ஆடல் கலைக்கு அழகு தேடிக்கொடுத்த கலைச்செல்வி மஹீஷா

ஆடல் கலைக்கு அழகு தேடிக்கொடுத்த கலைச்செல்வி மஹீஷா அரங்கேற்றம்!

திருமகள்

ஏய வுணர்விக்கும் என்னம்மை – தூ
உருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்.

கலைகள் என்னும் சொல்லுக்கு முன்ஒட்டாக ‘ஆய’ என்னும் சொல் சேர்க்கப் பட்டுள்ளதால் இது அழகுக் கலைகளை மட்டுமே உணர்த்துவதாக அமைந்துள்ளது. கலை என்னும் சொல்லில் ‘கல்’ என்னும் சொல்லும் ‘ஐ’ என்னும் விகுதியும் காணப்படுகின்றன. ‘கல்வி என்றால் புதியனவற்றைக் கற்று அறிதல் என்றும் ‘ஐ’ என்றால் அழகாகக் கற்றல் என்றும் – அழகாக வெளிப்படுத்தல் என்றும் பொருள் கொள்ளமுடியும்.

ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று வரையறை செய்யப்பட்டாலும் கலைகள் இத்தனைதான் என்று வரையறை செய்ய இயலாது. காலந்தோறும் கலைகளின் எண்ணிக் கையும் தன்மையும் வேறுபட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழரில் பெரும்பாலோர் இந்த அறுபத்து நான்கு கலைகளும் எவையெவை என்று அறிந்திருக்கமாட்டார்கள். ஆனால் இசைக்கலை, ஆடல்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டிடக்கலை ஆகிய அய்ந்து கலைகளும் ‘நுண்கலைகள்’ எனப் போற்றப்படும்.

அறுபத்துநாலாக வகுக்கப்பட்ட கலைகள் அனைத்தும் தமிழர்க்கு உரியனவாதலாலும் தமிழ்க்கலைகள் ஆரியக் கலைகட்குக் காலத்தால் முந்தியனவாகும்,

நடனம் என்பது அழகுற ஆடுவது. அது நூற்றெட்டு உடற் கரணங்களோடும், கை, கால், கண், வாய் முதலிய உறுப்புகளின் தொழில்களோடும் கூடியது. தமிழ்க் கூத்து இன்று பரத நாட்டியம் என்ற பெயரால் வழங்கப்பெறுகின்றது. பாவம், இராகம், தாளம் என்ற சொற்களின் முதல் எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து “பரதம்” ஆகியது என்று சொல்கிறார்கள். பரதம், நாட்டியம், நிருத்தம், நிருத்தியம் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது. பாவ இராக தாள சேர்க்ககையில் பரதம் அல்லது கூத்துப் பிறக்கிறது. இந்த மூன்று சொற்களும் நாட்டியத்தின் முக்கிய கூறுகளாகும்.

பாவம் என்பது கை, கால், தலை, உடல், இடை மற்றும் இதழ்கள் போன்றவற்றின் அசைவுகளால் மனதில் உண்டாகும் இன்ப துன்பங்களை (எண்பான்சுவைகளை) நடித்துக் காண்பிப்பதாகும். இவற்றுக்கு பாடப்படுகின்ற பாடல்கள், இராகம், மற்றும் தாளத்தினை அடிப்படையாகக் கொண்டவைகளாகும். கால் மற்றும் கைகளால் செயல்படுகின்ற அசைவுகள் இராக நளினங்களுக்கு ஏற்பவும் தாள கணக்குகளுக்கு ஏற்பவவும் அசைவினைப் பெறுகின்றன. தாளம், காலம், செய்கை, அளவு என்ற மூன்றினாலும் ஏற்படுகின்றன. பரத நாட்டியத்தில் கிண்கிணிகளால் தட்டி தாளம் வெளிப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில் நடனம் கூத்து, ஆடல், நடம், நிருத்தம் என குறிக்க்கப்பட்டது. பிற்காலத்தில் இதனை சதிர் என்றும் சின்னமேளம் என்றும் அழைத்தார்கள்.

அண்மைக்காலமாகவே இந்த நாட்டியம் “பரத நாட்டியம்” எனக் குறிக்கப்பட்டு உலகம் முழுதும் பரவி வருகிறது. பரத சாத்திரம் என்னும் வடமொழி நூல் எழுதப்பட்ட காலம் சரிவரத் தெரியவில்லை. கிமு 2 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். “நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலாவுள்ள தொன்னு}ல்களுமிறந்தன” என்ற சிலப்பதிகார பாயிரத்தின் மூலம் அடியார்க்கு நல்லார் வடமொழியின் பரத சாத்திரத்திற்கு முந்தியது தமிழ்ப் பரதமே என்று நிலை நிறுத்துகிறார்.

கடைச் சங்க காலத்து நாடகத் தமிழ் நூல்கள் பல இறந்துபட்டுவிட்டன. சயந்தம், செயிற்றியம், முறுவல், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் விளக்கத்தார் கூத்து, செயன்முறை, குணநூல் நன்நூல கூத்த நூல் என்னும் பெயர்களை மட்டுமே அறிய முடிகின்றது. அவை அனைத்துமே நாட்டியம் பற்றியும், நாடகம் பற்றியும் இலக்கண முறையில் விளக்கம் கூறும் நூல்கள் ஆகும். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், அவர் தரும் உரை விளக்கங்களில் செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல்களை மேற்கோள் காட்டுவதால் அத்தகைய நூல்கள் அவர் காலத்தில் இருந்துள்ளன என்பதை உறுதி செய்ய முடிகின்றது.

கூத்த நூல் என்னும் பெயருடைய நாடகத் தமிழ் இலக்கண நூல் பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து எடுத்து அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது. அவ்வாறே கடைச் சங்க காலத்து அறிவனார் இயற்றியுள்ள பஞ்சமரபு என்னும் நூல் இன்று கிடைத்துள்ளது.

பஞ்சமரபு நாடகத்திற்கு நிருத்தம் என்ற பெயர் உள்ளதாகவும் கூறுகின்றது. இஃது இசைவழி நிகழும் நடனத்திற்குரிய சிறப்புப் பெயர் என்றும் இதற்குச் சான்றாக “இசையுடன் நடனம் நிருத்தமாமே” என்ற பரத நூற்பாவினையும் காட்டுகின்றது. நிருத்தம் என்பது தாண்டவம் முதலான எல்லாக் கூத்தினுக்குரிய பொதுப் பெயராகவும் வழங்கிவருகின்றது. இந்நிருத்தத்தில் தாண்டவம், நிருத்தம், நாட்டியம், குரவை, வரி, கோலம், வகை எனும் எழுவகைக் கூத்துகள் அடங்கியுள்ளன என்றும் அவை முறையே அமைதி, வேடிக்கை, வகை என்ற மூவகைக் கூத்தினுள் அடங்கும் எனவும் அந்நூல்் நமக்குக் காட்டுகின்றது.

தெலுங்கு – வடமொமி ஆகியவற்றின் தலையீடும் செல்வாக்கும் தமிழர் வரலாற்றில் குறுக்கிடுகின்ற வரை தமிழருக்கே உரிய ஆடல் பாடல் ஓங்கி வளர்ந்து இருந்தது.

மூன்று தமிழிலும் இயலைவிட இசை இனிமையானது. இயல், இசை இரண்டையும் விட நாடகத்தமிழ் உயர்வானது. காரணம் அதில் இயல், இசை இரண்டும் கலந்திருப்பதுதான்.

கலைகளில் சிறந்தது நாட்டியக் கலையே என்பது தமிழ் வழக்கு ஆகும். சிவனின் ஒரு தோற்றமான  ஆடலரசன் (நடராசன்) உருவம் உலகப் புகழ்பெற்றது தெரிந்ததே. பலர் நினைப்பது போலவோ சொல்வதுபோலவோ இந்த ஆடலரசன் உருவம் தொன்மை வாய்ந்ததன்று. சைவ நாயன்மார் காலத்தில் உருக்கொண்டு பிற்காலச் சோழர் காலத்தில் மிகப் பெரிய அளவு பரவிய ஒன்றாகும். இன்று பல்லாயிரக்கணக்கான ஆடலரசன் சிலைகள் தமிழகக் கோயில்களில் காணப்படுகின்றன.

கடந்த ஆகஸ்ட் 09 ஆம் நாள் ரொறன்ரோ ஆர்மீனியன் இளையோர் மையத்தில் செல்வி மஹிஷா இரவீந்திரா அவர்களது நாட்டிய அரங்கேற்றம் மிகச் சிறப்பாக அரங்கேறியது. இவர் வாகினி நித்தியாலய நடன ஆசிரியை சுரேகா இராதாகிருஷ்ணனின் மாணவி ஆவார். இவரது இசை ஆசிரியை குலநாயகி விவேகானந்தன் அரங்கேற்றத்துக்கு வருகை தந்திருந்தார்.Aranketrammaheisha2

அரங்கம் எளிமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல காலைத்தூக்கி ஆடும் ஆடலரசனின் சிலை அரங்கின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அரங்கின் இரண்டு பக்கமும் கலையழகோடு பிள்ளையார் உருவம் வரையப்பட்ட நீளமான எழினிகள் (திரை) தொங்கவிடப் பட்டிருந்தது. அரங்கேற்றத்துக்கும் பிள்ளையாருக்கும் என்ன தொடர்பு என எண்ணினேன். பின் யோசித்துப் பார்த்ததில் வினை தீர்க்கும் வினாயகரை வணங்கி அரங்கேறுவது ஒரு வழக்கம் எனத் தெரிந்து கொண்டேன்.

சிறப்பு விருந்தினராக மிருதங்க வித்துவான் கலைமாமணி திருவாரூர் பக்தவச்சலம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேடையின் வலது புறத்தில் நட்டுவாங்கம் மற்றும் நடன அமைப்புச் (Choreologist) செய்த ஆசிரியை சுரேகா இராதாகிருஷ்ணன், கலைமாமணி யாதவன் யோகநாதன். மிருதங்கக் கலைஞர் கவுரிசங்கர் பாலச்சந்திரன், புல்லாங்குழல் கலைஞர் வி.கே, இராமன், வயலின் வாசிக்க திரு ஜேசங்கர் பாலன். தம்பூரா வாசிக்க செல்வி அபிராமி விவேகானந்தன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

ஓ கனடா நாட்டுப் பண்ணை செல்வன் மதூரன் இரவீந்திரா பாடினார். தமிழ்மொழி வாழ்த்தை அழகாக வைஷ்ணவி யோகேந்திரன் பாடினார். பின்னர் அரங்கேற்ற நாயகி மஹீஷா தனது ஆசிரியை சுரேகா இராதாகிருஷ்ணன் அவர்களது கால்களில் விழுந்து வணங்கி அருள்வாழ்த்துப் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சிகளை பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் தமிழிலும் நிவிதா மாணிக்கவாசகம் ஆங்கிலம் தொகுத்து வழங்கினார்கள்.

எந்த நடன அரங்கேற்றத்துக்குப் போனாலும் எனக்கு சிலப்பதிகாரம் நினைவுக்கு வரும். குறிப்பாக அரங்கேற்று காதையும் குன்றக் குரவையும் ஆய்ச்சியர் குரவையும் நினைவுக்கு வரும். ஆடல்கலை தமிழர்களது சொத்து என்பதற்கு அரங்கேற்று காதை கட்டியம் கூறுகிறது.

ஆடலும் பாடலும் தொடக்க காலத்திலிருந்தே தமிழர் வாழ்க்கையுடன் ஒன்றிப் போயிருந்தமையைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தெளிவுற விளக்குகின்றன. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் வள்ளி, காந்தள், தேர்க்குரவைகள், அமலை போன்ற புறத்திணை சார்ந்த அந்நாளைய ஆடல் வடிவங்கள் குறிக்கப்படுகின்றன. களவியல் அதிகாரத்தில் தலைவிக்கான கூற்று நிகழுமிடங்களை வரிசைப்படுத்துகையில், அகத்திணை ஆடல்களுள் ஒன்றான வெறியாட்டு தொல்காப்பியரால் சுட்டப்படுகிறது. தோழிக்கான கூற்றிடங்களைக் கற்பியலில் சுட்டுமிடத்துப் பாணர், கூத்தர், விறலியர் என்னும் தொழிற்சார்ந்த கலைஞர்களைத் தொல்காப்பியர் அறிமுகப்படுத்துகிறார்.

கூத்தர் ஆடற்கலைஞர்கள். பாணர்கள் இசைக்கலைஞர்கள். விறலியர் ஆடலும் பாடலும் கற்றுத் தேர்ந்தவர்கள். இவர்கள் தவிர, பாடினிகளும் கண்ணுளரும் வயிரியவரும் கோடியரும் நன்கு பாடல் பாடும் ஆற்றல் பெற்றிருந்தனர் என்பதை சங்க இலக்கியங்களால் அறிய முடிகிறது.

பாடல்கள் மன்னர்களைப் புகழ்ந்தும் தெய்வங்களைப் பரவியும் மரபு நிலைகளைப் பகர்ந்தும் வெற்றிகளைக் கொண்டாடியும் அமைந்திருந்தன. பாலை பாடிய பாடினியர் மறமும் பாடினர்.  முழவு இசைத்து வஞ்சியும் பாடினர்.

வேலன் வெறியாட்டம் என்ற ஆடல் பாடல் இருந்தது. கடம்பும் களிறும் பாடி, முருகனின் வீரச்செயல்கள் போற்றும் இப்பாடல்களில் தலைவியின் நோய் தணிக்கும் வேண்டுதலும் இருந்தது.

இவை சங்க இலக்கியங்களில் “ஆடல், பாடல், கூத்து’ போன்றவற்றில் தமிழர்களுக்கு இருந்த ஆளுமையைக் காட்டுகின்றது. சோழப் பேரரசர் இராசராச சோழர் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில், அவருடைய மகன் பேரரசர் இராசேந்திர சோழர் கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுப்பிய (தஞ்சை பெரிய கோயிலையொத்த) கங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஆகியவற்றுடன் இரண்டாம் இராசராசன் கட்டிய தாராசுரம் கோயிலும் அய்யன்னாவின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்க காலத்தை அடுத்த காப்பியக் காலத்தில் இசைக்கலை உச்ச வளர்ச்சி கண்டது. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதையும் கானல்வரிப் பாட்டும் காப்பிய காலப் பாடகர்களின் இசைத் திறமையைக் காட்டுகின்றன. மாதவிப் பெண்மயிலாள் தோகை விரித்தாடிய நலத்தை இளங்கோ அடிகள் பின்வருமாறு சித்திரிக்கிறார்.

“பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை,
ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
கூறிய மூன்றில் ஒன்றுகுறை படாமல்
ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில்
சூழ்கடல் மன்னற்குக் காட்டல் வேண்டி, ….. ”

மாதவி அரங்கேறும் போது அவளுக்கு அகவை பன்னிரண்டு! அய்ந்தாவது அகவையில் நாட்டியம் பயிலத்துவங்கி ஏழாண்டுகள் அதைப் பிழையின்றிக் கற்றுக் கொண்டவள்! சுருண்ட கூந்தலில் சு10டிய பூக்கள் அவளது அழகிய தோளில் அலைந்து விளையாடுகின்றன. பிறப்பினில் மட்டுமின்றி அழகிலும் குறைவில்லாத மாதவி ஆடலிலும் பாடலிலும் சிறந்து விளங்கினாள்.

வீரக்கழல் அணிந்த சோழ மன்னனின் முன்னே முதன் முதலில் தான் கற்ற வித்தையை கடை விரிக்கிறாள்! தன் நாட்டியத்தை அரங்கம் ஏற்ற வருகிறாள்!

ஆடலை அரங்கேற்ற வந்த ஆடலரசி மாதவி தன் நாட்டியத்துக்கு ஆடலாசிரியன், பாடலாசிரியன் இசையாசிரியன், தண்ணுமை முதல்வன் (மத்தள ஆசிரியன்) குழலாசிரியன் மற்றும் யாழாசிரியன், இயற்றமிழ் ஆசிரியன் என வல்லுநர்களைத் துணையாகக் கொண்டிருந்தாள். மாதவி மொத்தம் பதினோராடல்களை ஆடிக்காட்னாள். அவற்றின் சிறப்பினை இளங்கோ அடிகள் விரிவாகப் பாடியுள்ளார். சிலப்பதிகாரத்தைப் படித்துத் தெரிந்து கொள்க.

இளங்கோ சொன்ன இயற்றமிழ்ப் புலவர் இன்று காணாமல் போய்விட்டார். இன்று பதங்களை, முத்திரைகளை, தாளத்தை, பாடல்களை ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்து ஆடும் வழக்கம்தான் பரவலாக நடைமுறையில் உள்ளது. நடனம் பழக வரும் ஒருவரை “முதலில் தமிழை நன்றாகக் கல்லுங்கள். அதன்பின் நடனம் பயில வாருங்கள்” என்று சொல்லும் நடன ஆசிரியர்களைக் காண முடியாது. கனடாவில் தமிழ் படிக்க எல்லா வசதி வாய்ப்புக்கள் இருக்கின்றன.Aranketramhaheisha1

பரதம் பொழுது போக்குக் கலையல்ல. அது வேதத்தின் ஒரு அங்கம், தெய்வீகக் கலை என்று அரங்கில் சொல்லப்பட்டாலும் ஆடல் கலை நட்டுவனார்களுக்கு வருவாய் தரும் கலையாகவும் ஆடல் மகளிருக்கு ஒரு மேலதிக பட்டம் தரும் கலையாகவும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் வெறும் முத்தமிழ்க் காப்பியம் மட்டுமல்ல தமிழர்களின் கலை, பண்பாடு, கல்வி ஆகியவற்றின் வளர்ச்சி நிலையையும் படம் படித்துக் காட்டுகிறது.

எடுத்துக்காட்டாக ஆடல் ஆசிரியனின் சிறப்புக்கள் கீழ்க்கண்டவாறு சித்திரிக்கப்படுகிறது.

“இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு
ஆடலும் பாடலும் பாணியும் து}க்கும்
கூடிய நெறியின் கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்…. “

ஆடற்கலை ஆசான் அகக் கூத்து, புறக்கூத்து என்ற இருவகைக் கூத்துக்களையும் நன்கு அறிந்தவன்; இந்த இருகூத்துக்கள் உள்ளடக்கிய பல பகுதிகளாகிய பலகூத்துக்களை இணைக்க வல்லவன். பதினோர் கூத்துக்களையும் (அல்லியக் கூத்து முதல் கொடுகட்டிக் கூத்து வரை), இந்தக் கூத்துக்களுக்கு உரிய பாடல்களையும், அவற்றிற்கமைந்த இசைக்கருவிகளின் கூறுகளையும், அவற்றைப் பற்றிக் கூறியுள்ள சிறந்த நூல்களின் படி விளக்கமாகத் தெரிந்தவன்.

பல்லவர், பாண்டியர் காலத்தில் இசைக்கலை பெருவளர்ச்சி பெற்றது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிய பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் எல்லாமே இசைப் பாடல்கள்தான்.

பண்ணின் நல்ல மொழியார் பவளத்தவர் வாயினார்,
எண்ணின் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற
கண்ணினார், வண்ணம் பாடி, வலி பாடித்
தம் வாய்மொழி பாடவே…..

எனும் திருமுறை அடிகள் அக்காலப் பாடுநர் திறம் காட்டும்.

தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் பிற்காலச் சோழர் காலம் பொற்காலமாக விளங்கியது. நான்கு நு}ற்றாண்டுகள் நீடித்த சோழப் பேரரசில் முதலாம் இராசராசன் ஆட்சிக்காலத்தில் கலைகள் கொடுமுடியைத் தொட்டன. மேலே குறிப்பிட்டவாறு இராசராசன் கட்டிய தஞ்சப் பெரிய கோயில் ஆடல், இசை எனும் இரு கலைகளின் வாழிடமாக இருந்தது. கோயில் சுற்றுப்புற சுவர்களில் சிவனின் 108 நடன முத்திரைகளில் எண்பத்தொரு நடன முத்திரைகளை சிற்பிகள் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

இக் கோயிலின் வடக்குத் திருச்சுற்றுமாளிகைச் சுவரின் புறத்தே வெட்டப்பட்டுள்ள தளிச்சேரிக் கல்வெட்டு ஏறத்தாழ 55 மீட்டர் நீளமுள்ளது. இக்கல்வெட்டு இத்திருக்கோயிலுக்கு வந்துறைந்த நானு}று ஆடற்பெண்களைப் பற்றியும், இங்கு இசைப் பணியாற்ற வருகை தந்த நு}ற்று முப்பத்தெட்டுக் கலைஞர்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. மிடற்றுக் கலைஞர்களாகவும் கருவிக் கலைஞர்களாகவும் இத்திருக்கோயிலில் பணியமர்ந்த இசைக் கலைஞர்களுள் பலர்தம் பெயர்களும் அவர்தம் ஊதிய அளவும் இக்கல்வெட்டில் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெரிய கோயிலில் பணியமர்ந்த பாடகர்கள் காந்தர்வர்கள், பாணர்கள், தமிழ் பாடியவர், ஆரியம் பாடியவர், கொட்டுப்பாட்டுப் பாடியவர், காண பாட இருந்தவர், பிடாரர்கள் எனப் பலவகையினராவர். இவர்களுள் பெரும்பாலானவர்களின் பெயர்களும், அவர்கள் எங்கிருந்து இப்பொறுப்பிற்கு வந்தனர் என்ற தகவலும், ஊதிய விகிதமும், பணிநிலையும் இக்கல்வெட்டில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. விரிவஞ்சி இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

பழைய காலத்தில் நடனம் தொடங்குமுன் கடவுள் வாழ்த்து (தோடைய மங்களம்) பாடப்பெறும். நட்டுவனார் ஒரு மணித்தியாலம் இந்த நிகழ்ச்சியை நடத்துவார். முதலில் மிருதங்கம் ஒலிக்கப்படும். ஒரு தாளத்தில் பல நடைகளில் குறைந்து வரும்படி ஜதிகள் சொல்லி வாசிக்கப்படும். பின் மங்கலச் சொற்கள் நிறைந்த கடவுள் வாழ்த்து இராகமாலிகையில் பாடப் பெறும். இந்த வழக்கம் இன்று அருகிவிட்டது. அல்லது சில மணித்துளியில் முடிந்துவிடுகிறது.

ஆடல்மகளிருக்கு இசை, இயல் என்கிற இரண்டு துறைகளிலும் ஓரளவு அறிவு இருக்க வேண்டும். மஹீஷாவின் இயல் புலமை பற்றி அதிகம் எனக்குத் தெரியாது. ஆனால் தொடக்கத்திலேயே தனக்கு ஆடல் மட்டுமல்ல பாடலும் பாடவரும் என்பதை எண்பிக்க தமிழ்ப் பாடல் ஒன்று பாடினார். அவரது நடன ஆசிரியையும் ஆடல் பாடல் இரண்டிலும் வல்லுனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடனம் என்பது அழகுற ஆடுவது. அது நூற்றெட்டு உடற் கரணங்களோடும், கை, கால், கண், வாய் முதலிய உறுப்புகளின் தொழில்களோடும் கூடியது என்று மேலே கூறினோம். அவற்றை மகீஷா அழகுற ஆடி அவையோரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.Aranketrammaheisha2

மலர்வணக்கம் (புஷ்பாஞ்சலி) ஜதீஸ்வரம், சப்தம் (சொல்) வர்ணம், உருத்திர தாண்டவம், கீர்த்தனம், அஷ்டபதி, ஜாவலி, தில்லானா என்ற மலர்வணக்கம் என்பது கைகளில் மலரை ஏந்திக் கொண்டு கடினமான கால்களில் அடவுகளை (foot steps) காட்டி அரங்கம் முழுதும் சுற்றி வந்து ஆடும் நடனமாகும். அடவு என்ற சொல் ஆடல் என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது.

அடுத்து அலாரிப்பு. அலாரிப்பு இல்லாத நடன நிகழ்ச்சியை இன்று பார்க்க முடியாது. அலாரிப்பு, அலரி, அலரிப்பூ, அல்லரிப்பு, அலர்பூ என அழைக்கப்படும். அலாரிப்பு என்றால் தயார்படுத்திக் கொள்ளல் என்பது பொருள் ஆகும். அலாரிப்பு ஜதியினை சொற்கட்டு என்றும் சொல்வார்கள்.

நடனக்கலை கடினமானது. அதனை எல்லோராலும் கற்றுத் தேற முடியாது. அதற்குச் சொல்லப்பட்ட இலக்கணங்கள் ஒருவருக்கு இருக்க வேண்டும். சிவந்த நிறமும் மலர்ந்த தாமரை மலர் போன்ற ஒளிமுகமும் அன்னம் போன்றவளாகவும் முழுநிலவு போலவும் பூத்த வஞ்சிக்கொடி போலவும் கார்மேகம் திறந்து மின்னல் வெளிப்பட்டது போலவும் விளங்க வேண்டும். மிகப்பருத்தல், மிக இளைத்தல், மிக உயரம், மிக குறுகல் இல்லாத உடலும் தக்க வடிவமும் சிறந்த மார்பகங்களுடன்; பரந்த நெற்றி, உடல் அமைப்பு, முகமலர்ச்சி, தாள, சுர அறிவுடையவராகவும் இருந்தல் வேண்டும். (அபிநய தர்ப்பணம்)

நடனக் கலையை தக்க ஆசிரியரிடம் பொறுமையோடு ஆண்டுக் கணக்கில் கற்றாலே அதில் புலமை பெறலாம்.

மஹீஷாஎல்லா நடனங்களிலும் மெய்பாடுகளை வெளிக் கொணர்ந்து மிக நேர்த்தியாகவும் அழகாகவும் ஆடிக்காட்டினார். அவையோரின் கைதட்டல் அதற்குச் சான்று பகர்ந்தது. சாதாரணமாகவே ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். அரங்கேறுபவர்களைப் பொறுத்தளவில் பொருத்தமான ஆடை அலங்காரம் முக்கியம். மஹீஷாவின் ஆடை அலங்காரங்கள் மிகப்பொருத்தமாக இருந்தன. அதற்கு தனது தந்தையாரின் தேர்வுதான் காரணம் என்பதை அவர் தனது பேச்சில் குறிப்பிட மறக்கவில்லை.

நடனத்தின் வெற்றிக்கு பக்க வாத்தியக் கலைஞர்களின் நாவண்ணமும் கைவண்ணமும் பெரிதும் கைகொடுத்தன. கலைமாமணி யாதவன் வழக்கம் போல கம்பீரமான குரலில் உச்சரிப்பு சுத்தியோடு பாடினார். அவருக்கு தமிழோடு என்ன பகையோ தமிழ்ப் பாடல்களை மிக அரிதாகவே பாடினார். புல்லாங்குழல் வாசித்த வி.கே. இராமன், சின்னமேளம் (மிருதங்கம்) வாசித்த கவுரிசங்கர் பாலச்சந்திரன் இருவரும் மிக மிக இனிமையாக வாசித்தார்கள். புல்லாங்குழலின் ஓட்டை வாயிலாக பால், தேன், பாகு கலந்த இனிமையான இசை வருவதை இதுவரை காலமும் நான் கண்டதில்லை!

நடனத்துக்கு கையாளப்பட்ட ‘கரு” எல்லாமே புராணம், இதிகாசம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தன. நிகழ்காலத்துக்கும் அவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. எத்தனை காலத்துக்கு ஆயர்பாடியில் வெண்ணெய் திருடிய கண்ணனையும் மூவடி அளந்த பெருமாளால் வஞ்சமாகக் கொன்ற மகாபலியையும் ஆடிக் காட்டப் போகிறார்கள்? ஏன் எப்போதும் கண்ணனும் கர்ணனும் இராமனும் சீதையும் நளனும் தமயந்தியும் துரோபதையையும் திரிதராட்டினனும் நினைவுக்கு வருகிறார்கள்? சங்கிலியன், பண்டார வன்னியன, கயிலாயவன்னியன் ஏன் நினைவுக்கு வருவதில்லை? எங்கள் புலவர்கள் ஏன் நினைவுக்கு வருவதில்லை?

அதே போல் எந்தப் பாடலும் மனதில் நிற்குமாறு இருக்கவில்லை. சில பாடல்கள் தெலுங்கில் இருந்ததால் அவற்றின் பொருள் விளங்கவில்லை. வேல் விழி மாதரை மணந்த வேலனை என்ற பாட்டு மட்டும் மனதில் இடம் பிடித்தது.

இசைக்கு மொழியில்லை, இசை எல்லை கடந்தது என்று சண்டைக்கு வருபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லுவது தமிழ்மொழிக்கு இசை தேவைப்படுகிறது.

இளங்கோ, அருணகிரி, பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் போன்றோர் பாடிய பாடல்களை நட்டுவனார் ஏன் மறந்தாரோ தெரியவில்லை.

“நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் (நின்னையே)

தத்தத்தோம் தரிகிடதோம் தளாங்குதோம்.
தகதிமிதோம் தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்.

பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே! நித்ய கன்னியே! கண்ணம்மா    (நின்னையே)

மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீச நீ – கண்
பாரயோ? வந்து சேராயோ? கண்ணம்மா!               (நின்னையே)

யாவுமே சுக முனிக்கொர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே – இங்கு யாவுமே கண்ணம்மா!                  (நின்னையே)

கற்றது கையளவு. கல்லாதது உலகளவு. அரங்கேற்றம் என்பது கலைப் பயணத்தின் முதல் படி. அதோடு நின்றுவிடாமல் கலைச்செல்வி மஹீஷா கலை மணமும் தமிழ்மணமும் பரப்ப வாழ்த்துக்கள்!

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply