இன்று எனது பத்தியில் இடம்பெறும் விடயங்கள் ‘ஒரிஜினல்’ என்னுடையவை அல்ல. சமூக ஊடகம் ஒன்றில் அன்பர் ஒருவர் தொகுத்து தந்த விடயங்களை நான் ‘சுட்டு’ வாசகர்களுக்குத் தருகிறேன். அதற்கு முன்னர் மூன்று அம்சங்களை சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஒன்று – இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களின் மத அடையாளங்களைப் பேரினவாதம் ஆக்கிரமித்து சூறையாடுவது குறித்து சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டி இருக்கின்றது.
அடுத்தது – திருக்கோணேஸ்வரர் ஆலயத்தைப் பெருங்கோயிலாக புனரமைத்து தர இந்தியா கொள்கைய அளவில் சம்மதம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மூன்றாவது – திருகோணமலையில் தமிழர்களின் இருப்பைத் தக்க வைப்பதற்கு அவர்களின் மக்கள் பிரதிநிதித்துவம் செயலூக்கம் உள்ளதாக அமைய வேண்டும் என்ற வற்புறுத்தல் வலுத்து வருகின்றது.
இந்த மூன்றின் பின்புலத்தில் இனி அந்த ஆர்வலர் தந்த கருத்துக்களை வரிசைப்படுத்துகிறேன்.:-
– திருகோணமலையில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் திணைக்களக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.
– ஸ்ரீமலை நீலியம்மன் சைவக் கோவில் முழுமையாக சிதைக்கப்பட்டு, அங்கு ‘பாசன பப்பாத ராஜமஹா’ என்கின்ற விகாரையை உருவாக்கி இருக்கின்றார்கள்.
– குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் அழிக்கப்பட்டு, அதே இடத்தில “லங்கா பட்டுன சமுத்திரகிரி” என்கிற பெயரில் விகாரையை நிர்மாணித்து இருக்கின்றார்கள்.
– அரிசிமலையில் தமிழ் நிலங்களில் ‘ஆசிரி கந்த புராண ராஜமஹா விகாரை’ (Asiri Kanda Purana Rajamaha Viharaya) கட்டப்பட்டு இருக்கின்றது.
– தென்னமரவடி கந்தசாமி மலை வழிபாடு தடை செய்யப்பட்டு அங்கு பௌத்த கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
– 64 ஆம் கட்டை (பச்சனூர் மலை) விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டுப்பட்டு வருகின்றது.
– பெரியகுளம் பகுதி தமிழர் நிலங்களில் பொரலுகந்த ராஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.
– ராஜவந்தான் மலை கோவில் விக்கிரகங்கள் தோண்டியெறிப்பட்டு அங்கு விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது.
– மூதூர் சூடைக்குடா மத்தளம்மலை சூழலில் பௌத்த தொல்லியல் சின்னங்கள் இருக்கின்றன எனக் கூறுகின்றார்கள்
– இந்த வகையில் திருகோணமலையில் 74 இற்கு மேற்பட்ட பிரதேசங்களை பௌத்த மதத்திற்குரிய தொல்லியல் இடங்களாக அடையப்படுத்தி இருக்கிறார்கள்.
– இது போதாதென்று திருக்கோணேஸ்வரம் கோவில் சூழல் முழுமையாக சிங்களமயப்படுத்தப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, இந்த கோவில் கோகண்ண விகாரை மீதே கட்டப்பட்டுள்ளது என உரிமை கோருகின்றார்கள். இங்கு வியாபாரம் செய்வதற்காக இரத்தினபுரியிலிருந்து சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கின்றார்கள்.
– திரியாய் மற்றும் தென்னமரவடி பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல் காணிகளில் தொல்லியல் எச்சங்கள் இருக்கின்றன என்க் கூறி விவசாயம் தடை செய்யப்பட்டு இருக்கின்றது.
– திரியாய் கிராமத்தில் மட்டும் 1,000 ஏக்கர் வயலில் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் 2,712 ஏக்கர் காணியை அரச திணைக்களங்கள் உரிமை கோரி இருக்கின்றன.
– இதில் மூன்று புதிய பௌத்த விகாரைகளும் ஒரு பழைய பௌத்த விகாரையும் அமைக்கப்பட்டு அவற்றுக்கு 809 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.
– அதே போல கங்குவேலி கிராமத்தில் 500 ஏக்கர் வயல் நிலங்கள் சிங்களவரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. இங்கு கங்குவேலி குளத்தை சூழ சிங்களவர்கள் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
– குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் மட்டும் 2,500 ஏக்கர் நிலப்பகுதி பானமுர திலகவன்ச என்கிற பிக்குவிற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது,
– அதே போல குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் 11 இடங்களில் 340.33 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் 7 பௌத்த அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
– இங்கு 30 க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளும் வணக்கஸ்தலங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இந்த பகுதியில் 23 இடங்களில் பௌத்த கட்டுமானங்கள் முழுமை பெற்று இருக்கின்றன.
– மேற்படி பானமுர திலகவன்ச என்கிற பிக்கு அரிசிமலை என்கிற பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கின்றார்.
– இங்கு 500 ஏக்கர் காணி அரசாங்கத்தால் பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது. அதே போன்று அரிசிமலையுள்ள 500 ஏக்கர் காட்டு பகுதியும் பௌத்த தொல்லியலுக்குரிய இடமாகப் பிரகடனம் செய்யப்பட்டு இருக்கின்றது.
– தென்னைமரவாடி, திரியாய், குரும்பைசிட்டு, புல்மோட்டை போன்ற இடங்களில் உள்ள 11 இடங்களில் தமிழ்ப் பேசும் மக்களுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான நிலங்கள் அரச நிலங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
– தென்னைமரவாடி தமிழ் கிராமங்களில் மாலனூர் (12 ஆம் கட்டை ) மற்றும் ஏறமாடு (10 ஆம் கட்டை ) இரண்டு சிங்கள குடியேற்ற திட்டங்கள் உருவாக்கபபட்டு இருக்கின்றன.
– இவ்வாறு கன்னியா, குச்சவெளி, கும்புறுப்பிட்டி, சாம்பல்தீவு, சம்பூர் மத்தளமலை, கல்லடி மலைநீலியம்மன், இலங்கைத்துறை முகத்துவாரம் என பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புகளால் திருகோணமலை மாவட்டம் சீரழிந்து வருகின்றது
– மேற்படி அவலங்களை அரசியல் ரீதியாக வலுமையாக எதிர்க்கொள்ள கூடிய தமிழ் ஆளுமைகளை அரசியல் மற்றும் சிவில் பொதுவெளியில் அடையாளம் காணாமல் திருகோணமலையை யாராலும் காப்பாற்ற முடியாது.
– இதுவே அந்த அன்பரின் கருத்து. அதனை நான் அப்படியே ஆமோதிக்கின்றேன்.
Leave a Reply
You must be logged in to post a comment.