கண்டிப் பிரதானிகள் தமிழில் கையொப்பம் இட்ட கண்டி ஒப்பந்தம்.!

கண்டிப் பிரதானிகள் தமிழில் கையொப்பம் இட்ட கண்டி ஒப்பந்தம்


59603_1.jpg

கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் இருப்பிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு 18.02.1815 அன்று கைது செய்யப்பட்டார். அது நிகழ்ந்து 12 நாட்களுக்குள் செய்துகொள்ளப்பட்டது தான் “கண்டி ஒப்பந்தம்” இலங்கையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்தம். “1815 ஒப்பந்தம்; வரலாற்றின் மிகப்பெரும் நாசம்” என்றே சிங்கள ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

கண்டியின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக கண்டி பிரதானிகளும், அதிகாரிகளும் பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம்; சிங்களவர் அல்லாத ஒருவர் சிங்களவர்களை ஆள்வதா என்கிற குரோத உணர்வு. இந்த இனவாத உணர்வானது இறுதியில் ஆட்சியதிகாரம் அவர்களுக்கும் கிடைக்காமல் ஒட்டுமொத்த இலங்கை தேசத்திடமுமிருந்து அன்னியரிடம் பறிபோனது.

காலனித்துவத்திடம் பறிபோன கதை

1505 இல் இலங்கை அந்நிய காலனித்துவத்திடம் பறிபோனது. போர்த்துக்கேயர் இலங்கை கைப்பற்றிய போதும் அவர்களால் கரையோரப் பிரதேசங்களையே 1685வரை ஆண்டனர். போர்த்துக்கேயரை இலங்கையை விட்டு விரட்டுவதற்காக கண்டி மன்னன் இரண்டாவது இராஜசிங்கன் ஒல்லாந்தரின் உதவியை நாடினார். அப்படி செய்தால் அதற்கு பிரதியுபகாரமாக மட்டக்களப்பில் அல்லது கொட்டியாரத்தில் ஒல்லாந்தருக்கு ஒரு கோட்டையை கட்டி கொடுப்பது என்பதே மன்னனின் திட்டமாக இருந்தது.

அதன்படி 23.05.1638 இல் ஒல்லாந்தருக்கும் கண்டி அரசனுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது. அந்த ஒப்பந்தத்தின் படி ஒல்லாந்தருக்கு கண்டியின் விளைபொருள்களை ஏற்றுமதிக்கான ஏகபோக உரிமையை வழங்கி பொருளுதவி, படையுதவியையும் செய்வதாக உடன்பாடு காணப்பட்டது. அதன்படி ஒல்லாந்தரும் 1658 யூன் மாதமளவில் போர்த்துகேயரை இலங்கையிலிருந்து அகற்றிவிட்டனர். ஆனால் அதன் பின்னர் ஒப்புக்கொண்டபடி கைப்பற்றிய இடங்களை மன்னரிடம் ஒப்படைக்காமல் தாம் கைப்பற்றிய இடங்கள் தமக்குரியவை என்றனர்.

இதற்கிடையில் கண்டியின் அரசர்கள் மாறினார். மன்னர் நரேந்திர சிங்க (ஆட்சிபுரிந்தது 1707-1739) மன்னருக்கு அடுத்து ஆட்சிபுரிய வாரிசு இன்றிப் போனதால் அவரின் முதலாவது மனைவியின் சகோதரர் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்டு அரசராக்கப்பட்டார். அதுபோலவே ஸ்ரீ விஜய ராஜசிங்கனுக்கும் வாரிசு இல்லாத நிலையில் அவரின் முதல் மனைவியின் சகோதரர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747 – 1782) மதுரையிலிருந்து அழைக்கப்பட்டு மன்னராக ஆக்கப்பட்டார்.

இப்படி நாயக்க வம்சத்து மன்னர்கள் சிங்கள பௌத்தர்களை ஆண்டது குறித்து பிற்காலங்களில் இனவாத கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டாலும் அன்றைய தொடக்கக் கட்டத்தில் இந்த அளவு இனவாதத்துடன் அணுகப்படவில்லை.

அவர்களையும் ஒரு சிங்கள மன்னனாகவே கருதினார்கள். அந்த நாயக்க மன்னர்களும் பௌத்த மதத்துக்கு மாறி தம்மை சிங்கள மக்களின் அரசனாகத்தான் ஆட்சி நடத்தினார்கள். குறிப்பாக கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்தில் தான் பௌத்த மதத்தைப் பலப்படுத்துவதற்கான பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பத்தரின் புனிதப்பல்லை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, புனிதப்பல்லை மக்கள் வணங்குவதற்காக வருடாந்த தலதா பெரஹர கொண்டாட்டம் 1753இல் இவரின் ஏற்பாட்டிலேயே தொடங்கப்பட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக நலிந்து போயிருந்த பௌத்த மதத்தை கட்டியெழுப்புவதற்க்காக அன்றைய  சீயம் நாட்டு (தாய்லாந்து) அரசருக்கு தூது அனுப்பி அங்கிருந்து தேரவாத பௌத்த பிக்குகளை வரவழைத்து சீயம் நிகாய ஆரம்பிக்கப்பட்டது. பல நிலங்கள் விகாரைகளுக்கு வழங்கப்பட்டது. சிதைவுற்றிருந்த பல விகாரைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டன.

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்தில் ஒல்லாந்தருடன் பகைமை உணர்வுகள் தொடர்ந்த போதும் இரு தரப்புக்கும் இடையில் உக்கிர போர் முயற்சிகள் இடம்பெறவில்லை. ஆனால் ஒல்லாந்தரின் ஆட்சிப்பகுதிகளில் இருந்த கரையோர பிரதேசங்களில் தொடங்கிய விவசாயிகளின் எழுச்சியைப் பயன்படுத்திய  கண்டி மன்னர் 1761இல் ஒரு படையெடுப்பை செய்தார். இதற்குப் பதிலடியாக ஒல்லாந்தரும் கண்டி ராச்சியத்துக்கு உரித்தான சிலாபம் புத்தளம் போன்ற பிரதேசங்களைப் பிடித்தனர்.

narendrasinghe.png

அத்துடன் நில்லாது கண்டி மீது படையெடுத்து வெற்றிமுரசு கொட்டினர். ஆனால் அதனை தக்கவைத்துகொள்ளும் பலமில்லாததால் ஒல்லாந்தர் பின்வாங்கினர். இரு தரப்பும் விட்டுகொடுப்புகளை செய்வதாக ஒரு முக்கிய சமாதான உடன்படிகையை 14.02.1776 இல் செய்துகொண்டனர். இந்த ஒப்பதத்தின் மூலம் சூட்சுமமாக வளங்களை கொள்ளையடித்தனர் ஒல்லாந்தர். இதன் உச்சக் கட்டமாக ஒல்லாந்தரை துரத்தியே ஆவது என்கிற முடிவுக்கு வந்த மன்னர் ஆங்கிலேயரின் உதவியை நாடினார்.

இதற்கு முன்னர் போர்த்துகேயரை விரட்ட ஒல்லாந்தர்களைப் பயன்படுத்தியதன் விளைவு போர்த்துக்கேயரின் இடத்தை ஒல்லாந்தர் வகித்தனர். அந்த வரலாற்றுப் பாடத்தை மறந்து மீண்டும் இந்த முறை ஒல்லாந்தர் மீது படையெடுப்புக்காக ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார் கண்டி மன்னர்.  ஆங்கிலேயர் இந்த சூழலைப் பயன்படுத்தி திருகோணமலையை 1782இல் கைப்பற்றியிருந்தனர். அதே ஆண்டு மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் குதிரையிலிருந்து விழுந்ததில் மரணமானார்.

uv8fcYk.jpg
uv8fcYk.jpg

அவரைத் தொடர்ந்து அவரது சகோதரர் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் (1782 – 1798) ஆட்சியேறினார். இவரது ஆட்சியில் தான் அரசருக்கு எதிராக கண்டிப் பிரதானிகளதும், அதிகாரிகளதும் அதிருப்திகள் அதிகரித்தன. அவர்கள் அரசருக்கு எதிராக சூழ்ச்சி செய்துகொண்டிருந்தனர்.

ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனுக்கு  அடுத்ததாக முடிசூட்டப்பட்ட அவரின் மூத்த மனைவியின் சகோதரர் முத்துசாமியை ராஜாதிராஜசிங்கனுக்குப் பின்னர் முடிசூட்ட விடவில்லை. அதற்குப் பதிலாக இரண்டாவது மனைவியின் சகோதரன் ஸ்ரீ விக்கிரமா ராஜசிங்கனை முடிசூட்டினர் . அதற்கூடாக அரசாட்சியை தமது கைக்குள் வைத்திருக்கலாம் என்று போட்ட கணக்கு பிழைத்தது.

அவர்களின் சூழ்ச்சி எல்லை மீறிப் போனபோது மன்னரின் தண்டனைக்கு உள்ளானார்கள். இறுதியில் கண்டி பிரதானிகள், அதிகாரிகள் ஆங்கிலேயர்களின் துணையுடன் கண்டி அரசை கைப்பற்றி அரசரை சிறைபிடித்தனர். இலங்கையின் கடைசி அரசும் வீழ்ந்தது. முழு இலங்கையும் காலனித்துவத்தின் கட்டுப்பாட்டுக்குள் போனது.

1803, 1809ம் ஆண்டுகளில் கண்டியை கைப்பற்றுவதற்கு ஆங்கிலேயர்கள் எடுத்த முயற்சிகள் படுதோல்வியில் முடிந்திருந்தன. 1803இல் நிகழ்ந்த போரில் ஆயிரக்கணக்கான ஆங்கிலேயப்படையினர் கொல்லப்பட்டு ஒருவர் மாத்திரமே தப்பி சென்றார். அனால் 1815இல் கண்டியைப் பிடிக்கப்போன 3744 ஆங்கிலப் படையினரில் எவருக்கும் சேதமின்றி கண்டி கைப்பற்றப்பட்டது.

ஒப்பந்தம்

கண்டு கைப்பற்ற பின்னர் தம் மத்தியிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து சிம்மாசனத்தில் அமர்த்துவார்கள் என்றே காட்டிக்கொடுப்புக்கு துணைபோன பெரும்பாலான பிரதானிகள் நம்பியிருந்தார்கள். ஆனால் அவர்கள் எமாற்றப்பட்டிருந்தார்கள். “இரு தரப்புக்கும் தேவைப்பட்டது அரசனை வீழ்த்துவது. அது முடிந்துவிட்டது. இனி நீங்கள் போகலாம்” என்பதே ஆங்கிலேயர்களின் சைகையாக இருந்தது.

சிறைப்பிடிக்கப்பட்ட அரசரின் நலன்களை ஏற்பாடு செய்வதற்காக டொய்லி 08 நாட்கள் ஒப்பந்தம் குறித்த உத்தியோகபூர்வமாக கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளவில்லை.கண்டி தலைவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களிடம் பணிந்துவிட்டதால் அன்றைய ஆள்பதியின் விருப்பின் பேரில் அதிகாரி டொய்லி ஒரு மாநாட்டைக் கூட்டினார். விமரிசையான அந்த ஏற்பாட்டில் கண்டி பிரதானிகள், அதிகாரிகள், திசாவைகள் பலரும் கலந்துகொண்டனர்.  அங்கு ஏன் கண்டியை கைப்பற்றினோம் என்று விளக்கமளிக்கப்பட்டது. “கண்டிப் பிரதானிகளே கைப்பற்றும்படி அழைத்தார்கள், அவர்கள் எங்கள் படைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்” என்று ஆள்பதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கண்டி ராஜ மாளிகையில் 02.03.1815 அன்று பி.ப. 4.00க்கு கண்டி ஒப்பந்தம் (Kandy convention) செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜோன் டொய்லியால் தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் பிரதானிகள் கையெழுத்திட்டனர்.  ஆங்கில-சிங்கள மொழிகளில் அது வாசிக்கப்பட்டது. இலங்கை தரப்பில் அந்த ஒப்பந்தம் குறித்து எந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் பின்னர் வெளியிடப்படவில்லை. ஆனால் 6 ஆம் திகதி ஆங்கிலேய வர்த்தமானி பத்திரிகையில் முதல் தடவையாக பகிரங்கமாக வெளியிடப்பட்டது.

ஒப்பந்தம் செய்துமுடிக்கப்பட்டதன் பின்னர் ஆங்கிலேய கொடி ஏற்றப்பட்டது. குண்டுகளையும் துப்பாக்கிகளையும் வெடிக்கச் செய்து தமது வெற்றியைக் கொண்டாடினர் ஆங்கிலேயர்.

அதே நாள் பிரித்தானிய கொடியான ”யூனியன் ஜாக்” கொடியை வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரர் இழுத்து இறக்கி சிங்கக் கொடியை ஏற்றினார். அவர் கைதுசெய்யப்பட்டு அவர் மீது ராஜ்ய துரோக குற்றம் சுமத்தப்பட்டு சிறையிருந்தார். சிங்களவர்கள் மத்தியில் இன்றும் பாடப்புத்தகங்களில் உள்ள நாயகன் அவர். இன்றும் தலதா மாளிகையின் முன்னால் ஆங்கிலக்கொடியை இறக்கி கையில் வைத்திருக்கும் ஒரு சிலை உண்டு.

தமிழில் வைக்கப்பட்ட கையெழுத்து

இப்போதெல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்து வைப்பதை கௌரவமாக நினைப்பதைப்போல அப்போது தமிழில் கையெழுத்திடுவதை சிலர் வழக்கமாக கொண்டிருந்தனர். தமிழை ஓரளவு அறிந்தும் வைத்திருந்தனர். நாயக்க மன்னரின் உறவினர்கள் பலர் அரச சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால் தமிழும் வழக்கில் இருந்தது. ரத்வத்தையின் கையெழுத்து தமிழில் பூரணமாக வைக்கப்பட்ட கையெழுத்து. சிலரின் கையெழுத்து என்ன மொழி என்றே அடையாளம் காண முடியாது உள்ளதை ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆங்கிலேயர் சார்பில்

• ரொபர்ட் பிரவுன்றிக் – ஆள்பதி

• ஜோன் டொய்லி – பிரதான மொழிபெயர்ப்பாளர்

• ஜேம்ஸ் சதர்லன்ட் – ஆங்கிய அரசின் பிரதி செயலாளர்

கண்டி மக்கள் சார்பாக கையெழுத்திட்டவர்கள்

• எஹெலபொல மகா நிலமே

• மில்லேவ – வெல்லஸ்ஸ தொகுதி

• ரத்வத்த – மாத்தளை தொகுதி

• கலகொட – கண்டி கலாவிய

• மொல்லிகொட அதிகாரம் – ஏழு கோறளை

• மொல்லிகொட – மூன்று கோறளை

• பிலிமதலாவ அதிகாரம் – சப்பிரகமுவ தொகுதி

• பிலிமதலாவ – நான்கு கோறளை

• கெப்பெட்டிபொல – ஊவா

• கலகம – தமன்கடுவ

கையெழுத்தில் சில மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக இப்போதைய புதிய ஆய்வுகள் சந்தேகிக்கின்றன. குறிப்பாக எஹெலபொலவின் கையெழுத்து போலியாக இருக்க வாய்ப்புண்டு என்றும் அதற்கு ஏதுவாக இருக்கக்கூடிய காரணங்களையும் அந்த ஆய்வுகள் முன்வைக்கின்றன.  பலரது கையெழுத்துக்கள் அப்படி மோசடியானவை என்கிறது அந்த ஆய்வுகள்.

வரலாறு வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவது என்று ஒரு முதுமொழி உண்டு. இன்றைய வரலாற்றை ஆங்கிலேயர்களின் கண்களுக்கூடாகவும் அவர்களின் மூளைக்கூடாகவுமே பார்க்கத் திணிக்கப்பட்டுள்ளோம். அவர்கள் சொன்னதே இன்றும் எமக்கான ஆதாரமாகியிருக்கிறது. எனவே இந்த மோசடிகள் குறித்த சந்தேகங்களை அசட்டை செய்யவும் முடியாது.

ஒப்பந்த உள்ளடக்கம்

உடன்படிக்கை 12 பிரமாணங்களைக் கொண்டது. ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் அரச போகத்தை இழப்பதுடன், இனி அந்த வம்சாவளியை சேர்ந்த எவருக்கும் ஆளுரிமை இல்லை என்றும், அவர்களில் எவரும் கண்டி பிரதேசத்துக்கும் நுழைந்தால் மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்தே முதல் மூன்று  பிரமாணங்களும் பேசுகின்றன.

நான்காவது கண்டி பிரித்தானிய ஆட்சிக்குட்படுத்தப்பட்டதாக அறிவிக்கிறது. ஐந்தாவது பௌத்த மதத்தை பேணி பாதுகாப்பது குறித்தும், ஆறு, ஏழு, எட்டு ஆகியவை தண்டனை நிறைவேற்றுவதில் நெகிழ்ச்சித் தன்மை குறித்தும், ஒன்பதாவது கண்டியில் நீதி வழங்கும் அதிகாரம் ஆள்பதியின் கட்டுப்பாட்டில் இருப்பது, பத்தாவது இந்த ஒப்பந்தத்தின் வலிமை குறித்தும், பதினோராவது கண்டியில் பெறப்படும் வரி கண்டியின் அபிவிருத்திக்கு பயன்படும் என்றும், பன்னிரெண்டாவது வர்த்தகம் குறித்த விடயங்களை ஆள்பதி மன்னருக்கு பொறுப்பு கூறுவது குறித்தும் கூறப்பட்டுள்ளது.

வீழ்த்தியவர்கள் வீழ்ந்தார்கள்

ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட பலவற்றை ஆங்கிலேயர் பின்பற்றவில்லை என்று அதிருப்திகொண்டனர் கையெழுத்திட்டவர்கள். பொது மக்கள் மத்தியிலும் ஆங்கிலேய எதிர்ப்பு நாளாக நாளாக வளர்ந்தது.

இந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டு மூன்றே ஆண்டுகளுக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கெப்பெட்டிபோல, பிலிமத்தலாவ, மில்லவ போன்ற தலைவர்கள் தம்மை ஏமாற்றிய ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்யத் தொடங்கியிருந்தனர். அவர்கள் ஒரு சிங்கள மன்னனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்கள். அதன் விளைவாக அவர்கள் பலர் 1818இல் மரணதண்டனை விதிக்கப்பட்டனர். சிலர் நாடுகடத்தப்பட்டனர். சிலர் சிறைத்தண்டனை பெற்றனர்.
கண்டியரசன் ஆங்கிலேயர்களுக்கு கடைசியாக சொன்ன வசனம்

“எஹெலபொலவையும், மொல்லிகொடவையும் நம்பாதீர்கள். அவர்கள் என்னை ஏமாற்றியவர்கள். உங்களையும் ஏமாற்றத் தயங்க மாட்டார்கள்.”

இலங்கை ஏறத்தாள 450 வருடங்கள் அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்திருக்கிறது. போர்த்துக்கேயர் 153 வருடங்கள், ஒல்லாந்தர் 140 வருடங்கள், ஆங்கிலேயர் 152 என அது தொடர்ந்திருக்கிறது. ஒரு சண்டியரிடம் இருந்து தப்புவதற்காக இன்னொரு சண்டியரை நாடுவதும், காப்பாற்ற வந்த சண்டியர் முன்னைய சண்டியரை விரட்டிவிட்டு மேலும் மோசமான சண்டித்தனம் செய்வதுமாக தொடர்ந்திருக்கிறது.

இறுதியில் சொந்த தேசத்து மன்னரை விரட்டிவிட்டு அந்நிய ஆக்கிரமிப்பு பேய்களிடம் மொத்தமாக தம்மை ஒப்படைத்த கதை விசித்திரமானது. சொந்த மன்னனை அந்நியன் என்று தூற்றி அவரை விரட்ட செய்த சதி இறுதியில் உண்மையான அந்நியனிடம் தேசத்தை காவு கொடுத்தனர். அந்த வகையில் கண்டி ஒப்பந்தம் இலங்கையின் மரண சாசனம் தான். அந்த ஒப்பந்தத்தின் எதிர் விளைவை நாடு இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

நன்றி – தினக்குரல்

http://www.vanakkamlondon.com/kandy-03-03-2020/

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply