தமிழர் தெருவிழா 2017 குதூக்கல தொடக்கம்

தமிழர் தெருவிழா 2017  குதூக்கல தொடக்கம்

தமிழர்களில் பெரும்பான்மையோர் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் இலங்கையில் இருந்து தமிழர்களின் வெளியேற்றம் சில நன்மைகளையும் செய்துள்ளது. தமிழ்மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் உலகமயப்படுத்த நீங்கள் உதவியுள்ளீர்கள். கனடிய தமிழ் சமூகம் உலகில் மிகப் பெரிய எண்ணிக்கை கொண்ட புலம்பெயர் சமூகமாகவும் வெற்றி அடைந்த சமூகமாகவும்  காணப்படுகிறது. கனடிய தமிழர்கள் வாழ்வின் பல துறைகளிலும் அது கல்வியாக இருக்கலாம், தொழில்த் துறையாக இருக்கலாம், இசைத் துறையாக இருக்கலாம் அரசியலாக இருக்கலாம் மற்ற எந்தத் துறையானாலும்   சகல  துறைகளிலும் அபார வளர்ச்சி கண்டுள்ளீர்கள். இந்தத் தமிழர் தெருவிழா  உங்களது வளர்ச்சியின் அடையாளமாகும்.   இந்தத் தொடக்க நிகழ்வில் பங்கு கொள்வதில் நான் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். பல்கலாச்சாரம் தனித்துவமானது. கடவுளால் கொடுக்கப்பட்ட கொடை.  கனடா, வெவ்வேறு நாடுகளில் இருந்து வெவ்வேறு இனத்தவர்கள் குடியேறி வாழும் நாடு.  இந்தப் பன்முகத்தன்மை காரணமாக கனடா வளர்ச்சி அடைந்துள்ளது. நான் கனடா அரசையும் மக்களையும் மதிக்கிறேன்” இவ்வாறு தமிழர் தெருவிழா 2017 தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகளார் குறிப்பிட்டார்.IMG_0745

தமிழர் தெருவிழா 2017  தொடக்க  நிகழ்வு கடந்த யூன் 23  வெள்ளிக்கிழமையன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில்  நடைபெற்றது.  எதிர்வரும் ஓகஸ்ட் 26, 27 ஆம்  திகதிகளில் மார்க்கம் வீதியில் சிறப்புற நடைபெறவிருக்கும் தெருவிழாக் கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்த விளக்கங்களும் அனுசரணையாளர்களின் அறிமுகமும் கனடியத் தமிழர் பேரவையின் நிகழ்ச்சித் தொகுப்பாளரால் அரசமுறையாக வெளியிடப்பட்டன. ‘தமிழர் தெருவிழா 2017’ க்கான முக்கிய அனுசரணையாளராக ‘போர்முலா ஹொன்டா’ நிறுவனமும், இணை அனுசரணையாளராக ‘பொனபைட் மோர்ட்க்கேஜ்’ நிறுவனமும் அறிவிக்கப்பட்டன.

தொடர்ந்து பேசிய இம்மானுவேல் அடிகளார் “1983 ஆம் ஆண்டு தொடக்கமே தமிழ்க் குடிவரவாளர்களுக்கு கனடா தனது வாசல் கதவைத்  திறந்து வைத்து வரவேற்றது. உங்களையும் ஐரோப்பாவில் குடியேறிய தமிழர்களையும்  ஒப்பீடு செய்து பார்த்தால் ஐரோப்பியாவில் குடியேறியவர்கள் மொழி காரணமாக அந்த நாட்டு மக்களோடு ஒன்றிணைய  காலம் எடுத்தது. ஆனால் இங்கு அப்படியல்ல.  தமிழர்களுக்கு ஆங்கிலம் இரண்டாவது மொழி என்பதால் ஏனைய சமூகத்தவரோடு ஒன்றிணைவது சுலபமாக இருந்தது. இந்த மண்ணில் தடம்பதித்து வளர முடிந்தது. நீங்கள் எமது போராட்டத்தின் தொடக்கத்திலேயே, போரின் தொடக்கத்திலேயே இங்கு வந்துவிட்ட காரணத்தால் அந்தப் போராட்டத்துக்கு நிறைய பொருள் வழங்கியுள்ளீர்கள். தொடர்ந்தும்  நீங்கள் உங்களது பங்களிப்பை நல்கி வருகிறீர்கள். கனடா எமது போராட்டத்தை ஆதரித்து வந்திருப்பதோடு மற்ற நாடுகளையும் ஆதரிக்குமாறு செய்துள்ளது” என்றார்.

கனடிய சமூகத்தின் சமூகத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கனடிய தமிழர் பேரவையின் புதிய தலைவர் மருத்துவர் வடிவேலு சாந்தகுமார் அனைவரையும் வரவேற்றார்.  IMG_0744தமிழர் தெருவிழாவின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டார்.  ஸ்காபரோ, மார்க்கம் பிரதேசங்களில் நடக்கும் மிகப்பெரும் விழா இது என்ற பெருமையை தக்கவைக்கும் வகையில் தமிழர் தெருவிழா மூன்றாவது முறையாக இவ்வாண்டும் சிறப்பாக நடைபெறும் என்றும் சென்ற ஆண்டு 175,000 மக்கள் வருகை தந்தார்கள்  ஆனால்  இந்த ஆண்டு 300,000 மக்கள் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும்  நம்பிக்கை தெரிவித்தார்.

கனடிய நாடாளுமன்ற ஸ்காபரோ – ரூஜ் பார்க் உறுப்பினரான கரி ஆனந்தசங்கரி, ஸ்காபரோ வடக்கு உறுப்பினர் ஷான் சென்,  ஒன்ராறியோ சட்டமன்றத்திற்கான ஸ்காபரோ றூஜ் றிவர் உறுப்பினர் றேமன்ட்  சோ, அஜின்கோர்ட் உறுப்பினர் ஸூ வோங், ரொறன்ரோ மாநகர உறுப்பினர்கள் நீதன் சாண், சின் லீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, தமிழ்க் கனேடியர்கள் பிற சமூகத்தினருடன் இணைந்து ஒற்றுமையுடன் மிகச் சிறப்பாகச் செய்துவரும் ‘தமிழர் தெருவிழா’ வெற்றிபெற வாழ்த்தினர்.

Title Sponsor: Formula Honda இன் பொது முகாமையாளர் Phill Martiniello Phil Martiniello  அவர்கள் தமிழர் தெருவிழா 2017 வெற்றி்பெற வாழ்த்தியதோடு தனது அலுவலக ஊழியர்கள் 140 பேரும் தெருவிழாவில் கட்டாயம் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

தமிழர் தெருவிழா 2017 க்கு அனுசரணை வழங்கும் நிறுவனங்கள் பின்வருமாறு:

(1) Title Sponsor: Formula Honda

(2) Powered By Sponsor: Bonafide Mortgages

 (3) Silver Sponsors :  Aalaya , Babu Catering, Lebara, Nava Law and  Sutha Homes – Sutha Balasubramanium

 (4) Media Sponsors: ATN, DOTO, East FM and  Metroland Media

கனடிய பல்கலாச்சார வளர்ச்சியின் பகுதியாக கவனிக்கப்பட்டுவரும் ‘தமிழர் தெருவிழா’வை வரவேற்றுக் கனடியப் பிரதமர், ஒன்ராறியோ முதல்வர், ரொறன்ரோ நகர மேயர் ஆகியோர் அனுப்பிய வாழ்த்துச் செய்திகளும் வாசிக்கப்பட்டன. (நக்கீரன்)

 

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply