மாமியார் வீட்டில் சாமியார்கள்!

நக்கீரன்
காஞ்சி காமகோடிபீட ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் கொலைக் குற்றச்சாட்டில் கடந்த தீபாவளி நாளன்று (கார்த்திகை 11, 2004) கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை, சதி, கூட்டுச்சதி, சாடசிகளைக் கலைத்தல் போன்ற ஐந்து கடுமையான குற்றச்சாட்டுக்கள் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ளன.
காவல்துறை தீவிர புலன் விசாரணைக்குப் பிறகு நம்பத்தகுந்த சில ஆதாரங்களின் அடிப்படையில் ஜெயேந்திரரை கைது செய்து இருக்கிறார்கள். உயர் நீதி மன்றத்தில் வாதிட்ட அரச வழக்கறிஞர் ஜெயேந்திரரை ஒரு கிறிமினல் என்று வர்ணித்துள்ளார்.
இந்தக் கொலை தொடர்பாக மேலும் 17 காடையர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். தலைமறைவாகிவிட்ட இந்தக் காடையர் கும்பலின் தாதா அப்பு என்பவனை காவல்துறை தேடிவருகிறது.
இப்படி சிறையில் அடைக்கப்பட்ட முதல் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அல்ல. இதற்கு முன்பு காமராசர் கொலை முயற்சியில் பூரி சங்கராச்சாரியாரும் கைது செய்யப்பட்டு (1966) சிறையில் அடைக்கப்பட்டார்.
ஐதராபாத்தில் ஜெயேந்திரரை தமிழக காவல்துறையினர் கைது செய்தபோது இளைய மடாதிபதி விஜயேந்திரர் அருகில் இருந்துள்ளார். ஆனால் கைது நடவடிக்கைக்கு அவர் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அதற்கு மாறாக காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து தனக்கு எதுவும் சிக்கல் வராது காப்பாற்றிக் கொள்வதில் விஜயேந்திரர் கவனமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. ஆந்திர முதல்வர் விஜயேந்திரர் தமது அரசின் விருந்தாளியாக இருக்கிறார் என அறிவித்துள்ளார்.
காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் (50) கடந்த புரட்டாதி 3 ஆம் நாள் பட்டப்பகலில் ஐந்து பேர் கொண்ட கொலையாளிக் கும்பலினால் கோயில் வளாகத்தில் வைத்தே சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் முன்னாள் காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியார் (காஞ்சிப் பெரியவர்) அவர்கட்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். கோயில் பணிகளில் மிக மிக நேர்மையானவர், கடமை தவறாதவர் என்று பெயர் எடுத்தவர்.
1954 பங்குனி 22ல் ஜெயேந்திரர் துறவறம் பூண்டார். காஞ்சிப் பெரியவருக்குப் பின்பு காஞ்சி மடத்தின் அடுத்த பீடாதிபதியாக அறிவிக்கப்பட்டார். சன்யாச தீட்சை பெற்ற இவர் “ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்’ என்று அழைக்கப் பட்டார். இவர் பட்டமேற்று 50வது ஆண்டு விழா 2003ல் “பீடாரோஹன ஸ்வர்ண ஜெயந்தி’ விழாவாக கொண்டாடப்பட்டது. அப்போது கனகாபிஷேகமும் செய்யப்பட்டது.
காஞ்சிப் பெரியவர் மறைவுக்குப் பின்னர் சங்கரமடத்தின் பீடாதிபதியாக வந்த ஜெயேந்திரர் சங்கரராமனுக்கு எந்தவித பணியும் கொடுக்காமல் ஓரம் கட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த கைது விவகாரத்தில் அரசியல் காரணங்கள் இருப்பதற்கு முகாந்திரம் இல்லை. காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இந்துமதத்தவர். கோயில் குளம் பூசை யாகம் என்று அலைபவர். முன்னாள் துணைப் பிரதமர் எல். கே. அத்வானிக்கு வேண்டியவர்.
இருந்தும் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட 40 தொகுதிகளில் தோற்றுப் போனது. அதையிட்டு கருத்துத் தெரிவித்த ஜெயேந்திரர் ‘ஆணவத்துக்குக் கிடைத்த தோல்வி’ என்று வர்ணித்தார். அதனால் ஜெயலலிதா ஜெயேந்திரர் மீது கோபமாக இருந்தார் என்று கூறப்படுகிறது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி என்பது இந்து மதத்தில் மிக உயர்ந்த பதவி. கத்தோலிக்கத்துக்கு வட்டிக்கானும் போப்பாண்டவரும் எப்படியோ இந்து மதத்திற்கு சங்கர மடங்களும் சங்கராச்சியாளர்களும் முக்கியமானவர்கள்.
காஞ்சி மடத்தை ஆதி சங்கரர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தொடக்கியதாகக் கூறப்படுகிறது. இதனை மறுப்பவர்களும் இருக்கிறார்கள். எது எப்படி இருப்பினும் இந்தக் காலக் கணிப்பு முற்றிலும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். கி.மு..5 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் நிறுவன சமயம் என்று எதுவும் இருக்கவில்லை.
ஆதி சங்கரர் கேரளாவில் (அன்றைய சேர நாடு) காலடி என்னும் சிற்றூரில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் (கி.பி. 788-820) ஒரு நம்பூதிரி பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.
ஆதி சங்கரர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என்று குறிபிட்டுள்ளார். எனவே கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் சங்கரர் வாழ்ந்திருந்தால் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழந்த ஞானசம்பந்தரைக் குறிப்பிட்டிருக்க முடியாது.
ஆதி சங்கரர் காஞ்சியைவிட பூரி, துவாரகை, சிருங்கேரி, பத்ரிநாத் ஆகிய இடங்களிலும் மடங்களை அமைத்தார். ஜெயேந்திரர் காஞ்சி மடத்தின் 69வது சங்கராச்சாரியார் ஆவார்.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டது இந்தியா முழுதும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சைவ, வைணவ மடாதிபதிகள், நெல்லை முக்காணிய சங்கப் பிரதிநிதிகள், ரிக் வேத குருமார்கள், மத்தியில் இந்தக் கைது சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயேந்திரரது கைதை எதிர்த்து இராம கோபாலனின் இந்து முன்னணி, இந்து விசுவ பரிஷத், தமிழ்நாடு பிராமணாள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. எல்.கே. அத்வானி கைதை கண்டித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
அதே சமயம் அவர் கைது செய்யப்பட்டதை ஆதரித்து காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள்.
சேர சோழ பாண்டிய அரசர்கள் காலத்தில் ஒரு பிராமணன் கொலை செய்தால் அவனுக்கு ஏனைய சாதியாரைப் போன்று மரண தண்டனை விதிக்க முடியாது. ஊரைவிட்டு துரத்தப்படுவதே அவனுக்கு மனுநீதிப்படி அரசர்கள் கொடுக்கக் கூடிய அதிகபட்ச தண்டனையாகும்.
லோக குரு, கலியுக அவதாரம், கண்கண்ட தெய்வம், என்றெல்லாம் புகழப்பட்ட ஒருவர் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைக் கொட்டிலில் அடைக்கப்பட்டிருப்பது இந்துக்களைத் தலைக் குனிய வைத்துள்ளது.
காவல்துறையிடம் சிக்கிக் கொண்டுள்ள இன்னொரு போலி சாமியார் சதுர்வேதி வெங்கடாஜலபதி. ‘செக்ஸ்’ சாமியாரான சதுர்வேதி ஆட்கடத்தில், பண மோசடி, கற்பளிப்பு போன்ற பல குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறைக் கொட்டிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
வாட்ட சாட்டமான இந்தப் போலிச் சாமியார் தன்னை ஒரு கடவுள் அவதாரம் என்று சொல்லி திருநீறு வரவழைத்தல், விக்கிரகங்கள் வரவழைத்தல் போன்ற வழக்கமான செப்படி வித்தைகளைச் செய்து காட்டி பெரிய இடத்துப் பெண்களை மயக்கி தனது காம இச்சைக்கு விருந்தாக்கி உள்ளார்!
தனக்கு தங்க இடம்கொடுத்த தொழில் அதிபரின் மனைவி மகள் இரண்டு பேரையும் கடத்திச் சென்று அவர்களை விடுவிக்க அந்த தொழில் அதிபரிடம் 50 இலட்சம் மிரட்டிக் கேட்டபோதுதான் சதுர்வேதி காவல்துறையிடம் மாட்டிக் கொண்டான்.
ஆக மொத்தம் மூன்று சாமிகள் இப்போது மாமியார் வீட்டு விருந்தாளியாக இருக்கிறார்கள்!
அந்த மூன்றாவது போலிச் சாமியார் பிரேமானந்தா. இரண்டு ஆயுள் தண்டனையை திருச்சி சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே.
ஜெயேந்திரர் சந்தேகத்தில் மீது கைது செய்யப்பட்டாலும் அவர் மீது காவல்துறை சாட்டியுள்ள கொலை உட்பட்ட குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை.
கொலையாளிகளுக்கும் ஜெயேந்திரருக்கும் நேரடித் தொடர்பு உண்டென்றும் அதற்கான சாட்சியங்கள் தங்களிடம் இருக்கிறது என்றும் காவல்துறை சொல்கிறது.
இந்தக் கொலையை செய்தவர்களுக்கும் கொலையை மறைக்க உதவியர்களுக்கும் சுமார்ரூபா 40 இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 10 இலட்சம் காஞ்சி மடத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதற்கு ஆதாரம் உள்ளதாக அரச வழக்கறிஞர் துரைசாமி உயர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மிகுதி 30 இலட்சத்தையும் சென்னையில் உள்ள இரண்டு தொழில் அதிபர்கள் கொடுத்திருப்பதாக நம்பப்படுகிறது.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதைப் பற்றி கருத்துச் தெரிவித்த கலைஞர் கருணாநிதி ‘மங்கை சூதகமானால் கங்கையில் முழுகலாம் கங்கையே சூதகமானால் எங்கே போய் முழுகுவது’ என்று கேட்டுள்ளார்.
ஒரு மனிதனது வீழ்ச்சிக்கு பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை காரணம் எனச் சொல்வார்கள்.
ஜெயேந்திரரைப் பொறுத்தளவில் பொன்னாசையே அவரது வீழ்ச்சிக்கு காரணமாக இருந்திருக்கிறது.
பொதுவாக மடங்கள், ஆதீனங்களில் முறைகேடுகளும் கிரிமினல் குற்றங்களும் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் அங்கே குவிந்து கிடக்கும் கோடிக்கணக்கான சொத்துக்களும் செல்வங்களுமே காரணமாகும்.
இந்த சொத்துக்களை அனுபவிப்பதில் போட்டி பொறாமை ஏற்பட்டு அடிதடி, கொலை என்கிற அளவுக்கு போய் விடுகிறது. அளவுக்கு அதிகமாக செல்வம் சேருகிறபோது அங்கே மடாதிபதிகளுக்கும், சாமியார்களுக்கும் சபலம் ஏற்படுகிறது. பெண்கள் சம்பந்தப்பட்ட சிக்கல்களும் உருவாகின்றன.
மடாதிபதிகள் தங்களது காவியும் கமண்டலமும் உருத்திராட்சமும் தண்டமும் மேலிடத்து அரசியல் உறவும் தொடர்பும் தங்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றும் என்று நம்பி இப்படியான குற்றங்களைத் துணிந்து செய்கிறார்கள்.
நாகபட்டினம் மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள திருவாடுதுறை மூத்த ஆதீனத்தை கொலை செய்ய இளைய ஆதீனம் சதித் திட்டம் தீட்டியதற்காக கைது செய்யப்பட்ட நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஆவணி 7 ஆம் நாள் நடந்தது. மூத்த ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியாரை விச ஊசி ஏற்றிக் கொல்ல முயற்சித்த வழக்கில் இளைய ஆதீனத்துக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த ஆதீனத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் இருப்பதே இந்தக் கொலை முயற்சிக்குக் காரணமாகும்.
இதுபோல மதுரையில் ஆதீனத்துக்கு சொந்தமான சொத்துக்களை கையாட நினைத்தார் என்ற குற்றம்சாட்டில் இளைய ஆதீனத்தை மதுரை ஆதீனம் அருணகிரி சுவாமிகள். பதவிநீக்கம் செய்தார். இந்தப் பதவி நீக்கம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
காஞ்சி மடத்துக்கு வந்த சோதனையும் பணம் வடிவத்தில்தான் வந்தது. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்;கும், கொலையுண்ட சங்கரராமனுக்கும் பண விஷயமாக மோதல் இருந்து வந்திருக்கிறது. காஞ்சி மடத்துக்கு வெளிநாட்டு பெண்மணி ஒருவர் ஆண்டுதோறும் ரூ. ஒரு கோடி வீதம் நன்கொடையாக அனுப்பிக்கொண்டு வந்திருக்கிறார்.
இதை சங்கரராமன் மொட்டைக் கடிதம் போட்டு கெடுத்து விட்டார். ஜெயேந்திரர் போக்கு சரியில்லை என்றும், இனிமேல் பணம் அனுப்பாதீர்கள் என்றும் அந்த வெளிநாட்டு பெண்ணுக்கு சில ஆதாரங்களுடன் சங்கரராமன் கடிதம் எழுதி உள்ளார். இதனால் அந்த பெண்ணிடம் இருந்து கிடைத்து வந்த ரூ. ஒரு கோடி ஒரு சில ஆண்டுகளாக காஞ்சி மடத்துக்கு வராமல் நின்று போனதாம். இதுதான் ஜெயேந்திரருக்கும் சங்கரராமனுக்கும் இடையே நடந்த உச்ச கட்ட மோதல் என்கிறார்கள்.
காஞ்சி சங்கர மடத்துக்கு இந்தியா முழுவதும் ரூ.5000 கோடி சொத்துக்கள் (மாலைமலர்) இருப்பதாக சொல்லப்படுகிறது இவற்றை தமிழக அரசு தனது நேரடி கண்காணிப்பில் கொண்டு வரவேண்டும் என்று உயிரோடு இருந்தபோது சங்கரராமன் சரமாரியாக மனுக்களை அரசுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். இதுவும் ஜெயேந்திரருக்கு சங்கரராமன் மீதான ஆத்திரத்தை அதிகப் படுத்தியது.
தற்போது சங்கரமடத்துக்கு சொந்தமான சொத்துக்கள் வருமாறு:
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்
காஞ்சிமடம்
சமஸ்கிருதப் பள்ளி
சங்கரமடத்தைச் சுற்றியுள்ள நிமித்தகாரத் தெருவில் உள்ள வீடுகள்
குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை
திருப்பதி சங்கரமடம்
சங்கர நேத்ராலாயா
திருப்பதி ஜன்கல்யாண் அறக்கட்டளை
நித்திய அன்னதான அறக்கட்டளை
காஞ்சிபுரம் சங்கரா நிகர்நிலை பல்கலைக்கழகம்
இதுதவிர தமிழகம் முழுவதும் மற்றும் ஹைதராபாத், நேபாளம், காசி, பூரி போன்ற இடங்களில் பலகோடி சொத்துக்கள் அடங்கிய மடங்கள் இருக்கின்றன.
சமீபத்தில் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரருக்கு நடத்தப்பட்ட கனகாபிஷேகத்துக்கு வந்த கிலோ கணக்கான தங்கமும் சொத்துக்கள் பட்டியலில் அடங்கும்.
எல்லா மதங்களிலும் போலிச் சாமியார்கள், பாலியல் சாமியார்கள் இருந்தாலும் இந்து சமயத்தில் அது அளவுக்கு அதிகமாக இருக்கிறார்கள்.
‘பொதுவாக மடாதிபதிகள் அவர்கள் அணிந்திருக்கின்ற ஆடையையும், போட்டிருக்கின்ற துளசி மணி மாலை, உருத்ராட்ச மாலைகள் போன்றவற்றையும் தாங்கள் தவறு செய்வதற்கான பாதுகாப்புக் கேடயங்கள் என்று கருதுகின்ற வரையில் இவைகள் எல்லாம் நடக்கும். உண்மையிலேயே புனித மானவர்கள் இப்படிப் பட்ட காரியங்களிலே ஈடுபடமாட்டார்கள்’ என கலைஞர் கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
பொது மக்களது, குறிப்பாக பெண்களது மூட நம்பிக்கைகளையும் குருட்டுப் பக்தியையும் பயன்படுத்தியே இந்தப் போலிச் சாமியார்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.
ஒரு போலிச் சாமியார் சட்டத்தின் பிடியில் சிக்குண்டு சிறையில் அடைக்கப்பட்டால் உடனே இன்னொரு சாமியார் கடையை விரிக்ககிறார். பொது மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுகிறார்கள்.
இனிமேலாவது இந்து சமயத்தவர்கள் போலிச் சாமியார்களிடம் ஏமாறாமல் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. காரணம் பக்தி இருக்கிற இடத்தில் புத்தி இருக்காது. (ஈழநாடு – கார்;திகை 8, 2004)
மாமியார் வீட்டு சாமியார்கள் (2)

அர அர சங்கர! செய செய சங்கர!

ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
இந்தப் பழமொழி காஞ்சி சங்கர மடத்துக்கு முற்றிலும் பொருத்தமாக இருக்கிறது. வரதராசப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலையை விசாரித்த காவல்துறை சங்கராச்சாரியார்கள் சங்கர மடம் என்ற திரைக்குப் பின்னால் செய்த ஊழல்கள் மற்றும் மன்மத லீலைகள் அம்பலத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
பொன், பெண், மண் ஆசைகளைத் துறந்து, காவி கட்டி சந்நியாசம் வாங்கிய சங்கராச்சாரிகள் அந்த மூன்று ஆசையில் ஒரு ஆசையைக் கூட விடாமல் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒருமுறை உரையுடன் கூடிய முப்பால் (திருக்குறள்) ஏட்டுச் சுவடி ஒரு ஆதீனத்தில் இருப்பதைக் கேள்விப்பட்ட ஒரு பதிப்பாளர் அதனைப் பெற்று ஒரு நூலாக வெளியிட ஆசைப்பட்டார்.
எனவே அந்த ஆதீனத்துக்கு அவர் ‘உங்களிடம் முப்பால் உரையோடு கூடிய திருக்குறள் இருப்பதாக அறிந்தோம். தயவு கூர்ந்து அதனை அனுப்பி வைத்து உதவுங்கள். படியெடுத்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிடுகிறோம்’ என ஒரு கடிதம் எழுதினார்.
ஒரு கிழமை கழித்து பதில் வந்தது.
‘மடத்தில் பொருளும் காமமும் இருக்கின்றன அறம் இல்லை அறம் காணாமல் போய் வெகு நாள்களாகிவிட்டன. தேடிக் கொண்டிருக்கிறோம். அகப்பட்டால் அனுப்பி வைக்கிறோம்’ என்று மடத்தின் தலைவரிடமிருந்து பதில் வந்தது.
மறைந்த தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் இந்த நகைச்சுவைத் துணுக்கை மேடைகளில் சொல்வது வழக்கம.;
சங்கர மடத்தில் பொன் இருந்தது, காமம் இருந்தது, அறம்தான் இல்லாமல் போயிற்று. அதாவது ஒழுக்கம் இல்லாமல் போய்விட்டது.
சங்கரமடம் தமிழ்மொழி வெறுப்புக்கும், பார்ப்பன ஆதிக்கத்துக்கும், சாதி ஆசாரத்திற்கும் எப்போதுமே பெரிய கோட்டையாக விளங்கி வந்திருக்கிறது.
சமஸ்கிருதம் தேவ பாசை, தமிழ் நீச பாசை. குடமுழுக்கு தமிழில் செய்யக் கூடாது. அந்த மொழி கடவுளுக்குத் தெரியாது. தமிழில் அர்ச்சனை செய்வது ஆகம விரோதம்.
தீண்டாமை சேமகரமானது. பகவான் விருப்பப்படி அவரவரும் அவரவரது சாதிக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்ய ணே;டும். அதுதான் சுயதர்மம்.

சங்கரமடத்து ஊழியர்கள் அடிமுதல் நுனிவரை எல்லோரும் பார்ப்பனர்களே. கணக்காளர் தொடங்கி கார் ஓட்டி வரை எல்லோருமே அவாள்தான்!

சங்கரமடம் 2500 ஆண்டுகள் பழமையானது என்று கண்டமேனிக்குத் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காலடி என்ற சிற்றூரில் வாழ்ந்த ஆதி சங்கரர் (கி.பி. 788-820) எப்படி காஞ்சியில் தனது பெயரில் மடம் ஒன்றைத் தோற்றிவித்திருக்க முடியும்? கோபெல்ஸ் பாணியில் ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால் அது மெய்யாகிவிடும் என சங்கர மடம் நம்புகிறது.
சங்கரராமன் கொலையை விசாரித்த காவல்துறையினர் 25 எதிரிகளுக்கும் எதிராக 1780 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை தயாரித்து இருக்கிறார்கள். 370 சாட்சிகளது சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 40 பெண்களும் அடங்குவர்.
காஞ்சிபுரம் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், அவரது தம்பி விசுவநாத ஐயர், இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர், அவரது தம்பி இரகு, கூலிப்படை தலைவன் அப்பு, பணம் பட்டுவாடா செய்ததாக ஒப்பந்தகாரர் இரவி சுப்பிரமணியம் உள்பட 25பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இரகு சுந்தேரச ஐயர் உட்பட குற்றம்சாட்ட 10 பேர் ஓர் ஆண்டு காலம் பிணையில் வராதபடி குண்டர் சட்டம் அவர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ளது.
உற்றார் உறவினர் உறவைத் துறந்த சங்கராச்சாரிகள் இருவரும் தங்கள் உறவுகளை கொண்டு வந்து மடத்தில் உயர்ந்த பொறுப்பில் வைத்திருக்கிறார்கள்.
இரவி சுப்பிரமணியம் 2 வது குற்றவாளி. இவன் இப்போது அரசு சாட்சியாக மாறி உள்ளான். இதையடுத்து நடந்த சம்பவங்களை நீதிபதி முன் ஒப்புதல் வாக்கு மூலமாகக் கொடுத்துள்ளான். இந்த ஒப்புதல் வாக்குமூலம் இந்த வழக்கின் அத்திவாரமாக காவல்துறைக்கு கிடைத்து உள்ளது.
சங்கரராமன் கொலை சம்பந்தமாக, காஞ்சி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் தயாரித்த குற்றப்பத்திரிகையை வரதராஜ பெருமாள் கோயிலில் வைத்து பூசை செய்துவிட்டு அதன் பின்தான் பக்ரீத் பண்டிகை விடுமுறை நாளில், இராகு காலம் கழிந்த பின்னர் நல்ல நேரத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார். காவல்துறை அதிகாரியின் இந்த பக்திரசம் அரசியல் யாப்பின் கொள்கையான மதசார்பற்ற கோட்பாட்டுக்கு எதிரானதாகும்.
மேலும் காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் இந்த வழக்கில் வரதராச பெருமாள்தான் கண்கண்ட சாட்சி (நலந றவைநௌள) என்றும், இந்த வழக்கே கடவுள் வரதராச பெருமாளுக்கும், சங்கர மடத்திற்கும் இடையே நடப்பது தான் என்றும் சொல்லியுள்ளது பெரிய கேலிக்கூத்தாகும். பொறுப்புள்ள அதிகாhரி இப்படி பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பதை திமுகவும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டித்துள்ளன. இப்படிப்பட்ட காவல்துறை அதிகாரியின் கேலிக்கூத்தான செயலுக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டுமெனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
வரதராச பெருமாள் கண்கண்ட சாட்சி என்றால் அவருக்கு விசாரணையில் சாட்சியமளிக்க அழைக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பதில் தவறு ஏதுமில்லை என கலைஞர் கருணாநிதி கிண்டல் செய்துள்ளார்.

இரவி சுப்பிரமணியன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் சங்கரராமன் கொலை செய்யப்பட்டது எப்படி? இதில் ஜெயேந்திரருக்கு என்ன பங்கு? விஜயேந்திரருக்கு என்ன பங்கு என்பன பற்றிய திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளான்.

அவனது ஒப்புதல் வாக்குமூலம் காவி உடைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சங்கராச்சாரியார்களின் இருண்ட பக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
‘1995 இல் தாம்பரத்தில் தங்கியிருந்த ஜெயேந்திரரை பார்க்க விசுவநாதன், அவரது மனைவி சரஸ்வதியுடன் (கோர்லிக்ஸ் சியாமளா) நானும் சென்றிருந்தேன். சரஸ்வதி தனியாக ஜெயேந்திரரை பார்த்து வந்தபோது வருத்தமாக வந்தார். ஜெயேந்திரர் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் தான் சம்மதியாமல் கோபித்துக் கொண்டு வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
நான் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று சரஸ்வதியை கேட்டுக்கொண்டேன். அடுத்த நாள் ஜெயேந்திரரே சரஸ்வதியிடம் போனில் மன்னிப்பு கேட்டார்.
ஜெயேந்திரருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு உண்டு. பிரேமா, பத்மா, ரேவதி போன்ற பல பெண்கள் ஜெயேந்திரரை அடிக்கடி தனிமையில் சென்று பார்ப்பார்கள். அவருக்கு ஆபாசப்படம் பார்க்கும் பழக்கமும் உண்டு.

கடந்த 1998-ம் ஆண்டு திருவொற்றியூர் சங்கரா காலனி அமைக்கும் பொறுப்பை என்னிடம் ஜெயேந்திரர் ஒப்படைத்தார். அந்த காலனியில் ரூ.12 கோடி செலவில் 333 வீடுகளை கொண்ட அடுக்கு மாடி வீடுகளை கட்டுமாறு என்னிடம் கூறினார்.

அந்த காலனி அமைப்பதற்கு முன்புறம் இருந்த ஆக்கிரமிப்புகள் தடையாக இருந்தன. அந்த ஆக்கிரமிப்புகளை நான் அகற்றிக் கொடுத்தேன்.
ஜெயேந்திரர் என்னிடம் மிகவும் பிரியமாக இருப்பார். அவருடைய பிறந்தநாள் விழாக்களில் நான் தங்கத்தினால் ஏதாவது பரிசு பொருட்களை கொடுப்பேன்.
அவரது 63-வது பிறந்தநாளில் நாலரை லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடத்தை சூட்டினேன். 64-வது பிறந்த நாளிலும் அதே மதிப்பில் இன்னொரு தங்க கிரீடம் செய்து கொடுத்தேன். 65-வது பிறந்தநாளில் 65 தங்க காசுகளை பரிசாகக் கொடுத்தேன்.
உறவுகளைத் துறந்து சன்னியாசம் வாங்கிய சங்கராச்சாரியார் இப்படி பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்படலாமா? முற்றும் துறந்த துறவிக்கு இருக்க வேண்டிய இலக்கணம் இவருக்கு இருக்கிறதா? வாக்குமூலம் தொடருகிறது.
‘நான், அப்பு, கதிரவன் ஆகிய 3 பேரும் ஜெயேந்திரரை சந்தித்தோம். அப்போது அவர் எங்களிடம் தன்னை 2 பேர் பிளாக்மெயில் செய்கிறார்கள். அதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று கூறினார். அதற்கு அப்பு அது பற்றி கவலை வேண்டாம் என்று ஜெயேந்திரரிடம் கூறினார். இதைத் தொடர்ந்து ஒருநாள் காலை 8 மணிக்கு ஜெயேந்திரர் தன்னை சந்திக்குமாறு என்னை அழைத்தார். நானும் அதன்படி சென்று அவரை சந்தித்தேன்.’
அப்போது விஜயேந்திரரின் தம்பி இரகு உடனிருந்தார். பின்னர் ஆடிட்டர் இராதாகிருஷ:ணன், வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் ஆகியோரின் பாஸ்போர்ட் அளவு போட்டோக்களை என்னிடம் தந்தனர். நான் அந்த படங்களை எனது உறவினர் சந்தானம் மூலம் கதிரவனிடம் கொடுத்து அனுப்பினேன். அதன்பிறகுதான் இராதாகிருஷ:ணன் தாக்கப்பட்டார்.
இராதாகிருஷ:ணன் தாக்கப்பட்டதை ஜெயேந்திரரே போனில் என்னிடம் தெரிவித்தார். மேலும் இராதாகிருஷ:;ணன் தாக்கப்பட்டதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை காட்டுவதற்காக சங்கர மடத்தின் ஏஜெண்டு நீலகண்ட அய்யர், நெய்வேலி கிருஷ்:ணமூர்த்தி என்பவரையும் அனுப்பி இராதாகிருஷ:ணனை பார்த்து வரச்செய்தார்.
ஜெயேந்திரர் கொடுத்தனுப்பிய பிரசாதத்தை இருவரும் இராதாகிருஷ:ணனிடம் கொடுத்துவிட்டு வந்தனர். இதற்கிடையே இராதாகிருஷ்:ணனை தாக்கியதற்காக ஆயிரம் ரூபாய்நோட்டுக்கள் அடங்கிய பெரிய பணக்கட்டு ஒன்றை ஜெயேந்திரர் என்னிடம் கொடுத்தார். அதை நான் கதிரவனிடம் கொடுத்தேன்.
நானும், அப்புவும், கதிரவனும் ஜெயேந்திரரை 01-09-2004 இல் சந்தித்தோம். இறுதி அறிவிப்பு என்ற தலைப்பில் சங்கரராமன் எழுதிய கடிதத்தை ஜெயேந்திரர் அப்புவிடம் கொடுத்து இனிமேல் இப்படி ஒரு கடிதம் வரக்கூடாது என்று கூறினார். சங்கரராமனை தீர்த்துக்கட்டும்படி ஜெயேந்திரர் அப்புவிடம் தெரிவித்தார். ரூ.50 லட்சம் செலவானாலும் பரவாயில்லை என்று தெரிவித்தார்;.
விஜயேந்திரர் பணத்துக்கான ஏற்பாட்டை இரகு மூலம் செய்வார் என்று எங்களிடம் தெரிவித்தார்.

அப்போது பக்கத்தில் இருந்த சங்கரமட மேலாளர் சுந்தரேச ஐயரை அழைத்த ஜெயேந்திரர்இரவிக்கு தேவையான பணத்தைக் கொடுத்துடு என்று சொன்னதோடு, தன்னருகே இருந்த ஒரு பெட்டியில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார்.

இந்த சந்திப்பு முடிந்தவுடன், ‘சங்கரராமனால் விஜயேந்திரர்தான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரையும் பார்த்துட்டுப் போங்க’ என்று ஜெயேந்திரர் சொல்ல, அடுத்ததாக மூவரும் விஜயேந்திரர் அறைக்குப் போனோம்.
‘சங்கரராமனால் இனி தொந்தரவு எதுவும் இருக்கக்கூடாது. அதுக்கான காரியங்களைச் செய்யுங்கோ, தேவையான பணத்தை இதோ இவன் கொடுப்பான் ‘ என்று பக்கத்திலிருந்த தன் தம்பி இரகுவை காண்பித்தார்.
விஜயேந்திரர் இரகு இருவரும் கடிகாஸ்ரம டிரஸ்ட்டிலிருந்து அன்று இரவே எனக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு செக் எழுதிக் கொடுத்தார்கள்.
திரும்பி வரும் வழியில் சங்கரராமனை முடித்துவிடும்படி அப்பு கதிரவனிடம் தெரிவித்தார்.

மறுநாள் நானும், கதிரவனும் போர்டு காரில் காஞ்சிபுரம் வந்து கொண்டிருந்தோம். வரதராஜபெருமாள் கோவில் அருகே இறங்கினோம். கதிரவன் செல்போனில் பேசவும் சின்னான் வந்தார். நாங்கள் மூவரும் காரில் சென்றோம். சங்கரராமன் வீட்டை கதிரவன் சின்னானுக்கு அடையாளம் காட்டினார். அன்றே சங்கரராமன் கதையை முடித்து விடும்படி சின்னானிடம் கதிரவன் கூறி ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார்.

நாங்கள் ஜெயேந்திரரை சந்தித்து விவரம் சொல்லிவிட்டு சென்னை வந்தோம்.
மறு நாள் 03-.09-2004 மாலை அப்பு எனக்கு போன் செய்து சோழா கோட்டலுக்கு வரும்படி சொன்னார். நான் பார்க்கச் சென்றேன். அங்கே கதிரவனும் இருந்தார். அப்போது கதிரவனுக்கு செல்போன் வந்தது. அதையடுத்து கதிரவன், சங்கரராமன் கதை முடிந்துவிட்டதாக சைகை மூலம் தெரிவித்தார்.
சங்கரராமன் கொலைக்கு கூலியாக ரூ.10 லட்சத்தை அப்பு மூலம் கதிரவனுக்கு கொடுத்தேன். பணம் பெற்றதற்கு அப்புவிடம் கையெழுத்தும் வாங்கினேன்.
மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து விமானத்தில் நான் மும்பை சென்று விட்டேன். மும்பையில் செம்பூரில் தங்கியிருந்தேன். மும்பை புறப்படும் முந்நாள் ஜெயேந்திரரிடம் போனில் பேசினேன். ஒரு நாள் மட்டும் மும்பையில் தங்கிவிட்டு மறுநாள் மீண்டும் சென்னைக்கு வந்துவிட்டேன். சென்னை வந்து பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டேன்.
செப்தெம்பர் 06 ஆம் நாள் கிருஷ்:ண ஜெயந்தி அன்று நான் ஜெயேந்திரரை மீண்டும் சந்தித்தேன். அப்போது ஒரு அலுமினிய பெட்டியில் ரூ. 50 இலட்சத்தை வைத்து கதிரவனிடம் கொடுக்குமாறு ஜெயேந்திரர் சொன்னார். ‘நான் சொன்ன காரியத்தை முடித்துவிட்டாய்’ என்று கூறி 5 கிலோ இனிப்பும் வழங்கினார்.

இந்த நிலையில் இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரிப்பதை அறிந்தவுடன் ஜெயேந்திரரை நான் போய் பார்த்தேன்.

அவர் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்த நிலையில், ‘இந்த விஷயம் வெளியே தெரிந்தால் கையை உன் மீது காட்டிவிடுவேன். என்னை கைது செய்தால் இந்தியாவே குலுங்கும். இந்த அரசே இருக்காது. எனக்கு எந்த பிரச்சினையும் வராது’ என்று கூறினார். இதை கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்த நிலையில் 10 நாட்கள் கழித்து கதிரவன் என்னை சந்தித்து ரூ.20 லட்சம் கேட்டார். 5 போலி குற்றவாளிகளை கோர்ட்டிற்கு வரச்செய்வதற்கு இந்த பணம் தேவைப்படுவதாக கூறினார்.
நானும் ஜெயேந்திரரை சந்தித்து அந்த பணத்தை கேட்டேன். ரூ.20 லட்சம் கிடைத்தது. அதை சென்னை அமராவதி ஓட்டலில் வைத்து அப்புவிடம் கொடுத்தேன். அதன்பின்னரே போலி குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண் அடைய வைக்கப்பட்டனர்.
இதை ஜெயேந்திரரிடம் தெரிவித்தேன். அவர் சந்தோஷப்பட்டார். கதிரவன் போலீசாரிடம் சிக்கியதும் ஜெயேந்திரர் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். நானும் இந்தியா முழுவதும் பல்வேறு ஊர்களுக்கு சென்று சுற்ற தொடங்கினேன். கடைசியில் குருவாயூரில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த போது போலீசார் என்னை கைது செய்தனர்.’
இரவி சுப்பிரமணியம் கொடுத்த வாக்கு மூலம் முழுதும் உண்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவன் சொல்வதில் பாதி உண்மை இருந்தால் கூட சங்கராச்சாரியார்கள் இந்தக் கொலை, கொலை செய்ய சதி ஆகியவற்றில் ஈடுபட்டார்கள் என்பது தெளிவாகிறது.

ஆனால் பார்ப்பனர்கள் சங்கரராச்சாரியார்கள் குற்றமற்றவர்கள் என்றும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனப் போராட்டம் நடத்துகிறார்கள்.

எல்.கே. அத்வானி, அடல் வாஜ்பாய், விசுவ இந்து பரிசத், ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி இராம.கோபாலன், சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் சனாதிபதி ஆர். வெங்கட்ராமன், முன்னாள் தேர்தல் ஆணையர் சேசன், இந்து என். இராம், துக்ளக் சோ, கல்கி இராசேந்திரன், தினமலர் கிருஷ்ணமூர்த்தி போன்றோர் ஒரே அணியில் திரண்டுள்ளார்கள்,
வரதராசப் பெருமாள் கோயில் வளாகத்தில், அந்தப் பெருமாள் கண்முன் கொலை செய்யப்பட்ட சங்கரராமன் ஒரு பார்ப்பனர். அவர் ஒரு வசதியற்ற ஏழைப் பார்ப்பனர் என்பதால் ஏனைய பார்ப்பனர்கள் அவருக்காகக் குரல் கொடுக்க மறுக்கிறார்கள்.
அப்படியென்றால் சங்கரராமன் கொலை செய்யப்படவில்லை அவர் தன்னைத்தானே அரிவாளால் வெட்டி தற்கொலை செய்து கொண்டார் என நினைக்கிறார்களா?
உண்மையில் இந்து மதத்தைக் காப்பாற்ற விரும்புவோர் என்ன செய்ய வேண்டும?;இந்த சங்கராச்சாரியார்களுக்கும் இந்து மதத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று கூற வேண்டும்.

சங்கராச்சாரியார்கள் தங்கள் பதவிகளை விட்டு விலகி இருக்க வேண்டும். விலகும்படி இந்து மதவாதிகள் கேட்க வேண்டும். அதுதான் முறை.

காவி உடையில் இருக்கும் ‘கடவுள் அவதாரம்’ ‘லோக குரு’ குற்றமே செய்ய மாட்டார்கள் அவர்கள் உத்தமர்கள் என ‘அர அர சங்கர செய செய சங்கர’ என பசனை பாடுவது கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும். (முழக்கம்)
மாமியார் வீட்டு சாமியார்கள் (3)
பெருமாளுக்கு அழைப்பாணை? காமாட்சி மயக்கம்!
நக்கீரன்
இடம் – காஞ்சி வரதராசப் பெருமாள் கோயில் கருவறை
காலம் – உச்சிப் பொழுது
பாத்திரங்கள் – காஞ்சி வரதராசர், காஞ்சி காமாட்சி.
(திரை விலகுகிறது)

(புகழ்பெற்ற காஞ்சி வரதராசப் பெருமாள் நாடியில் கைவைத்துக் கொண்டு ஒரே சோகமாக இருக்கிறார். அப்போது பக்கத்துக் கோயிலில் குடியிருக்கும் காஞ்சி காமாட்சி அம்மன் ஓசைப்படாமல் அடிமேல் அடியெடுத்து கோயில் திருக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைகிறார். வரதராசப் பெருமாள் இருந்த கோலத்தைப் பார்த்து சற்றே திடுக்கிட்டு….)

காமாட்சி -‘தேவரீர்! இது என்ன கோலம்? எப்போதும் கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் நீங்கள் இன்று இப்படி நாடிக்குக் கைகொடுத்துக் கொண்டு கப்பல் தாண்டவன் மாதிரி ஒரே சோகமாக இருக்கிறீர்களே? அப்படி என்னதான் தலைபோகிற விடயம் நடந்து விட்டது?
பெருமாள் – ஏன் கேட்கமாட்டாய்? நான் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு இருப்பது உனக்குத் தெரியதா?
காமாட்சி – எனக்கு எப்படித் தெரியும்? சொன்னால்தானே தெரியும்!
பெருமாள் – அப்ப நீ அன்றாடம் செய்தித்தாள்களைப் படிப்பதில்லையா?
காமாட்சி – ஐயோ! நான் இப்போதெல்லாம் செய்தித்தாள்களை கையால் கூடத் தொடுவதில்லை. செய்தித்தாளை விரித்தால் அங்கே கொலை இங்கே கொலை என்று ஒரே கொலைச் செய்திகள்! எனக்குப் பயமாக இருக்கிறது!
பெருமாள் – என்னுடைய சன்னிதி வளாகத்தில் மேலாளர் சங்கரராமன் பட்டப் பகலில் அதுவும் ஒரு வெள்ளிக்கிழமை அப்புவின் கூலிப்படையால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைத்தானே சொல்கிறாய்?
காமாட்சி – ஆமாம். அதற்குப் பின்னர் அரசியல்வாதி ஆலடி அருணாவை ஒரு கூலிப்படை வீதியில் வைத்து வீச்சரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளது. அப்புறம் ஆளும் கட்சி எம்எல்ஏ சுதர்சனம் என்பவரை வடநாட்டு கொள்ளையர் வீடு புகுந்து சுட்டுக் கொன்று போட்டான்கள். அதுசரி மேலாளர் சங்கரராமனை அப்புவின் கூலிப்படை வெட்டிக் கொன்றாலும் காஞ்சி காமகோடிபீட ஜெயேந்திரர் சரஸ்வதி சங்கராச்சாரியார் சொல்லித்தான் கொன்றதாக அரச சாட்சியாக மாறிய ஒப்பந்தகாரர் இரவி சுப்பிரமணியம் சொல்கிறானே? ஜெயேந்திரர் சொல்லி விஜேய்ந்திரர் தம்பி இரகு 50 இலட்சம் கொடுக்கப்பட்டதாக அதே இரவி சுப்பிரமணியம் வாக்கு மூலம் கொடுத்துள்ளானே?
பெருமாள் – மெல்லப் பேசு. இப்போதுதான் செய்தித்தாள் எதுவும் படிப்பதில்லை என்றாய் ………………….இந்த சங்கராச்சாரியார்களால் எங்களது மானம் மட்டுமல்ல மொத்தமாக இந்து மதத்தின் மானமும் காற்றில் போய்விட்டது. இந்தப் பெரியார், அண்ணாத்துரை போன்றவர்களால் ஏற்கனவே இந்தக் காவிச் சட்டைக்கு மதிப்பில்லாமல் இருந்தது. இப்போது மிச்சசொச்சமாக இருந்த மதிப்பும் போய்விட்டது!
காமாட்சி – இதற்கெல்லாம் கவலைப்பட முடியுமா? நீங்களே ஒவ்வொரு அவதாரம் எடுத்த போதெல்லாம் இராவணன், நரகாசுரன், இரணியன், மாபலி என்று கொன்று இருக்கிறீர்களே? உங்கள் பக்தர்கள் உங்கள் முன்மாதிரியை அடியொட்டி நடக்கிறார்கள் என்று நினைக்கிறேன்!
பெருமாள்;; – நீ நினைக்கிறது போதும். நான் அரக்கர்களை அழித்து தேவர்களைக் காப்பாற்றினேன்! இது நிலத்தேவர்களே இன்னொரு நிலத் தேவரை அடியாட்களை வைத்துச் செய்த கொலையாச்சே? சரி சரி எதற்கு வீண் தர்க்கம். இனி நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசுவோம். நேற்றுக் காலை சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்த காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் என் சன்னிதிக்கு வந்தான். பூசை செய்ய தேங்காய், வெற்றிலைபாக்கு, பழங்கள், மாலை ஆகியவற்றோடு பயபக்தியோடு வருகிறான் என்று பார்த்தால் பூசைத் தட்டின் நடுவே குற்றப் பத்திரிகைக் கட்டு!
‘பெருமாளே உன் சன்னதியில் கொலை நடந்துள்ளது. அதனால் தான் குற்றப்பத்திரிகையை உன் காலடியில் வைக்கிறேன். சத்தியத்துக்கும் அநியாயத்துக்கும் இடையில் நடக்கும் போட்டி இது. உண்மையில் தப்பு நடந்திருந்தால் அவர்களைத் தண்டித்துவிடு. தவறு செய்யாவிட்டால் விடுதலை செய்துவிடு. உன் சன்னதியில் நடந்த கொலைக்கு நீதான் கண்கண்ட சாட்சி. இதற்கு நீயே தீர்ப்பு எழுதிவிடு’ என்று மனமுருக வேண்டினான். பின்னர் தாயார் சன்னதியிலும் இதே டயலக் பேசி வேண்டுதல் செய்து கொண்டான்.
காமாட்சி – எனக்கும்தான் வழக்கில் இருந்து தப்ப நாள் முழுதும் தியானம், பூசை. அபிசேகம், யாகம் செய்கிறார்கள். அதற்கெல்லாம் நான் ஏமாந்து விடுவேனா என்ன? தினை விதைத்தவன் தினையை அறுப்பான். வினை விதைத்தவன் வினையை அறுப்பான். அதுதான் தெய்வ நீதி!
பெருமாள் – நானும் உன் கட்சிதான். ஆனால் இன்று காலை வெளிவந்த செய்தித்தாளில் இந்தக் கருணாநிதி, முன்னாள் முதல்வர், கிண்டலும் கேலியுமாக ஒரு அறிக்கை விட்டு என் மானத்தை வாங்கி இருக்கிறான்! அந்த அறிக்கையில் எக்கச்சக்கமான கேள்விகள்! சங்கரராமன் கொலைக்கு நான்தான் ஐ விட்னஸ் (நலந றவைநௌள) என்கிறான். ‘இந்த வழக்கில் துப்புத் துலக்கிச் சமர்ப்பித்த ஆவணங்களைக்கூட நம்பாமல், சாட்சிகளின் வாக்குமூலத்தை நம்பாமல் ஆண்டவன் காலடியில் குற்றப்பத்திரிகையை வைத்து நீ தண்டித்துவிடு என்று ஒரு எஸ்.பி வேண்டுகிறார். நேரில் பார்த்த சாட்சி என்றால் வரதராஜ பெருமாளுக்கு சம்மன் வருமா? ‘ என்று ஒரே கிண்டல்!
காமாட்சி — அப்படியா?
பெருமாள் – என்ன அப்படியா? என்று கேட்கிறாய். இந்தா இந்தச் செய்தித்தாளைப் படித்துப் பார்த்துவிட்டு அப்புறம் பேசு!
(பெருமாள் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை பிரசுரமான தினகரன் செய்தித்தாளை எடுத்துக் கொடுக்கிறார். காமாட்சி அச்தச் செய்தியைப் படிக்கிறார்)
நேரில் பார்த்த சாட்சி என்றால் வரதராஜ பெருமாளுக்கு சம்மன் வருமா?
கருணாநிதி கேள்வி

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் நேரில் பார்த்த சாட்சி என்றால் வரதராஜ பெருமாளுக்கு சம்மன் வருமா? என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கருமமே கண்ணாக இருந்து காஞ்சி சங்கரராமன் கொலை தொடர்பாக இரண்டு சங்கராச்சாரியார்கள் உள்பட 25 பேர் மீது குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு தொடரக் கைது செய்து, அதிர்ச்சி தரக்கூடிய பல செய்திகளை அம்பலத்திற்குக் கொண்டு வந்த காஞ்சி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார், இந்த பிரபலமான வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையை நல்லநாள் பார்த்து, நல்ல நேரத்தில் தாக்கல் செய்யவேண்டுமென்பதில் மிகக்குறியாக இருந்து, பக்ரீத் விடுமுறை நாளாக இருந்தாலுங்கூட, அன்றைக்கு ஒரு சிறப்பு நேர்வாக நீதிமன்றத்தில் நீதிபதியிடம் வழங்கியுள்ளார். என்ற செய்தி தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும் விரிவாக முக்கியத்துவம் அளிக்கப்பெற்று வெளிவந்துள்ளது.
மத உணர்வு, அரசியல் மாயம் இவற்றைப் பின்னணியாக கொண்டு, மதச்சார்புடைய சில கட்சிகள் இந்த வழக்கு பற்றிய பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாலுங்கூட அந்த உணர்வுகளுக்கு அணுவளவும் இந்த அரசும் அன்னியமானதல்ல என்பதை நிலைநாட்டும் வண்ணம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிகழ்ச்சியும் அதனைத் தாக்கல் செய்த காவல்துறை கண்காணிப்பாளர் அதிகாரி பிரேம்குமார் செவ்வியும் அமைந்துள்ளது என்றே ஐதீகத்திலும், வைதீகத்திலும் அழுத்தமான நம்பிக்கை வைத்தோர் ஆறுதல் பெறுவார்கள்.
நல்ல நாள், நல்லநேரம் பார்த்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீஸ் அதிகாரி, நீதிமன்றம் செல்வதற்கு முன்பு, வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று, அந்த குற்றப்பத்திரிகைக் கட்டினைப் பெருமாள் சன்னதியில் வைத்து பூஜை செய்துவிட்டுத்தான் எடுத்துப் போயிருக்கிறார் என்பது சங்கரமடத்தில் உள்ளவர்களின் பக்தி அனுசாரத்திற்கு அவர் ஒன்றும் சளைத்தவரல்ல என்பதை சவால்விட்டு சொல்வதாக அமைந்துள்ளது என்றே பக்த சிரோன்மணிகளால் பாராட்டப்படும்.
அது மட்டுமல்ல, குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டதையொட்டி அந்த அதிகாh பத்திரிகை நிருபர்களுக்கு அளித்த பேட்டிதான் மிக மிக முக்கியமானது.
நடிகைகள், கதாசிரியைகள் உள்ளிட்ட 40 பெண்களையும் சேர்த்து அரசு தரப்பு சாட்சிகள் 370 பேர் என்று பட்டியலிடப்பட்டு அந்தச் சாட்சிகள், எந்தெந்த விஷயம் பற்றி சாட்சியமளிப்பார்கள் என்பதையும் காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் விவரமாக நிருபர்களிடம் சொல்லியிருக்கிறார். அது ஏடுகளில் விரிவாக வெளியிடப்பட்டிருக்கிறது.
வழக்கு சம்பந்தமான ஒவ்வொரு குற்றப்பிரிவு பற்றியும் மூன்றாண்டு சிறைமுதல் தூக்கு வரையில் தண்டனை கிடைக்கும் என்பதையும் செவ்வியில் தெரிவித்துள்ள அதிகாரி பிரேம்குமார், இந்த வழக்கில் வரதராஜபெருமாள்தான் முக்கியமான சாட்சி என்றும் நேரில் பார்த்த சாட்சி என்றும் இந்த வழக்கே வரதராஜபெருமாளுக்கும் சங்கர மடத்துக்குமிடையே நடப்பதுதான் என்றும் தெளிவுபடக் கூறியுள்ளார்.
இந்தப் பேட்டி சங்கரமடத்தையும் மீறிய பக்திரசம் சொட்டுவதாக இருந்தாலும் ஒரு சாதாரண பாமரனுக்கு ஏற்படுகிற சந்தேகத்திற்கு என்ன பதில் கிடைக்குமென்று தெரியவில்லை.
பட்டியலிடப்பட்டுள்ள 370 சாட்சிகள் சம்மன் அனுப்பப்பெற்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்களேயானால், போலீஸ் அதிகாh பிரேம்குமாரால் முக்கியமான சாட்சி என்றும், நேரில் பார்த்த ‘ ஐவிட்னஸ்’ என்றும் கூறப்பட்டுள்ள வரதராஜப்பெருமாளின் சாட்சியத்தை அலட்சியப்படுத்த முடியுமா?
சங்கரராமன் கொல்லப்பட்ட காட்சியை நேரில் பார்த்ததாக வரதராஜப்பெருமாள் சொல்லும்போது, அப்படியொரு கொலை உமக்கு நேராக நடைபெறும் போது, அதைத் தடுக்க வேண்டுமென்ற எண்ணம் உமக்கு ஏற்படவில்லையா? அப்படி ஏற்பட்டதா? சங்கரராமனும் உமது பக்தர்தானே? அவர் சாவைத்தடுத்து நிறுத்தியிருக்கக்கூடாதா? தடுத்தீரா? தடுக்கவில்லையென்றால அதற்குரிய காரணம் என்ன? என்ற குறுக்கு கேள்விக்களுக்கெல்லாம் வரதராஜப்பெருமாள் முக்கிய சாட்சியாக நின்று பதில் சொல்ல வேண்டியிருக்குமே!
இதையெல்லாம் யோசிக்காமலா பெருமாள் முன்னே குற்றப்பத்திரிகையை வைத்து, அர்ச்சனை, பூஜைகள் செய்து, அவரையும் முக்கிய சாட்சியென்று அதுவும் கண்ணால்கண்ட சாட்சி என்று சொல்லியிருப்பார்கள்?
எனவே இந்த வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்க வரதராசருக்கு வருமா சம்மன் என்று எதிர்பார்ப்பதில் தவறு ஏதுமில்லை.
(செய்தியைப் படித்து முடித்ததும் காமாட்சி மூர்ச்சை ஆகி விழப் போகிறார். விழப்போன அவரை பாய்ந்து சென்று பெருமாள் கைத்தாங்கலாக பிடித்துக் கொள்கிறார்!) (திரை விழுகிறது)
சற்சூத்திரர்களான சைவ மடாதிபதிகள்

பழ நெடுமாறன்

தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்கள் தொன்மையும் பாரம்பரியமும் மிக்கவையாகும் சைவமும் – தமிழும் வளர்க்கத் தோற்றுவிக்கப்பட்டவை.
;;இறைவன் என்னைப் படைத்தனன் – தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’ என்ற வாக்கிற்கு இணங்க இறைத்தொண்டும் தமிழ்த்தொண்டும் செய்யப் பிறந்தவை மூவர் தேவாரங்கள், தேனினுமினிய திருவாசகம், இவற்றிற்கான தமிழ்ப்பண்கள் ஆகியவற்றைப் பேணிக் காக்கும் கடமை சைவ மடங்களுக்கு உண்டு.
சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தில் சாதி வேறுபாடின்றி எல்லாச் சாதிகளையும் சேர்ந்த நாயன்மார்களும் போற்றிச் சிறப்பிக்கப்பட்டதைப் பின்பற்றிச் சாதிப்பாகுபாடு இல்லாத சைவ சமயத்தை வளர்க்கத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியவை சைவ மடங்கள்.
தமிழ்நாட்டுச் சிற்பக் கலைக்கு உன்னதமான எடுத்துக்காட்டுக்களாகத் திகழும் கோயில்கள் சிதிலமடைந்தபோது உழவாரத் திருப்பணி செய்து அவற்றைப் பேணிக்காக்க வழிகாட்டிய திருநாவுக்கரசரைப் பின்பற்றித் தொண்டு புரிய வேண்டிய கடமை சைவ மடாதிபதிகளுக்கு உண்டு ஆனால் தமிழகத்தில் உள்ள சைவ மடங்களில் பெரும்பாலானவை மேற்கண்ட கடமைகளைத் தவிர வேறுவேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அண்டைநாடான இலங்கையில் திரிகோணமலையில் உள்ள கோணேசுவரம் கோயில், மன்னாரில் உள்ள திருக்கேதீசுவரம் கோயில் ஆகியவற்றில் உள்ள இறைவர்களைப் பாடி வணங்கினார்கள் சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் ஆனால் பாடல்பெற்ற அந்தக் கோயில்களும், மற்றும் நூற்றுக்கணக்கான சைவக் கோயில்களும் சிங்கள இனவெறியர்களால் இடித்துத் தகர்க்கப்பட்டபோது சைவமடாதிபதிகள் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தனர்.
சைவ சமயத்தைப் பின்பற்றிய ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோதும் சைவ மடாதிபதிகள் வாயிருந்தும் ஊமையராக விளங்கினார்கள் சைவம் தமிழும் தழைக்க வேண்டுமானால் ஈழத் தமிழர்கள் உயிரோடு இருக்க வேண்டும் ஈழத் தமிழினமே அழியுமானால் சைவம் தழைப்பது எப்படி? தமிழ் வளர்வது எப்படி?
தமிழ் மன்னர்களின் ஆணையின் வண்ணம் தமிழ்நாட்டுச் சிற்பிகளால் எழுதப்பட்ட கோயில்களில் தமிழ் நுழையத் தமிழ்ப் பகைவர்கள் தடை விதித்தனர் கோயில்களில் இறைவனைப்பாடி வழிபாடு செய்வதற்காகவே எழுதப்பட்ட தேவார, திருவாசகங்களைத் தீட்டு மொழி எனப் புறந்தள்ளிவிட்டுத் தமிழர்களுக்குப் புரியாத வடமொழியில் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது சைவ மடங்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான கோயில்களிலும் இதே நிலைதான்.
இவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வராத சைவ மடாதிபதிகள் தங்களின் நீண்ட தூக்கத்தில் இருந்து விழிப்புப் பெற்று அவசர அறிக்கையொன்றைக் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழிலேயே வழிபாடு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அறிக்கையா? அல்ல! அல்ல! அல்லவே அல்ல!
இலங்கையில் இடிக்கப்பட்ட சைவக் கோயில்களைப் புதுப்பித்துக்கட்ட உழவாரப் பணியை மேற்கொண்டு அங்குச் செல்லப் போவதாகக் கூறும் அறிக்கையா?
அல்ல! அல்ல! அல்லவே அல்ல!
பித்தா! பிறை சூடிப் பெருமானே! என நாள்தோறும் சிவனை வழிபட்டு உருகும் நமது மடாதிபதிகள் இப்படியெல்லாம் செய்யப் பித்தர்களா? இறைவன் வேண்டுமானால் பித்தனாக இருக்கலாம் இவர்கள் ஒரு போதும் பித்தர்களாக மாட்டார்கள் அதிர்ச்சியுடனும், அளவிலாத துயரத்துடனும் அவர்கள் கடந்த 17-11-0 அன்று கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழகச் சைவ ஆதினத் திருமடங்களான திருவாவடுதுறை, தருமபுரம், குன்றக்குடி, திருப்பனந்தாள், பேரூர் மற்றும் கவுமார திருமடங்களின் தலைவர்கள் சார்பாகக் குன்றக்குடிப் பொன்னம்பலத் தேசிகர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மிகப் பெரிய இந்து சமயத்தலைவர் காஞ்சி ஜெயேந்திரரை முன்னறிவிப்பு இன்றி, வக்கீல் இல்லாமல் இரவில் கைது செய்திருப்பது இந்து சமுதாய மக்களுக்கும், இந்து சமயத் தலைவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது ஆயிரத்து 50 ஆண்டுக்கு மேற்பட்ட ஒரு பெரிய திருமடத்தின் தலைவரை, அவர்களுக்குரிய மரியாதையோடு விசாரிக்க வேண்டும் அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்படும் மரியாதை, வசதிகள் கூட அவருக்கு அளிக்கப்படாமல் கைது செய்திருப்பது முறையானதா என்பதைச் சிந்திக்க வேண்டும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது உண்மை.
ஆனால், சட்டத்தைப் பிரயோகப்படுத்தும்போது அவர்களுக்குரிய தன்மையையும் இடத்தையும் பொறுத்துச் செயல்பட வேண்டியது மரபு ஜெயேந்திரர் இந்து சமுதாயத்துக்காக அரும்பாடுபட்டு வருபவர் இந்து மக்களின் பெரும் மதிப்பைப் பெற்றவர் இவருக்கு இந்நிலை ஏற்பட்டது குறித்துப் பெரிதும் வருந்துகிறோம் உண்மையைக் கண்டறிந்து தடம் புரளாமல் நேர்மை தவறாமல் நன்கு சிந்தித்து விசாரணை செய்ய வேண்டும் (தினமணி 19.11.04)
ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தைச் சைவத் தமிழர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர்களல்லர் சைவ சித்தாந்தத்திற்கு எதிரிடையானது எனக் கருதினார்கள் ஆதிசங்கரரின் தத்துவத்தை ‘மிண்டிய மாயாவாதம் எனும் சண்டமாருதம் சுழித்து அடித்து ஆர்த்தது” என மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
சைவ சித்தாந்த சாத்திரங்களில் மிகச் சிறந்ததான ‘சிவஞான சித்தியார்’ எழுதிய அருள்நந்தி சிவாச்சாரியர் ‘பரபக்கத்தில் மாயாவாதம்’ என்று சங்கரரின் அத்வைதத்தைச் சாடியுள்ளார் மாயாவாதத்தைப் பின்பற்றும் சங்கராச்சாரிகள் சிவன் கோயில்களில் நுழைவதே தவறு என்பதே உண்மையான சைவர்களின் கருத்து.
ஆனால் சைவக் கோயில்கள் அனைத்தும் சங்கராச்சாரியின் கட்டுப்பாட்டுக்குள் போனபோது ‘முணுமுணுப்புச் செய்யக்கூட முன்வராத சைவ மடாதிபதிகள் பரபரப்புடன் இப்போது அறிக்கை வெளியிடுகிறார்கள்.
‘தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்வழிபாடு கூடாது வடமொழி வழிபாடே இருக்க வேண்டும்’ எனப் பிடிவாதமாகவும் ஆணவமாகவும் கூறிவரும் ஜெயேந்திரருக்கு ஆதரவாக அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் சைவமும் – தமிழும் தழைக்க வந்த மடாதிபதிகள்.
அடடா! என்ன கவலை? எத்தகைய அக்கறை? இந்தக் கவலையும் இந்த அக்கறையும் இவர்களிலேயே ஒருவர் கைது செய்யப்பட்ட போது உருவாகாதது ஏன்? சைவமடங்களில் பெரியதும் தலையாயதுமான திருவாவடுதுறை ஆதின இளைய சன்னிதானம் மீது கடந்த ஆண்டு கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் சாதாரண கிரிமினல் குற்றவாளியைப் போலவே அவர் நடத்தப்பட்டார் அவருக்குப்பிணை கிடைக்கவே 8 மாதங்களுக்கு மேலாயிற்று இவ்வளவுக்கும் கொலை முயற்சிச் சதிக்கு உடந்தையாக இருந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.
ஆனால் கொலைக்குற்றத்திற்கு ஆளான ஜெயேந்திரரைக் கைது செய்ததன் மூலம் இந்து சமயத்திற்கு ஊறு விளைவிக்கப்பட்டுவிட்டதாக அங்கலாய்க்கும் சைவமடாதிபதிகள் திருவாவடுதுறை இளைய ஆதினம் கொலை முயற்சிக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டபோது வாய்மூடிக் கிடந்தது ஏன்? சிவமே எனச் சும்மா கிடந்தது ஏன்?
‘தமிழைப் பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்’ என முழங்கினார் புரட்சிக் கவிஞர் ஆனால் ‘தமிழ் நீச பாஷை” என வாய் கூசாமல் பழித்தவரும், கொடிய கொலைக் குற்றத்திற்கு ஆளானவருமான ஒருவருக்காகக் கண்ணீர் வடிக்கும் சைவ மடாதிபதிகள் தாங்கள் ‘சற்சூத்திரர்களே’ என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளனர்.
(தென்செய்தி டிசம்பர் 01-15 இதழில் வெளியான கட்டுரை)
பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட தென்செய்தி, மாதமிருமுறை இதழாக வெளிவருகிறது சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள் பின்வரும் முகவரியில் முயலலாம்.
தென்செய்தி, 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை – 60 004
தொலைபேசி : 91-44-2464-0575,
சங்கராச்சாரி பற்றி பாரதி!
(திசெம்பர் 11-2004, பாரதியின் பிறந்ததினத்தை ஒட்டி : நா. முத்து நிலவன்)
திருக்குறள் ஆராய்ச்சியில் நாட்டமுடைய தமிழறிஞர் ஒருவருக்கு, சைவ மடம் ஒன்றில் முப்பாலுக்குமான உரை ஒன்று ஓலைச்சுவடிகளில் இருப்பது தெரியவந்தது. அதனை ஆராய்ச்சியின் பொருட்டும், அச்சில் நூலாகக் கொண்டு வரும் நோக்கத்தோடும், அந்த ஓலைச் சுவடிகளைத் தந்து உதவுமாறு மடத்தின் தலைவருக்குக் கடிதம் எழுதினார்.
‘மடத்தில் பொருளும் காமமும் இருக்கின்றன அறம் இல்லை அறம் காணாமல் போய் வெகு நாள்களாகிவிட்டன. தேடிக் கொண்டிருக்கிறோம். அகப்பட்டால் அனுப்பி வைக்கிறோம்’ என்று மடத்தின் தலைவரிடமிருந்து பதில் வந்தது.
மறைந்த தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் இந்த நகைச்சுவைத் துணுக்கை மேடைகளில் சொல்வது வழக்கம.; தமிழகத்தில் நடக்கும் செய்திகளைப் பார்த்தால் இன்று இதில் நகைக்கு இடமில்லை. வருந்த, கோபம் கொள்ளக் காரணங்கள் உண்டு® என்று இந்த நகைச்சுவைத் துணுக்கை எடுத்துக்காட்டி, இன்றைய (2004 இறுதி) தமிழக நிலைமைக்கு வருந்துகிறார் ‘திசைகள்’ மின்னிதழின் ஆசிரியர் திரு மாலன். (hவவி:ஃஃறறற.வாளையபையட.உழஅஃனநஉ04ஃயnடிரனயn.hவஅட)
அவரது நியாயமான வருத்ததில் நம்மோடு பாரதியும் பங்கேற்கிறான்!பாரதி ஒன்றும் நாத்திகனல்லன். ஆனால், சாமியின் பெயரால் நடக்கும் கோமாளிக் கூத்துகளை எதிர்ப்பதில், பகுத்தறிவுவாதிகளுக்குக் கொஞ்சமும் அவன் குறைந்தவனல்லன் என்பதை அவனது கவிதைகளிலும், கட்டுரைகளிலும் காணமுடிகிறது.
பாரதி ஒன்றும் நாத்திகனல்லன். ஆனால், சாமியின் பெயரால் நடக்கும் கோமாளிக் கூத்துகளை எதிர்ப்பதில், பகுத்தறிவுவாதிகளுக்குக் கொஞ்சமும் அவன் குறைந்தவனல்லன் என்பதை அவனது கவிதைகளிலும், கட்டுரைகளிலும் காணமுடிகிறது.
இன்றைய தமிழகத்தில் சங்கராச்சாரி எனும் ஒரு மடத்தலைவர் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, வழக்குமன்றங்களின் வாடிக்கையாளராகியிருப்பது கண்டு, பக்தகோடிகள் சிலர் பதைக்கிறார்கள் ‘சாதீய அரசியல்’ நடத்த நினைக்கும் சிலர் எதேதோ கதைக்கிறார்கள். மதத்தில் அரசியல் நுழைந்துவிட்டதென்று! இவர்கள்தாம் இந்தப் புண்ணியவான்களுக்கு ஆதிமூலமான கண்ணியவான்கள் என்பது தெரியாததுபோல!
சரி, வழக்கு மன்றத்தில் வழக்கறிஞர்கள் திறமையாக வாதாடி உண்மைகளை வெளிக்கொண்டு வரட்டும். இந்த வழக்குப் பற்றி எல்லாரும் பெரிய மனிதர்கள் எல்லாரிடமும் கருத்துக் கேட்கிறார்கள். நாமும் நமது மகாகவி பாரதியிடம் கேட்டுப் பார்த்தோம்.
இதோ அவனது கருத்துக்கள் :
கேள்வி – கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவரை ®மற்ற சாதாரணக் கைதிகளைப் போல நடத்தக் கூடாது, உரிய மரியாதை தரப்படவேண்டும்’ என்று சிலர் கேட்பது பற்றி…? பாரதியின் பதில் –
சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடு மாயின் அது
சாத்திரமன்று! சதியென்று கண்டோம்
கேள்வி – பிணை வழங்குவது பற்றிய தமது தீர்ப்பை அடுத்த நாள் காலை தருவதாகச் சொன்ன நீதிபதியிடம், சங்கராச்சாரி, “நாளை காலை ராகுகாலம் கழித்துத் தீர்ப்பை வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது பற்றி…
பாரதியின் பதில் – இந்த மூட பக்தியிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்கைகளுக்கும் நாள், நட்சத்திரம், லக்னம் முதலியன பார்த்தல். சவரம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்றால், அதற்கும் கூட நம்மவர் மாசப்பொருத்தம், பட்சப்பொருத்தம், திதிப் பொருத்தம், நாள்பொருத்தம், நட்சத்திரப்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது….மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் நம்மவர் செலவிடும் பொருள்விரயத்துக்கும் கால விரயத்துக்கும் வரம்பே கிடையாது!
கேள்வி – ‘வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்” என்று சொன்ன சங்கராச்சாரி, பக்தி வேலை காரணமாகவும், பத்திரிகை வேலை காரணமாகவும் தம்மிடம் வந்த பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக எழுத்திருக்கும் குற்றச்சாட்டு பற்றி…?
பாரதியின் பதில் -அட பரம மூடர்களா! ஆண்பிள்ளைகள் தவறினால், ஸ்திரீகள் எப்படிப் பதிவிரதைகளாக இருக்கமுடியும்?.. ஸ்திரீகள் புருஷரிடம் அன்புடன் இருக்க வேண்டுமானால், புருஷர்கள் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்தவேண்டும். நம்மைப் போன்றதொரு ஆத்மா நமக்கு அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன், அரசனாயினும், குருவாயினும், புருஷனாயினும், மூடனைத் தவிர வேறில்லை.
கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.
ஆண்களெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ?
கேள்வி – சங்கராச்சாரி விதவைப்பெண்களை ‘வீண் தரிசுநிலம்’ என்கிறாரே…?
பாரதியின் பதில் – இஷ்டமில்லாத புருஷனை ஸ்த்ரீகளுக்கு விவாகம் செய்துவைக்கக் கூடாது, விவாகம் செய்து கொடுத்தபின் கருத்து வேறுபட்டால், புருஷனைவிட்டு நீங்கவும் இடம்கொடுக்க வேண்டும். புருஷன் இறந்தபின் ஸ்த்ரீ மறுபடி விவாகம் செய்துகொள்வதைத் தடுக்கக் கூடாது.
கேள்வி – முன்னாள் அமைச்சரும் பொதுவாழ்வில் தூய்மை காத்தவருமான கக்கன் அவர்களின் ஊரில், தாழ்த்தப்பட்டவர்களின் கோயிலுக்குப்போன சங்கராச்சாரி, அவர்கள் காலில் விழுந்து கூடத் தொட்டுவிடாமல் தனது ஆடையை இழுத்துக் கால்மேல் போட்டுக் கொண்டது பற்றி…?
பாரதியின் பதில் –
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் தமைச்
சூதுசெய்யும் நீசரைப் பணிந்திடுவார்.
வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்கு வாரோ?
இந்தியாவில் விசேஷக் கஷ்டங்கள் இரண்டு. பணமில்லாதது ஒன்று, ஜாதிக்குழப்பம் இரண்டாவது. இங்ஙனம் ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸமத்துவம், ஸஹோதரத்வம் என்னும் கொள்கைகளை நிலை நிறுத்துவதென்றால் அது ஸாதாரண வேலையா?
ஜாதி மதங்களைப் பாரோம் உயர்
ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே அன்றி
வேறு குலத்தவர் ஆயினும் ஒன்றே!
கேள்வி – பொதுவாழ்வில் ‘பீடாரோகணப் பொன்விழா’ கண்ட சங்கராச்சாரி, அதற்காக வந்த தங்க நாணயங்களை மறைத்தது உட்படப் பல்லாண்டுகளாகப் பற்பல குற்றச்சாட்டுகளை சுமத்திய கோவில் அலுவலர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டுவிட்டாரே…? பாரதியின் பதில் –
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் கிளியே அஞ்சிக் கிடந்தா ரடீ!…
………………………………………………………………..
சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ என்பதுபோல்
வந்தே மாதர மென்பார்! கிளியே! மனத்தி லதனைக் கொள்ளார்”
“கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லதென்று பூசாரி யோசனை பண்ணுகிறான.; பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது. அப்படியிருக்கப் பல பூசாரிகள், தம்மிடம் தெய்வாம்சம் இருப்பதுபோல நடித்து ஜனங்களை வஞ்சனை செய்து பணம்பிடுங்குகிறார்கள். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள். எத்தனைகாலம் ஒரு மோசக்கார மனிதனை மூடிவைத்து அவனிடம் தெய்வம் காட்ட முடியும்? ஆகையால் இந்தப் பூசாரிகளுடைய சாயம் வெளுத்துப் போகிறது!”
(இந்தக்கருத்துக்கள், கட்டுரை, கவிதைகளில் பாரதியேகூறியது! உண்மைவெறும் புகழ்ச்சியில்லை! கேள்விகள் மட்டுமே நம்முடையது! ஆதாரம் கவிதைகள், ‘பாரதிதமிழ் வசனத் திரட்டு-1978’ (நன்றி – தட்ஸ்தமிழ்)
About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply