சனாதன தர்மம் குறித்த சர்ச்சை: வடக்கு, தெற்கு என இந்திய அரசியலில் உள்ள பிளவைச் சுட்டிக்காட்டுகிறதா?

சனாதன தர்மம் குறித்த சர்ச்சை: வடக்கு, தெற்கு என இந்திய அரசியலில் உள்ள பிளவைச் சுட்டிக்காட்டுகிறதா?

உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமெனப் பேசிய பேச்சை முன்வைத்து பா.ஜ.க. நாடு முழுவதும் எதிர்ப்பை ஒருங்கிணைத்து வருகிறது.

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
  • 4 செப்டெம்பர் 2023,

சனாதனம் குறித்த தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்தியா முழுவதுமான சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. உதயநிதி பேசியதை இவ்வளவு பெரிய சர்ச்சையாக பா.ஜ.க. மாற்றியது ஏன்?

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமெனப் பேசிய பேச்சை முன்வைத்து பா.ஜ.க. நாடு முழுவதும் எதிர்ப்பை ஒருங்கிணைத்து வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இடதுசாரி அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 1) சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற மாநாடு நடத்தப்பட்டது. இதில் கலந்தகொண்ட உதயநிதி ஸ்டாலின், இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ்சின் பங்களிப்பு என்ற தலைப்பில் இருந்த கேலிச்சித்திரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

எழுந்த எதிர்ப்புகள்

“இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் சமத்துவதற்கும் சமூகநீதிக்கும் எதிரானது. எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். பாசிஸ்டுகள் நம் குழந்தைகள் படித்துவிடக் கூடாது என்பதற்காக பல திட்டங்களைக் கொண்டுவருகிறார்கள். நாம் எல்லோரும் படித்துவிடக்கூடாது என்பதுதான் சனாதன கொள்கை. அதற்கு உதாரணம்தான் நீட் தேர்வு” என்று பேசினார்.

ஆனால், உதயநிதியின் சனாதனம் குறித்த இந்தப் பேச்சு, திட்டமிட்ட ரீதியில் நாடு முழுவதும் எடுத்துச்செல்லப்பட்டது. செப்டம்பர் 2ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை வெளியிட்ட பா.ஜ.கவின் ஐடி விங் பொறுப்பாளர் அமித் மால்வியா, “இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை ஒழிப்பதற்கு” உதயநிதி அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டார்.

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.ஏற்பு மற்றும் தொடரவும்காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உதயநிதியின் பேச்சைக் கண்டித்தார். ராஜஸ்தானின் துங்கர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா “இந்தியா கூட்டணியின் இரண்டு மிகப் பெரிய கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்களின் மகன்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். சனாதன தர்மத்தை முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் தயாரா?” என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார்.

இதற்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தலைவர்கள், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உதயநிதியை கண்டித்து சமூக வலைதளங்களில் அறிக்கைகளை வெளியிட்டனர். ஊடகங்களில் பேட்டிகளை அளித்தனர்.

தற்போது பா.ஜ.கவின் மாநிலச் செயலரான ஏ. அஸ்வத்தாமன், உதயநிதி மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். டெல்லியில் வினீத் ஜிண்டால் என்பவர் உதயநிதி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யும்படி புகார் ஒன்றை டெல்லி காவல்துறையில் பதிவுசெய்தார்.

பல ஊடகங்களில் உதயநிதியின் பேச்சைக் கண்டித்தும் இது எப்படி இந்தியா கூட்டணிக்குப் பாதகமாக முடியும் என்றும் கட்டுரைகள் வெளியாகின. ஆங்கிலத் தொலைக்காட்சிகள் அனைத்தும், இதனைக் கண்டித்து விவாத நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தன.

ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சனாதன எதிர்ப்பு அரசியல் என்பது நீண்ட காலமாகவே நிலவிவருவதால், அதன் ஒரு பகுதியாகவே உதயநிதியின் இந்தப் பேச்சும் பார்க்கப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவரும் நிறுவனருமான பெரியார் தீவிரமாகச் செயல்பட்ட காலகட்டத்தில் இந்து மதத்திற்கு எதிராகத் தீவிரமான கருத்துகளை வெளிப்படுத்திவந்தார். இந்து மதத்தை ஒழிப்பது, ராமாயணத்தை எதிர்ப்பது, கோவில்களை ஒழிப்பது என தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவந்தார். அவருக்குப் பிறகு திராவிடர் கழகத்தினர், பெரியாரைப் பின்பற்றுவோர் இதுபோன்ற கருத்துகளை அவ்வப்போது தெரிவித்தே வந்தனர்.

சனாதன எதிர்ப்பு குறித்து தொடர்ந்து பேசி வரும் திருமாவளவன்

சமீப ஆண்டுகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக உள்ள தொல். திருமாவளவன் சனாதனத்திற்கு எதிராக பல மிகப் பெரிய மாநாடுகளை நடத்தியிருக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டில் பெரியாரின் நினைவுநாளில், “சமூக நீதியை வென்றெடுப்போம்; சனாதனத்தை வேரறுப்போம்” என இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டார் திருமாவளவன்.

அதற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஜனவரி மாதம் திருச்சியில் தேசம் காப்போம் என்ற பெயரில் ஒரு மிகப் பெரிய மாநாட்டை நடத்திய திருமாவளவன், “சனாதனம் ஒழிந்தால்தான் சகோதரத்துவம் மேலோங்கும். சனாதன சக்திகளால் இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய வேண்டியது நமது கடமை. இது சனாதன கோட்பாட்டுக்கும், ஜனநாயக கோட்பாட்டுக்கும் இடையிலான போராட்டம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சனாதன கோட்பாட்டை மீண்டும் கொண்டுவர முயல்கின்றனர். சனாதனம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்ணாசிரமம், ஜாதிய பாகுபாடுகள் மீண்டும் தலை தூக்கும்” என்று கடுமையாகப் பேசினார். இதே மாநாட்டில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் கலந்துகொண்டு பேசினார்.

திருமாவளவன்
சமீப ஆண்டுகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக உள்ள தொல். திருமாவளவன் சனாதனத்திற்கு எதிராக பல மிகப் பெரிய மாநாடுகளை நடத்தியிருக்கிறார்

அதேபோல, 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திருமாவளவன், “சனாதனத்தை வேரறுப்போம்; ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்” என்பதையே முழக்கமாக முன்வைத்தார். வேறு பல தருணங்களில் தொண்டர்களோடு இணைந்து சனாதனத்தை வேரறுப்போம் என தொண்டர்களோடு உறுதியெடுத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு காந்தியின் பிறந்த நாளின்போதுகூட, சனாதன பயங்கரவாதத்தை முறியடிப்போம் என்ற பெயரில் சமூக நல்லிணக்கப் பேரணி ஒன்றை நடத்தினார்.

அப்போதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில்தான் இடம்பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒரு கட்சி, சனாதனம் குறித்து பேசுகிறது என இந்த விஷயத்தை அந்த காலகட்டத்தில் பா.ஜ.க. பெரிதாக்கவில்லை. திருமாவளவனின் பேச்சுகளுக்கு பெரிதாக எதிர்வினையாற்றியதும் இல்லை.

ஆனால், இப்போது தீவிரமாக எதிர்வினையாற்றுவது ஏன்?

“ஏனென்றால், பா.ஜ.க. மீது தேசிய அளவில் பல புகார்கள் இருக்கின்றன. நிர்வாகத் திறன் குறித்த குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதையெல்லாம் திசைதிருப்பும் விஷயமாகவே இதனை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்தியா கூட்டணி இந்த அளவுக்கு ஒற்றுமையாக தொடரும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அது உருப்படாது எனக் கருதினார்கள். ஆனால், அந்தக் கூட்டணி தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதும், தொடர்ந்து பெரிதாகிக்கொண்டே போவதும் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆகவேதான் இந்த விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமார்.

எப்போதுமே பா.ஜ.க. ஒரு கருத்தை முன்வைப்பது, அதற்கு எல்லோரும் எதிர்ப்புத் தெரிவிப்பது அல்லது பதில் சொல்வது என்று அரசியல் நடந்துகொண்டிருந்த நிலையில், அவர்களை பதில் சொல்ல வைத்திருப்பது நல்லதுதான் என்கிறார் ரவிக்குமார். “சனாதனம் என்றால் என்ன, அது என்ன சொல்கிறது என்ற விவாதம் வட இந்தியாவிலும் வரட்டும்” என்கிறார் அவர்.

இது வாக்கு வங்கி அரசியலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறார் ரவிக்குமார். “கர்நாடக மாநிலத்தை இந்துத்துவத்தின் சோதனைச் சாலையாக முயற்சித்துப் பார்த்தார்கள். ஆனால், அடுத்த தேர்தலிலேயே தோற்றுவிட்டார்கள். விலைவாசி கடுமையாக உயர்ந்துவரும் நிலையில், இதையெல்லாம் ஒரு விவாதமாக எடுப்பது எந்தப் பலனையும் தராது. தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்கிறார் ரவிக்குமார்.

பாதிப்பை ஏற்படுத்துமா, ஏற்படுத்தாதா என்பதைத் தாண்டி, இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் இதற்கு பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. காங்கிரசைப் பொறுத்தவரை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினின் கருத்துகளை ஆதரிக்கிறார்கள். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், “தமிழ்நாட்டில் சனாதன தர்மம் என்பது ஜாதி கட்டமைப்பு. அதைத் தவிர, வேறு எந்தத் தத்துவ அர்த்தமும் இல்லை. உதயநிதி பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அவர் எந்த இன அழிப்பு குறித்தும் அழைப்புவிடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.

கார்த்தி சிதம்பரம்
படக்குறிப்பு,நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பட்டும் படாமல் பதிலளித்த காங்கிரஸ்

கர்நாடக மாநில அமைச்சரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான ப்ரியங் கார்கேவிடம் இது குறித்து கேட்டபோது, “சமத்துவத்தைப் பரப்பாத எந்த மதமும் மனித கண்ணியத்தை உறுதிசெய்யாத எந்த மதமும் நோயைப் போன்றதுதான்” என்று பதிலளித்தார்.

ஆனால், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இதற்கு பட்டும்படாமலும் பதிலளித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான கே.சி. வேணுகோபால், “சமதர்ம சமுதாயம் என்பதே காங்கிரஸ் கட்சியின் ஒருமித்த நிலைப்பாடு. எங்கள் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சியினருக்கும் அவர்களது கருத்துக்களை சொல்ல அனைத்து உரிமையும் உண்டு. அனைத்து மத நம்பிக்கையையும் மதிக்கிறோம், அனைவருடைய நம்பிக்கைகளையும் மதிக்கிறோம்” என்று மட்டும் தெரிவித்து இந்த சர்ச்சையைக் கடந்துசென்றார்.

வட இந்தியாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்களைப் பொறுத்தவரை, இந்த சர்ச்சையில் சிக்கிக்கொள்வதில் விரும்பவில்லை. மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான கமல்நாத்திடம் உதயநிதியின் கருத்து குறித்து கேட்டபோது, “அது அவருடைய கருத்து. ஆனால், அதில் நான் உடன்படவில்லை” என்றார்.

கமல்நாத்தின் பேச்சுக்கும் பிரியங் கார்கேயின் பேச்சிற்கும் இடையில் உள்ள வித்தியாசம், இந்திய அரசியலில் உள்ள வடக்கு – தெற்கு பிரிவினையை துல்லியமாக சுட்டிக்காட்டுகிறது என்று சொல்லலாம்.

தென்னிந்திய அரசியலில் குறிப்பாக தமிழக அரசியலில் மதம் சார்ந்து ஆட்களைத் திரட்டி வாக்குகளைப் பெறுவதென்பது இயலாத காரியம். ஆனால், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்து மதத்தை தாக்கிப் பேசிவிட்டு வாக்குகளைச் சேகரிப்பது என்பது இயலாத காரியம். அதனால்தான், கமல்நாத்தின் பேச்சில் எச்சரிக்கை தென்படுகிறது.

“நாம் கொள்கை அரசியலை முன்னெடுக்கப் போகிறோமா அல்லது தேர்தல் அரசியலை முன்னெடுக்கப் போகிறோமா என்பதை தி.மு.கவில் உள்ளவர்கள் முதலில் முடிவுசெய்ய வேண்டும். காரணம், நாட்டின் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. முன்பு, மதச்சார்பற்றவர்கள் Vs இந்துத்துவவாதிகள் என்று இருந்தது. இப்போது நல்ல இந்துவா, கெட்ட இந்துவா என்று மாறியிருக்கிறது. அந்த அளவுக்கு இந்துத்துவத்தை மையமாக வைத்து அரசியல் சுழல ஆரம்பித்துவிட்டது. இந்தத் தருணத்தில் உதயநிதி இதைப் பற்றிப் பேசியிருப்பது வேண்டாத வேலை” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

“அரசு திசைமாற்ற பார்க்கிறது”

ஆனால், இந்த விஷயத்தில் தேசிய அளவில் ஊடகங்கள் நடந்துகொண்டவிதம் மிக மிக மோசமானது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். “முன்பு தமிழ்நாட்டில் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக செய்தி பரப்பியதைப் போலவே இப்போதும் இந்தச் செய்தியை பரப்புகிறார்கள். உதயநிதி பேசியது என்ன என்பது வீடியோவில் இருக்கிறது. அதைப் பார்க்காமலோ, பார்த்தோ அவர் இன அழிப்புக்கு அழைப்பு விடுக்கிறார் என்று கூறுகிறார்கள். இதெல்லாம் நிலைக்காது. சிஏஜியில் ஆளும் அரசு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அதை திசைமாற்ற இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்” என்கிறார் குபேந்திரன்.

முன்பு விடுதலைச் சிறுத்தைகள் பேசும்போது அதனைக் கையில் எடுக்காத பா.ஜ.க. இப்போது அதனை கையில் எடுப்பதற்குக் காரணம் இருக்கிறது என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன். “இந்துத்துவத்திற்கு மாற்றான சித்தாந்தமாக திராவிடம் என்ற சித்தாந்தத்தை தி.மு.கதான் முன்வைக்கிறது. ஆகவேதான் தி.மு.கவைக் குறிவைக்கிறார்கள்” என்கிறார் அவர்.

ஆனால், இந்த விஷயம் தேசிய அளவில் உதயநிதிக்கு ஒரு விளம்பரத்தைப் பெற்றுத்தந்திருக்கிறது; அது அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கு வெகுவாக உதவும் என்கிறார் குபேந்திரன்.

https://www.bbc.com/tamil/articles/c03j7wn9wl2o

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply