பண்டைய தமிழர் திருமண முறைகள்

பண்டைய தமிழர் திருமண முறைகள்

முனைவர் க.லெனின்

 June 2, 2022

ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடைபெறக்கூடிய ஒரு தகுதி உயர்த்துதல் சடங்காகும். தாய் தந்தையரின் அரவணைப்பில் வாழும் மகன் அல்லது மகள் தங்களுக்கான பருவம் வந்தவுடன் தாய், தந்தை என்னும் நிலையை அடைவதற்கான ஒன்று கூட்டுதல் சடங்காகச் சமுதாயத்தால் நிகழ்த்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு பெற்றோர்கள் நடத்தி வைப்பதற்கு முன்னர் களவு மணம் என்பது பழங்கால மணமாக நிகழ்ந்துள்ளதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறாகத் திருமணம் சார்ந்த செய்திகளை முன்வைத்து இவ்வாய்வுக்கட்டுரை நிகழ்த்தப்படுகின்றன.

முன்னுரை

       பண்டையக்காலத்தில் திருமணமுறை என்பது ஆணும் பெண்ணும் நேரில் சந்தித்து மனமும் உடலும் ஒருங்கே அமைந்து களவு என்னும் காதலை உரித்தாக்கிக் கொள்கின்றனர். “உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும் காதலர்க்கு உரிய” (நம்பியகப் பொருள் அகம்.34) என்பார் நாற்கவிராச நம்பி. களவுக்குப் பிறகே ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டு கற்பு என்னும் இல்லறத்தில் சேருகின்றனர். வாழ்நாள் முழுவதும் தனக்காகவே வாழும் ஒருவரை கண்டு தெளிந்து திருமணம் செய்துகொள்ளும் பாங்கினைச் சங்க இலக்கியங்களின் வாயிலாகச் சொல்லப் பட்டுள்ளன. அப்படிப்பட்ட இல்லறமானது சமூகத்தில் மக்களால் பெரிதும் போற்றப்பட்டது எனலாம்.

       “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
        கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
        கொடைக்குறி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”    (தொல்.பொருள்.கற்பு.நூ.1)

என்று குறிப்பிடுகிறார். அதாவது கற்பென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, சடங்கோடு பொருந்திய மரபின் அடிப்படையில், தலைவன் கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவியை, அவர்களுடைய தந்தையும் தமையன்மாரும் மணஞ்செய்து கொடுக்க, மணந்து கொள்ளுதல் ஆகுமென்று விளக்கமளிக்கிறார்.

அம்பலும் அலரும்

       ஒத்த வயதுடைய தலைவனும் தலைவியும் காதல் கொண்டு மணம் புரிந்து கொள்ளவும் தலைவனையும் தலைவியையும் பெற்றோர்கள் பார்த்து மணம் புரிந்து  வைக்கவும் (தெய்வம் கூட்ட) ஆகிய இரண்டையும் நம்பியகப்பொருள் ஆசிரியர் இயற்கைப் புணர்ச்சி எனக் குறிப்பிடுகிறார்.

என்ற நூற்பாவானது தெளிவாகக் காட்டுகிறது. இதன்வழி காதல் செய்யும் தலைவிக்கும் தலைவனுக்கும் ஊரில் அலரும் அம்பலும் ஏற்படுவது இயற்கையான ஒன்றுதான். இதனைத் தொல்காப்பியர் கூறும்பொழுது,

       “அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின்
        அங்கதன் முதல்வன் கிழவனாகும்”  (தொல்.பொருள்.களவு.நூ.49)

என்று அம்பல், அலர் இரண்டுமே களவொழுக்கத்தினைத் தெளிவுப்படுத்துதலால் வருவதாகும். இவ்வாறு நிகழ்வதற்குக் காரணம் தலைவன் என்பர். அம்பல் – முகிழ்த்தல். அதாவது ஒருவரையொருவர் முகக்குறிப்பினாலே தோற்றுவித்தல். அலர் என்பது வெளிப்படச் சொல்லுதல் ஆகும். சங்க இலக்கியத்தில் இத்தகுச்சூழல் நற்றிணையில் காணப்படுகிறது.

                “சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
                 மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி
                 மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற”(நற்.149:1-3)

என்னும் பாடலடிகள் அம்பல் நிகழுமாற்றைத் தெளிவுபடுத்துவதைக் காணலாம். ஊரில் உள்ள பெண்டிர் சிலராகவும் பலராகவும் தெருக்களில் கூடி, அவர்களின் கடைக்கண் குறித்துக் காட்டியும் சுட்டு விரலை மூக்கில் வைத்துப் பழிச்சொற் கூறியும் திரிவதால், அப்பழிச்சொற்களை அன்னை கேட்டு உண்மையென நம்பி, சினம் கொண்டாள் என்கிறது பாடல். இவ்வாறு காதலுக்கு எதிர்ப்பு நிகழ்வதைக் காணமுடிகிறது. இற்செறிப்புக் குறித்த தகவல்களையும் (அகம்.7,20,201,), (நற்.4), (கலி.124) சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. எதிர்ப்புகள் ஒருபுறம் இருப்பினும் பெரும்பாலான காதலர்களின் களவு வாழ்க்கையானது திருமணத்திலேயே முடிந்திருக்கிறது.

உடன்போக்கு

       தலைவன் தலைவியருக்கு இடையிலான காதலை அவரவர் பெற்றோர்கள் ஏற்காத பொழுது, இருவரும் உடன்போக்குச் செல்ல முற்படுகிறார்கள். குறுந்தொகை தலைவி ஒருத்தி, உடன்போக்கில் சென்று விடுகிறாள். அவளைத் தேடி செவிலித்தாய் செல்கிறாள். அப்பொழுது கண்டோரின் கூற்றாகப் பின்வரும் பாடல் இடம்பெறுகிறது.

        “வில்லோன் காலன கழலே தொடியோள்
         மெல்லடி மேலவும் சிலம்பே”(குறுந்.7:1-2)

ஆடவன் கால்களில் வீரக்கழல் அணிந்திருந்தான் என்றும் அவன் வளையல் அணிந்த கைகளையுடையவளும் மெல்லிய அடிகளின் மேல் சிலம்பும் அணிந்திருந்தவளுமாகிய தலைவியை உடன்போக்கில் அழைத்துச் சென்றான் என்றும் கூறுகின்றாள். இதனைக் கலித்தொகை,

       “பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லது
        மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என் செய்யும்
        நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே”  (கலி.9:12-14)

என்று ஒத்த அன்புடைய இருவர் சேர்தலே இயல்பு என்பதைக் கண்டோர் உணர்த்துகின்றனர். இவ்வாறான செய்திகள் சங்க இலக்கியப் பாடல்கள் (குறுந்.56), (ஐங்.374), (நற்.29), (அகம்.117,145,165,219,383) பலவற்றில் இடம்பெறுகின்றன. தன் மகள் தலைவனுடன் உடன்போக்குச் சென்றுவிட்டதை அறிந்த நற்றாய் தனக்கு இது முன்னமே தெரிந்திருந்தால் திருமணம் நடத்தி வைத்திருப்பேனே என்று புலம்புவதாக அகநானூற்றின் 315ஆம் பாடல் குறிப்பிடுகிறது. மேலும் இதுபோல் உடன்போக்குச் சென்ற தலைவியால் பெற்றோர்கள் துன்பப்படுதலும் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

திருமணம் பேசுதல்

       ஊரில் ஏற்பட்ட அலரும் அம்பலும் வீட்டுக்குத் தெரிய வருகின்றது. ஒருசில பெற்றோர்கள் தலைவனுக்குத் தலைவியைத் திருமணம் செய்தும் கொடுத்திருக்கிறார்கள். தலைவியுடைய காதல் தாய்க்குத் தெரிய வரும்போது, அவள் வதுவைக்கு (திருமணம்) நாள் குறிக்கின்றாள். அதனால் தலைவி மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். இதனைக் குறுந்தொகையின் 248ஆம் குறிப்பிடுகிறது. மேலும் குறிஞ்சி நில மக்கள் வேங்கைப் பூ மலரும் காலத்தையே திருமணம் முடிக்கும் நாளாகக் கொண்டிருந்தனர் என்பதைப் பின்வரும் பாடலால் அறியலாம்.

       “மென்தோட் கிழவனும் வந்தனென் நுந்தையும்
        மன்றல் வேங்கைக் கீழ் இருந்து
        நயந்தனன் அம்மலை கிழவோர்க்கே”(கலி.41:42-43)

என்று தலைவனுக்குத் தலைவியை மணம் முடிக்கும் காலம் குறிஞ்சி மலரும் காலமாகக் குறிக்கப்பட்டதைப் பழங்கால வழக்கமாகக் கொள்ளலாம். இச்செய்தி கலித்தொகையின் 38ஆம் பாடலிலும் குறுந்தொகையின் 367ஆம் பாடலிலும் இடம்பெறுவதைக் காணமுடிகிறது. பொய்மை இல்லாத தலைவனுக்குப் பெண் கொடுக்க பெற்றோர் விரும்பியதைக் கலித்தொகை (107), ஐங்குறுநூறு (145) ஆகிய இலக்கியங்கள் சுட்டுகிறது. தனக்கும் தலைவனுக்கும் திருமணம் நிகழப்போகிறது என்பதை அறிந்த தலைவி பசலை நீங்கப்பெற்று, புத்துணர்ச்சியோடு காணப்பட்டாள் என்பதை ஐங்குறுநூறு கூறுகிறது.

மகட்பேசுதல்

       தலைவன் தலைவியைத் தன் சுற்றத்தாரோடு சென்று மகட்பேசி முடிக்கும் வழக்கம் பழந்தமிழரிடையே இருந்துள்ளது. “காதலுக்குத் திருமணமின்றேல் சமுதாயத்திற்கு வாழ்வில்லை. ஆதலின் அகத்திணை கண்ட தமிழ்ச் சான்றோர் வரைவை – மன்றலை – வலியுறுத்தினர் என்க”1 என்ற வ.சுப. மாணிக்கனாரின் கூற்றாக மன்றலின் முக்கியத்துவத்தைப் பொன்னுசாமி குறிப்பிடுகிறார்.

              “அம்சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன்
                 வந்தனன் எதிர்ந்தனர் கொடையை
                 அம்தீம் கிளவி பொலிக நின் சிறப்பே” (ஐங்.300:2-4)

என்ற பாடலில் பெரிய மலையினை உடைய தலைவன் தன் சுற்றத்தாருடன் பெண் பார்ப்பதற்காக வருவதையும் அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கிய தலைவியின் பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்ததையும் காணமுடிகிறது. இதேசெய்தி நற்றிணையிலும் (393) இடம்பெறுகிறது. தனக்குப் பெண் கொடுக்க முற்பட்ட தலைவியின் பெற்றோர்களுக்கும் தமர்க்கும் தன்னுடைய ஒரு நாட்டையே எழுதிக் கொடுத்துள்ளான் தலைவன். இதனை,

       “ஒண் தழை அயரும் துறைவன்
        தண் தழை விலை என நல்கினன் நாடே”(ஐங்.147:2-3)

என்ற பாடல் காட்டுகிறது. எனவே “மணமகன் வீட்டார் பெண் கேட்டு வருவதும் பெண் வீட்டார்க்கு அவன் பரிசம் அல்லது முலைவிலை என்னும் பொருட்கொடை நல்குவதும் பழங்காலத்தில் வழக்கமாக இருந்துள்ளது”2 என்னும் இறையரசனின் கூற்று இங்கு சிந்தித்தற்குரியது. பெண்களுக்குப் பொருள் அளித்தோ அல்லது அவள் பொருளுடன் வருவதோ அவளுக்கான பொருளியல் பாதுகாப்பினை நல்கியது எனலாம். “திருமணம் தவிர்க்க முடியாதது, இன்றியமையாதது. இதனைப் புரிந்து கொள்ளுவோமேயானால் நயமும் பொருத்தமும் உடையதாகத் திருமணத்தைச் செய்ய முடியும்”3 என்று பெர்னாட்சாவின் கூற்றைச் சான்று காட்டுகிறார் மு. பொன்னுசாமி. இவரது கூற்றுப்படிப் பணமும் பொருளும் இல்லாமல் மனம் சார்ந்த வாழ்க்கையாக அமைவது நன்றாகும். புதிய மலர்களைச் சூட்டி தலைவிக்குத் திருமண ஏற்பாடுகளைப் பெற்றோர்களும், தமையன்மாரும் செய்வதைக் கலித்தொகை (114) குறிப்பிடுகிறது. தலைவனும் தன் மலையிடத்து உள்ள குடியிருப்புக்கள் எல்லாம் பொலிவு பெறுமாறு செய்தும் மன மகிழ்ச்சியுடனும் சுற்றத்துடனும் இருந்தான் (நற்.393) என்று திருமண நிகழ்வை நற்றிணை குறிப்பிடுகிறது. திருமணத்தில் களவு மணம் அல்லாது “ஆடவன் அத்தை மகள் அம்மான் மகளை மணப்பதும், பெண் மக்கள் முகத்தில் மஞ்சள் பூசிக் குங்குமப்பொட்டு அணிவதும் தமிழரின் வழக்கங்கள்” எனக் கே.கே. பிள்ளை குறிப்பிடுகிறார்.

திருமணப் பொருத்தம்

       திருமணத்திற்குரிய பொருத்தங்களாகத் தொல்காப்பியர் சிலவற்றை முன்மொழிகிறார். ஆடவனுக்கும் பெண்ணிற்கும் இருக்கவேண்டிவைகளாக இவை பழங்காலத்தில் கருதப்பட்டிருக்கலாம்.

       “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
         உருவு நிறுத்த காமவாயில்
        நிறையே அருளே உணர்வொடு திருவென
        முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே”  (தொல்.பொருள்.மெய்ப்.நூ.25)

என்ற தொல்காப்பிய நூற்பாவில், திருமணத்திற்கு இருக்க வேண்டியப் பத்துப் பொருத்தங்களாக, ஒத்த பிறப்பும்  ஒத்த ஒழுக்கமும் ஒத்த ஆண்மையும் ஒத்த ஆண்டும் அழகும் அன்பும்  நிறையும் அருளும்  அறிவும் செல்வமும் என்று வரிசைப்படுத்துகிறார். இவ்வாறு பொருத்தம் பார்த்து நல்ல மணநாளை குறிப்பதற்கு ஏதுவாக வேங்கை மலரும் பூத்தது (அகம்.133). மண நாள் குறித்தவுடன் மழவர்கள் திருமணத்திற்குச் செல்வதற்காகத் தன்னை மிகவும் அழகுப்படுத்திக்கொண்டார்கள் என ஐங்குறுநூறு (432) கூறுகிறது.

திருமணம் நிகழும் முறை

       சங்ககாலத் திருமண முறை குறித்து அதிகப்படியான பாடல்களில் குறிப்புகள் இல்லை. ஆனால் அகநானூற்றில் இது பற்றி விரிவான விளக்கம் இடம்பெறுகிறது.

       “உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
        பெருஞ் சோற்று அமலை நிற்ப நிரைகால்
         தண் பெரும் பந்தர்த் தரு மணல் நெமிரி
        மனை விளக்குறுத்து மாலை தொடரி
        கனை இருள் அகன்ற கவின்பெறு காலை
         கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
         கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென
        உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
        பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
         மன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர
        புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
         வாள் இழை மகளிர் நால்வர் கூடி
         கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
        பெற்றோற் பெட்கும் பிணையை ஆக என
        நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
        பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
        வதுவை நல்மணம் கழிந்த பின்றை” (அகம்.86:1-17)

என்ற பாடலில், திருமண நாளன்று உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த குழைவாக வெந்தப் பொங்கலொடு பெருஞ் சோற்றுத் திரளை உண்பது இடைவிடாது நடந்து கொண்டே இருந்தது. வரிசையாகக் கால்களைக் கொண்டு குளிர்ந்த பெரிய பந்தலை அமைத்திருந்தனர். அப்பந்தலிலே கொண்டு வந்த மணலைப் பரப்பினார்கள். மனையின் கண் விளக்கினை ஏற்றி மாலைகளைத் தொங்கவிட்டனர்.

       அந்நாளானது தீய கோள்கள் நீங்கப்பெற்ற வளைந்த வெண்மையான திங்களைத் தீமையற்ற ரோகிணி நட்சத்திரத்தில் கூடிய நன்னாளில் மணநாளாகக் குறித்தார்கள். அந்நாளிலே மணம் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் தலையில் நீர்க் குடத்தினைச் சுமந்தவராய்ப் புதிய அகன்ற மண்டை என்னும் கலத்தினை ஏந்தியவராய் ஒன்று கூடுவார்கள். முன்னே தருவனவற்றையும் பின்னே தருவனவற்றையும் முறை முறையாக எடுத்துத் தந்த வண்ணம் இருந்தனர்.

       தேமல் படர்ந்த அழகிய வயிற்றினையுடைய தூய அணிகலன்களை அணிந்த மகனைப் பெற்றெடுத்த மகளிர் நால்வர் கூடிநின்று, கற்பினின்றும் வழுவாது நல்ல பலவற்றினும் உதவியாக இருந்து, நின்னை மனைவியாகப் பெற்ற நின் கணவனைப் பேணிக் காக்கும் பெருவிருப்பத்தை உடையை ஆகுக எனக் கூறி வாழ்த்தினர். வாழ்த்தியவராய் நீரோடு குளிர்ந்த இதழ்களுடைய மலர்களை நெல்லுடன் கலந்து அவளது பலவாகிய கரிய கூந்தலையுடைய தலையிலே தூவினர். இவ்வாறாக வதுவை மணமும் நடந்து முடிந்தது. இச்செய்தி அகநானூற்றின் 136ஆவது பாடலிலும் கலித்தொகையின் 115ஆம் பாடலிலும் இடம்பெறுவதைக் காணமுடிகின்றன. ஆனால் மேற்குறிப்பிடும் திருமண முறையில் தாலி கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. வாழ்த்துச் சொல்லுதல் மட்டும் வந்துள்ளது. வாழ்த்துதலுக்கு அத்தனைப் பெரிய மதிப்பும் அதனுடைய உயர்வும் இருந்திருக்க வேண்டும். குறிஞ்சிப்பாட்டில் தலைவியின் வீட்டார் தலைவனிடத்தில் பெண்ணைக் கொடுக்கும் செய்தி இடம்பெறுவதைக் காணமுடிகிறது.

              “நேர் இறை முன்கை பற்றி நுமர்தர
                நாடு அறி நல்மணம் அயர்கம்”(குறிஞ்சி.231-232)

என்னும் அடிகள் தலைவியின் வீட்டார் பெண்ணளிப்பதைக் காட்டுகின்றன. இவ்வாறே சான்றோர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் திருமணமாக (அகம்.385) (சிலம்பு.1:47), (சீவக.2697) இலக்கியங்களில் காணமுடிகின்றன.

சிலம்பு கழித்தல்

       பெண்ணிற்குத் திருமணத்திற்கு முன்னர் சிலம்பு கழித்தல் என்னும் சடங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு சிலம்பு கழித்த பின்னரே ஒரு பெண் திருமணம் செய்யத் தகுதியானவளாகக் கருதப்பட்டாள்.

              “நும்மனைச் சிலம்பு கழிஇ அயரினும்
                எம் மனை வதுவை நல்மணம் கழிக”(ஐங்.399:1-2)

என்னும் அடிகளில் பெண்களுக்கு மணமாகும் முன்பு பெற்றோர் அணிவிக்கும் கன்னிச் சிலம்பினைத் திருமணத்திற்கு முன்னர் கழிப்பது ஒரு மரபாகும். அதனைச் சிலம்புகழி நோன்பு என்றனர். இத்தகு நோன்பு தலைவியின் வீட்டில் நிகழ்த்துவது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்டது (நற்.229).

தாலி

       மணமான பெண்களின் அடையாளக் குறியீடாக விளங்குவது தாலி எனப்படும் மங்கள நாண் ஆகும். சங்க இலக்கியத்தில் தாலியைப் ‘புதுநாண்’ (குறுந்.67:3) என்று குறிக்கின்றனர். இது வேப்பம்பழம் போன்ற வடிவத்தில் இருந்ததாகக் குறுந்தொகைக் குறிப்பிடுகிறது. “கழுத்தில் தடையாக அணிந்த நூல் தாலி என்று பெயர் பெற்றது. தாலிக்கே நூல் என்ற பெயர் உண்டு. தாலியிழந்த பெண்ணை நூலிழந்தவள் என்பர். தாலி பொன்னால் செய்யப்பட்ட பொற்றாலி என்று பெயர் பெற்று இருந்தாலும் அதனுள்ளே மங்கல நாணாகிய நூலை இடும் வழக்கம் இன்றும் உண்டு. குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்க ஐம்படைத்தாலி கட்டுவது வழக்கம்”5 என ரா.பி. சேதுப்பிள்ளை கூறுகின்றார். விக்கிப்பீடியாவில் தாலி என்ற சொல்லானது, “ஆண் பெண்ணுக்குக் கட்டும் ஒருவகை கழுத்துச் சங்கிலி ஆகும். தாலி அணிந்த ஒரு பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கியக் குறியீடு. தாலி கட்டும் வழக்கம் திராவிட மக்களிடம் காணப்படுகின்றது. பெண்ணியப் பார்வையில் ஆண்கள் தாம் திருமணமானவர் என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம் மெட்டி என்று குறியீடுகளைத் திணிப்பது ஓர் ஆண் ஆதிக்கச் செயற்பாடாகப் பார்க்கப்படுகின்றது”6 என்ற விளக்கம் பெண்ணிற்கான குறியீடாகத் தாலி விளங்குவதை எடுத்துரைக்கிறது.

தாலி பெயர்க்காரணம்

       “தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத்தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டிக் கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலிதான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத்தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்) தாலியின் சூட்சூமம் மஞ்சள், கயிறு, கட்டுதல் ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மாங்கலியம், மங்கலவணி எனச் சொல்லும் தாலியை மண் அடையாள வில்லையைக் குறிக்கும்”7 என விக்கிப்பீடியா தாலி என்பது பற்றியும் அதன் விளக்கம் அடங்கியப் பொருள் பற்றியும் கூறுகிறது.

       தாலி அணிந்த பெண்களை “வாலிழை மகளிர்”(குறுந்.386:3) என வெள்ளி வீதியார் குறுந்தொகை நூலில் அழைக்கின்றார். “தாலி கட்டும் வழக்கத்தை முதன் முதல் தெரிவிக்கும் கல்வெட்டுக் கி.பி. 958 ஆம் ஆண்டுக்கரியதாகும் என்று கே.கே. பிள்ளை கூறுவதாக”8 இறையரசன் கூறுகின்றார். தாலி என்ற ஒன்றை ஒருத்தி அணிந்திருந்தாளானால் அவள் ஒரு ஆடவனுக்கு உரியவள் என்பதைக் காண்போர் உணர்வர். அவளை காம நோக்குடன் பார்ப்பதோ அல்லது வேறு தவறான நடத்தைகளுக்கு இணங்கச் செய்வதையோ தவிர்ப்பர். எனவே தாலியானது பெண்ணிற்குப் பாதுகாப்பளிப்பதாக இச்சமூகம் கருதுகிறது எனலாம்.

பிள்ளைப்பேறு

       திருமணம் ஆன பிறகு கணவனும் மனைவியும் ஒற்றுமையாகத் தங்களின் இறுதிக் காலம்வரை வாழ வேண்டுமானால், பொருளையும் பொன்னையும் விட பிள்ளைப்பேறு அவசியமான ஒன்றாகும். இந்நிலையைக் குறுந்தொகைக் கூறும்போது,

       “புதல்வற் றழீஇயினன் விறலவன்
        புதல்வன்தாய் அவன் புறம் கவை இயினளே”(குறுந்.359:5-6)

என்னும் அடிகளில் மணம் கமழ்கின்ற மலர்ப்படுக்கையில் தலைவன் பெரும் அன்பால் தன்னுடைய புதல்வனைத் தழுவியவாறு உறங்குகின்றானாம். அதைக் கண்ட தலைவி பாசத்துடன், புதல்வனைத் தழுவிக் கிடக்கும் தன் கணவனின் புறத்தைத் தலைவி வளைத்துக் கொண்டதாகப் பாடல் குறிப்பிடுவதை அறியலாம்.

       “மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
         நன்கலம் நன்மக்கட் பேறு”(குறள்.6:10)

என்று திருக்குறள், மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலமாகும் என்றும் மக்களைப் பெறுதல் அதற்கு அணிகலன்களாகும் என்றும் குறிப்பிடுகிறது.  உடன்போக்கில் சென்ற தலைவி திருமணம் முடிந்து தன் பெற்றோர்களைப் பார்க்க வருகிறாள் என்று ஐங்குறுநூறு (400) கூறுகின்றது. உடன்போக்கில் சென்ற மகளின் தவறுகளை மறந்து அவர்களை எல்லா நிலைகளிலும் ஏற்றுக் கொள்கின்றனர் தலைவியினது பெற்றோர்கள். தலைவன் தலைவியை விட்டுவிட்டு இரண்டாவதாகக் காமக்கிழத்தியை அறநூல் கூறிய வழியில் பெருமணம் புரிந்தான் என கலித்தொகை (96) கூறுகின்றது. சங்க காலத்தில் ஆடவர்கள் மனைவியைத் திருமணம் செய்தும் காமக்கிழத்தி, பரத்தையரிடம் செல்வது போன்ற நடவடிக்கைகளை வழக்கமாக வைத்திருந்தனர் என இதனால் அறியலாம். ஆனாலும் வள்ளுவரின் கூற்றுப்படி ஊடலுக்குப்பின் காமம் இனிது என்பதற்கிணங்க தலைவனும் தலைவியும் இல்லறம் சிறப்புடன் அமைய வாழ்ந்தனர் என்கிறது சங்க இலக்கியங்கள். “இல்லறத்திற்குப் பின் முதுமை தொடங்கும்பொழுது கணவனும் மனைவியும் ஊரின் கண்ணே தனியே இருந்து தவவாழ்க்கை மேற்கொள்ளுதல், ஒரு சமூகக் கட்டுப்பாடாக இருந்துள்ளது”9 என மு. கோவிந்தசாமி சொல்வது இங்கு எண்ணுதற்குரியது. அக்கால சமூகத்தினர் கடைசிவரை தன்னுடைய துணையைப் பிரியாமல் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

முடிவுரை

       தன்னுடைய எதிர்கால துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை ஒவ்வொருவருக்கும் அக்காலத்தில் வழங்கப்பட்டிருந்தது. தமிழரின் பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் பற்றிய பழக்கங்களும் வழக்கங்களும் இன்றுவரை நம் சமுதாயத்தில் பயன்படுத்தி வருகின்றோம். திருமணம் என்ற ஒற்றை வார்த்தையில் முடிந்துபோவது இல்லை வாழ்க்கை. பந்தம், பாசம், அனுசரிப்பு, விட்டுக்கொடுத்தல், விருந்தோம்பல் என்ற ஐந்தின் அடிப்படையில் தொடங்குவதுதான் திருமணம்.

சான்றெண் விளக்கம்

1. மு. பொன்னுசாமி, சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள்,  
   ப.180.

2. பா. இறையரசன், மு.நூ., ப.270.

3. மு. பொன்னுசாமி, மு.நூ., ப.180.

4. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், ப.65.

5. ரா.பி. சேதுப்பிள்ளை, தமிழகம் அலையும் கலையும், ப.177.

6. தமிழ் விக்கிப்பீடியா.

7. மேலது.

8. பா. இறையரசன், மு.நூ., ப.270.

9. மு. கோவிந்தசாமி, தமிழக வரலாறு, ப.49.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
எம்.ஜி.ஆர் கல்லூரி,
ஓசூர் – 635 130,

 Gmail : iniyavaikatral@2kupans1956

About editor 3046 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply