சோதிடப் புரட்டு – திருப்படையல்

                                                                சோதிடப் புரட்டு                                                                                                

                                                                        திருப்படையல்

நூல் குறிப்பு             

என்னைப் பத்து மாதம் வயிறு சுமந்து பெற்று முகம் தெரியாத வயதில் மறைந்து விட்ட தாயார் சோலையர் வள்ளியம்மை என்னைச் சான்றோனாக்கிய தந்தையார் தில்லையர் வேலுப்பிள்ளை என்னை அன்பு பாராட்டி வளர்த்தெடுத்த தமையனார் தில்லையம்பலம் மச்சாள் சிவபாக்கியம் தமக்கையார் சிவபாக்கியம் மைத்துனர் சிவகுரு கந்தவனம் ஆகியோரது காலடி மலர்களுக்கு இந்த நூல் திருப்படையல்!

                                                                                        முன்னுரை

‘நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’ – இது நக்கீரன் நெறி.

கடவுளோடு மோதினார் நக்கீரன் என்பது பழைய கதை.

இன்று –

கடவுளை அல்ல – கணியத்தோடு (சோதிடம்) மோதுகிறார் நக்கீரன்.

நக்கீரன் கணியத்துக்கு எதிராக வைக்கும் சான்றுகள் எம்மை அசைக்கின்றன.

அறிவியல் கொண்டு கணியத்தை (சோதிடம்) அவர் ஓங்கி அடிக்கின்றார்.

நேற்றுவரை பிறர் நிகழ்த்திய மேலோட்டமான ஆய்வுகள் போல் இல்லாமல் கணியத்தை நெருப்பின் நாக்குகளால் எரித்துச் சாம்பலாக்குகிறார்.

வானியல் உண்மைகளை வாரிப் பொழியும் நூல்.

சோதிட சாத்திரத்தை எழுதியவர்களுக்கு இன்றைய வானியல் பற்றிய அறிவோ – ஆராய்ச்சியோ இருக்கவில்லை. அதற்கான வாய்ப்பும் நவீன கருவிகளும் அவர்களிடம் இருக்கவில்லை. ‘ஞானக் கண்’ ஒன்று மட்டுமே இருந்தது’

என்று கூறும் நக்கீரன்,

‘வெப்ப மண்டல நாள்காட்டி, பஞ்சாங்கம் போன்றவை கணிப்பதற்குப் பயன்படுகிறது. அதன் அடிப்படையில் சோதிடர்கள் பயன்படுத்தும் வெப்பமண்டல இராசிச் சக்கரம் (Tropical Zodiac) முற்றிலும் பிழையானது. அது 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வானில் காணப்பட்ட நட்சத்திரங்கள் – மற்றும் கோள்களது இருக்கையையே காட்டுகிறது. இதுபற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகாகவி பாரதியார் சாமிநாதய்யரை மேற்கோள் காட்டி எழுதியிருப்பதை அப்படியே கீழே தருகிறேன்’

எனச் சொல்லவிட்டு, பாரதியார் கருத்தை எடுத்து வைக்கிறார்.

‘அயனவிசுகளின் சலனத்தை (இயக்கத்தை) அறியாமலோ அறிந்திருந்தும் கவனியாமலோ ஸம்வத்சரத்தின் பரிமாணத்தை 20 நிமிஷம் ஜாஸ்தியாக (அதிகமாக) கணித்து விட்டபடியால், அயன விசு காலங்கள் வருஷம் ஒன்றுக்கு 20½ நிமிஷம் பிந்தி வருகின்றன. 80 வருஷத்தில் ஒரு முழுநாள் பிந்திவிடும்.

மேற்குறித்த நியமங்கள் ஏற்பட்டு இப்போது அநேக நூற்றாண்டுகளாய் விட்டபடியால் புண்ய காலங்கள் 20, 22 நாள் பிந்திப்போய் நியமங்கள் பிரத்தியஷத்துக்கு விரோதமாகியிருக்கின்றன.’ (பாரதியார் கட்டுரைகள் – பக்கம் 210-211)

மேற் கூறப்பட்டுள்ள கணியம் பற்றிய ஆய்வில் ஒரு சிறு திருத்தம் செய்கிறார் நக்கீரன்.

‘சாமிநாதய்யர் குறிப்பிட்ட கால வித்தியாசம் சரி, ஆனால் 80 ஆண்டுகள் என்று எழுதியிருப்பது தவறு. அது 72 ஆண்டுகள் என்று இருக்க வேண்டும்.

‘புவியின் மையப் பகுதியில் ஞாயிறு மற்றும் நிலா இரண்டினாலும் ஏற்படும் எதிர் எதிர் ஈர்ப்புக் காரணமாக புவி அச்சின் சுழற்சியை தள்ளாடச் செய்து மேற்கு நோக்கி (ஞாயிறு பாதையில்) பின் தள்ளுகிறது (Precession of the equinoxes) என்பதைக் கண்டு பிடித்துச் சொல்லியவர். இதுவே அயனாம்சம் என அழைக்கப்படுகிறது. ஆண்டொன்றுக்கு 50.291 ஆர்க் நொடிகள் (50.291 arc seconds) வீதம் 72 ஆண்டுகளில் 1 பாகை வேறுபாடு ஏற்படுகிறது.

பிழையான வானியல் கணிப்பின் அடிப்படையில் சரியான கணியம் (சோதிடம்) எப்படிப் பிறக்கும்? என்பதுதான் நக்கீரனின் கேள்வி.

அணியத்தை அவர் பல முனைகளிலிருந்து கடுமையாகச் சாடுகிறார்.

‘இராசிகளை ஆண்-பெண் எனப் பாகுபடுத்தி வசியப் பொருத்தம் பார்ப்பது அறிவீனம். இராசிகளை ஆண் பெண் என்று எப்படிப் பிரித்தார்கள்? மேடம் தொடங்கி மீனம் ஈறாக வரும் பன்னிரண்டு இராசிகளில் ஒற்றைப்பட வரும் இராசிகள் ஆண் இராசிகள் என்றும் இரட்டைப்பட வரும் இராசிகள் பெண் இராசிகள் என்றும் சோதிடர்கள் பிரித்திருக்கின்றார்கள். இப்படி ஒற்றை இரட்டை பார்த்துப் பிரிப்பது எந்தவித விதிக்கட்டுப்பாடும் (யசடிவைசயசல) இன்றிச் செய்யப்பட்டதாகும். எல்லாம் கண் பார்வை தெரியாதவன் மனைவியை அடித்த அல்லது இருட்டறையில் கறுப்புப் பூனையைத் தேடிய கதைதான்!

கணியத்தை – கணியர்களை நக்கீரன் கசக்கிப் பிழிகிறார்.

நிறையப் படித்து நக்கீரன் செய்த ஆய்வும் – நிறுவல்களும் நிமிர்ந்தே நிற்கின்றன.

எதிர்காலத்தில் கணியத்தை (சோதிடத்தை) எவரேனும் இத்தனை ஆழமாக ஆய்வு செய்வார்கள் என்பது அய்யமே.

பெரும் முயற்சி, கடும் உழைப்பு, அரிய பணி.

சோதிடப் புரட்டு, கணியம் மக்களுக்கு இழைக்கும் தீங்கினை உரத்துச் சொல்கிறது.

கணியத்தை நக்கீரன் பொய் என்று சொல்வதால் யாரும் சினம் அடைய வேண்டியதில்லை – ஏனென்றால் பொய்யை நீங்கள் கணியம் என்று சொல்வதால் அவர் சினம் அடைந்திருக்கிறார்.

நான் நக்கீரன் பக்கமே!

அவர் படைப்பு –

அறியாமைக்குத் தீயிடும் அனல் பிழம்பு.
சீர்திருத்தப் புயலின் சீற்றம்.
உண்மையின் குரல்.
தமிழினத்தை எல்லாவகையிலும் மீட்டெடுக்கப் பொங்கிப் பாயும் அவர் தமிழுக்குத் தலை வணங்குகின்றேன்.

காசி ஆனந்தன்
சென்னை,
தமிழ்நாடு
தை 29, 2006


அணிந்துரை

ரொறன்ரோ நகரில் வெளிவரும் ‘முழக்கம்’ வார ஏட்டில் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாகச் சோதிடப் புரட்டு எனும் தலைப்பில் தொடர்ச்சியாக நக்கீரன் எழுதிய 71 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

நாம் இன்று 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்கின்றோம். நாம் வாழும் எல்லையற்ற அண்டம் அதன் தோற்றத்திலிருந்து எவ்வளவோ மாற்றம் அடைந்துவிட்டது. இன்றும் மாற்றம் அடைந்து கொண்டேயிருக்கின்றது. இன்றைய புதுமைகள் நாளைய பழமைகளாகலாம். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ காலத்தின் தேவை. அறிவியலும் தொழில்நுட்பமும் அன்றாடம் வியத்தகுவண்ணம் வளர்கின்றன. அறிவியலாளர்களின் இடையறாத முயற்சியால், புதிய புதிய கண்டுபிடிப்புகளும், பதிய புதிய கோட்பாடுகளும் மனிதனையும், இவ்வுலகத்தையும் மாற்றம் அடையச் செய்து கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் உலகம் எவ்வளவோ சுருங்கிவிட்டது. உலகம், இயற்கை பற்றிய கற்பனைகள், நம்பிக்கைகள், மாயைகள் மெல்ல மெல்ல விடைபெறுகின்றன.

பூமி சார்பான அதற்குக் கிட்டிய சூரியன், சந்திரன், மற்றும் கோள்கள் போன்ற வானுடலிகள் (heavenly bodies) வகிக்கும் நிலைகள், எவ்வாறு பூமியின் காலநிலைகள் போன்ற மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை அவதானித்த சோதிடன், ஒருபடி மேலே போய், வானில் வானுடலிகள் வகிக்கும் நிலைகள், மனிதனின் வாழ்வியலை நிர்ணயிக்கின்றன என்று நம்பி சோதிடத்தை உருவாக்கினான். அந்தவகையில் அன்று தனக்குத் தெரிந்த சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய மெய்வானுடலிகளும் அவன் கற்பனை செய்த இராகு, கேது ஆகிய நிழல் உடலிகளும் தெய்வீகத்தன்மை கொண்டு அருள் பாலிக்கும் வல்லமை வாய்ந்தன என்று கூறி மக்களை நம்பச் செய்து ஏமாற்றி வந்தான், ஏமாற்றி வருகின்றான்.

சோதிடர்களின் இவ் ஏமாற்று வித்தைகளைத்தான் சோதிடப் புரட்டு எனக் கூறி நக்கீரன் இந்நூலுக்கு சோதிடப் புரட்டு என்ற பெயரை வைத்துள்ளார். அது மிகப் பொருத்தமான பெயர் என்றே நான் கருதுகிறேன்.

சோதிடம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று பிள்ளை பிறக்கும் நேரத்தில வானிலுள்ள கிரகங்களின் நிலைகளைக் கணித்தல். மற்றையது கிரகங்களின் லைகளை அடிப்படையாகக் கொண்டு பலன்களைக் கூறுதல்.

இந்நூலில் ஆங்காங்கே கோதிடர்களின் கணிப்பின் அடிப்படையே பிழையென்று ஆசிரியர் எடுத்துக் கூறுகின்றார். சோதிடர்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வானியல் விஞ்ஞானம் அதன் தொடக்கத்திலிருந்த பொழுது, வானியலாளர்கள் இவ் அண்டத்தின் மையம் பூமி என்றும், அது அசையாப் பொருள் என்றும், அதைச் சுற்றி வானிலுள்ள கிரகங்களும் நட்சத்திரங்களும் வலம் வருகின்றன என்றும் கருதித்தான் அன்று கிரக நிலைகளைக் கணித்தார்கள். ஆனால் அக் கருதுகோள் பிழையென்பதைப் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நிக்கலஸ் கோபெர்னிக்கஸ் எனும் போலந்து நாட்டைச் சேர்ந்த வானியலாளர் (கத்தோலிக்க குருவாகவும் இருந்தவர்) முதன்முறையாக சூரியமையக் கொள்கையை முன்மொழிந்தார் என இந்நூலாசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். இதைச் சோதிடர்கள் இன்னும் விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை. விளங்க முயற்சிக்கிறார்களுமில்லை. விளங்கித் தங்கள் கணிப்பு முறையில் மாற்றங்களைச் செய்யவும் முனைகிறார்களில்லை. இவர்களுடைய கணிப்பின் படி கிரக மற்றும் இராசி நிலைகள் சோதிடக் குறிப்பேட்டிற்றானேயல்லாமல் வானில் அல்ல என்ற உண்மையை ஆசிரியர் இந்நூலில் நிறுவியுள்ளார்.

சோதிடப் பலன்களைப் பொறுத்தவரையில், அவற்றை என்ன அடிப்படையில், பிறந்த நேரத்துக் கிரக நிலைகளுடன் தொடர்பு படுத்தலாம் என்றும், ஒருவருக்கான சோதிட பலன்கள், சோதிடர்களைப் பொறுத்து ஏன் மாறுகின்றன என்றும், கூறிய பலன்கள் ஒருவருக்கு வாழ்நாளில் அப்படியே ஏற்படுகின்றனவா என்றும் நூலாசிரியர் வினாவுகின்றார்.

சோதிடர்கள் கூறும் பலன்கள் குருட்டு வாக்கில் அல்லாது மற்றப்படி பிழைத்துப் போகின்றன என்பதை பல்வேறு உண்மைச் சம்பவங்களைக் கொண்டு ஆசிரியர் நிறுவுகிறார். தொடக்க காலங்களில் இந்துக் கோயில் குருமாரே சோதிடமும் சொன்னார்கள். அந்தவகையில் குருமார்கள் சொன்னவற்றை தேவவாக்கென மக்கள் பயபக்தியோடு நம்பினார்கள். எனவே இந்துக்களின் சமயாசாரமாகவும் கலாசார அம்சங்களில் ஒன்றாகவும் சோதிடம் இடம் பெற்றுவிட்டதென்று ஆசிரியர் கூறுகின்றார். மேலும் பயம் காரணமாகவே மக்கள் சோதிடத்தையும் சோதிடர்களையும் நாடுகிறார்கள் என்றும் கூறுகின்றார்.

கோள்களுக்கும் அதாவது கிரகங்களுக்கும், பிறக்கும் பிள்ளைக்கும் உள்ள முடிச்சு என்ன என்று கேட்டு சோதிடம் பகுத்தறிவற்ற மூடத்தனம் என்று பரிகசிக்கின்றார். இந்நூலை எழுந்த மானத்தில் ஆசிரியர் எழுதவில்லை. அவர் பல வானியல் விஞ்ஞான நூல்களையும் ஏன் பல சோதிட நூல்களையும் படித்து உசாவி ஆய்வு செய்துதான் இந்நூலை எழுதியுள்ளார். அதற்கான சான்றுகள் நூல் எங்கினும் காணக் கூடியதாக இருக்கின்றன.

பகுத்தறிவைப் பரப்பிய திராவிட இயக்க முன்னோடிகளான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, சிங்காரவேலர் போன்றவர்களது ஆக்கங்களை இளம் பிராயத்தில் படித்ததன் காரணமாகத்தான் அறிவியல் மனப்போக்கு (scientific temper) இவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமெனக் கருதுகிறேன்.

இந்நூலில் சோதிடத்தை மட்டுமல்ல, மூடநம்பிக்கையின் காரணமாகவும் பயபக்தி காரணமாகவும் எம் மக்களிடையே பரவலாக இடம் பிடித்துள்ள மனிதக் கடவுளர், அவதார புருடர்கள், அற்புதங்கள், எண் சாத்திரம், வாஸ்து சாத்திரம், மாந்திரீகம், பில்லி சூனியம், பேய் பிசாசு ஆகியவற்றை மறைந்த பகுத்தறிவாளர் ஏபிரகாம் கோவூர் ஊடாக மறுத்துள்ளார்.

இந்நூல் புலம்பெயர் எமது இளந்தலைமுறையினரின் நலன்கருதி ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றுப் பதிக்கப்படுவது நன்று. இந்நூல் மூடநம்பிக்கைகள் அற்ற, அறிவியல் சார்ந்த, பகுத்தறிவு படைத்த தமிழ்ச் சுமுதாயத்தைக் கட்டியெழுப்ப நினைக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டும்.

இ.வே. செல்வரத்தினம்
முன்னாள் கல்வி அதிகாரி (இலங்கை)
ரொறன்ரோ
தை 21, 2006


வாழ்த்துரை

நிலவைத் தெய்வமாக வணங்கிய காலமுண்டு. இன்று செவ்வாய், புதன், நிலா என்று ஒவ்வொன்றையும் மனிதன் அலசி ஆராய்ந்து நிலவிலே கால் பதித்து கல்லைத் தோண்டி எடுத்து வந்தாகிவிட்டது. இருந்தாலும் நம்மில் பலர் செய்வாய் தோசம், சனி தோசம் போன்றவற்றை நம்புவர்களாகவும் குருப் பெயர்ச்சி எப்போது என்று கணக்கிடுபவர்களாவும் வாழ்கின்றார்கள். வாழ்ந்தால்கூடப் பருவாயில்லையே! தங்கள் வாழ்வையும் உற்றார் உறவினர்கள் வாழ்வையும் பாழடித்தும் செல்வம், மகிழ்ச்சியை வீணடித்தும் துன்பப்படுகின்றனர்!

வானியல் என்பது அறிவு சார்ந்தது – அண்டம் எப்படி, எப்போது தோன்றியது அது எப்படி இயங்குகிறது என்பதைத் திருத்தமாக ஆராய்கிறது. சோதிடம் என்பது முழுக்க முழுக்க ஏமாற்றுவித்தை! ஏமாளிகளிடம் பணம் பறிக்கச் சிறந்த தொழில் சோதிட சாத்திரமாகும். இதைத் தந்தை பெரியார் அவர்கள் 1938 லேயே சோதிட ஆராய்ச்சி என்று நூலை எழுதிக் குறைந்த விலைக்குக் கொடுத்து அதன் பொய்மையைப் பரப்பினார். தந்தை பெரியார் என்றாலே முகஞ் சுழிக்கும் வைதீகர்களே சோதிடத்தை நம்பாமல் அதனைக் கண்டித்திருக்கிறார்கள். பாரதியார், இராசாசி, காமராசர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்தவர்கள்.

அய்யா நக்கீரன் அவர்கள் இந்தச் சோதிடத்தை அக்குவேறு ஆணிவோறாகப் பிரித்து ஆழ்ந்து அலசியுள்ளார்.

ஒவ்வொன்றும் நன்கு ஆராயப்பட்டு விளக்கமாக எழுதப்பட்டுள்ளன. எழுபத்திரண்டு அத்தியாயங்களில் இவ்வாறு அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நூல்கள் வேறு ஏதாவது இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. தமிழில் கட்டாயம் இல்லை.

மேம்போக்காகக் கூறாமல் அனைத்தையும் காரண காரியங்களுடன் எடுத்துக் காட்டிக் பல இடங்களில் அரிய மேற்கோள்கள் காட்டி அனைவருக்கும் புரியும்படி எழுதியுள்ளார். இதிலே ஒன்றும் மாயமோ மந்திரமோ இல்லை எல்லாம் தந்திரம்தான் என்பதை திறந்த மனத்தோடு படிப்பவர்கள் நன்கு விளங்கிக் கொள்வார்கள். எல்லாம் சரிங்க, ஆனால் மனதிற்குள்ளே ஒரு பயம் இருக்கிறதே என்பவர்கள் இதைப் படித்தால் அந்தப் பயம் ஒரு மடமை என்பதை உணர்வார்கள். சோதிடம் ஒரு புரட்டு, அதற்குச் செலவு செய்யும் பொருள் வீண் என்பதை இதைவிட ஆதாரத்துடன் சொல்ல முடியாது! சோதிடத்துக்கு வீணாகும் செலவை எவ்வளவோ நல்ல செயல்களுக்குப் பயன்படுத்தலாம்.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சோதிடத்தில் கொண்டுள்ள மோகத்தையும் அதற்காகச் செலவழிக்கும் வீண் செலவையும் ஒழிக்க இந்த நூல் கட்டாயம் உதவும். அவரவர்கள் இதனை வாங்கிப் படிப்பதுடன் நின்றுவிடாமல் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அன்பளிப்பாய்க் கொடுக்க வேண்டிய நூல் இது ஆகும்.

இதில் உள்ள செய்திகள் போன்று இனி ஒருவரால் இவ்வளவு ஆழமாகத் தொகுக்க முடியாது என்று நான் நம்புகிறேன். ஆகவே இந்த நூல் ஆங்கிலத்திலும் மற்ற முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்க்க ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டி அய்யா நக்கீரன் அவர்கட்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன். சோதிடம் ஒழிந்த வாழ்வே நல்வாழ்வாகும்!

அன்பன்

மருத்துவர் சோம. இலக்குவன்
சிகாகோ
அமெரிக்கா
மாசி 26, 2006

நூலாசிரியர்

திரு. நக்கீரன் யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் பிறந்தவர். அவரது இயற் பெயர் தங்கவேலு. தந்தையார் பெயர் வேலுப்பிள்ளை.

நக்கீரன் தனது தொடக்கக் கல்வியை கொழும்புத்துறை மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை சுண்டிக்குளி பரி.யோவான் கல்லூரியிலும் படித்து முடித்தார்.

1951 ஆம் ஆண்டு அரச சேவையில் எழுத்தராகச் சேர்ந்தார். 1956 இல் தனிச் சிங்களச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து தமிழ் அரச ஊழியர்களது இருக்கை நெருக்கடிக்கு ஆளானாது. சிங்களவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசாங்க பொது எழுதுவினைஞர் சங்கம் (General Clerical Service Union) தமிழ் ஊழியர்களைக் கை கழுவி விட்ட நிலையில் அவர்களது உரிமைகளுக்குப் போராட திரு. க. சிவானந்தசுந்தரம் அவர்கள் தலைமையில் 1959 ஆம் ஆண்டு அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் (AES) தொடக்கப்பட்டது. திரு. நக்கீரன் அதன் தொடக்க உறுப்பினராகவும், செயல்குழு உறுப்பினராகவும் சங்கத்தின் வெளியீடான எழுச்சி திங்கள் ஏட்டின் ஆசிரியராகவும் பின்னர் பொதுச் செயலாளராகவும் (1964 – 66) பணியாற்றினார்.

1962 இல் தமிழ்முறைத் திருமணம் செய்து கொண்ட இவர் தீவிர தமிழ்ப்பற்றாளரும் பகுத்தறிவாளரும் ஆவார்.

1966 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகரசபையில் கணக்காளராக நியமனம் பெற்றார். இரண்டு ஆண்டு காலம் பதில் ஆணையாளராகவும் கடமை ஆற்றினார். இந்தக் கால கட்டத்திலேயே 13 இலக்கம் உருபாய் செலவில் யாழ்ப்பாண சந்தை (Model Market)  கட்டும் பணி தொடங்கப்பட்டது. 1968 இல் புலமைப் பரிசு பெற்று பர்மிங்கம் பல்கலைக் கழகத்தில் 2 ஆண்டுகள் படித்து ACCA (UK)  இறுதிக் கணக்கியல் தேர்வு எழுதிப் பட்டம் பெற்றார்.

நக்கீரனின் ஆக்கங்கள் அய்ம்பதுகளில் இருந்து சுதந்திரன் கிழமை ஏட்டில் தொடர்ந்து வெளிவந்தன. அதில் ‘எமது வரலாறு’ என்ற நீண்ட தொடர் கட்டுரை (1964 – 1965) இன்னொருவர் பெயரில் வெளிவந்தது. சுதந்திரன் பதிப்பகத்தின் இன்னொரு திங்கள் வெளியீடான சுடர் ஏட்டின் ஆசிரியராகவும் (1978 – 1980) பணியாற்றினார்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தோடும் அரசியல் தலைவர்களோடும் மிக நெருக்கமான ஈடுபாடு வைத்திருந்த இவர் 1980 இல் நைசீரியா, பவுச்சி மாநில கணக்காய்வுத் திணைக்களத்தில் முதன்மைக் கணக்காய்வாளாராகச் சேர்ந்தார். பின்னர் 1987 இல் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த இவர் A.A. Jamal Associates (Chartered Accountants)  நிறுவனத்தில் பணி புரிந்தார். அதே நேரம் CGA  (Canada) தேர்வுக்குப் படித்து 1991 ஆம் ஆண்டு கணக்கியலில் பட்டம் பெற்றார்.

உலகத் தமிழர் இயக்கத்தின் துணைத் தலைவராக 10 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். கனடிய தமிழர் சங்கங்களின் பேரவையின் (FACT) தலைவராகவும் பல ஆண்டு பணி ஆற்றினார்.

உலகத்தமிழர் ஏட்டில் தமிழ்த் தேசியத்துக்கு உரம் சேர்க்கும் வகையில் கிழமை தோறும் அவர் எழுதி வந்த அரசியல் பலகை, சங்கப் பலகை இரண்டும் அவரை ஒரு சிறந்த அரசியல் ஆய்வாளராகவும், இலக்கியவாதியாகவும் இனம் காட்டியது.

கடந்த 10 ஆண்டு காலாமாக முழுநேர எழுத்தாளராகப் பணியாற்றும் இவர் இங்கு வெளியாகும் முழக்கம், நம்நாடு, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி போன்ற இதழ்களில் பல நூறு அரசியல், வரலாறு, இலக்கியம், பகுத்தறிவு மற்றும் திறனாய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை நக்கீரன், கீரன், திருமகள், இந்திரஜித் போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார். இதில் ஒல்காப் புகழ் தொல்காப்பியம், கிய+பா பயணக்கட்டுரை, சோதிடப் புரட்டு, சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள், சுனாமியும் சுவாமியும், மாமியார் வீட்டில் மூன்று சாமியார்கள், தமிழிசை (முழக்கம்) சங்கம் வழர்த்த தமிழ், கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிரம இராசசிங்கன் (ஈழநாடு) திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு (ஈழமுரசு) ஆகிய தொடர் கட்டுரைகள் படிப்போர் பலரது பாராட்டைப் பெற்றன. நம்நாடு ஏட்டில் வெளிவந்த நான்தாண்டா ஆத்தாளு என்ற குறு நாவல் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட படைப்பாகும்.

ஆங்கில மொழியில் தனது இயற் பெயரில் எழுதிய சூடான அரசியல் கட்டுரைகள் Tamil Canadian, Tamil Nation, Tamil Sangam, TIS  போன்ற இணைய தளங்களில் வெளிவந்துள்ளன.

இதற்குமுன்னர் இவர் எழுதிய தமிழர் திருமணம் என்ற நூல் வெளிவந்திருந்தாலும் சோதிடப் புரட்டு மட்டுமே ஒரு முழுமையான ஆய்வு நூலாக வெளிவருகிறது.
நக்கீரனது ஆக்கங்களை
http:/www.nakkeran.com  இணையதளத்தில் படிக்கலாம்.



நூலின் பெயர்           –        சோதிடப் புரட்டு

வெளியீடு                   –       பெரியார் திராவிடர் கழகம்
27, இரண்டாவது தளம்
கனகராய மலையப்பன்   தெரு
இராசா அண்ணாமலைபுரம்,
சென்னை – 600 028
நூலாசிரியர்                              –               நக்கீரன்
மொழி                                         –               தமிழ்
பதிப்பாண்டு                            –               யூன் 2006
பதிப்பு முதற் பதிப்பு              –               தாள்  Natural sheet 16 kg
நூலளவு                                  –                டெம்மி 1/8
எழுத்து                                     –                11 புள்ளி
பக்கம்                                      –                600
அட்டைக்கட்டு                     –               கெட்டி அட்டைக்கட்டு
அட்டை வடிவமைப்பு
மற்றும் கணனியாக்கம்     –    அசுரன் ஊடகம், திண்டுக்கல்
அச்சகம்                                 –     கிரியேட்டிவ் கிராபிக்ஸ்
வெளியீடு                             –     பெரியார் திராவிடர் கழகம> 27, இரண்டாவது தளம்,  கனகராய மலையப்பன் தெரு
இராசா அண்ணாமலைபுரம், சென்னை -600 028
நூல் கிடைக்கும் இடம்     –    பெரியார் படிப்பகம், மேட்டுர் அணை -636 – 401
–    பெரியார் பதிப்பகம், காந்திபுரம், கோவை – 641 – 044

விலை                –  உரூபா 250.00

என்னுரை

சோதிடப் புரட்டு என்ற தலைப்பில் எழுதிய முதல் கட்டுரையை முழக்கம் கிழமை ஏட்டில் வெளிவந்த பொழுது அதனை அடுத்த நான்கு அல்லது அய்ந்து கிழமைகளில் முடித்து விடலாம் என்றே நான் முதலில் நினைத்தேன். அது 70 கிழமைகள் வளரும் என்பதை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

சிறு பருவதில் ஏனையோர்களைப் போலவே நான் மிகவும் சமய நம்பிக்கை உடையவனாகவே இருந்தேன். கோயிலுக்குத் தவறாது போவேன். கோயில் மணி அடிப்பது, தண்டேசுவரர் தூக்குவது, கோயில் பூந்தோட்டத்துக்குத் தண்ணீர் இறைப்பது போன்ற தொண்டுகள் செய்வதில் முன்னுக்கு நிற்பேன். நல்லூர் கொடி ஏறினால் பல நாள்கள் நடந்தே சென்று முருகனைக் கும்பிட்டுத் திரும்புவேன். கச்சான் கடலை வாங்க வீட்டில் தரும் 25 சதத்தில் வடிவான கடவுள் படங்களை வாங்கி வருவேன்.

ஊர்க் கோயில் அருச்சராக இருந்த (1948 – 50 ) வைரவநாதக் குருக்களிடம் சமற்கிருதமும் படித்தேன். ஆனால் அது நீடிக்கவில்லை.

க.பொ.த. (சாதாரண) தேர்வு (1950) எழுதுவதற்குப் போகு முன்னர் காலை கோயிலுக்குச் சென்று, கிணற்றில் அள்ளிக் குளித்து முட்டுக்காய்த் தேங்காய் அடித்துப் பிள்ளையாரைக் கும்பிட்டேன். தேங்காய் சரி பாதியாக உடைந்தால் அது தேர்வில் வெற்றிக்கு அறிகுறி! கோணல் மாணலாக உடைந்தால் தோல்விக்குக் கட்டியம்! அப்படியொரு நம்பிக்கை இருந்தது.

நான் கல்லில் உடைத்த தேங்காய் கோணல் மாணலாகவே உடைந்தது. அது கெட்ட ‘சகுனம்” என்று நினைத்துக் கொண்டேன். என்னுடன் அதே தேர்வை அதே நாளில் எழுத இருந்த உறவினர் ஒருவர் அடித்த தேங்காய் நல்ல வண்ணமாகச் சரிபாதியாக உடைந்தது. அதன் பொருள் அவருக்குத் தேர்வில் வெற்றி என்பதாகும்!

தேர்வு முடிவுகள் வந்த பொழுது பரி. யோவான் கல்லூரி அறிவித்தல் பலகையில் அடியேன் பெயர் உட்பட 3 மாணவரது பெயரே வெற்றி என்றிருந்தது. எஞ்சிய 117 மாணவரும் தோல்வி! அதில் தேங்காய் சரி பாதியாக உடைத்தவரும் ஒருவர் ஆவார்! கல்லூரி முதல்வர் J.T  அருளானந்தம் அவர்களுக்கு அந்தப் பெறுபேறுப் பட்டியலை நம்ப முடியவில்லை. எங்கோ தவறு நடந்துவிட்டதாக நினைத்தார்.

கடவுளுக்கு நான் கையூட்டுக் கொடுத்த கடைசித் தேங்காய் அதுவே ஆகும். அதன் பின் இன்றுவரை ஒரு பகுத்தறிவாளனாகவே இருந்து வருகிறேன்.

திருமணத்தின் பொழுது ‘சாதகம்” பார்க்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தேன். தமிழ்முறைத் திருமணம் செய்து கொண்டேன். இரண்டு மாலை, நாலு பேச்சாளர், பத்துத் திருக்குறளுடன் திருமண விழா இனிது நிறைவேறியது. மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் திருமண விழாவுக்குத் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

சிறு வயதில் எனது மூளையில் பேய் பிசாசு, பில்லி சூனியம், கொள்ளிவால் பிசாசு, கூடுவிட்டுக் கூடு பாயும் விக்கிரமாதித்தன் கதை, வேதாளம் முருக்க மரத்தில் ஏறிய கதை முதலியவையே திணிக்கப்பட்டன. கால் நிலத்தில் படாது அலையும் பேய்கள், புளியமரத்தில் வாசம் செய்யும் முனி, வேப்ப மரத்து வைரவர், சுடலையில் அரிசிப் பொரி பொறுக்கும் குறளி, இரத்தினம் கக்கும் ஆறுதலை நாகபாம்பு போன்ற கதைகள் எனக்குச் சொல்லப்பட்டன. ஊர்க் கோயில் புறத்தில் ஓங்கி வளர்ந்து நின்ற பாலை மரத்தடியில் பெரிய புதையல் இருப்தாகவும் சொல்லப்பட்டது!

பள்ளியில் படிக்கும் போதே ஆறு பாகம் கொண்ட பாரதக் கதையை இரவல் வாங்கிப் படித்து முடித்தேன். இராமாயணம் (உரைநடை) வீட்டில் இருந்தது. அதில் இராம – இராவண போரை வருணிக்கும் காண்டத்தை மீண்டும் மீண்டும் படிப்பேன். அந்த அகவையில் இராமன் எனது மனக் கட்டிலில் “கடவுள் அவதார” மாகவும் இராவணன் ‘அரக்க’ னாகவும் அமர்ந்து கொண்டனர்.

பிற்காலத்தில் மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து வாலியைக் கொன்ற இராமன் எனக்கு ஒரு கோழையாகத் தென்பட்டான். அவ்வாறே சூர்ப்பனகையின் முலையையும் மூக்கையும் இராமன் தம்பி இலக்குவன் அரிந்து அவளை மூளி ஆக்கியது எனக்கு அநாகரிகமாகப் பட்டது.

கல்லூரியில் படிக்கும் பொழுதே பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர் இவர்களது திராவிட – பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப் பட்டேன். அன்று வெளிவந்த திராவிடநாடு, மன்றம், முரசொலி, திராவிடன், காஞ்சி, Homeland, தென்றல் முதலிய ஏடுகளையும் பெரியார், அண்ணா, கலைஞர், நாவலர், கண்ணதாசன் முதலியோர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும் தவறாது படித்தேன். இவற்றில் அண்ணா எழுதிய கம்பரசம், தீ பரவட்டும், ஏ தாழ்ந்த தமிழகமே! சொர்க்கவாசல், தம்பிக்கு போன்ற நூல்கள் எனது மனதில் பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்து பலத்த தாக்கத்தை ஏற்படுத்தின.

அண்ணா கதை வசனம் எழுதி வெளிவந்த வேலைக்காரி, (1948) கலைஞரின் பராசக்தி (1952) நடிகவேள் எம்.ஆர். இராதா நடித்த இரத்தக்கண்ணீர் (1954) ஆகிய திரைப் படங்கள் ஒவ்வொன்றையும் 12 முறைக்கு மேலாகப் பார்த்திருப்பேன்.

திருக்குறள், சங்க இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் என் மனதைக் கவர்ந்தன. ஒழுக்கத்தை வலியுறுத்தும் திருக்குறள் என் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த பெரிதும் உதவியது. சங்க இலக்கியங்கள் போற்றிய காதலும் வீரமும் கல்வியும் பொருளும் பெருமிதமும் என்னைத் தமிழர் நாகரிகம் பற்றிப் பெருமைப்பட வைத்தன.

காலப் போக்கில் கடவுள், கோயில், குளம், சோதிடம், கைரேகை, அட்டமி நவமி, இராகு காலம், பேய் பூதம், பில்லி சூனியம் போன்றவற்றில் எனக்கு இருந்த நம்பிக்கை அற்றுப் போயிற்று! புராணங்கள், இதிகாசங்கள் இன்றைய கல்கி, சாண்டில்யன் எழுதிய வரலாற்றுப் புதினங்கள் போன்றவை என்று கண்டு கொண்டேன்.

சோதிடப் புரட்டை எழுதத் தொடங்கிய பின்னரே ஒரு வில்லங்கமான பாடத்தை கையில் எடுத்துக் கொண்டதை உணர்ந்தேன். எனவே முதல் வேலையாக சோதிடம், வானியல் பற்றிய பல தமிழ் ஆங்கில நூல்களை விலைக்கு வாங்கிப் படித்தேன். இணைய தளத்தில் சோதிடம், வானியல் தொடர்பான ஏராளமான கட்டுரைகளை அச்செடுத்து ஒரு மாணவன் தேர்வுக்குப் படிப்பது போல் படித்தேன். சொல்லப் போனால் நூல்களிலும் பார்க்க இணைய தளமே எனக்குப் பேரளவு கைகொடுத்தது. வானியல் பற்றிய இணைய தளங்களின் எண்ணிக்கையைப் (565,000) பார்த்து மலைத்துப் போனேன்.

பள்ளியில் படிக்கும் மாணவருக்காகப் புகைப்படங்களோடும் வரைபடங்களோடும் எழுதப்பட்ட வானியல் பாடங்களைப் படித்து விளங்கிக் கொள்வது எளிதாக இருந்தன.

சோதிடத்தில் பயன்படுத்தப்படும் இலக்கினம், தெசை, இராசி, வீடு, பாவம், கோசாரம், உச்ச நீச்சம், பார்வைகள், சந்திர பலன், சூரிய – சந்திர ஓரைகள், பஞ்சவித  நிலைகள் முதலியவற்றைத் திருத்தமாக விளங்கிக் கொள்ளப் பல மாதங்கள் எடுத்தன.

சோதிட சாத்திரம் தொடர்பான அய்யங்களை மின்னஞ்சல் மூலம் பல சோதிடர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

இதனால், தொடக்கத்தில் குழப்பமாக இருந்த சோதிடம் – வானியல் இரண்டையும் பின்னர் நன்கு விளங்கிக் கொள்ள முடிந்தது.

இணைய தளத்தில் பிறந்த ஆண்டு, நாள், நேரம், இடம் (குறுக்குக் கோடு, நேர்க்கோடு ) இவற்றைக் கொடுத்தால் அய்ந்து வினாடியில் சோதிட மென்பொருள் சாதகம் (நவாம்சம் உட்பட) கணித்துக் கொடுத்துவிடும்.

பிறந்த ஆண்டை மாற்றினால் சில கோள்களின் நிலை மாறுவதைப் பார்த்தேன். பிறந்த நேரத்தை கூட்டிக் குறைத்தால் வரிசையாகத் தோன்றி மறையும் பிறப்பு இலக்கினம், பிறப்பு இராசி, பிறப்பு நட்சத்திரம் மாறுவதைக் கவனித்தேன். ஏன் அவ்வாறு மாறுகின்றன என்பதை இந்த நூலைப் படிக்கும் பொழுது தெரிந்து கொள்வீர்கள்.

திறந்த மனத்தோடுதான் சோதிடத்தைப் படித்தேன். படித்து முடித்த பின்னர் அதில் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் முற்றாகப் போய்விட்டது.

சோதிடம் சரி, சோதிடர்கள்தான் பிழையாகக் கணித்துச் சொல்கிறார்கள்? இது பலர் என்னிடம் கேட்கும் கேள்வி ஆகும்.

எனது விடை ‘சோதிடம் கட்டி எழுப்பப்பட்டுள்ள அடித்தளமே தவறானது என்பதாகும். பல கோடி கல் தொலைவில் உள்ள கோள்கள், பத்து, நூறு, ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள இராசிகள், நட்சத்திரங்கள் புவியில் பிறக்கும் குழந்தையைப் பாதிக்க வழியே இல்லை! அப்படியிருக்க அதன் அடிப்படையில் எந்தப் பெரிய கெட்டிக்காரச் சோதிடனும் எவ்வளவு நுட்பமாகக் கணித்துப் பலன் சொன்னாலும் அது பிழையாகவே இருக்கும்! சோதிடம், இல்லாத ஊருக்குப் போகிற வழி சொன்னவன் கதையாகும்.

நாம் வாழும் புவி ஞாயிறு குடும்பத்தின் நடுவில் இருக்கிறது, அசையாமல் இருக்கும் புவியை ஞாயிறு உட்பட ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்ற அடிப்படையிலேயே சோதிட சாத்திரம் எழுதப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே சாதகம் கணிக்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவன்று. புவியும் ஏனைய கோள்களுமே ஞாயிறைச் சுற்றி வருகின்றன. மேலும் நாம் வாழும் புவிக் கோள் சோதிட சாத்திரத்தில் முற்றாக விடுபட்டுப் போய்விட்டது.

சோதிடப் புரட்டு முழகத்திலும் தமிழ்நாதம் இணையதளத்திலும் வெளிவந்து கொண்டிருந்த வேளை அதற்குப் பெரிய ஆதரவு படிப்போரிடம் இருந்து கிடைத்தது. அது, இத் தொடரை எழுதி முடிக்கத் தூண்டுகோலாக அமைந்தது.

கட்டுரைகள் ஒவ்வொன்றையும் எழுதப் பல நாள்களைச் செலவழித்துள்ளேன்.

சோதிடப் புரட்டை நூல் வடிவில் கொண்டுவர முடிவு செய்த பொழுது நான் முன்பு எழுதியவற்றைப் பட்டறிவின் அடிப்படையில் பல முறை மீள் பார்வை செய்து செப்பனிட்டேன். அவ்வாறு செய்யவும் பல திங்கள்கள் எடுத்தன.

இந்த நூலில் சில வடமொழிச் சொற்களை விலக்க முடியாத காரணத்தால் சேர்த்துள்ளேன். சோதிடம் தமிழரது சாத்திரம் அல்ல. இது வடமொழிக்கும் வேத கால ஆரியருக்கும் உரியது. எனவே அதனை முற்றிலும் தனித் தமிழில் எழுத முடியவில்லை. முடிந்த மட்டும் எழுத முயற்சித்துள்ளேன்.

சோதிடம் பற்றி எழுதும் பொழுது குழப்பம் ஏற்படாது இருக்க விண்மீனை நட்சத்திரம் என்றும், ஓரையை இராசி என்றும், கோள்களைக் கிரகங்கள் என்றும் ஞாயிறைச் சூரியன் என்றும், நிலாவைச் சந்திரன் என்றும், முழுநிலா அல்லது உவவுமதியைப் பவுர்ணமி என்றும், குற்றத்தைத் தோசம் என்றும் எழுதியுள்ளேன்.

ஆனால், வானியல் பற்றி எழுதும் பொழுது முடிந்தளவு தூய தமிழில் எழுதியுள்ளேன். வருடம், தினம் போன்ற சொற்களை நீக்கி ஆண்டு, நாள் எனக் குறித்துள்ளேன். மேலும் ஜோதிடம், ராசி, நஷ்ஷத்திரம், மேஷம், ரிஷபம் போன்ற வடமொழிச் சொற்களைத் தமிழ் ஒலிப்படுத்தி உள்ளேன்.

கிரேக்க ஆங்கிலப் பெயர்ச் சொற்களின் உச்சரிப்புச் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டொரு கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளேன். மேலும் பிறர் கூற்றை மேற்கோள் காட்டும் பொழுது அவர்களது கொடுந்தமிழை மாற்றாது அப்படியே கையாண்டுள்ளேன்.

எனது நண்பர் திரு. சண்முகம் குகதாசன் கையெழுத்துப் படியைப் ஒப்பு நோக்கிப் பார்த்துப் பல வடசொற்களை நீக்கித் தனித் தமிழில் எழுத உதவினார். இலக்கணப் பிழைகள் களைவதற்கும் கை கொடுத்தார். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூலுக்கு ஒரு முன்னுரை தேவைப்பட்ட போது என் கண் முன் நின்றவர் தமிழீழ அரசவைப் பாவலர் காசி ஆனந்தன் ஆவார். அவர் அன்னை தமிழை உயிருக்கு உயிராகக் காதலிக்கும் பாவலர்! அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

இந்த நூலை எழுதியதன் தலையாய நோக்கம் தமிழ் மக்களை முடைநாற்றம் வீசும் மூட நம்பிக்கைச் சேற்றில் இருந்து மீட்டு அவர்களைப் பகுத்தறிவு மணம் கமழும் மாளிகையில் குடியிருத்துவதே ஆகும்!

குறிப்பாகத் திருமண காலத்தில் சாதகம் பார்க்கும் பழக்கத்தைத் தமிழ்மக்கள் முற்றாகக் கைவிட வேண்டும் என்பது எனது பெரு விருப்பாகும்.

அடித்தளம் பிழையாக உள்ள ஒரு போலிச் சாத்திரத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் சாதகத்தை வைத்துத் திருமணப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயலாகும். உலகில் 13 இலக்க வகை விலங்குகள் உண்டென்கிறார்கள். ஆனால் மாந்தனுக்கே ஆறாவது அறிவான பகுத்தறிவு இருக்கிறது. இருந்தும் பலர் அதனைப் பயன்படுத்த மறுக்கின்றனர்.

கல்வி, அழகு, செல்வம், குணம், நடை, குடி ஆகிய பொருத்தங்கள் ஆண் – பெண் இருபாலாருக்கும் இடையில் அமைந்திருந்தும் கிரகப் பொருத்தம் நட்சத்திரப் பொருத்தம் இல்லை என்று கூறி அந்தத் திருமண இணைப்பு புறந்தள்ளப்படுகிறது. இது பெரிய கொடுமையாகும்.
அதே வேளை பிழையான சோதிடத்தின் அடிப்படையில் மனப் பொருத்தம் இல்லாத ஆண் – பெண் இணைக்கப்படுகின்றனர்.

பன்னிரண்டு பொருத்தத்தில் 11 பொருத்தம் சரி வந்து செய்த திருமணம் முறிந்து போய்விட்டதாக ஒரு சோதிடர் எழுதியுள்ளார். இது கூடக் குற்றமில்லை. சோதிடர்களின் பிள்ளைகளே திருமணம் முடித்த சில ஆண்டுகளில் கைம்பெண்ணாகி உள்ளனர். இது சாதகம் பார்ப்பதில் எந்தப் பொருளும் இல்லை என்பதற்கு நல்ல சான்றாகும்.

எனக்குத் தெரியச் சாதகப் பொருத்தம் இல்லை என்பதை மீறித் திருமணம் செய்து கொண்டோர் குழந்தை குட்டிகளோடு மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதே சமயம் பொருத்தம் பார்த்துச் செய்து வைத்த திருமணங்கள் சில மணப்பிரிவில் அல்லது மணமுறிவில் முடிந்துள்ளன!

திருமணம் வெற்றி பெறுவது திருமணம் செய்து கொள்ளும் மணமகன் – மணமகள் இருவரது கைகளிலேயே பேரளவு தங்கி உள்ளது. அவர்களது தாய் தந்தை உற்றார் உறவினர் பங்கு சிற்றளவே இருக்கும்.

மேலைநாடுகளில் சோதிடம் பார்ப்போர் இருக்கின்றனர். ஆனால், அது பொழுது போக்குக்காகப் பார்க்கப்படுபவை ஆகும். அவர்கள் தங்கள் Sun sign (பிறப்பின் பொழுது சூரியன் நின்ற இராசி) அறிந்து கொள்வதோடு சோதிடம் பற்றிய அவர்களது ஆர்வம் நின்று விடுகிறது. திருமணம் செய்யமுன்னர் சோதிடரிடம் சாதகங்களைக் கொடுத்துப் பொருத்தம் பார்க்கும் வழக்கம் மேலை நாடுகளில் இல்லை.

ஏன் தமிழ்க் கிறித்தவரிடமும் சாதகம் கணிக்கும் வழக்கமோ சாதகப் பொருத்தம் பார்க்கும் பழக்கமோ இல்லை. சாதகம் பார்க்கும் வழக்கம் இந்துத் தமிழர்களிடம் மட்டுமே காணப்படுகிறது. என்ன காரணம்?

சோதிடம் இந்து சமயத்தின் ஒரு கூறாக உருவான சாத்திரமாகவும் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நால்வேதத்தைப் பொருள் அடிப்படையில் ஆறு அங்கங்களாக (வேதாங்கம்) வகுத்து அதில் கர்மகாண்டத்தில் சொல்லப்படும் கருமங்களின் அநுட்டானத்துக்குரிய காலத்தைத் நிருணயம் செய்யும் முறைக்கு ஜோதிஷம் (சோதிடமும் கணிதமும்) எனப் பெயரிட்டுள்ளனர். எஞ்சிய அங்கங்கள் சிஷை (உச்சரிப்பு) வியாகரணம் (இலக்கணம்) சந்தஸ் (சீர்) நிருத்தம் (பொருள்) கல்பம் (கிரிகை) என்பனவாகும்.

சோதிடத்தைச் சூரியன் முதலான 18 இருடிகள் இயற்றியதாக அய்தீகம். அதனை எல்லோரும் எளிதில் புரியுமாறு சுருக்கி எழுதியவர் வராகமிருகர் ஆவார்.

இவ்வாறு சோதிடம் வேதத்தோடு முடிச்சுப் போடப்பட்டு, இந்து மதத்தின் பிரிக்க முடியாத ஒரு கூறாக இருப்பதாலேயே இந்தச் சோதிட நம்பிக்கை இந்துக்களிடம் மட்டும் காணப்படுகிறது.

எனவே, சோதிடம் போன்ற மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்றால் இந்துக்களது கோயில், குளம், தேர், தீர்த்தம், சொர்க்கம், நரகம், சிறுதெய்வ வழிபாடுகள் போன்றவற்றில் உள்ள மிகு நம்பிக்கையை ஒழிக்க வேண்டும். எது போலென்றால் நுளம்பை முற்றாக ஒழிக்க அது உற்பத்தியாகும் இடங்களை ஒழிப்பது போன்று!

எனவே, சமயம் பற்றிய எனது கருத்துக்களைப் படித்து விட்டுச் சீறாமல் சினக்காமல் நான் சொல்வதில் மெய்ப்பொருள் இருக்கிறதா இல்லையா என்பதை ஆற அமரச் சிந்துத்துப் பார்க்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

சிங்கள – பவுத்தர்கள் சோதிடம், நாடி பார்ப்பதில்லையா? எனக் கேட்கலாம். பார்க்கிறார்கள். சிங்களவர் பவுத்தர்களாக மதம் மாறு முன்னர் வைதீக மதத்தவராக இருந்தமையே அதற்கு ஏதுவாகும். புத்தர் சோதிடத்தை மிருக சாத்திரம் (Animal Science) என எள்ளி நகையாடியுள்ளார் என்பது மனங்கொள்ளத்தக்கது.

அரிது அரிது மானிடப் பிறவி அரிது என்று தமிழ்மகள் அவ்வையார் சொன்னது முற்றிலும் உண்மை ஆகும். இந்தப் பிறவியைத் துன்பம் என்று எண்ணாது, உடம்பை இழிவென்று தள்ளாது, வாழ்க்கையை முழுமையாகவும், பயனுள்ளதாகவும் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். துன்பத்தைக் குறைத்து இன்பத்தைப் பெருக்க நல்வழியில் இடைவிடாது முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும் எனப் புலவோர் சொன்னது பொய்மொழி இல்லை!

தமிழருக்கு இறையாண்மை படைத்த அரசு ஒன்று இல்லாததால் மாணவர்களது கற்கை நெறி குமுகாய அறிவியல் அடிப்படையில் வகுக்கப்படவில்லை. இப்பொழுதுள்ள கற்கை நெறி தொழிலை இலக்காகக் கொண்டு வகுக்கப்பட்டுள்ளது. வையத்தில் வாழ்வாங்கு வாழும் வழி என்ன என்பதைப் பள்ளிக்கூடத்தில் யாரும் பாடமாகச் சொல்லிக் கொடுப்பதில்லை. இதனால் நீர்வழிப் படூஉம் புணை போலப் பலரது வாழ்க்கை அமைந்து விடுகிறது.

எப்படி உடல் நோய் தீர மருந்து உண்ண வேண்டுமோ அதே போல் மூடநம்பிக்கை போன்ற குமுகாய நோய்கள் தீரப் பகுத்தறிவு என்ற மருந்தை உட் கொள்ள வேண்டும். ஏனைய இனங்களோடு ஒப்பிடும் போது அறிவியல் தளத்தில் தமிழர் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

இது காரணமாகவே அறிவியலின் இன்றியமையாத் தேவையை இந்த நூல் நெடுகிலும் வற்புறுத்தி எழுதியுள்ளேன்.

ஒவ்வொரு நாளும் வீட்டைக் கூட்டிக் குப்பைகளை அகற்றித் துப்பரவு செய்கிறோம். தண்ணீரில் குளித்து உடல் அழுக்கைப் போக்கிப் புறத் தூய்மைப் பேணிக் கொள்கிறோம். மனதில் உள்ள சாத்திரக் குப்பைகளையும் சமய அழுக்கையும் அகற்றி அகத் தூய்மை பேண நாம் ஏன் பின் நிற்க வேண்டும்?

திருவள்ளுவர் ஆக்கிய திருக்குறள் ஒரு முழுமையான வாழ்வு நூல் ஆகும். தமிழர்கள் அதனைத் தங்கள் வாழ்க்கைக் கையேடாகவும் வாழ்க்கை வழிகாட்டியாகவும் கொள்தல் வேண்டும். பகுத்தறிவோடு வாழத் திருக்குறள் உறுதியாக உதவும்.

திருக்குறள் வழி வாழ முடியும் வாழலாம் என்பதற்கு நானும் எனது மனைவி பிள்ளைகளும் பேரளவு சான்றாக இருக்கிறோம்! நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பொன்மொழிக்கு அமையவும் வாழ்கிறோம்.

வாழ்க்கையில் ஏற்படும் பல சிக்கல்களை அவிழ்ப்பதற்கு வேண்டிய வழிமுறைகளையும் நுணுக்கங்களையும் வள்ளுவர் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார்.

நல்ல எண்ணம், நல்ல சிந்தனை, நல்லறிவு, நல்வினை, நற்காட்சி, நயம்பட உரைத்தல், பகுத்துண்டு வாழ்தல், இசைபட இருத்தல் உங்கள் வாழ்வின் குறிக்கோளாக இருக்கட்டும்! அன்பு, அருள், அறன் உங்கள் வழிபாடாக இருக்கட்டும்!

இந்த நூலைப் படித்து விட்டு அதற்கு அணிந்துரை எழுதிய நண்பர் திரு. இலங்கையனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போலவே அவரும் ஒரு அப்பழுக்கற்ற பகுத்தறிவாளர் ஆவார்.

இந்த இடத்தில் சோதிடப் புரட்டுத் தொடரை முழக்கத்தில் ஒன்றரை ஆண்டு காலமாக எனது அன்புக்குரிய முழக்கம் ஆசிரியர் திருமுருகவேந்தன் (திரு) மற்றும் முழக்கம் பொறுப்பாசிரியர் வானதி (அன்பரசி) இருவருக்கும் எனது உளம் கனிந்த நன்றி. எனது எண்ணத்துக்கும் எழுத்துக்கும் முழக்கம் வடிகாலாக இருந்து வருகிறது.

சோதிடப் புரட்டை வெளியிட்டதால் முழக்கம் இரண்டொரு விளம்பரங்களை இழந்ததும் உண்டு.

வயலில் நல்ல விளைச்சலை விரும்பும் கமக்காரன் மண்ணை ஆழ உழுது, உயர வரம்பு கட்டி, எருவிட்டு, நல்ல விதை நெல் தேடி விதைத்து, களை பிடுங்கி, உரிய காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். குமுகாயமும் அப்படியே ஆகும். நல்ல பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்து, மூடநம்பிக்கை என்ற களை பிடுங்கி, அறிவைப் பெருக்கினால் மட்டுமே தனி மாந்த வாழ்வு சிறக்கும். தனி மாந்த வாழ்வு சிறந்தால் குமுகாயம் முன்னேறும். இந்தப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுவரும் பகுத்தறிவு இணையர் திரு – அன்பரசி இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

முழக்கம் போலவே தமிழ்நாதம் இணையதளத்தில் சோதிடப் புரட்டைத் தொடர்ந்து நல்ல முறையில் வெளியிட்ட தம்பி கரனுக்கும் எனது நன்றி உரித்தாகுக.

ஒருவரது வாழ்க்கையின் வெற்றிக்குப் பின்னால் அவரது மனைவி இருப்பதாகச் சொல்வர். எனது வாழ்க்கையைப் பொறுத்தளவில் இந்தப் பொன்மொழி நூறு விழுக்காடு உண்மை ஆகும்.

எனது எழுத்துப் பணி யாவற்றுக்கும் கை கொடுக்கும் எனது துணைவியாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைக் கருத்தோடு கவனித்துக் கொள்ளும் அம்மம்மா (மாமி) எனக்கு வேண்டிய மருந்து முதல் விருந்து வரை குறிப்பறிந்து கவனித்துக் கொள்ளும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் எல்லோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முடிவாகச் சாதி சமயமற்ற சங்க காலமே (முற் பகுதி) தமிழரது பொற்காலம் என்பது தமிழறிஞர் கருத்தாகும். அந்தப் பொற்காலம் நாளை மலர இருக்கும் தமிழீழத்தில் மீண்டும் பிறக்க வேண்டும் என்பதே என் ஆசை. என் ஆசை விரைவில் நனவாகும் என நம்புகிறேன்.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

நக்கீரன்


உள்ளுறை

புரட்டு             தலைப்பு                                             பக்கம்
1         அறிவியலும் சோதிடமும்
2         மண்ணைக் கவ்விய சோதிடர்கள்!
3         சோதிடம் போலி அறிவியல்
4         இராகு கேது கோள்கள் அழகான கற்பனை!
5         தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் சோதிடர்கள்!
6         புதன் கோள் அலியாம்! எப்படிக் கண்டு பிடித்தார்கள்?
7         இரண்டு சோதிட முறைகளும் சரியாக இருக்க முடியாது!
8         கோள்களில் ‘பாவ”ப் பட்ட சனி!
9        சூரியன் சனி ஒருவருக்கொருவர் பரம எதிரிகளாம்!
10     சோதிட நம்பிக்கைக்குக் காரணம் பயம்!
11     படிப்போ பட்டமோ இல்லாத சோதிடர்!
12     சோதிடம் தனை இகழ்!
13     சோதிடர்களே! சில எண்கள் செய்த பாவம்தான் என்ன?
14     புவியின் முதல் விஞ்ஞானி யார்?
15     ஆரியர் தேவர்! திராவிடர் இராட்சதர்!
16     சோதிடருக்குப் பதில் மருத்துவரை நாடுங்கள்!
17     குழந்தை ஆணா? பெண்ணா? என்பது கோள்களில் இல்லை!
18     இது உனக்குப் பிறந்த குழந்தை அல்ல!
19     சோதிடம் இருட்டு அறையில் கறுப்புப் பூனையைத் தேடும் குருடன் கதை!
20     திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர்
21     அய்ந்தில் நாலு பங்கு சாதகங்கள் பிழையாகக் கணிக்கப்பட்டுள்ளன!
22     காதலுக்குப் பாடை கட்டிக் கொல்ல நினைக்கும் தந்தை!
23     சோதிடருக்கே எமனாகப் போய்விட்ட சோதிடம்!
24     “அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை” என்பது ஈசனுடைய விதி!
25     பண்டைய மனிதனுக்குக் கண்டதெல்லாம் கடவுள்கள்!
26     மழை பெய்விப்பதற்குப் பிராணிகளுக்குத் திருமணம்!
27     விண்ணைப் பற்றிய அச்சமே சோதிடம்!
28     இராசிகள் வெறும் கற்பனை உருவங்களே!
29     சோதிடப் புரட்டுப் போல் தெய்வீகமும் புரட்டுத்தான்!
30     அறிவியல் வளர்ச்சிக்குக் கிரேக்கத்தின் பங்களிப்பு
31     புகழ் பெற்ற கிரேக்க வானியலாளர்கள்
32     சந்திர சூரிய கிரகணங்கள்
33     சோதிடர்களின் ஆசான் தொலமி
34     கோபெர்னிக்கன் புரட்சி (Copernicun Revolution)
35     வியைமட்டுமல்ல மனித மனதையும் அசையவைத்த மனிதர்
36     ஜோசியத்தால் கெட்டேன்!
37     இறந்து போனவரை உயிரோடு இருக்கின்றார் என்ற சோதிடர்!
38     ‘இயற்கையின் மூலவிதியை’ கண்டுபிடித்த கெப்லர்
39     விண்ணை ‘ஞானக்’ கண்ணால் பார்த்த கலிலியோ!
40     திருச்சபையால் உயிருடன் எரிக்கப்பட்ட புறூனோ!
41     ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த நியூட்டன்
42     இந்திய வானியல் வரலாறு
43     புகழ் பெற்ற வானியலாளர் ஆரியபட்டர்
44     இந்திய காலக் கணிப்புகள்
45     சங்க கால வானியல்
46     எரிமீன் வீழ்ந்தது கண்டு கலங்கிய புலவர்
47     ஓரைகளும் விண்மீன் கூட்டங்களும்
48     கோள்களுக்கும் பிறக்கும் குழந்தைக்கும் உள்ள முடிச்சு எது?
49     இந்தியாவின் கிளி சோதிடர்கள்!
50     சோதிடர்களை ஏமாற்றும் கிரகங்கள்!
51     ராஜிவ் காந்தி பதவிக்கு வாறது நிச்சயம்!
52     மூக்குடைபட்ட சோதிடர்கள்!
53     செவ்வாய் சிவப்பு எனவே அது யுத்தகாரன்?
54     இப்படி இருந்தால் ஏன் இப்படியெல்லாம் அமைகிறது?
55     தமிழ் நாட்டின் அடுத்த “முதல்வர்” ரஜினி
56     பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தைகள்!
57     சோதிடம் என்பது வெறும் குப்பை!
58     சோதிடத்தால் தீமையே அன்றி எந்த நன்மையும் இல்லை!
59     ஒரே நேரத்தில் பிறந்த இருவரது குணாம்சங்கள் ஒரே மாதிரியாக இல்லை!
60     மரணப் படுக்கையில் சோதிடம்
61     கோள் நிலை ஒரே மாதிரி இல்லை!
62     அவதாரங்களை அம்பலப்படுத்திய டாக்டர் ஏப்ரகாம் கோவூர்
63     சோதிடமும் கைரேகையும் சமுதாயத்திற்குச் சாபக்கேடு!
64     ஏமாளிகளின் தலையில் மிளகாய் அரைக்கும் சோதிடர்கள்!
65     பிறப்புக்கும் பெயருக்கும் எண்ணுக்கும் தொடர்பே இல்லை!
66     ஆன்மீகமும் அறிவியலும்!
67     மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முடியாது!
68     எங்களது எதிர்காலம் எங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது
69     பிள்ளையே இல்லாதவருக்குப் பிள்ளைகளால் சிக்கல்!
70     எனை நாடி வந்த கோள் என் செயும்!
71     சோதிடம் என்பது மூடத்தனம்! அறிவியல் உங்கள் மூலதனம்!

பதிப்பாளர் உரை

இயற்கையின் இயக்கத்தை அறியாத மனிதனின் அச்சமும்  அறியாமையும் கடவுள் உண்டாகக் காரணமானதைப் போவே, அறிவு வளர்ச்சி பெற்ற மனிதனின் பேராசையும் சோம்பலும் சோதிடம், கைரேக, எண்கணிதம்,  வாஸ்து எனப் பலவும் உண்டாகக் காரணமாயிற்று. அவற்றிலும் சோதிடம் கணித்துக் கூறிய வகையில் கோள்களின் நிலை, சூரிய சந்திர கிரகணங்கள் போன்றவை ஏற்படுதல் போன்றவை சரியாக இருப்பதைச் சுட்டி, இதுவும் ஒரு அறிவியல் தான் என நிறுவி, எளிதில் ஒருவரை நம்பவைக்கும் வாய்ப்பும் சோதிடத்துக்கே உண்டு.

1950 களின் பிற்பகுதியில்  இந்திய அரசு அமைத்த ‘தேசிய ஆண்டுக் கணக்கு சீர்திருத்தக் குழு’ வின் அறிக்கையில் பேராசிரியர் கோரக பிரசாத் “இரவில் விளக்கில்லாமல் சைக்கிள் ஓட்டுவர்” காவலரிடம் பிடிபடுவதைத் தவிர்க்க ஒவ்வொரு தெருமுனையிலும் எச்சரிகையாக கீழெ இறங்கிச் செல்வதை ஒத்ததுதான் இந்தப் பஞ்சாகக்காரர்கள் அனைவரின் நடவடிக்கைகளும்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டதைப் போலத்தான், தனது சிக்கலைத் தீர்க்க வழிவகை தெரியாமல் குழப்பத்தோடு குறிப்பைத் தூக்கிக் கொண்டு தன்னிடம் வருபவர்களிடம் சோதிடிர்கள் எச்சரிகை மிகுந்த நழுவல் சொற்களால் கூறும் எதிர்வுகூறும் திறமையால்தான் இன்னமும் சோதிடத்தைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது.

மனித சமுதாயத்தின் மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு பொது நலப் பணியாற்ற முனவந்த புத்தர் முதலான பல்வேறு முற்போக்கு சிந்தனையாளர்களாலும் சோதிடம் போன்ற குருட்டு நம்பிக்கைகளும்  குறுக்குவழி முயற்சிகளும் கண்டிக்கப்பட்டே வந்துள்ளன. சோதிடத்தின் பொய்மைகளை அம்பலப்படுத்தியும் பல்வேறு நால்களும் வெளிவந்துள்ளன.

ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே பெரியார் தானும் தன்னை ஒத்த சிந்தனை உள்ளவர்களும் சோதிடம் பற்றி எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து “சோதிட ஆராய்ச்சி” என்ற நூலை வெளியிட்டுள்ளார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும் முப்பதாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றிய  பேராசிரியர் கொண்டல் சு. மகாதேவன் எழுதிய ‘சோதிடம்’ என்ற நூலை வெளியிட்டுள்ளது. அதன் பின்னரும் சோதிடம் பற்றித் தமிழில் பல்வேற நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் அந்நூல்கள் எல்லாம் பெரும்பாலும் சோதிடத்தைத் தர்க்க முறையிலே எதிர்த்தன. அல்லது நடைமுறையில் சோதிட எதிர்வுகூறல்களில் நடக்காதவற்றை எடுத்துக் காட்டியும் ஒரே பொருள் குறித்து அல்லது ஒரே இராசிக்கு எழுதப்பட்ட முரண்பட்ட பலன்களை எடுத்துக் காட்டியுமே சோதிடத்தை மறுத்துள்ளன.

சென்ற நூற்றாண்டில் கண்டறியப்பட் நெப்தியூன், புளுட்டோ, யூரேனஸ் போன்ற கோள்கள் சோதிடத்தில் இல்லை. கோளாக சோதிடம் குறிப்பிடும் சூரியன் ஒரு கோளே அல்ல,  அதுவொரு விண்மீன். சந்திரன் கோள் அல்ல துணைக்கோள் தான் – பூமி என்ற கோளே சோதிடத்தில் இல்லை என்றளவிலேயே விவாதிக்கப்பட்டன.

பல்வேறு பஞ்சாங்கங்களில் காணப்படும் வேறபாடுகளையம் நிலவில் மனிதன் இறங்கியதையும் செவ்வாய் போன்ற கோள்கள் குறித்த ஆய்வுகளையும் பூமி சுழற்சியில் ஏற்படும் சிறு தள்ளாட்டத்தால் ஏற்படும் அயனாம்ச வேறுபாடுகளையும் மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளன.

ஆனால் இந்நூலில் வானியல், வானியல் ஆய்வுகளில் ஈடுபட்ட அறிவியலாளர்கள், அவர்களது கண்டுபிடிப்புகள், சோதிடப் பஞ்சாங்க முறை வரலாறு போன்றவற்றைத் தெளிவாக நிரல்பட விளக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நூலில் சோதிடத்தின் பல்வேறு கூறுகளான நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள், கோள்கள், அவற்றின் நிலைகள்,  இராசி வீடுகள், ஜன்மலக்கினம், ஜன்மராசி, கிரகப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம், கணப்பொருத்தம் எனப் பட்டியலிடப்படும் பல்வேறு பொருத்தங்கள், செவ்வாய் தோசம் போன்றவற்றைக் குறித்து விரிவாக விளக்கி உள்ளதோடு, சோதிடத்தோடு தொடர்புடைய நொஸ்டர்டாம் குறிப்புகள், எண்கணிதம் போன்றவற்றையும் குழந்தை பிறப்பு, ஆண் பெண் குழந்தை பிறப்பில் குரோமோசோமின் பங்கு,  புவிமையக் கோட்பாட்டின் பிழை போன்றவை குறித்தும் எழுதியுள்ளார்.

சோதிடத்தின் எல்லாக் கூறுகளை விளக்குவதோடு நிற்காமல், அவற்றை நடைமுறை நிகழ்வுகளைக் காட்டி மறுத்துள்ளதோடு அதில் உள்ள பிழைகளையும் விளக்கி உள்ளார்.

சோதிடத்தின் அனைததுக் கூறுகளையும் அதன் சல்லிவேர், ஆணிவேர் வரை சென்று, அதன் பொய்மைகளை அம்பலப்படுத்த நூலாசிரியர் மேற்கொண்டுள்ள மலைக்க வைக்கும் பேருழைப்பும், தளராத முயற்சியும் அறிவியல், மனிதநேயப் பற்றுள்ள அனைவராலும் நன்றியுடன் போற்றிப் பாராட்டத்தக்கதாகும்.

2003, 2004 ஆண்டுகளில் எழுதப்பட்ட இவ்வரிய கட்டுரைத் தொகுப்பை இணையதளத்தில் கண்டு அதைப் பதிவிறக்கம் செய்து இரு தொகுப்புகளாக நமக்களித்த தாராபுரம் தோழர்கள் சபரி, குமார் ஆகியோரே இவ்வெளியீட்டுக்கு முதலடி எடுத்துக் கொடுத்தவர்கள்.

ஆவல் பொங்க கட்டுரைத் தொகுப்புகளைப் படித்து முடித்தவுடன் நாம் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக பதிப்பித்து வெளியிட விரும்பி, நாலாசிரியரிடம் தொடர்பு கொண்டவுடன் அவரும் மனமுவந்து இசைவளித்தார்.

கட்டுரையின் பல்வேறு இடங்களில் பாரதியின் மேற்கோள்களே பெரிதும் விரவியுள்ளமை (பொருள் பொருத்தத்துடன் இருப்பினும்) கனடாவில் வாழும் நூலாசிரியருக்கு, பாரதிதாசன், குத்தூசி குருசாமி போன்றோரின் முழுப்படைப்புகளும் பாரதி குறித்து வெளிவந்து கொண்டுள்ள பல்வகை திறனாய்வுகளும் கிடைக்காமை கூடக் காரணமாக இருக்கலாம்.

தமிழில்,  சோதிடம் குறித்து முழு ஆய்வு நூலான “சோதிடப் புரட்டு” என்ற இந்நூலை வெளியிடுவதில் நாங்கள் பூரிப்படைகிறோம். பெருமை கொள்கிறோம்.

மிகக் குறுகிய காலத்தில்  மெய்ப்புப் பார்த்து, பிழைகளைத் திருத்திக் கொடுத்த மேட்டூர் மே.கா. கிட்டு, மேலட்டையை வடிவமைத்த செம்பட்டி இராசா, கணினியாக்கம் செய்த திண்டுக்கல் அசுரன் ஊடகம் தாமரைக்கண்ணன் ஆகிய தோழர்களுக்கும் அச்சிட்டுக் கொடுத்த கிரியேட்டிவ் கிராபிக்ஸ் கணேசன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரியார் திராவிடர் கழகம்

 

About editor 3118 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply