தை மகளே வா, வா எங்கள் வாழ்வில் இன்பம் தா, தா
நக்கீரன்
தமிழர்கள் பல விழாக்களைக் கொண்டாடினாலும் தைப்பொங்கல் விழாவே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காரணம் இது உழவர் நாள். வயல் உழுது, எருவிட்டு, வரம்பு கட்டி, விதைத்து, களை எடுத்து, நெல் விளைந்ததும் அதனை அறுவடை செய்து, சூடுமிதித்து, நெல்லை அரிசியாக்கி புதுப்பானையில் பொங்கி ஞாயிறுக்குப் படைக்கும் நல்நாள்.
விதைத்ததில் இருந்து அறுவடை வரை ஒரு உழவனுக்கு தோள் கொடுப்பவர்கள் மூன்று வகையினர். ஒன்று அவனது கால் நடை. இரண்டு பொய்யா வானம் பொழியும் மழை. மூன்றாவது எல்லா உயிரினங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் ஞாயிறு.
ஞாயிறு வணக்கம் எல்லாப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றன. ஞாயிறு இல்லாவிட்டால் உலகமே இயங்காது. பண்டைய எகிப்தில் சூரியக் கடவுளான இரா வழிபாடு புகழுடன் இருந்தது. இந்தியாவில் சூரியனுக்கு இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. தெற்கே தஞ்சாவூரில் உள்ள சூரியனார் கோயில். வடக்கே கோனார்க்கில் உள்ள சூரியனார் கோயில். இங்கே உருவ வழிபாடு கிடையாது.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இளங்கோ கடவுள் வாழ்த்துக்குப் பதில் இயற்கையை வாழ்த்துகிறார். நிலவை, ஞாயிறை, மழையை, கதை தொடங்கும் நிலத்தைப் போற்றி காப்பியத்தை தொடங்குகிறார். நிலவும், சூரியனும், மழையும் அனைவருக்கும் பொதுவானது.
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல், பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்,
மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல், (சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம் மங்கல வாழ்த்து)
பொங்கல் விழா எப்போது தொடங்கப்பட்டது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் இல்லை. ஆனால் பொங்கல் விழா மதம் கடந்து தமிழர் பண்பாட்டில் முக்கிய இடம் பிடித்துள்ளது என்பது மட்டும் உண்மை. சித்திரைப் புத்தாண்டும் தீபாவளியும் வைதீக மதத்தோடு, புராண, இதிகாசங்களோடு தொடர்புடையவை.
பொங்கல் பற்றி சமஸ்கிருத புராணங்களில் திராவிட அறுவடைப் பண்டிகை என அறியப்பட்டாலும்,வராலாற்று அறிஞர்கள் சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட “தை நீராடல்” கொண்டாட்டம் தான் இன்றைய பொங்கல் கொண்டாட்டமாக மாறியுள்ளது என நம்புகின்றனர்.
தை நீராடலின் ஒரு பகுதியாக அக்காலப் பெண்கள் “பாவைநோன்பு” என்ற விரதத்தைக் கடைப்பிடித்தனர். இந்த கொண்டாட்டத்தின் போது மழையும் வளமும் பெருக வேண்டி இளம்பெண்கள் வேண்டுவார்கள்.
பெண்கள் அனைவரும் விடியற்காலையில் எழுந்து குளித்து விடுவார்கள்.ஈர மண்ணில் செய்யப்பட்ட பெண் தெய்வ சிலையை வணங்கி வந்தார்கள்.இந்த விரதத்தை தை முதல் நாள் முடித்துக் கொள்வார்கள். பழமை பெற்ற இந்த சம்பிரதாயங்கள்,சடங்குகளும் பொங்கல் திருவிழாவிற்கு அடித்தளமாக அமைந்தது.
சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், தை முதலாம் நாள் தமிழரின் புத்தாண்டின் தொடக்கமாகவும் அதனை திருவள்ளுவர் பெயரால் அழைக்கப்பட வேண்டும் எனவும் திருவள்ளுவர் பிறந்த நாள் கிமு 31 ஆண்டென்றும் திருவள்ளுவர் பிறந்த நாளை தை இரண்டில் கொண்டாடப்பட வேண்டும் எனத் தமிழறிஞர்கள் மறைமலை அடிகளது தலைமையில் கூடித் தீர்மானித்தார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை,சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார்,முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆவர்,
அதுவரை நடைமுறையில் பிரபவ தொடங்கி அஷய ஈறாக இருந்த 60 ஆண்டுகள் சுழற்சி முறையிலான வட மொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டுமுறை வரலாற்றைப் பதிவு செய்ய உதவாது. எனவே தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டுமுறை வேண்டும் என்றும் அதுவும் பொதுமறை தந்த செந்நாப்புலவர் திருவள்ளுவர் பெயரில் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த மாற்றம் 1981 இல் நடந்த மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்பின்னணியில், தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும், தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நினைவு நாள் என்றும் திமுக அரசு 2008 தை மாதம் 23 ஆம் நாள் அரசாணை பிறப்பத்தது. இது 2011இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசால் இரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. 2021 இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அந்தச் சட்டத்தை நீக்க இதுவரை எந்த நடைவடிக்கை எடுக்கவில்லை.
சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன் பூமியின் நடுக்கோட்டில் மேட இராசியில் நுழையும் நாள் பத்தாண்டின் தொடக்கமாகக் கருதப்பட்டது.
சூரியன், முதல் இராசியான மேட இராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். எடுத்துக்காட்டாக சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர்கள் வழங்கப்படுகின்றன. இலக்கிய ஆதாரங்கள்: “சித்திரையே வா நம் வாழ்வில் முத்திரை பதிக்க வா‘ என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தினால், சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுக்குரிய பொருத்தமான நாள்.
சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அகத்தியரின், “பன்னாயிரத்தில்‘ பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. “திண்ணிலை, மருப்பின் ஆடுதலை‘ என்று நக்கீரர் கூறியிருக்கிறார். இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு, மேட இராசி என்று பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார் முனைவர் இராசமாணிக்கனார் என வாதிட்டார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் வாதத்துக்கு பதிலளித்த கலைஞர் கருணாநிதி “1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு என முடிவு செய்தது என்றும், சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறினர்.
மேலும் “ஜெயலலிதாவின் பேச்சு எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பார்க்கலாம்! தை மாதத்தில் பௌர்ணமி “பூசம்” நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்குப் பூசம் என்ற பெயர் உள்ளதா? மாசி மாதத்தில் பௌர்ணமி “மகம்” நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்கு மகம் என்று பெயர் இல்லையே? பங்குனி மாதத்தில் பௌர்ணமி “உத்திரம்” நட்சத்திரத்தில்தான் வரும். அந்த மாதத்திற்கு உத்திரம் என்று பெயர் இல்லை. 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லையே?” என கலைஞர் கருணாநிதி பதிலுக்கு வாதிட்டார்.
உண்மை என்னவென்றால் சங்க இலக்கியங்கள் எதிலும் சித்திரைதான் தமிழர்களது புத்தாண்டு என்றோ தைதான் தமிழர்களது புத்தாண்டு என்றோ குறிப்பிடப் படவில்லை. சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு ஆகக் கொண்டாடும் வழக்கம் 400 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” – நற்றிணை (80 மருதம் – பூதன்தேவனார்)
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” – குறுந்தொகை (196. மருதம் – தோழி கூற்று)
“நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து” – ஐங்குறுநூறு (84, 9. புலவி விராய பத்து)
“வையெயிற் றவர்நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ” – கலித்தொகை (59, தளை நெகிழ்… எனத்தொடங்கும் பாடல்)
தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, தை மாதத்தில் புத்தாண்டு பிறக்கிறது எனப் பாடவில்லையென்பது புலப்படுகிறது.
தமிழ்ப் புத்தாண்டு சித்திரையா? தையா? என்றால் இரண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது. சித்திரைப் புத்தாண்டுக்கு வானியல் அடிப்படை இருப்பது போல திருவள்ளுவர் ஆண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது. சித்திரை 01 (ஏப்ரில் 14) அன்று சூரியன் மேட இராசிக்குள் நுழைகிறது. இதேபோல தை முதல் நாள் (சனவரி 14) சூரியன் தனது தென்திசைப் பயணத்தை (தட்சணாயம்) முடித்துக் கொண்டு வடதிசைப் பயணத்தை மகர இராசியில் தொடங்குகிறது. வட மொழியில் அதனை மகர சங்கராந்தி என அழைப்பர்.
புவியில் உள்ள ஒரு இடத்தை சுட்டிக் காட்டுவதற்கு மூன்றுவிதமான கோடுகளை வானியலாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். முதல் கோடு புவியை வடக்குத் தெற்கென இரண்டாகப் பிரிக்கும் நடுக்கோடு (equator) ஆகும்.
இரண்டாவது கோடு நெடுவரை அல்லது நெடுக்கோடு (meridian or line of longitude). இது புவியின் பரப்பில் கற்பனையான பெருவட்டத்தில் பாதியாகும். இவற்றின் ஒருமுனை வட துருவத்திலும் மற்றொரு முனை தென் துருவத்திலும் முடிகின்றன. இவை ஒரே அளவிலான நெடுக்கோடுகள் அனைத்தையும் இணைக்கின்ற கோடாகும்.
மூன்றாவது கோடு அகலக்கோடு (latitude) ஆகும். இந்த மூன்று கோடுகளை வைத்து உலகில் உள்ள ஓர் புள்ளியின் அமைவிடத்தைப் பெறலாம். ஒவ்வொரு நிரைகோடும் அனைத்து நிலநேர்க்கோட்டு வட்டங்களும் செங்குத்தானவை. எடுத்துக்காட்டாக இலங்கையின் அமைவிடம் நெடுக்கோடு 79.50 பாகை கிழக்கு, குறுக்குக்கோடு 6.54 பாகை வடக்கு ஆகும்.
சூரியனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறையில் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு.
1. வெப்பமண்டல ஆண்டு
சூரியன் மேட இராசியில் நுழைந்து திரும்ப மேட இராசியில் வந்தடையும் காலம் வெப்பமண்டல (சாயன) ஆண்டு என்று அழைக்கப்படுகிறது (Tropical revolution of Earth around the sun). வெப்ப மண்டல ஆண்டு என்பது சராவரி 365 நாள், 5 மணி, 48 நாடி, 45 வினாடிகளைக் கொண்டதாகும்.
2. நட்சத்திர மண்டல ஆண்டு
ஞாயிறு இயக்கம் தொடங்குவது மேட இராசியின் முதல் நட்சத்திரத்திரமான அஸ்வினியில் நுழையும் காலம். முடிவது மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதி ஆகும். தொடக்கம் மற்றும் முடிவு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் ஓர் ஆண்டாகும் (Sidereal revolution of Earth around the Sun). இதில் நட்சத்திர ஆண்டு என்பது ஞாயிறு தோராயமாக 365 நாள், 6 மணி, 9 நாடி, 9.5 வினாடிகளைக் கொண்டதாகும். இந்த முறையை இந்திய மாநிலங்கள் ஆன தமிழ் நாடு, பஞ்சாப், ஹரியானா, ஒரிசா மற்றும் மேற்கு வங்கம் பின்பற்றுகின்றன.
இந்தியாவில் வெளியாகும் திருக்கணித பஞ்சாங்கங்கள் எல்லாம் நாசா விண்வெளி நிறுவனம் வெளியிடும் Ephemeris கோப்புகளை வைத்துத்தான் காலத்தைக் கணிக்கின்றன. கிரகரணங்கள் பற்றிய தரவுகள் இந்தக் கோப்புகளில்தான் காணப்படுகின்றன. எத்தனை கோப்புகள் வைத்திருக்கிறார்கள்? கடந்த 9,000 ஆண்டுகளில் இராசிகள், நட்சந்திரங்கள் பற்றிய இருப்பு, ஓட்டம் பற்றிய தகவல்களை கணித்து வைத்திருக்கிறார்கள். அதாவது கிமு 5000 தொடக்கம் கிபி 3999 ஆண்டுவரை கணித்து வைத்திருக்கிறார்கள்!
வரலாற்றில் எகிப்தியர்கள்தான் ஞாயிற்றின் ஓட்டத்தை வைத்து முதன் முதலில் ஓர் ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236 இல் கண்டு பிடித்தார்கள். அதனைப் பின்பற்றியே கிமு 44 இல் யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பெப்ரபரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது.
ஆனால் நட்சத்திர ஆண்டில் 365 நாட்கள், 5 மணி, 48 மணித்துளிகள், 45.51 வினாடிகள் (365.242189) கொண்டது ஆகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் யூலியன் ஆண்டு 10.8 வினாடிகள் நீண்டுவிட்டது. இந்த நேர வேறுபாட்டால் கிபி 1582 அளவில் 10 நாட்கள் (1582 – 325)/120 =10) அதிகமாகிவிட்டது. இந்த வேறுபாட்டை போப்பாண்டவர் கிறகோறி (Gregory) 4 ஒக்தோபர் 1582 க்குப் பின்னர் 15 ஒக்தோபர் 1582 எனக் குறைத்துவிட்டார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000 இல் கூட்டப்படவில்லை.
தொல்காப்பியர் ஒரு ஆண்டுக்கான ஆறு பெரும்பொழுதுகளைச் சொல்லும்போது ஆவணி மாதமாகிய கார்காலத்தையே தொடக்கமாகக் குறிப்பிடுகிறார். அதன்பிறகே கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் காலங்களை வரிசைப்படுத்துகிறார். மேலும் வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 மணித்துளி ஆகும். இது 2300 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கார்காலத் தொடக்கமாகிய ஆவணி மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டனர் என்பதை உணர்த்துகிறது.
ஆனால் இன்று தொல்காப்பியர் கார் காலம் (ஆவணி, புரட்டாதி) எனக் குறிப்பிட்ட காலம் ஒரு மாதம் முன்னரே ஆடியில் தொடங்கிவிடுகிறது. புவி, சூரியன் மற்றும் சந்திரன் இரண்டின் ஈர்ப்பு விசை காரணமாக தனது பாதையில் மேற்கு நோக்கி 72.5 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பாகை (ஒரு நாள்) பின்நோக்கி நகர்ந்துவிடுகிறது. தொல்காப்பியர் காலம் கிமு 300 ஆண்டு என்று எடுத்துக் கொண்டால் சூரியன் இன்று 32 பாகை (32 ) நாள் பின்னேகிவிட்டது.
காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வகுக்கவில்லை. அதனால் அரசர்கள், புலவர்கள், சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றை ஒரு தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.
உரோம பேரரசர் யூலியஸ் சீசர் படுகொலை செய்யப்பட்ட நாள் கிமு மார்ச் 15, 44 என்று துல்லியமாக உரோம வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். மாறாக சங்க கால அரசர்கள், புலவர்கள் மட்டுமல்ல பிற்கால அரசர்கள், புலவர்கள் வாழ்ந்து மறைந்த ஆண்டு சரியாக பதியப்படவில்லை.
அரசர்கள் முடிசூடிக் கொண்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த அரசர் 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் எனக் குறிப்பிட்டார்கள். புலவர்களைப் பொறுத்தளவில், திருவள்ளுவர் உட்பட, அவர்கள் பிறந்து மறைந்த ஆண்டுபற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. மேலே கூறியவாறு தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடர் ஆண்டு இல்லாதது முக்கிய காரணமாகும். இருக்கிற 60 ஆண்டுகளும் சுழற்சி முறையில் வருவது மேலும் குழப்பத்தை உருவாக்கவே உதவியது. இதனால் வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியவில்லை. ஒருவர் பிரபவ ஆண்டில் பிறந்தார் என்றால் எந்தப் பிரபவ ஆண்டு என்பது தெரியாமல் இருந்தது. ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும்.
எனவே சித்திரைப் புத்தாண்டை தமிழ் இந்துக்களுக்கு உரிய புத்தாண்டாகவும் அதே வேளை தை முதல்நாளை – பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டின் – திருவள்ளுவர் ஆண்டின் – தொடக்கம் எனக் கொண்டாடுவதே சிறந்தது.
ஆனால் நடைமுறையில் ஆங்கிலப் புத்தாண்டான சனவரி முதல்நாளை வரலாற்றை பதிவு செய்யப் பயன்படுத்த வேண்டும். தேவை ஏற்படும் போது அதற்கு ஒப்பான திருவள்ளுவர் ஆண்டையும் குறிப்பிடலாம். தமிழ்நாடு அரசு இந்த முறையை பின்பற்றுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.