சேர, சோழ, பாண்டியருக்கு இணையான இந்த தமிழ் மன்னர்

சத்திய புத்திரர்: சேர, சோழ, பாண்டியருக்கு இணையான இந்த தமிழ் மன்னர் பற்றித் தெரியுமா?

சத்தியபுத்திரர்

25 பிப்ரவரி 2024

தமிழ்நாட்டின் கடந்த கால வரலாற்றில் சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களைப் போன்றே பல்வேறு சிற்றரசர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி புரிந்திருந்தனர். மக்களுக்கான திட்டங்களை வழங்கி நாட்டின் எல்லைகளை விரிவாக்கி, எதிரிகளிடமிருந்து மக்களை பாதுகாக்கும் பணியினை செய்த அரசர்கள் மட்டுமே வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள், பல்லவர்கள் ஆட்சி காலம் வரலாற்றில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. அவர்களுக்கு இணையாக, சிற்றரசர்கள் சிலரும் சிறந்த ஆட்சியின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அவர்களின் புகழும் பரவி இருந்துள்ளது.

அப்படி ஆட்சி செய்த தமிழ் மன்னர்களில் சத்தியபுத்திர வம்சம் மிக குறிப்பிடத்தக்கது. சத்தியபுத்திரர்கள் பற்றி மௌரிய அரசர் அசோகர் 4 கல்வெட்டுகளில் பதிவு செய்துள்ளார். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சத்தியபுத்திரர் யார்? அவர்கள் எந்த பகுதியை எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

வாலையூர் நகரம், ராசராச வள நாடு, ராஜேந்திரவள நாடு என்று பல பெயர்களில் கடந்த காலத்தில் அழைக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த ஜம்பை கிராமம் மணலூர்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சத்தியபுத்திரர்கள் யார் என்பதை உலகிற்கு தெரிவித்த ஜம்பை கிராமத்திற்கு பிபிசி தமிழுடன் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ், உளுந்தூர்பேட்டை எழுத்தாளர் லலித் குமார் ஆகியோர் வந்திருந்தனர்.

இயற்கை எழில் மிகுந்த ஜம்பை கிராமத்தின் உள்ளே செல்லும் பொழுதே மிக தொன்மையான நகரின் சுவடுகள் இருப்பதை அறிய முடிந்தது.

சத்தியபுத்திரர்கள்
படக்குறிப்பு,4 அடி நீளத்தில் 3 அங்குலம் அகலத்தில் கோடுகளைப் போன்ற தமிழ் பிராமி எழுத்துக்கள்

சத்தியபுத்திரர் யார்? என்ற கேள்விக்கு விடை தந்த கல்வெட்டு

வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் ஜம்பை கிராமத்தின் ஊர் எல்லைக்கு அருகில் உள்ள சிறிய மலை குன்றில் உள்ள தாசி மடம் என்ற மலை குகை பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

மிகுந்த சிரமமான வழிகளுக்கு இடையில் பாதுகாக்கப்பட்ட இரும்பு கதவுகள் பொருத்தப்பட்ட அந்த இடத்திற்கு சென்றோம். அங்கு மிகப்பெரிய பாறையில் 4 அடி நீளத்தில் 3 அங்குலம் அகலத்தில் கோடுகளைப் போன்ற தமிழ் பிராமிஎழுத்துகளை காண்பித்து வாசிக்கத் தொடங்கினார். அதில் ”சதிய புதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி” என்று படித்து விளக்கம் கூறினார்.

அதாவது சத்தியபுத்திரரான அதியமான் நெடுமானஞ்சி என்பவன் இந்த பாலியை அதாவது சமண பள்ளியை அமைத்தான் என்பது இக்கல்வெட்டின் பொருளாகும் என்று விளக்கமாக கூறினார்.

கல்வெட்டு கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும் என்று கூடுதல் தகவலையும் கூறினார். கல்வெட்டின் அருகில் படுக்கை அமைத்திருந்ததையும், அருகிலேயே மருந்துகள் இடிக்கும் குழிகள் உள்ளதையும் காண்பித்து, மக்களுக்கு அக்காலத்தில் வைத்தியம் பார்த்ததற்கான சான்று இவை தான் என்றும் கூறினார்.

சத்தியபுத்திரர்கள்
படக்குறிப்பு,திருக்கோவிலூர் பகுதி ஆண்ட அதியமான் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஜம்பை இருந்தது. அதனால்தான் ஜம்பையில் சமணத் துறவிகள் தங்குவதற்காக பள்ளி அமைத்து கொடுத்துள்ளான்.

அசோகரின் கல்வெட்டில் இருந்த பெயரை, அரசனை காட்டிய கல்வெட்டு

மௌரிய அரசர் அசோகனின் நான்கு கல்வெட்டுகளில் சதிய புத என்ற பெயர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தென்னாட்டில் தன் எல்லைகளை குறிப்பிடும்போது அசோகன் தன் சம காலத்தவர்களான சோழ, பாண்டிய, சேரர்களை குறிப்பிட்டு சத்தியபுத்திரர்களையும் குறிப்பிடுகின்றான் என்று பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.

அசோகன் தன் கல்வெட்டில் குறிப்பிட்ட சோழ, பாண்டிய, சேரர்கள் எவர் என்ற அறிவதில் எந்தவித ஐயப்பாடும் வரலாற்று ஆசிரியர்களிடம் இல்லை. ஆனால் சத்தியபுத்திரர்கள் யார் என்பதற்கு தெளிவான முடிவு இல்லாத நிலை இருந்தது.

சத்தியபுத்திரர்கள் சங்க இலக்கியங்களில் பேசப்படும் ‘வாய்மொழி கோசளர்’ அல்லது காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டவர்களாக இருக்கலாம் என்றும் மகாராஷ்டிராவின் ‘சத்புத்திரர்’ என்பவராக இருக்கலாம் என்றும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

ஆனால் இவை எல்லாவற்றிற்கும் ஜம்பை கல்வெட்டு தெளிவான ஆதாரத்துடன் அதியமான் தான் என்று ஆணித்தரமாக உறுதிப்படுத்தும் கல்வெட்டாக அமைந்தது என்று கூறினார்.

திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட அதியமான் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஜம்பை இருந்தது. அதனால்தான் ஜம்பையில் சமணத் துறவிகள் தங்குவதற்காக பள்ளி அமைத்து கொடுத்துள்ளான்.

அதியமான் சங்க காலப் புலவர் ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த மன்னர் இவர்தான். மேலும் கர்நாடக மாநிலத்தில் பிரம்மகிரி என்ற இடத்தில் காணப்படும் மௌரிய மன்னன் அசோகனுடைய கல்வெட்டு சோழ பாண்டிய சேர புத்திர, சத்தியபுத்திரர் ஆகிய தென்னிந்திய அரச பரம்பரையினரை குறிக்கிறது இவர்களுள் சத்திய புத்திரர்கள் யார் என்பதில் நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்தது.

ஆனால் ஜம்பையில் கிடைத்த கல்வெட்டின் மூலம் அதியமான் மரபினர் சத்தியபுத்திரர்கள் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஜம்பை சமணக் கல்வெட்டு தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதை அறிய முடியும். அதேபோல் சமண சமயம் இப்பகுதியில் சிறந்து விளங்கியதையும் தெரிந்து கொள்ளலாம்.

    சத்தியபுத்திரர்கள்
    படக்குறிப்பு,பேராசிரியர். ரமேஷ்

    சத்தியபுத்திரர் அதியமான்

    சத்தியபுத்திரரான அதியமான் ஆட்சி தகடூரை தலைநகராக கொண்டு கொங்கு நாடு குதிரைமலை, காவிரியின் கிழக்கு பகுதியிலிருந்து நாமக்கல் தெற்கு பகுதி வரை பரவி இருந்தது.

    இதில் திருக்கோவிலூரை தலைநகராக கொண்டு மலையமான் திருமுடிக்காரி ஆட்சி செய்தான். இந்தப் பகுதி மலையமான்களின் ஆட்சி பகுதியாகும். அதியமானுக்கும் திருமுடிகாரிக்கும் நடைபெற்ற போரில் மலையமான் திருமுடிக்காரி கொல்லப்பட்டார். இதனால் திருக்கோவிலூர் பகுதியின் மலைய மானாடு சிதைவுற்றது. அதியமான் வெற்றி பெற்று திரும்பிய வழியில் திருக்கோவிலூர் அருகே உள்ள ஜம்பை மலைக்குன்றில் தங்கி அங்கு வசித்த சமண முனிவர்களுக்கு படுக்கை அமைத்து கொடுத்தார்.

    அப்பொழுது அதன் அருகிலேயே இந்த தமிழ் பிராமி கல்வெட்டையும் பொறித்து வைத்துள்ளார் என்று கூடுதல் விளக்கத்தையும் பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.

    தொடர்ந்து உளுந்தூர்பேட்டை எழுத்தாளர் லலித் குமார் பிபிசி தமிழிடம் மலையமான்கள் பற்றி விவரிக்க தொடங்கினார்

    புறநானூறு புகழும் மலையமான்கள்

    எட்டுத்தொகை நூல்களில் தலைசிறந்தது புறநானூறாகும். புறநானூற்றில் போரில் வெற்றி பெற்ற மன்னர்கள், வள்ளல்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. புறநானூற்றில் 12 பாண்டிய மன்னர்கள், 13 சோழ மன்னர்கள், 18 வேளிர்கள் அதாவது சிற்றரசர்களை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

    அதேபோல் பறம்பு மலையை ஆண்ட பாரி, பழனி மலை ஆண்ட பேகன், கொல்லிமலையை ஆண்ட ஓரி, பொதிகை மலையை ஆண்ட ஆய், திருக்கோவிலூர் மலையமான், தகடூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த அதியமான் பற்றிய பாடல்களும் புறநானூற்றில் உள்ளதாக தெரிவித்தார்.

    அதேபோல் வெண்ணி பறந்தலை போர், வாகை பரந்தலைப் போர், கழுமலைப் போர், தலையாலங்கானத்து போர் ஆகிய போர்க்களங்கள் குறித்தும் மிக விரிவாக புறநானூறு கூறுகின்றது.

    அதில் தகடூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த அதியமான் மிகச் சிறந்த கொடையாளர் ஆவார். இவர் கட்டிய கோட்டைக்கு அதியமான் கோட்டை என்று பெயர். இப்பொழுது அது அதமன்கோட்டை என்று அழைக்கப்படுகிறது என்று கூறினார்.

    சத்தியபுத்திரர்கள்
    படக்குறிப்பு,”மராட்டிய சாத்புத அரசர்களையே இந்த சத்யபுத்திரர் என்பது குறிக்கிறது என்றனர்.”

    குஜராத் கல்வெட்டிலும் சத்தியபுத்திரர்

    குஜராத்தில் உள்ள கிர்நார் மலைச்சரிவில் அசோகரது கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. தமது அரசின் எல்லைகளை குறித்த சாசன கல்வெட்டில் அரசின் எல்லைப்புற மன்னர்களாக “சோட, பாட, சத்யபுதோ, சேரபுதோ, தம்மபாணி” என்று குறித்திருக்கிறார்.

    அசோகர் குறிக்கும் தமிழக மன்னர்களை சோட – சோழ, பாட – பாண்டிய, சேரபுதோ- சேர என்று எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். தம்மபாணி என்பது இலங்கை அரசர்களைக் குறிப்பதாகும். இதில் சத்யபுதோ யார் என்பது பற்றி குழப்பம் நிலவியது.

    ஏனெனில் தமிழ் இலக்கியங்களோ, வேறு ஆவணங்களோ இப்படி ஒரு மன்னர் குலம் இருப்பதை பதிவுசெய்யவில்லை. எனவே சில வரலாற்று ஆசிரியர்கள் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர்களே சத்யபுத்திரர்கள் என்று சொன்னார்கள்.

    இன்னும் சிலர், மராட்டிய சாத்புத அரசர்களையே இந்த சத்தியபுத்திரர் என்பது குறிக்கிறது என்றனர். கே .ஏ. நீலகண்ட சாஸ்திரி போன்ற தமிழ் வரலாற்றாசிரியர்கள், மற்ற தமிழ் மன்னர்களோடு சேர்ந்து வருவதால், இவர்கள் ஒரு தமிழ் மன்னர் குலத்தவராகவே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

    இந்தக் குழப்பத்துக்கு முடிவாக திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் ஊரில் முதலாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தமிழ் ப்ராமி கல்வெட்டு 1981-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது .

    சத்தியபுத்திரர்கள்
    படக்குறிப்பு,லலித்குமார்

    மூவேந்தர்களுக்கு இணையான தமிழ் அரசன்

    அதியன் நெடுமானஞ்சி கொடுத்த பாழி (இருப்பிடம்) என்பதைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவன் சத்தியபுத்திரர் வம்சத்தில் வந்தவன் என்று பதிவுசெய்து, சத்தியபுத்திரர் யார் என்று கேள்விக்கு விடையளித்தது இந்தக் கல்வெட்டு.

    தகடூரை ஆண்ட அதியமான்களே சத்தியபுத்திரர் என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கியது மட்டுமல்லாமல், வட பகுதியை ஆண்ட அசோகரின் கல்வெட்டில் இடம்பெறும் அளவுக்கு மூவேந்தர்களுக்கு இணையாக இவ்வரசன் விளங்கினான் என்பதையும் இந்தக் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

    ஜம்பையில் தீர்த்தங்கரர் உருவச்சிலை மூன்றும், புத்தர் உருவச்சிலை மூன்றும் கிடைத்துள்ளன. இவற்றில் மிகப் பழமையானது எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த புத்தரின் சிலையாகும்.

    இங்கு புத்த மதமும், சமண மதமும் இருந்ததற்கான மிகப்பெரிய சான்றாகவே இதை கருதலாம். அதேபோல் ஜம்பைக்கு அருகில் சிறிது தூரத்திலேயே பள்ளி சந்தல் என்ற ஊர் உள்ளது. இதனால் இங்கு சமண புத்த சமயங்களும் பரவி இருந்ததை அறியலாம்.

    மலையமான்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்த ஜம்பை சத்தியபுத்திரர்களின் ஆட்சி பகுதியாக மாறியதுடன் தற்பொழுது அவர்கள் யார் என்று உலகிற்கு அடையாளம் காட்டும் கல்வெட்டையும் தன்னகத்தே கொண்டுள்ளது மிகச் சிறப்பாகும்.

    திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த மலையமான்கள் சோழர் ஆட்சியில் மிக முக்கிய பொறுப்புகளை வகித்ததுடன், போர்க்களங்களில் உற்ற துணையாக இருந்தும் போர்களில் பல வெற்றியை பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்றும் எழுத்தாளர் லலித் குமார் கூறினார்.

    (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

    சத்திய புத்திரர்: சேர, சோழ, பாண்டியருக்கு இணையான இந்த தமிழ் மன்னர் பற்றித் தெரியுமா? – BBC News தமிழ்

    About editor 3048 Articles
    Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

    Be the first to comment

    Leave a Reply