அபிவிருத்தியும் தொலையும் கனவுகளும் – ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் – ஒரு எதிர்வினை

அபிவிருத்தியும் தொலையும் கனவுகளும் – ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும்

ரமணன் சந்திரசேகரமூர்த்தி
இந்தக் கட்டுரை அபிவிருத்தி வேண்டாம் என்கிறது. புலம்பெயர் தமிழர்கள் கூட வட கிழக்கில் எந்த அபிவிருத்தியையும் மேற்கொள்ளக் கூடாதாம். என்னைக் கேட்டால் போரினால் தொலைந்து போன எமது மக்களது வாழ்வாதாரங்களை மீள் கட்டியெழுப்ப பொருளாதார அபிவிருத்தி முக்காலும் அவசியம். ஒரு புறம் அபிவிருத்தி மறுபுறம் சர்வதேச உதவியுடன் எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க சனநாயக வழியில் போராட்டம். இரண்டும் சமாந்தரமாக பயணிக்க வேண்டும்.

(1) ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையில் இருந்து விலகிக் கொள்கின்றன என்பது கலீல் ஜிப்ரான் அவர்களின் புகழ் பெற்ற வாக்கியம். தமிழ் சூழலில் அண்மை நாட்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகளை அவதானிக்கும் போது தவிர்க்க முடியாமல் இந்த வாக்கியம் நினைவிற்கு வந்து தொலைக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி வரிச்சலுகையினை வழங்கக் கூடாது என்பதை கோரும் பிரேரணை கடந்த மாதம் 27ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக 436 பேரும் ஆதரவாக 119 பேரும் வாக்களித்திருந்தனர்.இலங்கையின் மனித உரிமை நிலைமைகளின் மாற்றம் ஏற்படவில்லை எனக் கருதும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை மீளவும் இலங்கைக்கு வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 27ம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பிற்கு முன்பாக இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தலைமையிலான குழு பிரசல்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.

இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சாமாதானப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த குழுவில் சுனில் ஹந்துன்நெட்டி , வாசுதேவ நாணயக்கார ஆகிய கடும் போக்குடைய அரசாங்க தரப்பு உறுப்பினர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் தேசிய முகமாக தன்னை அடையாளப்படுத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் இடம்பெற்றிருந்தார்.

பதில்: ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்குப் போன குழு அனைத்துக் கட்சிகள் அடங்கிய  நா.உறுப்பினர்களது குழு. சிறிதரன் ததேகூ  இன் பிரதிநிதியாகச் சென்றார்.  இலங்கைக்கு ஜிபிஎஸ் சலுகை வழங்கக் கூடாது என்பது ததேகூ இன் நிலைப்பாடல்ல. அந்த சலுகை இலங்கை அரசின் மனித உரிமை மேம்பாட்டின் அடிப்படையில் – குறிப்பாக ஐநாமஉ பேரவையின் தீர்மானம் 30.1 இல் காணப்படும் விடயங்களை இலங்கை அரசு முற்று முழுதாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்ற  கடுமையான நிபந்தனைகளோடு வழங்கப்பட வேண்டும் என்பதே ததேகூ இன் நிலைப்பாடு. நல்லிணக்கம் என்பது ஒருவளிப் பாதையல்ல. அது இருவழிப்பாதை.

(2) அதே சமகாலத்தில் நோர்வே மற்றும் சுவிஸ் அரசாங்கங்களின் அனுசரணையுடன் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயும் நோக்கில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்டுள்ளனர்.

RAMANAN-EKURUVIபுலம் பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத் தரப்புடன் ‘அபிவிருத்தி’ குறித்து பேச்சுவார்தை நடத்துகின்றார்கள்.

இலங்கைக்கு பாவவிமோசனம் பெற்று தரும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களை  தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி ஒருவர் சந்திக்கின்றார்.

இந்த இரு நிகழ்வுகளும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றமையும் அந்த சந்திப்பு தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதை தடுக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட இராஜதந்திர நகர்வின் மையம் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்வதும் அவ்வளவு சிரமமானதல்ல.

இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்வாதார திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அங்குள்ள மக்களின் இழந்த வாழ்வை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அடிப்படையினை யாரும் நிராகரிக்க முடியாது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் புலம்பெயர் தேசங்களில் இருந்து தாயகத்திற்கு சென்று பல்வேறு தன்னார்வ அமைப்புகள்,  பாடசாலை நலன்புரி சங்கங்கள், ஊர்ச் சங்கங்கள் என பல்வேறு அமைப்புகளும் தனி நபர்களும் தம்மாலான உதவித் திட்டங்களை அங்கு மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் புலம்பெயர் தமிழர்களின் பங்குபற்றுதலுடன்; ஏராளமான வேலைத் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.

இந்த நிலையில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் தொழில் முனைவோரையும் வலிந்து அழைத்து அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளுங்கள் என வேண்டி நிற்கும் இலங்கை அரசாங்கத்தின் இந்த தீடிர் கரிசனை குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பதில்: “இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்வாதார திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அங்குள்ள மக்களின் இழந்த வாழ்வை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அடிப்படையினை யாரும் நிராகரிக்க முடியாது” என்பது சரியானால் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏன் அந்த அபிவிருத்தியை செயயக் கூடாது? புலம் பெயர் தமிழர்கள் உதவுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவர்களது உதவி யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றது. மொத்தம் 89,000  கைம்பெண்கள் வறுமையில் வாடுகிறார்கள். பன்னீராயிரம் போராளிகளில் பெரும்பான்மையோர் போதிய வாழ்வாதாரங்கள் இல்லாது வாடுகிறார்கள். மீள்குடியமர்ந்த இலட்சக் கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை மீள்கட்டி எழுப்ப போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு  பரிகாரம் காண அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட வெளிநாடுகளது உதவியும் முதலீடும் தேவை.

(3) இலங்கையின் தமிழ் மக்களின் உரிமைக்காக கடந்த மூன்று தசாப்தங்களாக தொடர்ந்த ஆயுதப் போராட்டம் 2009ம் ஆண்டு மௌனிக்கச் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் யுத்தத்திற்கான காரணம் இன்னமும் தீர்வு காணப்படாமலேயே தான் இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான குறைந்த பட்ச அதிகார பரவலாக்கத்தை மேற்கொள்வதற்கு கூட இந்த அரசாங்கம் தயாரில்லை என்பதை இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கத்திற்கு பொறுப்பான அமைச்சர் மனோ கணேசன் இங்கிலாந்தில் தெளிவாக தெரிவித்திருக்கின்றார்.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற வடக்கு கிழக்கு இணைப்போ, சமஸ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கமோ, மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசரணைக்கான வாய்ப்போ இலங்கை அரசாங்கத்தால் ஒரு போதும் வழங்கப்பட மாட்டாது என்றும் இந்த உண்மை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தெளிவாக தெரியும் அதனை அவர்கள் தமிழ் மக்களிடம் இருந்து மறைப்பது அந்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டிருக்கின்றார்.

பதில் – “ஆனால் யுத்தத்திற்கான காரணம் இன்னமும் தீர்வு காணப்படாமலேயே தான் இருக்கின்றது” என்பது சரியே. ஆனால் அதற்கான முயற்சி நடைபெறுகிறது. காணாமல் போனோர் தொடர்பான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தகவல் பெறும் உரிமை சட்டமாக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதச் சட்டம் கைவிடப்பட்டுள்ளது.  அதற்குப் பதில் அனைத்துலக சட்ட  நியமனங்களுக்கு அமைய ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என ததேகூ வற்புறுத்தி வருகிறது. இதனையே வெளிநாடுகளும் வற்புறுத்துகின்றன. அமைச்சர் மனோ கணேசன் எதையும் சொல்லலாம்.  அவரது வாக்கு வேதவாக்கு என்று பொருளல்ல. அவர் சொல்வது உண்மையானால் பின் எதற்கா அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்?  

(4) இந்த பின்னணியில் இலங்கையின் அழைப்பில் அங்கு சென்று வந்த  புலம்பெயர் கனவான்கள் இலங்கை அரசாங்கத்துடன் புலம்பெயர் சமூகம் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று பாடம் நடத்தத் தொடங்கியிருக்கின்றார்கள்.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில கொல்லப்பட்ட பல இலட்சக்கணக்கான தமிழர்களின் கல்லறைகளை ஏறி மிதித்தவாறும், கணவனை இழந்து விதவைகளாக்கப்பட்ட தாய்மாரின் கண்ணீர் வழியும் முகங்களை முறைத்துப் பார்த்தவாறும், காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை குறித்து போராடும் மக்களின் உணர்வுகளின் மீது காறி உமிழ்ந்தவாறும் நாம் இலங்கை அரசாங்கத்தோடு அபிவிருத்திக்காக கைகுலுக்க வேண்டும் என்று அவர்கள் எங்களிடம் கோருகின்றார்கள்.

யுத்தத்தால் பாதி;க்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படாமல் இருக்கின்ற நிலையில் அபிவிருத்தி என்ற மையைப் பூசி காயங்களை மறைத்துவிடும் முயற்சிக்கு துணைவருமாறு அவர்கள் புலம்பெயர் சமூகத்தை அழைக்கின்றார்கள்.

பதில – இந்த வாதத்தைப் பார்த்தால் இனச் சிக்கல் தீருமட்டும் அபிவிருத்தி பற்றி மூச்சுக்காட்டக் கூடாது? அந்த மக்கள் அப்படியே வாடையில் வாடி கோடையில் காய்ந்து நிரந்தரமாக வறுமையில் நலிய வேண்டும் என்று சொல்லப்படுகிறதா? வி.புலிகள் காலத்தில் கூட போரின் மத்தியில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டார்கள். தேக்கு மரங்கள் நடுதல், விவசாயப் பண்ணை, கோழிப்பண்ணை போன்றவற்றை வி.புலிகளே மேற்கொண்டார்கள். பல குடிசைத் தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டன. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் போரின் போது பொருளாதார அபிவிருத்தியும்  மேற்கொள்ளப் பட வேண்டும். இரண்டும் சமாந்தரமாக போக வேண்டும் என்பது தங்கள் நிலைப்பாடு என்றார்கள்.  எனவே பொருளாதார அபிவிருத்தி வேறு. அரசியல் தீர்வு வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பக் கூடாது.

(5) நடந்தது நடத்து விட்டது இனி நடக்க வேண்டியதை பார்க்கலாம் நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்து என்ன புடுங்கப் போகின்றீர்கள் என்று பதில் கேள்வி கேட்டு இது போன்ற விசனங்களையும் விமர்சனங்களையும் அவர்கள் கடந்து சென்று விடுவார்கள். காரணம் அவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள், செல்வந்தர்கள், அவர்கள் சொன்னால் ஆமாம் சாமி போட, அவர்களுக்கு பின்னால் அலையும் கூட்டம் என என எல்லாம் பெற்றவர்கள் எல்லாம் வல்லவர்கள்.

இந்த ஆபத்தை பரிந்து கொள்ளாமல் இருப்பது அல்லது அது குறித்து ஒரு சிறு எதிர்வினையினை கூட வெளிப்படையாக  ஆற்ற முடியாமல் முடங்கிப் கிடப்பது தான் எமது மிகப் பெரிய சோகம் அதுவே எமது பலவீனமும் கூட.

இலங்கையில் இப்போது எல்லாம் சுமூகமாகிவிட்டது என்ற தோற்றப்பாட்டை சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய தேவையை இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது. அதற்காகவே அவர்கள் புலம்பெயர் சமூகத்தை நோக்கி நேசக்கரம் நீட்டுகின்றார்கள்.

இலங்கையில் இனங்களுக்கிடையில் ஐக்கியம் தோன்றி விட்டது நடந்தவற்றை மறந்து தமிழர்கள் அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட தொடங்கிவிட்டார்கள் என்பதை உலகத்திற்கு அறிவிப்பதே இலங்கை அரசாங்கத்தின் பிரதான  நோக்கம்.

பதில்: தமிழ்மக்களைப் பிரதிநித்துவப் படுத்தும் ததேகூ  இப்போதுள்ள அரசாங்கத்தோடு இணங்கித்தான் செயல்படுகிறது. இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தவர்களே அவர்கள் தான். புலம் பெயர் தமிழர்கள் சனாதிபதி தேர்தலை புறக்கணிக்கச் சொன்னார்கள். சிலர் சிறிசேனாவும் இராஜபக்சாவும் ஒன்று பெயர்தான் வித்தியாசம் என்றார்கள். இன்னும் சிலர் சிறிசேனா வந்தால் தொடக்கத்தில் நன்மை பின்னர் தீமை, இராஜபக்சா வந்தால் முதலில் தின்னை பின்னர் நன்மை என்றார்கள். ததேகூ ஒன்றுதான் தமிழின விரோத அரசான இராஜபச்சாவை அகற்ற வேண்டும் என்றால் சிறிசேனாவை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தார்கள். மக்களது எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது. வட – கிழக்கில் 75 விழுக்காடு மக்கள் சிறிசேனாவை ஆதரித்து வாக்களித்தார்கள்.  இந்த அரசோடு ததேகூ  ஒத்துழைத்து, இந்த அரசோடு பேசி தமிழர்கள் தங்கள் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகளது விருப்பமாக இருக்கிறது. இதுதான் இன்றைய பூகோள அரசியல் நிலைப்பாடு. அதனை ஒட்டித்தான் நாம் நடக்க வேண்டும். வெட்டி ஓட முடியாது. நடந்தது நடந்துவிட்டது மிச்சத்தைப் பார்ப்போம் என்பது ததேகூ இன் நிலைப்பாடு இல்லை. போர்க் குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள்  போன்றவற்றை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். அது கலப்பு நீதிமன்றமாக இருக்க வேண்டும். அதன் மூலம் எமது மக்களுக்கு  இடைமாறுபாட்டுக் கால ஏற்பாடுகள் (transnational justice) பெற்றுக் கொடுக்க வேண்டும். 

(6) இலங்கையில் வாழும் தமிழ் மக்களால் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜீ.எஸ்.பி பிச்சை கேட்கின்றார்.

பதில்: எமது மக்களுக்காக பிச்சை கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. அது தவறு என்றால் அங்குள்ள மக்கள் அதைச் சொல்லட்டும்.

(7) மறுபுறும் சர்வதேச ரீதியில் இலங்கையின் மனித உரிமை மீறலகள் குறித்த சர்வதேச விசாரணையை கோரி வந்த கனேடிய தமிழர் பேரவையின் முக்கிய பிரமுகரும் கடந்த காலங்களில் மாவீரர் தினத்தை  தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உழைத்தவருமானவர் கொழும்பில் வெளிவிவகார அமைச்சரையும் முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து அபிவிருத்தி குறித்து பேசுகின்றார்.

இவை எல்லாமே இலங்கை அரசாங்கத்தை சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக மேடை ஏற்றப்படும் நாடகங்கள். ஆனால் அவற்றின் கதாபாத்திரங்களாக தமிழர்கள் நடிக்க வைக்கப்படுகின்றார்கள்.

இலங்கை அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தங்கள் குறைவடையும் போது ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை போன்று மேலதிகமான பல வெளிநாட்டு வரப்பிரசாதங்களும், முதலீட்டு வாய்ப்புகளும் அதிகரிக்கும் அதன் மூலமாக இலங்கை அரசாங்கம் தன்னை வலுவானதான மாற்றிக் கொள்ளும். தேற்கில் புதிய தொழில் முயற்சிகளும் அபிவிருத்திகளும் பாரிய அளவில் மேற்கொள்ளப்படும். வடக்கும் கிழக்கும் வழமைபோலவே தொடர்ந்தும் கவனிப்பாரற்று கிடக்கும்.

பதில்: இது நல்ல கற்பனை. அபிவிருத்திக்கும் மனித உரிமைக்கும் என்ன தொடர்பு? கனடிய தமிழர் பேரவையின் செயல்பாட்டில் முரண்பாடு இருப்பதாக எனக்குப் படவில்லை. சிலர் இறந்த காலத்தில் பழைய சிந்தனையுடன் இருக்கிறார்கள்.  தெற்கை மட்டும் அபிவிருத்தி செய்துவிட்டு வடக்கையும் கிழக்கையும் இந்த அரசு கைவிட முடியாது. நெதலாந்து நாடு மத்திய அரசின் உதவியுடன் வடக்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவமனை கட்டுகிறது. இந்தியா, காங்கேசன்துறை துறைமுகத்தை 45 மில்லியன் அ.டொலரில் இந்தியா  மேம்பாடு செய்ய இருக்கிறது. பலாலி ஓடுதளத்தையும் இந்தியா செப்பனிட இருக்கிறது.

(8) இலங்கையின் வடக்கு கிழக்கில் போடப்பட்டுள்ள கம்பள வீதிகளில் வழுக்கிக் கொண்டு சென்று வரும் வெளிநாட்டு தமிழர்களுக்கு வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்திகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவே தென்படும்.

ஆனால் அபிவிருத்தி என்பது வெறும் தார் வீதிகளில் இல்லை என்பதும் அது ஒட்டுமொத்தமான ஒரு சமூதாய வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற உண்மை பாவம் அவர்களுக்கு புரிவதே இல்லை.  2009ற்கு பின்னர் வடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்திகளையும் வேறுபாடுகளையும் உற்று நோக்கி அவானித்தால் இந்த உண்மை தெளிவாக புலப்படும்.

இலங்கை அரசாங்கம் தன் மீதுள்ள பாவக் கறைகளை கழுவி தன்னை சுத்தீகரிப்பதற்கு கறைதுடைப்பான்களாக (விளக்குமாறு) தமழர்களை பயன்படுத்துகின்றது என்ற உண்மையை புரிந்து கொள்ளாமால் அங்கே எல்லாம் மாறிவிட்டது, அரசாங்கம் தரும் காணிகளில் நாங்கள் தொழிற்சாலை அமைத்து அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்பினையும் வாழ்வாதாரத்தையும்; வழங்குவோம் என்று பேசுவது மற்றுமொரு முள்ளிவாய்காலை நோக்கிய நகர்வாகவே கருதப்பட வேண்டும்.

(9) கட்டுரையாளர் தமிழ்மக்கள்  தங்களது உரிமைகளை வென்றெடுக்கு மட்டும் சாப்பிடாமல் பட்டினி கிடந்து சாக வேண்டும் என நினைக்கிறார் போல் தெரிகிறது. அங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பினையும் வாழ்வாதாரத்தையும் கொடுக்கப்படக் கூடாது என்பதன் அர்த்தம் அதுதான்.  அரசியல் – பொருளாதாரம் இந்த இரண்டையும் போட்டுக் குழப்ப வேண்டாம்.

(10) இந்த அபிவிருத்திக்காகவா இத்தனை உயிர்களையும் உடைமைகளையும் தமிழினம் இழந்தது?

பதில்: விடுதலைக்குப் போராடிய காலத்தில் அபிவிருத்தி வேண்டாம் என்று புலிகளே சொல்லவில்லை. ஆனால் இது போராட்ட காலம் அல்ல.  போர்க்கால அழிவிலிருந்து மீள எழும்பும் காலம்.

(11) கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்த யுத்தத்தினால் பல்வேறு இழப்புகளை சந்தித்த ஒரு இனம் இனி வரும் நாட்களில் ஒரு போதும் மீண்டெழவே முடியாத அளவிற்கு மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. அதில் மிக முக்கியமானது தமிழர்களின் ஒன்று பட்ட பலத்தை இலலாதொழித்து தமிழர் தரப்பை பிரித்தாள்வது.

பதில்: இது கட்டுரையாளரின் தேவையற்ற மனப்பயம். இந்த அரசு தமிழர்களை பகைவர்களாக நினைக்கவில்லை. பங்காளிகளாகவே நினைக்கிறது. பண்டா – செல்வநாயம் உடன்பாடு, டட்லி – செல்வா உடன்பாடு நடைமுறைப் படுத்தியிருந்தால் போரைத் தவிர்த்திருக்கலாம் என சனாதிபதி சிறிசேனா சொல்கிறார்.

(12) துரதிஸ்டவசமாக இந்த நோக்கத்தை இலகுவாக்கும் செயல்பாடுகளை தான் நமது தலைவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டிருக்கின்றார்கள்.

பதில்: தலைவர்கள் அப்படி நினைக்கவில்லை. மக்கள் அப்படி நினைக்கவில்லை.  உரிமை பெற்ற இனமாக வாழ வேண்டும் அதே சமயம் இருக்க வீடு, குடிக்கத் தண்ணீர், உண்ண உணவு, உடுக்க உடை போன்றவற்றைத்தான் கேட்கிறார்கள். இது முரண்பாடல்ல. இதுதான் யதார்த்தம். தலைவர்கள் பிழைவிட்டால் மக்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.

(13) மார்ச் மாதம் ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பியதாக சொல்லும் கனேடிய தமிழர் பேரவை ஏப்பிரல் மாதம் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவாகர அமைச்சரோடு கைகுலுக்குவது எவ்வாறான இராஜதந்திரம் என்பது புரிபடவே இல்லை.

பதில்: ஏற்கனவே சொன்னது போல இதில் முரண்பாடு கிடையாது. அறவே கிடையாது. கனடிய தமிழர் பேரவை அரசியல், மனிதவுரிமைகள், அபிவிருத்தி இந்த மூன்றிலும் சமகாலத்தில்  சம அளவு கவனம் செலுத்துகிறது.

(14) சர்வதேச ரீதியில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை தனது படைப்புகள் மூலம் கொண்டு சென்ற மாயா எனப்படும் மாதங்கள் அருள்பிரகாசத்தை அழைத்து கௌரவித்து வெள்ளி விழா கொண்டாடிய கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனமும் தனது பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்கும் நகர்வுகளுக்கு துணைபோய் நிற்கின்றது.

கனேடிய தமிழர்களின் வர்த்த முயற்சிகளை முன்னேற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு எவ்வாறு இலங்கை அரசாங்கத்தின் அரசியல் சூழலில் சிக்கிக் கொண்டது என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது.

யுத்தம் முடிந்து போயிருக்கலாம், யுத்தத்தினால் சேதமான கட்டிடங்கள் மீளக் கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் யுத்தம் கொண்டு சென்ற உயிர்களை யாராலும் திருப்பி தர முடியாது, யுத்தம் களவாடிப் போன ஒரு தலைமுறையின் இளைமையை யாராலும் வாங்கிக் கொடுக்க  முடியாது, போராடப் புறப்பட்டு வாழ்வை தொலைத்துவிட்டு முன்னாள் போராளிகள் என்ற அடை மொழிகளோடு நாளாந்தம் அல்லலும் எமது சகோதர சகோதரிகளுக்கான தொலைந்து போன வாழ்வினை புன்னகைக்கும் உங்கள் முகங்களோடு விரியும் முகப்புத்தகப் புகைப்படங்களால் திருப்பிக் கொடுக்க முடியாது.

யுத்தத்தினால் தமது உறவுகளை இழந்து தவிக்கும் இலட்சக்கணக்கான மனித மனங்களுக்கு அபிவிருத்தி என்ற மூலாம் பூசிய சலுகைகள் மூலம் ஆறுதல் அளிக்க முடியாது.

ஒரு இனம் தனது விடிவிற்காக நடத்திய தியாக வேள்விக்கு நியாயம் சேர்ப்பதற்கு ஒவ்வொரு தமிழனுக்கும் தார்மீகக் கடமை உண்டு. போராடி மடிந்தவர்களும், யுத்ததின் மடியில் வீழ்ந்தழிந்து போனவர்களும் அர்ப்பணித்த உயிர்களின் மதிப்பினை உங்களால் மதிப்பீடு செய்ய முடியாது.

எமது மக்களுக்கான வாழ்வாதாரங்களும் மீண்டும் வாழ்வதற்கான ஒத்துழைப்புகளும் ஏற்படுத்தப்பட வேண்டியது எவ்வளவு தூரம் அவசியமானதோ அதேபோன்று இத்தனை வருடகால துன்பியல் வாழ்வினில் நாம் சந்தித்த அத்தனை அவலங்களுக்குமான நியாயமான தீர்வு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் அவசியமானது தான்.

பதில்:  முன்னுக்குப் பின் முரணான கருத்துப் பதிவு. “எமது மக்களுக்கான வாழ்வாதாரங்களும் மீண்டும் வாழ்வதற்கான ஒத்துழைப்புகளும் ஏற்படுத்தப்பட வேண்டியது எவ்வளவு தூரம் அவசியமானதோ அதேபோன்று இத்தனை வருடகால துன்பியல் வாழ்வினில் நாம் சந்தித்த அத்தனை அவலங்களுக்குமான நியாயமான தீர்வு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் அவசியமானது தான்” இதுதான் எமது நிலைப்பாடும். மக்கள் இழந்துவிட்ட வாழ்வாதாரங்களை மீள்கட்டியெழுப்ப வேண்டும் அதேசமயம் அவர்களது அடிப்படை உரிமைகளையும் வென்றெடுக்க போராட வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தின் ‘அபிவிருத்தி’ என்ற பசப்பு வார்தைகளில் எமது உரிமைகள் தொலைந்து போவததை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

பதில்:  அனுமதிக்க மாட்டோம்.  உண்மையில் வட கிழக்கை அபிவிருத்தி செய்ய அரசிடம் எந்தப் பாரிய திட்டமும் இல்லை. இந்தியாதான் 45,000 வீடுகளை கட்டிக் கொடுத்தது.

(15) தமது தரப்பில் உள்ள யுத்தக் குற்றவாளிகளையும் தமிழ்  மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவர்களையும் சர்வதேசத்திடம் இருந்து காப்பாற்றுவதற்கு சிங்கள் தேசம் ஒன்று பட்டு நிற்கின்ற நிலையினை தமிழர் தலைமைகள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களுக்கு குறைந்த பட்ச அதிகாரங்களை கூட வழங்க தயராக இல்லாத அரசாங்கத்தை நம்பி அவர்களின் மூலமாக அவர்கள் தரும் காணிகளில் புலம் பெயர் தமிழர்கள் தொழிற்சாலைகளை அமைப்பதும் முதலீடுகளை மேற்கொள்வதும் பாதுகாப்பானதா என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

பதில்: இதற்கான பதில் ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது. அரசசார்பற்ற அமைப்புக்கள் அபிவிருந்தி செய்யக் கூடாது, அரசாங்கம் செய்யக் கூடாது, புலம்பெயர் தமிழர்களும் முதலீடுகள் செய்யக் கூடாது. இது என்ன புதுக் கதை?  குறைந்த பட்ச அதிகாரங்களை பெறும் மட்டும் மக்கள் பட்டினி கிடந்து சாக வேண்டுமா?

(16) இந்த ஆபத்தான இலக்கினை நோக்கி தமிழர்களை பயணப்பட வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்பவர்கள் இந்த ஆபத்தை உண்மையில் உணராமல் இருக்கின்றார்களா ? அல்லது அதை தாண்டிய ஏதாவது அனுகூலங்களை அவர்கள் பெற முயல்கின்றார்களா என்பதையும் நாம் ஆராய வேண்டும்.

சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து காணப்படும் இன்றைய நிலையில் கூட தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கு தயாரில்லாத இலங்கை அரசாங்கம் தமிழர் தரப்பின் உதவியுடன் சர்வதேச அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றால் எவ்வாறான விளைவுகளை தமிழினம் எதிர் கொள்ளும் என்பதையும் நாம் சநிதித்துப் பார்க்க வேண்டும்.

அவ்வாறான நிலை ஏற்படுமானால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஐநா மனித உரமை பேரவை , ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் இருந்து அகற்றப்படும்.

இது ஒட்டு மொத்த தமிழர் நலன்களுக்கும் பாதகாமன பல விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அதன் பின்னர் நாம் மீண்டும் சர்வதேச சமூகததின் ஒத்துழைப்பை பெற முடியாத சூனிய வெளிக்குள் தள்ளப்பட்டு விடுவோம் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் தமிழர்கள் ஒற்றுமையோடு எழுந்து நின்றால் மட்டுமே இந்த சவால்களை தமிழினம் எதிர் கொள்ள முடியும்.

தட்டினால்  மட்டும் தான் கதவுகள் திறக்கும், கதவுகள் திறந்தால் தான் தமிழர்களுக்கு நிலையான நிம்மதியான வாழ்வு மலரும்;.

பதில்: கட்டுரையாளர் சொல்கிற அதே சர்வதேச சமூகம்தான் இலங்கை அரசோடு ஒத்துப் போகும்படி எமக்கு அறிவுறுத்துகிறது. தமிழ் மக்களுடைய தலைமை நிதானமாக எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து செயல்படுகிறது. அரசியல் யாப்பு மூலம்  நியாயமான தீர்வு கிடைக்கும் என தலைமை நினைக்கிறது. இல்லை கிடைக்காவிட்டால்  மத்திய அரசு வட – கிழக்கை  ஆளமுடியாத நிலையைத் தோற்றுவிப்போம்.

இந்தக் கட்டுரை எனக்கு பெரிய ஏமாற்றத்தை தருகிறது. அவலை நினைத்து உரலை இடிக்கிறாரா?

நக்கீரன்

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply