கிழக்கில் தமிழ் தேசியம் கேள்விக்குட்படுத்தப்பட்டால் அது தமிழர்களின் இருப்புக்கு ஆபத்து

கிழக்கில் தமிழ் தேசியம் கேள்விக்குட்படுத்தப்பட்டால் அது  தமிழர்களின் இருப்புக்கு ஆபத்தானதாகவே அமையும்

மட்டு.நகரான்

February 5, 2023

கிழக்கில் தொடர்ச்சியான பேரினாவதிகளின் செயற்பாடுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் அரசியல் போராட்டமாகவும் பலமானதாக உருவெடுத்த நிலையில் கிழக்கில் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும் நிலைமையேற்பட்டது. ஆயுதப்போராட்டமும் அதனுடன் இணைந்த தமிழ் தேசிய போராட்டமுமே கிழக்கில் தமிழர்களின் இருப்பினை ஓரளவு உறுதிப்படுத்தியது.

இன்று கிழக்கு மாகாணத்தின் நிலைமை என்ன என்பது பலரும் உணராத நிலையே உள்ளது.தமிழ் தேசியமே என்றும் கிழக்கின் பாதுகாப்பு அரணாகவுள்ள நிலையில் இன்று கிழக்கில் தமிழர்களின் இருப்பு என்பது பல்வேறு வழிகளிலும் கேள்விக்குட்பட்டுவருகின்றது. அதாவது கிழக்கில் தமிழ் தேசியம் கேள்விக்குட்படுத்தப்படும் நிலைமையென்பது தமிழர்களின் இருப்புக்கு ஆபத்தானதாகவே அமையும் என்பதை தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் அரசியல் கட்சிகள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் சிங்கள தேசம் என்றைக்கும் கிழக்கினை பிரித்தாலும் நிலைமையினையே மேற்கொண்டுவருகின்றது. கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களை மோதவிட்டு அதன்மூலம் சிங்கள குடியேற்றத்தினை மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுத்துவந்தது.இவ்வாறான நிலையிலேயே தமிழ் தேசிய ரீதியான ஆயுதப்போராட்டம் வலுவடைந்த நிலையில் கிழக்கு பகுதிகளில் பல பகுதிகள் பாதுகாக்கப்பட்டன.

குறிப்பாக அம்பாறை மாவட்டம் திருகோணமலை மாவட்டங்களில் ஆயுதப்போராட்டங்கள் வலுவாகயிருந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட அதேநேரம் ஏனைய பகுதிகள் திட்டமிட்ட வகையான குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன.யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் பௌத்த பேரினவாதம் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்த நிலையில் தமிழ் தேசியத்தின் கீழ் செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகளின் எழுச்சியானது அவற்றினை ஓரளவு தடுத்து நிறுத்தி தமிழர்களின் முயற்சிகள் பாதுகாக்கப்பட்டன.

நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தும் விடயம் என்பது தமிழ் தேசியமே கிழக்கு மட்டுமல்ல வடக்கு கிழக்கு தமிழர்களின் நிலங்களையும் அவர்களின் உரிமையினையும் பாதுகாக்கும் சக்தியாக உள்ளது. அந்த தமிழ் தேசியத்தினை வலுப்படுத்தவேண்டிய காலத்தில் அதனை பலவீனப்படுத்த முன்னெடுக்கும் செயற்பாடுகள் என்பது கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் இருப்பினை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளாகவே நோக்கவேண்டியுள்ளது.

கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய பரப்பிலும் ஏனைய நிலையிலும் ஒரு தமிழ் வேட்பாளர் வெற்றிபெறுவதை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளை கடந்த பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் சிங்கள தேசம் முன்னெடுத்தது. குறிப்பாக தமிழ் தேசிய பரப்பில் உள்ளவர்கள் பாராளுமன்றம் செல்வதை தடுக்கும் வகையில் கருணா போன்றவர்களை களமிறக்கி சிங்கள தேசியம் வெற்றிகண்டது.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் சிங்கள பௌத்த பேரினவாதம் 1958ஆம் ஆண்டு தொடக்கம் அகலக்காலூன்ற செய்வதற்காக தமிழினத்தை பல்வேறு வகையில் அழித்தது.இனப்படுகொலையென்ற ஆயுதம் என்பது கிழக்கில் தமிழர்களின் பல பகுதிகளை இழக்கும் நிலைமையினை ஏற்படுத்தியது.

கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான புத்திஜீவிகள் கல்விமான்கள் கொன்றொழிக்கப்பட்டனர். தமிழ் தேசியத்தின் பால் செயற்பட்ட பலர் பணத்திற்காகவும் பதவிக்காகவும் சொந்த இனத்தை காட்டிக்கொடுத்த சம்பவங்களும் உள்ளன.இவற்றினையெல்லாம் கடந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியம் பலமானதாகயிருந்தது. அதற்கு காரணம் தமிழ் தேசிய சக்திகள் ஒன்றுபட்டதாக பயணித்ததாகும்.

ஆனால் இன்றைய நிலைமையென்பது கிழக்கு மாகாணத்தின் இருப்புக்கு ஆபத்தானதாகவே மாறிவருகின்றது.தமிழ் தேசியம் கிழக்கில் பலவீனப்பட்டுவருவது கிழக்கிற்கான இருப்புக்கு பாரிய ஆபத்துமட்டுமல்ல இணைந்த வடக்கு கிழக்கிற்கும் அது ஆபத்தானதாக மாறிவருகின்றது.

வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திற்காக போராடி இந்த மண்ணில் விதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் நாங்கள் செய்யும் மாபெரும் துரோகமாகவே பார்க்கவேண்டியுள்ளது.

தமிழ் தேசிய கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் ஒருபுறமும் ஒருபுறம் தமிழ் தேசிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் காணப்படும் பிளவும் இன்று தமிழ் தேசியத்தினை அழித்துக்கொண்டிருக்கின்றது.இதன்காரணமாக தமிழ் தேசியத்தின் மீதான் தமிழ் மக்களின் உறுதிப்பாடு நிலைகுலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.சிங்கள பேரினவாத அரசுகள் தமிழ் தேசியத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்தி தமது திட்டங்களை மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுத்துவருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே இன்று வடக்கு கிழக்கில் இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டித்து மாணவர்களினால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது வெறுமனே ஒரு எதிர்ப்பினை தெரிவிக்கும் போராட்டமாகமட்டுமல்லாது கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசியத்தின்பாலிருக்கும் சந்தேகங்களையும் நம்பிக்கையற்ற நிலையினையும் இல்லாமல்செய்யும் என்பது தமிழ் தேசிய பரப்பில் உள்ள நிலைப்பாடாகும்.

இந்த போராட்டம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளை தாங்கிவரவுள்ளதுடன் இதுவரை காலமும் வடக்கிலிருந்து போராட்டங்கள் ஆரம்பமாகி கிழக்கில் முடிந்த சரித்திரங்கள் இல்லாத நிலையில் இந்த போராட்டம் கிழக்கினை நோக்கிவருவதன் காரணமாக மீண்டும் தமிழ் தேசியம் எழுச்சிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசியத்தின் கீழ் செயற்படும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கவேண்டிய காலத்தின் கட்டாம் என்று ஏற்பட்டுள்ளது. அவற்றினை நிறைவேற்றுவதற்கு யாழிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவரும் எழுச்சிப்பேரணி வழியேற்படுத்தும் நம்பிக்கையிருந்தாலும் அதனை இங்குள்ள தமிழ் தேசியத்தின் கீழ் செயற்படும் அரசியல் கட்சிகளின் நோக்கங்களைப்பொறுத்து அது அமையும்.

எதுவாகயிருந்தாலும் இன்று கிழக்கினை ஆக்கிரமித்துவரும் பௌத்த சிங்கள தேசிய வாதத்தின் கெடுபிடிகள் கிழக்கில் முறியடிக்கப்படவேண்டுமானால் கிழக்கில் பாரியளவில் தமிழ் தேசியத்தின் வளர்ச்சியென்பது இன்றைய காலகட்டத்தில் மிகமுக்கியத்துவமாகும்.

இன்று வடக்கு கிழக்கில் செயற்படும் தமிழ் தேசியத்தின் கீழான சிவில்சமூக அமைப்புகள் தமிழ் தேசிய பரப்பில் உள்ள அரசியல்கட்சிகளை புறக்கணித்தாலும் இன்றைய காலத்தில் மிக முக்கியத்தும்பெறும் நிலையில் உள்ளது.இதனை உணர்ந்து செயற்படவெண்டும் என்பதே கிழக்கு மக்களின் இன்றைய பாரிய எதிர்பார்ப்பாகவுள்ளது.

கிழக்கில் தமிழ் தேசியம் கேள்விக்குட்படுத்தப்பட்டால் அது  தமிழர்களின் இருப்புக்கு ஆபத்தானதாகவே அமையும்-மட்டு.நகரான் | November 7, 2023 (ilakku.org)

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply