சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான தவாறான புரிதல்கள்!
யதீந்திரா
தமிழ் மக்களுக்கான அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதற்கு பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டுமென்று சிலர் கூறிவருகின்றனர்.
அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட பேரணியின் இறுதியிலும் இவ்வாறானதொரு கோரிக்கையே முன்வைக்கப்பட்டது. இது அரசியலில் துனிப்புல் மேயும் பிரச்சினை.
தமிழ்ச் சூழலில் தங்களை படித்தவர்களென்று கருதிக்கொள்ளும் அரசியல்வாதி களுக்கே விடயங்கள் சரியாக விளங்காத போது, பல்கலைக்கழக மாணவர்களால் எவ்வாறு இந்த விடயங்களை புரிந்துகொள்ள முடியும்? பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுரை கூறுவோரும் கூட அவர்களைத் தவறாக வழிநடத்தி யிருக்கலாம்.
இவ்வாறான பேரணிகளின் போது முன்வைக்கப்படும் கோசங்கள், இறுதியில் அந்த பேரணிகளின் பெறுமதியையே இல்லாமல் ஆக்கிவிடுகின்றது.
சர்வஜன வாக்கெடுப்பு
யாழ் பல்கலைக்கழக மாணவர்களது உழைப்பு பொதுமக்கள் வாக்கெடுப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையால் பயனற்றுப்போனது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டியென்னும் பெயரில் இடம்பெற்ற பேரணிக்கும் இதுதான் நடந்தது.
எதிர்காலத்திலும் இவ்வாறான பேரணிகள் இறுதியில் விழலுக்கிறைத்த நீராகவே கடந்துபோகும்.
அவைகளை முன்னெடுப்பவர்கள் சரியானவர்களால் வழிகாட்டப்படவில்லையாயின், தொடர்ந்தும் இதுதான் கதையாக இருக்கும்.
சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான கோரிக்கையானது, அது பற்றிப் பேசுபவர்களின் சொந்த புத்தியிலிருந்து வரவில்லை. அது ஒரு இறக்குமதி செய்யப்பட்ட கோரிக்கை. எப்போது கோரிக்கைகள் இறக்குமதி செய்யப்படுகின்றனவோ, அப்போது அதன் மீதான அறிவுரீதியான பார்வை இல்லாமல் போய்விடும்.
இந்த கட்டுரை, அனைத்துமக்கள் வாக்கெடுப்பு கோரிக்கையை அறிவுரீதியாக ஆராய முற்படுகின்றது. ஆங்கிலத்தில் பொதுவாக்கெடுப்பு என்று அழைக்கப்படும் அனைத்துமக்கள் வாக்கெடுப்பானது, ஒரு குறிப்பிட்ட விடயத்திற்காக மக்களின் அபிப்பிராயத்தை கோரும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சட்டபூர்வமான நடவடிக்கையாகும்.
இதனை ஜனநாயகத்திற்குள் ஜனநாயகமென்றும் அழைப்பர். இதனை ஒரு நாட்டின் அரசாங்கமே நடத்தமுடியும்.
அதாவது, பொதுவாக்கெடுப்பு என்பது சட்டரீதியானது. சட்டத்திற்கு முரணாக இடம்பெறும் எந்தவொரு மக்கள் அப்பிராய வாக்கெடுப்புக்களும் பொதுவாக்கெடுப்பு என்னும் வரையறைக்குள் அடங்காது. சட்டத்திற்கு முரணாக இடம்பெறும் வாக்கெடுப்புக்கள் Plebiscite என்னும் ஆங்கிலச் சொல்லின் வழியாகவே நோக்கப்படும்.
அதாவது, மக்கள் தங்களின் அபிப்பிராயத்தை தெரிவித்திருக்கின்றனர் ஆனால் அதற்கு சட்டரீதியான வலு இல்லை.
இலங்கையின் வரலாற்றில் பொதுவாக்கெடுப்பு என்னும் சொல் நமக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் அறிமுகமாகியிருக்கின்றது.
ஒன்று, 1982 இல், ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தின் காலத்தை நீடித்துக் கொள்வதற்காக அனைத்துமக்கள் வாக்கெடுப்பை நடத்தினார். தேர்தலை நடத்தினால், நாடு நக்சலைட்டுக்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் ஆபத்துண்டதென்னும், காரணத்தை முன்வைத்தே, அனைத்து மக்கள் வாக்கெடுப்பை நடத்தினார். ஜே.ஆரின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக, 54 வீதமான மக்கள் வாக்களித்தனர்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம், ரிபரெண்டம் நமக்கு இரண்டாவது தடவையாக அறிமுகமானது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டுமென்னும் தமிழர்கள் அரசியல் கோரிக்கையை சட்டரீதியாக அங்கீகரிப்பதாயின், கிழக்கு மாகாணத்தில், பொதுவாக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டுமென்று, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த அடிப்படையில் ஜே.ஆர் ஜெயவர்த்தன, செப்டம்பர் 1988 இல், வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரு நிர்வாக அலகாக பிரகடணம் செய்தார்.
நவம்பர் மாதத்தில், இணைந்த வட-கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் இடம்பெற்றது. வரதராஜபெருமாள் முதலமைச்சரானார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி, டிசம்பர் 31, 1988இல் அல்லது அதற்கு முற்பதாக, கிழக்கு மாகாணத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் அது நடத்தப்படவில்லை.
ஒப்பந்தத்தின்படி, பொதுவாக்கெடுப்பை தனது சுயவிருப்பின் பெயரில் ஜனாதிபதி பிற்போட முடியும். அவ்வாறானதொரு பொதுவாக்கெடுப்புகள் இடம்பெறாமலேயே வடக்கு கிழக்கு மாகாணங்கள் 18 வருடங்களாக ஒரு நிர்வாக அலகாக இருந்தது. 2006இல், ஜே.வி.பி இணைப்பிற்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்து, இணைப்பின் சட்டபூர்வ தன்மையை கேள்விக்குள்ளாக்கியது.
இதனைத் தொடர்ந்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனி நிர்வாக அலகாகின.
இந்திய-இலங்கை ஒப்பந்தம்
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி கிழக்கு மாகாணத்திற்கான பொதுசன வாக்கெடுப்பு இடம்பெற்றால,; அது வாக்கெடுப்பு என்றே அழைக்கப்படும், ஏனெனில், அது சட்டரீதியானது. இதனை கோருவதற்கு தமிழ் மக்களுக்கு இப்போதும் உரிமையுண்டு. ஆனால் இதிலுள்ள நடைமுறைச் சிக்கல், அவ்வாறானதொரு பொதுவாக்கெடுப்புகள் இடம்பெற்றால் கிழக்கில் தமிழர்கள் தோல்வியடைவார்கள்.
ஏனெனில் அதனை முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஆதரிக்கப்போவதில்லை. இன்றைய சூழலில் தமிழர்களின் ஒரு பகுதியினர் அதரிப்பார்களா என்னும் கேள்வியுமுண்டு. ஆனால் ஒரு வேளை 1988இல், அவ்வாறானதொரு பொதுவாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தால், தமிழர்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பிருந்தது.
ஏனெனில் அன்றிருந்த சூழலில், முஸ்லிம்கள் அதனை எதிர்ப்பதற்கான வாய்ப்பு பெருமெடுப்பில் இருந்திருக்கவில்லை. இன்று சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் பேசுவது முற்றிலும் வேறானது. ஏனெனில் இது அடிப்படையில், தமிழ் மக்கள் தங்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதற்கான சுதந்திர வாக்கெடுப்பு பற்றியது.
ஆரம்பத்தில் இது பற்றி உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த அரசாங்கம் மட்டுமே பேசிவந்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவை தளமாகக் கொண்டிருக்கும் சில புலம்பெயர் அமைப்புக்களும், இப்போது பேசுகின்றன. இவர்களது செல்வாக்கின் காரணமாகவே வடக்கிலும் சிலர் இது பற்றி பேசிவருகின்றனர்.
இவர்களது செல்வாக்கிற்குட்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் சிலரும் இதனை அவ்வப்போது உச்சரிக்கின்றனர். ஒன்றை விரும்புவது என்பது வேறு, அதனைச் சரியாக புரிந்துகொண்டு விரும்புவது என்பது வேறு.
ஒரு விடயத்தை சரியாக புரிந்துகொள்ள முற்படும் போது, விருப்பங்கள் இரண்டாம் பட்சமாகி, யதார்த்தங்களே முன்னுரிமைபெறும். யதார்த்தங்கள் ஒரு வேளை கசப்பானதாக இருந்தாலும் கூட, அதுதான் இறுதியில் வெற்றிபெறும்.
தமிழ் சூழலில் பொதுசன வாக்கெடுப்பு தொடர்பில் பேசுவோர் முதலில் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, நீங்கள் யாரிடம் அந்த வாக்கெடுப்பை கோருகின்றீர்கள்? ஒரு வாக்கெடுப்பை அரசாங்கம் மட்டுமே நடத்த முடியும்.
அவ்வாறாயின் சிறிலங்கா அரசாங்கத்திடமா நீங்கள் வாக்கெடுப்பை கோருகின்றீர்கள்? 13வது திருத்தச்சட்டத்தையே முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதவொரு சூழலில் ரிபரெண்டம் ஒன்றை கொழும்பிடம் எவ்வாறு கோரமுடியும்?
அடுத்தது பிறிதொரு நாடு தமிழர்களுக்காக பொதுவாக்கெடுப்பை கோர முடியுமா? அதற்கான வாய்ப்புக்கள் என்ன? நிச்சயமாக எந்தவொரு வாய்ப்பும் இல்லை. உண்மையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கோரப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான ரிபரெண்டம் அரிதானதொரு நிகழ்வாகும்.
ஏனெனில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் பொதுவாக்கெடுப்பு உள்ளடக்கப்பட்டதை, அப்போது, முக்கிய இந்திய தலைவராக இருந்த வி.பி.சிங் விமர்சித்திருந்தார்.
இந்தியாவிலேயே பொதுவாக்கெடுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளாத போது, எவ்வாறு பிறிதொரு நாட்டில் அதனை நீங்கள் கோரலாமென்று அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
எனினும் ஜனநாயக ரீதியில் கிழக்கு வடக்குடன் இணைவதற்கான ஏற்பாட்டை ராஜீவ்காந்தி ஆதரித்திருந்தார்.
இராஜீவ் கொலையை தொடர்ந்து, வி.பி.சிங்க இந்தியாவின் பிரதமரானார். வி.பி.சிங் கூறியது முற்றிலும் சரியானது. ஏனெனில், காஸ்மீரின் சுயநிர்ணய உரிமைக்கான பொதுவாக்கெடுப்பை 1949 இல் இருந்து இந்தியா எதிர்த்துவருகின்றது. ஜ.நா பரிந்துரைத்தும் இந்தியா அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஈழத் தமிழர்கள்
காஸ்மீர் சுயநிர்ணய கோரிக்கையை பாக்கிஸ்தானே தூண்டிவருகின்றது. பிராந்திய அரசியல் பின்புலத்தில் நோக்கினால் ஈழத் தமிழர்களுக்கான பொதுவாக்கெடுப்புக் கோரிக்கையை இந்தியாவினால் ஆதரிக்கவே முடியாது.
இந்த பின்புலத்தில் நோக்கினால், இந்த விடயத்தில், பிராந்தியரீதியான ஆதரவும் ஈழத் தமிழர்களுக்கு இல்லை. அடுத்த சர்வதேச ரீதியானது.
சர்வதேச ரீதியாக நோக்கினால், இதனை இரண்டு வகையில் நோக்கலாம் – ஒன்று, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொதுவாக்கெடுப்புக்கள், இரண்டு, அங்கீகரிக்கப்படாத அபிப்பிராய வாக்கெடுப்புக்கள்.
உதாரணமாக, கேட்டலோனியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பு பொதுவாக்கெடுப்பும் அல்ல. தமிழ் சூழலில் விடயங்கள் தவறாக முன்வைக்கப்படுகின்றன.
பொதுவாக்கெடுப்பு தொடர்பில் பேசுவோர் விடயங்களை நேர்மையாக முன்வைப் பதில்லை. ஒரு வேளை அவர்களுக்கு விடயங்கள் தெரியாமலும் இருக்கலாம்.
உதாரணமாக கேட்லோனியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பு தொடர்பில் தமிழ்ச் சூழலில் சிலர் பேசுவதுண்டு. இந்த விடயங்கள் அனைத்துமே புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றால்தான் இறக்குமதி செய்யப்பட்டது.
இதனை அரைகுறையாக விளங்கிக்கொண்டு நமது சூழலிலும் சிலர் பேசுவதுண்டு. கேட்டலோனியாவின் பிரச்சினை வேறு ஈழத் தமிழர்களின் பிரச்சினை வேறு.
ஸ்பெயின் 17 சுயாதீன பிராந்தியங்களை கொண்டிருக்கின்றது. இதல் ஒரு பிராந்தியம் தான் கேட்டலோனியா. உதாரணமாக இந்தியாவில் தமிழ் நாடு இருப்பது போன்று. ஸ்பெயினின், ஏனைய பராந்தியங்களோடு ஒப்பிட்டால், கேட்டலோனியா, பொருளாதார ரீதியில் வளமான பகுதியாக இருக்கின்றது.
இந்த பின்புலத்தில், கேட்டலோனியாவை ஒரு தனிநாடாக்க வேண்டுமென்னும் கோரிக்கை அங்குள்ள அரசியல் சமூகத்திடமுண்டு.
இந்த அடிப்படையில்தான், 2017இல், கேட்டலோனியா பாராளுமன்றத்தில், சுயநிர்ணயத்திற்கான சுதந்திர வாக்கெடுப்பை நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையே நம்மவர்கள் சிலர் கேட்டலோனியாவிற்கான பொதுவாக்கெடுப்பு என்று கூறினர்.
உண்மையில் இது பொதுவாக்கெடுப்பு அல்ல ஏனெனில், ஸ்பெயினின் அரசியல் சாசன நீதிமன்றம் இந்த வாக்கெடுப்பை நிராகரித்துவிட்டது. எனவே கேட்டலோனியவிற்கான வாக்கெடுப்பை, கேட்டலோனிய பாராளுமன்றம் பொதுவாக்கெடுப்பு என்று கூறிய போதிலும் கூட, அதனை ஸ்பெயின் நிராகரித்துவிட்டது.
இந்த அனுபவத்திலிருந்து ஒரு விடயத்தை நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதாவது, ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்துவதாக இருந்தால் கூட முதலில், ஒப்பீட்டடிப்படையில், சுயாதீன நிர்வாக கட்டமைப்பு கட்டாயமானது. அந்த நிர்வாக கட்டமைப்பு ஒப்பீட்டடிப்படையில் பலமானதாகவும் இருக்க வேண்டும்.
அரசியல் நோய்
அடுத்தது, அந்த நிர்வாக கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் வாக்கெடுப்பானது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இவைகளை ஈழத் தமிழர்களால் எவ்வாறு சாத்தியப்படுத்த முடியும்? இப்போது பொதுவாக்கெடுப்பு என்று உச்சரிப்பவாகளால் இதனை எவ்வாறு முன்னெடுக்க முடியும்? இன்னொரு முக்கியமான விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.
சில புலம்பெயர் அமைப்புக்கள் மேற்குலக அனுபவங்களிலிருந்து மட்டுமே விடயங்களை நோக்குகின்றன. அவர்களிடம் பிராந்திய அரசியல் சுழல் தொடர்பில் தெளிவான புரிதல்கள் இருப்பதாக தெரியவில்லை. இந்த தவறிலிருந்தும்தான், வாக்கெடுப்பு தொடர்பான தவறான புரிதல்கள் எழுகின்றன.
ஐரோப்பிய அரசியல் பின்புலத்தில் இடம்பெறும் விடயங்களை தெற்காசிய அரசியல் சூழலுக்குள் பயன்படுத்த முடியாது.
தெற்காசிய அனுபவங்களிலிருந்துதான் விடயங்களை நோக்க வேண்டும். ஜரோப்பிய சூழலில் பல பொதுவாக்கெடுப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. கிழக்குதிமோர், குர்திஸ், கொசோவா, தென்சூடான் -இவ்வாறு பல நாடுகளில் பொதுவாக்கெடுப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் அவற்றின் அரசியல் பின்புலமும், பிராந்திய உலகளாவிய அரசியல் தாக்கங்களும் முற்றிலும் வேறானது. அவற்றை ஒரு அனுபவமாக ஈழத் தமிழர்கள் கொள்ள முடியாது.
மேற்குறிப்பிட்ட நாடுகள் அனைத்துமே ஒரு அதிகார கட்டமைப்பை கொண்டே சுயநிர்ணயத்திற்கான வாக்கெடுப்பை கோரின. ஆனால் நமது சூழலில் சிலரால் கோரப்படும் பொதுவாக்கெடுப்பு வெறுங்கை பொதுவாக்கெடுப்பு எதுமில்லை ஆனால் எல்லாமும் இருப்பதான கற்பனையிலிருந்து சிந்திப்பது.
அடிப்படையில் இது ஒரு அரசியல் நோய். இந்த நோய்க்கு அறிவுள்ள தரப்பு மருந்திட வேண்டும். இல்லாவிட்டால் இந்த நோயை அனைவரையும் தொற்றிக்கொள்ளும்.
https://tamilwin.com/article/misunderstandings-about-the-referendum-1677928888
Leave a Reply
You must be logged in to post a comment.