முகமது கஜினி கொள்ளையடிக்க 18 முறை படையெடுத்தது எங்கே என்று உங்களுக்கு தெரியுமா?

முகமது கஜினி கொள்ளையடிக்க 18 முறை படையெடுத்தது எங்கே என்று உங்களுக்கு தெரியுமா?

Wednesday, 24 May 2017

இன்று உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இந்திய நாடு ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய பணக்கார தேசமாக இருந்துள்ளது. பொன்னும், வைரமும், அரிய கற்களும் கொட்டிக்கிடந்திருக்கின்றன.

உலகெங்கும் கொண்டிருந்த வர்த்தக தொடர்புகள் மூலமாக மூட்டை மூட்டையாக தங்கம் கப்பலில் வந்திறங்கியிருக்கிறது. சோழர்களுக்கும், மலபார் ராஜ்யத்தை சேர்ந்தவர்களும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அப்போதைய முன்னேறிய நாடுகளான ரோம் மற்றும் எகிப்துடன் கப்பலில் வாணிபம் செய்திருக்கின்றனர்.

இப்படி செல்வம் கொட்டிக்கிடந்ததே எதிரிகள் நம் நாட்டின் மீது படையெடுக்கவும் காரணமாக அமைந்தது. குறிப்பாக மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மன்னர்கள் இந்தியாவின் மீது பலமுறை கொள்ளையடிப்பதற்காக படைஎடுத்திருகின்றனர்.

அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய கொள்ளையன் என்றால் 18முறை குஜராத்தில் இருக்கும் சோம்நாத் கோயிலின் மீது படையெடுத்த முகமது கஜினி தான். வாருங்கள், இத்தனை முறை ஒரு மன்னனை படையெடுக்கத் தூண்டிய சோம்நாத் கோயிலின் ரகசியங்களை தெரிந்துகொள்வோம்.

சோம்நாத் கோயில் !!

குஜராத் மாநிலத்தின் மேற்கு கரையில் பிரபாஸ் பட்டணம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது இந்த சோம்நாத் கோயில். இந்தியாவெங்கும் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதாக கட்டப்பட்டது என்ற சிறப்பை பெற்றுள்ளது இக்கோயில்.

சோமநாதர் ஆலயம் அமைந்திருக்கும் இந்த இடம் ஆதி காலத்தில் கபிலா, ஹிரன் மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒருங்கே சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக இருந்துள்ளது.

தனது 27மனைவியரில் ரோஹினியிடம் மட்டுமே அளவுகடந்த பாசம் வைத்து மற்றவர்களை புறக்கணித்து வந்திருக்கிறான் சந்திரன். இதனால் கோபம் கொண்ட மற்ற 26 மகள்களின் தந்தையான தட்சப்பிரசாபதி என்பவர் சந்திரன் காச நோயால் அவதிப்படட்டும் என்று சபிக்கிறார்.

காச நோயினால் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக தேய்ந்து வந்த சந்திரன் கடைசியாக இந்த திரிவேணி சங்கமத்தில் சுயம்புவாக தோன்றிய சிவ லிங்கத்தை வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றுள்ளான். இதன் காரணமாகவே சந்திரனின் பெயர்களுள் ஒன்றாக ‘சோமன்’ என்கிற பெயரால் இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் விளிக்கப்படுகிறார்.

சோம்நாத் கோயில் – புராண சிறப்பு !!

ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதான இக்கோயிலில் இருக்கு சிவ லிங்கமானது சூரியனை விட பிரகாசமானது என்றும் அது பூமிக்கடியில் மறைந்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல தனது 127வயதில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதார முடிவிற்காக இந்த சோமநாதர் கோயில் அமைந்திருக்கும் பிரபாஸ பட்டினத்திற்கு வந்து வேடனின் அம்புக்கு இரையாகி தனது உயிரை விட்டிருக்கிறார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

படையெடுப்புகள்!!

உருவ வழிப்பாட்டை எதிர்த்த இஸ்லாமிய மன்னர்கள் பல முறை இக்கோயிலின் மீது படையெடுத்து வந்து அடியோடு அழித்திருக்கின்றனர். கி.பி. 1025, டிசம்பர் மாதம், கஜினி முகமது சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி, அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன், ஐம்பதாயிரம் இந்துக்களை கொன்று, 20,000 இந்துக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர்.

ஆயிரக்கணக்கான இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தை உடைத்து, அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தார். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள், தங்கம், வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றான் கஜினி முகமது.

இதன் பிறகு 1296ஆம் ஆண்டு துருக்கிய படை தளபதி அலாவுதீன் கில்ஜி என்பவரும், கி.பி. 1375ல் ஜூனாகாத் சுல்தான் என்பவரும், கி.பி. 1701ல் முகலாய பேரரசன் அவுரங்கசீப்பும் சோமநாதர் கோயிலை இடித்து தரைமட்டம் செய்திருக்கின்றனர்.

பல முறை அழிக்கப்பட்டாலும் வரலாற்று காலம் நெடுகிலும் மீண்டும் மீண்டும் புனரமைக்கப்பட்டு வந்திருக்கிறது இக்கோயில். முதல் முறையாக கி.பி. 649ல் சௌராட்டிர தேசத்து வல்லபீபுர யாதவகுல மன்னரால் இக்கோயில் சீரமைத்து கட்டப்பட்டிருக்கிறது. பின்னர் இறுதியாக சுதந்திர இந்தியாவில் அப்போதைய இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் முன்னெடுப்பில் இப்போது நாம் பார்க்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

சோமநாதர் கோயில்!!

இன்று நாம் பார்க்கும் சோமநாதர் கோயில் சாளுக்கியர் கட்டிடக்கலை அமைப்பின்படி பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது. ஆங்கில அரசால் கஜினி முகமதுவால் ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச்செல்லப்பட்ட சந்தன கதவுகளை மீட்கும் முயற்சி மேற்கொண்ட போது ஒரு மதத்திற்கு சார்பாக அவர்கள் செயல்படுவதாக கூறப்பட்டு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

சோமநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதற்கு அருகில் இருக்கும் கடலில் புனித நீராடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இங்கு நடைபெறும் கார்த்திக் பூர்ணிமா திருவிழாவின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர். இந்து காலண்டரின் படி இது கார்த்திக் சுதா 14 இல் ஆரம்பித்து சுமார் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

– See more at: http://www.manithan.com/news/20170524127252?ref=rightsidebar-tamilwin#sthash.SGNByAg6.dpuf

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply