மூன்று மாதங்களுக்கு முன்னர் விக்னேஸ்வரன் ஒரு குழப்பவாதி என்று வர்ணித்த தினக்குரல் இப்போது அவருக்கு குடைபிடிக்கிறது!
நக்கீரன்
கொழும்பில் இருந்து வெளிவரும் தினக்குரல் என்ற நாளேடு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நீலிக் கண்ணீர் வடிக்கிறது.
இது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது. மேலும் மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள் என திரனக்குரல் புலம்புகிறது. இதை எப்படித் தினக்குரல் கண்டு பிடித்தது?
தேர்தலின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடுநிலைமை வகிக்கப் போகிறேன் என்று சொன்னது கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகும். இதே போன்ற குற்றச் சாட்டில்தான் அனந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அனந்திக்கு ஒரு நீதி விக்னேஸ்வரனுக்கு இன்னொரு நீதி என்பது சரியாக இருக்காது. அது அநீதி!
தேர்தலில் நடுநிலைமை வகிக்கப் போவதாக விக்னேஸ்வரன் சொன்னார். இதனை –
(1) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் நான்கு கட்சிகளில் தான் ஒரு கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை எனச் சொன்னதாக பொருள் கொள்ளலாம்.
(2) தேர்தலில் போட்டிபோடுகிற இபிடிபி, தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய சுதந்திர மக்கள் முன்னணி, ததேகூ ஆகிய கட்சிகளில் தான் ஒரு கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் பொருள் கொள்ளலாம்.
ததேகூ தனித்தனியாக தேர்தல் கூட்டங்களை வைக்கவில்லை. நான்கு கட்சிகளையும் உள்ளடக்கிய தேர்தல் பரப்புரைக் கூட்டங்களையே நடத்தியது. விக்னேஸ்வரன் ஒரு நேர்மையானவராக இருந்திருந்தால் – ஒரு சத்தியவானாக இருந்திருந்தால் “மக்களே உங்கள் வாக்குகளை ததேகூ க்கு போடுங்கள். உங்கள் விருப்பு வாக்குகளை உங்களுக்குப் பிடித்த வேட்பாளர்களுக்குப் போடுங்கள்” என்று கூறியிருக்கலாம். கூறியிருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர் வாக்காளர்களைத் தனது அறிக்கை மூலம் குழப்பினார்.
இது பற்றி இதே தினகரன் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஏட்டுக்கு ஒரு செவ்வி வழங்கியிருந்தார். அந்தச் செவ்வியை “தமிழ் வாக்காளர்களைக் குழப்பும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்” என்ற தலைப்பில் தமிழ்வின், லங்கா முஸ்லிம் போன்ற இணையதளங்கள் வெளியிட்டிருந்தன. இப்போது சுமந்திரன் மீது சன்னதம் கொண்டு ஆடும் தினக்குரலின் ஆசிரியர் அப்போது என்ன சொன்னார்?
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை வாக்காளர்களைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளதாக, கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரசுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் வெற்றி பெற்ற விக்னேஸ்வரனுக்கு, அதனை ஆதரிக்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு உள்ளது.
அவர் நடுநிலை வகிப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவர் குறிப்பிட்ட கட்சி ஒன்றுக்குப் பின்னால் இருப்பதாகத் தெளிவாக இருக்கிறது.
அவரது நிலைப்பாடு வாக்காளர்களைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் ஆதரவு அவசியம் எனக் கருதுவதாகவும் ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், விக்னேஸ்வரனின் அறிக்கை மேற்குலக ஆதரவு தேவை என்பதை மட்டும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் ஆனால் இந்தியாவைப் புறக்கணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. https://lankamuslim.files.wordpress.com/2010/01/vic.jpg)
தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரன் அவர்களது போக்கு எப்படி இருந்தது?
(1) தான் நடுநிலைமை வகித்தால் ததேகூ தேர்தலில் தோற்றுவிடும் என்று எதிர்பார்த்தார்.
(2) கனடாவுக்கு நிதி சேகரிக்கச் செல்வதை தவிர்த்ததன் காரணம் அவரது உடல் நிலையல்ல. அவர் அமெரிக்கா வரை வந்தவர். அங்கிருந்து சில மணித்தியாலயங்களில் கனடா சென்றுவிடலாம். ததேகூ (கனடா) திரட்டுகிற பணத்துக்குக் கணக்குக் காட்டுவதில்லை என்று மருத்துவர் சத்தியலிங்கத்துக்குச் சொன்னது அவர் இட்டுக்கட்டிக் கூறிய பொய். தன்னை வைத்து ததேகூ நிதி சேகரிக்கக் கூடாது என்பதுதான் அவரது திட்டமாக இருந்தது.
(3) விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்துவதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. மாவை சேனாதிராசாவுக்கு எல்லாக் கட்சிகள் மத்தியிலும் ஆதரவு இருந்தது. திரு சம்பந்தர்தான் விக்னேஸ்வரனை சம்மதிக்க வைத்தார். பிள்ளையார் பிடிக்க அது குரங்காக மாறும் என அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தெருவில் போகிற சனியனை விலைக்கு வாங்குவதாகவும் அவர் நினைக்கவில்லை.
(4) தமிழ்அரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்திலேயே சுமந்திரன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அந்தக் கூட்டம் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையிலேயே நடந்தது. தினக்குரல் இப்போது அந்தச் செய்தி தலைவருக்கு தெரியாது எனக் கயிறு திரிக்கிறது.
(5) வட மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை தமிழ் அரசுக் கட்சிதான் வேட்பாளாராக நிறுத்தியது. தமிழரசுக் கட்சிதான் அவரது தேர்தல் செலவையும் பொறுத்துக் கொண்டது. ஒரு கட்டத்தில் அனந்தி தன்னை முந்திவிடுவாரோ என்ற பயம் விக்னேஸ்வரனைப் பிடித்துக் கொண்டது. அப்படி ஏதும் நடக்காது என சுமந்திரன் போன்றவர்கள்தான் அவருக்குத் தண்ணி தெளித்துத் தேற்றினார்கள். விக்னேஸ்வரன் இப்போது நடுநிலைமை பற்றிப் பேசுவது அப்பட்டமான ஏமாற்று வேலை. உண்ட வீட்டுக்குச் செய்யும் இரண்டகம். ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கும் ஈனத்தனம். அன்னமிட்ட கையை, அவரை உயர வைத்த கையை கடித்தது போன்றது. செய்த உதவியைக் கொல்வதை, மறப்பதை, துறப்பதைப் போலும் பாவம் வேறு ஏதும் இல்லை.
(6) பிரதமர் இரணில் விக்கிரமசிங்க 45 உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு பிரதமராக இருக்கிறார். இவரது கட்சி மாமன் – மருமகன் கட்சி என்று எந்த தேவையும் இல்லாமல் எள்ளி நகையாடி பிரதமரின் நட்பைக் கெடுத்துக் கொண்டவர் விக்னேஸ்வரன். இதன் மூலம் அவர் (1) இராஜதந்திரம் என்பது சுத்த சூனியம் அது தன்னிடம் இல்லை என்பதை எண்பித்தார். (2) வட மாகாண மக்களுக்கு இரண்டகம் இழைத்தார். முதலமைச்சராகப் பதவி ஏற்றபோது விக்னேஸ்வரன் என்ன சொன்னார்?
“என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன். என்னுடைய பதவி வடமாகாண மக்கள் எனக்களித்த பதவி. தூரநோக்கின் அடிப்படையிலும் கிட்டியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி அவர்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.” கிட்டிய நோக்கும் தூரநோக்கும் என்னவாயிற்று? ஒரு நாட்டின் பிரதமரைப் பகைத்தது அவரது தன்முனைப்பையே காட்டுகிறது.
(7) யூஎன்டிபி கொழும்பு வதிவிடப் பிரதிநிதி சப்பினே நந்தி (Subinay Nandi) வடக்கில் ஒரு பாரிய மேம்பாட்டுத் திட்டத்துக்கு 1500 மில்லியன் டொலர்களை உதவ முன்வந்தது. ஆனால் அந்தத் திட்டத்தின் சிறப்பு அலுவலராக (Special Officer) தனது மருமகன் கார்த்திகேயன் நிர்மலனை (முதலமைச்சரின் நாட்காட்டி செயலாளர், நிறைவேற்று உதவியாளர் மற்றும் அரசியல் ஆலோசகர்) மாதம் 5,000 டொலர் சம்பளத்தில் (செலவுகள் வேறு) நியமிக்குமாறு விக்னேஸ்வரன் அழுங்குப் பிடியாக நடந்து கொண்டார். ஐநா அப்படியான பதவிக்கு நியமிப்பதற்கு ஒரு நடைமுறையை வைத்திருக்கிறது, அதற்கு அமையவே நியமனம் செய்யப்படும் என சப்பினே நந்தி விக்னேஸ்வரனுக்கு தெரிவித்திருந்தார். இதனால் வெகுண்டெழுந்த விக்னேஸ்வரன் அந்த நிதியுதவியே மேவையில்லை எனப் பதில் எழுதிவிட்டார். இது விக்னேஸ்வரனுக்கு இராஜதந்திரம் சூனியம் என்பதையும் மக்களது நலனைவிட தனது உறவினரின் நலனே பெரிது என்று நினைப்பதை உறுதிப்படுத்தியது.
(8) விக்னேஸ்வரன் தன்னை ஒரு ஆன்மீகவாதியாகவும் சமூக மறுமலர்ச்சிக்கு பாடுபடும் ஒரு சமூக சேவையாளராகவும் சொல்லிக் கொள்கிறார். ஆனால் ஆன்மீகவாதி விக்னேஸ்வரனது குரு யார் தெரியுமா? 13 பெண்பிள்ளைகளின் (இவர்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். அதில் மூவர் 16 அகவைக்கு குறைந்தவர்கள்) கற்பை தனது காமப் பசிக்கு இரையாக்கிக் கொண்ட சுவா(ஆசா)மி பிரேமானந்தா! இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும் பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட பிரேமானந்தாவால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் அப்போது வெளியாயிற்று. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குக் காரணம் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதிமன்றத்தில் அறிவியல் (டிஎன்ஏ) ஆதரங்களோடு சமர்ப்பித்தனர்.
மேலும் பிரேமானந்தாவின் லீலைகளைத் தட்டிக் கேட்ட ரவி என்ற இளைஞனை அடித்துக் கொலை செய்த பின்னர் ஆச்சிரமத்திலேயே புதைத்தது சாட்சியங்களோடு எண்பிக்கப்பட்டது. கொலை மற்றும் பாலியல் வழக்குகளில் சிக்கிய பிரேமானந்தா, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, அவருக்கும் ஏனைய மூவருக்கும் 1997 ஆம் ஆண்டு புதுக்கோட்டை நீதிமன்றத்தினால் இரட்டை ஆயுள் தண்டனை (Two consecutive life sentences) விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்பிள்ளைகளுக்கு இழப்பீடாக பிரேமானந்தாவுக்கு 66.4 இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது. இவருக்கு உதவிய கமலானந்தாவுக்க ு பிரேமானந்தா போலவே அடுத்தடுத்து இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பாலன், சதீஸ், நந்தா ஆகிய மூவருக்கும் ஒற்றை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நால்வரும் தற்போது தமிழ்நாடு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நால்வரையும் விடுதலை செய்யுமாறு விக்னேஸ்வரன் கடந்த 14-03-2015 அன்று இந்தியப் பிரதமர் மோடிக்கு வட மாகாண சபையின் கடிதத் தலைப்பில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய கடிதம் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ரைம்ஸ் ஒப் இந்தியா அப்போது செய்தி வெளியிட்டது.
அந்தக் கடிதத்தில் பிரேமானந்தாவுக்கு உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய இராம் ஜெத்மாலினி தனது நண்பர் என்றும் அவருக்கு பிரேமானந்தாவுக்கு எதிரான வழக்கு பொய்யான வழக்கு என்பது தெரியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதாவது புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தாலும் பிரேமானந்தாவின் மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அந்த வழக்கில் சாட்சியம் சொன்ன விக்னேஸ்வரனுக்கு நீதிபதிகள் குட்டு வைத்தனர். அவரை நீதிபதிகள் கற்பனாவாதி (Wishful thinker) என வர்ணித்தனர்.
இதில் இருக்கும் பெரிய சோகம் என்னவென்றால் இந்த பாலியல் சாமியார் பிரேமானந்தாவுக்கு விக்னேஸ்வரன்ஆண்டுதோறும் குரு பூசை செய்கிறார். மாங்குளத்தில் ஒரு கோயில் கட்டியிருக்கிறார். அங்கு பூசைசெய்ய ஒரு ஐயர் அமர்த்தப்பட்டுள்ளார். மேலும் விக்னேஸ்வரன் முதலமைச்சராகப் பதவி ஏற்றபின் கடந்த ஆண்டு நொவெம்பர் 07 இல் தமிழ்நாட்டுக்குப் போனபோது அவர் நேரே புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த பாத்திமாநகரில் உள்ள பிரேமானந்தா ஆச்சிரமத்துக்கு சென்றார்.
அவரை பிரேமானந்தா அறக்கட்டளை நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், ஆச்சிரமத்தை சுற்றிப்பார்த்த விக்னேஸ்வரன் நிர்வாகிகளிடம் ஆச்சிரமத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, பிரேமானந்தாவை அடக்கம் செய்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பிரேமானந்தா ஆச்சிரமத்தில் நடைபெறும் பௌர்ணமி பூசையில் ஆண்டுக்கு ஒருமுறை விக்னேஸ்வரன் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இலங்கையின் வடக்கு மாகாண சபையின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தற்போது முதல் முறையாக ஆச்சிரமத்துக்கு வந்துள்ளார் எனத் தெரிவித்தனர். அன்றிரவு அங்கேயே தங்கி இருந்தார்.
பாலியல் சாமியார் பிரேமானந்தா உயிருடன் இருந்த காலத்தில் பாமரர் நம்பும் இந்த ஆச்சிரமம் பகலில் இளித்தவாயர்களுக்கு உபதேசம் செய்யும் மடமாகவும் இரவில் இன்பவல்லிகளுடன் சலக்கிரீடை செய்யும் காமதேவனின் பள்ளியறையாகவும் பயன்பட்டது. பகலில் யோகிகள், பாதி இராத்திரியில் போகிகள் நிறைந்திருந்தார்கள். அங்கு வரும் பெண் பக்தைகளுக்கு தீா்தத்துடன் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து கலவி இன்பத்திலும் பிரேமானந்தா ஈடுபட்டுள்ளார்.
இந்த இளித்தவாயர்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பணமுதலைகள் அடங்குவர். கழுத்திலே தங்கச் சங்கிலி, தலையிலே சடாமுடி, நெற்றியிலே குங்குமப் பொட்டு, வீபூதி, இடையிலே காவிவேட்டி, குடிக்கச் சுண்டக் காய்ச்சி கற்கண்டு கலந்த பால், தின்னப் பழங்கள், உண்ண பத்துவகைக் கறியோடு நெய்ச்சோறு என வலம் வந்த பிரேமானந்தா பெண்கள் விடயத்தில் பலவீனமாக இருந்ததில் வியப்பில்லை.
மனிதகுல வளர்ச்சியில் ஏழ்மையும், வறுமையும் நீங்க, பணம் திரட்ட, பதவி உயர்வு பெற சாமியார்களை நாடுவது தொன்றுதொட்டு வரும் மூடப்பழக்கமாகும். இதனை அறிஞர் அண்ணா தான் எழுதிய வேலைக்காரி என்ற நாடகத்தில் ஹரிஹரதாசும், சுந்தரகோசும் நடத்துகின்ற ஆசிரமம் வாயிலாகக் காட்சிகள் பலவற்றை உருவாக்கி போலிச் சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை அம்பலப்படுத்தியிருந்தார்.
பிடிபடும் மட்டும் கள்ளன் யோக்கியனே. அது போல சாமியார்களும் பிடிபடுமட்டும் கடவுள் அவதாரங்களாக மக்கள் நம்புகிறார்கள். பிடிபட்ட பின்னர்தான் சாமிகள் ஆசாமிகள் என்பது தெரிகிறது. ஆனால் விக்னேஸ்வரன் பாலியல் சாமி பிரேமானந்தா ஒரு காமுகன் என்பதை மூன்று நீதிமன்றங்கள் சொல்லி தண்டனை வழங்கிய பின்னரும் அவரை நம்புவதும் அவர் மீதான வழக்கு பொய் என்பதும் அவருக்கு கோயில் கட்டி பூசை செய்வதும் கண்டிக்கத்தக்கது. பெண்குலத்துக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக விக்னேஸ்வன் விளங்குகிறார்.
இப்படிப்பட்ட கல்யாண குணங்களைக் கொண்ட விக்னேஸ்வரனுக்குத்தான் தினக்குரல் குடை பிடிக்கிறது. தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்படவேண்டியவர் யார்? என்று கேள்வி கேட்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர் குழப்பவாதி என்று வர்ணித்த தினக்குரல் இன்று அவருக்கு லாலி பாடுகிறது. சாமரம் வீசுகிறது. சுமந்திரனுக்கு கரி பூசுகிறது.
எமது மக்கள் புத்திசாலிகள். தினக்குரல் போன்ற ஊடகங்கள் உரக்க ஊழையிட்டாலும் மக்கள் அதற்குச் செவி சாய்க்க மாட்டார்கள். விக்னேஸ்வரன் ததேகூ க்கு வாக்களிக்காதீர்கள் என சங்கேத மொழியில் கேட்டும் மக்கள் அசையவில்லை. ததேகூ எதிராக கூட்டணி சேர்ந்தவர்களை தேர்தலில் தோற்கடித்தார்கள். அது சாதாரண தோல்வியல்ல. விக்னேஸ்வரன் மறைமுகமாக ஆதரித்த ததேமமு போட்டியிட்ட 8 தேர்தல் மாவட்டங்களில் 7 தேர்தல் மாவட்டங்களில் கட்டுக்காசை இழந்தது. எட்டாவது மாவட்டமான யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 6 வாக்குகளால் கட்டுப்பணத்தை காப்பாற்றியது!
விக்னேஸ்வரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது அந்த அதிகாரம் சுமந்திரனுக்கு இல்லை என்று சொல்லும் சுரேஷ் பிறேமச்சந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் தமிழரசுக் கட்சியின் உள்வீட்டுச் சிக்கல்களில் தலையிடக் கூடாது. வெளியேற்றும் அதிகாரம் சுமந்திரனுக்கு இல்லை என்பது சரி. ஆனால் விக்னேஸ்வரன் மீது கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்கு நடவடிக்கை எடுத்து அவரை வெளியேற்றும் உரிமை தமிழரசுக் கட்சிக்கு உரிமை உண்டு.
Leave a Reply
You must be logged in to post a comment.