அதியமான் நெடுமான் அஞ்சியின் நடுகல் பற்றி அவ்வையார்

நடுகல் 4 : அதியமான் நெடுமான் அஞ்சியின் நடுகல்; ஒளவையார் கூறும் அதிசயச் செய்தி!

சங்ககால தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் புறநானூற்றில் 12 பாடல்கள் நடுகற்கள் பற்றிக் கூறுகின்றன .நடுகற்கள் வெட்சி, கரந்தை எனும் போர் புரியும் வீரர்களுக்கு மட்டுமின்றி நாடாண்ட மன்னர்களுக்கும் எடுக்கப்பெற்றன.

29 Jun 2022

நடுகல்

நடுகல்

இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழ் எழுத்து கொண்ட சங்ககால நடுகற்கள் சில வருடங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளன. தமிழக வரலாற்றிலும் ஆய்விலும் சிறப்பான இடத்தை இந்த நடுகற்கள் பெறுகின்றன. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பெறும் நடுகற்கள் தற்பொழுது முதன்முதலாகக் கிடைத்துள்ளதால் சங்க இலக்கிய காலத்தை உறுதிப்படுத்தப் புதிய சான்றுகள் கிடைத்துள்ளன.

புலிமான்கோம்பை சான்று
புலிமான்கோம்பை சான்று

கடந்த நூற்றாண்டுவரை குகைகளில் மட்டுமே தமிழி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவை சமணர்களால் நமக்கு அளிக்கப்பட்ட கொடை என்றே பரவலாக நம்பப்பட்டு வந்தது. இதற்கு நேர்மாறாய் நமது சங்க இலக்கியங்கள் நம் நிலத்தில் நடுகற்களில் எழுத்து பொறிப்பு இருந்ததாகக் கூறியது. ஆனால் இலக்கியம் கூறும் இநக்ச் செய்தியை நிரூபிக்கும் வண்ணம் பண்டைய எழுத்து கொண்ட நடுகல் கிடைக்காமல் இருந்தது. சங்க இலக்கியங்களையே ஏதோ வட்டார வழக்குப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் போலக் கருதி அவை வரலாற்று ஆவணம் அல்ல, காலத்தால் அந்நூல்கள் பிற்பட்டவை என்ற ரீதியில் சிலரால் கருதப்பட்டு வந்ததை இந்தக் கல்வெட்டுகள் பொய்யாகச்செய்தன.

சங்ககால தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் புறநானூற்றில் 12 பாடல்கள் நடுகற்கள் பற்றிக் கூறுகின்றன .நடுகற்கள் வெட்சி, கரந்தை எனும் போர் புரியும் வீரர்களுக்கு மட்டுமின்றி நாடாண்ட மன்னர்களுக்கும் எடுக்கப்பெற்றன.

கரந்தை எனும் போர்
கரந்தை எனும் போர்

அதியமான் நடுகல்: முதன்முதலாய்த் தமிழகத்திற்குக் கரும்பை அறிமுகம் செய்தவர்கள் அதியமான்கள். அவர்களில் சிறந்த அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நடுகல் நடப்பட்டதை ஒளவையார் கீழே உள்ளவாறு பாடுகிறார்.

‘நடுகற் பீலி சூட்டி நாரரி சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லோ!’ (புறம் 232) என்றும் ‘கோடுயர் பிறங்குமலை கெழீஇய நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே!’ என்றும் பாடுகிறார்.

மேலும் தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையுடன் இவன் போரிட்டு நடைபெற்ற போரில் வேல்பாய்ந்து இறந்தான். இறந்தவன் உடல் தீயில் இடப்பட்டது, இதனை,

‘எறிபுனக் குறவன் குறைய லன்ன

கரிபுற விறகின் ஈம ஓள்ளழற்

குறுகினும் குறுகுக குறுகாது சென்று

விசும்புற நீளினும் நீள்க பசுங்கதிர்த்

திங்கள் அன்ன வெண்குடை

ஒண்ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே!’ (புறம் 235) என்றும் குறிப்பிடுகிறார்.

இன்றைய தர்மபுரி பகுதியே அன்றைய தகடூர் நாடு. புகழ்பெற்ற அதியமான் நெடுமான் அஞ்சியின் நடுகல் எங்கு ஒளிந்துள்ளதோ? இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த புலிமான்கோம்பை நடுகற்கள் கிடைத்துள்ளன. நிச்சயம் இந்த நடுகல்லும் ஒரு நாள் வெளிவரும். அந்தக் கால வழக்கப்படி அதியருக்கு நிச்சயம் பெரிதாக உயர்பதுக்கை ஏற்படுத்தி வழிபாட்டில் வைத்திருப்பர். இன்று எங்கு யாரால் வணங்கப்படுகிறதோ அதியர் கோமானின் நடுகல்?

மற்றொரு புறப்பாடல் (புறம்.261) பாடல் ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர், ‘வெற்றி கொள்ளும் வேலையுடைய வீரன் நடுகல் ஆகிவிட்டான்’ என்ற செய்தியை அறிகிறோம்.

வடமோதங்கிழார் என்ற புலவர் கரந்தை வீரனைப் பற்றி நேரில் பார்த்ததைப் போல அழகாக விவரித்துள்ளார். அவர் ‘ஊர் நிரையைப் பாம்பின் வாய்ப்பட்ட நிலா மீண்டு வருவதுபோல் (எதிரிகள்) பகைவர்கள் கொண்டுசென்ற ஆநிரைகளை மீட்டு வந்தான். அவன் மீட்ட போது பகைவர் விட்ட அம்புகள் ஆற்றங்கரை இலக்குக் கம்பத்தின் மீது தைத்த அம்புகளைப் போல தைத்து நிற்கின்றன.

பாம்பின் உடலிலிருந்து தோல் உரிந்து விழுவது போல அவன் உயிர் பிரிந்தது. பிரிந்த உயிர் ஆனிலை உலகம் சென்றடைந்தது. அவனுக்காக எடுக்கப்பெற்ற நடுகல்லில் அவன் புகழ் பொறிக்கப்பெற்றது. அதற்குப் பந்தல் போட்டுப் பூச்குடி வழிபடுகின்றனர் (புறம் 260.12-28.)

இலக்குக் கம்பத்தில் அம்புகள் தைத்துக் கொண்டிருப்பது போல் வீரனுடைய உடம்பில் அம்புகள் தைத்திருந்தன. செங்கம் – தருமபுரி நடுகற்கள் சிலவற்றில் வீரர்களின் உடலில் அம்புகள் தைத்திருப்பதைக்காணலாம்.

உயர்பதுக்கை
உயர்பதுக்கை

மற்றொரு புறப்பாடல் உடன்வந்த வீரர்கள் நீங்கிய பின்னும் தனியே நின்று போரிட்டு நிரைமீட்டு மாண்ட வீரனுக்கு நடுகல் நடப்பட்டதைக் குறிப்பிடுகிறது. நடுகல் வீரனை வணங்கிச் செல்லுமாறு பாணனுக்குப் புலவர் கூறுகிறார்.

மயிற்பிலி சூட்டப்பட்ட செய்தியுடன் பதுக்கை அமைக்கப்பட்ட செய்தி புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது. ‘நடுகல்லிளைக் காலந்தோறும் வணங்கி விருந்தெதிர் பெறல் வேண்டும்’ என்றும் ‘தன் கணவருக்கு நாடு தரு விழுப்பகை எய்தல் வேண்டும்’ என்றும் ஒரு மனைவி வேண்டுவதை (புறம். 306) அள்ளூர் நன்முல்லையார் பாடுகிறார். நடுகல்லை மக்கள் நீராட்டி நெய் விளக்கேற்றிப் பலியூட்டியதைப் புறநானூற்றில் (புறம்.329) உள்ள ஒரு பாடல் சுட்டுகிறது.

இவ்வாறு சங்கஇலக்கியம் நடுகற்கள் அமைத்து நம் முன்னோர்கள் வழிபாடு செய்ததை பற்றி நிறைய குறிப்புகள் தருகின்றன. இவற்றுள் நமக்கு தற்சமயம் கிடைத்த சில சங்ககால நடுகற்கள் குறித்து அடுத்தடுத்து விரிவாகக் காண்போம்.

https://www.vikatan.com/spiritual/gods/ancient-tamil-king-athiyaman-nedumaan-anji-hero-stone

ஔவைக்கு நெல்லிக் கனி தந்த அதியமான் நெடுமான் அஞ்சி

June 20, 2022

தமிழ் ஆளுமைகள்

கிபி இரண்டாம் நூற்றாண்டில் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னன். சான்றோரும், ஆன்றோரும் நிறைந்த அதியன் குலத்தில் உதித்தவன். குடிகளைக் கண் இமைக்குள் வைத்துக் காப்பது போல் காத்து வந்த இவன், புலவர்களின் அருகாமையில், அமர்ந்து தமிழ்ப் பால் அருந்துபவன். ஔவையை தனது தமக்கையாக எண்ணியவன். பனைமாலையை அணிந்தவன். சேரர் குலத்தின் ஒரு பகுதியினராக அதியன் குலத்தவர்கள் இருந்தாலும் இருவருக்குமிடையே ஒரு பகை இருந்தே வந்தது. எப்போதுமே பழுத்த பழங்களைக் கொண்டுள்ள மரத்தைத் தேடி பறவகைள் வருவது போல், புலவர்கள் அதிகமான் நெடுமான் அஞ்சியைத் தேடி வந்து பாடி பரிசில் பெற்று செல்வர். அப்படி ஒருநாள் அஞ்சியைக் காண ஔவை வந்திருக்கிறார். காவலாளிகள், மன்னர் முக்கியமான ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டு இருப்பதால் சற்று காத்திருக்க வேண்டும் என்று கூறி, ஔவைக்கு நீர் கொடுத்து, நல்லாசனம் கொடுத்து அமர வைத்திருக்கிறார்கள். ஔவை காத்திருக்கிறார். ஆனால், அஞ்சி வந்த பாடில்லை. காத்திருந்து காத்திருந்து ஔவைக்கு பொறுமை போகிறது. கோபப்பட்ட அவர்,

“ வாயிற்காப்போனே! கொடையாளிகளின் காதுகளில் தம்முடைய சொற்களை விதைத்து, தம் காரியங்களை முடித்துக் கொள்கிறவர்கள் புலவர்கள். அவர்களுக்கு தாம் பெறும் பரிசுகளை விட, தரம் அறிந்து பாராட்டும் வரிசைதான் பெரிது.அதற்காகவே அவர்கள் ஏங்கிக் கிடப்பார்கள். அவர்களுக்காக வாசலை அடைக்காமல் திறந்து வைத்து காப்பவனே! உன்னுடைய அரசனாகிய நெடுமான் அஞ்சி தன் பெருமையை அறியவில்லையோ? வந்தவர்களைக் காக்க வைப்பது அவன் பெருமைக்கு இழுக்கு என்பதைத் தெரிந்துகொள்ள வில்லையோ? அவன் என்னையும் அறிந்துகொள்ள வில்லையோ? பிச்சைக்காரியைப் போலக் காத்திருக்கும் பேர்வழி நான் அல்லள் என்பதை அவன் உணர வில்லையோ! அறிவுடையோரும் புகழுடையோரும் இந்த உலகத்தில் தோன்றுகிறார்கள்; மறைகிறார்கள். பிறகு யாரும் தோன்றாத சூனிய உலகம் இல்லையே? கையில் கோடரியை யுடைய தச்சன் பெரிய காட்டில் மரத்தைத் தேடி அலையவா வேண்டும்? உபகாரியைத் தேடி நான் அலைய வேண்டியதில்லை. எந்தத் திக்கிலே சென்றாலும் அந்தத் திக்கிலே சோறு கிடைக்கும்” என்று பாடினார்.

ஒளவையின் கோபம் கண்ட வாயிற்காப்போன், ஓடிச் சென்று, அரசனிடம் முறையிடுகிறான். அதிகமான் நெடுமான் அஞ்சியோ, விரைந்து வந்து, ஒளவையின் பாதம் பணிந்து, அவர் வந்தது தனக்கு தெரிவிக்கப்படாத காரணத்தால், தான் வரவில்லை என்றும், தெரிந்து இருந்தால், தனது, முக்கிய கடமையை விட்டுவிட்டு உடனே அவரைக் காண வந்திருப்பான் என்றும் கூற,ஔவைக்கு கோபம் குறைகிறது. ஒளவையிடம் மனம் திறந்து மன்னிப்பு கேட்டு, உள்ளே அழைத்துச் செல்கிறான். உபசரிக்கிறான். இருவரும், தமிழ் பாடி மகிழ்கிறார்கள். அதிகமானின் தகடூரில் இரு நாட்கள் தங்கிய ஔவை, பின், எப்போதெல்லாம் அதிகமானை காண விரும்புகிறாரோ அப்போதெல்லாம் வருகிறார். ஆனால், அதிகமானோ ஔவைக்கு ஏதும் பரிசளிக்கவில்லை. ஒளவையும் எதிர்பார்த்து வருபவரில்லை. கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் அதிகமானிடம் இல்லை. கொடுத்து விட்டால் ஔவை கிளம்பிவிடுவாரே என்ற எண்ணத்தினால் கொடுக்கவில்லை. இது இருவரிடையே இப்படி ஒரு அழகான புரிதல் இருந்தது.

இந்நிலையில் அஞ்சியின் ஆளுகையில் கஞ்ச மலை இருந்தது. அங்கே அதிசய நெல்லி மரம் ஒன்று இருந்தது. பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே அந்த மரம் பூக்கும். பூத்தாலும் பூத்த பூக்கள் எல்லாம் பிஞ்சாவதில்லை. பிஞ்சான அத்தனையும் கிளைகளில் தங்குவதில்லை. தங்கிய அத்தனையும் பருப்பதில்லை. பருத்த அத்தனையும் பழுப்பதில்லை. அப்படிப்பட்ட நெல்லி மரத்தின் அரிய வகை நெல்லிக் கனியை உண்டால், அவர்களின் ஆயுள் கூடும். நீண்ட நாள் வாழ்வார்கள். இதனையறிந்த அஞ்சி, அந்த மரம் காக்க ஒரு காவலனை நியமிக்கிறான். அந்த மரம் பல காலங்களுக்குப் பின் பூத்து, பிஞ்சாகி, பிஞ்சுகள் உதிர்ந்து, அதில் தப்பிப் பிழைத்தவை காயாகிறது. காயானாலும் அவை மரத்தில் தாங்காமல் உதிர, இறுதியில் ஒரே ஒரு காய் கனிகிறது. கனிந்த அந்த ஒற்றை நெல்லிப் பழம் மக்களை, அயராது காத்திடும் வேந்தனுக்கே. அந்த வீரன் அந்தக் கனியை சரியான பருவத்தில் பறித்துக் கொண்டுவந்து மன்னரிடம் பயபக்தியோடு கொடுக்கிறான். மன்னன் நெடுமான் அஞ்சியோ, அதனை இறைவனுக்குப் படைத்துவிட்டு உண்ண முடிவெடுக்கிறான்.

அப்போது ஔவை வருகிறார். வெயில் கொடுமை தாங்காது, தனக்கு தாகம் எடுத்ததாகவும், குடிக்க நீருமில்லை, உண்டு தணிக்க கனி மரமும் இல்லை என்று புலம்புகிறார். அப்போது, இறைவனுக்குப் படைக்கப்பட்ட அந்த நெல்லிக் கனியை, தங்கத் தட்டில் வைத்து, பணிப்பெண் கொண்டு வருகிறாள். இதனைக் கண்ட ஔவை, இப்படி ஒரு நெல்லிக்கனி இருந்திருந்தால் கூட அவரது தாகம் தணிந்திருக்கும் என்றும் அவரது நா வறண்டு தவிப்பதாகவும் கூற, உடனே,அதிகமான் நெடுமான் அஞ்சியோ, தட்டில் இருந்த நெல்லிக் கனியை எடுத்து, தமிழ் மூதாட்டிக்கு கொடுக்கிறார். மன்னர்பால் அன்பு படைத்த அனைவருக்கும் கோபம் மூழ்கிறது. ஔவைக்கு அந்த நெல்லிக் கனியின் பயன் தெரியாது. சுற்றி நின்றவர்களின் முகக் குறிப்பில் இருக்கும் மாற்றம் கண்டு, ஔவையார் என்னவென்று கேட்கிறார்.

அப்போது,அங்கிருந்த ஒருவர், அந்த நெல்லிக் கனியின் அருமை பெருமைகளைக் கூறி, மன்னருக்காகவென்று கொண்டு வரப்பட்டதை பறித்து உண்டுவிட்டதாக கூறுகிறார். பதறிப்போனார் ஔவை. தனக்கு அது பற்றி முன்பே தெரியாமல் போனாதால் இந்த தவறு நடந்து விட்டதாகக் கூறி வருந்தினார். உடனே, நெடுமான் அஞ்சி புன்முறுவலோடு,” அன்னையே! தாங்கள் இப்படி வருந்தக் கூடாது. இறைவனின் திருவுளப்படியே இது நிகழ்ந்துள்ளது. நான் எத்தனை காலம் வாழ்ந்தால் என்ன? நான் சில போர்களைச் செய்வேன். பலரை கொன்றிடுவேன். இந்த உலகம் எங்களைப் போல அரசர்களால் வாழ்வதில்லை. தங்களைப் போன்ற அறிவிற்சிறந்த சான்றோர்களால் தான் வாழ்கிறது. தங்களைப் போன்ற பெரும் புலவர்கள் வாழ்ந்தால் உலகம் நன்மையை உணரும். நேர்மை வழியில் செல்லும். கவி விருந்தை சுவைக்கும். ஆகையால் இந்த அரிய கனி எங்கே போய்ச் சேரவேண்டுமோ அங்கே தான் போய் சேர்ந்திருக்கிறது” என்று கூறினான்.

ஔவைக்கு அதிகமான் மீது பெரும் மதிப்பு உண்டாயிற்று. உடனே,

ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போரடு திருவில் பொலந்தார் அஞ்சி
பல்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமனி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலை
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கி
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே

என்று பாடி,” நீ ஆலகால விஷத்தைத் தன் தொண்டையில் அடக்கி உலகைக் காத்த அந்த சிவன் போல் சிறப்பாயாக” என்று வாழ்த்தவும் செய்கிறார்.

இதனைக் கேட்ட அஞ்சியோ, “அந்தக் கனியைவிட தங்களின் இந்தப் பாடல் இனிமையாக இருக்கிறது. அதை உண்டால் இந்த நாற்ற உடம்பு ஒருகால் நெடிது வாழலாம், ஆனால் இந்தப் பாடலைப் பெற்றமையால் என் புகழுடம்பு சாவாமல் வாழும்” என்று மகிழ்ச்சி பொங்கப் பேசினான்.

இப்பேற்பட்ட பெருமைகள் கொண்ட அஞ்சிக்கு, கொல்லிமலை ஆண்ட வள்ளல் ஓரியினிடத்தே நட்பு இருந்தது. அந்த கொல்லிமலையின் மீது, சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு ஒரு கண் இருந்தது. அதனை தனது வெண்கொற்றக் குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. திருக்கோவிலூரை ஆண்ட காரி மூலமாக நிறைவேற்ற எண்ணினான். இருவரும் கூடிப் பேசினார்கள். அப்போது, காரி, “ ஓரி சிற்றரசன். அவனை வெல்ல தாங்கள் வரவேண்டியதில்லை நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறுகிறான்.ஆனாலும் சேரன் பெரும்படையை காரிக்கு துணையாக அனுப்புகிறான். சேரர் படைகளின் துணை கொண்டு ஓரியின் மீது காரி போர் தொடுக்கிறான். போரில் ஓரி உயிர் துறக்கிறான். காரி, கொல்லிமலையை சேரனிடம் ஒப்படைக்கிறான்.

ஓரி இறந்து கேட்டு, அதிகமான் துடி துடிக்கிறான். காரணம் ஏதுமின்றி போர் தொடுத்து, காரி ஓரியை கொன்றதையடுத்து காரியின் மீது அஞ்சி போர் தொடுக்க, போரில் காரி தோற்று சேர நாட்டுக்கு ஓடுகிறான். தன்னைக் காத்திடுமாறு வேண்டுகிறான். பெருஞ்சேரல் இரும்பொறை காரிக்கு அடைக்கலம் கொடுக்கிறான். அதிகமான் மீது படையெடுக்க அவனுக்கு, வழி வழியாய் வந்த பழைய பகையும் காரணமாகிறது. மீண்டும் போர் மூளுகிறது. தகடூர் கோட்டையை முற்றுகையிடுகிறான் சேரன். உள்ளிருந்த அதிகமானோ, அஞ்சாது இருக்கிறான். பல நாட்களாகியும், கோட்டைக் கதவு திறக்கப்படவில்லை. உள்ளிருக்கும் அதிகமானுக்கு எப்படி உணவு செல்கிறது என்று சேர மன்னன் குழம்பினான். அப்போது கோட்டையில் இருந்து வெளி வந்த துணி வெளுக்கும் பெண், கோட்டைக்குள் இருக்கும் சுரங்கப் பாதை வழியாக உணவு செல்வதை, சேரனுக்கு தெரிவிக்கிறாள்.

சேரன் அந்தப் பாதையை அடைக்க, வேறு வழியின்றி, தகடூர் கோட்டைக் கதவுகள் திறக்கின்றன. தமிழ்ச் சொல்லிலும், போர் தீரத்திலும் வல்லவனான அதிகாமன் கடுமையாக போர் புரிகிறான். இறுதியில் வஞ்சகர்களால் கொல்லப்படுகிறான். வீரன் ஒருவன் எறிந்த வேலை, நெஞ்சிலே தாங்கி, தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட புலவர்கள் பலரும், அழுது புலம்பி அதிகமானின் கொடைத் திறத்தை பாடுகிராகள். ஒரு நாள் அவன் கொடுத்த கொடையை விட மறு நாள் அதிகமாக இருக்குமே அன்றி, முதல் நாளை விட மறுநாள் குறையாதாம். அப்படி வள்ளல் தன்மை கொண்ட, குணக் குன்றைக் கொன்ற பழியை பெருஞ்சேரல் இரும்பொறை பெற்றுக் கொண்டான். அவனுக்கு, புலவர்கள் அதிகமானை வாழ்த்திப் பாடியதெல்லாம் நினைவில் வர, போர்க்களத்தில் மாண்டிருந்த அதிகமானைப் பார்க்கத் துணிவில்லை. தன் செயலுக்கு தானே வருந்தினான். ஆனாலும், என்ன செய்ய, தனக்காக வாழாது தமிழுக்காக, தமிழைச் சுமந்து வரும் புலவர்களுக்காக வாழ்ந்த அவனின் உயிர் திரும்ப வருமா? ஆனால்! அவன் தமிழுக்கும், தமிழ் மூதாட்டி போன்ற தமிழ்ப் புலவர்களுக்கும் கொடுத்த கொடையை வானும் மண்ணும் உள்ளவரை இப்பூவுலகம் புகழ்ந்திருக்கும்.

4.3 அதியமான் நெடுமான் அஞ்சி

235ஆம் பாட்டு சிறியகட் பெறினே  எனத் தொடங்குவது; இருபது அடிகளைக் கொண்டது. அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஒளவையாரால் பாடப்பெற்றது இப்பாட்டு.

சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே!
பெரிய கள் பெறினே,
யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே!

சிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!
5
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!
என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே!
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே!
10
அருந் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ,
இரப்போர் கையுளும் போகி,
புரப்போர் புன்கண் பாவை சோர,
அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று, அவன்
15
அரு நிறத்து இயங்கிய வேலே!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை;
பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று
20
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே!
திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

 பாட்டின் சூழல்

அதியமான் நெடுமானஞ்சி தகடூரை ஆண்ட குறுநில மன்னன். கடையெழு வள்ளல்களில் ஒருவன். இம்மன்னன் ஒளவையாரோடு நெருங்கிய நட்புக் கொண்டிருந்தான். உண்டாரை நெடுங்காலம் வாழ வைக்கக் கூடிய அருநெல்லிக்கனி ஒன்றைக் காட்டில் மிகவும் முயன்று பெற்று அதனைத் தான் உண்ணாமல் ஒளவைக்குக் கொடுத்து உண்ணச் செய்தவன் இவன். பகைவர் எழுவரை ஒரு போரில் வென்று அவர்களுக்குரிய அணிகலன்களையும் அரச உரிமையையும் இம்மன்னன் கவர்ந்து கொண்டான். இவனுடைய திருக்கோவலூர் வெற்றியைப் பரணர் புகழ்ந்து பாடியுள்ளார். இம்மன்னன் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையால் வெல்லப்பட்டான். அதியமான் பகைவரோடு புரிந்த போரில் பகைவர் எறிந்த வேல் அவனுடைய மார்பில் தைக்க அவன் உயிரிழந்தான். ஒளவையார் ஆற்றாமல் வருந்திச் சிறியகட் பெறினே என்று தொடங்கும் இப்பாடலைப் பாடினார்.

4.3.1 பாட்டின் கருத்து

இறந்துபட்ட அதியமானின் பல்வேறு நற்பண்புகளைச் சொல்லிப் புலவர் கலங்குவதாக அமைந்தது இப்பாட்டு. இதன் கருத்து வருமாறு:

“சிறிய அளவினை உடைய மதுவைப் பெற்றால் எங்களுக்குக் கொடுப்பான்; அந்நிலை போய்விட்டது. பெரிய அளவில் மதுவை அவன் பெற்றால் அதனை யாம் உண்டு பாட, எஞ்சிய மதுவைத் தான் மகிழ்ந்து அருந்துவான். அந்நிலையும் போயிற்று. எல்லார்க்கும் பொதுவான நிலையில் தனக்குக் கிடைக்கும் சோறு சிறு அளவினதாயினும் மிகப் பலரோடும் கலந்து உண்பான். பெரிய அளவினதாகிய சோறு கிடைப்பினும் மிகப் பலரோடும் கலந்து உண்பான். அதுவும் கழிந்தது. சோற்றின் இடையே எலும்பும் ஊனும் தட்டுப்பட்டால் அவற்றை எங்களுக்கு அளிப்பான். அதுவும் நீங்கிற்று. அம்போடு வேல் வந்து பாயும் போர்க்களங்களில் தான் சென்று முன்னிற்பான். அதுவும் இல்லையாயிற்று. தான் காதலிப்பார்க்குத் தன் கையால் மாலை சூட்டுதலால் நரந்தப் பூ மணம் வீசும் தன்னுடைய கையால் அருள்மிகக் கொண்டு புலால் நாறும் என் தலையைத் தடவுவான். அஃதும் இனி நிகழாதாயிற்று. அவனுடைய கரிய மார்பில் தைத்த வேல் அருங்கலை வளர்க்கும் பெரும்பாணர்களின் கையில் உள்ள மண்டைப் பாத்திரத்தை ஊடுருவியது; அவர்கள் கைகளையும் துளைத்தது; அழகிய சொற்களை ஆராய்ந்து கூறும் நுண்ணிய அறிவுடையார் நாவிலும் போய்த் தைத்தது. எங்களுக்குப் பற்றுக் கோடான எங்கள் தலைவன் எங்கே உள்ளானோ? இனிப் பாடுகின்றவரும் இல்லை; பாடுகின்றவர்களுக்கு ஈவாரும் இல்லை. குளிர்ந்த நீரை உடைய துறையில் தேனைக் கொண்ட பகன்றை மலர்கள் பிறராற் சூடப்படாமல் உதிர்வது போலப் பிறர்க்குப் பொருளைக் கொடுக்காமல் மாய்ந்து போகின்றவர்கள்தாம் இவ்வுலகில் பலராக உள்ளனர்”.

 ஒளவையாரின் கண்ணீர்

அதியமான் அரசவைக்குத் தம் புலமையால் பெருமை சேர்த்தவர் ஒளவையார். உண்டாரை நெடுங்காலம் வாழவைக்கும் நெல்லிக்கனியை மலைப் பிளவுகளை யெல்லாம் தாண்டிச் சென்று கொண்டு வந்து, அதன் பெருமையைக் கூறாமல் ஒளவை உண்ணுமாறு தந்தவன் அதியமான். ஒளவையார் அதியமானையும் பாடி அவன் மகன் பொகுட்டெழினியின் வீரத்தையும் பாடினார். அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றார். இவ்வாறு நட்புக் கொண்டிருந்த நிலையில் அதியன் இறந்துபட்டான். ஒளவையின் கண்ணீர்ப் பெருக்கு வற்றவில்லை. அவன் மார்பில் தைத்த வேல் அந்த அளவோடு நின்றதா! இல்லை,
அருங்கலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று…

என்று சொல்லி அழுகின்றார் ஒளவையார்.
இப்பாட்டில் ‘மன்’ என்னும் இடைச்சொல் பல இடங்களில் வந்தது. மன் என்பது கழிந்தது என்ற பொருளைத் தருவது.

https://www.tamilvu.org/ta/courses-degree-d011-d0114-html-d0114420-19070

About editor 3000 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply