புதிய கணக்கொன்று தேவை!

திருமகள்

புதிய கணக்கொன்று தேவை
பழையன தழுவட்டும் சாவை
பொங்கல் தமிழன் பண்பாடு
தமிழ்ப் புத்தாண்டு என்பது
தமிழர் பண்பாட்டின் குறியீடு!
எங்கெலாம் ஆரியத்தின் தலையீடு
அவற்றை ஒழித்துவிடு புத்தாண்டில்!
இன்னும் பிரபவ, அட்சயவா?
சுக்லாம் பரதரம் சமர்ப்பயாமியா?
எப்பொழுதுமே நம் வீட்டில்
வட ஆரிய இழவா?
உன் பெயரும் சமஸ்கிருதத்தில்
உன் ஊரும் வடமொழியில்
ஏலே மறத் தமிழா!
எப்பொழுதுமே உன் வாழ்வில்
கொடிய ஆரியத்தின் உமிழா?
பொங்கலில் தொடங்கு புதுக்கணக்கை!
பொங்கிடும் பெரு நெருப்பால்
பொசுக்கு மூட நம்பிக்கையை
ஏற்று பகுத்தறிவு விளக்கை!
பழைய பஞ்சாங்கத்தை எரித்துவிடு
சோதிட சாத்திரத்தை கொளுத்திவிடு
மண்ணில் கால் பதித்து
விண்ணில் கை வீசி
எண்ணத்தை வானில் தவழவிடு!
பழமையின் வேர்கள் மடியட்டும்!
புதிய வாழ்வு மலரட்டும்!
தமிழனே! ஒரு சொல் கேளாய்!
திருமகள்
தமிழனே! ஒரு சொல் கேளாய்!
புத்தாண்டில் ஒரு உறுதிமொழி யெடுப்பாய்!
நித்தம் அதனைப் பொன்போல் காப்பாய்!
வானம் வீழினும் கடல் பொங்கினும்
எது வரினும் சற்றும் அஞ்சாய்!
உன் பெயர் தமிழாக இருக்கட்டும்
ஆயா கோசா நிரோஷன் நிரோஷினி
லக்ஷன், லக்ஷி, டில்ஷன் டில்ஷி
முற்று முழுதாய் பொருள் புரியாத
குப்பைப் பெயர்களை ஒழித்து விடு!
அரசி அழகி அல்லி அவ்வை
பாவை கோதை வைகை குந்தவை
கயல்விழி எழில்விழி மலர்விழி மான்விழி
தமிழினி யாழினி வளர்மதி வான்மதி
கலைமகள் மலைமகள் திருமகள் பூமகள்
அரசன் அழகன் அருண்மொழி அருள்மொழி
செந்தில் செழியன் சேரன் மாறன்
முருகன் கண்ணன் மணிவண்ணன் மதியழகன்
திருவருள் திருக்குமரன் மணிமாறன் மலர்மன்னன்
காரி பாரி குமணன் கபிலன்
நாமணக்கும் தமிழ்ப்பெயர்கள் ஒன்றல்ல
ஓராயிரம் தேனான செந்தமிழில் உண்டு!
அதில் ஒன்றை உன்பிள்ளைக்கு வைத்துவிடு!
தமிழன் அடையாளத்தை நன்கு காட்டிவிடு!
வண்டமிழை எஞ்ஞான்றும் உலகில் உயர்த்திவிடு!
உன் உறவுமொழி தமிழாக இருக்கட்டும்
அன்ரியங்கிள் மமி டடி ஒழியட்டும்!
மாமி மாமா அப்பா அம்மா
என்னும் செந்தமிழ் உறவுமுறை வளரட்டும்!
திருக்கோயில் வழிபாடு தமிழில் இருக்கட்டும்!
திருமண விழாக்கள் வண்டமிழில் நடக்கட்டும்
எங்கே தமிழென்று கேட்பது ஒழியட்டும்
எதிலும் தமிழென்பது ஓங்கி ஒலிக்கட்டும்!
தாயக தமிழர்களது துன்பம் மடியட்டும்
புத்தாண்டில் தமிழீழ நாடு மலரட்டும்!
About VELUPPILLAI 3320 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply