கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கிழக்குமாகாணத்தில் நடத்துவது பொருத்தமான ஒன்றாக தற்போது இல்லை!
நக்கீரன்
தன்னைப் பெற்ற தாய் கிண்ணி பிச்சை எடுக்க மகன் கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம் என்பது தமிழில் உள்ள ஒரு பழமொழி. கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பமும் என கிழக்கு மாகாண சபை ஆளுநர் தெரிவித்த செய்தியைப் படித்த போது இந்தப் பழமொழிதான் நினைவுக்கு வந்தது.
இலங்கை ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு விட்டதாகவும் அந்நியக் கடன்களை குறித்த தவணைகளில் கொடுக்க முடியாது போய்விட்டதாக சென்ற ஆண்டு (2022) ஏப்ரில் மாதம் நிதி அமைச்சு அறிவித்தது. கோட்டாபய இராசபக்ச சனாதிபதி யாக நொவெம்பர் 14, 2019 இல் பதவிக்கு வந்தார். அப்போது அந்நிய செலாவணி அ.டொலர் 7 பில்லியன் (70 கோடி) ஆக இருந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து அன்னிய செலாவண கையிருப்பு அ.டொலர் 25 மில்லியனாகக் குறைந்துவிட்டது.
இலங்கை ஒண்டாண்டி நாடாக அறிவித்ததைத் தொடர்ந்து பொருளாதார நெருக் கடிக்குள் நாடு சிக்கித் தவிக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்ட மக்கள் அதனை இரண்டு வேளையாகக் குறைத்துக் கொண்டுள்ளார்கள். ஏழைகளின் முக்கிய உணவான பாண் ஒரு இறாத்தல் ((450g)) ரூபா 190 ஆக விற்பனையாகிறது. மத்திய வங்கி வெளியிட்ட விலைப் பட்டியலின் அடிப்படையில் யூலை 12 அன்று ஒரு கிலோ சம்பா அரிசி ரூபா 230 க்கு விற்பனையாகிறது. தக்காளி ஒரு கிலோ ரூபா 600 க்கு விற்பனையாகிறது. தலை சுற்றுகிற முழு விலைவாசிப் பட்டியலை price_report_20230712_e (1).pdf என்ற இணைய தளத்தில் படித்துக் கொள்ளலாம்.
நாட்டின் பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக 9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் (40%) உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் கீழ் நழுவியுள்ளனர் என்று புகழ்பெற்ற பேரதேனியா பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய (ஒக்தோபர் 2022) கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.
இதற்கிடையில், இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக 2021 ஆம் ஆண்டில் 13.1 சதவீதத்திலிருந்து 2022 ஆம் ஆண்டில் 25.6 விழுக்காடாக வறுமை அதிகரித்துள்ளது என்று உலக வங்கி வாதிட்டுள்ளது, இது இன்றைய காலகட்டத்தில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் விழுவதற்கு சமம் ஆகும். இது உள்நாட்டுப் போர் முடிவடைந்த ஆண்டான 2009 மட்டத்திற்கு வறுமையை மீண்டும் கொண்டு சென்றுள்ளது.
இந்தப் பின்னணயில்தான் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலைஞர் கருணாநிதி அவர்களது நூற்றாண்டு விழாவை கொண்டாடப் போவதாக அறிவித் துள்ளார். அவர் அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட செலவின் போது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அரச சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா எடுக்கப்படும் என்று தமிழக ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நூற்றாண்டுவிழா நடத்த கிழக்கு மாகாணம் பொருத்தமில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக்கட்சி ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டு முதல்வர் அமரர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டுவிழா தமிழ்நாடு முழுவதும் பல வகைகளில் தற்போது இடம்பெற்று வருகின்றன. அவர் பிறந்த நாட்டில் அவர் ஆட்சிசெய்த தமிழ்நாட்டில் கட்டாயம் அந்த மக்கள் அதை செய்வது நல்லது. அவர் ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்து முறையும் வெற்றி பெற்றவர். தமிழ்நாடு முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் என்று உயர் பொறுப்புகளை வகித்தவர். தமிழகத்தின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்த நூற்றாண்டு நாயகர் கருணாநிதியின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் அவரின் நூற்றாண்டு விழாவை மாநிலம் முழுவதும் யூன் 2023 திங்கள் முதல் யூன் 2024 திங்கள் வரை தமிழக அரசால் கொண்டாட முடிவு செய்யப்பட்டது நல்ல விடயம்” என்று கருணாநிதிக்கு அரியநேத்திரன் புகழ் மாலை சூட்டியுள்ளார். (https://uthayannews.ca/2023/07/06/)
பன்முக ஆளுமைபடைத்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல கோடி செலவில் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. அவர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரின் பரிமாணங்களை போற்றும் வகையில் 12 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
1) இதழாளர் – கலைஞர்
2) எழுத்தாளர் – கலைஞர்
3) கலைஞர் – கலைஞர்
4) சமூக நீதிக் காவலர் – கலைஞர்
5) பண்பாட்டுப் பாசறை – கலைஞர்
6) ஏழைப் பங்காளர் – கலைஞர்
7) சட்டமன்ற நாயகர் – கலைஞர்
8) பகுத்தறிவு, சீர்திருத்தச் செம்மல் – கலைஞர்
9) நவீன தமிழ்நாட்டின் சிற்பி – கலைஞர்
10) நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்
11) தொலைநோக்குச் சிந்தனையாளர் – கலைஞர்
12) தமிழ்த்தாயின் தவப்புதல்வன் – கலைஞர்
நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் யூன் 03, 2023 முதல் யூன் 03, 2024 வரை தமிழ்நாடு அரசால் கொண்டாடப்படும். ஊர்கள் தோறும் திமுக கொடிகள், மாவட்டந்தோறும் கலைஞரின் சிலை, கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, பல்வேறு நலத்திட்ட உதவிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் என தடபுடலாக ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரச சார்பிலும் திமுக சார்பிலும் அரசு தடபுடலாகக் கொண்டாடுவது முற்றிலும் சரியே.
கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைவாக மதுரையில் தமிழக அரசு சார்பில் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில், 2,22,815 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமான ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மாதம் 15 இல் திறந்து வைக்க உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவன வளாகத்தில் 4.89 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் கருணாநிதி பெயரில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கடந்த யூன் 13 ஆம் தமிழக முதலமைச்ச மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் 3 கட்டடங்களைக் கொண்ட இந்த மருத்துவமனை, 1,000 படுக்கை வசதிகளுடன் 230 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது
திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மெரினாவில் உள்ள முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தின் அருகே கடலில் 80 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். . கலைஞர் கருணாநிதி ஒரு சாதனையாளர், வரலாற்று நாயகர் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
கலைஞர் கருணாநிதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 யூன் 3 இல் ஏழை இசை வேளாளர் (முன்னர் நட்டுவனார்) குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். தொடக்கக் கல்வியைத் திருக்குவளையில் பெற்றார். பின்னர்த் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு (ஒன்பதாம் வகுப்பு) வரை பயின்றார். அங்கு இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சி. இலக்குவனார். பள்ளியிறுதித் தேர்வில் இவர் தேர்ச்சியடையவில்லை. தந்தை பெரியார் ஈ.வே.ரா நடத்திய மாநாட்டில் கலந்து கொள்ள தேர்வை எழுதாமல் புறப்பட்டுப் போய்விட்டார்.
இவ்வாறு திருக்குவளையில் பிறந்த கலைஞர் கருணாநிதி பிற்காலத்தில் கோபாலபுரத்தில் குடியேறினார். அதாவது குப்பையில் பிறந்து கோபுரம்வரை உயர்ந்தார். அதனால்தான் அவரை ஒரு பன்முகச் சாதனையாளர் என எல்லோரும் வர்ணிக்கிறார்கள். அவரது வாழ்நாள் சாதனைகள் பிரமிக்க வைக்கிறது. ஒன்பதாம் வகுப்பைத் தாண்டாதவர் எப்படி சங்க இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தார் என்பது எம்மை மிரள வைக்கிறது. முழுநேர அரசியல்வாதியாக இருந்த போதும் அவரால் தொல்காப்பியப் பூங்கா, சங்கத் தமிழ் போன்ற நூல்களை எப்படி எழுத முடிந்தது? தனது 23 ஆவது அகவையில் மந்திரிகுமாரி (1947) திரைப்படத்துக்கு திரைக்கதை வசனம் எழுத முடிந்தது? அடுத்து அவரது படைப்பு மருதநாட்டு இளவரசி. இந்தப் படத்தில்தான் முதன்முறையாக “திரைக்கதை வசனம் மு.கருணாநிதி” என திரையில் காட்டினார்கள். இந்தத் திரைப்படத்தை பத்துமுறைக்கு மேல் பார்த்திருப்பேன். நான் படித்துக் கொண்டிருந்த தூய யோன்ஸ் கல்லூரிக்கு நேர் எதிரே இருந்த மனோகரா திரையரங்கில் நூறு நாட்கள் ஓடியது! இந்தப் படத்தின் கதாநாயகன் எம்ஜிஆர், கதாநாயகி வி.என். ஜானகி. இந்த இருவருக்கும் இடையில் தொடங்கிய காதல் திருமணத்தில் முடிந்தது.
தொடக்க கால தமிழ் நாடகங்கள், தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பாலும், இதிகாச, புராணக்கதைகளைஅடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக ஹரிச்சந்திரா, ஹரிதாஸ் (1943) பக்த ஹனுமான், பர்த்ருஹரி, பூம்பாவை (1944) சாலிவாகனன், பக்த காளத்தி, மீரா (1945) ஆரவல்லி சூரவல்லி, அர்த்தனாரி, குண்டலகேசி, முருகன், வால்மீகி (1946) ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, உதயணன் வாசவதத்தா, ஏகம்பவாணன், கங்கணம், சிறீ லட்சுமி விஜயம் (1947). அபிமன்யு, அஹிம்சாயுத்தம், கிருஷ்ண பக்தி, கோகுலதாசி, சக்ரதாரி, ஞானசௌந்தரி, திருமழிசை ஆழ்வார், நவீன வள்ளி, நவீன கிருஷ்ணதுலாபாரம், பக்த ஜனா, பிரம்மரிஷி விஷ்வாமித்திரா, மகாபலி (1948) போன்ற திரைப்படங்களைக் குறிப்பிடலாம்.
திரைப்படத்தை சக்தி வாய்ந்த ஊடகமாகப் பார்த்த அரசியல் தலைவர்களுள் அண்ணாவும் ஒருவர். திராவிட இயக்கத்துக்கு அது தேவை என்று கருதினார். அவர் திரைப்படங்களுக்கு எழுதியது குறைவே. ஆனால், அவரது திரை எழுத்து தமிழ் சீர்திருத்த சினிமாவுக்கு உரமாக அமைந்தது.
1949 இல் அறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதி வெளிவந்த வேலைக்காரி படம்தான் திரைப்பட வரலாற்றில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த சாதி, மதம், மூடப்பழக வழக்கங்களை வேலைக்காரி திரைப்படம் கடுமையாகச் சாடியது. அதே சமயம் சமத்துவம், பகுத்தறிவு, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாடுகளை வற்புறுத்தியது. அண்ணாவின் கதைக்காக மட்டுமல்ல அண்ணாவின் வாள்வீச்சுக்கு நிகரான சொல்வீச்சுக்கும் திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடிச் சாதனை படைத்தது. இந்தப் படத்தில்தான் அண்ணா “வேடமணியாத வேதாந்தி! மோடி செய்யாத மாது! சோடியில்லாத மாடப்புறா, சேடியில்லாத இராசகுமாரிமாரி இருக்க முடியாதாம்?” என்று எதுகை மோனை பளிச்சிடும் தமிழ் உரையாடலைத் தீட்டியிருப்பார். வேலைக்காரி முதலில் நாடகமாக (https://tamil.trendingonlinenow.in/a-view-on-velaikkari-drama-by-c-n-annadurai/) வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
1952 இல் கலைஞர் கருணாநிதி திரைக் கதை, வசனம் எழுதி வெளிவந்த பராசக்தி திரையுலகை தலைகீழாக புரட்டிப் போட்ட திரைப்படம். சிவாஜி கணேசனை அவரது முதல் படத்திலேயே கதாநாயகன் என்ற தகைமைக்கு உயர்த்திய படம். பராசக்திக்கு முன்னர் அண்ணாவின் வேலைக்காரியையும் மிஞ்சும் வண்ணம் அமைந்திருந்தது. கலைஞர் கருணாநிதி ஒரு சிறந்த கதை, வசன கர்த்தா என்பதை எண்பித்தது. அப்போது கலைஞருக்கு அகவை 25 மட்டுமே! அதற்கு முன்னர் 1947 இல் வெளிவந்த மந்திரிகுமாரி படத்துத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியிருந்தாலும் கலைஞர் கருணாநிதியின் பெயர் திரையில் காட்டப்படவில்லை. (தொடரும்)
Leave a Reply
You must be logged in to post a comment.