பௌத்தம்
பௌத்தம் அல்லது பௌத்த சமயம் (Buddhism, பாளி/சமசுகிருதம்: बौद्ध धर्म புத்த தர்மம்) என்பது கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும். பௌத்த மரபின் படி, புத்தர் பொ.ஊ.மு. 4-ஆம், பொ.ஊ.மு. 6-ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர் ஆவார்.[1] பௌத்த சமயம் இந்து மதத்துடன் நெருக்கமாக தொடர்புடையது மற்றும் தர்ம மதங்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது.
பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன: தேரவாத பௌத்தம் (“முதியோர் பள்ளி”), மற்றும் மகாயான பௌத்தம் (“பெரும் வாகனம்”). தேரவாதம் இலங்கை, மற்றும் தென்கிழக்காசியாவில் (கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. மகாயானம் சீனா, கொரியா, சப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்காசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த இரண்டை விட திபெத்து, மற்றும் மங்கோலியாவில் பின்பற்றப்படும் வச்சிரயான பௌத்தம் மூன்றாவது வகையாகக் குறிக்கப்படுகிறது.
பௌத்த சமயம் முக்கியமாக ஆசியாவிலேயே பின்பற்றப்பட்டாலும், உலகெங்கும் இந்த இரண்டு பிரிவுகளும் உலகெங்கும் காணப்படுகிறது. உலகெங்கும் தற்போது 350 மில்லியன் முதல் 1.6 பில்லியன் பௌத்தர்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. (350–550 மில்லியன் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எண்ணிக்கை). அத்துடன் உலகில் மிக வேகமாகப் பரவி வரும் சமயங்களில் பௌத்தமும் ஒன்றாகும்.[2][3][4][5]
உலகின் தோற்றம் பற்றி பௌத்தம்
உலகின் தோற்றம் பற்றிப் பல சமயங்களில் உறுதியுடன் தகவல்கள் தரப்பட்டுள்ளன. பொதுவாக, பிற சமயங்கள் உலகைத் தோற்றுவித்த ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. பௌத்தம் இக்கேள்வியைத் தேவையற்ற ஒன்றாகக் கருதி, விடையை நோக்கிக் கற்பனைக் கதைகளைத் தர மறுக்கின்றது. உலகம் இருக்கின்றது, அதுவே பெளத்தத்தின் முடிவு. தேவையேற்படின், இவ்வுலகம் முந்தி இருந்த உலகத்தில் இருந்து கர்ம விதிகளுக்கமைய வந்தது எனக் கொள்ளலாம். எப்படி ஒரு மரம் விதையில் இருந்து வந்ததோ, எப்படி விதை மரத்தில் இருந்து வந்ததோ அப்படியே.[6]
சார்பிற்தோற்றக் கொள்கை
கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகைத் தோற்றுவிக்கவில்லை என்பது பெளத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையைத் தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிருதத்தில் பிரதித்தியசமுப்பாதம் என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்றும் கூறுவர்.
இக்கொள்கையை சோ.ந.கந்தசாமி பின்வருமாறு விளக்குகின்றார்:
“எப்பொருளும் தோன்றச் சார்புகள் (=நிதானங்கள்) காரணமாக உள்ளன. ஆதலின், ஒருபொருளை உண்டென்றோ இல்லையென்றோ உரைப்பது பிழை. எப்பொருளும் சார்பினால் தோன்றி மறைந்து தோன்றி மறைந்து தொடர்தலின் நிலைபேறான தன்மை இல்லை. தோன்றி மறைதல் என்பது இடையறவு படாமல் விளக்குச்சுடர் போலவும் ஓடும் நீர்போலவும் நிகழ்தலின் தோன்றுதல் மறைதல் என்ற இரண்டிற்கும் இடையே நிறுத்தம் என்பது இல்லை. ஆதலின், புத்தரின் சார்பிற்றோற்றக் கொள்கை, முதற் காரணத்தை உடன்பட்ட கடவுட் கொள்கையினைப் புறக்கணித்து, ஒன்று தோன்ற ஒன்று சார்பாக உள்ளது என்ற சார்புக் காரணத்தைக் கொண்டது.”[7]
கடவுட் கோட்பாடு
பெளத்த உலகப் பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை, அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது, அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதைப் பௌத்தம் மறுக்கின்றது. அப்படி இருந்தால் எந்த ஒரு பொருளுக்குமான இருப்பை நோக்கிய பெளத்தத்தின் அடிப்படை மூன்று விதிகளான நிலையாமை (அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பது – Anicca), ஆன்மா இன்மை (அழியாத ஒன்றாகக் கருதப்படும் ஆன்மா என்பது கிடையாது – Anatta), துக்கம் இருக்கிறது (துயரம், துன்பம், மகிழ்வற்ற நிலை – Dukkha) மீறியே கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும், அது பெளத்தத்தின் உலகப் பார்வைக்கு ஒவ்வாது.
அனைத்தையும் உருவாக்கும், நிர்வாகிக்கும், அழிக்கும் குணங்களைக் கொண்ட ஒருமிய சக்தி போன்ற கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதைப் புத்தர் மறுத்தார். எனினும் பெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் கர்ம விதிகளைப் புரியக் கூடியவர்கள் அல்லது அனுபவங்களைப் பெற அல்லது அனுபவிக்கக் கூடியவர்கள், ஆனால் அவர்களும் கர்ம விதிகளுக்குக் கட்டுபட்டவர்களே.
புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்.[8][9]
புத்தர் கண்ட நான்கு உண்மைகள்
- துன்பம் (“துக்கம்”): மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே.
- ஆசை/பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
- துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
- எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.
எட்டு நெறிமுறைகள்
- நற்காட்சி – Right View
- நல்லெண்ணம் – Right Thought
- நன்மொழி – Right Speech
- நற்செய்கை – Right Conduct
- நல்வாழ்க்கை – Right Livelihood
- நன்முயற்சி – Right Effort
- நற்கடைப்பிடி – Right Mindfulness
- நற்தியானம் – Right Meditation
பிறவிச் சுழற்சியின் பன்னிரு சார்பு நிலைகள்
தமிழ் | ஆங்கிலம் | சமஸ்கிருதம் | பாளி | விளக்கம் |
---|---|---|---|---|
அறியாமை | Ignorance | அவித்தை | அவிஜ்ஜா | |
செய்கை | Impressions | சங்காரம் | சம்ஸ்காரம் | |
உணர்வு | Consciousness | விஞ்ஞானக் கந்தம் | விஞ்ஞானக் கந்தம் | |
அருவுரு | Mind-Body Organism | நாமரூபம் | நாமரூபம் | |
ஆறு புலன்கள் | Six Senses | ஷட் ஆயத்தனம் | ஷள் ஆயத்தனம் | |
ஊறு | Sense contact | ஸ்பர்சம் | பஸ்ஸோ | |
நுகர்ச்சி | Sense Experience | வேதனா | வேதனா | |
வேட்கை | Craving | திருஷ்ணா | தண்ஹ | |
பற்று | Mental Clinging | உபாதானம் | உபாதானம் | |
பவம் | Will to born | பகவ | பகவ | |
பிறப்பு | Rebirth | ஜாதி | ஜாதி | |
வினைப்பயன் | Suffering | ஜராமரணம் | ஜராமரணம் |
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Leave a Reply
You must be logged in to post a comment.