சனாதன தர்மம் என்றால் என்ன?

சனாதன தர்மம் என்றால் என்ன?

மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள்

“எப்போதுமுள்ள தருமம்” என்பது சனாதன தர்மம் என்று பலரும் சப்பைக் கட்டுக் கட்டுவார்கள்.

சநாதன தர்மம் என்பதும், மனுதர்மம் என்பதும், வருணாசிரம தருமம் என்பதும்

 • ஒன்றையே பலபெயர்களால் சொல்லப்படுவதும்,
 • ஆரியப் பிராமணர்களால், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற வருண தருமத்தின் வழியே பல்சாதிகளாகப் பிரிக்கப்பட்ட அடிமைகள்,
 • அவரவர்க்கு விதிக்கப்பட்ட சாதிக்கட்டுப்பாடு, தீண்டாமையை மதித்து,
 • பிராமணர்களுக்கு அடங்கி வாழ்வது என்ற கருமாந்திரம்தான்

என்று காலஞ்சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் மகாப்பெரியவர் சந்திரசேகரரேந்திர சரஸ்வதி அவர்கள் திருவாய் மலர்ந்து அருளிய, அருள் வாக்கை ‘தெய்வத்தின் குரல்’ என்ற பதிவாக, காஞ்சி காமகோடி மடத்தின் இணைய தளத்தில் இன்றும் காணக் கிடைக்கிறது.

பிராமணரல்லாத பிறர் எவ்வாறு

 1. தத்தம் சாதிக்கு என்று கொடுக்கப்பட்ட வேலையை பவ்வியமாகச் செய்து,
 2. முன்னும், பின்னும் பொத்திக் கொண்டு வாழவேண்டும், இல்லையேல் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்

என்பதைக் கறாராக மகா சுவாமிகள் சொன்னதன் முக்கியமான பகுதிகளை இங்கு வாசகர்களின் பார்வைக்குத் தருகிறேன்.

(ஆமாம், சாதி் க் கட்டுப்பாடுகள் அவசியம்தான் என்று கறாராக காஞ்சி சங்கராச்சாரியார் மகாப்பெரியவா சொன்னதும், சூத்திர சாதி மக்கள் எப்படி வாழவேண்டும் என்று அறிவுரை(?) சொன்னதை அறிய

என்ற தமிழ் Quora பதிவைப் படிக்கவும்.

வருணாசிரம தருமம் என்பது என்ன? என்ற கேள்விக்கு நான் அளித்த பதிலையும் காணுங்கள்:

சநாதன தருமம் என்றால் என்ன என்று சொல்வதற்கு,

 • மகாப்பெரியவா என்னும் காஞ்சி சங்கராச்சாரியாரைவிடத் தகுதி வாய்ந்தவர் யாரும் இருக்கவியலாது

என்பதையாவது சப்பைக் கட்டு கட்டி, ஏமாற்றுவோர் புரிந்து கொள்ளவேண்டும்.

பரிதிமாற்கலைஞர் என்னும் சூரிய நாராயண சாஸ்திரியார் அவர்கள்

 1. பிறப்பால், ஆரியகுலம்.
 2. சிந்தனையாலும், செயலாலும் தமிழ் உள்ளம் கொண்ட தலைசிறந்த மனிதர்;
 3. தமது குலத்தில் பிறந்த ஏனைய ஆரியர்களின் தவறுகளை அஞ்சாமல் கடிந்து உரைக்கும் துணிச்சலும் நேர்மையும் கொண்டவர்;
 4. மனுதருமம் என்னும் சநாதன தருமம் மனிதகுல விரோதம் என்று அறிவித்தவர்.

பிரகலாதன் இரண்ய கசிபு என்னும் அசுரனின் மகனாகப் பிறந்து, திருமாலில் பக்தனாக வாழ்ந்ததைப் போல், ஏழாம் நூற்றாண்டில்,

 • தீண்டாமை பாராட்டும் ஆரிய குலத்தில், ஞானக்குழந்தையாய் அவதரித்து,
 • மனிதர்களில் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை
 • தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருடன் ஒன்றாக வாழ்ந்து காட்டி,

மக்களுக்கு வழி காட்டியவர் திருஞான சம்பந்தப் பெருமான்.

ஆரியர்களால், திருஞான சம்பந்தரை அவர் வாழ்ந்த காலத்தில் எதிர்க்க முடியவில்லை.

ஆனால், ஆரியர்கள் திருஞான சம்பந்தப் பெருமானின் நிலைப்பாடான,

 • “வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே!”
 • என்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை எந்த ஒரு ஆரியப் பிராமணருக்கும் திருஞான சம்பந்தர் என்ற பெயரே இல்லாதது நிறுவும்.
 • மேலும், ஆதி சங்கரர், திருஞான சம்பந்தரைத் ‘திராவிட சிசு’ என்று வன்மத்துடன் குறிப்பிட்டதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

“எனது தரும விதிகள், சாஸ்திரங்கள் இப்படித்தான் சொல்கின்றன”, என்று சொல்லும் காஞ்சி சங்கராச்சாரியாரின் வெளிப்படை நிலைப்பாடு அவரைப் பொருத்தவரை சரியானது.

“தீண்டாமைதான் எனது சநாதன தருமம்”

 • என்பதைத் திறந்து சொல்லும் மகாப் பெரியவா அவர்களின் பொய் சொல்லத் தெரியாத நேர்மை – பாராட்டப்பட வேண்டியது.

ஒன்று,

 • நீங்கள் அநியாயத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.
 • அல்லது, மகாப் பெரியவா போல, சாதிக் கட்டுப்பாடுதான் சநாதன தருமம் என்று வெளிப்படையாக அறிவிக்கும் துணிச்சல் இருக்க வேண்டும்.
 • சரியோ, தவறோ, நான் இப்படித்தான் என்பது கூட ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

ஆனால்,

 • சநாதன தருமம் என்பதை வாழ்வியல் அறம் என்று கூசாமல் பொய் சொல்லி,
 • சப்பைக் கட்டுக் கட்டுவது மனசாட்சியே இல்லாத செயல் இல்லையா?

இதைப் போன்றே இல்லாத இந்துமதம் என்னுமொரு இன்னுமொரு பொய்யான சமாச்சாரத்தைச் சொல்லி, இந்துதருமம் என்றும் அளந்து விடுவார்கள். இதைக் குறித்தும், மகாப் பெரியவா சொன்னதை அப்படியே இங்கு தருகிறேன்:

பெயரில்லாத மதம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) – காஞ்சி மகாப்பெரியவா அருள்வாக்கு!

 • “இப்போது ‘ஹிந்து மதம்’ என்று ஒன்றைச் சொல்கிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது.
 • ‘ஹிந்து’ என்றால் ‘அன்பு’ என்று அர்த்தம். ஹிம்சையை தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும்.
 • நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும், ‘ஹிந்து மதம்’ என்கிற வார்த்தையே கிடையாது.ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியைக் கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் ஸிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள். “

இவ்வாறு துரோகம் இழைப்பவர்களை,

 • ஏனையோர், சாமர்த்தியமான பூசி மெழுகும் அரசியல் தந்திரம் செய்பவர்கள் என்று எளிதாக இனம் கண்டு கொள்வார்கள் என்ற அடிப்படை விஷய ஞானம் கூட இல்லை என்பது வருத்தத்திற்குரியது.

பலகாலங்களாக, இப்பதிவுகளைக் “கண்டும் கண்டிலேன்! என்ன கண் மாயமே!” என்றுதான் போய்க் கொண்டிருந்தேன்!

ஆனால், மீண்டும், மீண்டும் எழுதப்படும் துணிச்சலான சப்பைக் கட்டுகள்! நியாயப் படுத்தும் முயற்சிகள்! இவற்றின் எதிர்வினையே என் பதிவு!

பிறப்பால் மனிதனை தாழ்த்தும்

 • சநாதன தருமம் = வருணாசிரம தருமம் = மனுதருமம் = மனிதகுல விரோதம் = இறைவனுக்கு எதிரான அசுரத்தனம்!

என்பதை அறிவிப்பதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை!

“நம்ப சநாதன தர்மம்-ங்கறதைத்தான்

 • இந்துமதம்”-னு பொதுவாச் சொல்லுவா என்று
 • இல்லாத “இந்து தருமம்” என்ற ஒன்றையும் சொல்லி

காதில் பூச்சுற்றுவார்கள்!

போதும்!

 • தயவு செய்து நிறுத்துங்கள் இந்தப் பித்தலாட்டத்தை!

ஒன்றே குலமும்! ஒருவனே தேவனும்! – திருமந்திரம்!

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!! – திருவாசகம்!

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply