யார் குத்தியும் அரிசி ஆகட்டும்!  அரிசியை யார் குத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல!

யார் குத்தியும் அரிசி ஆகட்டும்!  அரிசியை யார் குத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல!
 நக்கீரன்

இந்த இமயமலைப் பிரகடனம் இரண்டு அமைப்புக்களால் வெளிடப்பட்டது. ஒன்று பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை. மற்றது பவுத்த தேரர்களை உள்ளடக்கிய சிறந்த இலங்கைக்கான சங்கம் (‘Sangha for a Better Sri Lanka’).

உலகத் தமிழர் பேரவை (GTF)

புலம் பெயர் தமிழர்களர்கள் சிலரால் ஆயுதப் போர் மவுனிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது. உலகத் தமிழர் பேரவை பல்வேறு நாடுகளின்  தமிழர் அமைப்புகளின்ஒரு கூட்டு அமைப்பாகும். ஈழத் தமிழர்களின் மனித உரிமைகளையும், தன்னாட்சியும், தாயகத்தையும் வலியுறுத்தும் அமைப்பாகும். இது மக்காளாட்சி, அறவழி, பன்னாட்டு விழுமியங்களுக்கு ஏற்ப   செயல்ப்படுகிறது.  இதன்

முதல் தலைவர் வண. பிதா எஸ்.ஜே. இமானுவேல் அடிகள் ஆவர்.

1995  ஒக்தோபரில் குடாநாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்பதற்காக இலங்கை இராணுவம் தாக்குதலைத் தொடங்கியபோது யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு வெளியேறிய 5 இலட்சம்  மக்களில் இமானுவேல் அடிகளாரும் ஒருவர்.  அடுத்த  ஆண்டை வன்னிக் காடுகளில் கழித்தார்.

1997 இல் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை காரணமாக, இம்மானுவேல் அடிகள்  இங்கிலாந்து சென்று அங்கு ஓராண்டு காலம் பணியாற்றினார். பின்னர்  செருமனியில், மூன்சுடர் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் 2007 ஆம் ஆண்டு வரை குருவானவராகப் பணியாற்றினார்.  இங்கு பணியாற்றிக் கொண்டிருந்த போது அவர் இலங்கைத் தமிழரின் உரிமைகளை வென்றெடுக்கும் பணிகளையும் பன்னாட்டு அரங்கில் முன்னெடுத்து வந்தார். 2010 ஆம் ஆண்டில் இம்மானுவேல் அடிகள் உலகத் தமிழர் பேரவையின் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

இம்மானுவேல் அடிகளார் அவர் 2020 ஆம் ஆண்டு  தாயகம் திரும்பியிருந்தார். அவரை அடுத்து  சுரேன் சுரேந்திரன்  அதன்  தலைவராகவும் பேச்சாளராகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவர் இங்கிலாந்து நாட்டை ப் புகலிடமாகக்
கொண்டவர். 1983 ஆண்டு நடந்த இனக் கலவரத்தை அடுத்து அவரது குடும்பம் புலம்
பெயர்ந்தது. இவ்வமைப்பு நான்கு மாநாடுகளை 2002 ஆண்டு தொடக்கம்
தொடராக நடத்தியிருக்கின்றது.

உலகத்தமிழ் பேரவை தொடங்கிய காலம் தொட்டு அதில் கனடிய தமிழர் பேரவை (CTC) உறுப்புரிமை வகித்து வருகிறது.  கனடிய தமிழர் பேரவை சார்பாக இராச். தவரட்ணசிங்கம், ஆமெரிக்காவில் இருந்து மருத்துவர் இலயாஸ்  ஜெயராசா மற்றும் இங்கிலாந்தில் இருந்து குகன் வேலுப்பிள்ளை ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சிறந்த இலங்கைக்கான சங்கம் என்பது பல தசாப்தங்களாக அமைதி   மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மக்கள் அனைவரும் அச்சமும் ஐயமும்  இல்லாமல், சம உரிமைகளை அனுபவிக்கும் ஒரு அமைதியான சுபீட்சமான இலங்கைக்காக அர்ப்பணித்த ஒரு மகா சங்கக் குழுவாகும்.

சிறந்த இலங்கைக்கான சங்கம் என்ற அமைப்பில் இலங்கையில் உள்ள மல்வத்தை, அஸ்கிரிய மற்றும் அமரபுர – இராமஞ்ஞ பவுத்த பீடங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.  தனித்தனியே இயங்கிய அமரபுர, இராமஞ்ஞன பீடங்கள் கடந்த ஓகஸ்ட் 16, 2019 இல் ஒன்றிணைந்தது தெரிந்ததே. இதன் காரணமாக இலங்கையில் உள்ள பவுத்த மத பீடங்களின் எண்ணிக்கை 4 இல் இருந்து 3 ஆகக் குறைந்துள்ளது. சிறந்த இலங்கைக்கான சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக வண.களுப்பகான பியரத்தின தேரர் இருக்கிறார்.

27 ஏப்ரில் 2023 அன்று  நாகர்கோட் நேபாளத்தில் (27 April in Nagarkot, Nepal)
அனைத்துப்  பிரிவுகளைச் சேர்ந்த மகா சங்கத்தினருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழ் உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இமயமலைப் பிரகடனம்  தயாரிக்கப்பட்டது.

இலங்கையில் நிலவும்  இனங்களுக்கு இடையிலான சிக்கல்கள் பற்றி இவை கலந்து பேசின. “நன்கு கட்டமைக்கப்பட்ட இந்தத்  தொடக்கப்  பேச்சுவார்த்தைகள் ஒருவருக்கொருவர் கண் ணோட்டத்தைப் பார்க்க எங்களுக்கு உதவியது”   என  இரண்டு அமைப்புக்களும்  விடுத்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பவுத்த தேரர்கள்  தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்மறையான கருத்துக்கள் காணப்படுவதாகவும், பொருளாதார ரீதியாக வெற்றிகரமான மற்றும் செல்வாக்கு மிக்க புலம்பெயர் தமிழர்கள் இலங்கையை அழிக்க முனைவதாக சிங்கள சமூகத்தினரிடையே ஒரு கருத்து நிலவுவதாகவும்,  இந்த மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் அச்சங்கள் எப்போதும் பகுத்தறிவு அடிப்படையிலானவை அல்ல
என்பதைக் காணலாம். நாகர்கோட்டில்  வெளியிடப்பட்ட  ‘இமயமலைப்  பிரகடனம்’ எங்கள் பயணத்தின் ஒரு முக்கியமான விளைவாகும்”  என அந்தக் கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமயமலைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு அறிக்கைகள் பின்வருமாறு –

அறிக்கை 1

எந்தவொரு சமூகமும் தனது அடையாளத்தையும் இடத்தின் பெருமையையும் இழக்க நேரிடும் என்ற அச்சம் இல்லாமல் வாழவும் இலங்கையின் பன்முகத் தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல்.

Statement 1

Preserving and promoting the pluralistic character of the country where no community feels threatened about losing its identity and pride of place.

அறிக்கை 2

பொருளாதார நெருக்கடியை சமாளித்தல், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும்
முகமாக ஒரு  பொருத்தமான மேம்பாட்டு  மாதிரியைத் தெரிவு செய்தல், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் ஏனையவர்களிடம் இருந்து ஈடுபாடு மற்றும் முதலீட்டை எளிதாக்குதல், நாடு வளர்ச்சிப் பாதையில் இருப்பதை உறுதி செய்தல் மற்றும் இலங்கையை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாக ஆக்குதல்.

Statement 2

Overcoming the economic crisis, selecting an appropriate development model that encourages local production, facilitating involvement and investment from overseas Sri Lankans and others, ensuring the country is in a growth trajectory and making Sri Lanka firmly a middle-income country.

அறிக்கை 3

தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றும் அனைத்து
மக்களிடையே சமத்துவம் மற்றும் சம குடியுரிமையை ஊக்குவிக்கும், பொறுப்புக்கூறும் நிறுவனங்களை உறுதி செய்யும் மற்றும் மாகாணங்களுக்கு போதுமான அதிகாரப் பகிர்வை உத்தரவாதம் செய்யும் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், அதுவரை நடைமுறையில் உள்ள அதிகாரப் பகிர்வு விதிகளை நம்பகமான முறையில் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துதல்.

Statement 3

Arriving at a new Constitution that guarantees individual and collective rights and promotes equality and equal citizenship among all peoples, ensures accountable institutions and guarantees adequate devolution of powers to the provinces, and until such time focus on the faithful implementation of provisions of sharing of powers in the existing Constitution.

அறிக்கை 4

Statement 4

Devolving power in a united and undivided country, accepting the religious, cultural and other identities of people and respecting those identities, and working towards establishing trust between ethnic groups and religious groups.

அறிக்கை 5

கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வதற்கும், அத்தகைய துன்பங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பொறுப்புக்கூறல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உருவாக்குவதற்கும் இணக்கமாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்கும் ஒரு இலங்கையை கட்டி எழுப்பல்.

Statement 5

Envision a Sri Lanka that is reconciled and committed to learning from its past and creating measures including accountability to ensure that such suffering never occurs again.

அறிக்கை 6

இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகள் மற்றும்  பன்னாட்டு கடமைகளுக்கு இணங்குதல், சுதந்திரமான மற்றும் ஆற்றல்மிக்க வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.  மற்றும் (இலங்கை) உலகின் மக்களாட்சி,  அமைதியான மற்றும் வளமான நாடுகள் போல் அதன் பெருமையைப் பெறுவதை உறுதி செய்தல்.

Statement  6

Complying with bilateral and multilateral treaties and international obligations, taking steps to follow independent and dynamic foreign policy, and ensuring the country takes its pride of place among the democratic, peaceful and prosperous nations of the world.

இந்த இமயமலைப்  பிரகடனத்தின் படிகளை சிறந்த இலங்கைக்கான சங்கம் என்ற அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள் குழுவும், உலகத் தமிழர் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுக்குழுவும் இலங்கையில் உள்ள சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா சம்பந்தன்  உட்பட  பல அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள் போன்றோரைச் சந்தித்துக்  கையளித்து வருகின்றன.

இந்தக் குழு தேசிய ஒற்றுமையை  நிறுவுவதன் மூலம் அமைதியான நாட்டை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தடைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

இமயமலைப் பிரகடனத்தை பெற்றுக் கொண்ட சபாநாயகர் மதிப்புக்குரிய மஹிந்த யாப்பா அபேவர்தன பேசுகையில், ஒவ்வொரு இலங்கையரும் திறந்த மனதுடன் இதில் இணைந்து இணக்கமான மற்றும் சுபீட்சமான இலங்கைக்கான கூட்டு பார்வைக்குப்  பங்களிக்குமாறு அழைப்பு விடுத்தார்.  இந்தத் தேசியப்  பணிக்காக தங்களை அர்ப்பணித்த அனைத்துத்  தரப்பினருக்கும் சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

மகா சங்கம், உலகத் தமிழ் சமூகம் மற்றும்  மதிப்புக்குரிய  உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தச்  சந்திப்புக்கள் ” தேசிய ஒற்றுமைக்கான ஒரு வரலாற்று வாய்ப்பு”  என்று நீதி அமைச்சர் மதிப்புக்குரியு (கலாநிதி) விஜேதாச இராசபக்ச  தெரிவித்தார். பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் சமூகத்தை ‘புலம்பெயர்ந்தோர்’ என்று அழைப்பதற்கு பதிலாக, அவர்களை எங்கள் சொந்த சமூகமாக கருத வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். அவர்கள் அனைவரும் இந்த நாட்டில் வேர்களைக் கொண்டுள்ளனர், எனவே அவர்கள் இலங்கையர்  என்று கருதப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் இனச் சிக்கலுக்கு நாடு சுதந்திரத்திரம் அடைந்த நாள் முதல் மேற்கொளளப்பட்ட முயற்சிகள் மகாசங்கத்தினரும் பவுத்த தேரர்களும் காட்டிய கடுமையான எதிர்ப்புக் காரணமாக சைவிடப்பட்டன. 1957 இல் எழுதப்பட்ட பண்டா – செல்வா உடன்பாடு, 1965 இல் எழுதப்பட்ட டட்லி – செல்வா உடன்பாடு இரண்டும் பவுத்த தேரர்கள் காட்டிய எதிர்ப்புக் காரணமாகவே கிழித்தெறியப்பட்டன என்பது வரலாறு.

எனவே  சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என  உலகத் தமிழர் பேரவை கருதுகிறது எனலாம். பவுத்த மத பீடங்களை எதிர்த்து அல்லது சிங்கள மக்களின் விரும்பத்திற்கு மாறாகத்  தமிழர்களுக்குத் தீர்வு வழங்கப்படுமாயின் நாட்டில் இரத்த ஆறு ஒடும்  என்ற உண்மையை புறந்தள்ள முடியாது. எனவே சிங்கள மக்களிடையே செல்வாக்குச் செலுத்தும் பவுத்த தேரர்களது காலில் விழுந்தே இனச் சிக்கலுக்குத்  தீர்வு காண்பது சிறந்த வழியாகும். இப்படியான முயற்சி முன்னர் மேற்கொள்ளப்படவில்லை. இதுவே முதல் முயற்சி. இந்த முயற்சி வெற்றியில் முடியாது தோல்வியில் முடியலாம்.  அதனால் நாங்கள் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இந்த வழியையும் தமிழர் தரப்பு மேற்கொண்டது என்று வரலாறு பேசும்.

எதிர்பார்த்தது போலவே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இரு கன்னகைகளாகப்  பிரிந்து நிற்கும் தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புக்கள் உலகத் தமிழர் பேரவையின் முயற்சியை கடுமையாகச் சாடி வருகின்றன.

தமிழர்களும் தாயகமும் எரிந்து கொண்டிருக்கையில் உலகத் தமிழர் பேரவை பிடிலை இசைக்கிறதா? என பிரித்தானிய தமிழர் பேரவை தனது அறிக்கையில் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.  “உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் பிக்குகளுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை கொச்சைப் படுத்தும் முகமாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்”என ரெலோவின் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார். “எல்லோரும் ஏறிச் சறுக்கி விழுந்த குதிரையில் சக்கிடுத்தார் ஏறிச் சறுக்கி விழுந்த கதை” என இபிஆர்எல்எவ் பொதுச் செயலாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் உலகத் தமிழர் பேரவையின் முன்னெடுப்பை வர்ணித்துள்ளார்.

எப்போதும் என் வழி தனி வழி என நடந்து கொள்ளும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உலகத் தமிழர் பேரவையின் முயற்சி இரணில் அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்கும் முயற்சி எனச் சாடியுள்ளார். காங்கிரசைப் பொறுத்தளவில் அது இந்தியா, அமெரிக்கா, பிரித்தானிய நாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. இன்றைய பூகோள அரசியலில் இந்தியாவையும் மேற்குலக நாடுகளையும் பகைத்துக் கொள்வது எந்தளவு தூரம் புத்திசாலித்தனமான அரசியல்  என்பது புரியவில்லை.

தாயகத்தில் நித்தம் பலத்த நெருக்குவாரங்களுக்கு மத்தியில் வாழும் எமது மக்களுக்கு விடிவு வேண்டும். அரசியல் தீர்வு வேண்டும். நிலம் பறிபோகிறது, இந்துக் கோயில்கள் இடிக்கப்படுகின்றன,  பவுத்த விகாரைகள் ஆயிரக் கணக்கில் வடக்கிலும் கிழக்கிலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் முளைக்கின்றன, வடக்குக் கடல் வளம் சீனாவுக்குத் தாரை வார்க்கப்படுகிறது,  பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இவற்றுக்குத் தீர்வு காண முயற்சிக்கக் கூடாதா? முயற்சி செய்வோரை இகழந்து பேசலாமா?

உலகத் தமிழர் பேரவையின் நோக்கங்கள் எவையும் தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரானவை அல்ல. மாறாக, சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்த அதே நோக்கங்கள் இவை.

உண்மையான  அமைதி சமாதானம் நீதியில் நங்கூரமிடப்பட வேண்டும். அனைவருக்கும் உலகளாவிய உரிமைகளுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். இதைத்தான் உலகத் தமிழர் பேரவை அனைத்து முரண் பாடுகளுக்கும் எதிராக சாதிக்க முயற்சிக்கிறது.  இந்த முயற்சிகளை நாம் ஊக்குவிக்க வேண்டுமே தவிர, தடைக் கற்களைப் போடக் கூடாது.

யார் குத்தியும் அரிசி ஆகட்டும்!  அரிசியை யார் குத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல!  (கனடா உதயன்)

————————————————————————————-

Further reading-

(1) Himalaya Declaration: Bridging the Chasm Between Rhetoric and Reality

http://www.srilankaguardian.org/2023/12/himalaya-declaration-bridging-chasm.html

(2) ‘Himalaya Declaration’ jointly prepared by the ‘Sangha for a Better Sri Lanka’ and the Global Tamil Forum presented to the Speaker

News – ‘Himalaya Declaration’ jointly prepared by the ‘Sangha for a Better Sri Lanka’ and the Global Tamil Forum presented to the Speaker1709140008.pdf

(3)Following the launch of the ‘Himalaya Declaration’, the proposed “National Conversation” among communities in Sri Lanka and Diaspora will continue with much vigour and purpose

Press-Release-of-GTF-on-Himalaya-Declaration (1).pdf

(4) Himalaya Declaration: Is It Worthy Of National Discussion? A Community’s Journey From Arunachalam To Prabhakaran To Sumanthiran

(5) Himalaya Declaration: Is It Worthy Of National Discussion? A Community’s Journey From Arunachalam To Prabhakaran To Sumanthiran

https://www.colombotelegraph.com/index.php/himalaya-declaration-is-it-worthy-of-national-discussion-a-communitys-journey-from-runachalam-to-prabhakaran-to-sumanthiran/

(6) Himalayan Declaration’ Lays Bare Deep Divide Among Sri Lankan Tamil Groups

https://thediplomat.com/2024/01/himalayan-declaration-lays-bare-deep-divide-among-sri-lankan-tamil-groups/

(7) GTF-monks’ Himalaya declaration: Buddhasasana-Cultural Min. in the dark on proposed ‘pluralism’

https://www.themorning.lk/articles/HeojrmzjrMKLy6gPeBFO

(8) HIMALAYAN DECLARATION

HIMALAYAN DECLARATION

GTF assures it won’t undertake political negotiations at any level

https://nakkeran.com/wp-admin/post.php?post=22385&action=edit

———————————————————————————————————-

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply