ஜெயலலிதா ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு!
நக்கீரன்
தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவைத் திருத்துவது என்பது நாய் வாலை நிமிர்த்துவதற்கு ஒப்பானது.
அற்பர்களுக்கு பவிசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பர் என்பது ஜெயலலிதாவைப் பொறுத்தளவில் முற்றிலும் சரி.
தமிழ்நாட்டுக்கு அரிதாரம் பூசிப் பிழைக்க வந்தவர் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு ‘கண்கடை’ தெரியாமல் போவது இயற்கையே.
அதிலும் தமிழ்மானம், தன்மானம், இனமானம் பற்றிப் பேசும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு (?) கி. வீரமணியே அம்மாவே கெதியென்று அவர் காலில் விழுந்து கிடக்கும்போது அவைத் தலைவர் காளிமுத்து, புலவர் புலமைப்பித்தன், பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்ச்செல்வம் போன்றோரை நொந்து பயனில்லை.
வி.புலிகளுக்கும்;; -ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையில் நடைபெறும் அமைதிப் பேச்சு வார்த்தையை சென்னையில் நடத்துவதற்கு வி.புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தகுந்த மருத்துவ உதவி பெறவும் வன்னிக் காட்டில் இருக்கும் தலைவர் பிரபாகரனோடு நேரடித் தொடர்பு கொள்ளவும் வசதியாக இருக்கும் என்பவற்றைக் காரணம் காட்டியே இந்த வேண்டுகோள் முன்வைக்கப் பட்டது.
ஆனால் வி.புலிகளின் நடமாட்டத்தை தமிழ்நாட்டில் ஒழித்துவிட்டதாக மார்தட்டும் ஜெயலலிதா அந்த யோசனையை உடனடியாக நிராகரித்து அறிக்கை விட்டார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் வி.புலிகளை அனுமதிக்கக் கூடாது என்று ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.
ஒரு கிழடுதட்டிப்போன புலிக்கே இவ்வளவு பயம் என்றால் உண்மையான புலிகளைக் கண்டால் ஜெயலலிதா என்ன பாடுபடுவாரோ தெரியவில்லை.
சரி. வி.புலிகள் இடம் கேட்டார்கள், இடம்தர முடியாது என்று மறுத்தாகி விட்டது. அத்தோடு அந்தக் கதை முடிந்து விட்டது என்று ஜெயலலிதா சும்மா இருப்பார் என்றுதான் யாரும் நினைப்பார்கள்.
ஆனால் ஜெயலலிமா ஆளுநர் உரையிலும் அதனைப் பெரிய விடயமாக எடுத்துக் குறிப்பிட்டுள்ளார். அதற்கான அவசியம் என்ன? அவசரம் என்ன?
தமிழ்நாடு ஆளுநர் உரையில் வி.புலிகள் எதிர்ப்பு இடம்பெற்றதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
“சந்திரிகா நோர்வே நாட்டு ஒப்பந்தம் நடந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார். அதே சந்திரிகா ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவி ஏற்றதைப் பாராட்டி வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். அதற்கு நன்றியாக ஆளுநர் உரையில் வி.புலிகள் எதிர்ப்பா”” என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் திமுக சட்டசபை உறுப்பினர் எம்.கே. பாலன் காணாமல் போய் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. காலை எழுந்து வெளியில் நடக்கப் போனவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பம் காவல்துறை மற்றும் நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறி இறங்கிப் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை.
ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபை உறுப்பினர் பாலன் காணாமல் போனதுபற்றி சட்டசபையில் கேள்வி கேட்டபோது என்ன பதில் சொன்னார்?
“எம்.கே. பாலனைத் தேடும் பணியில் போலிசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். சைதாப்பேட்டையில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட காணாமல் போன முன்னாள் சட்டசபை உறுப்பினர் எங்கே ஈடுபட்டு விடுவாரோ என்று அவரது கட்சிக்காரர்களே பயந்து போய் அவரைக் காணாமல் போகச் செய்துவிட்டு எங்கள் மீது பழி போடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. திமுகவினரில் ஒரு சிலரே அவரைக் கடத்தியிருக்கலாம்” என்று கொஞ்சமும் வெட்கமோ துக்கமோ இன்றிப் பேசியிருக்கிறார். தெருமுனையில் அல்ல. தமிழ்நாட்டு சட்டசபையில்! ஒரு நாட்டின் முதலமைச்சர் பேசுகிற பேச்சா இது?
ஜெயலலிதாவன் ஆணவத்துக்கும் திமிருக்கும் இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. கலைஞர் கருணாநிதியின் சொந்தத் தொகுதியான சேப்பாக்கத்தில் மார்ச்சு மாதம் 7ம் நாள் ஒரு புதிய அலுவலகத்தை கருணாநிதி திறந்து வைத்தார். அதே நாள் இரவு அல்லது அடுத்த நாள் காலை யாரோ இனந்தெரியாத ஆட்கள் அந்த அலுவலகத்தை அடித்து நொருக்கி விட்டார்கள்.
இதுபற்றி சட்டசபையில் பேசிய ஜெயலலிதா சேப்பாக்கம் தொகுதி அலுவலகத்தை திமுகவினரே உடைத்துவிட்டு அந்தப் பழியை ஆளும் கட்சி மீது போடுகிறார்கள் என்று பதில் இறுத்திருக்கிறார். “”யாரோ”” உடைத்து விட்டார்கள் என்றுதான் கருணாநிதி காவல்துறையிடம் முறைப்பட்டார். அதிமுக கட்சியினர் அதைச் செய்ததாக அவர் சொல்லவில்லை. ஆனால் ஆணவத்தின் மொத்த உருவமான ஜெயலலிதா எடுத்தெறிந்த விதத்தில், அதிலும் சட்டசபையில், இவ்வாறு பொறுப்பற்றுப் பதில் இறுத்திருக்கிறார்.
பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று மகாகவி பாரதியார் சொன்னார். தமிழ்நாட்டை ஜெயலலிதா என்ற பேய் ஆளுகிறது. அந்தப் பேயின் ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு.
சென்னையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கடந்த ஆண்டு போலிசுக்குப் பயந்து மனைவி மக்களுடன் தற்கொலைசெய்து கொண்ட அண்ணா நகர் இரமேஷ் என்பவரிடம் இருந்து 10,444 சதுர அடி நிலத்தை ரூ.93 இலட்சத்துக்கு வாங்கியிருந்தார்.
இரமேஷ் தற்கொலைக்குப் பின்னர் அந்த வழக்குப் பற்றி விசாரணை நடத்திய அப்போதைய போலிஸ் ஆணையாளர் முத்துக்கருப்பன் அந்த நிலத்தை கண்ணனிடம் இருந்து அபகரிக்கச் சதிசெய்தார். அவர் கண்ணன் மீது பொய்யான மோசடி வழக்கொன்றைப் பதிவு செய்தார். முத்துக்கருப்பன் தன் முன் தோன்றிய கண்ணன் மீது ஒரு வெடி குண்டை வீசினார்.
“இந்த சொத்து மீது அம்மா (ஜெயலலிதா) ஆர்வமாக உள்ளார். எனவே அதை ஒப்படைத்து விடுங்கள். இல்லாவிட்டால் உன்னைக் கைது செய்து உள்ளுக்குள் தள்ளிவிடுவோம்.”
கண்ணனை சட்ட விரோதமாகக் காவலில் வைத்த முத்துக்கருப்பன் அவரிடம் இருந்து ஒரு தாளில் கையெழுத்தை வாங்கிக் கொண்டார். அதன்பின் அறுபது போலிசார் அவரது நிலத்துக்குப் போய் அதனை அடாத்தாக ஆக்கிரமித்துக் கொண்டனர்.
இப்போது கண்ணன் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் முத்துக்கருப்பனுக்கு எதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த முத்துக்கருப்பனுக்கு ‘கஞ்சா’ முத்துக்கருப்பன் என்ற பட்டப் பெயர் உண்டு. தானே தனக்குப் பிடிக்காத அல்லது காசு கறக்கும் நோக்கத்தோடு ஆட்களுடைய வீடுகளில் கஞ்சாவை வைத்துவிட்டுப் பின்னர் அந்த வீட்டில் திடீர் சோதனை நடாத்தி விட்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வது முத்துக்கருப்பனின் வணிக முத்திரை (Trade mark).
மன்னன் எப்படியோ அதுமாதிரித்தான் அதிகாரிகள் என்பதற்கு இது நல்ல எடுத்துக் காட்டு. ரூ.93 இலட்சம் பெறுமதியான காணியை எவ்வளவு சுலபமாக ஒரு எளிய குடிமகனிடம் இருந்து ஒரு உயர்தர போலிஸ் அதிகாரி ஜெயலலிதா ஆட்சியில் சுருட்டிவிட்டார்?
எட்டப்பர் யார் யார்?
Leave a Reply
You must be logged in to post a comment.