“இந்துக்களென்போர் சாதி பேதமென்னும் கொடுஞ்செயலையே பீடமாகக் கொண்டொழுகுகிறவர்கள்

“இந்துக்களென்போர் சாதி பேதமென்னும் கொடுஞ்செயலையே பீடமாகக் கொண்டொழுகுகிறவர்கள்

பௌத்தர்களோ சாதி யென்னுங் கொடுஞ் செயல் அற்று அன்பையே பீடமாகக் கொண்டு வாழ்கின்றவர்கள்” 

   -அயோத்திதாசப் பண்டிதர்

 பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிகளில் இந்தியாவெங்கும் தோன்றிய சமூக சீர்திருத்தவாதிகள்/புரட்சியாளர்களுள் அயோத்திதாசப் பண்டிதர் தனித்தன்மை வாய்ந்தவர். சாதி மத பேத சச்சரவுகளால் நிதானமும் அமைதியும் இழந்து கிடந்த சமுதாயமாக இந்திய சமுதாயத்தை அவதானித்த சீர்திருத்தவாதிகள் சிற்சில சீர்திருத்தங்கள் செய்வதன் மூலம் அப்பதற்றத்தைத் தணித்து நிலைமையைசரிகட்டிவிடலாம் என்று நினைத்தனர். அயோத்திதாசர் அவர்களிலிருந்து வேறுபட்டு தமது சமகால சமுதாய இயக்கப்போக்கை சமுதாய வரலாற்று இயக்க நீட்சிகளின் விளைவுகள் என்பதாகக் கண்டுணர்ந்தார். சாதி மத பேதங்களைப் பாராட்டாத, சகோதரத்துவம்/சமதர்மம்/ சமத்துவம் என்னும் சிந்தனைளுக்கு மதிப்பளிக்கும் வகையிலானதொரு புரட்சிகரமான சமுதாய உருவாக்கம் என்பது அவரது இலட்சியக் கனவாக இருந்துள்ளது. அவ்வகைப்பட்ட சமுதாய அமைப்பு இந்திய மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல என்றும் பார்ப்பனியமும், இந்து மதமும் இங்கு தோற்றம் பெறுவதற்கு முன்பு அத்தகைய சமதர்ம/சமத்துவ சமுதாய அமைப்பு முறையே நடைமுறையில் இருந்துள்ளது என்றும் வரலாற்று ஆதரங்களுடன் மெய்ப்பிக்கும் அயோத்திதாசர் ஈகை, புத்தி, கருணை நிறைந்துக் காணப்பட்ட அவ்வரலாற்றுக் காலத்தை பௌத்த தன்மம் நிறைந்திருந்த காலம் என்று அறிமுகப்படுத்துகிறார் நமக்கு.

  சாதிபேதம் உள்ளோர்/நூதன சாதியோர்/வேஷப் பார்ப்பனர் என்று பார்ப்பனர்களையும், பார்ப்பன மதமான வைதீக மதத்தையும், பார்ப்பனர்களின் மேலாண்மை யின்கீழ் இயங்கியதும் வைதீக மதத்தின் பரிணாம வளர்ச்சியுமான இந்து மதத் தையும் பல்வேறு வகைகளில் சாடியவர் அயோத்திதாசர். இங்கு அவரது பௌத்த மறுமலர்ச்சி சிந்தனையை/செயலை சாதிய ஏற்றத்தாழ்வுகளை அடித்தளமாகக் கொண்ட துவும், மனித நேயப்பண்புகளுக்கு எதிர் மறையானக் கோட்பாடுகளைத் தன்னகத்தேக் கொண்டதுவுமான இந்து மதத்தைப் பெயர்த்தெடுத்துவிட்டு அங்கு வேறொரு மதத்தை நிறுவும் ஒரு சாதாரண செயல்பாடாக மட்டும் புரிந்துகொள்ள லாகாது. புத்த தன்மம் என்பதை பண்டிதர் ‘நீதி மார்க்க வழி’ என்றும் அதன் போதகர்களை ‘நீதி மார்க்க வழிகாட்டிகள்’  என்றும் சிறப்பித்துப் பேசுகிறார் என்பதிலிருந்து வழக்கொழிந்துபோன ஒரு சமய வழிப்பட்ட நீதிநெறி மார்க்கத்தை மீட்டுருவாக்கம் செய்து அதனை சமுதாயத்தின் வேர்க்கால் மட்டங்களில் வலுப்படுத்த முனைவது என்று அர்த்தத்தில் அணுகுவதே சரியானதாக இருக்கும். புத்த தன்மம் என்னும் அறநெறியை மிகத் துள்ளியமாக ஆய்ந்து உள்வாங்கிக்கொண்டவர் அயோத்திதாசர் என்பதற்கு புத்தம் என்பது மெய்கண்ட நிலை, பௌத்தம் என்பது மெய்காண முயலுவோர் நிலை என்று புத்தம்Xபௌத்தம் என்பதை வேறுபடுத்திக் காட்டும் அவரது நுண் விளக்கத்தையே சான்றாகக் கொள்ளலாம். அயோத்திதாசரின் புத்த தன்மம் குறித்தப் புரிதல்களை குறைந்தபட்சம் உள்வாங்கிக்கொள்ளும் ஒருவரால் மட்டுமே அவரது புத்த தன்ம மீட்டுருவாக்கக் கருத்தியலில் உள்ள நியாயங்களை ஓரளவுக்கு விளங்கிக்கொள்ளவும் முடியும்.

 புரட்சியாளர்/சமூக சீர்திருத்தவாதி/கடவுள் மறுப்பாளர்/பகுத்தறிவு சிந்தனை யாளர் என்பது போன்ற புரட்சிகரமான அடையாளங்கள் ஒரு பௌத்த சமய ஆதர வாளரும் செயல்பாட்டாளருமாய் விளங்கும் அயோத்திதாசருக்குப் பொருந்துமா! மதம்/சமயம் என்பதுவே பிற்போக்கு சிந்தனைக்கு உட்பட்ட அம்சம் என்று கருதப் படும் சூழலில் முற்போக்கு சிந்தனையாளருக்கேயுரிய பண்படையாளங்களை ஒரு சமய மீட்டுருவாக்கம் கோரும் ஆளுமைக்குப் பொருத்துவது சரியா? இதுபோன்ற கேள்விகள் ஒரு சாமானியரிடம் எழுவது இயல்புதான். இதற்கான பதில் காலாதிகால இந்தியச் சமுதாயங்களின் வரலாறு என்பது தவிர்க்க முடியாமல் சமய அங்கீகாரங்கள் பெற்ற சமுதாயங்களின் வரலாறாகவே அமைந்துள்ளது என்னும் வரலாற்றுப் பேருண் மையில் அடங்கியுள்ளது. இதைத் தான் புரட்சியாளர் அம்பேத்கரும் கூட “துரதிர்ஷ்ட வசமாக சாதி முறையின் பின்னே உள்ள அங்கீகாரம் சமய அங்கீகாரம் ஆகும்” என்றார். புத்த மதம், ஜைன மதம், ஆசிவாக மதம், வைதீக பார்ப்பன மதம், இந்து மதம் என்று முறையே இம்மதங்களின் பாதைகளில் பயணித்துப் பழக்கப்பட்டு சாதி சமூகம் என்னும் கட்டத்தை வந்தடைந்துள்ள இந்திய சமுதாயத்தை சாதி பேதமற்ற வொரு சமுதாயமாக மாற்றுவதென்பது தமது பூர்வ கால மதமான பௌத்த சமயத் தின் அங்கீகாரத்துடன் அதாவது, மீண்டும் புத்த மதத்துக்கு உயிர்ப்பூட்டி அதனைமீட்டுருவாக்கம் செய்வதன் மூலம் மட்டுமே சாத்தியம் என்ற முடிவுக்கு வந்தடைந் தார் அயோத்திதாசர். “இந்து மதம் சாதி அடிப்படையிலும், தீண்டாமை அடிப்படை யிலும் ஏற்றத் தாழ்வுகளை பேதங்களை சமூக நீதிகளாக ஏற்றுள்ளது. இந்துக்களுக் குச் சமத்துவத்தில் நம்பிக்கையில்லை. இந்துவின் நோக்கமாவது, மனிதர் ஒவ்வொரு வரும் தன்மானத்தை-மதிப்பைப் பெற்றவர்கள் என்பதை மறுப்பதாகும்” என்றார் அம் பேத்கர். அம்பேத்கரின் கூற்றுபடிக்கு மனித நேயத்துக்கு எதிரான அதர்மங்களையும், சமூக அநீதிகளையும் கொண்ட இந்து மதத்தை நீதிநெறி, அறம், ஒழுக்கம் போன்ற வற்றை உயிர் மூச்சாகக் கொண்டுள்ள புத்த தன்மத்தை முன்னிறுத்துவதன் மூலம் எதிர்கொள்ளத் துணிந்தார் அயோத்திதாசர்.

 அயோத்திதாசர் பௌத்தம் தழுவினார்:

 அயோத்திதாசர் அவர்கள் 1890 களிலேயே புத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை ஓலைச் சுவடிகளிலிருந்த ‘நாரதிய புராண சங்கைத் தெளிவு’ என்னும் அசுவகோசரின் படைப்பின் மூலம் கற்றுத் தெளிந்திருந்தார். அப்போ திலிருந்தே புத்த மார்க்கத்தின் மீது மிகுந்த ஆன்மீக ஈடுபாடு உண்டாயிற்று அவருக்கு. 1893-1894 களில் ரிஜிஸ்டிரர் ஜெனரல் சீனிவாச இராகவ ஐயங்கார் என்பவர் நாற்பதாண்டுகால அறிக்கை(forty years report) என்னும் அறிக்கையைத் தயாரித்து அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அவ்வறிக்கையில் ஏழை தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்கென நிறுவப்பட்டிருந்த இலவச பள்ளிகளின் நிலை குறித்தும் குறிப்புகள் எழுதி அனுப்பியிருப்பார்போல் தெரிகிறது. அத்துடன் அவ் வறிக்கையில் பறையர்கள் முன்னேற்றம் காண்பதற்கு அவர்கள் இஸ்லாமியர்களா கவோ அல்லது கிறித்துவர்களாகவோ மதம் மாறி சென்றுவிடவேண்டும் என்று குறிப்பிட்டு அனுப்பியிருக்கிறார் என்பதை அறிந்து அவரது குறிப்புகளுக்கு வன் மையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் அயோத்திதாசர். மெலும் இப்படிப் பேசுவதற்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட மக்கள் நசுங்குண்டுக் கிடப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து முதலில் அவற்றைச் சீர்திருத்த முன்வர வேண்டும் என்பதாக சீனிவாச ஐயங்காருக்கு ‘An argument against Conversion’ என்ற தலைப்பின் கீழ் விரிவானதொரு மடலைத் தாயாரித்து அனுப்பி வைத்துள்ளார். கிறித்துவர்கள் தங்களது ஆலயங் களில் பறையர்களுக்கென்று தனி இருக்கைகள் ஏற்படுத்தியிருப்பதாகவும் எனவே அவர்களுள்ளும் சாதி வேறுபாடு எண்ணம் குடிகொண்டிருப்பதால தாழ்த்தப்பட்ட வர்கள் கிறித்துவர்களாக மதம் மாறுவதால் ஒரு பயனும் விளையாது என்றும் அவ் வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இஸ்லா மியர்கள் ஏற்கனவே கல்வி உள்ளிட்ட பலவற்றில் பின் தங்கியிருக்கிற நிலையில், அவர்களே அரசாங்கத்தின் கருணையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் முஸ்லீம்களாக மாறி விடுவதாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதைத் தானும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்கிற நிலையிலிருந்து உணர்ந்து சொல்கிறேன் என்றும் மேற்படி மடலில் குறிப்பிட்டுள்ளார். அயோத்தி தாசர், 1870களிலேயே அத்வைதானந்தா சபா என்னும் அமைப்பை நிறுவி பாதிரியார்கள் தலித் மக்களை கிறித்துவர்களாக மாற்றும் செயலை அவ்வமைப்பின் சார்பாக கண்டனம் செய்தவர் என்பதையும் இங்கு கவனத் தில் கொள்ளத்தக்கது.

 1890 களுக்குப் பின்பு துக்க நிவாரண மார்க்கம் என்று அவரால் பேசப்பட்ட பௌத்தத்தின்பால் ஆர்வம் கொண்டு செயல்படலாயினார் அயோத்திதாசர். “உலகெங்கும் சாதி வித்தியாசமென்னும் மடமையில்லாமல் சொற்ப தேசமாகிய தென்னிந்தியாவில் அனந்த சாதிகள் ஏற்பட்டிருக்கக் காரணமென்ன என்றால் புத்த மதத்தைச் சார்ந்த சாக்கைய குலத்தோரை பறையரென்று கடைசாதியாக ஏற்படுத்தி புத்த மததை தலை எடுக்காமல் செய்வதற்கும் புருசீக தேசத்தோர் தங்களை பிராம ணர் பார்ப்பனரென்று உயர்த்திக்கொண்டு தங்கள் சீவனத்திற்கு ஏற்படுத்திக் கொண்ட மதங்களை விருத்தி செய்வதற்கேயாம்” என்பதாக அமைந்தது அவரது புத்த தன்மம் குறித்த புரிதல். இந்து மதம் தாழ்த்தப்பட்ட மக்களை பொது வெளிக ளில் புழங்குவதற்கும் கூட அனுமதியாமல் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கியதும்/ நிலமற்ற ஏழைகளாக்கி பொருளாதார் ரீதியாக சுரண்டியதுவும்/இழிவான சாதிய ரென்று சமூக ரீதியாக ஒடுக்கியதும் தற்செயலாக அல்ல, திட்டமிட்டச் செயல்களே என்பதாக இருந்தது அவரது வாதம். தன் மதத்தவர் என்று சொல்லிக்கொண்டே மனிதத் தன்மையற்ற முறையில் தலித்துகளை தீண்டாமையின் பேரால் ஒடுக்குகிற இந்து மதத்தை விட்டு வெளியேறி யாவரையும் தம்மவராக/சகோதிரர்களாக நினைக்கும் சாதிபேதமற்ற புத்த தன்ம மார்க்கத்தை தழுவுவது என்றும் முடி வெடுத்தார்.

 பௌத்தம் தழுவுவது தொடர்பாக 1898 ஆம் ஆண்டு கர்னல் ஹெ.எஸ். ஆல்காட் அவர்களைச் சந்தித்தார் அயோத்திதாசர். சென்னை தியாசபிகல் சொசைட்டியின் தலைவரான ஹெச்.எஸ்.ஆல்காட் அவர்கள் புத்த மதத்தின் தத்துவங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்ததை அறிந்து அவரை சந்தித்து தமது மக்கள் பூர்வ காலத்தில் பௌத்தர்களாக இருந்தனர் என்றும் பின்பு வேஷப் பார்ப்பனர் களால் பறையர்கள் என்று தாழ்த்தப்பட்டார்கள் என்றும் விளக் கியதுடன் அசுவகோசரின் 570 பாக்களைக் கொண்ட நாரதீய புராண சங்கைத் தெளிவு என்னும் ஓலைச்சு வடி இதற்கு ஆதரமாக விளங்குகிறது என்றுரைத்தார். சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி உள்ளிட்ட ஐம்பெருங்காப்பியங்க ளிலும்,பன்னிரண்டு நிகண்டுகளிலும், அகத்தியர், புலிப்பாணி,தன்வந்திரிமுனிவர், போகர் ஆகியோரின் மருத்துவ நூல்களிலும், திருக்குறள்,ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் என்னும் இலக்கிய நூல்களிலும் பௌத்தம் இங்கு செல்வாக்குடன் இருந் ததற்கான தகவல்கள் புதைந்திருப்பதாகவும் விளக்கியுள்ளார். ஒரிஜினல் திராவிடர் களான தமது தாழ்த்தப்பட்ட மக்கள் இழந்த சுயமரியாதையை /உரிமைகளை/ விடுத லையை மீட்கும் பொருட்டு தங்களது பூர்விக மதமான பௌத்தத்தைத் தழுவ இருப் பதாகவும் இதற்கு உதவுமாறும் கேட் டுக்கொண்டார். ஆல்காட் அவர்கள் உதவ முன்வந்ததுடன் பண்டிதரையும் அவருடன் சிலரையும் அழைத்துக்கொண்டு இலங்கைக்கு சென்றார். கொழும்புவில் உள்ள மலிகானந்தா விகாரில் ஏராளாமாய்க் கூடியிருந்த பிரதிநிதிகள் முன்பாக நடந்த பௌத்த நிகழ்வில் தலைமை குருக்களான சுமங்களா மஹாநாயக மற்றும் தர்மபாலா ஆகியோர் மூலம் பஞ்சசீலம் பெற்று முறைப்படி பௌத்தம் தழுவினார் பண்டிதர். இந்நிகழ்வை பண்டிதர் ‘AN APPEAL TO BUDDHIST SOCIETIES’ என்னும் மடலில் கீழ்காணுமாறு விளக்குகிறார்.

 ” In the year 1898 I Sought the late Col. H.S.Olcott of the theosophical society, Adayar,Madras for advice and co-operation in the establishment of Buddhist Society in the city of Madras. At the instance of that good and great man I journeyed and voyaged to Ceylon. At the Malikaganda Vihara, I obtained the Panchasila at the hands of the Venerable Sri Sumangala Mahanayaka, the High Priest, Principle of the Vidyodaya College, Colombo, in the presence of a large and represe ntative gathering With the blessings of the High Priest the venerable Sumangala I returned to Madras and started the sakya Buddhist Society at Royapettah in Madras”

 பௌத்தம் ஏற்று சென்னை திரும்பிய அயோத்திதாசர் 1898 ஆம் ஆண்டிலேயே தமது ஆதரவாளர்களுடன் இணைந்து முழு வீச்சில் பௌத்த பணிகளை தமிழகத்தில் துவங்கினார்.

 சாக்கிய பௌத்த சங்கம்:

 அயோத்திதாசர் இலங்கையிலிருந்து திரும்பியதும் மேற்கண்ட ஆங்கில மேற்கோளில் உள்ளபடிக்கு சென்னை இராயப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு சாக்கிய பௌத்த சங்கம் நிறுவினார். பத்மாசன நிலையில் கண்களை மூடியவாறு தியானம் புரியும், சாந்த சொரூபமாய்க் காட்சித்தரும் புத்தர் என்னும் சித்தார்த்த கோதமரை நாமறிவோம். புத்தருக்கும் முன்பாக இருபத்து நான்கு புத்தர்கள் தோன்றி மறைந்துள்ளனர் என்று சொல்லப்படுகிற நிலையில் அவர்களுள் சாக்கிய வம்சாவழி வந்த புத்தரே ஆதி புத்தராவார் என்பதை அறிவிக்கும் பொருட்டு தாம் நிறுவிய பௌத்த சங்கத்திற்கு ‘சாக்கிய பௌத்த சங்கம்’ என்று பெயரிட்டதாக அறிவித்தார்.”நூதனமாகத் தோன்றியுள்ள பல மதங்களைத் தாவித் தாவி பிடித்து சம்பாதிக்கும் பொருளை பொய்க்குருக்களுக்கு அளித்து பஞ்சபாதகத்திற்கு உள்ளா வதுடன் நூதன சாதி பேதங்களை ஏற்படுத்திக்கொண்டுள்ள சத்துருக்களாலும் நிலைகுலைந்து பாழ்பட்டு வருகின்றபடியால் இவர்களது பூர்வ சரித்திரங்களையும், நீதி நெறி ஒழுக்கங்களையும் நன்கு விளக்கித் தெளிவு பெறச்செய்து அங்கங்கு சங்கங்கள் நிலைபெற்றவுடன் கல்வி சாலைகளையும், கைத்தொழிற்சாலைகளையும், விவசாய சாலைகளையும், வியாபார சாலைகளையும் ஏற்படுத்தி சகல விருத்தியிலும் முன்னேறச் செய்வதுடன் விவேக விருத்திப் பெற்றோர் சங்கத்து சமண முனிவர்களி டம் பொன்னாடைப் பெற்று கரபோலேந்தி இராகத்துவேஷ மோகங்களை அகற்றி அன்பு, ஈகை, சாந்தத்தைப் பெருக்கி என்றும் அழியா நித்யானந்த நிலையாம் நிருவாணத்தைப் பெறுவதற்கேயாம்” என்று தாம் நிறுவிய சங்கத்தின் நோக்கங்களாக அறிவித்தார்.

 சங்கத்தின் பொதுச்செயலாளாராக அயோத்திதாசப் பண்டிதர் பொறுப்பு வகிக்க காரியதரிசிகளாக புத்த தன்மம் போதிக்கத் தக்க ஒரு சபாநாயகரும், உதவி சபாநாய கரும், பொக்கிஷாதிபர்(சொத்து பாதுகாவலர்) ஒருவரும், இவர்கள் கீழ் பனிரண்டு அங்கத்தினர்களும் என்றவாறு நிர்வாகவியல் செயல்பாட்டார்களைக் கொண்டு சங்கம் கட்டமைக்கப்பட்டது. இவ்வகை பொறுப்புகளை வகிப்பவர்கள் சத்திய தன்மம் அறிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்க பஞ்சசீலம் பெற்றவர் மட்டுமே சங்கத்தின் உறுப்பினராவதற்கு தகுதி படைத்தவர் ஆகிறார் என்ற கட்டுப் பாடு விதிக்கப்பட்டிருந்தது. சங்கத்தின் செலவு/ செலவு செய்யும் விவரம்/மட விஷ யங்கள் யாவும் வரையறுக்கப்பட்டிருந்த சங்க விதிகளுக்கு உட்பட்டு நடந்தாக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. “சங்கமானது தன்மத்தையே ஆதார மாகக்கொண்டு சீர்திருத்தத்தை நாடியுள்ளதால் சங்கத்தவர் ஒவ்வொருவரும் அந் தந்த கிராமங்களுக்குச் சென்று நீதிநெறிகளைப் போதித்து சன்மார்க்கத்தில் நிலை பெறச் செய்யல் வேண்டும்” என்பதாக சங்கத்தின் செயல்கள் திட்டமிடப்பட்டிருந் தன. மேலும், “மக்களுள் ஏழைகளாயினும், கனவானாயினும், பிணியாளனாயினும், சுகதேகியாயினும், கற்றவனாயினும், கல்லாதவனாயினும் இத்தன்மம் பொதுவாதலின் யாதொரு பேதமுமின்றி சகலருக்கும் பொதுவாகப் போதித்தல் வேண்டும்” என்றும் சங்கப் போதகர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. சாக்கிய பௌத்த சங்க வளா கத்தில் வாரந்தோறும் பௌத்த சொற்பொழிவுகள் நடத்துதல், பஞ்சசீலம் (கொல் லாமை,பொய் சொல்லாமை,களவு செய்யாமை,மாற்றான் மனைவிமீது மோகங்கொள் ளாமை,மது அருந்தாமை) என்பதற்கான விளக்கங்கள் அளித்தல் என்றும் பல்வேறு பவுத்த நிகழ்ச்சிகள் சங்க வளாகத்தில் நடைப்பெற்றுள்ளன. சாக்கிய பௌத்த சங்க வளாகத்தில் புத்தர் பெருமானின் பிறந்த நாளாகக் கருதப்படும் விசாக பௌர்ணமி நாளை விழாநாளாகக் கொண்டாடப்பட்டது. பௌத்த செயல்பாட்டளர்களின் மையமாக சென்னை சாக்கிய பௌத்த சங்கம் விளங்கியுள்ளது என்பவுதும் இங்குக் குறிப்பிடத்தகுந்தது. சென்னையில் நிறுவப்பட்ட சாக்கிய பௌத்த சங்கம் தனது கிளைகளை வேறுபல இடங்களிலும் விரைவில் தொடங்கிக்கொண்டது. கோலார் தங்க வயல் பகுதியான மாரிக்குப்பம், பெங்களூரு, வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூர், செகந்திரபாத், பர்மா, இரங்கூன், தென் ஆப்ரிக்காவில் நெடால், டர்பன் ஆகியப் பகுதிகளில் இதன் கிளைகள் துவக் கப்பட்டன. சங்கத்தின் இக்கிளைகளுள் கோலார் தங்க வயல்-மாரிக்குப்பம் கிளை யின் செயற்பாடுகள் சிறப்பாகவும் தனித்தன்மை வாய்ந்தும் காணப்படுகின்றன.

 மாரிக்குப்பம் கிளையின் தலைவராக எம்.ஒய்.எம். முருகேசர் என்பவரும் செயலாளராக திரு. சி. குருசாமி உபாசகர் அவர்களும் இருந்து செயல்பட்டுள்ளனர். இவர்களுடன் அய்யாக்கண்ணு புலவர், பெரியசாமி புலவர், ஜி. அப்பாதுரையார் போன்றோரும் கோலார் பௌத்த சங்கத்தின் அங்கத்தினர்களாக இருந்து செயலாற் றியுள்ளனர். அயோத்திதாசரின் வழிகாட்டுதல்படி கோலார்-மாரிக் குப்பத்தில் இயங்கிய சாக்கிய பௌத்த சங்கத்தின் சார்பாக “சொற்பொழிவுகளும், விவாத அரங்குகளும் நடத்தப்பட்டன. இதழ்கள்,நூல்கள் அடங்கிய வாசகசாலை மற்றும் இல்வச பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. இங்கு சாதி பேதம் மறுப்பு, கடவுள் மற்றும் புராணங்கள் மீதான விமர்சனங்கள், பௌத்த பிராசாரங்கள் ஆகியவை மேற்கொள் ளப்பட்டன” என்று புத்தர் அருள் அறம் என்னும் ஜி. அப்பாதுரையாரின் தொகுப்பு நூலுக்கான பதிப்புரையில் குறிப்பிடுகிறார் பௌத்த சிந்தனையாளர் தோழர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள்.

 கோலார்-மாரிக்குப்பம் கிளை சங்கத்தின் சார்பாக திரு.சி.லிங்கையா என்பவர் பாலி மொழி கற்றுத் தேர்ந்து புத்த பிக்கு ஆவதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள் ளார். மலிகானந்த வித்யோதயா கல்லூரிக்கு திரு. லிங்கையா அவர்கள் அனுப்பப் பட்ட இந்நிகழ்வை பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு பௌத்த சமய நோக்கத்துக்காக இலங்கைக்குப் பயணப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வு என பெருமைப்பட குறிப்பிடுகி றார் அயோத்திதாசர். ஹாலந்து, சீனா, ஜப்பான், பர்மா, இலங்கை ,சியாம், சிங்கப்பூர், சிட்டாங், பனாரஸ், கல்கத்தா, புத்த கயா என உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்தியப் பகுதிகளிலிருந்தும் 260க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் வருகை புரிந்து சிறப்பித்துள்ளனர் என்கிற அளவுக்கு பௌத்த சமயப் பணிகளாற்றிய கோலார் தங்க வயல் மாரிக்குப்பம் சாக்கிய பௌத்த சங்க கிளையானது புகழ்பெற்று விளங்கி யிருக்கிறது.

அயோத்திதாசரும் தமிழ்ப் பௌத்தமும்:

 கி.மு.மூன்றாம் நூற்றாண்டுகளிலேயே புத்த மதம் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டது; புத்த மதத்தை தமிழகத்துக்குக் கொண்டுவந்தவர் அசோக மாமன் னரும் அவரது உறவினருமான மகேந்திரரும் அவரைச் சேர்ந்த பிக்குகளுமாவர் என்று குறிப்பிடுகிறார் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள். இவர் தமது வரைய றைக்கு அசோகர் காலத்து கல்வெட்டு சாசனங்களையும், கடைச்சங்க காலத்து பௌத்த இலக்கிய நூல்களான மணிமேகலை, சிலப்பதிகாரம், மதுரைக்காஞ்சி ஆகியவற்றையும், மற்றும் பிற புறச்சான்றுகளையும் ஆதரமாகக் கொள்கிறார். மேலும் தமிழகத்தில் கிடைக்கப்பெறும் கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களால் ஆனவை; பிராமி எழுத்தானது பௌத்தர்களின் கொடை; பௌத்தரான அசோக சக்கரவர்த்தி காலத்து பிராமி எழுத்துருவிலிருந்தே தமிழ், நாகா¢, தெலுங்கு, மலையாளம், முதலிய எழுத்து வடிவங்கள் தோன்றின; இப்போது வழக்கத்திலிருக்கும் கிரந்தத் தமிழ் என்ற ழைக்கப்படும் தமிழ் எழுத்து வடிவமும் பிராமி எழுத்தின் வழித்தோன்றலேயாகும் என்றும் வரையறுத்துக் கூறியுள்ளனர் வரலாற்றாசிரியர்கள். வட இந்திய பகுதிகளி லிருந்து பௌத்தம் தமிழகம் வந்த காலம், தமிழ் எழுத்து/இலக்கிய வரலாறு என்ப வற்றைக் கூர்ந்து நோக்கும்போது பௌத்தத்துக்கும் தமிழகத்துக்கும் இருந்து வந்துள்ள நீண்ட நெடுங்கால உறவை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வா றாக பௌத்தம் தமிழ் மொழி/இலக்கியம்/கலாச்சார-பண்பாடுகளுடன் இரத்தமும் சதையுமாய்க் கலந்துவிட்டதாகக் கண்ட அயோத்திதாசர், அதை இங்கு வளர்த் தெடுக்க விரும்பிய செயல்பாட்டையும், தலித்துகளுக்கும் பௌத்தத்துக்குமான பூர்வகால தொடர்புகளையும் விளக்கி தலித்துகளுக்கான மதமாக அதனை மீட்டு ருவாக்கம் செய்ய முனைந்துள்ளதைக் கண்ட தற்கால தலித்/தலித்தல்லாத அறிவு ஜீவிகள் அயோத்திதாசரின் பௌத்தத்தை தமிழ்ப் பௌத்தம் என்று அடையாளப் படுத்துகின்றனர்.

 புத்தர் பரிநிருவாணம் அடைந்த சில காலத்துக்குப் பின் புத்தமதம் இரண்டு பிரிவுகளாக பிளவுண்டதுடன் அவற்றிலிருந்து சில உட்பிரிவுகளும் தோன்றின என்பதை நாமறிவோம். அதன்படி இலங்கையில் பழமையானது என்று சொல்லப்படும் தேரவாத புத்த மதம் இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இலங்கைக்குச் சென்று பௌத்தம் தழுவிய அயோத்திதாசர் தேரவாத மதப் பிரிவு கோட்பாடுகளின் அடிப்படையிலோ அல்லது புதுப்பிக்கப்பட்ட மதப் பிரிவாகக் கரு தப்படும் மகாயாணப் பிரிவு கோட்பாடுகளின் அடிப்படையிலோ அல்லது பிற உட்பிரிவுகளின் அடிப்படையிலோ பௌத்தத்தை இங்கு கட்ட மைக்கவில்லை. திரு. ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களும் இது குறித்து : “அயோத்திதாசரின் பவுத்தம் தனித்தன்மை மிக்கது. இலங்கை சென்று பௌத்தம் தழுவி திரும்பிய அவர் ஈழ பவுத்த சாயலை பின்பற்றாமல் முற்றிலும் புதிய வழியைத் தேர்வு செய்தார். தமிழ் மரபிலிருந்து பௌத்த விளக்கங்களை வழங்கிய அயோத்திதாசர் சமயம் என்பதற்குத் தேவையான கதையாடல்களை மறுகண்டுபிடிப்பு செய்தார்” என்கிறார்.

 அயோத்திதாசர் தமிழகத்தில் கட்டியெழுப்ப முயன்ற பவுத்தத்தின் நோக்கங்கள் எவ்வகையில் மற்றவற்றினின்று வேறுபடுகிறது என்பதற்கு கீழ்வரும் அவரது வார்த் தைகளே சாட்சியாமாக விளங்குகின்றன: “நமது சங்கத்தின் கருத்தோவென்னில் பொய்யாகிய சாதிக் கட்டுப்பாடுகளைக் கனவிலும் நம்பப்படாது. அதை அநுசரித்து ஒற்றுமெய்க் கேட்டை உண்டு செய்துக் கொள்ளப்படாதென்பது துணிபு”, “நம் முடைய சங்கத்தின் சத்தியதன்ம போத மோவென்னில், ஒவ்வொரு மனிதனும் நீதிநெறி வாய்மெயில் நிலைத்து மெய்ப்பொருளுணர்ந்து தீவினைகளை ஒழித்து பிறவியின் துக்கத்தை ஜெயிக்கவேண்டும் என்பது கருத்தும் சத்திய சத்த தன்முமாகும்” என்று சொல்லும் அயோத்திதாசர் தாம் கட்டமைக்க விரும்பிய சமயம் மக்களை ஒரு சமுதாயமாக ஒன்றுபட விடாமல் பிளவுபடுத்தும் சாதியத்தை விரும்பாத, ஒரு சமயத்தை புத்த தன்ம அறங்களின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இயங்குவதாக் இருக்க வேண்டுமென விளக்குகிறார். அதனடிப்படையில் தான் சமகாலத்தில் இயங் கிய மகாபோதி பௌத்தம் குறித்து அச்சங்கம் மேற்கண்ட தமது நோக்கங்களின் அடிப்படையில் இயங்காமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு புத்த தன்மம் போதிக்கப்போ கிறோம் என்று மேட்டுக்குடித்தன பண்புகளுடன் தாழ்த்தப்பட்ட மக்களை அணுகு வதாகவும், மெய்ப்பொருள்/மறுபிறவி என்பவற்றைக் குறித்த அவர்களது விளக்கம் தன்ம விசயத்திற்கு நேர்விரோதமாக உள்ளது என்றும் விமர்சனம் செய்தார்.

 அயோத்திதாசர் இத்தகையதொரு பௌத்த தன்மத்தை தமிழகத்தில் நிலைபெற செய்வதற்கான அறிவு வளத்தினை தமிழ் இலக்கியங்கள்/ பௌத்த பெரியோர்களின் சிந்தனைகளிலிருந்தே பெற்றுக்கொண்டார். தமிழகத்தில் ஒரு காலத்தில் அரசு மதமாக இருந்த பௌத்தம் மக்கள் செல்வாக்குப் பெற்று விளங்கிய வரலாற்றையும், சமத்துவ சித்தாந்தம் கொண்டு அறம்/சீலம்/ஒழுக்கம் என்னும் உயரிய நெறிகளின் அடிப்படையில் அமைந்த தன்ம காலத்து சாதிபேதமற்ற வாழ்விய லையும் இலக்கியங் கள்/பௌத்த பெரியோர்களின் சிந்தனைகள் வழியாகவே அறிந்துகொண்டார். அக் காலத்தில் இன்று தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைக்கப் படும் மக்கள் பௌத்த சிந்தனைகளை மக்களுக்கு அளிக்கும் அந்தணர்களாக இருந் தனர்; புருசீகர்கள்/ மிலேச்சர்கள் என்றழைக்கப்படும் வேஷப் பிராமணர்கள் தங்களை பௌத்த அரஹத்துக்களாக அறிவித்துக்கொண்டு சிற்றரசர்களையும்,குடிமக்களையும் தன் வயப்படுத்திக்கொள்ள அணுகியபோது அவர்கள் பொய்யர்கள்/வேஷப் பிராமணர்கள்/ புத்த தன்மத்தை அழிக்க வந்தவர்கள்/நூதன சாதி கொள்கைகளைக் கொண்டவர்கள் என்று மக்களைத் தெளிவுபடுத்த நியமிக்கப்பட்ட அறிவார்ந்தப் பிரிவினர், அவ்வேஷப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் தாழ்த்தப்பட்டவர்கள் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்ற வரலாற்றை அவர் மேற்படி இலக்கியங்கள்/ பௌத்த பெரியோர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டார்.

 நற்றிணை தொகுப்பு நூல் ஆசிரியர்களுள் ஒருவரான இளம்போதியார், மணிமேக லைக்கு பஞ்சசீலம் வழங்கிய அறவண அடிகள், கோவலனுக்கும் அவனது காமக் கிழத்தி மாதவிக்கும் பிறந்து பௌத்த பிக்குணியான மணிமேகலை, மணிமேகலை என்னும் காப்பியம் படைத்தவரான சீத்தலைச் சாத்தனார், சோழநாட்டில் மகாயாண பௌத்தராக வாழ்ந்த சங்கமித்திரர், புத்ததத்த மகாதேரர், புத்தமித்திரர், சீனதேசம் சென்று பௌத்தம் போதித்த போதிதருமர், திக்நாதர், தருமபாலர், சாரிபுத்திரர், வச்சிரபோதி, பெருந்தேவனார் உள்ளிட்டு பல்வேறு தமிழ் பௌத்த பெரியோர்களின் சிந்தனைகள்/ செயல்பாடுகள் வழியாக அயோத்திதாசர் புத்த மதத்தின் வரலாற்றை யும் அறங்களையும் உள்வாங்கிக்கொண்டதுடன், . சிலப்பதிகாரம், மணிமேகலை, வீரசோழியம், குண்டலகேசி, சித்தாந்தத் தொகை, திருப்பதிகம், விம்பசாரர் கதை போன்ற சமண/ பௌத்த இலக்கியங்கள்/திருக்குறள், ஆத்திச்சூடி, பன்னிரண்டு நிகண்டுகள், சிவவாக்கியம் சித்தர் பாடல்கள் என்னும் தமிழ் இலக்கிய நூல்களும் பண்டிதரின் பௌத்த அறிவெழுச்சிக்கு துணை நின்றுள்ளன. பெரும் தமிழறிஞராய் திகழ்ந்த பண்டிதர் இவ்வாறாக தமிழ் இலக்கியங்கள்/தமிழ் பெரியோர்கள் மூலம் பௌத்த அறநெறிகளை ஏற்று தமிழ் கலாச்சாரம் பண்பாடுகளில் வாழ்ந்துகொண்டி ருக்கும் பௌத்தத்தை மீட்டெடுத்து தமிழ்ப் பகுதிகளுக்கு ஏற்றவகையில், தமிழ்த் தன்மையுடன், சாதி மனோபாவத்தை விட்டொழித்த புதியதொரு பௌத்த தன்ம சமுதாயமாக உருவாக்கம் செய்வதற்கு தாம் பரிநிருவாணம் அடையும் கடைசித் தருணம் வரைக்கும் பாடுபட்டார் அயோத்திதாசர்.

தமிழகத்தில் பௌத்தம் அழிந்துபோகவில்லை வேறு வடிவங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்கிறார் அயோத்திதாசர்:

 புத்த மதம், ஜைன மதம், ஆசீவாக மதம், வைதீக மதம், ஸ்மார்த்தம்/சைவம்/ வைணவப் பிரிவுகளை உட்கொண்டு உருவான இந்து மதம் என்னும் இம்மதங்கள் யாவும் இந்தியாவில் தோன்றி ஒவ்வொரு காலக் கட்டத்தில் ஒரு மதம் என்று அரசர் களிடமும் மக்களிடமும் செல்வாக்குப் பெற்று நிலைத்திருந்தன. நாளடைவில் இம் மதங்கள் தங்களுக்குள் சித்தாந்த ரீதியான மோதல்களில் ஈடுபட்டன. இவ்வகையில் பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் இடையில் கி.பி.ஆறாம் நூற்றாண்டுகளில் மூண்ட மோதல்களில் சமண மதம் வென்றதாக சமய வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின் றன. மேலும், இந்தியாவில் பௌத்தம் வீழ்ந்ததற்கு அம்மதம் ஹீனயாணம்/மகா யாணம் என்று பிளவுண்டதுவும் இப்பிரிவுகளினின்று சிராவகயாணம்/மத்திரயாணம் எனும் உட்பிரிவுகள் தோன்றியதுவும் காரணங்கள் என்றும் சொல்லப்படுகிறது. பௌத்தத்தின் வீழ்ச்சிக்குப்பின் சமண மதம் இங்கு செல்வாக்குப் பெற்று விளங்கியுள் ளது. இந்து மதம் தனது எழுச்சிக்குப் பெரும் சவாலாக விளங்கிய பவுத்த/சமண சமயங்களுடன் பல நூற்றாண்டுகள் சமய சமர்கள் புரிந்தும் பெரும் தோல்வியையே கண்டு வந்துள்ளது. பிற்காலங்களில் அச்சமயங்களின் உயரிய கோட்பாடுகள் சிலவற்றை சுவீகாரம் செய்து கொண்டபின்புதான்(புத்தரை விஷ்ணுவின் அவ தாரங்களுள் ஒன்று என்றது; புத்த மதத்தின் கொல்லாமை கொள்கை அடிப்படையில் யாகங்களில் உயிர் பலி இடுதலை கைவிட்டது) இந்து மதத்தின் எழுச்சி இங்கு சாத்தி யாமானது. பக்தி இலக்கிய/பக்தி இயக்கக் காலங்களில் மாணிக்கவாசகர், சுந்தரர், ஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார் போன்றொரின் வழிகாட்டுதலில் சைவம்/வைண வம் ஒருங் கிணைந்த இந்து மதம் தோற்றம் கொண்டது. நால்வருணம்/ சாதிகள் என்பதன் பேரால் மக்களை சிறுசிறு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவுடன் மற்றக் குழு கலந்து விடாதபடிக்கு ஒரு சமூக உளவியலை உருவாக்கி, பார்ப்பனர்கள் மேலா திக்கம் பெறுவதற்கு ஏற்ற வகையில் விதிகளை வடிவமைத்துக்கொண்டு எழுச்சிப் பெற்ற இந்து மதம் தனக்கு சவாலாக இருந்து வந்த பவுத்த/சமண மதங்களை அழித் தொழிப் பதற்கு அனல் வாதம்/புனல் வாதம் என்னும் வாதங்களுக்கு அழைத்து அவற்றில் தானே வென்றதாகவும் அறிவித்துக்கொண்டது. இவ்வாதங்களில் ஈடுபட் டப்பின்பு அரிய பவுத்த/சமண இலக்கியங்களைத் தீயிலிட்டுக் கொளுத்தியும் அச்சம யங்களின் துறவிகளை கழுமரத்தில் ஏற்றி கொன்றும் அதாவது, ஈவு-இரக்கமற்ற முறையிலான வன்முறைகளின் முனையில் தன்னை நிறுவிக்கொண்டது இந்து மதம். இவ்வாறான சமயப் போர்களில் சிக்கி குற்றுயிரும் கொலையுயிருமாய் இருந்த பௌத்தமும், சமண மும் பதினாங்காம் நுற்றாண்டுகளுக்குப் பின் தமிழக்கத்தில் முற்றிலும் அழிந்துபோன தாக வரலாற்றின் பக்கங்கள் நிரப்பட்டுள்ளன. ஆனால், அயோத்திதாசர் இவ்வரலாற் று முடிவுகளுடன் உடன்பட்டு ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன் வேறுவகையான/ ஒப்புக்கொள்ளத்தக்க முடிவுகளை நமக்களிக்கிறார்.

 பராயாசாதியோர் என்று அயோத்திதாசரால் அழைக்கப்படும் பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளால்/இந்து மதம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளால் பவுத்த மதம் இங்கு வீழ்ந்தது என்பதை “பராயாசாதியோர் வந்து குடியேறி புத்ததன்மத்தை நிலைகுலை யச்செய்து மதக்கடைகளைப் பரவச்செய்தனர்” எனும் பண்டிதர் “ஆனால் இவர்கள னுபவத்திலும் செய்கைகளினாலும் புத்தமதஸ்தர்களாகவே உள்ளனர்” என்றார். அதாவது, பௌத்தம் முற்றிலும் இங்கு அழிந்து போகவில்லை என்பதை “…ஈதன்றி பௌத்தர்கள் அழிந்துவிட்டார்கள், ஊரை விட்டோடிவிட்டார்களென்று எண்ணற்க. யாவர் வீட்டில் இலக்கிய நூற்கள், இலக்கண நூற்கள், வைத்திய நூற்கள், ஜோதிட நூற்கள், கணித நூற்கள் இருக்கின்றதோ அங்கங்கு பவுத்தர்களே தங்கி இருக்கின் றார்கள் என்றெண்ணவும். பௌத்தர்கள் யாப்பிலக்கணங்கொண்டு வெண்பா விருத் தம், அகவற்பா மற்றும் பாடல்கள் பாடும் வித்துவான்கள் நாவிற்கும் பௌத்தர்களே அமுதூட்டி வருகின்றார்கள். ஆதலின் பௌத்தர்களை அழித்துவிட்டார்களென்பதும் அழிந்தார்களென்பதும் பொய்,பொய் முக்காலும் பொய்யென்று அறிந்துகொள்ளு வீராக” (தமிழன்,செப்-25,1912) என்றதுடன். அயோத்திதாசரின் இக்கூற்று இல்க்கிய வடிவங்களிலும், சிறு தெய்வ வழிபாடுகள், கதையாடல்கள், பழமொழிகள், வழக்காறு கள் போன்ற மக்களின் கலாச்சார பண்பாட்டுக் கூறுகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறது . என்பதை நிருபிக்கிறது.

 தமிழ் மக்களிடமும் தாழ்த்தப்பட்ட மக்களிடமும் நடைமுறையில் இருந்து வரும் சிறுதெய்வ வழிபாட்டு முறைகள், சாங்கிய-சடங்குகள், பெயர் சூட்டல்கள், வைத்திய முறைகள், இலக்கியங்கள் வழியாக புத்த தன்மத்தின் இருப்பைக் கண்டார் பண்டிதர். “நிகண்டில் கூறியிருக்கும் புத்தருக்குரிய பெயர்களில் முத்தனே முநிகருத்தன் முக் குடச் செல்வன் முன்னோன்-என்று கூறியுள்ளபடிக்கு- இவர்களுக்குள், நாளதுவரை யில் முத்தன், முனியன், கருப்பன், செல்லன்-என்னும் பெயர்களால் அழைத்துக்கொள்ளுவார்களல்லது வேறு மதத்தாருடைய பெயர்களை விசேஷமாக வழங்க மாட்டார்கள்” என்பதன் மூலம் பெயர்கள் வழியாக புத்தத்தின் இருப்பை நமக்குணர்த் துகிறார். “போதி நிழற்பொருந்தித் தோன்றும் நாதன்பாத நவைகெட வேத்தலென்று” என்னும் மணிமேகலை பாடலை எடுத்துக்காட்டி அரச மரத்தடியில் செங்கல்லை நட்டு முனியாண்டவன் பூசை செய்வதாகவும், திருமணங்களில் அரசாணிக் கால்(அரச மரமே போதி மரம் என்று பௌத்தர்களால் வழிபாட்டுக்குரிய புனித மரமாக போற்றபடுகிறது என்பதை நாமறிவோம்) நட்டு இன்றுவரை புத்தர் சாட்சியக விவாகங்கள் நடந்து வருவதுவும் புத்த தன்ம கோட்பாடுகளின் இருத்தலுக்கானச் சான்றுகளாக முன்வைக்கின்றார்.

 போதி(போகி) ப்பண்டிகை புத்தர் பரிநிருவாணம் நாளின் நினைவு நாள் அனு சரிப்பு என்றவர் பெரும்பொங்கல் நாளை புத்தரான இந்திரரை பூசிக்கும் நாள் என்றார். புத்தர் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதுபோல், அம்பிகாதேவி என்னும் பிக்குனி வேம்பு மரத்தடியில் அமர்ந்து பௌத்த அறங்களை போதித்தவள், அவளே நாளடை வில் அம்பாள் என்றும் அம்பிகை என்றும் மாறினாள் என்றார், எள் என்னும் தானியத்திலிருந்து நெய் என்னும் எண்ணெய் கிடைக்கும் என்பதை கண்டுபிடித்த நாளைக் கொண்டாடும் விதமாக உருவான பண்டிகையே தீபாவளி பண்டிகை என்றார், மலாடபுரம் என்னும் ஊரில் புத்த தன்மத்தைத் தழுவிநின்ற சங்கத்தார் பேராமணக்கு சித்தாமணக்கென்னும் வித்துக்களிலிருந்து நெய்யெடுத்து தீபச்சுடர் ஏற்றிய நாளை கார்த்திகை தீபம்(கார்த்துல தீபம்: கார்=இருட்டு, துல= விலக்கு, தீபம்=ஒளி) என்று கொண்டாடியதுவே கார்த்திகை தீபம் என்றானது என்றார். முருகக் கடவுள் குறிஞ்சி நில அரசப்புத்திரனின் மகன் என்று புத்த தன்ம காலத்துக் கடவுளான முருகக் கடவுள் மேல் பூசப்பட்டுள்ள இந்து மத சாயத்தைக் கழுவிடவும் முயற்சிக்கிறார். இவ்வாறாக இந்து மதத்தின் கடவுள்களாக, இந்து மதப் பண்டிகை களாக இன்று கொண்டாடப்படும் யாவும் புத்த தன்ம காலத்தில் தோற்றம் கொண்டு நடைமுறையில் இருந்தவை என்பதற்கு மணிமேகலை, சிலப்பதிகாரம்,வீரசோழியம், சூளாமணி, பதார்த்த சிந்தாமணி, பின்கலை நிகண்டு, பெருந்திரட்டு, சீவகசிந்தா மணி, ஞானவெட்டி போன்ற தமிழ் இலக்கிய நூல்களில் உள்ள குறிப்புகளை ஆதர மாகவும் எடுத்து வைக்கிறார்.

 புத்தரே நமது குலகுரு, புத்த மதமே நமது சுயமதம் என்ற அயோத்திதாசரின் பௌத்த ஈடுபாட்டிற்கான காரணங்களையும் பௌத்த மீட்டுருவாக்கம் குறித்த அவரது சிந்தனைகளில் இருக்கும் நியாயங்களையும் /நோக்கங்களையும் நாம் புரிந் துகொள்ள வேண்டும்.

 நமது குலகுருவாகிய ஒப்பில்லா அப்பன் சாக்கைய முநியவர்களின் ஞானத்தைக் கண்டடைவதற்கு மடாலயங்களும் அவருடைய போதனைகளாய்ப் பிரசங்கித்து வரு வதற்கு கூடங்களும் கட்டுவித்து Buddhist temple என்றும் நமது குலத்தவருக்குள் நடக்கும் விவாகங்களைக் குறிப்பிட்டு Buddhist Register என்றும், Buddhist burial(இடுகாடு), Buddhist medical Hall(வைத்திய சாலைகள்), Buddhist College(உய்ர் கல்வி கற்பதற்கும் அயல் நாடுகளில் உள்ள நமது குலத்தார் இங்கு மருத்துவம்-பொறியியல் கல்வி பயில இங்கு வரும்போது அவர்கள் தங்குவதற்கும்), Buddhist young men Association(நமது இளைஞர்கள் ஆங்கிலம் கற்பதற்கும், விளையாட் டுக்கள் கற்று தேர்வதற்கும்), Buddha’s Birth day Anniversary(புத்தர் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு), Buddhist Charity fund) என்பது போன்ற அமைப்புகளைத் தோற்றுவித்து நமது குலத்(தாழ்த்தப்பட்டவர்களைத் தான் நமது குலம் என்கிறார் பண்டிதர்)தவர்களின் ஒற்றுமைக்கும் உயர்வுக்கும் உதவ விருப்ப முள்ள வர்கள் முன்வர வேண்டும் என்று 1899 களிலேயே அவர் விடுத்துள்ள வேண்டு கோளிலிருந்து அவர் கட்டமைக்க விரும்பிய பவுத்தம் வெறும் சமய அடிப் படையிலானது மட்டுமல்ல, சமுதாய முன்னேற்றத்தை, சமுதாய சீர்திருத்தத்தை/ மாற்றத்தை மையமாகவும் கொண்டது என்பதுவும் விளங்குகிறது. அவர் எத்தகைய பவுத்தத்தை இங்கு எழுப்ப முயன்றார்? தமது பவுத்த சமய/சமூக செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்? என்று விரும்பினார் என்று கேட்போருக்கு அவரது வார்த்தைகளிலேயே பதில்களும் கிடைக்கின்றன தேடுங்கள் என்பதுதான் நாமளிக்க விரும்பும் விளக்கம்.

தலித்துகள் ஏன் மதம்மாற வேண்டும்?

 மதமாற்றம் ஏன்-ஏதற்காக? என்பதற்கான விளக்கங்களை அயோத்திதாசர் மற்றும் அம்பேத்கர் ஆகிய இவ்விரு ஆளுமைகளின் சிந்தனைகளிலிருந்து எடுத் துக்கொள்ள வேண்டும் நாம்.இந்து மதம் தலித் மக்களை கீழ்சாதியினர்/தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்குகிறது/ஒடுக்குகிறது, அவர்களை இக்கொடுமைகளி லிருந்து விடுவிப்பதற்கான ஓர் ஆயுதமாக மதமாற்றத்தை பண்டிதரும் அம்பேத்கரும் முன்மொழிந்தனர் என்பதுடன் மட்டும் நின்றுபோவது ஒரு மேம்போக்கானப் பார்வை என்பதற்கு ஈடாகிவிடும். மாறாக, இங்கு சமய சார்பு என்பது ஒவ்வொருவருக்கும் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே அமைந்துள்ளது என்ற புரிதலிலிருந்து கோட்பாட்டள வில் தலித் மக்களை சகோதரர்களாகப் பாவிக்கும்/பூர்வ காலத்தில் அவர்களது சொந்த மதமாகவும் விளங்கிய புத்த மதத்தை சமூக நோக்கிலும் ஆன்மீக நோக்கிலும் நமக்கு அவ்விருவரும் வழங்கினர் என்பதாக விளங்கிக்கொள்வதுவே சரியானது. இந்து மத சித்தாந்தங்களுக்கும் பவுத்த மத சித்தாந்தங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு களை அறிந்துகொள்வதிலிருந்து அயோத்திதாசர் மற்றும் அம்பேத்கர் ஆகிய இவ்விரு வா¢ன் தேர்வாக பவுத்த மதம் அமைந்ததில் இருக்கும் நியாயங்களை உணர்ந்துகொள் ளலாம். உதாரணத்துக்கு சிலதை அயோத்திதாசரின் மொழியில் இங்கு காண்போம்:

 “இந்துக்கள் என்போர் அவரவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள அவரவர்கள் தேவதைகளைத் தொழுது அவர்களுக்குப் பூசை, நெய்வேத்தியஞ்செய்து வந்தால் மோட்சமும் சுகமும் உண்டென்பார்கள். பௌத்தர்களோ நன்மார்க்க அடிப்படையில் சீலத்தைப் பின்பற்றி ஒழுக்கத்தில் நிலைப்போர்க்கு முத்திய சுகமுண்டென்பார்கள்”

 “இந்துக்கள் என்போர் அவர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள வேதத்தை நம்புவதுடன் சாதியாசாரம் சமயாசாரத்தில் லைத்திருக்க வண்டுமென்பார்கள்.

பௌத்தர்களோ, தங்களது பௌத்தாகமப் போதத்தின்படி பாவச்செயல்களை அகற்றி நன்மெய்க் கடைபிடித்து இதய சுத்தி உடையவர்களாகி சருவ சீவகர்கள் மீதும் அன்பு பாராட்ட வேண்டும் என்பார்கள்”

 “இந்துக்களென்போர்களுக்கு தங்கள் சாதியாசாரங்களுக்குத் தக்க சாதிப் பெயரும் தொடர்மொழியும் இருப்பதுடன் நெற்றியிலும், கழுத்திலும் சமய சின்னங்களாகும் விபூதி, திருமண், உருத்திராட்சம் முதலியன இருத்தல் வேண்டும்”

 “பௌத்தர்களோ சகல மனுக்களையும் சோதிரரென பாவித்து சகலரும் ஒற்று மெயின் வாழ்க்கைப் பெற விரும்புதலும், பஞ்சபாதங்களை அகற்றி வாழ்தலே பௌத்த சின்னமென்று எண்ணி பஞ்சசீலத்தையே தியானமாகக் கொண்டு அம்மேறை நடப்பார்கள்” (தமிழன்,டிச-21,1910)    

 அயோத்திதாசரின் மேற்காணும் குறிப்புகள் இந்து மதத்தையும் புத்த மதத்தையும் அடிப்படைக் கோட்பாடுகள் பிரகாரம் வேறுபடுத்தி அம்மதங்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றன ஒருபுறம். அதே வேளையில் பிணி, மூப்பு, சாக்காடு எனும் பிறவித் துன்பங்களிலிருந்து தனிமனிதனின் விடுதலை, வெகுளி, காமம், மயக்கம் எனும் முகுற்றங்களிலிருந்து விடுபட்டு , பஞ்சசீலம்-எண்மார்க்கம் பின்பற்றி அறம்/சீலம்/ஒழுக்கம் அடிப்படையில் மகிழ்வான இல்லறம் பெறுதல், பேதம் பாராது யாவரையும் சகோதிரர்களாக பாவிக்கும்/சமத்துவம் போற்றும் சமயத் தத்துவார்த்தம் என துக்க நிவாரண மார்க்கமாக பௌத்தத் தன்மத்தைக் கண்டுணர்ந்ததால்தான் சாதி பேதமற்ற திராவிடர்கள் என்று அவரால் அழைக்கப்பட்ட தமது தாழ்த்தப்பட்ட மக்களை பௌத்தம் ஏற்குமாறு அழைப்பு விடுத்தார். சாக்கிய குல வம்சாவழிகள் என்று தலித்துகளை அடையாளப்படுத்தியதுடன் தமது பூர்வ மதம் என்ற உரிமை யுணர்வுடன் பௌத்தத்தை தலித்துகள் அணுகவேண்டும் என்பதும் அவரது எதிர்பார்ப்பாக இருந்தது. பௌத்த தன்மத்தில் உள்ள சாதிபேதம் பாராத சகோதரத் துவக் கோட்பாடு குறித்து கீழ்வருமாறு எடுத்துரைக்கிறார் அயோத்திதாசர்:

 “புத்த மதத்தில் சாதிபேதமில்லாதிருக்க வேண்டுமென்று போதித்துள்ள கட்டளைபடிக்கு பலவகைக் கால்வாய்களில் ஓடிவரும் அசுத்த சலங்களெல்லாம் சமுத்திரத்தில் விழுந்து சுத்தமடைவதுபோல பார்ப்பனனென்பவன் வந்தாலும் செட்டி என்பவன் வந்தாலும் முதலி என்பவன் வந்தாலும் நாயுடு என்பவன் வந்தாலும் அவர்களை வேறு சாதி என்று வித்தியாசம் பாராமலும் சத்துருக்களென்று சங்கைக் கொள்ளாமலும் தன்னவர்களைப் போல ஆதரித்து சுத்த இதயமுண்டாகச் செய்வார் களே அல்லாது இன்னசாதி இனிய சாதி என்று புறங்கூறி தள்ள மாட்டார்கள்” (காண்க: புத்தர் என்னும் இரவு பகலற்ற ஒளி) மனிதர்களை பலசாதி- பலபிரிவினர் என்று பிளவுபடுத்தும் இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு நேர் எதிரான ஆனால், சகோதரத்துவத் தத்துவத்தை தன் உயிராகக் கொண்ட புத்த மதத்தின்பால் அயோத்திதாசர் மேலதிக ஈடுபாடும் ஆர்வமும் கொண்டதற்கு மேற்காணும் அம்சங்களே காரணிகளாக விளங்குகின்றன.

 அயோத்திதாசர் தலித்துகளை தமது இலக்கிய செறிவான வார்த்தைகள் மூலம் செந்தமிழ் மொழியில் பௌத்தம் தழுவுமாறு கேட்டுக்கொண்டார் என்றால் “இந்து மதம் என்பது சாதிகளின் கூட்டுக் கலவை; சாதிகளின் பைத்தியக்கார விடுதி” என்ற அம்பேத்கர் “இந்து சமுதாய சமயத்தோடு உள்ள தொடர்புகளை அறுத்துக்கொண்டு மற்றொரு சமுதாயத்தைத் தழுவும்படி உங்களுக்குச் சொல் கிறேன்” என்று தலித் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். பௌத்தம் ஏற்க வேண்டிய பண்டிதரின் வேண்டுகோளில் ஆன்மீக நோக்கும் சமூக நோக்கும் சரிசம்மாக இருந்தது என்றால் அம்பேத்கர் விடுத்த அழைப்பில் அரசியல் ஊடாடும் சமூக நோக்கம் தூக்கலாக இருந்தது. அம்பேத்கர் பார்ப்பனியத்தின் சாதிய ஒடுக்குமுறை கருத்தியலின் செயல் வடிவமான இந்து மதத்தை விட்டு முழு மனித வாழ்வைப் பெறுவும், அமைப்பு வழியில் ஒன்றுபட்டு சுயபலம் பெறவும், சமூக விடுதலை அடைந்து சமத்துவம் பெறவும், பௌத்த அறங்கள்/சீலங்கள்/ஒழுக்கங்கள்படி மகிழ்வான இல்லறம் பெறவும், சமமாக நடத்தவும்/சமவாய்ப்பு வழங்கவும் முன் வருவதுமான ஒரு மதத்துக்கு மாறுங்கள் என்றதுடன் “மதமாற்றம் என்பது நம்மைப் பொருத்தமட்டில் நம் சமுதாயத்தின் வளமான எதிர்காலத்தை நிர்ணயிப்பதாயிருப் பதால் மதமாற்றத்தை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றார்.

 மதம் மக்களுக்கு அபின், மதம் என்பது ஆன்மீக பெரும்போதை, மதம் என்பது ஆன்மீக ஒடுக்குமுறையின் வடிவம் என்றெல்லாம் மத நிறுவனங்கள் குறித்து மார்க்சியம் விமர்சித்துக் கொண்டிருக்கையில் தேர்ந்த சமூக விஞ்ஞானியான அம்பேத்கர் இந்திய சமூகங்களின் வரலாறு- பண்பாடு ஆகிய பின்னணிகளைக் கணக்கில்கொண்டு “மனிதனுக்கு மதம் அவசியம் என்பது வெறும் மத விளக்கத்தால் மட்டுமல்ல ; மக்கள் சமுதாயத்தை செயலாட்சிக்கு உட்படுத்தவும், விதிமுறகளின் மூலம் கடுப்படுத்தவுமான பின்னணியை உடையதாகும்” என்று விளக்க மளித்தார். கட்டுப்பாடுகள்/விதி முறைகள் மூலம் மக்களை ஒழுங்குபடுத்தி நல்வழியில் செலுத்துவதற்கு மதங்கள் அவசியம் என்னும் கருத்துடன் சமரசம் செய்துகொள்ளும் அம்பேத்கர் மதம் என்னும் சமூக நிறுவனம் சமூக மேம்பாட்டுக்கும், தனி மனிதனின் மகிழ்வான வாழ்வுக்கு மான வாய்ப்புகளை வழங்குவதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்தகைய வாய்ப்பு வழங்க முன்வராமல் சாதியைப் பிடித்துக்கொண்டு அழுவதுவும், தீண்டாமையை மிருகத்தனமாகப் பின்பற்றுகிறதுவுமான ஒரு மதமாக இந்து மதத் தை அவதானித்த அம்பேத்கர் “நான் வாய்ப்புக் கேடாக ஒரு இந்து தீண்டப்ப்டாத வனாக பிறந்தேன்” என்றும் “இந்துவாகப் பிறந்த நான் இந்துவாக சாகமாட்டேன்” என்றும் அறிவித்தார்.

சுயமரியாதையும் சுதந்திரமும் விரும்பும் தலித் அரசாங்கப் பதிவேடுகளில் இந்துவாக இருப்பினும் நிஜத்தில் பௌத்தரே:

 நம் காலத்து மத்திய/மாநில அரசுகளின் கோப்புகளிலும், பதிவேடுகளிலும், பிறப்பு/இறப்பு சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ்களிலும் இந்து என்று ஒரு தலித் குறிப்பிடப்படுவதாலேயே அவன் இந்து ஆகிவிடுகிறானா என்ன? நிச்சயமாக இல்லை. உண்மையில், ஒரு தனிமனிதன் தான் இன்ன மதத்தைச் சார்ந்தவன் என்று மனதார உணர்வதிலிருந்து அவனது மத ஈடுபாடு துவங்குகிறது. தலித் மக்களுக்கு மதமாற்றம் எவ்வெவ்வகையில் அவசியமாகிறது என்பதற்கு அம்பேத்கர் பட்டியி லிட்டக் காரணங்களை கற்றுணர்ந்த ஒரு தலித், அயோத்திதாசப் பண்டிதரின் பௌத்த சிந்தனை/செயற்பாடுகளின் மையக்கருவை அறிந்துகொண்ட ஒரு தலித் தன்னை மறந்த மயக்க நிலையிலும் தன்னை இந்துவாக உணரமாட்டார். இந்து மதம் ஒரு தலித்துக்கு தம் மதத்தவன் என்கிற முறையில் உரிமைகளும் சலுகைகளும் வழங்காதது ஒருபுறமிருக்க கீழ்சாதிக்காரன்/தீண்டத்தகாதவன் என்ற பெயரில் அவன் மீது கட்டவிழ்த்துவிடும் வன்கொடுமைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற வேண்டும் என்று நினைக்கும் ஒரு தலித் எத்தருணத்திலும் தன்னை இந்துவாக கருதுவதை விரும்பமாட்டார். சுயமரியாதை உணர்வு கொண்டு தானும் அரசியல்/ பொருளாதார/சமூக தளங்களில் பிறருக்கு சமமாக உயர்ந்து நிற்க வேண்டும் என்று துடிப்புடன் இயங்கும் ஒரு தலித் இதற்கெல்லாம் வாய்ப்பு வழங்க மனமில்லாத இந்து மதத்திலிருந்து குறைந்தபட்சம் உணர்வு ரீதியாகவாவது வெளியேறுவதற்கு கணப் போழ்தும் தயங்க மாட்டார்.

 .

 ஆங்கிலேய அரசு யாரெல்லாம் கிறித்துவர்கள் இல்லையோ, யாரெல்லாம் இஸ் லாமியர்கள் இல்லையோ, யாரெல்லாம் சீக்கியர்கள்/ஐரோப்பியகள் இல்லையோ அவர் களெல்லாம் இந்துக்களாகக் கருதப்படுவார்கள் என்று அறிவித்ததுவாம். அதுபோல நாமும் யாரெல்லாம் தீண்டத்தகாதவன் என்று இந்து மததால்/சாதி இந்துக்களால் துன்புறுத்தப்படுகிறார்களோ,யாரெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்படு கிறார்களோ/நசுக்கப்படுகிறார்களோ, யாரெல்லாம் அட்டவணை சாதிகள் எனும் பட்டியலில் இடம் வகிக்கிறார்களோ அவர்கள் எல்லாம் இந்துக்களல்ல, அவர்கள் பௌத்தர்களாகவே கருதப்படுவார்கள் என்போம். ஆனால் ஒரு தலித் முதலில் தன்னை பூர்வ பௌத்தனாக உணர்ந்து, பின்பு பஞ்சசீலம் ஏற்று பவுத்தம் தழுவி, எண் மார்க்கங்கள் கடை பிடித்து வாழும் போதுதான் அவர் அசல் பவுத்தராக கருதப்படுவார். தலித்துகளாகிய நாம் நம்மை இந்துக்களல்ல என்றறிந்து பூர்வ பௌத்தர்களாக அயோத்திதாசர்/அம்பேத்கர் வழிகாட்டுதல்களின்படி உணரத் துவங்கும்போது இந்து சாதி சமூகத்திற்குள் வினோதமான அதிர்வலைகள் உருவாகும். அதாவது, இந்நாள் வரைக்கும் உணர்வு மழுங்கிப்போயிருந்த தலித் இப்போது வரலாற்று ரீதியான விழிப்புணர்வையும் பெற்றுவிட்டார் . இனி அவரிடம் அடக்கி வாசிக்க வேண்டும் என்னும் அச்ச உணர்வு இழையோடும் அதிர்வலை.

 பாலி: நமோ தஸ்ஸ பகவதோ அறஹதோ

  சம்ம சம் புதத்ஸ்ஸ

 தமிழ்: முற்றறிவின் முதல்வரும் முக்குற்ற மறுத்த முனிவருமாகிய

 பகவன் புத்தருக்கு வணக்கம்

  000

நன்றிக்கு உரிய நூல்கள்:

1) அயோத்திதாசர் சிந்தனைகள், தொகுப்பு-I, தொகுப்பு-II,

 தொகுப்பாசிரியர்: ஞான.அலாய்சியஸ், வெளியீடு-

 நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை.

 2) பௌத்தமும் தமிழும்- மயிலை சீனி. வேங்கடசாமி, நாம் தமிழர் பதிப்பகம்,சென்ன-5.

 3) புத்தர் அருள் அறம்-ஜி.அப்பாதுரையார், தொகுப்பாசிரியர்: ஸ்டாலின் ராஜாங்கம், ஆழி பதிப்பகம், சென்னை-24

4) கோதம் புத்தர்- ஆனந்த குமாரஸ்வாமி- ஐ. பி. ஹார்னர், தமிழில்: த.நா.குமாரசாமி, .. .. சந்தியா பதிப்பகம், சென்னை-83

 5) புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்வும் பணியும், வெளியீடு: NLC SC/ST பணியாளர்கள் நலச் சங்கம், நெய்வேலி.

 6) மதத்தைப் பற்றி லெனின், தமிழாக்கம்:ஏ. சீனிவாசன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14

அயோத்திதாசப் பண்டிதரும் பௌத்தமும்

https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/26804-2014-07-07-05-30-24

About editor 3002 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply