுந்தரம்பிள்ள திருவாங்கூர் பல்கலைக் கழகக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். தமிழை தெய்வத்தாய் என்று அழைத்த பெருமை இவரையே சாரும்.

பின்னர் பரிதிமாற்கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்) தாம் எழுதிய “தமிழ் மொழியின் வரலாறு” எனும் நூலில் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தினார். இவர்களைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கத்தினைத் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தொடங்கினார். இவ்வியக்கத்தினைத் தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போன்றோர் கட்டி வளர்த்தனர்.

தமிழின் தொன்மையையும் வளமையையும் வேர்ச்சொல்லாய்வின் வாயிலாக உலகறியச் செய்தவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார். தமிழ் முதல் செம்மொழி என்ற கருத்தினைப் பாவாணர் The Classical Language of the World  என்ற தம் நூலில் விளக்கியுள்ளார். அவர் எழுதிய இன்னொரு நூல் ஒப்பியல் மொழி நூல் என்பதாகும். அந்த நூலை எழுதுவதற்கு கால்டுவெல் அய்யரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலே அடிப்படை என பாவாணரே பதிவு செய்துள்ளார். இதனால் கால்டுவெல் அய்யரின் அளப்பரிய தமிழ்த் தொண்டு எத்தகையது என்பதை அறிய முடியும்.

கால்டுவெல் அய்யர் காலத்திற்கு முன்பே வடமொழியில் வல்ல தமிழறிஞர்கள் வடமொழியில் காணப்படாத தமிழ்மொழியின் தனி இயல்புகளைக் கண்டறிந்து கூறினர். இவர்களுள் கிபி 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாதவச் சிவஞான முனிவர் குறிப்பிடத்தக்கவர். இவர் எழுதிய தொல்காப்பியப் பாயிரவிருத்தியில், “தமிழ்மொழி புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும் வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா” என்று அறுதியிட்டுக் கூறினார்.

இருபத்தாறாயிரத்து முந்நூற்று அய்ம்பது அடிகளில் உருப்பெற்றுள்ள சங்க இலக்கியம் சிறந்த உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழை உயர்த்துகிறது. தமிழர் பண்பாட்டின் விளைவாக விளங்கும் இம்மொழி இந்தியத் திருநாட்டில் ஒப்பற்றது. தனித்தியங்கும் ஆற்றலையும் தமிழ்மண்வாசனை கமழும் உயர்தரம் கொண்ட இலக்கியக் கொள்கையினையும் யாப்பியல் பாவியல் அணியியல் முதலிய இலக்கணங்களையும் பெற்று விளங்குவது. சங்கச் செய்யுள் என்பது மொழியியல் யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமைபெற்ற வெளிப்பாடாகத் திகழ்வது. தமிழர் பண்பாட்டின் நனி சிறந்த கூறாகத் திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளரால் படியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன் செப்பமும் முழுமையும் வாய்ந்த படைப்பாகவும் திகழ்கிறது. இவ்வகையில் சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும்” எனத் தமிழறிஞர் கமில் சுவலபில் குறிப்பிடுகிறார்.

உலகப்புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஏ.கே. இராமாநுசன் மேலே கூறப்பெற்ற கருத்தினை வழிமொழிவதுடன், இந்தியச் செம்மொழிகள் இரண்டினில் வடமொழி வழக்கில் இல்லை என்றும் தமிழ்மொழி தொன்றுதொட்டு வழங்கிவரும் சிறப்புக்குரியது என்றும் கூறியுள்ளார்.

பாணினியின் அட்டாத்தியாயி என்னும் வடமொழியின் மூல இலக்கண நூலுக்குப் பேருரை கண்ட காத்தியாயனர், பதஞ்சலி ஆகியோர் தமிழ் தொடர்பான தம் அறிவினைப் புலப்படுத்தியுள்ளனர். கிரேக்கம், ஈபுரு, சீனம், சப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட உலக மொழிகளில் காணப்படும் பற்பல தமிழ்ச் சொற்களைத் துறைவல்ல அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். மேலை, கீழை நாடுகளுடனும் தமிழ்மக்கள் கொண்டிருந்த பண்பாட்டு, வணிகத்தொடர்புகளை நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் ஆராய்ச்சி அறிஞர்கள் நிலைநாட்டியுள்ளனர்.

இடைக் காலத்தில் பிறமொழி மற்றும் பண்பாட்டினரின் படையெடுப்புக்களால் தமிழ் நலிந்த நிலையில் தாழ்வுற்றுக் கிடந்தது. அதிலிருந்து மீண்டு அதன் தொன்மையையும் தொடர்ச்சியையும் சிறப்பையும் தமிழர்கள் தாம் அறிந்தும் பிறரும் அறியக்கூடியவாறு நிலைநிறுத்தத் தொடங்கிய காலப்பகுதி தமிழ் மீட்சிக் காலம் ஆகும்.

இக்காலப் பகுதி கிபி 1856 முதல் தொடங்கியதாகக் கொள்ளலாம். ஏட்டில் செல்லரித்துப் போய்க்கிடந்த சங்க நூல்களை உ.வே. சாமிநாத அய்யர், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ள போன்றோர் அச்சேற்றிப் பொதுமக்கள் மத்தியில் உலா வரச் செய்தனர். இவற்றால் தமிழின் தலையெழுத்து மாறத் தொடங்கியது. தமிழின் பெருமையும் தமிழரின் நாகரிகச் சிறப்பும் வெளியுலகத்துக்கு தெரியத் தொடங்கியது.

தமிழுக்கு இவ்வளவு சீரும் சிறப்பும் இருந்தும் தமிழ்ப் பெற்றோர்கள் தமிழ்மொழியைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கத் தயங்குவதையும் பிறமொழிகளின் மீது ஈர்ப்புடையவர்ளாக  இருப்பதையும் பார்க்கிறோம்.

தமிழைப் புலம்பெயர் நாடுகளில் பரப்பும் பொறுப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். புலம்பெயர் நாடுகளுக்கு ஆசிரியர்களை அனுப்பியும் பாட நூல்களை வழங்கியும் தமிழ் கற்க வழிசெய்ய வேண்டும். புலம்பெயர் மாணவர்கள் தமிழ்நாட்டுக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் தமிழைக் குறுகிய காலத்தில் எழுதப் படிக்க வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

செம்மொழி மாநாடு நடத்துவதோடு நின்றுவிடாது நடைமுறையில் தமிழ்மொழி வளர ஆவன செய்ய வேண்டும். (தொடரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

 முதல்வர் கருணாநிதி புகழ்பாடிய  தமிழ்ச் செம்மொழி மாநாடு!

(38)

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்க்கு என பொறுப்பான ஒரு குழு இருக்கும் போது முதல்வர்  கருணாநிதியால் முதலில் ஒன்பதாவது தமிழாராய்ச்சி மாநாடு என அறிவித்து விட்டுப்  பின்னர் 2011 க்குக் காத்திராமல் முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது எல்லோரும் அறிந்ததே.

அய்ந்து நாள் (ஆனி 23 – 27) கோவையில் பொங்கு தமிழர்கள் எல்லாம் சங்கமித்த  முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தார தப்பட்டை முழங்க  கோலாகலமாக நடந்தேறியது.

இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் புலம்பெயர் நாடுகளில் ஓங்கி ஒலித்தது. முள்ளிவாய்க்காலில் ஆறாக ஓடிய  குருதி காயுமுன் செம்மொழி மாநாடா? என்று தமிழ் உணர்வாளர்களால் கேட்கப்பட்டது.

 மாநாடு தொடங்க  சில நாள்கள் இருக்கும் போது ” உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம்” என்ற ஒரு அறிக்கை வெளியானது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் புறக்கணித்தார்களோ இல்லையோ அதிமுக மற்றும் மதிமுக எதிர்க்கட்சிகள் செம்மொழி மாநாட்டைப் புறக்கணித்தன.  இப்படியான  புறக்கணிப்பு மரபை தொடக்கி வைத்தவர் முதல்வர் கருணாநிதிதான். 1981 இல் மதுரையில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை கருணாநிதி தலைமையிலான திமுக புறக்கணித்தது. தாமரை, அறிவுமதி, காசி ஆனந்தன் போன்ற  பாவலர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடை பெற இருப்பதை மனதில் வைத்து தமிழ்ச் செம்மொழி  மாநாடு நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.  தமிழ் உணர்வாளர்கள், இலக்கியவாதிகள், படைப்பாளிகள் மத்தியில் கருணாநிதியின் மீதான வெறுப்பு மாநாட்டு எதிர்ப்பாக மாறியிருந்தது. அதனை மழுங்கடிக்கவே    சிவத்தம்பியை மாநாட்டுக்கு வருந்தி அழைத்துக்  கருணாநிதி தனி மாலை மரியாதை செய்திருந்தார். மாநாட்டின் முதன்மை விருந்தினராகவும் ஆய்வரங்குக் குழுவின் தலைவராகவும் சிவத்தம்பி  நியமிக்கப்பட்டார். கனிமொழி செயலராக நியமிக்கப்பட்டார்.

சிவத்தம்பி “மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ? உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன்?” என்று குலோத்துங்க சோழனைக்  காறி உமிழ்ந்த கம்பநாடான் பரம்பரையில் வந்தவர் அல்லர்.  “நெற்றிக் கண்ணைக் காட்டிலும் குற்றம் குற்றமே” என்று வாதாடிய நக்கீரன் வழி வந்தவரும் அல்லர். “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்! நரகத்தில் இடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்” என்று வீர முழக்கமிட்ட அப்பரின் தலைமுறையும் அல்லர்.  சிவத்தம்பி ஆட்சியில் இருப்பவர்களின் கால்பிடித்து அண்டி வாழ்வதை வாழ்வின் தலையாய குறிக்கோளாகக் கொண்டவர். 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடக்கவிடாது முட்டுக் கட்டை போட்ட அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குத் துணையாக இருந்தவர்.

எதிர்பார்த்தது போலவே செம்மொழி மாநாடு தமிழ்த் தாய்க்கு அல்ல முதல்வர் கருணாநிதி குடும்பத்துக்கு  என்பது எண்பிக்கப் பட்டுவிட்டது. முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த 84 பேர் மாநாட்டின் முன்வரிசையில் அமர்ந்து இருக்கக் காணப்பட்டார்கள் என விகடன் செய்தி வெளியிட்டது. தமிழ் அறிஞர்கள் பின் வரிசைக்குத் தள்ளப்பட்டார்கள். விதி விலக்கு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி மட்டுமே.  மேடையில் மேற்குலக உடையில் தோன்றிய சிவத்தம்பி தொடக்கத்தில் தமிழில் கொஞ்சம் பேசிவிட்டு மிகுதியை ஆங்கிலத்தில் பேசி முடித்தார். நன்றி கூட ஆங்கிலத்தில் சொல்லப்பட்டது. தனக்கும் ஆங்கிலம் பேசத் தெரியும் என்று காட்டவே ஆங்கிலத்தில் பேசினார் போலும்.   அவரது ஆங்கிலப் பேச்சு தமிழில் மொழிபெயர்க்கப் படவில்லை.

ஆய்வரங்கைத் தொடக்கி வைத்து உரையாற்றிய பேராசிரியர் சிவத்தம்பி “முத்தமிழ் வித்தகர் கலைஞர் கருணாநிதி உலகத் தமிழருடைய மிகப்பெரிய தலைவராக விளங்குகிறார். தமிழ் மொழியில் பன்முக ஆற்றல் கொண்டவர்.   தமிழின் பெருமைகளை முற்றும் அறிந்து உணர்ந்தவர்”  எனப் புகழாரம் சூடடினார். “உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒரு சாதாரண மாநாடாக எண்ணிப் பார்க்க முடியாது.  இது தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்கும் மிகப்பெரிய மாநாடாகவே நாம் காண்கின்றோம்” என்றார்.

மாநாடு முடிந்தபின் சிவத்தம்பி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டார். ஈழம் பற்றிய கேள்விக்கு சிவத்தம்பி “என் அபிப்ராயப்படி ‘ஈழம்’ என்பது சிங்களச் சொல்லில் இருந்து வந்ததாக நினைக்கிறேன்” எனப் பதில் அளித்தார்.  இந்தக் குழந்தைத்தனமான பதிலில் இருந்து என்ன தெரிகிறது? சிவத்தம்பி தமிழறிஞரே இல்லை என்பது தெரிகிறது. அல்லது அவர் படித்த பாடங்களை மறந்துவிட்டார் என்பது தெரிகிறது.

சங்க காலத்தில் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் நெருங்கிய வணிகத் தொடர்புகள் இருந்தன. அவற்றுள் ஒன்று உணவு.  பட்டினப்பாலையில் ‘ஈழத் துணவும் காளகத் தாக்கமும்எனப்  புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் குறிப்பிடுகிறார். மேலும் சங்க காலத்தில் பூதந்தேவனார் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவர் மதுரை பூதந்தேவனார் என அழைக்கப்பட்டார். மற்றவர் ஈழத்துப் பூதந்தேவனார் என்று  அழைக்கப்பட்டார்.  பின்னவர் நற்றிணை (3) குறுந்தொகை (4)  அகநானூறு (2)  ஆக மொத்தம் ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளார்.  ஈழம் அல்லது இலங்கை என்று அழைக்கபடும்  தீவுக்கு சிங்களத்தில் பெயர் இல்லை.  சிங்கத்தைக் குறிக்கும் சிகல என்ற சொல் இலங்கையைக் குறிக்க சூழவம்சத்தில் ஒரு தரமும் மகாவம்சத்தில் இரண்டுதரமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா என்பதும் வடமொழிப் பெயராகும். அது தமிழில் இலங்கை என்று திரிபு அடைந்தது.

கட்டுரை படித்தவர்கள் சரி, கவிதை படித்தவர்கள் சரி எல்லோருமே தமிழைப் பாடாமல் கருணாநிதி புகழ் பாடினார்கள்! செவியிரண்டும் கிழிந்து போகும் அளவுக்கு பலரும் போற்றி பாடினார்கள். வைரமுத்து, வாலி, விஜய், தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன், நா.முத்துக்குமார், மு.மேத்தா, பழனிபாரதி, தணிகைச் செல்வன், கயல்விழி, உமா மகேஸ்வரி, தமிழ்தாசன், அப்துல் ரகுமான், வா.மு.சேதுராமன்   எனக்  கூழுக்குப் பாடும் ஒரு கவிஞர் பட்டாளம் கருணாநிதிக்குப் பாமாலை பாடிப் புகழ்மாலை சாத்தியது.  குறிப்பாக   கவிஞர் வைரமுத்து, வாலி, மேத்தா, விஜய் போன்றோர் கருணாநிதியைப் பாராட்டு மழையில் தோய்த்து எடுத்தார்கள்!

கலைஞருக்கு தமிழ் உலகம் நன்றி சொல்ல வேண்டும்
கலைஞர்தான் மறுபடியும் முதல்வராக வேண்டும்  ( வைரமுத்து)

 ’தலை வைத்ததால் தண்டவாளம் கூட தமிழ் பேசக் கற்றுக்கொண்டது
 கலைஞர் கால் வைத்ததால் கோவை மாநகர் செம்மொழி மாநாடு நடக்கும் தகுதி பெற்றது (முத்துக்குமார்)

இக்காலத்து இளங்கோ நீ,
உனது உமிழ்நீர் கூட தமிழ்நீர் தான் உனக்கு,
ஏழைகளின் இக்கால குலோத்துங்கன்,
குடிசைவாசிகளுக்கு கான்கிரீட் வீடு கொடுத்த கரிகாலன்,
பாட்டுடை தலைமகனே, செம்மொழி நாயகனே!  (  தமிழச்சி தங்கபாண்டியன்)

இதில் கவிஞர் விஜய் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் சமர் என்ற ஒரு முழு நீள கவிதை நூல் எழுதியுள்ளார்.

எதிரிகள் அவர்களது துப்பாக்கியால் கொன்றார்கள்
உறவினரை நாம் துரோகத்தினால் வீழ்த்தினோம்
எதிரிகளை விட மன்னிக்க முடியாதவர்கள் துரோகிகள்.

இப்படிப் பாடிவிட்டு அவர் எந்த முகத்தோடு இந்த மாநாட்டில் கலந்து கொண்டாரோ தெரியவில்லை.

கருணாநிதியின் பேத்தி கயல்விழியோ கவிதை வாசிக்கும் போது Stop என ஆங்கிலத்தில் எழுதி அந்த இடங்களில் நிறுத்தி வாசிக்கும் “புகழ்” வாய்ந்த கவிஞர், தன் தாத்தாவின் உமிழ்நீர் கூட தமிழ்நீர் எனப் புதிய கண்டுபிடிப்பை மாநாட்டு மேடையில் முழக்கினார்.

வாலியோ தமிழை  ஆராய்ச்சி செய்யாமல் குஷ்புவை ஆராய்ச்சி செய்தார். மொத்தத்தில் முதல்வர் கருணாநிதியின் பாராட்டு விழாக்களில்  சாத்தவேண்டிய புகழ்மாலைகளை தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சாத்தினார்கள். (மிகுதி அடுத்த இதழில்)


என்றுமுள்ள செந்தமிழ்

  301 கோடி செலவில் நடந்தேறிய  செம்மொழி மாநாடு!

(39)

தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு என முதல்வர் கருணாநிதி தொகுத்த  பாடலுக்கு ஏ.ஆர். இரஹ்மான் இசை அமைத்திருந்தார். அது தமிழிசை அல்ல. அவருக்கு உரித்தான கலப்பிசை. ஜாஸ் இசையையும் அதற்குள் தேவையில்லாமல் நுழைத்திருந்தார். அந்தப் பாடலில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதில் வரும் கேளிர் என்ற சொல்லை கேளீர் என்று உச்சரித்து இரஹ்மான் பாடியிருந்தார். “கேளிர் என்பதைப் பிழையாகக் கேளீர் என்று படியிருக்கிறீர்களே” என்று பிபிசி தமிழோசை கேட்ட கேள்விக்கு “நான் நியூ ஜெனரேஷனை சேர்ந்தவன்” என்று தமிங்கிலத்தில் பதில் இறுத்தார். கேளிர் என்றால் உறவினர் என்று பொருள். கேளீர் என்றால் கேட்பது என்ற பொருள் என்று விளக்கிய பின்னரும் இரஹ்மானுக்கு பொருள் விளங்கவில்லை.  இசைப் புலமை இருந்தும் தமிழ்ப் புலமை இல்லாததே இப்படியான   தமிழ்க் கொலைக்குக் காரணம் ஆகும். மொத்தத்தில் பாடலிலும் நயமில்லை. இசையிலும் இனிமையில்லை.

தமிழ் இசை அமைப்பாளர்கள்  தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம் இரண்டையும் படித்திருக்க வேண்டும். இலக்கியமும் இலக்கணமும் தெரியாதோர் ஏடெழுதல் கேடு தரும் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னது தமிழ் இசை அமைப்பாளர்களுக்கும் பொருந்தும். ஏ.ஆர். இரஹ்மான் மேற்குலக  ஜாஸ் இசையைத் திருடி இசைக் கருவிகளை வரம்பு மீறி தமிழிசைக்குள் நுழைத்துவிட்டார். பெரும்பாலான அவரது பாடல்களில் பாடல் வரிகளைக் கேட்க முடியாது.  இசைக் கருவிகளின் இரைச்சலைத்தான் கேட்க முடியும்.

கருணாநிதி ஆற்றிய தலைமை உரை கூட தற்புகழ்ச்சியாகவே இருந்தது. திருவாரூர் வீதிகளில் 14 அகவையில் தமிழ் வாழ்க என்று தனது தலைமையில் பேரணி நடத்தியது தொடங்கி இற்றைவரை தமிழுக்கு தான் தேடிக் கொடுத்த பெருமைகளை எல்லாம் அடுக்கிக் காட்டினார்.

தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்கவிழா நாளன்று பந்தலில் இருந்த மக்களின் எண்ணிக்கை 2 இலட்சம். அன்று மாலை நடந்த அலங்கார ஊர்திகளின் எழிலார் பவனியை கண்டு களித்தோரின் எண்ணிக்கை 5 இலட்சம். ஆனி  24 முதல் 26 வரை, மாநாட்டுப் பந்தலில் நடந்த கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளில் நாளாந்தம் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர். பொதுக்கண்காட்சியை நான்கு நாட்களில்,  1,70,000  பேர் பார்த்துள்ளனர். வருகை தந்தவர்களின் மொத்த தொகை பத்து இலட்சமாம். இந்த பத்து இலட்சம் வேடிக்கை பார்க்க வந்த கூட்டமா?  தமிழ் உணர்வோடு கூடிய கூட்டமா என்பது சிக்கலான கேள்வி.

மாநாட்டின் மொத்த செலவு 301  கோடியே 76 இலட்சம் ரூபாய்.  அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளுக்கு செலவழித்த தொகை 230 கோடியே 76 இலட்சம். செம்மொழி மாநாட்டுப் பணிகளுக்குச் செலவழித்த  பணம் 69 கோடி ரூபாய். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த வகையில், இந்த மாநாடு மாபெரும் “வெற்றி” என்று சொல்ல வேண்டும். தமிழுக்கு இன்னொரு முறை இப்படியொரு மாபெரும் திருவிழா நடத்தப்படுமா என்பது அய்யமே.

“தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுங்கள்”  என முதல்வர்  தமிழறிஞர்களைக் கேட்டுக் கொண்டார். இது அந்தக் காலத்து நாடகங்களில் அந்தப்புரமே கதியாகக் கிடக்கும் அரசன் “அமைச்சரே! நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறதா?” என்று கேட்ட  மாதிரி இருக்கிறது!  தமிழுக்கு என்ன  செய்ய வேண்டும் என்பது அய்ந்துமுறை மொத்தம் பதினெட்டு ஆண்டுகள் முதலமைச்சராக இருக்கும்  முத்தமிழ் வித்தகருக்கு எப்படித் தெரியாது போய்விட்டது?

தமிழக அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் ஒரு பட்டியலே போட்டிருக்கிறார்கள்.

(1) தமிழக அரசு அலுவலகங்களில்  தமிழில் ஆட்சி நடை பெறவேண்டும்.

(2) பள்ளிகளில், கல்லூரிகளில் கற்கை மொழி தமிழாக இருக்க வேண்டும்.

(3) தமிழகத்தில் இறை வழிபாடு தமிழில் நடைபெற வேண்டும்.

(4) நீதி மன்றங்களில் வழக்காடு மொழியாக  தமிழ் இருக்க வேண்டும்.

(5) அங்காடிகளின் பெயர்கள் தமிழில் எழுதப்பட வேண்டும்.

இவற்றை எல்லாம்  முத்தமிழ் அறிஞர் (இப்போது  அய்ந்தமிழ் அறிஞர்)  எனப் போற்றப்படும் முதல்வர் கருணாநிதி நடைமுறைப் படுத்தவில்லை.  தமிழனைத் தமிழில் படிக்க வைக்க முடியவில்லை.   தமிழ் வளர்ச்சிக்கு ஏதும் செய்யாத   முதல்வர்  கருணாநிதி செம்மொழித் தமிழ் மாநாட்டை நடத்தியதுதான் பலரது புருவத்தை உயர்த்தியிருக்கிறது.  மாநாடு செம்மொழி தமிழுக்கு  அல்ல அவரது தற்புகழுக்கு என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.  ”மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை, தோப்பில் நிழலா இல்லை, தமிழகத்தில் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை” என்று பாவேந்தர் பாரதிதாசன் கவலைப்பட்டது இன்றும் மெய்யாக இருக்கிறது.

இவை மட்டுமல்ல. தமிழும்  தமிழினமும்  தமிழ்நாடும் தலை நிமிர வேண்டுமென்றால் தமிழை அறிவியல் மொழியாக மாற்ற வேண்டும்.  கணினித் தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும். இந்தியாவில் வெளிமாநிலங்களிலும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் தமிழை வளர்க்கத் தமிழக அரசு தனி அமைச்சை உருவாக்க வேண்டும். பாட நூல்களையும் ஆசிரியர்களையும் புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வெளிநாட்டுப் பிள்ளைகள் குறுகிய காலத்தில் தமிழைப் படிக்க  கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தமிழை செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்திருப்பது உண்மைதான். ஆனால் மத்திய  செம்மொழி மையத்துக்கு 2010-2011 நிதி ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ருபா 16 கோடி மட்டுமே. ஆனால் செம்மொழி என அறிவிக்கப்படாத சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூபா 78  கோடி.  இதனால் தமிழ் செம்மொழி என்ற அறிவிப்பை இந்திய அரசு ஒப்புக்குச் செய்திருக்கிறதா  என்ற அய்யம் எழாமல் இல்லை.

1956 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் தமிழை அரசமொழியாக்கிய சட்டம் செல்லாக் காசாகப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக ஆக்கும் தீர்மானம்  அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒரேமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் கடந்த நான்காண்டு காலமாக இதில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்கவில்லை.

தமிழை வளர்ப்பதற்கான பல நல்ல ஆலோசனைகளையும் இந்த மாநாட்டில் பலர் வழங்கியிருக்கிறார்கள். தமிழை அறிவியல் மொழியாக மாற்ற வேண்டும். தமிழ் வளர்ச்சித்துறையை நிறுவனமாக மாற்றி, வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் தமிழைப் பரப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  தமிழில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில், பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும். மேல்நிலைக் கல்விகளில் தமிழுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், கணினித் தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும் ……………என இந்த பட்டியல் நீள்கிறது.

இப்படிப் பட்டியல் போட்டால் மட்டும் போதாது. தமிழுக்கு விழா எடுப்பதால் தமிழ் வளராது. தமிழைப் பயன்படுத்தினால் மட்டுமே தமிழ் வளரும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எங்கும் தமிழை கற்கை மொழியாக ஆக்கவேண்டும். இறை வழிபாடு தமிழில் இருக்க வேண்டும். நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடும் உரிமை இருக்க வேண்டும். அலுவலக மொழி தமிழில் இருக்க வேண்டும். இவற்றைச் செய்தால் தமிழ்மொழி தானே வளரும். செம்மொழி மாநாடு தேவைப்படாது. (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

இம் என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்
அம் என்றால் ஆயிரம்பாட்டு ஆகாதோ!

(40)
தமிழ் இனத்தை தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இந்த இலக்கியங்கள் வழியாகவே தமிழரது மொழி, கலை, பண்பாடு, குமுகம், பொருளாதார வாழ்க்கையையும் அதன் வளத்தையும் அறிய முடிகிறது.

இடைச் சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை, பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் சிறப்புற்றதோ அல்லது மேலோங்கியதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன.

எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் தமிழ் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.

பொதுவாகப் பார்க்கும் போது இத்தகைய இலக்கியப் படைப்புகள் பல தனிப் புலவர்களால் பாடப்பட்டவை ஆகும். அப்படிப் பாடப்பட்ட பாடல்களை மன்னர்களது ஆதரவோடு கூட்டாகப் புலவர் குழுக்கள் அவற்றைத் தொகுத்தன. அப்படித் தொகுக்கப்பட்டதே சங்க இலக்கியங்களில் ஒன்றான எட்டுத்தொகை நூலாகும்.

இந்தத் தொகை நூல்களைத் தொகுப்பித்த மன்னர்கள் பற்றிய செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அகநானூறு தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழான் மகன் உருத்திரசன்மன். தொகுக்கச் செய்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
ஐங்குறுநூறு தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் தொகுக்கச் செய்தவன் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

கலித்தொகை தொகுத்தவர் நல்லந்துவனார். தொகுக்கச் செய்தவன் – புலப்படவில்லை.

குறுந்தொகை தொகுத்தவர் புலப்படவில்லை. தொகுக்கச் செய்தவன் – பூரிக்கோ.

நற்றிணை தொகுத்தவர் புலப்படவில்லை. | தொகுக்கச் செய்தவன் – பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.

பதிற்றுப்பத்து, பரிபாடல் (பரிபாட்டு) புறநானூறு ஆகிய மூன்று நூல்களுக்கும் தொகுத்தவர் தொகுக்கச் செய்தவர் பற்றிய செய்திகள் புலப்படவில்லை.

தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இயற்கை நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டை தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.

தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16 ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே உருவாக்கப்பட்டன. அய்ரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் தோன்றியது.

சங்க காலப் புலவர்கள் கையாண்ட இலக்கிய நடை கடினமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. சங்க இலக்கியம் பொதுமக்களுக்கு ஆகப் படைக்கப்படவில்லை அது ஒரு புலவர் மற்றப் புலவர்களுக்கு ஆக எழுதியது என்கிறார்கள்.

சங்க இலக்கிய அகப்பாடல்கள் உள்ளுறை, இறைச்சி என்ற குறிப்புப் பொருள்களின் கருவூலமாக விளங்குகின்றன. அதில் புலவர்கள் குறியீடு, உவமை, உருவகம் முதலியவற்றைக் குறிப்புப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் உள்ள குறிப்புப் பொருளை விளங்கிக் கொள்ளத் தனி மொழிப் புலமை தேவைப்படுகிறது.

சங்க இலக்கியங்களில் அமைந்துள்ள திணை, துறை, அகம், புறம், தோழி, பாங்கன், பாணன், பாடினி, வெறியாட்டு, அறத்தொடு நிற்றல் முதலியவற்றை படித்துப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. தமிழ் இலக்கண மரபினைப் புரிந்து கொண்டாலொழிய சங்க இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது. நாம் முறையாகத் தமிழ் ஆசிரியரிடம் தமிழ்கற்காததும் புரியாமைக்கு ஒரு காரணமாகும்.

சங்கம் மருவிய காலத்தில் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டிலும் தமிழ் நடை ஓரளவு எளிதாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இதன் தொடர்ச்சியாக இடைக்காலத்தில் படைக்கப்பட்ட கம்பரின் இராமாயண காப்பியத்தில் தமிழ்நடை மேலும் எளிமையாக்கப்பட்டிருக்கிறது.

இடைக்காலத்தில் அவ்வையார், சேக்கிழார, கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, காளமேகம், கச்சியப்ப சிவவாச்சாரியர் என பல புலவர்கள் இனிமைத் தமிழுக்கு வளம் சேர்த்தனர். இவர்களைப் பற்றியும் இவர்களது ஆக்கங்கள் பற்றியும் அறிந்தோர் தொகை தமிழ் உலகில் அருகிக்கொண்டே வருகின்றது. எனவே அவர்களில் சொல் விளையாட்டில் வல்லவரான காளமேகப் புலவரை அறிமுகம் செய்யலாம் என நினைக்கிறோம்.

காளமேகப் புலவர் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது. அவர் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்றெல்லாம் புகழப்படுகிறார்.  நினைத்தவுடன் எதைப்பற்றியும் கவிதை பாடுவதில் வல்லவர்களே ஆசுகவி என்று அழைக்கப்படுவார்கள். ஆசுகவிகளிலே காளமேகப்புலவர் தன்னிகரற்ற பேராற்றல் படைத்தவராய் விளங்கினார். இதனை அவரே ஒரு பாடல் மூலம் முழங்கியிருக்கிறார்.

இம் என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்
அம் என்றால் ஆயிரம்பாட்டு ஆகாதோ – சும்மா
இருந்தால் இருப்பேன் எழுந்தால் மேகம்
பொழிந்தால் கவிகாள மேகம்.

காளமேகப் புலவரின் கவிச்சிறப்பைப் சுவைப்பதற்கு முன்னர் அவரைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் சிலவற்றை அறிந்துகொள்வது நலம் என நினைக்கிறோம்.

காளமேகப்புலவர் பாண்டிநாட்டிலே திருமோகூர் என்னும் திருத்தலத்திலே கோயில்பணியாளராயிருந்த ஒருவருக்கு மகனாகப் பிறந்தார் என்றும் காளமேகம் என்பது அவரது இயற்பெயரே என்றும் அறிஞர்கள் சிலர் கூறுகின்றார்கள். அதேவேளை வரதன் என்பதே அவரது இயற்பெயர் என்று இன்னும் சில அறிஞர்கள் எடுத்துரைக்கின்றார்கள். அதற்கு ஆதாரமாக, அதிமதுரகவி என்பவர் இயற்றியதாகச் சொல்லப்படும் பாடலொன்றை சான்றாகாகக் காட்டுகின்றார்கள்.

வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
வீசுகவி காள மேகமே – பூசுரா
விண்தின்ற வெள்வழலில் வேவுதே பாவியேன்
மண்தின்ற பாணமென்ற வாய்.

எனவே வரதன் என்பதே அவரின் இயற்பெயர் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கின்றது.

இளமைப்பருவத்தில் ஸ்ரீரங்கம் திருமால் கோயிலிலே வரதன் கோயிற் பணியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஸ்ரீரங்கத்திலிருந்து சிலகற்கள் தொலைவிலே இருப்பது திருவானைக்கா என்ற சிவத்தலம். அத்தலத்திலே நடனக்கலை மூலம் இறைபணிசெய்யும் தேவரடியார்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தியான மோகனாங்கி மிகவும் அழகானவள். அவளுக்கும் வரதனுக்கும் காதல் மலர்ந்தது. (வளரும்)


About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply