கீதையைத் தடை செய்ததில் என்ன குற்றம்?

கீதையைத் தடை செய்ததில் என்ன குற்றம்? (keetru.com)

கீதையைத் தடை செய்ததில் என்ன குற்றம்?

இந்து மதம் இரஷ்யா பார்ப்பனர்கள் பகவத் கீதை

(1) கீதை தடை செய்யப்பட்டது ஏன்?

ருசியாவில் கீதை தடை செய்யப்பட்டது. இஸ்கான் என்று அழைக்கப்படும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தைத் தோற்றுவித்த, பக்தி வேதாந்தசாமி என்பவரால் எழுதப்பட்டது “உள்ளபடியே கீதை” எனும் நூல். இந்த நூல் ருசிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கீதை மக்கள் நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடிய நூல். எனவே இதனைத் தடை செய்யவேண்டும் என்று கோரும் வழக்கு ருசியாவின் டோமாஸ்க் நகரின் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.

கீதையைப் பற்றி டோமாஸ்க் பல்கலைக் கழக நிபுணர்களின் கருத்தினை ருசிய நீதிமன்றம் கேட்டுள்ளது.

போர்க்களத்தில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு போதனை அளிப்பதுதான் கீதை. இது தீவிரவாதத்தைத் தூண்டக்கூடியது என்ற முடிவுக்கு வந்து தடை விதித்தது நீதிமன்றம்.

கீதையைத் தடை செய்வதோடு மட்டுமின்றி ஹரே கிருஷ்ணா அமைப்பு இந்த நூல் பற்றி பிரச்சாரம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அவ்வளவுதான். இந்திய நாடாளுமன்றம் கிடுகிடுத்தது. இந்து வெறி அமைப்பான பி.ஜே.பி. மட்டுமல்ல ; காங்கிரஸ்காரர்களும் கூட குதியாட்டம் போட்டனர். (காங்கிரஸ் மட்டும் என்ன வாழ்கிறது – அதுவும் இன்னொரு பா.ஜ.க. தானே? டிகிரியில் வேண்டுமானால் கொஞ்சம் வித்தியாசம் இருக்கலாம்)

நாடாளுமன்றமே நடத்தவிடப்படாமல் முடக்கப் பட்டது. (நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்வ தற்குத்தானே நாடாளுமன்ற உறப்பினர்கள்?)

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நாடாளுமன்றத்தில் ஓர் உறுதியை அறிவித்தார். மக்களின் புனித நூலான கீதையைத் தடை செய்யக் கூடாது என்று ருசிய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று உறுதி அளித்தார். (கடைசிச் செய்தி – இந்துத்துவா சக்திகளின் கடுமையான அழுத்தத்தால் கீதையைத் தடை செய்வதில்லை என்று ருசியா முடிவெடுத்துவிட்டது. அந்தோ பரிதாபம் !)

காந்தியாரின் உயிரைக் குடிப்பதற்கு – கோட்சே வுக்குத் தூண்டு சக்தியாக இருந்த கீதையைக் காப்பாற்றியதன் மூலம் இந்திய அரசு காந்தியாரை இன்னொரு முறை படுகொலை செய்துவிட்டது. நீதி மன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரனான நாதுராம் கோட்சே என்ன சொன்னான்?

“இந்து மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டபடி நடந்து கொள்வதுதான் நல்ல மனிதன் ஒருவனுடைய கடமை – தர்மம் ஆகும்” என்பதே கோட்சே அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையாக இருந்தது. உள்ளத் தைத் தொடும்வகையில் வரலாற்றுச் சான்றுகளை அவர் எடுத்துக்காட்டினார். தாய் நாட்டைக் காக்க வேண்டும். அதற்காக உயிரைக் கொடுத்துப் போராட வேண்டும் என்று இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பகவத் கீதையில் சில சுலோகங்களைச் சொல்லி உணர்ச்சிகர மாகத் தன் உரையை முடித்தார். (பஞ்சாப் உயர்நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜி.டி. கோஸ்லா எழுதியது, Murder of Mahatma )

(2) கீதை மக்களை பிளவுபடுத்தும் நூல் இல்லையா?

சதுர்வர்ணம் : மயா ஸிருஷ்டகுண
கர்ம விபாசக : தஸ்ய கர்த்Vரமபிமாம்
வித்தய கர்த்தார – மவ்யம்
(கீதை – அத்தியாயம் 4 சுலோகம் 13)

இதன் பொருள் – நான்கு வர்ணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்களுக்குரிய கருமங் களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க இந்த வர்ண தர்ம உற்பத்தி யாளனாகிய என்னால் கூட முடியாது.

(3) இந்த நான்கு வருணங்கள் குணத்தின் அடிப்படையில்தான் – பிறப்பின் அடிப்படையிலே கிடையாது என்று சிலர் வியாக்கியானங்கள் செய்கிறார்களே?

அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்.
(மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 87)

இதன் பொருள் என்ன? பிறக்கும்போதே பிரம்மாவின் நெற்றியில் பிராமணன் பிறந்தான் என்று சொல்லிவிட்டு, குணத்தின் அடிப்படையில் நான்கு வருணங்கள் என்பது அசல் “அக்மார்க்’ முரண்பாடு அல்லவா?

(4) ஒருவன் பிராமணன் என்பதற்கு என்ன அடையாளம் வைத்திருக்கிறார்கள்?

கர்ப்பதானம் முதல் அந்தியேஷ்டி வரையிலும் உள்ள பதினாறு சமஸ்காரங்கள், வேதம் ஓதுதல், கோத்திரம், நித்திய கருமங்கள் போன்றவைகள் மூலம் தான் இந்த “பார்ப்பனத்தன்மை’யை அடைய முடியும் என்று கூறுகிறார்கள். இதோடு விட்டுவிடவில்லை. “அஷ்டவர்­ம் பிராஹ்மண மபனயீத், தமத்யா யீத’ என்று தந்திரமாகக் கூறி வைத்துவிட்டார்கள். அதாவது பார்ப்பனத்தி வயிற்றில் பிறந்தவனுக்கு அவனது எட்டாவது வயதிலேயே பார்ப்பனத் தன்மைக்கான இந்த நச்சுக் கருத்துகளைச் சொல்லித் தரவேண்டுமாம்!.

கருமங்களினாலும், குணங்களினாலும்தான் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தவனுக்கு மட்டுமே 8 வயதிலிருந்து சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னால், இது, பச்சையான சாதி அமைப்பு என்பதைத்தவிர வேறு பொருள் என்ன? பகவத் கீதையில் சாதித் தன்மை இன்னும் வெளிப்படையாகவே இருக்கிறது.

“ஸ்ரேயான் ஸ்தர்மோ விகுண
மாதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்;
ஸ்வதர்மோ நிதனம ஸ்ரேய ;
பரதர் மோ பயாவஹ”

இதற்குப் பொருள் என்ன? “ஒரு சாதியான் மற்றொரு சாதியானுடைய தர்மத்தை எவ்வளவு ஒழுங்காக நடத்தினாலும், அது நன்மையைப் பயக்காது. தன் தொழிலைச் செய்யாவிடினும் அவ்வளவாகக் குற்றமில்லை ; ஆனால் பிற சாதியார் தொழிலைச் செய்யவே கூடாது” என்பது இதன் பொருள். இதற்குப் பெயர் என்ன? பச்சை சாதி வெறி அல்லாமல் வேறு என்ன? சாதி அடிப்படையிலேதான் தொழில் செய்ய வேண்டும் என்று பேசினால், தீண்டத்தகாத சாதியும், தீண்டாமையும் தானாகவே வந்துவிடுகிறதே!

(5) அரசன் தோன்றியது ஏன்?

வர்ணாசிரமப்படி நடக்கவில்லையானால் பிராமணர்கள் ஆயுதம் எடுத்து சண்டை செய்ய வேண்டும் என்கிறது மனு தர்ம சாஸ்திரம். (அத்தி யாயம் 8 சுலோகம் 348).

மகாபாரதத்தின் ஒரு இணை நூல்தான் கீதை. அந்த மகாபாரதம் – சாந்தி பருவம் 59ஆம் அதிகாரம் (94-99) என்ன கூறுகிறது !

ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்காக, விஷ்ணு தன் மனத்திலிருந்து ஒரு மகனைத் தோற்றுவித்து உண்டாக் கினார் என்றும், ஆனால் அவன் பின்னோர்கள் உலகப் பற்று நீங்கினர் என்றும் அதனால் வேணனின் கொடுங் கோலாட்சி ஏற்பட்டதாயும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அரசனின் உயிருக்கு முனிவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர் என்றும் அவனுடைய வலது தொடை யிலிருந்து பிருதுவை உண்டாக்கினர் என்றும் கூறப் படுகிறது. பிருது, விஷ்ணுவின் எட்டாவது சந்ததி. எந்த அடிப்படையில் பிருது, வைன்ய என்பவன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கலாம் என்பதை முனிவர்கள் தெளிவாக எழுதி வைத்தார்கள். (1) தண்டநீதிக் கொள்கையின்படி அரசாள்வேன் (2) பிராமணர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்க மாட்டேன் (3) சாதிக் கலப்பு ஏற்படாதபடி உலகைக் காப்பாறுவேன் – என்று மூன்று உறுதி மொழிகளைச் சத்தியம் செய்து கொடுக்கும்படி முனிவர்கள் அவனை வேண்டினார்கள். மனிதர்களுக்குள் காளைகள் போன்று விளங்குவதால் பிராமணர்களைப் பெரிதும் மதித்து அவர்களை வணங்கி வழிபடுவதாக, பிருது, முனிவர்களிடம் கடவுள் சாட்சியாகச் சத்தியம் செய்தான். அரசாங்க இயலுக்கு ஏற்பவும், நியாயமாகவும் செய்ய வேண்டிய எல்லா வற்றையும் செய்வதாக அவன் ஏற்கனவே உறுதிமொழி கொடுத்திருந்தான்.

அரசன் தோன்றியதே ஜாதி தர்மத்தைக் காப்பதற்கே என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

இதில் ஒரு வெட்கக்கேட்டைக் குறிப்பிட்டாக வேண்டும். மார்க்சியம் பேசுவோர் கூட கீதையின் கீழ்த் தரத்தை உணராமல் போனது கெட்ட வாய்ப்பாகும்.

இந்தியாவில் அரசு பொறுப்புகளில் இருக்கும் பிரதமர் முதலியோர் வெளி நாடுகளுக்குச் செல்லும்போது “பாரதப் பண்பாட்டுச் சின்னம்” என்பதுபோல் கீதையைப் பரிசாகக் கொடுப்பது – ஒரு நாகரிகமாகி விட்டது. இதற்கு டயலிட்டிக் மெட்டீரியலிசம் பேசும் கம்யூனிஸ்டுகளும் விதி விலக்கல்ல.

கேரள முதலமைச்சராக இருந்த ஈ.கே. நாயனார் வாடிகன் சென்றபோது, போப் அவர்களுக்கு கீதையைப் பரிசாக அளித்தார் என்பதுதான் அந்தச் செய்தி!

கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அதற்கு நியாயம் கற்பித்தது அதைவிட வெட்கக் கேடாகும்.

“நூறு கோடிக்கும் அதிகமான கிறித்துவ மக்களின் நம்பிக்கைக்கு உரியவரான போப்பாண்டவரை நான் சந்தித்து, அவருக்குப் பகவத் கீதையை வழங்கியதில் எந்தத் தவறும் இல்லை. எனக்கு மதங்களைப் பற்றி எவ்வித மாறுபட்ட கருத்துகளும் இருந்ததில்லை. நான் மதங்களை மதிக்கிறேன். அதன் அடிப்படையில்தான் பகவத் கீதையைக் கொடுத்தேன். இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை வைத்துள்ள மதத்திற்கு உரியதுதான் பகவத் கீதை ; இந்தியக் கலாச்சாரத்தை விளக்கும் புத்தகம் இது. எனவே இந்தியனான நான் அங்கு சென்றதால் போப் பாண்டவருக்கு பகவத் கீதையைக் கொடுத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது?” (கதிரவன் 22.06.1997).

பொருள் முதல்வாதம் பேசுபவர்களைக் கூட பொருளற்றவர்களாக ஆக்கிவிட்டதே கீதை !

ஏழையாக இருப்பதற்கும், கீழ் ஜாதியாக இருப்ப தற்கும் கர்ம பலன்தான் காரணம் என்று கீதை சொல்லு வதை ஒப்புக் கொண்டால், கம்யூனிஸ்டக் கட்சி என்ற ஒன்று தேவையா? கம்யூனிஸ்டு கட்சி இந்தியாவில் ஏன் தோல்வியுற்றது என்பது இப்போது விளங்கவில்லையா?

இந்தக் கொடிய பார்ப்பன நஞ்சை முறித்து, மக்கள் மத்தியில் சமத்துவ சமதர்மச் சித்தாந்தத்தை ஊட்ட இந்நாட்டுக் கம்யூனிஸ்டுகள் பயன்படப்போவதில்லை !

பெரியாரியல்தான் இந்தச் சமூகத்தைக் காக்கும் மீட்சிப் படகு என்பதை நினைவில் வையுங்கள்.

(6) குலதர்மம் அழியக் கூடாதா?

போர்க்களத்தில் நிற்கும் உற்றார் உறவினர்களை அழிக்கத் தயங்குகிறான் அர்ச்சுனன். அழிவது உடல்தான். ஆன்மா அழிவதில்லை என்று உற்சாகப்படுத்துகிறான் கிருஷ்ணன். (அப்படியயன் றால் கொலைக் குற்றவாளி களைத் தண்டிக்கும் சட்டத் தை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 307ஆவது பிரிவை எடுத்துவிடலாமா?)

ஆனால், அர்ச்சுனன் என்ன சொல்லுகிறான்?

“என் உற்றார் உறவினர்களைக் கொல்லுவது நமது குலத்தையே அழிப்பதாகும். அவ்வாறு அழிப்பதென்றால் நமது பண்டைய குலதர்மம் அழிந்துவிடும். அதனால், இந்தத் தவறைச் செய்பவர்கள் நரகத்திற்குத்தான் போவார்கள்.” (கீதை அத்தியாயம் 1 சுலோகம் 39)

மக்களை அழிப்பது பாவமில்லையாம். ஆண் மக்களை அழித்துவிடுவதால், வீட்டில் பெண்கள் வர்ணக் கலப்புக்கு ஆளாகிவிடுவார்களாம். இதுதான் கீதையின் சாரம்.

(7) பெண்களைப் பற்றி என்ன கூறுகிறது கீதை?

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32) இந்தக் கீதையைக் கொளுத்த வேண்டாமா?

(8) விவேகானந்தர் என்ன கூறுகிறார்?

கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில், மகாபாரதத்தின் ஒரு பகுதியாக – அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?

இரண்டாவதாக, கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர்வாழ்ந்த ஒருவரா?

மூன்றாவதாக, கீதையில் கூறப்படுவது போல குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?

நான்காவதாக, அர்ச்சுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பனதான் அவை.

கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி – குருசேத்ர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ச்சுனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டா என்ற பிரச்சனை எழுகிறது.

அர்ச்சுனன் உள்பட ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்ர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை – விவேகானந்தர்.(“கீதையைப் பற்றிக் கருத்துகள்’ என்ற நூலில்)

இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பிய பராக்கிரமசாலி என்று விவேகானந்தரைப் பற்றி பார்ப்பன வட்டாரம் – இந்துத்துவாக் கூட்டம் பறைசாற்றுகிறதே. அந்த விவேகானந்தர் கீதைப் பற்றி மேற்கண்டவாறு சொல்லியிருக்கிறார். இப்படிக் கூறும் விவேகானந்தர் இந்துத்துவவாதிதானே? இதற்கு என்ன பதில்?

தந்தை பெரியார் மறைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு “விடுதலை’யில் (16.11.1973) தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.

நமது நாட்டில் நடைபெறுகிற முட்டாள் தனங்களிலும், பச்சை அயோக்கியத்தனங்களிலும் தலை சிறந்த முதல் தரமான காரியங்களில் முதலாவது காரியம் என்னவென்றால், பகவத் கீதை ஒரு காட்டுமிராண்டி, அயோக்கியத்தனம் கொண்ட நூலை, வி­யத்தைப் பிரச்சாரம் செய்வதும், மக்களிடையே பரப்புவதுமாகும். அதன் வண்டவாளத்தை வெளியிட ஆசைப்படுகிறேன். அது வி­யமான ஆராய்ச்சி உள்ளவர்கள் அதில் உள்ள மடமையையும், நமது சமுதாயத்திற்கு கேடான வி­யங்களை உணர்ந்தவர்கள் அருள் கூர்ந்து “விடுதலை’ பத்திரிகைக்கு எழுதி அனுப்ப வேண்டுகின்றேன். பிரசுரித்து பிறகு புத்தகமாக்க ஆவலாயிருக்கின்றேன்.

  • 16.11.1973, தந்தை பெரியார், தான் மறைவதற்குச் சரியாக 38 நாள்களுக்கு முன்பு விடுதலையில் விடுத்த அறிக்கை.

அய்யாவின் இந்த விருப்பத்தினை அவரது உத்தம சீடர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நிறைவேற்றினார். கீதையின் மறுபக்கம் எனும் நூலாக 1998இல் வெளிவந்தது. இதுவரை ஆறு பதிப்புகள் வெளிவந்து இலட்சக்கணக்கில் மக்கள் மத்தியில் பரவியுள்ளது. ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துவிட்டது.

இப்படி மக்கள் மத்தியில் பேதங்களையும், பகைமை உணர்வுகளையும், சண்டைச் சச்சரவுகளையும் உண்டு பண்ணும் கீதையைத் தடை செய்ய வேண்டும் என்று ருசியாவில் கோரிக்கை எழுந்ததில் என்ன தவறு?

கீதையைத் தடை செய்ததில் என்ன குற்றம்? (keetru.com)

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply