சோதிடப் புரட்டு (31-35)

சோதிடப் புரட்டு (31)

புகழ்பெற்ற கிரேக்க வானியலாளர்கள்  

சோதிடத்தினாலும் சோதிடர்களாலும் தமிழ் சமுதாயத்திற்கு ஏற்படும் கேடுகள்பற்றிப் பலர் சிந்திக்க மறுத்தாலும் ஒரு சிலராவது அதையிட்டு அக்கறை காட்டுகின்றார்கள் என்பதைச் சோதிடப் புரட்டைப் படிப்பவர்கள் எனக்கு அனுப்பும் மின்னஞ்சல்கள் புலப்படுத்துகின்றன.

சோதிடப் புரட்டைப் படிப்பதோடு நில்லாமல் படியெடுத்து மற்றவர்களுக்குக் கொடுத்துப் படிக்க வைப்பதாகச் சில வாசகர்கள் எழுதித் தெரிவித்திருக்கின்றார்கள். மெத்த மகிழ்ச்சி.

‘முயற்சி திருவினையாக்கும்’

‘தெய்வத்தான் ஆகாது எனினும், முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்’                (குறள் 619)

என்பது வள்ளுவர் வாக்கு.

இதோ சிந்தாரிப்பேட்டை, சென்னையில் இருந்து டி.டி.வி. இராமன் என்பவர் சோதிடர்களின் திருகுதாளங்கள் பற்றித் தினமலர் நாளேட்டுக்கு எழுதிய மடலை அப்படியே தருகிறேன்.

‘சமீபகாலமாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் சில சோதிடர்கள் தோன்றித் தங்களுடைய பிரதாபங்களைச் சாற்றுகின்றனர். முன்னெல்லாம் இந்தச் சோதிடர்கள் கைரேகை, சோதிடம், எண்சாத்திரம் இவைபற்றித்தான் பேசுவர். இப்போது விளம்பரத்தில் வரும் சோதிடர்கள் தாங்கள் கைரேகை, சோதிடம், எண்சாத்திரம் இவை தவிர வாஸ்து, வசியம் இவை எல்லாவற்றிலும் விற்பன்னர்கள் என்று விளம்பரம் கொடுக்கின்றனர்.

இவர்களில் பலர் தம் பெயருக்குப் பின்னால் எம்.ஏ. பி.எச்.டி. (யு.எஸ்.ஏ.) என்று டிகிரி சேர்த்துக் கொள்கின்றனர். இவைகள் எந்தப் பல்கலைக் கழகங்களாலும் கொடுக்கப்பட்டவை அல்ல.

விளக்கம் கேட்டால் எம்.ஏ. என்றால் மாஸ்டர் ஆப் அஸ்ட்ராலஜி, பி.எச்.டி. (யூ.எஸ்.ஏ.) என்றால் யூனைடெட் சொசைட்டி ஆப் அஸ்ராலஜி (சோதிட இணைப்பு சங்க உறுப்பினர்) – இப்படிச் சொல்லிக் கொள்கின்றனர்.

சிலர் தங்கள் பெயருக்கு முன்னால் புரொபசர், டாக்டர் என்று பட்டம் சேர்த்துக் கொள்வது போன்று சோதிட சக்கரவர்த்தி, சோதிட சிங்கம் என்ற பட்டங்களைச் சேர்த்துக் கொள்கின்றனர். இந்தப் பட்டங்களை யார் இவர்களுக்குக் கொடுத்தார்களோ…. கடவுளுக்கே வெளிச்சம்!

சில சித்த வைத்தியர்கள் எய்ட்ஸ், கான்சர் போன்ற நோய்களுக்கு (ஆங்கில முறையில் மருந்து கண்டு பிடிக்க முடியாத நோய்களுக்கும்) மருந்து இருப்பதாக தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தப் பிரசாரத்தை கண்டு பல பேர் பணத்தை இழந்து ஏமாந்து தங்கள் வாழ்க்கையைக் குட்டிச்சுவராக்கிக் கொள்கின்றனர். இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை தடுக்க உரிய அதிகாரம் படைத்தவர்கள் சீக்கிரம் நடவடிக்கை எடுத்தால் நல்லது.”

உண்மை என்னவென்றால் சோதிடம் ஒரு கட்டுப்படுத்தப்படாத தொழில் ஆகும்.  யாரும் தங்களைச் சோதிட சிகாமணி, சோதிட ஆசான், சோதிடக் கலைக்கோ, சோதிடப் புலி என்று சொல்லிக் கொண்டு தொழில் செய்யலாம். தேவை ஒரு பெயர்ப் பலகை மட்டுமே. கொஞ்சம் வசதியானவர்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்கிறார்கள். இன்னும் வசதியானவர்கள் தொலைக்காட்சியிலும் அறிவியல் அண்மையில் கண்டுபிடித்த இணைய தளத்திலும் மிகக் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்கின்றார்கள்.

மக்கள் சோதிடர்கள் விரிக்கும் வலையில் விழாமல் இருக்க வேண்டும் என்றால் அவர்கள் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.

பிளாட்டோ ஏதன்ஸ் நகரைச் சேர்ந்த ஒரு செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் சிறுவனாக இருக்கும் போதே தந்தையார் இறந்து போக அவரது தாயார் மறுமணம் செய்து கொண்டார். பிளாட்டோ தனது இளவயதில் Cratylus என்பவரிடம் படித்தார் என அவரது மாணாக்கரான அரிஸ்தோட்டல் எழுதியிருக்கின்றார். Cratylus  தீயே அண்டத்தின் அடிப்படைப் பொருள் என்று சொன்ன Heracleitus என்பவரின் மாணவராவார்.

பிளாட்டோவின் காலத்தில் வானியல் பற்றிய கற்கை மாற்றம் பெற்று பல வழிகளில் முன்னேறியது. வெறுமனே விண்ணை அண்ணாந்து அழகான விண்மீன்களைப் பார்ப்பதை விடுத்து கணக்கியலையும் (Mathematics) கேத்திர கணிதத்தையும் (Geometry) படித்து வானியலின் உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார்.

வானியலின் படிமுறை வளர்ச்சியில் பிளாட்டோ (Plato – கிமு 427-347) முக்கிய பங்கு வகித்தார். வானியலை ஒரு அழகியல் கலை என்று இல்லாமல் அதனை நிலக்கணிதம் போன்ற ஒரு அறிவியல் பாடமாகக் கருத வேண்டும் என்றார். கோள்களின் ஓட்டங்களை விளக்க உயர் நிலக்கணிதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றார். வானியலை ஒரு அறிவியல் பாடமாகக் கற்கும் போது வியத்தகு மாற்றங்கள் ஏற்படும் என பிளாட்டோ நம்பினார். “எவன் வானியலைப்பற்றி நன்கு அறிந்து கொள்கிறானோ அவன்தான் உண்மையான அறிவாளி” என்றும் சொன்னார். பிளாட்டோ நடத்திய கழகத்தின் (Academy) நுழை வாசலில் இப்படி எழுதப்பட்டிருந்தது.

‘கணக்கியலில் புலமை இல்லாதவர்கள் உள் நுழையக் கூடாது.”

கோமர் அண்டத்தை எளிய முறையில் விளக்கினார். அண்டம் ஒரு வட்டவடிவமான தட்டு, புவிக்கு மேலே வானுலகம் (Heavens) கீழே காவல் கிடங்கு (Tartaus) இருக்கிறது என்றார். ஆனால், 5 கோள், ஞாயிறு, நிலா, புவி இவற்றின் ஓட்டங்களை விளக்க சிக்கலான ஒரு மாதிரிபடிவம் (Model) தேவைப்பட்டது.

பைதாகொறாசினியர் மற்றும் பிளாட்டோனியர் புவி மற்றும் கோள்களுக்கு அசைவு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். அதன் விளைவாக மிகைப் படுத்தப்பட்ட, கட்டுப்பாடற்ற கோட்பாடுகளை அவர்கள் உருவாக்க நேர்ந்தது.

பிளாட்டோவின் முதன்மை மாணாக்கர்களில் ஒருவர் அரிஸ்தோட்டல் (Aristotle – கிமு 384-323) ஆவார்.  இவரே மசிடோனியாவை ஆண்ட மகா அலெக்சாந்தரின் ஆசிரியரும் ஆவார்.  மகா அலெக்சாந்தர் முதலில் கிரேக்கத்தைக் கைப்பற்றினார். அதன் பின்பு எகிப்து, பாரசீகம், இந்தியா போன்ற நாடுகள் மீது படையெடுத்துச் சென்று அவற்றை வெற்றி கொண்டார்.

இந்தப் படையெடுப்புக்கள் அறிவியல் மட்டத்தில் மேற்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்க உதவின என நம்பப்படுகிறது. இன்று இந்திய சோதிடத்துக்கும் கிரேக்க சோதிடத்துக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைக்கு இந்தப் படையெடுப்பே ஏது எனச் சொல்லலாம்.

அரிஸ்தோட்டல் வாழ்ந்த காலத்து மக்களில் பெரும்பாலோர் பல தெய்வங்கள்  இருப்பதாக நம்பினார்கள். இயற்கை நிகழ்வுகள் தெய்வங்களின் சினம் அல்லது மகிழ்ச்சி இரண்டினாலும் ஏற்படுகிறது என நினைத்தார்கள். மகிழ்ச்சியான தெய்வம் நல்ல விளைச்சலைத் தருவார், சினம் கொண்ட தெய்வம் புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற அழிவுகளை விளைவிப்பார் என நம்பினர்.

அரிஸ்தோட்டல் அவதானிப்பு மூலமும் அளவை (logic) பகுத்தாய்வு (reason) ஆகியவற்றின் அடிப்படையிலும் அண்டத்தைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளலாம் என முடிவுசெய்தார். இதன் காரணமாகவே அரிஸ்தோட்டல் “இயற்கை அறிவியலின் தந்தை” (Father of Natural Science) எனப் போற்றப்படுகிறார். அரிஸ்தோட்டல் காலத்து மக்கள் புவி தட்டையானது என நம்பினர். ஆனால் அரிஸ்தோட்டல் அது உருண்டை வடிவம் என முடிவு செய்தார். ஞாயிறு மற்றும் சந்திரன் இரண்டுக்கும் இடையில் புவி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது புவியின் நிழல் சந்திரன் மீது வட்ட வடிவில் படிவதை அவதானித்தார். புவி தட்டை என்றால் புவியின் நிழல் வேறு வடிவத்தில் இருந்திருக்கும்.

பிளாட்டோனியர்கள் எதனையும் தெய்வீகத்தன்மையோடு பார்க்கும் அணுகு முறையைக் கடைப்பிடித்தார்கள். அதற்கு மாறாக அரிஸ்தோட்டல் அண்டத்தை அறிந்து கொள்வதற்கு அவதானிப்பு முக்கியமானது என வாதிட்டார். இவரின் இந்த மனப்பான்மையே தொமாஸ் அக்குனாஸ் (Thomas Acqinas கிபி 1225-1274) மற்றும் றோஜர் பேகன் (Roger Boger Bacon – கிபி1214-1292) போன்ற இடைக்கால அய்ரோப்பிய அறிவியலாளர்களுக்கு வழிகாட்டலாகவும் முன் எடுத்துக்காட்டாகவும் அமைந்தது.

அரிஸ்தோட்டல் அண்டத்தைப் பற்றிய பிளாட்டோவின் கற்பனை பலவற்றை நிராகரித்தார். இருந்தும் பிளாட்டோவின் அண்டம் (Cosmos) பற்றிய பிழிவைப் பின்பற்றினார். அதாவது இந்த அண்டத்தின் மையம் புவி என்பதையும் அதைச் சுற்றியே ஏனைய கோள்கள் வலம் வருகின்றன என்ற கோட்பாட்டை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டார்.      Image result for aristotle

கோள்களின் அசைவுகளை விளக்க அவர் 28 குப் பதில்  54 உருளைகளை உருவாக்கினார். அதே சமயம் கோள்களுக்குத் தெய்வீகம் கற்பிக்கப்படுவதை நிராகரித்தார். உலகியற்றியானை (Creator) அண்டத்துக்கும் விண்மீன்களுக்கும் அப்பால் வைத்தார்.

இது இரட்டை விளைவுகளை ஏற்படுத்தியது.

    1) அண்டம் ஆன்மாவால் இயங்கும் ஒரு உயிருள்ள பொருள் என்ற பிளாட்டோவின் கோட்பாட்டுக்குப் பதில் அது உயிரற்ற ஒரு இயந்திரம் என்பது.

  2) விண்மீன்கள் தெய்வீகம் படைத்தவை என்பதற்குப் பதில் அவை தெய்வீகத்தை வெளிப்படுத்தும் ஊடகங்கள் மட்டுமே என்பது.

வேறுவிதமாகச் சொன்னால் பிளாட்டோ எல்லாம் தெய்வச் செயல் என்றார். ஆனால், அரிஸ்தோட்டல் விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள தெய்வீகம் மெல்லக் கோள் வழியாகப் புவியை வந்தடைகிறது என்றார். அது மட்டுமல்ல, மனிதனது சுயவினைக்கும் (free will) இடம் உண்டு என்று சொன்னார்.

பிளட்டோனியர்களைவிட Stoics  என அழைக்கப்படும் தத்துவவாதிகள் கோள்களைத் தெய்வங்களாகவும் தேவதைகளாகவும் பார்த்தார்கள். Stocis  கிமு 311 இல் ஏதன்ஸ் நகருக்குக் குடியேறிய சிரியா நாட்டைச் சேர்ந்த சீநோ (Zeno) என்பவரால் தோற்றுவிக்கப் பட்டது. இவரது தத்துவம் அடிப்படையில் கிரேக்க தத்துவத்தை ஒத்ததுதான். ஆனால், தொனியில் வைதீக சமயக் கருத்துக்களைக் கொண்டதாக இருந்தது.

சோதிடத்துக்கு சீநோவின் அறிவுரைகள் இரண்டு முக்கிய விளைவுகளை உண்டு பண்ணின. முதலாவது வானுலக உடலிகள் (Heavenly bodies) தெய்வீகமானவை என்பதற்கு மேலாக அண்டம் மீண்டும் மீண்டும் தோன்றி மறைந்து வரும் இயல்பு உடையது என்றார்.  இரண்டாவது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொன்ன சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார் பாணியில் ‘உலக மனிதகுலம் ஒன்றே’ என்றார். மனிதகுலம் ஒன்றே என்பது மகா அலெக்சாந்தரின் படையெடுப்பால் ஏற்பட்ட ஒரு கருத்துருவாக்கம் ஆகும்.

மனிதகுல ஒற்றுமை என்பது மன்னர்களின் ஒற்றுமை என்பதல்ல, அது தனி மனிதர்களது ஒற்றுமையாகும். ஒவ்வொரு மனிதனும் தனது விதிக்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் அவன் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் சாதகம் கணிப்பதன் நோக்கம் மனிதன் தன்னைப் புரிந்து கொண்டு தனது தலைவிதியிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என சீனோ சொன்னார்.

வானியல் வளர்ச்சியின் அடுத்த கட்டம் Herakleides  (கிமு 390-310) என்பவரோடு தொடங்குகிறது. பிளாட்டோ சிசிலியில் இருந்த காலத்தில் இவரே அவரது கழகத்தை நடத்தினார்.  இவர் உலகம்தான் அண்டத்தின் மையம் என்பதை ஒத்துக் கொண்டார். ஆனால், அதே உலகம் தனது அச்சில் தன்னைத்தானே சுற்றுகிறது என்றார். இப்படி உலகம் தன்னைத்தானே சுற்றுவதால்தான் வானுலகம் அசைகிற மாதிரியான மாயத் தோற்றம் உண்டாகிறது என்றார். புதன் மற்றும் வெள்ளி கோள்களின் ஒழுங்கற்ற கோள்வீதிக்குக் (orbit) காரணம் அவை ஞாயிறைச் சுற்றிவருவதால் ஏற்படுகிறது என்றார். ஆனால், செவ்வாய், வியாழன், சனி கோள்கள் புவியைத்தான் சுற்றி வருகிறது என்றும் சொன்னார்.

இதன் மூலம் அரிஸ்தோட்டலின் கோட்பாட்டில் உள்ள பலவீனங்களை  ர்நசயமடநனைநள  விளக்க முயற்சித்தார். இவர் கிமு 310 இல் இறந்தார்.

அரிஸ்தோட்டலின் புவிமையக் (geocentricity) என்ற கோட்பாட்டில் இருந்து முற்றிலும் முறித்துக் கொண்ட பெருமை அறிஸ்தார்சுஸ் (Aristarsus – கிமு 310-230) என்பவரையே சாரும். இவரே புவி உட்பட மற்றக் கோள்கள் அனைத்தும் ஞாயிறை வலம் வருகின்றன என்ற புரட்சிகரமான கோட்பாட்டை முன் வைத்த முதல் வானியலாளர் ஆவார்.

அறிஸ்தார்சுஸ் அன்றைய வானியலாளர்களில் முன்னணி வானியலாளராகக் கருதப்பட்டார். புவி தனது அச்சில் 24 மணித்தியாலத்துக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுகிறது என்றும் புவி ஞாயிறைச் சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு ஆண்டு எனவும்  புவியைப் போலவே ஏனைய கோள்களும் ஞாயிறைச் சுற்றி வருகிறது என்றும் சொன்னார்.

புவி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு ஞாயிறையும் வலம்வருகிறது எனச் சொன்ன அறிஸ்தார்சுசை தெய்வபக்தி இல்லாதவர் எனச் குற்றம் சாட்டி அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க ஆட்சியாளர்கள் நினைத்தார்கள்!

பதினாறாம் நூற்றாண்டில் நிக்கலஸ் கோபெர்னிக்கஸ் (Nicolaus Copenicus (1473-1543) கண்டு பிடித்துச் சொன்னதை அறிஸ்தார்கஸ் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டார். ஆனால், வெவ்வேறு காரணங்களுக்காக அறிஸ்தார்சுஸ் சொன்னதை அவர் காலத்திய வானியலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது  புரட்சிகர எண்ணங்கள்  பிளாட்டோ மற்றும் அரிஸ்தோட்டல் இருவரது  புவிமைய மதசார்பு தத்துவத்தின் செல்வாக்கினால் அமுக்கப்பட்டு மறைக்கப்பட்டு விட்டன.


சோதிடப் புரட்டு (32)

சந்திர சூரிய கிரகணங்கள்!

‘வேதங்களை நம்பு, அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பிறகு நம்பு. புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல் நடந்து கொள்ளாதே.

தமிழா! உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைள், லௌகிகக் கொள்கைகள், வைதிக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடங்கொடுத்து விட்டாய். இவற்றை நீக்கி விடு, வீட்டிலும் வெளியிலும், தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மையிருக்க வேண்டும்! உண்மையிருக்க வேண்டும்!

நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது! பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது! பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்க வேண்டும்!

எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர், உண்மை சாத்திரங்களுக்கெல்லாம் வேர், உண்மை இன்பத்துக்கு நல்லுறுதி, உண்மை பரமாத்மாவின் கண்ணாடி,  ஆதலால் தமிழா எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்!

தமிழா! எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை. எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. முந்திய சாஸ்திரந்தான் மெய், பிந்திய சாஸ்திரம் பொய் என்று தீர்மானம் செய்து  கொள்ளாதே. காலத்துக்கும் உண்மைக்கும் எதிரிடையாக  ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? ‘தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள்” என்று பங்ச தந்திரம் நகைக்கிறது.” (பாரதியார் கட்டுரைகள்- பக்கம் 134)

ஈராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது வந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கடிந்துரையையே மேலே தந்துள்ளேன்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ‘எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது’ என்று நவின்ற பாரதிக்கு இருந்த சிந்தனைத் தெளிவு, மெய்யறிவு இன்றைய தமிழனுக்கு இல்லாமல் இருக்கிறது.

தமிழின வரலாற்றில் தமிழுக்குக் கிடைத்த மிகப் பெரிய கவிஞன் பாரதி. இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை!

பாரதி ஒருவனே தமிழ் மொழிக்கு வாழ்த்துப் பாடியவன். தமிழ்நாட்டுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடியவன். தமிழ்த் தேசியத்துக்கு கால்கோள் இட்டவன்.

சின்னச்சாமி அய்யரின் பிள்ளையாக அக்கிரகாரத்தில் பிறந்தும் அச் சமூகத்தின் சாதியக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து வெளியில் வந்து ‘பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே” என்று வேர்ப்ப வேர்ப்ப பொருள் செய்வதொன்றையே தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்களைக் கடுமையாகச் சாடியவர்.

இன்றைய உலகத்தைத் தலைகீழாகக் கவிழ்த்து விட்டு முற்றிலும் ஒரு புதுமையான, புரட்சிகரமான  உலகத்தை உருவாக்க வேண்டும் என்பது பாரதியின் கனவு ஆகும். குறிப்பாக பாரதி மூடத்தனமற்ற தமிழ்ச் சமுதாயத்தை கட்டியெழுப்ப நினைத்தான். சாத்திரங்களைப் பேயுரை என்று சாடிச் சங்கு ஊதினான்.

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
    சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர், அவர் சொலுஞ் சாத்திரம்
   பேயுரையாம் என்றிங்கு ஊதடா சங்கம்!Image result for Bharathi

சங்க காலத்துக்குப் பின்னரும் பாரதிக்கு முன்னரும் வாழ்ந்த  தமிழ்ப் புலவன் எவனும் சமுதாய சீர்திருத்தம் பற்றியோ, சமுதாய மறமலர்ச்சி பற்றியோ பாடவில்லை. எல்லோரும் சமயச் சேற்றில் அமிழ்ந்து கொண்டு கடவுளர்  பற்றிய புராணக் குப்பைகளையே எழுதிக் குவித்தார்கள்.

பாரதி ஒருவனே சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை, பொதுவுடமை, தமிழினவுணர்வு, தமிழ்மொழிப்பற்று என சகல தளங்களிலும் நின்று கொண்டு தனது பாட்டுத் திறத்தால் வையத்தைப் பாலித்தவன்.

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
   தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
   வசையென்னாற் கழிந்த தன்றே!
என்று மார்தட்டிய பாவலனும் பாரதிதான். 

கடந்த சனிக்கிழமை முழுச் சந்திர கிரகணம் இடம்பெற்றது. கனடாவில் மாலை 7 முதல்  பார்க்கக் கூடியதாக இருந்தது. வானத்தில் செம்மஞ்சள் நிறத்தில் காட்சி அளித்த நிலா  கண்களுக்கு அழகாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. Image result for lunar eclipse

நிலா செம்மஞ்சள் ஆகத் தெரிவதற்குக் காரணம் ஞாயிறின் ஒளி காற்று மண்டலத்தை ஊடுருவும்போது அது சிதறுண்ணுவதே (retract) ஆகும்.

நிலா மறைப்பு (சந்திர கிரகணம்) எப்படி ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். நிலாவுக்கும் ஞாயிறுக்கும் இடையில் புவி ஒரே நேர்க் கோட்டில் வரும்போது புவியின் நிழல் நிலா மீது விழுந்து அதனை மறைக்கிறது.

முழு நிலாவின் போதுதான் நிலா மறைப்பு ஏற்படுகிறது. அப்போதுதான் அது ஞாயிறுக்கு நேர் எதிரே (180 பாகை) நிற்கிறது. முழு நிலா மறைப்பு நூறு மணித்துளி நீடிக்கலாம்.முழு நிலாவின் போது நிலா மறைப்பு ஏற்படுவது போல் புது நிலாவின் போது ஞாயிறு மறைப்பு (சூரிய கிரகணம்) ஏற்படுகிறது.Image result for Solar eclipse

பார்க்கப் போனால் ஒவ்வொரு மாதமும் நிலாமறைப்பு ஏற்பட வேண்டும். ஆனால், புவியைப் போலவே நிலாவும் தனது அச்சில் 5 பாகை  சரிந்து இருப்பதால் அவை ஒரே நேர்க் கோட்டில் எப்போதும் வருவதில்லை. பொதுவாக ஆண்டில் 3 நிலா மறைப்புக்கள் இடம்பெறுகின்றன.

ஆனால், ஞாயிறு மறைப்பு (சூரிய கிரகணம்) ஆண்டில் 5 முறை ஏற்படுகின்றன. இப்படியான ஒரு இயற்கை நிகழ்ச்சியைத் தமிழர்கள் என்ன கண்ணோட்டத்தில் பார்க்கின்றார்கள்?

பழநி  கோயில் முன்னதாக கழுவி துப்பரவு செய்யப்பட்டது. சந்திர கிரகண தோசத்தை நிவர்த்தி செய்யும் வகையில் கைலாசநாதர் கோயில் முன் வெள்ளிக் கும்பம் வைத்து தீர்த்தம் நிரப்பி சம்ரட்சனை பூசை நடைபெற்றது. அதன் பின்னர் சன்னிதிக்கு அந்த வெள்ளிக் கும்பம் கொண்டு செல்லப்பட்டு மூலவருக்கு அபிசேகம் செய்த பின் வழக்கமான பூசைகள் நடைபெற்றன.

பழநி கோயிலின் உப கோயில்களான திருஆவினன்குடிக் கோயில், பெரிய நாயகியம்மன் கோயில், பெரியவுடையார் கோயில் போன்ற கோயில்களிலும் சந்திர கிரகண நிவர்த்தி பூசை நடை பெற்ற பின்னரே சன்னதி திறக்கப்பட்டது.

பழநி கோயிலில் மட்டுமல்ல எல்லாக் கோயில்களிலும் சந்திர கிரகண தோசம் நீங்கப் பூசைகள் நடந்தன.

இங்குள்ள வானொலியில் பேசிய கோயில் குருக்கள் சந்திர கிரகணம் முடியும் வரை சமைக்கக் கூடாது, சாப்பிடக் கூடாது என்று தமது அடியார்களுக்கு “அறிவுரை’ வழங்கினார்.

குருக்களுக்கு நிலா மறைப்பு எதனால் ஏற்படுகிறது என்பது தெரியாது என்று நான் நினைக்கவில்லை. அந்தளவுக்கு அவர் படிப்பறிவில்லாதவர் அல்ல. ஆனால், அவர் புராணங்களிலும்  சாத்திரங்களிலும் ராகு – கேது என்ற பாம்புகள் சந்திரனைக் கவ்வுகிறது என்று எழுதி வைத்திருப்பதை வேதவாக்காகக் கொள்வதால் அப்படிப் பேசுகின்றார்.

புராணிகர்கள் நிலா ஒரு கடவுள், அவருக்கு 27 மனைவிமார் உண்டென்றும் சந்திரனைப் பாம்பு விழுங்கும் போது கிரகணம் ஏற்படுகிறது என்றும் பின்னர் பாம்பு அதைக் கக்கியவுடன் கிரகணம் முடிகிறது என்றும் எழுதி வைத்துள்ளனர்.

பாம்பு கவ்வினால்  நஞ்சு ஏறத்தானே செய்யும்? அதனால்தான் சமைக்க வேண்டாம், சாப்பிட வேண்டாம் என்று  குருக்கள் கேட்டுக் கொண்டார்.

ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்னர் அறிவியல் பெரிதாக வளராத அந்தக் காலத்தில்,  அவ்வையார் பாட்டி முற்றம் கூட்டிக் கொண்டிருக்கும் போது நிலா தலையில் இடிக்க, அவர் கோபம் கொண்டு அதனை விளக்குமாற்றால் விளாச அது மேலே போய்விட்டது என்ற பாட்டிக் கதையைக் கேட்டிருக்கிறேன். அது மட்டுமல்ல, நிலாவில் தொட்டம் தொட்டமாகத் தெரிகிற கறுப்புப் பகுதிகள் அவ்வையார் குந்தியிருந்து கொண்டு பாக்கு உரல் இடிக்கிற காட்சி என்று கூடச் சொன்னார்கள்!

இவ்வாறான புராணக் கதைகள், பாட்டிக் கதைகள் இப்போது சொல்லப்படுவதில்லை. சொன்னாலும் யாரும் நம்பப் போவதில்லை. ஆனால், இந்தச் சந்திர கிரகண தோசம் பற்றிய பயம் மட்டும் விட்டகுறை தொட்டகுறையாகத் தொடர்கிறது. கோயில் குருக்கள்மாரும், மணியகாரரும் அதனைத் தக்கவாறு பயன்படுத்தி பாமர மக்களிடம் பணம் பறிக்கின்றனர்.

கனடாவில் சந்திர கிரகணம் நீங்கும் வரை (இரவு 11 மணி) யாராவது சமைக்காமல் சாப்பிடாமல் இருந்திருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. பெரும்பாலானோர்க்கு நிலா மறைப்பு வந்து போனதே தெரிந்திருக்காது! ஒருவகையில் இது வரவேற்கக் கூடிய எதிர்மறை முன்னேற்றம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

சந்திர சூரிய கிரகணங்களைப் பார்த்துத் தமிழர்கள் மட்டும் நடுங்கினார்கள் என்றில்லை. மற்றப் பண்பாடுகளிலும் இதுபோன்ற பயம் இருக்கிறது.

சீனர்கள் சந்திர சூரிய கிரகணத்தின் போது சந்திர சூரியரை வேதாளம் (dragon) கவ்வி விழுங்குவதாக நம்பினார்கள்! அந்த வேதாளத்தை விரட்டிச் சந்திர சூரியரைக் காப்பாற்ற அவர்கள் மேளங்களை அடித்து வீதிகளில் ஆரவாரம் செய்தார்கள்.

சந்திர சூரிய கிரகணங்கள் எல்லாப் பண்பாடுகளிலும் கெட்ட சகுனமாகக் கருதப்பட்டன. அதனால் போலும் இந்தக் கிரகணங்கள் ஏற்பட்டதைப் பண்டைய வரலாற்றாசிரியர்கள் வரலாற்றிலும் இலக்கியத்திலும் பதிவு செய்து வைத்துள்ளனர். இப்படி ஆயிரத்துக்கும் மேலான பதிவுகள்  பழைய மற்றும் இடைக் காலத்தில் பதியப்பட்டுள்ளன.

கிமு 2300  ஆண்டளவில் சீன சோதிடர்கள் விண்ணை அளக்கப் பல அவதானிப்பு நிலையங்களை நிறுவி இருந்தார்கள். கிமு 2650 இல் லி சூ (Li Su ) என்பவர் வானியல் பற்றி எழுதத் தொடங்கிவிட்டார். சீனப் பேரரசர்களது எதிர்கால உடல் நலத்தைப்பற்றிப் பலன் சொல்வதற்குக் கிரகணங்களை அவதானிப்பது அவசியமாக இருந்தது. கிமு ஒக்தோபர் 22, 2134 இல் ஒரு கிரகணம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. சீனர்கள் எழுதி வைத்த ளூர ஊhiயெ என்ற நூலில் ‘சந்திரனும் ஞாயிறும் சந்தித்தபோது அந்தச் சந்திப்பு சுமுகமாக இருக்கவில்லை’ என்ற குறிப்புக் காணப்படுகிறது.

மேலும் Hsi  மற்றும் Ho என்ற இரண்டு அரண்மனைச் சோதிடர்கள்  கிரகணம் இடம் பெறுவதை முன்கூட்டியே சொல்லத் தவறி விட்டார்கள் என்ற குற்றத்துக்குத் தண்டனையாக அவர்களது தலைகள் சீவப்பட்டன. கிரகணத்தின் பின்னர்  ஞாயிறு திரும்பித் தோன்றினாலும் சோதிடர்கள் விட்ட தவறினால் சீற்றம் அடைந்த பேரரசர் அவர்களது தலையை வெட்டக் கட்டளை இட்டதாகத் தெரிகிறது.  அரண்மனைச் சோதிடர்கள்  கடமை தவறியதற்கு அவர்களது மிதமிஞ்சிய குடிப் பழக்கம் காரணமாம்!

பண்டைய காலத்தில் இடம்பெற்ற மிகவும் புகழ் வாய்ந்த கிரகணம் கிமு 585 மே 28 இல் இடம் பெற்ற சூரிய கிரகணம் ஆகும். இரண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு (Lydians and Medes) இடையே 5 ஆண்டு நீடித்து வந்த போர் பகல் இரவானபோது இருசாராரும் சண்டையை நிறுத்திக் கொண்டனர். அதன் பின்னர் இந்த நாடுகள்  ஒரு அமைதி ஒப்பந்தத்தை எழுதிக் கொண்டன. இந்தக் கிரகணத்தை முன்கூட்டியே கணித்துச் சொன்னவர் தேல்ஸ் (Thales) என்ற கிரேக்க வானியலாளர் ஆவார். ஆனால், தேல்சின் எதிர்கூறல் சண்டையிட்ட படையினருக்குத் தெரிந்திருக்கவில்லை.

கிமு 413 ஆகஸ்ட் 27 இல் இடம்பெற்ற சந்திர கிரகணம் ஏதினியன்ஸ் மற்றும் சிறக்கூஸ் (Syracus) நாடுகளுக்கு இடையே நடந்த போரை எதிர்பாராத வகையில் முடிவுக்குக் கொண்டு வந்தது. வானத்தில் ஏற்பட்ட சந்திர கிரகணம் ஏதினியன்ஸ் படை வீரர்களைக் கதிகலங்க வைத்தது.  அதனைக் கெட்ட சகுனமாகக் கருதி அவர்கள் போர்முனைக்குச் செல்ல மறுத்து விட்டார்கள். அவர்களது படைத் தளபதி நிசியன் (Nician) சோதிடர்களை கலந்தாலோசித்து விட்டுப் படை நகர்வை 27 நாள்களுக்குப் பிற்போட்டார். இந்த கால இடைவெளி ஏதினியன்ஸ் நாட்டு எதிரி நாடான சிறக்கூஸ் படைக்கு சாதகமாகப் போய்விட்டது.

சிறக்கூஸ் நாட்டுப் படை மிக எளிதாக ஏதினியாவின் கடற்படையை வெற்றிகொண்டதோடு அதன் படைத் தளபதி நிசியனையும் கொன்றது.

இந்தக் குறிப்புக்கள் பண்டைய காலத்தில் நடந்த போரில் கிரகணங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டுகின்றன.

எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் கபிலர் பாடிய பாடல் ஞாயிறு வேறுபடத் தோன்றினாலும் எரிகொள்ளி விழுந்தாலும் அவை தீமைக்கான அறிகுறிகள் என்று தமிழர்கள் நம்பியது தெரிகிறது.

‘மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயல் அகம் நிறையப் புதற்பு மலர
…………………………….”      (புறம் 117, 1-3)

மைம் மீன் – கரிய நிறமுடைய சனி
தூமம்         –   புகை
வெள்ளி    – வெள்ளிக் கோள் மீன்

வெள்ளைக்குடி நாகனார் என்ற புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுடைய நாட்டில் ஞாயிறு மாறித் தோன்றினும், எரிகொள்ளி வீழினும், வெள்ளி தெற்கேகினும் காவிரியானது வாய்க்கால் வழியோடி வளத்தையெல்லாம் ஊட்டி நிற்கும் என்கின்றார்.

‘அலங்குகதிர்க் கனலி நால்வயிற் றோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்

………………………….”     (புறம் 35, 6-8)

அலங்குகதிர் – ஞாயிறு

இலங்குகதிர் – வெள்ளி

அந்தண்         –   குளிர்ந்த

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறக்கப் போகும் நிகழ்வை வானத்தில் இருந்து எரிநட்சத்திரம் விழுவது போன்ற சில உற்பாதங்கள் மூலம் அறிந்து தாம் அஞ்சியதாகவும், அவ்வச்சம் உண்மையாகும் வண்ணம் ஏழாம் நாளில் அவன் இறந்துபட்டதாகவும் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் (புறம் 229) கூறியிருக்கின்றார்.

ஆடுஇயல் அழல் குட்டத்து
ஆர்இருள் அரைஇரவின்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் காயம்காய்ப
பங்குனிஉயர் அழுவத்துத்
தலைநாண்மீன் நிலைதிரிய
நிலைநாண்மீன் அதன் எதிஏர்தரத்
தொன்நாண்மீன் துறைபடியப்
பாசிச் செல்லாது ஊசித் துன்னாது
தளக்கூர்த்திணை விளக்காகக்
கனைஎரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி
ஒரு மீன் வீழ்ந்தன்றால் விசும்பி னானே
…………………………………  (புறம் 229, 1-12)

சந்திர – சூரிய கிரகணம் பற்றி அங்கொன்றும் இங்கொன்றும் ஆகத் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால், கிரகணம் பற்றிய காரண காரிய விளக்கம் காணப்படவில்லை.


சோதிடப் புரட்டு (33)

சோதிடர்களின் ஆசான் தொலமி 

முன்னர் அண்டத்தின் புதிர்களை அவிழ்க்கக் கிரேக்க அறிவியலாளர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகள் பற்றிப் பார்த்தோம். பிந்திய தலைமுறை முந்திய தலைமுறையின் தோளில் நின்று கொண்டு விண்ணை அண்ணாந்து பார்த்துக் கோள்கள், விண்மீன்கள் ஆகியவற்றின் அசைவு, அளவு, தொலைவு பற்றி ஆய்ந்தும் பகுத்தும் வந்தது.

புவியின் சுற்றளவைத் தடிகள், நிழல்கள், கொஞ்சம் கணிதம் இவற்றை வைத்துக்கொண்டு முதன் முதலில் பேரளவு சரியாகக் கணக்கிட்டவர் எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியா  நகரைச் சேர்ந்த எறதோஸ்தீன்ஸ் (Eratosthenes கிமு 276-195) ஆவார். பண்டைய உலகத்தின் முதல் நிலநூலாளரான இவர் இயற்பியல் கணித நிலநூலின் தந்தையாகக் (Founder of  Physical and Mathematical Geography)  கருதப்படுகின்றார். ஏதன்ஸ் நாட்டு Cyrene நகரில் பிறந்த இவர் பின்னர் அலெக்சாந்திரியாவிற்குக் குடியேறினார். அங்கு உலகப் புகழ் பெற்ற அலெக்சாந்திரியா நூல்நிலையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த நகரம் இன்றைய லிபியாவில் (Lybiya)  இருக்கிறது. ஆர்க்கிமிடீஸ் என்ற இன்னொரு புகழ்பெற்ற கணிதவியலாளரால் மிகவும் மதிக்கப்பட்டவர். அவரை மேன்மைப் படுத்தும் முகமாக நிலாவில் உள்ள நிலக்குழி ஒன்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தெற்கே நைல் நதிக்கு அருகே உள்ள சைன் (Syene) என்ற நகரத்தில் (தற்போது அஸ்வான்) ஒரு ஆழமான கிணறு ஒன்று இருந்தது. கோடை காலத்தில் (யூன் 21 ) உச்சி நேரத்தில் வடக்கே 23½ பாகையில் (Summer Solstice)  சைன்  நகரில் இருக்கும் அந்தக் கிணற்றுக்கு மேலே ஞாயிறு செங்குத்தாக (vertical) அதாவது சரியாக தலைக்கு மேலே உச்சியில் (90 பாகை)  நிற்பதை எறதோஸ்தீன்ஸ் மற்றவர்களிடம் இருந்து கேட்டறிந்தார். அவ்வாறு ஞாயிறு உச்சியில் நிற்கும் போது நிழல் விழுவதில்லை. அதே நேரம் வடக்கே அலெக்சாந்திரியாவில் ஞாயிறின் நிழல்  (கதிர்கள் எப்போதும் சமாந்தரமாக செல்வதால் ஒத்த கோணங்கள் ஏற்படுகின்றன) 7.3 பாகை கோணத்தில் விழுவதைக் கண்டார். உச்ச சூரிய தொலைவு என்பது உச்ச சூரிய புள்ளியில் (zenith)  இருந்து சூரியன் நடுப்பகலில் நிற்கும் புள்ளிக்கும் இடையிலான தொலைவு ஆகும். சைன் நகரத்தின் உச்ச சூரிய தொலைவு  0 பாகை, அலெக்சாந்திரியாவில் அது 7.3 பாகை ஆகும்.Image result for eratosthenes circumference of the earth

சைன் நகரத்துக்கும் அலெக்சாந்திரியாவுக்கும் இடையில் உள்ள தொலைவு  5,000 ஸ்ரேடியா (ஒரு ஸ்ரேடியா 500 அடி) என எறதோஸ்தீன்ஸ் கணக்கிட்டார். இந்தத் தொலைவை வைத்துக் கொண்டு புவியின் சுற்றளவு எவ்வளவு தொலைவு இருக்கும் எனக் கண்டறிய முற்பட்டார்.

இரண்டு நகரங்களுக்கும் இடையிலான கோணத்தின் பாகை 7.2 எனக் கணக்கிட்டு 5,000 ஸ்ரேடியா உலகச் சுற்றளவில் 1ல் 50 பங்கு எனத் தெரிந்து கொண்டார். எனவே புவியின் சுற்றளவு 25,500 கல் எனக் கணக்கிட்டார். ஆனால், உண்மையான சுற்றளவு 24,901 கல்  ஆகும். இருந்தும் அவர் கிட்டத்தட்ட சரியாகச் சொல்லிவிட்டது போற்றத்தக்க சாதனையாகும். சிலர் ஒரு ஸ்ரேட்ஸ் 520 அடிக்கு சமம் என்கின்றார்கள். அது சரியென்றால் எறதோஸ்தீன்ஸ் அவர்களது கணிப்பு மேலும் திருத்தமாக இருந்திருக்கிறது.

எறதோஸ்தீன்ஸ் நிலவுலகம் வட்டவடிவமானது என்ற அனுமானத்தில் புவியின் அச்சு ஞாயிறு செல்லும் பாதை (Ecliptic) 23½  பாகை சாய்ந்து இருப்பதைத் திருத்தமாகத்  தீர்மானித்தவர். அதுமட்டுமல்ல, 375 விண்மீன்களைக் கொண்ட ஒரு விண்மீன் வரைபடத்தையும் தயாரித்தார். நாலாண்டுக்கு ஒருமுறை ஒரு நாளைக் கூட்டி மிகு ஆண்டைக் (leap year) கணிக்க  வேண்டும் என்று யோசனை சொன்னவரும் இவரே எனக் கூறப்படுகிறது.Image result for eratosthenes circumference of the earth

ஆனால்,  புவி அவ்வளவு பெரிதாக இருக்கும் என்ற நம்பிக்கை அந்தக் காலத்து மக்களுக்கு ஏற்படவில்லை. அபாமீயா (Apamea) என்ற ஊரைச் சேர்ந்த பொசிடோனியஸ் (Posidonius – கிமு 135-51) என்ற கிரேக்க வானியலாளர் விண்வெளியில் காணப்பட்ட கனோபஸ் (Canopus) என்ற விண்மீனை வைத்துக் கணக்கிட்டுப் புவியின் சுற்றளவு 180,000 ஸ்ரேடியா எனக் கூறினார். கனோப்பஸ்,  றோட்ஸ் (Rhodes) என்ற ஊரில் ஞாயிறு அடிவானத்தில் நின்றபோது அலெக்சாந்திரியாவில் 7.5 பாகை குறுக்குக் கோட்டில் காணப்பட்டது. அவரது கணிப்பில் இரண்டு பிழைகள் ஏற்பட்டன. ஓன்று அலெக்சாந்திரியா 7.5 பாகைக்குப் பதில் 5.25 பாகையில் இருந்தது என்ற கணிப்பு. இரண்டு றோட்ஸ்-அலெக்சாந்திரியா இரண்டுக்கும் இடையில் உள்ளதொலைவு  3,750 என்பதற்குப் பதில் 5,000 ஸ்ரேடியா என்ற கணிப்பு.

எறதோஸ்தீன்ஸ் (Eratosthenes)  பொசிடோனியசுக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே புவியின் சுற்றளவு 252,000 ஸ்ரேடியா என்ற சரியான பெறுமதியைக் கணக்கிட்டார். இருந்தும் பொசிடோனியஸ் காலம் தொட்டு இடைக் காலம் வரை 180,000 ஸ்ரேடியா என்ற அளவையைத்தான் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

கிறிஸ்தோபர் கொலம்பஸ் (கிபி 1451- மே 20, 1506)கூட 180,000 ஸ்ரேடியா அளவைத்தான் நம்பினார். அதன் அடிப்படையில்தான் அவர் மேற்குத் திசையில் 3000 மைல் பயணம் செய்தால் ஆசியாவை அடைந்து விடலாம் என்று நம்பினார். அவருக்குப் புவியின் உண்மையான சுற்றளவு தெரிந்திருந்தால் மேற்கு நோக்கிக் கடலில் செலவு செய்யும் எண்ணத்தை அவர் கைவிட்டிருப்பார் என நம்பலாம். மேலும் அவ்வளவு தொலைவு கடலில் போகத் துணிவுள்ள மாலுமிகளை அவரால் திரட்டியிருக்கவே முடியாது. எல்லாவற்றுக்கும் மோலாக அவருக்கே அவ்வளவு துணிச்சல் வந்திருக்குமா என்பதும் அய்யமே! கிபி 1521-23 ஆண்டுகளில் மெகல்லனின் கப்பல் குழுவில் மடிந்தவர்கள் போக எஞ்சியிருந்த மாலுமிகள் தட்டுத்தடுமாறிப் புவியைச் சுற்றி வந்து ஊர் திரும்பிய பின்னரே எறதோஸ்தீன்ஸ் கணக்குச் சரிதான் என்பது தெரிந்தது!

அரிஸ்தோட்டல் (கிமு 384-322) கூட உலகம் உருண்டை வடிவானது என்றார். காரணம் கிரகணத்தின் போது நிலா மீது விழும் புவியின் நிழல் வட்ட வடிவமாக காணப்பட்டதாகும். இன்னொரு காரணத்தையும் சொன்னார் – எகிப்தில் தெரியும் நட்சத்திரங்கள் வடக்கே போனால் அவை தெரிவதில்லை என்பதாகும்.

புவியில் இருந்து நிலாவின் தொலைவு எவ்வளவு? அதனை அறிஸ்தார்சுஸ் (Aristarchus of Samos – கிமு 310 -230) ஒரு நூதனமான முறையில் கண்டு பிடித்தார். சந்திர கிரகணத்தைத் துல்லியமாக அவதானித்து அந்தக் கேள்விக்கான விடையைச் சொன்னார்.

சந்திர கிரகணத்தின் போது புவியின் நிழல் நிலா மீது விழுகிறது. அந்த நிழலின் விட்டம் சந்திரனின் விட்டத்தைவிட இரண்டரை மடங்கு பெரிதாக இருப்பதைக் கவனித்தார். புவியின் விட்டம் 8,000 கற்கள் என்பது கிரேக்கர்களுக்குத் தெரிந்திருந்தது. அதே நேரம் வானத்தில் பார்க்கும் சூரியனும் சந்திரனும் ஒரு அளவாக இருப்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கேத்திர கணிதத்தைப் பயன்படுத்தி நிலாவின் தொலைவு  240,000 கல் (சரியான தொலைவு 238,700 கல்) எனக் கணக்கிட்டார்.

கிரேக்கத்தின் புகழ் பெற்ற இன்னொரு வானியலாளர் கிப்பறாச்சுஸ் (Hipparachus) ஆவார். கிமு 190-120 வரை வாழ்ந்த இவரே வானியலின் தந்தை என அழைக்கப்படுகின்றார். இவரே புவியின் மையப் பகுதியில் ஞாயிறு மற்றும் நிலா இரண்டினாலும் ஏற்படும் எதிர் எதிர் ஈர்ப்பு புவி அச்சின் சுழற்சியை தள்ளாடச் செய்து மேற்கு நோக்கிப் (ஞாயிறு பாதையில்) பின் தள்ளுகிறது (precession of equinox) என்பதைக் கண்டு பிடித்துச் சொல்லியவர். இதுவே அயனாம்சம் என அழைக்கப்படுகிறது என்பதை முன்னர் பாhத்தோம். ஆண்டொன்றுக்கு 50.291 ஆர்க் நொடிகள் (50.291 arc seconds per year)  வீதம் 72 ஆண்டுகளில் 1 பாகை வேறுபாடு ஏற்படுகிறது. இந்த ஆண்டு (2003) மார்ச்சு 21 இல் அயனாம்ச வேறுபாடு  23.57 பாகையை எட்டியுள்ளது.Image result for (Hipparchus

கிப்பறாச்சுஸ் Naea என்ற நகரில் பிறந்தவர். இருந்தும் றோட்ஸ் (Rhodes) என்ற நகரிலியே தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டார். மிகவும் செல்வாக்குச் செலுத்திய இந்த வானியலாளர் பற்றிச் சொற்ப தகவல்களே தப்பிப் பிழைத்துள்ளன. இரண்டாம் நூற்றாண்டில் தொலமி (Ptolemy) எழுதிய யுடஅயபநளவ என்ற நூலில் இருந்தே இவரைப்பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. தனக்கு முன் வாழ்ந்த மிக முக்கிய வானியலாளராகத் தொலமி இவரைப் பார்த்தார்.

கிப்பறாச்சுஸ் வானியல் அறிவுக்கு ஆற்றிய பங்கு மிகப் பெரியது. அவரது பங்களிப்பு நடைமுறை மற்றும் புதிய கோட்பாடு  என்ற இரண்டு மட்டத்திலும் இருந்தது. பெருமளவு கேத்திரகணித மாதிரிவடிவங்களைப் பயன்படுத்தினார். Gerald Toomer  என்பவர் முக்கோணகணிதத்தை (trigonometry) கண்டு பிடித்தவர் இவரே என்று சொல்கின்றார். கிப்பறாச்சுஸ் அண்டத்தை அவதானிப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். அவரது அவதானிப்புக்கள் கிமு 147ல் இருந்து கிமு 127 வரை நீடித்தது. சம பகல் இரவு புள்ளிகள் (equinox) விண்ணில் காணப்படும் நட்சத்திரங்களின் பின்னணியில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகர்வதை கண்டு பிடித்தது அவரது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

பபிலோனியர்களது வானியல் தரவுகளை கிப்பறாச்சுஸ் தாராளமாகப் பயன்படுத்தினார். இதன் மூலம் பபிலோனியர்கள் இடமிருந்தே கிரேக்கர்கள் வானியல் தரவுகளை நேரடியாகப் பெற்றுக் கொண்டார்கள் என்பது எண்பிதமாகிறது. பிளாட்டோ, அரிஸ்தோட்டல் இருவருமே புவிமையக் கருதுகோளை (geocentric theory) நிறுவியவர்கள் என்பதை முன்னர் கூறியிருந்தேன். இவர்களது கருதுகோளின் முக்கிய அடிப்படை மெய்மைகள் மற்றும் கொள்கைகள் (postulates  and the principles of theory) பின்வருமாறு:

    1)  அண்டம் கோள (உருளை) வடிவானது.

    2)  புவி உட்பட எல்லா விண்ணக உடலிகளும் (Celestial bodies ) கோள வடிவானது.

    3)  புவி அசைவற்றது, அது அண்டத்தின் மையத்தில் உள்ளது.

  4) விண்ணுலக அசைவுகள் புவியைச் சுற்றி சீராகவும் வட்ட வடிவாகவும் இடம் பெறுகின்றன. இந்த விண்ணக உடலிகள் புவியிலிருந்து வெவ்வேறு தொலைவில் சுற்றி வருகின்றன. விண்மீன்கள் விண்ணக உடலிகளைவிட அதிக தொலைவில் இருக்கின்றன.  புவி தன்னைத்தானே சுற்றும் போது விண்மீன்கள் அடிவானில் தோன்றி மறைகின்றன.Astrologygeocentric

குளோடியஸ் தொலமி (கிபி 90-170) மேற் கூறப்பட்ட பிளாட்டோ அரிஸ்தோட்டல் இருவரதும் புவிமையக் கோட்பாட்டை அப்படியே பின்பற்றினார்.

அறிவியல் உலகில் குலோடியஸ் தொலமியைத் (Claudius Ptolemy) தெரியாதவர்கள் இருக்க முடியாது. சோதிடம், வானியல், புவியியல், கணக்கியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் புகழ்க் கொடி நாட்டியவர். Image result for Claudius Ptolemy

தொலமி வரைந்த பண்டைய இலங்கையின் வரைபடத்தை இலங்கை பற்றிய நிலநூல் மற்றும் வரலாற்று நூல் இரண்டிலும் காணலாம்.

இவர் எகிப்தில் வாழ்ந்திருந்தாலும் கிரேக்க இனத்தவர். இவரது முதல் பெயரான குளோடியஸ் அவரது முன்னோருக்கு உரோம மன்னர்கள் வழங்கிய குடியுரிமையைக் குறிக்கிறது என்கிறார்கள். இந்தத் தொலமி வேறு, அதே பெயரில் எகிப்தை ஆண்ட மன்னர் தொலமி (கிமு 372-283) வேறு. தொலமி என்பது ஒரு பொதுப் பெயர்.

தொலமி அலெக்சாந்திரியாவில் இருந்த நூலகத்தில் கிபி 127-150 வரை பணியாற்றினார். அப்போது இவர் மூன்று நூல்களை எழுதி வெளியிட்டார்.

    1) வானியல் மற்றும் கணக்கியல் பற்றிய Almagest.

    2) சோதிடத்தைப் பற்றிய Tetrabiblos.

    3) எட்டுத் தொகுதிகள் கொண்ட நிலநூல் (Geography).

புவி பற்றிய முதல் தொகுதி உருண்டை வடிவமான உலகத்தை (கிரேக்க தத்துவவாதிகளுக்கு உலகம் வட்ட வடிவமானது என்ற உண்மை தெரிந்திருந்தது) ஒரு தட்டையான தாளில் வரைவதில் உள்ள சிக்கல்களைப் பற்றித் தெரிவிக்கிறது. எஞ்சிய 7 தொகுதிகளும் உலகில் உள்ள எண்ணாயிரத்துக்கும் அதிகமான இடங்கள் பற்றிய தரவுகளைக் கொண்டவை.

தொலமிதான் புவியின் குறுக்குக்கோடு (latitude) நெடுக்கோடு (longitude) இரண்டையும் உருவாக்கியவர். இதே முறையைக் கோள்களுக்கும் பயன்படுத்தினார்.

தொலமியின் வரைபடத்தில் பல பிழைகள் காணப்பட்டன. காரணம் அவர் இடங்கள்பற்றிய தரவுகளை நேரடியாக இல்லாமல், வழிச்செலவர்களிடம் (பயணிகள்)  இருந்தும் கடல் பயணம் முடித்து நாடு திரும்பும் மாலுமிகளிடம் இருந்தும் பெற வேண்டி இருந்ததே.

தொலமி உலகின் சுற்றளவைக் கணிப்பதில் தவறு இழைத்தார். அதே போல் இந்து சமுத்திரத்தை ஒரு உள்நாட்டுக் கடல் (Inland Sea) எனவும் அதன் தெற்கு எல்லை Terra Incognita (Unknown Land) எனவும் தொலமி நினைத்தார். இந்தத் தவறுதான் கிழக்கே சீனா, இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகளை மேற்கு நோக்கிச் சென்றால் அடையலாம் என அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பசை நம்ப வைத்தது!

பண்டைய நூல்கள் பல காலவெள்ளத்தில் அழிந்து பட்டது போல தொலமி எழுதி வெளியிட்ட நூல்களும் பல நூற்றாண்டு காலமாகக் காணாமல் போய்விட்டன. பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே அவை மீள் கண்டு பிடிக்கப்பட்டு இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

தொலமியின் புவிமைய முறைமை 1400 ஆண்டு காலம் எந்த மாற்றமுமின்;றி நீடித்தது. இந்த நீண்ட இடைவெளியின் போது அய்ரோப்பாவில் வானியல் ஒரு தேக்க நிலையில் இருந்தது. ஆனால், அரேபியர்கள் அதனை செம்மைப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் அவதானிப்புக் கோபுரங்களைக் கட்டியும் கருவிகளை உருவாக்கியும் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். இருந்தும் அவர்கள் தொலமியின் சிக்கலான பூமிமைய கோட்பாட்டிலும் இலகுவான முறைமையைத் தேட நாட்டம் கொள்ளவில்லை.

தொலமி எழுதிய Syntaxis mathematica என்ற வானியல் நூல் 13 ஆம் நூற்றாண்டில் அரபு மொழியில் Almagest என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. Almagest    என்றால் “மாபெரும் கணித நூல்”  என்று பொருள் ஆகும்.

கிப்பறாச்சுசின் புவிமையக் கோட்பாட்டைப் பின்பற்றி அதனை மேலும் விரிவுபடுத்தி தொலமி எழுதிய நூலே Almagest   ஆகும். இந்த நூல் பல நூறு ஆண்டுகள் கிரேக்கத்திலும் அலெக்சாந்திரியாவிலும் கிரேக்க வானியலாளர்களால் அவதானிக்கப்பட்ட வானியல் அவதானிப்புக்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். Almagest  கிரேக்க வானியல் பற்றிய பைபிள் எனப் போற்றப்படுகிறது. கேத்திர கணிதத்துக்கு இக்குலிட்டின் (Euclid) பங்களிப்பு எந்தளவோ அதே பங்களிப்பை இந்த நூல் வானியலுக்கு ஆற்றியது எனக் கொண்டாடப்படுகிறது. ஞாயிறு, நிலா, சனி வியாழன் போன்ற கோள்களின் அசைவுகளை விளக்குவதற்கு 80 குக் குறையாத சிறு வட்டங்களை  (epicyles) தொலைமி வரைந்தார்.

Almagest என்ற நூல் தொலமியின் முறைமை (Ptolemaic System) அல்லது தொலமியின் அண்டம் (Ptolemaic Universe)  பற்றி சித்தரிக்கிறது. தொலமியின் அண்டம் கீழ்க் கண்டவாறு அமைந்திருந்தது:Ptolemy

    1) புவி அசைவற்றது. அது அண்டத்தின் நடுவில் இருக்கிறது.                                   தொலமியின் அண்டம்

    2) புவியை மையமாகக் கொண்ட இரண்டு வட்ட வடிவான சுற்றுப் பாதையில் திங்களும் ஞாயிறும் சீராக சுற்றிக் கொண்டிருக்கின்றன.

    3) திங்கள், புதன், ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி கோள்கள் சிறுவட்டங்கள் நெடுகிலும் சீராகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

    4) புவியில் இருந்து திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி  அண்மை – சேண்மை வரிசையில் இருக்கின்றன.

தொலமி சூரிய-சந்திர கிரகணங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை விளக்கினார். இன்று நாம் பயன்படுத்தும் நட்சத்திர மண்டலங்களில் 48 தொலமியால் இடப்பெற்ற அதே பெயர்களிலேயே அழைக்கப்படுகின்றன என்பது மனம் கொள்ளத்தக்கது.

தொலமியின் அண்டத்தைப் பற்றிய சிக்கலான விளங்கங்களை எளிதாக விளக்க வேண்டும் என்றால் நிலா, புதன், ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி கோள்கள் ஒவ்வொன்றும் புவியைப் பெரு வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன, அதே நேரம் அவை ஒவ்வொன்றும் சிறு வட்டப்பாதையிலும் சுற்றுகின்றன என்பதுதான். புதனும் வெள்ளியும் ஞாயிறுக்கும் புவிக்கும் இடையில் சுற்றி வருகின்றன என்பதற்குப் பதிலாக அவை புவிக்கும் ஞாயிறுக்கும் இடையில் சுற்றி வருகின்றன எனத் தொலமி நினைத்தார். ஆனால்,  புவி உருண்டை வடிவானது என்பது தொலமிக்குத் தெரிந்திருந்தது.Image result for aristotle and the ptolemaic universe

கோபெர்னிக்கஸ் 1543 இல் ஞாயிறு மையக் கோட்பாட்டை முன்மொழியும் மட்டும் தொலமியின் கோட்பாடே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

யுடஅயபநளவ  என்ற நூலை எழுதிய பின்னரே தொலமி வுநவசயடிiடிடழள என்ற சோதிட நூலை எழுதினார். கிபி 140 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட இந்த நூல் 4 தொகுதிகளையும் 61 அதிகாரங்களையும் கொண்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதி வைக்கப்பட்ட கையெழுத்துப் படியே இன்று கிடைத்துள்ளது. இந்த நூலே வெப்பமண்டல சோதிடர்களுக்கு முதல் நூலாகவும், அதை எழுதிய தொலமி அவர்களது சோதிட ஆசானாகவும் விளங்குகின்றார்.

தொலமிக்கு வானியலுக்கும் சோதிடத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை தெரிந்திருந்தது. வுநவசயடிiடிடழள என்ற நூலுக்கு எழுதிய அறிமுகவுரையில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

‘முதல் நூல்” (Almagest) ஞாயிறு, நிலா மற்றும் நட்சத்திரங்களின் அசைவுகள் பற்றியும் அவற்றுக்கும் புவிக்கும் உள்ள உறவுகள் பற்றியதும் ஆகும்…. இப்போது நாம் இந்த நூலில் (Tetrabiblos)  தத்துவ அடிப்படையில் மனித வாழ்க்iயிலும் செயற்பாடுகளிலும் அவை செலுத்தும் செல்வாக்கை விளக்குவோம். உண்மைகளைச் சான்றுகளோடு கண்டறிவதில் இந்தச் சோதிட நூலை முதல் சொல்லிய நூலோடு ஒப்பிட முடியாது.’

தொலமி எழுதிய Tetrabiblos என்ற நூல் முடிந்த மட்டும் அறிவியல் கோணத்தில் இருந்து எழுதப்பட்டுள்ளது. தெய்வீகத்தன்மை, புராண நம்பிக்கைகள் பெருமளவு இந்த நூலில் தவிர்க்கப்பட்டுள்ளன.


சோதிடப் புரட்டு (34)

கோபெர்னிக்கன் புரட்சி (Copernican Revolution)

Tetrabiblos நூலின் முதல் தொகுதியில் தொலமி சோதிடத்தை அறிவியல் நோக்கோடு பார்க்கின்றார். இரண்டாவது தொகுதியிலும் பொதுவாக எல்லோருக்கும் பொருந்தக் கூடிய சோதிடம் பற்றிக் கூறுகின்றார். மூன்றாவது நான்காவது தொகுதிகளில் தனிமனித சோதிடம் பற்றிக் கூறுகின்றார். கடைசி இரண்டு தொகுதிகளும் (5, 6) மூன்று அதிகாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன-

(அ) பிறப்புப் சகுனங்கள்

(ஆ) பிறந்த நேரம்

(இ) பிறந்த பின் என்ன நடக்கிறது

பண்டைய வானியலாளர் ஞாயிறு அல்ல புவிதான் அண்டத்தின் மையம் என்ற கோட்பாட்டில் வைத்த நம்பிக்கைக்கு மூன்று பிழையான எடுகோள்கள் (hypothesus) காரணமாகும். அவையாவன:

(1) வானத்தில் இடம்பெறும் அசைவுகள் எல்லாம் ஒரு சீரான வட்ட வடிவமானது.

(2) வானத்தில் உள்ள காட்சிப்பொருட்கள் (objects) கலப்பற்ற பருப்பொருட்களால் ஆனவை. எனவே அவை தமது இனப்பொதுப் பண்புகளை (intrinsic properties ) மாற்ற முடியாது.

(3)  புவி அண்டத்தின் மையத்தில் இருக்கிறது.

இவ்வாறான கருத்துக்கள் தொலமியினால் அட்டவணைப் படுத்தப்பட்டன. ஆகவேதான் சூரிய மண்டலம் பற்றிய இந்தக் கட்டமைப்பு தொலமியின் அண்டம் (Ptolemaic Universe) என அழைக்கப்பட்டது.Image result for ptolemaic universe model

அதனைத் தொடர்ந்து அவரது தத்துவம் மத்திய அய்ரோப்பிய இறையியல் (Theologist) கிறிஸ்துவத்தோடு தொமாஸ் அக்குனாஸ் போன்ற சமயாச்சாரியர்களால் ஒன்றிணைக்கப்பட்டது.

அரிஸ்தோட்டல் புவியை மையமாகக் கொண்ட ஒரு கோள வடிவான அண்டத்தை முன்மொழிந்தார். அண்டம் நிலம், காற்று, நெருப்பு, தண்ணீர் என்ற நான்கு மூலகங்களால் ஆனது, அவை ஓவ்வொன்றுக்கும் அதன் ‘அடர்த்தி’ யைப் பொறுத்து அதற்கான இடம் உள்ளது. அவை நேர்க்கோட்டில் அசைந்து செல்கின்றன. நிலம் கீழும் நெருப்பு மேலும் அசைகிறது. காற்றும் தண்ணீரும் கீழும் மேலும்  இடைப்பட அசைகிறது. அரிஸ்தோட்டல் ஆகாயத்தை 5 ஆவது மூலகம் எனக் கணக்கிட்டார். ஆகாயம் வட்டவடிவில் அசைகிறதாகச் சொன்னார்.

அரிஸ்தோட்டல் இயற்கையை விளக்குவதற்கு சிற்றளவு இயற்பியலையும் (Physics) பேரளவு இயல் கடந்த ஆய்வையும் (Metaphysics) கைக்கொண்டார் எனக் கூறலாம். ஆனால், அவர் தனது காலத்தில் மற்றவர்களைவிட ஆழமாகச் சிந்தித்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அரிஸ்தோட்டல் 400 கும் அதிகமான நூல்களை எழுதினார் எனச் சொல்லப்படுகிறது.

அரிஸ்தோட்டல் முதன்மை இயக்குநர் (Prime Mover) ஒருவர் இருப்பதாக வாதிட்டார். இயற்கையின் குறிக்கோளுக்கும் ஒருமைப் பாட்டுக்கும் அவரே பொறுப்பு என்றார். கடவுள் நிறைவானவர் (God is perfect)  எனவே உலகில் உள்ள உயிரினங்களின் எல்லாம் நிறைவானவற்றைக் குறிக்கோளாகக் கொண்டிருகின்றன என்றார். வேறு இயக்குநர்களும் இருக்கின்றார்கள், அவர்கள் கோள்களையும் விண்மீன்களையும் அசைக்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை 55 அல்லது 57 ஆக இருக்கலாம் எனச் சொன்னார்.

அரிஸ்தோட்டலின் முதன்மை இயக்குநர் கிறிஸ்தவ இறையியலில் கடவுளாக மாற்றம் பெற்றார். முதன்மை இயக்குநரின் கோளங்கள் கிறித்தவ பரலோகத்தோடு அடையாளம் காணப்பட்டன. புவி இந்த அண்டத்தின் மையத்தில் இருப்பதும் மனிதர்களின் செயல்பாடுகளில் கடவுள் அக்கறை கொண்டிருப்பதைக் காட்டுகிறது எனக் கூறப்பட்டது.

புறச்சமய (Pagan) கிரேக்க தத்துவவாதிகளால் தோற்றுவிக்கப்பட்ட கருத்துக்கள் கத்தோலிக்க மத பீடத்தால் அங்கீகரிக்கப்பட்டு நாளடைவில் அவை அதிகாரபூர்வமான சமயக் கொள்கையாக ஏற்றம் பெற்றன. இதன் விளைவு அண்டம் பற்றிய கருத்துக்களை வானியலாளர் எதிர்த்துரைத்தபோது அது அறிவியல் சிக்கலாக மட்டும் இருக்கவில்லை. அது இறையியல் சிக்கலாகவும் இருந்தது.  இதனால் அவர்கள் வல்லமை படைத்த தேவாலயத்தின் பகையையும் தேட வேண்டி ஏற்பட்டது.

மத்திய காலத்தில் அய்ரோப்பாவில் அரிஸ்தோட்டல் எழுதிய நூல்கள் மீள் கண்டு பிடிக்கப்பட்டு அவை இலத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன என முன்னர் கண்டோம். இதனால் அரிஸ்தோட்டலின் கருத்துக்கள் தத்துவமாக உருப்பெற்றுப் புதிய வலிமை பெற்றது.

பல அவதானிப்புகள் புவி அசையவில்லை எனக் கிரேக்கர்களை நம்ப வைத்தன.

(1) புவி வானுலகின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. இன்று புவி பால்மண்டலத்தின் ஒரு கோடியில் இருக்கும் ஞாயிறு விண்மீனைச் சுற்றிவரும் 9 கோள்களில் ஒன்று என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்த எண்ணம் தொலைநோக்கி எமது காட்சி ஆற்றலை அதிகப்படுத்தியதால் ஏற்பட்டது.

The Earth is not part of the heavens. Today the Earth is known to be just one planet of nine that orbit an average star in the outskirts of a large galaxy, but this idea gained acceptance only recently when telescopes extended our vision.

(2) கிரேக்கர்கள் வானுலக காட்சிப்பொருட்கள் ஒளிமயமான வெளிச்சப் புள்ளிகள். புவியோ மண்ணாலும் கல்லினாலும் ஆக்கப்பட்ட ஒளியற்ற பெரிய கோளம். இன்று விண்மீன்கள்  ஞாயிறு  போலவே ஒளிவிடும் காட்சிப் பொருள்கள், அவை வெகுதொலைவில்  இருக்கின்றன, கோள்களுக்குச் சுய ஒளி இல்லை, கோள்கள் வெறுமனே ஞாயிறின் ஒளியைத் தெறிக்கச் செய்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.

The celestial objects are bright points of light while the Earth is an immense, non-luminous sphere of mud and rock. Modern astronomers now know that the stars are objects like our Sun but very far away and the planets are just reflecting sunlight.

(3) கிரேக்கர்கள் வானுலகில் மிகச் சொற்ப மாற்றத்தையே கண்டார்கள். இரவு மாறி இரவு ஒரேமாதிரியான  விண்மீன்களைக் கண்டார்கள். அதற்கு எதிர்மாறாகப் புவியில் உயிர்களின் பிறப்பு, மாற்றம், அழிவு நடைபெற்ற வண்ணம் இருந்தன. எனவே வானுலகில் காணப்படும் காட்சிப் பொருள்கள் சீராக இயங்கின, ஆனால், அப்படியான ஒழுங்கைப்  புவியில் பார்க்க முடியவில்லை.

இன்று வானியலாளர் விண்மீன்கள்  பிறந்து பின் இறக்கின்றன என்றும் அவற்றின் வாழ்நாள் மனித வாழ்நாளை விட அதிகமானதால் அவை மாறுபடாதவையாகத் தோற்றம் தருகின்றன என்றும் விளக்கம் தருகின்றார்கள். அது மட்டுமல்லாமல் தற்கால வானியலாளரின் ஆய்வுப்படி நட்சத்திரங்கள் தங்களுக்குள் இடம் மாறுகின்றன என்பது கண்டறியப் பட்டுள்ளது. ஆனால், தொலைநோக்கியின் உதவியின்றி இந்த இடமாற்றத்தை அவதானிக்க பல நூறு ஆண்டுகள் செல்கின்றன.

The Greeks saw little change in the heavens—the stars are the same night after night. In contrast to this, they saw the Earth as the home of birth, change, and destruction. They believed that the celestial bodies have an immutable regularity that is never achieved on the corruptible Earth. Today astronomers know that stars are born and eventually die (some quite spectacularly!)—the length of their lifetimes are much more than a human lifetime so they appear unchanging. Also, modern astronomers know that the stars do change positions with respect to each other over, but without a telescope, it takes hundreds of years to notice the slow changes.

(4) இறுதியாக எமது புலன்கள் உலகம் அசையாது ஓரிடத்தில் நிற்கிறது என்பதை உணர்த்துகிறது! உலகம் அசைவது உண்மையானால் காற்று, பறவைகள் மற்றும் புவியோடு இணைக்கப்படாத பொருட்கள் பின்னுக்கு விடப்பட்டுவிடும். உலகம் சுழல்கிறது என சில தீவிர சிந்தனையாளர்கள் சொல்வது சரியென்றால் அது பலமாக வீசும் காற்று இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால், பலமான காற்று இல்லை. உலகம் சுற்றுகிறது என்றால் உயரமான இடத்தில் இருந்து பாயும் ஒருவர் விழ ஆரம்பித்த இடத்தில் இருந்து பின்னால் வந்து  விழவேண்டும். அது மட்டுமல்லாமல் சுழலும் புவியில்  இருந்து பொருட்கள் தூக்கி வீசப்பட்டுவிடும்.

பாறைகள், மரங்கள் மற்றும் மனிதர்கள் புவியில் இருந்து தூக்கி வீசப்படுவதில்லை என்பது புவி அசையவில்லை என்பதைக் காட்டுகிறது.

இன்று  புவி சுழலும் போதும் சுற்றும் போதும் பொருட்கள் தூக்கி வீசப்படாததற்குரிய ஏதுவை அசைவின்மை (inertia) பற்றிய விதிகள் மூலம், பிளாட்டோவிற்குப் பின்னர் 2,000 ஆண்டுகள் கழித்து,  வானியலாளர்கள் விளக்கியுள்ளார்கள். அசைவின்மை என்பது அசையும் பொருள் வேறொரு பொருளால் தடுக்கும் வரை அசைந்து கொண்டும், அசையும் பொருள் வேறொரு பொருளால் தடுக்காத வரை அசையாமலும் இருக்கும். எடுத்துக்காட்டுச்  சொல்ல வேணுமானால் மிதிவண்டி ஓடும் போது சாயாமலும் ஓடாமல் இருந்தால் சாய்ந்தும் விடுகிறது.

இன்று கூடப் படியாத மக்களுக்குப் புவி, ஞாயிறு, விண்மீன்கள் இவற்றின் அசைவு பற்றி எல்லாம் தெரிந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. அவர்கள் பருவ மாற்றங்கள், சூரிய-சந்திர கிரகணங்கள் எதனால் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்றும் சொல்ல முடியாது. பண்டைக் காலத்தில் வாழ்ந்த புராணிகர்களும் வானியல் அறிவைப் பொறுத்தளவில் பாமரர்கள்தான். அதனாலேயே நரகாசுரன் புவியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளித்து வைத்தான் என்று கதை எழுதி வைத்தார்கள்.

கிறித்தவர்களின் வேதாகமத்தில்  புவி ஒருபோதும் அப்படி இப்படி ஆடாமல் இருக்குமாறு கடவுள் அதனை அதன் அடித்தளத்தில் நாட்டி வைத்தார் எனச்   (Psalm 104:5: “Thou did fix the earth on its foundation so that it never can be shaken.”) சொல்லப்பட்டுள்ளது.  புவி தானாக உருவாகவில்லை, அது கடவுளால் படைக்கப்பட்டது என்ற வாதம் மத பீடங்களால் இன்றும் முன் வைக்கப்பட்டு வருகிறது. உலகம் தட்டை என்று நம்புகிறவர்களும் இருக்கின்றார்கள்!

அரிஸ்தோட்டல் – தொலமி இருவரது புவிமைய அண்டம் மேற்குலக சிந்தனையை 2,000 ஆண்டு காலம் ஆட்டிப்படைத்தன.

புதினாறாம் நூற்றாண்டில்தான் போலந்து நாட்டின் புகழ்பெற்ற வானியலாளர் நிக்கலஸ் கோபெர்னிக்கஸ் (கிபி1473-1543) ஒரு புதிய கோட்பாட்டை முன்மொழிந்தார்.

நிக்கலஸ் கோபெர்னிக்கஸ் (Nicolaus Copernicus) 1473 பெப்ரவரி 19 இல் போலந்தில் உள்ள வுழசரn  நகரில் பிறந்தவர். இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற படுவா பல்கலைக் கழகத்தில் (Padua University) மருத்துவம், கிரேக்கமொழி, கணக்கியல் படித்தார். கடைசியாகக் கிறித்தவ திருமுறையில் பட்டம் பெற்றார். கோபெர்னிக்கஸ் தனது சொந்த நாடான போலந்துக்குத் திரும்பி அங்கு மருத்துவராகப் பணியாற்றினார். ஆனால், அவரது அரச முறையான (official) தொழில் அங்கிருந்த தேவாலயத்தின் மதகுரு என்பதே.

கோபெர்னிக்கஸ் ஒரு முழுநேர வானியலாளராக இருந்ததில்லை. அவர் எழுதிய “வானுலக  உடலிகளின் சுற்றுக்கள்” (On the Revolutions of Heavenly Bodies) என்ற  புகழ்பெற்ற நூல் அவரது ஓய்வு நேரத்தில் எழுதப்பட்டதாகும்.

கோபெர்னிக்கன் ஞாயிறுமைய முறைமை 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அவரது சமகால வானியலாளர்களாலும் இயற்கை தத்துவவாதிகளாலும் பொருத்தமற்றது என எண்ணப்பட்டது.

ஆனால், அவரது கோட்பாடுக்கு ஆதரவு வழங்கியவர்களில் யோகான்ஸ் கெப்லர் (1571-1630) மற்றும் கலிலியோ கலிலி (1564-1642) முன்னணியில் இருந்தார்கள். இறுதியாக கோபெர்னிக்கன் கோட்பாட்டுக்கு அறிவியல் அடிப்படையில் வலிமை சேர்த்த பெருமை சேர் அய்சக் நியூட்டனது ‘உலகளாவிய ஈர்ப்பு மூல அடிப்படைக் கோட்பாடு’ (Theory of Universal Gravitation) ஆகும். Image result for copernicus

கோபெர்னிக்கஸ் எழுதிய வானுலக  உடலிகளின் சுற்றுக்கள் என்ற நூலில்  புவி அல்ல, ஞாயிறே ஞாயிறு மண்டலத்தின் மையப் பகுதியில் இருக்கிறது என்ற கோட்பாடு முன்மொழியப்பட்டது. அதன் அடிப்படையில் ஞாயிறை வரிசையாகச் சுற்றி வரும் கோள்களில் புவி மூன்றாவது இடத்தில் வைக்கப்பட்டது. வானுலக  உடலிகளின் சுற்றுக்கள் கோபெர்னிக்கஸ் மரணப் படுக்கையில் படுத்திருந்தபோதுதான் வெளியிடப்பட்டது.

இந்த மாற்றங்கள் கோபெர்னிக்கன் புரட்சி (Copernican Revolution ) எனச் சிறப்பாக அழைக்கப்படுகிறது.

புதிய ஒழுங்கின்படி  புவி இன்னொரு கோள்,  நிலா, ஞாயிறை அல்ல புவியைச் சுற்றி வருகிற உபகோள், வெகு தொலைவில் உள்ள விண்மீன்கள் ஞாயிறைச் சுற்றுவதில்லை, புவி தன்னைத்தானே 24 மணித்தியாலத்துக்கு ஒருமுறை வலம் இருந்து இடமாக (மேற்கு – கிழக்காக) சுற்றுகிறது,  அப்படிச் சுற்றும் போது வானத்தில் உள்ள விண்மீன்கள் புவியை எதிர்த்திசையில் (கிழக்கு – மேற்காக) சுற்றுவதுபோன்ற ஒரு மாயத் தோற்றத்தை (உணர்வுக் காட்சியை) உண்டாக்குகிறது.Image result for retrograde motion of mars

ஞாயிறுதான் புவியைச் சுற்றி வருகிறதென்ற கருதுகோளைப் புறந்தள்ளியதன் விளைவாக கோள்களின் வேறுபட்ட ஒளி வீச்சு மற்றும் புவியில் இருந்து பார்க்கும்போது அவற்றின் பின்னீட்டு அசைவுக்கு (retrograde motion) இலகுவான விளக்கம் அளிக்க முடிந்தது.Related image

    (1) ஞாயிறு மைய முறைமையில் கோள்களின் மாறுபட்ட ஒளி வீச்சுக்கு அந்தக் கோள்கள் புவியில் இருந்து வெவ்வேறு தொலைவில் இருப்பதே காரணமாகும்.

    (2) கோள்களின் பின்னீட்டு அசைவுக்குக் கேத்திர கணித அடிப்படையில் விளக்கம் கொடுக்கலாம். விரைவாக சிறிய நீள்வட்டத்தில் சுற்றி வரும் கோள் பெரிய நீள்வட்டத்தில் மெதுவாகச்  சுற்றி வரும் கோளைக் கடந்து செல்லும் போது பின்னைய கோள் பின்னாடி ஓடுவது போன்ற மருட்சியைத் (illusion) தோற்றுவிக்கிறது.  புவி – செவ்வாய் ஓட்டம் அல்லது  புவி – வியாழ ஓட்டம் இப்படியான மருட்சியைத் தோற்றுவிக்கின்றன.

இந்தக் கருத்துருவை ஒரு நெடுஞ்சாலையில் வெவ்வேறு ஒழுங்கையில் வெவ்வேறு வேகத்தி;ல் ஓடும் வண்டிகளை எடுத்துக் காட்டாக வைத்து விளக்கலாம். மணிக்கு 100 கிமீ வேகத்தில் ஒடும் ஒரு வண்டியை மணிக்கு 140 கிமீ வேகத்தில் ஓடும் வண்டி முந்தும் போது வேகம் குறைந்த வண்டி பி;ன்னாடி ஓடுவது போன்ற மருட்சியை ஏற்படுத்தும். உண்மையில் அதுவும் முன்னாடி ஓடிக் கொண்டே இருக்கிறது.

கோர்பெனிக்கஸ் பின்னீட்டு அசைவு
Image result for copernican retrograde motion

                                                   தொலமியின் பின்னீட்டு அசைவு              Image result for Ptolemy retrograde motion

கோள்களின் இந்தப் பின்னோட்டத்தைச் சோதிடத்தில் வக்கிரம் என்று அழைப்பார்கள். கோள்கள் எல்லாம் ஞாயிறை நீள்வட்டத்தில் சுற்றுவதால் பின்னாடி செல்லும் கோள்கள் சிறிது காலத்துக்குப் பிறகு மீண்டும் முன்னாடி செல்லத் தொடங்கும். வேடிக்கை என்னவென்றால் அப்படிப் பின்னாடிச் செல்லும் கோள்களுக்குச் சோதிடர்கள் பலன் சொல்கின்றார்கள்!

பின்னாடி செல்லும் காலத்தில் அது என்ன கோள் என்பதைப் பொறுத்து சாதககாரர் கடந்த காலத்தை இட்டு மீளாய்வு செய்ய வேண்டும் என்பது பொதுப் பலன்.

சோதிட சாத்திரங்களை எழுதியவர்களுக்கு இந்தப் பின்னோட்டம் பற்றிய காரண காரியம் தெரியாததால் தங்களது கற்பனையில் தோன்றியதை எழுதி வைத்து விட்டார்கள். அவற்றை  சோதிடர்கள் இன்றும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகின்றார்கள்.

பண்டைய வானியலாளருக்கு ஞாயிறு அல்ல புவிதான் அண்டத்தின் மையம் என்ற கோட்பாட்டில் அரிஸ்தோட்டல் காலம் தொட்டு 17 ஆம் நூற்றாண்டு வரை வைத்த நம்பிக்கைக்கு மூன்று பிழையான கோட்பாடுகள் காரணமாகும் எனத் தொடக்கத்தில் பார்த்தோம்.

    (1) வானத்தில் இடம்பெறும் அசைவுகள் எல்லாம் ஒரு சீரான வட்ட  (uniform round motion) வடிவமானது.

   (2) வானத்தில் உள்ள காட்சிப்பொருள்கள் (Objects) கலப்பற்ற பருப்பொருள்களால் ஆனவை. எனவே அவை தமது இனப் பொதுப் பண்புகளை (intrinsic properties) மாற்ற முடியாது.

    (3)  புவி அnண்டத்தின் மையத்தில் இருக்கிறது.

கோபெர்னிக்கஸ் முதலாவது கோட்பாட்டையிட்டுக் கேள்வி எழுப்பினார். ஆனால், இரண்டாவது கோட்பாடு பற்றிக் கேள்வி எழுப்பவில்லை. இருந்தும் கோபெர்னிக்கன் புவிமையக் கோட்பாடு இரண்டாவது கோட்பாட்டை மறைமுகமாக மறுத்தது. உலகம் இன்னொரு கோள் என்பதால் ஏனைய கோள்களும் புவியில் காணப்படும் பொருள்களால் உருவானவை எனக் கோபெர்னிக்கஸ் ஊகித்தார்.


சோதிடப் புரட்டு

பூமியை மட்டுமல்ல மனித மனதையும் அசைய வைத்த மனிதர்

(35)

கோபெர்னிக்கஸ் ஒரு புரட்சிக்காரர் அல்ல. அவர் எழுதிய நூல் அவரது இறுதிக் காலத்தில் வெளியிடப்பட்டதற்கு எங்கே தனது கோட்பாடுகள் தனது மேலாளர்களாலும் திருச்சபையினாலும் ஏளனம் செய்யப்படுமோ அல்லது ஒப்புதல் பெறத் தவறிவிடுமோ என்ற அச்சம் காரணம் என நம்பப்படுகிறது. ஆனால், தயக்கமான புரட்சியாளர் எனத் தன்னை காட்டிக் கொண்ட இவர் மேற்குலக நாகரிகத்தின் சிந்தனைத் தளத்தில் தவழவிட்ட எண்ணங்கள் நாளடைவில் மாபெரும் புரட்சியை (அவர் இறந்து நீண்ட காலத்துக்குப் பின்னர் ) ஏற்படுத்தியது. தொடக்கத்தில் அவரது எண்ணங்கள் அவர் இறந்து நூறு ஆண்டு காலம் வரை கவனிப்பாரற்றுக் கிடந்தன.

கோபெர்னிக்கன் ஞாயிறுமையக் கோட்பாடு ஞாயிறு குடும்பத்தின் கட்டமைப்பைப்பற்றி நேரடியாகக் கூறினாலும் அறிவியல் துறையில் அதன் மறைமுக விளைவு அளப்பரியது. அண்டம் பற்றிய மனிதனது பார்வையில் அது பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது எனலாம். கோபெர்னிக்கஸ் காலம் காலமாக மரபுவழி மூடநம்பிக்கைகளினால் விலங்கிடப்பட்டுக் கிடந்த மனித மூளைக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார்.

கோபெர்னிக்கஸ் ஏறக்குறைய அன்றைய முழு உலகத்தையும் எதிர்த்து நின்றார் என்றே கூறலாம். குறிப்பாக சகல வல்லமையும் அதிகாரமும் படைத்த  கிறித்தவ திருச்சபை மற்றும் புனித வேதாகமம் இரண்டையும்  எதிர்த்து நின்றார். அது மட்டுமல்லாமல் அவருக்கு முன்னர் பல நூற்றாண்டு காலம் வாழ்ந்து மறைந்த தத்துவவாதிகளின் சிந்தனைகள், கோட்பாடுகள், முடிவுகள் போன்றவற்றை  எதிர்த்து நின்றார். இதன் மூலம் துணிச்சலான சிந்தனைக்கு வித்திட்டார், அதே நேரம் உண்மைக்கான தேடுதலில் பணிவும்  தன்னடக்கமும் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

கோபெர்னிக்கசின் அறிவியல் புரட்சி கோள்கள் மற்றும் விண்மீன்கள் ஆகியவற்றோடு நின்று விடவில்லை, அது மனிதனைப் பற்றியும் சுழலும் புவியில் அவனது இடம் பற்றியும் ஆன அறிவியலாகவும் இருந்தது.Image result for Nicolaus Copernicus universeImage result for Nicolaus Copernicus universe

கோபெர்னிக்கஸ் தான் திருச்சபைக்கு முரணானவன் என்ற குற்றச் சாட்டில் இருந்து தப்புவதற்குத் தான் எழுதிய De Revolutionibus Orbium  Coelestium என்ற நூலைப்  போப்பாண்டவருக்கே ஒப்படைப்புச் செய்தார். அப்படிச் செய்த காரணத்தால் அவரது ஞாயிறுமையக் கோட்பாடு வெறுமனே ஒரு புனைவுகோளாக (வாத ஆதாரமற்ற தற்காலிகமாகக் கொள்ளப்படும் கருத்து)  மட்டுமே கொள்ளப்பட வேண்டும் என்று அந்த நூலுக்கு அறிமுகவுரை எழுதியவர் குறிப்பிட்டிருந்தார். மத்திய அய்ரோப்பாவில் திருச்சபைக்கு மாறாக எழுதுபவர்கள்,  பேசுபவர்கள் கிபி 1215 இல் நிறுவப்பட்ட மதவிசாரணை மன்றத்துக்கு (Inquisition)  முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் பாதாளச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப் பட்டார்கள் அல்லது உயிரோடு எரியூட்டிக் கொல்லப்பட்டார்கள்.

கிபி 1620 இல் பேராயர் அல்பானோ (Bishop Albano) என்பவரால் கோபெர்னிக்கஸ் எழுதிய நூல் தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் அந்த நூலை அடுத்த இரண்டு நூற்றாண்டுக்கு யாருமே படிக்க முடியாது போய்விட்டது!

கோபெர்னிக்கஸ்  ‘புவியை மட்டுமல்ல மனித மனதையும் அசைய வைத்த மனிதர்’ என்று போற்றப்படுகின்றார். மேலும் ‘அலெக்சாந்தர், ஜென்கிஸ் கான், நெப்போலியன்,  போப்பாண்டவர்கள் இவர்களை விட மனித வரலாற்றில் தீவிர செல்வாக்குச் செலுத்தியவர்” எனப் பாராட்டப் படுகின்றார். புவியின் மூவகை அசைவுகளை ஏற்றுக் கொண்டு அதனை ஏனைய வானுலக கோள்களுடன் வைத்துக் கோபெர்னிக்கஸ் அண்டத்தைப் பற்றிய ஒரு புதிய பார்வைக்கு அடித்தளம் இட்டார்.

பதினேழாம் நூற்றாண்டில் கெப்லர், கலிலியோ மற்றும் நியூட்டன் கோபெர்னிக்கன் ஞாயிறுமைய அண்டக் கோட்பாட்டின் அடித்தளத்தில் நின்று கொண்டே சோதனை மூலம் தங்களது ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அதன் விளைவாக வானியல் துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டது.  அரிஸ்தோட்டல், தொலமி இருவரதும் கோட்பாடுகள் முற்றாகத் தூக்கி வீசப்பட்டு அதற்குப் பதிலாக இன்றைய புதிய வானியல் மற்றும் இயற்கை அறிவியல் கோட்பாடுகள் அரச கட்டில் ஏறின.

முன்னர் கூறியவாறு கோபெர்னிக்கன் கோட்பாடு முற்றும் புதிதானதது அல்ல.  கிமு 200 இல்  சாமோஸ் தீவில் (இன்று துருக்கி நாட்டின் கடற்கரைக்கு அப்பால் உள்ள தீவு) வாழ்ந்த அரிஸ்தார்ச்சுஸ் ஞாயிறுமையக் கோட்பாட்டை முன் மொழிந்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இன்றைய வானியல் அவதானிப்புக்கள் ஏரணம் மற்றும் கணிதயியல் அடிப்படையில் (In logical and mathematical ) மேற்கொள்ளப்படுகின்றன.  எண்பிக்கக் கூடிய கோட்பாடுகளின் அடித்தளத்தில் கட்டி எழுப்பப்படுகின்றன. கோபெர்னிக்கன் புரட்சியின் முக்கிய அம்சம் என்னவென்றால் வானுலகத்தில் காணப்படும் காட்சிப் பொருட்களின் அசைவுகள் பற்றித் திருத்தமான தரவுகளைத் திரட்டியதுதான்.Image result for sun is the centre of universe

“Finally we shall place the Sun himself at the center of the Universe. All this is suggested by the systematic procession of events and the harmony of the whole Universe, if only we face the facts, as they say, ‘with both eyes open’.”

முடிவாக ஞாயிறை அண்டத்தின் மையத்தில் வைப்போமாக. அண்டத்தின் ஒருங்கிசைவு (harmony)  மற்றும் நிகழ்ச்சிகளின் முறையான நகர்வுகள் அதனையே சுட்டிக் காட்டுகின்றன. பலர் சொல்வதுபோல் நாங்கள் மட்டும் ‘திறந்த கண்களோடு’ மெய்மைகளுக்கு முகம் கொடுப்போமானால் இந்த உண்மையை அறியலாம்’ என கோபெர்னிக்கஸ் தனது நூலில் எழுதினார்.

வரலாற்றில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிததுக் கொண்ட கோபெர்னிக்கஸ் 1543 ஆம் ஆண்டு மே 24 இல் காலமானார்.

கோபெர்னிக்கஸ் எழுதிய நூல் இலத்தீன் மொழியில் இருந்ததால் அது சாதாரண மக்களைச் சென்றடையவில்லை. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. கத்தோலிக்க திருச்சபையின் நெற்றிக்கண் கோபர்னிக்கஸ் பக்கம் உடனடியாகத் திரும்பவில்லை. ஆனால், கத்தோலிக்க சமயத்தவரான கோபெர்னிக்கஸ் எழுதிய நூல் புரட்டஸ்தான் சமயத்தை தோற்றுவித்த மாட்டின் லூதர் (Martin Luther) தொமாஸ் குன் (Thomas Khun) மற்றும் பிலிப் மெலாச்தொன் (Philip Melanchthon) போன்றவர்களின் நெற்றிக் கண்களைத் திறக்க வைத்தது.

“புவி ஞாயிறைச் சுற்றி வருவது உண்மையானால்  விண்மீன்கள் முன்னும் பின்னும் அசைய வேண்டும். ஆனால், அப்படியான அசைவைக் காண முடியவில்லை. மேலும் சுற்றும் பூமி சீராக வீசும் காற்றை உருவாக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. பறவைகள் மணிக்கு 1,000 கல் வேகத்தில் பறந்தால் மட்டுமே கோபெர்னிக்கசின் சுற்றும் பூமிக்கு ஈடு கொடுக்க முடியும். இது ஒரு பயித்தக்காரத்தனமான யோசனையாகும்.”

“ஞாயிறு, சந்திரன் உட்பட வானுலகம் அல்ல புவி  சுற்றுகிறது என்று சொல்கின்ற திடீர்  சோதிடருக்குக் காது கொடுக்கும் மக்கள்………இந்தப் பேயன் (கோபெர்னிக்கஸ்) வானியல் பற்றிய அறிவைத் தலைகீழாக மாற்ற நினைக்கிறான். ஆனால், புனித ஆகமங்கள் ஏகோவா (துழளாரய 10:13) புவியை அல்ல ஞாயிறையே ஒரு இடத்தில் நிற்குமாறு கட்டளை இட்டார்.”

‘சில மனிதர்கள், ஒன்றில் ஒரு புதுமைக்காக அல்லது தங்கள் வித்துவத்;தைக் காட்டப்  புவி அசைகிறது என முடிவு கட்டிவிட்டார்கள்……. உண்மையின்மை, பண்பின்மை காரணமாக அதனைப் பகிரங்கமாகச் சொல்கிறார்கள். இது பொல்லாப்பானது, நல்ல மனது உடையவர்கள் கடவுள் வெளிக்காட்டிய உண்மையை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கவேண்டும் ………………அண்டத்தின் நடுவில்  புவி இல்லாவிட்டால் அது வேறு எங்கேயும் இருக்க முடியாது.” (தொமாஸ் குன் – The Copernican Revolution, notes Luther’s reaction to Copernicus)

‘சிலர் பெயர் எடுப்பதற்காக அந்தப் பிறஷ்ஷியன் வானியலாளர் போல் பைத்தியக்காரத்தனமான கோட்பாடுகளை ( புவி சுற்றுகிறது, ஞாயிறு நிலையாக நிற்கிறது)  உருவாக்குகிறார்கள். அறிவுள்ள மன்னர்கள் அப்படிப் பட்டவர்களது மனதை மெல்ல வசப்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.” ( Hermann Kesten – Copernicus and His World )   யோக சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைத்த மெலாச்தொன் லூதரின் பிறந்த நாளையும் நேரத்தையும் மாற்றினார். அப்படி மாற்றிவிட்டு லூதர் அமாவாசை நாட்களில் பயணிக்கக் கூடாது என்று மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டார்.’ (மேற்படி நூலில்)

‘கல்வின் தோத்திரப் பாடல்களில் (Psalm 93:1) இருந்து ஒரு வரியை “உலகம் அசையாதவாறு உறுதியானது” என்று சொல்லிவிட்டுக் கேட்கிறார் ‘தெய்வீக ஆவியின் அதிகாரத்துக்கு மேலாக யார் கோபெர்னிக்கின் கோட்பாட்டை வைக்கத் துணிவார்கள்?’ (மேற்படி நூலில் )

1945 இல் கோபெர்னிக்கசின் நினைவாக வட போலந்தில் மிகப் பெரிய பல்கலைக் கழகம் ஒன்று நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.

கோபெர்னிக்கஸ் காலம் தொட்டே வானியல் சோதிடம் இரண்டும் தனித் தனிப் பாதையில் நடைபோடத் தொடங்கின. அவரது ஞாயிறுமையக் கோட்பாடு சோதிட சாத்திரத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது.

ஞாயிறு கோள் என்ற நிலையில் இருந்து விண்மீன் என்ற இடத்தைப் பிடித்தது.  புவி ஏனைய கோள்களில் ஒன்றெனக் கணிக்கப்பட்டது. நிலா கோள் அல்ல புவியைச் சுற்றும் உபகோள் எனப் பதவி இறக்கம் செய்யப்பட்டது.

சோதிடம் பிழையான அடித்தளத்தில் கட்டியெழுப்பப் பட்டுள்ள சாத்திரமாகும். அதில் முதன்மையானது புவிதான் அண்டத்தின் மையம், அதனைச் சுற்றியே கோள்கள், விண்மீன்கள் மற்றும் ஞாயிறு வலம் வருகின்றன என்பதாகும். கோபெர்னிக்கின் ஞாயிறு-மையக் கோட்பாடு சோதிட சாத்திரத்தின் புவி-மையக் கோட்பாட்டின் நம்பகத்தன்மையைத் தகர்த்தெறிந்து அதனைப் பொய்யாக்கியது.

ஆனால், சோதிட சாத்திரம் அரிஸ்தோட்டல்-தொலமி இருவரதும் புவிமையக் கோட்பாட்டை விடவே இல்லை. இன்றுவரை அதனைக் குரங்குப்  பிடியாகப் பிடித்துக் கொண்டு வருகிறது.

என்ன நடக்குமோ? ஏது நிகழுமோ? என்ற நிச்சயமற்ற எதிர்காலம் பலரைப் பயமுறுத்துகிறது. அதுதான் மனிதனது கவலை மற்றும் பாதுகாப்பு இன்மை போன்றவற்றின் ஊற்றாகும். சோதிடம் தங்கள் எதிர்காலம்பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு ஒரு போதை மருந்தாகத் தொழிற்படு;கிறது.

அண்டத்தில் உள்ள பொருட்களிடையே ஒரு ஒற்றுமை நிலவுகிறது, அண்டத்தின் எந்தப் பகுதியும் அதன் முழுத் தோற்றத்தின் ஒரு பகுதியே, மனிதன் இந்த அண்டத்தின் நுண்மாதிரிப் படிவமான பிண்டமே, கோள் நிலைகள் மனிதன் மீது செல்வாக்குச் செலுத்துகின்றன, அது மனிதனில் எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றன, அவற்றின்   விளைவு மனிதன் அண்டத்தின் பகடைக்காயாகச் செயல்படுகிறான், அவனது விதி முன்கூட்டியே எழுதப்பட்டு விடுகிறது, அதனை யாராலும் மாற்றி எழுத முடியாது, மனிதனது பேச்சையும் செயலையும் கோள்கள், நட்சத்திரங்கள் தீர்மானிக்கின்றன, அவற்றுக்கு அவன் பொறுப்பல்ல. இப்படியான பிற்போக்குச் சிந்தனை மனிதனிடம் ‘எல்லாம் ஊழ்வினை’ ‘எல்லாம் விதிவசம்’  என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

சோதிடம் ஒரு மனிதனது வெற்றியையும் தோல்வியையும் வானத்தில் உள்ள கோள்கள் இராசிகள் நட்சத்திரங்கள் ஆகியனவே தீர்மானிக்கின்றன, எனவே அவனது தன்வினைக்கு (freewill) அல்லது தன்முயற்சிக்கு (self-effort) இடம் இல்லை என்கிறது.

சோதிட சாத்திரம்  ‘நவக்கிரக சாம்ராஜ்ய பரிபாலனத்தில் சூரியனை அரசன் என்றும் சந்திரனை அரசி என்றும் எண்ணிச் சூரியனைச் சிம்ம இராசியில் நிறுத்தி, சந்திரனைக் கடக இராசியில் நிறுத்தி, நிருவாகத்தை அரச வகையில் ஒன்றையும் அரசி வகையில் ஒன்றையும் ஆக இரு வேறு நிருவாக அமைப்பை ஏற்படுத்துகின்றன எனச் சொல்கிறது. ஒன்பது கோள்களில் ஞாயிறே தலைமைக் கோளாகும். அது ஆத்மா, பிதிர் காரகப் பலன்களை அளிக்கிறது.

மேலும் அடிவானத்தில் சூரியன் உதயமாகிக் கொண்டிருக்கின்ற இராசி வீடே ஜெனன (உயிர்) இலக்கினமாகும். நிலா நின்ற இராசி வீடே ஜெனன (உடல்) இராசியாகும். ஜெனன இராசியைக் கொண்டே இராசி பலன் காணப்படுகின்றது. ஜோதிட நுணுக்கங்கள்: விதி, மதி, கதி!

முப்பது பாகை அல்லது  9 பாதங்கள் அடங்கியுள்ள ஒரு இராசி இல்லத்தை ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு வேகத்தில் கடந்து செல்கின்றன. சூரியன் ஒவ்வொரு இராசி வீட்டையும் கடக்க எடுக்கும் காலம் ஒரு திங்களாகும். பன்னிரண்டு திங்களில் பன்னிரண்டு இராசி வீடுகளை அது கடந்து விடுகிறது.

மேற்கூறியவை பூமிமையக் கோட்பாட்டுக்கே பொருத்தமாக இருக்கும். ஞாயிறுமையக் கோட்பாட்டுக்கு நிச்சயம் பொருந்தி வராது. ஞாயிறு புவியைச் சுற்றுவதில்லை, அது 220 மில்லியன் கிமீ நீளமுள்ள பால் வழி மண்டலப் பாதையை சுற்றி வருகின்றது. அப்படி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் 240 மில்லியன் புவி ஆண்டுகள் ஆகும்.

எனவே ஞாயிறுக்குச் சொல்லப்படும் பலன்கள் யாவும் முற்றிலும் பிழையானவை ஆகும். வியாழன், சனி போன்ற ஆண்டுக் கோள்களையும், செவ்வாய் போன்ற மாதக் கோளையும் சூரியன் தனது இடைவிடாத ஓட்டத்தினால் கடந்து செல்லும் போது, சூரியன் அத்தகைய கோள்களுக்கு அஸ்தங்க தோசத்தை ஏற்படுத்திவிடுகின்றது. பின்னர் சூரியன் அக் கோள்களை விட்டு விலகும் போது அத் தோசம் நிவர்த்தியாகிறது என்று சோதிடசாத்திரம்  சொல்வது உண்மைக்குப் புறம்பான கற்பனை கலந்த பொய் ஆகும். சூரியன் சோதிடம சொல்லுவது போல் ஓடுவது கிடையாது. புவிதான் அப்படி ஓடுகிறது. அப்போது சூரியன் ஓடுகிறது போன்ற மாயை (illusion) ஏற்படுகிறது.

“அஸ்தங்கதோசம்’ என்பது வெப்பக் கதிர்களை அள்ளி வீசும் சூரியனுக்கு அருகில் கோள்கள் நெருங்கும் பொழுது (1-17 பாகைக்குள்) அக்கிரகங்கள் தமது சொந்த சக்திகளை அறவே இழந்து, சூரிய ஒளிக்குள்ளும் சூரியனது எதிர்ப்புச் சக்திக்குள்ளும் அய்க்கியமாகி அக் கோள்களை செயல் இழக்கச் செய்து விடுகின்றன” எனச் சொல்வது ஞாயிறுமையக் கோட்பாட்டில் அடியோடு சாத்தியம் இல்லாத ஒன்றாகும். அது தென்னை மரத்தில் தேள் கொட்ட  பனை மரத்தில் நெறி போட்ட கதை போன்றது.

கோபெர்னிக்கன் புரட்சிக்குப் பிறகு சோதிடத்தின் பல்லுப் பிடுங்கப்பட்டு அடுத்த இரண்டு நூற்றாண்டுகள் செல்வாக்கு இழந்து ஏறக்குறையத் தேடுவார் அற்றுக்  கிடந்தது.

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply