சிலப்பதிகாரம்

 சிலப்பதிகாரம்

ழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறுகாப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம்,சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங்காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி,     வளையாபதி     ஆகிய     மூன்றும் சமண சமயக் காப்பியங்களாகக் கருதப்படுகின்றன.

தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மை பெறுவது சிலப்பதிகாரம். நமக்குக் கிடைத்திருக்கும்     காப்பியங்களில் பழமையானது     இதுவே. காவிரிப்பூம்பட்டினத்தில் பெருங்குடி வணிகர் மரபில் உதித்த கண்ணகி, கோவலன் என்பவர்களுடைய வரலாற்றைக் கூறுவது. முத்தமிழ்ப் புலமையுடைய வித்தகப் பெருமானாகிய இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாராட்டப்படுகிறது.
புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் மூன்று காண்டங்களை உடையது இக்காப்பியம். சோழ, பாண்டிய, சேர மன்னர்களின் நாட்டில் கதையை நடத்திச் செல்கிறார் இளங்கோவடிகள். கீழ்க்கண்ட முப்பெரும் உண்மைகளை விளக்குவது சிலப்பதிகாரம்.

1.அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
2.ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
3.உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

    (அரைசியல்= அரசியல் = ஆட்சி)

 ஆட்சி செய்வதில் தவறிழைத்தவர்களை அறம் தண்டிக்கும்; ஊழ்வினை, விடாது பற்றித் தொடரும்; கற்புடைப் பெண்டிரை உயர்ந்தவர்கள் போற்றுவார்கள்     என்னும்     கருத்துகளையே மேற்குறித்த வரிகள் சுட்டுகின்றன.

    இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் விரவப் பெற்றிருப்பதால்     இது முத்தமிழ்க் காப்பியம் என்றும் வழங்கப்படுகிறது. உலகத்தின் பிறமொழிக் காப்பியங்களைப்
போலவோ,வடமொழிக் காப்பியங்கள் போலவோ தெய்வங்களையோ மன்னர் களையோ காப்பியத்தலைவனாகக் கொள்ளாமல் மக்களையே கொண்டதால் இதைக் குடிமக்கள் காப்பியம் என்று அறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் குறிப்பிடுவார். இத்தகைய சிறப்பு மிகுந்த காப்பியத்தை இயற்றிய     இளங்கோவடிகள் சமண சமயத்தவர் என்பதை,

குணவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்கு

என்ற பாயிர அடிகளுக்கு உரை கூறும் அடியார்க்கு நல்லாரின் விளக்கம் தெளிவாக்குகிறது. குணவாயில் என்பது திருக்குணவாயில் என்பதோர் ஊர். கோட்டம் என்பது அருகன் கோட்டம்; அடிகள் என்பது சமணத் துறவியர்க்கானது என்பது உரை ஆசிரியர் தரும் விளக்கம். அதனால் இளங்கோவடிகளின் சமயம் சமணம் என்று
ஆகிறது.

சிலப்பதிகாரத்தில் சமணச் செய்திகள்

 சமணர் ஒருவர் இயற்றிய காப்பியமென்பதால், சமண சமயக் குறிப்புகளும்,     சமணக்     கோட்பாட்டு     விளக்கங்களும் சிலப்பதிகாரத்தில் விரவி இருக்கின்றன. சமணம் தொடர்புடைய சிலப்பதிகாரப் பகுதிகளை இனிக் காண்போம்.

உலக மூடம் தவிர்த்தல்

கனாத்திறம் உரைத்த காதையில் தேவந்தி, (கண்ணகியின் தோழி) கணவனைப் பிரிந்திருக்கும் கண்ணகியின் துயர் நீங்க, சாத்தன் கோயில் சென்று, (கண்ணகி கணவனைத் திரும்பப் பெற வேண்டும் என்று) வழிபட்டுத் திரும்புகிறாள். கண்ணகியிடம் கணவனைப் பெறுவாயாக என, தேவந்தி வாழ்த்துகிறாள். அதற்கு
மறுமொழியாகக் கண்ணகி, “நீ இங்ஙனம் கூறுவதால் கணவனைப் பெறுவேன் என்றாலும், யான் கண்ட கனவினால் எனது நெஞ்சம் ஐயுறுகின்றது” என்று கூறித் தான் கண்ட கனவினைக் கூறுகிறாள்.

அதற்குத் தேவந்தி, “நீ உன் கணவனால் வெறுக்கப்படவில்லை. முற்பிறப்பில் கணவன் பொருட்டுக் காக்க வேண்டியதொரு நோன்பினைச் செய்யத் தவறிவிட்டாய். அதனால் ஏற்படும் தீங்கு வராமல் இருக்கட்டும். காவிரியின் சங்கமுகத் துறையை அடுத்த
கானலில் சோமகுண்டம், சூரியகுண்டம் என்னும் பொய்கைகளில் மூழ்கிக் காமன் கோவிலில் சென்று தொழுத மகளிர் இம்மையில் கணவனுடன் கூடி இன்புறுவர். மறுமையிலும் போக பூமியில் போய்ப் பிறந்து கணவரைப் பிரியாதிருப்பர். ஆதலின் நாமும் ஒருநாள் நீராடுவோமாக” என்றுரைத்தாள். “தேவந்தி! அங்ஙனம் துறை
மூழ்கித் தொழுதல் எங்கட்குப் பெருமையன்று” என்று கண்ணகி கூறினாள். இதோ அந்த வரிகள்:

கைத்தாயுமல்லை கணவற்கு ஒரு நோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பிற் போய்க் கெடுக; உய்த்துக்
கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில்
மடலவிழ் நெய்தலால் கானல் தடமுள
சோமகுண்டம் சூரியகுண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு
தாமின் புறுவர் உலகத்துத் தையலார்
போகஞ்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாமொருநாள்
‘ஆடுதும்’ என்ற அணியிழைக்குஅவ் வாயிழையாள்
‘பீடன்று’ என விருந்த பின்னர்
(கனாத்திறம் உரைத்த காதை :55-64)

(கைத்தாயுமல்லை = நீ தவறு செய்யவில்லை , காமவேள் கோட்டம் = மன்மதன் கோயில், போகம் செய் பூமி = வானுலகம், ஆடுதும் = மூழ்குவோம், பீடன்று =பெருமையன்று)

 கண்ணகி சமண சமயத்தைச் சார்ந்த இல்லற நெறியினள். அதாவது சாவக நோன்பி. சமண சமயத்தில் மூவகை மூடங்களைப் பற்றிய கோட்பாடு உண்டு. அவை உலக மூடம், தேவ மூடம், பாஷண்டிமூடம் என்பனவாகும். உலகமூடம் என்பது மலையின்
மேல் ஏறிவிழுதல், நெருப்பில் பாய்தல், ஆறு, கடல் ஆகியவற்றில் மூழ்குதல் ஆகிய இச்செயல்களால் புண்ணியம் கிடைக்கும் என்று நம்புவது. சமண சமயக் கோட்பாட்டின்படி இவை தவறானவை.
புண்ணியத்தைத் தரும் என்று எண்ணும்     நம்பிக்கையும் மூடத்தனமானது எனலாம். அதனால்தான் கண்ணகி தேவந்தியின் வேண்டுகோளை ஏற்காமல் பீடன்று எனவுரைக்கிறாள்.

ஸ்ரீகோயில் சிலாவட்டம்

கோவலனும் கண்ணகியும் வைகறைப் பொழுதில் யாரும் அறியாதபடி மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றனர். இடையில் மணிவண்ணன் கோயில், இந்திரவிகாரம் ஏழு ஆகியவற்றைக் கடந்து சென்றனர். இறுதியில் ஸ்ரீ கோயில் சிலாவட்டத்தை அடைந்தனர். ஸ்ரீகோயில் என்பது சமணர் கோயில். சிலாவட்டம் என்பது சமணத்துறவியர் மக்களுக்கு     அறிவுரை     வழங்க அமைக்கப்பட்ட மேடை ஆகும். இந்த ஸ்ரீகோயில் சிலாவட்டத்தின் வருணனை     சமண சமயப் பழக்கங்களை விளக்கமாக எடுத்துரைக்கிறது. ஊன் உண்ணுதலைத் தவிர்த்து, பொய்யாமை
விரதத்தோடு பொருந்தியவர்கள்; அழுக்காறு, அவா முதலியவற்றைக் விட்டவர்கள்,     ஐம்புலன்களையும்     அடக்கிய கொள்கை யுடையவர்கள் – இப்படிப்பட்ட சீரியோர் கூடிய ஸ்ரீகோயிலில் (சமணர் கோயில்) பஞ்சபரமேஷ்டிகள் ( அரஹந்தர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சர்வ சாதுக்கள் இவர்களைப் பஞ்சபரமேஷ்டிகள் என அழைப்பது சமணசமய மரபு) நிலைபெற்ற, ஐந்து சக்தியும் கூடிவந்து கலந்த பெரிய மன்றத்தின்கண், பொற்பூவினை உடைய, எழில் விளங்கும் நிழலின் கண் அசோக மரத்தின் கீழ் அபிடேக நாளிலும் தேர்த்திருநாளிலும் சாரணர் (சாரணர் = சமணத்துறவியர், மக்களுக்கு அறநெறி கூறுவோர்) வரத்தகுமென்று சாவகர் (சமணத்தைப் பின்பற்றும் மக்கள்) யாவரும் கூடியிருந்த சிலாவட்டத்தை (சிலாவட்டம் = சாரணர் அமர்ந்து அறம் கூறும் மேடை) கண்ணகியும் கோவலனும் வலம்வந்து வணங்கினர். பின் அங்குக்கவுந்தியடிகளைக் கண்டு
வணங்கினர்.

மறவுரை நீத்த மாசறு கேள்வியர் அறவுரை கேட்டு
அறிவனை ஏத்தச் செல்லும் எண்ணமுடையேன். ஆதலால்
நானும் வருகிறேன்
 எனக் கவுந்தியடிகள் அவர்களுடன் மதுரை புறப்பட்டார்.

(மறவுரை = அன்பில்லாத உரை, மாசறு = குற்றமற்ற)

கவுந்தி அடிகளின் சாவகச் சிந்தனை

கோவலன், கண்ணகி ஆகியோருடன் புறப்பட்ட கவுந்தி அடிகள் மதுரை செல்லும் வழியின்     தன்மையை யெல்லாம் சிந்தித்துக் கொண்டே வருகிறார்.

வயல்களின் வழி சென்றால் கரும்பின்கண்வைத்த தேன் கூடு அழியப்பெற்று, குளங்களின் நீரோடு அத்தேன் கலந்திருக்கும்.

கடுமையான தாகத்தால் அந்த நீரை இவள் (கண்ணகி)     முகந்து உட்கொள்ளக்கூடும்.
களை     பறிப்போர், எடுத்துப்     போட்ட குவளைப்பூவுடன் வண்டின்     கூட்டம்
உள்ளே ஒடுங்கிக் கிடக்கும். வழிநடந்த களைப்பினால் சோர்ந்து அவற்றின்மீது அடியிட்டு நடத்தலும் கூடும். வாய்க்காலில் நண்டு, நத்தை முதலியன இருக்கும். நடந்து செல்லும்போது அவற்றுக்குத் தீங்குண்டாகும் என்றெல்லாம் சிந்திக்கிறார்.அதனால் பாதுகாப்பாகக் கண்ணகியை அழைத்து வரும்படி கோவலனிடம் கவுந்தியடிகள்
கூறுவார்.

சமண சமய சாவகர் தேன் உண்ணமாட்டார்கள். எந்த உயிர்க்கும் தீங்குநேராமல் இருக்க வேண்டும் என்ற கொல்லாமைச் சிந்தனையில் எப்போதும் இருப்பார்கள். எனவே தான் கவுந்தி அடிகள் நத்தை,நண்டு போன்றவற்றிற்கும் தீங்கு நேராமல் இருக்கப் பார்த்து நடக்கும்படி கூறுகிறார்.

சாரணர் அறவுரை

சிலாதலத்தில் (சிலாவட்டம்) அமர்ந்திருந்த சாரணரை,கண்ணகி, கோவலன், கவுந்தி அடிகள் மூவரும் வணங்குகின்றனர். சாரணர்,கோவலனும் கண்ணகியும் வந்த காரணத்தை அறிந்தவர்கள். ஆயினும், விருப்பு வெறுப்பு அற்றவர்கள் என்பதாலும் வினையின் பயனை நீக்க இயலாது என்று உணர்ந்ததாலும் அவர்களுக்கு
நேர்ந்த, நேரும் துன்பத்திற்கு வருந்தாமல் தம்மை வணங்கிய கவுந்தியைப் பார்த்துக் கூறலாயினர்:

    “மிக்க சிறப்பினை உடைய கவுந்தியே, யாவராலும் ஒழிக்க முடியாத தீவினையைக் காண்க. ஒழிக என்றாலும் ஒழியாது ஊட்டும் வலியவினை விளை நிலத்திட்ட வித்துப்போன்றது. நல்வினை வந்தடைந்து, நற்பயனை நுகர்விக்குங்காலத்து அதனை ஒழிக்கவும் முடியாது. கடிய காற்றை உடைய நெடிய வெளியிடத்தில் இடப்பட்ட
விளக்கு அணைவதுபோல அழியும் தன்மையது இவ்வுடல். தீவினையின் பயனையும் யாக்கை நிலையாமையையும் கூறியபின் அவற்றை நீக்க அருகதேவனை (தீர்த்தங்கரர்) அடையவேண்டும்.

இல்லையெனின் பிறவியாகிய மூடப்பட்ட அறையிலிருந்து வெளிவர இயலாது” என்று கூறினர். பின்னர், கவுந்தியிடம், “பாசம் ஒழிக” என வாழ்த்தி, அருகதேவனைப் பாராட்டினர்.

    “எல்லா உயிர்களுக்கும் இதமானவன். எண்வகை வினைகளை வென்றவன். முக்கால உணர்வு உடையவன். அறங்களுக்கு முதலானவன். உண்மைப் பொருளானவன். பழமையானவன். தேவர்க்கும் தேவன். சிவகதி நாயகன், பரமன், சங்கரன், ஈசன்”
என்றெல்லாம் புகழ்கின்றனர்.

உலக மூடம் தவிர்க்கும் மற்றுமொரு நிகழ்ச்சி

மதுரைக் காண்டத்தில் காடுகாண் காதையில் மாங்காட்டு மறையோனிடம் கோவலன் மதுரைக்குப்     போகும் வழியைக் கேட்கிறான். மறையோனும் சிவபெருமானின் சூலம் போன்ற மூன்று வழிகளை விளக்குகிறான். இடப்பக்க வழியை விளக்குகையில்
இடப்புறம் திருமால்குன்றம் தாண்டியதும் குகை ஒன்று உண்டு. அங்கு மூன்று பொய்கைகள் உள்ளன என்று கூறி, அவற்றின் தன்மைகளை விளக்குகிறான். புண்ணிய சரவணம், பவகாரணி, இஷ்டசித்தி என்று அவற்றின் பெயர்களைக் கூறி அவற்றில்
மூழ்கினால் ஏற்படும் பயன்களையும் விளக்குகிறான்.

புண்ணிய சரவணத்தில் மூழ்கினால் இந்திரனின் ஐந்திர நூலை அறியலாம். பவகாரணியில் மூழ்கினால் முற்பிறவியைப் பற்றி அறியலாம். இஷ்டசித்தியில் மூழ்கினால் விரும்பியதை அடையலாம் என்கிறான். இதைக் கேட்ட கவுந்தியடிகள் “எமக்குப் பொய்கையில் மூழ்கத் தேவையில்லை. ஏனென்றால் அருகதேவன் அருளிய
பரமாகமத்தின்கண்     இந்திரனின் ஐந்திரநூலை அறியலாம். இப்பிறப்பில் முற்பிறவியின் தன்மையை அறிந்து கொள்ளலாம். உண்மை நெறியில் தவறாது பிற உயிர்களைப் பேணுவோர்க்கு அடையக் கூடாத பொருள் ஏதுமில்லை” என்கிறார்.

இல்லறத்தார், துறவறத்தார் இருசாராருமே பொய்கைகளில் மூழ்கிப் பயன் பெறலாம் என எண்ணுவதில்லை. இங்கும் சமண சமயக் கோட்பாடாகிய உலக மூடம் பற்றிய கருத்தை அறிந்து கொள்ளலாம்.

வரந்தரு காதையில் இளங்கோவடிகளின் அறவுரை

    ‘தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்’ என்றழைத்து,இளங்கோ அடிகள் அனைவர்க்கும் கூறுகின்ற அறங்கள் சமணச் சார்புடையன; ஆயினும் பொதுவான அறங்களாக அவை
விளங்குவதை மறுக்க இயலாது.

தெரிவுறக் கேட்ட திருத்தரு நல்லீர்!
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; நலம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பிகழ்மின்;
பொய்க்கரி போகன்மின்; பொருண்மொழ நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலா தணுகுமின்;
பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்;
மல்லன்மா ஞாலத்து வாழ்வீர்
(வரந்தருகாதை 185-202)

இதன் பொருளாவது: பிறர்க்குக் கவலையும் துன்பமும் விளைத்தலைத் தவிர்த்திடுக. தெய்வத்தை உணருக. தெய்வத்தை உணர்ந்தோரை விரும்புக. பொய்யுரை தவிர்க்க புறங்கூறுதலை நீக்குக. ஊன் உண்ணுதலை நீங்குமின். உயிர்க்கொலை செய்தலைத்
தவிர்க்க. தானம் செய்க. தவத்தை மேற்கொள்க. பிறர் செய்த உதவியை மறக்க வேண்டா. தீயோரது தொடர்பினை ஒதுக்குக. பொய்ச்சாட்சி கூறும் நெறியில் செல்ல வேண்டாம். உண்மை மொழியை நீங்க வேண்டாம். அறநெறிச் செல்லும் சான்றோர்
அவையினை நீங்கா வேண்டாம் ; மறநெறி செல்வோர் அவையினின்றும் நீக்குக. பிறர் மனைவியை விரும்பாதீர். துன்பமுற்ற உயிர்களைப் பாதுகாப்பீராக. இல்லறத்தைப் போற்றுங்கள் பாவச் செயல்களை     (கள், காமம், களவு, பொய்) விலக்குங்கள்.
பயனில் சொல் ஒழியுங்கள். ஏனென்றால் இளமை, செல்வம், யாக்கை இவை நிலையற்றன. அடையவிருக்கும் துன்பம் அடைந்தே தீரும். அதனால் மறுமைக்குத் துணை நிற்கும் அறத்தினைத் தேடுங்கள்.

2.1.2 சீவகசிந்தாமணி

சீவக சிந்தாமணி செந்தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் பழம்பெரும் காப்பியங்களாகிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. அதன் சிறப்புக் கருதி ஐம்பெருங்காப்பியங்களுள் சிந்தாமணியையே முன்னிறுத்தி எண்ணும் வழக்கமும் உண்டு.

சிந்தாமணி – பெயர்க்காரணம்

    சிந்தாமணி என்பது தேவர் உலகத்து மணிகளுள் ஒன்று. வேண்டுவோர்க்கு     வேண்டியதை     வழங்கும் தன்மையது. சிந்தாமணியும் புலவர் பெருமக்களுக்கு வேண்டியதைத் தரும் சிறப்புடையது. எனவே சிந்தாமணி என்று போற்றினர் அறிஞர்கள். சீவகனின் தாயார் முதன் முதலில் அவருக்கு இட்ட பெயர்
சிந்தாமணி. சீவ என்பது பின்னர் வானொலியாகத் (அசரீரி) தோன்றியதால் சீவகசிந்தாமணி என்னும் பெயர் பெற்றது.

நூலாசிரியரும் நூல் இயற்றக் காரணமும்

    வடமொழியில்     மகாபுராணத்திலும் ஸ்ரீபுராணத்திலும் இக்கதை கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கதேவர். இவர் இளமையிலேயே துறவு நெறியைப் பின்பற்றியவர். சமணர் துறவு நெறியை மட்டுமே பாடவல்லார்,
இன்பத்தைப் பாட வல்லார் அல்லர் என்ற பழிச்சொல்லை நீக்கவே திருத்தக்கதேவர் இந்நூலைப் பாடினார் என்ற செய்தியும் வழங்குகிறது. காப்பியத் தலைவனாகிய சீவகன் எட்டுப் பெண்களை மணந்த கதையைக் கூறுவதால் இதற்கு மணநூல் என்றும் பெயர் உண்டு.

நூலின் காலமும் சிறப்பும்

    இதன் காலம் ஏறக்குறைய ஒன்பதாம் நூற்றாண்டு எனலாம். பெருங்கதை யாசிரியராகிய கொங்குவேளிரும் இளங்கோவடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் பழைய மரபினின்றும் மாறி, தொடர்நிலைச் செய்யுட்களை அமைத்த பெருமைக்கு உரியவர்கள். அகவற்பா கொண்டு கதையை அமைத்தவர்கள். திருத்தக்கதேவர் அந்த மாற்றத்தில் பின்னுமொரு மாற்றத்தைக் கொண்டு வந்து புதுமை செய்தார். அதாவது விருத்தப்பாவில் காப்பியம் செய்து, பழைய செய்யுள் போக்கை மாற்றியமைத்த பெருமைக்கு உரியவரானார். பின்வந்த காப்பியங்களுக்கு எல்லாம் இது ஒரு முன்னோடியாக அமைந்தது.

    சிந்தாமணியிலிருந்து ஓர் அகப்பை முகந்து கொண்டேன் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பனே கூறியதாக ஒரு செய்தியும் வழங்குகிறது. திருத்தக்கதேவர் தமிழ்க் கவிஞருள் ஒரு சிற்றரசர் என்று வீரமாமுனிவர் பாராட்டுகிறார். சீவக சிந்தாமணி உலகக்
காப்பியங்களுள் ஒன்று என்று ஜி.யு. போப் புகழ்ந்துரைப்பார். சிந்தாமணி வைணவ சமயத்தில் வரும் கண்ணன் கதையை ஒத்திருக்கிறது என்பாரும் உண்டு. உலகத்தில் பற்றின்றியே எல்லாத் தொழிலிலும் ஈடுபட்டு நல்வாழ்க்கை வாழலாம் என்பதற்குக்
கண்ணன் கதையை ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்வர். அதைப் போன்றே சீவகன் வாழ்வும் அமைந்தது எனலாம்.

சமணக் கோட்பாட்டை அரண் செய்யும் கதைக்கரு

    மனிதன் மன்னராக இருக்கலாம்; மகளிரை மணக்கலாம். அறநெறி தவறாமல் போரிடலாம். ஆனால் குறிக்கோளை விடாமல் இருக்க வேண்டும். கடமையை ஆற்றியபின் இறுதியில் முற்றும் துறந்து தவம் புரிதல் உயிரின் உயர்ந்த கடமை என்பதை இப்பெருங்காப்பியம் மக்களுக்கு உணர்த்துகிறது. இங்கு ஒன்றை நினைவு படுத்திக் கொள்ளலாம். சீவகனின் தந்தை சச்சந்த மன்னன் மிகு காமம் கொண்டதால் இறந்துபட்டான். மக்களின் தலைவனான மன்னன் நாட்டைச் சிறப்புற ஆளவேண்டும். அதுவே அவன் தலையாய கடமையாகும். கடமையை மறந்து மிகுந்த காமஉணர்வால்
சிற்றின்பத்தில் மூழ்கியதால் அமைச்சரால் கொல்லப்பட்டான். அளவுக்கு மிஞ்சினால் உயிரைத் தரும் அமிர்தங்கூட விஷமாகிவிடுமென்றால் காமத்தைப் பற்றிக் கூறுவானேன்?

அவன் மூழ்கியது மனைவியின் இன்பத்தில்தான் என்றாலும் மிகுந்த காமஉணர்வு
அவனை அழித்துவிட்டது எனலாம். சமணக் காப்பியங்களில் எச்சரிக்கையாக     அடிக்கடி இது வலியுறுத்தப்படுகின்றது. அதனாலேயே எண்மரை மணந்தும் இன்பத்தில் தன்னை இழக்காமல் மெய்யுணர்ந்து     தவத்தினை ஆற்றி, வினைகளை வென்று
வீடுபேற்றினை அடையும் சீவகன் வாழ்க்கை மற்றவர்க்கும் எடுத்துக்காட்டாய் அமைய     வேண்டுமென்ற     செய்தியை, திருத்தக்கதேவர் அறிவுறுத்துவார். சமணம் இன்பத்தை முற்றுமாகப் புறக்கணிப்பதில்லை. மாறாக எல்லாவற்றையும் அனுபவித்தபின் பற்றுள்ளத்தைத் துறக்க வேண்டும். அப்போதுதான் வீடுபேறு
கிட்டும் என்கிறது. அனைவராலும் துறத்தல் என்பது இயலாததுதானே? அதனால்தான் குறளாசான் ‘நோற்பார் சிலர், நோலாதார் பலர்’ (குறள்:270) எனக் கூறிப் போகிறார். தவமும் தவமுடை யார்க்கே ஆகுமல்லவா?.

நிலையாமைக் கோட்பாடு்

    சச்சந்த மன்னன், மனைவி விசயைபால் வைத்த அன்பால் ஆட்சியை மறந்து அமைச்சன் கட்டியங்காரனிடம் ஆட்சியை ஒப்படைத்து இன்பத்தில் மூழ்குகிறான். கட்டியங்காரன் மன்னனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து, மன்னனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்ற எண்ணுகிறான். அதையறிந்த சச்சந்த மன்னன் மயிற்பொறி
(மயில் வடிவில் அமைந்த, வானில் செல்லும் இயந்திரம்) செய்ய ஏற்பாடு செய்து வான்வழி தப்பித்துச் செல்லும்படி அரசியிடம் கூறுகிறான்.

    பிரிந்து செல்ல வருந்தும் அரசியிடம் சச்சந்த மன்னன் நிலையாமை பற்றிப் பேசி ஆறுதல் அளிக்கிறான். “இறப்பும், பிறப்பும், ஆக்கமும் அழிவும் ஆகியயாவும் பொருள்களுக்கு இயற்கை. சாதல் முதலியவற்றுக்குத் துன்புறுதலும் பிறத்தல் முதலிய
வற்றுக்கு இன்புறுதலும் ஆகிய இச்செயற்கெல்லாம் காரணம் அறிவின்மையே” என்கிறான். மேலும், பழமையான நம் பிறப்புகளை ஆராய்ந்தால் தோண்டப்பெற்ற கடலின் மணலும் ஒப்பிட முடியாத அளவினை     உடையது. அப்பிறப்புகளிலெல்லாம் பிறந்தும் வேறுபட்டிருந்தோம். இனியும் பிரிந்து செல்லும் பிறப்புகளில் ஒன்றுபடோம். அதனால் இந்த உறவைப் பெரிதாக எண்ணி இரங்க வேண்டாம். அருகன் கூறிய நூல்களின் பொருளை அறிந்த நீ வருந்தலாமா?” என ஆறுதல் கூறி அனுப்புகிறான்.

    இத்துணை விவேகமுள்ள மன்னனா காமத்தினால் அழிந்து பட்டான்? நம் உள்ளத்திலும் அவலம் நிறைகிறது. கழிகாமம் அறிவை அழித்துக் கடமையை மறக்கச் செய்யும். எனவே தான் மீண்டும் மீண்டும் காமம் கொடியது என்கிறார்கள் எல்லாச் சமயப் பெரியார்களும்.

     இதே போன்று ‘நிலையாமைக் கோட்பாடு’ காப்பியத்தின்பிறபகுதியிலும் விளக்கம் பெறுகிறது. சீவகன் கட்டியங்காரனைக் கொன்று, அறவழியில் ஆட்சி நடத்துவதைக் காணும் பேறு பெறுகிறாள் அவன் தாய் விசயை, வாழ்க்கையில் நிறைவு எய்திய
நிலையில் துறவு மேற்கொள்ள விழைகிறாள். அதையறிந்து துயருறும் சீவகனுக்கும் உறவினருக்கும் விசயை அறிவுரை வழங்குகிறாள்.

    “இவ்வுலகில் நம்முடைய வாழ்நாட்கள் எவ்வளவு என்பதை யாரும் அறியமாட்டோம். ஆனால் நெடுநாள்     வாழ்ந்து கொண்டேயிருப்போம் என்னும்     ஆசையில்     அழுந்திக்
கிடக்கின்றோம். திடீரென்று எமன் ஒருநாள் வந்து நம் வாழ்வைப் பறித்து, உயிரைக் கொல்லும் போது அதைக்கண்டு அஞ்சிக் கண்ணைப் பொத்திக் கொண்டு அழுவதல்லால் நாம் வாழ்ந்து கழிந்த நாட்களை நம்மால் மீண்டும் திரும்பப் பெறமுடியுமா?”
(சீவக.சிந் 2616)

கொல்லாமைக் கோட்பாடு

    அவசியம் இருந்தாலொழியப்     போரிடும் சூழலிலும் கொல்லுதலைத் தவிர்க்கும் நிலையைச் சீவகனிடம் காண்கிறோம். கொல்லாமையை அடிப்படை அறமாகக் கொள்ளும் சீவகன் போர் புரியும்போதும் இக்கோட்பாட்டைப் பின்பற்றுவதில் உறுதியாய் உள்ளான்.

(அ) போரிலும் கொலை தவிர்த்தல்

    கோவிந்தையார் இலம்பகத்தில் (இலம்பகம் என்பது நூலின் உட்பிரிவு, காதை, சருக்கம் போல) வேடர்கள் கவர்ந்து சென்ற ஆநிரைகளைக் கட்டியங்காரனால் மீட்க இயலவில்லை. அப்போது சீவகன் போர்க்கோலம் பூண்டு, ஆநிரைகளை மீட்கிறான். அவ்வாறு செய்யும்போது வேடர்களை அஞ்சி ஓடும்படி செய்கிறானே தவிரக்
கொல்வதில்லை. போராக இருந்தாலும் தேவையில்லாமல் கொல்வது வீரனுக்கு அழகன்று. அத்துடன் அவன் கொல்லாமைக் கோட்பாட்டில் உறுதி பூண்டவன் என்பதால் கொல்லுதலைப் போரிலும் தவிர்க்கிறான்.

(ஆ) கொல்லாமையும் கள்ளுண்ணாமையும் அறிவுறுத்தல்

    பல நாடுகளைக் காணும் ஆசையால் குணமாலையைப் பிரிந்த சீவகன் தன் பயணத்தைத் தொடர்ந்தான். சுதஞ்சணன் அளித்த மந்திரங்கள் மூன்றையும் உறுதுணையாகக் கொண்டு பயணம் மேற்கொண்டான். கானகம் வழியாகச் செல்லும்போது வேடன் ஒருவனை எதிர்கொள்கிறான்.

    வேடனே, “நீ எங்கே வசிக்கிறாய்? உன் உணவு யாது?” எனச் சீவகன் வினவ, வேடன் அருவிகள் பாயும் மலையில் வசிப்பதாகக் கூறி, பன்றி இறைச்சியும் கள்ளும்தான் தன் உணவு என விடையளிக்கிறான். முற்பிறப்பில் ஊனையும் கள்ளையும் உண்டு,
உயிரைக் கொன்றதால்தான் இப்பிறப்பில் வேடனாய்ப் பிறக்க நேர்ந்தது. அதனால் அவற்றை உண்ணாது இருங்கள் எனக் கூறுகிறான் சீவகன். வேடனோ கள்ளையும் ஊனையும் தவிர்த்து எப்படி உயிர்வாழ்வது என வினவுகின்றான். ஊனைத் தின்று,
ஊனாகிய உடம்பை வளர்ப்பது பாவம். அதனால் இங்கே காயும் கிழங்கும் பழமும் நல்ல நீரும் கிடைக்கின்றன. அவற்றை உண்டு வாழ்ந்தால் இன்பத்தைத் தரும் சொர்க்க வாழ்வை வாழலாம். அவ்வாறு     வாழ முயலுமாறு அறிவுரை கூறுகிறான் சீவகன்.
(பதுமையார் இலம்பகம்: 1234,1236)

     யாராக இருந்தாலும் கொல்லாமையாகிய அடிப்படை அறத்தைப் பின்பற்றவேண்டுமென்ற கோட்பாடு மேலோங்கியுள்ளது.கள் உண்ணாமையும் வலியுறுத்தப்படுகிறது. கள் உண்ணாமை என்னும் அறமானது ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறுவேறு வகையில் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.     கள்     உண்ணல் சங்ககாலத்தில் இயல்பாக இருந்தது. ஆனால் சங்கம் மருவிய காலத்தில் மறுக்க வேண்டிய பொருள்களில் ஒன்றாக ஆகியுள்ளது. அறநூல்கள் அனைத்தும் கள் உண்ணாமையை வற்புறுத்துகின்றன. இன்றைய நிலையிலும் மதுப்பழக்கம் பலரிடம் இடம்பெற்றிருந்தாலும் சமூகத்தால் மறுக்கப்படும் பழக்கமாகவே உள்ளது.

வினைக்கோட்பாடு

    காந்தருவ தத்தையார் இலம்பகத்தில் சீதத்தன் என்னும் பெரும் வணிகனின் மரக்கலம் காற்றாலும் மழையாலும் கலக்குற்ற போது, தன்னுடன் வந்தவர் அஞ்சி நிற்கையில் ஊழ்வினையின் வலிமையை எடுத்துரைத்து,அஞ்சாமல் இருக்க அறிவுரை கூறுகிறான்.

“துன்பம் வந்தபோது எரியும் விளக்கு காற்றால் நடுங்குவது போல் நடுங்காமல் மகிழ்க. அது அத்துன்பத்தைப் போக்கும் கருவியாகும். அத்துன்பத்தை எண்ணித் துக்கமுற்றால் அத்துக்கத்தினின்றும் நீங்கினார் யாருமில்லை.வரத்தக்கவை வந்தேதீரும். அவ்வாறு வரும் போது கலங்காது மலர்ச்சியோடு இருக்க வேண்டும்.அதுவே அந்தத்
துன்பத்தைப் போக்கும்”.

     மேலும், ”வாழ்நாள் முடிந்தால் பொற்கிண்ணத்தில் உள்ள நீரைக் குடித்தாலும் கொல்லும். கடலின் நடுவே சென்று மூழ்கினாலும் நல்வினைப் பயனால் பிழைத்துக் கொள்வார். ஊழின் ஆற்றல் அத்தகையது” என்பான் சீதத்தன்.

     காப்பியத்தின் இறுதியில் துறவை மேற்கொள்ள விரும்பும் சீவகனுக்குச் சாரணர் வழங்கும் அறிவுரையிலும் வினையின் ஆற்றல் அருமையான உவமைகளுடன் சொல்லப்படுகிறது.

    அல்லித்தண்டு அற்று வீழ்ந்த போதும் நூல் அறாது தொடர்ந்து நிற்கும் தன்மைபோல, பழைய தம் உடம்பு உயிரை நீங்கிக் கிடக்க, பழைய தீவினை மட்டும் நீங்காமல் உயிரைத் தொடர்ந்து, அவ்வுயிர் போய்ப் புகுந்த உடம்பில் தானும் புகுந்துவிடும். அத்துடன் அளவற்ற துன்பம் செய்யும் கொடிய நெருப்பாகச் சுட்டு எரித்து விடும். அதனால் அறத்தை உடைய மனத்தராய், பல்லுயிர்க்கும் அருளைச் செய்தால் அப்பழமையான நல்வினை, பறவையும் நிழலும் நீங்காது திரியுமாறுபோல, அவ்வுயிரை
விடாமல் திரிந்து கறவைப் பசுவைப்போல் விரும்பிய அனைத்தையும் தரவல்லது.

பயில்முறைப்பயிற்சி – I
    மாணவர்களே, “பழந்தமிழ் நூல்களில் சமணம்” என்ற பாடத்தில்     திருக்குறளில்     சமணக் விரவியிருப்பதாகப்     படித்தது     நினைவிருக்கிறதா? இக்கருத்தை உறுதி செய்ய மேற்கொளாகக் காட்டப்படும் – சமண சமயச் சார்புடையதாகச் சொல்லப்படும் குறள்களில் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

இடுக்கண் வருங்கால் நகுக. அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல் (குறள் :62)

இக்குறளுக்கான     விளக்கம்     தேவைப்பட்டால் மின்னூலகத்தில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.    இக்குறளில்     கூறப்படும்     கருத்துக்கும்,வினைக்கோட்பாட்டை விளக்கும் சீதத்தனின் உரைக்கும் இடையில் ஒத்த குறிப்புகள் தெரிகின்றனவா?
    ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற குறள் எவ்வகையில் சமணச் சார்புடையது என்று இனி விளக்க முடியுமா?
பஞ்ச நமஸ்காரத்தின் மேன்மை

    பஞ்ச நமஸ்காரம் என்பது சமண சமயத்தின் மூல மந்திரம். இதன் பெருமையை உணர்த்தும் நிகழ்ச்சி ஒன்று குணமாலையார் இலம்பகத்தில் இடம்பெறுகிறது.

    அந்தணர்க்கு ஆக்கிய சோற்றுத்திரளை நாயொன்று கௌவிச் சென்றது. அதனால் கோபங்கொண்ட அந்தணர் நாயை அடிக்க ஓடினர். நாய் அஞ்சி ஓடி, அருகில் இருந்த குளத்தில் பாய்ந்தது. அதனை அடித்து, அதன் காலை ஒடித்தனர் அந்தணர்.
அதனைக் கண்ட அந்த நாயின் சொந்தக்காரனான குடிகாரன் (கட்குடியன்) மிகுந்த துன்பம் கொண்டான். அவன் துன்பத்தைக் கண்ட சீவகன். இறந்துபடும் நிலையில் வேதனையோடு துன்பப்படும் நாயின் செவியில் பஞ்சநமஸ்காரத்தை ஓதுகிறான். நாயும் தன் செவிமடுத்து அதைக் கேட்கிறது.சிறிது நேரத்தில் அந்த நாய் சுதஞ்சணன்
என்னும் தேவனாகி     வானோக்கிச் சென்று     தனக்கு நடந்தவைகளையெல்லாம் உணர்ந்து கொள்கிறான். சீவகனின் இச்செயல் பின்வரும் பாடல்வழியே விளக்கம் பெறுகிறது:

உறுதிமுன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில்
மறுகல்நீ பற்றொடு ஆர்வம் விட்டிடு மரண அச்சத்து
இறுகல்நீ இறைவன் சொன்ன ஐம்பத அமிர்தமுண்டால்
பெறுதி நற் கதியை என்று பெருநவை அகற்றினானே
(சீவக.சிந்:946)

(உறுதி = நற்செயல்; மறுகல் = வருந்தவேண்டா, இறுகல் = அழுந்தி இராதே பெருநவை = பெருந்துன்பம்)

    இதன் பொருளாவது: முன்னே செய்த நன்மை ஒன்றுமில்லை என்று நினைத்து நீ வருந்தவேண்டாம். பற்றையும் ஆர்வத்தையும் விட்டுவிடு;இறப்பு என்னும் அச்சத்தைக் கொள்ளாதே;அப்படியிருந்து இறைவன் கூறிய ஐம்பதமாகிய அமிர்தத்தை (பஞ்சநமஸ்காரம்) நீ பருகினால் நல்ல கதியை அடைவாய் என்று கூறி, நாயின்
பெருந்துன்பத்தை நீக்கினான்.

மும்மணிக் கோட்பாடு

    சித்திர கூடம் என்னும் இடத்தில் வாழும் தாபதர் என்ற துறவியருக்குச் சீவகன் அருகப் பெருமானின் மறைமொழிகளைப் பின்பற்றுமாறு அறவுரை கூறுகிறான். அந்த அறவுரையில் சமணக் கோட்பாடாகிய மும்மணிக் கோட்பாடு விளக்கம் பெறுகிறது.

மெய்வகை தெரிதல் ஞானம்
    விளங்கிய பொருள்கள் தம்மைப்
பொய்வகை இன்றித் தேறல்
    காட்சிஐம் பொறியும் வாட்டி
உய்வகை உயிரைத் தேயாது
    ஒழுகுதல் ஒழுக்கம் மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே
    இருவினை கழியு மென்றான்
(சீவக.சிந்:1436)்

    ஞானமாவது உண்மையை அறிதல், காட்சியாவது அவ்வாறு அறிந்த பொருள்களைப் பொய்யின்றாகத் தெளிதல். ஒழுக்கமாவது ஐம்பொறிகளையும் ஐம்புலன்களில் செல்லாமல் கெடுத்து, உயிரைக் கெடாமல் அவ்வுயிர் உய்யும் வகையில் நடத்தல். மேற்கூறிய மூன்றும் நிறைந்தபோது இருவினையும் கெடும் என்றான்.

     நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்று சொல்லப்படுவது மும்மணிகள் எனச் சமணசமயத்தில் வழங்கப்படும். அதை இரத்தினத்திரயம் என்றும் கூறுவர்.

    இதே கருத்துப் பின்னர் சீவகன் துறவு வேண்டிச் சாரணரை அணுகியபோது,சாரணர் கூறிய அறிவுரையிலும் விளக்கப்பட்டுள்ளது.

    பொருள்களுள் மெய்ப்பொருள் எது எனத் தெளிதல் ஞானம் ஆகும்.     தெளிந்த அம்மெய்ப் பொருளின்     தன்மையை உணர்ந்தறிதல் காட்சி ஆகும். ஞானமும் காட்சியும் நீக்கமறத் தன்னுளே நிறைந்து விளங்க நடந்தொழுகுதல் ஒழுக்கம் ஆகும்.
இதை விளக்கும் பாடல்

உள்பொருள் இதுஎன உணர்தல் ஞானமாம்
தெள்ளிதின்அப்பொருள் தெளிதல் காட்சியாம்
விள்அற இருமையும் விளங்கத் தன்னுளே
ஒள்ளிதின் தரித்தலை ஒழுக்கம் என்பவே
(முக்தி : 2845)

(ஒள்ளிதின் = விளக்கமாக, தரித்தல் = நிலைபெறுத்தல்)

சமவ சரணம்

    சமவ சரணம் என்பது பூமிக்கு மேல் வானத்தில் இந்திரன்முதலிய தேவர்களால் உருவாக்கப்பட்ட அருகன் கோயில்.
(சீவக.சிந். 3000, உரை, கழகம்)

2.1.3 வளையாபதி

    ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழும் வளையாபதி என்னும் நூல் நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் அதனுடைய சில பாடல்களைப் பண்டைய உரையா சிரியர்கள் தத்தம் உரைக்குச் சான்றாக மேற்கோள் காட்டியுள்ளனர். தவிர, இக்காவியத்தின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
புறத்திரட்டில் கிடைத்த பாடல்கள் 66 மேலும் 6 பாடல்கள் வேறு உரைநூல்களிலிருந்து கிடைத்ததாகக் கூறி மொத்தம் 72 பாடல்கள் என்று கூறும் வழக்குள்ளது.

சமயமும் நூலாசிரியரும்

    செய்யுட்களை நோக்கும்போது இந்நூல் அருக சமயநூல் என்பது புலப்படுகிறது. ஆனால் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் பௌத்தமும் தமிழும் என்ற நூலில் ‘இந்நூல் இப்போது இறந்துபட்டதாகலின், இது பௌத்தச் சார்பினதா, அன்றி ஜைனம்
சார்பினதா என்று துணிந்து கூற இயலவில்லை. ஆயினும் இது பௌத்த நூல் என்று பலரால் கருதப்படுகின்றபடியால், இது இப்பகுதியில் (பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்) சேர்க்கப்பட்டது’
(பக்.119) என்பார். செய்யுட்கள் பலவும் சமணக் கோட்பாட்டைச் சார்ந்ததாக உள்ளதால் இக்காவியம் சமணம் சார்ந்தது என்ற முடிவுக்கு வருவது தவறாகாது.

    நூலாசிரியர் பெயர் தெரியவில்லை.கதையையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள இயலவில்லை.

அருக சரணம்

    கடவுள் வாழ்த்துப் பாடல் அருக     சரணத்தைப் புலப்படுத்துகிறது.

    ‘மூன்று உலகத்து வாழும் நல்லோர் ஒருங்கே வாழ்த்தி வணங்குவதற்குக் காரணமான பெருஞ்சிறப்புடைய அருகக்கடவுளின் அடிகளை அடியேன் பழவினை கெடும் பொருட்டும், குற்றம் தீர்ந்த நெஞ்சோடு தூயதாக அவன் கூறிய நல்லறங்களை மேற்கொண்டு ஒழுகவும் திருவருள் கூர்தல் வேண்டும் என்று வணங்குகிறேன்’
என்பது கடவுள் வாழ்த்துப் பாடலின் கருத்து. இப்பாடல் தான் இந்நூல் சமணச் சார்புடையது என்பதை நமக்கு உறுதியாக வெளிப்படுத்துகிறது.

மக்கட்பிறவியும் செல்வமும் பெறுதல் அரிது

    உயிர்கள் பல்வேறுபட்ட தீவினைகளின் ஆற்றலால் பல்வேறுபட்ட உடம்புகளை உடையனவாகின்றன. மிகவும் பலவாகிய பிறப்புகளில் புகுந்து அந்தந்தப் பிறப்புகளில் எல்லாம் துயரம் எய்துகின்றன. அப்படிப்பட்ட உயிர்கள் மக்கள் பிறப்பில் பிறத்தல்
மிகவும் அரியதொரு செயலாகும். அப்படியே மக்கட்பிறப்பில் பிறந்தாலும் அப்பிறப்பில் இனிய பொருள்களை நுகர்தற்கு இன்றியமையாததாய் வருகின்ற செல்வமும் பெறுதற்கு அரிதாகும்.

தவத்தின் சிறப்பு

    தவம் செய்தாலன்றி மக்கட்பிறவியும் செல்வமும் கிடைக்க வாய்ப்பில்லை. அதாவது வித்தின்றி விளைவு இல்லை. முற்பிறப்பில் செய்த தவப்பயன் இல்லாதவன் பொருளைப் பெறுவதற்கும் அவற்றால் இன்பம் துய்ப்பதற்கும் முயன்று அவற்றைப் பெறாது
துன்புறுவான். இது நிலத்தில் விதைக்கச் சிறிதும் விதை இல்லாமலே எருதுகளை ஏர்பூட்டி ஆழமாக உழுது பயிரை விளைவிக்க முயலுதலை ஒக்கும் என்று கூறுவார் ஆசிரியர்.

    வீடுபேறு பெறுவதற்கு மட்டுமன்றி மண்ணில் பொருளைப் பெற்று இன்பம் அனுபவிப்பதற்கும் தவம் அவசியம்.ஊன் உண்ணாது உயர்கதி பெறவும் பொய் பேசுவதைத் தவிர்க்கவும் வேண்டுகிறார். அத்துடன் புகழோடு வாழவும் வழி கூறுகிறார்.

புகழோடு வாழ வழி

    எல்லா உயிர்களையும் காப்பாற்றுக. பிற உயிரினங்களின் ஊனை விரும்பி உண்ணற்க. கோபத்தை விலக்கி, காமம் முதலிய குற்றங்களினின்றும் நீங்கி வாழ்வீராக! இவ்வாறு வாழ்வீராயின் இனிவரும் பிறப்புகளில் மேனிலை உலகங்களில் தேவர் போன்று உலகத்தார் கை குவித்து வணங்கப் புகழோடு விளங்குவீர்(23) என்று
விளக்குகிறார்.

    துறக்க நாட்டினை அடையும் வழி எது? அதற்கான நெறி பின்வரும் பாடலில் விளக்கப்படுகிறது.

பொய்யில் நீங்குமின் பொய்யின்மை பூண்டு கொண்டு
ஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின்
வைகல் வேதனை வந்துறல் ஒன்றின்றிக்
கௌவையில் உலகு எய்தல் கண்டதே    (32)

(வைகல் = நாள், கௌவை = பழி)

இதன் பொருளாவது,

    பொய் கூறுவதினின்றும் அகலுங்கள்; பொய்யாமை என்னும் அணிகலனை எப்பொழுதும் அணிந்து கொள்ளுங்கள். நாள்தோறும் நன்னெறியில் நின்று அறங்களைச் செய்யுங்கள். இவ்வாறு அறம் செய்து வாழ்பவர் தம் வாழ்நாளில் தமக்கொரு துன்பம் எதுமின்றி இம்மையிலும் இனிது வாழ்ந்து மறுமையிலும் துன்பமில்லாத துறக்க நாட்டினை அடைதல் திறவோர்தம் மெய்க்காட்சியாகும்.

    நிலையில்லாத இவ்வுலகில் நிலைத்து நிற்பது எதுவெனவும் கூறப்படுகிறது. நிலைத்து நிற்பது அறம் ஒன்றே.

இப்படியே அறங்களைக் கூறிச்செல்லும் வளையாபதி, இல்லற வாழ்க்கையில் இனிய பயனாக விளங்கும் குழந்தைப் பேற்றினைப் பாராட்டுவது இல்லறத்தை     மதித்துப் போற்றும் நிலையைக் காட்டுகிறது. சமணம் துறவறத்தை மட்டும்     வற்புறுத்துகிறது,
இல்லறத்தைப் போற்றவில்லை என்பதற்கு மறுப்புப் போலவும் இது தோன்றுகிற தல்லவா? இல்லறத்திற்கு ஒளிவிளக்காய் அமையும் குழந்தையின் அருமையை எப்படிப் பேசுகிறது?

பொறையிலா அறிவுபோகப்
    புணர்விலா இளமைமேவத்
துறையிலா வனசவாவி
    துகிலிலாக் கோலத் தூய்மை
நறையிலா மாலை கல்வி
    நலமிலாப் புலமை நன்னீர்ச்
சிறையிலா நகரம் போலும்
    சேயிலாச் செல்வம் அன்றே.

(பொறை = பொறுமை, வனசவாவி = தாமரைப்பொய்கை, துகில் =
ஆடை, நறை = நறுமணம், சிறை = நீர்நிலை)

    பொறுமையில்லாதவரிடம்     உள்ள     அறிவுபோலவும், இன்பந்தரும் போகம் காணாத வாலிபம் போலவும், இறங்குவதற்குப் படித்துறை இல்லாத தாமரைப் பொய்கை போலவும். ஆடையில்லாத ஒப்பனை போலவும், நன்மை தராத புலமை போலவும், நல்ல நீர் நிலைகள் இல்லாத நகரம் போலவும் மக்கட் செல்வம் இல்லாத ஒருவன் வாழ்க்கையானது பயனற்றதாகும்.

2.1.4 பெருங்கதை

    தமிழின் பெருமையை உயர்த்திய தொடர்நிலைச் செய்யுள் நூல்களுன் ஒன்று பெருங்கதை.

நூலாசிரியரும் நூல் அமைப்பும்

    கொங்குவேளிர் இதன் ஆசிரியர். கொங்கு நாட்டில் விஜய மாநகரில்     வாழ்ந்தவர். அகவற்பாவாகிய ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது பெருங்கதை. பெருங்கதை, அந்தாதி எனக் கூறப்படும் சொற்றொடர்ச்சியும், பொருள்தொடர்ச்சியாகிய கதைத்தொடர்ச்சியும் கொண்டது. இதற்கு உதயணன் கதை என்றும் பெயர்.

    இக்காப்பியம் ஆறு காண்டங்களை உடையது. உஞ்சைக் காண்டம், இலாவாண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம், துறவுக் காண்டம்.

    கதைக்குள் கதையாக விரிந்து செல்லுகிறது இக்காப்பியம். உதயணன் மகன் நரவாண தத்தன் கதையும் முடிவில் வருகிறது.

முதல்நூல்

    பெருங்கதை, குணாட்டியர் எழுதிய பிருகத் கதையைத் தழுவி எழுதப்பெற்றது. இவர் ஆந்திர நாட்டு அரசன் பேரவையில் இருந்தவர். குணாட்டியர் பைசாச மொழியில் இயற்றிய பிருகத்கதா என்னும் நூலே இதற்கு முதல் நூலாதல் வேண்டும் என்பர். கி.பி.
5-ஆம் நூற்றாண்டில் துர்விநீதன் என்னும் கங்கமன்னன் பைசாச மொழியிலிருந்து இதனை வடமொழியில் மொழிபெயர்த்தானென்றும் அதனால் பிருகத் கதா முதல்நூல் என்றும் வழங்குவர்.

காலமும் சமயமும்

    காலத்தைப் பற்றிய குறிப்புகள் சரியாகக் கிடைக்கவில்லை. கடைச்சங்க காலத்திற்கும் தேவாரக்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் என்று கூறுவர். சமண சமயச் சார்புடையது என்றாலும் சமயக் காழ்ப்பிற்கு இடமில்லாதது.

நூலின் சிறப்பு

    பழங்காலத்து மக்களின் வரலாற்றை அறிய, வாழ்வியலைத் தெரிந்து கொள்ளச் சிறந்த சாதனமாகும். பல மன்னர்களைப் பற்றிய குறிப்புகள், பல சிறந்த நகரங்களைப் பற்றிய செய்திகள், மக்களின் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் விரிவாகப் பேசிச் செல்கிறது.
பல உரையாசிரியர்களாலும் படைப்பாசிரியர்களாலும் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்ட நூலாகும். தவிர,     மக்களிடையே மிகப்பரவலாக வழங்கப்பட்ட கதை என்பதால் இதன் சிறப்பை நன்கு அறிந்து கொள்ள முடிகிறது.

சமண சமயக் கோட்பாடுகள்

    சமணச் சமயச் சார்புடைய காப்பியம் என்றாலும் பிற்காலக் காப்பியங்களைப் போல வெளிப்படையாகச் சமண சமயக் கோட்பாடுகளைக் கூறாமல் கதையைக் கூறிவரும் போதே, ஆங்காங்கே பொருத்தமான சில கோட்பாடுகளைக் கூறிச்செல்கிறார்
கொங்குவேளிர்.

    சான்றாக, சமண சமயத் தத்துவமாகிய காதிவினை பற்றிய குறிப்பு மூன்றாவது பகுதியில் (3-27-149) இடம் பெறுகிறது. இந்தத்தத்துவக் கருத்தைத் தத்துவம் பற்றிய தாளில் விரிவாகக் காணலாம்.

    வினை தீர்ந்ததும் உயிரானது மேலெழுந்து செல்லுதல் சமணசமயக் கோட்பாடு. இது வினைதீர் உயிர் மிதத்தல் (1-40-186) என்ற தொடரின் மூலம் கூறப்படுகிறது.

    இரவு உண்ணாதிருத்தல் என்பது சமண இல்லறத்தார் கோட்பாடுகளில் ஒன்று. இந்தக் கோட்பாடு அல்லூணீத்தலின் அஃகிய உடம்பினன் (4-7-159) என்பதின் மூலம் விளக்கப்படுகிறது.
(இதன் பொருள்: இரவு உணவை நீத்ததால் சுருங்கிய உடம்பினன்), அல் (இரவு), ஊண் (உணவு), அஃகிய (சுருங்கிய).

    சமண சமயம் பஞ்சநமஸ்காரம்/பஞ்சமந்திரம் என்று கூறும் கோட்பாடும் இதில் (5-3-134) இடம் பெறுகிறது. இவற்றைத் தவிர சமண சமய நிலையங்கள் (அருகன் கோயில், வழிபடும் இடம், துறவோர் தங்குமிடம், சமணப் பள்ளி) சமண சமயச் சார்போடு
குறிப்பிடப்படுகின்றன. (4-2-12)

பயில்முறைப்பயிற்சி – II
பெருங்கதையின் வாசவ தத்தையும் சிந்தாமணியின் காந்தருவ     தத்தையும் இசையில் வல்லவர்கள்.
அவர்களைப் படைத்த சமணச் சான்றோர் இசைக்கு எதிரானவர்கள் என்று கூறும் கூற்றினைச் சிந்தித்துப் பார்க்கவும்.

சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையையும் இத்துடன் ஒருங்கிணைத்துச் சிந்திக்கலாம்.

நிலையாமைக் கோட்பாட்டை வற்புறுத்துவதால் சமணம் வாழ்க்கைக்கு எதிரானது என்றும், வாழ்வை மறுப்பது என்றும் கூறலாமா? எண்ணிப் பாருங்களேன்!

தன்மதிப்பீடு : வினாக்கள் – I
1.ஐம்பெரும் காப்பியங்கள் யாவை? அவற்றுள் சமணக் காப்பியங்களைக் குறிப்பிடுக.
விடை
2.சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய பொய்கைகளில் மூழ்க, கண்ணகி ஏன் மறுக்கிறாள்?
விடை
3.சிலப்பதிகாரத்தில் சமணமதக் கோட்பாடுகள் எப்பாத்திரங்கள் மூலம் விளக்கப்படுகின்றன?
விடை
4.மானிடப் பிறவியின் அருமையைச் சிந்தாமணி
எங்ஙனம் எடுத்துரைக்கிறது?
விடை
5.சமண சமயம் குறிப்பிடும் நான்கு கதிகள் யாவை?
விடை
6.பெருங்கதையின் ஆசிரியர் யார்? யாரைப்பற்றிய
கதை அது? அதன் மூலநூல்கள் யாவை?

விடை

About editor 2999 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply