மருத்துவர் இராமநாதன் இலம்போதரம்

  மருத்துவர் இராமநாதன் இலம்போதரம்

இகுருவி இரவு 2017 இல் விருது பெற்ற ஆறுபேரில் மருத்துவர் இராமநாதன் இலம்போதரம் அவர்களும் ஒருவர். எம் மத்தியில் பல மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஒரு கிழமையில் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் தொழில் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். பணம்தான் அவர்களது முக்கிய குறிக்கோள். அது தவறல்ல. குற்றமும் அல்ல. மேற்குலக வாழ்க்கை முறையில் ஒருவன் ஆடியோடி, ஒரு வேலைக்கு இரண்டு மூன்று வேலை செய்து  பணத்தை எவ்வளவு தூரம் திரட்டுகிறானோ அவன்தான் வாழ்க்கையில் வெற்றிபெற்றவனாகக் கருதப்படுகிறான்.  சமூகமும் அப்படியானவர்களைத்தான் மதிக்கிறது. ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் மதிக்கச் செய்யவல்ல பொருளை யொழிய வேறு பொருள் இல்லை என வள்ளுவர் பொருள்செயல்வகை என்ற அதிகாரத்தில் (76)  சொல்கிறார். வள்ளுவர் சொன்னதை ஔவையாரும் தனது நல்வழி நாற்பது என்ற நூலில் கையாண்டுள்ளார்.

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின் எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் – இல்லானை இல்லாளும் வேண்டாள், மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லா(து) அவன்வாயிற் சொல்.

படிக்காதவன் ஆயினும் ஒருவனிடம் பொருள் வந்து விடுமானால் எல்லாரும் அவனைச் சென்று போற்றி அழைப்பர்.  பொருளில்லாதவனை மனையாளும் விரும்ப மாட்டாள், மேலும் ஈன்றெடுத்த தாயும் விரும்ப மாட்டாள், அவன் சொல்லுக்கும் எங்கும் மதிப்பு இருக்காது.

பொருளுடையவன் எப்படி  வாழ வேண்டும் என்பதையும் வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

ஊர் நடுவே பழுத்த மரம் இருக்கிறது . இனிமையான கனிகளைக் கொடுப்பதால்தான் அதனை எல்லோரும் விரும்புகின்றனர். பயன்படுகிற காரணத்தால்தான், மரமும் மதிக்கப்படுகிறது. பழங்களும் பறிக்கப்பட்டு, சுவைக்கப்படுகிறது. போற்றப்படுகிறது.  பயனுள்ள மரம் ஊர் நடுவே பழம் நிறைந்து பழுத்ததைப் போன்றது எல்லோரிடத்திலும் அன்புசெலுத்தும் தொண்டு மனப்பான்மை கொண்டவனிடம் உள்ள செல்வம்  ஊர் நடுவே எல்லோர்க்கும் பயன்படும் பழுத்த மரத்துக்கு ஒப்பானவன்.  மக்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் பறவைகளும் பழுத்த மரத்தின் பழங்களை உண்டு பயன்பெறும்.   செல்வம் என்றால் இன்பம், கல்வி, சீர், செழிப்பு, அழகு, ஆக்கம், நுகர்ச்சி என்று பொருள்.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.       (அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:216)

மருத்துவர் லம்போதரம் இந்த பயன்தரும் மரம் போன்றவர். வேண்டும் என்றால் இங்குள்ள ஒரு தொண்டு நிறுவனத்துக்கு கொஞ்சப்  பணத்தை கொடுத்துவிட்டு பேசாமல் இருக்கலாம். அப்படியில்லாது தாயகம் சென்று பிணியால் வாடும்  அந்த மக்களோடு மக்களாக நின்று தொண்டாற்றி வருகிறார். இது  எல்லோராலும் செய்ய முடியாத தொண்டு. இதனை அவர் IMHO  என்ற நிறுவனத்தின் வாயிலாகவும்  செய்கிறார். மருத்துவர் லம்போதரம் ஒரு ஆன்மீகவாதியும் கூட. திருமந்திரத்தில் ஈடுபாடு கொண்டவர்.

நடமாடும் கோயிலான மனிதர்களுக்கு அன்பு, நன்மைசெய்தால், அது படமாடும் கோயில் இறைவனுக்குச் சென்று சேரும் என்பது திருமந்திரம் செய்த திருமூலரின் கோட்பாடு.

படமாடும் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா, நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில், படமாடும் கோயில் பகவற்கு அஃது ஆமே. (திருமந்திரம்)

படமாடும் கோயில்களில் இருக்கும் படங்களுக்கு பாலாபிசேகம்,  நெய்யபிசேகம்,  நெய்வேத்தியம் செய்வதால் பயனில்லை. அதனை வறியவர்களுக்குக் கொடுத்தால் பயனுண்டு. அது அந்த படமாடும் கோயில் பரமர்க்கு கொடுத்ததை ஒக்கும் என்பது திருமந்திரம்.

அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்! மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல். ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம்விலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே   (மணிமேகலை – பாத்திரம் பெற்ற காதை:92:96)

மக்கள், தேவர் இரு சாரார்க்கும் ஒத்த முடிவினை உடைய அறம் என்பது யாது என விளக்கும்போது பசிப்பிணி தீர்த்தலே சிறந்த அறம் என்கிறார்  சீத்தலைச்சாத்தனார்.

மருத்துவர் லம்போதரம் மக்கள் தொண்டே மகேஸ்வரன் தொண்டு எனவும் மறுவுலகம் கிடைக்காது போனாலும்  கைமாறு கருதாது தொண்டாற்றுபவர். அவருக்கு விருது கொடுப்பது ஈகுருவி நிறுவனத்துக்குத்தான் பெருமை.  (Nakkeeran)


About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply