ஊடகத்துக்கு நேர்காணல் கொடுப்பது வேறு. ஒரு விவாத மேடையில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்வது வேறு!

ஊடகத்துக்கு நேர்காணல் கொடுப்பது வேறு. ஒரு விவாத மேடையில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்வது வேறு!

நான் பிடித்த முயலுக்கு 3 கால் என்பது போல இருக்கிறது உங்கள் பதில்.

 (1) ஊடகத்துக்கு நேர்காணல் கொடுப்பது வேறு. ஒரு விவாத மேடையில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்வது வேறு.
 (2) நீங்கள் சொல்வது போல் “முதுமை” என்ற பதத்தை சுமந்திரன் பயன்படுத்தவில்லை. உடல்நலக் குறைவு (physical infirmity) என்றுதான் சொன்னார்.

 (3) சுமந்திரனது பதில் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு ஓர் ஆண்டுக்கு முன் எடுத்த முடிவின் அடிப்படையில்தான். பதவி விலகம் பற்றி நாலு மூத்த தலைவர்களைக் கொண்ட குழு ஏலவே சம்பந்தன் ஐயாவோடு பேசி அவரைப் பதவி விலகுமாறு கேட்டிருக்கிறது. அதில் சுமந்திரன் ஒருவர். எனவே சம்பந்தன் ஐயாவை பதவி விலகுமாறு கேட்டது சுமந்திரனது சொந்த முடிவு அல்ல. இந்த விபரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

 (4) நாடாளுமன்றம் 288 நாட்கள் கூடியுள்ளது. ஆனால் சம்பந்தன் ஐயா 39 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் சென்றிருக்கிறார். “இது ஒரு வகை ஊழல் இல்லையா?” என்ற கேள்விக்கு “இல்லை, இல்லை அது ஊழல் இல்லை” என்று சுமந்திரன் பதில் அளித்திருக்க முடியாது. அல்லது பொய்யான பதிலை அளித்திருக்க முடியாது.

 (5) “சம்பந்தரை ஓய்வுபெறுமாறு கேட்டதற்கு நீங்கள் கூறும் காரணம் வெளியில் கூறப்படும் ஒன்று.உண்மை வேறு.” சுமந்திரனைப் பொறுத்தளவில் ஒரே உண்மையைத்தான் உள்ளேயும் பேசுகிறார். வெளியிலும் பேசுகிறார்.
 (6) உண்மை என்னவென்றால் தமிழ் அரசுக் கட்சி ஒரு வயோதிகர்கள் மடம் என்று விமர்ச்சிப்பவர்கள் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். இது நல்ல நகைமுரண்பாடு.

 கனடா உதயனில் வாரந்தோறும் வரும் உமது பத்தியைப் படித்துவிட்டுத்தான் ஏனைய விடயங்களைப் படிக்கிறேன். எதையும் ஒழிவு மறைவின்றி ஒரு வித்தியாசமான முறையில் அணுகுவது எனக்குப் பிடித்திருக்கிறது.
 தமிழ் அரசுக் கட்சிக்கு புதியவர்கள், புதிய குருதி பாய்ச்சப்பட வேண்டும். சம்பந்தன் ஐயாவைப் பதவி துறக்குமாறு கேட்பது திருகோணமலை தமிழ்மக்களது நலங்கள் கருதியே.

 திருகோணமலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் சிங்கள – பவுத்த பேரினவாதிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறது. இது ஒருவகை இன அழிப்புத்தான். ஆனால் பலருக்கு இந்த இன அழிப்புப்பற்றிய ஞானம் இல்லை.

 நக்கீரன்

 From: Nillanthan Maha <nillanthan@gmail.com>
 Sent: Sunday, November 5, 2023 12:00 PM
 To: athangav@sympatico.ca
 Subject: Re: R. Sampanthan MP asked to step down by the ITAK Central Committee

 அது ஒரு ஆங்கில மொழி நிகழ்ச்சிதான்.அதில்தான் சுமந்திரன் அவ்வாறு சொல்லியிருக்கிறார்.
 எனவே அடிப்படைத் தகவல் சரி.

சம்பந்தரை ஓய்வுபெறுமாறு கேட்டதற்கு நீங்கள் கூறும் காரணம் வெளியில் கூறப்படும் ஒன்று.உண்மை வேறு.சுமந்திரன் சில வாரங்களுக்கு முன் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் விமர்சகர்கள் உடனான சந்திப்பில் அது மறைமுகமாக உணரப்பட்டது.

 On Sun, Nov 5, 2023 at 9:57 AM <athangav@sympatico.ca> wrote:

 அரசியல் விமர்சகரும் பத்தி எழுத்தாளுருமான நிலாந்தன் கடைசியாக எழுதியுள்ள “கட்சியின் வழியே மக்களும்” எனத் தலைப்பிட்டு எழுதியுள்ள விமர்சனக் கட்டுரையில் (கனடா உதயன் 03-11- 2023) பின்வருமாறு எழுதியுள்ளர்.
 (1) தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரான சுமந்திரன் ஓர் ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் சம்பந்தர் ஓய்வு பெற வேண்டும் என்று கேட்டிருந்தார். முதுமை  காரணமாக சம்பந்தர் இயலாதவர் ஆகிவிட்டார் என்பதனால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சுமந்திரன் அந்த நேர்காணலில் கூறவில்லை.

 பதில்: நிலாந்தன் சுமந்திரன் என்ன கூறினார், எந்தச் சந்தர்ப்பத்தில் கூறினார் என்ற விளக்கம் எதுவுமின்றி மனம்போன போக்கில் எழுதியுள்ளார். முதலில் “சுமந்திரன் ஓர் ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் சம்பந்தன் ஓய்வு பெற வேண்டும் எனக் கேட்டிருந்தார்” என எழுதியிருப்பது முற்றிலும் பிழை. சுமந்திரன் எந்த ஊடகத்துக்கும் சம்பந்தர் பற்றி நேர்காணல் கொடுக்கவில்லை. கொழும்பில் இயங்கும் News1st என்ற தொலைக்காட்சியில் FACE THE NATION (தேசத்தை எதிர்கொள்ளுங்கள்) என்ற விவாதமேடை ஒவ்வொரு புதன்கிழமையும் அரசியல் உட்பட நாட்டு நடப்புப் பற்றிய விவாதம் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியின் செய்தித் தொகுப்பாளர் (news anchor) ஷமீர் ரசூல்தீன். ஒக்தோபர் 18, 2023 அன்று நடந்த இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நிலாந்தன் பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது.

 (2) ஏற்கனவே கூட்டமைப்பாக இருந்து படிப்படியாக உடைந்துடைந்து வந்து இப்பொழுது தமிழரசுக் கட்சியாகச் சுருங்கிப் போய்விட்டது. இபொழுது அக்கட்சி தனக்குள்ளேயும் மோதத் தொடங்கி விட்டதா? தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்று போட்டிதான் அதற்கு காரணம். அது எல்லா கட்சிகளுக்குள்ளும் ஏற்படும் ஜனநாயகப் போட்டி. அதில் சுமந்திரனும் ஸ்ரீதரனும் போட்டியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. சி.வி.கே. சிவஞானத்துக்கும் விருப்பம் உண்டு. ஆனால் மாவையும் சம்பந்தரும் தேர்தலை வைக்கிறார்கள் இல்லை. அரசாங்கம் தேர்தல்களை வைக்கவில்லை என்று கேட்கும் ஒரு கட்சி தன்னுடைய தலைமைக்கான தேர்தலை ஒத்திவைத்து வருகிறது. அதன் விளைவாக கட்சியின் அடுத்த நிலை தலைவர் ஒருவர் உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் வைத்துப் பேசியிருக்கிறார்.

பதில்: அடுத்த தலைவர் யார் என்று போட்டிதான் காரணம் என்பது தவறு. கட்சித் தலைமைக்கான போட்டிக்கும் சம்பந்தன் ஐயா பதவி விலக வேண்டும் என்ற வேண்டுகோளுக்கும் சம்பந்தமில்லை. கடந்த ஆண்டு செப்தெம்பர் மாதம் 24 ஆம் திகதி வவுனியாவில் நடந்த மத்திய குழுக் கூட்டத்தில் திரு சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையிலேயே அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அதற்கான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில்

 வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம்,
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா,
 வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்
 ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்தக் குழு நியமிக்கப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது. அதுவொன்றும் இரகசியம் அல்ல. (https://ibctamil.com/article/sambandhan-left-political-1663724715)

 இந்தக் குழு சம்பந்தன் ஐயாவை அவரது வீட்டில் சந்தித்து பதவி விலகல் பற்றிப் பேசியபோது அதற்கு அவர் “என்னைத் தேர்ந்தெடுத்தவர்கள் திருகோணமலை தமிழ்வாக்காளர்கள். கட்சி அல்ல” எனப் பதில் அளித்தார். வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கினால் சென்ற தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என நினைக்கவில்லை. “குகதாசன் நீ கேள். நான் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக் போவேன்” என்று சொன்னார். மத்திய குழுவுக்கும் தனது முடிவைத் தெரிவித்தார். அவரது முடிவை மாற்றியவர் கட்சியின் தலைவர் சேனாதிராசா.

 “சம்பந்தன் ஐயா தேர்தலில் போட்டியிடாவிட்டால் கட்சிக்கு அது பெரிய பின்னடைவாக இருக்கும். மக்கள் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பங்குபற்றிய அந்தக் கூட்டத்தில் எடுத்துரைத்தார். அதன் விளைவாகவே சம்பந்தன் தனது முந்திய முடிவை மாற்றிக் கொண்டார். சம்பந்தன் ஐயா 288 நாட்கள் நடந்த நாடாளுமன்றத்துக்கு 39 (13.5 விழுக்காடு) தடவைதான் வருகை தந்திருந்தார். தனது தொகுதிக்கு 3 முறைதான் போயிருந்தார். அதுவும் காளிகோயில் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி கும்பிட!

இந்தச் சிக்கல் உட்கட்சி சிக்கல் மட்டும் அல்ல. இது தமிழ்மக்களது, குறிப்பாக திருகோணமலை தொகுதி தமிழ்மக்கள் சம்பந்தப்பட்டது. திருகோணமலை தமிழ்மக்கள் சிங்கள – பவுத்த பேரினவாதிகளது நெருக்கடிக்கு நாளும் பொழுதும் உள்ளாகி வருகிறார்கள். குச்சவெளிப் பிரதேச செயலாளர் பகுதியில் மட்டும் 2908.5 ஏக்கர் நிலத்தில் 22 விகாரைகள் கட்டும் பணி பவுத்த பிக்குகளால் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதே போல் திரியாய் கிராமத்தில் இரண்டாயிரம் ஏக்கர் தனியார் காணிகளை விகாரைகள் கட்டுவதற்கு பவுத்த பிக்குகள் கையகப்படுத்தும் முயற்சியில் மும்மரமாக இறங்கியுள்ளனர். அவர்களுக்குத் துணையாக அரச இயந்திரம் செயல்படுகிறது. குறிப்பாக தொல்பொருள் திணைக்களம் வனவிலங்குகள் திணைக்களம் செயல்படுகின்றன.

தனிமனித நலங்களை விட இனத்தின் நலங்கள் பாகாக்கப் பட வேண்டும். மற்றப்படி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எமது விடுதலைப் போராட்டத்தில் சம்பந்தன் ஐயா ஆற்றிய பணி மகத்தானது. அவரது இராசதந்திரமே ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்வாரங்களை ஐநாமஉ பேரவையில் பேசு பொருளாக மாற்றியது. 2011 ஆம் ஆண்டு சம்பந்தன் ஐயா மற்றும் சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோர் அமெரிக்க வெளியுறவு திணைக்களத்தில் மூத்த அதிகாரிகளோடும் துணைச் செயலாளரோடும் நடத்திய பேச்சு வார்த்தையே இலங்கைத் தமிழர் சிக்கலை பூகோள அரசியல் மயப்படுத்தியது எனலாம்.

 நக்கீரன்

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply