காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கும் தமிழக மக்கள் திருமண வாழ்வியல் முறைகள்

காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கும் தமிழக மக்கள் திருமண வாழ்வியல் முறைகள்

கி.நடராசன்

ஒரு சுருக்கமான வரலாற்று கண்ணோட்டம்

திருமணம் என்பது மகிழ்ச்சி, இன்பம் தரும் இனிய சொல்.. செயல்! இச்செயல், சொல் என்பது ஆண் பெண் இருபாலர் உள்ளத்திலும் இனிய உணர்வு, பூரிப்பு, புத்துணர்ச்சி, பழைய இனிய நினைவுகள், புது கனவுகள் எழாமல் இருப்பதில்லை. அது வெறும் சடங்கு, சம்பிரதாயங்கள் மட்டும் கிடையாது.

“திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்” என்பது தமிழ் மக்கள் பழமொழி – அனுபவ சொலவடை! மாந்த இனம் தோன்றி பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

இயற்கையை, பிற உயிரினங்களை புரிந்துக் கொள்வதற்கான, உயிர் வாழ்வதற்கான போராட்டத்தில் மனிதர்கள் சமூகமாக இணைந்து வாழ தலைப்பட்டனர். இதில் உழைப்பு என்பது தனியாக பிற உயிர்களிடம் இருந்து மனித இனத்தை பிரித்துக் காட்டியது.

இந்த உழைப்புதான் மனித குல வளர்ச்சிக்கு, அறிவிற்கு, செல்வத்திற்கு, ஒருங்கிணைந்த வாழ்விற்கு, குடும்பம், திருமண முறைகள், நயத்தக்க நாகரிகத்திற்கு மூல காரணமாக இருந்தது. தமிழர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

தமிழ் மக்கள் வாழ்வியலில் ஒர் ஆணும் பெண்ணும் ஒன்றிணைந்து வாழ எண்ணிய பொழுது நயத்தக்க நாகரிக சமூகங்கள் ஒழுங்கு நிலைகள் உருவாக்கப்பட்டன.

மனங்கள் இயைந்து ஒன்று பட்டு வாழும் மணமக்கள் தம்மை சார்ந்தவர்களிடம் இணைந்து புரிந்து வாழ எண்ணிய பொழுது அவரவரவர்க்கு ஏற்ற மணமுறைகள் தோன்றின.

சமூக வளர்ச்சிகளுக்கும், மாற்றங்களுக்கும் ஏற்ப மணமுறைகளில் பல மாறுதல் தோன்றின. தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்கின்றன. ஏனெனில் அனைத்தும் மாறும், மாறிக் கொண்டு இருக்கும் என்பது மாறாத இயங்கியல் கோட்பாடு என்பது ஓர் அறிவியல் உண்மை.

தமிழர் வரலாற்றில் தொல்காப்பியம் காட்டும் திருமண முறைகள்,
சங்க காலத் திருமணம்,
சிலப்பதிகாரம் – மணிமேகலை காலத் திருமண முறை,
இடைக்காலத் தமிழ் நாட்டு திருமண முறைகள்,
பிற்காலத் தமிழர் திருமண முறைகள்,
நிகழ்கால சீர்திருத்தத் திருமணங்கள்

என்று விரிவான தலைப்புகளில் முனைவர் வி.சி.சசிவல்லி அவர்கள் “தமிழர் திருமணம்” என்ற நூலில் பிரித்து விளக்குகிறார்.

பலரும் இவ்வாறும், இதை ஒட்டியே பலரும் திருமண முறைகளை பிரிக்கின்றனர். அவற்றை விரிவாக சிறு கட்டுரையில் விளக்குவது சரியல்ல என்பதனால் சுருக்கமாகப் பார்ப்போம்!

ஏடு ஏறிய பழந்தமிழர்கள் வரலாற்றில் அதாவது சங்க கால தமிழ்நாட்டில் வதுவை நன்மணம் என்ற பெயரில் திருமணம் நடைபெற்றது என்று கே.கே. பிள்ளை தமிழர் வரலாறும் தமிழர் பண்பாடும் நூலில் குறிப்பிடுகிறார்.

நல்ல நாளில் நட்சத்திரம் பார்த்து புது மணல் பரப்பிய பந்தலில் மங்கல மகளிர் பூவிதழ்கள் நெல்மணிகள் சொரிந்த நன்னீரில் மணமக்களை நீராட்டி வாகை இலைகள், அருகம்புல் கோர்த்த மாலைகள் அணிவித்து பல சடங்குகளை செய்து இறுதியில் மணமகளை மணமக்களின் கையில் ஒப்படைப்பதுடன் திருமணம் முடிவுறும்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு புராதன பொதுவுடமைக் காலத்தின் தொடர்ச்சி, எச்சங்களுடன் உழவுத் தொழிலைப் பிரதானமாக கொண்ட சமுதாயத்தில் நிலவிய தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை இச்சடங்குகள் படம் பிடித்துக் காட்டுவனவாக உள்ளன.

விரிவாக தொல்காப்பியம் இல்லற வாழ்வில் இணைவோர் பத்து பொருத்தங்கள், பத்து பொருந்தாதவைகள் எவை என்று வகுத்துக் கூறுகிறது. அவைகள்

“பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு
உருவு, நிறுத்த, காம வாயில்
நிறையே, அருளே, உணர்வோடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே ( தொல்காப்பியம் பொருள் 273)
“நிம்புரி, கொடுமை, வியப்போடு, புறமொழி
வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போ டொப்பமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்”

இதைதான் இன்றும் பத்து பொருத்தங்கள் என்று இன்றும் கூறுகின்றனரோ? அல்லது அதில் மாற்றங்கள் செய்யப்பட்டதா என்பது ஆய்வுக்கு உரியவை.

இல்லற வாழ்வில் இணையும் ஆணும், பெண்ணும் தொடக்க விழாவான திருமணம் ஆயிரம் காலத்திற்கு நிலைத்து நிற்பதற்கான வழி வகைகள் ஆராய்ந்து அக்கால வாழ்வியலுக்கு இயைந்ததை தேர்ந்தெடுத்தது. தொல்காப்பியம் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர் மேற்கொண்ட களவு மணம், கற்பு மணம் முறைகளையும் விளக்கின. அதோடு எட்டு வகையான ஆரிய மண முறைகளையும் கூறியது.

தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல் நூலாகக் கொண்ட வழிநூலான நன்னூல் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்று காலம்தோறும் அனைத்தும் மாறும் என்ற இயக்கவியல் கோட்பாட்டை முன் அன்றே முன் மொழிந்ததையும் இணைத்து புரிந்து கொள்ள வேண்டும். இது திருமண முறைகளுக்கும் பொருந்தும்! திருமண முறைகள் காலந்தோறும் மாறும் என்பதே தமிழர் கோட்பாடு!

சங்க காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை:

உலகத்தின் அனைத்து மனித சமூக குழுக்களை போலவே தமிழ் மொழி பேசும் சமூகமும் பல்வேறு மாறுதல்களை தனக்குள் கொண்டதாகும். தொல்காப்பியம், சங்க காலம் என்பன பழமையான சமத்துவ சமூக வாழ்வில் இருந்து வளர்ச்சியடைந்த வர்க்க சமூகமாக மாறிய காலமாகும்.

இந்த காலம்தான் வர்க்கங்கள், அரசுகள், சமயங்கள் தோன்றிய காலமாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணை வாழ்வியல் கோட்பாடு கொண்ட சமூகமாக இந்த காலம் இருந்தது. இந்த ஐந்திணைகளுக்கு ஏற்ப திருமண முறைகளும் மாற்றம் கொண்டிருந்தன.

பொதுவாக களவு மணம், கற்பு மணம் என்ற இரு பிரிவுகளாக மணமுறைகள் இருந்தாலும் சங்ககாலத்தில் 10 வகையான திருமண முறைகள் இருந்தன. அவைகள்

1.களவு மணம்
2.தொன்றியல் மரபின் மன்றல்
3.பரிசம் கொடுத்து மணத்தல்
4.சேவை மணம்
5.திணைக் கலப்பு மணம்
6.ஏறு தழுவி மணமுடித்தல்
7.மடலேறி மணமுடித்தல்
8.போர் நிகழ்த்தி மணமுடித்தல்
9.துணங்கையாடி மணத்தல்
10.பலதார மணம்

சுருக்கம் கருதி அக்கால இலக்கியத்தில் கீழே கண்ட வெகுசில பாடல்கள் அக்காலத்தின் திருமண வாழ்வியல் முறையை விளக்குவதாக இருக்கும் என கருதுகிறேன்

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
(குறுந்தொகை 40வது பாடல்)

“காதல் இருவர் கருத்து ஒருமித்து – ஆதரவு
பட்டதே இன்பம் – ஔவையார்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (திருக்குறள் 45)

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அன்பு, அறம் என்ற சொற்களுக்கு இப்பொழுது பலரும் பயன்படுத்தும் பொருளில் அல்ல. குறிப்பாக எழுத்தாளர் ஜெயமோகன் பயன்படுத்தும் அறம் என்ற சொல்லுக்கான கருத்து அன்று வேறாகவே இருந்தது.

திருவள்ளுவர் காலத்தில் இதற்கு சமூக அன்பு, சமூக அறம் என்ற அர்த்தம் தான் இருந்தது. மிகுந்த விரிந்த பொருளில் அவை இருந்தன.

சிலப்பதிகாரம் – மணிமேகலை கால கட்டத்தில் பழந்தமிழர் போற்றிய திருமண முறைகள் ஆரிய ( பிராமணர் ) கலப்பு ஆதிக்கத்தினால் மாற்றம் கண்டது.

வேத முறைகளை பின்பற்றிய சடங்குகள் அதாவது வர்ணாசிரம பாகுபாடுகள், குலப் பாகுபாடுகள், தமது செல்வகுடி தமது உறவுகளுக்குள் தொடர்தல் போன்றவைகள் தமிழர் திருமண முறையில் கலக்கப்பட்டன.

அவற்றில் பல இன்று வரை தொடர்கிறது. ஆனால் நவீன அறிவியல் கண்ணோட்டமானது நெருக்கிய இரத்த உறவுகளுக்கு இடையிலான தாம்பத்திய உறவில் பிறக்கும் குழந்தைகளின் மரபணு குறைபாடுகள் தொடரும் என்று நம்மை எச்சரிப்பதை நினைவு கொள்ள வேண்டி இருக்கிறது.

தமிழ்நாட்டில் 6 ஆம் நூற்றாண்டு முதல் பிரட்டிஷ் காலம் வரை சாதி நிலவுடமை சமூக வாழ்க்கை படிப்படியாக உருவாகி திடப்பட்டது. நாயன்மார், ஆழ்வார் பாடல்கள், பெரியபுராணம், கம்பராமாயணம், சூளாமணி உட்பட பல இலக்கியங்களில் ஆரிய கலப்புடன் மாறிய பல திருமண முறைகள் உருவாகின.

வட இந்தியாவுக்கே உரிய சுயம்வர மணம் சூளாமணியில் விளக்கப்பட்டதைக் காண முடியும். சாதி, குலம், கோத்திரம், பார்ப்பனீய சடங்குகளுடன் திருமண முறை மாறியது.

மூடுட்ட அக மணமுறைக்குள் சமூகத்தை பார்ப்பனீயம் பலவந்தமாக கருத்தியல் திணிப்பு செய்து இழுத்துக் கொண்டு சென்றது. தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் பெரும்திரளான மக்களை தங்கள் அதிகாரத்திற்குள் கட்டுப்படுத்த பார்ப்பனீயத்தை, சனாதன தர்மத்தை சிறந்ததாகக் கருதி தங்கள் ஆதிக்க நோக்கில் அதை செயல்படுத்தினர்.

தமிழ்நாட்டில் தோன்றிய ஆசிவகம், தமிழ் சமணம் போன்றவைகள் பார்ப்பனீய மதத்தினால் மெல்ல உட்செறிக்கப்பட்டு உருத் தெரியாமல் சிதைக்கப்பட்டன. சைவ, வைணவ சமயங்கள் தோன்றின.

இவை சில விசயங்களில் பார்ப்பனீயத்துடன் முரண் பட்டாலும், பெரும்பாலும் பார்ப்பனீயத்தால் உட்செறிக்கப்பட்டதாகவே இருந்தன. இதற்கு தகுந்தாற் போல் திருமண முறைகள், சடங்குகள் இக்காலகட்டத்தில் மாறின.

மணமகளுக்கு தாலி கட்டுதல் முறை இன்றைக்கு முக்கியமான ஒன்றாகும். ஆனால், திருமண தமிழ்நாட்டில் 10 ஆம் நூற்றாண்டில்தான் உருவானதாக இலக்கியங்கள், வரலாற்று சான்றுகள் எடுத்துக் கூறுகின்றன.

தமிழ் அறிஞர்கள் பலரும் இதை தெளிவாக சான்றுகளுடன் நிருபித்துள்ளனர். 11 ஆம் நூற்றாண்டில் கந்தபுராணத்தில் எடுத்துக் கூறுகின்றன.

தமிழர் கடவுள் முருகனுக்கு வள்ளியுடன் காதல் திருமணம் நடந்து இருந்தது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால், பார்ப்பனீயம் தமிழ் கடவுளான முருகனுக்கு இரண்டாம் திருமணமாக தெய்வயானையை செய்யும் நிகழ்வில் மங்கல நாணை மணமகள் கழுத்தில் அணிவித்ததாக கந்தபுராணம் கூறுகிறது.

சிவன், பார்வதி, விநாயகனை முருகனின் உறவுகளாக புனை கதைகளை புராணங்களாக மாற்றி அதை மக்களிடம் பார்ப்பனீயம் பரப்பின. இந்த இலக்கியங்களில், புராணங்களில் மணமகளுக்கு தாலி அணிவித்தல் விவரிக்கப்படுகிறது.

இந்த தாலி அவரவர் வணங்கும் தெய்வங்கள், சாதிகள், கோத்திரங்களுக்கு ஏற்ப பல்வேறு விதங்களில் செய்யப்பட்டன. இன்றும் நடைமுறையில் செய்யப்படுகின்றன.

சாதிய வைதீக திருமண நிகழ்வு உறுதி கூறல், சுமங்கலி பிரார்த்தனை, பந்தகால் நடுதல், கல்யாணப்படி, அரசாணிக் கால், திருமண எழுச்சி – வரவேற்பு, காப்பு கட்டுதல், காசி யாத்திரை, நுகத்தடி வைத்தல் கூறை ஆடை அணிதல், பாத பூஜை, முளைப்பாளிகை.

மாங்கல்ய தாரணம், நீர் வார்த்தல், தாலிக்கு பொன்னுருக்கல், பட்டம் கட்டுதல், தாலி அணிவித்தல், கைத்தலம் பற்றல், சப்தபதி (தீவலம் வருதல்), அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், பொரியிடுதல் மாலை மாற்றல், ஆசி கூறுதல், நாலாம் நீர்ச் சடங்கு, தேங்காய் உருட்டல் போன்ற மணச் சடங்குகள் பிராமணர் சமஸ்கிருத மந்திரம் ஓதி நடத்துதல் என்பது படிப்படியாக தமிழக மக்கள் திருமணச் சடங்குகளில் நுழைக்கப்பட்டன.

இவை அக்காலத்திற்கு சூழ்நிலை, தேவையே இருந்திருக்கலாம். திணிக்கப்பட்டு இருக்கலாம். இன்று இவைகள் அனைத்தும் தேவையா என்பது சிந்தித்து, பகுத்தாய்ந்து பார்க்க வேண்டும்.

இந்த சடங்குகளால் “கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப்பார்” போன்ற பழமொழிகள் வழக்கத்தில் வந்தன. இவை இருமனங்கள் இணையும் நிகழ்வை மிகுந்த பொருட் செலவு பிடிப்பவையாக மாற்றி விட்டன.

இன்று “பெண் குழந்தையா கவலையை விடுங்கள் உங்கள் செல்ல மகளுக்கு இன்றே சேமிங்கள்”, திருமண விகாஸ் பத்திரம், பெண் குழந்தைகளுக்கான தபால் துறை சேமிப்பு பத்திரம் போன்ற நமது மூளையை சலவை செய்யும் எண்ணற்ற விளம்பரங்களுக்கும் திருமணம் என்பது ஒரு பெரும் செலவு பிடிக்கும் செயலாக நமது சமூகத்தில் நிலவுவதையே பறைசாற்றுகின்றன.

வீடு கட்டுவதற்கான பொருட்செலவை, சிரமத்தை உணர்ந்து கொள்ள இயலும். ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாயை கட்டி வயிற்றைக் கட்டி சேமித்து செய்ய வேண்டிய அளவு திருமணம் பொருட் செலவு மிகுந்ததாக இறுக்கமானதாக மாறியது ஏன்? எதற்காக?

பெண் ஆண் அல்லது ஆணின் குடும்பத்தினர் பெண்ணின் குடும்பத்தினர் தன்னிச்சையான விருப்பம் மட்டும் திருமணத்திற்கு போதுமானது இன்றே வரதட்சணை, சீர் சீதனங்கள், ஆடம்பரங்கள், சடங்குகள், சாதிய அகமணமுறை, முதலாளிய பழக்கங்கள் இணைந்து திருமணத்தை பெரும் சுமையாக்கி விட்டன.

வரதட்சணை பெயரால் ஆடு மாடுகளை போல் பெண்கள் விலை பேசப்படுகின்றனர். புள்ளிவிவரங்கள் வரதட்சணை கொலைகள் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து விட்டதை இந்திய அரசே காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் நாட்டில் 89 க்கும் மேல் வரதட்சணை கொலைகள் நடப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் கணக்கில் வராத கொலைகள் இதை விட பன்மடங்கு இருக்கும். திருமண செலவு, வரதட்சணை களால் பல பெண்கள் முதிர் கன்னிகளாக காலம் தள்ள வேண்டிய அவல நிலை வரதட்சணைக்கு பயந்து மதுரை உசிலம்பட்டி வட்டாரங்களிலும் சேலம், தர்மபுரி மாவட்டத்திலும் பெண் சிசுக்களை பெற்றோர்களே கள்ளிப்பால் ஊற்றி சாகடிக்கும் கொடூர நிலை விலங்கினும் கீழான நிலைக்கு தமிழக மக்கள் செல்லக்கூடிய சூழ்நிலைக்குத் திருமணம் என்ற நிறுவனம் தள்ளிவிட்ட கொடிய நிலை நிலவுகின்றது.

ஆண்களைப் பொறுத்தவரையில் கவுரவத்திற்காகப் பெரும் கடன் வாங்கி செலவு செய்துவிட்டு வாழ்நாள் முழுவதும் துயரும் சோக நிலை! இத்துடன் டி.வி, வானொலி, சினிமா போன்றவைகளில் வரும் விளம்பரங்களால் புதிதாக ஊதி பெருக்கப்பட்டுள்ள ஏகாதிபத்திய நுகர்வு வெறி பண்பாடு இன்னும் திருமணத்தைச் சிக்கலாகி விட்டது.

மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் டி.வி, மிக்ஸி, ஸ்கூட்டர், கார், கிரைண்டர், பிரிட்ஜ் உட்பட அனைத்தையும் கறந்து விட முயல்கின்றனர். முதலாளி நவீனமயமாக்கல் மணமகள் அழைப்பு, மணமகன் அழைப்பு போன்ற சடங்குகளை ஆர்கெஸ்ட்ரா, வீடியோ, அலங்கார வண்ண விளக்குகள், விதவிதமான பலவித காமேரா படப்பிடிப்புகள் என்று இணைத்து டாம்பீகமாக மாற்றி விட்டது.

நிலவுடமை சமூகத்தின் தொடக்கத்தில் தொடங்கிய ஆடம்பரமான, அறிவுக்கு புறம்பான சடங்குகள், பழக்கங்கள், ஆடம்பரங்கள் இன்றைய கார்ப்பரேட் முதலாளிய நுகர்வு வெறி சமூகத்தில் பல மடங்கு பல்கிப் பெருகி விட்டன.
இந்த அநியாயத்தை, பிற்போக்கு தனத்தை, நுகர்வு வெறியை அப்படியே ஏற்றுக் கொள்ளப் போகிறோமா என்பது தான் இன்று அனைவரின் முன் உள்ள கேள்வி.

இன்றைய திருமண முறைகள்

தமிழ்நாட்டில் இன்றைக்கு பல வகையான திருமண முறைகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் முக்கியமானவைகள்.

1 சாதீய – வைதிக திருமணம்
2 முஸ்லிம் – கிறித்துவத் திருமணங்கள்
3 சுயமரியாதை திருமணம்
4 தனித்தமிழ் திருமணம் (அ) பழந்தமிழர் திருமணம்
5 வாழ்க்கை இணை ஏற்புத் திருமணம் அல்லது புரட்சிகரத் திருமணம்.
6. லிவிங் டூ கெதர்
7. திருநங்கையர், மாற்று பாலினத்தினர் திருமணங்கள்

இந்த நூற்றாண்டில் தமிழக மக்களின் வாழ்நிலை பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

நிலப்பிரபு, உழவன், முதலாளி, தொழிலாளி அரசு ஊழியர், வணிகர்கள், பலவகை அடுக்குகளாக நடுத்தர மக்கள், பலவகையான அடித்தட்டு மக்கள், பணக்கார விவசாயி, கூலி உழவர், நடுத்தர உழவர் தேசிய முதலாளி, பெரு தரகு முதலாளி… என்று வர்க்கங்கள் பல்வேறு சிக்கல் நிறைந்ததாக இன்றைய சமுதாயத்தில் மாறி உள்ளது.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி பாய்ச்சலாக முன்னேறி உள்ளது, இவ்வாறான மாறிய சூழ்நிலைக்கு ஏற்றவறாகத்தான் தமிழக மக்களின் மொழி, கலை இலக்கியங்கள் சிந்தனைகள் பழக்கங்கள் திருமண முறைகள் மாறி உள்ளன.
எனவே பொதுவாக பலர் கருதுவது போல் திருமண முறை மாறாமல் நிலையான ஒன்றாக இருந்தது கிடையாது சமுதாயத்தில் மாறி வரும் உற்பத்தி வளர்ச்சி, வர்க்க உறவுகளுக்கு, சமூக உறவுகளுக்கு ஏற்ப மாறிக்கொண்டே, இருக்கும்.

அடுத்ததாக பல்வேறு வர்க்க பிரிவுகளுக்கும் அவர் அவர்களுக்கு பொருத்தமான பல்வேறு வகைப்பட்ட திருமண முறைகளும், பழக்க வழக்கங்களும் இருக்கும். இவற்றை ஆழமாக நம் உள்ளத்தின் கண் இருத்திக் கொண்டு தான் தமிழ்நாட்டில் நிலவும் திருமண முறைகளை உற்று நோக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களிடம் சாதீய,.வைதிக திருமண முறைகள் தான் உள்ளன.

இதன் அடிப்படையாக இருப்பது மனிதத்தன்மையற்ற சாதியமும், பார்ப்பனீய சனாதன பழக்கங்களும் நிலவுடைமை பண்பாடுகளும் ஆகும்.

பெற்றோர்களால் .குலம், கோத்திரம், நாள், நட்சத்திரம் பார்த்து, பெண் பார்க்கும் படலம், ஜாதகம், பெயர்-ராசி-பொருத்தங்கள் ஜோதிடம், வரதட்சணை, நிச்சயத் தாம்பூலம் பட்டுபுடவை, பந்தக்கால், மணமகன் .மணமகள் அழைப்பு, நலங்கு, பார்ப்பனர் முன்னிலை, சமஸ்கிருத மந்திரங்கள், தீ வளர்த்தல், போன்ற கணக்கற்ற ஆரிய மத வைதிக பழக்க வழக்கங்கள், பின்பற்றப்பட்டு இறுதியில் தாலி கட்டுதல் உடன் திருமணம் முடியும். பின்னரும் கூட பல சடங்குகள் உண்டு.

தமிழக மக்களின் நாகரிக வளர்ச்சிக்கு பொருந்தாத, அறிவியல் பூர்வமற்ற, ஜனநாயகம் இல்லாத வீண் ஆடம்பரமான இப்பிற்போக்கு முறை பல வகையிலும் தேய்ந்து வருகிறது.
முஸ்லிம் மத, கிறித்துவம் மத திருமண முறைகள் அந்தந்த மதங்களுக்க ஏற்ப நடைபெற்றாலும் கூட பிற்போக்குச் சாதிய கட்டுப்பாடுகளும் சாதி நிலவுடமை பண்பாடுகளும் ஏகாதிபத்திய சீரழிவு ஆடம்பரங்களும் இணைந்தே நடைபெறுகின்றன.

இவைகளும் வரலாற்றின் வளர்ச்சி போக்கில் மறையப் போகின்றன திருமண முறைகளாகவே உள்ளது. ஏனெனில் மாந்தநேய நாகரிகத்திற்கும் உற்பத்தி வளர்ச்சிக்கு இவைகள் தடைக்கற்களாக உள்ளதே முக்கிய காரணங்கள் ஆகும்.

சுயமரியாதை திருமணம்

இந்தப் பிற்போக்கு வைதிக திருமணத்திற்கு மாற்றாக 19 ஆம் நூற்றாண்டில் விவாதங்கள் பொருண்மை வாழ்வியல் மரபின் விவாதங்கள் தொடங்கின. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கலகம் வெடிந்தது.

புரையோடிப் போயிருந்த பார்ப்பனீய இந்து மத மூட தனங்களையும், சாதிக் கொடுமைகளையும், வைதிக பார்ப்பன சடங்குகளையும் எதிர்த்து, தமிழ்மொழியைக் காக்கவும், பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்கவும் சீர்திருத்த இயக்கம் தந்தை பெரியார் தலைமையில் நடந்தது சுயமரியாதை இயக்கம் பண்பாட்டு தளத்தில் குறிப்பாக திருமண முறையில் ஒரு புரட்சியைக் தனது பிரச்சாரம், போராட்டங்கள் மூலம் ஏற்படுத்தியது.

பார்ப்பனீய மரபு எதிரான தமிழர் மாற்று பண்பாட்டு மரபின் தொடர்ச்சியாக இதை பார்க்க வேண்டும். அக்காலத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவுகள் இதற்குச் சான்றுகளாக உள்ளது.

“திருமணம் என்பது வயது வந்த அறிவு வந்த ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட காரியமே ஒழிய மற்ற யாருக்கும் வேறு எந்த கட்டுப்பாட்டுக்கும் சம்பந்தப்பட்டதல்ல என்பது எனது அபிப்பிராயம்.
வாழ்க்கைத் துணை விசயத்தில் காதல் மட்டுமே போதாது அறிவு, அன்பு பொருத்தம், அனுபவம் ஆகிய பல காரியங்களே முக்கியமானதாகும்.

இன்று திருமணச் கூட்டத்தில் நெருப்புப் போட்டு புதைத்து அதில் நெய்யை கொட்டினதும், நல்ல வெளிச்சத்தில் பல விளக்குகளை வைத்ததும், அம்மி மிதித்ததும், அருந்ததியை பார்த்ததும், மக்கள் கால்களுக்குப் பூசை செய்ததும், அர்த்தம் புரியாத பாட்டுகளைப் பாடினதும் முதலியவை தேவையில்லாத காரியங்கள் என்றும், சடங்குகள் என்றே கருதுகிறேன்

ஆரியரின் எட்டு வகை திருமண முறைகளில் ஒன்றில்கூட பெண் ஓர் உயிருள்ள பொருளாகக் கூட மதிக்கவில்லை.

வாழ்க்கை நடத்துவது ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உதவியாளர்களாக இருந்து சுற்றமும், நட்பும் சூழ வாழ்வதாகும்.

வாழ்க்கை ஒப்பந்தம் என்றால் என்ன வேண்டும் நாலு பேர் அறிய நாங்கள் இரண்டு பேரும் கணவன் மனைவியாகி விட்டோம் என்று சொல்கிற காரியம் தானே. சுயமரியாதை திருமணம் என்பது புரோகிதன் இல்லாத சமஸ்கிருதம் அற்றது ஆகும். பகுத்தறிவு திருமணம் என்பது சடங்குகள் இல்லாமல் செய்வது ஆகும்.

தமிழர் (திராவிடர்) திருமணம் என்பது வாழ்க்கையில் கணவன். மனைவி சம உரிமையுடன் வாழ்வதாகும். சுதந்திர திருமணம் என்பது ஆணும் பெண்ணும் தாங்களே காதலித்து செய்து கொள்வது ஆகும். புரட்சி திருமணம் என்பது குறுகிய நேரத்தில் சுருங்கிய செலவுடன் நடப்பது ஆகும்

அவை அனைத்தும் இணைந்தது தான் 1950 வது வருட முன்னுதாரணமான திருமணம் ஆகும் என்றார் தந்தை பெரியார். இப்படி பல கருத்துக்கள், தமிழ் சமூகத்தின் கருத்தியல் தளத்தில் பெரும் புயலை தோற்றுவித்தன. பார்ப்பனீய அதிகாரத்தை பண்பாட்டு தளத்தில் குறைப்பதற்கு பெரும் பங்காற்றின, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் திரளாக இவ்வியக்கத்தில் அணிஅணியாக திரண்டனர்.

ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இக்கருத்து களுக்கு ஆதரவாக இருந்து பல்வேறு இயக்கங்களை நடத்தின. சுயமரியாதை இயக்கம், பொதுமை இயக்கம் இணைந்து அக்காலத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கின.
பின் நாளில் இதுவே அண்ணாதுரை அவர்கள் அரசியல் இயக்கமாக மாற்றப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் கிராமங்கள் நகரங்கள் தோறும் சுயமரியாதை திருமணங்கள் பரவியது, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 1967 ஆம் ஆண்டில் முதன் முதலில் அரியணை ஏறிய தி.மு.க ஆட்சியில் சீர்திருத்தத் திருமணச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்றது.

இன்று சுயமரியாதை திருமணம் பெரியாரை, பொதுமை கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட வெவ்வேறு சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் அவர்களின் பின்னால் பொதுமக்களால் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்திய துணை கண்டத்தில் பிற்போக்கு சாதிய நிலவுடமை திருமண முறைக்கு ஒரு சரியான அடியை பெரியார் இயக்கம் தந்தது அக்கால கட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தைத் தவிர வேறெதுவும் கிடையாது.

இந்த வகையில் செழுமையான புரட்சிகர பண்பாடு பாரம்பரியம் தமிழ்நாட்டில் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கிவிட்டது என்று நாம் பெருமை கொள்ள வேண்டும்.

தனித் தமிழ்த் திருமணம்

சுயமரியாதை திருமணம் பிரச்சாரம் செய்யப்பட்ட அதே காலகட்டத்தில் மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ் அறிஞர்களால் தனித்தமிழ் திருமண முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

1930-40 அன்று சென்னையில் கூடிய அனைத்து இந்தியத் தமிழர் மத மாநாட்டில் இத்திருமண முறை பற்றி விரிவாக மறைமலை அடிகள் பேசினார் பழைய வைதிக திருமண முறைக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம்

1) சமஸ்கிருத மந்திரங்களின் பதிலாக தமிழில் தேவாரம், திருவாசகம் போன்றவைகளை ஓதுவது.
2) பார்ப்பனர்களுக்கு பதிலாக சைவ மத பெரியவர்களும், சாதி தலைவர்களும் முன் நின்று நடத்துவது,
3) தீ வளர்க்கும் ஆரிய மத சடங்கை தவிர்ப்பது ஆகும். இது தவிர இத்திருமண முறை சமஸ்கிருத எதிர்ப்பு- பார்ப்பனீய எதிர்ப்பை முதன்மையாக கொண்டு வருவது இவர்களின் நோக்கம் ஆகும்.

இக்காலத்தில் இவர்களுக்கும், பெரியாரின் திராவிட இயக்கத்தினருக்கு இடையே பெரும் கருத்துப் போரே நிகழ்ந்தது. சுயமரியாதை திருமணத்திற்கு அடிப்படையாக சமஸ்கிருதம், பார்ப்பன எதிர்ப்பு என்பதே யானாலும் இம்முறை பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட அனைத்து, நிலவுடமை, சாதி, மத பண்பாட்டு பழக்கங்களை எதிர்க்கும் சனநாயக தன்மை கொண்ட புரட்சிகரமானதாக இருந்தது.

தனித் தமிழ் திருமண முறையோ சாதியையும், பார்ப்பனீய மதச் சடங்குகளை பல்வேறு நீர்த்துப்போன வகைகளில் பின்பற்றியது. பழைய பண்பாட்டிற்கும் புதிய பண்பாட்டிற்கும் இடையே நடந்த போராட்டத்தில் இத்திருமண முறை குறுகிய பழமையான பண்பாட்டு வட்டத்தில் சுழன்றதால் தமிழக மக்களிடையே பரவ முடியவில்லை.

இருப்பினும், சில தமிழ் ஆசிரியர்களால் இம்முறை தொடர்ந்து சில இடங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது. தனித்தமிழ் திருமண முறை தற்கால தமிழ்க மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் சிறிதும் பொருந்தாமல் உள்ளது. சமுதாயத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு.பின்னோக்கி தள்ளுகிறது. அவற்றைச் சுருக்கமாகக் காண்போம்

1) கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரே வகையான திருமண முறை இருந்தது கிடையாது.வெவ்வேறு காலங்களில் அக்கட்டத்தில் உற்பத்தி, சமூக வளர்ச்சி, வர்க்க உறவுகளுக்கு தகுந்தவாறு தான் தமிழ்நாட்டில் திருமண முறைகள் இருந்தன பழந்தமிழர் முறை என்ற ஒன்றையானதாக மட்டும் இருந்ததாகக் கூறுவது உண்மை அல்ல.

2) இம்முறையில் விளக்கப்பட்டுள்ள மங்கல நாண் (தாலி) அணிதல், பெண்ணை மணமகன் கையில் ஒப்படைத்தல் போன்ற சடங்குகள் அனைத்தும் பெண் உரிமைக்கு எதிரானவை.

பல ஆண்டுகளாக பெண்ணியலாளர்கள், பொதுமையாளர்களும், சீர்திருத்தவாதிகளும் போராடி ஒழித்து கட்டிய பெண் அடிமைதனத்தை பேணும் சடங்குகளை தமிழர் திருமணம் என்ற பட்டு குஞ்சம் கட்டி மீண்டும் அரங்கேற்றப்படுகின்றதாக உள்ளது..

3) தாலி மங்கலநாண் என்பது பெண்களை அடிமை யாகவும். விலங்காகவும் கருதும் ஒர் அடையாள சின்னம் ஆகும். பெரியாரின் திராவிடக் கழகமும், புரட்சியாளர்களும், பெண் விடுதலை ஆர்வலர்களும், முதலாளிய சீர்த்திருத்தவாதிகளும் பல ஆண்டுகளாக இச்சின்னத்தை எதிர்த்து ஒரளவு வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

ஆண்-பெண் சமத்துவம் பற்றிய உணர்வு வளர்ந்துள்ள தற்போதைய வாழ்க்கைச் சூழலில் தாலியின் அவசியம் குறைந்து இருக்கின்றது. பழந்தமிழர் முறை என்று மீண்டும் தாலியைப் புகுத்துவது இவர்களின் போராட்டங்களை இழிவுபடுத்துவதாகும்.

அத்துடன் மங்கலநாண் அணியும் வழக்கம் பழந்தமிழர் முறை என்பது கட்டுக் கதையாகும். 10 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் இப்பழக்கம் ஆரம்பிக்கிறது. கி.பி. 958 ஆம் ஆண்டு கல்வெட்டு செய்தி தான் முதலில் மங்கலநாண் பற்றியதாகும்.

சங்க காலத்திலோ அல்லது முற்கால சோழர் காலத்திலோ அதாவது பழந்தமிழர் காலத்தில் இருந்ததற்கு எந்த தொல்லியல், இலக்கிய சான்றுகள் கிடையாது. மேலும், பல சாதிகளில் தாலிக்கட்டும் பழக்கம் சமீப காலம் வரையில் கிடையாது இப்பழக்கத்தை பழந்தமிழர் முறை என்பது வரலாற்று புரட்டாகும்.

3) விளக்கு வழிபாடு, கலச வழிபாடு, அரிசி வாழ்த்து போன்ற பல பழங்கால சடங்குகளைச் செய்ய வேண்டுமென தமிழ்த் திருமணம் வலியுறுத்துகிறது நெருப்பின் பயனை முதலில் அறிந்து கொண்ட காட்டுமிராண்டி தமிழனுக்கு அதைப் பாதுகாக்க அக்காலத்தில் முடியவில்லை.

நெருப்பைத் தரும் விளக்கைப் புனிதமாக வழிபடுதல் அக்காலத்தில் அவசியம் ஆகும். பின்பு வர்க்க சமுதாயமாக மாறிய காலத்தில் பெண்கள் உற்பத்தியில் ஈடுபடுவது தடுக்கப்பட்டது. வீட்டு வேலை என்பது பெண்களுடைய வேலையாக மட்டும் மாறியது.

நெருப்பை (விளக்கு ஒளியைப் பாதுகாப்பதும் பெண்ணின் கடமையாக மாறியது. அதனால் தான் திருமண சடங்கில் பெண் விளக்கை அணைக்காமல் கொண்டு செல்ல திருமணங்களில் பணிக்கப்படுகிறாள் இன்று அது அவசியமா?
.
மனித அறிவின், நாகரிகத்தின் வளர்ச்சி 2000 ஆண்டுகளுக்கு முன் உள்ள மனிதனை விட முன்னேறி உள்ளது. மீண்டும் எவ்வளவு தான் முயன்றாலும், பழைய காலத்திற்குள் மக்கள் போக முடியாது.
இதை தான்.தந்தை பெரியார் இந்த நூற்றாண்டின் 40 களில் நடந்த விவாதத்தில் பழந்தமிழ் வாதிகளிடம் கேட்டார். இன்றும் இது பொருந்தும்.

புரட்சிகர திருமணம்

நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். உலகம் சுருங்கி விட்டது. கையடக்க செல்பேசிக்குள் உலக நிகழ்வுகள், வாழ்வு, செய்திகள், அரசியல் வந்து விட்டன. தமிழக மக்களின் வாழ்க்கை நிலை, சமூக உறவுகள், அறிவு வளர்ச்சி ஆகியவற்றிற்கு பொருந்தக் கூடய திருமண முறை என்ன என்ற கேள்வி எழுப்பி விடை காண வேண்டும்.

தமிழ்நாட்டின் பண்பாட்டு தளத்தில் வாழ்கையின் பழைய பழக்க வழக்கங்கள், சமூக உறவுகள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் புதியவைகளுக்குமான கருத்துக்கள், போராட்டங்கள், நிகழ்கின்றன. மனிதன் கருவில் உண்டானதைக் கொண்டாடும் வளைகாப்பு நிகழ்ச்சி முதல் கருமாதி சடங்கு வரை அறிவியல் பூர்வமற்றதாக, மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு அறிவியலுக்கு மாறான மூடத்தனமான வகைகளாக உள்ளன.

இதன் கோட்பாட்டு மையமாக பார்ப்பனீயம் உள்ளது. இதை 19 ஆம் நூற்றாண்டின் இறுதில் வாழ்ந்த அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் தனது இந்துமத ஆசார ஆபாச தரிசினி நூலில் விரிவாக அம்பலப்படுத்துவதை காண முடியும்.

இதன் தொடர்ச்சியாக சுயமரியாதை இயக்கமும், பொதுமை இயக்கமும் இதனை முன் கொண்டு சென்றன. எனவே. மூட பழக்க வழக்கங்களை மாற்றி, சனநாயக பண்பாட்டு பழக்கங்களையும் பகுத்தறிவு, அறிவியல் சிந்தனைகள், செயற்பாடுகளைக் கொண்டு வருவதுதான் ஆண்-பெண் சமத்துவத்தில், சமூக மாற்றத்தில் ஆர்வம் கொண்ட மனித குல விடுதலையில் வேட்கை கொண்டவரின் கடமையாகும்.

அதற்கு பிற்போக்கான பண்பாட்டை அழிப்பது நமது முக்கிய முதல் பணியாகும். இதில் திருமண முறை என்ற பெயரில் நடக்கும் பழமைகளை மாற்றி, புதிய மாற்றத்தைக் கொண்டு வருவது இன்றியமையாதது.

அவ்வாறு செய்வது புதிய மனிதனை, புதிய தமிழனைப் படைக்கும் முதல் படியாக இருக்கும். இத்தகைய புரட்சிகரமான திருமண முறையை வளர்த்தெடுப்பதில் நமக்கு உழைக்கும் மக்களின் வாழ்க்கை, சனநாயக இயக்கங்கள் வழிகாட்டுகின்றன. அதாவது

1) தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களிடம் நிலவும் திருமண முறைகள்
2) சுயமரியாதை திருமணம்
3) இயங்கியல் பொருள் முதலிய கண்ணோட்டம் ஆகியவைகளை இணைத்த புரட்சிகர திரமண முறை
4) உலக நாடுகளில் நடக்கும் மாறி கொண்டு இருக்கும் திருமண முறைகள் இவைகளை நாம் உற்று நோக்கி புரிந்து கொள்ள வேண்டும். நம்முடையதாக்கி கொள்ள வேண்டும்

இன்று பொதுவுடமை, பெரியாரிய, தமிழ்தேசிய, பெண்ணிய, சனநாயக, மனித உரிமை இயக்கங்களின் தோழர்கள், நண்பர்கள் இதற்காக முயன்று கொண்டு உள்ளனர்.

பலர் தங்கள் வாழ்க்கை முறையையும் திருமணத்தையும் புரட்சிகரமானதாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

பொதுமக்களும் பெண்களும் இத்தகைய புரட்சி திருமண முறைகளில் பெருந்திரளாக ஈர்க்கப்பட்டு வருகின்றனர் நடைமுறை படுத்துகின்றனர். இதன் சாரம்சங்களாக இருப்பவை,

1. ஆண் – பெண் சமத்துவக் குடும்ப உறவைப் பேணுவது
2. சாதி மறுப்பு கண்ணோட்டம்
3. ஆண் ஆதிக்க சமூக முறையைத் தகர்ப்பது
4. சாதிய, பார்ப்பனீய, நிலவுடமை சடங்குகளை, நுகர்வு வெறி கார்ப்பரேட் சீரழிவுகளை ஒழிப்பது.
5. சமூக உழைப்பையும், கூட்டு சிந்தனைகளையும் முன் நிறுத்துவது
6. அனைவரும் பின்பற்ற கூடிய எளிமையான, ஆடம்பரமில்லாத இயற்கையை மாசுபடுத்தாத வாழ்வியலுக்கு உந்தி தள்ளும் திருமண முறை.
7. சனநாயக சிந்தனையையும், மரபையும் பின்பற்றுவது.
போன்ற அம்சங்கள் ஆகும்.
8. குடும்ப உழைப்பை, குழந்தைகள் பாராமரிப்பை ஆணும் பெண்ணும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளுதல்
9. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணைவது மிகவும் அவசியம் இதற்கு அறிவுபூர்வமான, அன்பு வயப்பட்ட காதல் திருமணங்களை ஊக்குவித்தல் வேண்டும் அல்லது இருவரின் வேலைகள் – பணிகள் – உழைப்பு முறைமைகள், பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள், பொருளாதாரம், வாழ்க்கையைப் பற்றிய புதுமை கண்ணோட்டம், அனுபவங்கள் ஆகியற்றை ஒருவருக்கொருவர் மனம் விட்டு பகிர்ந்து கொண்டு திருமணம் புரிய வேண்டும்.

வரதட்சணை, ஆடம்பரம், சீர்வரிசை போன்ற பிற்போக்கு வழக்கங்களை தவிர்க்க வேண்டும் பெண்கள் உழைப்பில், சமூக உற்பத்தியில் ஈடுபடுவதற்கு தூண்டுதலாக இருக்க வேண்டும்.
குடும்ப வேலைகள், குழந்தை வளர்ப்பு இருபாலாரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய பின்னணியில் நடைபெறும் திருவிழா குறுகிய நேரத்தில், இருவரும் பொதுமக்கள் முன்னிலையில் வாக்குறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இணை ஏற்பு விழா உற்றார், உறவினர், நண்பர்கள், சான்றோர் முன்னிலையில் உறுதிமொழியை கூறுதல், மணமாலைகளை மாற்றிக் கொள்வதுடன் எளிதாக முடித்து கொள்ள வேண்டும்.
இத்திருமண விழாக்கள் பண்பாட்டு கலை விழாவாக, பிற்போக்கு மூடத்தனங்களை அம்பலப்படுத்தும் விழாவாக, கொண்டாடப்படுதல் காலத்தின் அவசியமாகும். அவ்வாறு செய்யும்போது தான் அனைவரும் இதை நோக்கி பின்பற்ற இயலும்.

இதைதான் மாமேதை பிரெடரிக் எங்கெல்ஸ் அவர்கள் “..சொத்து உறவுகளிலிருந்து எழுந்ததின் விளைவாக ஒருதார மணத்தின் மீது முத்திரையாக விழுந்துள்ள எல்லா குணாம்சங்களும் உறுதியாக மறையும். அவை பின்வருவன, முதலாவதாக, ஆணின் ஆதிக்கம், இரண்டாவதாக, திருமணத்தை ரத்து செய்ய முடியாமை. ஆணின் பொருளாதார ஆதிக்கத்தின் விளைவாகத்தான் அவன் மண வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறான், அது மறைகின்ற பொழுது இதுவும் போய்விடும்.

முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு வந்து கொண்டிருக்கின்ற அழிவுக்குப் பிறகு பால் உறவுகளை ஒழுங்குபத்துவதைப் பற்றி நாம் ஊகமாகச் சொல்லக் கூடியது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருக்கிறது. இதைத் தவிர கூடுதலாக என்ன இருக்கும்?

ஒரு புதிய தலைமுறை வளர்ச்சியடைந்த பிறகு அது முடிவு கட்டப்படும். அந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஆண்களுக்கு பணத்தைக் கொண்டு அல்லது சமூக ரீதியான இதர அதிகார சாதனங்களைக் கொண்டு ஒரு பெண்ணை இணங்க செய்யும்படி தம் வாழ்க்கையில் என்றைக்குமே நேராது.

பெண்கள் உண்மை காதலுக்காக மட்டுமன்றி வேறெந்த நோக்கத்துக்காகவும் எந்த ஆணுக்கும் என்றைக்குமே இணங்க மாட்டார்கள், அல்லது பொருளாதார விளைவுகளைப் பற்றி அஞ்சி தம்முடைய காதலனுக்குத் தம்மைக் கொடுப்பதற்குத் தயங்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படாது.

அப்படிப்பட்ட மக்கள் தோன்றியவுடனே, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாம் இன்று நினைக்கிறோமோ, அதை சிறிதும் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு நபருடைய நடைமுறையை ஒட்டி தமது சொந்த நடைமுறையையும் அதற்குப் பொருத்தமான தமது சொந்தப் பொதுமக்கள் அபிப்பிராயத்தையும் நிலைநாட்டுவார்கள், விஷயம் அத்துடன் முடிந்துவிடும்.” என்கிறார்.

ஆம்.. அவ்வளவுதான்! எளிதாக எதிர்காலத்தில் ஆண்-பெண் திருமண உறவு முடிந்து விடும்

இறுதியாக சில வார்த்தைகள்

நமது தமிழ் மரபில் இம்முறைக்கான அடித்தளம், நீண்ட வரலாறுகள் இருப்பதால் இப்புரட்சிகர திருமணம் வெகுவாக பரவலாகப் பின்பற்றப்படும் என்பதில் ஐயமில்லை.

மேற்கண்ட திருமண முறைகள் தமிழக மக்களின் சனநாயக வாழ்க்கை முறைக்கு உகந்த ஒன்றாகும். புரட்சிகர உள்ளடக்கத்துடன் நடக்கும் இத்திருமணங்கள் தான், மானுட மேன்மையை பறைசாற்றும். பெண்சிசுக் கொலையை தவிர்க்கும். வரதட்சணை பேயை ஒழிக்கும். சாதிய கொடுமையை தடுக்கும். பெண்ணுரிமை பேணும். பொருளியல் சுமையை குறைக்கும்.

சாதிய நிலவுடைமை, ஏகாதிபத்திய நுகர்வு வெறி பண்பாட்டை வீழ்த்தும். பார்ப்பனீய கோட்பாட்டை சிதைக்கும். வளமான மானுட நாகரிக வாழ்வின் இயல்பான அங்கமாகத் திருமணத்தை மாற்றும் சனநாயக பண்பாட்டை மலர வைக்கும்.

வளர்க ஆண் – பெண் சமத்துவ பண்பாடு!!

https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/42037-2021-05-11-11-04-19

About editor 3089 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply