பேச்சு வார்த்தை  காயா பழமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!  

பேச்சு வார்த்தை  காயா பழமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!  

நக்கீரன்

சனாதிபதி விக்கிரமசிங்க அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு சனவரி 05, 2023 ஆம் நாள்  கொழும்பில் நடந்து முடிந்துள்ளது. இனச் சிக்கல் உட்பட தமிழ்மக்கள் எதிர்நோக்கும்  பல நெருக்கடிகள் தொடர்பாக சனாதிபதி விக்கிரமசிங்க அவர்களோடு நடத்தப்படும் மூன்றாவது சந்திப்பு இதுவாகும்.

இந்தச் சந்திப்பில் ததேகூ இன் சார்பில் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.  அரச தரப்பில் சனாதிபதி விக்கிரமசிங்க அவர்களோடு  பிரதமர் தினேஸ் குணவர்தன, அமைச்சர்களான விஜயதாச இராஜபக்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டுள்ளர்.

இனச் சிக்கலுக்கான தீர்வுத் திட்டம் பற்றி  எதிர்வரும் சனவரி 10,11,12, 13 இல் அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இறுதிக்  கலந்துரையாடல் இடம்பெற இருக்கிறது. அந்தக் கலந்துரையாடலுக்கான  நிகழ்ச்சி நிரலே   நேற்று நடந்த சந்திப்பில் முடிவு எட்டப்பட்டன.

இந்தச் சந்திப்புகளில் தமிழ்மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் முக்கிய சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும், அதன் பின்னரே இனச் சிக்கலுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசி முடிவெடுக்கப்படும்.

எது எப்படியிருப்பினும் இந்த ஆண்டு பெப்ரவரி 4 இல் நடைபெறும் இலங்கையின் 75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தின் முன்னர் இனச் சிக்கலுக்குத்  தீர்வு காணப்படும் என்று சனாதிபதி விக்கிரமசிங்க அவர்களே கெடு வைத்துள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்துக்கு இன்னும் எண்ணி 30 நாட்களே எஞ்சியிருக்கிறது. அதற்கிடையில் இனச் சிக்கலுக்குத் தீர்வு காண முடியுமா அல்லது இயலுமா என்பது பெரிய கேள்விக்குறி ஆகும்.  காரணம் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இனச் சிக்கலுக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இனச் சிக்கலுக்கான தீர்வுபற்றி  1987 ஆம் ஆண்டு தொடக்கம் பல தடவை முயற்சி செய்யப்பட்டன. பல தெரிவுக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடந்தன.

 (1) ஆகஸ்ட் 1991 இல், பிரேமதாச – புலிகள் பேச்சுக்கள் முறிந்து ஒரு ஆண்டுக்கு  இலங்கையில் அமைதி மற்றும் அரசியல் உறுதித்தன்மையை அடைவதற்கான வழிகளை ஆராய்வதற்காக மங்கள முனசிங்க தலைமையில் 45 பேர் அடங்கிய நாடாளுமன்றத்  தெரிவுக்குழு நிறுவப்பட்டது.

(2) 1989 மே மாதம்  அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடங்கப்பட்டன, ஆனால் சனாதிபதி பிரேமதாசாவும் புலிகளும் IPKF திரும்பப் பெறுவதை கட்டாயப்படுத்தும் உடனடி அரசியல் நோக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் வரை மட்டுமே பேச்சுவார்த்தை  நீடித்தது. மார்ச் 1990 இல், IPKF தீவை விட்டு வெளியேறியது. யூன் மாதம், பேச்சுவார்த்தை முறிந்தது  ஈழப்போர் II தொடங்கியது.

(3) 2009 இல் ஜனாதிபதி குமாரதுங்க புதிய அரசியலமைப்பு வரைவை (பிரதேசங்களின் ஒன்றியம்) நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டது. வரைவு  மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது அது தானாகவே காலாவதியானது.

(4)  2002 டிசெம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுகளின் முடிவில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தொடக்க ஏற்பாடாகத் தங்களுக்குள் ஏற்பட்ட இணக்கம் குறித்து இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் வெளியிட்ட கூட்டு அறிவிப்பு. அதில் குறிப்பிட்ட “உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில், ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சிமுறை தழுவிய தீர்வு ஒன்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு” இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது. 

(5) 2006 யூலை மாதம் 11 ஆம் நாள் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராசபக்சா வினால் APRC நிறுவப்பட்டது. இதன் தலைவராக பேராசிரியர் திஸ்சா விதாரண நியமிக்கப்பட்டார். இந்தக் குழு சமர்ப்பித்த பரிந்துரைகளையிட்டு ஆலோசன வழங்க  பேராசிரியர் திஸ்ச விதாரண தலைமையில் 17 பேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.

6)  2006 டிசம்பரில் பெரும்பான்மை,  சிறுபான்மை அறிக்கை என இரண்டு அறிக்கை களை நிபுணர் குழு தயாரித்தது. திஸ்ஸ விதாரண இந்த அறிக்கைகளை ஒன்றிணைத்து “எதிர்கால அரசியலமைப்பின் அடிப்படையை உருவாக்குவதற்கான முக்கிய முன் மொழிவுகளை” (விதாரண முன்மொழிவுகள் என்றும் அழைக்கப்படுகிறது) ஜனவரி 2007 இல் உருவாக்கினார்.

(7) 2016 ஏப்ரில்  மாதத்தில் இல் இலங்கை நாடாளுமன்றம் இனச்சிக்கலுக்கு தீர்வுகாணும் முகமாக ஒரு அரசியல் அமைப்பு அவையை உருவாக்கியது. இதன் இடைக்கால அறிக்கை 30-10-2017 இல் சமர்ப்பிக்கப்பட்டது. ஒரு யாப்பு வரைவு சனவரி 2020 இல் பிரதமர் விக்கிரமசிங்க அவர்களால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டது.

(8) செப்தெம்பர் 2021 சனாதிபதி சட்டத்தரணி றொமேஷ் டி சில்வா தலைமையில் புதிய யாப்பை உருவாக்க  நியமிக்கப்பட்ட 9 பேர் கொண்ட நிபுணர் குழு.

மேலே குறிப்பிட்ட குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகள் சனாதிபதி செயலகத்திலும் அலரிமாளிகையிலும் தூசு பிடித்துக்  கிடக்கின்றன. இந்த ஆணைக் குழுக்களுக்கு வெலவழித்த பணம், நேரம், உழைப்பு விழலுக்க இறைத்த நீராக வீணாகிவிட்டது.

இப்போது எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க ஏறி விழப் போகிறார? என்பதே கேள்வியாகும்.  இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் அதற்காக சர்வ கட்சிகளது மாநாடு கூட்டப்பட வேண்டும் என்ற யோசனையை விக்கிரமசிங்க அவர்கள்தான் முதலில் முன்மொழிந்தார்.

நொவெம்பர்  மாதம் 23 ஆம் திகதி வரவு-செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு முடிவடைந்த கையோடு “நாம் அனைவரும் ஒன்றிணைந்து இனச் சிக்கலுக்கு  நிரந்தரத் தீர்வைக் காண்போம். வரும் 11 ஆம் தேதிக்கு பிறகு கூட்டப்படும் கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைக்கிறேன்” என அவரது ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டது.

மிண்டும்  சனாதிபதி ஊடகப் பிரிவு டிசெம்பர் 13 இல் விடுத்த செய்தி அறிக்கையில் “2023 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் 75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.”

கூட்டமைப்புடன் முக்கிய பேச்சு! ரணில் வழங்கிய உறுதிமொழி | Tna Ranil Meeting Today Tamil Nation

இந்த அறிக்கைகள் இலங்கைத் தீவில் புரையோடிப்  போய்விட்ட இனச் சிக்கலுக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றைக் காண்பதில் இரணில் விக்கிரமசிங்க கரிசனையாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அதே நேரம் நாடாளுமன்றத்தில் கண்ணே கண்ணு என்று ஒரேயொரு உறுப்பினரை வைத்துக் கொண்டுள்ள விக்கிரமசிங்க அவர்களால் அது முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு புதிய யாப்பை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு  அதாவது  150 பெரும்பான்மை வாக்குகள் தேவையாகும்.

சனாதிபதி விக்கிரமசிங்க அவர்களோடு ததேகூ நடத்தும் பேச்சு வார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. முதல் கட்டமாக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு காணவேண்டும் எனக் கேட்டுள்ளது.

(1) தமிழர்களது காணிகளை  இராணுவம் மற்றும் கடற்படை கையகப்படுத்தும் எத்தனம் கைவிடப்பட வேண்டும். 

(2) போருக்குப் பின்னர் இராணுவத்தின் பிடியில் இருக்கும்  சுமார் 28,000 ஏக்கர் காணிகள் அதன் சொந்தக்காரர்களுக்கு  கையளிக்கப்பட வேண்டும்.

(3) எஞ்சியுள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப் படவேண்டும்.

(4) வலிந்து காணாமல் போனோர்  தொடர்பாக பொறுப்புக் கூறல் வேண்டும்.

(5) அரசியல் யாப்பின் 13ஏ  திருத்தம், காணி உட்பட,  முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும்.

இறுதியாகத்   தமிழர்களது (முஸ்லிம்களது)  பூர்வீக வாழ்விடமான  வடக்கு – கிழக்கு மாகாணத்தை இணைத்து உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சமஷ்டி கட்டமைப்பை உருவாக்க வேண்டும். சமஷ்டி அரசுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்  அதிகாரங்கள் மத்திய அரசு  மீளப்பெறாதவாறு இருக்க வேண்டும். 

படையினர், வனவிலங்கு திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களங்கள் புதிது  புதிதாக தமிழ்மக்களது காணிகளை கைப்பற்ற எடுக்கும் அடாவடித்தனங்கள் தொடர்கிறது. எடுத்துக் காட்டாக நேற்று  (சனவரி 04)  மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் உறங்கும் மாவீரர்களின் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடவடிக்கைக்கு எதிராக  அந்த ஊர் மக்கள் பாரிய எதிர்ப்பைக் காட்டியுள்ளார்கள். இராணுவம் மற்றும் வன விலங்கு திணைக்களம் நட்ட பெயர்ப் பலகைகளையும் மரங்களையும்  மக்கள் புடுங்கி  எறிந்துள்ளார்கள்

 .

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அங்கே ஒரு பவுத்த விகாரை இராணுவத்தின் உதயோடு கட்டப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கான காணி அளவிடும் நடவடிக்கை சென்ற மாதம்  முன்னெடுக்கப்பட்ட போது பொதுமக்களால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது. இது போன்ற இராணுவத்துக்கும் தமிழ்ப்  மக்களுக்கும் இடையிலான ‘போர்” பல மாவட்டங்கனில் தொடர்ந்து நடைபெறுகிறது.

அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் முன்னேற்றம் இல்லை எனில் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டி வரும் என்பதை சனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக ததேகூ இன் தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார்.

இதே சமயம் நலம் விசாரிக்கச் சென்ற முன்னாள் சனாதிபதி இராசபக்க்ஷ அவர்களிடம் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள தேசியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக  சனாதிபதி இரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை நடத்தி, சுமுகமான தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்ஷ இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இனச் சிக்கலுக்குத் தீர்வாக அதியுச்ச அதிகாரப் பகிர்வை தான் ஆதரிப்பதாகச் சொல்லுகிறார். ஆனால் அது ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை இட்டுள்ளார். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் தரப்புக்கும் – அரசுக்கும் இடம் பெற்ற பேச்சு வார்தைகள் தோல்வி அடைந்துள்ளன. ஆனால் இன்று இலங்கை ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. அதில் இருந்து மீள வேண்டும் என்றால் தேசியச் சிக்கல் (National Question)  சுமுகமாகத்  தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் அரசியல் உறுதித்தன்மையை மேற்குலக நாடுகள், இந்தியா மற்றும் அனைத்துலக நாணய நிதியம் வற்புறுத்துகின்றன. பேச்சு வார்த்தை  காயா பழமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்! (கனடா உதயன் – 06-01-2023)

About editor 3162 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply