கலிலியோ மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?

கலிலியோ மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?

  • எழுதியவர்,க.சுபகுணம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 8 ஜனவரி 2024

அது கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் ஆட்சி நடந்துகொண்டிருந்த 17ஆம் நூற்றாண்டு காலகட்டம். பைபிள் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு மாறான கருத்துகளைக் கூறும் அறிவியல் கோட்பாடுகள் மத நிந்தனை என முத்திரை குத்தப்பட்டு, தண்டிக்கப்பட்ட காலகட்டம்.

அந்தக் காலகட்டத்தில், இந்தப் பேரண்டத்தில் பூமிதான் மையமாக இருப்பதாகவும் அதைச் சுற்றியே சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் சுற்றுவதாகவும் நம்பப்பட்டது. அதை மறுப்பது கிறிஸ்தவ புனித நூலுக்கு எதிரானதாகக் கருதப்பட்ட காலகட்டம் அது.

அந்தக் கோட்பாட்டைச் சந்தேகிக்கும் வகையில் பூமி உட்பட அனைத்து கோள்களுமே சூரியனைச் சுற்றித்தான் வலம் வருகின்றன என்று அறிவியல்ரீதியாக ஒரு வலுவான கோட்பாட்டை முன்வைத்தார் நிக்கோலஸ் கோப்பர்நிகஸ். அதைத் தனது தொலைநோக்கி மூலமாக வான்பொருட்களை ஆராய்ந்து உண்மையென நிறுவியவர் கலிலியோ கலிலி.

அதற்காக அவர்மீது மத நிந்தனை வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் என்ன நடந்தது? கலிலியோ மண்டியிட்டு மன்னிப்பு கோரும் நிலைக்கு கத்தோலிக்க திருச்சபையால் தள்ளப்பட்டது ஏன்?

அந்த வரலாற்றை விரிவாக இந்தக் கட்டுரையில் காண்போம்…

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
படக்குறிப்பு,நிகோலஸ் கோப்பர்நிகஸ். போலந்தை சேர்ந்த இயற்பியலாளர், வானியலாளர், கணிதவியலாளர்.

கோப்பர்நிகஸ் புத்தகத்தை தடை செய்த கத்தோலிக்க திருச்சபை

அவரது பெயர் நிகோலஸ் கோப்பர்நிகஸ். போலந்தை சேர்ந்த இயற்பியலாளர், வானியலாளர், கணிதவியலாளர். அவர் 1543ஆம் ஆண்டு தாம் இறப்பதற்குச் சில காலத்திற்கு முன்பு “ஆன் தி ரெவல்யூஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் (On the Revolutions of the Heavenly Spheres)’ என்ற தனது நூலை வெளியிட்டார். அந்த நூல் அதிர்வலைகளை அப்போது ஏற்படுத்தியது.

அது பரவலாக கத்தோலிக்க திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டாலமி(Ptolemy) முன்வைத்த ‘பூமியே மையம், அதைச் சுற்றியே சூரியனும் மற்ற வான்பொருட்களும் சுற்றி வருகின்றன’ என்ற கோட்பாட்டைக் கேள்விக்கு உள்ளாக்கியது.

இதுகுறித்து கிரிகோரி டபுள்யு. டாவ்ஸ் தனது ‘கலிலியோ மற்றும் அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையிலான முரண்பாடு’ என்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

மனிதர்கள் வாழ்ந்த பூமியை மையமாக வைத்துச் சொல்லப்பட்ட கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட திருச்சபையால், விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கும் பல வான்பொருட்களில் பூமியும் ஒன்று என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், இந்தக் கோட்பாட்டில் பூமி தனித்துவமாக நிலைநிறுத்தப்படவில்லை. ஆகவே, அவரது புத்தகம் தடை செய்யப்பட்டது.

கோப்பர்நிகஸ் கோட்பாட்டு அளவில் நிகழ்த்திய இந்தக் கண்டுபிடிப்புதான் பின்னாளில், கத்தோலிக்க ஆட்சியில் கலிலியோவை வரலாற்றுப் பிரசித்தமான ஒரு வழக்கில் சிக்க வைத்தது. அந்த வழக்கின் விவரங்களுக்குள் செல்வதற்கு முன்பாக, கோப்பர்நிகஸின் கோட்பாடு என்னவென்பதைப் பார்ப்போம்.

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
படக்குறிப்பு,பூமியை மையமாக வைத்து நம்பப்பட்ட எகிப்திய பார்வை(இடது), டாலமி முன்வைத்த பூமியைச் சுற்றிவரும் கோள்கள் கோட்பாடு(நடுவில்), கோப்பர்நிகஸ் முன்வைத்த சூரியனைச் சுற்றி வரும் பூமியும் பிற கோள்களும் என்ற கோட்பாடு(வலது))

ஜோதிடம் சொல்லும் வக்கிர திசை தவறு எனக் கண்டறிந்த கோப்பர்நிகஸ்

கோப்பர்நிகஸ் காலகட்டத்தில் பூமி நிலையானது என்றும் அதைச் சுற்றி சூரியன், நிலா உட்பட ஏழு கோள்கள் சுற்றி வருவதாகவும் டாலமி முன்வைத்த கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், தமிழில் சொல்லக்கூடிய வக்கிர திசை என்பது அந்தக் கோட்பாட்டில் ஓர் இடராக துருத்திக்கொண்டே இருந்தது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவை ஏதும் அறிவியல்பூர்வ விளக்கத்தை முழுமையாகக் கொடுக்கவில்லை.

கோப்பர்நிகஸ் சூரியனைத்தான் பூமி உட்பட அனைத்துக் கோள்களும் சுற்றுகின்றன என்று உறுதி செய்தது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள நாம் ஜோதிடத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஜோதிடத்தில் வக்கிர திசை என ஒன்றுண்டு. அதாவது, அனைத்து கோள்களும் கடிகார முள் சுற்றும் திசையில் வலப்பக்கமாகச் சுற்றி வரும் நிலையில், நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் அதற்கு எதிர்ப்பக்கமாக இடப்பக்கத்தில் நகர்ந்து 12 ராசிகளைக் கடந்து வரும் எனச் சொல்லப்படுவதுண்டு.

“இதையே ஆங்கிலத்தில் ரெட்ரோகிரேட் Retrograde motion எனக் குறிப்பிடுவார்கள். பூமியை நிலையாகக் கொண்டு, மற்ற கோள்கள் அதைச் சுற்றி வருவதாக வைத்துக்கொண்டால், அதை அறிவியல்பூர்வமாக முழுமையாக விளக்க இயலவில்லை என்பதை கோப்பர்நிகஸ் கண்டறிந்தார்.” என்று விளக்கினார் ப்ரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டியை சேர்ந்த விஞ்ஞானி வெங்கடேசன்.

“ஆனால், சூரியனை மையத்தில் வைத்து பூமி உட்பட அனைத்து கோள்களுமே சூரியனைச் சுற்றி வருவதாகக் கற்பனை செய்து கணக்கிடும்போது, பூமி மற்றும் இதர கோள்களின் வானியல் செயல்பாடு குறித்த துல்லியமான புரிதல் கிடைப்பதை அவர் கண்டறிந்தார்,” என்கிறார் விஞ்ஞானி வெங்கடேசன்.

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
படக்குறிப்பு,போலாந்தில், நிகோலஸ் கோப்பர்நிகஸ் பிறந்த ஊரில் அவருக்காக நிறுவப்பட்ட சிலை

பூமியில் இருந்து பார்க்கும்போது, சிலவேளைகளில் செவ்வாய், வெள்ளி போன்ற கோள்கள் ஆண்டின் சில தருணங்களில் பூமிக்கு எதிர்த்திசையில் சுற்றுவதைப் போன்று தோற்றமளிக்கும். அதுவே வக்கிர திசை எனச் சொல்லப்படுகிறது. ஆனால், சூரியனில் இருந்து பார்க்கையில், பூமி தனது சுற்றுவட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும்போது சில இடங்களில் செவ்வாய் கோளையோ அல்லது வெள்ளி கோளையோ கடந்து செல்கிறது.

அப்படி அந்தக் கோள்களைத் தாண்டிச் செல்லும்போது, அவை, பூமியிலிருந்து பார்க்கும்போது பூமிக்கு எதிர்த்திசையில் அந்தக் கோள்கள் சுற்றுவதைப் போலத் தோற்றமளிக்கும். ஆனால், உண்மையில் பூமி அந்தக் கோள்களைத் தாண்டிச் செல்கிறது. அவ்வளவே!

ஆகையால், வக்கிர திசை என்பது பூமியிலிருந்து பார்க்கும்போது நிகழ்வதாகத் தெரிந்தாலும், உண்மையில் அப்படியொன்று நடப்பதே இல்லை என்று கூறுகிறார் விஞ்ஞானி வெங்கடேசன். இதையே கோப்பர்நிகஸ் கண்டறிந்து தனது தி ரெவல்யூஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் (The Revolution of the heavenly spheres) என்ற நூலில் எழுதியிருந்தார்.

இதை அறிவியல்பூர்வமாக விவரித்து எழுதிய கலிலியோ பைபிள் குறித்து இப்படியாக விவரித்திருந்தார். “பைபிள் சொர்க்கத்திற்கு எப்படிச் செல்வது என்று மட்டுமே விவரிக்கிறது, அந்த சொர்க்கங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்று அல்ல.” அதாவது வான்பொருட்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை பைபிள் விவரிக்கவில்லை என்று கூறினார்.

இதன்மூலம் நிகோலஸ் கோப்பர்நிகஸ், தனது கோட்பாட்டில் பூமி உட்பட அனைத்து கோள்களும் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவதாகக் கூறினார். ஆனால், இவற்றைக் கோட்பாட்டு ரீதியிலேயே அவர் கூறினார். வானியல் ஆராய்ச்சியின் மூலம் அவரது காலகட்டத்தில் அதை நிரூபிக்க முடியவில்லை. அதை சுமார் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு கலிலியோ என்ற ஒருவர் தனது வானியல் அவதானிப்புகளின் மூலம் நிரூபித்தார்.

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
படக்குறிப்பு,கலிலியோவின் வானியல் ஆராய்ச்சி குறித்து சித்தரிக்கும் ஓவியம்

கோப்பர்நிகஸைவிட கலிலியோ ஆபத்தானவராகத் தெரிந்தது ஏன்?

இங்கு ஒரு கேள்வி எழலாம். டாலமியின் பூமியை மையப்படுத்திய கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட கத்தோலிக்க ஆட்சி அதை மறுக்கும் கோப்பர்நிகஸின் கோட்பாட்டை ஆபத்தானதாகக் கருதியது.

ஆனால், அவரைப் பெரியளவில் தண்டிக்காத நிலையில், அதை ஆய்வு செய்து நிறுவிய கலிலியோ மீதுதான் வழக்கு பாய்ந்தது, அவர் தண்டிக்கப்பட்டார். ஆனால், கோப்பர்நிகஸ் மீது ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?

ஏனெனில், கோப்பர்நிகஸ் ஒரு கருதுகோளை முன்வைத்தார். அதைச் சான்றுகளுடன் விளக்கினார். ஆனால், அது உண்மையென உறுதியாக ஆதாரங்களுடன் நிறுவப்படவில்லை. பின்னாளில் வந்த கலிலியோதான் அதைத் தனது ஆய்வின் மூலம் உண்மையென நிறுவினார்.

அதனால்தான், கோப்பர்நிகஸின் புத்தகத்திற்குத் தடை விதித்ததோடு கத்தோலிக்க திருச்சபை நிறுத்திக்கொண்டது. இருப்பினும் 1620ஆம் ஆண்டுக்குப் பிறகு, திருச்சபையின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட அந்தப் புத்தகத்தின் பதிப்பு மீண்டும் அனுமதிக்கப்பட்டது.

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
படக்குறிப்பு,கடவுளின் குழந்தையாகக் கருதப்படும் இயேசு பிறந்து, வாழ்ந்த பூமிதான் பேரண்டத்தின் மையம் என்ற நம்பிக்கை அவசியமானது என கத்தோலிக்க திருச்சபை கருதியது.

கலிலியோவின் கண்டுபிடிப்பை திருச்சபை ஆபத்தாகப் பார்த்தது ஏன்?

கலிலியோவின் கருத்து ஆபத்தானதாக அவரது காலகட்டத்தில் ஏன் பார்க்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள நாம் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க தத்துவவாதி அரிஸ்டாட்டில் காலத்திற்குச் செல்ல வேண்டும்.

அரிஸ்டாட்டில், இந்தப் பேரண்டத்தில் இரண்டுவிதமான பொருட்கள் இருப்பதாகக் கூறினார். அதில் ஒன்று வான்பொருட்கள் (Celestial). மற்றொன்று நிலம்சார் பொருட்கள் (Terrestrial). வான்பொருட்கள் என்பது சொர்க்கங்களைக் குறிக்கும். நிலம்சார் பொருட்கள் என்பது பூமியைக் குறிக்கும்.

இதன்மூலம், வான்பொருட்களான கோள்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் பூமியில் இருந்து வேறுபட்டவை எனக் கருதப்பட்டது. இவை இரண்டுக்கும் தனித்தனி நகர்வு செயல்முறைகள் இருந்ததாக நம்பப்பட்டது. இது காலப்போக்கில், பூமியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கோட்பாட்டிற்கு வழிவகுத்தது.

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
படக்குறிப்பு,பூமி மையத்தில் நிலையாக இருப்பதாகவும் அதைச் சுற்றியே சூரியனும் பிற கோள்களும் சுற்றி வருவதாகவும் டாலமி முன்வைத்த கருதுகோளின் விளக்கப்படம்.

இந்தக் கோட்பாட்டை கிறிஸ்தவ மதமும் தனதாக்கிக் கொண்டது. ஏனெனில், அதில் கடவுளின் குழந்தையான இயேசு ஒரு மனிதராக பூமியில் பிறந்து, வாழ்ந்தார் என நம்பப்படுகிறது. இத்தகைய முக்கியமான ஒருவர் வாழ்ந்த பூமிதான் பேரண்டத்தின் மையமாக இருக்க வேண்டும் என்பது தங்கள் மத நம்பிக்கைக்கு அவசியமானது என்று கத்தோலிக்க திருச்சபை கருதியது.

அப்போதைய மத அறிஞர்களைப் பொறுத்தவரை, பேரண்டம் என்பது இந்த சூரிய குடும்பம் மட்டுமே என்பதும் அவர்களுக்கு இந்தப் பேரண்டம் கோடிக்கணக்கான நட்சத்திரத் திரள்களை, சூரிய குடும்பங்களை உள்ளடக்கியது என்பதும் தெரியாது என்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

கலிலியோ, பூமியே மையம் என்ற கோட்பாட்டைப் பொய்யென நிரூபித்தது, தங்கள் மத நம்பிக்கையையே கேள்விக்கு உள்ளாக்குவதாக அப்போதைய திருச்சபை ஆட்சி நம்பியது. ஆகையால்தான், அவரது கண்டுபிடிப்பை ஆபத்தானதாக கத்தோலிக்க கிறிஸ்தவ ஆட்சி கருதியது.

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
படக்குறிப்பு,ஆரம்பத்தில் கோப்பர்நிகஸின் கூற்றை ஆதரிப்பதற்காக கலிலியோ தனது வானியல் ஆய்வை மேற்கொள்ளவில்லை.

கலிலியோவின் கண்டுபிடிப்பு ஏற்படுத்திய அதிர்வலைகள்

கலிலியோ 1609-ஆம் ஆண்டில் இருந்து தனது புதிதாக உருவாக்கிய தொலைநோக்கியின் வாயிலாக வான்பொருட்களை ஆய்வு செய்யத் தொடங்கினார். அப்போது அவரது அவதானிப்புகள் கோப்பர்நிகஸின் கோட்பாட்டுடன் ஒத்துப் போவதைக் கண்டறிந்தார்.

அவரது ஆய்வின்போது தமிழில் வக்கிர திசை எனச் சொல்லப்படும் ஆண்டின் ஒரு காலகட்டத்தில் கோள்கள் பின்னோக்கிச் செல்லும் செயல்முறையை அவரும் கவனித்தார். இருப்பினும், அதை அவரால் டாலமியின் பூமியைச் சுற்றி மற்ற வான்பொருட்கள் சுற்றுவதாகச் சொல்லப்படும் கோட்பாட்டிற்குள் அடக்க முடியவில்லை.

“அப்போதுதான் கோப்பர்நிகஸ் கூறியதுபோல் சூரியனை மையமாக வைத்து தனது வானியல் அவதானிப்புகளை அவர் பகுப்பாய்வு செய்து பார்த்தார். அதன்மூலம் அவரால் துல்லியமாக அவை பின்னோக்கிச் செல்வதைப் போல் தோன்றுவது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது,” என்று விளக்கினார் விஞ்ஞானி வெங்கடேசன்.

மேலும், கலிலியோதான் எந்தவொரு அறிவியல் கோட்பாடும் செய்முறையில் நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தாக்கத்தையும் தொடக்கி வைத்ததாகக் கூறுகிறார் விஞ்ஞானி வெங்கடேசன்.

இதுகுறித்த தனது டயலாக் கன்சர்னிங் தி டூ சீஃப் வேர்ல்டு சிஸ்டம்ஸ் (Dialogue concerning the two chief world systems) என்ற நூலை கலிலியோ 1632ஆம் ஆண்டு வெளியிட்டார். இது திருச்சபை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இங்கு மற்றொரு விஷயத்தையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். 1616ஆம் ஆண்டில் கோப்பர்நிகஸின் புத்தகம் குறித்த வழக்கிலேயே இதுகுறித்துப் பேசவோ ஆதரிக்கவோ கூடாது என கலிலியோ எச்சரிக்கப்பட்டிருந்தார்.

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
படக்குறிப்பு,தனது புத்தகத்தில் கோப்பர்நிகஸ் முன்வைத்த ‘பூமி இந்தப் பேரண்டத்தின் மையம் இல்லை’ என்ற கோட்பாட்டை புனித அலுவலகத்தின் ஆலோசகர்கள் அபத்தமானது என்றனர்.

கோப்பர்நிகஸ் புத்தகத்தின் மீது போடப்பட்ட வழக்கு

மத நிந்தனை எனக் குற்றம்சாட்டி கலிலியோ மீது போடப்பட்ட வழக்குக்கு முன்னதாக கோப்பர்நிகஸின் கோட்பாடு குறித்த புத்தகம் மீதான வழக்கு ஒன்று நடத்தப்பட்டது.

அதாவது கோப்பர்நிகஸின் புத்தகம் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு முரணின்றி இருக்கிறதா என்பதை விசாரித்து உறுதி செய்வதே அந்த வழக்கின் நோக்கம்.

அது கிறிஸ்தவ நம்பிக்கைக்கு முரணானது என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமாக தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதிகாரபூர்வமாக தீர்ப்பு வழங்கப்பட்டால்தான் அதன்மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

புனித அலுவலகத்தின் ஆலோசகர்கள் கோப்பர்நிகஸ் கோட்பாடு குறித்து 1616ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி அறிக்கை வழங்கியதாக கிரிகோரி டபுள்யு, டாவ்ஸ் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கோப்பர்நிகஸ் முன்வைத்த இரண்டு விஷயங்களை புனித அலுவலகத்தின் ஆலோசகர்கள் கடுமையாகக் கண்டித்தனர்.

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
படக்குறிப்பு,கலிலியோ 1632ஆம் ஆண்டு எழுதிய புத்தகத்தை விசாரிக்க குழு நியமித்ததோடு, அதை வழக்காக எடுத்து விசாரிக்குமாறு வலியுறுத்திய போப் எட்டாவது அர்பன்.

முதலாவது, சூரியன் நிலையானது, அதுதான் இந்தப் பேரண்டத்தின் மையத்தில் இருக்கிறது. ஆலோசகர்கள் இதை ‘முட்டாள்தனமானது, அதிகாரபூர்வமாக மத நிந்தனைக் கருத்து’ என்று கூறினர்.

இரண்டாவது. பூமி இந்தப் பேரண்டத்தின் மையத்தில் இல்லை, அது நிலையானதும் இல்லை. அது தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. புனித அலுவலகத்தின் ஆலோசகர்கள் ‘இதை அபத்தமானது, கடும் கண்டனத்திற்கு உரியது’ எனவும் கூறினர்.

இந்த அறிக்கையின் அடிப்படையில், அதே ஆண்டில் மார்ச் 6ஆம் தேதியன்று வேடிகன் திருச்சபை இந்த இரண்டு கோட்பாடுகளை உள்ளடக்கிய வகையில் கோபப்ர்நிகஸின் புத்தகத்தை அச்சிடவும் பயன்படுத்தவும் தடை விதித்தது. இந்தக் கோட்பாடுகளைத் தவிர்த்துவிட்டு அல்லது இந்தக் கோட்பாடு உண்மையல்ல என்று குறிப்பிட்டு புத்தகத்தைப் பயன்படுத்தலாம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

அதேவேளையில் இந்த விவகாரம் குறித்து கோர்ப்பநிகஸின் கோட்பாட்டை ஆதரிக்கும் வகையிலான வானியல் அவதானிப்புகளை மேற்கொண்டிருந்த கலிலியோவுக்கும் இயேசு இறையியலாளரான ராபர்ட் கார்டினல் பெல்லர்மைன் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் கோபர்நிகஸின் கோட்பாட்டு அடிப்படையில் வியாழன் கோள் குறித்த சில அவதானிப்புகளை கலிலியோ மேற்கொண்டிருந்தார். ஆகையால் அத்தகைய செயல்பாடுகளை தொடர்ந்து கொண்டு செல்லக்கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டது.

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
படக்குறிப்பு,வேடிகனில் 1633ஆம் ஆண்டு தனது வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னதாக கலிலியோ மற்றும் புனித அலுவலகத்தின் அதிகாரிகள் சபையில் இருப்பதை விவரிக்கும் ஓவியம்.

கலிலியோ மீது போடப்பட்ட வழக்கு

இதற்குப் பிறகு 1633ஆம் ஆண்டு கலிலியோ மீது ஒரு வழக்கு போடப்படுகிறது. அந்த வழக்கு, கோப்பர்நிகஸின் கோட்பாடு மீதான வழக்கில் அவருக்கு விடுக்கப்பட்ட உத்தரவைக் கடைபிடித்தாரா இல்லையா என்பதைப் பற்றிய வழக்கு. கலிலியோ மீது இந்த வழக்கு போடப்பட, 1632இல் அவர் வெளியிட்ட மேலே குறிப்பிடப்பட்ட புத்தகம்தான் காரணம்.

கலிலியோவுக்கு 1616ஆம் ஆண்டில் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்குப் பிறகும், 1632இல் அவர் கோப்பர்நிக்கஸின் கோட்பாட்டை வலுவாக ஆதரிக்கும் தனது வானியல் அவதானிப்புகள் அடங்கிய நூலை வெளியிட்டார்.

இந்த நூலின் உள்ளடக்கம் பல அதிர்வலைகளை உண்டாக்குகிறது. அப்போதைய போப் எட்டாவது அர்பன் அதை மேற்கொண்டு அச்சிடவும் விற்பனை செய்யவும் தடை விதித்ததோடு, அதை முழுமையாக விசாரிக்க ஒரு குழுவையும் நியமித்தார்.

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
படக்குறிப்பு,கலிலியோ வழக்கு விசாரணைக்காக 1633ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி ரோம் வந்தடைந்தார்.

போப் எட்டாவது அர்பன் நியமித்த அந்தக் குழு 1632 செப்டம்பரில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் போப் இந்த வழக்கை விசாரிக்குமாறு வலியுறுத்தினார். கலிலியோ அந்த வழக்கு விசாரணைக்காக 1633ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி ரோம் வந்தடைந்தார்.

இந்த வழக்கின் சாராம்சத்தை ஒரு வரியில் கூறிவிடலாம். இயேசு இறையியலாளரான ராபர்ட் கார்டினல் பெல்லர்மைன் 1616ஆம் ஆண்டு கலிலியோவுக்கு அளித்த உத்தரவை அவர் பின்பற்றினாரா இல்லையா என்பதுதான்.

இந்தச் சம்பவகளுக்கு நடுவில் இறையியலாளர் பெல்லர்மைன் இறந்துவிட்டதால், அவர் தனது தடை உத்தரவில் என்ன குறிப்பிட்டார் என்பதில் தெளிவின்மை நிலவியது.

ஆனால், புனித அலுவலகத்தில் இருந்த ஆவணத்தின் அடிப்படையில் கோப்பர்நிக்கஸின் கோட்பாட்டை ஆதரிப்பதில் இருந்து தடை செய்யும் உத்தரவு பெல்லர்மைன் வாயிலாக கலிலியோவுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது உறுதியானது. அந்த உத்தரவையும் மீறி கலிலியோ அந்தக் கோட்பாட்டை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டாரா என்ற கேள்வி விசாரணையில் எழுப்பப்பட்டது.

கலிலியோ அந்தக் குற்றச்சாட்டை மறுத்தார். தனது புத்தகம் பல்வேறு கோணங்களிலான கோட்பாடுகளைப் பகுபாய்வு செய்கிறது என்றும் அந்தப் புத்தகம் போப் ஆதரிக்கும் ஒரு வாதத்துடன்தான் நிறைவடைகிறது என்றும் அவர் வாதிட்டார்.

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
படக்குறிப்பு,வழக்கு விசாரணையில், கலிலியோவின் வாதங்கள் நேர்மையற்றவை என்று முடிவானது. அதன் விளைவாக, அவர் செய்தது மத நிந்தனை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

கலிலியோ மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?

கோப்பர்நிகஸின் கோட்பாடுதான் வானியல் செயல்பாடுகளை விளக்குவதற்கான ஒரே வழி எனக் கூறுவது கடவுளின் சக்தியைக் குறைத்து மதிப்பிடுவதாகும் என்று விசாரணையின்போது வாதிடப்பட்டதாக கிரிகோரி டபுள்யு.டாவ்ஸ் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

வழக்கு விசாரணையில், கலிலியோவின் வாதங்கள் நேர்மையற்றவை என்று முடிவானது. அதன் விளைவாக, அவரது செயல் – அதாவது கோப்பர்நிகஸின் கோட்பாட்டை ஆதரிக்கும் தனது அவதானிப்புகள் அடக்கிய புத்தகத்தை எழுதியது – மத நிந்தனை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அவரது காலகட்டத்தில், ஒரு பார்வையை தேவாலயம் புனித நூலுக்கு முரண்பட்டதாகக் கருதினால் அது தவறானதாகவும் உண்மையற்றதாகவும் கருதப்பட்ட காலம். ஒரு கோட்பாடு புனித நூலுடன் முரண்பட்டால் அது பொய்யாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட காலகட்டம்.

ஆகையால், கலிலியோவின் செயல் மத நிந்தனை குற்றமாகக் கருதப்பட்டது. அவர் காலவரையற்ற சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று திருச்சபை தீர்ப்பளித்தது. மேலும், மத நிந்தனைக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதைத் தடுக்க, அவரது மேற்கூறிய அவதானிப்புகள் பொய்யானவை எனக் கூறி அவற்றைத் தூற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
படக்குறிப்பு,கலிலியோ மீதான மத நிந்தனை வழக்கு விசாரணையை விவரிக்கும் விளக்கப்படம்

இந்தத் தருணம் குறித்து நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் வில்லியம் டிரேப்பர் தனது ‘அறிவியலுக்கும் மதத்திற்குமான முரண்பாடு குறித்த வரலாறு’ என்ற நூலில் இப்படியாக விவரித்துள்ளார்…

“ஒரு மரியாதைக்குரிய, மிகவும் புகழ்பெற்ற மனிதர், அந்த வயதில் மரண அச்சுறுத்தலால் தனது அவதானிப்புகளை மறுக்குமாறும் நிந்திக்குமாறும் நிர்பந்திக்கப்பட்டார். அவருக்கும் அவரைத் தண்டித்த நீதிபதிகளுக்கும் உண்மை எனத் தெரிந்த கூற்றை மறுக்குமாறு அவர் கட்டாயப்படுத்தப்படுகிறார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.”

ஒரு தியாகியாகும் எண்ணம் கொஞ்சமும் இல்லாத கலிலியோ, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மண்டியிட்டு புனித தேவாலயத்திடம் தனது அவதானிப்புகளையே நிந்தித்து, அதுகுறித்து மீண்டும் எதிர்காலத்தில் பேசாமல் இருப்பதாக கலிலியோ உறுதிபூண வேண்டியிருந்ததாக அவர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

மேலும், இத்தகைய மத நிந்தனை செயல்களில் ஈடுபடும் யாரையேனும் தான் அறிய நேர்ந்தால், அவரைப் பற்றி புனித அலுவலகத்திடம் தெரிவிப்பதாகவும் அவர் கூற வேண்டியிருந்தது எனவும் தனது நூலில் கலிலியோவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்துக் குறிப்பிடுகிறார் ஜான் வில்லியம் டிரேப்பர். இதைத்தொடர்ந்து கலிலியோ தனது வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் வாழ்ந்தார்.

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
படக்குறிப்பு,ஆங்கில கவிஞர் ஜான் மில்டன் கலிலியோ சிறையில் இருந்தபோது அவரைச் சந்தித்ததை விவரிக்கும் விளக்கப்படம்

கலிலியோ வழக்கு: மதத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையிலான சண்டையா?

கோப்பர்நிக்கஸின் கோட்பாட்டைப் பொறுத்தவரை, திருச்சபை அதிகாரிகள் புனித நூலின் விளக்கம் குறித்த விஷயத்தில் தவறான முடிவுக்கு வந்திருக்கலாம் என்று 1922ஆம் ஆண்டில் போப் இரண்டாம் ஜான் பால் கூறினார்.

ஆனால், “எப்படியிருப்பினும், அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து, தீர்ப்பையும் உத்தரவையும் வழங்கியுள்ளனர். பைபிளின் அதிகாரம் தொடர்பான விஷயத்திலும் அதை விளக்குவது குறித்த திருச்சபையின் அதிகாரம் தொடர்பான விஷயத்திலும், தமது உத்தரவைப் பின்பற்றுவதில் முழு ஒழுக்கத்தை எதிர்பார்க்க திருச்சபைக்கு அனைத்து அதிகாரமும் உள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டார்.

கலிலியோவின் வழக்கில், நாத்திகத்திற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை, அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையே எழுந்த ஒரு முரண்பாடுதான் இந்த வழக்கு என்றே வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்னதற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
படக்குறிப்பு,கலிலியோவை எதிர்த்தவர்களைப் பொறுத்தவரை, பைபிளை மறுவிளக்கம் செய்யக்கூடாது.

ஏனெனில், தனது வழக்கு விசாரணையின்போது கலிலியோவேகூட, புனித நூலின் விளக்கத்தில் இருந்து இது எந்தவிதத்திலும் முரண்படவில்லை என்றே அவர் குறிப்பிடுகிறார். கலிலியோ மற்றும் அவரது ஆதரவாளர்கள், அவரை எதிர்ப்பவர்களிடம் இருந்து வேறுபடுவது ஒரு விஷயத்தில்தான்.

கலிலியோவும் அவரது ஆதரவாளர்களும், அப்போது கோப்பர்நிகஸின் கோட்பாடு ஆதாரங்கள் அடிப்படையில் வலுவானதாக இருப்பதாகக் கருதினர். அதேவேளையில் அது புனித நூல் மற்றும் கத்தோலிக்க மரபுடன் ஒத்துப் போவதாகவும் அவர்கள் நம்பினார்கள். ஏனெனில், கலிலியோவை பொறுத்தவரை புனித நூல் வாழ்வுக்கான அறத்தைப் போதிக்கும் ஒன்று, அது அறிவியல்ரீதியிலானது அல்ல.

ஆனால் அவரை எதிர்த்தவர்கள் அந்தக் கருத்துடன் உடன்படவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, பைபிளை மறுவிளக்கம் செய்யக்கூடாது. அதோடு, புனிதநூலுக்கான விளக்கம் என்பது திருச்சபை அல்லது திருச்சபையின் மதகுருமார்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

https://www.bbc.com/tamil/articles/cg3xnzpy0djo

About editor 3118 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply