நக்கீரன்
நிகழும் ஸ்ரீதுன்முகி வருடம் உத்தராயணம் சசிரிது பங்குனி மாதம் 31ஆம் திகதி (ஆங்கிலத்தில் 13 ஏப்ரல் 2017 அன்று இரவு 14 ஏப்ரல் 2017) வியாழக்கிழமை இரவு – கிருஷ்ணபட்ச திருதியையும் – சித்தி நாமயோகமும் பத்ரை கரணமும் விசாகம் நட்சத்திரம் 3 ஆம் பாதம், துலாம் இராசி, மகர இலக்னத்தில் ஸ்ரீகுருமகாதிசையில் நள்ளிரவு 12.43 க்கு தமிழ் புத்தாண்டு பிறந்திருக்கின்றது.
ஆண்டுகளை உத்தம, மத்திம, அதம ஆண்டுகளாகப் பிரித்துள்ளனர். இப்போது பிறந்துள்ள புத்தாண்டுக்குப் பெயர் ஹேவிளம்பி. இது மத்திம ஆண்டு. தமிழில் பொற்றடை. என அழைக்கப்படுகிறது. பொற்றடை என்றால் பெண்கள் கழுத்தில் அணியக்கூடிய பொன்னாலான அணிகலனைக் குறிக்கும். அறுபது ஆண்டுகள் கொண்ட சுழல் கால வரிசையில் ஹேவிளம்பி 31 ஆவது ஆண்டாகும். இதில் வெண்பா, ஆற்காடு ஸ்ரீ சீதாராமஹனுமான் வாக்கிய பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் பலவும் மலரப்போகும் புது ஆண்டின் பலன்களை கணித்துள்ளன. புத்தாண்டு பிறந்தாலே சோதிடர்களுக்கும் கோயில் பூசாரிகளுக்கும் கொண்டாட்டம். யார் வீட்டில் மழை பெய்யவில்லையோ அவர்கள் வீட்டில் ஒரே காசுமழை!
புத்தாண்டில் அடுத்தடுத்து பேரழிவு ஏற்படுமாம். இந்த புத்தாண்டில் 11 புயல்கள் உருவாகி அவற்றில் 6 புயல்களினால் நல்ல மழை பெய்யும் என்று ஆற்காடு ஸ்ரீ சீதாராமஹனுமான் வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. ஏரி, குளம், குட்டை, கால்வாய், ஆறுகள், அணைகள் நிரம்பி வழியும். இந்த ஆண்டு காளமேகம் உற்பத்தியாவதால் எல்லா இடங்களிலும் நல்ல மழை பெய்யும்.
வங்கக் கடலில் 1000 கிலோமீட்டர் தொலைவில் புயல் உருவாகி வட, தென் மாநிலங்களில் அதிக வேகத்துடன் கரையைக் கடக்கும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நல்ல மழை பெய்யும்.கடல் கொந்தளிப்பும், கடல் சீற்றமும் ஏற்படும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நில நடுக்கம், சூறாவளி ஏற்படும். கடலோர மக்களுக்கு பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்படும். இந்த ஆண்டு பூமி, நிலம், வீடு விலைகள் சற்றுக் குறையும், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு விலை சற்று அதிகரிகரிக்க வாய்ப்புண்டு. இந்த ஆண்டு ஆதாயம் 56, விரையம் 47 ஆக இருக்கிறது. ஆதாயம் 9 அதிகமாக இருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்று வாக்கிய பஞ்சாங்கம் கூறியுள்ளது.
இந்த எதிர்கூறல்களைக் கூற பெரிய அறிவாற்றல் தேவையில்லை. சாதாரண பகுத்தறிவு இருந்தாலே போதும். புயல், வெள்ளம், சூறாவளி, நில நடுக்கம் இல்லாத ஆண்டுகள் ஏதாவது இருக்கின்றனவா?பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு விலை சற்று அதிகரிகரிக்க வாய்ப்பு உண்டாம். சோதிட காலத்தில் இந்த வேதிப் பொருட்கள் இருந்தனவா? பின் எந்த இராசி, கோள், நட்சத்திரம் அடிப்படையில் இந்த எதிர்கூறல் சொல்லப்படுகிறது?
சோதிடர்கள் சொல்லும் இராசிகள் (நட்சத்திரக் கூட்டங்கள்) 9 கோள்கள் மற்றும் 27 நட்சத்திரங்களில் பலநூறு ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் வலம் வருபவை. அவற்றால் புவியில் வாழும் மனிதர்களுக்கு ஆபத்து, நன்மை, தின்மை ஏற்படும் என்பது கற்பனையே. இந்த இராசிகளே கற்பனைதான். அவை நட்சத்திரங்கள் என்றாலும் அதன் உருவம் கற்பனை. அண்ட வெளியில் கோடான கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன. அவற்றைச் சுற்றி கோடிக்கணக்கான கோள்கள் வலம் வருகின்றன.
நமது சூரியன் அடங்கிய அண்டத்துக்கு ஆகாய கங்கை என்று பெயர். ஆகாய கங்கை அண்டத்தில் சூரியன் உட்படக் குறைந்தது 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. நமது அண்டத்தில் மட்டும் நமது சூரியன் போன்ற நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற பூமி மாதிரியான கிரகங்களின் எண்ணிக்கை 1,100 கோடி அளவுக்கு இருக்கலாம் என்று வானியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். அதாவது, இவை உயிரின வாய்ப்பு கொண்டவை. சிவப்புக் குள்ளன் நட்சத்திரங்களையும் கணக்கில் கொண்டால் பூமி மாதிரி கோள்கள் 4,000 கோடி அளவுக்கு இருக்கலாம் என்று வானியலாளர்கள் கூறுகிறார்கள்.
பிரபஞ்ச வெளியில் நமது அண்டம்போல 10 ஆயிரம் கோடி முதல் 20 ஆயிரம் கோடி அண்டங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு அண்டத்திலும் நமது அண்டத்தில் உள்ளதுபோலவே கோள்கள் இருக்க வேண்டும் என்று வானியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். ஆகவே, நமது பிரபஞ்சம் முழுவதிலும் பூமி போன்று கோடானு கோடி கோள்கள் உள்ளன. எனவே, எங்கோ இருக்கின்ற ஏதாவதொரு பூமியில் அல்லது பூமிகளில் மனிதனைப் போன்றவர்கள் இருக்கலாம். அதற்கான வாய்ப்புண்டு.
அண்மைக் காலத்தில் பூமி போன்ற கோள்களை கண்டுபிடித்துள்ளனர். அவை சிவப்புக் குள்ளன் வகையைச் சேர்ந்த ஒரு நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டிருக்கிறது. அந்த சிவப்புக் குள்ளன் நட்சத்திரம் சூரியன் போல் பாதி அளவு உள்ளது.
இராசி, கோள்கள், நட்சத்திரங்களினால் மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. தங்கள் வருமானத்துக்கு சோதிடர்கள் இந்த இராசி, கோள், நட்சத்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். சோதிடர்கள் தோஷம் இருப்பதாக ஏமாளிகளை மிரட்ட அவர்கள் கோயில்களில் இருக்கும் பூசாரிகளை அணுகுகிறார்கள். அவர்கள் தோஷத்தை நீக்குவதற்கு பூசை, யாகம், அபிசேகம் செய்ய வேண்டும் என்று கூறி பணம் பறிக்கிறார்கள். ரொறன்ரோவில் மட்டும் 15-20 சோதிடர்கள் கூடாரம் அடித்து நிரந்தரமாக இருந்து கொண்டு எல்லாவித சிக்கல்களையும் தீர்த்துவைப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். கைரேகை, ஜாதகம், முக நாடி, சாம்திரிகா இலட்சணம், வாஸ்து, நாடி என எல்லாவித சோதிடக் கலைகளில் தாங்கள் புலி என்கிறார்கள். சோதிட சிகாமணி, சோதிட ஆசான், சோதிட ஞானி, சோதிட பண்டிதர் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்து விளம்பரம் செய்கிறார்கள்.
திருமணப் பொருத்தம், திருமணத் தடங்கல் நீக்கல், கல்வி, உத்தியோகம், தொழில் வியாபாரம், குடும்பத்தில் கணவன் – மனைவி சிக்கல், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம், வேலை சரிவுகளுக்கு பரிகாரங்கள், செய்வினை, கண் திருஷ்டி, நாவூறு, எதிரிகள் தொல்லைகள், வழக்குகளில் வெற்றி, இலட்சுமி வசீகரம், கெட்ட தோஷங்கள், பித்ருதோஷம், குலதோஷம், ஆயுள் தோஷம், பிரமஹத்தி தோஷம், நவக்கிரக தோஷம் செவ்வாய் தோஷம், சுக்கிரக தோஷம், நட்சத்திர தோஷம், நாகதோஷம், கர்ப்ப தோஷம், கிரகங்களின் பாதிப்புக்கள், 12 இராசிகள், 27 நட்சத்திரங்களின் பாதிப்புகள், புதுமனை செல்பவர்கள் வாஸ்து குறைகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செழிப்பாய் வாழ்ந்திட, நினைத்த காரியம் கைகூட, வெற்றிபெற, சுபீட்சம், மாங்கல்ய பாக்கியம் பலம்பெற, உடல் நலம், நிம்மதியான வாழ்வு, அருள்நிறைந்திடவும், செல்வவளம் பெறவும், வாழ்க்கையில் மன நிம்மதி பெற்று சகல ஐஸ்வரியங்களுடன் நினைத்த காரியம் கைகூடி மகிழ்ச்சியாக வாழ தங்களிடம் வரும்படி கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்கிறார்கள். மாற்றம் காண்பீர்கள், வாழ்க்கை வாழ்வதற்கு …….. வாய்ப்பை தவறவிட்டு விடாதீர்கள்! என உறுதி கூறுகிறார்கள்.
ரொறன்ரோ வரும் சோதிட சிகாமணிகள் பெரும்பாலும் தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பேசுபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அதிகம் படியாதவர்கள். சிலர் சோதிடத் தொழிலை தலைமுறை தலைமுறையாகச் செய்து வருபவர்கள்.
தலையில் மிளகாய் அரைப்பதற்கு கனடிய தமிழர்கள்தான் தோதானவர்கள் என இவர்கள் கணித்து வைத்திருக்கிறார்கள். நம்மவர்களும் மூன்றாம் உலக நாட்டில் இருந்து முதலாம் உலக நாடுகளில் ஒன்றான கனடாவுக்கு புலம் பெயர்ந்தாலும் பழைய மூடநம்பிக்கைகளை கைவிடாது பொன்போல் பேணி வருகிறார்கள்.
எதிர்காலம் பற்றிய மக்களின் பாதுகாப்பின்மையைச் சோதிடர்கள் தங்களது சுரண்டலுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தலைமுறை தலைமுறையாகச் சோதிடப் புரட்டுக்குத் தமிழ்ச் சமூகம் இரையாகி வருக்கிறது. சோதிடம் என்ற மூடநம்பிக்கையால் தமிழ்ச் குமுதாயத்தின் அறிவியல் முன்னேற்றம் தடைபடுகிறது. பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
புத்தம் புது கார் வாங்கினாலும் அதனைக் கோயிலுக்கு ஓட்டிக் கொண்டு போய் அர்ச்சனை செய்கிறார்கள். ஐயர் எலுமிச்சம் பழம் கொடுக்க அதன் மீது காரை ஏற்றி நசுக்குகிறார்கள். காருக்கு விபூதி சந்தணம் வாங்கி அப்புகிறார்கள்! இதற்குக் காரணம் அந்தக் காரை உற்பத்தி செய்யப் பயன்பட்ட அறிவியலை நம்பாமையே.
கனடாவில் உள்ள எண்ணிறந்த கோயில்களும் எமது மக்களை விடுவதில்லை. அடியார்களே! துர்க்கை அம்மனுக்கு பால், பழம், வந்து அபிசேகம் செய்யுங்கள். அம்பாள் மனம் குளிர பலகாரம் கொண்டு வந்து படையுங்கள். அம்பாள் மனமிரங்கி சகல சித்திகளையும் அருள் பாலிப்பாள் என வானொலிகளில் விளம்பரம் செய்கின்றன.
கோள்கள், நட்சத்திரங்கள் இவற்றால் தோஷம் இருப்பதாக சோதிடர் சொன்னால் பாமர மக்கள் மட்டுமல்ல படித்த மக்களும் அதனை எளிதில் நம்பி விடுகிறார்கள். நம்பி பணத்தைச் செலவழித்து அதற்கான பரிகாரங்களை செய்யப் புறப்படுகிறார்கள்.
சோதிடம் என்ற சொல் சமற்கிருதச் சொல். அது இந்து மதத்துக்கே சொந்தமானது. சோதிடம் வேதத்தின் ஐந்தாம் வேதாங்கமாகக் கருதப்படுகிறது. கடவுளை நம்புவர்கள் கோள்களால் தங்களுக்கு துன்பம் உண்டு, கெடுதல் வரும் என நினைக்க மாட்டார்கள். திருஞாசம்பந்தர் அதனைக் கோளறு பதிகத்தில் உறுதியாகச் சொல்கிறார்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே (கோளறு பதிகம்)
இப்பாடலில் திருஞானசம்பந்தர் ஒன்பது கோள்களும் நல்லனவே செய்யும் என்கிறார். கோள்களைப் போலவே பயணத்துக்கு கெடுதல் செய்யும் என நம்பப்படும் பூரம், பூராடம், பூரட்டாதி, மகம், கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம்,ஆதிரை, சித்திரை நட்சத்திரங்கள் எல்லாமே நல்லவை என்கிறார்.
உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை , திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள் , துர்க்கை , செயமகள் , நிலமகள் , திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லன வாகத் தரும் . அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும் .
திருஞானசம்பந்தரைப் போல் அருணகிரி நாதரும் முருகன் தனக்கு முன் தோன்றினால் நாள், கோள், வினை, கூற்று ஒன்றுமே செய்ய முடியாது எனச் சொல்கிறார்.
நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
குமரேசரின் இரு திருவடிகளும் அவற்றில் அணிந்த சிலம்பும் சதங்கையும் தண்டையும், ஆறுமுகங்களும் பன்னிரு தோள்களும் அவற்றில் அணிந்த கடம்பமாலையும் எனக்கு முன்னே வந்து தோன்றிவிட்டால் – நல்ல நாள் கெட்ட நாள் தான் என்னை என்ன செய்யும்? நான் செய்த நல்வினைத் தீவினைப் பயன்கள் தான் என்னை என்ன செய்யும்? வினைப்பயன்களை அளிக்க எனை நாடி வந்த ஒன்பது கோள்களும் என்ன செய்யும்? என் உயிரை எடுக்க வரும் கொடிய கூற்றும் என்ன செய்யும்? அவன் அருளால் இவற்றை எல்லாம் வெல்லுவேன்.
சோதிட பலன் சொல்லும் சோதிடர்கள் தங்கள் ஜாதகத்தைப் பார்த்து இருக்கின்ற எல்லாத் தோஷங்களுக்கும் பரிகாரம் செய்து எந்தக் குறையும் இல்லாமல் நிறைந்த செல்வத்துடன் நோய் நொடியின்றி நீண்ட நாள் வாழலாமே? பின்னர் எதற்காக பத்தாயிரம் மைல்கள் விமானத்தில் பறந்து வந்து இங்குள்ள ஒரு கடைப் பொந்தில் குடியிருந்து பிழைக்க வேண்டும்? அங்கேயே மாலோகமாக வாழலாமே!
சோதிடம் பொய், அறிவியல் அல்ல என்பதே வானியலாளர்கள், பகுத்தறிவு சிந்தனையாளர்கள் ஆகியோரின் வாதம் ஆகும். சோதிடத்தின் அடிப்படையே அறிவியல் அற்றது. சில சோதிடர்களின் சில முற்குறிப்புகள் உண்மையாவது சோதிட சாத்திரத்திலிருந்து அல்ல. சோதிடம் தெரியாதிருந்தாலும் பலன் சொல்கிறவனுடைய கீழ்க்கண்ட சிந்தனையிலிருந்து சில உண்மைகள் நடக்கக் கூடியனவே!
திறன், அனுபவம், வாக்குச் சாதுரியம், சாதககாரனின் மனநிலை, சாதாரண அறிவு மற்றும் வாய்ப்பும் திறமைமிக்க ஊகம் ஆகிய ஆறு கூறுகள் (அம்சங்கள்) மீது சோதிட பலன்கள் தீர்மானிக்கப் படுகிறதே அல்லாமல் வேறு எந்த ஆதாரத்தின் மீதும் இல்லை. எடுத்துக்காட்டு கண்கட்டி வித்தைகள் மந்திரத்தின் மேல் அல்லாமல் உண்மையில் அது அவன் செய்யும் தந்திரத்திலும் அவனது கைச் சாதுரியத்திலும் இருக்கின்றது. அதைப் போலவே பலன்கள் சோதிடத்தில் இல்லை, சோதிடனின் திறமையில் இருக்கின்றன. எதிர்கால பலனை (Prediction) எந்தச் சோதிடனாலும் கணித்துச் சரியாகச் சொல்ல முடியாது. ஊகத்தினால் சொல்வது ஏதோ ஒரு சமயத்தில் உண்மையாகி விடலாம்.
சோதிடர்களுக்கு வாக்குச் சாதுரியம் மிக அவசியம். திறமையாகப் பேச வராதவன் சோதிடனாக இருக்க மாட்டான். இருக்க முடியாது. பல சோதிடர்கள் சோதிட நூல்களில் சொல்லப்பட்ட சில கூறுகளை (அம்சங்களை) உள்வாங்கிக் கொண்டு அதன் பின்னணியில் வெறும் ஊகத்தின் அடிப்படையில் பலன் சொல்கிறார்கள். இன்னும் சிலர் வெறும் சாதகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளை கவனித்து, புத்திசாலித்தனம், அனுபவங்களின் பின்னணியில் சில தடவை சரியாகச் சொல்லி விடுகின்றனர்.
சில ஆரூடங்கள் நடந்தாலும் உண்மை, நடக்காவிட்டாலும் உண்மையே! எடுத்துக் காட்டாக எனது மகளுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? அதற்கு பதில்: தற்போது 3 திங்கள் கிரகபலன் இல்லை. இப்போது திருமணம் நடப்பது சற்று கடினம். 4 இல் இருந்து 6 திங்களுக்குள் நடந்தால் நடக்க வேண்டும். இல்லையானால் இரண்டு ஆண்டுகள் வரை நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதன் பிறகு கண்டிப்பாக ஆகும். இப்படி நீண்டகால எதிர்கால பலன் சொல்லும்போது சிலருக்கு நடந்தே விடும்.
Leave a Reply
You must be logged in to post a comment.