பிறக்கும் புத்தாண்டில் எமது தாயக மக்களின் வாழ்வில் விடியல் பிறக்க வேண்டும்!


பிறக்கும் புத்தாண்டில் எமது தாயக மக்களின் வாழ்வில்  விடியல் பிறக்க வேண்டும்!
(நக்கீரன்)

மாதங்களில் சிறந்தது தை மாதம்.  தை பிறந்தால் வழி பிறக்கும் அல்லவை கழிந்து நல்லவை மலரும்  என்பது தமிழர்களின்  நம்பிக்கை. காரணம் தை மாதமே அறுவடை மாதமாகும்.  வழி பிறத்தல் என்பது ஒரு புதிய ஆண்டின் துவக்கத்தையே குறிக்கிறது.

களனி திருத்தி, வயல் உழுது, எரு இட்டு, நீர் பாய்ச்சி, நெல் விதைத்து, களை எடுத்து, விளைந்த நெல்மணிகளின் பாரம் தாங்க முடியாமல் தலை சாய்ந்து படுத்த கதிர்களை நல்ல நாள் பார்த்து ஒரு கைப்பிடி அரிந்து தாம்பாளத்தில் வைத்து வீட்டுக்கு எடுத்து வந்து வீட்டு வாசலில்கட்டி விடுவார்கள். இதற்குப் புதிர் எடுத்தல் என்று பெயர். அதில் கொஞ்ச நெல்மணிகளை எடுத்துக் குத்தி அரிசியாக்கி அந்தப் புத்தரிசியை பழைய அரிசியோடு கலந்து மஞ்சளும், இஞ்சியும் கட்டிய புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் பாகும் பருப்பும் இட்டுப் பொங்கி இயற்கைத் தெய்வமான ஞாயிறுக்குப் படைத்து வீட்டுத் தலைவனும் துணைவியும் பிள்ளைகளும் கொண்டாடி மகிழும் விழாவே பொங்கல் நாள்!

ஆண்டு முழுவதும் சூரியனின் ஒளி பூமியின் கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப் பட்ட பகுதியில் விழுகிறது. நமது பூமியானது அதன் அச்சில் இருந்து 23.5 சாய்வுக் கோணத்தில் சுழன்று கொண்டிருப்பதால் செங்குத்தாய் விழும் சூரியனின் ஓளி பூமியின் மீது ஒரேமாதிரி விழுவதில்லை.  இதன் அடிப்படையில்தான் மூன்று மாதத்திற்கு ஒரு பருவமாய், நான்கு பருவ காலங்கள் வரையறுக்கப் பட்டிருக்கின்றன. பூமி சூரியனைச் சுற்றும் நீள் வட்டப் பாதையில் ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி மீண்டும் அதே புள்ளிக்கு வருவதையே ஓர்  ஆண்டாகக்  கணக்கிடுகிறோம்.
 

தொல்காப்பியர் காலத்தில்   ஓராண்டிற்குரிய தட்ப வெட்ப மாறுபாடுகளுக்கு ஏற்ப கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்   ஆறு பெரும் பொழுதுகள் என வகுத்தார்கள்.  ஓர் ஆண்டு ஆவணியில் தொடங்கி  ஒரு பொழுதுக்கு இரு மாதங்கள் என்ற விழுக்காட்டில் ஆடியில் முடிவடைந்தது.  இதே போல் ஒரு நாளை (1)  வைகறை (2)  காலை (3)  நண்பகல் (4)  எற்பாடு (5)  மாலை (யாமம் ) என வகுத்தார்கள்.  அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்.  ஒரு நாழிகை என்பது தற்போதைய 24  மணித்துளிகளைக் கொண்டதாகும். அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாள்  அறுபது நாழிகை தற்போதைய கணக்கீடான 1440 மணித்துளிகளோடு, அதாவது 24 மணி நேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.

ஆனால் இந்தக் கால அளவை பூமியின் பின்னேகல் (precession of the equinoxes) காரணமாக மாறிவிட்டது.  தமிழ்நாட்டையும் ஈழத்தையும் பொறுத்தளவில் ஆவணி புரட்டாதி இப்போது   கார் (மழை) காலமாக இல்லை. ஆவணி, புரட்டாதி  இப்போது முதுவேனியல்  காலமாக மாறிவிட்டது.  

ஆவணி புரட்டாதி  மாதங்களில் நல்ல நாள் பார்த்து விதைப்பு இடம்பெறுகிறது. சில சமயம் முதல் மழை பெய்த பின்னர் விதைக்கிறார்கள். மழை பெய்யுமுன் ஆவணியில் விதைப்பு விதைப்பதும் உண்டு. இதற்குப் புழுதி விதைப்பு என்று பெயர்.

புரட்டாசியில் சிறிதாகப் பெய்யத் தொடங்கி ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பருவ மழை உரக்கப் பெய்வது  காரணமாக வயல்கள் குளங்கள் நிரம்புகின்றன.  தண்ணீரின் மட்டம் கூடக் கூடப் பயிரும் ஓங்கி வளரும். சில சமயம் பயிர் சிறிதாக இருக்கும்போது மழை இல்லாமல் கருகுவதும் உண்டு. அல்லது பெருமழை பெய்து வெள்ளத்தினால்  அழுகிப்போவதும் உண்டு.

நெல்லை விதைத்தால் நெல்லு மாத்திரம் முளைப்பதில்லை. எருவில் கலந்துள்ள புல்லு மற்றும் கிடைச்சிக் கொட்டைகளும் முளைக்கும். அவற்றைப் புடுங்கவதில் கமக்காரர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அதோடு வெட்டுக்கிளிகள், பூச்சி புழுக்கள் நெற்பயிரைத் தாக்கும். இவற்றை ஒழிப்பதற்கு இப்போது கிருமி கொல்லி பயன்படுத்தப்படுகிறது.

தை மாசி மாதங்களில் வயல்களில் தண்ணீர் வற்றிக்  கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருக்கும். வயல்களை உழுது விதைத்துக் களை பிடுங்கக் கட்டிக் காத்து உழைத்துப் பாடுபட்டதன் பயனை உழவர்கள் அறுவடை செய்யும் காலம் இதுவாகும்.

ஆன காரணத்தினாலேயே தை மாதப் பிறப்பபை உழவர்கள் மட்டுமல்ல பொதுமக்களும்  ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தை பிறந்தால் தங்கள் துன்பங்கள் தீரும் வழி பிறக்கும் என நினைக்கிறார்கள்.

பொங்கல் விழாவிற்கு சில வாரங்கள் கழித்தே அரிவு வெட்டு இடம்பெறும். வெட்டிய கதிர்களைக் குவித்து வயலின் நடுவே சூடு வைப்பார்கள். பின்னர்  மாடுகளைக் கொண்டு சூடு மிதிப்பு இடம்பெறும். இப்போது காலமாறுதலுக்கு ஏற்ப இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

தைப்பூசத் திருநாளில் புதிர் குழைத்தல் இடம்பெறும். புத்தரிசி பொங்கி, சர்க்கரையும் வாழைப் பழமும் சேர்த்துப் படைக்கும் இப்புதிர் சோற்றை சுற்றமும் நட்பும் அயலும் சூழ இருந்து உண்டு மகிழ்வர்.

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். உழவர்கள் தமது கமச் செய்கைக்குத் துணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது. இந்த விழா பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படும்.

வயல் உழவும், வண்டி இழுக்கவும், சூடு மிதிக்கவும், பால், தயிர், நெய் கொடுக்கவும், வயலுக்கு எரு தரவும் காரணமாக இருந்த எருதுகளையும், பசுக்களையும், கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி, குடிக்கக் பச்சையரிசிக் கஞ்சி கொடுப்பர்.

மாலையில் பட்டிப் பொங்கல் பொங்கிப் படைக்கப்படும். மாடுகளுக்கு அப்பொங்கலில் ஒரு கவளம் உண்பதற்குக் கொடுக்கப்படும். பின்னர் மாடுகளின் கொம்புக்கும் நெற்றிக்கும் குங்குமம், சந்தனம் பூசி கழுத்தில் மலர் மாலை, வடை மாலை போன்றவற்றால் அலங்கரித்து வீதிகளில் ஊர்வலம் விவார்கள்.

அண்மைக் காலமாக இந்த வழக்கம் அருகிவருகிறது. போர் காரணமாக தாயக மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றாக இழந்துவிட்டார்கள். இடம்பெயர்ந்த மக்களில் ஒரு சாரார் அவர்களது சொந்த வீடுவாசல்களில் மீண்டும் குடியமர்த்தப்படவில்லை. அவர்களது காணிகள் படை முகாம்கள், படைவீடுகள்,  உல்லாச விடுதிகள் நிறுவப் பறிக்கப்பட்டுவிட்டன.

நெற்கழஞ்சியமாக விளங்கிய வன்னி இன்று அதன் களை இழந்து விட்டது.

தைப்பொங்கல் திருநாளுக்கு வானியல் அடிப்படை  இருக்கிறது. தென்திசை நோக்கி பயணம் செய்யும் ஞாயிறு (பூமியில் இருந்து பார்க்கும்போது) இந்நாளில் வடதிசை நோக்கிப் பன்னிரண்டு இராசிகளில் ஒன்றான  தனு இராசியில் இருந்து மகர இராசியில் புகுகின்றான். ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்குப் போக எடுக்கும் காலம் ஒரு மாதமாகும்.

பொங்கல் நாளை “மகரசங்கராந்தி”யாக புராணிகர்கள் மாற்ற  எடுத்த முயற்சி பலிக்கவில்லை.  அடிப்படையில் பொங்கல் உழவர் விழாவாகவும் சமயத்தைக் கடந்தும்  நிற்கிறது.  

தை மாதத்துக்கு மேலும் சிறப்புகள் உண்டு. தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு திருவள்ளுவர் பிறந்த நாளில் தொடங்குகிறது. இந்த ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு 2045 எனக் குறிப்பிடப்படுகிறது.

இப்போது வழக்கில் இருக்கும் “பிரபவ” முதல் “அட்சய” 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்ற அரசனால் கி.பி. 78 இல் அறிமுகப் படுத்தப்பட்டவை ஆகும். இவை வடபுல அரசனால் அறிமுகப்படுத்தப் பட்டதால் வடமொழிப் பெயர்களால்  வழங்கப்படலாயிற்று.

இந்த ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பாடு, வாழ்வு முதலிய வற்றிற்கு இழிவும் அழிவும் ஏற்பட்டன. அவற்றை  எண்ணிப் பார்த்த தமிழ் அறிஞர்கள், புலவர்கள், சான்றோர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி  தமிழர்களுக்கு உரிய தொடர் ஆண்டு ஒன்றினை உருவாக்குவது பற்றி ஆராய்ந்தார்கள்.

திருவள்ளுவர் கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்று  கணிக்கப்பட்டு  அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவதெனவும் அதுவே தமிழ் ஆண்டாகக் கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.

ஆங்கில ஆண்டுடன் 31யைக் கூட்டினால் வள்ளுவராண்டு வரும். இப்போது ஆங்கில ஆண்டு 2014. எனவே வள்ளுவராண்டு 2045 (2014 சக 31).

எனவே திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் தைப் பொங்கல் திருநாளான தை முதல் நாள் தொடங்கி மார்கழிக் கடைசியில் முடிவுறும்.

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரச நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலங்களிலும் நடை முறைப்படுத்தி வருகிறது.

சங்க இலக்கியங்களில் எல்லாத் திங்கள்களின் பெயர்களும் சொல்லப்படவில்லை. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி,  ஐகாரவீற்றுப் புணர்ச்சி ஆகியவற்றில் மட்டுமே ‘திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன’ எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். இதிலிருந்து அவர் காலந்தொட்டே இன்று இருக்கும் திங்கட் பெயர்கள் வழங்கி வருகின்றன எனக் கொள்ளலாம்.

பண்டைய காலத்தில் திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே பெரும்பொழுதைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

‘உவவுமதி’ (முழுமதி) நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையை பழந்தமிழர் அறிந்திருந்தார்கள். ( புறநானூற்றுப் பாடல – 65).

ஞாயிற்றைக் கொண்டு ஆண்டைக் கணக்கிடும் முறை கிபி 7ஆம் நூற்றாண்டில் வராகமிகிரரால் கொண்டுவரப்பட்டது. ஞாயிறு வணக்கம் இயற்கை வழிபாட்டைச் சேர்ந்தது. உலக நாகரிகங்கள் எல்லாவற்றிலும் ஞாயிறு வணக்கம் இருந்ததற்குச் சான்றுகள் இருக்கின்றன. உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக ஞாயிறு இருப்பதால் ஆதி மனிதன் ஞாயிற்றை தெய்வமாக உருவகப்படுத்தி வணங்கிப் போற்றி வந்ததில் வியப்பில்லை.

வேத காலத்தில் இந்திரன், வருணன், அக்கினி இவற்றுக்கு ஒப்ப ஞாயிறு தெய்வமாக வழிபடப்பட்டது. இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான சௌரம் ஞாயிறை முழுமுதற் தெய்வமாக வழிபடும் மதமாகும். பிற்காலச் சோழர் ஆட்சியில் சூரியனுக்குத் தனிக் கோவில்கள் எழுப்பப்பட்டன.

முத்தமிழ்க் காப்பியங்களில் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் –

“ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு
மேருவலம் திரிதலான்.” 
                                        (சிலம்பு 1, 4-6)

என ஞாயிற்றை வாழ்த்திப் போற்றுகிறார். ‘காவிரி ஆற்றையுடைய நாடனாகிய சோழனது ஆணைச் சக்கரம் போன்று பொன் உச்சியை உடைய இமயமலையை வலம் வருதலால் ஞாயிற்றை வணங்குவோம்! ஞாயிற்றை வணங்குவோம்!’

மேலே கூறியவாறு தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில், சமயசார்பற்ற எல்லோருக்கும் பொதுவான விழா பொங்கல் திருநாளாகும். பொங்கல் விழாவில் கற்பனைக்கோ, புனைவுகளுக்கோ, அருவருக்கத் தக்க, பகுத்தறிவுக்குப் பொருந்தாத கட்டுக் கதைக்கோ இடமில்லாத விழாவாகும்.

தமிழர்கள் கொண்டாடும் தீபாவளி தமிழ் அரசன் ஒருவனைக் கடவுள் அவதாரம் சூழ்ச்சியால் கொன்ற நாளாகும்.

தைத் திருநாளான பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் பிறந்த  விழா என்பது வெறும் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் உண்டு மகிழும் நாளாக இருந்துவிடக் கூடாது. அது எங்கள் உணர்வுகளைப் புதுப்பிக்கும் நாளாகவும் கலை, பண்பாடு, பாரம்பரியம் போன்றவற்றைப் போற்றிப் பாதுகாக்கவும்  நாம் எமது உரிமைகளை வென்றெடுத்து எமது தாயக மண்ணில்  சுதந்திரமாகவும்  பாதுகாப்பாகவும் தன்மானத்தோடும் மகிழ்ச்சியோடும்  உரிமைபெற்ற மக்களாக வாழ பிறக்கும் புத்தாண்டு வழிகோல வேண்டும்.

ஒன்பது ஆண்டு கொடுங்கோல் ஆட்சியில் இருந்து  எமது மக்கள் விடுதலை பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு பிறக்கும் புத்தாண்டில் இதுவரை காலமும் அனுபவித்து வரும் இன்னல் மாய்ந்து, நன்மை வந்தெய்த வேண்டும். வாழ்வில் விடிவு பிறக்க வேண்டும். 


விளைச்சல் விழா – பேரறிஞர் அண்ணா!

காற்றால் ஆடும் கதிர் ஒலி, கானமாகக் கேட்கிறது அவனுக்கு. நிமிர்ந்து பார்க்கிறான். பொன்னாடை போர்த்தியதுபோலக் காட்சி தருகின்றன கழனிகள் அங்கே, கையிலே கறுக்கரிவாள் ஏந்தி, கக்கத்திலே அறுத்த நெற்கதிர்களோடு, அன்ன மெனச் செல்கிறாள், அழகு மனைவி. வீட்டைப் பார்க்கிறான். வெண் சுண்ணம் அடித்து கூட்டி மெழுகியதால், அங்கே ஒளிவிடும் அழகு அவனுக் கோர் புது உணர்வு தருகிறது. அங்கே – சிற்றாடை தடுக்க – தத்தை போல் தாவி – நிலாமுற்றத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள் – சின்ன மகள். கமலக் கரங்களால், தும்பைப் பூக்கக் கொட்டுகிறான், குறுநடைச் சிறுவன்! பிள்ளைக் கனி!! ஆகா, அந்தத் தும்பைப் பூவின் நிறம்தான் எவ்வளவு வெண்மையானது! அதையும் மிஞ்சும் அந்த உழவனின் உள்ளம் தான் எத்தகையது. பாடுபடுகிறான் – தசைகள், அசையாத நேரமில்லை. அவனுக்கு, உழைப்புதான்! உழைப்பிலே மலர்கிறது. செந்நெல்கதிர்கள்!! ஆனால், கதிர் கண்டதும், தனக்கு வாழ்வளிக்கும் தாயை மறந்துவிடவில்லை பலன் பெற்றதும், பலன் தந்தோரை மறக்கும் பதரல்லவே அவன். அதனால் மாதாவுக்கு மரியாதை செய்ய நினைக்கிறான்.

தன்னையும், தன்னைச் சார்ந்திருக்கும் கோடானுகோடி உயிர் இராசிகளையும் உய்விக்கும் அன்னை வழங்கும் பரிசைக் கண்டு பரவசமடையும் அவன், விழா கொண்டாடுகிறான். விளைச்சல் விழா வியர்வை பயன் தந்த நாளைக் குறிக்க ஓர் விழா! பலன் கருதாது பரிசளிக்கும் பூமியன்னையின் ஞாபகார்த்தமான விழா! ஏன், அவனுக்குப் பெருமிதம் வராது? பூமியிருக்கும் வரை எனக்கேது கவலை? என்று பூரிப்போடு பார்க்கிறான். அந்தப் பூரிப்பிலே, உலகமே, காட்சி தருகிறது. மனக் கண்ணில். நிமிர்ந்து பார்க்கிறான் தனது குப்பத்தில் கோலமிடும் கோதையர் கும்பல், குடமெடுத்தேகும் குல மாதர்வரிசை மலர் ஆடி மகிழும் மகளிர் – அவர்தம் மொழிநாடியேகும் வீரர்! பள்ளுப்பாட்டு! பரவச கீதம்! அவனது அரும்பு மீசைகளிலே, அவன் இதயத்திலிருந்து ஓடும் இன்ப மூச்சுகள் தாக்குகின்றன. வீரம் கொட்டும் விழிகளிலே கனிவு வழிகிறது. முறுக்கேறிய உடம்பினிலே குதூகலம் ஏறு நடை போடுகிறான் எமக்கு நிகர் யாரிங்கே? என்பது தென்படுகிறது, அவன் தோற்றத்தில்.

இத்தகைய உழவனைக் கண்டார், உலகப் பெரியார்! உளம் மகிழ வரைந்தார்.

உழுதுண்டு வாழ்வாரே, வாழ் வார் – மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்

என்று. வள்ளுவப் பெருந்தகை சித்தரித்த, உழுதுண்டு வாழ்வாருடன், இன்றைய உழவரை நினைத்துப் பார்த்தால், நெஞ்சு சிலிர்க்கும், ஏர்பிடித்தவனுக்கே பார் ஆளும் வேந்தன் அடைக்கலம் – என்றோர். நிலை, தமிழகத்தில் இருந்ததுண்டு. அந்தத் தமிழகமா – இன்று? இல்லை! இல்லை!! மிடுக்கோடு பார்க்கும் உழவன் இல்லை! ஆளரசுக்கு அடி மைப்பட்டு கூனல் முதுகாகிப்போன ஏழை இருக்கிறான். ஆனால், அந்த ஏழையிடம் பரம்பரைக் குணம் மட்டும் மாறிப்போய் விடவில்லை! தமிழ்ப்பண்பு, காய்ந்து போகவில்லை! தன்னையும் உலகையும் வாழ்விக்கும் தாயைப் போற்றத் தவறவில்லை; அவன் உடல் கறுத்து விட்டது. ஆனால் உள்ளம் தும்பைப் பூவாகவே யிருக்கிறது. அவனால் உலகம் வாழ்கிறது. வள்ளுவப் பெருந்தகை வருணிப்பதுபோல, அவனைத்தான் அரசுக்கட்டிலேறியோர் உள்பட அனைவரும் எதிர்பார்க்கின்றனர்! அவன், பலன் கருதாத பூமியன்னையின், புத்திரனாகவே தன்னைப் பாவித்துக் கொண்டிருக்கிறான்! ஆனால் அவனால் பலன் பெறும் அரசோ, அவனை ஏமாளியென்று எண்ணிக்கொண்டிருக்கிறது!! எனினும், அவன், தன்னுடைய நன்றி காட்டும் விழாவை நடத்தத் தவற வில்லை! பொங்கலை-மறந்துவிட வில்லை.

கவ்விக்கொண்டிருக்கும் காரிருளில் ஓர் ஒளிச்சிதர் – இன்றைய பொங்கல் நாள், தமிழகத்திலே ஒரு பொன்னாளாகவிருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் இன்று அந்தப் பொன், தூசுகளாலும் தூர்த்தர்களின் கழுகுப் போக்காலும், ஒளியிழந்து கிடக்கிறது. பழைய மாட்சியும், பண்டைப் பெருமையும் இல்லை யென்றாலும், சிதறிய வைரத்தின் சிறுதுளிபோல, நமது சிந்தனையில் ஒளியிட்டுக் கொண்டிருக்கிறது.

அதனாற்றான், இந்த நாளை, இன்னும் தமிழகம் மறக்கவில்லை. விளைச்சல் விழா! விளைச்சல் வேறெங்கோ, கொட்டிச் செல்லப்பட்டாலும், நாம் கொண்டாடத் தவறாமலிருக்கும் விழா. இத்தகைய பண்பு நம்மிடையே ஒளியிழந்திருந்த காலம்போய், இன்று ஓரளவாவது சுடர்விட்டு ஒளிவிடுகிறது. தூசு போக்கவும், நல்லறிவு பரப்பவுமான நற்பணி வளர்ந்து வருகிறது. இனப் பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று எனும் வகைகளில், இந்த ஆனந்த நாளிலே, அரசு பீடத்திலமர்ந்தும் உழைப்பவன் வாழவழி செய்யாது, உறுமுதலையும் உதை தருவதையும் ஆட்சிப் பாதையாகக் கொண்டிருக்கும் ஆட்சியினருக்கும் ஒன்றை அறிவுறுத்த விரும்புகிறோம்.

 அந்த அறிவுரையும், வள்ளுவர் வழங்கியதுதான். அல்லற்பட்டு ஆற்றது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை, என்றார் அப்பெரி யார். அந்தப் படை வளர்ந்து வருகிறது. அதனை எண்ணிப் பாரீர் என்று அரசினருக்கு அறிவுறுத்துகிறோம்.

 புதுநிலை வளரவும், புதுவாழ்வு விரையவும், வள்ளுவர் கண்ட திரு அகத்தைப் பெறவும் இந்த இன்ப நாளில், உறுதியெடுத்துக்கொள்வோம். வாழ்க திராவிடம், வருக இன்பம்.

திராவிடநாடு  1982 / 1953

– பொங்கல் மலர்

 


இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்

பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலிய எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் நாள் என்பதாக, தை மாதத்தையும் முதல் நாளையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்த பாகத்திற்கும், எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப் படுவதாகும். இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு, அறுவடைப் பண்டிகையென்று சொல்லப்படுவ தாகும். ஆங்கிலத்தில் ‘Harvest Festival’ என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.

மதத் தொடர்பாகப் பார்ப்பனர் கட்டிவிட்ட கதை என்றாலும் பார்ப்பனர் இதை மதத் தொடர்பு ஆக்குவதற்காக வேளாண்மை, வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும், அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முதன்மை ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன். ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து வேளாண்மையில் விளைந்து வெள்ளாண்மை யாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டிவிட்டார்கள்.

இந்தக் கதையை இவ்வளவோடு விட்டுவிடாமல், இம்மாதிரியான இந்திர விழா பற்றி கிருட்டிணன் பொறாமைப்பட்டு தனக்கும் அந்த விழாவை (பூசையை) நடத்த வேண்டுமென்று மக்களுக்குக் கட்டளை இட்டதாகவும், மக்கள் அந்தப்படிச் செய்த தாகவும், இந்த இந்திரவிழா, கிருட்டிணமூர்த்தி விழாவாக மாறியதைக் கண்ட இந்திரன் கோபித்து ஆத்திரப்பட்டு இந்த கிருட்டிண மூர்த்தி விழா ஈடேறாமல், நடைபெறாமல் போகும் பொருட்டு பெரிய மழையை உண்டாக்கி விழாக் கொண்டாடுவோர் வெள்ளாண்மைக்கு ஆதரவாகயிருந்த கால் நடைகள், ஆடுமாடுகள் அழியும் வண்ணமாகப் பெரு மழையாகப் பெய்யச் செய்து விட்டான் என்றும், இதற்கு ஆளான மக்கள், கிருட்டிண மூர்த்தியிடம் சென்று முறையிட்டதாகவும், கிருட்டிணமூர்த்தி மக்களையும், ஆடுமாடுகளையும் காப்பாற்ற ஒரு பெரிய மலை (கோவர்த்தனகிரி)யைத் தூக்கி அதைத் தனது சுண்டுவிரலால் தாங்கிப் பிடித்து காப்பாற்றியதாகவும், இதனால், இந்திரன் வெட்கமடைந்து, கிருட்டிணனிடம் தஞ்சமடைந்து தனது மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு இரங்கிக் கிருட்டிணன் எனக்கு ஒரு நாள் பண்டிகை, உனக்கு ஒரு நாள் பண்டிகையாக மக்கள் முதல்நாள் எனக்காகப் பொங்கல் பண்டிகை யாகவும், பொங்கலுக்கு மறுநாள் பண்டிகை உனக்காக மாட்டுப் பொங்கலாகவும் கொண்டாடும்படியும் சமரசம் செய்து கொண்டார்கள் என்றும் சிரிப்பிற்கிடமான, ஆபாச முட்டாள் தனமான கதைகளைக் கட்டிப் பொருத்தி விட்டார்கள்.

இதிலிருந்து தேவர்களுக்கு அரசனான இந்திரனின் யோக்கியதை எப்படிப்பட்டது, மக்களுக்குக் கடவுளான கிருட்டிணனின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை மக்கள் சிந்தித்து உணரவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். மற்றும் இதில் பொங்கலுக்கு முதல் நாளைக்கு ஒரு கதையும், மறுநாளைக்கு ஒரு கதையும் போகிப் பண்டிகையென்றும், சங்கராந்தி பண்டிகையென்றும் பெயர் வைத்து மூன்று நாள் பண்டிகையாக்கி அதில் ஏராளமான முட்டாள்தனத்தையும், மூடநம்பிக் கையையும் புகுத்திவிட்டார்கள்.

பார்ப்பன ஆதிக்கத்தின் சுயநல சூழ்ச்சி.

நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படி இருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுகசீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத, ஆராய்ச்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்ய வேண்டுமென்பதே அவர்களுடைய பிறவிப் புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.

பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரமக் காரியங்களில் இருந்து விடுபட்டு மனிதர்களாக நாம் வாழவேண்டுமானால் பொங்கல் பண்டிகை முதல் நாளான தை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உண வருந்துவதையும், நல்லுடை உடுத்துவதையும், மனைவி மக்கள் முதலியவர்களுடன் இன்ப மாகக் காலம் கழிப்பதையும், நம்மால்கூடிய அளவு மற்றவர்களுக்காக உதவி அவர்களுடன் குலாவுவதான காரியங்களைச் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும். மற்றபடியாக மதச்சார்பாக உண்டாக்கப் பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும் பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமல் இருந்து தங்களை மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

மானமும் அறிவுமே மனிதற்கழகு.

பெரியார் ஈ.வெ.ராமசாமி
[விடுதலை புரட்டாசி 27, 2001 / 13-10-1970]


Pongal, which falls on the first day of the Tamil month Thai is a harvest festival that coincides with the winter solstice.  Pongal is dedicated to the Sun God Surya and marks the beginning of the northward journey of the sun from its southernmost-limit, a movement referred to as ‘uttarayana’.

This centuries-old festival celebrates the many gifts of the harvest and the family. Special rice dishes are prepared; homes are adorned with banana and mango leaves and decorative patterns drawn with rice flour; and, people gather at temple for special prayers.

The saying “Thai Pirandhal Vazhi Pirakkum” meaning “the commencement of Thai paves the way for new opportunities” is often said during the Pongal festival.

I extend my warmest greetings on this auspicious occasion of Pongal and wish you all life’s best now and in all the days to come. As you joyfully celebrate the festival of Pongal and welcome the harvest season, this greeting is being sent your way, to wish you everything, that the occasion is meant to bring.

Our city flourishes because of the diversity of people who have chosen to make Toronto their home. Toronto’s diverse communities share and celebrate their cultures and traditions with residents in every corner of our city.

As a city proud of its multiculturalism, each and every community plays a part in enhancing Toronto’s social and cultural landscape.

About editor 3046 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply