எம் வீட்டுக் காளை மாடு எம்மோடு மல்லுக்கட்டி எம் மார்பில் பாயுதடி கண்மணி, என் கண்மணி!
நக்கீரன்
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன்,
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு, நாலும் புரிஞ்சிருச்சு,
கண்மணி என் கண்மணி!
பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்,
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!
(ஊரைத்)
என் வீட்டு கன்னுக்குட்டி, என்னோடு மல்லுக்கட்டி,
என் மார்பில் முட்டுதடி கண்மணி, என் கண்மணி!
தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி….. கண்மணி!
(ஊரைத்)
இந்தப் பாடல் வரிகளை யாராலும் மறக்க முடியாது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு சூழலில் இந்தப் பாடல் தங்களை மனதில் வைத்துப் பாடப்பட்டது போல் தோன்றும். இதனைச் சற்று மாற்றி எம் வீட்டுக் காளை மாடு எம்மோடு மல்லுக்கட்டி எம்மார்பில் பாயுதடி கண்மணி, கண்மணி எனப் பாடலாம்.
இந்தப் பாடல் 1985 இல் வெளிவந்த படிக்காதவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடலை இயற்றியவர் கவியரசு வைரமுத்து. இசை இளையராசா. பாடியவர் கே.ஜெ.யேசுதாஸ். தத்துவப்பாடல் என்றதும் நினைவுக்கு வரும் சில பாடல்களில் இதுவும் ஒன்று!
வட மாகாண சபை அமைச்சர்கள் தொடர்பாக எழுந்த நெருக்கடி இப்போது ‘சுமுகமாக’ முடிந்துள்ளது. சுற்றவாளிகள் என்று முதலமைச்சர் அவர்களால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முடிவுக்கு அப்பால் சென்று அமைச்சர்கள் மருத்துவர் ப. சத்தியலிங்கம், சட்டத்தரணி பா. டெனீஸ்வரன் இருவர் மீதும் மீண்டும் ஒரு விசாரணை வைக்க வேண்டும் அதன் நிமித்தம் குறிப்பிட்ட இரண்டு அமைச்சர்களும் ஒரு மாதத்துக்கு கட்டாய விடுப்பில் போக வேண்டும் என்று சபையில் முதலமைச்சர் தெரிவித்தார். அப்போதுதான் அவருக்கு எதிராக நீதிக்கான குழுவினர் கிளம்பினார்கள்.
குற்றவாளிகள் எனக் காணப்பட்ட அமைச்சர்கள் பதவி விலகுவது சரி, ஆனால் குற்றவாளிகள் அல்லர் என ஆணைக்குழு தீர்ப்புச் சொல்லிய பின்னரும் அவர்களைத் தண்டிப்பது அநீதி என நீதிக்கான உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள். ஆனால் அதனை ஏற்க முதலமைச்சர் மறுத்தார். முறைப்பாட்டாளர்கள் விசாரணைக்குழு முன் தோன்றத் தவறிய காரணத்தாலேயே குற்றமற்றவர்கள் என்ற முடிவுக்கு விசாரணை குழு வந்தது, இப்போது அந்த முறைப்பாட்டாளர்கள் சாட்சி சொல்ல அணியமாக இருக்கிறார்கள் என முதலமைச்சர் தெரிவித்தார். ஓராண்டு காலமாக நடந்த விசாரணையில் ஏன் அவர்கள் கலந்து கொள்ளத் தவறினார்கள் என்பதற்கான காரணம் சொல்லப்படவில்லை. இங்கே கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய விடயங்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும். காரணம் உண்மை திரிக்கப்பட்டது.
(1) சுன்னாகம் நிலத்தடித் தண்ணீர் உட்பட பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட விவசாய அமைச்சரை விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தவர்களே தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள்தான்.
(2) குற்றவாளிகள் என இனம் காணப்பட்ட இரண்டு அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற முடிவை தமிழ் அரசுக் கட்சி வரவேற்று ஆதரித்தது.
(3) குற்றமற்றவர்கள் எனக் காணப்பட்ட அமைச்சர்கள் மீது மீண்டும் ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்பதை தமிழ் அரசுக் கட்சி வரவேற்று ஆதரித்தது.
(4) குற்றமற்றவர்கள் எனக் காணப்பட்ட அமைச்சர்கள் ஒரு மாத காலம் கட்டாய விடுப்பில் போக வேண்டும் என்ற முதலமைச்சரின் சர்வாதிகார முடிவை மட்டும் தமிழரசுக் கட்சி கடுமையாக எதிர்த்தது.
குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சாட்சியத்தின் அடிப்படையில் நீதிமன்றம் குற்றவாளியென தீர்ப்பளிக்கும் மட்டும் சுற்றவாளியாகக் கருதப்பட வேண்டும். இதுதான் இயற்கை நீதி. இது இளைப்பாறிய உச்சமன்ற நீதிபதி விக்னேஸ்வரனுக்குத் தெரியாது என்றல்ல. தெரியும். ஆனால் அவரது நிகழ்ச்சி நிரல் வேறாக இருந்தது. அவரது இலக்கு நல்வாழ்வு அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மீது குவிந்திருந்தது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்ற சனவரி மாதம் கனடா வந்தபோது அவரிடம் ஊடகவியலாளர் சந்திப்பில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “ஊழல் குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஐங்கரநேசனை எப்படி பதில் முதலமைச்சராக நீங்கள் நியமித்தீர்கள்” என்பதுதான் கேள்வி. அதற்கு விடையிறுத்த முதலமைச்சர் “ஐங்கரநேசன் மீது குற்றச் சாட்டுக்கள் மட்டுமே சுமத்தப்பட்டுள்ளது, அந்தக் குற்றச்சாட்டுக்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அவை நிரூபிக்கப்படும்வரை அவர் சுற்றவாளியாகவே பார்க்கப்பட வேண்டும்” எனப் பதில் அளித்தார். ஆனால் இந்த நீதிக் கோட்பாட்டை, முதலமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் அமைச்சர் டெனீஸ்வரன் விடயத்தில் பின்பற்றத் தயாரில்லை என்பதைத்தான் இந்த இரண்டு அமைச்சர்களும் ஒரு மாதம் விடுப்பில் போக வேண்டும் என்றும் அவர்களது அமைச்சுகளை தான் பொறுப்பேற்கப் போவதாகவும் செய்த அறிவித்தல் காட்டுகிறது. தேவைப்படின் அவர்களின் விடுப்பு நீடிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் ஒரு விசாரணைக் குழுவை முதலமைச்சர் நியமித்தால் மொத்தம் உள்ள 26 அமைச்சுக்களில் 13 அமைச்சுகளை தனது பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சரையும் விசாரணைக்கு உட்படுத்தப் படவேண்டும். நீதி வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது இது வட மாகாண சபையில் இடம்பெற்ற ஊழல், அதிகார முறைகேடு பற்றிய விசாரணை அறிக்கை என்றாலும் அதை வைத்துக் கொண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியல் காய் நகர்த்தினார் என்பதுதான் உண்மை. முதலமைச்சரும் அவரை ஆதரிப்போருமு் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வழியாக ஊழலை தமிழ் அரசுக் கட்சி ஆதரிக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்க கடுமையான முயற்சி எடுக்கப்பட்டது. இதில் நீண்ட காலமாக குடைச்சல் கொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மற்றும் வெளியே இயங்கும் தமிழ் மக்கள் பேரவை, கஜேந்திரகுமாரின் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் புலத்தில் உள்ள வன்னியின் மிச்சங்கள் மற்றும் அவர்களது ஆதரவு அமைப்புக்கள், ஊடகங்கள் பெரும் பங்கு வகித்தன.
ஊழலை தமிழ் அரசுக் கட்சி ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் திட்டவட்டமாக மறுத்திருந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வட மகாண சபை உறுப்பினர்கள் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ”ஊழல், பண மோசடி மற்றும் லஞ்சத்துக்கு எதிரான தீவிரமான செயற்பாடே ஆகும்”, என்று எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார். முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் தடுக்க முயல்கிறோம் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதும், உண்மையான நிலைமைக்கு நேர் எதிரானதுமாகும்” என்றும் கூறினார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுத்தபோது, முதல்வர் விக்னேஸ்வரன் “தனக்கு நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டார் என்றும் சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.
அதன் பிறகு அவையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி, ஒருமனதாகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள் என்று கூறும் சுமந்திரன், அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு அடுத்த நாளே, ஐங்கரநேசன் குற்றமற்றவர் என்றும் “அவர் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டார்” என்றும் முதல்வர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார்.குற்றச்சாட்டுகள் ஐங்கரநேசனுக்கு எதிராகவே இருந்த அந்த நிலையில், எல்லா அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டது என்று கூறிய சுமந்திரன், இது ஐங்கரநேசனை பாதுகாக்குமுகமாகத்தான் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.
விசாரணை அறிக்கை பற்றி முதலமைச்சர் ததேகூ இன் பங்காளிக் கட்சித் தலைவர்களோடு மட்டும் பேசினார். ததேகூ இன் முக்கிய பங்காளிக் கட்சியான தமிழ் அரசுக் கட்சித் தலைவரோடு பேசாமல் விட்டது முதலமைச்சர் இந்தச் சிக்கலை அரசியலாக்கிறார் என்பது தெரிந்தது. கஜேந்திரகுமார், பிறேமச்சந்திரன் போன்றோர் மாற்றுத் தலைமை பற்றி பேசுகிறார்கள். அதாவது முதலமைச்சர் அவரது தலைமையின் கீழ் செயல்பட நினைக்கிறார்கள்.
முதலமைச்சர் தொடக்கத்தில் தான் அரசியல் அனுபவம் அற்றவன் எனவும் மாவை சேனாதிராசா போன்றவர்கள்தான் தனக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் போகப் போக அவரது நிலைப்பாடு மாறத் தொடங்கியது. முதலமைச்சரே தனது அமைச்சர்களை தெரிவுசெய்யலாம் என தலைவர் சம்பந்தன் நல்ல மனதோடு சொன்னது அவருக்கு வாய்ப்பாய் போய்விட்டது. அதன் பின்னர் அவர் தமிழரசுக் கட்சியை ஒதுக்க வெளிக்கிட்டார். நான் எந்தக் கட்சியின் ஆதரவாளனும் இல்லை. எந்தக் கட்சி ஆதரவோடும் நான் தேர்தலில் வெற்றிபெறவில்லை. தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்துத்தான் முதலமைச்சராக வந்தேன் எனப் பேசத் தொடங்கினார்.
2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ தோல்வி அடையும் என முதலமைச்சர் எதிர்பார்த்தார். கஜேந்திரகுமாரின் தமிழ்க் காங்கிரஸ் இரண்டொரு இருக்கைகளை ஆவது வெல்லும் என எதிர்பார்த்தார். அப்படி அவர்கள் வென்று வந்தால் அதில் என்ன நட்டம் என்றும் பேசினார். தேர்தல் நேரத்தில் மறைமுகமாக அறிக்கைகள் விட்டார். அவரது எதிர்பார்ப்பு பிழைத்த காரணத்தாலேயே தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றது.
இப்போது முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் வேறு வழியில்லாமல் இறங்கியிருக்கிறது. அதாவது முதலமைச்சர் விக்னேஸ்வரன் “மக்கள் ஆதரவுடன் தொடர்ந்து ஆட்சி செய்வேன்” என்று வெளியில் மார்தட்டிக் கொண்டாலும் அவரது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் அவரை கிலி கொள்ள வைத்தது. அதன் காரணமாகத்தான் வெட்கத்தை மூட்டை கட்டி வைத்து விட்டது இரண்டு அமைச்சர்கள் மீது விதித்த தண்டனையை மீளப் பெற்றார். மேடையில் வீராவேசமாகப் பேசுவது வேறு யதார்த்த அரசியல் வேறு என்பது அவருக்குப் புரிந்துள்ளது.
முதலமைச்சரின் கீழ் வடக்கு மாகாண சபை சரியாக இயங்கவில்லை அதற்குக் காரணம் முழுக்க முழுக்க வினைத்திறன் அற்ற முதலமைச்சரே என்ற எண்ணம் கட்சி அரசியலுக்கு அப்பால் நிலவி வருகிறது. வெள்ளிக்கிழமை கொழும்புக்கு விமானத்தில் பறக்கும் விக்னேஸ்வரன் திங்கள் மதியம்தான் மீண்டும் விமானத்தில் யாழ்ப்பாணம் வந்து இறங்குகிறார்.
வட மாகாண சபை தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே எஞ்சியுள்ளன. எனவே விரைவில் விக்னேஸ்வரன் ஒரு புதிய கட்சியை தொடங்குவார் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. அவரது தலைமையை ஏற்க ரெலோ, இபிஎல்ஆர்எவ், புளட் அணியமாக இருக்கின்றன. கஜேந்திரகுமார் பொனனம்பலத்தை கேட்கத் தேவையில்லை. அவர், விக்னேஸ்வரன் தலைமையில் இயங்கத் தயார் என நீண்ட காலமாக சொல்லி வருகிறார். இது நல்ல முயற்சி. உள்ளுக்குள் இருந்து குடைச்சல் கொடுப்பதற்குப் பதில் விக்னேஸ்வரன் துரியோதனர் படைக்கு தலைமை தாங்குவது மெத்த நல்லது.
ஒரு சில விமர்சகர்கள் தமிழரசுக் கட்சி அரசியல் தற்கொலை செய்ய விரும்புகிறதா? என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். தேர்தல் வெற்றியல்ல முக்கியம். மக்களுக்கு எது நல்லதோ அதனைச் செய்ய தமிழ் அரசுக் கட்சி முயல்கிறது. இதில் அடுத்த தேர்தலில் கிடைக்கும் வெற்றி தோல்விபற்றிக் கவலை இல்லை.
முதலமைச்சருக்கு ஆதரவாக கூட்டம் கூடியது உண்மையே. அதற்குக் காரணம் மக்களது காணிச் சிக்கல், மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்கிறது. புதிய அரசியல் யாப்பு உருவாக்கமும் தென்னாலி இராமன் குதிரை போல மாதம் காதவழி வேகத்தில் போகிறது. அதற்காக அரசாங்கத்தோடு உள்ள உறவை முறித்துக் கொண்டு வெளியேறுவது புத்திசாலித்தனமான காரியம் இல்லை. கிடைக்கிற வாய்ப்பைப் நாம் பயன்படுத்த வேண்டும். பன்னாட்டு சமூகமும் அதனையே எதிர்பார்க்கின்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.