Will the Plantation Community Finally See the Light at the End of the Tunnel?

சம்பந்தன் பதவி விலகுவதே மக்களுக்கான அறம்

புருஜோத்தமன் தங்கமயில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி இன்னொருவருக்கு இடமளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்து ஊடகக் கவனம் பெற்றிருக்கின்றது. சம்பந்தன் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பினால் உடலளவில் பெரிதும் தளர்ந்துவிட்டார்.

 அவரினால் வெளியிடங்களுக்குப் பயணிக்க முடியவில்லை. பாராளுமன்றத்துக்கான வருகை என்பது கிட்டத்தட்ட முடங்கிவிட்டது. அவர் என்ன பேசுகிறார் என்பதை இன்னொருவர் கேட்டுச் சொல்லும் நிலை இருக்கிறது.

 அப்படியான நிலையில், பௌத்த சிங்கள அடிப்படைவாதத் தரப்புக்களின் தொடர் ஆக்கிரமிப்புக்களினால் அல்லாடும் திருகோணமலை மாவட்டத்திற்குக் களத்தில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினரின் தேவை தவிர்க்க முடியாதது.

 மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் தொடங்கி களத்தில் மக்கள் பிரதிநிதியாக சம்பந்தன் பங்குபற்ற முடியாத போது, அந்த இடம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெரும் சாதகமான நிலையை ஏற்படுத்துகின்றது. அதனால்தான், திருகோணமலை மக்கள், சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கடந்த சில வருடங்களாக இருக்கிறார்கள்.

 கடந்த வருடம் தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டமொன்றின் போது, திருகோணமலை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று, சம்பந்தனை பதவி விலகுமாறு கோரிக்கையை வைத்தார்கள்.

 இதனையடுத்து, சம்பந்தனை பவ்வியமாக பேசி பதவி விலகுமாறு கோருவதற்கான குழுவை, தமிழரசுக் கட்சி மாவை சேனாதிராஜா தலைமையில் அமைத்திருந்தது. அந்தக் குழு, சம்பந்தனைச் சந்தித்துப் பேசியும் இருந்தது. அப்போது, அந்தக் குழுவிடம், “…நான் உடல் தளர்ந்திருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டுதான் திருகோணமலை மக்கள் தெரிவு செய்தார்கள். அப்படியான நிலையில் நான் ஏன் பதவி விலக வேண்டும்…” என்று சம்பந்தன் பதிலளித்திருக்கிறார்.

 அத்தோடு அந்த விடயத்தைத் தமிழரசுக் கட்சி கைவிட்டது. ஆனால், திருகோணமலை மாவட்ட மக்களோ, தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளையினரோ சம்பந்தனின் நிலைப்பாட்டை விசனத்துடன், நோக்கி வந்தனர். ஏனெனில், திருகோணமலையில் திட்டமிட்ட ரீதியில் பௌத்த அடையாளங்கள் திணிப்பு மற்றும் காணி அபகரிப்பு என்பன பெருவாரியாக இடம்பெற்று வருகின்றது. இதனைத் தடுப்பதற்காக தங்களின் பிரதிநிதி களத்தில் இருக்க வேண்டும் என்பதே மக்களின் ஒற்றைக் கோரிக்கை. ஆனால், சம்பந்தன் அதுபற்றி கவலையின்றி பதவியைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

 கடந்த வாரம் தொலைக்காட்சி விவாதமொன்றில் நெறியாளர், பாராளுமன்றத்துக்கு வருகை தரமுடியாமல் இருக்கும் ஒருவருக்காக மக்களின் இலட்சக்கணக்கான பணம் மாதாந்தம் வீணடிக்கப்படுகின்றது. இதனை, ஊழலாகக் கருத முடியாதா? என்ற தொனியிலான கேள்வியொன்றை சம்பந்தன் தொடர்பில் எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கும் போது சுமந்திரன், சம்பந்தனின் பதவி விலகல் குறித்துப் பேசி கேள்வியை மடை மாற்றியிருக்கிறார்.

 ஏனெனில், கேள்வி, மக்களின் இலட்சக்கணக்கான வரிப்பணத்தைப் பாராளுமன்றத்துக்கே வராமல் இருக்கும் ஒருவருக்காக செலவழிப்பது என்பது ஒருவகையில் ஊழலைப் போன்றதுதானே என்ற கேள்வியாக இருந்தது. அப்படியான நிலையில், சம்பந்தனை ஊழல்வாதியாகக் கேள்வி எழுப்பும் விடயத்தை மடைமாற்றுவதற்காக சுமந்திரன், சம்பந்தன் பதவி விலகுவது குறித்துப் பேசியிருக்கிறார்.

 சம்பந்தனின் பதவி விலகல் குறித்த சுமந்திரனின் பேட்டி வெளியாகியதும், தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் சுமந்திரன் எதிர்த்தரப்பினர், சம்பந்தனுக்கு ஆதரவாக அறிக்கைகளை விட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், திருகோணமலை மக்களிடம் இருந்தோ, தமிழரசுக் கட்சியின் திருகோணமலைக் கிளையிடம் இருந்தோ எந்த எதிர்ப்பும் இதுவரை சுமந்திரனுக்கு எதிராக எழவில்லை.

 குறித்த தொலைக்காட்சி பேட்டியில் சுமந்திரன், சம்பந்தன் பதவி விலகத் தேவையில்லை என்று பதிலளித்திருப்பாரானால், எதிர்வினைகளை வேறு மாதிரியாக இருந்திருக்கும். அப்போது, திருகோணமலை ஆக்கிரமிப்புக்குள்ளாகி வரும் நிலையில் களத்தில் செயற்படுவதற்குப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேவை. அதனை உணர்ந்து கொள்ளாமல் சம்பந்தனைத் தொடர்ந்தும் காப்பாற்றும் வேலைகளில் சுமந்திரன் ஈடுபட்டு வருகிறார்.

 இது, திருகோணமலை மக்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் இழைக்கும் துரோகம் எனும் அறிக்கைகள் வெளியாகியிருக்கும். அப்போதும் சுமந்திரன் பேசுபொருளாகியிருப்பார்.

 வயது மூப்பு உபாதைகளினால் அல்லாடுவதனால் கடந்த பொதுத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடும் எண்ணத்தில் சம்பந்தன் இருக்கவில்லை. அதற்காகவே அவர் திருகோணமலையில் குகதாசனை அடுத்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் முன்னிறுத்தி கட்சிக் கிளையைக் கையளித்திருந்தார். ஆனால், தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பிலான கலந்துரையாடல்களில் சம்பந்தனை எப்படியாவது நேரடி வேட்பாளராக நிறுத்திவிட வேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறியாக இருந்தார்.

 வயது மூப்பினை முன்னிறுத்தி சம்பந்தன் போட்டியில் இருந்து விலகிவிட்டால், தனது வயதைக் காரணங்காட்டி யாழ்ப்பாணத்தில் தன்னாலும் போட்டியிட முடியாமல் போய்விடும் என்பது அவரின் பயம். அத்தோடு, சம்பந்தன் நேரடியாகப் போட்டியிடாவிட்டாலும் கிடைக்கும் தேசியப் பட்டியல் ஊடாக அவர் பாராளுமன்ற உறுப்பினராகி விடுவார்.

 அப்படியான நிலையில், தேசியப் பட்டியல் பதவியும் தனக்குக் கிடைக்காது. அதனால், சம்பந்தனை போட்டியிட வைப்பதுதான், தான் மீண்டும் போட்டியிடுவதற்கான ஒரே வழி என்று மாவை நம்பினார். அதனால்தான், போட்டியிட விரும்பாத சம்பந்தனை வற்புறுத்தி திருகோணமலை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட வைத்தார்கள்.

 அப்போது, சம்பந்தன் இரண்டு நிபந்தனைகளை முன்வைத்தே தேர்தலில் போட்டியிடுவதற்கு இணங்கினார். அதில் முதலாவது, தான் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதாக இருந்தால் கட்சிக்குக் கிடைக்கும் தேசியப்பட்டியலில் திருகோணமலைக்கு முதலாவதாக ஒதுக்க வேண்டும்.

 அதுவும், குகதாசனுக்கு அது வழங்கப்பட வேண்டும். இரண்டாவது நிபந்தனை, தான் ஒரு வருடத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிவிடுவேன். இவற்றுக்கு இணங்கினால் தான் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுகிறேன் என்று சம்பந்தன் கூறியிருந்தார். அந்தத் தேர்தலில் சம்பந்தன் போட்டியிட்டு வெற்றிபெற்று மூன்று ஆண்டுகள் தாண்டி விட்டது. ஆனால், அவர் இப்போதும் பதவியில் இருக்கிறார்.

 முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த 14 ஆண்டுகளில் சம்பந்தன், தமிழ்த் தேசிய அரசியலில் அசைக்க முடியாத தலைவர். வயது மூப்பின் அவஸ்தைகளினால் அவர் அல்லாடத் தொடங்கிய பின்னரே, கூட்டமைப்பு பிளவு கண்டது. இன்றும் தமிழ்த் தேசிய அரசியலின் பெருந்தலைவராக சம்பந்தனையே தென் இலங்கையும் சர்வதேசமும் நோக்குகின்றது.

 அப்படியான நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பதவி இருந்தால்தான் தனக்கு மரியாதை என்று நினைப்பதெல்லாம் இவ்வளவு அரசியல் அனுபவமுள்ள சம்பந்தனுக்கு நல்லதல்ல. அவரின் சுயநல சிந்தனை, திருகோணமலை போன்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ்ப் பாரம்பரிய நிலத்தைத் தொடர்ச்சியாகக் காவு கொடுப்பதற்குக் காரணமாக மாறுகின்றது.

 தமிழரசுக் கட்சி இன்று களத்தில் செயற்படும் நிலையை மெல்ல மெல்ல இழந்து வருகின்றது. கட்சிக்குள் சுமந்திரன், சிறீதரன் போன்ற ஓரிருவர் மாத்திரமே செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கட்சியை தோல்வியின் பக்கத்தில் நகர்த்தினாலும் தலைமைப் பதவியை விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லாதவராக மாவை சேனாதிராஜா இருக்கிறார். அவர், கட்சியின் செயல் தலைவராக தனது மகனை நியமித்துவிட்டாரா என்ற கேள்வி எழுகின்றது.

 ஏனெனில், அவர் தமிழ்க் கட்சிகளின் முக்கிய கூட்டங்களுக்கு எல்லாம் தனக்குப் பதிலாக மகனை அனுப்பி வருகிறார்.

 அதனை தமிழரசுக் கட்சியின் நிர்வாக கட்டமைப்பு ஏற்றுக் கொள்கிறதா என்ற கேள்வி எழுகின்றது. ஒரு பக்கம் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவராக சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பற்றிப்பிடித்திருக்கிறார். இன்னொரு பக்கம் மாவை கட்சித் தலைமையை கைவிடுவதாக இல்லை. இவர்கள் இருவரும் அரசியலில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்றைய அரசியல் ஒழுங்கைப் புரிந்து கொள்ளாமல் தவறிழைக்கிறார்கள். இது, வரலாற்றுத் தவறாக பதிவாகும் சூழல் ஏற்பட்டுவிடலாம்.

 https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சம்பந்தன்-பதவி-விலகுவதே-மக்களுக்கான-அறம்/91-327309

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply