நக்கீரன்
சிவமயம், 19~ 04 ~ 2017.
ஆரோக்கியமான சிந்தனைகள் உருவாகவேண்டும் நண்பர்களே!
ஒரு மனிதன் ஆன்மீகவாதியெனின் அவன் சார்ந்த மதம் மீது கொண்ட காழ்ப்புணர்வை அவனது பதவி மீதும் சேவை மீதும் அர்ப்பணிப்பு மீதும் குற்றம் காண நினைப்பது நியாயம் என்று நீங்கள் பின்பற்றும் மதம் கூறுகின்றதா என்ன?
பதில்: விமர்சனம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் பாலியல் சாமியார் மீதேயொழிய இந்து மதத்தின் மீது அல்ல. இந்த இருவரும் இந்து மதத்தின் மோசமான முன்னுதாரணங்கள். அவ்வளவே.
அல்லாமல், இங்கே முதல்வர் இயேசு பற்றி சொல்வது வெறும் உதாரணமே அன்றி…உண்மை என்றா எண்ணுகிறீர்கள்?
பதில்: உதாரணம் என்று சொன்னதில்தான் சிக்கல் இருக்கிறது. ஆனால் யாரை யாரோடு ஒப்பிடலாம் என்பதற்கு ஒரு வரம்பு இல்லையா? யேசு மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன? பிரேமானந்தா மீதான குற்றச் சாட்டுக்கள் எவை? யேசுவை யூத மதத்தலைவர்கள் ஒரு கலகக்காரர்களாகப் பார்த்தார்கள். யேசு தன்னை “கடவுளின் மகன்” என்று கூறியதைக் காட்டி அவர் இறை நிந்தை செய்வதாக குற்றம் சாட்டினார்கள். அவரைக் கைது செய்து அவரை சிலுவையில் அறைந்து கொன்றார்கள். பிரேமானந்தா மீதான குற்றச்சாட்டுக்கள்?
(1) திருச்சியில் உள்ள பிரேமானந்தாவின் ஆச்சிரமத்தில் வாழ்ந்த 13 சிறுமிகளை (இவர்கள் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். 1983 இனக் கலவரத்தை அடுத்து தமிழ்நாட்டுக்கு பிரேமானந்தாவால் கூட்டிச் சென்றவர்கள்) பிரேமானந்தா வன்புணர்ச்சிகு ஆளாக்கியுள்ளார். இவர்கள் 16 அகவைக்கு குறைவானவர்கள். இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும் பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட பிரேமானந்தாவால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவல் நீதிமன்ற விசாரணையின் போது வெளிவந்தது. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த அருள்சோதி என்ற சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குக் காரணம் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதிமன்றத்தில் அறிவியல் (டிஎன்ஏ) ஆதரங்களோடு சமர்ப்பித்தனர்.
(2) இரவி என்ற பெருடைய பொறியாளர் ஆச்சிரமத்தில் நடந்த காமலீலைகளைத் தட்டிக் கேட்டிருக்கிறார். அதனைப் பொறுக்காத பிரேமானந்தா அடியாட்களின் உதவியோடு அவரை அடித்துக் கொலை செய்து ஆச்சிரமவளவிலேயே புதைத்தார்கள். அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அடித்துக் கொலை செய்தது எண்பிக்கப்பட்டது.தெரியாமல்தான் கேட்கிறேன். யேசுநாதர் மீது இப்படியான குற்றச்சாட்டுக்கள் உண்டா?
நீங்கள் எண்ணுவது போன்றே இயேசு குற்றவாளி எனில் எவ்வாறு கடவுளாக முடியும்? அவ்வாறல்ல. இயேசு குற்றவாளிதான் யூதர்களுக்கு…
பதில்: அவர் கடவுள் என்று அவரைப் பின்பற்றுவோர் சொல்கிறார்கள். பிரேமானந்தாவை குருவாகக் கொண்ட விக்னேஸ்வரனும் அவரை கடவுளாகத்தான் கொண்டாடுகிறார். புளியங்குளத்தில் அவருக்கு கோயில் கட்டி குடமுழுக்குச் செய்து ஆறுகால பூசை நடத்துகிறார். இதற்கென்ன பதில்?
எங்களுக்கல்ல. முதல்வருக்கல்ல. எனக்கு நல்லவராக தெரியும் முதல்வர் உங்களுக்கு வேண்டத்தகாதவராக தெரியவில்லையா அதுபோன்றதே!
பதில்: முதலில் பலகோடி மக்கள் வணங்கும் யேசுநாதரையும் ஒரு கொலைக் குற்றவாளியான, சிறுமிகளை அகவை வித்தியாசம் பாராது கற்பழித்த பிரேமானந்தாவை விக்னேஸ்வரன் ஒப்பிடுவது கொடுமையிலும் கொடுமை. அதைவிடக் கொடுமை அதனை நியாயப்படுத்துவது? இதனால் அவரது து ஒழுக்கமும் கேள்விக்குறியாகிறது. அதைப்பற்றி உங்களுக்குக் கவலை இல்லையா? எனக்குக் கவலையாக இருக்கிறது? பிரேமானந்தா செய்த குற்றத்தில் பத்தில் ஒன்றை கோயில் ஆர்ச்சகர் செய்தால் விட்டு விடுவீர்களா?
மக்கள் சேவை தான் மகேசன் சேவை! அதை நிதர்சனமாக்குபவர் முதல்வர். அதில் சிலருக்கு எரிவு, பலருக்கு பரிவு.
பதில்: இதே வசனங்களைப் பேசித்தான் பிரேமானந்தா அந்தச் சிறுமிகளை தனது காமப் பசிக்கு இரையாக்கினார். இளம் பெண்கள் தன்னோடு உடலுறவு வைத்துக் கொள்வது சாட்சாத் அந்த மகேசனுக்கு செய்யும் சேவை என்றார். சிறுமிகளோடு உடலுறவு வைத்துக் கொண்டால் தான் சொல்லும் அருள்வாக்குப் பலிக்கும் என்று பிரேமானந்தா அந்தச் சிறுமிகளுக்கு உபதேசம் செய்தார்.
இன்றைய சூழ்நிலையில் பலர் முகநூலில் அதிமேதாவித்தனமாக செயற்பட நினைக்கின்றார்களா? இல்லை குற்றம் கண்டு சுற்றமாக்க எண்ணுகின்றார்களா நாம் அறியோம்.
உங்களுள் ஒருவராகவே அவரும் தோன்றுகிறார். தப்பாக சொல்லவில்லை. நூறு நன்மை செய்யும் போது ஓரிரு எதிர்வினையும் எழுவதுண்டு. அதைக்கொண்டு செய்த நன்மைகளையெல்லாம் சாயம் பூசுவதை எப்படிச் சொல்வது?
பதில்: இது கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவன் நீதிபதியைப் பார்த்து “பிரபு, நான் இந்த ஒரு கொலையை மட்டும் செய்தேன். இரண்டு மூன்று கொலை செய்தவர்கள் வெளியில் இருக்கிறார்கள். எனக்குக் கருணை காட்டுங்கள்” என்று சொன்ன கதை போன்றது.
நான் சொல்லும் வியாக்கியானம் சிலருக்கு தவறாக தெரியும். அதை அவரவர் பார்க்கும் விதம் மற்றும் அவர்களுடைய குணாதிசயம்.
தமிழின விரோதிகள் என்று புலிகள் அழிக்க நினைத்திருப்பின் ஈழத்தமிழரில் பலர் மாண்டிருப்பர்….
ஆனால் அன்று தவறு செய்த பலர்… இன்று மக்கள் சேவை செய்கின்றார்கள். நாம் மனிதர்கள். இயந்திரமல்ல ஒரு திசை நிர்ணயித்து அதிலே பயணம் செய்து கொண்டிருப்பதற்கு. காலம் மாறும் சிந்தனைகள் மாறும். நல்லவன் தீயவனாகலாம் தீயவர் நல்லவராகலாம். இங்கே நியதி ஒன்றும் இல்லையே…நீ கெட்டவன் என்றோ… கெட்டவனாகத் தான் இருக்கவேண்டுமென்றோ.
பதில்: இந்த தத்துவம் எல்லாம் விக்னேஸ்வரனை காக்க நிச்சயம் உதவாது. வேறு வாதங்களைக் கண்டு பிடியுங்கள். ஒரு கொலைகாரனை “பரப்பிரமம்” என்று சொல்வது, நீதிமன்றம் ஒன்றால் தண்டனை அளிக்கப்பட்டு மேலும் உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றங்களால் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஒரு கொலைகாரனை, ஒரு காமுகனைச் சுற்றவாளி என்று சொல்வது நல்ல பகிடி. அதைவிடப் பகிடி கடவுள் அவதாரம் என்று கொண்டாடுவது.
யார் மீது காழ்ப்புணர்வு கொள்கின்றீர்களோ அவர் நல்லவரோ தீயவரோ என்பதற்கப்பால் நீங்கள் கொள்ளும் காழ்ப்புணர்வு ஓர் நல்ல பண்பா என்று யோசிப்பீர்களாயின் நாம் அனைவரும் இயற்கையை நேசிக்கும் இறைவனின் குழந்தைகளே!!!
அன்பே சிவம்!
இங்கே உள்ள பின்னூட்டல்களில் உள்ள ஓர் அருவருப்புத்தன்மையே எனை இங்கே எழுதவைத்தது. ஒரு தீய எண்ணக்கருவின் பின்னால் ஓர் சமூகம் செல்லும் போது அதன் அறியாமையை எவ்வாறு சகிக்க முடியாது தவிப்போமோ அதுபோன்றதே இதுவும்.
ஆயிரம் பாரதிகள் தோன்றினாலும் தீய எண்ணங்கள் முற்றாக அழிந்துவிடுவதில்லை….
ஏனெனில் இயற்கையில் அதுவும் ஓர் அங்கம். அதனை அழிக்க முடியாது ஆனால் அடக்கியோ ஒதுக்கியோ விலக்கியோ நல்ல எண்ணக்கருக்களை பாதுகாக்கவேண்டியது உயிர்களை நேசிக்கும் ஒவ்வொருவரதும் கடமையாகும்….
நல்லதை எண்ணுவோம்! சிந்தித்து செயலாற்றுவோம்!!
பதில்: ஆயிரம் பெரியார் தோன்றினாலும் எமது சமூகத்தை பக்தி என்ற போர்வையில் ஏமாற்றிப் பிழைப்பவர்களை தடுத்து நிறுத்த முடியாமல் இருக்கிறது. பிரேமானந்தா மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எத்தனையோ கள்ளச் சாமிகள், கல்கி அவதாரங்கள், நித்தியானந்தங்கள் கோடி கோடியாகச் சம்பாதிக்கிறார்கள். பகலில் இளித்தவாயர்களுக்கு உபதேசம், இரவில் இன்பவல்லிகளுடன் சல்லாபம் செய்கிறார்கள்.
பிடிபடும் மட்டும் கள்ளன் யோக்கியனே. அது போல சாமியார்களும் பிடிபடுமட்டும் கடவுள் அவதாரங்களாக மக்கள் நம்புகிறார்கள். பிடிபட்ட பின்னர்தான் சாமிகள் ஆசாமிகள் என்பது தெரிகிறது. ஆனால் விக்னேஸ்வரன் பாலியல் சாமி பிரேமானந்தா ஒரு காமுகன் என்பதை மூன்று நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தி தண்டனை வழங்கிய பின்னரும் அவரை நிராபராதி என்று சொல்வதும் அவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் என்பதும் அவருக்கு கோயில் கட்டி பூசை செய்வதும் கண்டிக்கத்தக்கது. பெண்குலத்துக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் சமூகத்துக்குமே விக்னேஸ்வன் ஒரு மோசமான முன்னுதாரணமாக விளங்குகிறார்.
இப்படிப்பட்ட கல்யாண குணங்களைக் கொண்ட விக்னேஸ்வரனுக்குத்தான் நீங்கள் குடை பிடிக்கிறீர்கள். பொன்னாடை போர்க்கிறீர்கள். அவரை அப்பழுக்கற்ற உத்தமன் என்கிறீர்கள். யேசுவோடு பிரேமானந்தாவை ஒப்பிட்டுப் பேசியதை நியாயப்படுத்துகிறீர்கள்.
உங்கள் மீது சினம் வரவில்லை. பரிதாபம் பிறக்கிறது!
Leave a Reply
You must be logged in to post a comment.