பட்டினப்பாலை காட்டும் சங்ககாலச் சோழ நாட்டின் ஒரு காட்சி
உருத்திரங் கண்ணனார் எனும் சங்ககாலப் புலவர் பாடிய பட்டினப்பாலை எனும் நூலின் 20 ஆவது வரியிலிருந்து அடுத்த சில வரிகளில் ஒரு செய்தி சொல்லப்படும் {இரண்டாவது படத்தில் பாடல் காண்க}. அச் செய்தி-
நேர்த்தியான (தங்க) அணிகலன் அணிந்த பெண்கள் முற்றத்தில் காய வைத்த நெல்லினைத் தின்ன வரும் கோழி களை விரட்டுவதற்காகத் தங்கத்திலான காதணிகளைக் கழற்றி எறிவர் , அக் காதணிகள் அங்கு விழுந்து கிடக்கும், அவ் வழியே பொன்னாலான காப்பினைக் காலில் அணிந்த சிறுவர் முச் சக்கர நடை வண்டிகளை (தள்ளு வண்டில்) உருட்டி வரும் போது , முன்னரே விழுந்திருந்த பொன் காதணிகளானவை அத் தள்ளு வண்டில்களுக்கு இடையூறாகக் காணப்படும்.
மேலுள்ள பாடல் காட்சியில் புலவர் சொல்ல வருவது அந்தளவுக்குத் தங்கம் தமிழ்நாட்டிலிருந்தது என்பதனையே {பொன்னாலான காதணிகளைக் கல் வீசுவது போல வீசுதல், சிறுவர்களே காலில் கூட பொன்னாலான காப்பினை அணிந்திருத்தல்} ; அதாவது வணிகத்தின் மூலம் காவிரிப்பூம்பட்டினம் பெற்றிருந்த செல்வச் செழிப்பினையே புலவர் இவ்வாறு காட்சிப்படுத்துகின்றார். இந்தளவுக்குத் தங்கம் அப்போது தமிழ்நாட்டில் இருந்திருக்குமா! என்ற ஐயம் எழுவது இயல்பானதே! இந்த ஐயத்தினைப் போக்கும் வகையில் கிரேக்க அறிஞரான பிளினி எழுதிய குறிப்புகள் அமைகின்றன.
தமது நாட்டுப் பணத்தில் ஒன்றரைக் கோடி வரை டம்மிரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்குப் போவதாகவும் இவ்வாறே போனால் எகிப்தின் கதி என்னவாகும் எனவும் பிளினி கலங்குகின்றார். இங்கு டம்மிரிகா என்பது தமிழகமே. மேலும் ஓரிடத்தில் பிளினி எகிப்திய பேரசசரான கெய்ஸ் மனைவி லாலியஸ் பாலினா ஒரு விழாவுக்கு அணிந்து சென்ற ( தலை முதல் கால் வரை அணிந்து சென்ற) முத்து மணிகளின் பெறுமதி 40 00 000 செஸ்ட்ரெசஸ் ஆகும் எனவும் இதற்கான பற்றுச்சீட்டினைக் கண்டதாகவும், இவை தமிழகத்திலிருந்து ( டம்மிரிக்கா) வந்தவவை என்றும் கூறுகின்றார் ( Pliny: chapter 4: 54). இப் பெறுமதி எல்லாம் அன்றைய மதிப்பில் என்பதனைக் கணக்கில் எடுங்கள்.
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பாருங்கள் கணக்குச் சரியாக வரும்.
Leave a Reply
You must be logged in to post a comment.