அருந்தமிழும் அன்றாட வழக்கும்

அருந்தமிழும் அன்றாட வழக்கும்

முனைவர் ஔவை அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,தமிழ்நாடு அரசு

பள்ளியில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும் வருகின்ற சுற்றறிக்கைகள் வாயிலாகவோ நண்பர்கள் வாயிலாகவோ அறிந்து கொள்ளலாம். ஆனால் அத்தகைய சூழல் ஏதும் இல்லாத காரணத்தால், இளங்கலைத் தமிழிலக்கியம் முதலாண்டுத் தேர்வு நடைபெறும் நாள் விவரம் தெரியாததாலும், உரிய நேரத்தில் தேர்வுக்கட்டணம் கட்டாத காரணத் தாலும் என்னால் தேர்வு எழுத இயலாமற் போயிற்று. அப்பாவும் அம்மாவும் சோர்ந்து போனார்கள். ஆண்டுத்தேர்வு நடந்தபொழுது (14.04.1986) மதுரையில் நடந்த உலகத் தமிழ்ச்சங்கத் தொடக்க விழாவிற்கு அப்பாவுடன் மதுரைக்குச் சென்று விட்டேன்.  அப்போது நண்பர்கள் அப்பாவிடம், என்னைப்பற்றி வினவியபோது சிரித்துக்கொண்டே சொன்னார், ‘அருள் சராசரி மாணவனை விடச் சரிந்து போனவன்’ என்று. கண்களில் நீர் முட்டியது. எப்படியாவது நிமிர வேண்டும் என்ற ஏக்கம் அலைமோதியது. என் தாய் பட்ட கவலை என்னை அழவைத்தது.

கல்லூரி நண்பர்கள் சிவகுமாரும், வா.மு.சே. ஆண்டவரும் என்னை ஒரு மாலை வேளையில், தாசப்பிரகாஷ் உணவகத்திற்கு எதிரிலுள்ள தருமபிரகாஷ் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே, பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் தலைமையில் தமிழறிஞர்கள் பலருடன் நாங்களும் போய் அக்கூட்டத்தில் அமர்ந்தோம். மேடையில் எழுத்துலக வேந்தர்களான, ஜெயகாந்தன், தீபம் நா. பார்த்தசாரதி ஆகியோர் இந்தி மொழிக்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.  எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசும்போதே தன்னுடைய மிடுக்கான குரலில் சற்றுத் தரக்குறைவாகப் பேச முற்பட்டபோது, பெருங்கவிக்கோ தன்னுடைய பெருமீசையை முறுக்கிக்கொண்டே ‘நெற்றிக்கண் திறக்கும் சிவனைப்’ போலச் சீறி நின்றி விழிகள் சிவக்க “நிறுத்து உன் பேச்சை” என்று முழங்கினார். உடனே அங்கிருந்த என் நண்பர்கள் நாற்காலிகளை எடுத்து மேசையை நோக்கி வீசத் தொடங்கினார்கள். உடனே என் நண்பர் சிவகுமார் ‘இந்தி ஒழிக’ என்று சொல்லி என்னையும் நாற்காலியை வீசச் சொன்னார். என்னைக் கவர்ந்த எழுத்துப் பெருமக்கள் இருவரையும் காலம் எப்படியாவது தானாக மாற்றும் என்று கருதிய நான், சில நேரங்களில் சில மனிதர்களை, குறிஞ்சி மலர்களையும் நெறிஞ்சி முட்களாக மாற்றியதைக் கண்டு அண்ணாந்து பார்த்தபடி நின்றேன்.
இளங்லையில் தமிழிலக்கியத்தைத் தவிர வாரத்தில் இரண்டு நாள்கள் பிறதுறை மாணவர்களுடன் இணைந்து ஆங்கில வகுப்புப் பாடங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுது, அறிமுகமான பாடம்தான் ஷேக்ஸ்பியரின் ‘வணிகபுரி வணிகர்’ (Merchant of Venice) நாடகம் ஆகும். அப்பாடத்தை மிக நளினமாக நடத்திய ஆங்கிலப் பேராசிரியர் டாக்டர் பெர்னாட்ஷாவை மறக்கவே முடியாது. அவர் ஷேக்ஸ்பியர் நடையைப் போலவே பேசிக் காட்டி எங்களையெல்லாம் வியப்படையச் செய்தார்.   அவ்வண்ணமே, பேராசிரியர்கள் சிதம்பரம் குமாரசாமி, துரைசாமி, சமய உலகில் புகழ்பெற்ற டாக்டர் பிரேமா பாண்டுரங்கன் ஆகியோர் மாநிலக் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர்களாக மிளிர்ந்தனர். ஆங்கிலத் துறையின் துறைத் தலைவர் முனைவர் பீட்ரிக்ஸ் திசோசா அம்மையார் மிக அழகாக ஆங்கிலம் பேசுவதும், தலைமைக் குணத்திற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கினார்.

மாநிலக் கல்லூரியில் சேருவதற்கு முன்னரே என்னுடைய சிற்றப்பா டாக்டர் ஞானசம்பந்தன் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகத் திகழ்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். அவர் பெருமைகளையெல்லாம் எங்கள் தமிழ்த்துறைப் பேராசிரியர் மறைமலை அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை அப்பாவும் சித்தப்பாவும் இணைந்து பட்டிமன்றம் பேசினார்கள். அப்போது, மாற்று அணியில் பேசிய சித்தப்பா, அப்பாவைப் பார்த்து, “உங்கள் பேச்சில் என்ன இருக்கிறது? Words words nothing but words” என்று கூறினார்.  சிரித்துக் கொண்டே என் தந்தையார் “நானும் சொல்லுகிறேன். உனக்கு நான் மொழி கற்றுக் கொடுத்தேன். என்மீது வசை பொழிகிறாய்” என்று Prospero, Caliban-ஐப் பார்த்துச் சொன்ன ஷேக்ஸ்பியர் நாடகத் தொடரைச் சொன்னார். வாகீசக் கலாநிதி கி.வா.ஜ. சொன்ன “இரண்டு லட்டுகள் மோதினால் பூந்தியாய்க் கொட்டும்.” என்ற தொடர்தான் என் நினைவுக்கு வந்தது.—–
புறநானூற்று புதையல்:புறநானூறு எட்டுத்தொகையுள் அமைந்த முழுப் புறப்பொருள் நூல்கள் இரண்டினுள் ஒன்றாகும். இந்நூலின் நானூறு பாடல்களில் இரண்டு முழுப்பாடல்கள் கிடைக்கவில்லை. சில பாடல்களில் சிற்சில அடிகள் சிதைந்துள்ளன. கிடைக்கும் 398 பாடல்களைப் பாடிய புலவர்கள் நூற்றைம்பத் தெழுவராவர். இந்நூலைச் சுவடிகளிலிருந்து அச்சுப் பதிப்பாகத் தக்க ஆய்வுரையோடு தமிழ்க்கடல் உ.வே.சா. 1894-ஆம் ஆண்டில் முதற்கண் வெளியிட்டார்.  266 பாடல்கள் வரையிலான பழைய உரையையும், பிற பாடல்களுக்கான குறிப்புரையையும் சேர்த்து ஐயரவர்கள் இந்நூலை வெளியிட்டார்.  பிறகு 1947-ஆம் ஆண்டில், உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் நூல் முழுமைக்குமான தம் உரையுடன் இந்நூலை வெளியிட்டார்கள். சங்க இலக்கியங் களில் மிகுந்த படிப்புக்கும் பயிற்சிக்கும் உரியதாகத் திகழ்வது இப்புறநானூறேயாகும்.  இந்நூலின் பால் அறிஞர் ஜி.யு. போப் அவர்கள் கொண்ட ஆர்வம் பற்றிக் கூறுகையில் தமிழ்க்கடல் உ.வே.சா. எழுதிய குறிப்புரை பெருமையுடையது.

“காலஞ்சென்ற ஜி.யு.போப் துரையவர்களுக்குத் தமிழில் அன்பு உண்டாவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவற்றுள் இப்புறநானூறும் ஒன்றாகும்.  அவர் இப்புத்தகம் வெளிவந்த காலத்தில் இப்புத்தகத்தைப் பாராட்டி அடிக்கடி எனக்கு எழுதுவதுண்டு. இதிலுள்ள சில செய்யுட்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக் கின்றார்ஒவ்வோர் ஆங்கில வருடப் பிறப்பன்றும் இந்நூற் செய்யுட்களுள் ஒன்றை மொழிபெயர்த்து எனக்குச் சில ஆண்டுகள் வரையில் அனுப்பி வைத்தார்”  அயல்நாட்டாரையும் ஈர்த்த செம்மொழிப் பனுவல் புறநானூறு என்பது இதனால் புலப்படும்.

தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ் மக்கள் என்று எண்ணுகின்றபோது தமிழர்தம் வெங்குருதி தனிற் கமழ்ந்து வீரம் செய்கின்ற மூச்சாகத் திகழ்வது புறநானூறேயாகும். கூனரை நிமிர்த்துகின்ற வீரவுணர்வு செறிந்த புகழ்ப்பாக்களின் தோப்பாகப் புறநானூறு திகழ்கின்றது.

பாடிய புலவர்கள்:மொத்தப் புலவர்களின் எண்ணிக்கை 157. 157 பேரும் 386 பாடல்களைப் பாடியுள்ளனர்.  12 பாடல்களைப் பாடினோர் பெயர் தெரியவில்லை . பெண்பால் புலவர்கள் 15 பேர், ஆண்பால் புலவர்கள் 142 பேர். புறநானூற்றில் மட்டும் பாடல் பாடியவர்களாக அறியவரும் புலவர்கள் 76 பேர்.

அரசர்கள் பற்றியன:400 பாடல்களில் 138 பாடல்கள் 43 வேந்தர்களைப் பற்றியனவாக அமைந்துள்ளன.  (பாண்டியர் – 37, சேரர் – 27, சோழர் – 74) 141 பாடல்கள் 48 குறுநில மன்னர்களைப் பற்றியதாக அமைந்துள்ளன.

திணை, துறைகள்:400 பாடல்கள் 11 திணையிலும் 65 துறைகளிலும் பாடப்பட்டுள்ளன. (பாடாண் திணை பற்றி மட்டும் 139 பாடல்கள் உள்ளன. வாகை – 77, பொதுவியல் – 67), 19 பாடல்களுக்குத் திணையும், 13 பாடல்களுக்குத் துறையும், ஒரே ஒரு பாடலுக்குத் திணை, துறையும் குறிப்பிடப்படவில்லை.

‘மலர் என்றாலே குரவம், தளவும், குருந்தம், முல்லை என்கிற நான்கு மலர்தான். உணவு என்றாலே தினை, வரகு, அவரை, கொள் இவை நான்கே. குடி என்றாலே துடியன் முதல் நான்கே, அப்படிக் கடவுள் என்றாலே போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரனது நடுகல்லே’ என உறுதியிட்டுச் சொல்லும் மாங்குடி கிழாரின் குரல் நினைக்கத் தக்கது.
வளரும்…

45  –  “எண்ணிப் பார்த்து ஏற்றம் பெறுக”
என் வலது காலின் தசைப்பகுதியில் காயம்பட்ட ஒரு வடு நாற்பத்தைந்தாண்டுகளுக்கு மேலாக உள்ளது. அவ்வடுவைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு ஒரு நிகழ்வு நெஞ்சை நெருடும். நான் நான்காம் வகுப்புப் (1976) பயிலும்பொழுது, மாலைவேளைகளில், கிரிக்கெட் மட்டையும் ஓட்டமுமாக இருப்பது வழக்கம். விளையாட்டுத் திடலிலிருந்து அண்ணாநகர் இல்லத்திற்கு வேகமாக வந்து எங்கள் வீட்டின் மதிற்சுவரைத் தாண்டுவதுபோலப் பாய்ந்து தாவிக் குதிக்கும் முன், பாதி சுவருடன் நானும் தரையில் விழுந்தேன். விழுந்த வேகத்தில், எழமுடியாமல் தத்தளித்தேன். அப்பொழுது உதவிக் கரம் நீட்டி என்னை அண்ணாநகரிலுள்ள செல்வரங்கம் மருத்து மனைக்கு தன் சீருந்தில் தானே ஓட்டிக் கொண்டு அழைத்துச்சென்றவர் திருமதி இலட்சுமி நம்பியார், எங்கள் வீட்டின் எதிர்வீட்டு திரு. நம்பியாரின் துணைவியார் ஆவார். அவர்களுடைய மகன் இராமதாசு எங்கள் விளையாட்டுத் தோழராவார். என் பெற்றோர் இருவரும் அலுவலகத்திலிருந்தும் மருத்துவமனையிலிருந்தும் திரும்பிடாத நேரமது.

மருத்துவர் செல்வரங்கம் ‘இன்னும் ஒரு செங்கல் விழுந்திருந்தால் உனக்கு எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கும் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். திரு. நம்பியார் அந்நாளைய பெரிய விளம்பர நிறுவன நிருவாகியாவார். அவர் நடத்திய நிறுவனத்தின் பெயர், சாயா விளம்பர நிறுவனம் மற்றும் ஸ்ரீசக்ரா விளம்பர நிறுவனங்கள் ஆகும். நாங்கள் அண்ணா நகருக்கு வருவதற்கு முன்பே 1969-ஆம் ஆண்டிலேயே அவர்கள் குடியேறியவர்கள் ஆவார்கள். நாங்களெல்லாம் பெருமையாக அவர்கள் இல்லத்தை வெள்ளை மாளிகை என்றுதான் அப்போது சொல்லி மகிழ்வோம். இராமதாசு தன் பெற்றோர்களைவிட தன்னுடைய அம்மம்மா (ருக்மணியம்மா) மீது மிகுந்த மரியாதையும் பரிவும் கொண்டவராவார். அவ்வண்ணமே அவர்கள் மகள் சோபா என் அம்மாவிடம் தமிழ்ப் பாடங்களில் சந்தேகங்களைக் கேட்டுக் களைவார். எங்கள் வீட்டின் ஊஞ்சலிலும் மகிழ்ந்து ஆடிச் செல்வார். திரு. நம்பியார், எந்தையாரிடம் அவ்வப்போது நலம் பாராட்டும் நல்லறிஞர். சுவாமி சின்மயானந்தரின் நன்னெறிகளின் வழிநடப்பவர். நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் மற்றும் காவல்துறைத் தலைவராயிருந்த திரு.இலட்சுமி நாராயணனிடம் நட்பு பூண்டவர். பல ஆண்டுகளாகக் காலை வேளைகளில் மேற்கொள்ளும் நீண்ட நடைப்பயிற்சிக்குப் பெயர் பெற்றவராவார்.
ஏழாம் வகுப்பு பயிலும்பொழுது, தேசிய மாணவர் படையின், கப்பற் பிரிவில் நான் இணைந்து, வாரத்தில் செவ்வாய், வியாழன் மாலை 6 மணி வரை நடைபெறும் பயிற்சியில் தவறாமல் கலந்து கொண்டேன். அணிவகுப்பு நடையில் குளறுபடி செய்ய நேர்ந்தால், பின் கழுத்துப் பக்கமாக வேகமாக அறைகின்ற ஆசிரியப் பெருமகனாகத் திரு.வேலாயுதம் அச்சமூட்டுவார். அவர் கரம்பட்டால் வலி பெருகும். பயிற்சி முடிந்த பிறகு, செவ்வாய்க் கிழமைகளில் வழங்கும் பன், எலுமிச்சைச்சாறு, வியாழக்கிழமைகளில் உப்புமா, வடை, சுடச்சுடத் தேநீர் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால், என் அண்ணன் கண்ணன் ஒருபோதும் உண்ணாமல் தவறாமல் தன்னுடைய உணவுப் பெட்டியில் எங்களுக்காகச் சிற்றுண்டியினை எடுத்து வருவது வாடிக்கையாகும். அதனாலோ என்னவோ, நான் தேசிய மாணவர் படையில் சேர்ந்தேன் என்றுகூட நினைப்பதுண்டு.

அண்ணன் என்னைவிட ஈராண்டு மூத்தவர். அவரும் தே.மா.படையில் கப்பற் பிரிவில் இருந்தபோது, 1982-83-ஆம் ஆண்டுகளில், தில்லியில் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்குத் தெரிவு செய்யப்பட்டார். அதற்குரிய தீவிர உடற்பயிற்சியில் அவர் ஈடுபட்டதை வியந்து பார்த்தேன். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரிலுள்ள குசால்தாசு வள மாளிகையில் நடைபெறும் பயிற்சிகளைப் பார்ப்பதற்கு ஆயிரம் கண் தேவை. தில்லி அணிவகுப்பிற்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு நிலைகளில் கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அவ்வகையில் என் அண்ணன், கிழக்குக் கப்பற் படைப்பிரிவில் (விசாகப்பட்டினம்) – ஐ.என்.எசு. விக்ராந்த் வானூர்தி தாங்கிப் போர்க் கப்பலிலும், ஆக்ராவிலுள்ள இந்திய விமானப்படை பாராசூட் வீரர் பயிற்சிப் பள்ளியிலும், தில்லியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பவியல் நிறுவனத்திலும், ஆவடியிலுள்ள டோனாகேலா முகாமிலும் பயிற்சிபெறும் வாய்ப்புப் பெற்றார். ஆனால், ஏதோ காரணத்தால் என் அண்ணனுக்குப் பதிலாக வேற்றொரு நபர் தில்லி அணிவகுப்பிற்குச் செல்ல நேர்ந்தது இன்றும் எங்களுக்கு வருத்தமாக உள்ளது. சில தருணங்களில், தகுதியை நிறுத்திப் பார்க்கும் எடைக்கல்லேகூட ஏமாற்றமளித்தது.

மாநிலக் கல்லூரியில் இரண்டாமாண்டு தமிழிலக்கியம் பயின்றபோது (1987) நண்பர் ஜோதி இராமலிங்கத்தின் வழிகாட்டுதலில் சென்னைத் தொலைக்காட்சியில் காங்கிரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அன்பரசு தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேசிய உரைப் பகுதி:“எதிர்பார்ப்பின் அரசாகவும், எந்த நிலையிலும் அன்பானவராகவும் தலைசிறந்த பண்பாளராகத் திகழும் தகுதியுடைய தலைவர் அவர்களே! நாநலம் நாடும் நண்பர்களே! தொலைக்காட்சி அன்பர்களே! வணக்கம்.
எதிர்பார்ப்புடன் வாழ்வது என்பது ஒன்றை ஆய்ந்து அதில் தோய்ந்துபோய்த் தொடரும் வாழ்வாகும். எதுவரினும் ஏற்பது என்பது சாய்ந்த பார்வையாகும், ஏன் ஒரு தேய்ந்த வாழ்வுக்கு வழிவகுக்கும். இளைஞர்கள் வளம்பெறக் களம் அமைப்பது எதிர்பார்த்த வாழ்வாகும். அதுவே சரிபார்த்த நெடுங்கணக்காகும். வாழ்க்கை என்பது வானவில் என்றும், வண்ணக்கலவை என்பதெல்லாம், பாடல்களின் பார்வைகளாகும்.

வாழ்க்கையென்பது இப்படி நடந்தால் அப்படி வளரும் என்று சீர் தூக்கிப் பார்க்கும் கணிதமாகும். இந்தக் கணக்கை எதிர்பார்த்து வாழ்பவர்களுக்கு வெற்றி ஏற்படும். எது வரினும் ஏற்பவர்களுக்குப் பிணக்கு வர வைக்கும். இன்னும் பார்த்தால், வாழ்க்கை யென்பதை ஏணியைப் போலப் படிப்படியாக முன்னேறிச் செல்கின்றவர்கள், வெற்றிபெறவேண்டும் என்ற நம்பிக்கைதான், அதிர்ச்சி தராத நங்கூரமாகும். அசையாமல் நிலைநிறுத்தும்.

இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ இடமில்லை! நடப்பதை நாளை யாரறிவார்? என்பவையெல்லாம் எதிர்காலத்தைப் பற்றி அஞ்சி நடுங்கிய வேதாந்திகள் வடித்து வைத்த வேதனை விருத்தங்கள். எதையும் கணக்கிட்டுப் பார்த்து இது எப்படி நடக்கும் என்று தெளிவாகத் தெரிந்து கொள்வதுதான் வாழ்க்கைக்கு நலம் சேர்க்கும், பெருமை சேர்க்கும். எனவே, எதிர்பார்ப்புடன் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கையாகும். இரும்பு கூடத் தோற்கும் உறுதியான வாழ்க்கையாகும். எது வந்தாலும் பரவாயில்லை என்பது கண்மூடித்தனமான முடிவல்லவா? அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய் என்பது திருக்குறள். இதற்குச் சான்றாக ஒன்று சொல்லலாம். மருத்துவமனை வாயிலில் சீருந்துகளும், பிற வண்டிகளும் மெதுவாகச் செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கைப் பலகை தொங்கும். ஏனெனில் ஓடிவரும் சிறார்களுக்கும், நலிந்து போன நோயாளிகளும் வருவதற்கு வசதி பயக்க இவ்வழியாகும்.

அதைப் பார்க்காமல் வேகமாக வருவேன், நடந்து வருபவர்கள் பார்த்து வரட்டும் என்ற முரட்டு உணர்வுடையோர் செயற்படின் அது நோய் வாழ்வாகும். வருபவர்களுக்கே நலம் பயக்க மெதுவாக வருவது அறிவு வாழ்வு. முன்னே சொன்னது, எதுவரினும் ஏற்பேன் என்ற முரட்டு வாழ்வாகும். பின்னே வருவது முரட்டு வாழ்வை தெருட்டி வாழும் உன்னத வாழ்வாகும். எதையும் தாங்கலாம் என்பது ஒரு போக்கு, இதைத் தாங்கலாம், இதைத் தகர்க்கலாம் என்று வரையறுத்துக் கொள்வதுதான் வாலிபம். ஆக, எதுவரினும் ஏற்பது என்பது, எதையும் தாங்க முடியாமல் வாழ்வையும் ஓங்க முடியாமலும் வாழும் வாழ்வாகும். எதிர்பார்த்து விழித்துச் செயற்படும் வாழ்வில் சிலவற்றைத் தாங்கலாம், சில தாங்க முடியாது, ஒரு சில கருத்துகளைத் தாங்கலாம், ஒருசில கருத்துகளைத் தகர்க்கலாம் என்று வரையறுக்கும் உண்மை வாழ்வாகும். எதுவரினும் ஏற்பது, இப்படி வாழ வேண்டும் என்றில்லாமல் எப்படியும் வாழலாம் என்ற தப்பு நெறியாளர்களின் வாழ்வு ஒரு வலி வாழ்வாகும்.

இதை எப்படியும் அடைவேன், கொண்டதை வெல்வேன், கொள்கையில் வழுவேன் என்ற உயர் நெறியாளர்களின் வாழ்வு, வலதுபுறம் விழுந்தால்தான் உண்ணுகின்ற தன்மையுடைய வரிப்புலி வாழ்வாகும். ஆக, நண்பர்களே! எதிர்பார்ப்புடன் இந்தப் பெருமையுடன் நாம் நடத்தும் வரிப்புலி வாழ்வு மேன்மையானதா? எதுவரினும், எது கொடுப்பினும் யார் தடுப்பின்றி வாழும் எலி வாழ்வு உன்னதமானதா என்பதை நீங்கள் சீர்தூக்கி எண்ணிப் பார்ப்பீர்.  இந்த எண்ணம் பெற்றால் நாம் பகுத்தறிவில் புத்தறிவைக் காண்போம் என்பது மெய்யாகும்”.

புறநானூற்றுப் பொற்றுகள்:-
புறநானூற்றின் முதற் பதிப்பு 1894 ஆம் ஆண்டு வெளிவந்தது. டாக்டர் உ.வே.சா. புறநானூற்றுப் பதிப்பு தமிழகத்துக்கு வழங்கிய பெருங்கொடையாகும்.
புறநானூறு தமிழகத்தின் வரலாறும் வாழ்வியலும் காட்டும் பெரும்புதையலாகும்.
கடந்த 125 ஆண்டுகளில் ஏறத்தாழ 30 பதிப்புக்களை தமிழுலகம் கண்டுள்ளது.
அண்மையில் வெளியிட்ட அறிஞர் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா புறநானூற்றை ஏழு வகையாகப் பிரித்துள்ளார்.Ø கடவுள் வாழ்த்துØ சிற்றூர்களுக்கள் சிறுநடைØ வேந்தர்களின் வரிசைØ போர் விளைந்த காரணம், போருக்குப்பின், போருக்குமுன், வீரர் மறைவும் புலவர் நிலையும்Ø போருக்குப் பின் பெண்களின் நிலைØ அரசுக்கு அறிவுரைØ முதிர்ந்த சிந்தனைகள் பாடல்கள் சொற்பிரிப்போடு வனப்புற எளிய விளக்கம் எழுதி அறிஞர் பாப்பையா வழங்கும் பெறற்கரிய பெரும்பரிசு.

முதற்பதிப்பை வெளியிட்ட தமிழ்க்கடல் டாக்டர் உ.வே.சா. புறநானூறு முழுவதையும் பிழிந்த பொருள் முடிவுகளாக பின்வரும் 39 முடிவுகளை எழுதியுள்ளார்.
“முன்னாளிடையே இந்நாடாண்ட, காவலர் பல்லோர் பாவலர் பல்லோர், மாசரிதத்தை ஆசற விளக்கிச், சொற்சுவை பொருட்சுவை துவன்றி எஞ்ஞான்றும், ஒப்புமையில்லாத் திப்பிய நடையுடைத், திறப் பாடமைந்த இப் புறப்பாட்டுக்கள்,Ø தெய்வ வணக்கம் செய்யும் என்பவும்,Ø அறத்தின் பகுதியை உறத்தெரிப்பனவும்,Ø பாவ வழியை நீ வல் நன்றென்பவும்,Ø இம்மைப் பயனொடு மறுமைப் பயனைச்,Ø செம்மையின் வகுத்துத் தெரிவிப்பனவும்,Ø அந்தணரியல்பைத் தந்துரைப்பனவும்,Ø அரச நீதியை உரைசெய்வனவும்,Ø வணிக இயல்பைத் துணிவுறுப்பனவும்,Ø வேளாண் மாக்களின் தாளாண்மையினை, இயம்புவனவும்Ø வயம்புரி போர்க்கு முந்தும் அரசரை சந்து செய்வனவும்,Ø ஒற்றுமைப் பயனைச் சொற்றிடுவனவும்,Ø வீரச் சிறப்பை ஆரத்தெரிப்பவும்,Ø இல்லறமாகிய நல்லறம் உரைப்பவும்,Ø துறவறம் அதனைத் திறவிதிற் தெரிப்பவும் ,Ø மிடித்துன்பத்தை எடுத்துரைப்பனவும்,Ø வண்மையும் தண்மையும் உண்மையும் திண்மையும் என்னுமிவற்றைப் பன்னுவனவும், அளியையும் ஒளியையும் தெளிவுறுப்பனவும், தம்மைப் புரந்தோர் தாம் மாய்ந்திடவே, புலவர்கள் புலம்பி அலமரல் தெறிப்பவும், நட்பின் பயனை நன்கு இயம்புனவும், கல்விப் பயனைக் கட்டுரைப்பனவும்,Ø நீர்நிலை பெருக்கென நிகழ்த்துவனவும், மானந் தன்னைத் தான் நன்குரைப்பவும்,Ø இளமையும் யாக்கையும் வளமையும் நிலையா என்றே இசைத்து நன்று ஏய்ப்பனவும், அருளுடைமையினை மருளறத் தெரிப்பவும் தரமறிந்து ஒழுக என்று உரனுற விதிப்பவும், அவாவின் கேடே தவாவின்று இனியவை கூறல் நனிநலன் என்பவும் , உழவின் பெருமையை அழகுற உரைப்பனவும், நன்றி அறிக என்று இசைப்பனவும், கொடுங்கோன்மையினை விடுங்கோல் என்பவும், தவத்தின் பெருமையைத் தவப்பகர்வனவும், மடியெனும் பிணியைக் கடிமின் என்பவும், கொலையெனும் பகையைத் தொலைமின் என்பவும், நல்லோர்ப் புணர்ந்து புல்லோர்த் தணந்து, தாழ்வொன்று இன்றி வாழ்மின் என்பவும், சுற்றம் புரக்கும் நற்றிறம் உரைப்பவும், கற்பின் திறத்தைக் கற்பிப்பனவும் மக்கட் பேற்றின் மாண்புரைப்பனவும், கணவனை இழந்த மணமலி கூந்தல் தீப்பாய் செய்தி தெரிவிப்பனவும், கைம்மை விரத வெம்மை விரிப்பவும், இன்னும் பற்பல பன்னுவனவு மாய்ச், செப்புநர் எவர்க்கும் ஏய்ப்பிடை வைப்பாய், அரும் பெறல் மரபில் பெரும்பயன் தருமே” என்று ஒருவாறு பொதுப்படத் தொகுத்துக்கூறுவதன்றி (39) இன்னபாடல் இத்தன்மையதென்று தனித்தனியே எடுத்துக்காட்டி இவற்றின் அருமை பெருமைகளைச் சீராட்டிப் பாராட்டுதற்கு ஒரு சிறிதும் வல்லேன் அல்லேன்.

போர் பற்றியன போரால் விளையும் புகழ் பற்றியன வறுமை வன்மை நட்பின் பயன் கல்வியின் சிறப்பு மானஉணர்வின் இன்றியமையாமை பழிக்கு அஞ்சுதல் இல்லறம் துறவறம்Ø மக்கட்பேறு உழவின் உயர்வு கைம்மைக் கொடுமைØ கற்பின் திறம் நிலையாமை – ஆகியன புறத்தில் அடங்கும்.
கரந்தை முதல் வெட்சி வரை 11 திணைகளும் அரசியல் வாகை முதல் வேத்தியல் வரை 60 க்கு மேற்பட்ட துறைகளில் பாடல்கள் உள்ளன.
ஆற்றுப்படை, தூது, பரணி, பள்ளிஎழுச்சி, காஞ்சி போன்ற இலக்கிய வகைகள் மட்டுமல்லாமல் பக்தி இலக்கியம், நீதி இலக்கியம் என அனைத்தும் புறநானூற்றுக்கு கடன்பட்டிருப்பது கண்கூடு.
டாக்டர் ஜி.யூ.போப் 71 புறப்பாடல்களையும் 59 புறப்பொருள் வெண்பாமாலை பாடல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.
வளரும்…

46  –  “அகல் வயல் விரிந்து வாயவிழ்ந்த முள்தாள் தாமரை!”

சென்னைத் தொலைக்காட்சியில் நான் பேசிய பட்டிமன்ற உரையைக் கேட்டு எந்தையாருடன் நடைபயிலும் நண்பர் கவிஞர் சுந்தரபாண்டியன் (21.04.1988) எழுதித் தந்த கவிதை என் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது.

“நாவருள் பெற்றுள்ள நம்மருள்நயமுற நல்கினார் நற்பொருள்பாவலர் ஔவையின் வழியிலேபகர்ந்திட்டார் செந்தமிழ் மொழியிலேஆவலைத் தூண்டிடும் விதத்திலேஆற்றிடும் செந்தமிழ்ப் பதத்திலேநாவலராகவே விளங்குவார்நற்றமிழ் இலக்கியம் வழங்குவார்காவலாம் தமிழுக்குத் திருக்குறள்கற்றவர் கவிதையின் உட்பொருள்யாவுமே அறிந்திட்டார் உயர்வார் அவர்நாவிலே நாவன்மை பெருகவே”

மாநிலக் கல்லூரியில் 1987-ஆம் ஆண்டில் ஆங்கில இலக்கிய நண்பர்களான கீர்த்திவாசன், சிவகுமார் வாயிலாக லியோ கிளப், பேசின் பிரிட்ஜ் என்ற அமைப்பில் நானும் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டேன்.  குருதிக்கொடை, கண்தானம், நல்வாழ்வுக் களங்களை நடத்தும்பொழுது ஒருங்கிணைப்பையும், அவ்வப்போது, அக்கூட்டங்களில் நிகழ்வுரையாளனாகப் பணியாற்ற நான் பழகினேன். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள அந்நாளைய உட்லெண்சு உணவகத்தில்தான் எங்கள் வாரக் கூட்டங்கள் நடைபெறும்.

ஆசிரியர் தினக் கூட்டத்தை மிகச் சிறப்பாக மயிலைத் திருக்கோயிலுக்கு எதிரிலுள்ள ஜே.டி. பன்னாலால் அரங்கத்தில் நடத்தும் வழக்கமுண்டு. எந்தையாரின் நண்பர்களை இக்கூட்டத்திற்கு அழைத்துத் தலைமைதாங்கச் சொல்லிப் பள்ளி ஆசிரியர்களைப் பெருமை படுத்திச் சிறந்த சிற்றுணவை வழங்குவது என் வாடிக்கையாகும். நான் பேசின் பிரிட்ஜ் லியோ கிளப் செயலாளராக இருந்தபொழுது என்னுடைய நண்பர் டெமிட்ரியசு ஐசக்கு தலைவராக இருந்தார். டெமிட்ரியசும் நானும் ஆறாம் வகுப்பு முதல் சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளி வகுப்புத் தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான் எதைச் செய்தாலும், தட்டிக் கொடுத்துத் தன் பணத்தையே வழங்கி சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தார்.

லியோ கூட்டங்களுக்கு எங்கள் உறுப்பினர்களைக் காட்டிலும் என்னுடைய நண்பர்கள் பலரை அழைத்து அரங்கத்தை நிரம்பச் செய்து தலைமை தாங்கும் விருந்தினரைப் பெருமைப் படுத்துவேன். என்னுடைய அமைப்பு மட்டுமின்றி பல லியோ கிளப் உறுப்பினர்களையும் பாங்கறிந்து அன்பு பாராட்டினேன். வழிந்த அன்பில் பல விழுமிய நண்பர்களைப் பெற்றேன். லியோக்களை தமிழில் அரிமாக் குருளை என்றுதான் நான் சொல்லித்தான் விளிப்பேன். அரிமாக் குருளையர்களான விஜயானந்த், அண்ணாமலை என்கிற வெங்கட், சிவகுமார், எம்.ஆர். சிவகுமார், ‘கிளியா’ சுரேஷ், கிஷோர் சாப்பிரயா, சீமா கவுர், சித்ரா, வித்யா சடகோபன், இரவிக்குமார், கணேஷ், ஏ.கே. ஸ்ரீராம், சாய்சேஷன், ரத்னமாலா, சுந்தர், ரஜினிகாந்த், நெல்சன், இளங்கோ, சாரதா, முகமது அலி போன்றோர் என் இனிய நண்பர்களாக மாறினார்கள்.

என் வாழ்வில் முதன்முறையாக இத்தாலிய பீட்சா உணவினை உண்ண எனக்கு அறிமுகம் செய்தவர் லியோ விஜயானந்த் ஆவார். எத்திராசு மகளிர் கல்லூரியின் எதிரிலுள்ள ‘ஜிஃப்பி’ உணவகத்தில் வாங்கித் தந்தார். விஜயானந்த் மற்றும் அண்ணாமலை நன்முயற்சியினால், ‘லியோ லிங்க்’ என்கின்ற ஆங்கில ஆறு பக்க செய்தி ஏட்டின் ஆசிரியர் குழுவில் என்னையும் இணைத்து பல கட்டுரைகள் ஆங்கிலத்தில் நான் எழுதுவதற்கு வகை செய்தனர். இன்றைய இளைஞர்களை நாளைய தலைவர்களாக மாற்றும் முயற்சியாக அரிமாக் கழகம், அரிமாக் குருளையர்கள் (Leo) கழகத்தை உருவாக்கினார்கள்.

1957-இல் இங்கிலாந்தில் உள்ள Glenside அரிமாக் கழகம் முதன்முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது. LEO என்ற மூன்றெழுத்துகளின் பொருள் Leadership, Experience, Opportunity என்பதாகும். இன்றைக்கு உலகிலுள்ள 104 நாடுகளில் 4300 லியோ கிளப்புக்கு மேல் உள்ளது என்பது வரலாற்றுச் சாதனையாகும். தமிழகத்தில் முதன்முறையாக Leo Club of Meenambakkam தோற்றுவிக்கப்பட்டது.

அவ்வண்ணமே அரிமாக்கள் பலர் நற்றுணையாய் பல நல்ல திட்டங்களை வெற்றி பெறுவதற்கு வழிகாட்டிகளாக சீன்லேக் பவுடர் உரிமையாளர் அரிமா ஜான் பீட்டர், இராமச்சந்திர ஓரா, புஷ்பராஜன், அருண், நடராஜன், பல்பீர்சிங் லோட்டா மிளிர்ந்தார்கள். அரிமாக்களான பட்டயக் கணக்கர் என்.சி. கிருஷ்ணனின் ஆங்கில உரைகள் அறிவார்ந்த உரைகளாக அமைந்தன. அவர் உரையைக் கேட்பதற்கு நான் பல கூட்டங்கள் சென்றிருக்கிறேன். சென்னைப் பங்குச் சந்தையின் தலைவராக திரு. வி.கே. பத்மநாபன் அரிமாவாக இருந்து பல திட்டங்களில் வெற்றி பெறுவதற்கு எனக்கு வழிகாட்டியிருக்கிறார். சென்னை அருங்காட்சி அரங்கத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் எங்களுடைய அமைப்புத்தான் முதற்பரிசு பெற்றது. அச்சிறப்புப் பரிசினை நாங்கள் பெறுவதைக் கண்டு பலர் மருண்டனர், முகம் இருண்டனர். விருதுபெறும் நிகழ்வில் அமளிப்பூசல் ஏற்பட்டு விருதினை எங்களுக்கு வழங்காமலேயே கூட்டம் நிறைவுற்றது. சில நாட்களிலேயே எங்கள் பேசின்பிரிட்ஜ் லியோ கிளப்பினை ஒடுக்குவதற்கு அரிமாக்களிடம் அறிவுறுத்தி நிலையாக மூடப்பட்டது.

சில வாரங்கள் கழித்து என் இனிய நண்பர் லியோ இராதாகிருஷ்ணன், தான் தலைமை. தாங்கிய லியோ கிளப், போரூரில் என்னை இணைத்துக் கொண்டு பல அறப்பணிகளில் என்னை ஈடுபடுத்தினார். காயிலே மில்லத்து அரசு மகளிர் கல்லூரியில் குருதிக்கொடை நிகழ்வினை மிகப் பெரிய அளவில் நான் நடத்திக்காட்டி வெற்றிபெற்றேன். கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் ஒவ்வொரு முறையும் அருளுக்காகத்தான் இந்தக் குருதிக்கொடை நடைபெறும் என்றே வாயாரப் பாராட்டினார்கள்.  நினைவில் வாழும் லியோ நண்பர் அக்சய சர்மாவும் நானும் கலைஞானி கமலஹாசனை அவர் பிறந்த நாளன்று அழைத்து வந்து குருதிக்கொடை நிகழ்வுக்காக அழைத்துவர முனைந்தோம்.
கல்லூரி முதல்வருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. அதற்காக ஆழ்வார்ப்பேட்டை இல்லத்திற்கு முற்பகல் சென்றோம். பெருங்கூட்டமாக இருந்தது. அக்சய சர்மாவை ஒரு இந்திப்படத் தயாரிப்பாளர் என்று சொல்லி முன்னே அழைத்துச் சென்று விட்டேன். அவரைப் பார்த்தவுடன் திருமதி சரிகா ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டார்கள். இவரை இந்தியிலேயே மறுமொழி சொல்லி ‘கமலஹாசனைத் தலைமை தாங்க வேண்டினார். உடனே அவர்கள் பேசி ஒப்புதல் வாங்கித் தந்தார்கள். கல்லூரி அல்லோலகல்லோலப்பட்டது. கலைஞானியின் வருகை கல்லூரிக்குப் பெருமையளித்தது. அரிமாக்களும், அரிமாக் குருளையர்களும் வியந்து எங்களைப் பாராட்டினார்கள்.

காயிதே மில்லத் கல்லூரியின் குருதிக்கொடையினை வெற்றிகரமாக மருத்துவக் குழுவைத் தலைமைதாங்கி நடத்தித் தந்தது குழந்தை நல மருத்துவமனை / செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விமலா இராமலிங்கம் (கவித்திலகம் அன்னையார் சௌந்திரா கைலாசத்தின் மூத்த மகள்) ஆவார். அவர்களும் மருத்துவர் கலையரசியும் மிகப் பொறுப்பாகவும், கனிவாகவும் குருதிக்கொடை நிகழ்வுகளை மிகச் சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு நல்கினர். லியோ கிளப் சார்பாக ஆரம்பாக்கம், கொடைக்கானல், உதகமண்டலம் போன்ற ஊர்களுக்கெல்லாம் சென்று பேசுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

கொடைக்கானலில் ஒருமுறை என்னுடைய இருமொழி உரையினைக் கேட்டு நெறியாளராக வருகைபுரிந்த ஜெய்சீஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. புருசோத்தமன் என்னை இருமொழிச் சொற்கொண்டல் என்று பாராட்டினார். லியோ இராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, இறுக்கமான ஆடைகளை அணிந்து மிடுக்காக நான் காட்சியளித்ததை என் பெற்றோர்கள் பார்த்துப் பூரிப்படைந்தனர். லியோ இராதாகிருஷ்ணனின் அரிய முயற்சியினால் எழும்பூர் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சியொன்றை நடத்தினோம். அதற்காக கனரா வங்கியின் தலைமை மேலாளர் அரிமா இராமகிருஷ்ணன் அவர்கள் வங்கி வாயிலாக நன்கொடை வழங்கி கண்காட்சியினைச் சிறப்பாக நடத்த வழிசெய்தார்.

தேனாம்பேட்டையிலுள்ள இராதாகிருஷ்ணனுடைய இல்லத்தில் பல வேளைகளில் அவர் தாயார் அன்னம் பாலித்தார். நன்கொடையினை வாங்குவதற்கு அப்பொழுது எனக்குப் பெருந்துணையாக சட்டக் கல்லூரி மாணவியான சுமதி (இப்போது நாடறிந்த வழக்கறிஞர் / உரையாளர்) பெரிதும் உதவினார். நேரம் பாராமல் பல நிறுவனங்களுக்கு எங்களுடன் வந்து நிதி திரட்ட உதவினார். தோழி சுமதியின் வாயிலாக அருமையான நண்பர்களாக, கவிஞர் சதீசும் (இப்போது சென்னை உயர்நீதி மன்றத்தில வழக்கறிஞர்), சர்வேசனும் மலர்ந்தனர். பல தருணங்களில் அண்ணாநகரிலுள்ள சர்வேசனின் இல்லத்தில் உரிமையாகச் சென்று அவரை உணவு சமைக்கச் சொல்லி உண்டு மகிழ்வேன். சர்வேசன் (இப்போது வேதாந்தா குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி) அடிக்கடி என்னிடம் சொல்வது, ‘சுமதியின் அக்கா தரணியால் தான் எனக்கு உங்களையெல்லாம் தெரியும்’.

அவ்வண்ணமே கவிஞர் சதீசின் இல்லத்தில் அன்னையார் வசந்தா அக்கார அடிசில் விருந்திட்டு தானும், உண்போரையும் ஒருசேர மகிழ்விக்கும் உருக்கத்தை நான் சொற்களால் முழுவதுமாகச் சொல்ல முடியாது. அன்னை வசந்தா (கவிஞர் பாரதி சுராஜின் தங்கை) சைதையிலுள்ள கணபதி தேசிய நடுநிலைப்பள்ளியின் (அரசு உதவிபெறும் பள்ளி) தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். சிறந்த பாடகரும் ஆவார். அவரின் தமிழ்த்தாய் வாழ்த்து, பாரதி பாடல்கள் பலரை ஈர்த்தது. அவர்களை அரிமா அகமது செரிப்பிடம் அறிமுகம் செய்தேன். பிறகு, அவர்கள் பெரியமேடு அரிமாக்கழகத்தில் அரிமா வசந்தாவாக மிளிர்ந்தார்.

அறிவியல் கண்காட்சியாக மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டு, இரண்டாவது நாளன்று யார் என்றே தெரியாத வண்ணம், வன்முறையாளர்கள் கண்காட்சிக்குள் உட்புகுந்து, உட்பூசலிட்டு இராதாகிருஷ்ணனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். வேறு சில நண்பர்கள் சென்னைப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்ப்பட்டனர். தோழி சுமதி இரவென்றும் பாராமல் காவல் நிலையத்துக்கும், மருத்துவமனைக்கும் தானாக முன்சென்று உதவுவதற்கு முற்பட்டார். நான் இச்செயல்களில் எல்லாம் பின்வாங்கி விட்டேன். வன்முறை, சச்சரவு, தகராறு இவைகளையெல்லாம் தவிர்த்து விழிப்பாக விலகி நிற்கும் பழக்கத்திற்கு ஆட்பட்டேன். சில நாட்களிலேயே லியோ கிளப், போரூரையும் நிறுத்த வேண்டும் என்று அரிமாக்கள் முடிவெடுத்தனர். அன்று முதல் அரிமாக் குருளையர் இயக்கத்திலிருந்து யானும் விலகி நின்றேன்.

தலைமை, அனுபவம், வாய்ப்பு இம்மூன்றையும் தெரிந்து கொள்வதற்கு ஒரு பயிற்சிக் களமாக இவ்வமைப்பு அமைந்தது.

பத்துப்பாட்டில் மனம் பற்றுக:தொகையென்றால், எட்டுத்தொகையைக் குறித்தது போலவே, பாட்டென்றால், பத்துப்பாட்டையே குறிக்கும்.எட்டுத்தொகையைக் குறிக்கும் நூல்களைப் பட்டியலிடும் வெண்பாவைப் போலவே, பத்துப்பாட்டைப் பட்டியலிடும் வெண்பாவுமுண்டு.
முன்னது இன்னிசை வெண்பா; பின்னது நேரிசை வெண்பா. அது வருமாறு:‘முருகு பொருநாறு பாணிரண்டு முல்லைபெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினியகோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்பாலை கடாத்தொடும் பத்து’

 1. முருகு – திருமுருகாற்றுப்படை-317 அடிகள்2. பொருநாறு – பொருநராற்றுப்படை-248 அடிகள்3. பாணிரண்டு     அ.சிறுபாணாற்றுப்படை – 269 அடிகள்     ஆ.பெரும்பாணாற்றுப்படை – 500 அடிகள்5. முல்லை – முல்லைப்பாட்டு-103 அடிகள்6. மதுரைக்காஞ்சி – 782 அடிகள்7. நெடுநல்வாடை – 188அடிகள்8. குறிஞ்சிப்பாட்டு – 261 அடிகள்9. பட்டினப்பாலை – 301 அடிகள்10. கடாம்-மலைபடுகடாம் – 583 அடிகள்
  பத்துப்பாட்டுள் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை அகப்பொருள் குறித்தன. திருமுருகாற்றுப்படை, பொருணராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, மலைபடுகடாம் போன்றவை புறப்பொருள் குறித்தன. அவற்றுள் ஐந்து ஆற்றுப்படை நூல்களும் தமிழக நில வரைபடத்தை விரிவாகக் குறிக்கின்றன.

நால்வகை ஆசிரியப் பாக்களில், பத்துப்பாட்டுக்களுமே நேரிசை ஆசிரியப் பாக்கள். தொகைநூல்களின் பாடல்களில் எண்களைக் கொடுத்தமை போல், இவற்றுக்கு எண்களைக் கொடுக்கவியலாமை. காரணம், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நெடிய பாட்டுக்களாக அமைந்தன. எந்தப் பாடலையுமே முழுமையாகவும் காணவியலாது. எனவே, பகுதிப் பாடலாகவே காணவியலும். பத்துப்பாட்டுகளில், முல்லைப்பாட்டே அடிச்சிறுமை உடையது; மதுரைக் காஞ்சியே அடிப்பெருமை உடையது.

1.திருமுருகாற்றுப்படை

செவ்வேளை-முருகவேளை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. இவர், நக்கீரர், நக்கீர தேவ நாயனார், மதுரை நக்கீரர் என்றெல்லாம் அழைக்கப் பெறுபவர். இந்நூல், பத்துப்பாட்டில் கடவுள் வாழ்த்துப் போலாகும். இதைப் ‘புலவராற்றுப்படை’ எனவும் வழங்குவர். ஆற்றுப்படை, பொதுவாகப் பொருள் பெறுவோர் பெயரால் அமையும். இதுவோ, பொருள்தருவோன் பெயரால் அமைந்தது. வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை, வீடுபெற்றான் ஒருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்துவது என்று பொருள் கூறுவார் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.
பொதுவாக ஆற்றுப்படை நூலில் ஆற்றுப்படுத்தப் படுகிறவர் பெயரோடு சேர்த்து வழங்கப்பெறும். ஆனால், திருமுருகாற்றுப்படையில் மட்டும் யாரிடம் ஆற்றுப்படுத்த்தப்பட்டுள்ளதோ, அவருடைய பெயருடன் சேர்த்து வழங்கப்பெற்றுள்ளது.  திருப்பரங்குன்றம், திருச்சீரலவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனி), திருஏரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல், பழமுதிர்சோலை (கள்ளழகர் கோயில் மலைமேல் உள்ளது) என்னும் ஆறுபடை வீடுகளைப் பற்றிய நெறிமுறைகளைக் கூறி, முருகன் அருள் பெறுதற்குரிய வழியில் செலுத்துவதாகப் பாடப்பெற்றுள்ளது.  இப்பாடலைப் பூசையாகக் கொண்டு புகல் என்பர். இன்றும் வழிபாட்டு நூலாக இப்பாபாடல் விளங்குகிறது.

அ.திருப்பரங்குன்றம்‘திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்துமாடமலி மறுகின் கூடல் குடவயின்இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்தமுள்தாள் தாமரைத் துஞ்சி, வைகறைகள்கமழ் நெய்த லூதி, எல்படக்கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்அஞ்சிறை வண்டின் அரிக்கண மொலிக்கும்குன்றமர்ந் துறைதலு முரியன்……………’

செல்வம் கொழித்துக் கோலோச்சும் குற்றமிலா நகரத்தில், மாடமாளிகைகள், கூடகோபுரங்கள் நிறைந்துள்ள மதுரை மாநகரின் மேலைத்திசையில், நீர்வளம் மிகுந்த சேற்றுவயலில், முள்தாளையுடைய தாமரையானது விளங்குகிறது.  விடியலில் தேனொழுகும் வெள்ளாம்பல் மலரானது இதழ்விரித்து ஒளிவீசக் கண்போல் மலர்ந்துள்ள அழகிய நீர்ப்பூவால் வண்டுக் கூட்டங்கள் ஆரவாரம் செய்கின்ற திருப்பரங்குன்றத்துத் திருமலையில் இனிதமர்ந்து, வாழ்தலுக்குரியவன் செவ்வேளாகிய முருகவேள்.
வளரும்…

 • 47  –  “தமிழ்ப்பேச்சும் – தடந்தோள் வீச்சும்”
 • மாநிலக் கல்லூரியில் தமிழிலக்கியம் பயிலும்பொழுது பேராசிரியப் பெருந்தகையரான முனைவர் மறைமலையும், கவிஞர் மேத்தாவும் வகுப்பில் எங்களிடம் “தமிழிலக்கியம் பயின்றால், தமிழாசிரியராகத்தான் வரமுடியும் என்ற நிலையெல்லாம் இப்பொழுது மாறிவிட்டது. நீங்கள் முனைந்தால் ஊடகத் துறையிலோ, வேறு பிரிவிலோ நுழைவுத்தேர்வு எழுதி ஆட்சித்துறையிலோ, திரைப்படத் துறையிலோ பணியாற்றுவதற்கு உங்களுக்குப் பெரிய வாய்ப்புகள் உள்ளன” என்று தொடர்ந்து சொல்லி வந்தார்கள்.
 • என்னை அரிமாக் குருளையர் இயக்கத்தில் இணைத்த நண்பர் சிவகுமாரை நான் என்றும் மறவேன்.அவருடைய அறிமுகத்தால் எனக்குப் பல்வேறு வாய்ப்புகள் குவிந்து, அனுபவங்களில் தோய்ந்து, தலைமையை நோக்கி விரைந்து முன்னேறுவதற்கு அடித்தளம் கிடைக்கப் பெற்றது.  எந்தையார், சிவகுமாரை அப்பொழுதே பெருமிதமாக நீ ஒரு ‘Lateral Thinker’ என்று விளித்து மகிழ்வார். நுணுக்கமாகப் பல கருத்துகளைச் சொல்லும் ஆற்றல் வாய்ந்த சிவகுமார் ஆங்கிலப் பேராசிரியராக மாறுவார் என்று தான் நான் நினைத்தேன். பாதை மாறி, வழக்கறிஞராக இப்பொழுது மிளிர்கிறார். அரிமாக் குருளையர் இயக்கத்தால் தான் செல்வி வித்யா சடகோபனின் நட்பினைப் பெற்று ‘கிளியா’ விளம்பர நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு பெருவாய்ப்புக் கிடைக்கப்பெற்றது. அரிமாக் குருளையர்களாக நாங்கள் அப்பொழுது அதிகம் பெருமை தெரியாத ஏலகிரியில் தலைமைப்பண்புப் பயிற்சி செய்யகத்திற்குச் செல்லும் வாய்ப்பும் அமைந்தது. அங்குத்தான் பெரும் திரைத்தயாரிப்பாளர், கவிஞர் பஞ்சு அருணாசலத்தின் மகனார் சுப்பு பஞ்சுவை அறிந்து பழகினேன். அதேபோல் சித்ரா திரையரங்க உரிமையாளரின் திருமகன் விஜயானந்த் நட்பும் கிடைத்தது. விடியற்காலைகளில் மெரினா கடற்கரையில் அவர் நீந்தும் ஆற்றல் பெற்றவர்.
 • அதேபோல், பாரிமுனையில் ஆண்டர்சன் தெருவிலுள்ள பெரும் காகித நிறுவனத்தின் திரு. அண்ணாமலையின் மகனார், வெங்கட் அண்ணாமலையின் அறிமுகமும் கிடைக்கப் பெற்றது. வெங்கட்டின் ஆங்கில உரைகளைக் கேட்பது இனிமையாக இருக்கும். அவரை லியோ கிளப்பின் டெமாஸ்தினஸ் என்று பாராட்டுவார்கள். அவரும், அவர் தங்கை சிவகாமியும் என்னுடன் நீண்ட நேரம் பேசி மகிழ்வார்கள். அவர்களின் இல்லத்தின் தவசிப்பிள்ளை சமைக்கும் உணவு தனிச்சுவை வாய்ந்தது.

வழக்கறிஞர் மணிநாராயணன் மைந்தர் அரிமாக் குருளை சிதம்பர குமாரின் நட்பு ஏற்பட்டு, வளர்நிலைகள் பல எய்தியுள்ளது. அரிமாக் குருளையர்களான தேவன் தேவே, ஜினேஷ் ஷா, இராஜீவ் ஓரா, பிரக்னேஷ், பாலகுமார் போன்றோரும் நண்பர் களானார்கள். அந்நாட்களில், கலைஞானி கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு நல்கியதைக் கவிஞர் சதீஷ் இன்றும் சொல்லி மகிழ்வார். கவியரசு கண்ணதாசன் பேரவை என்ற அமைப்பைத் தொடங்கி, கவிஞரின் நினைவாக ‘மியூசிக் அகாதமி’ அரங்கத்தில், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் இன்னிசை நிகழ்வினை ஒருங்கு செய்ய நண்பர் ஜோதி இராமலிங்கம் முயன்றார். அம்முயற்சி வெற்றிபெறச் செய்வதற்கு நன்கொடைகளை வாங்கித் தருவதற்கு வழக்கறிஞர் கண்ணனும், வழக்கறிஞர் சுமதியும் நானும் முனைந்தோம். வழக்கறிஞர் சுமதியின் நன்முயற்சியினால் பல நிறுவனங்களிலிருந்து நன்கொடைகள் பெற்று, விழா வெற்றிகரமாக நடைபெற்றது. பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள், பேச்சுப் போட்டிகள் என்ற பல நிகழ்வுகளுக்கு வழக்கறிஞர் சுமதி, கவிஞர் சதீஷையும், சர்வேசன், அபுபக்கர், பா.ரா.சண்முகம் போன்றோரையும் என்னையும் அழைத்துச் செல்வார்கள்.

காயிதே மில்லத்து மகளிர் அரசுக் கல்லூரியின் குருதிக்கொடை நிகழ்வின்போது இளங்கலைத் தமிழிலக்கியம் பயின்று வந்த மாணவிதான் இன்று புகழ்பெற்ற செய்தி வாசிப்பாளர் ஜெய்ஸ்ரீ சுந்தர் ஆவார். அவரை அப்போது நான் கல்லூரியில் சந்தித்தபோது ஒதுங்கி அஞ்சும் இயல்பு கொண்டவராகத்தான் காட்சியளித்தார். அவரைப் பார்த்தவுடன் அவருடைய பெற்றோர்கள் திரு கண்ணன், திருமதி மணிமேகலை கண்ணன் அவரின் பாட்டனார் முத்தமிழ்க் காவலர்தான் நினைவில் சுழன்றார்கள்.

முத்தமிழ்க் காவலர் (10.11.1899-19.12.1994) எங்கள் குடும்பத்துக்குப் பெரிதும் வேண்டியவர். தமக்கையார் மணிமேகலையும், மாமா கண்ணனும் இன்றுவரை அந்த பாசமழையைப் பொழிந்து வருகின்றனர். கல்லூரியில் வகுப்புக்குத் திடுமென்று வருகை தரும் முதல்வர் போல முத்தமிழ்க் காவலர் எங்கள் வீட்டுக்கு வருவார். ‘டாக்டர் மருமகளே’ என்று என் அன்னையாரைப் பரிவுடன் அழைப்பார். தமிழ், கணக்கு, கல்வி, ஆங்கிலம், உடற்பயிற்சி, சிக்கனம், உடையொழுங்கு என்றெல்லாம் எங்களுக்கு வேடிக்கையாக அறிவுறுத்துவார். அடிக்கடி என் அம்மா சொல்வது:

முத்தமிழ்காவலர்தான் என் தாய் தந்தை திருமண வரவேற்பு நிகழ்ச்சியைத் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். அவர் சொல்லிய நல்லுரை, “அரவணைத்து நட. அதிலே பயனில்லையென்றால் அடக்கிப் பார். அதிலும் பயனில்லையென்றால் அடங்கிப் போ என்பது நகைச்சுவைக்காக நான் சொல்வதில்லை. இப்படித்தான் வாழ்க்கையை வடிவாக்க வேண்டும்” என்று கூறினாராம். 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய முதற்கவிதைத் தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கிய தலையாய தமிழ்ப் பெருமகனார் முத்தமிழ்க் காவலர் ஆவார். அதில் அவர் சொல்வது, “பாடலுக்காக ஒருமுறை படித்தேன், பாட்டிலே உள்ள பகுத்தறிவு மணத்திற்காக மீண்டும் ஒருமுறை படித்தேன், கவிதைக்காக மறுமுறை படித்தேன், பிறகு, கருத்துக்காக பலமுறை படித்தேன். ஒவ்வொரு முறையும் படித்தேனாகவே பாடல்களைச் சுவைத்தேன்.”
நாங்கள் அவருடைய திருச்சி இல்லத்திற்கு அவ்வப்போது சென்று வருவோம். அவர் வளர்த்த நான்கு கால் நாயகர்கள் எங்களையெல்லாம் மகிழ்ச்சியில் துள்ளி விளையாட வைக்கும்.  காலை 11 மணிக்கு இரு காக்கைகள் வரும். அவற்றிற்கு உணவிடுவார். இது காக்கைக்குன்றம் என்பார். அவரிடம் ஒருமுறை ‘இது என்ன கைப்பை?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘இதில் 40 பொருள்கள் இருக்கின்றன. மாற்றுடை, போர்வை, துண்டு, கணக்கேடு, நாட்குறிப்பு, பேனா, பென்சில், விபூதி, சந்தனம், குங்குமம், எழுதாத அஞ்சலட்டைகள், ரெவின்யூ அஞ்சல் தலை, திருக்குறள், ஏலக்காய், சிறு கத்தி, எண்ணெய், சிறு பணப்பை, வெள்ளைத் தாள், பதிவு செய்த டிக்கட், மூக்குக்கண்ணாடி (மாற்று) என்று எடுத்து வைத்து எண்ணச் சொன்னார். பெட்டியை மூடிக் காட்டி இது என் தலையணை’ என்றார்.  எதிலும் ஒழுங்கு, நேர்மை, நாணயம், தெளிவு, துணிவு கொண்ட வேந்தராகச் சிவந்த மேனி, செம்மாந்த நடையோடு கைவீசி அவர் நடக்கும் அழகே தனி!
பேரறிஞர் அண்ணா ஒருமுறை ‘சிலருடைய நகைச்சுவைகள் தடுக்கி விழுந்து அதைப் பார்த்துச் சிரிக்க வைக்கும். மற்ற சிலரின் நகைச்சுவை ஒருவரைக் குப்புறத் தள்ளிவிட்டு விழுந்ததைப் பார்த்துக் கைதட்டிச் சிரிக்கின்ற நகைச்சுவையாக இருக்கும். ஆனால், முத்தமிழ்க் காவலருடைய நகைச்சுவை மட்டும் நினைத்து நினைத்துப் பின்பற்றக்கூடிய அறிவுரை பொதிந்த நகைச்சுவையாக இருக்கும்’. என்று குறிப்பிட்டார். எங்கள் மூவரிடமும் ‘எண்ணூறு பெரிதா, தொண்ணூறு’ பெரிதா என்று கேட்பார். அதற்கு ‘தொண்ணூறு பெரிது’ என்று நான் சொல்லியதைத் திருத்திக் காட்டினார். தொழிலாளர் என்ற அழகான சொல்லில் ழ, ல, ள மூன்றும் உள்ளது என்றும், இசையில் குழல், முழவு, யாழ் என்ற தமிழின் சிறப்பைப் பாடமாகவே எனக்கு நடத்திக் காட்டினார். ஆங்கிலத்தில் A, B, C, D இல்லாத 100 சொற்களை நொடியில் சொல் என்பார். One முதல் Ninety Nine வரை சொல்லச் சொல்லி எதிலும் ஏ, பி, சி, டி இல்லை என்பார். 
அவர் 11.11.1958-இல் தமிழகப் புலவர் குழுவினை அமைத்தார். அதன் தலைவராக எந்தையார் இப்போது அணி செய்கிறார். மாமா கண்ணன் இந்தி மொழியில் பெரும்புலமை படைத்தவர். அவர் செய்கின்ற சப்பாத்திகளைப் பூரிப்பாக உண்போம். கோதுமை மாவைப் பிசைந்து குறைந்தது 8 வகை பூரி, சப்பாத்தி செய்து, தானே சுட்டு அளிப்பார். மணிமேகலை அக்கா சுழலும் பம்பரமாகத் தமிழ்ப்பணிகளைச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவர். அக்காவிற்கு அண்மையில் தமிழக அரசு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விருது வழங்கிப் பெருமையளித்தது. அவர்களின் திருமகன் ஸ்ரீகாந்த் கவிஞராகவும், தொழில் அதிபராகவும், தேசியக் கட்சி பாஜக-வில் பொறுப்பு வாய்ந்த ஒருங்கிணைப்பாளராகவும் மிளிர்கிறார்.

ஒருமுறை என்னைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதற்குக் குரல்பதிவு செய்ய அழைத்தார். என் பதிவைக் கேட்ட பிறகு, ‘உன் குரல் செய்தி வாசிக்கும் குரல் அல்ல. மேடையில் முழங்கும் குரல் இது. இதை விடுத்து உன் மனைவி, என் தங்கை வாணியைக் குரல் பதிவுக்கு அழைத்து வா. இன்னிசை பாடும் குரல் உன் மனைவியுடையது. பொருத்தமாய் அமையும்’ என்றார். ஆனால், வாணிக்கு அதில் விருப்பமில்லை. தங்கை வெற்றிச் செல்வி தனித்தமிழ்ப் பற்றாளராகவும், திருச்சி மேற்குத் தொகுதியில், வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் ‘மக்கள் பாதை’ பேரியக்கம் சார்பாகப் போட்டியிடத் துணிந்திருக்கிறார்.

தமிழ்ப்பண்பாட்டின் முழுவடிவமாகவும் அன்பின் நிறைகுடமாகவும் பெருமிதத்தின் உறைவிடமாகவும் முத்தமிழ்க் காவலர் குடும்பத்தினை எண்ணிப் பாராட்டுகிறேன்.

திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படை மூலபாடம் மட்டும் 1834-இல் சென்னப்பட்டணம் விவேகக் கல்விச்சாலைத் தமிழ்த்தலைமைப் புலவராக இருந்த சரவணப்பெருமாலையரால் கல்வி விளக்க அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. அப்பதிப்பு நச்சினார்க்கினியர் உரையை அடிப்படையாகக் கொண்டு பதிப்பிக்கப்பட்ட மூலபாடப் பதிப்பாகும்.  பிறகு 1839-இல் பதவுரையுடன் கூடிய பதிப்பாக நச்சினார்க்கினியர் உரையைத் தழுவி இலக்குமணன் பதிப்பு வெளிவந்தது.ஆறுமுக நாவலர் 1853-இல் திருமுருகாற்றுப் படைக்கு நச்சினார்க்கினியர் உரையைத் தழுவி புத்துரையொன்றை வெளியிட்டார். இதன் பத்தாம் பதிப்பு 1930-யிலும் 16-ஆம் பதிப்பு 1947-லும் வெளிவந்தது. 20-ஆம் பதிப்பு 2011 மார்ச்சில் கனடாவிலுள்ள வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம் மூலம் அச்சிடப்பட்டது.1881-இல் திருமுருகாற்றுப்படையின் அடுத்த பதிப்பான சதாசிவம் பிள்ளையால் ஆறுமுக நாவலர் உரையுடன் சென்னப்பட்டணத்தில் வித்யானுபாலன அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது.1917-இல் பொன்னம்பலப்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது.தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யர் பத்துப்பாட்டின் மூலம் நச்சினார்க்கினியர் உரை ஆகியவற்றோடு 1889-இல் முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.பத்துப் பாட்டை 1946-இல் அறிஞர் J.V. செல்லையா ஆங்கிலத்தில் வெளியிட்டார். இது அரிய மொழியாக்கம். இது தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மீளச்சில் வந்துள்ளது.

ஆ.திருச்சீரலைவாய்:‘அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்வயிரெழுந் திசைப்ப, வால்வளை ஞெரல,உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு,பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ,விசும்பா றாக விரைசெலல் முன்னி,உலகம் புகழ்ந்த ஓங்குயிர் விழுச்சீர்அலைவாய்ச் சேறலு நிலைஇய பண்பே!’
‘திரைச்சீரலைவாய்’ என்பது திருச்செந்தூர். முதல் 125 முடியவுள்ள அடிகள். ஆகாயத்தில் பல்வேறு வாத்தியங்கள் முழங்கவும், வலிமைகொண்ட ஊது கொம்பானது இசையெழுப்பவும், வெண்சங்கு ஊதவும், பேராற்றலுடன் ஓசையிடும் இடியெனும் முரசமொடு பல்வேறு வண்ணப்புள்ளிகளையுடைய தோகைமயில் அகவலோசை எழுப்பவும், விண்ணகமே வழியாக விரைந்து செல்ல முற்பட்டு, உலகமக்கள் புகழ்ந்தேத்தும் மிக்குயர்ந்த சீர்புகழூராம் திருச்சீரலைவாயென்னும் திருச்செந்தூர் அடைதலும், செவ்வேளாகிய குமரவேளின் நிலைத்த பண்பே!
இ.திருவாவினன்குடி:‘திருவாவினன்குடி’ என்பது பழனித் தலமாகும். 170 முதல் 176 முடிய உள்ள அடிகள்.
‘வளிகிளர்ந் தன்ன செலவினர், வளியிடைத்தீயெழுந் தன்ன திறலினர், தீப்படஉருமிடித் தன்ன குரலினர், விழுமியஉறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார்,அந்தரக் கொட்பினர், வந்துடன் காணத்தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்ஆவி னன்குடி யசைதலு முரியன்!’
செவ்வேளை வணங்கி வழிபட, முனிவரெலாம் முந்திச் செல்வர். அவர், துவராடையுடனும், நரைமுடியுடனும், இளைத்த உடலுடனும், சினமற்ற உள்ளத்துடனும், ஆசையறுத்த நிலையினர். அவர்க்குப்பின் தெய்வமங்கையரும், மாலவனும், உருத்திரனும், இந்திரனும், தேவரும் கணங்களும் தத்தம் மனக்குறைகளைப் போக்கிக்கொள்ள, ஆகாய வழியாக வந்து, வணங்குவர்.  அங்குத் தீதிலாக் கோட்பாட்டுத் திருவினாள் தெய்வயானை அம்மையொடு, சிலநாள்கள் இருத்தலும் உரியவன்.
ஈ.திருவேரகம்:திருவேரகம் என்பது சுவாமிமலை என்பர். 177 முதல் 189 முடியவுள்ள அடிகள். இது, முழுமையான பகுதி.
‘இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅது,இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி,அறுநான் கிரட்டி யிளமை நல்யாண்டுஆறினில் கழிப்பிய, அறன்நவில் கொள்கை,மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து,இருபிறப் பாளர், பொழுதறிந்து நுவல,ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்,புலராக் காழகம் புலர உடீஇ,உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்துஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்விநாவியல் மறருங்கின் நவிலப் பாடி,விரையுறு நறுமல ரேந்திப் பெரிதுவந்து,ஏர கத்து உறைதலு முரியன்!’

படைவீடு தங்கிய திருக்கோயில் என்று பொருள். படுத்தல், படை விடுத்தல், விடை கொடுத்தல், கொடை போல ஆற்றுப்படுத்தும் இடம் ஆறுபடை என ஆயிற்று. முந்தைய மூன்று படைவீடுகளைப் போலவே, நான்காம் படைவீடாகிய ‘சுவாமிமலை’ என்னும் திருவாவினன்குடியிலும் அவன் வீற்றிருப்பான். அறவோராகிய அந்தணர், தமக்கே உரிய ஓதல் முதலிய அறுவகைச் செயல்களையும் செய்கின்ற சிறந்த குடிப்பிறப்பாளர். அவர், நாற்பத்தெட்டு அகவை வரை மாணவ நோன்பைக் கடைப்பிடிப்பவர். அவ்வாறு நோன்பைக் கடைப்பிடிப்பதன் மூலம், முத்திச்செல்வத்தை உடையவராவர். குளிர்ந்த நீரில் நீராடி, ஈர ஆடையுடன் ஏரகச் செவ்வேளை வணங்கி வழிபடுவதற்காக, மணம் மிகுந்த நாண்மலர்களை ஏந்திக்கொண்டு வருவர். அவனும் பெரிதாக அதைக்கண்டு மகிழ்வுற்று, ஏரகத்தில் வாழ்தலும் உரியவன்.
வளரும்…


48  –  “அரும்பெறல் மரபின் பெரும் பெயர்”

பெருமைமிகு சென்னையிலேயே பிறந்து, நகர வாழ்வையே நுகர்ந்து வளர்ந்தவன் நானாவேன். கிராமியச் சூழலைச் சிற்றூர் வாழ்வை அறியாத எனக்கு, இதுகாறும் இரு முறையோ, மும் முறையோதான் கிராமியச் சூழல் என்றால் என்ன என்றே அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

19.05.1976-இல் நான்காம் வகுப்பு பயிலும்பொழுது என்னுடைய சின்னப் பாட்டி ஞானாம்பாள் (பாட்டி லோகாம்பாளின் தங்கை) – சுந்தரமூர்த்திப் பிள்ளை இணையரின் இளைய பிள்ளை வழக்கறிஞர் செல்வத்தரசு – ஆங்கிலப் பேராசிரியர் கயற்கண்ணி (அத்தை பாலகுஜம் மகள்) திருமண வரவேற்பிற்காக வேலூர் காட்பாடிக்கு அருகிலுள்ள ‘திருமணி’ கிராமத்திற்குச் செல்லும் இனிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றேன். என் சின்னத் தாத்தா தான் திருமணிக்குக் கணக்குப்பிள்ளை. ஊர்க்கணக்கு வேலை தலைமுறை தலைமுறையாக வந்தது. 

எங்கள் பெரிய தாத்தா மயிலாசலம் பிள்ளை (உரைவேந்தரின் அண்ணன்) ஆலைக்கிராமம், ஒளவையார் குப்பம் கணக்குப்பிள்ளையாவார். ‘எதுவும் இல்லையென்றால் கணக்கு இசும்பு இவனுக்குக் கிடைக்கும்’ என்று பாட்டி சொல்வார்கள். ‘இசும்பு’ என்பது தலைமுறையாகத் தொடர்ந்து வரும் ஈர்ப்பு. ஏரி, கரை, வயல், வாய்க்கால், குளம், கபிலம், ஏற்றம், தென்னந்தோப்பு, பனைமரக்குலை, புளியந்தோப்பு, காளை, காராம்பசு, கன்று, ஆடு, ஊர் ஓரத்தில் இருந்த ஊது உலை, வீதியில் நெசவாளர் நூல் கட்டியிருப்பது, தெருக்கூத்து இவைகளையெல்லாம் மெல்ல மெல்ல நினைவில் படர்கின்றன. திருமணியில் பஜனைக்கோயில் தெருவில் உள்ள பெரிய வீடுதான் என் சின்னத்தாத்தா இல்லமாகும். அங்கிருந்து மணமக்கள் திரௌபதியம்மன் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு, திருமணச் சடங்குகளில் ஈடுபடுவது கண்டு மகிழ்ந்தேன். அவர்களின் திருமணம் அன்று காலை அண்ணா நகர் இல்லத்திற்கு அருகிலுள்ள திரு.வி.க. பூங்காவிற்கு எதிரில் புல்லாரெட்டி நிழற்சாலையில் உள்ள ‘ஜோதி வித்யாலயா’ பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது. அச்சாலையில்தான் எங்கள் தாயாரின் மருத்துவச் சிற்றில் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

திருமணி கிராமத்தில் நான்கைந்து நாள்கள் தங்கி அண்ணன் இளங்கோவின் அன்பு அரவணைப்பில் கிணற்றில் நீச்சலடித்துத் திளைத்தேன். அக்கிணறு ஆழமாகவும் அகலமாகவும் இருந்ததை என் கண்கள் இன்றும் மறக்கவில்லை. என்னுடைய நீச்சுப் பயில் திறனுக்கு இக்கிணற்றுக் குளியல் அடித்தளமாகும். அண்ணன் இளங்கோ, வீட்டுத் திண்ணையில் அமர்ந்த வண்ணம், ‘ஆம்ஸ்ட்ராங்கே ஆம்ஸ்ட்ராங்கே வா… வா….’ என்ற புரட்சித் தலைவரின் பாடலை நயமாகப் பாடி மகிழ்வித்ததையும் மறவேன். வழக்கறிஞர் செல்வத்தரசின் மூத்த அண்ணன் தான் திரு இராஜா என்பவராவார். அவரும் எந்தையாரும் இணைபிரியா நண்பர்களாகப் பள்ளி நாள்களில் மகிழ்ந்ததைச் சொல்லி நெகிழ்ந்தார். இராஜாவும் எந்தையாரை அண்ணன் என்றே அழைத்து உருகுவார்.

எந்தையார், எங்கள் மூவரையும் அம்மாவுடன் அழைத்துக் கொண்டு வடலூருக்குச் செல்லும் வழக்கமுண்டு. வடலூரிலுள்ள மாட்டு வண்டிகளில் ஏறிச்சென்று மகிழ்ந்து விளையாடுகிற நினைவலைகள் நீளமானவையாகும். தவத்திரு ஊரனடிகளாரின் அன்பும் பண்பும் எங்களை எல்லையில்லாத மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அவர் காலை உணவாக இட்டலியையும் மிளகாய்ப் பொடியினையும் சேர்த்துப் பிசைந்து உண்ணும் பழக்கம் இன்றைக்கும் அவர் கூறி மகிழ்வார். அப்பழக்கம் என்னையும் தென்னாப்பிரிக்காவிலுள்ள என் தம்பி பரதனையும் இன்றும் விட்டு நீங்கவில்லை. அது தலைமுறை தலைமுறையாக வளரும் என்றே எண்ணுகிறேன்.
தமிழக அரசு முதன்முதலாக அருட்பிரகாச வள்ளலார் விருது என்று அறிவித்தவுடன் அவ்விருதுக்கு தகுதிவாய்ந்து அணிசெய்யும் பெருமை அடிகளாரைத்தான் சாரும் என்று நினைத்தேன். 01.02.2021-அன்று அவ்விருது தவத்திரு ஊரனடிகளாருக்கே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும். 1967-ஆம் ஆண்டில், திருச்சியில் தவத்திரு ஊரனடிகளார் துறவு வாழ்வை மேற்கொண்ட பொழுது சன்மார்க்க உலகின் வேர் ஊரனடிகள் பற்றிய குறிப்பைத் தன்னுடைய எழுபதாம் அகவை மலரில் அடிகளார் பொறித்துள்ளார்.
சமயபுரம் ஊரன் அடிகள் 23.5.1967-ம் நாளில் சத்திய தருமச்சாலை நூற்றாண்டு விழாவின்போது அருட்திரு. சன்மார்க்க தேசிகன் என்னும் திருப்பெயர் பூண்டு துறவு பூண்ட பெருநிலையைப் போற்றி எந்தையார் எழுதிய பொருளுரை:-

‘கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்          கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாங் கண்டேன்அடர்கடந்த திருவமுதுண் டருளொளியால் அனைத்தும்          அறிந்து தெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்          உள்ளபடி உள்ளபொருள் உள்ளவனாய் நிறைந்தேன்இடர்தவிர்க்குஞ் சித்தியெலாம் என் வசமோங் கினவே          இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவனருட் செயலே’
அருட்பிரகாச வள்ளற்பெருமான் அருளிய அமுதப் பாக்களின் அலங்கலாகத் திகழும் ஞானப் பெருநூலாகிய திருவருட்பா நூற்றாண்டு விழாவும், மேலையிலே, இம்மையிலே, ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும்பயனாம் விளைவை எல்லாம் ஒரு பகலில் தரும் சத்திய தருமச் சாலை நூற்றாண்டு விழாவும் ஆகிய இருபெரு நூற்றாண்டு விழாக்களும் இணைந்து கொண்டாடப்பெறும் இவ்வினிய பொழுதில், தாங்கள் வள்ளற் பெருமானை வணங்கி வழிபட்டதோடன்றி அவற்கே ஆட்படும் வகையில் “உரைகள் எல்லாம் உணர்வெய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார்” என்னும் செம்மொழிக்கேற்பத் துறவு பூண்டதை அறிந்து நாங்கள் வியந்து போற்றுகின்றோம்.  உரை, செயல், சிந்தை என்ற மூன்றையும் ஒரு நெறிக்கே வைத்து அருட்பா அடியாரான புதுமையைத் தமிழகம் பல்லாண்டுகள் கழித்து இன்றே கண்டு மகிழ்கின்றது.
“கடைவிரித்தேன், கொள்வாரில்லை” எனப் பெருமான் கவன்றுரைத்த காலம் கழிந்து திருவருட்பாத் திருநெறியைப் போற்றி மகிழும் ஆர்வம் இன்று மக்களிடையே அரும்பி வருகின்றது. காலமுண்டாகவே, இக்காதல் அவர்பால் நிலைநிற்குமாறு செய்யும் கடன் நமது அருங்கடனாகும். இந்நிலையில் தாங்கள் மேற்கொண்டுள்ள துறவுநெறி வாயிலாக சிறப்பாகச் செந்தமிழ்நாடு முழுதும், பொதுவாக உலக முழுவதுமாக விரிவுரைத் தொண்டுகளும், விளக்கவுரை நூல்களும் ஆக்கிச் சன்மார்க்கப் பெருநெறியை உலக முழுவதும் தழையுமாறு செய்தல் வேண்டும். அப்பெரும்பணியாற்ற வள்ளற்பெருமான் அருளால், நீடிய வாழ்வும் நிறை நலமும் பெற்று உயர்ந்தோங்குமாறு இறைஞ்சுகின்றோம்.
‘தன்னைவிடத் தலைமையொரு தகவினுமிங் கியலாத்          தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியேபொன்னடியென் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே          புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான்என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன்          இருவருமொன் றாகியிங்கே இருக்கின்றோம் இதுதான்நின்னருளே அறிந்ததெனிற் செயுஞ்செய்கை அனைத்தும்          நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே’
என் பாட்டனார் உரைவேந்தர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மூன்று திருமண விழாக்களில் கலந்து கொண்டதை நான் நினைவுகூர்கிறேன். இரண்டாம் வகுப்பு பயிலும்போது, என்னுடைய சித்தப்பா ‘சமயப் பொழிவாளர்’ திருநாவுக்கரசு – ‘அறுசுவை அரசி’ முத்துலட்சுமி (23.08.1974) திருமணம் நுங்கம்பாக்கதிலுள்ள அகத்தீசுவரர் திருக்கோயிலில் நடைபெற்றது. பிறகு விருந்து என் சின்னத்தாத்தா ஏகாம்பரம் (லோகாம்பாள் பாட்டியின் தம்பி) இல்லத்தில் நடைபெற்றது. நான் ஆறாம் வகுப்பு பயிலும்போது, மருத்துவ மாமணி மெய்கண்டான் – ‘இசையரசி’ சீதை (ஔவை டி.கே. முத்துசாமி திருமகள்) இராயப்பேட்டையில் ஹேமமாலினி திருமண மண்டபத்தில் (26.10.1978) நடைபெற்றது. ஆட்சிமொழிக்காவலர் கீ. இராமலிங்கனார் நடத்தி வைத்தார். மாலை வரவேற்பில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.வி. இரமணன் இன்னிசை மழையில் நனைந்தோம். நினைவில் வாழும் மருத்துவத் திலகம் நெடுமாறன் – ‘மருத்துவச்சுடர்’ கலாவதி திருமணம் மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் (03.03.1980) சீரும் சிறப்புமாக நடைபெற்றதும் பசுமையாக நினைவில் உள்ளது.

அவ்வண்ணமே சென்னைக் கிறித்தவ மேனிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் பயிலும்பொழுது என் வகுப்புத் தோழன் தீபக்கும் நானும் விடுமுறை விண்ணப்பம் வழங்கியபோது, என் வகுப்பாசிரியர் ‘என்ன இருவரும் ஒரே திருமணத்திற்குச் செல்கிறீர்கள். நீங்கள் இருவரும் உறவினர்களா?’ என்று உசாவினார். நான் உடனே ‘என் சின்னத்தாத்தா ஏகாம்பரம் அவர்களின் இரண்டாம் மகன் அமெரிக்கா வாழ் ‘அறிவியல் வாணர்’ வானவன் திருமணத்திற்குச் செல்கிறேன்’ என்றேன். உடனே தீபக் (மருத்துவர் சினேகலதா மகன்), ‘எங்கள் பக்கத்து வீட்டு அக்கா ஆனந்தி திருமணத்திற்குச் செல்கிறேன்’ என்றார். சிரித்துக் கொண்டே ஆசிரியர், ‘நம் பள்ளிக்கு அருகிலுள்ள ‘குசலாம்பாள்’ திருமண மண்டபத்திற்குத்தான் வருகிறீர்களா’ என்று திருமண அழைப்பிதழைப் பார்த்துச் சொன்னார். என் மாமா வானவன் இல்லத் திருமணம் இனிதாக (03.09.1981) நடைபெற்றது.

பனிரெண்டாம் வகுப்பு பயிலும்போது, எங்கள் பெற்றோர்கள் ஒருங்கிணைப்பால் ஆங்கிலத்துறை நல்லாசிரியர் சுதா திருமணத்தில் நாங்கள் ஓடியாடி அனைத்துப் பணிகளையும் செய்தது மறக்கவொண்ணா நிகழ்வாகும். அண்ணா நகரிலுள்ள பெரியார் திருமணக் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற திருமணம் ஆகும். தவத்திரு. அழகர் அடிகளாரின் பெயரன் மீஞ்சூர் மருத்துவர் சண்முகம் – குமுதவல்லி திருமகன் மருத்துவர் நலங்கிள்ளியை என் அக்கா இனிதே கரம் பிடித்தார் (08.06.1984). குடும்பத்தினர் அனைவரும் குலவிளக்குகளாகச் சுடர்விட்டு அங்குமிங்குமாக அமெரிக்கா, இலண்டன், ஆசுதிரேலியா, நியூசிலாந்து, துபாய், சென்னை, மதுரை, கோவை என வளமாக வாழ்ந்து வருகின்றனர்.

பத்துப்பாட்டில் மனம் பற்றுக:திருமுருகாற்றுப்படைஉ.குன்றுதோறாடல்:
‘மயில்கண் டன்ன மடநடை மகளிரொடுசெய்யன் சிவந்த ஆடையன், செவ்வரைச்செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்,கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன்,குழலன், கோட்டன், குறும்பல் லியத்தன்,தகரன், மஞ்ஞையன், புகரில் சேவலம்கொடியன், நெடியன், தொடையணி தோளன்,நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு,குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்,மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்,முழுவுறழ் தடக்கையி னியல் வேந்தி,மென்றோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து,குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே!’

மயிலைப் போன்ற மென்னடை மகளிரொடு செம்மையானவன், சிவந்த ஆடையை உடுத்தியவன், அசோகின் இளந்தளிரைச் செருகிக்கொண்ட காதினன், கச்சையணிந்தவன், கழலணிந்தவன், வெட்சிமாலையணிந்தவன், காதில் குழல் செருகியவன், ஆரவாரத்தன், சிறிய பல வாத்தியங்களைக் கொண்டவன், மயிலூர்தியன், குற்றமற்ற அழகிய சேவற்கொடியன், நெடியன், தோள்வளை புனைந்த தோளினன், நரம்பு எழுப்புகின்ற இனிய குரலொடு சிறு புள்ளிகளையுடைய தண்ணிய சாயல் கொண்டு, அரையில் பிணித்த, நிலத்தையளக்கும் ஆடையணிந்தவன். உரிமை மகளிரின் தோள்களைத் தழுவிக் கொண்டு, குன்றுதோறும் ஆடல் நிகழ்த்துவதும் அவனுடைய நிலைத்த பண்பே!

ஊ.பழமுதிர்சோலை:

‘அறுவர் பயந்த ஆறமர் செல்வ!ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரைமலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!இழையணி சிறப்பின் பழையோர் குழவி!வானோர் வணங்குவில் தானைத் தலைவ!மாலை மார்ப! நூலறி புலவ!செருவி லொருவ! பொருவிறல் மள்ள!அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை!மங்கையர் கணவ! மைந்த ரேறே!வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து,விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே!அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக!
இந்தத் துதித்தொடர்களை விடியலில் என் தாத்தா (உரைவேந்தர் ஔவை துரைசாமி) இசையுடன் பாடுவார். கார்த்திகை மகளிராம் அறுவர் பெற்ற அருஞ் செல்வனே! பெருமலை நாயகியாம் மலைமகள் மகனே! ஆலமர் கடவுளின் அரும்புதல்வனே! பகைவர்க்குக் கூற்றுவனாக உள்ளவனே! வெற்றிச்செல்வியாம் துர்க்கையின் சிறுவனே! அணிகலச் சிறப்புடைய காளியின் குழந்தையே! தேவாசுரப் போரில் தேவர்படைக்குத் தலைவனே! மணமிகுந்த மாலையணிந்த மார்பனே! நூலறிவுமிக்க நுண்ணிய புலவனே! போர்புரிவதில் ஒப்பற்றவனே! போர்க்களத்துப் பெருவீரங் கொண்ட இளைஞனே! அறவோராகிய அந்தணர்தம் செல்வமே! நூலறிந்த புலவர்தம் சொல்மலையே! தெய்வயானை கணவனே! வள்ளியம்மை மணாளனே! ஆற்றல்மிக்க இளஞ்சிங்கமே! கையில் வேலாயுதத்தைத் தாங்கிய பெருங்குணச் செல்வனே! கிரௌஞ்சமலையை குறுகு பெயர்க்குன்றம் அழித்த குறைவிலா வீரத்து, விண்ண ளாவிய நெடுமலைக் குறிஞ்சியின் கோமானே! பலரும் பாராட்டிப் புகழ்கின்ற நன்மொழிப் புலவர் ஏறே! அரும்பெரும் தொழில் மரபின் பெரும்பெயர் கொண்ட முருக வேளே! பழமுதிர் சோலை மலைகிழவோனே!

49  –  “பார்த்திபன் கனவும் துணிவும்”
உயர்நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள அரங்கத்தில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பேசி முடித்து அமர்ந்திருந்தபொழுது, புதுமுகமான நல்லிளைஞர் ஒருவர் என் தோளைத் தட்டி ‘வாருங்கள், ஸ்டெல்லா மாரீசு மகளிர் கல்லூரியில் நடைபெறும் கலைவிழாப் போட்டிக்குச் செல்லலாம்’ என்று தன்னுடைய நண்பரின் சீருந்தில் அழைத்துச் சென்றார். அறிமுகமே இல்லாத திருமுகம் அவர். நேர்த்தியான உடலமைப்பு, பம்பரம் போல் சுழலும் விழிகள், கற்பூரம் போல் பற்றிக் கொள்ளும் நட்புக் கேண்மை. சிரித்துக் கொண்டே என் பெயர் பார்த்திபன் என்றார். நான் உடனே பேராசிரியர் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ நான் படித்த வரலாற்றுப் புதினம் என்று சொல்லி மகிழ்ந்தேன். அனைத்துக் கல்லூரிப் பலகுரல் போட்டியில் முதற் பரிசினை நண்பர் பார்த்திபன் பெற்றார். கல்லூரியில் கூடியிருந்த மாணவ மாணவியர் அவரைச் சூழ்ந்து பாராட்டியதைக் கண்டு நான் பெருமிதம் அடைந்தேன். இரண்டாமியாண்டு தமிழிலக்கியம் பயிலும் காலம் தொடங்கி (1986-87) இன்று வரை எங்கள் ஆழ்ந்த நட்பு அளவிடற்கரியது. அப்பொழுது, அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை இராணுவவியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து பல போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றதும் நன்றாக நினைவில் உள்ளது. நான் நடத்திய குருதிக்கொடை நிகழ்வில் அவருடைய பங்கு பெரிதும் போற்றத்தகுந்தது.

காயிதே மில்லத்து மகளிர் கல்லூரி முதல்வர் தொடங்கி நூற்றுக்கணக்கான மாணவியருக்குச் செல்லப் பிள்ளையாக பார்த்திபன் விளங்கினார்.  மருத்துவர்களான திருமதி விமலா இராமலிங்கமும், கலையரசியும் – பார்த்திபன் சொல்லும் வேடிக்கைக் கதைகளைக் கேட்டு சிரித்துக்கொண்டேயிருப்பார்கள்.  கல்லூரி மாணவிகளுக்குக் குருதி அளிப்பு நிகழ்வு நெடுநேரமாகும். காரணம், உணவு உட்கொள்வதில் ஈடுபாடு குறைவாகவே தான் அக்காலக் கல்லூரி மாணவிகளுக்கு இருந்தது. நெடுநேரத்தை உடன் தீர்க்கும் வல்லமை பார்த்திபனுக்கு இயல்பாக அமைந்தது. ஈகை தரும் மாணவிகளைப் பார்த்து, ‘என் கண்களைப் பாருங்கள்’ என்று தன்னுடைய விழிகளை உருட்டி மருட்டிக் காட்டுவார். குருதி ஈகை தந்த மாணவி ஒருவர் அரை மணி நேரத்தில் இனிப்புகள் பல எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து, என் பெயர் பால கல்யாணி. என் பிறந்த நாள் இன்று என்று சொல்லி இனிப்புகளை வாரி வழங்கினார். தொடர்ந்து குருதிக்கொடை நடைபெற்ற இரண்டு நாள்களுக்குள் பால கல்யாணி பார்த்திபனைப் பெரிதும் விரும்பினார்.

ஆனால், பார்த்திபன் எந்த அன்பும் ஆர்வமும் வளர்த்துக் கொண்டவரில்லை. வலையிலும் சிக்காமல், அவருக்கு நல்லுரை சொல்லி, ‘நீ வளர வேண்டிய பெண்’ என்று சொல்லி ஆற்றுப்படுத்தினார். நற்பண்பை வளர்த்தது இளமை! அத்தகைய பார்த்திபனுடைய பேராசிரியர் பெருந்தகை முனைவர் கே.சி. மனோகரன், மிடுக்கான தோற்றமும், ஆழமான சொற்களும், விழுமிய கருத்துகளைப் போற்றும் பேராசிரியர் ஆவார். அவரின் வழிகாட்டுதலின்படி, பார்த்திபன் நடந்திருந்தால் அத்துறையிலேயே முனைவர் பட்டம் பெற்றிருப்பார். ஆனால், அவரும், அக்காலச் சூழலுக்கு ஏற்பப் பெங்களூரில் சட்டம் பயின்றார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில், அவருடைய இனிய நண்பர்களான வீரமோகன், அரக்கோணம் நிலக்கிழார் இராஜேந்திர பிரசாத், வழக்கறிஞர் வித்யா பாலசுப்பிர மணியம், மேனாள் சட்டமன்றப் பேரவைத் தலைவர் கே. இராஜாராமின் இளவல் மருத்துவ மாமணி காந்தராஜ், திருமதி சத்திய வாணி முத்துவின் மருமகள் காந்திமதி அறச்செல்வம், மதுரை பி.டி.ஆர். பழனிவேல் இராஜனின் உறவினர் மோகன், அடையாறு சுவரம் மருத்துவமனைத் தலைவர் அரி இரமேஷ் போன்றோர் நண்பர்களாக எனக்கும் அறிமுகமானார்கள். பார்த்திபன் பலகுரல் மன்னர் மட்டுமல்லாமல் திரைப்படத் துறையில் மின்னும் நட்சத்திரமாக வாய்ப்புக் கிடைக்கப்பெற்று இது நம் தொழிலல்ல என்று விலகி நின்றவர். பார்த்திபன் மீது, தனிப்பாசம் காட்டியவர்கள் இயக்குநர் திலகம், டி. இராஜேந்தர், இயக்குநர் இரங்கராஜன் ஆவார்கள். இயக்குநர் டி. இராஜேந்தர் தனிக்கட்சி தொடங்கிய பொழுது, கட்சிக்கான கொள்கை விளக்கத்தினை ஆங்கிலத்தில் எழுத வேண்டிய பொழுது, பார்த்திபன் என்னை அழைத்துச் சென்று, எழுத வைத்துக் காட்டினார். உடனே, டி. இராஜேந்தர் அவர்கள் என்னைப் பார்த்து ‘தமிழிலக்கியம் பயிலும் மாணவனாகிய நீ, வனப்பான ஆங்கிலம் எழுதுகிறாயே’ என்று பாராட்டினார்.
1989-இல் பம்பாய் நிறுவனம் நடத்திய நட்சத்திரப் பெருவிழா நாரத கான சபையில் நடைபெற்ற பொழுது பார்த்திபனின் துணிவால் நடிகை சௌகார் ஜானகியின் பெயர்த்தி நடிகை வைஷ்ணவிக்குப் பதிலாக அவ்விழாவில் என்னைத் தொகுப்புரையாற்ற வைத்தார். நிரலில் இல்லாத பொழுதும் பார்த்திபனை பத்து நிமிட இடைவெளியில் பலகுரல் செய்ய வைத்ததும் அரங்கமே அதிர்ந்தது. இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் முதல் பல நடிகர் நடிகைகள் அவரைப் பெரிதும் பாராட்டினார்கள். சென்னைப் பல்கலைக்கழக கலைவிழாப் போட்டிக்கு தலைமை தாங்கிய கல்வி அமைச்சரிடமும், துணை வேந்தரிடமும் தமிழ் சார்ந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்பதை நன்றியுரையாற்றும்பொழுது என்னைச் சொல்லச் சொல்லி துணிவு தந்தவர் பார்த்திபனேயாவார். 1989-ஆண்டு, மோரீசில் நடைபெற்ற ஏழாம் உலகத்தமிழ் மாநாட்டிற்குச் செல்லவேண்டுமென்று பார்த்திபனும் நானும் ஏங்கினோம். அதற்கு எங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. தமிழறிஞர்கள் செல்லும் இடத்திற்கு முதுகலை தமிழிலக்கியம் பயிலும் மாணவன் செல்ல வாய்ப்புக்கிடைப்பதென்பது கானல் நீராகும். அப்பொழுது எந்தையார்தான் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையின் அரசு செயலாளராக, அவர் தலைமையில் அறிஞர்கள் சென்றனர். ஆனால் அவரிடம் கேட்பதற்கு அச்சமாக இருந்தது. ஆனால், நண்பன் பார்த்திபன் ஓர் அழகான திட்டம் தீட்டி, அருணா சர்க்கரை ஆலையின் தலைவர் திரு. மருதைப் பிள்ளையவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, இந்திய மோரீசு தமிழ்ப் பண்பாட்டு மையம் என்ற அமைப்பைத் தொடங்கி அவரைத் தலைவராக நியமித்து, அவர் அலுவலகத்தைப் பதிவு அலுவலகமாகக் கொண்டு, மடலேட்டிலும் ( Letterhead), முகவரி அட்டையிலும் ( Visiting Card) எங்கள் பெயர்களைக் அச்சிட்டு வழங்கி மகிழ்ந்தார்.

1989 திசம்பர் திங்களில் நடைபெறவிருக்கிறது ஏழாம் உலகத்தமிழ் மாநாடு. செப்டம்பர் திங்களிலேயே சுவர்தாங்குச் சாலையில் உள்ள (Spur tank Road) உலகப் பல்கலைக் கழக அரங்கத்தில் ( WUS Centre) தொடக்க விழா நடைபெற்றது. நாடாளுமன்றத் துணைத் தலைவர் திரு. தம்பிதுரை, மோரீசு நாட்டின் கல்வியமைச்சர் திரு. ஆறுமுகம் பரசுராமன், பேராசிரியர் திருமலை செட்டி, கவிஞர் சௌந்திரா கைலாசம், டாக்டர் காந்தராஜ், டாக்டர் கே.சி. மனோகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அவ்விழாவில் டாக்டர் விமலா இராமலிங்கத்தின் மகள் ‘கலைமயில்’ சோபா இராமலிங்கத்தினுடைய நடன நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பார்வையாளர்களாக, அறிஞர் பெருமக்கள் பலர் மத்தியில் காயிலே மில்லத் அரசுக் கல்லூரி மாணவிகளும் புடைசூழ வருகை புரிந்தனர். தொழிலதிபர் மருதைப் பிள்ளையும், அவருடைய நிறுவனத்தின் மேலாளர் திரு. சோமசுந்தரமும் அடுத்த நாள் இருவரையும் அழைத்துப் பெரிதாகப் பாராட்டினார்கள். ‘வருங்காலங்களில் நீங்கள் வளருவீர்கள்’ என்று வாழ்த்தினார்கள். மோரீசு செல்லும் வாய்ப்பு மட்டும் எங்களுக்குக் கிடைக்கவேயில்லை. எங்கள் இருவருக்கும் முதல் முகவரி அட்டை அளித்த வள்ளல் மருதைப் பிள்ளை என்று அவருடைய பெயரன் கார்த்திக்கிடம் அண்மையில் நான் தெரிவித்தேன்.

மோரீசு நாட்டுக்கு என் தந்தையார் சென்று சேர்ந்த மறுநாள், என் அம்மாவுக்கும் அரசின் இசைவு வந்தது. ‘என் மகன் அருள் செல்லாதபோது எனக்கு அந்த வாய்ப்பு வேண்டாம்’ என்ற மறுத்து விட்டார்கள். என் தந்தையும் தாயும் பின்னர் ஓய்வு பெற்ற பிறகு, மோரீசு சென்று உரையாற்றி வந்தனர். எந்தையாரின் நண்பர் திருமதி சாவித்ரி இராகவேந்திரா என்னை பல தருணங்களிலும் இலக்கியத்தில் ஆர்வம் காட்டுவதைப் போலவே வணிக செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துவார். அதற்கு ஒரு வாய்ப்பாக டி.டி.கே. சாலையில் அமைந்துள்ள சிற்றரங்கில் நடைபெற்ற பொருட்காட்சியில் பார்த்திபனும் நானும் சிற்றுண்டி மாடம் அமைத்து பெருலாபம் ஈட்டினோம். நாள்தோறும் பூவிருந்தவல்லியிலிருந்து அமைந்தகரை வரை பேருந்தில் வந்து, என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்னை முழுதும் வலம் வருவோம். பார்த்திபன் சட்டம் பயின்று முடித்த ஓரிரு ஆண்டுகளில் என் அறிமுகத்தால், புகழ்பெற்ற ‘வழக்கியல் திலகம்’ திருமதி நளினி சிதம்பரத்திடம் சட்ட இளையோராகப் பணியாற்றி 1993-இல் ‘கிளியா’ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, என்னிடம் வந்து, ‘நாளை நாம் இருவரும், அமெரிக்கத் தூதரக அலுவலகம் செல்கிறோம். அமெரிக்காவிற்கு உடனே விசா எடுக்கிறோம். அமெரிக்கா செல்கிறோம் என்றார். அடுத்தநாள் அவர் என்னைப் பார்க்க வரவில்லை. நானும் எதற்கும் தயாராகவில்லை. பத்து நாள் கழித்து அமெரிக்காவிலிருந்து பார்த்திபன் என்னிடம் தொலைப்பேசியில் பேசினார். இந்தியத் தூதரக அலுவலகத்தில் பணியாற்றவிருக்கிறேன் என்று சொன்னார். அன்று முதல் அமெரிக்க வானில் சுழலும் சுடராக மிளிர்கிறார். அவருடைய துணைவியார் திருமதி கலைச் செல்லம் புகழ்பெற்ற மூப்பியல் மருத்துவராகவும், அவர்களுக்குப் பெண் மக்கள் வெண்ணிலா, வானதி ஆவார்கள். வெண்ணிலாவுக்கு, சபையர் திரையரங்கத்திற்கு எதிரிலுள்ள ‘சர்ச் பார்க்’ மகளிர் பள்ளியில் தொடக்க வகுப்பில் நான் அவர் பெற்றோர்கள் வராமலேயே என் பரிந்துரையில் பள்ளியில் சேர்த்தேன். மேனாள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பயின்ற பள்ளியில் தன் மகள் படிக்க வேண்டும் என்பது பார்த்திபனின் விருப்பமாகும்.

பார்த்திபனும் அவருடைய நண்பர் டாக்டர் விஜய் பிரபாகரும் (இ.சி. பிரபாகர், இ.ஆ.ப. மகனும் அமெரிக்காவில் பெருந் தகைமையாளராகப் பொதுநலப் பணியில் பணியாற்றுகிறார்) அமெரிக்காவில் சிகாகோவில் உள்ளூர் மாநகராட்சி ஆணையரின் அனுமதியுடன் தமிழக அரசியல் தலைவி பெயரில் தெருவொன்றிற்குப் பெயர் சூட்டிய சிற்பிகளாவார்கள். இன்று வெண்ணிலா உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார் என்பது பெருமிதமாகவுள்ளது. தன்னுடைய தாய், தம்பி, தங்கையையும் அமெரிக்காவிலேயே குடியமர்த்திய பெருமையும் பார்த்திபனைச் சாரும். சென்னையில் இன்றும் மைத்துனர் வழக்கறிஞர் சக்திவேல் குடும்பமும், பார்த்திபனின் உடன் பிறந்த தம்பி கிருஷ்ணராஜும் பார்த்திபனுக்கு உற்ற துணையாகத் திகழ்ந்து வருகின்றனர். பார்த்திபன் பரிவார்ந்த நண்பர், படித்தவர், பழகியவர்களுக்கு உயிர் கொடுக்கும் பண்பு கொண்டவர். நாமக்கல் கவிஞரின் பெயரன். என்னை அமெரிக்காவிற்க அழைத்துச் செல்ல விடாப் பிடியாய் நின்றார். கிளியாவில் எனக்கு அளிக்கப்பட்டிருந்த பொறுப்பும் சிறப்பும் என்ன பெரிய அமெரிக்கா, எந்த நாட்டுக்கும் எப்போதும் குடியேற என் அதிகாரம் செல்லும் என்ற செருக்கு நிலையில் இருந்தேன். பார்த்திபன் கனவும் நினைவும் வெற்றி பெற்றன. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ பைடன் அரசு அமையும் என்று ஆறு மாதத்துக்கு முன்னே கணித்துச் சொன்னவர். அன்றாடம் முகநூலில் அவரின் பதிவுகளுக்கு உலகம் காத்திருக்கிறது. டாக்டர் விஜய் பிரபாகரும், டாக்டர் பார்த்திபனும் அமெரிக்காவில் புகழோடு வாழ்கிறார்கள். இருவருக்கும் அரசிலோ, ஊடகத்திலோ தலைமையேற்கும் பொன்னான நாள் காத்திருக்கிறது.

—–பத்துப்பாட்டில் மனம் பற்றுக:திருமுருகாற்றுப்படைதியாகராசர் கல்லூரியில் எந்தையார் இளங்கலைத் தமிழ் வகுப்பில் மலையிலிருந்து விழும் அருவி எப்படி நக்கீரர் சொற்களில் இழுமென் ஓசையோடு அதிர்ந்து விழுவதை உணர்ச்சி ததும்பக் கூறுவார்களாம்.  அந்தக் கல்லருவிக் காட்சியைக் சொல்லருவியாகத் திகழ்ந்த நாவேந்தர் கா. காளிமுத்து மேடைதோறும் தமிழின் மேன்மைக்குச் சான்று இதோ பாருங்கள். அருவி விழுகிறது என்று இந்த வரிகளை அடுக்கிச் சொல்வார். மேடை இந்த உரையைக் கேட்டுப் பெரிதும் ஆரவாரித்தது. அந்த இனிய பகுதியை நீங்கள் இப்போது காணலாம்.
பலவுடன்வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்துஆர முழுமுதல் உருட்டி வேரல்பூவுடை அலங்குசினை புலம்ப வேர்கீண்டுவிண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்ததண்கமழ் அலரிறால் சிதைய நன்பலஆசினி முதுசுளை கலாவ மீமிசைநாக நறுமல ருதிர ஊகமொடுமாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்றுமுத்துடை வான்கோடு தழீ இத் தத்துற்றுநன்பொன் மணி நிறங் கிளரப் பொன்கொழியாவாழை முழுமுதல் துமியத் தென்னைஇள நீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புறமடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்கோழி வயப்பெடை இரியக் கேழலொடுஇரும்பனை வெளிற்றின் புன்சாய்அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்டுஆமா நல்லேறு சிலைப்பச் சேண் நின்றுஇழுமென இழிதரு மருவிப்பழமுதிர் சோலை மலைகிழ வோனே!

மலையுச்சியில் பல இடங்களில் தோன்றும் அருவிகள் கீழ் நோக்கிப் பாய்கையில் காற்றால் அலைப்புண்ணும் பல துகிற்கொடிகளைப் போலக் காணப்படுகின்றன. இவ்வருவிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து பேரருவியாய் உருவெடுத்துக் கீழ் நோக்கிப் பேரிரைச்சல் இட்டுக்கொண்டு பாய்கின்றன. அப்பேரருவி தன் போக்கில் சிறு மூங்கிலின் வேரைப் பிளக்கிறது; தேனீக்கள் அமைத்த தேன்கூடுகளைக் கலைக்கிறது; நன்கு முற்றிய ஆசினிப் பலாப்பழங்கள் வெடித்துச் சிதறிய சுளைகளைக் கொண்டு செல்கிறது. மலையுச்சியில் உள்ள சுரபுன்னையின் நறிய மலர்கள் அவ்வருவி நீரில் உதிர்கின்றன. அருவியின் ஓட்டத்தையும் ஓசையையும் கண்டும் கேட்டும் கருக்குரங்குகளுடன் கரிய முகத்தையுடைய முசுக்கலைகள் நடுங்குகின்றன. அருவி நீர், புகரையணிந்த மத்தகத்தையுடைய பெரிய பெண்யானை குளிரடையும்படி வீசுகிறது; தன் போக்கில் அகப்பட்ட யானைக்கொம்புகளைத் தன்னுள் அடக்கி, பொன்னும் மணியும் நிறம் விளங்கும்படி மேலே கொண்டு குதித்து, தத்துதலையுற்றுப் பொடியான பொன்னைத் தெள்ளுகிறது; வாழையின் பெரிய முதல் துணியும்படியும் தெங்கின் இளநீர்க்குலை உதிரும்படியும் அவ்விரண்டனையும் மோதுகிறது; மிளகுக்கொடியின் கரிய கொத்துகளைச் சாய்விக்கிறது; மயில்கள், கோழிகள் முதலிய பறவைகளை வெருவி ஓடச்செய்கிறது; ஆண் பன்றியையும் கரடியையும் மலைக்குகைகளில் பதுங்கும் படி செய்கிறது; கரிய கொம்புகளையுடைய காட்டுப் பசுக்களின் எருதுகளை முழக்கமிடச் செய்கிறது. இங்ஙனம் பேரருவி பாய்கின்ற பெரிய மலையில் பழம் முற்றிய சோலை பல இருக்கின்றன.

50  –  “சாதித்து வெல்பவர் சாந்தகுமார்”

1974-ஆம் ஆண்டு முதல் 1992 வரையில் தலைமைச் செயலகத்தில் எந்தையார் செய்தித் துறையின் துணை இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் உயர்திரு அரசு செயலாளராக அமர்ந்திருந்த வரையிலும், தமிழன்பர்களுக்கும், புலவர்களுக்கும் பேராசிரியப் பெருமக்களுக்கும் இளைப்பாறும் குளிர்நிழல் தென்றலாக, மன்றமாக அவரின் அலுவலகத்தைப் போற்றிப் பாடினார்கள்.

என் பாட்டனார் உரைவேந்தரின் நண்பர்கள் மாணவர்கள் எல்லோருக்கும் எந்தையாரை வந்து அந்நாள்களில் தலைமைச் செயலகத்திலேயே சந்திப்பது என்பது பெரும்பேறாகக் கருதினார்கள்.  அவ்வண்ணம் மதுரையில் காந்தி நகரில் இருந்த என் பாட்டனாரின் அடுத்த வீட்டு நண்பர் பெரியவர் கரையாண்டி (தமிழ்நாடு அரிசன சங்கத் தலைவர்) தன் தொண்டர்களையும், நண்பர்களையும் அப்பாவிடம் அறிமுகம் செய்வது வாடிக்கையாகும்.

1982-ஆம் ஆண்டில், அண்ணா நகர் இல்லத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர்தான், திரு. சாந்தகுமார் ஆவார்.  அந்நாட்களில் மதுரையில் மீனாட்சி நகைக்கடை உரிமையாளராகவும் திகழ்ந்தவர். அவருடைய உயரிய அன்பிலும், குடும்பப் பரிவிலும், நாங்களும் ஆட்பட்டோம்.  வாரந் தவறாமல் மதுரையிலிருந்து சென்னைக்கு வரும்பொழுதே மதுரையில் புகழ்பெற்ற சுமங்கலி இனிப்பகத்திலிருந்து இனிப்பு, கார வகைகளுடன் முகம் மலர திருநீற்றுக் குங்குமம் பூண்டு முகப்பொலிவுடன் விடியற்காலை ஏழு மணியளவில் வருவது வாடிக்கையாகும். பெற்றோர்கள் இருவரும் அவரைப் பாராட்டிய வண்ணமே இருந்தார்கள். பள்ளி நாட்களில் என்னையும் என் உடன் பிறந்தவர்களையும் ஞாயிற்றுக் கிழமைகளில் திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வது அவரின் வழக்கமாகும்.

ஒருமுறையும் திரையரங்கத்தில் விற்கப்படும் (ரூ.1.10, ரூ2.90, ரூ.4.50) மதிப்பீட்டிலான திரைச்சீட்டுகளைப் பெற முடியாமல் இருப்போம். காரணம் அத்திரைப்படங்களெல்லாம் கமல், ரஜினி நடித்த முதல் நாள் முதல் காட்சிகளாகும்.  எப்பொழுதும் அதற்கு மேல் பணம் செலுத்தி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.  அமைந்தகரையிலுள்ள இலட்சுமி திரையரங்கம், முரளிகிருஷ்ணா திரையரங்கம், புரசையிலுள்ள அபிராமி, அண்ணாசாலையிலுள்ள அலங்கார் மற்றும் தேவி குழுமத் திரையரங்கம் செல்வது குறிப்பிடத் தகுந்தவைகளாகும்.  திரைப்படம் முடித்து மும்மீன் அல்லது ஐமீன் உணவகங்களில் உண்பதும் அவர் அறிமுகத்தால் தான் பழகினேன்.  பீடும் மிடுக்குமாக அவர் செய்த செலவுகள் எண்ணற்றவை.  ஒருமுறை சோழா ஐமீன் உணவகத்தில் நீச்சலடிக்க வேண்டும் என்று முனைந்தபொழுது என்னையறியாமல் மூழ்கி விட்டேன். உடனே, அங்கிருந்த பயிற்றுநரிடம் ரூ.100/- வழங்கி தம்பி அருளை மீட்கச் செய்தார்.
அவர் கொண்டுவரும் பலகார வகைகள் எங்கள் வீட்டிற்கு மட்டுமல்லாமல் கவிஞர் சௌந்திரா கைலாசம், திரு. கிருஷ்ண பாரதி, இ.ஆ.ப., எழுத்து வேந்தர் கோ. வி. மணிசேகரன், இல்லங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று வழங்குவார்.  மதுரைக்கு அப்பா செல்லும் போதெல்லாம் அவரை வரவேற்று நிற்பவர் சாந்தகுமார் ஆவார். அப்பா மதுரையில் தங்கும் ஆரத்தி உணவகத்தில் தலைமை விருந்தினராக அவரே மிளிர்வார். மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் இராஜாஜி மருத்துவமனையின் தலைவராக அம்மா திகழ்ந்தபொழுது உதகமண்டலம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு எங்களை அழைத்துச் செல்லும் பெருமனம் கொண்டவராவார்.  அவரின் ஒருங்கிணைப்பில் அம்மா, நயவுரை நம்பியின் இல்லத்தரசி (நினைவில் வாழும் அனுசூயா அம்மையாருடன்) ஆகியோருடன் நானும் குற்றால அருவிக்குச் சென்று வந்தது பசுமையான நினைவாகும்.

நான் இளங்கலை தமிழிலக்கியம் இறுதியாண்டின் போது, சாந்தகுமாரின் திருமணம் மிகச் சிறப்பாக மதுரையில் நடைபெற்றது (27.03.1988).  எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள் பலர் எனப் புடைசூழ தொடரியின் முழுப்பெட்டியையே பதிவு செய்து அழைத்துச் சென்ற பாங்கு வியப்பில் ஆழ்த்தும்.  எந்தையாரின் நன்முயற்சியில் என் சித்தப்பா சமயப் பொழிவாளர் திருநாவுக்கரசை, மலேயாவுக்கு அழைத்துச் சென்றதும் அவ்வண்ணமே 1990-ஆம் ஆண்டில் எனக்கு முதன்முறையாக கடவுச்சீட்டு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அடைக்கலராஜின் நல்லுறவால் சுற்றுலா முகவர் ஜான் தாமஸ் முயற்சியில் கிடைக்கப் பெற்றதும் சாந்த குமாரின் ஒத்துழைப்பால்தான் என்பதை மறக்கவியலாது.
சாந்தகுமார் வளமாக வணிகம் செய்த பொழுது பெற்றோர்கள் அடிக்கடி அவரிடம் வலியுறுத்துவது, ‘செலவு நிறைய செய்ய வேண்டாம், சாந்தகுமார் இது சேமிப்புப் பருவம், பணம் ஈட்டுவதை செல்வமாக காத்து வைக்க வேண்டும்’ என்பதுதான்.  ஆனால் அவைகள் எல்லாம் கரைந்துபோய் மீளமுடியாத கடன்துயரில் ஆட்பட்ட பொழுதும் மனம் கலங்காமல், கடினப்பாதையை உய்த்துக் கடக்கும் காளையாக நிமிர்ந்து துன்பமும் துன்புறும் வண்ணம் மீண்டெழுந்தவர் எங்கள் சாந்தகுமார். சென்னை நோக்கி தன் திசையை மாற்றினார். என் இனிய நண்பர் லியோ இரவிக்குமாரும் அவரின் தந்தையார் திரு. பழனிச்சாமியின் நன்மணத்தாலும், அவர்கள் நடத்திவந்த நுங்கம்பாக்கம் சாலையிலுள்ள கடையிலேயே பின்வாயிலில் சாந்தகுமார் திவ்யா நகையகத்தைத் (1991) தொடங்கி வெற்றி பெற்றார்.  எவ்வளவு தான் பொன் வணிகத்தில் உழைத்தாலும் பட்ட காலிலேயே படும் என்பதுபோல மீண்டும் சரிவுற்றார்.

என்ன பணி செய்வது என்று தெரியாமல் மருண்டிருந்த சாந்தகுமார் வாடகை உந்துகளைத் தொழிலாகச் செய்யலாமா என்று நினைத்து, அதிலும் வெற்றி பெற முடியாமல் இருந்தார்.  அப்பொழுது நான் கிளியா நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது பல விளம்பரங்களை மக்கள் குரலில் வெளியிட்டுக் கொண்டிருந்தோம்.  அப்பொழுது இதழாளர் திரு. சித்தரஞ்சன் அவர்களிடம் சாந்தகுமாரின் திறமையைப் பரிந்துரைத்தேன். உடனே, என்னிடம் அவரை அனுப்புங்கள் செதுக்கிக் காட்டுகிறேன் என்று சொன்ன பெருவுள்ளத்தின் பெட்டகம் சித்தரஞ்சன் ஆவார்கள்.  அவருடைய நல்லுள்ளத்தால், மாலை நேர இதழான மக்கள் குரலில் பணிசெய்ய சாந்தகுமாருக்கு 1992-இல் வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.  இன்றுவரை வேறெந்தப் பணியிலும் கவனம் சிதறாமல் சிந்தனை ஒருநிலையாக மக்கள் குரல் இதழின் விளம்பர வளர்ச்சியின் தூணாக விளங்குகிறார்.

நகைத் தொழிலே மரபாக வளர்ந்ததால், கல்லூரிக் கல்வியைப் புறக்கணித்து, வாழ்வின் உயரத்துக்குச் சென்று ஆழ்ந்த துயரத்துக்கு ஆட்பட்டு இப்போது அரசியல் தலைவர்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர்கள், தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் இ.ஆ.ப., இ.கா.ப. உயரதிகாரிகள், மருத்துவ மேதைகள், இதழாளர்கள் மத்தியில் பரிவோடு பழகும் பண்பாளராக பலர் போற்ற சாந்தகுமார் மிளிர்வதைக் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.  அப்படிப்பட்ட சாதனைச் செம்மல் சாந்தகுமார், தன்னந்தனியராக அந்நாட்களில் (1988-ஆம் ஆண்டு) புதுதில்லி சென்று மத்திய நிதியமைச்சர் மாண்புமிகு ஆர்.வீயைப் பார்த்து தங்கவிலையேற்றத்தால் பொற்கொல்லர் தவிப்பதை எடுத்துக் கூறினார். அந்த வயதில் அந்த அனுபவம் எவருக்கும் வாய்க்காது.

பள்ளம், மேடு, சேறு, சரிவு என்று பாராமல் மடுத்த வாயெல்லாம் பகடு அன்னான் என்ற திருக்குறளை அவரிடம் அடிக்கடி கூறுவேன். வாழ்க்கை எப்படியெல்லாம் வளைகிறது என்று சொல்வேன். மீண்டும், மீண்டும் நான் சொல்வதை சொல்லச்சொல்வார்.  இன்றுவரை எதுவும் இயலாது என்று சொல்லாமல் முடிந்தவரை முயல்வேன் என்று வாழ்ந்து வெற்றி பெற்றுள்ளார்.  சாந்தகுமாரின் திருமகன் பிரவீன் பொறியியல் கல்வி முடித்து அலுவலில் சேரவிருக்கிறார்.  எந்த நேர்முகத்திற்கும் காலையில் வரச்சொல்லி மாலையில் ‘இல்லை’ என்று சொல்வது இயற்கையான நிலை ஆகிவிட்டது என்று அடிக்கடி இப்பொழுது என்னிடம் சொல்வார்.  நான் மீண்டும் சொல்வேன், ‘நல்ல அலுவல் பிரவீனுக்கு அமையும். உங்கள் பொன் மனத்திற்கு நல்லவைகளே நாடி வரும். இன்பமே எந்நாளும் துன்பமில்லை’.

பத்துப்பாட்டில் மனம் பற்றுக:திருமுருகாற்றுப்படைதிருமுருகாற்றுப்படைக்கு அடுத்ததாகப் பொருநராற்றுப்படை அறிமுகத்துக்கு முன் ஓர் இனிய தகவலை சேர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.  ஏறத்தாழ எழுபதாண்டுகளுக்கு முன்னர் திருநெல்வேலியில் நடந்த பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் மாநாட்டில் என் பாட்டனார் உரைவேந்தர் திருமுருகாற்றுப்படைப் பற்றி ஆற்றிய உரை ஒரு புதையலாகும்.
அவ்வுரை:-செந்தமிழ் நாட்டுப் பண்டைய இலக்கியங்களுள் சங்க இலக்கியங்கள் தலையாயவை. மிக்க தொன்மை வாய்ந்த தொல்காப்பியத்துக்கும் தொன்மை மிக்க பாட்டுக்கள் சங்க இலக்கியங்களுள் உண்டு என்பர்.  அவை எட்டுத்தொகை பத்துப்பாட்டு என இருதிறப்படும் அவற்றுள் பத்துப்பாட்டின் கண் முதற்கண் நின்று இனிய இலக்கியக்காட்சி வழங்குவது திருமுருகாற்றுப்படை.

முதற்கண் நிற்கும் திருமுருகாற்றுப் படையின் வேறாக, நான்கு ஆற்றுப்படைகள் இப்பத்துப் பாட்டினுள் உள்ளன.  அவை பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படையாகிய மலைபடுகடாம் என்பனவாகும். திருமுருகாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படையீறாக, நான்கனையும் முறையே நிறுத்தி, வேறு பாட்டுகள் ஐந்தனை இடையே நிறுத்தி இறுதியில் கூத்தராற்றுப் படையை வைத்துப் பத்துப் பாட்டுத் தொகுக்கப்பட்டுள்ளது.  இத்தொகுதியில் உள்ள பாட்டுப் பத்தனுள், செம்பாகம் ஆற்றுப்படையாகவே இருப்பதும், தொடக்கத்தில் நான்கு ஆற்றுப்படைகளை நிறுத்தி, இறுதியிலும் ஆற்றுப்படையே நிற்கத் தொகுத் திருப்பதும் காணுமிடத்து ஆற்றுப் படைபத்து என்று பெயர் கூறுமாறு இஃது அமைந்து இருப்பது புலனாகும்.  சில உரையாசிரியர், இப்பத்துப்பாட்டை, ஆற்றுப்படையென்பதும் இதனால் பொருத்தமாதல் தெளியப்படும்.

ஆற்றுப்படை என்பது சங்கச் சான்றோர் பாடு தற்குக் கொண்ட பாட்டுவகைகளுள் ஒன்று. ஆற்றுப்படையாவது ஆற்றின் கட்படுப்பது;  ஆறு என்பது வழி; படுப்பது செலுத்துவது. அஃதாவது, ஒருவர்க்குச் செல்லவேண்டும் வழி துறைகளைச் சொல்லித் தெரிவித்து அவற்றைப் பின்பற்றிச் செல்க எனச் செலுத்துவது என்பதாம்.  ஆகவே செல்ல வேண்டும் குறிப்பு உடைய ஒருவனுக்குச் சென்று பயின்ற ஒருவன் செல்லுதற்குரிய நெறியைத் தெரிவித்துச் செலுத்துவது ஆற்றுப் படையின் கருத்தாம்.
இக்கருத்தே முடத்தாமக் கண்ணியாரது பொரு நராற்றுப்படையிலும், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரது சிறுபாணாற்றுப்படையிலும், கடியலூர் உருத்திரங் கண்ணனாரது பெரும்பாணாற்றுப்படையிலும், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கோசிகனாரது கூத்தராற்றுப் படையிலும் அமைந்திருக்கிறது.  ஏனைப் புறத்திலும் பதிற்றுப்பத்திலும் காணப்படும் ஆற்றுப் படைகளும் இக்கருத்தையே குறித்து நிற்கின்றன.  இனி, (ஆசிரியர் தொல்காப்பியனார்), “கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறா அர்க் கறிவு றீஇச் சென்றுபயனெதிரச் சொன்ன பக்கமும்,”  என்று ஆற்றுப்படையின் இயல்பைப் பொதுப்படக் கூறினார் பின்வந்த சான்றோர் புரவலன் ஒருவனிடம் சென்று பெரும்பொருள் பரிசிலாகப் பெற்ற பொருநர், பாணர், விறலியர், புலவர் முதலியோருள் ஒருவன் ஏனைப் பரிசிலருள் ஒவ்வொரு திறத்தார்க்குப் புரவலனுடைய நாடு, ஊர், பெயர், பரிசில் முதலியவற்றை எடுத்தோதி அவன்பாற் சென்று தாம் பெற்றவாறே பெறுக எனச் சொல்லி விடுப்ப தென்றும், இவ்வாறு பாடும் பாட்டு ஆயிரம் அடிப் பெருமை உடைய தென்றும் கூறினார்.

இவ்வாறு இயன்றுவரும் ஆற்றுப்படைகள் பலவும், பரிசில் பெற்ற ஒருவன் பெறா தான் ஒருவனுக்குத் தான் பெற்ற பெருவளத்தையும் அதனை நல்கிய தலைவன் பாற் செல்லுதற்குரிய வழி துறைகளையும் எடுத்துச்சொல்லி அங்கே சென்று பெறுமாறு செலுத்துவது கருத்தாக அமைந்துள்ளன.  இது நிற்க. சிலர் ஆற்றுப்படையை வழி காட்டி போல்வதென்று கருதுகின்றனர்.  வழிகாட்டியென்பது ஆற்றுப்படைபோல வழிச்செல்வோனை அவ்வழியையே பின்பற்றிச் சென்று பயன்பெறுமாறு வற்புறுத்தும் நீர்மைய தன்று. ஆசிரியர் தொல்காப்பியனார்  “சென்று பயனெ திரச் சொன்னபக்கம்” என்று விளங்கக் கூறுவது ஆற்றுப்படையின் கருத்தா தலைத் தெளிதல் வேண்டும்.
இனி திருமுருகாற்றுப் படையில் வரும் ஆற்றுப்படைப் பகுதி ஏனை ஆற்றுப் படைகளிலும் ஓராற்றால் வேறுபட்டதாகும்.  ஏனைப் பொருநராற்றுப்படை, பாணாற்றுப்படை முதலியவற்றால் சிறப்பிக்கப் பெறும் தலைவர், மக்களிற் சிறந்த முடிவேந்தரும், குறுநிலத் தலைவருமாவர்.  அவர் நல்கிய பெருவளம் உலகியற் செல்வங்களாகும். ஆதலால், அவைகள் ஆற்றுப்படுக்கப்படுவோரால் பெயர் – கூறப்படுகின்றன.  பொருநனை ஆற்றுப்படுப்பது பொருநராற்றுப்படை; பாணனை ஆற்றுப்படுப்பது பாணாற்றுப்படை; கூத்தரை ஆற்றுப்படுப்பது கூத்தராற்றுப்படை; விறலியை ஆற்றுப்படுப்பது விறலியாற்றுப்படை; புலவரை ஆற்றுப்படுப்பது புலவராற்றுப்படை என வருவது காணலாம்.

முருகாற்றுப் படையில் வீடுபேறு கருதிய சான்றோர் ஒருவரை, முருகன் திருவருளால் வீடுபேற்றுக்குரிய திருவடி ஞானம் கைவரப்பெற்ற சீவன் முத்தரொருவர், முருகன்பால் ஆற்றுப்படுக்கின்றார்.  வீடுபேற்றுக்கமைந்த திருவருள் ஞானத்தை நல்குதலில் தலைசிறந்து நிற்கும் குரவன் முருகப்பெருமான் ஆதலால், ஆற்றுப்படைக்கு இடனாகின்ற வகையில் முருகப் பெருமான் திருப்பெயரால், இந்த ஆற்றுப்படை திருமுருகாற்றுப்படை என வழங்குகின்றது.  இவ்வாறு ஏனை ஆற்றுப் படைகளிலும் ஒரு வகையில் வேறுபட விளங்குவது பற்றி முருகாற்றுப்படையென்பது வேறுபொருள் கொள்ளும் வகையில் நிற்கின்றது.  இம்முருகாற்றுப்படை குறவர்கள் முருகனை வழிபடும் இடத்தை “முருகாற்றுப் படுத்த உருகெழு என்று குறிக்கின்றது.
முருகாற்றுப்படுத்த என்பதற்கு நச்சினார்க்கினியர் “பிள்ளையார் வரும்படி வழிப்படுத்தின” என்று பொருள் கூறுவர்;  “பிள்ளையாரைத் தம் வழிப்படுத்தின” என்பர் பிறர். ஆறு: வழியெனவும், படை, படுப்பதெனவும் பொருள்படுதலின், ஆற்றுப் படையென்பது வழிப்படுப்பது எனப் பொருள்படு மாறும் காணப்படும். படவே, முருகாற்றுப்படை என்பது முருகன் அருள் வழிப்படுவது என்று பொருள் தருமாறும் பெறப்படும். முருகனை வழிபடுவதாவது, முருகன் உறையும் இடமறிந்து சென்று வழிபடுவதென்பதாம்.  வழிபாட்டின்கண் முருகன் திருவுரு நலமும், திருவருள் நலமும், அவன் உறையும் திருப்பதிகளின் நலமும், வழிபடும் திறமும், வழிபாட்டின் இறுதியில் அப்பெருமான் போந்து அருள் வழங்குந் திறமும் நன்கு விளக்கப்படும்.  இச்சிறப்புக் கருதியே, இது சைவத்திருமுறைகளுள் பதினொராந் திருமுறையில் ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
வளரும்…

51  –  “கைத்திறனும் கல்விச் செறிவும் – சிங்கப்பூர் சிந்தனை”

முதுகலைத் தமிழிலக்கியம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு முடிக்கும் சூழலில் பம்பாயைச் சார்ந்த கிளியா நிறுவனத்தில் திருமதி வித்யா சீனிவாசன் பரிந்துரையில் பணியில் சேர்ந்திருந்தேன்.  முதுகலைத் தமிழிலக்கியம் நிறைவாண்டில் எந்தையார் ஆய்வுப் படிப்புக்காக அமெரிக்கா செல்ல நீ முயலலாம் என்று அறிவுறுத்தினார்கள்.  அப்பொழுது சிங்கைத் தமிழாசிரியர் திருமதி இந்திரா கிருஷ்ணன் சென்னைக்கு அவ்வப்போது வருகை புரிந்து என் பெற்றோர்களிடம் சிங்கைப் பல்கலைக்கழகத்திலேயே ஒப்பிலக்கியத் துறையிலோ, மொழியியல் துறையிலோ முனைவர் பட்டத்திற்கு அருள் முயலலாம். பல்கலைக் கழகத்தில் பயிலும்பொழுதே சிங்கையிலுள்ள செய்தித்தாள்களிலோ, தொலைக்காட்சி நிறுவனத்திலோ சேர்ந்து பணியாற்றலாம். அதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கும் முகமாக என்னுடன் அருளை சிங்கைக்கு அழைத்துச் செல்கிறேன் எனக் கூறினார்கள். சிங்கையிலிருந்து அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்குச் செல்வது எளிது என்றும் வலியுறுத்தினார்கள். 

எந்தையார் அடிக்கடி சொல்வது, ‘இலக்கியக் கல்வி பன்முகத் திறனும், நோக்கமும் கொண்டதாக அமைய வேண்டும். செயற்படுத்தும் வாய்ப்பும் செயல்திறனில் மேம்பாடும் என்ற வகையில் தமிழிலக்கியம் பயில வேண்டும். அறிதோறும் அறியாமை என்பது போல அன்றாடம் அறிவியற் புதுமை அலைகள் உலகெங்கும் வீசுகின்றன. நேற்று என்பது நாளைய வடிவமாக வரக்கூடாது. நேற்றைக்குப் பெயர் தமிழில் இறந்தகாலம் என்றுதான் சொல்வார்கள் என்பார்.  திருமதி இந்திரா கிருஷ்ணன் அழைப்பில் அணிகல வணிகச் செம்மல் சாந்தகுமாருடன் (A G குமார்) 21.06.1990-ஆம் நாளன்று முதன்முதலாக வெளிநாட்டுச் செலவு மேற்கொண்டேன்.  சிங்கையிலுள்ள டவுனர் சாலையிலுள்ள அடுக்ககத்தில் சரியாக ஒரு திங்களுக்குத் தங்கினோம்.  சிங்கையிலே பல உயர் அலுவலர்கள், பேராசிரியப் பெருமக்கள், இதழாசிரியர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தினர், வணிக வேந்தர்கள் எனப் பலரை திருமதி இந்திராவும் அவரது அருமைக் கணவர் தமிழ்ச்செம்மல் கிருஷ்ணனும் என்னை அறிமுகம் செய்து மகிழ்வித்தனர்.  பலர் தங்கள் கருத்துகளை எடுத்தியம்பினாலும், செயல்வடிவம் பெறுவதென்பது எட்டாத் தொலைவில் இருந்தது.  இதனூடே சிங்கையையும், மலேயாவையும் கண்டு களிப்பதும் பெருமகிழ்ச்சியளித்தன. தமிழகத்தில் இருப்பதுபோலவே காட்சியளித்தாலும், சிங்கையின் தூய்மை, புதுமை, கண்களைப் பளிச்சிட வைத்தன. 

திருமதி இந்திரா கிருஷ்ணன் வாயிலாக சிங்கையின் தமிழ்ப் பேரவையில் “சிங்கப்பூர் மருமகள்” என்ற நாடகத்தின் பாராட்டு விழாவில் 23.06.1990-இல் நான் வாழ்த்துரை வழங்கினேன்.  நாடகப் பாராட்டு விழாவிற்குப் பிறகு அதே நாளில் சிங்கையிலுள்ள ‘பார்க்’ ஹோட்டலில் டாக்டர் வீரமணிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிலும், நான் உரையாற்றினேன். இக்கூட்டங்கள் அனைத்தும் முன்னதாகத் திட்டமிடப்பட்டவை அல்ல. அழைத்துச் சென்றவுடன் அறிவிப்பின்றிப் பேசிய கூட்டங்கள் ஆகும்.   சிங்கையில் எந்தையாரின் இனிய நண்பர் பெரும் பேராசிரியர் சுப. திண்ணப்பனை அவர்களின் இல்லத்திலேயே சந்தித்துத் தமிழிலக்கிய மேற்படிப்பு வாய்ப்புகள் தொடர்பாக அளவளாவினோம்.  அவருடைய திருமகன் அருண் திண்ணப்பன், அக்காலங்களில் என்னுடைய இனிய நண்பர் பார்த்திபனுடைய அமெரிக்க நண்பரும் ஆவார். அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது அருணின் வழிகாட்டுதல் சிறப்பாக அமைந்தது. 

சிங்கையில் மறக்கவொண்ணாத நிகழ்வு என்னவென்றால், ஜெருவோஸ் சாலையில் உள்ள மலேசியத் தூதரகத்துக்கு நாங்கள் சென்றபொழுது (25.06.1990), நான் எடுத்துச் சென்ற குடையை மறந்து வைத்துவிட்டுத் திரும்பினேன். மீண்டும் 4 மணிநேரம் கழித்து அவ்வலுவலகத்திற்குச் செல்கையில் குடையை என்னிடமே மீளத் தந்தது கண்டு என் விழிகள் வியப்பில் உயர்ந்தன.  சிங்கையில் தமிழ் முரசின் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களைச் சந்தித்து நாளிதழில் பணியாற்றுவதற்குரிய வாய்ப்பினைப் பற்றி வினவினோம். அதற்கேற்ப ஓரிரு ஆங்கிலச் செய்திக் கட்டுரைகளை என்னை ஆங்கிலத்திலிருந்து தமிழிலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து தருமாறு சொன்னார்கள். அதனையும் ஒருங்கே செய்தேன்.  ஆசிரியர் அரசு, சிங்கையிலேயே படித்துப் பணியாற்ற வேண்டுமென்றால் அங்குள்ள ‘O Level’ (பள்ளி நின்ற நிலைத்) தேர்வை எழுத வேண்டுமெனச் சுட்டிக் காட்டினார்கள்.

சிங்கையின் கோளரங்கத்தில் (30.06.1990) எங்களுடைய உடல் எடையை ஒரே நேரத்தில் பூமியிலும், செவ்வாய்க் கோளிலும் எவ்வளவு என்பதை ஒப்பிட்டுக் காண்கிற திறவுகோலைக் கண்டு வியந்தோம்.  பெலிஸ்டியார் சாலையிலுள்ள சிங்கை ஒலிபரப்புக் கழகத்தைச் சார்ந்த உயர் அலுவலர் திரு. எஸ்.பி. பன்னீர்செல்வம் நன்முயற்சியால், கண்காணிப்பாளர் N. K. நாராயணன் வழிகாட்டுதலில், 02.07.1990 அன்று சிங்கை வானொலியில் ‘தமிழ் அன்றும் இன்றும்’ மற்றும் ‘மொழிபெயர்ப்பும் அதன் விளைவுகளும்’ என்ற இரு தலைப்புகளில் ஒரு மணிநேரம் நான் பேசிப் பதிவு செய்து ஒலிபரப்பப்பட்டது.  வானொலியில் தொடக்கமாக நான் பேசிய அவ்வுரைப்பகுதி இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. 

“சிங்காரத்தின் சிகரம் சிங்கப்பூர். தமிழ்க் கருத்துகளை இலக்கிய நயத்தோடு வரலாற்றுத் தேடலோடு, சமூகத் தூண்டுதலோடு வானொலி நிலையத்தார் தேனொலி பாய்ச்சுகிறார்கள்.  தமிழிளைஞனின் பார்வையில் இரு தலைப்புகள் வழங்கப் பட்டுள்ளன. சிங்கப்பூர் பொருள்களுக்கு விலையுண்டு. ஆனால், வாழும் மக்களோ விலையுயர்ந்தவர்கள். நான் கற்ற பாடம் இங்கே பயனற்ற காரியங்களில் பொழுதைச் செலவழிப்போர் சிங்கையில் பெரும்பாலும் இல்லை என்பது.  எந்தக் காரியத்தை எந்தக்காலத்தில் செய்ய வேண்டுமோ, அந்தக் காலத்தில் செய்துவிடத் துடிக்கின்றனர்.  பரபரப்பான நடை, சுறுசுறுப்பான சிந்தனை, துறுதுறுவென்றிருக்கும் மூளை இவையே சிங்கப்பூர்.”  கணிப்பயிற்சி, தொலைத் தொடர்பியம், அடுப்படி மின் செப்பனீடு, தச்சுப்பணி, குளிர் வளிமக் குறை நீக்கம், காரோட்டுதல் முதலிய தொழில் நோக்கில் பாடங்கள் இலக்கியக் கல்வியில் இணைய வேண்டும்.  முதலுதவியும் தெரியும் முத்தமிழ்ப் புலமையும் வேண்டும் என்று பெருமிதமாக இங்கே பலர் இருப்பதைக் கண்டு வியக்கிறேன். மறந்தும், அரசைக் குறை சொல்லாத மனம் சிங்கப்பூர் மக்களைக் கடமை வீரர்களாக மாற்றியுள்ளது  என்று குறிப்பிட்டுத் தொடங்கினேன்.

சிங்கையிலிருந்து சாந்தகுமாரும் நானும் பேருந்திலேயே மலேயாவுக்குச் (05.07.1990) சென்றோம்.  அங்கே, எந்தையாரின் இனிய நண்பர் திரு. கோடிவேலும், அவர் மகன் வழக்கறிஞர் முரளியும் எங்களை வரவேற்று மலேயா, பினாங்கு, ஈப்போ, பட்டர்வர்த் ஆகிய இடங்களையெல்லாம் சுற்றிக் காட்டினார்கள்.  ஈப்போவில், கவிக்குயில் கலியபெருமாளைச் சந்தித்து, அவரின் இல்லத்திலேயே தங்கியதும் மறக்கவொண்ணா நிகழ்வாகும். கவிக்குயில் பல அறிவுரைகளை எனக்கு நல்கினார்.  அப்பொழுதே அவர் சொன்ன நல்லுரைகள் பல,  அப்பாவைப் பின்தொடர்ந்து செல், அவரின் களஞ்சியங்களை மறவாமல் கற்றுக் கொள். அவர் பேசுவதை உற்றுக் கவனி. அவரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகைப்படுத்துக. அவற்றின் ஒலி வடிவத்தை வரிவடிவமாக மாற்று, என்றெல்லாம் அறிவுறுத்தியது இன்றும் என் நினைவில் பசுமையாவுள்ளது.  அப்பாவைத் தொடர்ந்து ஏதாவது கேட்டால், எதற்குப் பதிவு செய்கிறாய். நேற்றைக்கு நடந்ததை மறந்து, ஏதாவது புதிதாகப் படித்ததை எனக்குச் சொல் என்றுதான் இன்றும் அறிவுறுத்துகிறார். அப்பா எவ்வளவு மறுத்தாலும், நாளைய உலகம் ‘ஏன் பதிவு செய்யவில்லை’ என்று கேட்கும் என்பதனால் முடிந்தவரை அவர் பேசிய (90) உரைகளையும், பல அறிஞர்களுக்கு வரைந்த (738) அணிந்துரைகளையும், பல்வேறு (400) கட்டுரைகளையும் தட்டச்சு செய்து இதுவரை திரட்டியுள்ளேன். 
கவிக்குயில் கலியபெருமாள் 07.07.1990-ஆம் நாளன்று நள்ளிரவில் புனைந்த VAN – கூட்டுந்து,  Ambulance – காப்புந்து,  Aeroplane – வானுந்து,  Helicopter – திருகு உந்து  போன்ற கலைச்சொற்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. தொலைபேசி யில் முதலில் அவர் சொல்வது இன்பமே சூழ்க எதிர்முனையில் சொல்வார்கள் எல்லோரும் வாழ்க என்று… எந்தையாரின் நண்பரான கவிதாயினி இராமநாயகம் குடும்பத்தினருடன் பட்டர்வர்த்துக்கும் அவர்களின் நண்பர் நார்மனுடன் பினாங்கு சென்றதையும் நினைத்துப் பார்க்கிறேன்.  சிங்கைக்கும் ,மலேயாவுக்கும் சென்ற வாய்ப்பை இன்றும் எண்ணிப் பார்த்தால் மீண்டும் எத்தனையோ முறை இந்த இரு நாடுகளுக்கு நான் சென்று வந்தேன் என்பதையும் எண்ணிப் பெருமைப்படுகிறேன். ————————————பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
உரைவேந்தரின் உரைத் தொடர்திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி
இனி, “முருகப் பெருமான், காலை இளங்கதிரவன் கடற்கண் தோன்றுங்கால் திகழும் ஒளியைப் பொருந்தியவன்; தன்னை அடைந்தாரைத் தாங்கும் அழகு பொருந்தியது அவனது திருவடி; தன்னை வெறுத்துப் பகைத்தாரைப் பழிக்கும் வலிமிக்கது அவனது திருக்கை; கற்பால் மாசு மறு இல்லாதவர் அவன் தேவியர்; அவனது திருமார்பில் செங்கடம்பின் உருள் பூவால் தொடுக்கப்பட்ட தண்ணிய தார் கிடந்து புரளும்; திருமுடியில், சுடர்விட்டுத் திகழும் காந்தட்பூவாலாகிய பெருந்தண் கண்ணி இருந்து இனிய காட்சி வழங்கும்;  கடல் நடுவிற் புகுந்து, ஆங்கே வாழ்ந்த சூரனை அடியோடு தொலைத்த நெடுவேல் அவன்பால் இருந்து அவனது அடல்விளக்கி நிற்கின்றது; பகைவரான அவுணர்க்கு வலியும் அரணும் நல்கி வந்த மாமரத்தை வேரோடு தொலைத்ததினால் உண்டான மறுவில்லாத வெற்றியால், என்றும் அழியாத புகழ்பெற்றுச் செவ்வேலேந்தும் இந்த முருகனுடைய செம்மை விளங்கும் திருவடியை நீ நினைந்து, செம்மல் உள்ளம் பெற்றனை; அவ்வுள்ளத்தால் நலம்புரி கொள்கையை மேற்கொண்டு பிறவிக் கேதுவாகிய புலன்கள் வழிச்செல்லாது முருகன் திருவடிக்கண் சென்று சேரும் அருள் நெறியில் செல்லும் செலவையே நீ விரும்புகின்றாய்; அதனால் நன்னெறித்தாகிய நின் நெஞ்சின்கண் நேயமாகிய இனிய ஞானவேட்கை நன்கு கைகூடக், கருதிய பேற்றைக் கருதியவாறே இப்போதே பெறுவாய்” என்று சீவன் முத்தராகிய சான்றோர் முருகனது திருவடிஞானம் விழைந்து வந்த சான்றோர்க்கு உரைக்கின்றார்.

கேட்ட சான்றோர் தமது உள்ளத்தே, “முருகப்பெருமான் எங்கும் எல்லாமாய் இருக்கும் பரம் பொருளாதலால், எங்கே சென்று எப்படிக் காண்பது?’ என எண்ண மிடுகின்றார். அதனை யவர் முகக்குறிப்பால் உணர்ந்து கொள்ளும் சீவன்முத்தர்,”கூடல் நகர்க்கு மேற்கிலுள்ளதும், ஞாயிறு தோன்றிய காலைப்போதில், வண்டினம் போந்து ஒலிக்கும் மலர் நிறைந்த சுனையையுடையதுமான பரங்குன்றத்தில் நெஞ்ச மர்ந்து உறைவன்; அதுவேயன்றி, உலகத்து நன்மக்களது புகழால் உயர்ந்த திருச்சீரலை வாய்க்கு விசும்பாறாகச் செல்வதும் அவனுக்கு நிலைத்த பண்பாகும்;  தேவரும் முனிவரும் பிறரும் வந்து தன்னைக் காணும்படியாகத் திருவாவினன்குடியில் மடந்தையுடன் சின்னாட்கள் இருப்பன்; அதுவேயன்றி இரு பிறப்பாளர் தனக்குரிய ஆறெழுத்து மறையை ஓதி மலரிட்டு வழிபட அதனைப் பெரிதும் உவந்து திருவேரகத்தில் எழுந்தருளியிருத்தற்கும் உரியன்;  அதுவேயன்றிக் குறமகளிராடும் குரவைக் கூத்துக்கு முதற்கை கொடுத்து அவரோடு குன்றுதோறும் விளையாடுவதும் அவன்பால் நிலை பெற்ற பண்பு;  அதுவேயுமன்றி, ஊர்தோறும் மக்கள் செய்யும் திருவிழாக்களிலும், தன்பால் அன்புடையார் ஏத்துதற்கு அமைத்த இடங்களிலும், வேலேந்தி வேலன் வெறியாடும் இடங்களிலும், காடுகளிலும் காக்களிலும் அழகிய ஆற்றிடைத் தீவுகளிலும் குளங்களிலும் வேறுபல அழகிய இடங்களிலும், சதுக்கம், சந்தி முதலியவற்றிலும், புதுப்பூ மலரும் கடம்பு மரங்களிலும், மன்றங்களிலும், பொதியில்களிலும், கந்து நிற்கும் கந்துடை நிலைகளிலும், வேறுபிற இடங்களிலும் ஆங்காங்குத் தன்னை வேண்டுவோர் வேண்டியவாறு வழிபட எழுந்தருளுவன்” என்று கூறுகின்றார்.
அது கேட்டு மகிழ்ச்சியால் முகமலர்கின்றார் சான்றோர் அவரைச் சீவன்முத்தர் நோக்கி, “ஆங்காங்கு அவன் எழுந்தருளக் கண்டதும், அவனது தெய்வ வடிவு நோக்கி அஞ்சாமல் அன்புடன் முகனமர்ந்து துதித்துக் கைகூப்பித் தொழுது அவன் திருவடியில் தலை பொருந்த வீழ்ந்து வணங்கி;செல்வ, ஆல் கெழு கடவுள் புதல்வ, மலைமகள் மகனே, மாற்றோர் கூற்றே, கொற்றவை சிறுவ,பழையோள் குழவி, தானைத்தலைவ, மாலை மார்ப, புலவ, ஒருவ, மள்ள, அந்தணர் வெறுக்கை, சொன்மலை, மங்கையர் கணவ, பெருஞ் செல்வ,குறிஞ்சிக் கிழவ, புலவர் ஏறே, பெரும்பெயர் முருக, இசை பேராள, பொலம்பூண் சேய், நெடுவேள், பெரும் பெயர் இயவுள், மதவலி, பொருந, குரிசில், என்று இவ்வாறு யான் கூறும் அளவில் அமையாது மேலும் பல சொல்லி, ‘நின் பெருமை அளந்தறிதல் மன்னுயிர்க்கரிது; நின் திருவடி பெற வேண்டி வந்தேன். நின்னோடு ஒப்பார் பிறர் இல்லாத மெய்ஞ்ஞானமுடைய வனே,’  என மொழிந்து, உன் மனத்திற் கருதும் கருத்தைப் புலப்படுத்துவாயாயின்,  அங்கே பலவேறு உருவுடன் குறியராகிய பல கூளியர் நின் கருத்தை உணர்ந்து கொண்டு விழா அயரும் களத்தின்கண் எழுந்தருளும் முருகன் திரு முன்னே வணங்கி நின்று, ‘பெரும, மிக்க வாய்மையுடைய புலவன் ஒருவன் நின் திருவருளை இரந்து இனியவும் கேட்போர்க்கு நலம் பயப்பனவுமாகிய நின் புகழை விரும்பிப் பல சொற்களால் வாழ்த்திக் கொண்டு வந்துள்ளான்” என்று தெரிவிப்பர்.
உடனே முருகன் தெய்வத்தன்மையோடு கூடிய வன்மை பொருந்திய தன் வடிவின் வானளாவி நிற்கும் பெருமையொடு எழுந்தருளிக் கண்டார்க்கு அச்சம் பயக்கும் தன் உயர் நிலையைத் தன்னுள் அடக்கிக்கொண்டு பண்டு தான் கொண்டிருந்த தெய்வமணங் கமழும் இளமைக் கோலத்தைக் காட்டி, ”வீடுபேற்றுக்குரிய ஞானம் வேண்டி வந்த நின் வரவினை அறிவேன் ;  அஞ்சற்க,” என்று அன்பு பொருந்திய நன் மொழிகளை யருளிச்செய்து, கடல் சூழ்ந்த இந்நில வுலகத்து வாழ்வோருள் நீ ஒருவனே வீடுபெறத்தக்கவன் என்று பலரும் விளங்கத் தெரியுமாறு விழுமியவற்றிற் கெல்லாம் விழுமியதும் பிறர் பெறுதற்கரியதுமாகிய திருவருள் ஞானத்தை, மலை கிழவோனாகிய அவன் நல்குவன்,” என்று கூறுகின்றார்.

இங்கே கூறிய இப்பொருளைத் தன்னகத்தே கொண்ட இத்திருமுருகாற்றுப் படையில் திருவருள் ஞானம், “விழுமிய பெறலரும் பரிசில்” எனப்படுகிறது. நச்சினார்க்கினியர் அதனைக் கந்தழி என்று கூறி, “கந்தழியைப் பெற்றானொருவன் அதனைப் பெறா தான் ஒருவனுக்குப் பெறுமாறு கூறி அவனை வழிப் படுத்துக் கூறுவான்,” என்றும், ‘கந்தழியாவது ஒருபற்று மற்று அருவாய் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள்,” என்றும், “இதனை ‘உற்ற ஆக்கையின் உறு பொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்’ என அதனை யுணர்ந்தோர் கூறியவாற்றானுணர்க,” என்றும் கூறினர்.  

கந்து பற்றுக் கோடு எனப் பொருள்படுவதாகலின், கந்தழியாவது சார்பில தாதுகாத்தருள் என்பதாகக் கொண்டார்.  பரம்பொருளை நல்கப் பெறுவ தென்பது, அதற்குரிய ஞானத்தைப் பெறுவதாம். பரம்பொருளை எய்தினோர் மீள உலகிற்கு வாராராதலால், நல்குதற்கும் பெறுவதற்கும் உரியது பரமஞானமே யாம் எனத் தெளிதல் வேண்டும். ‘ பரஞானத்தால் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர், பதார்த்தங்கள் பாரார்,” (சிவ. சித்தி) எனப் பிற்காலத் தான்றோர் இதனை விளங்கக் கூறியிருப்பது காணலாம்.

52  “பட்டிமண்டபம் ஒரு பல்கலைக்கழகமே!”

சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்று கொண்டிருந்த பொழுது என்னுடைய மாலை நேர நிகழ்ச்சிகளாக அப்பாவின் பட்டிமன்ற, வழக்காடு மன்றங்கள் கண்டு கேட்பதை வழக்கமாகப் பேணி வந்தேன். அப்பா ஆற்றிய ஆற்றொழுக்கான உரைகளைக் கேட்டுப் பெருமிதம் அடைந்தேன்.

தங்குதடையின்றி எல்லாக் கூட்டங்களிலும் எவ்விதக் குறிப்புகள் இன்றி, தான் விரும்பிய கவிஞர்களின் கவிதைகளை, சங்க இலக்கியம், பாரதியார், பாவேந்தர் பாடல்களை அருவியெனச் சொல்லிக் காட்டிய விதத்தை கண்டு விழிகள் வியப்பில் விரிந்தன.   அம்மா அடிக்கடி சொல்வார்கள், ‘அப்பாவைப் பார், அவர் பேசும் விதத்தைப் பார். எவ்வளவு பாடல்களை அவர் மனப்பாடமாகச் சொல்லும் திறனைக் கேட்டு நீ வியப்பது பெரிதல்ல. அவருடைய கல்வியாற்றல் எவ்வளவு பெரிய ஆற்றல் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். எதைப் படித்தாலும் பசுமையாக நினைவில் வைத்துக்கொண்டு அவர் சொல்லும் மேடைத் திறத்தை நீயும் கடைப்பிடிக்க வேண்டும்’  என்று அடிக்கடி வலியுறுத்துதியதை நான் இன்றும் நினைந்து நெகிழ்கிறேன்.

அப்பாவின் கம்பன் கழக உரைகளெல்லாம் சிறப்பாக அமையும். அவர் பேசிய கம்பன் கழக சென்னைக் கூட்டங்கள் ஏ.வி.எம். இராஜேசுவரி மண்டபத்திலும், புதுவையில் நடைபெற்ற கம்பன் கழகக் கூட்டங்கள் அளப்பரியன. புதுவை கம்பன் கழகச் செயலாளர், அண்ணல் அருணகிரி, வழக்கறிஞர் முருகேசன் ஒருங்கிணைத்து நடத்துகின்ற கூட்டங்கள் சிறப்பாக நடைபெறும்.  புதுவை அரசின் முதல் அமைச்சர் தொடங்கி அனைத்துப் பெருமக்களும் கம்பர் கழக அறிஞர் பெருமக்களின் தனித்திறனைப் பாராட்டிக் கூட்டம் முடிந்த பிறகு மதிய விருந்து, அல்லுணா நேர்த்தியாக நடத்துவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கும் பொழுது பேராசிரியர் ஒருவர் என்னைப் பார்த்து, (1990-இல்) ‘அருள்! பட்டிமன்றம் பேசி விட்டாலே தமிழ் வளர்ந்து விடும் என்று நீ நினைக்கிறாயா?’ என்று தொடர்ந்து கேட்பார். நான் சொல்வேன், ‘பட்டிமன்றம் பேசுவதும் ஒரு கலைதான் அக்கலையை நாம் போற்ற வேண்டும். வருங்காலத்தில் பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு இந்திய அரசே பத்மஸ்ரீ விருது வழங்கும் பொற்காலம் வரும்’ என்றேன். அவ்வாறே, 2010-ஆம் ஆண்டில் எந்தையாருக்கும், 2021-ஆம் ஆண்டிற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கும் பத்மஸ்ரீ விருது கிடைத்தது. பெரும்பேராசிரியர் ப. நமசிவாயம் எந்தையாருக்கு பச்சையப்பன் கல்லூரியில் ஓராண்டு மூத்தவர். நயமாகவும் – நளினமாகவும் – நகைச்சுவைப் படரப் பேசுபவர். என் மீது பேரன்புசொரிந்தவர். அவர் திடுமென்று கேட்டார். நீ எப்படி இங்கே வந்தாயென்று, அப்பாவுடன் வந்தேன் பட்டிமண்டபம் பார்க்கவும் – கேட்கவும் ஆசையென்றேன். ஆமாம் எந்த அணி உனக்குப் பிடிக்கும்? உங்க அப்பா அணிக்கு பாலசந்தர் அணி என்று பெயர். மதுரையில் வருகிற அணிக்கு பாரதிராஜா அணி என்று பெயர் என்று சொல்லி மகிழ்ந்தார். பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் என்றேன். அப்படியானால் நீ பாலு மகேந்திரா அணி, தாம்பரம் பேராசிரியர் இராசகோபாலன் வாதிடுவது என்னைக் கவரும் என்றேன். அப்படியானால் நீ பார்த்திபன் அணி என்றார். என்ன இப்படி சினிமா பெயர்களையே சொல்லுகிறீர்களே என்றேன்.  பட்டிமண்டபம் பாதி சினிமா போலத்தானே நடக்கிறது என்றார். பிறகு சிரித்துக் கொண்டே மேடையில் சொன்னார், நடிகை விஜயகுமாரி மாதிரி இருப்பார்களே அவர்கள் தானே கண்ணகி என்று என்னை மாணவன் ஒருவன் கேட்கிறான். நடிகர் திலகம் சிவாஜி மாதிரி இருப்பாரா வ.உ.சி. என்று கேட்கிறான் இன்னொரு மாணவன் என்றதும் அரங்கே அதிர்ந்தது. தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருக்குறளார் முனுசாமி, வாகீச கலாநிதி கிவஜ, பேராசிரியர் சீனிவாச இராகவன், பேராசிரியர் எஸ்.ஆர்.கே.(எசு இராமகிருஷ்ணன்,) பேராசிரியர் அ.சா.ஞா., புலவர் கீரன் இப்படி ஒரு மூத்த அறிஞர் தலைமுறை தொடங்கி வைத்தது தான் பட்டிமண்டப அரங்கம் .

எந்த ஒரு கருத்தையும் விளக்குவது, கதைகளால் மறுப்பது, விடைகளால் சிக்கலை விடுவிப்பதும், பட்டிமண்டபத்தின் வாதமாக அமைந்து இலக்கியத்தில் திறனாய்வுப் போக்கை வளர்த்தது. நீதியரசர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள் என்ற உயர்நிலையில் பங்கு கொண்டிருந்த இளையோர்கள் அனைவரும் பட்டிமண்டப பேச்சாளர்களாய் இருந்ததையும் நான் கேட்டதையும் எண்ணியெண்ணி மகிழ்கிறேன்.

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷைய்யனும், உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு. இராமசுப்பிரமணியமும் பட்டிமண்டபத்தில் பங்கேற்றவர்களே. இன்று நாடறிந்த வழக்கறிஞர்களும், சொல்வேந்தர்களும் பட்டிமன்றத்தில் பேசிய காலம் ஒன்று உண்டு. பல்கலைத்திலகமாக பாரதி பாஸ்கர், வழக்கறிஞர் மாமணியாகிய திருமதி சுமதி இவர்களெல்லாம் இன்றும் பேசிவரும் பெருமை உடையவர்கள். பட்டிமன்ற பேச்சு போன்ற மிக சிறந்த உரைகளை எல்லாம் கேட்டு வளர்ந்த விதத்தைக் கண்டு நான் பெருமைப்படுகின்றேன். அப்பாவைப் போலவே பேசுகின்ற ஆற்றல் படைத்த பட்டிமன்றப் பேச்சாளர்கள் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம், பேராசிரியர் தாம்பரம் இராசகோபாலன் ஆற்றும் அறிவார்ந்த உரைகளைக் கேட்டு இன்புற்றேன்.  கனிவாக, தன் கருத்துக்களை வலியுறுத்தி மென்மையாக ஆணித்தரமாகப் பேசுகின்ற பேராற்றல் பேராசிரியர் தெ.ஞா.வின் தனிப்பெரும் சிறப்பாகும். 

மாநிலக் கல்லூரியில் மாணவராக இருந்தபொழுது எங்கள் கல்லூரியின் தமிழ் மன்றத்திற்கு அவரைப் பேசவைக்க அவருடைய அண்ணாநகர் இல்லத்திற்குப் பேராசிரியர் ஷேக்மீரானும், ஆண்டவரும் நானும் சென்றிருந்தோம்(1987). அப்போது அவர் சொன்னார். மாணவர்களுடைய தமிழ் உணர்ச்சியைப் பாராட்டுகிறேன். நீங்களெல்லாம் ஆழமாகப் படித்து கல்வியுலகில் முன்னேற வேண்டும். ஒரு மணிநேர நிகழ்ச்சியை நீங்களெல்லாம் அமைதியாகக் கேட்கும் பக்குவம் இன்னும் பெறவில்லை. கூச்சலும் குழப்பமுமாகவேதான் கல்லூரித் தமிழ்மன்றக் கூட்டங்கள் நடைபெறுவதைக் கண்டு நான் வருந்துகிறேன். நான் ஒரு மணிநேரம் பேசுவதற்குப் பல மணிநேரம் பல கருத்துகளைப் படித்து ஆய்ந்து சொல்வதற்கு விரும்புகிறவன் என்று அன்றே அவர் சொன்னதுதான் அவருடைய நல உரைகளின் வெற்றியாகும்.

பேராசிரியர் தாம்பரம் இராசகோபாலன் பட்டுச் சட்டை அணிந்து கொண்டு மிக அழகாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டு, தன்னுடைய சிகையை மிக நேர்த்தியாக வாரிக்கொண்டு அவர் கலகலப்பாகப் பேசுகின்ற காட்சிகளும், அவர் ஒருமுறை கம்பன் கழகத்தில் தயரதனை ஷேக்ஸ்பிரின் லியர் மன்னனுடன் ஒப்பிட்டு ‘King Lear is a tragic hero’ என்று ஆங்கிலத்தில் சொன்ன விதத்தில் நாங்களெல்லாம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தோம். அவர் ஒவ்வொரு வரியையும் மிக அழகாக நேர்த்தியாகப் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்த பெரும் பேராசிரியர் ஆவார்.   அவ்வண்ணமே, மதுரைப் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியம், முதல்வர் திருமதி இளம்பிறை மணிமாறன், பேராசிரியர் திருமதி சரசுவதி இராமநாதன், வங்கி அலுவலர் திருமதி உமையாள் முத்து, கல்லூரி முதல்வர்கள் திருமதி சாரதா நம்பி ஆரூரன், திருமதி உலகநாயகி பழநி, பேராசிரியர் அரங்க இராமலிங்கம் உரைகளெல்லாம் எங்கள் வகுப்பாசிரியர்களின் பாடங்களை விட நுட்பமாக அமைந்திருந்தன.
கம்பன் கழகக் கவியரங்கத்தில் நாவலர், பொற்கிழிப் பாவலர் சொ.சொ.மீ. சுந்தரம், கவிஞர் மரியதாஸ் போன்றோரின் கவிதைகள் என்னைக் கவர்ந்தன. கவித்துவ வரிகளை விட மானுட நம்பிக்கைகளையே தம் மூச்சாக அமைத்துக் கொண்டு, நேர்த்தியாக எந்தையாருடன் உரையாற்றிய பெருமாட்டிதான் திருமதி சாவித்திரி இராகவேந்திரா ஆவார்கள்.  இயல்பான மேடைத் தமிழும், எளிமையான சொற்களிலும், எதிரிலிருப்பவரை ஈர்த்த உரையாளராகத் திகழ்ந்தார்கள். ஒருமுறை அவர்கள் கூட்டத்தில் சொன்ன கருத்து இன்றைக்கும் பொருள்பொதிந்த கருத்தாகவே அமைந்துள்ளது. ‘கைம்பெண்ணுக்கு மறுமணம் நடந்தது. அவருடைய புதிய கணவர் மறைந்த தன் முதல் மனைவியின் ஒளிப்படத்தைச் சுட்டிக் காட்டி, அக்காவை வணங்கு என்று சொன்னாராம். இதே கருத்தை மாற்றி, மறுமணமான அக்கைம்பெண் தன் புதிய கணவரிடம், மறைந்த அத்தானின் ஒளிப்படத்தைச் சுட்டிக்காட்டி, அண்ணனை வணங்குவோம்’  என்று சொல்லி பார்வையாளர்களின் எண்ண ஓட்டத்தை மாற்றிக் காட்டிய புரட்சிப் பெண்மணியாவார். அவர்களுடைய அறிமுகத்தால் தான், நான் தில்லிக்குச் சென்று, பிரதமர் இராஜீவ் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்நாளைய பட்டிமன்றங்களையெல்லாம் செவ்வனே விழாக்குழுவினர் நடத்துவதற்கு அறிவுரைகளையும் நல்கிப் பல பேச்சாளர்களுக்கு அதிகமான மதிப்பூதியம் வழங்குவதற்கு ஆற்றுப்படுத்திய பெருமை திருமதி சாவித்திரி இராகவேந்திராவைச் சாரும் என்றால் மிகையாகாது.

விண்மீன்களுக்கு நடுவில் முழு நிலாவாக இலக்கியச்சுடர் த இராமலிங்கம் தனிப்பட உயர்ந்து நின்றார். அவருடைய உரைத்திறம் என்ற உலைக்கூடத்தில் தீட்டிய ஈட்டிகள் சில மிளிர்ந்தன. அறிஞர் அமெரிக்கா கண்ணன் ஐ.நா.வில் சென்று அமர்ந்திருக்கிறார். ஆங்கிலமும் தமிழும் அவரிடம் ஏவல் கேட்கும் யுக்தி குறிப்பிடத்தக்கது. எங்கே பேசினாலும் தன் எழுச்சியான உரையால் பகுத்தறிவு பார்வையோடு அணுகி தமக்கையார் வழக்கறிஞர் அருள்மொழி தன் வாதத்திறமையால் அவையை வியக்கச்செய்வார்.  நிமிர்ந்த நடையோடு இலக்கிய உணர்வோடும் திகழ்ந்த கவிஞர் நிர்மலா சுரேஷ் மண்டபங்களுக்கு ஒளி கூட்டினார். அந்நாளிலேயே தன் நகைச்சுவையாலும் கருத்துரையாலும் ஒளிர்ந்த மணிகண்டன் – மோகனசுந்தரம் குறிப்பிடத்தக்கவர்கள்.இப்போது சிம்மாஞ்சனாவின் முழக்கம் தான் எங்கும் ஒலிக்கிறது.

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

உரைவேந்தரின் உரைத் தொடர்திருமுருகாற்றுப்படை- தொடர்ச்சி

இனி, இத்திருமுருகாற்றுப்படையில் அடங்கியுள்ள பொருளைக் காணுமிடத்து, முதற்கண் முருகனுடைய உருநலம், செயல் நலம் கூறுவதும்; பின்னர் அவன் எழுந்தருளும் பரங்குன்றம் முதலாக வரும் இடங்களைக் கூறுவதும்; பின்பு இறுதியாக முருகனை வழிபடும் திறம் கூறுவதும் அவ்வழிபாட்டையேற்று அவன் எழுந்தருளிக் காட்சி வழங்கியருளுவது கூறுவதும் காணப்படும்.  முருகப் பெருமானுடைய உரு நலன் செயல் நலன் ஆகியவற்றை திருமுருகாற்றுப் படையின் கருப்பொருட் பகுதியில் கண்டோம்.இனி, அவன் எழுந்தருளும் இடங்களைக் காணலாம்.

மதுரை மாநகர்க்கு மேற்கில் உள்ளது; மதுரை மாநகரின் வாயிலில் போர்குறித்து நெடுந்கொடி நிறுவப்பட்டிருக்கிறது;  கொடியில் சிறியதொரு பாவையும், பந்தும் தொங்கவிடப் பட்டுள்ளன. நகரவாயில் பகையச்சமின்றித் திறந்தே கிடக்கிறது. பொருதற்குக் கருதும் பகைவரும் இல்லையாயினர். வாயிலைக் கடந்து சென்றால் திருவீற்றிருக்கும் கடைத்தெரு உளது; அதற்கப்பால் இருமருங்கும் மாடங்கள் நிற்கும் நெடுந்தெரு நிலவுகிறது. இத்தகைய சிறப்புடன் திகழும் மதுரைமாநகரின் மேற்கில் வளவிய சேறு பரந்தநெல் வயல்கள் காட்சி நல்குகின்றன. அகன்ற அவ்வயல்களிடையே தாமரை மலர்ந்து விளங்குகின்றது. அவற்றிற் படிந்து வண்டுகள் தேனுண்ணும்; இந் நிலையில் பகற்பொழுது மறைதலால் தாமரை குவிந்துவிடும்; அப்போது தேனுண்டு கிடக்கும் வண்டு அம்மலரிடத்தே உறங்குகிறது. விடியலில் அவ்வண்டு வெளிவரும், அப்போது நெய்தல் புதுப்பூ மலர, அதனுள் அவ்வண்டு படிந்து தா தளைந்து தேனுண்ணும்; இதற்குள் ஞாயிறு எழுந்துவிடும். உடனே அவ்வண்டு பரங்குன்றத் துக்குச் சென்று அங்குள்ள சுனையில் மலர்ந்திருக்கும் நீலமலர்களின் தேனையுண்டு சூழ்வந்து பாடும். இத்துணை இயற்கை நலம் சிறந்த பரங்குன்றத்தில் முருகன் விரும்பி உறைகின்றான். திருப்பரங்குன்றத்தில் அமர்ந்துறையும் முருகப் பெருமான், திருச்சீரலைவாய்க்கு யானையேறிச் செல்வன். அந்த யானை நெற்றியிலே பட்டமும், பக்கத்தில் மாறியொலிக்கும் மணியும் கட்டப்பெற்றது; கூற்றத்தையொக்கும் வன்மையும் காற்றையொத்த கடுநடையும் உடையது.

இதன் மேல் காட்சியளிக்கும் முருகனுடைய சென்னியில் பலவகை ஒளிமிக்க மணிகள் இழைத்த முடியிருந்து அழகு செய்யும்; அவன் காதுகளில் அணிந்துள்ள மகரக் குழைகள், முகம் முழுத்திங்கள் போல இருத்தலால், முழுமதியைச் சூழ்ந்து திகழும் விண்மீன்கள் போல விளங்குகின்றன; தத்தம் கொள்கையில் தப்பாது, மேற்கொண்ட தொழிலைச் செய்து முடிக்கும் திறலுடையவர் சிந்தை யின்கண் அவனுடைய திருமுகம் ஒளிவிளங்கித் தோன்றும்; முகம் எனப் பொதுப்படக் கூறினும், அம் முகம் ஆறெனக் கொள்ளல் வேண்டும். 

திருமுகங்கள் ஆறனுள், ஒருமுகம், புறவிருளிலே அழுந்திக் கிடக்கும் உலகம் குற்றமின்றி விளங்குமாறு பல வேறு ஒளிக்கதிர்களைப் பரப்பி ஞாயிறுபோல ஒளிசெய்யும்; ஒருமுகம், தன்பால் அன்பு செய்யும் அடியவர்கள், தன்னை வழிபட அவ் வழிபாட்டை மகிழ்ந்தேற்று அவர்கள் விருப்பத்துக்கேற்ப இனிதொழுகி, அவர் வேண்டும் வரங்களை அன்புடன் நல்குகின்றது; ஒருமுகம் மறைகளில் விதித்த முறையில் தவறாமல் அந்தணர்கள் செய்யும் வேள்வி குறித்து அதற்குத் தீங்கு வாராதபடி பாதுகாக்கின்றது; ஒருமுகம், நூலறிவாலும் இயற்கையறிவாலும் உணரப்படாத உண்மைப் பொருளை, இருள் நீங்கத் தண்ணிய நிலவினைப் பொழிந்து விளக்கும் கலைநிறைந்த திங்களைப் போல், அறியாமை நீங்கத் தண்ணிய அருளொளியைச் செய்து உண்மை ஞானத்தைத் தலைப்படுவிக்கின்றது; ஒருமுகம், அன்பராயினாருடைய பகைவரை வலியழித்து அவர் செய்யக் கருதும் போரைக்கெடுத்து அதுவே வாயிலாகக் கறுவு கொண்ட நெஞ்சத்தால் அவர் செய்யும் களவேள்வியை நிகழச் செய்கின்றது; ஒருமுகம், குறவருடைய இளமை நலங் கனிந்த மகளும், கொடிபோன்ற இடையையுடையவளுமாகிய வள்ளியுடன் மகிழ்ச்சி கொண்டாடுகின்றது.

இங்ஙனம் விளங்கும் முகங்கள் ஆறுக்கும் ஏற்ப, அவனுடைய கைகள் பன்னிரண்டும் முறையே பணி புரிகின்றன; அகன்றுயர்ந்த அவனது மார்பின்கண் சிவந்த வரிகள் கிடந்து சிறப்புச் செய்கின்றன. வெற்றி யாலும் கொடையாலும் வீறுமிக்குப் புகழால் அவனுடைய தோள்கள் உயர்ந்திருக்கின்றன. புறவிருளை நீக்கும் திருமுகத்திற்கேற்ப, ஒருகை ஞாயிற்றொளியின் மிகுதியைத் தாங்கி விண்ணிடத்தே ஞாயிறோடு திரியும் முனிவர் களைத் தாங்கிச் செல்ல, ஒருகை இடையிலே ஊன்றி யிருக்கும், யானை மேல் தோன்றி வரங்கொடுக்க வரும் திருமுகத்திற்கேற்ப ஒருகை அங்குசம் ஏந்த, ஒருகை துடையின்மேல் கிடக்கும். அந்தணர் வேள்வி காக்கும் திருமுகத்துக்கியைய ஒருகை கேடகத்தையேந்த, ஒருகை வேலைச் சுழற்றிக் கொண்டிருக்கும். உண்மை ஞான முணர்த்தும் திருமுகத்துக்கொப்ப ஒருகை மார்பின்கண் ஞானக்குறிப்பொடு விளங்க, ஒருகை அம்மார்பின் மாலையோடே அழகாகத் தவழ்ந்து கிடக்கும்; களவேள்வி காணும் திருமுகத்துக்கேற்ப, ஒருகை தான் அணிந்த கொடியுடனே மேலே சுழன்று கொண்டிருக்க, ஒருகை மணிகள் மாறி மாறி யொலிக்கச் செய்யும்; வள்ளியொடு நகைமகிழும் திருமுகத்துக்கமைய ஒருகை நீல முகிலை மழை பெய்விக்கும்.

பேராசிரியர் தாம்பரம் இராசகோபாலன் பட்டுச் சட்டை அணிந்து கொண்டு மிக அழகாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டு, தன்னுடைய சிகையை மிக நேர்த்தியாக வாரிக்கொண்டு அவர் கலகலப்பாகப் பேசுகின்ற காட்சிகளும், அவர் ஒருமுறை கம்பன் கழகத்தில் தயரதனை ஷேக்ஸ்பிரின் லியர் மன்னனுடன் ஒப்பிட்டு ‘King Lear is a tragic hero’ என்று ஆங்கிலத்தில் சொன்ன விதத்தில் நாங்களெல்லாம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தோம். அவர் ஒவ்வொரு வரியையும் மிக அழகாக நேர்த்தியாகப் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்த பெரும் பேராசிரியர் ஆவார்.   அவ்வண்ணமே, மதுரைப் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியம், முதல்வர் திருமதி இளம்பிறை மணிமாறன், பேராசிரியர் திருமதி சரசுவதி இராமநாதன், வங்கி அலுவலர் திருமதி உமையாள் முத்து, கல்லூரி முதல்வர்கள் திருமதி சாரதா நம்பி ஆரூரன், திருமதி உலகநாயகி பழநி, பேராசிரியர் அரங்க இராமலிங்கம் உரைகளெல்லாம் எங்கள் வகுப்பாசிரியர்களின் பாடங்களை விட நுட்பமாக அமைந்திருந்தன.
கம்பன் கழகக் கவியரங்கத்தில் நாவலர், பொற்கிழிப் பாவலர் சொ.சொ.மீ. சுந்தரம், கவிஞர் மரியதாஸ் போன்றோரின் கவிதைகள் என்னைக் கவர்ந்தன. கவித்துவ வரிகளை விட மானுட நம்பிக்கைகளையே தம் மூச்சாக அமைத்துக் கொண்டு, நேர்த்தியாக எந்தையாருடன் உரையாற்றிய பெருமாட்டிதான் திருமதி சாவித்திரி இராகவேந்திரா ஆவார்கள்.  இயல்பான மேடைத் தமிழும், எளிமையான சொற்களிலும், எதிரிலிருப்பவரை ஈர்த்த உரையாளராகத் திகழ்ந்தார்கள். ஒருமுறை அவர்கள் கூட்டத்தில் சொன்ன கருத்து இன்றைக்கும் பொருள்பொதிந்த கருத்தாகவே அமைந்துள்ளது. ‘கைம்பெண்ணுக்கு மறுமணம் நடந்தது. அவருடைய புதிய கணவர் மறைந்த தன் முதல் மனைவியின் ஒளிப்படத்தைச் சுட்டிக் காட்டி, அக்காவை வணங்கு என்று சொன்னாராம். இதே கருத்தை மாற்றி, மறுமணமான அக்கைம்பெண் தன் புதிய கணவரிடம், மறைந்த அத்தானின் ஒளிப்படத்தைச் சுட்டிக்காட்டி, அண்ணனை வணங்குவோம்’  என்று சொல்லி பார்வையாளர்களின் எண்ண ஓட்டத்தை மாற்றிக் காட்டிய புரட்சிப் பெண்மணியாவார். அவர்களுடைய அறிமுகத்தால் தான், நான் தில்லிக்குச் சென்று, பிரதமர் இராஜீவ் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்நாளைய பட்டிமன்றங்களையெல்லாம் செவ்வனே விழாக்குழுவினர் நடத்துவதற்கு அறிவுரைகளையும் நல்கிப் பல பேச்சாளர்களுக்கு அதிகமான மதிப்பூதியம் வழங்குவதற்கு ஆற்றுப்படுத்திய பெருமை திருமதி சாவித்திரி இராகவேந்திராவைச் சாரும் என்றால் மிகையாகாது.

விண்மீன்களுக்கு நடுவில் முழு நிலாவாக இலக்கியச்சுடர் த இராமலிங்கம் தனிப்பட உயர்ந்து நின்றார். அவருடைய உரைத்திறம் என்ற உலைக்கூடத்தில் தீட்டிய ஈட்டிகள் சில மிளிர்ந்தன. அறிஞர் அமெரிக்கா கண்ணன் ஐ.நா.வில் சென்று அமர்ந்திருக்கிறார். ஆங்கிலமும் தமிழும் அவரிடம் ஏவல் கேட்கும் யுக்தி குறிப்பிடத்தக்கது. எங்கே பேசினாலும் தன் எழுச்சியான உரையால் பகுத்தறிவு பார்வையோடு அணுகி தமக்கையார் வழக்கறிஞர் அருள்மொழி தன் வாதத்திறமையால் அவையை வியக்கச்செய்வார்.  நிமிர்ந்த நடையோடு இலக்கிய உணர்வோடும் திகழ்ந்த கவிஞர் நிர்மலா சுரேஷ் மண்டபங்களுக்கு ஒளி கூட்டினார். அந்நாளிலேயே தன் நகைச்சுவையாலும் கருத்துரையாலும் ஒளிர்ந்த மணிகண்டன் – மோகனசுந்தரம் குறிப்பிடத்தக்கவர்கள்.இப்போது சிம்மாஞ்சனாவின் முழக்கம் தான் எங்கும் ஒலிக்கிறது.

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

உரைவேந்தரின் உரைத் தொடர்திருமுருகாற்றுப்படை- தொடர்ச்சி

இனி, இத்திருமுருகாற்றுப்படையில் அடங்கியுள்ள பொருளைக் காணுமிடத்து, முதற்கண் முருகனுடைய உருநலம், செயல் நலம் கூறுவதும்; பின்னர் அவன் எழுந்தருளும் பரங்குன்றம் முதலாக வரும் இடங்களைக் கூறுவதும்; பின்பு இறுதியாக முருகனை வழிபடும் திறம் கூறுவதும் அவ்வழிபாட்டையேற்று அவன் எழுந்தருளிக் காட்சி வழங்கியருளுவது கூறுவதும் காணப்படும்.  முருகப் பெருமானுடைய உரு நலன் செயல் நலன் ஆகியவற்றை திருமுருகாற்றுப் படையின் கருப்பொருட் பகுதியில் கண்டோம்.இனி, அவன் எழுந்தருளும் இடங்களைக் காணலாம்.
மதுரை மாநகர்க்கு மேற்கில் உள்ளது; மதுரை மாநகரின் வாயிலில் போர்குறித்து நெடுந்கொடி நிறுவப்பட்டிருக்கிறது;  கொடியில் சிறியதொரு பாவையும், பந்தும் தொங்கவிடப் பட்டுள்ளன. நகரவாயில் பகையச்சமின்றித் திறந்தே கிடக்கிறது. பொருதற்குக் கருதும் பகைவரும் இல்லையாயினர். வாயிலைக் கடந்து சென்றால் திருவீற்றிருக்கும் கடைத்தெரு உளது; அதற்கப்பால் இருமருங்கும் மாடங்கள் நிற்கும் நெடுந்தெரு நிலவுகிறது. இத்தகைய சிறப்புடன் திகழும் மதுரைமாநகரின் மேற்கில் வளவிய சேறு பரந்தநெல் வயல்கள் காட்சி நல்குகின்றன. அகன்ற அவ்வயல்களிடையே தாமரை மலர்ந்து விளங்குகின்றது. அவற்றிற் படிந்து வண்டுகள் தேனுண்ணும்; இந் நிலையில் பகற்பொழுது மறைதலால் தாமரை குவிந்துவிடும்; அப்போது தேனுண்டு கிடக்கும் வண்டு அம்மலரிடத்தே உறங்குகிறது. விடியலில் அவ்வண்டு வெளிவரும், அப்போது நெய்தல் புதுப்பூ மலர, அதனுள் அவ்வண்டு படிந்து தா தளைந்து தேனுண்ணும்; இதற்குள் ஞாயிறு எழுந்துவிடும். உடனே அவ்வண்டு பரங்குன்றத் துக்குச் சென்று அங்குள்ள சுனையில் மலர்ந்திருக்கும் நீலமலர்களின் தேனையுண்டு சூழ்வந்து பாடும். இத்துணை இயற்கை நலம் சிறந்த பரங்குன்றத்தில் முருகன் விரும்பி உறைகின்றான். திருப்பரங்குன்றத்தில் அமர்ந்துறையும் முருகப் பெருமான், திருச்சீரலைவாய்க்கு யானையேறிச் செல்வன். அந்த யானை நெற்றியிலே பட்டமும், பக்கத்தில் மாறியொலிக்கும் மணியும் கட்டப்பெற்றது; கூற்றத்தையொக்கும் வன்மையும் காற்றையொத்த கடுநடையும் உடையது.

இதன் மேல் காட்சியளிக்கும் முருகனுடைய சென்னியில் பலவகை ஒளிமிக்க மணிகள் இழைத்த முடியிருந்து அழகு செய்யும்; அவன் காதுகளில் அணிந்துள்ள மகரக் குழைகள், முகம் முழுத்திங்கள் போல இருத்தலால், முழுமதியைச் சூழ்ந்து திகழும் விண்மீன்கள் போல விளங்குகின்றன; தத்தம் கொள்கையில் தப்பாது, மேற்கொண்ட தொழிலைச் செய்து முடிக்கும் திறலுடையவர் சிந்தை யின்கண் அவனுடைய திருமுகம் ஒளிவிளங்கித் தோன்றும்; முகம் எனப் பொதுப்படக் கூறினும், அம் முகம் ஆறெனக் கொள்ளல் வேண்டும். 

திருமுகங்கள் ஆறனுள், ஒருமுகம், புறவிருளிலே அழுந்திக் கிடக்கும் உலகம் குற்றமின்றி விளங்குமாறு பல வேறு ஒளிக்கதிர்களைப் பரப்பி ஞாயிறுபோல ஒளிசெய்யும்; ஒருமுகம், தன்பால் அன்பு செய்யும் அடியவர்கள், தன்னை வழிபட அவ் வழிபாட்டை மகிழ்ந்தேற்று அவர்கள் விருப்பத்துக்கேற்ப இனிதொழுகி, அவர் வேண்டும் வரங்களை அன்புடன் நல்குகின்றது; ஒருமுகம் மறைகளில் விதித்த முறையில் தவறாமல் அந்தணர்கள் செய்யும் வேள்வி குறித்து அதற்குத் தீங்கு வாராதபடி பாதுகாக்கின்றது; ஒருமுகம், நூலறிவாலும் இயற்கையறிவாலும் உணரப்படாத உண்மைப் பொருளை, இருள் நீங்கத் தண்ணிய நிலவினைப் பொழிந்து விளக்கும் கலைநிறைந்த திங்களைப் போல், அறியாமை நீங்கத் தண்ணிய அருளொளியைச் செய்து உண்மை ஞானத்தைத் தலைப்படுவிக்கின்றது; ஒருமுகம், அன்பராயினாருடைய பகைவரை வலியழித்து அவர் செய்யக் கருதும் போரைக்கெடுத்து அதுவே வாயிலாகக் கறுவு கொண்ட நெஞ்சத்தால் அவர் செய்யும் களவேள்வியை நிகழச் செய்கின்றது; ஒருமுகம், குறவருடைய இளமை நலங் கனிந்த மகளும், கொடிபோன்ற இடையையுடையவளுமாகிய வள்ளியுடன் மகிழ்ச்சி கொண்டாடுகின்றது.
இங்ஙனம் விளங்கும் முகங்கள் ஆறுக்கும் ஏற்ப, அவனுடைய கைகள் பன்னிரண்டும் முறையே பணி புரிகின்றன; அகன்றுயர்ந்த அவனது மார்பின்கண் சிவந்த வரிகள் கிடந்து சிறப்புச் செய்கின்றன. வெற்றி யாலும் கொடையாலும் வீறுமிக்குப் புகழால் அவனுடைய தோள்கள் உயர்ந்திருக்கின்றன. புறவிருளை நீக்கும் திருமுகத்திற்கேற்ப, ஒருகை ஞாயிற்றொளியின் மிகுதியைத் தாங்கி விண்ணிடத்தே ஞாயிறோடு திரியும் முனிவர் களைத் தாங்கிச் செல்ல, ஒருகை இடையிலே ஊன்றி யிருக்கும், யானை மேல் தோன்றி வரங்கொடுக்க வரும் திருமுகத்திற்கேற்ப ஒருகை அங்குசம் ஏந்த, ஒருகை துடையின்மேல் கிடக்கும். அந்தணர் வேள்வி காக்கும் திருமுகத்துக்கியைய ஒருகை கேடகத்தையேந்த, ஒருகை வேலைச் சுழற்றிக் கொண்டிருக்கும். உண்மை ஞான முணர்த்தும் திருமுகத்துக்கொப்ப ஒருகை மார்பின்கண் ஞானக்குறிப்பொடு விளங்க, ஒருகை அம்மார்பின் மாலையோடே அழகாகத் தவழ்ந்து கிடக்கும்; களவேள்வி காணும் திருமுகத்துக்கேற்ப, ஒருகை தான் அணிந்த கொடியுடனே மேலே சுழன்று கொண்டிருக்க, ஒருகை மணிகள் மாறி மாறி யொலிக்கச் செய்யும்; வள்ளியொடு நகைமகிழும் திருமுகத்துக்கமைய ஒருகை நீல முகிலை மழை பெய்விக்கும்.

unread,23 Apr 2021, 02:07:46to மின்தமிழ்53  –  “இருந்தமிழே உன்னால் இருந்தேன்!”
முனைவர் ஔவை அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,தமிழ்நாடு அரசு=================================================
பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வதில் தணியாத ஆர்வம் கொண்டவன் நான். என்னுடைய இளமைக் காலத்திலிருந்தே என் நினைவுகள் அந்தத் திசையிலேயே சிறகடித்தன. வள்ளியம்மாள் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் போதே, ‘சித்தார்த்தா மீண்டும் மனக்குழப்பமா’?, என்று புத்தரைப் பற்றிய ஒரு பக்கக் கட்டுரைப் பகுதியை மனப்பாடமாக ஒப்பித்துப் பேசியதை எண்ணிப் பார்க்கிறேன்.  பத்தாம் வகுப்பு பயிலும் பொழுது என் மாமா அறிஞர் குமரவேலன் எழுதிய ‘17ஆம் நாள்’ நாடகத்தில் துரியோதனனாகப் பேசிய வசனங்களும் மறக்க முடிவதில்லை.
மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியத் துறையில் 1985இல் சேர்ந்த பொழுது அவ்வாண்டு இறுதியில் என்னுடைய தந்தையார் என்னை அழைத்து ‘பேசுவதைக் காட்டிலும் பல நூல்களை நீ தொடர்ந்து படிக்க வேண்டும், பல பாடல்களையும் மனப்பாடம் செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். ‘கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவாய்’ என்பது போல பல நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். என்னிடம் முதன்முதலாக தந்தையார் கொடுத்து படிக்கச் சொன்ன புதினம், காலத்தால் அழிக்க முடியாத முதல் புதினமான (23.08.1879) பிரதாப முதலியார் சரித்திரம் தான். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நான் படிக்கும் முதல் புதினமும் இதுதான் தமிழ் உலகத்திற்கும் வெளிவந்த முதல் புதினமும் பிரதாப முதலியார் சரித்திரமே ஆகும்.
நீதியரசர் வேதநாயகம் பிள்ளையின் (1826-1889) நூலிலுள்ள அருமையான பகுதி என்னை வியக்க வைத்தது.“பாடசாலையிலே படிக்கிற படிப்பு அஸ்திவாரமாகவும், பாடசாலையை விட்ட பிற்பாடு, தானே படிக்கிற படிப்பு மேற்கட்டத்துக்குச் சமானமாயுமிருக்கின்றது.பூட்டி வைத்திருக்கிற பொக்கிஷத்திற்குத் திறவுகோல் கொடுப்பதுபோல, எந்த புத்தகத்தை வாசித்தாலும், பொருள் தெரிந்து கொள்ளும்படியான ஞானத்தைத் தரும்.இனிமேல் நீ உன்னுடைய முயற்சியால் அக்கருவூலத்தைத் திறந்து நீ நிறைய படிக்க வேண்டும்”என்ற அப்பொன் வரிகள் நெஞ்சில் பசுமரத்தாணிபோலப் பதிந்து விட்டது.
இவ்வரிகளைப் படித்தபொழுது அப்பா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை தெரிந்து வியந்தேன். ஒரு நீதியரசர் தன் புனைக்கதையில் உண்மை வரிகளைப் படம் பிடித்துள்ளார் என்று காணும்போது என் நெஞ்சம் பதறியது.அவ்வரிகள்:“தமிழ் நியாயவாதிகள், தமிழில் வாதிக்காமல் ஆங்கிலத்தில் வாதிக்கிறார்களென்று கேள்விப்படுகிறோம். தேசமொழியும் தமிழ்! வழக்காடு மன்றத்திலும் தமிழ்! நீதிபதியும் தமிழர்! வாதிக்கிற வக்கீலும் தமிழர்! மற்ற கட்சிக்காரர்களும், வக்கீல்களும் தமிழர்களே! இப்படியாக எல்லாம் தமிழ்மயமாயிருக்க ஏன் வக்கீல்கள் ஆங்கிலத்தில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை? தாய்மொழி பேசத் தெரியாமலிருப்பதைப்போல இழிவான காரியம் வேறொன்றிருக்கக் கூடுமா? ஆங்கிலச் சொற்களுக்குச் சரியான பிரதிபதங்கள் தமிழில் இல்லையென்று வக்கீல்கள் சொல்லுவது அவர்களுடைய தெரியாமையல்லாமல் உண்மையல்ல. தமிழ் நூல்களைத் தக்கபடி அவர்கள் ஆராய்ந்தால் பிரதி பதங்கள் அகப்படுவது பிரயாசமா? வழக்குமன்றங்கள் நாடக சாலையாகத் தோன்றுகின்றனவேயல்லாமல் நியாயசபையாகத் தோன்றவில்லை. ஆங்கிலத்தில் வாதிக்கிற நியாயாதிபதிகள் தமிழ் நாட்டையும், தமிழ் மொழியையும், மற்ற வக்கீல்களையும், கட்சிக்காரர்களையும், அனைத்து மக்களையும் மெய்யாகவே அவமானப்படுத்துகிறார்கள்”என்று 1857-இல் எழுதியிருப்பதைப் படிக்கும்போது அவலமாகவே இன்றும் உள்ளதே என்றுதான் புலம்பத் தோன்றுகிறது.
ஏட்டுக் கல்வியைத் தவிர புதினம், கவிதை, கட்டுரை, நாடகம், சங்க இலக்கியம், சமயம், அறிவியல், தத்துவம் ஆகியவையெல்லாம் அவ்வப்போது படிப்பதுதான் படிப்பாக அமையும். ஒருவனுக்குக் கல்வி, அறிவு, தெளிவு இருந்தால் தான் அவன் முழு மனிதன் என்றே கருதப்படுவான். எதையும் நான் படிப்பேன் என்ற ஒரு உந்துதல் ஏற்பட்டால் நம்மை மரணத்திலிருந்தும் கூட அது எழுப்பி விடும் என்பார்கள். இப்பொழுதெல்லாம் எனக்குள்ள ஆசை உலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் எப்படியாவது படித்து விட வேண்டும் என்பதுதான்.

இவ்வரிகளைக் கண்ணும் காதும் பதித்துக் கொண்ட கருத்துக் கோவை என்ற தலைப்பில் 18.12.1985 அன்று பதிவிட்டு எழுதியதை நினைத்து மகிழ்கிறேன். எப்பொழுதும் எந்த நூலைப் படித்தாலும் அதில் வருகின்ற சிறப்பான வரிகளையும், எனக்குப் பிடித்த கருத்துக்களையும் என்னையறியாமல் கோடிட்டு வரைவதும், பல கருத்துக்களை நான் தனியாக எழுதி வைத்திருந்ததை மீண்டும் என்னுடைய நினைவு ஓட்டத்தில் மீட்டெடுப்பதற்கு இது நல்ல வாய்ப்பாயிற்று.

இவ்வுலகத்தில் எதையும் தமிழில் சொன்னால், நிச்சயமாக அச்செய்தி பொன்னாகும். அதுபோல் சரித்திரங்களையெல்லாம் தமிழில் அழகாக, முதன் முதலாகப் புதின வகையில் எழுதிக் காட்டி, வெற்றி பெற்று எல்லோருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் கல்கி (09.09.1899 – 05.12.1954) ஆவார். அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘நூறு கடல்களையுடைய நூதனமான கரை’ எனலாம். அவருடைய ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தில் வரும்,“தாங்கள் சொல்லிப் பாருங்கள். எனக்கு நூறு உயிர்கள் இருந்தால் அவ்வளவையும் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணம் செய்வேன்.

ஆயிரம் சாம்ராஜ்யங்கள் என் வசம் இருந்தால் அவ்வளவையும் தங்கள் விருப்பத்திற் காகத் தியாகம் செய்வேன். இகத்தையும் பரத்தையும் என்றென்றைக்கும் இழக்கும்படி சொன்னால் அதற்கும் சித்தமாயிருப்பேன். கொடிய பகைவர்களை மன்னிக்கச் சொன்னால் மன்னிப்பேன். அத்தியந்த நண்பர்களின் தலையைக் கொண்டு வந்து தங்கள் காலடியில் போடச் சொன்னால் போட்டுவிட்டு மறுகாரியம் பார்ப்பேன்… !
இல்லையெனின் கடல்களுக்கு அப்பாலுள்ள பவழத்தீவிலிருந்து விலைமதிக்க முடியாத பவழங்களைக் கொண்டு வரச் சொல்லுங்கள், ஆழ்கடலின் அடியில் இருந்து முத்துக்களைக் கொண்டு வரச் சொல்லுங்கள். மேரு மலையின் உச்சிச்சிகரத்திலே ஏறிச் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வரச் சொல்லுங்கள். மேக மண்டலத்துக்கு மேலே பறந்து நட்சத்திரங்களைப் பறித்துக் கொண்டு வந்து கொடுத்து ஆரம் தொடுத்துத் தங்கள் கழுத்தில் போடச் சொல்லுங்கள். பூரண சந்திரனைக் கொண்டு வந்து தங்களுடைய முகம் பார்க்கும் கண்ணாடியாக்கித் தரும்படி சொல்லுங்கள்”என்ற கல்கியின் வனப்பு வரிகள் என்னை அக்காலங்களில் மிகவும் கவர்ந்தன.

மீண்டும் அதே பொன்னியின் செல்வன் புதினத்தில் இயற்கைக் கோலத்தை பேராசிரியர் கல்கி புனைந்து காட்டும் தேன்சுரக்கும் வரிகள்:“பின்பனிக்காலம் வழக்கத்தை விட விரைவாக விடை பெற்றுக் கொண்டு சென்றது. தென்றல் என்னும் தெய்வ ரதத்தில் ஏறிக்கொண்டு வசந்த காலம் வந்தது. பைங்கிளிகள் மாமரங்களில் குங்கும நிறத் தளிர்களுக்கு அருகில் தங்கள் பவள வர்ண மூக்குகளை வைத்து ஒத்திட்டுப் பார்த்தன. அரச மரங்களின் தங்க நிறத் தளிர்கள் இளங்காற்றில் அசைந்தாடி இசை பாடின. புன்னை மரங்களிலிருந்து முத்துப்போன்ற மொட்டுக்களை உதிர்த்துக் கொண்டு குயில்கள் கோலாகலமாகக் கூவின. இயற்கைத் தேவி உடல் சிலிர்த்தாள். பூமாதேவி குதூகலத்தினால் பொங்கிப் பூரித்தாள். இலைகள் உதிர்ந்து மொட்டையாகத் தோன்றிய மரங்களில் திடீரென்று மொட்டுக்கள் அரும்பிப் பூத்து வெடித்தன. மாதவிப் பந்தல்களும், மல்லிகை முல்லைப் புதர்களும், பூங்கொத்துக்களின் பாரம் தாங்க முடியாமல் தவித்தன. நதிகளில் பிரவாகம் குறைந்துவிட்டது. கரையோரமாகப் பளிங்கு போன்ற தெளிந்த நீர் சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது. அருவி விழும்போது எழுந்த ‘சோ’ என்ற சத்தம் நூறு சிங்கங்களின் கர்ஜனையையும், இருநூறு யானைகளின் பிளிறல்களையும் விழுங்கி விடக்கூடியது. 

வந்தியத்தேவனுடைய செவிகளில் ஆயிரம் கிண்கிணிகள் ஒலித்தன. வானத்திலிருந்து பொன்மழை பொழிந்தது. தளிர்களும் மலர்களும் குலுங்கிய மரங்களின் உச்சியில் வர்ணப் பட்டுப்பூச்சிகள் இறகுகளை விரித்து நடனம் புரிந்தன.

சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும் எளியவர்களின் வாழ்வையும் காட்டியவர்களில் தலைசிறந்தவராக திரு. ஜெயகாந்தன் (24.04.1934-08.04.2015) திகழ்கிறார். அவருடைய ‘பாரிசுக்கு போ’ என்ற புதினத்தில் என்னைக் கவர்ந்த வரிகள்:“இலக்கியம் என்பது ஒரு தேசத்தின், ஒரு நாகரிகத்தின், ஒரு காலத்தின். ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல். இலக்கியத்தின் வெற்றி என்பது காலத்தை வெல்வது, உங்களைக் கடந்து செல்வது என் வெற்றி”.

அதேபோல அவருடைய ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ கட்டுரையில் நான் கோடிட்டிருந்த வரி:“நான் மானசீகமாய் இலக்கிய மகுடம் தரித்துக் கொண்டு எனது பழைய நாற்காலியை அரியாசனமாய் அவதானித்துக் கொண்டு இறந்த காலங்களிலேயும், எதிர்கால நூற்றாண்டுகளிலும் இலக்கியத்தில் ஏகச் சக்ராதிபத்தியம் செய்ய வேண்டும் என்னும் ஒரு மாபெரும் கனவு”.

30.7.86 அன்றைய குறிப்பேட்டில் எழுதிய வரி:“பல நூல்களை நான் இப்பொழுது படித்துக் கொண்டிருந்தாலும் கட்டுரைகளையும், கதைகளையும் தவிர பல வல்லுநர்கள் பேசிய சொற்பொழிவுகளையும் படிக்கும் வாய்ப்பும் கிட்டியது.அதில் நான் படித்தது துணைவேந்தர் தந்தை என்று அழைக்கப்பெற்ற ஏ.எல் முதலியாரின் (14.10.1887-15.04.1974) உரையாகும். முதலியார் மருத்துவராகவும், பல்லாண்டுகளாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றிய அறிஞர். அறிஞர்கள் உலகம் அவரை என்றும் போற்றுமாறு உயர்ந்து நின்றார். அவருடைய ஆங்கில உரையில் நான் திக்குமுக்காடிப் போய் விட்டேன் என்று சொல்வது மிகையாகாது. அவருடைய ஆங்கில உரைக் குறிப்புகளை கைநோகக் குறித்துள்ளேன். காரணம், இந்நூலினை என்னுடைய பின்வீட்டு நண்பர் ஸ்ரீராம் தான் படிக்கும் சென்னை ஐஐடி நூலகத்திலிருந்து படிப்பதற்காக என்னிடம் தந்தது நீங்கொணாத நினைவாகும். அந்நூலில், குறிப்பாக ஒரே ஒரு வரியை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுவதில் நான் பெருமைப்படுகிறேன். 
“Knowledge is proud that it knows so much,while Wisdom is humble that it knows no more”

இதே வரிகளை என்னுடைய ஆருயிர் அம்மா அப்பாவின் ஆங்கில நூலின் முதல் பக்கத்தில் எழுதி வைத்திருந்ததை ஒருநாள் கண்டு என் கண்கள் கசிந்தன.

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
உரைவேந்தரின் உரைத் தொடர் – (ஈ)திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி …. அலைவாய்க்கு யானைமேற் செல்லும் முருகப் பெருமான் திருவாவிநன்குடியில் சின்னாள் தங்கியிருப்பன். அப்போது பல்வேறு முனிவர்களும் விரதிகளும் தாபதர்களும் முன்னே வர யாழ் வன்மையும் மென்மொழியும் உடைய இசைவாணர் நரம்புக் கருவிகளை இசைத்துவர, உடல் நலமும், மேனி நலமும், கற்பு நலமும் உடைய நன் மகளிர் உடன்போந்து விளங்க, திருமாலும், உமையமர்ந்து விளங்கும் திருமேனியையுடைய சிவபெரு மானும், வெள்ளையானையேறும் இந்திரனும், முருகனால் ஒறுக்கப்பட்ட பிரமன் பொருட்டு வந்து காண, ஆதித்தர், உருத்திரர், வசுக்கள், மருத்துக்கள் என நால்வகைய ராகிய முப்பத்து மூவரும், பதினெண் கணங்களும் தாம் உறுகுறை தீர்ந்து முறைபெறல் வேண்டி விண்மீன் போன்ற தோற்றமும் காற்றொத்த செலவும், இடி போன்ற குரலும் உடையவராய் வான் வழியாக வந்து வழிபாடு செய்வர். அக்காலை முருகப்பெருமான் மடந்தையோடு திருவோலக்கமிருந்து அவர்கட்குத் தன் திருவருளை வழங்குவன்.
ஆவிநன்குடி யென்பது இப்போது பழனியென வழங்கும் ஊர்; இது சங்க காலத்தில் பொதினியென்ற பெயருடன் ஆவியென்னும் வேளிர் தலைவனுக்கு உரியதாயிருந்தது. இதன் அருகில் ஆய்க்குடியென இருக்கும் ஊர் ஆவிகுடி யென்பதன் மரூஉ வழக்கு. இப்பகுதியைக் கல்வெட்டுக்கள் வையாவி நாடு என்றே குறிக்கின்றன. ஆவிகுடியினும் இப் பொதினிப்பகுதி நன்செய்வளம சிறந்திருந்ததுபற்றி இது ஆவி நன்குடியென வழங்கிற்று. இவ்வரலாறு விளங்காத காலத்தில் பொதினி பழனியாயிற்று ; திருவாவி நன்குடி திரு, ஆ, இனன், குடி என்று பிரிக்கப்பட்டுத் திருமகளும், காமதேனுவும், ஞாயிறும், நிலமகளும், தீக்கடவுளும் வழிபட்ட இடம் எனப் புராண வரலாறு பெறுவதாயிற்று.
திருவேரகம் என்னும் திருப்பதியில் அடியார் வழிபட முருகன் எழுந்தருளுவன். இந்த அடியார்கள், உயர்குடியில் தோன்றி நாற்பத்தெட்டாண்டுகள் பிரம சரியங்காத்து அறங்கூறும் கொள்கையும் நாடோறும் முத்தியோம்பும் முறைமையும் உடைய இருபிறப்பாளராகிய வேதியராவர். ஒவ்வொரு நாளும் காலமறிந்து வேத மோதுவது இவர்களது தொழில் ; மார்பிலே ஒன்பது புரிகொண்ட மூன்றாகிய பூணூல் அணிந்திருப்பர். இவர்கள் நாட்காலையில் நீராடி, ஈரவுடை தானே புலருமாறு அரையில் உடுத்து இருகைகளையும் தலைமேல் குவித்து முருகன் திருப்புகழையேத்தி , அப்பெருமானுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தை நாப்பிறழுமளவும் பன்முறையும் ஓதி மணமிக்க புதுமலர்களை அவன் திருவடியில் இட்டு வழிபடுவர். அவ்வழிபாட்டை முருகன் பெரிதும் உவந்தேற்று அவ்வூரிலே எழுந்தருளியிருப்பன்.
ஏரகம் என்பது தஞ்சைக்கு அருகேயுள்ள சுவாமிமலையென்று கூறுவர். இதற்கு அருணகிரிநாதரது திருப்புகழ் ஆதரவு தருகிறது. நச்சினார்க்கினியர் ” மலைநாட்டகத் தொரு திருப்பதி ” என்று எழுதுகின்றார். தென் கன்னடத்து உடுப்பிப் பகுதியில் ஏரகம் என்ற பெயருடைய ஊர் ஒன்று உளது ; இது மலை நாட்டது ; இங்கே பழைமையான முருகன் கோயில் இருந்திருக்கிறது. ” சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும், ஏரகமும் நீங்கா இறைவன் ‘ என்ற சிலப்பதிகாரக் குன்றக்குரவை கூறும் இடங்களுள் வெண்குன்றைச் சுவாமிமலையென அரும்பதவுரைகாரர் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது. இதனால் ஏரகத்தைப்பற்றித் துணிபு கோடற்கு நன்கு ஆராய்ச்சி செய்யவேண்டியிருக்கிறது.

முருகன் குறிஞ்சிநிலக் கடவுளாதலால், குன்றுகள் எல்லாம் அவன் விளையாட்டயரும் இடங்களாகும். இக்குன்றுகளில் வாழ்பவர் குறிஞ்சி நில மக்களான குறவர்களாவர். இக்குறவர்கள் முருகனை வழிபடுங்கால், இவர்களுள் வழிபாட்டுக்கென ஒருவன் இருப்பன். அவன் முருகனது வேற்படையைக் கையிலேந்தித் தன்னை இன்னான் எனத் தோற்றுவிக்கும் வகையில் இருப்பன் ; அவனை இக் குறவர்கள் வேலன் என அழைப்பர். பச்சிலைக்கொடியில் சாதிக்காயும், தக்கோலக்காயும் இடையிடையே விரவ, காட்டுமல்லிகையும் வெண்கூதாளியுமாகிய பூக்களைக்கலந்து கண்ணி தொடுத்துச் சென்னியிற் சூடுவன் ; மார்பின்கண் நறிய சந்தனம் பூசிக்கொள்வான்.

இவ்வேலன் முருகனை வழிபடுதற்கென ஓரிடங்கண்டு தூய்மை செய்து பச்சிலைப் பந்தரமைத்துக் கோழிக்கொடி நட்டுக் கோயிலமைப்பன். அவ்விடத்தே குறவர்கள் அனைவரும் வந்து கூடி மூங்கிற் குழாய்களில் பெய்து வைத்திருக்கும் தேன்பெய்து செய்யும் கட்டெளிவை உண்பர்; பின்பு இளையரும் முதியரு மாகிய பலரும் கூடிக் குரவைக் கூத்தாடுவர். அக் காலையில் தொண்டகம் என்னும் சிறுபறை முழங்கும். அதன் தாளத்துக்கிசையவே கூத்தும் நடைபெறும்.

அவ்விடத்தே சில நல்லிள மகளிர் முருகனைச் சேவித்து நிற்பர். அவர் கூந்தலில் சுனைகளிற் பூத்த நீர்ப்பூக்களின் அரும்புகளைக் கொய்து அவற்றைக் கைவிரலால் அலர்த்தித் தொடுத்த கண்ணி சூட்டப்பெற்று இருக்கும். கண்ணிக்குப் பின்னே, வேறுபல மலர்ந்த பூக்களின் இதழ்களைப் பிரித்துத் தொடுத்த மாலை சுற்றப்படும்.அவர்கள் இடையில் கஞ்சங்குல்லைப்பூவும் வேறுபிற பூங்கொத்துக்களும் பைந்தழைகளும் விரவித்தொடுத்த தழையுடை அணிந்திருப்பர். முடிமுதல் அடி காறும் பன்னிறப் பூக்களும் பைந்தழையும் புனைந்து மென்மெல இயலும் அவரது இயல் மயிலின் சாயலைக்காட்டி மாண்புறுத்துகிறது. இந்நிலையில், யாழிசை போலும் இனிய மிடற்றோசையையுடைய மகளிர் சிலர் சேவித்துப் பாடுவர்.

இம் மகளிரிடையே முருகன் தோன்றிக் குரவை யாடும் மகளிர்க்குத் தலைக்கை தந்து அவர்களோடு குன்றுதோறும் விளையாடுவன். அவனுடைய பண்புகளுள் இதுவும் ஒன்றாகும். இவ்வாறு விளையாடுமிடத்து அவன் சிவந்த ஆடையணிந்து காதில் காம்பு சிவந்த அசோகக் தளிரைச் செருகிக்கொள்வன். இடையிற் கச்சையும் காலிற் கழலும் அணிந்துகொண்டு, வெட்சிப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியைத் தலையிற் சூடுவன். ஒரு பால் குழலும் , ஒருபால் கொம்பும், ஒருபால் குறிய பல இயங்களும் இசைக்க, யாட்டுக்கிடா பின்வரத் தான் மயில் மேலேறிக் கோழிக்கொடி உயரத்திற் பறக்க நெடியோனாய்க் காட்சி நல்குவன். அவன் தோளில் தொடி கிடந்து அழகு திகழும்.இடையில் கட்டிய அரைக்கச்சையின் மேலே கிடந்து நிலத்தளவும் தொங்குமாறு மேலாடை தரித்துக் கொள்வன்.

54  –  “பின்னல் சிக்கலைப் பிரித்தெடுப்போம்!”

பல செய்திகளைத் தகவல்களை அறிந்துகொள்ளப் புதினங்கள், கவிதைகள், பலர் சொல்லும் அறிவுரைகளைப் படித்தும், கேட்டும் வந்த சூழலில் கட்டுரைகளும் படிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைக்கப் பெற்றது. 23.02.1986 அன்று நான் எழுதிய குறிப்பு, எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் ‘சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப் படுத்துவது’ என்ற நூலாகும். என்னுடைய மனத்தின் அடியில் ஊன்றி அதில் எழுதிய பல கருத்துக்கள் என்னுடைய செவிப்பறையில் எதிரொலித்தன.

இந்நூலில் நாம் செய்யும் தவறுகளும், நிறைகளும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளன. மனிதர்கள் அன்றாடம் செய்யும் தவறுகள் முற்றி பூகம்பமாக மாறி நம் வாழ்க்கையை சிறைப்படுத்தி வைப்பது தான் இந்நூலின் மையக் கருத்தாகும். இந்நூலின் வாயிலில் நம் வாழ்க்கையில் நிம்மதி, நம்பிக்கை, அன்பு ஆகியவை தான் வாழ்வின் இலக்காக அமைய வேண்டும் என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

பேரன்பு காட்டிய சாவித்திரி இராகவேந்திரா அம்மையார் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாழ்வியல் உண்மைகளைத் தன் மகனுக்குக் கூறும் தந்தையைப் போல பரிவோடு என்னிடம் கூறுவார்கள். கலை, சிற்பம், ஓவியம், கவிதை, கதை தனக்கென ஓர் இலக்கு என்ற பாதையில் அவர்களும் டாக்டர் இராகவேந்திராவும் இணையராக சிரித்த முகமாக பெருமிதமாக நடந்து வந்தார்கள். சில நேரங்களில் என்னை மகனே என்று தான் அழைப்பார்கள். அவர்கள் பரிந்துரைத்த புத்தகம் தான் எழுத்துமாமணி சிவசங்கரி படைத்த நூலாகும்.

தனி மனிதனுக்குத் தோன்றும் சின்ன நூல் இழைகள் போன்ற உணர்வுகள் பெரிதாக மாறி வலிமை பெற்று பல பூதாகரமான சிக்கல்களை இரும்புச் சங்கிலிகள் சிறைப்படுத்தி சித்திரவதை செய்வதை ஆசிரியர் பல எடுத்துக்காட்டுகளுடன் வெளிக்காட்டி இருக்கிறார். ஆழ்ந்த சிந்தனைக்கு நம்மை ஆட்படுத்தும் திறமை வியக்க வைக்கிறது.

இந்நூலின் முதல் அத்தியாயத்தில் ஆசிரியர் அருமையாகத் தான் வடிக்கின்ற கட்டுரையைப் பற்றி கூறும் இடம் எப்படி என்றால், ஒருவர் நலனில், வளர்ச்சியில் மற்றவர்கள் அக்கறை கொண்டு வேண்டாத தளைகளை நூல்களாக எடுத்துச் சிக்குவதைக் காட்டிலும், கைகோர்த்து, நீங்களும் நானும் நடக்க, உரக்க சிந்திக்க, ஆசைப்பட்டு அதன் விளைவே இக்கட்டுரைத் தொடர் என்கிறார் ஆசிரியர். நம் வாழ்க்கையில் பெரிய, சின்ன பிரச்சினை என்று எதுவுமே இல்லை.

நம்மையும் மீறி இயற்கையாகவோ, விபத்தாகவோ வரும் சிக்கல்களைத் தவிர, பாக்கி அனைத்தையும் நாமே உண்டாக்குகிறோம். சின்னப் பொறியை ஊதி ஊதிப் பெரிய தீயாக கனன்று எரிவதைப் போல், கடுகத்தனை விஷயத்தையும் பேசிப் பேசி மாய்ந்து, உருகி, தவித்து, படபடத்து, விசுவரூபம் எடுக்கச் செய்து விடுகிறோம் என்பது தான் உண்மை.

ஒருமுறை தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளதை நினைந்து பார்க்க வேண்டும். “ஒருவன் ஒரு காரியத்தைச் செய்ய விரும்பினால், அதை எப்படியும் நிறைவேற்றி விடுவான். அப்படி அவன் செய்யவில்லை என்றால் அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உண்மையானது அல்ல என்பதாகும்.” குழப்பத்தைத் தவிர்க்க வழி என்னவென்றால் சரியான ‘analysis, proper planning, sharing of knowledge, observation and concentration, discipline’ ஆகும்.

வாழ்க்கையின் பொருள் என்ன?உயிர் வாழ்தல்.எப்படி உயிர் வாழ்வது அவசியம்?நிம்மதியோடு…சரி, இந்த நிம்மதியை அடைவது எப்படி?நம்மைச் சுற்றியிருக்கும் எல்லா உயிரினங்களுடன் சரியான உறவை உண்டாக்கிக் கொள்வதன் மூலம், ஒரு இடத்தில், நாம் செய்யும் ஒரு செயலையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லாத செய்கை என்பதோடு, இரசனை, திறமை, வசதி, ஆர்வம், ஈடுபாடு, போன்றவை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும் என்பதையும், மனதில் மறக்காமல் செதுக்கிக் கொள்வதற்கு நமக்கு உறுதி வேண்டும்.

ஒருவரைப்போலவே இன்னொருவர் இருப்பதும், சிந்திப்பதும், நடந்து கொள்வது சாத்தியம் என்றால் அப்புறம் தனித்தன்மை என்பது யாது? பலநிறப் பூக்கள்தானே பூஞ்சோலை! எதிர்பார்ப்புக்கள் இயல்பான மனித வாழ்க்கையில் ஒவ்வொரு ஏமாற்றம் ஏதாவது பாடத்தை கற்று தரவே செய்யும். ஒரு வருடமாக இக்கட்டுரையைத் தொடராக ஆசிரியர் ‘ஜூனியர் விகடன்’ இதழில் எழுதினார்.

நான் இதை நூல் வடிவத்தில் ஒரே நாளில் படிக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இக்கட்டுரையைப் படித்தவுடன் எனக்குள் ஒரு வித தெளிவை அமைத்துக் கொண்டேன். புதிதாய்த் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கவும், மீண்டும் தலைநிமிர வைக்கவும், உரக்கச் சிந்திக்கவும், புன்னகைக்கவும் இந்நூல் அனைவருக்கும் உதவும் என்பது திண்ணம்.
எண்ணங்களில் மருட்சியும், புழுக்கமும், கோழைத்தனமும், மனச்சோர்வும், உளைச்சலும் அவரவர் உள்ளத்தில் தான் படிந்திருக்கின்றன.

இதை நாம் உணராமல், உணர முடியாமல் கோபமும், வேதனையும், வலியும், ஆற்றாமையும், அறிவீனமும், பலவீனமும் தொடக்கத்தில் சன்னமான நூல் இழைகளாக நம்மைப் பின்னிப் பிணைக்கும். பிற்பாடு, அவையே நம்மை மண்ணோடு மண்ணாய்ப் புதைக்கும். வலிமை பெற்ற கனமான இரும்புச் சங்கிலிகளாய் மாறவும் இடம் கொடுத்தால், இழப்பு யாருக்கு? வேதனை, தேக்கம் யாருக்கு? சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப் படுத்துவது? துணிந்துவிட்டால் எவையும் நூலிழைகள் தாம்… கணப்பொழுதில் அவைகளை அறுத்துக் கொண்டு வெளியேறி உயரே உயரே பறப்பது எவராலும் முடியும்.
ஆக இந்நூலில் என்னுடைய வாழ்க்கையின் திருப்புமுனை அமைந்திருக்கிறது என எவரும் எண்ணலாம். அதாவது, ‘The awareness to become a better person’. தன்னை இன்னும் மேம்படுத்த, ஒளிசேர்க்க விழிப்புணர்வுத் தேவை. நம்முடைய குறைகளைக் குறைத்து, நிறைகளை வளர்த்து துளித்துளியாய் உயர்ந்து கொண்டே போவதுதான் வாழ்க்கையின் அமைவுக்கூறு ஆகும்.
உயரம், பருமன், அழகு, இளமை இவை வரம்புக்கு உட்பட்டவை. மனிதனின் உடம்பு மட்டுமே கண்ணுக்குத் தெரிந்து உயரமாகும். மனதில் வளர்ச்சிக்கு உயரமில்லை, அழகுக்கு உச்சவரம்பு இல்லை, இளமைக்கு முதுமையில்லை. இதை நாம் மறக்கக்கூடாது. மனதை வளப்படுத்தும் முயற்சிதான் தன்னிலை அலசல். ஆக தற்போக்கு என்றால்? இது எனக்கு இன்பத்தைத் தருகிறது, இது என் கோபத்தைத் தூண்டுகிறது, இது அடுத்தவரை வேதனைப்படுத்துகிறது,இது என்னை நெகிழ வைக்கிறது, இது எனக்கு நிம்மதியைத் தருகிறது என்று நம்முடைய சிந்தனை, செயல்களால் ஏற்படும் உணர்ச்சிகளை அடையாளம் காட்டி, கட்டம் கட்டத் தெரிவதுதான் தன்னிலை தெளிதலாகும்.
இந்த விழிப்புணர்வு வளர்ந்தால் தேக்கம், அழுக்கு, ஊனம் என்பதெல்லாம் இல்லை.ஆக மனிதாபிமானம் என்றாலென்ன என்றுணர்ந்து, நெகிழ்ந்து, சிலிர்ப்பதும்; உலகத்தைப் பற்றி, நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களைப் பற்றிக் கவலை கொள்வதும், அக்கறை காட்டுவதும் இன்னொரு கோணம் மட்டுமல்ல, இன்னும் பல நூற்றுக்கணக்கான கண்ணோட்டங்கள் உள்ளன என்ற அறிவுத்தெளிவு உண்டானால் ஒருவர் மனதால் வளர முடியும்.ஆக, இது எவ்வளவு தூரம் எனக்குள் இருக்கிறது என்றால், திட்டவட்டமான பதில் கூறத் தெரியவில்லை…

உதயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், போகவேண்டிய தூரம் எல்லை கடந்தது.இதனை உணர்ந்து, புரிந்து, தெளிந்து, செயலில் காட்டவேண்டியன இன்னும் ஏராளம் என்று மட்டும் கூறத் தோன்றுகிறது. ஆக, இந்நூலின் கருத்துக்களை மெல்ல மெல்ல அசைபோட வேண்டும்… நிறைய நிறைய என்று நான் முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்பு குறித்திருந்ததை மீள் பதிவு செய்வதில் புரிந்துணர்வு பெறுகிறேன். 15.10.2019 அன்று எழுத்து மாமணி சிவசங்கரி தன் அன்புக் கரங்களால் தான் எழுதிய சூரிய வம்சம் நூல்களை வழங்கியபோது அம்மையார் சாவித்திரி இராகவேந்திரா நம்முடன் இல்லையே என்று நெகிழ்ந்தேன்.

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!உரைவேந்தரின் உரைத் தொடர் –

(உ)திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி .. .. .. 

குன்றுதோறும் விளையாடும் பண்புடையனாகிய முருகன் இழும் என்னும் ஓசை நிலவ வீழும் அருவியொடு சோலைகளிற் பழுத்திருக்கும் பழங்கள் கனிந்து வீழும் பழமுதிர் சோலைமலைக்கு உரிய தலைவனாவன். இவ்வருவிகள் மலையினின்று வீழுங்கால் பலவேறு ஆடைகளை விரித்துத் தொங்கவிட்டாற்போலத் தோன்றுகின்றன.
அருவி நீர் அகிற்கட்டைகளைச் சுமந்து வருகிறது; வருங்கால் அயலிலுள்ள சந்தன மரங்கள் அலைப்புண்டு உருண்டு வீழ்கின்றன. பூச்சுமந்து நிற்கும் சிறு மூங்கில்கள் வேர் அரிப் புற்று வீழும்; வான் அளாவிநிற்கும் மலையுச்சியில் ஞாயிற்று வட்டம்போல் இருக்கும் தேனடை சிதைந்து வீழ, ஆசினிப் பலாப்பழங்கள் வீழ்ந்து பிளந்து, சுளை சுளையாகப் பிரிந்து அருவி நீரில் கலக்கின்றன.

மலைமேல் நிற்கும் சுரபுன்னைப் பூக்கள் அருவியின் அதிர்ச்சியால் உதிர்கின்றன; நீர் வீழ்ச்சியில் புகைப்படலம் போல் எழுந்து பரவும் நீர்த்திவலைகளின் குளிரால் கருங்குரங்குகளும் முசுக்கலைகளும் நடுங்குகின்றன; பிடியானைகள் குளிரால் வேறிடத்துக்குச் சிதறியோடுகின்றன; பெருங்களிறுகளின மருப்பின்கண் உண்டாகும் முத்துக்கள் பல அருவி நீரில் கலக்கின்றன. மேலிருந்து வீழ்ந்து தலைகீழாய்க் கலங்குங்கால் நல்ல பொன்னும் மணியும் மேல் வந்து அழகிய நிறத்தைச் செய்கின்றன.

கரையில் நிற்கும் மலைவாழைகள் அருவியின் பெருக்கால் வேரொடு அரிக்கப்படுகின்றன; தென்னைகள் (வாழை என்ற பெயர் வழக்கம் இருந்தது) தாம் தாங்கும் இளநீர்கள உதிருமாறு தாக்கப்படுகின்றன; மிளகுக் கொடிகள் கரிய துணரொடு அறுப்புண்டு மெலிய, அருகில் மேயும் மயில்களும், கானக்கோழிகளும் அஞ்சி நீங்குகின்றன; காட்டுப்பன்றிகளும், கரடிகளும் அஞ்சிக் கற்குகைகளில் ஒடுங்குகின்றன.

இம் முருகாற்றுப்படை பழமுதிர்சோலைமலை கிழவோன் என்றது கொண்டு,  பழமுதிர்சோலையென ஒரு திருப்பதி முருகனுக்கு உரியதாகக் கூறுவதுண்டு. நச்சினார்க்கினியார் உரையால் அத்தகையதொரு திருப்பதி இருப்பதென அறிய இயலவில்லை; முருகாற்றுப்படையின் சொல்லமைப்பும் அதனை வற்புறுத்தவில்லை. ஆயினும், பழமுதிர்சோலையென ஒன்று தனியே கொண்டு, அதுவே மதுரைக் கண்மையில் அழகர்மலையென வழங்கும் பகுதி யென்பவரும் உண்டு.அதனைத் திருமாலடியார்கள் “திருமாலிருஞ்சோலைமலை” யென்கின்றனர். அவர்கள் சோலை மலையென வழங்குவதும், முருகாற்றுப்படை பழமுதிர் சோலைமலையென வழங்குவதும் ஒத்திருப்பதுபற்றி இவ்வாறு கோடற்கு இடமுண்டாகிறது. இதுவும் நன்கு ஆராய்தற்குரியது.

இத்தகைய பொருள் நலஞ் சிறந்த அருவிகளோடு கூடிய மலைகட்குரியனான முருகன் குன்றுதோறும் விளையாடிக் காட்சி நல்குவதோடு, ஊர் தோறும் மக்கள் விழாச் செய்யும் இடங்களிலும், தன்பால் அன்புடையவர் தன்னை நினைந்து பரவும் இடங்களிலும், வேலன் வெறியாடுமிடங்களிலும், காடுகளிலும் பூங்காக்களிலும், அழகு பொலியும் ஆற்றிடைத் தீவுகளிலும், ஆறு குளங்களிலும், இவை போலும் வேறு இடங்களிலும், சதுக்கம், சந்தி, மன்றம், பொதியில் முதலிய இடங்களிலும், புதுப்பூ மலரும், கடப்பமரங்கள் நிற்கும் இடங்களிலும் கந்துடை மன்றங்களிலும் வேண்டுவோர் வேண்டியவாறு வழிபட, அவர்கள் வேண்டியவாறு ஆங்காங்கே எழுந்தருளுவன்.
முருகன் எழுந்தருளும் சீர்த்த இடங்களைக் கூறியபோது, திருவாவிநன் குடியில் முனிவர் முதல் பதினெண் கணங்கள் ஈறாகத் தேவர் பலரும் வழிபடுந்திறமும், திருவேரகத்தில் வேதியர் வழிபடுமியல்பும் விளங்கக் காண்கின்றோம். இவ்வாறே, சூரர  மகளிரும், குறமகளிரும் முருகனைப் பரவும் திறம் தொடக்கப்பகுதியிலும் இறுதிப் பகுதியிலும் குறிக்கப்படுகின்றன.

சூரர மகளிர் வானளாவ உயர்ந்த மலையிடங்களில் செழித்துவிளங்கும் சோலைகளில் விளவின் தளிர்களைக் கிள்ளி விளையாடுவர்; அப்போது ஒருவர் மேல் ஒருவர் எறிந்து, அது தம்பால் பட்ட பொழுது மகிழ்ச்சி கூர்ந்து முருகனுடைய, ” கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிது” என்று ஏத்தி அவன் புகழைப் பாடியாடுவர். அவர்கள், தம்முடைய சிறிய அடிகளில் கிண்கிணி யணிந்திருப்பர்; கணைக்கால் நன்கு திரண்டிருக்கிறது; இடை வளைந்து நுண்ணிதாக இருக்கும்; தோள் பெருத்துளது; அவர்கள் உடுத்திருக்கும் ஆடை தம்பலப் பூச்சி போல் இயல்பாகச் சிவந்த செந்நிறங் கொண்டுளது; அது செயற்கையாக நிறம் ஊட்டப்படுவ தன்று; இடைக்கும் முழந்தாளுக்கும் இடைப்பகுதியாகிய அல்குலிடத்தே பல மணிகள் கோத்த மேகலை அணியப்பெற்றுள்ளது; அவர்கள் பால் தோன்றும் அழகு பிறர் ஒப்பனை செய்வதாற் பிறக்கும் செயற்கையாகாது இயற்கையழகாகும்; அணிந்திருக்கும் இழைகள் சாம்பு நதம் என்னும் உயரிய பொன்னால் இயன்றவை. அவரது மேனியொளி நெடுந்தொலைவில் சென்று விளங்குகிறது. அவர்களுடைய கூந்தலொழுங்கு காணும் ஆய மகளிர் நன்று நன்று எனப் பாராட்டுகின்றனர்.
இணை யொப்பப் படிந்த கூந்தலில் வெட்சிப்பூவை வட்டமாகப் புனைந்து இடையே குவளைப்பூவின் இதழ்களைக் கிள்ளி யிட்டுச் சீதேவிக்கோலம் ஒருபாலும் வலம்புரிக்கோலம் ஒருபாலும் செய்து கொள்கின்றனர். நெற்றியாகிய பிறையை விழுங்குதற்கு மகாமீன் ஒன்று வாயைத் திறந்து கொண்டு கிடப்பது போலத் தலைவகிரின் ஒழுங்கில் மகரமீன் கோலம் செய்கின்றனர். நெற்றியில் மணங்கமழும் திலகம் இடப்பெற்றிருக்கிறது, இவ்வாறு வேண்டுங் கோலமெல்லாம் குறைவறச் செய்யப்பெற்ற கொண்டையில் செண் பகப் பூவைச் செருகிப் பின்பு மருதம்பூவின் கொத்துக்களை அதற்குமேற் சூடுவர். நீரின் கீழ்ப் பச்சென்ற காம்பு பெற்று மேலே சிவந்து தோன்றும் நீர்ப்பூ வரும்புகளை மாலையாகத் தொடுத்து அதனைச்சுற்றி வளைத்துக் கட்டுவர். அசோகின் தளிர்களுள் இணையொத்த இரண்டைப் பூணார மணிந்த மார்பின்கண் தொங்கியசையுமாறு இரண்டு காதுகளிலும் செருகிக்கொள்வர். மார்பின்கண் சந்தனக் குழம்டை மருதிணர்போலும் தோற்றம் அமையப் பூசி அதன் ஈரம் புலா வேங்கைப்பூவின் நுண்ணிய தாதினைத் தூவுவர். இது சூரரமகளிரின் ஒப்பனை.
குறமகளிர் முருகனை வழிபடக் கருதியதும் வழிபாட் டுக்கென ஓரிடம் கண்டு நன்கு தூய்மை செய்வர். அங்கே கோழிக்கொடியை நிறுவி, அதனை நெய்யும் வெண்கடுகும் கலந்து பூசி அதற்குரிய மறைமொழியை மந்தமாக வாய்க் குள்ளே ஓதுவர். பின்பு, அதனெதிரே வணங்கி நின்று தூய பூக்களைத் தூவுவர். உள்ளே ஓர் ஆடையை யுடுத்து அதன் நிறத்துக்கு மாறுபட்ட நிறமுடைய வேறோராடையை மேலே உடுத்திக் கொண்டு கையில் சிவந்த நூலாற் காப்புக் கட்டிக் கொள்வர். காப்பு முடிந்ததும், வெள்ளிய பொரிகளைச் சொரிந்து, கிடாயினது குருதி கலந்து பிசைந்த வெள்ளரிசிச் சோற்றைச் சிறு சிறு பிரப்புக் கூடைகளில் படைச்சலிட்டு வைப்பர். அதன்பின் சிறு மஞ்சளை அரைத்துச் சந்தனக் குழம்போடு கலந்து தெளிப்பர். இதனைக் கூந்தல் தெளித்தல் என்று இக்காலத்துக் குறவர் வழங்குகின்றனர்.
இனி, அக்கொடியில் செவ்வலரிப்பூவையும் வேறு பல நறியபூக்களையும் தம்மில் ஒப்பத்தொடுத்து இணையொப்பத் தொங்குமாறு கட்டிவிடுவர். பின்பு குறமகள் முன்வந்து மலைப்பக்கத்தில் அமைந்த தம் ஊர்கள் பசியும், பிணியும், பகையுமின்றி வசியும் வளமும் சிறக்க என்று வாழ்த்தி நறும்புகை காட்டிக் குறிஞ்சிப் பண்ணிற் பல பாட்டுக்களைப் பாடுவள்.

ஒருபால் அருவியொலிக்க, பலவகை இயங்களும் ஒலிக்கும். பாட்டு முடிந்ததும் சிவந்த பூக்களைத தூவிக் குருதி கலந்த தினையரிசியைப் பரப்பி முருகன் விரும்பும் இயங்களை இயக்குவர். அப்போது அவ் வழிபாட்டின்கண் முரணிய கருத்துடையவர் களும் கண்டால் முரண் நீங்கி வழிபடுவர். இவ்விடத்தே தான் வேலன் வெறியாடுவதும் செய்வன். வெறியாடு களம் எதிரொலிக்க அதற்கு ஏற்ற பாட்டுக்களைப் பாடிக் கொம்புகள் பலவற்றை வாய்வைத்து ஊதி, கொடிய ஒசையைச் செய்யும் மணியை ஒலிப்பிப்பர்.  இறுதியில் முருகன் ஏறிவரும் யானையை வாழ்த்தித் தம் வேண்டுகோள் புலப்பட நின்று வழிபடுவர்.
வளரும்…

55  –  “நின்னளந்து அறிதல் அருமை!”

எந்தையாரின் நெருங்கிய மாணவர் திலகமாகவும் – கவிச்செம்மலாகவும் பச்சையப்பர் கல்லூரிக் காலங்களிலேயே எங்கள் குடும்பத்தோடு நெருங்கிப் பழகியவர் கவிப் பேரரசர் ஆவார்.  அவருடைய அடுக்குக் கவிதைகளைப் பல இலக்கியக் கூட்டங்களில் எந்தையார் மேற்கோள்களாகக் சொல்கிற பாங்கினைக் கண்ட அறிஞர் பெருமக்கள் பெருமிதம் கொண்டார்கள். தான் எழுதுகிற நூல்களை வெளியிட்டவுடன் எந்தை யாருக்கு வழங்குவதில் கவிப்பேரரசர் பெருமகிழ்ச்சி அடைவார்.  அந்நூல்களில் முதல் பக்கத்தில் எந்தையாரைக் குறித்து அவருடைய அழகான கையெழுத்தில் எழுதித் தருகிற தித்திப்பு வரிகள் என் கல்லூரிக் காலத்திலேயே நெஞ்சில் வேரூன்றியன. 
சான்றாக,Ø என் தாக நாட்களின் தண்ணீர்ப் பந்தலாயிருந்த டாக்டர் ஔவை நடராசன் அவர்களுக்கு அன்புடன் வைரமுத்து. (14.02.1983)Ø கலங்கரை விளக்கத்திற்குப் படகின் பரிசு. (1985)Ø தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், தமிழ்ப்புலமையில் இணையில்லா வேந்தருமாகத் திகழும் திருமிகு டாக்டர் ஔவை நடராசன் அவர்களுக்கு நன்றியில் நனைந்து வைரமுத்து (05.08.1993)Ø என் ஆருயிர்ச் சகோதரர் முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்களுக்கு அன்புடன் வைரமுத்து (1996)Ø தமிழ்நாட்டு நல்லறிஞர், முன்னைப் புதுமைக்கும், முன்னைப் பழமையராய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியராய்த் துலங்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசனுக்கு அன்போடு வைரமுத்து. (16.07.2002)Ø என் வழிகாட்டியும் ஒளிகாட்டியுமான முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்களுக்கு, அன்போடு வைரமுத்து (14.10.2015)என்ற எழில் வரிகளைக் குறிப்பிடலாம்.
ஒருமுறை இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் எந்தையாரிடம் பேசும்போது  ‘கவிஞர் உங்களுக்கு மாணவரா? என்று கேட்டபொழுது, ‘அவர் என் மாணவரல்ல. ஆசிரியர்’ என்றே பெருமிதமாகச் சொன்னார். அதற்கு உடனே இயக்குநர், ‘எப்படி ஆசிரியர் என்று சொல்லுங்கள்’ என்று கேட்டார். ‘எனக்குத் தெரியாத பலவற்றைப் புரியாத சிலவற்றை எவ்வளவு அழகாக எடுத்துப் பொருத்திக் காட்டியிருக்கிறார், உங்கள் படங்களின் பாடல் வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் நான் புதிய உலகத்துக்கே போய் வருகிறேன். ஆகையினால், கவியரசர் வைரமுத்து எனக்கு ஆசிரியர்’ என்று வலியுறுத்திச் சொன்னவுடன், இயக்குநர் திலகம் சிரித்துக் கொண்டே, ‘ஆமாம், வைரமுத்து ஆசிரியர்தான். ஔவை! நீங்கள் பேராசிரியர் என்பதை எனக்குக் காட்டிவிட்டீர்கள்’ என்றார்.

அப்படிக் கிடைத்த வாய்ப்பில் நான் முதன்முதலாகக் கவிஞரின் நூலினை இளங்கலை இரண்டாமியாண்டு தமிழிலக்கியம் மாநிலக் கல்லூரியில் பயிலுங்கால், 04/10/1986 அன்று நான் குறித்து வைத்திருந்த ‘கல்வெட்டுகள்’ என்ற நுட்பமான ஆய்வு நூலிலிருந்து பல கருத்துக்களைச் சுவைத்து மகிழ்ந்தேன்.  கவிஞர், ஆய்வாளராக இருப்பதற்குப் பேராற்றல் கொண்டவர் என்ற கருத்துக்குக் கட்டியம் கூறும் கட்டுரைகளாக ‘கல்வெட்டுகள்’ நூல் அமைந்துள்ளது.

“ஓசை ஒலிகளின் எடையைக் கூட நிறுத்தச் சொன்ன தொல்காப்பியம் – மனித மனத்தின் போக்குவரத்திற்குக் கோடு கிழித்துக் கொடுத்த கொடை தான் திருக்குறள் – மனிதனின் சமுத்திர உணர்ச்சிகளைச் சின்னச் சின்னச் சிப்பிகளில் சிக்கவைத்துக் காட்டிய சங்க இலக்கியம் – மனக்கசடுகளை வடிகட்டிக் கொடுத்த நீதி நூல்கள் என்னும் சல்லடை இலக்கியங்கள் – வெறும் உபதேசங்களாக அல்லாமல் வாழ்க்கைக்கு வாய்மொழிச் சட்டங்களான நீதி நூல்களாகிய பதினெண் கீழ்க்கணக்கு – கவிதைச் சத்து மிகுந்த காப்பியங்கள் – ஆழ்வார்கள் நாயன்மார்களின் ஆனந்த அழுகைகள் – சித்தர்களின் நெருப்புச் சித்தாந்தங்கள் – ஆடம்பரமான பிரபந்தங்கள் – சிருங்காரத்தில் நனைந்த தனிப்பாடல்கள் – பழைய இலக்கியங்களைத் திருகித் திசை திருப்பிய பாரதியின் எழுத்துக்கள் – பாரதிதாசனின் வாள் வார்த்தைகள் – புதிதாய்ப் பிறப்பெடுத்த உரைநடை இலக்கியம் – கண்ணதாசன், சுரதா என்னும் தனித்தனிப் பள்ளிகள் – பிரபஞ்சப் பசியோடு பேனா பிடித்திருக்கும் புதுக்கவிதைக் காரர்கள் – தமிழ்கூறு நல்லுலகின் பரப்பு இதுதான்” என்று வனப்பாக வரைந்திருந்த வரிகள் என் நெஞ்சில் கல்வெட்டு வரிகளாகவே நிலைத்தன.

“இலக்கியம் படைப்பவன் அல்லது ஒரு சமூகப் பொதுச் சிந்தனையாளன் எல்லோ ருடைய சிரிப்பையும் தன் உதடுகளால் சிரித்து விடுகிறான். எல்லோருடைய கண்ணீரையும் தன் கண்களால் அழுது விடுகிறான். ஆழ்வார்களும், நாயன்மார்களும் அழுத கதையை நான் அப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறேன். அவர்களின் அழுகை பொது அழுகை, சமூக மேம்பாட்டுக்கு அவர்கள் ஒரு விடியலை நம்பினார்கள்.”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்! – என்றவரும்,காக்கைக் குருவி எங்கள் ஜாதி – நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்! – என்று பாடியவரும், புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்! – என்று குரல் கொடுத்தவரும் உலக அமைதியின் தூதுவர்கள் அல்லவா?
அதிகமாகப் புகழப்படுகிறபோது ஐயப்படவும், அதிகமாய் இகழப்படுகிறபோது சிரித்து விடவும், நம் படைப்பாளிகள் பழகிக்கொள்ள வேண்டும். விமர்சகன் என்பவன் ஒட்டகம், கனிகளை விட்டுவிட்டு முட்களை மேய்ந்து கொண்டிருப்பவன். இன்னொன்று, ஒரு படைப்பாளன் தினமும் எழுதிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதே மூடநம்பிக்கை. தினமும் எழுதிக் கொண்டிருக்க படைப்பு என்பதொன்றும் நாட்குறிப்பன்று. எழுத்தே எழுந்து வந்து எழுதச்சொல்லும் போது எழுது. இக்கட்டளை வரிகள் என்னை மிகவும் ஈர்த்த வரிகளாகும். எழுதுவதெல்லாம் ஒரு மன உறுதிக்காகவும் மக்களுக்குத் தரும் செய்தியாகவும் தான் எழுதவேண்டும் என்று எனக்கு அன்று புரிந்தது.
கவிதை என்பது மொழியின் மின்சாரக் கிடங்கு. அது ஓர் இனிய நெருப்பு; அல்லது சுடும் பூ. மொழி – மனிதனை மேம்படுத்துகிறது; கவிதை – மொழியை மேம்படுத்துகிறது.போர்க்குணம் கொண்ட ஒரு புதுக்கவிதைக்காரனின் கைகளில் பேனா நிமிர்ந்தால் வேலாகிறது; வளைந்தால் வில்லாகிறது.நமது கல்வி முறையில் போதிப்பதை விடச் சோதிப்பது அதிகமாக இருக்கிறது.பாரதியார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே, பழமையின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமென்பதற்கு முன்னுரையாக ஐதீகத்தின் பிடியிலிருந்து தன்னை அறவே விடுவித்துக் கொண்டு வெளியே வந்தவரல்லவா! வறுமை அவர் உயிரை முற்றுகையிட ஒத்திகை பார்த்தபோதும், அவரது கம்பீரத்தின் உயரம் குறையவில்லையே! சீட்டுக்கவி எழுதும்போதும் கூட தானும் ஓர் அரசராகவே மன்னருக்கே ஆணையிட்டவர்.
முப்பது கோடி உள்ளங்களின் ஊமை எண்ணங்களை அவர் ஒரு நாவால் பாடினார்.  அந்தப் பாடலின் எதிரொலியில் ஊமை உள்ளங்களும் பேசத்தொடங்கின. தமிழ் இலக்கிய வரலாற்றில், அதிக மொழிகள் தெரிந்த கவிஞராக நமக்கு அடையாளம் தெரிகிறவர் பாரதியார் ஒருவரே.
‘யாமறிந்த மொழிகளிலே’ என்று செருக்கோடு சொல்வதற்குக் கவிஞருக்குப் பொருளுண்டு. காரணம், பாரதியின் ஆங்கிலக் கல்வி அவருக்கு இலட்சிய வேட்கையை வளர்த்தது.  வடமொழிக் கல்வி அவர் நெஞ்சில் சமய தத்துவங்களுக்குக் கால்கோள் செய்தது. கவிதை, சொற்களால் மட்டும் அமைவதில்லை.
ஆங்கிலக் கவிஞர் கீட்சு சொல்வதுபோல், கவிதை – சொற்களில் இல்லை; சொற்களுக்கிடையில் இருக்கிறது; (Poetry is not in the words. It is in between the words). மானிடக் காதலியை வர்ணிக்கும் கவிஞர் ஷெல்லி காதலியின் கண்களை,‘அந்த ஆழமான கண்கள்; அவை இரட்டை கிரகங்கள்.’ (Thy deep eyes a double planet) என்று சொன்னதைப்போல, பாரதியும் இதே படிமத்தில்,‘சுட்டும் விழிச் சுடர் தான் – கண்ணம்மாசூரிய சந்திரரோ!’என்று பாடும்போது, ஷெல்லியின் பாட்டிலில்லாத உட்தொனி, உள்ளுறை பாரதியார் பாட்டிலும் படிந்து கிடக்கிறது என்று பெருமிதமாகப் பாரதியாரைப் பற்றி பெரும் பாடமே கவிப்பேரரசு நடத்தியுள்ளார்.
இப்படி வாழ்க்கைக்கும் உணர்ச்சிக்கும் வண்ணம் பூசிய உலகப் பாடல்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன.‘எனக்காகப் பிறந்தவள்,நீ மட்டும்தான்,இருமுறை சொல்’‘நீ என்னை எழுப்பும் போது தான்என் கண்களுக்கு வெளிச்சம்’உலகப் பாடகன் மைக்கேல் ஜாக்சன் பாடலை மிக அழகாக கவிஞர் மொழிபெயர்த்த விதத்தைக் கண்டு கல்லூரிக் காலத்திலேயே நாங்களெல்லாம் பெருமிதம் அடைந்தோம். மேற்கத்தியப் பாடல்கள் வாழ்க்கையின் சிதைவுகளையும் கனவுகளையும் உள்ளது உள்ளபடியே சித்தரிக்கின்றன என்று அப்பொழுதுதான் நாங்களெல்லாம் உணர்ந்தோம்.

காலமே! உனது கையில் நானொரு தூரிகை; சின்னத் தூரிகை. என்னை உயர்ந்த சித்திரங்கள் வரையப் பயன்படுத்திக் கொள். இப்படி எத்தனைப் பாடல்கள் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் நான் எழுதித் தரச் சித்தமாய் இருக்கிறேன் என்ற கவிஞரின் அழியாத வரிகள் என் நெஞ்சத்தைக் கவர்ந்தன.

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!உரைவேந்தரின் உரைத் தொடர் – (ஊ)திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி .. .. .. 
திருவாவிநன்குடியில் முருகனை வழிபடும் முனிவர்கள் இயல்பை இனிக் காணலாம்.  இம்முனிவர்கள் அரையில் மரவுரியை யுடுப்பர்; தலைமயிர் வலம்புரிச் சங்கின் நிறம்போல வெளுத்து நரைத்திருக்கும்; காலந்தோறும் நீராடும் இயல்பினராதலால் அவர் மேனி மிக்க தூய்மையாய் ஒளிவிட்டு விளங்கும். மார்பில் கிருட்டினாசினம் என்னும் மான்தோலையணிந்திருப்பர்; விரதங்களால் பட்டினியிருந்து மேனி கரைந்திருத்தலின், அவர் உடல் எலும்பை நன்றாகக் கண்களால் எண்ணலாம்;  பல நாள்கள் வரை உண்ணாநோன்பு மேற்கொண்டிருந்து சிறிதே உண்ணுவர்.  அவர் நெஞ்சில் எதனிடத்தும் மாறுபட்ட உணர்வோ எவ்வுயிர்மீதும் பகைமையோ இருப்பது கிடையாது; எல்லாம் கற்ற பேரறிவினர்க்கும் தெரியாத பெரு நுட்பமுணர்ந்த பேரறிவுடையவர்.

கற்றோர் எனப்படுவார் எல்லோருக்கும் தலைவராக இருக்கும் கல்விச் சால்பு மிக்கவர். அவர்பால் காமமும் கடுஞ்சினமும் கடுகளவும் இல்லை;  ஒன்றை வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவராதலால், எவ்வகைத் துன்பமும் அவர்கள் அறிந்திலர்; ஒருவரையும் வெறுத்து நோக்கும் இயல்பில்லாதவர் இம் முனிவர்கள்.

இவரிடையே முருகன் திருப்புகழைப் பாடும் இசைவாணர் உள்ளனர்.  அவர்கள் இடையில் புகைபோன்ற மெல்லிய ஆடையணிந்து, மார்பில் புதிது மலர்ந்த பூவால் தொடுக்கப்பட்ட மாலை அணிந்து கொள்ளுகின்றனர். நல்ல யாழ்ப்பயிற்சியும் அன்பு நிறைந்த நெஞ்சும் உடையர்;  இவருடைய வாயில் மென்மையான மொழிகளே நிலவுகின்றன. இப்பெற்றியோர் நரம்பை இயக்கி இனிய இசையை இசைக்கின்றனர்।  இவர்களுடன் மிடற்றாற் பாடும் நன் மகளிர் உள்ளனர்.  அவர் நோயின்றியன்ற உடம்பும் மாந்தளிர்போலும் மேனியும் உடையர்; அம் மேனியில் பொன்னிறம் கொண்ட தேமல் பூத்துளது. இவர்கள் அல்குலிடத்தே பருமமென்னும் மேகலையணிவர். இவரது கற்பு மாசுமறுவற்றது.

திருவேரகத்தில் முருகனை வழிபடும் வேதியர் அறு தொழிலோர் என்ற இலக்கணத்திற் குறைவில்லாதவர்; தாய் தந்தையர் நற்குலத்தவர் என உலகினர் புகழும் பல்வேறு குடியினர்.  நாற்பத்தெட்டு யாண்டு பிரமசரியம் காப்பவர்; எப்பொழுதும் அறம் கூறும் கொள்கையுடையவர்; மூன்றுவகையான தீயை வளர்ப்பதையே செல்வமாகக் கொண்டவர்; முப்புரி நூல் மூன்று கொண்ட பூணூல் விளங்கும் மார்பையுடையர்.
இவ்வண்ணம் முருகனை வழிபடுவோர் இயல்பை மிக நுட்பமாக அறிந்து கூறும் ஆசிரியர் நக்கீரர், மகளிர் நலங்கூறுமிடத்து அவரது கற்பு மாண்பை “மாசில்கற்பு'” என்றும் “மறுவில்கற்பு” என்றும் எடுத்துக்காட்டி வற்புறுத்துவதும் அவர்கள் ஆடவரிடையிலும் முருகன் திருமுன்பும் இருக்கும் நிலையின் தூய்மை நலத்தை “மறுவின்றி விளங்க” என்று சுருங்கக் காட்டி விளக்குவதும் நுனித்தெண்ணி இன்புறத்தகுவன. 

மகளிர் நலம்புனைந்துரைத்த பண்டைச் சான்றோருள் இவர்போல மகளிரது யாக்கையமைப்பை வியந்து நோயின்றியன்ற யாக்கையர்” என்றதுபோல மொழிந்தோர் பெரும்பாலும் சிலர் என்றே கூறலாம்.  மகளிரது யாக்கை நோயின்றியன்ற அமைதி யுடைய தாக வேண்டுமெனக் கருதிக்கூறும் இப்புலமையுரை பொன்போற் போற்றத்தக்கது. இனி, இம்முருகாற்றுப் படையினை இவ்வாறு வளமிகக் கூறும் ஆசிரியர் முருகனைக் கண்டு வழிபடுவோர் அவன் புகழ்களை யெடுத்தோதும் வகையைச் சிறிது விரித்துரைக்கின்றார்.

‘நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கையேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ, ஆல்கெழு கடவுள் புதல்வ, மால்வரை மலைமகள் மகனே,மாற்றோர் கூற்றே, வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ, இழையணி சிறப்பின் பழையோள் குழவி,வானோர் வணங்குவில் தானைத் தலைவ,மாலை மார்ப,நூலறி புலவ, செருவில் ஒருவ, பொருவிறல் மள்ள, அந்தணர் வெறுக்கை, அறிந்தோர் சொன்மலை, மங்கையர் கணவ, மைந்தரேறே, வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ, குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ, பலர்புகழ் நன்மொழிப் புலவரேறே,அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக, நசையுநர்க் கார்த்தும் இசைபேராள, அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய். மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்,பெரியோ ரேத்தும் பெரும் பெயர் இயவுள், சூர்மறுங் கறுத்த மொய்ம்பின் மதவலி, போர்மிகு பொருந, குரிசில்.” என்பது முருகனைப் பரவுவோர் சொல்லி யேத்துதற்குரிய புகழுரை.

நெடும் பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை யேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ” என்றது நெடும்பெரும் சிமயமாகிய இமயத்தின்கண் இறைவன் தந்த கருப்பத்தினை இந்திரன் வாங்கி முனிவர்பால் தர, அவர்கள் அதனைத் தாங்கமாட்டாது தீயின்கட்பெய்து தம் மனைவியர்பால் தந்தாராக, அவருள் அறுவர் தலைக் கொரு குழவியாக நீலம் மலர்ந்த பசிய சுனையின்கண் பதுமப் பாயலில் பெற்றெடுப்ப அந்த ஆறும் சேர்ந்து ஆறுமுகமும் பன்னிரண்டு கையுமுடையனாய் அமர்ந்த செல்வனே என்பது. ஐவருள் ஒருவன் ஏற்ப அறுவர் சிமயத்துப் பைஞ்சுனைப் பயந்த ஆறமர் செல்வ என இயையும்.
ஆல்கெழுகடவுள் புதல்வ என்றது, கல்லாலின் கீழிருந்து முனிவர்க்கு அறமுரைத்த கடவுளாகிய சிவபரம் பொருட்கு மகன் என்பது. இழையணி சிறப்பின் பழை யோள் குழவி என்றது, இழையணிந்து விளங்கும் சிவ சத்தியாகிய பழையவளின் குழவி யென்றவாறு.
இறைவன் பங்கிலுறையும் உமைநங்கையை மலைமகள் என்றும் கொற்றவையென்றும் பழையோள் என்றும் மூவகையாகப் பிரித்துக்கூறுகின்றார்.
சிவசத்தியாய் இறை வனுக்குத் திருமேனியையும் எல்லாவுயிர்கட்கும் வேண்டிய உடல் கருவி கரணங்களையும் உலகுகளையும் உலகியற் பொருள் நுகர்ச்சிகளையும் தரும் முதலாய் அமைதலின் பழையோள் என்றும், வெற்றிக்கு வேண்டிய ஆற்றலே தன் வடிவாகக் கோடலின் கொற்றவை யென்றும், உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடி உலகியல் நடாத்தி உய்கி பெறுவித்தலின் மலைமகள் என்றும் கருதப்படுவது விளங்க இம் மூவகையினையும் எடுத்தோதினார்.
நுண்ணூற் பொருள்களைச் சான்றோர்க்கு ஐயமறத் தெளிவித்துரைக்கும் சீர்மிக்க ஆசிரியன் என்பது விளங்க நூலறி புலவன் என்றும், பலர் புகழும் நல்லுரையால் சமயப்புலவர் தொடுக்கும் வாதங்களை வென்று மேம்படும் உயர்வு தோன்ற, ‘பலா புகழ் நன்மொழிப் புலவரேறே,” என்றும் கூறுகின்றார்.
என்றுங் குன்றாத இளமையும், பெறற்கரிய வீடுபேறு நல்குதலும் தனக்கு உரிமையாகவுடைமை பற்றி ”அரும்பெறல் மரபின் பெரும் பெயர் முருக” என்றார்.
பிறரால் இடுக்கண்பட்டு வருந்தி வருவோர்க்கு, நடுவு நின்று முறை வழங்கும் செம்மையுடைமை தோன்ற ”அலந்தோர்க் களிக்கும் பொலம் பூண் சேஎய்” என்றார். 
நெடுவேள் என்பதற்கேற்பத் தன்னையடைந்த பரிசிலர்க்கு. வேண்டுவன பெருக நல்கித் தாங்குவது தோன்றப் ”பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்” என்றார்.
எத்தகைய பெரியோர்க்கும் பெருமைக்குரிய செயலாற்றுதற்கேற்ற மனத்திட்பமும் வினைத்திட்பமும் இன்றியமையாதன.  அவற்றிற்குரிய அவரது ஆற்றலை எழுப்பி இயக்கும் திருவருள் இயக்கத்துக்கு அவன் முதலாதல் தோன்றப் “பெரியோ ரேத்தும் பெரும்பெயர் இயவுள்” என்றார்.
உலகியல் நுகர்ச்சிக்கு இளமையும் வினைத்திட்பத் துக்கு இயக்கமும் பெறற்கு முதலா தலின் இரண்டையும் உணர்த்தும் முருகன், இயவுள் என்ற பெயர்களைப் பெரும் பெயரெனச் சிறப்பித்தார்.
எல்லையில் காலமாகப் பல்வகைப் பிறப்பும் பிறந்து பிறந்து அறிவு சிறந்துவரும் மன்னுயிரெல்லாம் தன்னுள் ஒடுங்கத் தான் அவற்றை ஒடுக்கி மேற்பட விரிந்து நிற்றலின், அவ்வுயிர்கட்கு, அவன் பண்பெல்லாம் அறிதல் இயலாமையின், “நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமை” என்றும், அவ்வருமை யுணர்ந்து அவை செயற்பாலது அவன் அடியில் வணங்குவது அன்றி வேறில்லை என்பார்,  ”நின்னடி உள்ளி வந்தனன்” என்றும் கூறினார். ஞான சம்பந்தரும், தாட்பால் வணங்கித் தலை நின்றிவை கேட்கத் தக்கார்’ என்பது காண்க.

“வலம்புரியில் பிறந்த வார்த்தை வளம்”
முனைவர் ஔவை அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,தமிழ்நாடு அரசு=================================================
சொற்கள் எங்கிருந்து பிறக்கின்றன என்றால் நூல்களில் தேங்கியுள்ளன என்று நமக்கெல்லாம் தெரியும். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவையெல்லாம் வார்த்தைச்சித்தர் வலம்புரி ஜானின் நாவில் இருந்து வருபவை என்று அவருடைய ‘பாரதி-ஒரு பார்வை’ என்ற நூலில், கவிதை என்றால் என்ன என்று எழுதியபோது அருவியாக விழுந்தன. 
“கவிதை என்பது சுகமான சொற்களின் சொர்க்கவாசல் திறப்பல்ல;கவிதை என்பது பசும்புல் தலைகளில் பனிக்குடங்களை முத்தமிடவருகிற மோகக்காற்றல்ல; கவிதை என்பது வெள்ளை அன்னத்தின் கொள்ளை வனப்பை அள்ளி விழுங்கிட ஆரோகணித்து வரும் வெண் நுரைப் பூக்கள் அல்ல;கவிதை என்பது விழுந்த அடியில் விழைந்த வீக்கம்; கவிதை என்பது இதயக்கதவுகளின் இறுக்கமான கீறல்களின் வழியாக ஒரு கோடி கல் வரைக்கும் படர்ந்து பரவும் ஓலம்; கவிதை என்பது போகிற போக்கில் போக்கை விதிக்கும் புதுவெள்ளம்;கவிதை என்பது சாயாத கோபுரங்களின் சரியாத பிரகடனம்!கவிதை என்பதை சினம் – சீற்றம் – எழுச்சி – ஏக்கம். கவிதை என்பது கனவு – கவிதை என்பது நிழல் – கவிதை என்பது நகல் – அசல் – அனைத்தும்”என்று, நான் 18.12.1985 காதும் கண்ணும் பதித்துக் கொண்ட கருத்துக் கோவையாகும். 

அக்காலங்களில் எங்களுடைய அண்ணாநகர் இல்லத்திற்கு நாள்தோறும் பல செய்தி இதழ்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். அதில் குறிப்பாக, வாரம் தவறாமல் நான் விரும்பிப் படிக்கும் இதழாக ‘தாய்’ இதழ் அமைந்தது. தாய் இதழில் என்னை மிகவும் கவர்ந்தது கடைசிப்பக்கத்தில் ஆசிரியர்ப்பகுதியும், அவருடைய கேள்வி-பதில் பகுதியும் தான். ஒருமுறை ஒருவர் வினா தொடுத்திருந்தார். பின்னணிப்பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் குரல் வளத்தையும், பாடகர் ஜேசுதாஸ் குரல் வளத்தையும் ஒப்பிட்டுச் சொல்லுங்கள்? அதற்கு, ‘ஞானபாரதி’ வலம்புரிஜான் சொன்ன பதில் இன்னும் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது:-எஸ்.பி.பி.-யின் குரல் வளம் ‘மாந்தளிரைக் கோத வைக்கும் குயிலின் குளிர்காலக் குரலைப் போல’ இருக்கும்,  ஜேசுதாஸின் குரல் வளம் ‘ஆலோலத் தென்றலிலே அசைகின்ற ஆலய மெழுகு வர்த்திகள் உருக்குகின்ற மௌன சங்கீதத்தைப்போல’ இருக்கும். 
ஒருமுறை விஜய் தொலைக்காட்சியில் நண்பர்கள் பாலகிருஷ்ண்ணும், சொல்லின் செல்வர் மணிகண்டனும் வடிவமைத்த ‘சொல்லப்பட்ட சுவையோ ஆறு, சுல்தான் தொட்டால் ஏழு’ என்ற சமையல் நிகழ்ச்சிக்குத் தலைமை விருந்தினராக ‘கலைமாமணி’ வலம்புரிஜான் பங்கேற்றார். அப்பொழுது அவரிடம் ஒரு சுவையான ‘கேக்’ ஒன்றை அவர் அருகில் வைத்து இதைப்பற்றி நீங்கள் பேசவேண்டும் என்று நான் கேட்டபொழுது, தான் பேசுவதற்கு முன்பு மீண்டும் சுவைத்து பார்ப்பதற்காக அக்கேக்கை மீண்டும் கேட்டுவிட்டு மீண்டும் கேட்க வைத்ததனால் ‘கேக்’ என்று பெயர் வந்ததோ என்று சொல்லித் தன் பேச்சைத் தொடங்கியது என் நினைவிலிருந்து இன்னும் நீங்கவில்லை. 
தாய் இதழின் தொடக்க இதழில் அவர் எழுதிய வரிகள் பொன் வரிகளாகும்.‘தாய் பிறக்கும் நாளும் வரும், வாய் மணக்க ஊர் புகழும், போட்ட முதல் அசலாகும், புதுப் பாட்டின் நகல் ஆகும்.
வார்த்தைச் சித்தர் தான் பேசுகிற ஒவ்வொரு கூட்டத்திலும் அவருக்கே உரிய குரல் தொனியில் தொடங்குகிற வரிகள் இளைஞராய் இருந்த என்னை மிகவும் ஈர்த்த வரிகளாகும்.கதிர் வெடித்துப் பிழம்பு விழகடல் குதித்துச் சூடாற்றமுதுமைமிகு நிலப்பிறப்பின்முதற்பிறப்புத் தோன்றி விடநதி வருமுன் மணல் தருமுன்நலம் வளர்த்த தமிழணங்கேபதிமதுரைப் பெருவெளியில்பாண்டியர் கை பார்த்தவளே!நின்னை யான் வணங்குவதும்நீ என்னை வாழ்த்துவதும்அன்னை மகற்கிடையேஅழகில்லை என்பதனால்உன்னை வளர்த்து வரும்ஓண் புகழ் சேர் தண்புலவர்தன்னை வணங்குகின்றேன்.

வலம்புரியார் அதிகமாகப் பிறரைப் புகழ்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு அவருடைய பதில்:-“நீல வண்ண நீர்த்தீவில் சிறகுப் படகுகளில் சில்லிடுகிற செம்போத்துப் பறவை உயரமாகப் பறக்கிறது என்பது அதன் குறைபாடல்ல; இருட்டு இராத்திரிகளில் ஒரு வெளிர் நீலப்பூ இதழவிழ்ந்து தேன் விதைப்பது அதன் குற்றமல்ல; குயிலுக்குப் பாட்டும், மயிலுக்கு ஆடலும் அவைகளைக் கேட்டுக்கொண்டு வருவதல்ல.”

பதினெட்டாண்டுகளுக்கு முன்பு (18.04.2003) இலங்கையில், கம்பன் கழக விழாவில் அவரை நான் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபொழுது, ‘அப்பாவின் உரைகளை எழுத்தாய்ப் பதிவு செய்ய இயலவில்லை என்ற குற்றச்சாட்டு என்மீது விழுந்துள்ளது. என்ன செய்யலாம்?’ என்று கேட்டபொழுது, சிரித்துக் கொண்டே அவர் சொன்னார்;“அருள்! ஒரு பறவை பறந்து போகிறது. பறக்கும்போதே இறகுகள் ஆங்காங்கே உதிரத்தான் செய்யும், உடனே, பறக்கிற பறவை கீழே இறங்கி வந்து தன் அழகான இறகுகளைக் கொத்திக் கொத்தித் திரட்டிக் கொண்டிருந்தால் பயணம் தடைபடும் அல்லவா? எனவே பறப்பதுதான் பறவைகளின் செயல்; சிறகுகளைச் சேகரிப்பதல்ல” என்றார்.

அவருடைய ஒவ்வொரு சொற்களும், நட்சத்திரக் கனகாம்பரங்கள். ன்றாக:காத்திருக்கும் வரை நான் காற்று, புறப்பட்டால் புயல்தொண்டை பழுதாகிற போதும் ஆற்றுகிற பொதுத் தேர்தல்த் தொண்டை மறக்கக்கூடாது.நான் விதையைப் போன்றவன், விரல்களிலேயே இருந்தாலும் நான் விருட்சமாவேன்.நினைத்ததும் பாடுகிற நிர்மலமான இந்த இளைஞருக்கு வீங்கு புகழ் வரவும் – ஓங்கு புகழ் வரவும் தாய் அன்போடு வாழ்த்துகிறது.

வெட்டுக்கிளிப்போல துள்ளித் துள்ளிப் போகிற அறிவு நதி.  விதையாக விழுந்திருக் கிறார், இனி விளைவாக எழுவார். நமது கனவு மாளிகைக்கு கந்தர்வத் தூணாக எழுவார். தாழைமடலில், சந்தனக்குழம்பு கொண்டு, பித்திகை அரும்புகளால் பின்னிராப் பொழுதுகளில் முத்திரைக்கவிதை –  முழுநிலாக் கவிதை – சித்திரைக் கவிதை – சீதளக் கவிதை… மத்தாப்பூ மனிதர், கித்தாப்பு மொழிக்காரர்.நுரைப் பூக்களின் நூதனமான சங்கீதம்.வாழும்போதே வரலாறு ஆகிறார்.வானங்கள் நமக்கு எல்லைகள் அல்ல.புத்தராவது எட்டாத வானத்தில் கிட்டாத நிலவு.வெண்பனி இமயத்திற்கு முன்பாகக் கைகட்டி நிற்கிற வெளிறிப்போன கூழாங்கல்லாக நான் உணர்கிறேன்.மாளாத நினைவுகள் மருளாத உணர்வுகள்.

ஆறு என்றால், தயங்கித் தயங்கி ஓடுகிற ஒரு தண்ணீர் விரிப்பு.  நதியென்றால் விரிந்த சடை போல வெள்ளம் மணலை ஊடறுத்துப் போவது.உன் எதிரிகளைச் சொல், இதோ! உன்னை உனக்கு நான் அடையாளம் காட்டுகிறேன்.எந்தப் புத்தகம் உன்னை புரட்டிப் புரட்டித் தூங்கவிடாமல் விழித்துக்கொள்ளப் பண்ணுவதாக இருந்தால் அதுவே விழுமிய புத்தகம்.எப்போதும் வருவதல்ல கவிதை, எப்போதோ வருவது கவிதை! நினைத்தால் வருவதல்ல கவிதை. இதயம் கனத்தால் வருவது கவிதை!நதி குளிக்கப்போகிறது. 

நீலம் நிறமல்ல. தரைக்கு வராத தாகமில்லாத சூரியன்.ஆகாயத்தோப்பின் அகத்திப்பூ.சொல்லிவிடுவது வசனம்; சொல்லாமல் விடுவது கவிதை!பிச்சிப்பூச் சொற்கள்.நான் காற்றைச் சுவாசிப்பதில்லை, நம்பிக்கைகளை நான் சுவாசிக் கிறேன்.அடுத்தவர் மேல் ஆயுதம் செலுத்துவது மதவெறியாகும்; அன்பு செலுத்துவது மதநெறியாகும்.வார்த்தைகள் நடந்தால் வசனம்; நடனமாடினால் கவிதை.கந்தர்வ அழகோடு நுரைத்துச் சிரிக்கிற நுங்கு நடை. அந்தகாரத்தின் அசுர ஆட்டம். விழிப்புருவங்களை வில்லாக்கி விடுகிறது.எட்டாத வானத்தில் கிட்டாத நிலவுகள். முதலை ஆள்பவன் முதலாளி; தொழிலை ஆள்பவன் தொழிலாளி.கிழக்கு வானம் சிவக்காமல் இருக்கலாம்; கீழ்வானம் வெளுக்க வில்லை.கபாலங்களுக்குள் முள்ளிச்செடிகள் முளைத்து விட்டன. சமூக அநீதிக்குச் சாமர வீசிகள் வந்து விட்டார்கள்.மேற்கு நாடுகளில் அமைதியைத் தேடி அலைகிற பலரும் கிழக்கத்திய கலாச்சாரத்தின் கிண்கிணிக் கிரீடமான யோகாவைத் தரித்துக் கொள்கிறார்கள். இங்கே மழை கூட விசிறிக் கொண்டே விழுகிறது; காற்றுக்கூட இருமிக்கொண்டே நடக்கிறது.கொடிமரங்களுக்குப் பூச்சி மருந்து அடிப்பதே வரலாறாகி விட்டது.சிங்கம் செத்துக் கிடந்தாலும் சரி, அதன் கம்பீரத்தைக் களவாட முடியாது.ஒருநாள் உதயராகம் பாடியே தீரவேண்டிய பாட்டு வானப்பறவை.பாதரசப் பளபளப்பு.நுரைத்த பூக்களின் நூதன சங்கீதம்.செல்லாக்காசின் பொல்லாக் கோபம்.புதிய ரேகைகளைப் புறப்பட வைத்த பூகோளப் பொறிவண்டுவிழுதுகளின் ஆட்டத்தை விமர்சிக்கும் கிளிகளுக்கு விதைக்குள்ளே உயிர் உறங்கும் வித்தகத்தை யார் உரைப்பார்?
வலம்புரியாரின் எழுத்தும், பேச்சும் காலக்கோயிலில் கற்பக நிவேதனமாய் என்றும் பலர் நெஞ்சங்களில் வாழ்வதை நான் பல தருணங்களில் கேட்டு மகிழ்ந்துள்ளேன்.  நயவுரை நம்பியின் நூலறி நண்பர், கோவைத்திலகம் அண்ணல் கிருஷ்ணகுமார் ஆண்டு தவறாமல் வலம்புரியாரின் நினைவு நாளன்று (08.05.2005), விளம்பரம் வெளியிடுவார்.  கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் தான் வங்கியில் உயரலுவலராய் இருந்தபோது, தாராளமான தொகையை வங்கி வாயிலாக இலக்கியக்கொடையாக வலம்புரியாருக்கு வழங்கியது தன் பேறு என்று இன்றும் சொல்லிக்காட்டுவார். அவ்வண்ணமே வலம்புரியாரின் வார்த்தைகளை நண்பர் மை பா நாராயணன் சொல்லிக் காட்டிப் பெருமைப்படுத்துவார்.

மின்னலைப்போல அவரது எழுத்து நடை, என் இளமைக் காலங்களில் விமானத்தை விட வேகமாகப் பறந்தது. மகரந்த நடையில் மணக்கும் கட்டுரைக் கனிகளை சுகந்தமான வரிகளுக்கு அப்பாலும் வடிந்து விடாத வெள்ளமாக நுரைத்துச் சிரிக்கிறார் வலம்புரியார்.  நெஞ்சில் கனல் மணக்கும் நித்திலப்பூவாக வாழ்கிறார். 
‘காவியக் கவிஞர்’ வாலியின்“உன் வித்தக விரல்களில் விளையாடும் எழுத்துக்கள் எல்லாமே, பாக்கள்! நாங்கள் அதைச் சுற்றி வரும் ஈக்கள்” என்னும் கவி வரிகள் கல்வெட்டு வரிகளாகும்.

“மின்னல் சாரத்திற்கு மெருகேற்றுவதும், வலம்புரியின் எழுத்து வாசலுக்கு வார்த்தைத் தோரணம் கட்டுவதும் ஒரே வகையான பணிதான். உவமைகளிலே புதுமை! உருவகங்களிலே கவர்ச்சி!” என்று எந்தையார் வலம்புரியை வரைந்து காட்டிய பெருமை வரிகளும் ஈடற்றவை.

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!உரைவேந்தரின் உரைத் தொடர் –

(எ)திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி … 

இதுபோது கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளில் இறைவனை அருச்சிப்போர் முடிவில்,  “நானாவித மந்திரபுஷ்பாணி சமர்ப்பியாமி”  என்று சொல்லி முடிப்பது முறையாக இருக்கிறது.  இங்கே முருகனை அருச்சிப்போர் அருச்சனை முடிவில்,  “நின்னளந்தறிதல் மன்னுயிர்க் கருமையின், நின்னடி உள்ளி வந்தனென் நின்னொடு, புரையுநர் இல்லாப் புலமையோய்”  என முடிப்பது அறிவுநெறிக்கு மிகவும் ஒத்திருப்பது நோக்கத் தக்கது.  இத்திருமுருகாற்றுப்படை, முருகன் திருவடி ஞானம் பெறுதற்குத் துணையாகும். திருமுறையாவதையும், அவ்வாறு ஆகுமிடத்து இடையிடையே கூறும் முருகனுடைய அருளுருச் செயல்களையும் பிறவற்றையும் காணும் நாம் இயற்கைப் பொருள்கள் சிலவற்றின் அமைப்பியல்புகளையும் காண்கின்றோம்.

அடுக்கம் என்பது மலைப் பக்கத்தைக் குறிக்கும் சொல்.  மலைப்பக்கம் மண் படிந்து மரங்கள் வானளாவ உயர்ந்து வளர்தற்குரிய இடம்.  மரங்கள் செறிந்த சோலைகளும் அங்கே நிறைந்திருக்கும்;  சூரர மகளிர் அச்சோலைகளில் விளையாடுவர். குரங்கேறாத மரமில்லையென்பது பழமொழி; அத்தகைய குரங்குகளும் ஏறியறியாத உயரமுடைய மரங்கள் அடுக்கங்களில் நிற்கின்றன.  அங்கே காந்தள் மலர்ந்து தேன் நிறைந்து மணம் கமழ்ந்து கொண்டிருக்கின்றன. இக்காந்தட்பூவால் தொடுக்கப்படும் கண்ணி முருகன் திருமுடியில் பெருமையும் தட்பமும் கொண்டு விளங்குகிறது. 

கூதளம் என்பது தாளியைக் குறிக்கும் சொல். இது வெண் கூதாளி, செங் கூதாளியென இருவகைப்படும்; இவையே வெண்டாளி யென்றும் செந்தாளியென்றும் வழங்கும். முருகனது வேலேந்தி விளையாட்டயரும் வேலன், இதனால் தொடுக்கப்படும் கண்ணியணிகின்றான. பச்சிலைக்கொடியை நாராகக் கொண்டு சாதிக்காய் தக்கோலம் என்ற இவற்றோடு காட்டு மல்லிகையை இடையிடையே விரவி இத் தாளிப்பூங்கண்ணி தொடுக்கப்படுகிறது. சாதிக்காய் நறுமணம் பெற்று விளங்குதலால் அதனை நறைக்காய் என்றும், தக்கோலத்தின் காய் புட்டில் போன்றிருத்தலின் புட்டில் என்றும் முருகாற்றுப்படை மொழிகின்றது. செங்கடம்பின் பூவால் தொடுக்கப்படும் தார் உருள் பூந்தார் எனப்படுகிறது. கடம்பின் பூ தேருருள் போலும் வடிவினையுடைமைபற்றி உருள்பூ எனப்பட்டது. 

இப்பூ இவ்வாறு உருண்டு திரண்ட காட்சி பெறுதற்கு வாயிலாக, முகில் கடற்குச் சென்று நீரை நிரம்ப முகந்து மேனி கருத்து வானத்திற் பரந்து கார்காலத்து முதல் மழையைப் பெய்கிறது.  அக்காலத்தே இருளுண்டாகச் செறியத் தழைத்திருக்கும்  இக்கடம்பு அடி பருத்து அழகுறப் பூத்து நிற்கும். இப்பூவால் தொடுக்கப்படும் தார், முருகன் திருமார்பில் கிடந்து இனிய காட்சி வழங்குகிறது.

பரங்குன்றத்தின் சிறப்புக் கூறவரும் முருகாற்றுப்படை, அங்குள்ள சுனை யிடத்து மலர்ந்திருக்கும் பூக்களை வண்டினம் மொய்த்து ஒலிக்கும் காட்சியை எடுத்துக் காட்டுகிறது.  கூடல் நகர்க்குக் குடபாலில் கருஞ்சேறு பரந்த அகன்ற வயல்கள் உள்ளன; அங்கே நீர் இடையறாமையின் தாமரைகள் இதழ் விரிந்து பூத்துள்ளன. இரவுப்போதில் தாமரை குவிதலின், வண்டினம் இரவெல்லாம் குவிந்த அத்தாமரை மலர்க்குள் இருந்து உறங்கும்.  வைகறைப்போதில் நெய்தல் மலருதலின் அவ்வண்டு தாமரையினின்றும் வெளிப்போந்து புதிது மலரும் நெய்தற்பூவிற் படிந்து தாதூதுகின்றன. ஞாயிறெழுந்து வெயில் பரப்புங்கால் நெய்தலை நீங்கிச் சுனையையடைந்து அதன்கண் தோன்றி மலர்ந்திருக்கும் சுனைப்பூக்களைச் சூழ்வந்து ஒலிக்கின்றன.

பேய்மகள் நெய்ப்பசையின்றி யுலர்ந்த தலைமயிரும் அகன்ற வாயும் உடையவள்;  அவள் வாயில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிரையொவ்வாமல் பற்கள் முளைத்திருக்கின்றன. அவளுடைய பசுங்கண்கள் எப்போதும் சினந்து சுழன்று திரியும்; கண்பார்வை மிகக் கொடுமையானது; காதுகளில் கூகையும் பாம்புகளும் வாழ்கின்றன; நீண்டு தொங்கும் அடிக்காது மார்பில் வீழ்ந்து அசைகிறது. வயிற்றின் மேந்தோல் பனையின் பட்டைபோல் சுரசுரப்பாக இருக்கும். அவள் நடக்கும் நடை காண்பார்க்கு அச்சம் தருகிறது. அவளது பெரிய கையில் போரிலே வீழ்ந்தாருடைய தலை இருக்கிறது. அதன் கண்களைக் கைவிரல் நகத்தால் குடைந்து தோண்டி யெடுத்துத் தின்கின்றாள்; அவ்வாறு செய்வதால் அவள் கைவிரல் குருதிபடிந்து சிவந்திருக்கிறது. இந்நிலையில், நிணத்தைத் தின்றுகொண்டே கையைத் தோளுற முடக்கி விலாப்புறத்தையடித்து ஓசை செய்துகொண்டு கூத்தாடுகிறாள். இது முருகன் அவுணரைக் கொன்றழித்த போர்க்களத்துக் காட்சிகளுள் ஒன்று.
உடையைப்பற்றிக் கூறவந்தபோது இந்நூல் உடையென்பதன் வேறாகத் துகில், காழகம், உடுக்கை முதலி சொற்களை எடுத்தாளுகின்றது. உடையென்பது கையால் முகந்த புகைபோல மென்மையும் நொய்மையு முடையதெனவும், இதனை மென் மொழி வழங்கும் யாழ் வல்லுநர் உடுக்கின்றனரெனவும் கூறுகிறது. துகிலென்பது சூரர மகளிடத்தும், முருகனிடத்தும் காணப்படுகிறது. அரமகளிர் அணிந்திருக்கும் துகில் செந்நிறமுடையது; அந்நிறம் அதற்கு இயல்பாய் அமைந்ததேயன்றிச் செயற்கை யாய்த் தோய்க்கப்பட்ட தன்று. முருகன் திருமேனியில் கழுத்தைச் சூழ்ந்து மார்பின் இருமருங்கும் ஒழுகி உதர பந்தத்தின் உள்ளே இறுகி நிலத்தளவும் தாழ விடப்பட்டுளது; அதன்பால் நறுமணமும் மென்மையும் அமைந்துள்ளன. அருவி வீழுங்கால் அவற்றின், தோற்றம் குறியவும் நெடியவுமாகிய பல துகில்களை உவமமாகக் காட்டுகின்றது. 
மேலும் அம்முருகன் அரையில் செந்நிறமுடைய ஆடை திகழ்கிறது. முனிவர்கள் பால் மரவுரி யுடுக்கையும் முருகாற்றுப் படுக்கும் குறமகள் பால் மாறுபட்ட நிறமுடைய அறுவைகளும், இருபிறப்பாளரிடையே காழகமும், முருகனோடு விளையாடும் மகளிர்பால் தழை யுடையும் காணப்படுகின்றன.

57  –  “பேரறிஞர் அண்ணா வளர்த்த பேச்சுத் தமிழ்”

மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் இரண்டாம் ஆண்டு பயிலும் பொழுது பல நூல்களைப் படித்து வந்த பொழுது, பேரறிஞர் அண்ணாவின் எழுச்சியான உரைகளையும், எழுத்து வடிவில் வந்த நூல்களையும், கவினார்ந்த கட்டுரைகளையும், ‘திராவிட நாடு’ பழைய இதழ்களையும் படிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி ‘தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்கள்’ மடலங்களாகப் படித்து அருமை நண்பர் ஐ.நா. உயர் அலுவலர் அண்ணன் டாக்டர் கண்ணன் அவர்களுக்குக் கடிதங்கள் எழுதும்போது அண்ணாவின் மேற்கோள்களையே சுட்டிக் காட்டி எழுதும் வழக்கத்தை வளர்த்துக் கொண்டேன்.

24.01.1986 – ஆம் நாளைய குறிப்பேட்டில், பேரறிஞர் அண்ணாவைப் (15.09.1909 – 03.02.1969) பற்றிய திரு. ஏ. கே. வில்வத்தின் குறிப்புகளைப் படித்து வியந்தேன்.

“ஒரு மொழி வைத்து உலகாண்டவன் நீ ! இன்று வருமொழிக்கெல்லாம் நடை பாவாடை விரித்து நாசமாவதா ?”“தென்னாடு வேட்டைக்காடு, வடநாடு வேட்டையாடுபவரின் நாடு. இதுதான் இன்றைய அரசியல் ஏடு, இதனால் விளைவது மாபெரும் கேடு !”“இரும்பென்றால் டாடா ! செருப்பென்றால் பாடா ! மருந்தென்றால் தாதா ! துணியென்றால் கிஷன்சந்த் செல்லாராம் ! சிமெண்ட் என்றால் டால்மியா ! நகையென்றால் சுராஜ்மல் ! நவதானியங்களென்றால் ருட்சர் கேவல்சந்த் !”“சென்னையில் பிறந்தவன் கைவண்டி இழுக்கிறான். சென்னையில் பிழைக்க வந்தவன் இங்கே தனியாக ஒரு வளாகத்தை வளைத்துக் கொண்டான்.”“இந்த மண்ணுக்கு உரியவன் நாளெல்லாம் உழைத்து விட்டு நள்ளிரவில் தன் வாயில் அள்ளிப் போடும் ஒரு கவளச் சோற்றில் கலந்திருக்கும் கற்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். ஒண்ட வந்தவனோ இங்கே உப்பரிகையில் அமர்ந்தபடி வைரக் கற்களில் நீரோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறானே, இது என்ன நியாயம் ? இவ்வளவு பெரிய பேதத்தை வைத்துக்கொண்டு பேசுகின்ற கூட்டங்களிலே எல்லாம் பண்டித நேரு மக்களைப் பார்த்து ‘ஜெய்ஹிந்த் !’ என்று முழக்கமிடச் சொல்கிறாரே, முழக்கமிடவா தோன்றும்? முகாரியல்லவா எதிரொலிக்கும்.”“Respected Chairman and my learned friends! I rarely speak in English! But, that does not mean my English is rare and I belong to the Dravidian stock. I am proud of it”.“குழந்தையிடம் அழகான ரோஜா மலரைக் கொடுத்தால், அது சற்று நேரம், அதன் அழகைப் பார்த்து ரசிக்கும். பிறகு, ஒவ்வொன்றாகப் பிய்த்து எறியும். அது போன்றதுதான் இளமைப்பருவம்.”“தங்கத்திலே அரிசி செய்து சமைத்து, கோமேதகக் கூட்டும், வைர வறுவலும், முத்துப் பச்சடியும், மோர்க் குழம்பிலே செம்பும் கலந்தா சாப்பிடுகிறீர்கள் ? உங்களைப் போன்ற சிலர் தர்மப் பிரபுவாக வாழ தொழிலாளர்கள் தரித்திரர்களாக இருக்க வேண்டுமா ?”“

தமிழ்க் கடவுள் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்தால் ஏற்க மாட்டாரா ? வேண்டுதல் வேண்டாமை இலானாகிய இறைவன், தமிழ் மொழியை வெறுப்பாரா! தமிழா ! உன் மொழியே வேண்டாமென்றால், உன் மொழியிலேயே அர்ச்சனை செய்தால், உன் வேண்டுகோளை ஏற்க மாட்டேன் என்று மறுத்தால், அந்த இறைவனை வழிபடுவதால் என்ன பயன் விளையும் ? ‘தாயினும் நல்லன்’ என்று இறைவனைப் புகழ்கிறீர்களே, அந்த இறைவன், உன் தாய் மொழியான தமிழ் மொழியை ஏற்றுக் கொள்ள மாட்டாரா ?”

“வறுமையில் அச்சமின்றி நம் தந்தையர் நம்மைப் பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்பிப் படிக்க வைத்தனர். ஆசிரியர் அடிப்பாரே என்று அச்சமின்றி, நாமும் பள்ளிக்குச் சென்று படித்தோம். ஆகவே, நம் வாழ்க்கையில் வரக்கூடாதது அச்சம். ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’. அச்சமின்றி வாழ வேண்டுமானால் நெப்போலியன் வரலாற்றைப் படியுங்கள். அச்சத்துக்கு அச்சம் உண்டாக்க வேண்டுமானால் பெரியாரைப் பாருங்கள். ஆகவே நீங்கள் அச்சமின்றி வாழ வேண்டும். பிறரை அச்சமின்றி வாழ வைக்க வேண்டும். அச்சம் வந்தால் மிச்சம் எதுவுமிருக்காது. ஆனால், அச்சம் வேண்டும். தீமை செய்ய அச்சம் வேண்டும். இந்த அச்சம், மச்சம் அழகூட்டுவது போல, வாழ்வுக்கு மகிழ்வை ஊட்டும்.”“கோலாரிலே தங்கம் கிடைக்கிறது என்றால், பூமியை வெட்டியவுடன் இது பாளம் பாளமாகக் கிடைப்பதில்லை. கல்லை வெட்டி, அதைக் கரைத்து, அரைத்துக் காய்ச்சிய பின்புதான், மின்னும். தங்கத்தை எடுக்கின்றவர்கள் அவ்வளவு துன்பப்பட வேண்டியிருக்கிறது அது போன்றதுதான் சமுதாய சீர்திருத்தப்பணியாகும்.”“கொங்குநாடு கேட்காததை; வங்கநாடு கேட்கிறது. ”பட்டமளிப்பு விழாவில் பேரறிஞர் அண்ணாவின் முடிவுரை வரிகள் பொன்னான வரிகளாக மிளிர்கின்றன.“தமிழ் உமது முரசாகட்டும் ! பண்பாடு உமது கவசமாகட்டும் ! அறிவு உமது படைக்கலனாகட்டும் ! அறநெறி உமது வழித்துணை யாகட்டும்…” அண்ணாவின் புகழ் சூடிய திரைப்பட வசனமாக, ‘சொர்க்க வாசல்’ படத்தின் மறக்கவொண்ணா மணிவாசகம்… ‘சாலையோரத்தில் வேலையற்றதுகள், வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீதக் குறிகள், வேந்தே ! இதுதான் காலக்குறி. ’‘புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை இகழ்ந்ததன் பயனே;’ என்பது 202-ஆவது புறநானூற்றுத் தொடராகும். புலவரை இகழ்ந்தால், நகரம் அழிந்தது என்பது பொருள். அரிய பணிகளைச் செய்யும் புலவர்களை நினைத்து, அண்ணா சொன்ன பொன்வரிகள், “புலவர்களைப் பழிக்கிறவன் புதைகுழிக்குள் போவான்; புவியில் எங்கிருந்தாலும் அவன் தலையில் இடி விழும் ”.1942 – ஆம் ஆண்டு, ‘திராவிடப் பாசறை’யில் என் பாட்டனார், உரைவேந்தர் ஔவை சு. துரைசாமி எழுதிய வரிகள் இன்றும் பொன்னாய் மிளிர்கிறது.“அண்ணாத்துரை ஒருவர் போதாது, பல அண்ணாத்துரைகள் வேண்டும்.

அவருடைய பரந்த அறிவு பல கோளாறுகளை ஆணிவேரோடு அகழ்ந்தெறிய முற்பட வேண்டும். அச்செயற்கு அரணாக அஞ்சாமையும், ஆண்மையும் செறிந்த அடல் மிக்க இளைஞர்கள் படை திரள வேண்டும். அவர்கள் வாய்ப்பறையாக நாக கடிப்பாக, எல்லோருடைய செவியிலும் அறிவுக் கருத்துரைகள் சென்று முழங்க வேண்டும். அதன் விளைவாக, தலைசிறந்த தமிழரது வாழ்வாக சீரிய, கூரிய தீஞ்சொல் அருஞ்செல்வமாக, அணிகலனாக நம் அண்ணா மிளிர்கிறார்.”

சென்னைப் பல்கலைக்கழகத்தில், 1986 – ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி மூன்று நாள் அறக்கட்டளைப் பொழிவில் எந்தையார் உரையாற்றியபொழுது, பெருங்கூட்டமாக ஆயிரக்கணக்கில் ஆர்வலர்கள் வந்து கேட்டதை நானும் கண்டு மகிழ்ந்தேன். அக்கூட்டத்தில் ‘உரை உலகம்’, ‘கலை வானம்’, ‘கருத்துக் கடல்’ என மூன்று பொருண்மைகளில் நயம்பட உரைத்தார்கள். உரையினூடே ஆங்கிலத்தில் அப்பா அண்ணாவைப் பற்றிச் சொன்ன வரிகள் இன்னும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளன. “ The Dravidian Demosthenes has inaugurated a new era of Tamil eloquence which is original and wonderful, but, unorthodox…”. அவ்வண்ணமே, பேரறிஞர் அண்ணா தமது பேச்சில் பயன்படுத்திய சில தொடர்கள் மட்டுமே சாசன வரிகளைப் போல சாகாமல் இருக்கின்றன என்று சொல்லி அத்தொடர்களை அப்பா அடுக்கிச் சொன்னபோது, கூட்டத்தில் ஆரவாரமான கையொலி அடங்க நெடுநேரமாயிற்று.

தீ! பரவட்டும்.     தம்பி வா ! தலைமை தாங்க வா!     எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.     எங்கிருந்தாலும் வாழ்க !     வாழ்க வசவாளர் !     ஏழை – கோழையல்ல – எரிமலை.     சாமானியர்களின் சகாப்தம்.     நாம் பலர் – அவர்கள் சிலர்.     இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.     தம்பியுடையான் படைக்கஞ்சான்.     கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு.     பணிவு – துணிவு – கனிவு.     கட்டிமுடித்த கோபுரம் – கொட்டிக் கிடக்கும் செங்கல்.     மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு.     மறப்போம் மன்னிப்போம்.     நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்.     வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது.     கேட்டுப் பழகிய கை – போட்டுப் பழகிய பை – சொல்லிப் பழகிய பொய்.     Revolution – not by bullets, but by ballots.     Determination ever – deviation never.     Tap the rich and pat the poor.     Your days are numbered என்று அண்ணாவைப் பார்த்துச் சொன்னவுடன், அண்ணா சொன்ன பதில்,      ‘ My steps are measured ’.

அண்ணாவின் சீர்திருத்தக் கட்டுரைகள் ‘வால்டேர்’ எழுதியதற்கு நிகராகும். அண்ணாவின் நாடகங்கள் ‘மோலியர்’ நாடகங்களுக்கு நிகராகும். அண்ணாவின் சிறுகதைகள் ‘ஓ ஹென்றி’, ‘மாப்பசான்’ சிறுகதைகளுக்கு நிகராகும். அண்ணாவின் நீண்ட கதைகள் ‘விக்டர் யூகோ’க்கு நிகராகும். அண்ணாவினுடைய பேச்சு ‘மார்க் ஆண்டனி’, ‘எட்மண்ட் பர்க்’, ‘ஆபிரகாம் லிங்கனுக்கு’ நிகராகும்.

தன்னுடைய உரையின் இறுதியில், அண்ணாவின் எழுத்துகளை எண்ணினால், ஒரு இலட்சம் பக்கங்களுக்கு மேலாகவும், பதிப்பித்தால் அறுபது தொகுதிகளாகவும் வெளியிடலாம் என்று வலியுறுத்தினார். அதனை அண்மையில், தமிழ்மண் பதிப்பக நிறுவனர், இளவழகனார், அண்ணா அறிவுக்கொடை 110 தொகுதிகளாகத் திட்டமிட்டு, இதுகாறும் 64 தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

அந்த மூன்றுநாள் உரையையும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்து எழுத்து வடிவமாக்கியவர் இலக்கியத் தூதுவர் சிவகுமார் ஆவார் ( 02.05.1986 ). அவ்வுரையைத் தொகுத்து, திருமகள் நிலையத்தார் ‘அண்ணா’ என்ற தலைப்பில் நூலாக (முதல் பதிப்பு – ஆகத்து, 1986; இரண்டாம் பதிப்பு – நவம்பர் 1989) வெளியிட்டார்கள். இன்றைக்கு அந்த நூல்படி ஒன்றுகூட மிச்சமில்லை.

அப்பாவுடன் எந்நேரமும் நிழலாக மிளிர்ந்தவர் திருவையாறு சிவகுமார். அவர்தான் முதன்முதலாக ஸ்ரீராம் நிறுவன இயக்குநர்களான, திருமதி வத்சலா அரங்கநாதனையும், திருமதி அகிலா சீனிவாசனையும் அப்பாவிடம் அறிமுகம் செய்து, பாரதியாருடைய இலக்கியப் போட்டிகளை ஸ்ரீராம் நிறுவனம் நடத்துவதற்குத் துணை நின்றவராவார். தமிழக அரசின் வேளாண் துறையில் 38 ஆண்டுகளாக பணியாற்றிய ‘பாரதிமணி’, 1975 முதல் சென்னை பாரதி இளைஞர் சங்கத்தின் இணைச் செயலாளராகவும், பொறுப்பாளராகவும் பொறுப்பு வகித்து ஆண்டுதோறும் திசம்பர் 11 முதல் ஏழு நாள்கள் பாரதியார் பிறந்த நாள் விழாவை சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடத்தினார். ‘வீட்டுக்கு வீடு பாரதி’ திட்டத்தின்படி, ஒவ்வொரு இல்லத்திலும் பாரதியார் படத்தைத் திறக்க ஏற்பாடு செய்த பெருமையும் ‘இலக்கியத் தென்றல்’ சிவகுமாரைச் சாரும். முன்னாள் முதல்வர் பக்தவத்சலம், முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம், கவிஞர் எஸ். டி. சுந்தரம், புரட்சித் தலைவர், திரு. ஜி. கே. மூப்பனார், இல்லங்களிலும், 1977ஆம் ஆண்டு தமிழக ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி தலைமையில் ஆளுநர் மாளிகையில் பாரதியார் படத்தைத் திறப்பதற்கும், உதகையில், ‘காக்கைக் குருவி எங்கள் ஜாதி’ என்னும் பாரதியார் பாடலைச் சலவைக்கல்லில் அரசு சார்பில் பதிக்கவும், 1980 இல் கங்கை நதிக்கரையில் ‘அனுமன் காட்’ பகுதியில் ‘இன்னறு நீர் கங்கை ஆறு எங்கள்’ என்ற பாரதியார் பாடலை கல்வெட்டில் பதித்து கங்கைக் கரையில் நிறுவுவதற்கும் துணை நின்றார். ‘பாரதி காவலர்’ இராமமூர்த்தி ஆற்றிய பணிகள் ஒப்பற்றவை.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாவேந்தர் பாரதிதாசனைப் பற்றிய அறக்கட்டளை உரையை அப்பா ஆற்றியதை திருவையாறு சிவக்குமார் பதிவு செய்தார். ஆனால், என்ன காரணமோ ! அப்பதிவு நூலாக மலரவேயில்லை ! ‘பாரதி பணிச் செல்வர்’ சிவகுமார் கருநிற மேனியும் சிரித்த முகமும் வெற்றிலைச் சிவப்பும் மணக்க மணக்கப் பேசும் நல்லன்பர்பால் பல கல்லூரி மாணவிகள் ஈர்க்கப்பெற்று அவரின் அன்பால், பண்பால் அக்காலங்களில் அவரின் வழிகாட்டுதலில் மேடைகளில் வீசிய மெல்லிய தளிர்கள் இன்றைக்குப் பாட்டிமார்களாக பெருமிதமாக வாழ்கின்றனர்.

பத்துப்பாட்டில் மனம் பற்றுக !உரைவேந்தரின் உரைத் தொடர் – (ஏ)
திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி ….. 

கடல் நிலவுலகைச் சூழ்ந்து நிற்பது; அந் நிலவுலகு தோன்றுதற்கு முன் தோன்றிய தொன்மையும் இதற்குண்டு; இதனால் இது பார்முதிர்கடல் எனப்படுகிறது. இஃது எப்போதும் நீரறாத நிலையமாதலின் இதனைப் பனிக்கடல் என்றார். அளக்கலாகாத ஆழத்தால் நீலநிறங்கொண்டு தோன்றும் இதன்கண் விடியற்காலத்தில் செஞ்ஞாயிறு தோன்றுவது, நீலமயிலின்மீது செம்மேனியனாகிய முருகன் – காட்சியளிப்பது போன்றிருக்கும். இதன் நலங்கண்டே இந்நூல், ”ஞாயிறு கடற்கண்டாங்கு ஓவற இமைக்கும். சேண்விளங்கவிரொளி” எனக் கூறுகிறது. எத்துணைக் கலங்கள் படரினும் காற்றுத் திரண்டு மோதினும் கலங்காத இக்கடல், முருகன் சூர்மருங்கறுத்தற்கு உள்புக்கபோது கலக்க மெய்திற்றென்றார், கலங்காத கடலையும் கலக்கின முருகன் சூர் மருங்கறுப்பது அருமையானது என்பதற்கு. அதனை அவன் படைமேலேற்றிச் ‘சூர் முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்’ என்றார். முகில்கள் நிலவுலகிற் பரந்து சென்று பெய்யும் மழைநீர்க்கு முதல் இக்கடலே; இதுபற்றியே இது கார்கோள் எனவும் சிறப்பிக்கப்படுகிறது.

கணவீரம் என்பது செவ்வலரிப் பூவுக்குப் பெயர் ; இப்பூ பெருமையும் தட்பமும் உடையது; இதன் நறுமணம் குறித்துக் குறவர் முருகனைப் பரவுமிடத்தே, மாலையாகக் கட்டி வழிபடுகளத்தை ஒப்பனை செய்கின்றனர்.களிற்றின் பெண்ணினம் பிடி எனப்படும். அது களிறு போலக் கொம்புடைய தன்று. இக் களிறும் பிடியும் அருவிவீழும் மலைச்சாரற் காட்டில் காணப்படுகின்றன. அருவியின் தட்பத்தால் பிடியானை குளிர்மிகுந்து நீங்குகிறது.

ஆமா என்பது காட்டுப் பசுவகை; இதன் ஏறு வலிய கோடுகளையுடையது; காட்டில் கொடிய பகைவிலங்குகள் பலவாதலின், அவற்றோடு பொருதற்கென அமைந்திருத்தலின், ஆமா ஏற்றின் கோடுகள் வலியுடைய வெனச் சிறப்பிக்கப்படுகின்றன. “கருங்கோட்டு ஆமா நல்லேறு” என்பது காண்க.
இறால் என்பது தேனடை; வானளவே உயர்ந்த மலைப்பாறைகளில் தேனீக்களால் கட்டப்பெற்றிருக்கும் தேனடை இப்பாட்டில் இடம்பெறுகிறது; நெடிதுயர்ந்து நீனிறங்கொண்டு தோன்றும் நெடுவரையில் தேனிறால் தன் பொன்னிறத்தால் ஞாயிற்று மண்டிலம் போல் காட்சித் தருகிறது.

உளியம் என்பது கரடியைக் குறிப்பது. இதன் உடல் மயிர் மேலே கருமையும் தோலடியில் வெண்மையும் கொண்டு உள்ளே அடியில் வெளுத்து மேலே கருத்துத் தோன்றும் பனைச்செறும்பை ஒத்திருக்கும். கரடியின் அடி உள்வளைந்து காணப்படும்.
முடிப்புரை:- இறுதியாக ஒன்று கூறி இச்சொற் பொழிவை முடிக்கின்றாம்; பரங்குன்றில் உறைதலும், அலைவாயிற்சேறலும், ஆவி நன்குடியில் அசைதலும், ஏரகத்து உறைதலும், குன்றுதோறும் விளையாடலும் முருகன் செய்யும் செயல்வகையென இம்முருகாற்றுப் படை மொழிகின்றது. உறைதற்கு இரண்டிடமும் பிற செயல்கட்கு முறையே ஒவ்வோரிடமும் கூறப்படுகின்றன. அசைதல் என்பதற்கு உரைகாரர் இருத்தல் என்றே உரை கூறுகின்றார். எனினும், முருகாற்றுப்படை கூறுவதையே கொண்டால் உறையுமிடம் பரங்குன்றும் ஏரகமும் என்ற இரண்டுமேயாம். உறையுமிடத்து, பரங்குன்றில் அமர்ந்துறை வன் என்றும் ஏரகத்தில் பெரிதுவந்து உறைவன் என்றும் நக்கீரர் சிறப்பித்துக் கூறுவது குறிக்கத்தக்கது. ஏரகத்தில் உவந்து உறைவதுபோலவே பரங்குன்றில் அமர்ந்த துறைவன் என்பதனால் ஏரகத்தில் அவன் உவத்தற்கேற்ப இருபிறப்பாளர் வழிபாடு செய்யக் காண்பதுபோலும் வழிபாடொன்று பரங்குன்றிலும் நிகழ்வது பெறப்படும். ஆனால், பரங்குன்றில் அகன் வயலில் மலர்கள் மலர் தலையும் வண்டினம் தேனுண்டு கிடந்து சென்று சுனைமலரைச் சூழ்ந்து ஒலித்தலையும் காண்கின்றோம்.

வண்டின் நிகழ்ச்சி யில் வழிபாடொன்று உள்ளுறுத்தப்படுவது இதனால் உணரப் படுகிறது. அவ்வழிபாடு யாது? தாமரையைச் செல்வர் மனையாகவும், தாமரையில் துஞ்சிய வண்டினைச் செல்வராகவும், வைகறையில் நெய் தலை யூதுவது செல்வர் வைகறையில் எழுந்து நீராடிச் செல்வதாகவும், அவ்வண்டினம் சுனைமலரை யடைந்து ஒலிப்பதைச் செல்வர் பரங் குன்றடைந்து முருகனை வழிபடுவதாகவும் கொண்டால், மதுரைமாநகரிடத்து வாழும் செல்வப் பெருமக்கள் நாட் காலையில் எழுந்து நீராடிப் பரங்குன்றம் சென்று முருகப் பெருமானை வழிபடக் கண்டு அவன் அங்கே அமர்ந்து உறைகின்றான் என்பது புலனாகிறது. ஆகவே, ஏரகத்தில் முத்தீச்செல்வர் வழிபாடும் பரங்குன்றில் மதுரைச் செல்வர் வழிபாடும் நிகழ்வது காணலாம்.

மேலும் முருகனைத் தேவரும், முனிவரரும் பதினெண் கணங்களும், எண்வகை வசுக்களும் மக்களுட் செல்வரும் இருபிறப்பாளரும் குறவரும் வழிபடுவதும், மகளிருள் சூரர மகளிர் முதல் குறவர் மகளிர் ஈறாகப் பலரும் வழி படுவதும், உயர்ந்தோர்க்குப் பரங்குன்றம் முதலிய இடங்களில் எழுந்தருளி அவர் செய்யும் வழிபாட்டையேற்று உவந்தருளும் முருகன், குறவர் வெறியயர்களத்தும் குற மகளிர் குரவைக் கூத்தாடுமிடத்தும் எழுந்தருளி அவர் மகிழக் கலந்து தலைக்கை தந்து விளையாடுவதும் காணும் நமக்கு முருகப்பெருமான் எளியார்க்கெளியனாய் எழுந் தருளி இன்பம் அளிக்கும் இனிய பெருமான் என்பது தோன்றி ஊக்கம் தருகிறது.

இவ்வாறு அறிவுக்கு இன்பமும் வழிபாட்டில் ஊக்கமும் பயக்கும் காட்சிகள் பலவற்றை இம் முருகாற்றுப் படை நமக்கும் காட்டி உலகியல் வாழ்வின் புன்மையையும் சொல்லோவியம் செய்துமெய்யுணர்வுப்பேற்றின்கண் நம்மை ஈடுபடுத்தி நிற்கிறது. புறக்காட்சிகளால் நம் உள்ளத்தைக் கவர்ந்து அகக்காட்சிகளால் முருகனுடைய திருவருட் காட்சிகளைக் கண்டு இன்புறுவித்து அவற்றின் வாயி லாக நம்மை முருகன் திருவடிக்கண் ஆற்றுப்படுத்தும் பெருமைவாய்ந்த திருமுருகாற்றுப்படையின் நலம் ஆயுந்தோறும் இன்பந் தரும் இயல்பிற்றென்பது தெளிவாம்.

58  –  “நாளிதழால் வளரும் நல்லறிவு”

பேரறிஞர் அண்ணாவின் மூன்று நாள் அறக்கட்டளைப் பொழிவுக்குப் பிறகு, பல நண்பர்கள் அப்பாவைச் சூழ்ந்து கொண்டு தாங்கள் ஓர் இலக்கிய இயக்கப் பாசறையைத் தொடங்க வேண்டும், இளைஞர்கள் பலரை ஊக்குவித்து வருங்காலத் தலைவர்களாக மாற்ற வேண்டும் என்று ஆர்வமாக வேண்டினர். அரசுப் பொறுப்பில் இருப்பதனால் மன்றம், இயக்கம் எல்லாம் நானெப்படி நடத்துவது என்றவுடன், அண்ணல் அருசங்கர், புலவர் வீரமணி, திருமதி சாவித்திரி இராகவேந்திரா போன்றோர் ‘நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எங்களை வழிநடத்தினால் போதும்’ என்று பேசிக் கொண்டார்கள். பொற்குடத்திற்குப் பொட்டு வைத்தாற்போல வட சென்னை யிலுள்ள அண்ணல் அருசங்கரின் தொழில் வளாகத்தில் முதற் கூட்டம் தொடங்கப் பெற்றது. அமைப்புக்குச் ‘செயல்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். பல நிலைகளில் எழுச்சிக் கூட்டங்கள், சிந்தனை மன்றங்கள் நடத்தப்பட்டன.

திருமதி சாவித்திரி இராகவேந்திராவின் இல்லத்தில் (நந்தனம் ‘டவர்’ அடுக்ககத்தில்) நடைபெற்ற செயற்கூட்டங்களில் பல நல்லிளைஞர்கள் வருகை தந்ததும், அவருடைய கணவர் டாக்டர் இராகவேந்திரா, செல்வ மகள்கள் குந்தவை மற்றும் ஜானவி விருந்தோம்பியதும் இன்றும் பசுமையாக என் நெஞ்சில் நிழலாடுகிறது. அவர்கள் இல்லத்தில் உதவியாளராக இருந்த தம்பி குணசேகரன் இன்றைக்கு தலைமைச் செயலகத்தில் பதிவுரு எழுத்தராய்ப் பணியாற்றுவது அவர்களின் சிறந்த வளர்ப்புக்குச் சான்றாகும். சில திங்களுக்குப் பிறகு, இலக்கியக் கூட்டத்தில் பங்கு கொண்டு அப்பா அரங்கத்தை நீங்கி மகிழுந்தில் ஏறும்போது, வேறுசில நண்பர்கள் ‘செயல்’ என்னாயிற்று என்றார்கள். அப்பா நகைச்சுவையாக, ‘செயல் மறந்து வாழ்த்துதுமே!’ என்று சிரித்துக் கொண்டே சொல்லிச் சென்றார். 
தொடர்ந்து பல நூலாசிரியர்களின் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்த தருணத்தில், அப்பா என்னை அழைத்து ஆங்கில நாளிதழான இந்து நாளேட்டினை நாள்தோறும் படிக்குமாறும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஆங்கிலக் கட்டுரைகளை உரக்க வாசிக்குமாறும் வலியுறுத்தினார். இந்து நாளிதழை எப்படிப் படிக்க வேண்டுமென்று வரையறையொன்றைக் கட்டமைத்தார். குறிப்பாக, முதல் பக்கம், நடுப்பக்கம், ஆசிரியர் உரை (Editorial), வாசகர் கடிதங்கள் (Letters to Editor), சமயம் குறித்த கையகலக் கட்டுரை, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், குறிப்பாக ஆங்கிலக் கடல் கே.ஆர். சீனிவாச ஐயங்கார், திருமதி பிரேமா நந்தகுமார், திரு டி. ஆஞ்சநேயலு, திருமதி கௌரி இராம நாராயணன், திரு. ஆர்ட் புக்வால்டு, என். இராம் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்குமாறு வலியுறுத்தியிருந்தார். அக்கட்டுரைகளில் உள்ள சிந்தனைச் சுடர் மணிகளை அங்கிங்கெனாதபடி என்னுடைய குறிப்பேட்டில் பதிவிட்டிருந்தேன். 
அப்பா சொல்லாததைச் செய்வதுதானே மகனின் ஆர்வமாகும். அங்ஙனம் கடைசிப் பக்கங்களில் உள்ள விளையாட்டுச் செய்திகள் மீதும், எனக்கு அளப்பரிய ஆர்வமுண்டு. விளையாட்டுப் பிள்ளையல்லவா! குறிப்பாக, கிரிக்கெட் விளையாட்டின்மீது அளப்பரிய ஆர்வம். இந்தியக் கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னர் சுனில் கவாஸ்கர் முப்பத்து மூன்றாவது சதம் எடுத்த ஆங்கிலக் குறிப்பின் (16.10.1986) தமிழாக்கம் பின்வருமாறு:-“மட்டைப்பந்தாட்டத் தொடர் போட்டியின் அடுத்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைந்தது. மட்டைப்பந்தாட்டத்தின், இந்திய நட்சத்திர வீரர் தனது 33ஆவது சதத்தை அடிக்கக் கூடும் என அனைவரும் எதிர்நோக்கிக் காத்திருந்த நாளது. தொடர் போட்டியின் இரண்டாவது நாளின் இறுதியில், இந்திய நட்சத்திர வீரரான கவாஸ்கர் தனது 30ஆவது சதத்தை அடித்த விதமும் அவர்தம் திறனும் எங்களை அவ்வாறு காத்திருக்கச் செய்தன. தனது உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தித் தன்னை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு பந்தையும் திறன்மிகு வகையில் கையாளும் திறன் பிற விளையாட்டு வீரர்களுக்குக் கலங்கரை விளக்காய் ஒளி காட்டியது. கவாஸ்கர் அவர்களின் மணிமகுடத்தில் மற்றொரு மாணிக்கக் கல்லாக இந்த 33-ஆவது சதத்தை பதிப்பதற்கு, அவர் பல பந்துகளை சந்திக்கக் கூடும் எனக் கருதினோம். தன்னை நோக்கி வீசப்படும் பந்தை அவர் கையாளும் முறை மிகவும் புதுமையாக இருந்தது. அவர்தம் சிறப்பு வாய்ந்த மற்றும் தனித்துவமான விளையாட்டுத் திறனும் அவர் கொண்டிருந்த சுறுசுறுப்பும், வரம்புக் கோட்டை அவர் அடையும் பாங்கும், மட்டைப்பந்தாட்டத்தில் உறுதியாக அவரைச் சிகரங்களை அடையச் செய்யும் என்ற நம்பிக்கை ஆர்வலர்களை மகிழச் செய்தது.”

அவ்வண்ணமே, 18.10.1986-ஆம் நாளன்று இந்து நாளிதழில் வரப்பெற்ற ‘மாணவர்கள் போராட்டம்’ குறித்த கோவையைச் சேர்ந்த நல்லன்பர் கே.இராமராசனின் ஆங்கிலக் கடிதத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:-“பருவகால மழை கூடப் பொய்த்துப் போகலாம், ஆனால், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் போராட்டம் மட்டும் உறுதியாக நடந்தே தீரும். பெரும்பாலும், குறிப்படத்தக்க எண்ணிக்கையிலான, மாணவர் சங்க நிருவாகிகளால்தான் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. உண்மையில், பெரும்பாலான மாணவர்கள் இத்தகைய போராட்டங்களை ஆதரிக்கின்றனரா என்றால், நிச்சயமாக இல்லை என்பதே இதற்கான பதில். அவ்வாறு அவர்கள் அந்த போராட்டங்களை ஆதரிக்கின்றனர் எனில், அப்போராட்டங்கள் நடந்த நாட்களில் கல்லூரிகளில் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்புகளில், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதே சான்றாகும். மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு முன் உதாரணமாய் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில், போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்த சில மாணவர்களும், இத்தகைய போராட்டம் நடப்பதற்கு நான்தான் முக்கிய காரணம் என்று பிறர் தன்னை உயர்வாக நினைக்கவேண்டும் என்று கருதும் மாணவர்கள்கூட இந்தச் சிறப்பு வகுப்புகளில் சீராகப் பங்கேற்றதைக் காண இயன்றது. இது இரட்டை வஞ்சகமாகும். அதாவது போராட்டம் நடத்துவதற்கான காரணத்திற்கும், மாணவர்களுக்கும் இழைக்கும் மாறான இரட்டைப் போக்காகும். இத்தகைய நாள்களில், கல்லூரிகளில் மாணவர்கள் வருகை கட்டாயமாக்கப்படவில்லையெனில், இந்தச் சிக்கலுக்கு ஓரளவு தீர்வு காண இயலும். மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில், வருகைப் பதிவேடு எனும் முறைமை கிடையாது. விருப்பமுள்ள மாணவர்கள் வகுப்பில் கலந்து கொள்ளலாம். வகுப்பிற்கு வருவதற்கு விருப்பமில்லாத மாணவர்கள், அவர்களுக்கு பயனளிக்கக்கூடும் என்று தாம் கருதும் வகையில் தங்கள் நேரத்தைச் செலவிடலாம்.

வகுப்பறையைச் சுற்றியுள்ள நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து விரிவுரைகளைக் கேட்டால் மட்டும் அறிவைப் பெற்றிட இயலாது. மிகவும் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன், வகுப்பில் இருப்பதை விட நூலகத்தில் ஒரு மணி நேரம் செலவிட்டால், அது தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதலாம். செய்முறை வகுப்புகள் நீங்கலாக, ஏனைய அனைத்து வகுப்புகளும் வருகைப்பதிவேடின்றி நடத்தப்படலாம், மாணவர்கள் விரும்பினால் வகுப்புகளுக்கு வரலாம், இல்லையெனில் அவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டாம் எனும் இந்த நடைமுறையை நாம் பின்பற்றினால், போராட்டங்கள் நடப்பதற்குக் காரணமாக விளங்கும் மாணவர்களின் பிடியை நாம் தளர்த்தலாம், போராட்டக் காலத்தின்போதும் அனைத்து மாணவர்களும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்றதே இதற்கான சான்றாகும்.”

ஆங்கிலவாணர் ஆர்ட் புக்வால்டு ‘Money’ என்ற தலைப்பில் எழுதிய 03.11.1986-ஆம் நாளிட்ட கட்டுரையில் இடம்பெற்ற கருத்து மணிகளின் தமிழாக்கம் பின்வருமாறு:-“ஏழைகளுக்குப் பணம் இவ்வுலகை இயக்கும் பெரிய சக்தியாகும். நாளொன்றுக்கு மூன்று வேளை உணவு எனும் தங்கள் கனவை நனவாக்கும் வல்லமை பெற்ற ஆயுதமாகும். நடுத்தரக் குடும்பத்தினருக்கு, அவர்கள் விரும்பும் வாழ்க்கை முறையை அடைய உதவும் மைல்கல் பணமாகும். அவர்களின் இலட்சியத்திற்கும் எதிர் காலத்திற்குமான அடிப்படை தேவைப் பணம் தான். செல்வந்தர்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தரும் ஒரே காகிதம் பணம்தான். தங்கள் மனநிறைவிற்கான கடவுச்சீட்டு… உங்களுக்கு? சிந்தியுங்கள் நண்பர்களே!”

அதேபோல, வேறு ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்: “நண்பர்களால் பயனேது மில்லை. என் குடும்பம் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. தனிமையில் அமர்ந்து ஆழ்ந்து சிந்திப்பதற்காக, மதிகேடான இந்த கூட்டத்திலிருந்து விலகி இருக்க வேண்டியதொரு சூழலை ஒவ்வொரு மனிதரும் கண்டிருப்பார்கள். வாழ்க்கை என்றால் என்ன என்பதையும், தன்னைத் தானே அறிந்து கொள்வதற்கும், உங்கள் மீது முதலில் நீங்கள் இரக்கம் கொள்ளுங்கள் அல்லது, மன உறுதியுடன் வாழ்க்கையோடு துணிந்து போராடுங்கள். நீங்கள் நீங்களாகவே இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள் – அவ்வாறு நான் வாழ ஏன் தடையாக உள்ளீர்கள்? எனது தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். எனது நலன் கருதியே நீங்கள் அறிவுரை வழங்குகிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால், நான் நானாகாவே வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ள விழைகிறேன்.

வாழ்க்கைப் பாதை என்பது மிகவும் குறுகிய மற்றும் நீண்டதொரு பாதையாகும். கடும்பாறைகளும் முட்களும் அதில் நிரம்பியிருக்கும். சிலர் அதனை நரகம் என்று அழைப்பார்கள். ஆனால், வெற்றிக்கான ஒரே பாதையாகும். ஒருவேளை, அவனது வாழ்க்கையை மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்பு ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்டால், அவர் அதனை ஏற்பாரா? அவர் வாழக் கருதிய முறையில், தவறுகள் ஏதுமின்றி, இதய வலிகள் அனைத்தையும் தவிர்த்து, அவர் விரும்பியதொரு வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர் அதனை ஏற்றுக் கொள்வாரா? எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் கூறுவேன். நீங்களாக இருந்தாலும் சரி, நானாக இருந்தாலும் சரி, இளமை என்பது நம் வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டும் தான் வந்துபோகும் வானவில்லாகும்.”

‘மாதிரிப் பள்ளி’ அறிமுகம் தொடர்பாக 86-களில் அதிக விவாதம் நடைபெற்றது. அதுகுறித்து வந்தவொரு கட்டுரையின் தமிழாக்கத்தைக் காணலாம்:“நவீன பள்ளிகள், தங்கள் பள்ளிகளில், தேசிய ஒருமைப்பாட்டை முனைப்புடன் ஊக்குவித்து வருகின்றனவா? அங்குப் பயிலும் மாணவர்கள் உண்மையிலேயே ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் திறன்மிக்கவர்களாகவும் உள்ளனரா? உண்மையில், அங்கு எவ்வித முறைகேடுகளும் நடப்பதில்லையா? பழைய மெக்காலேயின் கல்வி முறையை “தரம் நிறைந்த கல்வி – பரவல் மற்றும் தேசிய ஒருமைப்பாடு” என்று புதிய தலைப்பிட்டு இன்றைய நவீன பள்ளிகள் வழங்கி வருகின்றனவா? அல்லது தமிழர்கள் மற்றும் வங்காளர்களிடையே இந்தி மொழியைத் திணிப்பதற்கான முயற்சி இதுவா? மாய வித்தைகளில் ஈடுபடுபவர்கள், பிறர் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, “ஓம் சூம் சீபூம்பா” போன்ற சில போலி மந்திரங்களை உச்சரிப்பர்.

பிறரைக் குழப்புவதற்காக அல்லது ஏமாற்றுவதற்காக இத்தகைய தேவையற்ற செயல்களில் சிலர் ஈடுபடுவர். அரசியல் சூழ்ச்சி குறித்து என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.ஒருவரது தனிப்பட்ட ஆதாயத்திற்காகச் சிக்கலில் இருக்கும் நபர்களை பயன்படுத்திக் கொள்ள நினைப்பதை, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது என்பர். இவர்களும் இதனைத்தான் செய்து வருகின்றனர். நம் “தமிழ் உடன் பிறப்புக்களின் பாதுகாப்பு” எனும் பெயரில் எத்தகையதொரு சமூகத்தை நாம் உருவாக்கி வருகிறோம் என்பதை இப்பொழுதாவது தமிழக மக்களுக்கு நலம் புரிந்திடச் செய்ய வேண்டும்.”

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி…….
திருமுருகாற்றுப் படையில் ,–அங்குசம், உரு (ரூபம்), கணம், சதுக்கம், சந்தி, சிரை, பலி, மகரம், மந்திரம், மனன், முகம், வட்டம், விடை என்றற் போல மிகச்சில வடமொழிச் சொற்களே வந்துள்ளன: ஏறக்குறைய இரண்டாயிரம் சொற்கள் கொண்ட இப்பாட்டில் நூற்றுக்கு ஒன்று வீதம் வடமொழி வந்துள்ளதெனலாம்: ஆகவே, செந்தமிழே நிறைந்து இயற்கைப் புனைவு மிகுந்து இந்நூல் மிகச்சிறந்து விளங்குகின்றது என்க. பேரறிஞர் ‘உபய வேதாந்த’ வை. கோபால கிருஷ்ணமாசாரியாரின் மாணாக்கரும், விவேகாநந்தர் கல்லூரித் தமிழ்த்துறைப் தலைவராகத் திகழ்ந்த பேராசிரியர் சி. ஜெகன்னாதச்சாரியர் இயற்றிய பத்துப்பாட்டு ஆராய்ச்சியுரையின் அருமை கருதி இதனைச் சேர்த்துள்ளேன்.
திருமுருகாற்றுப்படையுடன் தொடர்ந்து ஆர்வலர் ஓதிவரும் வெண்பாக்கள் சொற்றெறிவும், பொருட்பொலிவும் பொதிந்தன.பகுதி – 1குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்புன்றலைய பூதப் பொருபடையாய் – என்றும்இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறேஉளையாயென் னுள்ளத் துறை. குன்றம் எறிந்தாய் – கிரௌஞ்ச மென்னும் மலையைப் பிளந்தவனே! குரை கடலில் – ஒலிக்கின்ற கடலினிடையே புக்கிருந்த, சூர் – மாமர வடிவான சூரபன்மனை, தடிந்தாய் – வீழ்த்தியவனே! புன் தலைய பூதம்-புற்கென்ற தலையினையுடைய பூதத்தை, பொரு – போர் செய் தழித்த, படையாய் – படைக்கலத்தை ஏந்தியவனே ! என்றும் இளையாய் – எக்காலத்தும் இளமை குன்றாத குமரனே ! அழகியாய் – பேரழகு பொருந்தியவனே ! ஏறு ஊர்ந்தான் ஏறே – இடபவாகனத்தையேறிச் செலுத்தும் சிவபிரானுக்குச் சிங்கவேறுபோன்ற மைந்தனே ! ( நீ ) உளையாய் – எஞ்ஞான்றும் நிலை பெற்றிருப்பவனாய், என் உள்ளத்து – அடியேன் மனத்தில், உறை – தங்கியிருப்பாயாக.
இதனால் புலவர் குமரனைத் தம்முள்ளத்துக் கோயில் கொள்ளுமாறு வேண்டுகிறார். எறிந்தாய் முதலிய விளி ஆறும் அறுமுகனுக்கு ஏற்ப வந்தன போலும்.

‘யசோதையிளஞ்சிங்கம்’, சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்’ என்பன போல, ஈண்டு ‘ஏறே’ என்பது சிங்கவேற்றைக் குறித்தது. இனி, விடையெனக் கொள்ளலுமாம்; ”மழவிடையே! திருமாமடிகட்கென வைத்த கௌத்துவமே’ என்று குமரகுருபரர் விடையாகக் கூறியிருத்தலுங் காணலாம். முருகனாதலின் இளையாய் அழகியாய் என்றது. ”என்றுமழியாத விளமைக்கார” என்றது திருப்புகழ். உளையாய் – முற்றெச்சம். உளையாய் உறை என்றமையால், நீங்கா துறைதல் வேண்டப்பட்டது. 
இனி, குன்றமெறிந்த கதை :- சிவபிரானின் இளைய குமாரனாய்த் தேவர் வேண்டுகோளால் அசுரர்களை யொழித்தற்குத் தேவசேனாபதியாம் பொருட்டு அவதரித்த முருகக் கடவுள், சூரபதுமனைப் பொருது அழித்தற்குச் செல்லும் வழியிடையே, கிரௌஞ்சமென்னும் அசுரன் பெரிய மலை வடிவங் கொண்டு அவனை நலிவதாக எதிர் வந்து நிற்க, அதன்மேல் அப் பெருமான் தனது தெய்வத்தன்மையுள்ள வேற்படையை யேவி அதனைத் துளைத்து அழித்திட்டானென்பது. இனி, பரசுராமனும் சுப்பிரமணியனும் பரமசிவனிடம் வில் முதலிய ஆயுதப்பயிற்சியைச் செய்து முடித்த பின்பு, இவர்களுள் உயர்வு தாழ்வு அறியும் பொருட்டுச் சிவபிரான் உமாதேவியின் முன்னிலையிலேயே இவர்களுக்குக் கிரௌஞ்ச மலையைச் சுட்டிக்காட்டி ‘இதனைத் துளைத்திடும்’ என்று நியமிக்க, பரசுராமபிரான் அம்பெய்து அதனைத் துளையிட்டுக் காட்ட, முருகக்கடவுள் வேலாயுதத்தை வீசியெறிந்து அம்மலையைப் பிளந்திட்டன னென்றும் கதை கூறப்படும். சூர் தடிந்த வகையை ” மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து” என்ற தன் உரையிடத்துக் காண்க. பூதம் – நக்கீரனைச் சிறைவைத்த பூதம். பொருபடை – வேல்; கதாயுதம் எனினுமாம்.

பூதத்தைக் கதா யுதத்தால் மோதி முடியைத் தகர்த்துக் கொன்றனர் என்பர்; இனி, வேல்வகுப்பில் ” பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப் புலவனிசைக் குருகி வரைக்குகையையிடித்து வழி காணும்” என்றும், ‘மலைமுகஞ் சுமந்த புலவர் செஞ்சொல்கொண்டு வழி திறந்த செங்கை வடிவேலா’ என்றும் வருவன நோக்கி வேலெனலாம். மேலை வெண் பாவில்” கற்பொதும்பிற் காத்ததுவும்… வேல்’ என வருதலும் நோக்குக.

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் – இன்றென்னைக்கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும்மெய்விடா வீரன்கை வேல்.குன்றம் எறிந்ததுவும் – கிரௌஞ்சகிரியைப் பிளந்ததும், குன்ற – பகைவர் ஒழியும்படி, போர் செய்ததுவும் – போரிட்டதும், அன்று போரிட்ட அக்காலத்து, அங்கு – அவ்விடத்து, அமரர் இடர் தீர்த்ததுவும் – தேவர்களின் துன்பத்தைப் போக்கியதும், இன்று – இற்றைவரை, என்னை – அடியனாகிய என்னை, கைவிடா நின்றதுவும் – விட்டொழியாது நின்றதும், கல் பொதும்பில் காத்ததுவும் – கல் முழையினிற் சிறையினின்று காப்பாற்றியதும், (எதுவெனில்), மெய் விடா வீரன் – சத்தியத்தினின்றும் பிறழாத வீரனாகிய முருகனின், கை வேல் – கையிடத்துள்ள தாகிய வேலாகும். இதனால், முருகன்கை வேலின் சிறப்புக் கூறப்பட்டது. அமரிடர் தீர்த்தது – தேவசேனாபதியாகி அசுரர்களையொழித்தமையாலாகும். கற்பொதும்பிற் காத்தது – பூதத்தினின்று. ‘எறிந் ததுவும்’, ‘செய்ததுவும்’ எனக் குற்றியலுகரம் ஒரோவிடத்துக் கெடாமல், வகரவுடம்படு மெய்பெற்று வந்தது. —

unread,16 May 2021, 22:22:34to மின்தமிழ்59  –  “எழுச்சியூட்டிய ஈடில்லாப் பேராசிரியர்”
முனைவர் ஔவை அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,தமிழ்நாடு அரசு=================================================

சென்னைப்பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் இரண்டாம் ஆண்டு பயிலும் போது, சென்னை வானொலி நிலையத்தில் பேசுவதற்கான வாய்ப்புகள் பல வந்தன.  அதில், இரண்டு முறை நூல் திறனாய்வு உரை நிகழ்த்தும் நெறியில் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தேன்.  
கல்லூரிக் காலத்திலேயே என் நெஞ்சைக் கவர்ந்த பேராசிரியப் பெருமகனார் அறிஞர் க.ப. அறவாணன் (1941 – 2018) ஆவார்.  அவரும், அவருடைய துணைவியார் பேராசிரியர் தாயம்மாள் அறவாணனும் எங்கள் பெற்றோரிடம் மிகுந்த பரிவும் பற்றும் கொண்டவர்கள் ஆவார்கள்.  பேராசிரியருக்கு இணையாக பரிவு பொங்கும் தாயம்மாள் அவர்கள் என்னை அன்பு பொங்க ‘அருள்’ என்று அழைப்பதை என்றும் மறப்பதில்லை.
அறிஞர் அறவாணரின் சிந்தனைக் கழனியில் மலர்ந்த பூக்கள் நாடெங்கும் நறுமணம் வீசுகின்றன. தமிழ், ஆங்கிலம், மானிடவியல், மரபியல், உளவியல், பண்பாட்டு ஆய்வு எனப் பல்வேறு நெறிகளில் ஆசிரியரின் புலமை வனப்பூட்டுகிறது.  அறிஞர் அறவாணன் புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், புகழோங்கி விளங்கினார். 

நெல்லையிலுள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணை வேந்தராக அவர் செய்த புதுமைகள் இளைஞர் நல்வாழ்வுக்கு ஆற்றல் அளித்தன.  பேராசிரியர் அறவாணனின் உடையும் அவர் அணிந்திருந்த தொப்பியும் மிகக் கவர்ச்சியான தோற்றப் பொலிவோடு அவர் மிளிர்ந்ததை நாம் எல்லோரும் அறிவோம்.  அந்நாட்களில், செனகால் நாட்டில் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றிய மாண்பும், அவரின் நூலறிவும், சொற்பொழிவு மாட்சியும் மாணவர்களை வியக்க வைத்தன.  தமிழ்த்துறை மாணவர்கள் என்றால் சங்க இலக்கியம் பயில்வது, புதுக்கவிதை எழுதுவது, எளிய உடை அணிவது என்ற வரம்பை உடைத்தெறிந்து, இலயோலா கல்லூரியில் முதன்முறையாகத் தமிழிலக்கிய மாணவர்களுக்குத் தமிழ்த் தட்டச்சும், சுருக்கெழுத்தும், திரைப்படப் பயிற்சியும், நாடகக் கலையையும் அறிமுகப்படுத்திய ஒரே பேராசிரியர் அறிஞர் அறவாணன் ஆவார். 

ஆல்போல் தழைத்து அறிவுத் தலைமை பெற்ற பேராசிரியரின் மருமகள் முனைவர் வாணி சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் பேராசிரியராக அணி செய்கிறார்.  பேராசிரியர் வாணியிடம் மண்டியிருக்கும் நூலாயும் திறனும், நுண்ணிய புலமையும் கருத்தரங்கில் அவர் படித்த கட்டுரைகளில் பளிச்சிடுகின்றன.  பேராசிரியர் அறவாணன் மறைந்தபொழுது, அவர் குடும்பத்தினர் நடத்திய இரங்கல் கூட்டத்திற்குத் தன்னுடைய சீருந்தைத் தானே ஓட்டி என் அப்பாவை கூட்டத்திற்கு அழைத்துச் சென்றது என் நினைவினின்று என்றும் நீங்காததாகும்.

19.11.1990-ஆம் நாளன்று பேராசிரியர் க.ப. அறவாணனின் ஆற்றலால், அறிவால், ஆழ்ந்த அனுபவத்தால், மொழி மானமும், இனமானமும் ஒருங்கே ஒளிர்ந்த ஆசிரியரின் நூற்கனிதான் ‘தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்’ ஆகும்.  அந்நூலினைத் திறனாய்வு செய்திட சென்னை வானொலி நிலையத்தார் வாயிலாக வாய்ப்புக் கிடைக்கப் பெற்றதில் எல்லையில்லாத மகிழ்ச்சியடைந்தேன்.

அந்நாளில் நான் படித்த திறனாய்வு உரை பின்வருமாறு:-  “நூலுக்கு நுழையும் முன் முகிழ்க்கின்ற கருத்துக்கள்.  கலை, கல்வி, பண்பாடு, நாகரிகம் இவை பற்றி எல்லாம் நிறையப் பேசுகிறோம். எழுதுகிறோம். ஏன் அவ்வப்போது எண்ணுகிறோம். ஆனால் செயல் அளவில் இவை தொடர்பாக நம்மிடம் உள்ள ஏழைமைகள் அல்லது பற்றாக்குறைகள் தான் அதிகம்.  இந்த இடைவெளியை நம்பகக் குறைபாடு என்கிறார்கள்.

இந்த நூலை ஒருமுறை முழுக்கப் படித்தால் நாம் அறிவது, ஆழ எழுதுவது, அழுத்தமாகச் சொல்வது, வாழ வழி காட்டுவது, வரிக்கு வரிக்கு நாட்டு வளர்ச்சிக்கு உரமூட்டுவது என்னும் நான்கு தூண்களுக்கு மேல் சிந்தனை மண்டபத்தை அமைத்துக் காட்டுகின்ற பேரறிவுத் திறனைப் பாராட்ட வேண்டும்.

கருத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள் நம் நாட்டில் சிலர்.  ஆனால் காரணம் தெரியாமல் கண்ணீர் சிந்துபவர்கள் பலர். எண்ணத் தெரியாதவர்களும் பலர். எதையும் பண்ணத் தெரியாதவர்களும் பலர் என்ற நிலைமையைக் வளர்த்துக் கொண்டிருக்கும் நமது மக்களுக்கு எதிர்காலப் பெருமிதம் என்ற வாயில் திறக்கின்ற ‘சிந்தனைக் கோயில்’ இந்நூல் எனலாம்.

இந்நூலில் ஆசிரியரின் பார்வையை விட அவர் கொண்ட ஆழ்ந்த நோக்கு எவரிடமும் காணாத சிறப்பாக உள்ளது.  ஏனெனில் பார்வை வேறு; நோக்கு வேறு;  பார்வை என்பது பொதுவாகப் பட்டுத் தெரிப்பது.  நோக்கு என்பது குத்தி நிலைப்பது. ஆகப் பண்பாட்டு வீழ்ச்சியை மைய மண்டபமாய் கொண்டு இந்நூலை அணுகலாம்.

நூலின் நுழைவாயிலில் ஆசிரியர் தன்னையும், இந்த மண்ணையும் விழிக்க வைத்து விழிமூடிய வெண்தாடி வேந்தருக்கு இந்நூல் காணிக்கை என்கிறார்.   எளிமை கண்டு இரங்குவதும், சிறுமை கண்டு பொங்குவதுமான பெரியாரின் தொண்டன் என்று ஆசிரியர் தன்னுடைய முகவரியை அடையாளம் காட்டுகிறார்.  நூலுக்கு அடிநாதமாய் 33 நூல்களைத் துணையாக வைத்து இந்த நூலைப் படைத்திருக்கிறார்.

இந்த நூல் 1985ல் திருச்சி சூசையப்பர் கல்லூரியில் இருந்து அருள் திரு. சி. கே. சுவாமி பெயரில் அறக்கட்டளைச் சொற்பொழிவாக எழுந்ததாகும்.  ஒரே வரியில் இந்த நூலால் ஏற்படுகின்ற எண்ணம் என்னவென்றால் “தன் நோயை அறிந்திருக்கும் நோயாளியை விட தனக்குள்ள கொடும் நோயையை அறியாது இருக்கும் ஒருவனுக்கு அண்மையில் அவனுக்கு நிகழவிருக்கும் ஏதம் மிகப்பெரிதாக இருக்கும்.  எதிர்பாராததாகவும் இருக்கும்.  பண்பாட்டுச் சீரழிவு என்ற கடும் புற்றுநோய் தமிழினத்தின் எலும்புக்கூட்டை எல்லாம் உருக்கிக் கொண்டிருக்கிறது என்று தவிக்கிறார் ஆசிரியர்.

தமிழரைப் பற்றி தமிழுக்கு உள்ளாகவும் தமிழர்க்கு உள்ளாகவும் இருந்து பார்த்ததை விட, அவற்றிற்கு அப்பால் இருந்து காண்பது என்பது நேருவின் (Discovery of India) பார்வைக்கு நிகராக இந்நூலை நிற்க வைக்கிறது.  இந்நூலை (Discovery or Recovery of Tamil Culture) என்று கூடச் சொல்லலாம்.

உலக இனங்களிலேயே தமிழினம் தாழ்ந்த இனமாக இன்று உள்ளது.  இப்பார்வையைச் சமூகம், பொருளியல், அரசியல் என்று முத்திற வகையில் நோக்கலாம்.  தமிழர்களிடம் மலிவாக பேசப்பெறும் பாலுறவுக் கொச்சைச் சொற்கள் இக்கொடுமையைத் தெளிவுறுத்துகின்றன.  தமிழ்ப் பண்பாடு பேசப்படும் சொற்களில் துல்லியமாகத் தெரியும் கல்லூரி இளைஞர்களிடம் சொல்லுக்குச் சொல் இழிசொல் நடமாடுவதைக் கேட்கும் அவலத்தைப் பாருங்கள்.  அது போல 1987-ஆம் ஆண்டு, ‘Sunday’ இதழில் தமிழ்நாட்டு நடிகர் உருவம் பொறித்த சுவரொட்டிகளைச் சிற்றூர்ப் பெண்கள் ஓரிரவில் அதன் மேல் படுத்து உறங்குவதற்கு ஒரு ரூபாய் வாடகை கொடுத்துப் பெறுவதற்கு போட்டியிட்டார்களாம்.
அதுபோல, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 2500-க்கும் மிகுதியான திரையரங்குகள் உள்ளன.  எங்கும் மிகுதியான சாராயக்கடைகள், அதிகமான குடியர்கள் பெருகியுளனர்.  வள்ளலாரின் அருட்புகழை இயம்புகின்ற தருணமிது.  சென்னையில் தான் காட்டுப் புலிகளின் கொடுமை அஞ்சி நம்மிடம் நிழல் தேடி வந்த விலங்குகளின் கசாப்புக் கடைகள் உள்ளன.  நோயற்ற வாழ்விற்குப் பேரணி நடத்துகின்ற நம் நாட்டில்தான் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாம்.
அதேபோல கல்வியறிவில் நாம் தான் அளவில் குறைவு. பொய் சொல்வதில் நடந்த போட்டியில் நாம் தான் பெரிய பொய்யர் என வெற்றியும் பெற்றோம். இடைவிடாமல் நயாகரா அருவி போல இரவு பகலாக 200 மணி நேரம் தொடர்ந்து பேசியவர்தான் கடலூரைச் சார்ந்தவர்.  இவையன்றிப் பொது இடத்தில் எச்சில் துப்புவது, மூக்கு சிந்துவது, குப்பையை அடுத்த வீட்டில் கொட்டுவது, எதிர் வீட்டுச் சுவர் ஓரம் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது, புறம் பேசுவது முதலான சில அல்ல, பல பண்பாட்டுக் குறைகளுக்கு அவலத்தைத் தேடித் தரும் சிறுமை நமக்கு உண்டு.  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பரிசுச் சீட்டுகள் 80 விழுக்காடு நம் மாநிலத்தில் மட்டும் விற்பனை ஆகின்றன.”

திறனாய்வு உரை அடுத்த வாரமும் தொடர்ந்து வரும்.——பத்துப்பாட்டில் மனம் பற்றுக!திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி …….. 

பேரறிஞர் ‘உபய வேதாந்தம்’ ‘உரைச் செம்மல்’ வை. கோபால கிருஷ்ணமாசாரியாரின் மாணாக்கரும், விவேகாநந்தர் கல்லூரித் தமிழ்த்துறைப் தலைவராகத் திகழ்ந்த பேராசிரியர் சி.ஜெகந்நாதாச்சாரியர் இயற்றிய பத்துப்பாட்டு ஆராய்ச்சியுரையில் சிறப்புப் பாக்களாக உள்ள ஈடற்ற வெண்பாக்களின் உரையைக் காணலாம்.

பகுதி-2வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்டதீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரிகுளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்துளைத்தவேல் உண்டே துணை.
செவ்வேள் திரு கை வேல் முருகப்பெருமானின் அழகிய கையேந்திய வேலானது, வீரவேல் – வீரம்பொருந்திய வேலாகும்; தாரை வேல் – கூரிய வேலாகும்; விண்ணோர் சிறைமீட்ட – தேவர்களை அசுரரிட்ட சிறையினின்றும் காப்பாற்றிய, தீரவேல் – வலிபடைத்த வேலாகும்; வாரி குளித்த வேல் – கடலிற் பாய்ந்த வேலாகும்; சூர்மார்பும் குன்றும் துளைத்த வேல் – சூரபன்மனின் மார்பையும் அவனுக்கு மறைவாய் ஓடிவரலான மலையையும் துளைத்திட்ட வேலாகும்; (ஆகவே) கொற்றவேல் – வெற்றிவேலாகும்; அத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த வேல்) துணை உண்டு – (அடியனாகிய எனக்குத் துணையாக வமைந்திருக்கிறது; (எனவே, இனி, எனக்கு என்ன குறை என்றபடி);’இதனால், முருகன் கைவேல் இத்தன்மைத்தெனக் கூறி, அது துணையாயினார்க்குக் குறையில்லையென்பது பெறவைக்கப்பட்டது.
செவ்வேள் – அடை, கருவேளிற் பிரித்தபடி. தாரை – கூர்மை; இதனைக்கூறியது குன்றும் துளைக்கும் எனப் பெறவைத்தற்கு, முருகக்கடவுட்கு முன்னே எதிர்நிற்கமாட்டாது சூரபன்மன் கடலி னுட்புக்கு ஒளிக்க, அந்த முருகக்கடவுள் அக்கடலினுட்புக்குத் தனது வேற்படையினால் அவ்வசுரனை வெட்டியபோது வேல் வாரி குளித்தமை பெறப்படும்; மற்றும், கடல்சுவற வேல் விட்டமையும் நினைக. ‘சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல்’ என்றவிடத்து, “உழல் சூரு மலைமார்பும் உடனூடுறப்பொருது” என்ற தக்கயாகப் பரணியும், அதனுரையாக “சூரபன்மாவுக்கு மறைவாய் ஓடிவரலான மலையினுடைய மார்பும் சூரபன்மாத்தானும் ஒக்க ஒரேகாலத்திலே ஊடுருவும்படி வேலேறுபடப், பொரு தருளி ‘ என்று கூறியிருத்தலும் நோக்குக: இனி, குன்று – கிரௌஞ்சகிரியுமாம். வேல் துணையாவதை அருணகிரியாரும் தனித்து வழிநடக்குமென திடத்து மொருவலத்து இருபுறத்து மருகடுத்து இரவுபகற்றுணையது வாகும்” என்றார். உண்டே துணை – இதில், தெளிவுப்பொருளைத் தருதலால், ஏகாரம் தேற்றம்.

இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும்கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா-முன்னம்பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்டதனிவேலை வாங்கத் தகும்.
கொன் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா – பெருமை பயின்ற வேலினால் (மாமரமாய் மாறி நின்ற) சூரபன்மனை வெட்டிய வெற்றியையுடையவனே ! முன்னம் – முன்னொருகால், பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட தனி வேலை – பனியினாற் சூழ்ந்த பெரிய கிரௌஞ்சகிரியைத் தீண்டி யூடுருவும்படி ( விசை யொடு ) விடுத்த ஒப்பற்ற வேலை, எனது இடும்பைக் குன்றுக்கும் – (அடியனாகிய ) என்னுடைய துன்பமாகிய குன்றினைத் தகர்த்து நீக்கு தற்கும், இன்னம் ஒருகால் – இதுபோதும் ஒருமுறை, வாங்கத் தகும் – விடுத்தல் தகுதியாகும்; இதனால், வேலின் துன்பநீக்கி இன்பம் பயக்கும் பண்பு தெரிவிக்கப்பட்டது.

வேல், இடும்பை தொலைத்தலை ‘சுரர்க்கும் முனிவரர்க்கும் மகபதிக்கும் விதி தனக்கும், நரர் தமக்கும் நமர் தமக்கும் உறுமிடுக்கண் வினைசாடும் ” என்ற தாலுமுணரலாம். மலை போன்று பெரி தாய இடும்பையும் வேல்தொட்ட மாத்திரத்தில் நீங்குமென்ற படி, இடும்பையைக் குன்றாக உருவகித்தது, தீவினையினாலீட்டிய அதன் பேரளவு நோக்கி. ‘ குன்றுக்கும் ‘ என்றவிடத்து, நான்க னுருபுக்கு “ துன்பத்திற்கு யாரே துணையாவார், மறத்திற்குமஃதே துணை, பிணிக்குமருந்து என்பவற்றிற்போலே நீக்கஎன நடுவே பெய்து பொருளுரைக்கப்பட்டது.  கொன் – பெருமை; ” அச்சம் பயமிலி காலம் பெருமை யென்று, அப்பால் நான்கே கொன்னைச் – சொல்லே ” என்றது தொல்காப்பியம்.
உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன்பின்னை யொருவரையான் பின்செல்லேன்—பன்னிருகைக்கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ்வே.

பன்னிரு கை – பன்னிரண்டு திருக்கைகளிலும், கோல் – ( ஈட்டி, வாள் முதலிய ) ஆயுதங்களையேந்தியுள்ள, அப்பா – தலைவனே ! வானோர்-தேவர்களின், கொடிய வினை தீர்த்து அருளும்கடிய பாபங்களைப் போக்கிக் காத்துத் திருவருள் புரியும், வேல் அப்பா – வேலேந்திய தலைவனே ! செந்தி வாழ்வே- திருச்செந்தூரில் நித்தியவாசம் பண்ணுமவனே ! யான்-,உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் – உன்னைவிட்டு – வேறொரு கடவுளையும் நம்புகின்றேனில்லை; பின்னை – ஆகவே, ஒருவரைப் பின் செல் லேன் – வேறொருவரையும் பின்பற்றிச் செல்லமாட்டேன்;  இதனால், கவி தான் மறந்தும் புறந்தொழாமை பெறவைத்தார். 

கோல் – ஆயுதப் பொதுவைக் குறிப்பது.  பன்னிருகைக்கும் பன்னிரு படையேந்திநிற்றலை ‘அவரும் பிறரும் அமர்ந்து படையளித்த, மறியு மஞ்ஞையும் வாரணச் சேவலும், பொறிவரிச் சாபமு மரனும் வாளுஞ், செறியிலை யீட்டியுங் குடாரியுங் கணிச்சியுந், தெறுகதிர்க் கனலியு மாலையு மணியும், வேறுவே றுருவினிவ் வாறிரு கைக்கொண்டு…….  புகழ்வரம் பிகந்தோய் ” என்ற பரிபாடலால் உணர்க. வேலப்பா என வேலை விதந் தெடுத்துக் கூறியது, வானோர்கொடிய வினை தீர்த்தருளுதலில் பேருதவி புரிந்தமைபற்றி. வானோர்கொடியவினை – அசுரர்நலிந் தமை, சிறைப்பட்டமை முதலியன.  செந்தி – செந்தில்: திருச்செந்தூர். செந்தில் என்றே பாடங்கொண்டாலும் இழுக்கில்லை.  வாழ்வே – அனைவர் வாழ்ச்சிக்கும் காரணமாகுமவனே என்றபடியுமாம். நம்பு கிலேன் – கில், மாட்டாமை தெரிப்பது. பின்செல்லுதல்-வழிபடுதல்.

அஞ்சு முகந் தோன்றின் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்–நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றுனை
முருகாவென் றோதுவார் முன்.

முருகா என்று ஓதுவார் – முருகா ! என்று அவன் திருநாமத்தைச் செபிப்பவர்க்கு, அஞ்சு முகம் தோன் றின் – (யாதொரு பயத்தினால்) அஞ்சிய முகம் ஏற்படின், (அஞ்ஞான்று), முன் – அவர் முன்னிலையில் (அப்பயம் நீக்குதற்கு), ஆறுமுகம் தோன்றும் – ஆறு திருமுகங்களோடு முருகக்கடவுள் தோற்றமளிப்பான்: (மற்றும்) வெம் சமரில் – கொடிய (போர் ஏற்படுமாயின் அப்) போரிடத்து, (முன் – அவர்முன்னே ), அஞ்சல் என – ‘பயப் படாதே’ என்று அபயமளித்து, வேல் தோன்றும் – (முருகப்பெருமானின்) வேலாயுதம் தோற்றமளிக்கும்; (மற்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் – மனத்தில் (பத்தி சிரத்தையோடு) ஒருமுறை தியானிப்பாரேயாயின், ( முன் – அவர்முன்னே, இரு காலும் தோன்றும் – (அப்பெருமானின் இரண்டு திருவடிகளும் தோற்றமளிக்கும்;  இதனால், பக்தி சிரத்தையோடு முருகன் திருநாமங்களைச் செபிப்பவர்க்கு ஏற்படும் பலன் கூறப்பட்டது. 
‘ ஓதுவார் ‘ என்ற சொல்லாற்றலால், முருகன் திருநாமம் வேதம்போற் சிறப்புடைத்தாதல் பெறவைக்கப்பட்டது.  ‘ முன் ‘ என்றது ஏனையீரிடத்தும் கூட்டப்பட்டது.  முதலடி மூன்றாமடிகளில் சொல்லலங்காரம் காண்க. முருகு – மாறாத இளமைசெவ்வி : அதனையுடையவன் – முருகன்.
முருகனே செந்தி முதல்வனே மாயோன்மருகனே ஈசன் மகனே — ஒருகைமுகன்தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்நம்பியே கைதொழுவேன் நான்.
முருகனே! செந்தி முதல்வனே – திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள தலைவனே! மாயோன் மருகனே – திருமாலின் மருகனே! ஈசன் மகனே – சிவபிரானின் குமாரனே! ஒருகைமுகன் தம்பியே – விநாயகனின் தம்பியே! நின்னுடைய  தண்டைக்கால் – தண்டையென்னுங் காலணி அணிந்துள்ள திருவடிகளை, எப்பொழுதும் – எக்காலத்திலும், நான்- நம்பியே, கைதொழுவேன் – கைகூப்பி வணங்குவேன்;இதனால், முருகனின் திருவடியே தஞ்சம் என்பது பெறவைக்கப்பட்டது. 
மருகன், மகன், தம்பி என உறவிட்டுச் சொன்னது, அவன் குடிப்பெருமை கிளந்தபடி. பார்வதியின் அமிசமான காளி கிருஷ்ணாவதாரஞ்செய்த திருமாலுக்கு உடன்பிறந்தவளாதலாலும், அறுமுகக்கடவுள் பார்வதியின் புதல்வனாதலாலும், முருகக்கடவுள் அத்திருமாலுக்கு மருகனாவன். மாயோன் – திருமால். ஒருகை முகன் – ஒப்பற்ற துதிக்கையை முகத்திலுடையவன், ஆனைமுகத்தான், கரிமுகன்.

விநாயகன் கரிமுகனான வரலாறு:-மாகதனென்னும் முனிவனுக்கு விபுதையென்னும் அசுரகன்னிகையினிடத்தில் யானைமுகமாய்ப் பிறந்த கஜமுகாசுரனென்பவன், அநேகவரங்களைப் பெற்று, தன்னுடன்பிறந்த பல அசுரர்களுடனே உலகத்துக்கு அளவிறந்த பலவகைத் தீங்குகளை இழைத்து வருகையில், தேவர்களின் வேண்டுகோளால் அவனைக் கொல்லும்பொருட்டுச் சிவபிரான் யானைமுகக்கடவுளாக விநாயகமூர்த்தியை உண்டாக்கினர் என்பதாம். அவ்வசுரன் இரணியன்போலத் தேவர்களாலும் அசுரர்களாலும் மனிதர்களாலும் மற்றும் பலபிராணிகளாலும் தனித்தனி இறவாதபடி வரம் பெற்றிருந்ததனால், அவனைச் சிவபிரான் யானைமுகமும் தெய்வப்பிறப்பும் பூதவடிவமுங்கொண்ட ஒரு புத்திரனையுண்டாக்கி அவனால் அழித்தருளினர்.
வளரும்…

60  –  “கொள்கை முரசு கொட்டுக!”

பேராசிரியர் க.ப. அறவாணன் எழுதிய ‘தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்’  நூற்றிறனாய்வின் வானொலி உரைத் தொடர்ச்சி வருமாறு:-“வேலை இல்லாதோர் எண்ணிக்கை பெருகுவதும் அடுத்தபடியாக வந்தாரை வாழவைத்து இருந்தாரைத் தாழவைத்த தமிழகத்திலும், புரட்சியின் சங்கநாதம் எனப் பாராட்டப் பெறும் புதுவையில் தான் இந்நிலை கூடுதலாக உள்ளது.

இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலையின்போது, மக்கள் வெளிப்படுத்திய துன்ப முறை வேறு.  தமிழர்கள் வெளிப்படுத்திய துன்பமுறை வேறு. இந்திரா அம்மையார் இறப்பைத் தாளாமல் தமிழர்கள் நால்வர் தற்கொலை செய்து கொண்டார்கள்.  அதில் மூன்று பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்தனர். ஒருவர் நஞ்சுண்டு இறந்தார்.  அதுமட்டுமின்றி ஏழுபேர் நெஞ்சு அதிர்ச்சியால் இறந்தனர். இந்திரா காந்தி அம்மையார் பிறந்த உத்திரப் பிரதேசத்திலோ, அவர் குடும்பத்தின் பிறந்தகமான காஷ்மீரிலோ, அவரைத் தேர்ந்தெடுத்த ஆந்திரத்திலோ, வேறு எங்கும் யாரும் தற்கொலை செய்யவில்லை.

ஆக, தமிழினத்தின் மன வீழ்ச்சியை இங்ஙனம் சொல்லலாம். 

போர்க்குணமின்மை, தாழ்வு மனப்பான்மை, அயல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கண்மூடி வரவேற்றுப் போற்றும் போக்கு தொலைநோக்கின்மை, சமய நம்பிக்கை மற்றும் கடவுள் வழிபாடு ஆகிய இந்த ஆறும் நம்மைப் பின் இழுத்து தள்ளிக் கொண்டிருக்கின்றன. அது போலச் சில ஆண்டுகளுக்கு முன்பு குமுதத்தில் தொடர் கதை ஒன்றில் சாதியை புண்படுத்தியதால் தொடர்கதை  இடையிலேயே நிறுத்தப்பட்டது. ஆக சாதி பற்றி எவனும் குறைவாகச் சிறிதே கூறினாலும் நாம் பொங்குவோம், கொதிப்போம், குதிப்போம், வெட்டுவோம். ஆக தமிழர்களுக்குக் கூட்டூக்கம் கிஞ்சித்தும் கிடையாது.

தமிழ்நாட்டின் ரசிகர் மன்றங்கள் பெருகிய அளவிற்குச் சிந்தனை மன்றங்கள் பெருகவில்லை. ஏன் பல்கலைக் கழகங்களிலேயே கட்சி மன்றங்கள் வளருவது போல அறிவரங்க மன்றங்கள் வளரவேயில்லை.  சிந்தையில் மயங்குகிற நாம் சிந்தனைக்கு மரியாதை தருவதில்லை. இத்தனை குறைகளை நுட்பமாக விளக்கிய பேராசிரியர் அறவாணன் தன்னுடைய நூலின் வாயிலாகவே வழிகாட்டுகின்ற முடிவுகளையும் பெருமிதமாக வழங்கியுள்ளதை நாம் பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம்.
தன்னம்பிக்கை வேர்கொள்ள மொழிதான் முதற்படி. தமிழைப் பள்ளிமுதல் பல்கலைக் கழகம் வரை பாடமாக வைக்கவேண்டும். தமிழுக்குத்தான் மரியாதை தரப்பட வேண்டும். அப்பொழுதுதான் தாழ்வு மனப்பான்மை, அயல் மொழிப் பண்பாடு, நாகரிக மோகம் போன்றவைகள் விடைபெறும். தன்னம்பிக்கை உரம்பெறும். அதே போல சாதிச் சங்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

 நகரில் வாழும் தமிழருடைய ஒரு குடும்பத்தை உற்றுப் பார்த்தால் அவர்களுடைய உறைவிடம் ஐரோப்பிய முறையில் இருக்கும். அவர்தம் உடைகள், உணவுகள், பல் துலக்கு முன் காபி,  பல் துலக்கிய பின் சிற்றுண்டி, சப்பாத்தி, குருமா, ரொட்டி, ஜாம் அதுபோக குழந்தைகளின் மம்மி டாடி அழைப்புகள் என்றுதான் தெரியும். நீதிமன்றத்திற்கு ஆங்கிலமும், கோயிலுக்கு வடமொழியையும், நிர்வாகத்திற்கு இந்தியும், இசைக்குத் தெலுங்கும், ‘ஐயோ! சுடுகாட்டிற்காவது  இருக்கட்டும்’ எங்கள் தமிழ் என்ற அவலநிலைதான் உள்ளது.
ஒரு காலத்தில் திராவிடர் தம் குழந்தைகளுக்குப் பெயரிடும் போது தாய்ப் பெயரையே முதலெழுத்தாக வழங்கினர். திராவிடரை ஒத்த பழக்கவழக்கங்கள் உடைய ஆப்பிரிக்கரிடமும் தாய்வழிப் பெயரிடும் முறை, இன்றும் வழக்கில் உள்ளது.
தோதுவரிடை வழங்கும் ஒருத்தி பல கணவர் என்ற கோட்பாடு மருந்துக்குக்கூட தமிழ் மக்களிடையே வழங்கவில்லை. மணவாளன் உயிருடன் இருக்க மறுமணத்திற்கு உரிய சுயம்வர அறிவிப்புச் செய்த நளதமயந்தி கதை தமிழுக்குரியது அன்று. மணவாளன் இறக்க மற்றவனை நாடிய சூர்ப்பனகைக்கதை.  தமிழர் கற்பனையன்று. அதேபோல பாரதம் தமிழர்க்கோ திராவிடர்க்கோ உரியது அன்று. 

தமிழ்ப் பண்பாடு என்பது ஒரு பொருட்காட்சிப் பொருளாகி விட்டது. இந்த வரலாற்றுண்மையை நன்கு அறிந்த சில வம்பர்கள் பண்பாட்டுப் படை யெடுப்புகளையும், பண்பாட்டுக் கலப்பினையும் வரவேற்று எழுதுகிறார்கள்.  தமிழ்நாட்டில் நேற்று நிகழ்ந்ததும் இன்று நிகழ்வதும் பண்பாட்டுக் கலப்பன்று. ஒரு  பண்பாட்டு அழிப்பு, அழிவு. மூச்சை அடக்குவது வேறு. மூச்சையே விட்டுவிடுவது வேறு.  தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டு மூச்சையே விட்டு விட்டனர் என்பதுதான் இந்த நூலின் பேச்சு மூச்சு! 

இந்த அரிய நூலை பேராசிரியர் அறவாணன் பல ஆண்டுகளாக எழுத வேண்டும் என்று எண்ணித் தீரத் தெளிந்த நூலாகும். 1982 இல் தொடங்கி 1986-இல் பெரும் பகுதி நிறைவு பெற்றது. இந்நூலில் ‘பண்பாடு என்றால் என்ன?’ என்பதை மானுடவியற் பார்வை மூலம் அணுகியிருக்கிறார். அது போக, இன வெறுப்புக்கு உரிய காரண காரியங்களையும், அதன் கொள்கைகளையும், பொருளாதார மேன்மையால் படர்கிற அடிமை நிலைப்பாடுகளையும், அறியாமையால் விளைகின்ற மூடப்பழக்க வழக்கங்களையும், போலி அறிவால் ஏற்படுகிற கருத்துச் சிதைவுகளையும் வரைபடமாக வரைகிறார்.

மேலும், மலையாள மொழிப்பிறப்பும், யவனக் கலப்பும் வரதட்சணை என்பது ஆரியரால் விளைந்த  விஷம் என்று கூறி அதன் சொல் விளக்கங்களும், கர்ணன், ஏகலைவன் வரலாறுகளை திரும்பிப் பார்ப்பதும், கிரேக்கர்கள் வாழ்வியல் நெறிமுறை களையும் ஒருங்கே கண்டு வருந்துகிறார்.  அதுபோக அராபிய, இசுலாமிய படை யெடுப்பு களை பற்றியும் விளக்கமாக ஆராய்ந்து இவையனைத்தின் துணைக்கொண்டு ஆராய்ச்சி உரையை நுணுக்கமாக முடிக்கிறார். 

இந்த அறிவு விளக்கப் பனுவலில் இளைஞர்களுக்கு தமிழகத்தின் வளரும் எரிமலைகளுக்கு 11 கட்டளைகள் இடப்பட்டுள்ளன. அவற்றை நுணுகிப் பார்த்து செயலளவில் மாணவர்கள் இயக்கமென இயங்க வேண்டும். ஆக உறங்குவது போல உள்ள தமிழ் வல்லாளர்களுக்கு இளையோருக்கு விழிப்பூட்டுகிற வினாக்கள் விடுத்துள்ளார் ஆசிரியர். நமக்கு வாய்த்த இந்நூல் தமிழர்களின் உரிய நேரத்தில் கிடைத்த உறுதியான நல்லுரை கொட்டும் வீர முரசு எனலாம். இக்கொள்கை முரசு எங்கும் கொட்டட்டும்.” என்று என் வானொலி உரை 19.11.1990 அன்று நிறைவு பெற்றது.  பேராசிரியர் அறவாணன் இலயோலா கல்லூரித் தமிழ்த்துறையைத் தலைமை தாங்கிய பொழுது, வாராவாரம் ‘வியாழன் விருந்து’ நடத்தினார் என்பது இன்றைய மாபெரும் பேச்சாளர் பெருமக்களெல்லாம் நினைந்து நினைந்து போற்றுவதை நாம் எண்ணிப் பெருமையடையலாம்.

அந்நாள்களில் வானொலியில் பேசுவது என்பது எல்லையில்லாத மகிழ்ச்சியாகும்.  மாநிலக்கல்லூரியில் இளங்கலை தமிழிலிக்கியம் பயிலும் பொழுது ஆய்வு மாணவராக இருந்த அண்ணன் பழ அதியமான் மற்றும் ஆங்கில இலக்கிய முதுகலை மாணவர் மோகன கிருஷ்ணன் சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியதும் குறிப்பிடத்தகுந்தன.  அவ்வண்ணம் சன் தொலைக்காட்சியின் எடுப்பான முழங்கு குரலான தூரன் கந்தசாமி மாநிலக் கல்லூரியில் முதுகலை தமிழிலக்கிய மாணவச்செம்மலாகவும் மூத்த மாணவத்திலகமாக திகழ்ந்த பெருமிதம் வாய்ந்தவர்.  எழுத்தாளர் சு. சமுத்திரம்  சில நிலைகளில் வானொலி நிலையத்தில் இயக்குநராக இருந்த போது என்னை எப்படி ஏற்ற இறக்கத்தோடு பேச வேண்டும் என்று சுட்டிக்காட்டியதை நினைந்து மகிழ்கிறேன். 

எந்தையார் 1963 ஆம் ஆண்டில் தில்லியில் வானொலியில் பணியாற்றிய பெருமிதம் வாய்ந்தவர்.  நடிகர் சரத்குமார் தந்தையார் இராமநாதனும்  அப்பாவும் தில்லியில் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். அப்பா செய்திகள் சொல்லத் தொடங்கிய பிறகு தமிழிலில் பெரிய ஒலி வடிவ மாற்றத்தைத் தந்தது என்று பலர் பாராட்டியுள்ளனர்.  அப்பா  பல முறை சென்னை வரனொலியில் பேசியது பலர் அறிவர். (3.12.2018 அன்று தமிழ் அமுதம் என்ற தலைப்பில் மூன்று நிமிடங்களுக்கு மூன்று வாரமாக பேசிய அருமையான உரை, 20.9.2019 அன்று திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் குறித்த செப்பமான மூன்று நிமிடங்களுக்கு பத்து நாள் உரை) திருவெம்பாவிற்கு வானொலியில் பொழிந்த உரை நூலாகவே வெளி வந்துள்ளது. என் அம்மாவும் பல நிலைகளில் சென்னை (30.3.1966, 5.1.1971) மதுரை வானொலிகள் வாயிலாக மருத்துவ பொருண் மைகள் தொடர்பாக உரையாற்றிய பெருமிதமானவர்.  என் அண்ணன் மருத்துத்திலகம் கண்ணன் நியூசிலாந்திலும்,  ஆசுத்திரேலியாவிலும்  பல வானொலி நேர்காணல்கள்,  முதியோர் நலன் தொடர்பான பல நல்லுரைகளை தேனொலியாக பொழிவாற்றியதை எண்ணி மகிழ்கிறேன். வானொலி உங்கள் நண்பன் என்பது எங்கள் குடும்பத்திற்கு பொருத்தமான பொன்வரிகள்.

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி

பேரறிஞர் ‘உபய வேதாந்த’ வை. கோபால கிருஷ்ணமாசாரியாரின் மாணாக்கரும், விவேகாநந்தர் கல்லூரித் தமிழ்த்துறைப் தலைவராகத் திகழ்ந்த பேராசிரியர் சி.ஜெகந்நாதாச்சாரியார் வரைந்த பத்துப்பாட்டு ஆராய்ச்சியுரையின் தொடர்ச்சி வருமாறு:-பகுதி-3    காக்கக் கடவிய நீ காவா திருந்தக்கால்    ஆர்க்குப் பரமாம் அறுமுகவா – பூக்கும்     கடம்பா முருகா கதிர்வேலா நல்ல     இடங்காண் இரங்காய் இனி.அறுமுகவா – ஆறுமுகனே !  காக்க கடவிய நீ – காப்பதற்கெனக் கடம்பூண்டுள்ள நீ, காவா திருந்தக்கால் – (கடமை மறந்து) காப்பாற்றாமலிருப்பாயாயின், (அஞ்ஞான்று) ஆர்க்கு – யாருக்கு, பரம் ஆம் – மேலுலகம் கிட்டும் ? ( வீடுபேறு சித்திக்கும்). ஒருவர்க்கும் கிட்டாது என்றபடி); (ஆதலின்), பூக்கும் கடம்பா – பூத்த கடம்பமாலையை யணிந் துள்ளவனே ! முருகா-, கதிர் வேலா – ஒளிவிடுகின்ற வேலனே! நல்ல இடம் காண் – காப்பதற்கு நல்ல இடம் என்னிடத்துக்காண்பாயாக; இனி – அங்ஙன் கண்ட பின்னர், இரங்காய் – (என்மாட்டு) இரக்கங்கொள்வாயாக. 

இதனால், முருகன் காத்தலாற்றான் வீட்டுலகம் சித்திக்கும் என்பது பெறவைக்கப் பட்டது. எனவே, வீடுபேறு வழங்குந் தகுதி முருகனுக்கேயுளது என்றபடி. கடவு – கடமை: ‘என்னுக் கடவுடையேன் யான்’ (இராமா நுச நூற்றந்தாதி: தனியன்) என்ற விடத்துங் காண்க. பரம் – மேலுலகம், வீட்டுலகம்: ‘ இகபரமாகி யிருந் தவனே ‘ என்றது திருவாசகம். ‘ மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று ‘ என்றார் நாயனாரும். ‘ ஆர்க்கும் பரமாம் ‘ என்று பாடங்கொள்வாருமுளர்: அப்போது, ஆர்க்கும் – யாவர்க்கும், பரம் ஆம் – பாரம் ஏற்படும் என்று பொருள். பாரம் – துன்பச் சுமை. ஈற்றடியில் மோனையழகு காண்க.
    பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம்    கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு–சுருங்காமல்     ஆசையால் நெஞ்சே அணிமுருகாற்றுப்படையைப்     பூசையாக் கொண்டே புகல்.நெஞ்சே – மனமே! (நீ) பரங்குன்றில் – திருப்பரங் குன்றத்துக் கோயில் கொண்டுள்ள, பன்னிருகைக் கோமான் தன் பாதம் – பன்னிரண்டு திருக்கைகளைக் கொண்ட தலைவனாகிய முருகப் பெருமானின் திருவடிகளை, கண் குளிரக் கண்டு – கண்குளிரும்படி பார்த்து, கரம் கூப்பி – கைகூப்பி வணங்கி, ஆசையால் – ஆர்வத்தோடு, அணி முருகாற்றுப்படையை – அழகிய திருமுருகாற்றுப் படையென்னும் நூலை, பூசையாக்கொண்டே – (முருகனின்) நித்திய பூசனைக்குரியதாக்கொண்டே, சுருங்காமல் – தவறாமல், புகல் – (நியமத்துடன்) சொல்வாயாக (பாராயணஞ் செய்வாயாக என்றபடி). 
இதனால், முருகனுடைய திருவருளை விரும்புபவர் நித்திய பூசைக்குரியதாகத் திருமுருகாற்றுப்படையை ஏற்றுக்கொண்டு, நியமத்துடன் பாராயணஞ்செய்தல் வேண்டுமென்பது பெறவைக்கப்பட்டது.

ஈண்டு, கவி தமது நெஞ்சை விளித்துக் கூறுமுகத்தான் அனைவர்க்கும் அறிவுறுத்துகிறார். ‘நெஞ்சே’ என்றதால் மனமும், ‘புகல்’ என்றதால் வாக்கும், ‘கூப்பி, கண்டு’ என்றவற்றால் காயமும் தெரிவிக்கப்பட்டுத் திரிகரணங்களாலும் முருகனை வழிபடல்வேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டது. ஆசை – ஆர்வம்: பத்தி. பூசை – நித்தியபூசனை: ‘சிறப்பொடு பூசனை செல்லாது’ என்றவிடத்துப் போல. சுருங்குதல் – ஒழுக்கம் முதலியவற்றினின்று தவறுதல். 

இப்பொருளில் வருதலை “துகிலிடைச் சுற்றியில் தூநீ ராட்டி, நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி, சொல்லின பரிசிற் சுருங்கலன்” என்ற திருக்கண்ணப்பதேவர் திருமறத்திலுங் காணலாம். இனி, சுருங்காமல் – தப்பாமல், சங்கிரகமாக்காமல் எனப் பொருள் காணலுமாம். இத் திருமுருகாற்றுப்படையை நியமமாகப் பாராயணஞ்செய்யுங்கால், பெரியோர்களால் தொன்றுதொட்டு ஓதப் பெற்றுவருகின்ற கட்டளைக்கலித்துறைச்செய்யுள் பின்வருமாறு : ” ஒருமுருகா என்ற னுள்ளங் குளிர உவந்துடனே, வருமுரு காவென்று வாய்வெரு வாநிற்பக் கையிங்ஙனே, தருமுரு ‘கா வென்று தான்புலம் பாநிற்பத் தையல் முன்னே, திருமுரு காற்றுப் படையுட னேவருஞ் சேவகனே” என்பது.
    நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்    தற்கோல நாடோறுஞ் சாற்றினால்-முற்கோல     மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்     தானினைத்த வெல்லாந் தரும்.நக்கீரர் தாம் உரைத்த – நக்கீரராகிய பெரும் புலவர் சொன்ன, நல் முருகாற்றுப்படையை – நல்ல திருமுருகாற்றுப் படையை, நாள்தோறும் – தினமும், தன் கோல – தன் அபிமானம் அகங்காரம்) கெட, சாற்றினால் – ஓதினால், முன் – (அங்ஙனம் ஓதுபவர்) முன்னே , கோலம் மா முருகன் – அழகிய சிறந்த முருகன், வந்து – தோன்றி, மனக்கவலை தீர்த்து அருளி-(அன்னார்க்குள தாம் மனக்கவலையனைத்தையும் போக்கி யருள் செய்து, பின்னும்), நினைத்த எல்லாம் – அவ்வோதுபவர் நினைக்கின்ற எல்லா விருப்பங்களையும், தான் தரும் – தானே தருவன். 
இதனால், திருமுருகாற்றுப்படையை நாடோறும் ஓது தலால் உண்டாம் நற்பயன் கூறப்பட்டது. முருகாற்றுப்படைக்கு ‘நல்’ என்ற அடைகொடுத்தது, சொற்பொருளமைதியும் சிறப்பும் நோக்கி. இந்நூல் பதினோராந் திருமுறையில் சேர்க்கப்பட்ட சிறப்பும் நினைக.  தற்கோலல் – தற்செருக்குக் கெடுதல். தன் – தானென்னுஞ் செருக்கு; அகங்காரம். கோலல் – கொல்லுதல், கெடுதல். நக்கீரரை நற்கீரரென்றும் வழங்குப: அப்பெயர் ஈண்டு எதுகைக்குச் சிறந்து காணினும், நக்கீரர் என்பதே பெருவழக்காதலின், இன வெதுகை வந்தது. 

unread,1 Jun 2021, 17:16:48to மின்தமிழ்61  –  “நா.பா. என்னும் நல்லிசைப் புலவர்”
முனைவர் ஔவை அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,தமிழ்நாடு அரசு=================================================
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் இரண்டாம் ஆண்டு இறுதியில் 08.01.1991 அன்று சென்னை வானொலி நிலையத்தில் ‘நூல்நயம்’ பகுதியில் ஆற்றிய என் உரை:-
நல்ல நூல்களைப் போன்ற நண்பர்களை நானிலத்தில் நாம் எளிதில் எங்கும் காண முடியாது. இனிய நண்பர்களின் உறவுக்கு உவமை கூற வந்த திருவள்ளுவர், “நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு”என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மன மகிழ்ச்சிக்காகவும், நல்லுணர்ச்சிக்காகவும், தகவல்களை அறிவதற்காகவும், நடைமுறை வாழ்க்கையின் நளினங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும், புதிய சிந்தனைகளை வளர்ப்பதற்காகவும் என்றெல்லாம் நூல்கள்சிந்தனையாளர்களால் எழுதப்படுகின்றன. மனதில் மலரும் சிந்தனைகள் சொல்லாகவும், பிறகு எழுதப்படும் எழுத்தாகவும் பதிய வைப்பது ஒர் அரிய கலையாகும்.

இப்போது நாம் நூல்நயம் நுகரப்போகும் நூல் ‘தகடூர் வரலாறும்-பிரகலாதன் சரித்திரமும்’ என்பதாகும். ஒரு நாட்டினுடைய வரலாற்றை அந்த நாட்டின் இலக்கியங்களில், மக்களின் வாழ்க்கை வழியில் அவர்கள் வாயிலிருந்து உதிரும் பழமொழியில்,  அவர்கள் கையாண்ட கருவியில் அவர்கள் உருவாக்கிய நாணயங்களில், கல்வெட்டுக்களில், செப்பேடுகளில், திரட்டப்பட்ட பொருள்களில், அயல் நாட்டு வழி நடையாளர்கள் எழுதி வைத்த குறிப்புகளில்எனப்பல வழிகளில் கண்டறியலாம்.

ஒரு வரலாற்றை வரைந்து காட்டுவதென்பது அருமையான செயல். நினைத்ததை எல்லாம் வரலாற்று ஆசிரியரால் எழுத முடியாது. ஆனால், நினைத்து, நினைத்து தகவல்களைத் தேடித் தேடி, அங்குமிங்கும் ஓடி ஓடித் திரட்டிய விளக்கங்களைச் சான்றுகளுடன் தெளிவாக எழுத வேண்டும். “ஒரு வரி எழுதுவதற்கு ஒன்பது மைல் பயணம் செய்தவர்” என்று எழுத்தாளர் அடிசனைப்பற்றிக் கூறுவார்கள். காலங் கடந்த பொருள்களையும், கல் மேடுகளையும் ஆய்வுக்கண்ணோடு செப்பேடுகளையும் ஆராய்ந்து காண்பதையே தன்னுடைய அலுவலகப்பணியாக கொண்டுள்ள ஆசிரியர் இந்த நூலை எழுதியிருக்கிறார்.

நாமெல்லாம் அறிந்த ஊர் தான் தகடூர். இப்போது தருமபுரி தனி மாவட்டத்தில் (02.10.1965 முதல்) தருமபுரி என்ற பெயரோடு இருக்கிறது. தகடூர் என்னும் இந்தப் பெயரைப் பதிற்றுப்பத்து வழங்குகிறது. தருமபுரியின் தென் கிழக்கில் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதமன் கோட்டை என்னும் ஊர் அதியமான் கோட்டை என்பதன் சிதைவாகும். கோட்டையின் இடிபாடுகளையும் சிதைபாடுகளையும் இன்றும் காணலாம். கோட்டையும் சிதைந்தது விட்டது. அது கொண்ட பெயரும் மறந்து விட்டது.

தகடு என்றால் பொன், பூவின் புறவிதழ் என்ற பொருள் உண்டு. பூவிற்குப் ‘புறவிதழ்’ என்ற பொருள் உண்டு. பூவிற்குப் புறவிதழ் போலத் தன் மாநகருக்குப் புறத்தே பொலிவாகக் கட்டிய மதிலின் மாட்சியினால் தகடூர் என்ற பெயரைத் தன்னூருக்கு தந்திருக்கிறார் போலும் அதியமான் நெடுமான் அஞ்சி. மட்டப்பாறை, குட்டப் பாறை, தட்டைப் பாறை, தகட்டு மலை என்ற மலைப் பெயர்களைப் போல, உயரமில்லாமல் ஓரளவு குறைந்த தகடாக இருந்த மலையூர் என்ற கருத்தில் தகடூர் என்றார்களோ என்னவோ! அமிழ்தை விஞ்சுகின்ற அரு நெல்லிக்கனியை ஒளவைக்குத் தந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி, அற்புதமான அந்த தருமத்தைக் கண்டு தான் தருமபுரி என்று பின்னாளில் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது.

தருதல் வழியாகப் பிறந்த சொல்தான் தருமம். எனவே, ஈடில்லாத நெல்லிக்கனியின் ஈகையைக் கருதி, அந்த ஊரைத் தருமபுரி என்றே அழைக்கலானார்கள். வைரக்கற்களைப் போன்ற வரலாற்றுச் செய்திகளையும் ஒரு பழஞ்சுவடியில் பதுங்கிக்கிடந்த பிரகலாதன் சரித்திரம் என்ற மணிகளையும் ஒன்றாகக் கோர்த்து நூலாசிரியர் நன்மாலையைக நமக்கு அணிவித்து மகிழ்கிறார். ரூ.50/- என்னும் விலைக்குக் கிடைக்கும் இந்த நூல் அளவாலும் பொலிவாலும் அழகிய நூல்,சிந்தனையைத் தூண்டுகிற சீறிய நூல், நம் கருத்தில் மட்டும் நிறைந்திருந்தத பழைய வரலாற்றுப் படிவத்தை வரைந்து காட்டுகிற பயனுள்ள நூல்.
வானொலி நிலையத்தின் வாயிலாக நூற்கனிகளை சுவைத்து திறனாய்வதில் மகிழ்ந்தேன்.

அப்பா அடிக்கடி என்னிடம் சொல்லி படிக்க வைத்தது தீபம் நா.பார்த்தசாரதியின் (18.12.1932 – 13.12.1987) நூல்களைத்தான். நா.பா.வின் குறிஞ்சிமலர், பொன்விலங்கு தான் அனைவரும் படித்து மகிழ்வார்கள். குறிப்பிட்ட இரு புதினங்களும் புதின உலகத்தின் வைரப் பரல்கள் எனலாம். அரவிந்தனைப் போல, பூரணி போல நாமும் வாழவேண்டும் என்று பலர் முயற்சித்தனர். அவ்வண்ணமே, நா.பா.வின் மணிபல்லவம், இராணி மங்கம்மாள் போன்ற புதினங்களையும் குறிப்பிடலாம். நா.பா. ஒரு சமயத்தில் ‘தீபம்’ இதழை நடத்த முடியவில்லை என்ற போது பல மாதரசிகள் தங்கள் அணிகலன்களை அவரிடம் நேரிலும் அஞ்சலிலும் அனுப்பி வைத்து நடத்தச்சொன்னது மறக்க முடியாத வரலாறாகும். அவரும் சில தருணங்களில் மறக்காமல் வந்த ஆபரணங்களை உரியவர்களிடம் தக்க முறையில் திருப்பி அனுப்பிய நேர்மையும் போற்றத் தகுந்த நெறிமுறையாகும்.

மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் தமிழில் புலவர் பட்டம் பெற்று இலக்கியக் கல்வியில் நுண்மான் நுழைபுல ஆற்றல் வாய்ந்த எழுத்துச் சிகரமாவார். அப்பாவும் அவரும் நல்ல நண்பர்கள் ஆவார்கள். ஒரு முறை பட்டிமன்றத்தில் அப்பாவை நோக்கி ஒளவை அதிகமாக புறம் பேசுபவர் என்றாராம். எதிரணியில் தலைமை தாங்கிய அப்பா சிரித்துக்கொண்டே, நண்பர் நா.பா. அகம் கொண்டவர் என்று பலரும் குறை சொல்வார்களே என்றாராம். பட்டிமன்றத் தலைப்பு “சங்க இலக்கியத்தில் விஞ்சிய புகழ் அக இலக்கியத்திற்காக? புற இலக்கியத்திற்காக?” என்பதாகும்.

அவருடைய மணிபல்லவம் வரலாற்றுப் புதினம் நுண்ணிய தமிழ்நடை மிளிர்வோடு புனையப்பட்ட கதையாகும். நல்ல தமிழ் படிப்பிற்கு இப்புதினம் சான்றாகும். சில சான்றுகள் இன்னும் மறக்காமல் பதிந்துள்ளன என்நெஞ்சில். அதனை என் கருத்துக் கோவையில் 22.11.1986-இல் பதிந்துள்ளப் பகுதிகள் காண்க.

“நம்முடைய தமிழ் மொழிக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கிறது பார்த்தீர்களா? பேசினால் ஒருவகை இனிமை; பாடினால் ஒருவகை இனிமை; எழுதினால் ஒரு வகை இனிமை அவ்வண்ணமே, புதிதிலேயே கொடும்பாளூரான் பேசும் ஒரு தொடரில் திருக்குறளை எவ்வளவு நேர்த்தியாக தன் உரையிலேயே இணைத்து எழுதிய கலையை என்னென்று சொல்லி பாராட்டுவது. அதேபோல இக்கதை நெடுகிலும் பலவாண்டுகளாக ஆசிரியர் நா.பா. படித்த தமிழ் இலக்கியக் கருத்துகளையும் அழகான தத்துவங்களையும் பொருத்தமாக இணைத்துள்ளார். அறிஞர் நா.பா. எக்காரணத்திலும் கதையின் சுவையும், விறுவிறுப்பும் கெடாதவாறு மிளிர வைத்துள்ளார்.

“நண்பர்களே! நம் எல்லோருக்கும் நோக்கமும், நினைவும் ஒன்றானாலும் அரசும் அவசியம். வேறு வேறாக இருப்பவை நன்றாற்றல் உள்ளும் தவறு உண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். அதே போல மகாராணியின் மனம் எப்படி தனிமையில் உழன்றது என்பதற்கு உளவியல் பூர்வமாக எழுதிய வரிகளில் நாட்டுக்கெல்லாம் அரசி கூட்டுக்குள் கிளியாக உள்ளம் குலைய வேண்டியிருந்தது. மண்ணின் உலகத்தில் பாண்டி நாட்டுக்குத் தேவியாயிருக்க முடிகிறது. மனத்தின் உலகத்திலோ ஏழையிலும் ஏழைப் போல் வெறுமை சூழ்கிறது. ஒரே அவைக்கலப்பற்ற தனிமை!

உள்ளும் புறமும் நினைவும் கனவும் எங்கும் எதுவும் சூனியமாகப் பாழ் வெளியாய்ப் போய்விட்டது போன்ற தாழ்வு மனப்பான்மை உண்டாக்கும் தனிமை அது. ஏழை கந்தல் துணிகளை இழுத்துப் போர்த்திக் குளிரைப் போக்கிக் கொள்ள முடியாதது போல் வலுவில்லாத நினைவுகளால் மனத்திடம் கிட்ட மாட்டேனென்கிறது. மகாமண்டலேசுவர் ஓரிடத்தில் சீவல்லபமாறனிடம் யானைக்குத் தன் பலம் தெரியாதல்லவா? 

சங்க காலத்தில் கிள்ளிவளவன் என்றொரு அரசன் இருந்தான். அவனுடைய கண் பார்வைக்கு நினைத்ததைச் செய்து முடிக்க ஆற்றல் இருந்ததை நீ உடன்று நோக்கும் வாய் எரிதலழ நீ நயந்து நோக்குவாய் பொன் பூப்ப செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண்திங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை என்று ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் புகழ்ந்து பாடியிருந்தார் என்று சொல்லிவிட்டு சேரநாட்டில் யானைகள் இருக்கின்றன, சோழநாட்டில் சோறு இருக்கிறது பாண்டிய நாட்டில் தமிழறிஞர்கள் இருக்கிறார்கள் என்று பேசிய வரிகளை நெஞ்சில் நிழலாடினால் தமிழை எப்படி வனப்பாக எழுதலாம் என்பதற்கு 1986 ஆம் ஆண்டில் படித்த இப்புதினம் சான்று. அதேபோல் 16 பாத்திரங்களின் பெயர்ப் பட்டியல் என் நெஞ்சில் ஆழமாக இன்னும் படிந்த குணச்சித்திரங்களாவார்கள்.

முல்லைப் பற்கள் தெரிய குழல்மொழி, பாலைப் பருகினால் கழுத்து வழியே பால் தொண்டைக்குள் இறங்குவது தெரியும் சிறப்பான விலாசினி, நிமிர்ந்த நடை, நேரான பார்வை, கணீரென்று பேச்சு, கலீர் என்ற சிரிப்பு, இளமைப்பருவத்தின் துடிதுடிப்பான பகவதி, குட்டையான தமிழ்த்தோற்ற முனிவர் அகத்தியர் போன்ற நாராயணன் சேந்தனன், இரத்தத்தோடு இரத்தமாகப் பழக்கத்தோடு பழக்கமாக, தமிழ்ச் சுவையும், கவிச்சுவையும் பிறவிலேயே இயல்பாக அமைந்திருக்கின்ற வல்லாள தேவன், அம்பலவன் வேளான், குமார பாண்டியன், இராஜசிம்மன், இடையாற்றுமங்கலம் நம்பி, சீவல்லப மாறன், மகா மண்டலேசுவரர், குணவீர பண்டிதர், வானவன் மாதேவி, கோட்டாறு பண்டிதர், வண்ண மகள், புவனமோகினி.

அதே போல இலண்டன், பாரிசு, ரோம், கிரேக்கம், போலாந்து சோவியத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு நா.பா 1976 சனவரி மாதம் முதல் மே மாதம் சென்று வந்த பயணக் கட்டுரையான “புது உலகம் கண்டேன்” கட்டுரைக் கனியில் பல சுவையான நறு மலர்கள் பூத்துக் குலுங்கின. குறிப்பாக என் கருத்துக்கோவையில் பதிந்த குறிப்பு; “102 மொழிகளில் 447.7 மில்லியன் பிரதிகள் லெனினின் புத்தகங்களும்,81 மொழிகளில் 96.5 மில்லியன் பிரதிகள் மார்க்சு ஏங்கெல்சு புத்தகங்களும்,புஷ்கின் தொகுதிகளை (பத்து மடலங்கள்) 300,000 இலட்சம் பிரதிகளும்,தாஸ்டயேவ்ஸ்கி தொகுதிகள் (10 மடலம்) 100,000 பிரதிகளும் வெளிவந்தன”என்று துல்லியமான புள்ளி விவரங்களுடன் குறித்துள்ளார்.

ஓரிடத்தில் மிக நுட்பமாக நா.பா. அவர்கள் பிரான்சில் உள்ள நோத்தர் தாம் இடத்தை நயமாக விவரித்த விதம் அலாதியானது. “திருச்சிராப்பள்ளி அருகே காவிரி இரண்டாகப் பிரிந்து நடுவே திருவரங்கம் துண்டாக்கி இருப்பதுபோல் பாரிசின் சேன் நதி இரண்டாகப் மாலை போலப் பிரிந்து நடுவே ஒரு சிறு தீவை உண்டாக்கி இருக்கிறது. அதுதான் புகழ்பெற்ற நோத்தர்தாமாகும். அறிஞர் நா.பா. வின் சிந்தனை வளம், சிந்தனை மேடை, வஞ்சிமாநகரம், திறனாய்வு செல்வம் நூல்களும் கற்கண்டு மாலைகளாகும்.

தொல்காப்பியம் – சேனாவரையரின் உரை நூலினைப் படிக்கும் பொழுது என்னுடைய பள்ளி நாட்களின் கணக்குப் பாடம் தான் நினைவிற்கு வந்தது. அப்போது அப்பா என்னிடம் இலக்கணத்தை நன்கு கற்றால் தான் மொழிப்புலமை வளமாகும் என்று துல்லியமாக விளக்கினார். அதற்கேற்ப எழுத்துச்சிகரம் நா.பார்த்தசாரதி வரைந்த ‘சொல்லின் செல்வம்’ நூலினை ஊன்றிப் படிக்குமாறு அறிவுறுத்தினார். எளிய முறையில் சொல்லதிகார விளக்கங்களை சொல்லின் செல்வத்தில் காணலாம். குறிப்பாக மொழியைப் போற்றுங்கள் என்ற தலைப்பில் செந்தமிழ் வாணர் நா.பா வரைந்த நுட்பமான கருத்து மணிகளை என்னுடைய கருத்துக் கோவையில் 22.11.1986 அன்று பதித்த பகுதியைக் காணலாம்.

மொழியைத் தூய்மை செய்யத் தவறுகின்றவன் மனித வாழ்வின் பயனில் பெரும் பகுதியை வீணாக்குகிறான். பிற மொழிகளைக் கற்பது கைகொட்டி வரவேற்கலாம். ஆனால், தாய் மொழியை அறியாது பிறமொழி அறிந்ததையே பேரறிவுடைமையாகக் கருதக்கூடாது. தாய் மொழி இலக்கண இலக்கியங்களைத் துளக்கறக் கற்றுத் தூய பேச்சும், வழுவற்ற எழுத்தும் பெற வேண்டும்.

மிதிக்க வொண்ணாத பொருள்களைக் காலினால் மிதித்து விட்டால் அருவருத்துத் தூய்மை செய்யும் மனிதன், தாய்மொழியில் பிழைபட எழுதினாலும், முன்னரெய்திய அதே அருவருப்பை எய்தித் தூய முறையிற் பேசவும் எழுதவும் பழகிக் கொள்ள முனைந்து பாடுபட வேண்டுமே! மொழித் தாய் தன் மக்களிடம் எதிர்ப்பார்ப்பதும் அது தான். உண்மையைக் கூர்ந்து நோக்கப்போனால் மனிதனுக்கு முதல் தாய்மொழியே, இரண்டாம் தாய் தான் பெற்ற தாயாவாள்.
மொழி மனிதனைப்பழி வாங்குவதில்லை. மனிதன் புறக்கணிப்பால் மொழியைய் பழிவாங்கப் போய்த்தனக்கே பழியை எய்துகின்றான். இக்குறிப்புகளையெல்லாம் நான் தனியாக எழுதி வைத்து இலக்கணப் பயிற்சியில் ஆயந்த போது ஆசிரியர் திலகம் நா.பா வின் பொன் வரிகள் என்னை விழிக்க வைத்தது. மொழியிலக்கணப் பயிற்சியை ஏதோ ஒரு பயங்கர நிகழ்ச்சியாக எண்ணி அஞ்சுகின்றவர்கள் அவ்வச்சம் நீங்கித் துணிவு பெற இத்துறையிற் செய்ய வேண்டிய முதல் வேலை தமிழ் உணர்ச்சியைப் பரப்புவது. உணர்ச்சியிலிருந்து பற்றும், பற்றிலிருந்து அறிவும் பெருகும்.  இத்தொண்டு பரந்தால், மொழியிலக்கண ஆர்வம் எங்கும் பரக்கும்.
கல் தோன்றி மண் தோன்றி மூத்த தமிழ்க்குடிக்கு வைப்பு நிதியாக தொல்காப்பியம் அமைந்தது என்று சொல்லின் செல்வர் நா.பா. சுட்டிக்காட்டியதையும், சொல்லின் செல்வம் நூலினை கல்லூரிக்காலத்திலேயே அறிமுகப்படுத்திய என் ஆருயிர் அப்பாவுக்கு பல்லாயிரம் முறை வணங்க கடமைப்பட்டுள்ளேன்.
ஒரு முறை மூதறிஞர் ராஜாஜி கல்கியில் வெளி வந்த குறிஞ்சி மலரைப் படித்து யார் இந்த ஆசிரியர்? ‘மலர்’ என்று எழுதுகிறாரே, ‘பூ’ என்று எழுதினால் தானே புரியும் என்று வினவியதாகக் கூறுவார்கள். காலம் புதுமையாகும் பொழுது ஆசிரியர் நா.பா.வின் கருத்து ஏன் சில இடங்களில் இடறியது என்பது புதிராகவே உள்ளது.

சங்கப்புலவர்களை ‘நல்லிசைப்புலவர்’ என்றே அழைக்கும் மரபுண்டு. அவ்வண்ணமே நல்லறிஞர் நா.பா.வையும் நல்லிசைப்புலவர் என்று அழைத்து மகிழலாம்.

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி …… 

‘திருக்கோயில்’ இதழின் தனிப்பெரும் ஆசிரியர் திரு. ந.ரா. முருகவேள் 1981-ஆம் ஆண்டு இதழில் குறித்த பதிவு நோக்கத்தக்கது.

நக்கீரரின் அரிய – அழகிய சொல்லாக்கம்!கவிஞர்களும் புலவர்களும், ஒரு மொழியின் சொற்களையே கருவிகளாகக் கொண்டு, தத்தம் கலைத் திறத்தின் எழில் நலம் காட்டிக் களிப்புறுத்துவர். சொற்களைத் திறன் தெரிந்து கையாளும் அரும் பெரும் திறமையைக் கொண்டே கவிஞர்கள் அல்லது புலவர்களின் அருமையும் பெருமையும் அளக்கப் பெறும். நக்கீரர் என்பதில் ந-சிறப்புணர்த்தும் இடைச்சொல்; கீர்-சொல், சொல்வன்மை, நக்கீரர் என்னும் சொல்லுக்குச் ‘சிறந்த சொல்வன்மையுடையவர்’ என்பது பொருள். அதற்கேற்ப, நக்கீரர் பலப்பல புதிய அரிய சொல்லாக்கங்களைப் படைத்துக் கவிதை இயற்றும் நல்லாற்றல் மிக்கவர் என்பதனை, அவர் பாடியருளிய திருமுருகாற்றுப் படையில் வரும் பல சான்றுகள் புலப்படுத்துகின்றன.

மாற்றுயர்ந்து தூய சிறந்த பொன்னானது. ஆடகம், சாதரூபம், கிளிச்சிறை, சாம்பூநதம் என்று நான்கு வகைப்படும். இவற்றுள்ளும் சாம்பூநதம் என்னும் பொன்னே மிகவும் சிறந்துயர்ந்தது ஆகும். திருப்பரங்குன்றம் ஆகிய மலைநிலத்துச் சூரர மகளிர், சாம்பூநதம் என்னும் உயர்ந்த பொன்னால் இயன்ற அழகிய இழைகளை அணிந்துள்ளனர். அதனைக் குறிப்பிட வரும் நக்கீரர், சாம்பூநதம் என்னும் சொல் வடசொல்லாதலின், அதனை அங்ஙனமே தமது தெய்வீகக் கவிதையில் அமைக்க விரும்பிற்றிலர். ‘சம்பு’ என்றும் சொல்லுக்கு நாவற்பழம், நாவல் மரம் என்பது பொருள். அந்நாவல் மரங்கள் நிறைந்திருப்பது சம்புத்தீவம். அதன்கண், ‘நாவல்மரப் பழங்களின் சாறு படிந்து அதனால் விளைந்த பொன்’ என்பது, சாம்பூநதம் என்னும் வடசொல்லுக்குரிய பொருள். ஆதலின் அக்கருத்தினைக் குறிக்கும் வகையில் ‘நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை’ என்னும் தொடரினை அழகுற அமைத்து வழங்குகின்றார் நக்கீரர்! இப்புதிய சொல்லாக்கத்தொடர், நக்கீரரின் நல்ல தமிழ் உணர்வைத் தெள்ளிதின் விளக்குவதாகும்.

நக்கீரர் பெருமானின் நயம்மிகுந்த இத்தகைய நல்ல சொல்லாக்க முறையினைப் பின்வந்த சான்றோர்கள் சிலரும், பெரிதும் தழுவிப் போற்றியுள்ளனர். இங்கு ஒன்றை மட்டும் குறிப்பிடுதல் சாலும். பாரதக்கதையின் போதரும் ‘திருதராட்டிரன்’ என்னும் அரசனைப் பற்றிய குறிப்பொன்று சங்க கால நூலாகிய கலித்தொகைப் பாடல் ஒன்றில் வருகின்றது. திருதராட்டிரன் என்னும் சொல், தமிழ்மொழியின் இயல்பிற்கேற்ற சொல்லமைப்பு உடையதன்று. ஆதலின், அதனை அங்ஙனமே குறிப்பிட விரும்பாமல், பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் சங்க காலப் புலவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். திருதராட்டிரன் கண்பார்வையற்றவன்; பிறவியிலேயே குருடன். அவனைப் பிறர் பார்த்தல் இயலுமேயன்றி அவன் பிறரைப் பார்த்தல் இயலாது. அவனது நிலை கண்ணாடியைப் போன்றது. கண்ணாடியை நாம் பார்க்கலாம். ஆனால் கண்ணாடியால் நம்மைப் பார்க்கமுடியாது. இத்தகைய கண்ணாடியைப் போன்ற இயல்புடையவர் ஆதலின் திருதராட்டிரனுக்குத்‘தர்ப்பண ஆனனன்’, ‘முகுர ஆனனன்’ (தர்ப்பணம், முகுரம் – கண்ணாடி; ஆனனம் – முகம்) எனப் பெயர்கள் வழங்கும். இதுபற்றி அவனைன “வயக்குறு மண்டிலத்து வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன்’ என்று பாலைபாடிய பெருங்கடுங்கோ குறிப்பிட்டருளுகின்றார்.

“வயக்குறு மண்டிலம்” என்பது கண்ணாடியைக் குறிக்கும். ‘ஒளி மிகுந்த வட்ட வடிவம் உடையது’ என்பது பொருள். சூரியர்கள் பன்னிருவரின் பகன் என்றும் சூரியன், தக்கனின் வேள்வியில், வீரபத்திரரால் மறுக்கப்பெற்றுக் கண்குருடாயினான் என்பது வரலாறு. அதனைத் தழுவி ‘வயக்குறு மண்டிலம்’ என்றும் தொடர் ‘பகன்’ என்னும் சூரியனையும் குறிப்பதாகக் கொள்ளலாம். சாம்பூநதம் என்னும் பொன்னை ‘நாவலொடு பெயரிய பொலம்’ என்று நக்கீரர் வழங்கியதைத் தழுவியே, திருதராட்டிரனை ‘வயக்குறு மண்டிலத்து வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன்’ என்று பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியருளினார் ஆதல் வேண்டும்!

இச்சொல்லாக்க முறையினைத் தழுவி மாணிக்கவாசகர் ‘நரசிங்கம்’ என்பதனை ‘ஆள்அரி’ என்றும் திருத்தக்கதேவர் ‘புத்திசேனன்’ என்பானைத் ‘திங்கள் விரவிய பெயரினான்’ என்றும்; கம்பர் ‘அசகாய சூரன்’ என்பவனைக் ‘கூட்டு ஒருவரை வேண்டாக் கொற்றவன்’ என்றும் ஆங்காங்குத் தம் நால்களில் அழகுற குறிப்பிட்டருள்வாராயினர். ஆசிரியர் அருட்டிரு மறைமலையடிகளார்  Tennyson என்பதனைத் தேனிசையன் என்றும். Shakespeare என்பதனைச் செகப்பிரியர் என்றும், Annie Besant என்பதன் அன்னை வசந்தை என்றும் குறிப்பிடுதல், இங்கு நாம் சிந்தித்து இன்புறுதற்குரியது.

unread,7 Jun 2021, 02:48:20to மின்தமிழ்62  –  “கூட்டிலிருந்த குயில்கள்”
முனைவர் ஔவை அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,தமிழ்நாடு அரசு=================================================
என்னுடைய கருத்துக் கோவையில் பதிந்த எஞ்சிய அறிஞர் நா. பார்த்தசாரதியின் அருமையான வரிகளை குறிப்பதில் மகிழ்கிறேன்.  வளர்ந்த ஒரு பொற்காலம் சொற்கோலமாக வரையப்படவிருக்கிறது.  கபாட புரத்தில் இடைச்சங்கத்தின்  ஐம்பத்தொன்பது  தமிழ்ப்பெரும் புலவர்கள் கவியரங்கேறி நூலாய்வு செய்தனர். 
சிறந்த நல்ல முத்துக்களுக்கு பெயரே கபாடம்; அதனால் பாண்டியா கபாடம் என்று சொல்லி வழங்கலாம். ஓரிடத்தில் பொன் நகைகளைக் குறிப்பிடும்போது,  சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூந்தம் என்னும் நால்வகைப் பொன்னும், வயிரம், மரகதம், மாணிக்கம், புருடராகம், வயிடூரியம், நீலம், கோமேதம், பவழம், முத்து என்னும் ஒன்பது வகை மணிகளும், ஆடவர் அணிந்து கொள்ளும் தாழ்வடம், கண்டிகை, கரி, பொற்பூ, கைக்காறை, திருப்பட்டிகை, குதம்பை, திருக்கம்பி, கற்காறை, சுருக்கின வீரபட்டம், திருக்குதம்பைத் தகடு, திரள் மணிவடம் ஆகியவைகள் ஒரு புறம் இலங்க, பெண்கள் அணிந்து கொள்ளும் திருக்கைக்காரை மோதிரம், பட்டைக்காறை, தாலி, திருக்கம்பி, திருமகுடம், வாளி, உழுத்து, ஆடகம், திருமாலை வாகுலலயம், திருக்கைப்பொட்டு, பொன்னரிமாலை, மேகலை… வியப்பாக விரிந்தன விழிகள்…பக்குவமான மணத்துக்குச்  சாரகந்தம் என்று பெயர். 
தேரின் சட்டம் முறிந்தாலோ, சகடம் உடைந்தாலோ என் குழந்தையின் கையொடிந்தாற்  போல் நான் உணர்ந்து மனம் நோவேன் என்பதை மறந்து விடாதே! கலைஞர்கள் இன்னொருவரைப்  பார்ப்பதற்கு ஏங்குபவர்களாக  இருத்தல் கூடாது.  இன்னொருவர் தங்களைப் பார்க்க ஏங்கச் செய்பவர்களாக இருக்க வேண்டும். கவிஞனின் எழுத்தாணியும், பாணனின் யாழும்  வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவனிடமிருந்து  கீழே  நழுவவே  கூடாது.  

அனுபவம் மட்டும் தேடி அலைந்தே அடைய முடியும்.  நூலறிவைக் கற்பிக்கலாம். உலகியலை கற்றுத்தான் அறிய வேண்டும். பெரும் புலவர்களும், பேரறிஞர்களும், மக்களும் கூடிச் சிந்திக்கும் முதன்மையும், அருமையும் இருப்பதால்தானே இந்த மதுரைக்குக் கூடல் என்றே ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள்! உலகத்தை முழுவதையும் பெயர்த்துக்கொண்டு வந்து ஒரு தராசுத்தட்டில் வைத்து மற்றொரு தராசுத்தட்டில்  மதுரை மாநகரத்தை மட்டும் வைத்தால் கூட இதன் மதிப்பு தான் அதிகமாக இருக்கும் என்றெல்லாம் புலவர்கள் புகழ்ந்தது பொருத்தம் என்றே தோன்றியது. 

காடுகளும் கூட்டம் கூட்டமாகப் பசுக்களை மேய்க்கும் ஆயர்களும் சூழ்ந்த முல்லை நிலம்! குன்றமும், அருவியும், தினைப்புலமும், வேடர்களும் நிறைந்த குறிஞ்சி நிலம்! நிலம் என்னும் நல்லாள் நெடும் பசுமை சூல் கொண்டு தோன்றும் வயல் வெளிகளும்,  தாமரைப் பொய்கைகளும், சிற்றூர்களும் செறிந்த மருத நிலம்! தாழம்பூ தரும் மீனவர் குடியிருக்கும் பரதவர் பாக்கமும் மலிந்த நெய்தல் நிலம்!இத்தகைய நானிலங்களின் நானாவிதமான வாழ்க்கை முறைகளையும் கொண்டது நம் தமிழ் நிலமாகும்! 

ஆனாலும் குறிஞ்சி நில வாழ்வின் செழிப்பு மருத நிலத்தில் இல்லை! மருத நில வாழ்வின் வளம் முல்லை நிலத்தில் இல்லை! முல்லை நில வாழ்வின் ஊட்டம் நெய்தல் நிலத்தில் இல்லை!  ஆனால் மொத்தமாக வாழ்க்கை என்ற ஒன்று எல்லா இடத்திலும் ஒடிக்கொண்டிருந்தது. நிற்காமல் ஒடிக் கொண்டும் ஓடாமல் நின்று கொண்டும் நிலத்துக்கேற்ப, வளத்துக்கேற்ப, இன்ப துன்பங்களின் மிகுதிக்கேற்ப, உயிரியக்கம் நடை பெய்ர்ந்து கொண்டிருந்தது.

அறிவு ஒருவனை வெறும் விவரம் தெரிந்தவனாக மட்டுமே ஆக்குகிறது. அனுபவம் தான் உலகிலேயே மிகப்பெரிய ஆசிரியன்.  அனுபவம் தான் திறமையைக் கற்றுக் கொடுக்கிறது. அனுபவம்தான் மனத்தையும், வாக்கையும், புத்தியையும் பளிச்சென்று  இலட்சணமாகத் தெரியும்படி  மெருகிடுகிறது. நம்பிக்கைதான் அரசியலில் தவம்!  நம்பிக்கை தான் வெற்றி !  நம்பிக்கை இருந்தால் எதையும் வெல்லலாம்.  நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் ஒன்றைத்  தொடங்கும்  முன்னேயே தோற்றுப் போகிறார்கள். நம்பிக்கை உள்ளவர்களோ தோற்றுப்போன பின்னும் வெற்றிகொள்ளத் தொடங்குகிறார்கள்.

நினைவுகள் எல்லாமே நிழலைப் போன்றவை. நாம் எங்கெல்லாம் நடந்து போகிறோமோ, அங்கெல்லாம் அவை நம்மைத்  தொடரவே செய்யும் என்று அறிஞர் நா.பா  எழுதிய  இராணி மங்கம்மாள் வரலாற்றுப் புதினத்திலுள்ள முத்துச் சுடர்களை என் குறிப்பேட்டில் 22.11.1986-ல் குறித்ததை இப்பொழுது சுட்டிக்காட்டுவதில் இன்பம் அடைகிறேன். 

நா.பாவின் நூல்களைப் படிப்பது போல அப்பா  என்னை ‘எழுத்துத்திலகம்’ அரு.இராமநாதன் எழுதிய ‘வீரபாண்டியன் மனைவி’ வரலாற்றுப் புதினத்தையும் படிக்குமாறு அறிவுறுத்தினார். அதைப்படித்து என் கருத்துக் கோவையில்  அப்புதினத்தில்  வரும்  ஜனநாதனின்  மேற்கோள்:-“அரசியல் என்பது உம்மைப் போன்று உத்தம உள்ளம் படைத்தவர்களுக்கோ, உணர்ச்சியாளர்களுக்கோ ஏற்றதல்ல!  மனித உணர்ச்சிகளையும், உன்னத லட்சியங்களையும் களிமண் பொம்மைகளாக உருட்டி விளையாடும் என்னைப் போன்ற இதயமற்ற அரக்கர்களுக்குத்தான் அரசியல் ஏற்ற தொழிலாகும்! அரசியல் துறையில் நல்லவர்களை விடப் பொல்லாதவர்கள் தான் வெற்றி கண்டு சரித்திரத்தை உண்டாக்க முடியும்!   நீர் சரித்திரத்தை விட்டு மறைவதைப்  பற்றியும் கவலைப்படாதீர்!  ஏனெனில் மனைவி மக்களோடு ஆனந்தமாக வாழ்க்கை வாழ விரும்புபவனுக்குச் சரித்திரமில்லை!  சரித்திரத்தை விரும்புகிறவனுக்கு  மனைவி  மக்களோடு  கூடிய  வாழ்க்கையில்லை! இந்த இரண்டு பெரும் உண்மைகளில் முதலாவதற்கு  உதாரணமாக நீர் விளங்குவீர்.  இரண்டாவதற்கு உதாரணமாக  ஜனநாதனாகிய  நான் விளங்குவேன்.

கோவையில் வதிந்து திடுமென மறைந்த கவிஞர் சேவற்கொடியோன் (14.11.1942 – 14.12.1996) என் அப்பாவின் இனிய நண்பர் ஆவார். சேவற்கொடியோன், தொண்ணூறுகளில் தமிழ்க் கவிதையுலகில் யாப்பு, அணி போன்ற இலக்கண அலங்காரங்களைத் தன் மீசைக்குள்ளே வைத்து – பீடுநடை போட்ட பெருங்கவிஞர்.  அகவெட்டு, முகவெட்டு இரண்டிலும் தமிழ்த்தாயின் பிள்ளையொத்த சாயலைக் கொண்டவர். கம்பீரக் கவிஞராக, தமிழின் அத்துணை உயரங்களையும் தாண்டக் கூடிய தடகளக் கவிஞராக உலா வந்தவர் என்று அருமை நண்பர் பால.ரமணி சொல்லிச் சொல்லி மகிழ்வார். ‘சேவற்கொடியோன்’ என்னுமவர் கையொப்பத்தில் கூட, தமிழ்க் கொடி பறக்கும் அழகைக் காணலாம் என்று அவர் மகன் கோவலன் பெருமிதமாகச் சொல்லி மகிழ்ந்த கையொப்பமாகும்.
அவர் எழுதிய ‘பர்ணசாலை மான்கள்’, ‘இரத்ததில் கரைந்த சாத்தியங்கள்’ குறிப்பிடத்தக்கன. அவருடைய மகன் கோவலன் தமிழக அரசின் செய்தித் துறையில் மக்கள் தொடர்பு அலுவலராக  பணியாற்றி வருகிறார்.  அவரிடம் அவர் அப்பா சொன்னது மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போதே உயிர் நீங்க வேண்டுமென்று, அவ்வண்ணமே, மேடையிலேயே உயிர் நீத்தவர் ஆவார் சேவற்கொடியோன்.
 22.11.1986-ல்  அவர் எழுதிய சில குறிப்புகளை என்னுடைய கருவூலத்திலிருந்து: “நவீன கலை இலக்கியம் என்ற பெயரால் இரத்தம் சிந்தாத  கொலைகளைச் செய்யும் குருரர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவையும் குறிப்பிடப்படுவதில்  வருத்தமடைகிறேன்.   தமிழ்க் கவிஞர்கள் பலரும் வாழ்க்கைக்குரிய கன பரிமாணங்களைப் பெறுவதற்கு முனையாமல்  கனவுகளைப் பற்றிக்கொண்டும், அவமானகரமான சோகங்களுக்கு ஆட்படும் அவைகளையே  சுகமான கவிதைகளாகச் சொரிந்து சொரிந்து இன்பங்காணும் நோயாளிகளாக மாறிப்போனார்கள்.  கதாசிரியர்கள்  இராத்திரிக்  கதைகளையே எழுதி எழுதி பகலிலும் அஸ்தமன  விகாரங்களில்  வாய்பதித்துக் கிடக்கிறார்கள். “தகிக்கின்ற  உந்தன் கண்ணீர் கோகினூர்”  என்று பாடினான் மலையாள கவிஞர் ரமேஷ் நாயர்.  தேவைகள் அனைத்தையும் தெய்வீகமாகக்கருதி மயங்கும் சரீர ருசிக்காரர்கள் தமிழில் அதிகரித்திருக்கிறார்கள். 
அதேபோல சீக்கிய இனப் படுகொலையைக் குறித்து சேவற்கொடியோனின்  சீற்ற   வரிகள் வலம்புரி நடையில் வளர்ந்தன. “வெள்ளையராட்சியில் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்கில் நடத்திய படுகொலையால் மனித நாகரிகத்திற்கே அஸ்தி கண்டதாக உலகம் அறிந்தது.   இன்று தங்களது ஜீவ காண்டத்தை சிருஷ்டிப்பதற்காக இரத்தமே பூமியின் மணமாகும் அளவிற்குச் சீக்கிய சகோதரர்கள்  இரத்தம் சிந்தியிருக்கிறார்கள்.   சாம்பிராணி மணக்கின்ற பஞ்சாபில் எதேச்சதிகார துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.  எனினும்,  அவர்களின் மரணத்திலிருந்து உரிமைப் பேரொளி என்றேனும்  எழும். சிரைகளிலும்,  தமனிகளிலும் வீரத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் சீக்கிய சகோதரர்கள் தங்களது உரிமைப் போரில் அடைகின்ற வெற்றியே தேசிய இனங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்.” 

அதேபோல வேறொரு இடத்தில் தன்னுடைய சிவப்புச் சிந்தனையைப் படர விட்டதைக் காணலாம்…“கண்ணுக்கு முன்னால் விரிந்து கிடக்கும் நியாயமான உலகினைப் புறக்கணித்து விட்டுக் கனவு வெளிகளில் வலம் வரும் கவிஞர்களின் படைப்பால் ஆக்கங்கள் விளைவதில்லை.  கற்பனை, நளினம் என்ற பெயர்களில் பலர் உருவாக்கும் சொற்குவியல்கள் காற்றுக் குமிழிகளைப் போல் வலிமையற்று உதிர்ந்து விடுகின்றன.   சமுதாய அவலங்களைப்  பற்றி அலட்டிக்கொள்ளாமல்,  எப்படியாவது ஒரு கவிஞனாக முத்திரையிட்டுக்  கொள்ள வேண்டும் என்ற ஆவலில் ரசனைக்காகப்  பாட்டெழுதுவது  ஒரு வகைச்  சுயநலமே!   பொய்கள் மண்டிக் கிடக்கும் இடத்தில் நிஜத்தை சிரமப்பட்டே கண்டுபிடிக்க வேண்டுகிறது.   தாகூரின் கவிதைகளை ‘குளிர்காலக்  காற்றின் இதமான வருடல்’ என்று எஸ்ரா  பவுண்டு கூறினார்.  ஒரு சிலரின் புதுக்கவிதைகளோ  புயல் வீசும் கடலில் அலை வீசும் வேகத்தையே உணர்த்துகின்றன. 

கவிஞர் மதுபாலிகா (K. வள்ளிநாயகம்), மயக்கம் தெளிவிக்கிற மாற்று மருந்து எழுத்துக்காரர்; எட்டாம் வகுப்பு பயிலும்போதே கவிதை இயற்றத் தொடங்கியவர்; அமிலத்தை விழுங்கி அஸ்திரத்தைக் கொப்பளிக்கிற அனல் கவிஞர் மதுபாலிகா ஆவார்.  தான் பணியாற்றிய தொலைதொடர்புத் துறையின் தொழிற்சங்கங்களில் மாவட்டச்செயலாளர், மாநிலச் செயலாளர் மற்றும் அகில இந்தியப் பொதுச் செயலாளர் எனப் பல்வேறு நிலைகளில் தடம் பதித்தவர்.  ‘புதிய கீதை’, ‘அசுவமேத யாகம்’, ‘பூச்சொரியும் வானம்’, ‘குங்குமப் பூக்கள்‘, ‘மதுபாலிகா கவிதைகள்’, ‘கந்தர்வ கானம்’ எனப் பல்வேறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.  அவருடைய போர்க் கவிதைகளைப் படித்து என்னுடைய கருத்துக் கோவையில் 23.11.1986-ல் பதிவிட்டேன்.  “பவனிவரும் கவிதைக்குப் பதிலிருந்தால் சொல்லுங்கள். பாய்ந்துவரும் குதிரையிது  பாதை விட்டு விலகுங்கள். இதன் சுவடுபட்ட  மண்ணெல்லாம்  சிவப்பாகும்  எண்ணங்கள். அவனியினை எமது கொடி ஆளும்; விலகி நில்லுங்கள்! விதி! இது ஆண்டவன் வகுத்ததல்ல; நம்மை ஆள்பவன் வகுத்தது! இதற்குப் பலியாவது தீர்ப்பல்ல; நாம் ஆள்வதே வழி!  உணர்க!மெல்லினமாய் இருந்தால் மிதித்து விடும் உடைமை வர்க்கம்! இடையினமும் அவர் காலில் இடறிவிழும்! வல்லினமாய் நிமிர்ந்து நீ போராடு,  வழிவிடும்  உலகமுனக்கு. அவர்கள் நெற்றிக்கண் திறந்தால்  எங்கள் குடிசைகள்  சாம்பலாகும் போது எங்கள் அடி வயிற்று நெருப்பில் ஏன் மாளிகைகள் பொசுங்கவில்லை? அக்கினிதேவனே!  நீயுமா  அன்பளிப்பில்  மயங்கிவிட்டாய்! அறிவுப்புரட்சிக்கு ஆக்க வழி தேடுங்கள்! அமைப்பாக செயற்படுங்கள், ஆழமாக செயற்படுங்கள், இமைப்பொழுதும் லட்சியத்தை மறவாமல் செயல்படுங்கள்.  கொள்கைத்  தீ வளர்த்து  வர்க்க பேதத்தைச் சுட்டுப்பொசுக்கிடுவோம்.” “அர்ச்சுனா! கண்ணனை இன்னும் காணோம்!…..ம்! சங்கைப்பிடி, சாரதியாகு!”என்று தன் ‘புதியகீதை’யில் பிரகடனப்படுத்தியுள்ளார்.
மாநிலக் கல்லூரியில் தமிழிலக்கிய வகுப்பில் மூத்த மாணவராக அறிமுகமானவர்தான்  கவிஞர் பேரமனூர் சந்தானம்.   சிரிக்க சிரிக்க நம்மை சொக்க வைக்கும் நண்பர்.   நடக்கும் பொழுதே நளினமாகக் கவிதைகளை உதிர்க்கும் வல்லமை வாய்ந்தவர்.  எங்கள்  பேராசிரியர்,  ‘புதுக்கவிதையின் தாத்தா’ என்று புகழ்ப்பெற்ற முனைவர் மேத்தாவின் மனங்கவர்ந்த மாணவச் செம்மல் தான் சந்தானம். அப்பாவும் சந்தானத்தின் கவிதைகளையும்,  எடுப்புரைகளையும் பாராட்டி மகிழ்வார்கள். வெடித்த வாயில்  தொடுத்த  இக்கவிதை சந்தானம்  கல்லூரியில் சொன்னது.“தலைவாரிப்  பூச்சூடி என்னைப் பாடசாலைக்குப் போ என்றார் என் அன்னை.  இன்று வரைக்கும்  அங்கே தான் இருக்கிறேன்.” 

அதே போல,  மிதிவண்டியைப்  பார்த்தவுடன் சொன்ன வரிகள், “டயரே   டயரே  நீ  யாரோ ட்யூபுக்கு  நீதான் தாயாரோ.” அதேபோலக் கல்லூரிப் போட்டிகளில் பரிசு கிடைக்காமல் வரவே மாட்டார்.  அப்படித் தவறி விட்டால்  உடனே சொன்ன வரி, “எனக்குப் பழக்கமானவர்களே!  என் வழக்கமான பாதையில் பள்ளம் பறிப்பதால் நான் வழுக்கி விழுகிறேன்!” 

என்னிடம் அடிக்கடி சந்தானம் சொல்வது இது. “எப்போதும் நினைவில் வைத்துக்கொள் அருள்…பூனை எலி பிடிக்கும்புதுத் தண்ணீர் சளி பிடிக்கும்ஆனை வரும் முன்னே அழகாக மணியடிக்கும்அடங்காத பசங்களெல்லாம்அப்பனோடு தம்மடிக்கும்…”
“தம்பிக்கு அண்ணன் நான்அண்ணனுக்குத் தம்பி நான்தம்பிக்கு அண்ணன் நான்அண்ணனுக்குத் தம்பி நான்அண்ணன் தம்பி இருவருக்கும்ஆங்கிலத்தில் ‘பிரதர்’ நான்”
“பொங்கி வச்ச பொங்கலிலேபுதைந்திருக்கும் முந்திரி நான்பூட்டி வச்ச நாய்களுக்குஸ்ட்ராங்கான சங்கிலி நான்ஷாருக் கான் சல்மான் கான்சத்தியமாய் இல்லை நான்சாஞ்சுக்கிட்டே தின்னுகிற சாதாரண பாப்கார்ன் நான்.”       எளிமையாக வாழ்வைத் தொடங்கிப்  திரைப்படங்களில் பல  நடித்து,  இன்று சிந்தனை மன்றங்களில் அருவியாகப் பொழிவாற்றும் அறிவுச்சுடராக மின்னுகிறார்.  அவ்வண்ணமே பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வெற்றி வரலாறுகளை  திரைக்காவியங்களாக இயக்கும் வெற்றி வாணராக வலம் வருகிறார்.——

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!பொருநராற்றுப்படை

சோழன் கரிகால் பெருவளத்தானை, முடத்தாமக் கண்ணியார் பாடியது. பொருநர், ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என மூன்று வகைப்படுவர்.  இப்பாட்டின் பொருநன், போர்க்களம் பாடுவோன்.  பரிசின் பெற்றுத் திரும்பும் பொருநன், பரிசில் பெறச்செல்லும் பொருநனை ஆற்றுப்படுத்துகின்ற பாடல்.  இந்த ஆற்றுப்படையின் தலைவன், சோழன் பெருவளத்தான்.  இவன், புகாரிலிருந்து அரசாண்டவன்.  இவன், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகன்.  இளமையில், கால் கரிந்து போயிற்று என்பதால், கரிகாலனானான்.148 முதல் 197 முடியவுள்ள அடிகள்.

‘கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்தாள்நிழல் மருங்கி ணணுகுபு குறுகித்தொழுதுமுன் நிற்குவி ராயின், பழுதின்று,ஈற்றா விருப்பின் போற்றுபு நோக்கிநும்கையது கேளா வளவை யொய்யெனப்பாசி வேரின் மாசொடு குறைந்ததுன்னற் சிதாஅர் நீக்கித் தூயகொட்டைக் கரைய பட்டுடை நல்கிப்பெறலருங் கலத்தின் பெட்டாங் குண்கவெனப்பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர,வைகல் வைகல் கைகவி பருகி,எரியகைந் தன்ன வேடில் தாமரைசுரியிரும் பித்தை பொலியச் சூட்டி,நூலின் வலவா நுணங்கரில் மாலைவாலொளி முத்தமொடு பாடினி யணியக்கோட்டின் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்ஊட்டுளை துயல்வர, ஓரி நுடங்கப் பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்காலி னேழடிப் பின்சென்று, கோலின்தாறுகளைந் தேறென் றேற்றி……’          நீங்களும் இளஞ்சேட்சென்னியின் மகனாகிய கரிகால் வளவனிடம் செல்லுங்கள். அவன், உங்களுக்கு அனைத்தையும் தருவான். வேண்டிய அளவும் தருவான். உங்கள் பருத்தியாடைகளை நீக்கிப் பட்டாடைகளை உடுத்தத் தருவான். அதையும் நாள்தோறும் தருவான். பொற்றாமரைப் பூவைச் சூட்டி மகிழ்வான். பொன்னரி மாலைகளையும், முத்து மாலைகளையும் விறலியர் அணியக் கொடுப்பான். வெண்குதிரைகள் நான்கிளைப் பூட்டிய தந்தத்தேரில் உங்களை அமரவைத்து, யாழிசைக்கும் பாணர்க்குச் செய்யும் நலங்களையெல்லாம் உங்களுக்கும் செய்வான்.  உங்கள் தேரின் பின்னால் ஏழடி வந்து, உங்களை வழியனுப்பி வைப்பான். அத்தகு பண்பாளனாகிய அவனிடம் செல்லுங்கள்.  

63  –  “முத்தாரம் வழங்கிய மு.வ”
கல்லூரிகளில் கல்வி நிறுவனங்களில் தமிழ்த் துறையில் பணியாற்றுபவர்களுக்குப் பொதுவாகப் புதினம், சிறுகதை  எழுதும் ஆர்வமும் ஈடுபாடும் இருந்ததில்லை என்றே கருதிய வரையறையை நகர்த்திப் பெரும் பெயரும், உயரிய புகழும் பெற்ற மாபெரும் தமிழ்ப் பேராசிரியராக தமிழகம் கை குவித்து வணங்க மிளிர்ந்தவர் அறிஞர் மு.வ. (25.4.1912-10.10.1974) ஆவார்.

உலகப் புதின வரலாற்றை ஆராய்ந்தால் பெரும்பாலான எழுத்தாளர்கள் செய்தி / வார / மாத / காலாண்டு இதழ்களின் வாயிலாகவே தங்கள் படைப்புக்களையும், புதினங்களை தொடர்களாக வெளியிட்டுச் செல்வமும், செல்வாக்கும் பெற்றனர். இதற்கும் விதிவிலக்காக துணைவேந்தர் மு.வ. விளங்கினார்.  இவருடைய பன்னிரெண்டு புதினங்களும் நேர் அச்சு வடிவில் பாரி நிலையத்தின் வெளியீடாக வந்தது என்பது தனிச்சிறப்பாகும். மு.வ.வின் புதினங்களைப் படிக்கும்போதே மொழியின் ஒலிவளம், தமிழ்நாட்டின் நில அமைப்பு, தமிழர்களின் வாழ்வுநிலையை எடுத்துச் சொல்லும்போது படிப்பவர் அனைவருக்கும் மொழிப்பற்று மீதூர்ந்து பெருகும்.

புதினம், சிறுகதை, நாடகம், கடித இலக்கியம், பயண இலக்கியம், இலக்கிய வரலாறு, இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத் திறனாய்வு, மொழியியல், வாழ்க்கை வரலாறு, சிந்தனை, குழந்தை உளவியல், சிறுவர் இலக்கியம் ஆகிய எழுத்துத்துறைகளில் வல்லவராக மு.வ. ஒளிர்ந்தார்.  அவருடைய எழுத்தைப் படித்து மதுரையிலிருந்து சென்னைக்குத் தனியாக துணிந்த வந்து பச்சையப்பர் கல்லூரியில் அவர் மாணவராகச் சேர்ந்தவர் என் தந்தையார். அப்பா அடிக்கடி எங்களிடம் சொல்வது சென்னைக்கு நான் வந்ததற்கு  நான்கு காரணங்கள்.1. படிக்கட்டும் பைந்தமிழ் பாடும் பச்சையப்பர் கல்லூரி2. பேரறிஞர் அண்ணா பயின்ற கல்லூரி3. தமிழ்க்கடல் மு.வ. மாணவராக மிளிர வேண்டும் என்ற கனவு4. மாமன் மகள் தாரா மீது ததும்பிய காதல்
மு.வ.வின் மாணவராக இருந்தாலும் அவரிடம் பாடம் பயின்றாலும் அவரின் அடக்கமான மாணவர் என்ற நிலையை என்னால் பெற முடியவில்லை என்று அப்பா சொல்வார்.  அவருடைய நெருங்கிய நண்பர் இ.சு.பாலசுந்தரம் அப்பாவின் நெருக்க வலையிலிருந்து பிரிந்த நிகழ்வை பேராசிரியர் மு.வ தன் புதினத்தில்  ஒரு கதை வாயிலாகவே வரைந்தார் என்றும் சொன்னதுண்டு. 
என் பெற்றோரின் திருமணம் நிறைவேறிய பிறகு மு.வ வரைந்த வாழ்த்து மடலை இன்று வரை அப்பா மறவாமல் பேணி வருவதை நல்லாசிரியர் மேல் மதிப்புக்கொண்ட நன் மாணாக்கர் நிலையை அறியலாம்.
திருமண வாழ்த்துக் கடிதம்:திரு. மு. வரதராசன்,தமிழ்ப்பேராசிரியர்,செனாய் நகர்,சென்னை 600 030.
11.12.1961
அன்புடையீர்,    வணக்கம். திருமண அழைப்பு இன்றுதான் வரப்பெற்றேன்.  திருமணம் (10.12.1961) நன்கு நிறைவேறியிருக்கும். மணமக்கள் நலமெல்லாம் நிரம்பி நீடு வாழ இறைவன் அருள்க.    வாழிய திரு நடராசன்–திருமதி தாரா நடராசன்!அன்புடன்மு.வ.
அப்பா அடிக்கடி என்னிடம் சொல்வது, “எதுவும் பிறக்கும்போதே வருவதில்லை; எல்லாம் பழக்கம்தான்”.  அதேபோல பேராசிரியர்   மு.வ.வினுடைய ‘கயமை’ புதினத்திலிருந்து ஒரு மேற்கோளைத் தவறாமல் சுட்டிக் காட்டுவார்.

“கால் புல்தரையிலும் நடந்து பழக வேண்டும்;  கல்மேட்டிலும் நடந்து பழக வேண்டும். இல்லையானால், தொல்லைதான். காதும் அப்படித்தான்.  இனிய கொஞ்சுமொழியும் கேட்டு மகிழ வேண்டும்;  கடுமையான வசைச் சொற்களையும் கேட்டுப் பழக வேண்டும்.  செவி கைப்பச் சொல் பொறுக்க வேண்டும்  என்று வள்ளுவர் சொன்னது மூவேந்தர்களுக்கு மட்டுமல்ல உங்கள் மூன்று பேருக்கும்தான்”என்று அடிக்கடி கல்லூரிக் காலங்களில் அப்பா சொல்லிக் காட்டுவார். 

கூடுதலாக ஒரு தகவலையும் அப்பொழுது சொன்னார்,“பேராசிரியர் மு.வ.விற்கு மூன்று ஆண்மக்கள், அவர்கள் முறையே, திருநாவுக்கரசு, நம்பி, பாரி. அம்மூவருமே மருத்துவ மாமணிகளாக மிளிர்கிறார்கள்” என்றும் சொல்வார்.  அதேபோல, மு.வ.வின் சிறந்த மாணவர் என்னை வழிநடத்திய பேராசிரியர் எந்தையாரின் நெருங்கிய நண்பர் சி.பா.வின் மூன்று ஆண்மக்கள், முறையே, சேரன், வளவன், செழியன் ஆவார்கள்.  அதேபோல, இவ்வரிசையில் எங்கள் பெற்றோருக்கும் கண்ணன், அருள், பரதன் என மூவரும் ஆண்மக்களே! 

அல்லி புனைகதையை 1986ஆம் ஆண்டு கல்லூரியில் பயிலும் போது தொடக்கத்திலேயே வந்த வரிகள் என் நெஞ்சை விட்டு இன்றும் நீங்க வில்லை.“பெற்றோருக்கு உள்ள மயக்கம் எதுவென்றால் ஒழுங்கு, தெளிவு, முயற்சி, ஊக்கம் ஒன்றும் இல்லாத மகனைப் பற்றி கவலை இல்லையாம்.  இவையெல்லாம் இருந்தும்,  நன்றாக வாழ்வேன் என்று தெரிந்திருந்தும், எனக்காகக் கவலைப்படுகிறார்கள் பெற்றோர்கள்”.

இக்கதையைப் படிக்கும் பொழுதே எத்தனை இலக்கிய / சமய / வரலாற்றுச் சான்றுகளைத் தன் தெள்ளிய தமிழ் நடையில் உளவியல், நுட்பவியல் அறிஞரைப் போல நூலாசிரியர் எழுதியுள்ளதை நினைந்து போற்றலாம்.ஓரிடத்தில் “அறிவின் ஆற்றல் தடுமாறுகிறது;  காட்டிக் கொடுக்கிறது.  அன்பின் தியாகம் வலுப்படுத்துகிறது; வழுவாமல் காப்பாற்றுகிறது.  விவேகாநந்தர், இராமகிருஷ்ணர், நிவேதிதையார் மலைகள், நானோ சிறு மணற்குன்று. எது குற்றம் என்ற ஓர் கதையை வெளியிடு

வதாகவும், வெளியிட்ட நிலையம் பறம்பு நிலையம் என்று தன்  நூல்களை வெளியிடும் பாரி நிலையத்திற்குப் புகழ் சேர்க்கும் முறையாக எழுதியுள்ளதை யெல்லாம் நுணுகிப்  படித்து அறிந்தேன்.  அவர் எழுதிய கதைகள்;செந்தாமரை (1946),கள்ளோ காவியமோ (1947), பாவை (1948), அந்த நாள் (1948), மலர்விழி (1950), பெற்ற மனம் (1951), அல்லி (1952), கரித்துண்டு (1953), கயமை (1956), நெஞ்சில் ஒரு முள் (1956), அகல் விளக்கு (1958), வாடா மலர் (1960), மண் குடிசை (1961)
அவர் எழுதிய புதினப் பாத்திரப் பெயர்கள் மோகன், மங்கை, செல்வநாயகம், வடிவு, சந்திரன், மெய்யப்பன், அறவாழி, மெய்கண்டார், கமலக்கண்ணர், அருளப்பன், சீராளர், திலகம், பாவை, செந்தாமரை, மான்விழி, மென்மொழி, , ஆணவர், வசீகரன், காஞ்சனை, சந்திரன், கற்பகம், வேலய்யன், கயற்கண்ணி, இமாவதி, மாலன், பாக்கியம் தமிழ் உலகத்தின் தனிப் பெயர்களாகும். ‘பாரிமுனை’ என்ற கவினார்ந்த பெயரினை அணிசூட்டியவர் ஈடு இணையற்ற பெரும்பேராசிரியர் மு.வ. அவர்களே. 
அவ்வண்ணமே, ‘கள்ளோ? காவியமோ? என்ற அவரின் தலைசிறந்த புதினத்தில் மங்கை பேசும் வரிகள் இன்னும் சிலிர்க்க வைக்கின்றன. “மானம் வந்தபோது நான்தான் அரசி; என் நாடி நரம்புகள் என் அடிமைகள். என் மனத்தை நான் ஆள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கின்றது. என் உடலுக்கு அமாவாசையாய் என் உள்ளம் என்னும் மானம் இருண்டு தோன்றுகின்ற காலத்திலும், என் ஆட்சியைக் கைவிட்டதில்லை. அப்போதும் காதல் என்னும் நந்தாவிளக்கு எனக்குக் குன்றா ஒளிவீசித் தவறாமல் காக்கின்றது. நிறைகாக்கும் காப்பை இந்த நாடி நரம்புகளின் பேரால் தகர்க்க முடியுமா? இதனால்தான், ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்று அந்த உலகப் பெருந் தலைவரும் கேட்டார்”.  

“தான் விரும்பிப் பயன்கொண்ட பழுத்த என் எழுத்துப் பணியிலிருந்து நான் ஓய்வு பெறமாட்டேன், எழுத்து என் உயிருடன் கலந்து விட்டது” என்றெழுதிய பேராசிரியர் மு.வ.வின் பெருமிதம் எல்லையற்றது.

இன்றைக்கு நமது அரசு அறிவிப்பாகவே நூல்களைப் பரிசாகத் தாருங்கள்.  பூங்கொத்துகளைத் தவிர்த்து விடுங்கள் என்கிறார்கள்.  ஆனால், ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் திருமணப் பரிசுகளாக மு.வ.வின் நூல்களை மட்டுமே பரிசாகவே மகிழ்ந்து வழங்கினார்கள்.   நேற்றைக்குக் கூட வேறு துறையின் சார்புச் செயலர் என்னிடம் நேரில் வந்து மு.வ எழுதிய திருக்குறள் உரையை 300 படிகளை பாரி நிலையத்தில் வாங்கித் தருக என்ற போது பெருந்தகை மு.வ. காலங்காலமாக நினைக்கப்படும் தமிழ்க்கு வாய்த்த தனிப்பெரும் பேராசிரியராவார்.

பேரறிஞர் மு.வ. தன் நூலான ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கத்’திற்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க.விடம் அணிந்துரை பெற்றார். ஏனைய நான்கு புதினங்களுக்கும் ‘பாயிரம் மாணவர் தரலாம்’ என்ற நன்னூல் உரைக்கேற்ப பேராசிரியர் மாணவர்களான  அறிஞர் ம.ரா.போ.குருசாமி, சி.வேங்கடசாமி,  கா.அ.சீ. ரகுநாயகன், இரா.சீனிவாசன்  போன்றோர் முன்னுரை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இளங்கலை வகுப்பில் மு.வ.வின் ‘மொழி வரலாறு’  நூல் தான் பயின்ற நூலாகும்.  
இயல்பாக எந்த நூலையும் படித்தாலும் பொருள் விளங்கும்படி படிப்பது தான் அனைவரின் முயற்சியாகும். ஆனால் இந்நூலில் ஒவ்வொரு பக்கத்தின் இறுதித் தொடர்கள் பல இலக்கண நுணுக்கம் வாய்ந்தவை. மொழியியலில் மேனாட்டு அறிஞர்களின் ஆங்கில மேற்கோள்கள் அணிவகுத்து நின்றன.   அதில் குறிப்பாக அந்தந்த ஆங்கிலத் தொடர்களை மிக எளிமையாகத் தன் அருவி நடையிலேயே பேராசிரியரின் மொழிபெயர்ப்பு மிளிர்ந்தன.

சான்றாகப் பழங்காலச் சொற்களாக இராமல் புதியனவாக ஏற்படும் சொற்களானால், அவை ஒப்புமையாக்கம் தவறாமல் ஒழுங்காக அமைகின்றன.  ‘காரன்’ என்ற புதிய விகுதி ஏற்கும் சொற்கள், தயிர்க்காரன், வீட்டுக்காரன், பணக்காரன், கடன்காரன், கடைக்காரன் என ஒரே ஒழுங்காக அமைவது காணலாம். ஒப்புமையாக்கத்தால் இத்தகைய சொற்கள் பற்பல அமைந்து மிக வேகமாகப் பெருகுதல் உண்டு,  அவை பெருகிப் பரவும் வேகம், தொற்று  நோய்கள் பரவும் வேகத்தை நினைவூட்டுவதாகக் கூறுகிறார் அறிஞர் எசுபர்சுன்.

 இளங்கலை பயிலும்போதே தமிழ் மொழிக்கு பிறமொழிச் சொற்கள் இணைப்பது தேவையில்லை என்பதை மிக நுட்பமாக அறிந்து கொண்டேன்.  அதற்கு ‘மொழி வரலாறு’  பாடம் நடத்தும்போதே இந்த மேற்கோள்தான் என் நெஞ்சில் பசுமரத்தாணி போலப் பதிந்து விட்டது.    இன்றும் பலர் என்னை ஏன் ஆங்கிலச் சொற்களை இணைத்தே எழுதலாமே என்று கேட்கும் போதெல்லாம் எசுபர்சினின் மேற்கோள் தான் நினைவில் நிற்கும்.

“இருள் வானத்தில் ஒளிக் கீற்றாய் மின்னும் சொற்களைக் கடன் வாங்குவதற்குரிய காரணங்கள் மூன்றாகும். முதலாவது, தம்மிடம் இல்லாத புதியபொருள்களை அவற்றின் பிறமொழிப்பெயர்களைக் கடன் வாங்குதல். இரண்டாவது, ஒரு மொழியாரிடமிருந்து செல்வாக்கோ, உயர்வோ பெற்றுள்ள ஒரு துறையைக் கற்கும்போது அதற்குரிய அம்மொழிச் சொற்களையும் கற்றும் கையாளுதல். மூன்றாவது,

மொழிபெயர்ப்பாளர்கள் சோம்பலின் காரணமாக, தம் மொழிச்சொற்களைத் தேடிக்காணாமல், பிறமொழிச் சொற்களை அப்படியே கொண்டு வந்து கலந்து சேர்த்தல்.”
கடித இலக்கியங்களில், தங்கைக்கு, நண்பருக்கு என்று பேராசான் மு.வ. வரைந்த கடிதங்கள் கருத்துக் கருவூலங்களாகும்.  நண்பருக்கு என்று ஒன்பது கடிதங்களை நம்பி என்பவர் வளவனுக்கும் எழிலுக்கும் எழுதுவது போலப் பாங்குறத் தன்னுடைய வாழ்வியல் கருத்துகளை எழிலார்ந்த நடையில் எழுதிய கடிதங்கள் தமிழுலகத்திற்குப் பெருங்கொடை எனப் போற்றலாம்.  எழிலுக்கு ஓரிடத்தில் எழுதும்போது, உலக மக்களுக்குப் புரிய வேண்டும் என்ற பெருமனத்தைக் குறிப்பிடுகிற வரிகளை என் கருத்துக் கருவூலத்தில் 30.07.1986 அன்று குறித்திருந்தேன். 

“வேகமான உணர்ச்சி கானாறு போன்றது. நமக்கும் பயன்படாமல் விரைவில் வடிந்து போகும். கானாற்று வெள்ளம் திறந்த மலைக்கும் காட்டுக்கும் பயன்படாமல் அடுத்துள்ள காட்டுக்கும் மேட்டுக்கும் பயன்படுகிறது. வேகம் மிகுந்த உணர்ச்சியும், தற்காப்புக்குப் பயன்படுவதில்லை. தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பயன்படுவதில்லை.  உறங்கும் எதிரியைத் தட்டியெழுப்பி விழுப்புடன் வாழுமாறு செய்து காப்பாற்றுவதற்கே மறைமுகமாகப் பயன்படுகிறது.” என்ற அவரின் ஆணை வரிகளை நம் வாழ்வின் கல்வெட்டு வரிகளாகப் பொறிக்க வேண்டும்.

——பத்துப்பாட்டில் மனம் பற்றுக!பொருநராற்றுப்படைபொருநராற்றுப்படையென்ற தொடர் – பொருநரையாற்றுப்படுத்தும் நூல் எனப்பொருள்படும்: இரண்டாம் வேற்றுமைத்தொகை. ஆற்றுப்படை – வழியிற்செலுத்துவது என ஏழாம் வேற்றுமைத் தொகை. இங்குப் பொருநரென்ற சொல், ஒருவரைக்கூறும் பன்மைக்கிளவியாகும். பொருநர் மற்றொருவர் போல வேடங்கொள்பவர்;  இப்பொருநர், ஏர்க்களம்பாடுவோர் போர்க்களம்பாடுவோர் பரணி பாடுவோரெனப் பலர். அவர்களுள் இப்பொருநன், போர்க்களம் பாடுபவன்: இவ்விஷயம், “போந்தைத்தோடுங் கருஞ்சினை, அரவாய் வேம்பினங்குழைத்தெரியலும், ஓங்கிருஞ்சென்னி மேம்படமிலைந்த, இருபெருவேந்தருமொருகளத்தவிய, வெண்ணித்தாக்கிய வெருவருநோன்றாட், கண்ணார்க் கண்ணிக் கரிகால்வளவன்” எனப் – போர்க்கள வெற்றியை எடுத்துக் கூறுதலாலும், இப்பொருநன் தடாரிப்பறை கொட்டுபவன் என்பது “கைக்கசடிருந்தவென் கண்ணகன்றடாரி,…ஒன்றியான் பெட்டாவளவையின்” என வருவதாலும் அறியப்படும்.

ஆற்றுப்படை யென்பது – கூத்தர் முதலியவர்களுள் ஒருத்தர் கொடையாளியான ஒருவனிடத்துத் தாம் பெற்ற செல்வத்தை எதிர்வந்த இரப்போர்க்கு உணர்த்தி அவரும் அந்தக்கொடையாளியினிடம் தாம் பெற்றது போலவே பொருளைப்பெறுமாறு வழிப்படுத்துவது. இது புறப்பொருளான பாடாண்டிணையின் துறைகளுள் ஒன்று.  இதன் இலக்கணம்- “கூத்தரும் பாணரும் பொரு நரும் விறலியும், ஆற்றிடைக்காட்சி யுறழத்தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க்கறிவுறீ இச், சென்று பயனெ திரச்சொன்ன பக்கமும்” என்று தொல்காப்பியத்துக் கூறப்பட்டுள்ளது.இதன் பொருள்:-ஆடல்மாந்தரும் பாடற்பாணரும் கருவிப்பொருநரும் இவருட் பெண்பாலராகிய விறலியும் என்னும் நாற்பாலரும் – தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவித்து, அவரும் ஆண்டுச்சென்று தாம் பெற்றவை யெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும் என்பது.

ஒவ்வொருவரும் இங்ஙனம் தாம் பெற்ற செல்வத்தை இரவலர்க்கு அறிவுறுத்தி வழிப்படுத்துதற்கு உரியராயினும், கூத்தர் முதலியோரே எதிர்வந்த கூத்தர் முதலியோர்க்குத் தாம் பெற்றதைக் கூறி அவரை வழிப்படுத்துவதாகச் செய்யுள் செய்வதே கவிமரபு.  இங்ஙனம் இயற்றப்பெற்றவை- கூத்தராற்றுப்படை பாணராற்றுப்படை பொருநராற்றுப்படை விறலியாற்றுப்படை என வழங்கும்.
இந்தப் பொருநராற்றுப்படை, நக்கீரனார் முதலிய கடைச்சங்கப் புலவர்களாலியற்றப்பட்ட பத்துப்பாட்டுக்களுள் இரண்டாவது. பத்துப்பாட்டுக்களான – திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன. (இவைகளைப் பத்துப்பாட்டு எனத் தொகுத்தவரும் தொகுப்பித்தவரும் இன்னாரென விளங்கவில்லை.)  இந்நூல்- 248 – அடிகளையுடைய நேரிசையாசிரியப்பாவாலாகியது: இந்த ஆசிரியப்பா முழுதும் ஓரோசையாக அகவலோசையே கிடப்பின் படிப்போர்க்கு ஊக்கங்குன்றுமென்று 177 – அடிகளுக்குப்பின் படிப்போர்க்கு ஊக்கம்பெருகுமாறு இருசீர்வஞ்சியடிகள் 46 – இடையிடையே வரத் தொடுத்து அகவலோசையன்றி வேற்றோசையாகிய தூங்கலோசை முதலியன விரவிவரப் பாடிய ஆசிரியரின் திறமை மிகவும் பாராட்டுதற்கு உரியது. 

ஆசிரியப்பாவில் வஞ்சியடிவரலா மென்பதை “ஆசிரியநடைத்தேவனஞ்சி” என்று தொல்காப்பியனார் பெறவைத்தமை காண்க. 186 – ஆவது அடியை “ஈற்றி யாமை தன்பார்ப் போம்பவும் ” என நாற்சீரடியாகப் பிரிக்கவும் இடமுண்டு.  ஈற்றயலடி முச்சீரடியாலமைந்தது, இச்செய்யுள் நேரிசையாசிரியப்பாவாதலாலாகும்.
இஃது பரிசில்பெறக் கருதிய ஒருபொருநனை, பரிசில் பெற்றானொரு பொருநன் இளஞ்சேட்சென்னிபுதல்வனாகிய கரிகாற்பெருவளத்தானிடத்திற் செல்லுமாறு வழிப்படுத்தியதாகக் கற்பித்து முடத்தாமக்கண்ணியார் பாடியது: (தாம் ஒருபொருநனாகவும், மற்றொருபொருநனைத் தமக்குப் பரிசுகொடுத்தவனிடத்தே ஆற்றுப் படுத்துவதாகவும் இவ்வாறு படைத்துக்கொண்டு கூறுதல், கவி மரபு.)இதனை இயற்றியவர்-முடத்தாமக்கண்ணியார்: “இயற்பெயர் முன்னர்” என்னுஞ் சூத்திரவுரையில் ‘ஆர்’ விகுதி பன்மையோடு முடிதற்கு முடத்தாமக்கண்ணியார் வந்தாரென்பது உதாரணமாகக் காட்டப்பெற்றிருத்தலால், இவர்பெயர் ‘முடத்தாமக்கண்ணி’ என்று தெரிகின்றது. இப்பெயர் உறுப்பால் வந்ததென்றும், இவர் பெண்பாலாரென்றும் கொள்ள இடமுண்டு. இவரைப்பற்றி வேறுவிவரமொன்றும் தெரியவில்லை.

ஆசிரியர் நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டுக்கும் உரையெழுதியுள்ளார். அவ்வுரை இல்லாவிடின், இக்காலத்தார்க்குப் பத்துப் பாட்டுப்போன்ற பழைய நூல்களுக்குப் பொருள் ஒருசிறிதும் புலப்படாது. ஆயினும், அவ்வுரையை உள்ளபடியே பதிப்பித்தால், அவ்வாசிரியர் சில இடங்களில் இங்கே ஒரு சொல்லையும் எங்கேயோ கிடக்கும் மற்றொரு சொல்லையும் பிணைத்துப் பொருள் கூறும் வழக்கமுடையராதலால் நேராகச் சொல்லக்கூடிய பொருள் தவறுதலாலும், மாணவர்க்குப் பொருள் விளங்குவது அருமையாமாதலாலும் அங்ஙனஞ்செய்யாது, பெரும்பாலும் அவ்வுரையை ஆதாரமாகக்கொண்டு, நேராகவே பொருள் சொல்லுதற்கு உரியனவாத் தோன்றுமிடங்களில் வருந்திப்பொருள் கூறாது நேராகவே அந்வயித்து எளிய நடையில் இவ்வுரை எழுதப்படுகிறது.

கரிகாற்பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்தக்கருதும் பொருநன் ஆற்றுப்படுத்துபவனை நோக்கி, ‘பரிசில்கொடுப்பாரைத்தேடிச் செல்லும் நீ வேறு வழியிற்போகாது என்னையெதிர்ப்பட்டது, உனது முன்னைய நல்வினைப் பயனே’ என்று முதல் 59 – அடிகளில் அன்னான் தன்னை வழியிடைக் கண்டதைப் பாராட்டிக் கூறுகின்றான். முதலில் மூன்று அடிகளால் ஆற்றுப்படுத்துபவன் ஆற்றுப் படுத்தக்கருதும் பொருநனை விளிக்கின்றான்:1-3: அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச்       சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது       வேறுபுல முன்னிய விரகறி பொருந !(1) அறா அ – இடையறாத, யாணர் – செல்வவருவாயினையுடைய, அகல் தலை – அகன்ற இடத்தையுடைய, பேர் ஊர்-பெரிய ஊர்களிடத்து, (2) சாறு கழி வழி நாள் – விழாக்கழிந்த பின்னாளில், சோறு நசை உறாது – (அங்கே பெறுகின்ற) சோற்றை விரும்பு தல் செய்யாமல்,(3) வேறு புலம் முன்னிய – (விழாக்கொண்டாடும்) வேறோரிடத்தை (அடைய)க் கருதிய, விரகு. அறி-உபாய்த்தை யறிந்த, பொருந-பொருநனே! 

திருவிழா நடந்து முடிந்த ஊரிலே பின்னுஞ்சோறு கிடைக்குமென்றாலும் அங்கே தங்கியிராது புதிதாகத் திருவிழா நடக்கும் வேறூரை நாடிச்செல்பவன் இந்தப் பொருநனென்க.  திருவிழாக் கழிந்தபின்பும் இரண்டொருநாள் அங்கு உணவு கிடைக்குமேனும் உணவு இடுபவர் வெறுக்குமளவும் அங்குத்தங்குவது நன்று அன்று என்றுகருதி, திருவிழாநடக்கின்ற வேற்றுப்புலத்துக்குச் செல்வதனால், பொருநனுக்கு ‘விரகறி’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.

திருவிழாக்காலங்களில் பலர்க்கும் உணவு இடுதல் முற்காலத்து இயல்பு என்பது, இதனாற் பெறப்படும்.பொருந-அண்மைவிளி: “அண்மையினியல்பு மீறழிவும் ” என்பது, 4 – ஆவது அடிமுதல் 24 – ஆவது அடிவரை, பொருநனுடன் செல்லும் பாடினி பாலையாழ் வாசித்துக்கொண்டு பாடுவதைக் கூறுகின்றான் : அவற்றுள் 19-அடிகளால் அந்தப் பாடினி வைத்துக்கொண்டுள்ள பாலையாழ், பத்தல் முதலிய உறுப்புகளைக் கொண்டிருத்தல் கூறப்படும்.4:  குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்குளம்பு வழி அன்ன – ( மானின் ) குளம்பு அழுத்திய இடத்தையொத்த, கவடு படு –  இரண்டருகுந் தாழ்ந்து நடு உயர்ந்த, பத்தல் – பத்தலினையும், குளம்பு – விலங்குகளின் அடிப்பாதம். பத்தல் – குடுக்கை போலுள்ளயாழின் ஒருறுப்பு. கவடு – பகுப்பு.“கொன்றைகருங் காலிகுமிழ் முருக்குத் தணக்கே” என்பதனால், பத்தற்கு – மரம், குமிழும் முருக்கும் தணக்குமாமென்பர். (கோட்டிற்கு மரம் கொன்றையும் கருங்காலியுமாம். கீழ் 13 – ஆம் வரி உரைகாண்க.)

64 –  “தென்றலை வருடிய திரு.வி.க!”

கல்லூரியில் திரு.வி.க நூலான “முடியா? காதலா? சீர்திருத்தமா?” என்ற பனுவலை வகுப்பிலும், இல்லத்திலும் நான் பயின்ற போது நூலாசிரியரின் நுண்மான் நுழைபுலம் கண்டு விம்மிதம் அடைந்தேன்.  வின்சர் கோமகனாரைப் பற்றி எழிலோவியமாக காட்சித் தந்தது கவின் நடைப் படைப்பாகும்.  சொல் ஆளுமைத் திறனைக் குறித்து அந்நாளைய கூட்டங்களில் மேற்கோள் வரிகளாகவே சொல்லிப் பழகினேன். அறிமுகவுரை, முடிப்புரை என்றெல்லாம் எழுத மாட்டேன், திரு.வி.க. வின் நடை யழகிலேயே தோற்றுவாய், இறுவாய் என்று தான் எழுதி மகிழ்வேன்.  அந்நூலில் எத்தனை மேற்கோள்களை அடுக்கி அடுக்கி அறிவுக்கு விருந்தாக அணி செய்துள்ளார் என்பது பாராட்டத்தக்க பணியாகும்.

கடமை நமது ஆனால் பெரிது, பெரியதையே நினைப்பது உரிமை, நினைவு மனத்தின் பயிற்சி,  மனப் பயிற்சிதான் ஒழுங்கு, ஒழுங்குதான் வாழ்வின் உண்மை, உண்மைதான் உலகிற்கு ஒளி, உள்ளுங்கள் உயர்வடையலாம்.  இப்படிச் சின்னஞ்சிறு தொடர்களாக எழுதிய தமிழ்த்தென்றல், அரசியல் ஞானி, அருளாளர், தொழிற்சங்கத்தின் தாய் என்றெல்லாம் நாடு போற்ற வாழ்ந்து பன்முகத் தமிழ் விளக்காய் திரு.வி.க. இருந்தார்.
திரு.வி.க.விற்கு நடையில் எளிமை, உடையில் எளிமை, வாழ்வில் எளிமை, அரசியலில் வாய்மை, நெஞ்சில் நேர்மை, தொழிலாளர்களை அரவணைக்கும் தாய்மை, அனைத்துச் சமயங்களையும் ஒன்றாகக் காணும் பெருந்தன்மை, பெண்களைத் தாயாக, இறைமையாகப் போற்றிப் பாராட்டிய பண்பு.  இவையெல்லாம் ஒரு வடிவம் பெற்றால் திரு.வி.க.வின் வடிவமாகத் திகழும். ஐந்தடி நான்கு அங்குலம் உயரமும் மெல்லிய உடலோடும் ஒரு கையில் ஆறு விரல்களோடும், காலில் மூன்று விரல்கள் ஒட்டிய நிலையிலும் பிறப்பிலேயே புதுமை வாய்ந்தவராகப் பிறந்தவர் என்பர். உறுதியான மனத்தோடும் வாழ்ந்த திரு.வி.க.வைத்தான் அறிஞர் மு.வ. தனது வழிகாட்டியாகக் கொண்டார்.

அறிஞர் மு.வ. அவர் தோற்றத்தைக் காட்டி எழுதியதை என் கருத்துக் கோவையில் 18.12.1986-இல் குறித்த வரிகள்:-“வெள்ளாடை சூழ்ந்த மெல்லிய உடலும்,புலமைப் பொலிவு பெற்ற அழகிய முகமும்,அருள் பெருகும் கூரிய விழியும் பெற்ற வானம்பாடி அவர்; தமிழ்நாட்டில் பிறந்த தமிழ் வானம்பாடி;சமரச வானம் கண்டு களிக்கும் வானம்பாடி;தமிழகம் தழைக்க உலகம் உய்யப் பொதுமை மழை பொழியுமாறு வாழ்த்துப் பாடும் ‘வானம்பாடி’ எனத் திரு.வி.க.வுடன் மிக அணுக்கமாக நெருங்கிப் பழகிய நிலையில் டாக்டர் மு. வரதராசன், அவரைப் பொதுமை வானம்பாடியாகச் சுட்டிக்காட்டினார்.

பொதுவாக, திரு.வி.க. போராட்டவாதி; வர்க்க உணர்ச்சி கொண்டவர்; அன்புள்ளத்தில் காந்தியடிகளின் சீடர்; பொருளாதாரத்தில் காரல் மார்க்சின் பக்தர்; இந்தச் சிறப்பு இயல்புகளால்தான் அவர் சென்ற காலம் – நிகழ்காலம் – வருங்காலம் ஆகிய மூன்றுக்கும் பிரதிநிதியாக இருக்கிறார். திருக்குறள் தெளிவுரை என நூற்றுக் கணக்கான உரைகள் இன்று பெருகியுள்ளதற்குத் திரு.வி.க. எழுதிய திருக்குறள் விளக்கமே அடிப்படையாகும்.

திரு.வி.க. ஐம்பத்தாறு நூல்களை எழுதினார்.  திரு.வி.க. பெரிய ஆலமரம் போன்றவர்.  பெண்ணின் பெருமையில் காதல் மணம், விதவை மணம், கலப்பு மணம் முதலியவற்றை வற்புறுத்தியதோடு இளைஞர்கள் வாழ வேண்டிய நெறிமுறைகளும் அதில் வகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் விடுதலையும் என்ற நூலில் அரசியல் வளர்ச்சியும், சமுதாய சீர்திருத்தமும், தீண்டாமை ஒழிப்பும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும் என்ற நூலில் மனிதன், வாழ்க்கை, காந்தி அடிகள் என்ற மூன்று பெரும் பிரிவுகளில் அரிய கருத்துக்கள் இடம் பெற்றன.  நபிகள் நாயகத்தின் பிறந்த நாளாகிய மிலாதுநபியில், நபிகள் நாயகம் – திருநாவுக்கரசர் – விருஷப தேவர் ஆகிய மூவரையும்ஒருங் கிணைத்து இசுலாமியர் கூட்டத்தில் அனைவரும் மகிழ்ந்து போற்றும் வகையில் பேசிய பேராற்றல் படைத்த திரு.வி.க.வின் மேடைத்தமிழ் தமிழுக்கு வாய்த்த அணிகலனாகும்.  அரசியலில் தெளிவான தமிழ் நடனமாடியது.

திருவாரூர் விருத்தாசல முதலியார் மகனார் கலியாண சுந்தரனார் என்ற பெயர் தான் திரு.வி.க. என நிலைத்தது.  படிப்பாலும், பண்பாலும், உழைப்பாலும், ஒழுக்கத்தாலும், நாட்டுப்பற்று, மொழிப்பற்றாலும், அரசியல் பொதுத் தொண்டினாலும், பொதுமை உணர்வாலும் சிறப்புற்று வாழ்ந்த இவரை இராயப்பேட்டை முனிவர் என்றே அழைத்தனர்.

தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை பல்கலைக்களஞ்சியமாக எழுதியதோடு அரசியல் தலைவர்கள், கலைவாணர்கள், இலக்கியப் புலவர்கள், பல்வேறு சமயங்களின் தலைவர்கள், சமுதாயத் தொண்டர்கள், மகளிர் என்று 125 சான்றோர் பெருமக்களைப் பற்றி அந்த வரலாற்று நூலில் எழுதியுள்ளார்  ஏறத்தாழ திரு.வி.க. வின் வாழ்க்கைக் குறிப்புகளைக் காட்டிலும், தமிழகத்தினுடைய வரலாறு என்றே அதைக் குறிப்பிடலாம்.
சான்றாக தமிழ்த்தாத்தா உ.வே.சா வைப் பற்றிய கருத்தைக் காணலாம்.  டாக்டர் சாமிநாத ஐயர் வாழ்க்கை ஓர் இலக்கியம். சாமிநாத ஐயர் தமிழிலே பிறந்தார்; தமிழிலே வளர்ந்தார்; தமிழிலே வாழ்ந்தார். அவர் பிறப்பும் தமிழ்; வளர்ப்புந் தமிழ்; வாழ்வுந் தமிழ். அவர் மனமொழி மெய்களெல்லாந் தமிழே ஆயின. அவர் தமிழாயினர்; தமிழ் அவராயிற்று. அவர் தமிழ், தமிழ் அவர்.  பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சாமிநாத ஐயர்.

தமிழகத்தில் சங்கங்கள், நிலையங்கள், நிறுவனங்கள், இதழ்கள் முதலிய பல்வேறு அமைப்புக்கள் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் சில சீர்குலைந்து போனதற்கு 13 காரணங்களைத் திரு.வி.க. சுட்டிக் காட்டியுள்ளார் என்று என் நெருங்கிய உறவினர் அறிஞர் நாகலிங்கம் பட்டியலிட்டுள்ளார்.1.சங்கங்கங்களை எல்லாம் ஒன்றுபடுத்தி காக்க வல்ல ஒரு தாய்ச்சங்கம் இன்மை2.பல கலைகளை விடுத்து வெறும் இலக்கிய இலக்கண ஏடுகளைக் கட்டி அழுதல்3.உள்ளாட்டம் – வெளியாட்டம் – ஆடல் பாடல் – சிலம்பம் – சிற்றுண்டி – முதலியன இன்மை4.வகுப்புப் பிணக்கு5.தமிழ் பயின்றவருள் பெரும்பான்மையோர் பிற் போக்கராயிருத்தல்6.நாட்டுப் பற்றின்மை7.கருத்து வேற்றுமைக்கு மதிப்பளியாமை8.பொறாமை9.பிடிவாதம்10.கால தேச முறைமைக் கேற்பச் செயல்களை மேற்கொள்ளத் தயங்கள்11.தன்னலம்12.பொறுமையின்மை13.ஊக்கமின்மைஇவை இன்றும் பொருத்தமாகின்றன.

அப்பா, ஒன்றைச் சொல்லி சுட்டிக் காட்டுவார். தமிழிலேயே தோய்ந்த தமிழ்த் தென்றல் தான் நடத்திய இதழ்களின் பெயர்கள்: தேசபக்தன், நவசக்தியாகும். அதே வேளையில் தந்தை பெரியார் நடத்திய இதழ்களின் பெயர் விடுதலை, குடியரசு.

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!பொருநராற்றுப்படை தொடர்ச்சி…

           5-10. விளக்கல் உருவின் விசியுறு பச்சை           எய்யா விளஞ்சூல் செய்யோ ள்அவ்வயிற்று           ஐதுமயி ரொழுகிய தோற்றம் போலப்           பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை           பொருநராற்றுப்படையின் படையின் புனைதிறம் காண சில            தொடர்களுக்கு உரையமைந்ததை எண்ணி இன்புறலாம்.
(5) விளக்கு அழல் உருவின் – விளக்கினது எரிகின்ற நிறத்தையுடைய, விசி உறு – விசித்துப்போர்த்தலுற்ற, பச்சை. தோலாகிய,
(6) எய்யா-மிக அறியப்படாத, இள சூல்இளையகருப்பத்தையுடைய, செய்யோள் – சிவந்தநிறத்தையுடை யோளது,அ வயிறு – அழகினையுடைய வயிற்றின்,
(7) ஐது மயிர் ஒழுகிய மெல்லிதாகிய மயிர் ஒழுங்குபடக்கிடந்த, தோற்றம்போல -,
(8)பொல்லம் பொத்திய- கூட்டித்தைத்த, பொதிஉறு – பொதிதல்பொருந்திய, போர்வை – போர்வையினையும்.இது, பத்தரைப்போர்த்ததோல். ”விளக்கழலஉறுத்தபோலும் விசியுறுபோர்வை” என்ற சிந்தாமணியிலும் வரும். உரு – பத்தரைமூடிய தோலின்தையலுக்குச் செய்யோளின் இளஞ்சூலையுடைய வயிற்று ஐது ஒழுகியமயிரையுவமை கூறினார். செய்யோளென்றது. மயிரொழுங்கு விளங்கித்தோன்று தற்கு. ‘எய்யாமையே அறியாமையே’. அளைவாழ் லவன் கண்கண் டன்ன துளைவாய் தூர்ந்த துரப்பமை ஆணி
(9) அளை வாழ் அலவன் – வளையிலே வாழ்கின்ற நண்டின், கண் கண்டு அன்ன – கண்ணைக் கண்டாலொத்த,

(10) துளை வாய் தூர்ந்த – துளைகளின் வாய் மறைதற்குக் காரணமாகிய, துரப்பு அமை-( தோல்ஞெகிழாமல் ) முடுக்குதலமைந்த, ஆணிஆணியினையும், துளைவாய் தூர்ந்த துரப்பமையாணி என்பதற்கு – பத்தல் இரண்டுஞ்சேர்தற்கு முடுக்கின ஆணியென்றும் கூறுவர். ஆணி அளைவாழலவன் கண்ணைப்போலுமென்பர்.

“திவவுத்திங்கள் கோணிரைத் தனையவாணி” என்ற இடத்து ஆசிரியர் நச்சினார்க் கினியர் ‘கோள் நிரைத்த திங்கள் பத்தரில் தோலைச் சூழ முடுக்கின ஆணிக்கு உவமம். அதுளைவாய் தூர்ந்த துரப்பமையாணி என்றார் பிறரும்’ என்று கூறியிருத்தற்கு ஏற்ப, இங்கு உள்ள ஆணியென்பதனை மேலடியோடும் இயைத்து, ‘ஆணி, திங்களின் வடிவிற்றாகியிருப்ப’ என்று உரைத்தார்.
           11-12. எண்ணாள் திங்கள் வடிவிற்றாகி           அண்ணா வில்லா வமைவரு வருவாய்
(11) எண் நாள் திங்கள் வளர்பிறை எட்டாம் நாளில் தோன்றுஞ் நிலவின், வடிவிற்று ஆகி வடிவையுடைய தாய்,
(12), அள் நா இல்லா-உள் நாக்கு இல்லாத, அமைவருபொருந்துதல் வந்த, வறு வாய் வறிய வாயினையும்,
           13.பாம்பணந் தன்ன வோங்கிரு மருப்பின்
(13) பாம்பு அணந்து அன்ன – பாம்பு தலையெடுத்தால் போன்ற, ஓங்கு – ஓங்கின, இரு மருப்பின் – கரிய தண்டினையும்,யாழின் நீண்ட தண்டம், பாம்பு தலையெடுத்திருந்தாற்போலு மென்க. தண்டிற்கு மரம், கொன்றையுங் கருங்காலியுமாம்.
           14-15.மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்  கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின்
(14) மாயோள் – கரியநிறத்தையுடையோளுடைய, முன்கை-முன்னங்கையிலேயணிந்த, ஆய் தொடி – அழகிய தொடி யை, கடுக்கும் ஒத்திருப்பதும்,–
(15) கண் கூடு இருக்கை திண் பிணி – ஒன்றோடொன்று நெருங்கின இருப்பையுடைத்தாகிய திண்ணிய பிணிப்பினையும் உடைய, திவவின் – வார்க்கட்டினையும்,யாழின் வார்க்கட்டு, மாயோள் முன்கை ஆய்தொடிகடுக்குமென்க.
‘மடந்தைமுன்கைக், குறுந் தொடி யேய்க்கு மெலிந்து வீங்குதிவவு” என்ற பெரும்பாணாற்றுப் படை, இங்கு ஒப்புநோக்கத்தக்கது. ‘தொடித் திரி வன்ன தொண்டு படுதிவவின்’ என்றது மலைபடுகடாம்.
           16-18. ஆய்தினை யரிசி யவைய லன்ன           வேய்வை போகிய விரலுளர் நரம்பின்           கேள்வி போகிய நீள்விசித் தொடையல்
(16) ஆய் தினை அரிசி-ஆராய்ந்தெடுத்த தினையரிசியின், அவையல் அன்ன – குத்தலரிசியையொத்த,
(17) வேய்வை போகிய குற்றம்போகிய, விரல் உளர்-விரலாலசைக்கும், நரம்பின்நரம்பினுடைய,
(18)கேள்வி போகிய- இசைச்சுருதிமுற்றுப்பெற்ற, நீள் விசி – நீண்ட விசித்தலையுடைய, தொடையல் – தொடர்ச்சியினையும்,-தினையின்குத்தலரிசி யாழ்நரம்பிற்கு உவமையாதலை “ஆய் தினையவையலனையவா நரம்பு” என்றும் கூறினார்.
           19-20.மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன           அணங்கு மெய்ந்நின்ற வமைவரு காட்சி
(19) மணம் கமழ் மாதரை – திருமணம் செய்தமை தோன்றுகின்ற மாதரை, மண்ணி அன்ன. அலங்கரித்தாலொத்த,

(20) அணங்கு மெய் நின்ற-( யாழிற்கு உரிய ) தெய்வம் தன்னிடத்தே நின்ற, அமை வரு-அமைதல் வருகின்ற, காட்சி-அழகினையும், “மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்தி… குற்றம் நீங்கிய யாழ்” என்ற சிலப்பதிகாரம் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.
யாழிற்கு உரிய தெய்வம் மாதங்கி எனப்படுவார்.

21-22. ஆறலை கள்வர் படைவிடல் அருளின்           மாறுதலை பெயர்க்கு மருவின் பாலை
(21) ஆறு அலை கள்வர் -வழியையலைக்கின்ற கள்வர், படைவிட- (தம் கையிற்) படைக்கலங்களை விடும்படி, அருளின்
(22) மாறு. அருளுக்கு மாறாகிய மறத்தினை, தலை பெயர்க்கும் – (அந்தக்கள்வருடைய ) இடத்தினின்று போக்குகின்ற, மருவு இன்-மருவுதலினிய, பாலை-பாலையாழை.
பாலையாழின் இசையைக் கேட்ட ஆறலை கள்வர் தமது கையிற் படை நெகிழ்ந்து விழத் தமக்கு இயற்கையான மறக்குணத்தினின்று நீங்குவரென, அவ்யாழின் சிறப்பைக் கூறினார்.
           23-24. வாரியும் வடித்து உந்தியு முறழ்த்தும்           சீருடை நன்மொழி நீரொடு சிதறி
(23) வாரியும் – ( நரம்புகளைக் ) கூடத்தழுவியும், வடித்தும்-உருவியும், உந்தியும் – தெறித்தும், உறழ்ந்தும் – ஒன்றைவிட்டு ஒன்றைத் தெறித்தும்,
(24) சீர் உடை நல் மொழி நீரொடு சிதறி-சீரையுடைத்தாகிய தேவபாணிகளை நீர்மையுடன் பரக்கப்பாடி.
யாழ் மீட்டலைக் காட்டும் நுணுக்கம் வியப்பைத் தருகிறது.
பாலையாழை வார்தல் முதலியன செய்து நன்மொழியைப் பரக்கப்பாடினர் . ‘வார் தெலென்பது – சுட்டுவிரற் செய்தொழில்: வடித்தல் என்பது சுட்டுவிரலும் – பெருவிரலும் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல்.
உந்தலென்றது நரம்புகளைத் தெறித்து வலிவிற்பட்டதும் மெலிவிற்பட்டதும் நிரல்பட்டதும் நிரலிழி பட்டதுமென்று அறிதல்.

உறழ்தலென்பது – ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல்’ என்று, சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் எழுதினார்.
சீர்’ எனவே, பாணியும் தூக்கும் உள்ளனவாம்.

சீர்முதலியன தாளவிசேடங்கள்: ‘சீர்-முடியுங்காலத்தைத் தன்னிடத்தேயுடையது; பாணி-எடுக்குங்காலத்தைத் தன்னிடத்தேயுடையது: தூக்கு-நிகழுங் காலத்தைத் தன்னிடத்தேயுடையது’ என்றுகலித் தொகையுரையில் நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

தேவபாணியென்பது-தேவரைப்பரவுதல்: அது பெருந்தேவபாணி சிறுதேவபாணியென இருவகைப்படுமென்றும், அவை முத்தமிழ்க்கும் பொதுவென்றும், இசைத் தமிழில் வருங்கால் செந்துறை முதலிய இசைப்பாக்கள் பத்தின் பாற்படுமென்றும் கூறுவர்.
பொருநன் செல்லும்போது உடன் செல்லும் பாடினியின் உருவத்தைக் கூந்தல் முதல் அடிவரையில்
           25 – முதல் 47 – வரையிலுமுள்ள இருபத்துமூன்று அடிகளால் புனைந்துள்ளார்.

 1. அறல்போற் கூந்தல்அறல் போல் கூந்தல் – (ஆற்றின்) கருமணல் போன்ற கூந்தலினையும்,-பிறைபோல் திருதுதல் பிறை போல்-பிறைநிலாப்போல், திரு-அழகினையுடைய, நுதல் – நெற்றியினையும்.

unread,4 Jul 2021, 04:28:47to மின்தமிழ்65 –  “இமயப் புலமை மூதறிஞர் வ.சுப. மாணிக்கம்”
எந்தையார் பெரிதும் மதித்துப் போற்றிய பெரும் பேராசிரியர் பேரறிஞர் வ.சுப. மாணிக்கம் (17.04.1917 – 25.04.1989) ஆவார்.  சென்னை வரும்போதெல்லாம் அப்பாவைத் தவறாமல் தலைமைச் செயலகத்திலும், அண்ணாநகர் இல்லத்திலும் சந்தித்துப் பேசுவார்.  1986 ஆம் ஆண்டில் ஓடியாடிக் கொண்டிருந்த என்னிடம் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் தமிழிலக்கியம் பயில்கிறாய் நீ  எவ்வளவு பாடல்கள் உனக்கு மனனமாகத் தெரியும் என்றார்.   திகைத்து நின்றேன். நூறு பாடல் தெரியும் என்றேன்;  அதற்கு உடனே என்னப்பா, அருள் ! திருக்குறளே ஆயிரத்துக்கு மேல, கம்பராமாயணமோ பத்தாயிரத்திற்கு மேல்; நீ என்ன நூறு என்று சொல்கிறாய்?  என்றவுடன் அறிவார்ந்த அறிஞரிடம் எப்படி பேசக்கூடாது என்று பின்னர் தெளிந்தேன்.
மூதறிஞரின் வள்ளுவம்,  இரட்டைக்காப்பியங்கள்,  கம்பர்,  காப்பியப் பார்வை, தலைவர்களுக்கு, தமிழ்க்காதல், தொல்காப்பியத்திறம்  தொடர்பான நூல்கள் நெல்லிக்கனி, மாணிக்கக்குறல் எப்போதும் அப்பாவின் மேசையில் முதன்மையாக அணி நிற்கும்.  ஒருநொடியில் மூதறிஞரின் பல நூல்களை எழுதிக் கோடிட்டு அப்பா படிப்பதும் பல கருத்துகளை  மீளவும் அடிக்கோடிட்டிருப்பதும் பல நிலைகளில் கண்டுள்ளேன்.  அவரின் அழகான முத்து முத்தாக  கைப்பட எழுதிய கடிதங்கள் அப்பாவிற்கு வந்தமையையும் கண்டுள்ளேன்.  பிறகு மெதுவாக அவரின் நூல்களைப் புரட்டத் தொடங்கியபோது மூதறிஞரின் செம்மாந்த நடையைக்கண்டு வியந்து மகிழ்ந்தேன்.

மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் நடையைப்பற்றி என் கருத்துக் கோவையில் ( 04.10.1986 ) நான் குறித்த வரிகள்:“என் எழுத்துகள் கட்டளைச் சொற்களால் கட்டளை நடையால் அமைந்தவை;  சொற் பல்குதல் என்ற மிகைக்கு இடமில்லாதவை;  செறிவு மிகுந்தவை; வேண்டுங்கால் புதிய சொல்லாக்கங்களும், புதிய சொல் வரவுகளும், புதிய தொடராட்சிகளும் உடையவை.  நீண்ட செந்தமிழுக்கு எதனையும் நிறைவாகத் தூய்மையாகச்  சொல்லவல்ல தற்கிழமைத் திறமுண்டு;  மொழித்திறத்தைப் பயன்படுத்தும் பயில்திறம் எழுத்தாண்மையர்க்கு வேண்டும். தூய செந்தமிழால் ஒருவர் எழுதவில்லையெனின், அது தமிழ்க் குறைபாடன்று;  தெளிவும் உறுதியும் பயில்வும் இல்லா எழுதுகையர் குறைபாடு, என்று உணர்வதே மெய்யுணர்வு” என்று எழுதிய வரிகள் எந்நாளும் மின்னும் பொன் வரிகளாகும்.

அதே போல மாணவர்களுக்கே உரித்தான ஒரு கேள்வி வரும் அப்படியென்றால் செவ்விய உரைநடை எது என்று கேட்கத் தூண்டும்;  எங்களையெல்லாம் கருத்திற் கொண்டு அதற்கும் விளக்கம் வந்ததைக் கண்டு திகைத்தேன்; அவ்வரிகளையும் என் அந்நாளைய குறிப்பில் எழுதியிருந்தேன்.“செவ்விய உரைநடைக்குத் தொடர் இரத்தமாகும்;  சொற்கள் எலும்பாகும். நல்ல தமிழ்ச் சொல்லும் பொருந்திய தொடர்பாகும் பெருவரவாக அமைந்தால் தான் வருங்காலத் தமிழ் உரைநடை பின் வாங்காது சீர்மையும், நீர்மையும், நேர்மையும் பொலிந்து வானுயர் தோற்றமாக வளரும் என்ற அவரின் அழுத்தமான கருத்தாக மிளிர்ந்தது.”  

அவரின் செந்தமிழ் நடைக்குப் பல சான்றுகள் உள்ளன. என்னைக் கவர்ந்த மற்றொரு சான்று;”எப்பருவத்தினரும் எந்நிலையினரும் செய்யக்கூடிய பொது நலன்கள் ஏராளமாக உள்ளன.  இவற்றைச் செய்வதற்கு பணம் தேவையில்லை, மனமே தேவை. அழைப்புத் தேவையில்லை; உழைப்பே தேவை.  அறிவு கூடத் தேவையில்லை; அன்பு கூடத் தேவை.” என்ற வரிகளை நான் அரிமாக்குருளையர் கூட்டங்களில் அவ்வப்போது சொல்லிக் காட்டி அறப்பணிகளை செவ்வனே செய்ய ஊக்கமூட்டும் அறவுரை என்றேன்.

அப்பா அடிக்கடி அவரின் வள்ளுவத்தைத் தொடர்ந்து படிப்பார்; திருக்குறள் வினையின் நீங்கி விளங்கிய அறிவன் கண்ட தலை நூல் என்று பேரறிஞர் வ.சுப.மா எழுதுவதைப் படித்துக்காட்டி அந்நூலை நடைமுறைக் கண்ணோடு தான் நாளும் பார்க்க வேண்டும். வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு கூராய வேண்டும்; காலப்போக்கோடு ஒத்திட்டுக் காண வேண்டும் என்ற கருத்தை வழிமொழிவார் அப்பா.

அவ்வண்ணம் 02.02.1993 ஆம் நாளன்று மூதறிஞர் செம்மல் வ சுப மாணிக்கனார் பற்றி அப்பா எழுதிய குறிப்பு வருமாறு :-“மூதறிஞர் செம்மல் வ சுப மாணிக்கனார் தமிழறிஞர் மூலம் போற்றி வழிபடத் தக்கதோர் பொன் விளக்கு.  நகரத்தார் மட்டுமின்றி நாட்டாரெல்லாம் அறிந்து புகழ்ந்த முழு நிலவு. நன்குளம், தமிழ்க்காதல், சிந்தனை களங்கம், கம்பர் ஆகிய நூல்கள் இவர்தம் ஆராய்ச்சி திறனை தமிழ் உலகிற்கு அறிவித்த அரிய நூல்கள். மரபு வழி சிந்தனை, இலக்கணம், புதுமை கண்டுரைக்கும் புலமை நுட்பம், தமிழ் நெறி பாதுகாப்பு உணர்வு, மொழிப்பற்று எனப்பல செம்மாந்த சிறப்புகளை உடையவர் எங்கள் வ.சுப.மா.. தமிழன்னையின் ஈடு இணை உற்று நேர்காணர் வ சுப அவர்களின் சாயலே எனக்கு தோற்றம்.
பல்லாண்டுகள் பேராசிரியராக பணியாற்றி புலமை மிக்க மாலை பிறக்கடைகளை உருவாக்கிய பீடுசால் பெருந்தகை;  மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தராயமர்ந்து விழுமிய கல்வி பணிபுரிந்த வித்தகர். தமிழ்வழி கல்வி இயக்ககம் கண்டு உடல் சலியாது உரைத்த உறவோர் என பல வகையில் நாம் போற்றத்தக்கவர் மூதறிஞர் செம்மல் மாணிக்கனார்.  நான் நழுவிய போதெல்லாம் என்னை எடுத்தெடுத்த தழுவிய தந்தை. மாணிக்கனாரின்  நினைவைப் போற்றும் வகையான் தமிழ் மொழிக்குத் துறைதோறும் தொண்டு செய்து வாழ்வதே நமக்கு கடனாகும்.
மூதறிஞர் வ.சுப. என்னுடைய பாட்டனார், உரை வேந்தர் ஒளவை துரைசாமி குறித்து எழுதிய பகுதி, பேருரை கண்ட பெருஞ்செல்வர் மூதறிஞர் டாக்டர் வ.சுப.மாணிக்கம்:“பல்வேறு காலத்தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஔவை துரைசாமி அவர்கள்.  தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும், சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித்தமிழ்ப் பண்பு இவர்பால் காணலாகும். எட்டுத்தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரை விளக்கம் செய்தவர்.  இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக்குறிப்பும், கல்வெட்டுக்குறிப்பும் மண்டிக்கிடக்கின்றன.
ஐங்குறு நூற்றுச்செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல், விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறனைக் காண்கின்றோம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெளிந்து வரம்பு செய்து கோடல் இவர்தம் உரையொழுங்காகும்.  தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரை கண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஔவை  துரைசாமி ஆவார்.  இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப்பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று.
பரந்த சமயவறிவும், நுண்ணிய சைவ சித்தாந்த தெளிவும் உடையவராதலின் சிவஞான போதத்துக்கும், ஞானாமிர்தத்துக்கும், மணிமேகலையின் சமய காதைகட்கும்  அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும்  பரப்பிய அருமை நோக்கி சித்தாந்த கலாநிதி என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர்.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச்செய்தவர். மதுரை குமரனார், சேர மன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஔவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.
கடவுட் பற்றும், சைவத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர் முதுமை மறப்பிக்கும் இளையவீறு பெற்று  இராமலிங்க வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம் தமிழ்ப்பேழைக்குத் தாங்கொணாச் செல்வமாகும்.  நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க்கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஔவை துரைசாமி நெடும் புகழ் என்றும் நிலுவுவதாக!
வளம் படைத்த தமிழ்மொழிக்குச் சொல்லாக்கிகள் மிகத்தேவை.  அவ்வப்போது சொல்லை வடித்துக் கொடுக்காதவன், வடித்துக்கொள்ளாதவன் மொழிக்கடன் ஆற்றாதவன் ஆகின்றான்;  வேற்றுச்சொல் வரவுக்கு இடங்கொடுப்பவன் ஆகின்றான் என்பது வ.சுப.மாவின் உயிர்க் கருத்தாகும்.
1962 ஆம் ஆண்டிலேயே இளைஞியர் என்றும்,  திறனாய்வாளர் என்பதைத் திறனி என்றும்,  புதின ஆசிரியர் என்பதைப் புதினர், கற்புடைய பெண்ணை கற்பி, உறுப்பினரை உறுப்பி என்றும்  வளர்வு, ஆயுரை, இன்பி, வினைச்சி, வேந்தி, அல்லெண்ணம், இலக்கியல், இல்லாட்சி, குழமை, விதிக்காட்டி, வீழ்வுகள், நிறைபாடு, சொல்லாளர், கேள்வியாளர், எழுத்தாளி, எழுத்துழவர், எழுதுகுலத்தோர், இழுக்கும், நாளை நீக்கி, குளிரகம் (Fridge), ஒலிப்பான் (Mike), அடக்கி (Break), முகமா (Powder), செல்லுரிமை (License), பல்லுரசி (Tooth brush), மேலாள் (Manager), சொற்மொழிந்தேன், நன்றியன், விருப்பன், ஈடுபாடன், இலக்கியர், காப்பியர், இலக்கணர், தமிழ்மை, அணிய நாடுகள், அரச மரியாதை என்பதைப் படையணி வணக்கத்தோடு என்றெழுதியதும் நினைக்கத் தக்கது.
சால்பியம், புரட்சியம், பொதுவியம், மக்களியம், ஒப்பியம், தமிழியம், உயிரியம், பண்டிதமணியம், கண்ணதாசம், இளங்கோவம் எண்ணற்ற புதிய சொல்லாக்கங்களை மூதறிஞர் படைத்துள்ளார். இவைபோலும் பல தமிழர்களுக்கு அவர் வழங்கிய  பெருங்கொடையாகும்.
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் ஆரம் படைத்த தமிழ்நாடு என்ற வாக்கினைப் பின்பற்றி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புதிய உரைநடைச் சிலப்பதிகாரத்தை நெஞ்சை வெல்லும் சிலப்பதிகாரம் என்று ஓர் நேர்மை படைத்த தமிழ்நாடு என்ற வ.சு.மா பாராட்டு வரிகள் வரலாற்று வரிகளாகப் பொலிந்தன.
அருந்தமிழின் அழகையும் ஆற்றலையும், வண்ணத்தையும், வனப்பையும் வகை வகையாக வளமார் தமிழ், அருந்தமிழ், பெருந்தமிழ், முறைத்தமிழ், வெண்தமிழ், செந்தமிழ், பெரிய தமிழ், நந்தமிழ், எந்தமிழ், தீந்தமிழ், கோல்தமிழ், தன்னிந் சிறந்த தமிழ், நெடுந்தமிழ், விளிவில் தமிழ், சொற்றமிழ், செய்தமிழ், வளர்தமிழ், செல்தமிழ், தொழுதமிழ், படிதமிழ், உரிமைத் தமிழ் ஐம்பதுக்கு மேற்பட்ட நயமான அடைமொழிகளை நிரல்பட தன்னுடைய மாணிக்கக்குறளில் அடுக்கிப் பேசுவதைக் கேட்பதற்கு ஆணிவேராக இருந்தவர் பேராசிரியர் வ.சுப.மா.
இந்தியத் தமிழன் தன் அன்புத் தலைவர்களுக்கு எழுதிய 25 கடிதங்களின் வடிவமாக தலைவர்களுக்கு என்ற உயர்ந்த நூலைப் படைத்துள்ளார்.  தமிழர்களுக்கு அது பெரும்பேறாகும். இந்நூலை என் நாட்டுத் தொண்டு என்ற ஒரே வரி முகவுரையும் என் கடன் இந்தியப் பணி செய்து கிடப்பதே என்ற முத்தாய்ப்பும் பெருஞ்சான்றாகும்.
துணைவேந்தரின் மூத்த மகனார் பொறிஞர் தொல்காப்பியனும், அமெரிக்க வாழ் திருமகளார்  தென்றலும் எங்கள் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.  இது எங்கள் குடும்பத்திற்குக் கிடைத்த பெரும்பேறு. தமிழ்நாடு மின்வாரியம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் முதலிய பயின்ற வழக்குகளுக்கு புதிய இலக்கண நூற்பாக்களை வழங்கிய திறமை மூதறிஞரின் பெருமைக்குக் கட்டளைக் கல்.
தமிழ்நாடு என்னும் தண்ணார் தொகைச்சொல்பொதுநிலம் குறிக்கும் பொருண்மைத் தாயின்இருவழி யானும் இரட்டும் ஒற்றே அரசினை அதன்மேல் ஆட்சியைக் குறிப்பின்இரட்டல் வேண்டா இயல்பா கும்மே! 

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!பொருநராற்றுப்படை தொடர்ச்சி…

 1. கொலைவிற் புருவத்துகொலைவில் – கொலைத்தொழிலையுடைய வில்லைப் போன்ற, புருவத்து. புருவத்தினையும்.கொழுங்கடை மழைக்கண்கொழு கடை – அழகிய ஓரத்தினையுடைய, மழைக் கண் – குளிர்ச்சியையுடைய கண்ணினையும்,
 2. இலவிதழ் புரையு மின்மொழித் துவர்வாய்இலவு இதழ் புரையும் – இலவினது இதழையொத் திருக்கின்ற, இன்மொழி துவர் வாய் – இனிய சொல்லையடைய செந்நிறத்தையுடைய வாயினையம்,
 3. பலவுறு முத்தின் பழிதீர் வெண்பல்பல உறு – பலவுஞ்சேர்ந்த, முத்தின் – முத்துக்கள் போல, பழி தீர் – குற்றந் தீர்ந்த, வெள் பல் – வெள்ளிய பல்லினையும்மயிர்குறை கருவி மாண்கடை யன்னபூங்குழை ஊசற் பொறைசால் காதின்
 4. மயிர்குறை கருவி மாண் கடை அன்ன-மயிரை வெட்டுகின்ற கத்தரிகையினுடைய மாட்சிமைப்பட்ட குழைச்சை யொத்தனவாகி, 
 5. பூங்குழை ஊசல் பொறை சால் – பொலிவினைக்கொண்ட (மகரக்) குழையின் அசைவினைப்பொறுத்த லமைந்த, காதின் – கா துகளையும்,-(எ.று.) கத்தரிகையின்குழைச்சு, காதுக்கு வடிவுவமமாம்.
 6. நாணடச் சாய்ந்த நலங்கிளர் எருத்தின்நாண் அட – நாணம் வருத்து தலால், சாய்ந்த. (பிறரை நோக்காது) கவிழ்ந்த, நலம் கிளர்-நன்மை விளங்குகின்ற, எருத்தின் – கழுத்தினையும், நாணந்தோன்றக் கவிழ்ந்த எருத்துடனிருத் தல், இயல்பு.
 7. ஆடமைப் பணைத்தோள் அரிமயிர் முன்கைஆடு – அசைகின்ற, அமை – மூங்கில்போலும், பணை – பெருத்தலையுடைய, தோள் – தோளினையும்,–அரி மயிர் – மெல்லிய மயிரினையுடைய, முன் கை – முன்னங் கையினையும்,
 8. நெடுவரை மிசைஇய காந்தன் மெல்விரல்நெடு வரை மிசை இய – நெடிய மலையின் உச்சியிடத் துள்ளன வான, காந்தள் – காந்தள் போலும், மெல் விரல் – மெல் லிய விரலினையும்,
 9. கிளிவாய் ஓப்பின் வெளிவிடு வள்ளுகிர்கிளிவாய் ஒப்பின் . கிளியின்வாயோடு ஒத்திருத் தலையுடைய, ஒளி விடு – ஒளிவிடுகின்ற, வள் உகிர் – பெருமையையுடைத்தாகிய உகிரினையும்,
 10. அணங்கென உருத்த சுணங்கணி யாகத்துஈர்க்கிடை போகா ஏரிள வனமுலைஅணங்கு என உருத்த – (பிறர்க்கு) வருத்த மெனத் தோன்றின, சுணங்கு அணி ஆகத்து – சுணங்கையணிந்த மார்பினிடத்துள்ள, ஈர்க்கு இடை போகா ஏர் இள வனம் முலை – ஈர்க்கும் நடுவேபோகாத எழுச்சியையுடைய இளைய அழ கினையுடைய முலையினையும்,
 11. 36.  நீர்ப்பெயர்ச் சுழியி நிறைந்த கொப்பூழ் (இ – ள்.) நீர் பெயர் சுழியின் – நீரினிடத்துப் பெயர் தலை யுடைய சுழிபோல, நிறைந்த – நிரம்பின, கொப்பூழ் – கொப்பூழினையும்,-)
 12. உண்டென வுணரா உயவு நடுவின்உண்டு என உணரா – உள்ளதென்று ( பிறரால் ) உணரப்படாத (மிகவும் நுண்ணிய), உயவும் வருந்துகின்ற, நடு வின் – இடையினையும், மிகவும் நுண்ணி தாயிருத்தலால், பிறவுறுப்பின் சுமையைத் தாங்கமாட்டாது இடை வருந்தும்.
  38.  வண்டிருப் பன்ன பல்கா ழல்குல்வண்டு இருப்பு அன்ன – பலவண்டுகளின் இருப்பை யொத்த, பல் காழ்பலமணிகோத்தவடங்களை யுடைய மேகலையை அணிந்த, அல்குல் – இடைக் கீழமைவு. மேகலை- ஏழுவடங்களை யுடையதென்பர். எண்கோவை மேகலை என்றுரைப்பதும் உண்டு .
  39.  இரும்பிடித் தடக்க கயிற் செறிந்து திரள் குறங்கின் இரு பிடி 5 – கையின் – பெரிய பெண்யானையின் பெருமையையுடைய கைபோல, செறிந்து திரள் – (நீள வந்து மெல்லி தாபத தம்மில்) நெருங்கியொன்றித் திரட , குறங்கின் – துடையினையும்,
  40-41. பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்பவருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
 13. பொருந்து- (கணைக்காற்கு இலக்கணமென்பதற்குப்) பொருந்தின, மயிர் ஒழுகியமயிரொழுங்குபட்ட, திருந்து – (ஏனை இலக்கணங்கள்) திருந்தின, தாட்குகணைக்காலுக்கு, ஒப்பபொருந்த, 
 14. வருந்து நாய் நாவின்-ஓடியிளைத்த நாயினது நாவினைப் போல, சிறு சிறிய, பெரு தகு-பெருமை தக்கிருக்கின்ற, அடி-அடி யினையுமுடைய, மயிரொழுகிய தாள், திருந்து தாள் . தாளுக்குஒப்பச் சிறு அடி என வந்தது . பெரு என்னும் முதனிலை, பெருமையையுணர்த்தியது. சிறுமை + அடி = சீறடி: நாயின் நாவைப் போன்ற சீறடி என்ற உவமை நுட்பமான அருமையுடையது.
  வளரும்…-  “கலைவானின் நிலவு – கண்ணதாசன்”

  சென்னை மாநிலக் கல்லூரியில், இளங்கலை தமிழிலக்கியம் முதலாமாண்டு மாணவரான நான் சேர்ந்த சில திங்களிலேயே நெருக்கமான நண்பராக சிவகுமார் என்னோடு இருந்தார்.  அவர் அப்போது அதே கல்லூரியில் ஆங்கில இலக்கிய முதுகலை மாணவர் என்பது தான் பலருக்கும் வியப்பு.  அவர் வாயிலாகத்தான் எனக்கு கவியரசர் கண்ணதாசனின் (24.06.1927 – 17.10.1981) திரைக்கதை / திரைப்பாடல் வரிகள், தைப்பாவை, சேரமான் காதலி, வனவாசம், ஆட்டனத்தி ஆதிமந்தி, அதேபோல இளங்கலை வகுப்பில் இயேசு காவியமும் அறிமுகமானது.  சிவகுமார் வாய் திறந்தால் கண்ணதாசன் வரிகளைத் தான் சொல்லி மகிழ்வார்.  சான்றாக மூர் அங்காடி தீக்கிரையான பொழுது (1985) உடனே சிவகுமார் என்னிடம் சொன்ன ‘நாடோடி மன்னன்’ திரை வசன வரிகள்,“தீயிடுவோம் தீமைக்கு;கொள்ளையடிப்போம் மக்களின் உள்ளங்களை;குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருட்களை”.
 15. அப்பாவிடம் கவிஞரைக் குறித்து வினவிய போது, அவர் மூலம் நான் அறிந்த செய்திகள் என் விழிகளை வியப்பில் விரியச் செய்தன.  ஒருமுறை புதுவையிலுள்ள மருத்துவமனையில் கவிஞர் இருந்தபோது அப்பா அவரைச் சந்தித்து அண்ணா, “விழிப்பாக உடல்நலனைப் பேண வேண்டும் , நீங்கள் எங்கள் வாழ்வின் வேர் ” என்றபோது  கவிஞர் சொன்ன வரி,சுட்டபின் நெருப்பென்றும்,தொட்டப் பின் பாம்பென்றும்உணர்வதே என் பழக்கம் ஔவை என்றாராம்.
  புரட்சித்தலைவர் முதலமைச்சராக இருந்தபோது கவிஞர் கண்ணதாசனை அரசவைக் கவிஞராக நியமித்தாராம்.  அதற்கு அரசாணையாக, அப்பா அந்நாளைய மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராக இருந்தபோது தகுதியுரை எழுதித் தருமாறு கூறியவுடன், அப்பா எழுதிய அத்தகுதியுரை தான் கவியரசருக்கு வழங்கப்பட்டது.
  தகுதியுரை:“திரு.கண்ணதாசன் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த திருப்பத்தூர் வட்டத்தில் சிறுகூடற்பட்டி என்னும் சிற்றூரில் 24.6.1927-இல் பிறந்தார்.  இயற்பெயர் முத்தையா. தந்தையார் திரு.சாத்தப்பர். தாயார் திருமதி விசாலாட்சி.
  இளமை முதலே தமிழ் இலக்கியங்களை ஆர்வத்தோடு கற்ற புலமை வாய்ந்த திரு.கண்ணதாசன், கவிதை படைப்பததில் பேராற்றல் வாய்ந்தவராய்த் திகழ்ந்தார்.  பழைய மரபைப் போற்றியும், புதிய எழுச்சிக்கு வழி காட்டியும் தமிழ்க் கவிதை உலகிற்கு வளம் ஊட்டினார். புலவர்கள், பொதுமக்கள் என்ற இரு சாராரின் உள்ளங்களையும் தன் கவிதைத் திறனால் கவர்ந்து வருகிறார்.  கவியரசரைப் பின் தொடாதவர் என எவருமே இல்லை. எல்லோருடைய எழுத்திலும் அவர் பொன்முகம் மின்னியது.  கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், தெய்வீகம், வரலாறு ஆகிய துறைகளில் எல்லாம் கவியரசரின் தமிழ் எண்ணங்கள் வண்ணங்களாகி வனப்பூட்டுகின்றன.  உரைநடைக்குக் கவிதையின் ஒளிவீச்சைக் காட்டியும் கவிதைக்கு எளிமையின் இனிமையைக் கூட்டியும் கவியரசர் கண்ணதாசன் தமிழ் இலக்கியத்திற்கு ஏற்றம் தந்திருக்கிறார்.  இவரது தமிழ் இலக்கியத் தொண்டினையும், சிறப்பான கவிதை எழுச்சியையும் பாராட்டித் தமிழக அரசு கவியரசர் கண்ணதாசனை 1-4-1978 முதல் வாழ்நாள் முழுவதும் அரசவைக் கவிஞராக்கிச் சிறப்பிக்கின்றது.”
 16. உலகக் கவிஞர்கள் மாநாட்டிற்கு அப்பா அரசு சார்பாளராக அமெரிக்கா சென்றபோது அங்கு வந்த கவிஞர் கண்ணதாசனுடன் பல மணிநேரம் உரையாடியதும் அங்கேயே கவிஞர் மறைந்ததும் கண்ணீரைக் குளமாக்கும் வரலாறாகும்.
 17. கல்லூரிக் காலங்களில்  இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் கவியரசர் கண்ணதாசனை குறித்து பேசும் உரைவீச்சில் திளைப்பேன்.  அதில் குறிப்பாக,“அவனை எழுப்பாதீர்,அப்படியே தூங்கட்டும்,ஆழ்ந்த துயிலினிலே அமைதியினைக் காணட்டும்,அன்பு குழந்தை அவன்.அரையாண்டுச் செல்வனவன்.இந்த வயதினிலேஇப்போதே தூங்குவதேசுகமான தூக்கம்,அவன் சுகமாகத் தூங்கட்டும்”என்று நீண்டு செல்கிற கவிதை வரிகளைச் சொல் மழையாய் இலக்கியச் சுடர் சொல்ல கேட்டுக் கிறுகிறுத்துப் போனேன்.  இலக்கியச் சுடர் எங்கே பேசினாலும் கவியரசரின் கவிதை வருவதும், அவை கைதட்டிக் களிப்பதும் வாடிக்கை.  கவிதை வானில் ஒரே நிலவாகச் சுடர் விட்டார்.
  தான் இறந்து விட்டதை வாழும்போது எழுதிக் காட்டிய பெருங்கவிஞர் கண்ணதாசன்.   வைகை தொடங்கி வால்கா வரை கண்ணதாசன் கவிதைகள் அங்குமிங்குமாக என் கருத்துக் கருவூலத்தில் கண்ணதாசன் கவிதை  வரிகள்,“நாமெல்லாம் ஒன்று நம்பெயர் தமிழர்தேனுலாம் காடு செந்தமிழ் நாடு”
  “கொடுமையைக் கண்டு யார் தான் பயப்படமாட்டார்கள்.உச்சி வெயிலின் கொடுமைதாங்காமல் மனிதனின்நிழல்கூட அவன் காலடிக்குள் ஒட்டிக்கொள்கிறது.”
  “கூட்டிய வரைக்கும் லாபம் என்றால் குனிவோமா?குனிந்தவர் நாங்கள் நிமிர்ந்தால் உன்னை விடுவோமா?”
  “கடவுளை உலகில் கற்பித்தவன் தான்முட்டாள் மனிதனடாகடவுள் பெயரைப் பரப்புகிறவன்யோக்கியன் இல்லையடா – இது நான்சொன்னதில்லை – இந்த நாடறிந்த உண்மை!கல்லாயிருக்கும் கடவுளுக்கேண்டாபாலால் அபிஷேகம் ?இல்லாதிருக்கும் பிள்ளைக்கு தந்தாஏழையின் பசியாறும்பக்தி என்பது தனிச் சொத்தாகும்நமக்கது தேவையில்லைஒழுக்கம் என்பது பொதுச்சொத்தாகும்காப்பது நம் வேலை – இதுநான் சொன்னதில்லை – இந்தநாடறிந்த உண்மை!” 
  “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்வாசல் தோறும் வேதனை இருக்கும்வந்த துன்பம் எது வென்றாலும்வாடி நின்றால் ஓடி விடாது” – (சுமைதாங்கி)
  இதே நிலையில்,  இறை உணர்வுக்கு இலக்கணம் வகுத்த,பூஜ்யத்துக்குள்ளே ஒரு,ஆறு மனமே ஆறு,ஏன் பிறந்தாய் மகனே,சட்டி சுட்டதடா,போனால் போகட்டும் போடாபோன்ற பாடல்கள் எவர் மனத்தையும் உருக்கும்.
  “உனக்கும் எனக்கும் உறவு காட்டிஉலகம் சொன்னது கதையா?” – (இல்லற ஜோதி)என்ற கவியரசரின் பாடல் வரிகள், எந்தக் குழந்தை மனத்தையும் குமுறிக் குமுறி அழ வைக்கும்.
  கவியரசரின் கவிதைகளைப் படித்து முடித்ததும் அறிவினில் வேகமும், ஆழநீர் அசைவதையும், சமதளத்தில் சலசலக்கும் சங்கீதமும், கடலைச் சேரும் கலகலப்பும், கவிதைகளில் காணலாம்.  அவர் காலந்தோறும் கண்சிமிட்டும் கவிதையரசர் என்றால் மிகையாகாது.

 18. இலக்கிய கருத்துக்களாயினும் சரி, அரசியல் கருத்துக்களாயினும் சரி அதில் தனது போர்க்குணத்தை கவிஞர் கண்ணதாசன் வெளிப்படுத்தினார்.  மணிக்கொடி காலம், சரசுவதி காலம் என்று சொல்வதைப்போல தென்றல் இதழில் ஒரு வற்றாத வரலாற்றை உண்டாக்கிப் பல கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்கியது போற்றத் தகுந்ததாகும்.

 19. யார் வெற்றி பெற வேண்டுமென்றாலும் அவர்கள் மீது விமர்சனங்களும், தேவையில்லாத விவாதங்களும் எழுந்தாலும், பொருட்படுத்தாமல் பீடுநடை போட வேண்டும் என்ற கவியரசரின் பிரகடன வரிகள்:-

 20. “போற்றுபவர் போற்றட்டும்புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்தொடர்ந்து செல்வேன்,ஏற்றதொரு கருத்தைஎனதுள்ளம் எடுத்துரைப்பேன்.எவர்வரினும் நில்லேன்அஞ்சேன்!”

 21. 22.06.1954-ல் தென்றல் இதழ் பிறந்தபோது,“தென்றல் உங்களைத் தீண்ட வருகிறது.ஆம் தென்றல் தான் மனிதனை தீண்டுகிறது.தீண்டலில் நயம் இருந்தால், நளினம் இருந்தால் வாரம் இரண்டனா கொடுங்கள், இல்லையேல் வேண்டாம்”என்று முடிப்பு வரிகள் எவரையும் ஈர்க்கும்.
 22. கம்பர் பாடல்களில் என்னை முதன்முதலாக ஈர்த்தவர் ரசிகமணி டிகேசி. பட்டப்படிப்பில் குகப்படலம் முழுவதையும் பாடம் செய்தேன். ஆனந்த விகடனில் பி.ஸ்ரீ எழுதிய இராமாயண விளக்கமும் அண்ணாவின் கம்பரசம் கம்பர் விழாக்களும் தான் என்று சொன்ன உண்மை வரிகள் கவிஞரின் தெளிவான மனம் புரியும்.

 23. அதேபோல என் மாமா மருத்துவர் திலகம் நலங்கிள்ளி தன் மகன் குமணன் பிறந்தபோது, தாலாட்டுப் பாடலாகக் கண்ணதாசன் அவர்கள் பாடிய வரிகளைப்பாடி தன் பிள்ளையை மகிழ்விப்பதைக் கேட்டு நான் பூரித்தேன்.“உன்னை அறிந்தால்…நீ உன்னை அறிந்தால்உலகத்தில் போராடலாம்உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்தலை வணங்காமல் நீ வாழலாம்”(வேட்டைக்காரன்)
 24. கால நதி வெள்ளத்தில் மிகப் பெரிய கவிதை மாமரமாகவும், காலங்களை வென்ற பாட்டுத்தலைவனாகவும் கவியரசர் கண்ணதாசன் திகழ்வது தமிழ் உலகத்தின் பெரும் பேறாகும்.பாரதிக்குப் பிறகு பாரதிதாசனில் தமிழ் மேதையாகத் தெரிந்தார்.கவிஞர் கண்ணதாசன் ஊட்டிய தமிழ்ப் போதை எவரையும் மயங்க வைத்தது.கம்பனுக்கு பிறகு சந்தம் இவரிடம் அடைக்கலமானது.அள்ளிக் குவிக்க முடியாத அளவுக்குப் பொன்னாகவும் – மணியாகவும் பொலபொலவென உதிர்த்த பேரறிவுப்பெருக்கு என்று கூறிப் பெருமையடையலாம் .—–

 25. பத்துப்பாட்டில் மனம் பற்றுக!பொருநராற்றுப்படை தொடர்ச்சி…
  யாழின் அமைப்பு வனப்பையும் – பாடினியின் பேரழகையும் கண்டோம் !  இனிப் பரிசில் பெற்றவன் கூறும் செய்தி :-

 26. பொருநனே ! யாழையுடைய கூத்தர்க்குத் தலைவனே ! மற்றவர் புகழை அரசவைகளிற் பரப்ப வல்லவனே! கேட்பாயாக!யானும் பழுத்த மரத்தை நாடிச் செல்லும் பறவை போலப் பரிசு தருபவர்களை நாடிச் சென்றேன்.  ஒருநாள் கரிகாலன் அரண்மனை வாயிலை அடைந்தேன். அவ்வாயில் அரசனை விரும்பி வந்தவர்களை தடுப்பாரற்றது.  அதனுட் புகுந்தேன். மகிழ்ச்சியால் என் அலுப்புத் தீர்ந்தது.  என் கையிலிருந்த தழும்பு பட்ட உடுக்கையைத் தட்டி பாடத் தொடங்கினேன்.

 27. வெள்ளி முளைத்த நேரம்; நன்றாகப் பொழுது புலரவில்லை.  அரசன் கரிகாலன் புறப்பட்டு வந்து நெடு நாட் பழகிய நண்பனைப்போல என்னிடம் உறவு கொண்டு பரிவுரப் பேசினான்;  தனக்கு அருகிலே என்னை இருத்திக் கொண்டான்;  தன் கண்ணாற் பருகுவதுபோல் என்னைப் பார்த்தான்.  அவனுடைய மொழிகள் யான் இரந்து நிற்கும் தொழிலையே எப்போதும் விரும்பும்படி அவ்வளவு இனிமையாக இருந்தன.  அவனது பார்வை என் என்பையும் மெழுகுபோல் இளகச்செய்து குளிர்ச்சியைப் படர வைத்தது.

 28. என் இடுப்பிலுள்ள கந்தை, வேர்வையாலே நனைந்திருந்தது;  ஈரும் பேனும் கூடியிருந்தன; தையல்கள் பல பொருந்தியது.  அதனை அவன் போக்கினான்; வேறு ஆடை நல்கினான்.  அவ்வாடை, இழை போனவழியை அறிய முடியாதபடி அத்துணை மெல்லியது ;  பூத்தொழில் பொருந்தியது; பாம்புச் சட்டை போன்றது.
  “ஈரும் பேனும் இருந்திறை கூடிவேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்ததுன்னற் சிதா அர் துவர நீக்கிநோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்துஅரவுரி யன்ன அறுவை நல்கி.”(பொருந . 71)
  அணியணிந்து பாட்டாலும் கூத்தாலும் அரசனை மகிழ்விக்கும் மகளிர் சிலர் வந்தனர்;  பொற்கிண்ணத்தில் கள்ளை வார்த்து வார்த்துத் தந்தனர்.  யான் வழிநடை வருத்தந்தீர நிறையவுண்டேன்.  பின்னர் மாலைக்காலம் வந்தது.  மன்னன் கோயிலின் ஒருபுறம் தங்கித் துயின்று எழுந்தேன்.  வேந்தனைக் காண்பதற்கு முன்னால் என்பால் இருந்த சொல்ல முடியாத வறுமையையும் இப்போதிருக்கின்ற மகிழ்ச்சியையும் கண்டு, கனவோ என்று மயங்கித் தெளிந்தேன்.
  பல நறுமணப் – பொருள்களை மெய் முழுவதும் பூசியிருந்த என்னைக் கண்டோர் இவன் நேற்று வந்தவனல்லன் என்று மருளும் அளவுக்கு என்னை வண்டுகள் சூழ்ந்தன.  என்னுடன் வந்த சுற்றம்: மகிழ்ச்சியுற்றது.  அருகம் புல்லால் திரித்த பழுதையையுண்ட செம் மறிக் கடாவின் வேகவைத்த துடையின் தசையை யாங்கள் தின்றோம்; இருப்புக் கம்பியிற் கோத்து நெருப்பில் வாட்டிய இறைச்சியையும் உண்டோம். இங்ஙனம் வேக வைத்ததும் சுடவைத்ததுமாகிய புலாலைத் தின்று வெறுத்த பின், பலவகையான பணியாரங்களையும் எங்களுக்கு அவன் அளித்தான்.
 29. விறலியர், யாழினது ஒலிக்கும் மத்தளத்தினது ஓசைக்குப் பொருந்தப் பாடி ஆடினர்.  கள்ளுண்டலிலியே பல நாள் போக்கினோம். ஒருநாள் அரசன் சோறு உண்ணவேண்டுமெனக் கேட்டுக்கொண்டான. முல்லை அரும்பு போன்ற முறியாத அரிசியாலமைந்த சோற்றைப் பொரிக்கறியுடன் கழுத்தில் வந்து நிரம்புமாறு உண்டோம்.  இங்ஙனமெல்லாம் இராப்பகலாய்ப் புலால் தின்று எம் பற்கள் புன்செய் நிலத்தையுழுத கலப்பையின் கொழுப் போல முனை மழுங்கிவிட்டன.  இளைப்பாறவும் இடமின்றித் தின்றமையால் உணவில் வெறுப்புண்டாயிற்று.  ஊர் திரும்ப எண்ணினோம்.
 30. ஒருநாள் அரசனை நோக்கிச்  “செல்வ! எம் ஊருக்குச் செல்வேம்”  என்று மெதுவாகத் தெரிவித்தேன். உடனே வளவன் கோபித்தான் போல நாங்கள் வருந்துமாறு பார்த்து, “எம்மை விட்டுப் போகின்றீரோ” என்றான். பின்னர் இணங்கிக் களிறுகளையும் பிடிகளையும் கன்றுகளுடன் தந்தான்;  இன்னும் பல ஊர்திகள், ஆடைகள், அணிகலன்களையும் மேலும் மேலும் அளித்தான்.  யானும் அளவுடன் வேண்டியவற்றை வாரிக்கொண்டேன்;  இனி வறுமை எக்காலமும் இல்லை என்னுமாறு வந்தேன். ஆற்றுப்படுத்தியவன் உரை அப்படியே நிகழ்ந்தது.
  நான்கு வெண்புரவிகள் பூட்டிய பெரிய தேரிலே உம்மை யேற்றி ஏழடி பின்னே வந்து வழிவிட்டான்.  இங்ஙனம் பாணர்க்குக் கொடுக்கும் முறையிற் கொடுத்த பின்னர், நல்ல பல ஊர்களையும் யானைகளையும் நீங்கள் பிறர்க்கும் அளித்துச் செல்லுமாறு அளித்து மகிழ்ந்தான்.
  வளரும்…
 • முனைவர் ஔவை அருள்,

“மராட்டிய மதிவாணர் காண்டேகர் என்ற கதைப்புதையல்”
அப்பாவின் நூலக அடுக்குகளில் உடற்பயிற்சிக்கு நிற்கும் காளையர் போல நூல்கள் அடுக்கடுக்காக அணிவகுத்து இருக்கும். மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலுங்கால் பல நூலாசிரியர்களைப் படிப்படியாக அப்பா அறிமுகம் செய்து படிக்கச் சொன்னார்.  அவ்வண்ணம் சமுதாயத்தில் உள்ள மனிதர்களுக்கு வாழ்வின் இன்ப துன்பங்களைக் கதைப்போக்கில் சுவைக் குன்றாமல் நெஞ்சில் நிறுத்தும் வல்லமை வாய்ந்த மராட்டியக் கதை மன்னர் காண்டேகரின் தமிழாக்கப் புதினங்களைப் படித்துப்பார் அருள் என்றவுடன் படித்தவை, காண்டேகர் (11.01.1898 – 02.09.1976) எழுதி கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழாக்கம் செய்த புதினங்களான  கண்ணீர், அமுதக் கொடி, யயாதி, இரு துருவங்கள், புயலும் படகும், வெண்முகில், கருகிய மொட்டு.  அக்காலங்களில் திலீபன் என்ற விடுதலைப் போராளியின் பெயர் இதழ்களில் வெளிவந்தபோது அப்பா என்னைக் ‘கிரௌஞ்சவதம் படி. அதில் திலீபன் என்ற புரட்சிப் பாத்திரம் வரும்’ என்றதால், அதனை நுணுகிப் படித்து 6.2.1986-ல் என் கருத்துக்கோவையில் குறித்த பகுதிகளில் சில:- “குழந்தை  உலகம் எத்தனை அழகியது. அதிலுள்ள கண்ணீர் பனித்துளி போலவும் ஆவல்கள் பல நிறம் பூப்பறவைகள் போலவும் மகிழ்ச்சி பவளமல்லிகை போலவும் இருக்கின்றன.”“காலம் கடந்து எப்போதும் முன்னால் ஓடுகிறது, ஆனால் மனம் மட்டும் ஏதாவது பழைய பிரியமான இடத்தில் குழம்பி நிற்கிறது.” “மனிதரை விலக்குவது எளிது, மனிதருடன்  கூடுவது கடினம்.” “சுகத்தை எப்போதும் தனியாக நுகராதே, துயரத்தை எப்போதும் பங்கிடாதே.”  “கல்லூரிப் பெண்களின் வம்பளப்பு என்பது கால்பந்து விளையாட்டு போல ஓடிப்போய் உதைத்துப் பந்தைத் தொலைவில் உயரப் பறக்க விடுவது போல சொற் சித்திரங்களால் உயர உயரக் களிக்கிறார்கள்.”  “பக்தி என்பது காதலின் அடுத்தபடி, வாழ்வு என்பது பரந்த கடல், பலவகை விந்தைகள் நிரம்பியது எவ்வளவு அழகோ அவ்வளவு பயங்கரம், ஆனால் அதற்கு இக்கரையும் அக்கரையும் இல்லை.” “இந்தக் கடலில் மனிதனுக்கு உணவாக மீன்கள் ஏராளமாக உள்ளன. அதனை உணவாகக் கொள்ளக் கூடிய திமிங்கலங்களும் கொஞ்சம் நஞ்சமாக இல்லை.” “அமுதக் கொடியில் வரும் நந்தா தன் இளநெஞ்சப் புயலை நோட்டில் குறித்து வைத்திருப்பேன். அந்த நோட்டுப் புத்தகமே அவளின் உயிர்த் தோழி போலும்.”“குழந்தையின் பிடிவாதம். பெண்ணின் பிடிவாதம், அரசனுடைய பிடிவாதம் இந்த மூன்று பிடிவாதங்கள் உலகத்திலே பிரசித்தமானவை.  ஆனால் கணவருடைய பிடிவாதம் என்பது இந்த மூன்று பிடிவாதங்களும் சேர்த்துப் பிடித்த உருண்டையாகும்.” “இளமை என்பது முன்யோசனை இல்லாமல் நியாயத்தீர்ப்பு பெறுவது மிக ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய நாடகம்.”“எந்தப் புரட்சியும் கண்ணீரினாலே நடப்பதில்லை, எந்த புரட்சிக்கும் பிடித்தமான நைவேத்தியம் ஒன்றே ஒன்றுதான் அதாவது அன்பர்களின் ரத்தம்.” “எலுமிச்சைப்பழ ஊறுகாய் பழகப்பழகப் புளிப்பும் இனிப்பும் கலந்து ருசியாக இருக்கும். வாழ்க்கையின் பழைய ஞாபகங்களும் அதைப்போலவே சுவை நிரம்பியவை.” “வாழ்க்கை என்பது பூஞ்சோலை அல்ல அது போர்க்களம்.” “மனிதன் மனிதனாகவே பிறந்து விடுவதில்லை. உலகம் அவனை மனிதனாக்குகிறது.” “வாழ்க்கை என்பது சாதாரண போர்க்களம் அல்ல.  இந்த போர்க்களத்தில் எதிரிகளோடு மட்டும் போராடினால் போதாது. நண்பர்களுக்கு எதிராகவும் வாளை உருவ வேண்டும். இது மட்டுமல்ல சமயம் வந்தால் நம்மோடு நாமே போராடவும் வேண்டும்.” “தென்னை மரத்துக்கும் கிளை இல்லை, பூ இல்லை, அடர்ந்த நிழல் இல்லை, ஒன்றும் இல்லை.  ஆனால் அதன் தலையில் தொங்கும் நீரை உடைத்தால் அமுத வெள்ளம் பெருகும்.”“அரசியலில் ஒட்டாமல் இருக்கும் மாணவர்கள் மெழுகுப் பொம்மைகள். புத்தகப் படிப்பில் உழலும் கிளிப்பிள்ளைகள்.” “வறுமையிலும் மென் முறுவல் மறையக்கூடாது . என்ன துன்பம் நேர்ந்தாலும் இலட்சியத்திலிருந்து வழுவக்கூடாது.” “கலை என்பது கடந்த காலத்தின் கன்னிகை, நிகழ்காலத்தின் மனைவி, வருங்காலத்தில் தாய்.” “மனிதன் கனவுகளினால் வாழ்கிறான்.  இலட்சியத்தால் வாழ்கிறான். சோற்றைப் போலவே நம்பிக்கையும் அவனுக்கு இன்றியமையாத தேவையாகும்.”“கம்யூனிசமும் காந்தியியமும் நுட்பமாகப் பார்த்தால் அவை ஒன்றுக்கொன்று உதவியாக இருப்பவை. கம்யூனிசம் உலகை ஒரு தகப்பனுடைய கண்ணோடு பார்க்கிறது,  காந்தியியம் தாயின் கண்ணோடு பார்க்கிறது.  கம்யூனிஸம் புது உலகைப் படைக்க விரும்புகிறது.  காந்தியியம் புதிய மனிதர்களைப் படைக்க விரும்புகிறது.” “சிதைந்த கனவின் துணுக்குகளைத் தழுவிக்கொண்டு சோர்ந்து கிடப்பதற்காக மனிதன் பிறக்கவில்லை.  வெறுமே கடந்த காலம் என்ற இரும்புச் சங்கிலி கொண்டு மனத்தை இறுகக் கட்டி வைக்க முடியாது.” 

சமுதாயத்தில் வாழ்கின்ற மனித இனத்தில் உள்ள இன்ப துன்பங்களை கதைப் போக்கிலே சுவை குன்றாமல் எழுதும் வல்லமை வாய்ந்தவர் மதிவாணர் காண்டேகர்.  அவரின் இலக்கியங்கள் காலத்தால் அழியக் கூடியது அல்ல.  இலட்சியவாதியான சிறந்த எழுத்தாளர்.  தம் இளம் வயதிலேயே இலக்கிய வாயிலாகச் சமூகத்தை உயர்த்த முடியும் என்ற வேட்கையில் மராட்டிய மாநிலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர், காண்டேகர் இலக்கியத்தைத் தமிழ்நாட்டில் ஊறவைத்துப் பரப்பிய பெருமை அல்லயன்சு நிறுவனத்திற்கும், கலைமகள் இதழுக்கும் மட்டுமே உண்டு.  காண்டேகரின் மணிமொழிகளை அப்பாவும் அவரின் நண்பர்களும் மனப்பாடமாகச் சொல்வார்கள் என்று என் அம்மா அடிக்கடி என்னிடம் சொல்வதுண்டு.  காண்டேகரின் கதைகள் துன்புற்ற மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒப்பற்ற துணிவைத் தந்து வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற ஊக்கமளித்தது. கோலாப்பூரிலுள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர் காண்டேகரின் அருங்காட்சியகம் உள்ளது.  அவருடைய நூல்கள், விருதுகள், ஒளிப்படங்கள் அங்கு அணிசெய்வது பெருமிதமாக உள்ளது. 

தமிழ்நாட்டின் காண்டேகர் என்று பேரறிஞர் அண்ணாவாலும் போற்றப்பட்ட கா. ஸ்ரீ. ஸ்ரீநிவாசாரியர் (15.12.1913 – 28.07.1999)  தமிழ், வடமொழி, இந்தி, மராட்டியம், ஆங்கிலம் அறிந்த வல்வவர்.  இந்தி பிரச்சார சபையிலும், கலைமகள் இதழிலும் பணியாற்றிய பெருந்தகையாவார்.  மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்.  தன்னுடைய 24வது வயதில் இந்தி இதழான ‘அம்சு’ல் காண்டேகர் சிறுகதைகளைப் படித்துத் தமிழில் மொழியாக்கம் செய்ய ஆர்வப்பட்டதால் தினமணி மலரில் சகோரமும் சாதகமும் என்ற காண்டேகரின் கதையின் மொழியாக்கம் வெளிவந்தது. பிறகு அவரின் கதைகளை வெளியிட்டு வந்தாலும் பேரறிஞர் அண்ணா தான் நடத்திய ‘திராவிட நாடு’ இதழில் காண்டேகரின் நூல்களைப் பற்றி கருத்தோவியம் வரைந்த பிறகு அரசியல் தொண்டர்களிடையே காண்டேகர் கதைகள் செல்வாக்குப் பெற்றன. காண்டேகர் ஞானபீட விருது பெற்ற போது, விருதுக்கூட்டத்தில் மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. பெயரையும் குறிப்பிட்டுச் சொன்னது மொழிபெயர்ப்பு உலகிற்குப் பெரும் பேறாகும்.

“வருங்காலம் என்ற கருடச் சிறகும் மனத்துக்குப் பெரு வரமாகும்.”“மனோரஞ்சிதம் தாமரைக்குளத்தில் மிக மெல்லிய இதழ்களைக் கொண்டது போன்ற எளிய நடை.” அண்ணல் காந்தியடிகளுக்குத் தமிழ்த்தாத்தா உ.வே.சா. எழுதிய தமிழ் வரவேற்புரையை இந்தியில் மொழிபெயர்த்த பெருமை கா.ஸ்ரீ.ஸ்ரீ.ஐச் சாரும். மொழிபெயர்ப்பு என்பது ஒரு நுண்கலை, மின்சார இரயில் வண்டியை இழுத்துச் செல்வது போல மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும் என்பது கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மேற்கோளாகும்.  கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மொழிபெயர்ப்ப்புகளால் எனக்குத் தற்கால இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் சொன்னது மொழிபெயர்ப்பு உலகிற்கு வாய்த்த வைர மகுடமாகும்.

காண்டேகரும், கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும் ஒருவரையொருவர் கண்டதில்லை என்பார்கள்.  கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு நம் நினைவுக்கு வருகிறது.  ஒருவர் எழுத்தே திருமுகம் என்றே குறிப்பிடலாம். மராத்தியத்தை விடத் தமிழகத்தில் என் பெயர் செல்வாக்குப் பெற்றது என்று காண்டேகர் பெருமிதமாகக் கூறினாராம். 

“கண்களை விளக்காக்குகிறாள். கைகளைக் கட்டிலாக்கினாள். தன் இரத்தத்தைப் பாடலாக்கினாள். இவளை வெறும் தாய் என்ற சொல்லால் அடக்க முடியவில்லை” என்ற மராட்டிய மதிவாணர் காண்டேகரின் கதைப் புதையல் வரிகள் கல்வெட்டுத் தொடர்களாக எந்நாளும் மின்னுகின்றன. தொடருக்குத் தொடர் இயல்பான உவமைகளை எளிமைக்கு எளிமையாக எழுதிக் காட்டிய கலை வித்தகம் காண்டேகருக்குக் கைவந்த கலையாகும். அக்கதையின் உள்ளுணர்வுகளை தன் நெஞ்சில் கலந்து பொருத்தமான வைர வரிகளோடு மொழிபெயர்த்த பெருமை கா.ஸ்ரீ.ஸ்ரீ.யை மட்டுமே சாரும். 

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!பொருநராற்றுப்படை தொடர்ச்சி…

கரிகால் வளவன் கரிகாலன் சோழ நாட்டு முடி மன்னன்;  இளஞ்சேட் சென்னியின் புதல்வன்; செங்கோலன்; தண்ணளியன்; பகைவரிடத்து முருகனது சீற்றம் போலும் சீற்றமுடையவன். இவன் பிறக்க வேண்டிய காலத்தே பிறவாமல் நல்ல பொழுது வருமளவும் தாயின் வயிற்றிலேயேயிருந்து பின்னர்ப் பிறந்து அதனாலே அரசவுரிமை யடைந்தவனென்பர்.“உருவப் பஃறேர் இளையோன் சிறுவன் முருகற் சீற்றத்து உருகெழு குரிசில் தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி.’இவன் இளமைப் பருவத்திலேயே கூற்றுவன் போல வலிமையிற் சிறந்து விளங்கினான்.  பால் குடிக்கும் பருவத்திலேயே, இரை வேட்டைக்குச் சென்ற சிங்கக்குட்டி போல வெண்ணில் என்ற இடத்தில் சேர பாண்டி யராகிய இரு பெரு வேந்தரையும் ஒரு களத்தே பொருது வீழ்த்தினான்.

ஒருசமயம் தம்முள் மாறுபட்ட இருவர், தமக்கு முறை வேண்டி இவ்வரசர் பெருமானது அவையிற் புகுந்தனர்; இவனது இளமை கண்டு, தம் மாறுபாட்டைத் தீர்க்க இவ்விளை யோன் வல்லவனோவென ஐயுற்றனர். கரிகாலன் அவரது ஐயத்தைக் குறிப்பால் உணர்ந்து நரை முடித்து முதுமைக் கோலத்துடன் தோன்றி முறை வழங்கினான்.
“முதியோர் அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவும்” என்ற தொடரால் கூறப் படுகின்றது. இவ்வரலாற்றை,“உரை முடிவு காணான் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப-நரை முடித்துச் சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமற் பாகம் படும்.” என்னும் பழமொழிப் பாடல் தெரிவிக்கின்றது.
அவன் ஆண்ட சோழ நாடு  நிறைந்த வளமுடையது.  ஒரு மாநிலத்திற்கு ஒன்றாக மேடுகளெங்கும் நெற்கூடுகள் திகழ்வதை ஆங்குக் காணலாம்.  உழவர்கள் தென்னைமரச் சோலையில் குடியிருப்பர். உழத்தியர் கடற்கரை மணலில் வண்டல் (மணல் விளையாட்டு) விளையாடுவர். மருதநிலக் காக்கைகள் குருதி பெய்த சோற்றைக் குறைவிலாது உண்டு, பசித்தபோது தின்பதற்கென நொச்சியின் நிழலில் நெய்தல் நில ஆமைக்குட்டிகளை மறைத்து வைக்கும்.
பாகற் பழமும் பலாமரச் சுளையும் தின்ற மயிற்பெடைகள் காஞ்சி மரத்திலும் மருத மரத்திலும் இருந்து ஆரவாரிக்கும். ஆண்மயில்கள் வண்டுகளின் ஓசை கேட்டு மருதநிலத்தை விட்டு நெய்தல் நிலத்து உலர்  மணலிலே சென்று தோகை விரித்து ஆடும்.  மருதமும் அடும்பும் பகன்றையும் புன்கும் ஞாழலும் ஏனைய மரங்களும் திரண்டு வளர்ந்திருக்கும்.

அவ்விடத்து வாழ்வார் கரும்பையும் நெல்லையும் அறுக்கின்ற களமருடைய  ஓசையை வெறுத்ததால் முல்லை நிலத்தே சென்று விரும்பியுறைவர்.  முல்லை நிலத்தே தளவும் தோன்றிய யாழினையும் கொன்றையும் காயாவும் செழித்து மலர்ந்திருக்கின்றன. அங்கு வசிப்பவர் அவ்விடத்தை வெறுப்பின் மருத நிலத்தே சென்று அதனைப் புகழ்ந்து அங்கே தங்குவர்.

நெய்தல் நிலத்தே கடல் மீனைத் தின்று, புன்னைக் கிளையில் தங்கிய நாரைகள் அலையோசையை வெறுத்து மலையில் சென்று தங்கும். நெய்தல் நில ஊர்களான பாக்கங்களில் தெங்கும் வாழையும் காந்தளும் சுர புன்னையும் பேராந்தைகளும் உள்ளன.  அங்கு வாழும் பரதவர் அவ் வாழ்வை வெறுத்துக் குறிஞ்சி நிலத்தே சென்று தங்குவர். 

னவர் மருதம் பாடுவர். பரதவர் குறிஞ்சி பாடுவர்.  தேனும் கிழங்கும் விற்பவர் மீனின் நெய்யும் கள்ளும் பண்டமாற்றாகப் பெறுவர். கரும்பும் அவலும் கொடுத்தவர் மான்தசையும் கள்ளும் கொண்டு போவர்.  குறிஞ்சிக் குறவர் நெய்தற் பூக்களைச் சூடுவர்.  காட்டுக் கோழிகள் நெல்லைக் கவர்ந்து தின்னும். மருதக் கோழிகள் தினைக்கதிரைக் கவரும். மலைக்குரங்கு கழியிலே மூழ்கும். இவ்வகையில் நால்வகை நிலங்களும் அடுத்தடுத்து அச்சோழ வள நாட்டிலே நெருங்கி வளப்பமாயிருக்கின்றன

பகலவன் வெம்மையால் கஞ்சங்குல்லை தீய்ந்தன; மரக்கிளைகள் கரிந்தன; மலையிடத்து அருவிகள் இல்லையாயின;  மேகம் கடல் நீரை முகந்து பெய்யவில்லை; இங்ஙனம் வறண்ட காலத்தும் காவிரியாறு  பெருக்கெடுத்து வருகின்றது; நறைக்கொடி, நரந்தப்புல், அகில், சந்தனம் இவற்றைத் துறைகள் தோறும் தள்ளிக் கொண்டு செல்கின்றது; நுரையைச் சுமந்து போகின்றது, ஆரவாரத்துடன் குளத்திலும் கோட்டத்திலும் கமழ்கின்றது.  பெண்கள் அவ்விடங்களில் குடைந்து குடைந்து விளையாடுகின்றனர். அக் காவிரி தனது நீரைப் பாய்ச்சுவதால் ஒருவேலி நிலத்தில் ஆயிரங்கலமாகச் பெருகி விளைகின்றது.  இது காவிரியின் சிறப்பாகும்.
உன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண் மாறசொல்லை தருநன் பல்கதிர் பரப்பிக் குல்லை கரியவும் கோடெரி நைப்பவும்அருவி மாமலை நிழத்தவும் மற்றக்கருவி வானம் கடற்கோள் மறப்பவும் பெருவ ற னாகிய பண்பில் காலையும்நரையும் நரந்தமும் அகிலும் ஆரமும்துறை துறை தோறும் பொறையு திர்த் தொழுகிநுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுந்தொறும்புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்துசூடுகோ டாகப் பிறக்கி நாடொறும்குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பைகடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்சாலி நெல்லின் சிறைகொள் வேலிஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே.”வளரும்…-

 • முனைவர் ஔவை அருள்,தொடர்புக்கு “dr.n.arul@gmail.com—-
About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply