இணைப்பாட்சி (சமஷ்டி) அரசியல் முறைதான் தீர்வு

 

இனச் சிக்கலுக்கு இணைப்பாட்சி (சமஷ்டி) அரசியல் முறைதான் தீர்வு என்பதில் தமிழ்த் தேசியத் தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்!

 நக்கீரன்

இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் மாறி மாறி ஆட்சிக் கதிரையைப் பிடித்த  சிங்கள – பவுத்த பேரினவாதக் கட்சித் தலைவர்கள் இனச் சிக்கலுக்கு தீர்வு  காண மறுத்து வருகிறார்கள்.  தமிழர்களுக்கு அரசியல் சிக்கல் இருப்பதைக் கூட அவ்வப்போது மறுத்து வருகிறார்கள். இணைப்பாட்சி அரசியல் முறைமை பிரிவினைக்கு வழிகோலும் அது நாட்டைத் துண்டாக்கி விடும் என்று சிங்கள மக்களின் மனதை குழப்பி வருகிறார்கள்.

இப்போது அமைச்சர் நிமால்  சிறிபால டி சில்வா “பிளவு பட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் இணைந்தால்தான் அரசுடன் தீர்வுக்காகத் திறந்த மனதுடன் பேச முடியும்” எனப்

பேசியிருப்பது இனச் சிக்கலுக்கான அரசியல் தீர்வை தள்ளிப்போடும் உத்தியாகும். Concept of political power in Sri Lanka in relation to proposed  constitution and political culture | Daily FT

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்களின் பேச்சுக்குப் பதிலளித்துப் பேசிய ததேகூ இன் பேச்சாளர்  ம.ஆ. சுமந்திரன்  “வடக்கு, கிழக்குத் தமிழர்களின் தலைவர்கள் தங்களுக்குள் கட்சிகள், அணிகளாகப் பிரிந்து நின்றாலும், தேசிய இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே ஒரே வழி என்பதில் மிக உறுதியாகவும், ஒருமித்த நிலைப்பாட்டிலும் உள்ளனர். எனவே, தமிழ்த் தலைவர்கள் பிளவுபட்டிருக்கின்றார்கள் என்று சாக்குப் போக்குக் கூறி, சமாளிப்பதை விடுத்து, சமஷ்டித் தீர்வுக்கு வழி பாருங்கள். ஒன்றுபட்ட நிலைப்பாட்டை கவனத்தில் எடுத்து, அதில் பொதிந்துள்ள நீதி, நியாயத்தைப் புரிந்து கொண்டு, விரைந்த தீர்வுக்கு முன்வாருங்கள்! காலத்தை இழுத்தடித்துச் சாக்குப் போக்குக் கூறிச் சமாளிப்பதை நிறுத்துங்கள்” எனப் பதில் அளித்துள்ளார்.

சுமந்திரன் அவர்கள் பேசுகிற எல்லா மேடைகளிலும் “தமிழ்மக்களுக்கு அர்த்தமுள்ளதும்   பூரணமாதுமான சமஷ்டி அதிகார முறையே வேண்டும்.  ஒட்டுமொத்தமாக நாம் அரசியல் விடிவு என்று சொல்வது  அர்த்தமுள்ள ஒரு அரசியல் விடிவாக இருக்க வேண்டும். சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பு வெறுமனே பெயர்ப்பலகை மாற்றமாக  இருக்க முடியாது. அந்த அதிகாரப் பகிர்வு தமிழ்மக்களுக்குச்  சுயாட்சியைக் கொடுப்பதாகவும் சமஷ்டியின் அடிப்படை குணாதிசயங்களைப் பூரணமாகக்  கொடுக்கப்படுவதாகவும் அமைய வேண்டும். அவை மீளக்பெறக்கூடியதாக இருக்கக் கூடாது. அப்படியான நிறைவான ஒரு சமஷ்டி பெறவேண்டும் என்பதே ஒட்டு மொத்த தமிழ்மக்களது அபிலாஷையாக இருக்கிறது”   எனக் கூறிவருகிறார். உண்மையும் அதுதான்.

திரு சுமந்திரன் மட்டுமல்ல ஏனைய தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்கள் எல்லோரும் இனச் சிக்கலுக்கு சமஷ்டி அரசியலமைப்பே தீர்வாக அமைய முடியும் எனக் கூறிவருகிறார்கள்.   தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அரசியல் தீர்வு தொடர்பாக  பேசும் போது “இனச் சிக்கலுக்கான அரசியல் தீர்வு  சமஷ்டி அரசியலமைப்பின்  அடிப்படையில் இருக்க வேண்டும். அதிகாரப் பகிர்வுக்கு செயல்வடிவம் கொடுப்பது சமஷ்டி அரச முறையே”  எனக் கூறிவருகிறார்.  இந்த  நிலைப்பாட்டில் விக்னேஸ்வரன் அவர்கள் உறுதியாக உள்ளார்.

தமிழ்ப்  பகுதிகளில், தமிழ் மக்கள் ஆளக்கூடிய சமஷ்டி முறையான தீர்வுதான் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும், அதுவே தமிழ் மக்களின் அபிலாஷைகளாகும். அதனை ஓரங்கட்டிவிட முடியாது என ததேகூ நா. உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார். .

நாடா ளுமன்றத்தில்  கடந்த  சனவரி 22, 2022  ஆம் திகதி  இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் . “ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ்த்  தேசிய பிரச்சினை தொடர்பாக எதனையும் கூறாது விடுபட்டுள்ளது.  எமது கொள்கைகள் என்பது எமது மக்களின் அபிலாஷைகளைப்  பிரதிபலிப்பாதாகும். சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் எமது மக்கள் தமிழ் கட்சிகளுக்கு ஓர் ஆணையை வழங்கி வந்துள்ளனர். தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு, அதுவும் சமஷ்டி முறைமையில் அந்த தீர்வு அமைய வேண்டும் எனவும் மிகத் தெளிவாக கூறிவந்துள்ளனர். அதனை ஓரங்கட்ட முடியாது.”

சமஷ்டி அல்லது இணைப்பாட்சி என்ற சொல் ஒரு கெட்ட வார்த்தை என சிங்கள – பவுத்த மக்களிடையே  கட்சி வேடுபாடின்றி தென்னிலங்கை அரசியல்வாதிகள் பரப்புரை செய்து வருகிறார்கள். சிங்களக்  கடும்போக்காளர்கள்  கருத்து கூட்டாட்சியை பிரிவினைவாதத்திற்கான ஒரு சொல்லாகவோ அல்லது ‘தனிநாடு’க்கான படிக்கல்லாகவோ பார்க்கிறார்கள்.

Rajapaksa Dooms Sri Lankan Democracy

ஆனால் தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி அல்லது இணைப்பாட்சியை ஆதரிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இளம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.  பண்டாரநாயக்க 1920களின் நடுப்பகுதியிலும்   1920 களின் பிற்பகுதியில் டொனமோர் ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளித்த  கண்டிய சிங்களப் பிரதிநிதிகளும்  (இலங்கையில்)  கூட்டாட்சிக்கான ஆதரவாளர்களாக இருந்தனர்.

கரையோரச் சிங்களம், கண்டிய சிங்களம் மற்றும் தமிழ்ப் பகுதிகள் என இனம் மற்றும் கலாச்சார அடிப்படையில் நாட்டின் நிர்வாகப் பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததை முடிவுக்குக் கொண்டுவர கோல்புரூக் ஆணையம் செயல்பட்டது. 1933 ஆண்டு கோல்புரூக் ஆணையம் கரையோரச்  சிங்களம், கண்டிய சிங்களம் மற்றும் தமிழ்ப் பகுதிகள் என இன மற்றும் கலாச்சார அடிப்படையில் இருந்த  நாட்டின் தனித்தனி  நிர்வாகப் பிரிவினையை   ஐந்து மாகாணங்களாகப் பிரித்தது.   தனித்தனி நிர்வாக அமைப்புகள் சமூக மற்றும் கலாச்சார பிளவுகளை ஊக்குவித்ததாகவும், நவீன தேசத்தை உருவாக்குவதற்கான முதல்படி நாட்டின் நிர்வாக ஒருங்கிணைப்பு என கோல்புரூக் தவறாக நம்பினார்.  இதனால் தமிழர்கள் 1933 இல் தங்களது தனித்தன்மையை இழந்தார்கள்.

கண்டிய சிங்களவர்கள் வடக்கு – கிழக்கு மாகாணம் உட்பட மூன்று மாகாணங்களைக் கொண்ட இணைப்பாட்சி இலங்கையை முன்மொழிந்தனர். உண்மையில் ஒரு சமஷ்டி  இலங்கைக்கு மட்டுமன்றி வடக்கு, கிழக்கின் இணைப்பிலும் வெற்றி பெற்றவர்கள் இலங்கைத் தமிழர்கள் அல்ல கண்டியச் சிங்களவர்களே  ஆகும்.  கண்டிய சிங்களவர்கள் உண்மையில் தங்களை ஒரு தேசமாகவும்,  தேசிய இனமாகவும் கருதினர்.  கரையோரச் சிங்களவர்கள்,  கண்டிப் பிரதேசத்திற்குள் நுழைவதை கண்டிய சிங்களவர் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மக்களிடையே சமஷ்டி பற்றிய கோட்பாட்டை முதன்முதல் முன்வைத்தவர் தந்தை  எஸ்.ஜே.வி.  செல்வநாயகம் அவர்கள். 1947 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின்னரான காலப் பகுதியில், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைக் கோரி, கொலனிகளின் அரச செயலாளருக்குத் தந்தி  ஒன்றை அனுப்பியது.  இணைப்பாட்சி  அரசியலமைப்பின் கீழ் மட்டுமே தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளைத்  திருப்திப்படுத்த முடியும் என்று  அதில் கூறப்பட்டது.

1948 இல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா  சட்டத்தின்  மூலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை அடுத்து தந்தை செல்வநாயகம், தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை 18, டிசெம்பர் 1949 இல் தோற்றுவித்தார். 1951  ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடந்த அதன் முதலாவது தேசிய மாநாட்டில், இலங்கை சுதந்திரம் பெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே, வெளிப்படையாக சமஷ்டி அரசியல் முறைமை வேண்டும் எனக் கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில்  சமஷ்டி அரசியல் முறைமை நிலவும்   கனடா, இந்தியா, சுவிட்சர்லாந்து மற்றும் சோவியத் ஒன்றியம் எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டது.

பல்லின மக்கள், பலமொழிகள்  பேசும் நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதற்கு சமஷ்டி  அரசயிலமைப்பு சிறந்த  வழியாகும். சிங்கப்பூரின் மக்கள் தொகை 5.5 மில்லியன் மட்டுமே. அதில்  சீனர்கள் (74.3 விழுக்காடு)  மலேசியர் (13.5 விழுக்காடு) தமிழர்கள் (5.0 விழுக்காடு) மற்றவர்கள் (7.2 விழுக்காடு). இருந்தும் பெரும்பான்மை சீன மொழியோடு மேலும் மூன்று மொழிகள் உத்தியோக மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஆங்கிலேயர் இல்லாவிட்டாலும் ஆங்கிலம் அந்த நாட்டின்  நிருவாக மொழியாகவும் கற்கை மொழியாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று  சிங்கப்பூர் ஆசியாவின் பொருளாதாகப் புலி என வர்ணிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்து (Switzerland) நாட்டை எடுத்துக் கொண்டால் அது  41,285 சதுர கிமீ பரப்பளவில்  7.7 மில்லியன் மக்கள் தொகை (2009) கொண்ட நாடு. இது மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது பரப்பளவில் 136 ஆம் இடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்து மண்டலங்கள் என அழைக்கப்படும் 26 மாநிலங்களைக் கொண்ட இணைப்பாட்சி குடியரசு ஆகும். கூட்டமைப்பின் அதிகாரத் தலைமையிடமாக  பெர்ன் நகரமும் நாட்டின் பொருளாதார மையங்களாக  ஜெனீவாவும் சூரிச்சும் திகழ்கின்றன. பேர்ண் சமஷ்டி அமைப்புகளின் தலைநகராகவுள்ள போதிலும் சூரிச் வர்த்தக உலகில் அறியப்பட்ட நகரங்களாகவும் உள்ளன. சுவிட்சர்லாந்து உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக உள்ளது, இதன் சராசரி தனிநபர் வருமானம்  $67,384 (2021) ஆகும்.   உலகின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ள நகரங்களில் சூரிச் மற்றும் ஜெனீவா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

இன்று இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார நெருக்கடிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் சிங்கள – பவுத் பேரினவாதமே முக்கிய காரணமாகும். தமிழ்மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறையே இலங்கையின் பொருளாதாரத்தை அதல பாதாளத்துக்குத் தள்ளியுள்ளது. நாட்டில்  பஞ்சம்  இருக்கிறது.

இனச் சிக்கலுக்கு ஒரு அரசியல் தீர்வுகாணாமல் நாட்டின் ஏனைய சமூக மற்றும்  பொருளாதாரப் சிக்கல்களுக்கு  தீர்வு காண முடியாது.  முப்பது  ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டுப் போர் நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்துவிட்டது. இருந்தும் இனச் சிக்கலுக்கு நியாயமான, நீதியான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் அசமந்தமாகவே

இருக்கிறது.Image result for sumanthiran wigneswaran

அடுத்த ஓராண்டுக்குள் இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்படும் என சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.   2016 ஆம் ஆண்டிலும் இதே வாக்குறுதியை அவர்  வழங்கியிருந்தார்.. 2019 இல் ஆட்சி மாற்றம் ஏற்படும்வரை அவரது வாக்குறுதி நிறைவேறவில்லை.

இதே நேரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராசபக்ச செப்தெம்பர் 2020 இல்   நியமிக்கப்பட்ட 9 பேர் கொண்டு நிபுணர் குழு வரைந்த  புதிய அரசியலமைப்பு  வரைவு ஒன்றை சனாதிபதி இரணில் விக்கிரமசிங்கவுக்கு கொடுக்கப்பட்டுள்னது. இந்த அரசியல் யாப்பை வரைந்த 9 பேர் கொண்ட குழுவுக்கு  சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். தலைவர் உட்பட இதில் இடம்பெற்ற  காமினி மாரப்பன பி.சி., மனோகர டி சில்வா பி.சி., சஞ்சீவ ஜயவர்தன பி.சி. போன்றவர்கள் தீவிர சிங்கள – பவுத்த மனப்பான்மை கொண்டவர்கள்.  இந்த அரசியல் யாப்பு வரைவில் மாகாணசபை முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற சரத்து இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த அரசியல் யாப்பின் படியை பெற்றுக் கொண்ட கர்தினால் ரஞ்சித்  மல்கொம் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை மவுனப்படுத்தும் முயற்சி என வருணித்துள்ளார். இந்த மாதம்  3 ஆம் திகதி நீர்கொழும்பில் நடைபெற்ற உலக வாழ்விட நாளை  நினைவு கூறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது “அரசு அல்லது அரசு நிறுவனத்திற்கு எதிராக யாரேனும் குறைகளை ஒளிபரப்பினால் குறைந்தது 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று விமர்ச்சித்துள்ளார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு தொடக்கம் புதிய அரசியல் யாப்பை வரைய சந்திரிகா குமாரதுங்க, மகிந்த இராசபக்ச,  சிறிசேனா – விக்கிரமசிங்க எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. சந்திரிகா குமாரதுங்க அவர்கள் கொண்டு வந்த  பிரதேசங்களின் ஒன்றியம் எனப் பெயரிட்ட யாப்பு வரைவு நாடாளுமன்றத்தில்  இரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஐதேக யால் தோற்கடிக்கப்பட்டது.

சனாதிபதி  இரணில் விக்கிரமசிங்க ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்க எண்ணினால்  நல்லாட்சி காலத்தில் கிட்டத்தட்ட எழுதி முடித்து பின்னர் கைவிடப்பட்ட  யாப்பு வரைவை விட்ட இடத்தில் இருந்து தொடங்கி பூரணப்படுத்தலாம். 2018 இல் சனாதிபதி  மைத்திரிபால  சிறிசேனாவுக்கும்  பிரதமர் இரணில் விக்கிரமசிங்க இருவருக்கும் இடையில் எழுந்த முரண்பாடே அந்த யாப்பு வரைவு பூரணப்படுத்தப்  படாததற்கு முக்கிய காரணமாகும்.

2016 இல்  அமைக்கப்பட்ட  அரசியலமைப்பு அவையின் வழிகாட்டுக் குழு  தனது இடைக்கால அறிக்கையை 21 செப்தெம்பர், 2017  இல் வெளியிட்டது. இந்த  வழிகாட்டுதல் குழுவின் விவாதங்களை ஏப்ரல் 2016 முதல் செப்டம்பர் 2017 வரை 73 முறை இடம்பெற்றன. எனவே நேரம் மற்றும் முயற்சியை வீணாக்குவதற்குப் பதில்  ஏற்கனவே இருக்கும் யாப்பு வரைவை  விரைந்து பூரணப்படுத்துவதே புத்திசாலித்தனமாகும். (Canada Uthayan news 10/11/2022

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply