இந்தியாவை அச்சுறுத்தும் சீனப்பாதை!

இந்தியாவை அச்சுறுத்தும் சீனப்பாதை!

ரே ஒரு பாதையை உருவாக்குவதன்மூலம், ஒரு தேசம் உலகின் வல்லரசு ஆகிவிட முடியுமா? சீனா அப்படித்தான் நம்புகிறது. அதற்கான முயற்சிகளையும் செய்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக, தான் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, உலகின் பலப் பஞ்சாயத்துகளில் இருந்து அமெரிக்கா பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு ஒப்பந்தங்களில் இருந்தும் அது வெளியேறுகிறது. இந்தச் சூழலில், நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு, பொருளாதார உதவி தேவைப்படும் அரசுகளுக்கு ஒரு ‘உலகத் தலைவன்’ தேவைப்படுகிறான். ‘நான்தான் அந்தத் தலைவன்’ எனச் சொல்லாமல் சொல்கிறது சீனா. இதனால் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்திக்கிறது இந்தியா.

அண்டை நாடுகளால் பிரச்னைகளைச் சந்தித்துவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முன்வரிசையில் இடம் உண்டு. அந்த அளவுக்குப் பாகிஸ்தானும், சீனாவும் கைகோத்துக்கொண்டு இந்தியாவுக்குக் குடைச்சல் கொடுத்து வருகின்றன. காஷ்மீர் பிரச்னையை வைத்து இந்தியாவுக்கு எதிராகத் தீவிரவாதிகளைத் தூண்டி விட்டுத் தொல்லை கொடுத்து வரும் பாகிஸ்தானை ஒருபக்கம் ஆதரித்தபடி, காஷ்மீரின் கிழக்குப் பகுதியிலும், அருணாசலப் பிரதேச மாநிலத்திலும் அவ்வப்போது அத்துமீறல்களில் ஈடுபட்டுவருகிறது சீனா.

உலகின் எந்த மூலைக்குப் போனாலும், எந்த வணிக வளாகத்துக்குப் போனாலும், அது சீனாவில் தயாரான பொருட்களால் நிரம்பி வழியும். ஆனாலும், சீனாவுக்கு இது போதவில்லை. சுமார் 57 பில்லியன் டாலர்கள் மதிப்பில் (முதலில் 46 பில்லியன் டாலர்களாகத் திட்டமிடப்பட்டு, தற்போது சீனா  அதனை அதிகரித்துக்கொண்டே வருகிறது), பாகிஸ்தானுடன் இணைந்து சீன – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC – China-Pakistan economic corridor) என்ற திட்டத்தை மேற்கொண்டு வருகிறது சீனா. இதைத் தொடர்ந்து, ஐரோப்பா, ஆசியா என இரண்டு கண்டங்களின் ஒட்டுமொத்த நுகர்வோர் சந்தையையும் தனது டிராகன் கரங்களுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் சீனா உருவாக்கி இருப்பது, One Belt-One Road (OBOR) எனப்படும் ‘ஒரு சூழல் – ஒரு பாதை’ என்ற திட்டம். பண்டைக்காலத்தில் ‘பட்டுப்பாதை’ என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளையும் ஆசியாவையும் இணைக்கும் வணிகப்பாதை ஒன்று இருந்தது. அதை மீண்டும் உருவாக்குவதுதான், ‘புதிய பட்டுப் பாதை’ (New Silk road) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தத் திட்டம்.

இது தொடர்பான மாநாட்டை, பெய்ஜிங்கில் மே 14, 15 தேதிகளில் சீனா நடத்தியது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் உள்பட 29 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இதுதவிர அமெரிக்கா உள்பட 130-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டைத் தவிர்த்த முக்கியமான நாடு, இந்தியா. சீனாவை இது முள் மாதிரி உறுத்தக்கூடும். ஆனால், நமக்கு தவிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்தப் பாதை செல்வது பிரச்னைக்குரிய வழியில்! பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள நம் காஷ்மீரில் உள்ள கில்கிட் – பல்டிஸ்தான் வழியாக இந்தப் பாதை செல்கிறது. நமக்குச் சொந்தமான ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்க, அந்த நாட்டோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அங்கு சீனா சாலை அமைக்கிறது. இதில் எப்படி இந்தியா பங்கேற்க முடியும்?

ஆனால், எப்படியாவது இந்தியாவைப் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்பதற்காகப் பல நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது. ஆனாலும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவிட்டது. இந்தத் திட்டத்தால் உலகளாவிய அளவில் சீனாவின் பொருளாதார, வணிக ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்பதால் ஏற்கெனவே அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் அந்நாட்டின் மீது அதிருப்தியில் உள்ளன. இந்நிலையில், இந்தியாவின் எதிர்ப்பும் புறக்கணிப்பும், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதை, சீன மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையிலேயே வெளிப்படுத்தினர்.

மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய சீன அதிபர்   ஷி ஜின் பிங், “இது இந்த நூற்றாண்டின் முக்கியமான திட்டம். இது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் பயனளிக்கும்’’ என்றார். ஆனால், இந்தத் திட்டத்தினால் நிறையப் பயனடையப்போவது சீனாதான் என்றும், இந்தத் திட்டத்தின் பங்காளியான பாகிஸ்தானே, சீனாவின் காலனி நாடாகி விடும் என்றும், அதன் விவசாய நிலங்கள், வேளாண் உற்பத்தி, அங்கு அமைக்கப்படும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் சீனாவின் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக்குள் வந்துவிடும் என்றும் பாகிஸ்தான் ஊடகங்களே அபாயச் சங்கை இப்போது ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

இந்தத் திட்டத்தால், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. “சீனாவும் பாகிஸ்தானும் ஒன்று சேர்ந்துள்ளதால், இந்தியாவுக்கு அரசியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படக்கூடும். சீன ராணுவத்துக்கு, பாகிஸ்தான் ஒரு வாடகை வீடாகச் செயல்படும் அளவுக்கு நிலைமை மாறிவிடும். நமக்குச் சொந்தமான கில்கிட்-பல்டிஸ்தான் மீதான சீன – பாகிஸ்தானிய தலையீடுகள், இந்தியாவுக்குச் சவால் விடும் நகர்வாகவே இருக்கும்” என்கின்றனர் இந்திய பாதுகாப்பு வியூக ஆலோசகர்கள்.

இந்தியா சொந்தம் கொண்டாடும் கில்கிட் – பல்டிஸ்தான் பகுதி, இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்னும் பிரச்னைக்குரிய பகுதியாகவே உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 18,000 முதல் 21,000 அடி உயரத்தில் இருக்கும் சியாச்சின் சிகரத்தையொட்டிதான்     சீனா – பாகிஸ்தானை இணைக்கும் காரகோரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கான பாதுகாப்புக்கு என தன் படைகளை சீனா அங்கு நிறுத்தியுள்ளது.

“ஏற்கெனவே, சியாச்சின் சிகரத்தைக் குறிவைத்துதான், 1999-ம் ஆண்டு கார்கிலில் ஊடுருவியது பாகிஸ்தான் ராணுவம். இந்நிலையில், சர்ச்சைக்குரிய இந்திய நிலப்பகுதியில், இந்த வழித்தடத்தை வரம்புமீறி அமைப்பது, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகவே அமையும்” என்கின்றனர் இந்திய பாதுகாப்பு ஆலோசகர்கள்.

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் பலரும் ஏற்கெனவே காஷ்மீர் பிரச்னையில் சீனாவின் பங்கு குறித்துப் பேசிவரும் சூழலில், கில்கிட் – பல்டிஸ்தான் பகுதியில் சீன ராணுவத்தின் நடமாட்டம் என்பது, ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பில் மிகத்தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் சீனாவோ, ‘‘இந்தியாவின் கவலைகள் தீர்க்கப்படும். இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நட்பு மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய உறவுகளை வைத்துக்கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம். காஷ்மீர் மீதான சீனாவின் நிலையில் பட்டுப் பாதைத் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தாது” என்கிறது.

சீனாவின் வாக்குறுதியை எந்த அளவுக்கு நம்பலாம் என்பதற்கு, அதன் கடந்தகால செயல்பாடுகளே சாட்சி.

இந்நிலையில் இந்தப் பொருளாதார வழித்தடத்  திட்டத்தினால் பாகிஸ்தான், சீனாவின் காலனி நாடாக மாறிவிடும் என்று அந்நாட்டின் பொருளாதார வல்லுநர்கள். எச்சரிப்பது ஏன் என்பது குறித்த விவரங்களும், பட்டுப் பாதைத் திட்டம் எப்படிச் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமே பட்டுப் பாதை அமைக்கும் என்பது குறித்த விவரங்களும்

வரும் இதழில்…. பா. முகிலன்

பாகிஸ்தானுக்கு சீனா தரும் இலவசம்!

சாலைகள், ரயில் பாதை மற்றும் கடல் வழிகள் ஊடாக ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுடன் சீனாவின் முக்கிய நிலப்பகுதிகளை இணைக்கும் நோக்கத்தில்தான், சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மனிதர்களும் பொருட்களும் எளிதில் பயணிப்பதே நோக்கம். சுமார் 3,000 கி.மீ. தூரத்துக்கான ரயில் பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் வழியாக இந்தப்பகுதிகள் இணைக்கப்படும். கூடவே, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்தில் வளர்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளப்படும். சீனா, இந்தத் திட்டத்துக்காக இதுவரை இல்லாத வகையில், சுமார் 57 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது. இந்தப் பொருளாதாரப் பாதை திட்டத்துக்காகப் பாகிஸ்தானில் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர உதவிகளை சீனா இலவசமாகவோ நீண்டகாலக் கடன் என்ற அடிப்படையிலோ செய்து கொடுக்கும்.

http://www.vikatan.com/juniorvikatan/2017-jun-04/investigation/131576-china-pakistan-economic-corridor-issue.html

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply