தலை குனியும் தமிழ்நாடு – சாதி வெறியால் அழியும் மாணவர் சமூகம்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’, ‘கல்தோன்றி மண்தோன்றா…’, ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ போன்ற வெற்றுப் பெருமிதங்களில் திளைத்து அகமகிழ்ச்சி அடைந்து, நாம் மண்ணில் சொர்க்கத்தில் வாழ்வதாக தினம் தினம் கனவு கண்டுகொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தின் முகத்தில் செருப்பைக் கழற்றி அடித்திருக்கின்றது நாங்குநேரியில் தலித் மாணவர் மீது சாதிவெறி நாய்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதல்.
தமிழ்நாடு முழுவதும் இரத்த வாடை வீசுகின்றது. இரத்தம் உறைந்த படிக்கட்டுகள் மனதில் இருந்து மறையாமல் விடிய விடிய சித்தரவதை செய்கின்றது.
பத்து ஆண்டுகள், பனிரெண்டு ஆண்டுகள் கல்விக்கூடத்தில் படித்த மாணவர்கள் சாதிவெறியோடு அலைகின்றார்கள் என்றால் நாம் யார் மீது குற்றம் சொல்வது?
ஏறக்குறைய 8 மணி நேரங்கள் பள்ளியில் ஆசிரியரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாணவனுக்கு அங்கே என்ன கற்பிக்கப்படுகின்றது? தன்னுடன் அருகில் அமர்ந்து படிக்கும் மாணவனை சமத்துவமாகப் பார்க்கவும், அவனை தன்னுடைய தோழனாய், சக மனுசனாய் பார்க்கவும் ஆசிரியரோ, இல்லை அந்தக் கல்வி முறையோ கற்றுத் தரவில்லை என்றால், அந்த ஆசிரியரால், கல்வி முறையால் சமூகத்துக்கு என்ன பயன்?தமிழ் படிப்பதும், ஆங்கிலம் படிப்பதும், கணிதம் படிப்பதும், அறிவியல் படிப்பதும், சமூக அறிவியல் படிப்பதும் ஒரு மாணவனை முழு மனவளர்ச்சி அடைந்த மாணவனாக மாற்றிவிடாது என்பதை ஆசிரியர்களும், அரசும் உணர வேண்டும்.
படிக்கும் மாணவர்களின் மனதில் இருந்து சாதிவெறி வெளியேற்றப்பட்டு, அந்த இடத்தில் மனிதம் நிரப்பப்படவில்லை என்பது பெரும் தோல்வியையே காட்டுகின்றது.
ஆசிரியர்கள் மீதும், கல்வித் திட்டத்தின் மீதும் மட்டுமே குறை சொல்லிவிட்டு நாம் தப்பித்துக் கொள்ள முடியாதுதான். சமூகம் முழுவதும் சாதியால் சூழப்பட்டு இருக்கும் போது, அந்த சமூகத்தில் இருந்து வரும் மாணவர்களிடமும் அதன் வெளிப்பாடு இருக்கவே செய்யும்.
சாதிச் சங்கங்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் புற்றீசல் போல பெருகி இருக்கின்றது. ஒவ்வொரு சாதிக்கும் நூறு சாதிச் சங்கங்கள் இருக்கின்றன. உலகமயமாக்கலால் உருவாக்கப்பட்ட திடீர் பணக்காரப் பொறுக்கிகள் அரசியலில் பேரம் பேசும் நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ள, தங்களிடம் குவிந்து கிடைக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதியை வீசி எறிந்து சில அல்லக்கைகளை உருவாக்கிக் கொள்கின்றார்கள்.
தான் முறுக்கி விட்டிருக்கும் மீசையில் இருக்கும் மயிரளவுக்குக் கூட சமூக அக்கறையற்ற இந்தக் கழிசடை கூட்டம் பெரியவர்களை சாதி ரீதியாக அணி திரட்டுவதோடு, சிறுவர்கள் மனதிலும் சுயசாதிப் பெருமிதங்களை ஊட்டி அப்பட்டமாகவே தலித் விரோதப் போக்கை வளர்த்தெடுக்கின்றன.
இதன் வெளிப்பாடாகத்தான் மாணவர்கள் கைகளில், கழுத்தில், சாதி, சமூக, இனரீதியான அடையாளங்களைக் காட்டும் கயிறுகள், டாலர்கள் போன்றவற்றை அணிகின்றார்கள். மேலும் சாதிவெறி நாய்களால் அச்சடித்து தரப்படும் பனியன்களை அணிகின்றார்கள்.
தொடர்ச்சியாக சாதிவெறி ஊட்டி வளர்க்கப்படும் இந்த இளைஞர்கள், தங்களின் வாழ்க்கை என்பதே தங்களுடைய சாதிய அடையாளத்தை காப்பாற்றத்தான் என்று நினைத்து புத்தகங்களுக்குப் பதில் அருவாளைத் தூக்க ஆரம்பித்து விடுகின்றார்கள்.
ஆனால் தங்களைத் தூண்டிவிட்ட தலைவனின் பிள்ளைகள் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர் கல்வி பயில்வதைப் பற்றியோ, வெளிநாடுகளில் படிப்பதைப் பற்றியோ, அவர்கள் ஒருபோதும் சாதிக் கயிறை கட்டிக்கொண்டு கையில் அருவாளோடு நிற்பதில்லை என்பதையோ இவர்கள் கண்டுகொள்வதில்லை. சாதிவெறி அனைத்தையும் மறைத்து ஓர் அடிமை நாயைப்போல இவர்களை வேலை செய்ய வைக்கின்றது.
சில நாட்களுக்கு முன்னால் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சாதி மிகவும் அழகானது என்றும், அதன் பண்பாடு காக்கப்பட வேண்டும் என்றும், மதிக்கப்பட வேண்டும் என்றும் திருவாய் மலர்ந்தருளினார். அவர் இப்படி திருவாய் மலர்வது முதல்முறை இல்லை என்றாலும், ஒரு சமூகத்தை தன்னுடைய சொந்த சுயநலத்துக்காக எப்படி சாதிவெறியூட்டி அவர்களை சாதிவெறியர்களாக, வன்முறையாளர்களாக மாற்றுகின்றார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
அன்புமணி ராமதாஸை மட்டும் நாம் குற்றம் சொல்லவில்லை. ஏறக்குறைய எல்லா சாதியைச் சேர்ந்த சாதிவெறியர்களும் இதே உத்தியைக் கடைபிடித்தே சாதிவெறியை தூபம் போட்டு வளர்க்கின்றார்கள்.
சுய சாதி வெற்று பெருமிதங்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகள் இப்படி சாதிவெறியர்களாக, காலிப் பயல்களாக மாறுவதை ஊக்குவித்தே வருகின்றார்கள்.
அந்த ஊக்கம்தான் இன்று அருவாளை தூக்கிக் கொண்டு போய், தூங்கிக்கொண்டிருந்த அந்த அப்பாவி மாணவனையும், அவனின் தங்கையையும் சரமாரியாக வெட்டி ரத்த சகதியில் மூழ்கடித்து துடிதுடிக்க வைத்திருக்கின்றது. தடுக்கப் போன வயதான முதியவரைக் கொன்று போட்டிருக்கின்றது.
இந்த சம்பவத்தில் தமிழ்நாடு அரசு உடனே தலையிட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்திய மாணவர்களைக் கைது செய்திருக்கின்றது. ஆனால் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதால் சிறார் நீதி வாரியத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்களை கைது செய்ய ஏதுவாக 18 வயது என்பதைக் குறைத்து 15 வயதாக மாற்ற வேண்டும். மேலும் இது போன்ற சாதிவெறித் தாக்குதல் நடத்தும் இளைஞர்களின் பெற்றோரையும் கைது செய்து, சாகும்வரை சிறையில் அடைப்பதற்கு ஏற்றவாறு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும். இல்லை என்றால் இது போன்று சிறுவர்களை ஏவி கொலை செய்து சாதிவெறியர்கள் தங்களின் சாதிவெறியை தீர்த்துக் கொள்வார்கள்.
கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான மாணவருக்கு ஆதரவாக பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன. தினம் தினம் சாதியையும் சனாதனத்தையும் பேசி தமிழ்நாட்டில் சாதிவெறியைக் கொம்பு சீவிவிடும் பிஜேபி உட்பட.
ஆனால் உண்மையில் மனதார இவர்கள் சாதிவெறியர்களை எதிர்க்கின்றார்களா, சாதிக்கு எதிராக களமாடுகின்றார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. ஒரு பக்கம் சாதிவெறியர்களோடு தேர்தல் கூட்டணி வைப்பது, சாதிவெறியர்கள் வைத்திருக்கும் கூட்டத்திற்கு ஏற்றார்போல பேரம் பேசுவது போன்றவற்றை கூச்சமோ, குற்ற உணர்வோ இல்லாமல் செய்துவிட்டு, இப்படியான மோசமான சம்பவம் நடந்து பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய பின்னால், தாங்களும் அதைக் கண்டிப்பதாக காட்டிக் கொள்வது இவர்களின் வாடிக்கையாக இருக்கின்றது.
மாணவர்களுக்கு சாதிவெறியூட்டி அவர்களை கொலைகாரர்களாக மாற்றிய சாதிவெறியர்களைக் கண்டிக்காத பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள், இது சமூகநீதிக்கான அரசு என்றும், பாதிக்கப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்றும் ஒரு தர்ம பிரபுவைப் போல பேசுகின்றார்.
பிரச்சினையின் தீவிரத்தைப் பற்றிய எந்த உணர்வுமே அவரிடம் இல்லை. இப்போது மட்டுமல்ல, கடந்த ஆண்டு மே மாதம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பள்ளக்கால் பகுதியில், கையில் சாதிக் கயிறு கட்டும் விவகாரத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் இறந்த போதும் இதே தொனியில்தான் அவர் பேசினார்.
எல்லோருக்கும் சமத்துவமான அரசாக தங்கள் அரசாங்கம் செயல்படும் என்றும், மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபடுவது வருத்தம் அளிப்பதாகவும் மாணவர்களுக்கு கவுன்சலிங் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.
அந்த சம்பவத்திலும் ஈடுபட்டவர்கள் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்பதால் கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் கூர்நோக்கு இல்லத்தில்தான் அடைக்கப்பட்டார்கள். மேலும் இரண்டு ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்தார்கள்.
இது போன்ற நடவடிக்கைகள் எடுத்து அப்போதைக்கு பிரச்சினையின் மீது தாங்கள் நடவடிக்கை எடுத்தோம் என்று காட்டிக் கொள்வதே அரசுக்குப் போதுமானதாக இருக்கின்றது. ஆனால் இது போதாது.
ஆசியர்கள் பணிக்கு அமர்த்தப்படும் போதே அவர்கள் சாதிக்கு எதிரான மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் பள்ளியில் மாணவர்களிடம் சாதிய பாரபட்சத்தோடு நடந்து கொண்டால் பணி நீக்கம் செய்யப்படுவதோடு, சிறைக்கும் செல்ல நேரிடும் என்பது போன்ற உறுதிமொழிகளில் கையொப்பம் பெற வேண்டும்.
அதே போல மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வரும்போது சாதியைக் குறிக்கும் வகையில் கயிறுகளை அணிந்து வருவதையும், பனியன்கள் அணிந்து வருவதையும் தடை செய்ய வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2019ம் தேதி ஜூலை 30ஆம் தேதி மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை தமிழ்நாடு கல்வித் துறை இயக்குனரால் அனுப்பப்பட்டது. அந்தச் சுற்றறிக்கையில், பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் சாதியைக் குறிக்கும் வகையில் கயிறுகளை அணிந்து வருவதாகவும், 2018ஆம் ஆண்டைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் இதனைப் பார்த்து அரசுக்குத் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
காவி, மஞ்சள், பச்சை வண்ணங்களில் அணியப்படும் இந்தப் பட்டைகள், கயிறுகள், நெற்றியில் வைக்கும் பொட்டு ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் தங்களது சாதியை அடையாளப்படுத்துவதோடு, அவற்றை வைத்து ஒன்று சேர்வதாகவும் கூறப்பட்டிருந்தது.
உடனடியாக தலைமைக் கல்வி அதிகாரிகள் இம்மாதிரிப் பள்ளிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரிகளுக்கு தகுந்த உத்தரவை இடுவதன் மூலம் இந்த நடவடிக்கையைத் தடுக்க வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.
இந்த சுற்றிக்கை ஊடகங்களில் வெளியானதை அடுத்து பா.ஜ.க தலைவர் எச். ராஜா, “கையில் கயிறு கட்டுவது. நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமத சின்னங்களைத் தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
பாஜகவின் எதிர்ப்பை அடுத்து அப்போதைய பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நடுங்கிப் போய் “அரசின் கவனத்துக்கு வராமல் இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டு விட்டதாகவும், இந்த சுற்றறிக்கைக்கு முன்பிருந்த நிலையே தொடரும்” என்றும் தெரிவித்தார்.
இந்த அரசாவது அதை செய்ய வேண்டும் என்பதுதான் அனைத்து ஜனநாயக சக்திகளின் விருப்பமாக உள்ளது. சாதி ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான சட்டத்தையே சாதிவெறியர்களுக்குப் பயந்து கொண்டு வராமல் இருக்கும் இந்த அரசு, இதைச் செய்யுமா என்பது கேள்விக்குறிதான்.
– செ.கார்கி
https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/45588-2023-08-14-05-57-48
Leave a Reply
You must be logged in to post a comment.