150 ஆவது ஆண்டு பிறந்த நாள் கொண்டாடும் கனடா
கனடா யூலை மாதம் முதலாம் திகதி இரண்டாயிரத்து பதினேழாம் ஆண்டு தனது 150 ஆவது பிறந்தநாளை ஆடல் பாடலோடு குதூக்கலமாகக் கொண்டாடுகின்றது. பாருக்குள்ளே நல்ல நாடு என்று பெயர் எடுத்துள்ள கனடா, மேற்கத்தைய நாடுகளுக்குள் சிறந்த முன்னோடி நாடாகவும் பன்முகத் தன்மையுடைய நாடாகவும் சனநாயக விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் நாடாகவும் விளங்குகிறது.
அமைதி, ஒற்றுமை, பல்கலாசாரம் போன்றவற்றுக்கு எடுத்துக் காட்டாக விளங்கு நாடு கனடா என மதிக்கப்படுகிறது. இந்த நாட்டின் சமூகவியல் கட்டுமானம் முதற்குடிகள், ஆங்கிலேயர், பிரஞ்சு மக்கள் என்ற மூன்று வகை தேசிய இனங்களோடு ஆரம்பித்து, பின்னர் காலத்துக்குக் காலம் குடியேறிய பல்கலாசார இனங்களைச் சேர்த்த சமூக அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த மண்ணில் யார் பழமை இனத்தவர் என்றோ, புதிய குடிவரவாளர்கள் என்றோ வேறுபாடுகளின்றி அவரவர் பாரம்பரியம், மரபுகள் சார்ந்த வாழ்வைத் தொடர அனைத்து வழிவகைளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் சிதைந்து கொண்டிருக்கும் மனித நேயத்தை கட்டியெழுப்பி அதைப் பராமரிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு புதிய நாடாகவும் கனடாவைப் பார்க்கலாம். 1600 ஆம் ஆண்டுகளில் பிரஞ்சு, ஆங்கில இனத்தவர் கனடாவில் குடியேறியபோது, பூர்வீகக் குடிகளாக இனுவிற்றும் 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரஞ்சு மக்களால் முதல்குடியினருடன் ஏற்பட்ட கலப்பு திருமணங்கள் மூலமாக மெற்றிஸ் என்ற இனம் உருவாக்கப்பட்டது.
1867 இல் நான்கு மாகாணங்களைக் கொண்டு கனடா என்ற புதியநாடு உதயமாகின்றது. குடிவரவாளர்களுக்கான சட்டம்1869ம் ஆண்டில் உருவாக்கப்பட்டாலும் அது பெரும் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக Royal Commission On Chinese Immigration என்ற சட்ட வரைவு, சீனர்களுடைய வரவைக்கட்டுப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இற்றைவரை குடிவரவாளர்கள் தொடர்பாக பன்னிரண்டு புதிய சட்ட வரைபுகள் இயற்றப்பட்டுள்ளது.
1900 ஆம் ஆண்டுக்குப் பின் கனடாவில் குடியேறிய ஜேர்மன், உக்ரைன் மக்களும், இரண்டாம் உலகப்போருக்குப் பின் குடியேறிய யூதர்களும், பால்டிக் நாடுகளான லித்துவேனியா, லித்வியாவிலிருந்தும் மற்றும் ஐரோப்பாவில் இருந்த வந்த மக்களையும் அகதிகளாக ஏற்று கனடா பல்கலாசார நாடாக பயணிக்கத் தொடங்கிகியது. 1960 களில் கனடாவிற்கே மகுடம் சூட்டுகின்ற மனித உரிமைச் சட்டத்தையும், சுதந்திரத்திற்கான கனேடிய சாசனத்தையும் வெளியிட்டது.
சட்டத்தில் புரட்சி செய்யும் வகையில் 1971இல் பிரதமர் எலியட் ரூடோவினால் கொண்டுவரப்பட்ட கனேடிய பல்பண்பாட்டுக்கொள்கை குடிவரவாளர்களின் மரபுகளைக் காக்கும் அரணாக கனடிய அரசியலில் இடம்பெற்றுள்ளது. எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஒரு நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கோட்பாட்டுடள் உருவாக்கப்பட்ட சட்டம் பின்னர் 1988 ஆம் ஆண்டளவில் சிலதிருத்தங்களோடு பன்முகப் பண்பாட்டுச் சட்டமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் இருந்து பொருளாதார காரணங்களுக்காக தமிழர்கள் கனடாவில் குடியேறத் தொடங்கினர். ஆனால் 1983 இல் தமிழர்களுக்கெதிராக திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம் காரணமாக கடாவுக்கு அகதிகளாக வரும் தமிழர்களின் தொகை அதிகரித்தது. இன்று கனடாவில் 300, 000 கும் அதிகமான தமிழர்கள் தமது கலாசார விழுமியங்களை அனுட்டித்துக் கொண்டு வாழ்கின்றனர்.
கனடாவின் 150 ஆவது பிறந்தநாள் காணும் இவ்வாண்டில், தை மாதத்தினை தமிழர் மரபுரிமை மாதமாக கனடாவால் பிரகடனப்படுத்ப்பட்டமை தமிழர்களுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம் என்றே சொல்ல வேண்டும். தைமாதம் முழுவதும் தமிழர்கள் தங்கள் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் கொண்டாடும் மாதமாக வரித்துக் கொள்ளலாம். இது தமிழர்களுக்கான அங்கீகாரம் மட்டுமல்லாது, கனேடிய தமிழர்களின் பல்துறைப் பங்களிப்புக்குரிய அங்கீகாரம் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.
கனடாவில் குடியேறிய 200 கும் மேற்பட்ட இனகுழுக்கள் தங்களுக்கே உரித்தான இன, மொழி அடையாளங்களோடு சுதந்திரமாக வாழ்கின்றனர். கனடாவின் பன்முக பண்பாட்டு விழுமியங்களே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
இந்த நாட்;டில் வாழும் மக்கள் யாராக இருந்தாலும் நாம் கனேடியர் எனத் தம்மை அடையாளப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.
கரி ஆனந்தசங்கரி, நா.உ
ஊடக மையம்
01-07-207
Leave a Reply
You must be logged in to post a comment.