வெல்ல முடியாத ஒரு யுத்தத்தை நடாத்தும் உக்ரைன் சனாதிபதி செலன்ஸ்கி

 வெல்ல முடியாத ஒரு யுத்தத்தை நடாத்தும் உக்ரைன் சனாதிபதி செலன்ஸ்கி

 நக்கீரன்

புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

எனச்  சென்ற நூற்றாண்டில் கொடிய போர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.  ஆனால் கெட்ட போரினை முற்றாக ஒழிக்க யாராலும் முடியவில்லை. முதலாவது உலக யுத்தம் யூலை 28, 2014  அன்று  தொடங்கி  நொவெம்பர் 11, 1918 வரை நான்கு ஆண்டுகள் நீடித்தது.   இரண்டாவது உலக யுத்தம் 1939 இல் தொடங்கி 1945 இல் முடிவுற்றது. முதலாவது உலக யுத்தத்துக்கும் இரண்டாவது உலக யுத்தத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி 21 ஆண்டுகள். ஆணால் இரண்டாவது உலக யுத்தம் முடிந்து 77 ஆண்டுகள் கடந்தும் மூன்றாவது உலக யுத்தம் தொடங்கவில்லை. இதற்கு இரண்டாவது உலகப் போர் முடிந்த கையோடு அமெரிக்கா முன்னெடுத்த முயற்சி காரணமாக உருவாக்கப்பட்ட அய்க்கிய நாடுகள் சபைதான் காரணம். நாடுகள் தங்களுக்குள் எழும் முரண்பாடுகளை பேசித் தீர்வுகாண முயற்சித்துள்ளன.

இப்படிக் கூறுவதால் போர்  வேரோடு கெல்லி எறியப்பட்டுவிட்டது என்பது பொருள் அல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நாடுகளுக்கு இடையே சண்டை நடந்துள்ளன. நடந்த வண்ணம் உள்ளன.

1945 க்குப் பின்னர்அமெரிக்கா கொரியா, வியட்நாம், வளைகுடாப் போர், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய அய்ந்து முக்கியப் போர்களை  நடத்தியது, இவற்றில்  1991 இல் நடந்த வளைகுடாப் போரை மட்டுமே உண்மையில் தெளிவான வெற்றியாக வகைப்படுத்த முடியும். வியட்நாம் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா  படு தோல்வி  அடைந்தது.

Russian attacks and troop locations map 19/10/22
உருசிய பிராந்தியங்கள்

இப்போது  உருசியா – உக்ரைன் இடையிலான போர் அந்த நாடுகளுக்கு இடையில் மட்டுமல்ல அதற்கும் அப்பால் உலகளாவிய தாக்கத்தை உண்டாக்கி வருகிறது. பல நாடுகள், குறிப்பாக ஆபிரிக்க நாடுகள், தானியக் பற்றாக் குறை, விலைவாசி உயர்வு, பண வீக்கம் போன்ற பொருளாதார நெருக்கடிக்கு  உள்ளாகி வருகின்றன. சோமாலியாவில் வரலாறு காணாத உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து அந்த நாடு மீள அ.டொலர் 1.1 பில்லியன் அவசரமாகத் தேவை என அய்க்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்தேரசு உலக நாடுகளிடம்  உதவி கேட்டுள்ளார்.

இந்த ஆண்டு பெப்ரவரி 24 அன்று உருசியா உக்ரைன்மீது பாரிய படையெடுப்பைப் தொடக்கியது.  2014 இல் தொடங்கிய உருசிய – உக்ரேனியப் போரின் ஒரு பெரிய விரிவாக்கம்தான் இந்தப் படையெடுப்பு. உருசியா உக்ரைன் தலைநகர் கீவை ஒரு சில நாட்களில் அல்லது  ஒரு கிழமைக்குள்  பிடித்துவிடும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். மாறாக உருசிய – உக்ரைன்போர் இன்றுடன் (ஒக்ரோபர் 22) 241 நாட்களாக நீடித்து வருகிறது. இந்தப்  படையெடுப்பு இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிர்களையும் பல்லாயிரக்கணக்கான பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களையும் நாசமாக்கியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அய்ரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தியது.   ஒக்தோபர் 18,  2022 நிலவரப்படி 77 இலட்சம்  உக்ரேனியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

யுத்தம் நீடித்து வருவதற்கு முக்கிய காரணம் உக்ரைன்ஒரு சின்ன நாடல்ல. ஓரளவு படைபலம் மிக்க நாடு. உருசியா ஒரு வல்லரசாக இருந்தாலும் மேற்கு நாடுகளின் பல பில்லியன் டொலர் பெறுமதியான நவீன இராணுவ ஆயுத, தளபாட உதவிகள் மூலம் உக்ரைன் உருசிய தாக்குதலைத்  தடுத்து வருகிறது.

கீழ்க் கண்ட அட்டவணை 1 உருசியா – உக்ரேன் படை பலத்தைக் காட்டுகிறது. அமெரிக்காவும் நேட்டோ நாடுகள் அண்மையில் அளித்துவரும் இராணுவ உதவி காரணமாக உக்ரேன் நாட்டு விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் இரண்டின் எண்ணிக்கை கூடியிருக்ககலாம்.

அட்டவணை 1

உருசிய – உக்ரேன் படை பலம்

 படை பலம்உருசியாஉக்ரேன்
மொத்த இராணுவ வீரர்கள் 1,350,000500,000
களத்தில் உள்ள வீரர்கள்850,000250,000
பின்புல வீரர்கள்250,000250,000
துணை இராணுவப் பிரிவினர்250,00050,000
மொத்த விமானங்கள்4,173318
மொத்த உலங்கு வானூர்திகள்1,543112
தாக்கு விமானங்கள்77269
தரே தாக்கு விமானங்கள்73929
தாக்கு உலங்குவானூர்திகள்54434
பயிற்சியாளர்கள்52271
போக்குவரத்து விமானங்கள்44532

மேற்கத்திய ஊடகங்களைப் படிப்போர் உக்ரைன்வலிமைமிக்க உருசியாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற்று வருறுகிறது என்ற முடிவுக்கு வருவார்கள்.  மேற்கத்திய ஊடகக் கதைகளை  நம்பினால் அப்படித்தான் தோன்றும்.  உருசியா ருடே மற்றும் ஸ்புட்னிக் ஆகிய உருசியா சார்பு ஊடகங்கள் மேற்குலக நாடுகளில் தடைசெய்யப்பட்டுவிட்டன. உக்ரைன்போர் தொடங்கியதில் இருந்து, உலகம் ஒருதலைப்பட்சமான – மேற்கத்திய ஊடகங்களின் திரிபுபடுத்தப்பட்ட – செய்திகளையே படிக்கத் தள்ளப்பட்டுள்ளார். இதனை மேற்குலக நாடுகளின் பரப்புரை அல்லது பாசாங்குத்தனம் என்று அழைக்கலாம்.

உலகளாவிய மனித உரிமைகள்  பிரகடனத்தின் பிரிவு 19  கருத்து மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.  இந்த உரிமையானது தலையீடு இல்லாமல் கருத்துக்களை வைத்திருப்பதற்கும், எந்த ஒரு ஊடகம் மூலமாகவும் மற்றும் எல்லைகளைப் பொருட்படுத்தாமல் தகவல்வல்களைத்  தேடுவதற்கும், பெறுவதற்கும் மற்றும் வழங்குவதற்கும் ஆன சுதந்திரங்களை உள்ளடக்கியது. பிரிவு 19  “எல்லைகளைப் பொருட்படுத்தாமல்” என்ற சொற்றொடரின் கருத்து சுதந்திரம் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். உருசியா அல்லது உருசியாவின் நிதியுதவி பெறும் ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டிருந்தாலும் கூட, கருத்துக்கள் மற்றும் கருத்துக்களைப் பரப்புவதை முடக்கும் எந்தவொரு முயற்சியும், பிரிவு 19 இன் அப்பட்டமான மீறலாகும். இது கண்டிக்கப்பட வேண்டும்.

மேற்கத்திய ஊடகங்களில் நாம் பார்க்கும் அல்லது படிக்கும் செய்திகள், உக்ரைன்போரில் உருசியா  தோல்விக்கு மேல் தோல்வியை எதிர்கொள்கிறது.  உக்ரேனிய துருப்புக்கள் உருசியா இணைத்த பகுதிகளை (Donetsk, Luhansk, Kherson, and Zaporizhzhia)  மீட்டுவருகின்றன, உருசியாவின் சனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் அழைப்பை அடுத்து ஆயிரக்கணக்கான இளம் உருசியர்கள் கிடைக்கக்கூடிய அடுத்த விமானத்தைப் பிடித்து  நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என மேற்குலக நாடுகள் செய்தி வெளியிட்டன. போரில் உண்மைதான் முதற்பலி என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

உருசியா உக்ரைன்மீது ஏன் படையெடுத்தது? அதற்கான காரணங்கள் என்ன? சரியாக 31 ஆண்டுகளுக்கு முன்பு   சோவியத் ஒன்றியம்  டிசெம்பர் 25, 1991 அன்று கலைக்கப்பட்டது. அதனை அடுத்து  1922 ஆண்டு முதலே அந்த ஒன்றியத்தில் உறுப்புரிமை வகித்து வந்த உருசியா, உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகள் தங்களைத் தனிநாடாக அறிவித்துக் கொண்டன.

மிக அருகருகே இருந்த காரணத்தால் உருசியாவும் உக்ரைனும் நெருங்கிய மொழி, பண்பாடு, நட்புறவு கொண்ட நாடுகளாகவே முதலில் இருந்தன. ஆனால் 2000 க்குப் பிறகு எலியும் பூனையும் போல் ஆகிவிட்டன. 2014 இல் சோவியத் ஒன்றிய காலத்தில் உக்ரேனுடன் அன்றைய சோவியத் நாட்டின் தலைவர் நிக்கிட்ரா குருச்சேவ் அவரால் இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்தை அதிரடியாக தன்னோடு உருசியா இணைத்துக் கொண்டது. இதன் மூலம் உருசியா தனது எல்லையை கருங்கடல்வரை விரிவுபடுத்தியது.

கிரிமியாவை உருசியாவை இணைத்ததை அடுத்து, உக்ரேனில்  நாடு தழுவிய உருசிய எதிர்ப்பு உணர்வலைகள் எழுந்தன. வலதுசாரி அரசியல் கட்சிகளுக்கான ஆதரவு அதிகரித்தது. உக்ரைனியப்  புரட்சிக்குப் பிறகு, பெப்ரவரி 2017 இல் உருசியாவிலிருந்து நூல்கள்  இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டது. இதன்  மூலம் உக்ரேனிய அரசு உருசிய மொழியின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது.  மே 23, 2017 அன்று, உருசிய  மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க, பெரும்பாலான ஒளிபரப்புக்கள் உக்ரைனிய மொழியில் இருக்க வேண்டும் என்ற சட்டத்திற்கு உக்ரைனிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அப்போதிருந்து, உருசிய  மொழியும் பள்ளிகளில் கற்பிக்கப்படுவது தடைசெய்யப்பட்டது. இதனால் உருசியாவில் பிறந்த உருசிய  உக்ரேனியர்கள் தங்கள் சொந்த மொழியில் பேசுவதை கைவிட்டு உக்ரேனிய மொழியைப் பேசுகிறார்கள்.

1949 இல் உருசிய ஒன்றியத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ கூட்டமைப்பில் சேர  உக்ரைன்ஆர்வம் காட்டியது.  நேட்டோ அமைப்பு பல கிழக்கு அய்ரோப்பிய நாடுகளையும் சேர்த்துக் கொண்டது. நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு படையெடுத்தால் அது முழு நேட்டோ நாடுகளின்  மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும். தற்சமயம் நேட்டோ அமைப்பில் 30 நாடுகள் உறுப்பினராக உள்ளன.

நாலு கோடியே நாற்பது இலட்சம் மக்கள் தொகை கொண்ட உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால்  அது தனது பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக அமையும் என உருசியாவின் சனாதிபதி புட்டின் கருதுகிறார்.   அதனால் உக்கிரைன் நேட்டோ அமைப்பில் சேரக் கூடாது என புட்டின் வெளிப்படையாக அண்மைக் காலத்தில்  வற்புறுத்தி வருகிறார்.அதே நேரம் உருசியாவை சுற்றி வளைக்க  நேட்டோ அமைப்பில் உள்ள அமெரிக்கா, கனடா மற்றும்  அய்ரோப்பிய நாடுகள் உக்ரைனை சேர்த்துக் கொள்வதில் அதித அக்கறை காட்டி வருகின்றன.  அது தொடர்பாக உக்ரைன் நாட்டுக்கு இராணுவ தளபாடங்கள், பயிற்சி, உளவுத் தரவுகளை தாராளமாகவும் ஏராளமாகவும் உதவி வருகின்றன.

இருந்தும் நேட்டோ நாடுகள் தங்கள் படையை உருசியாவுக்கு எதிராகவும் உக்கிரேனுக்கு ஆதரவாகவும் தரையிறக்கத் தயாரில்லை. உருசியாவுக்கு எதிரான போரை உக்ரைன் நாட்டு போர்வீரர்களை வைத்து நேட்டோ நாடுகள் நடத்தி வருகிறது.  அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் உருசியாவிற்கு எதிராகப்  பல பொருளாதாரத் தடைகளை விதித்தாலும், வங்கிக் கணக்குகளையும் சொத்துக்களையும்  முடக்கினாலும் உருசியா அசைவதாகத் தெரியவில்லை. மறுபுறம் இந்தத் தடைகளால் மேற்குலக நாடுகளின் பொருளாதாரம் மட்டும் அல்ல உலகளாவிய அளவில் பணவீக்கம், விலைவாசி உயர்வு, உணவுத் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு தோன்றியுள்ளன. 

உக்கிரேன் நாட்டின் சனாதிபதி வொலோடிமர் செலன்ஸ்கி (Volodymyr  Zelenskyy)  வெல்ல முடியாத ஒரு யுத்தத்தை உருசியாவுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உருசியாதான் உலகின் இரண்டாவது பெரிய இராணுவப் படையணிகளை வைத்திருக்கிறது. . Business Inside  இன் கூற்றுப்படி, உருசியா உலகின் மிகப்பெரிய தாங்கிக் படையையும், அமெரிக்காவிற்குப் பின்னால் இரண்டாவது பெரிய விமானம் மற்றும் கடற்படையையும், அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பின்னால் மூன்றாவது பெரிய நீர்மூழ்கிக் கப்பல் படைகளையும் கொண்டுள்ளது. 2008 ஆம் ஆண்டிலிருந்து உருசியாவின் இராணுவச் செலவு கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 44% அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிரியாவிற்கும், எல்லைக்கு அப்பால் ஜார்ஜியாவிற்கும் இப்போது உக்ரைனுக்கும் தனது படைகளை அனுப்புவதன் மூலம் வெளிநாட்டில் படைகளை நடத்தும் திறனை உருசியா எண்பித்துள்ளது.

மாறாக, இராணுவ பலத்தில் உக்ரைன் 22 ஆவது இடத்தில் உள்ளது. போரின் தொடக்கத்தில் இருந்து, உருசியாவை பலவீனப்படுத்துதல், சீர்குலைத்தல் மற்றும் துண்டு துண்டாகச் சிதறச் செய்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்ட மேற்கின் பினாமி போரை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்கா மற்றும் சுமார் 50  அமெரிக்க நட்பு நாடுகளிடமிருந்து உக்ரைன் பாரிய  இராணுவ உதவியைப் பெற்றுள்ளது. பெப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைனுக்கு 15.8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இராணுவ தளபாடங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உருசியாதான் உலகின் இரண்டாவது பெரிய இராணுவப் படையை வைத்திருக்கிறது.  Business Inside  இன் கூற்றுப்படி, உருசியா உலகின் மிகப்பெரிய தாங்கிக் படையையும், அமெரிக்காவிற்குப் பின்னால் இரண்டாவது பெரிய விமானக் கடற்படையையும், அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பின்னால் மூன்றாவது பெரிய நீர்மூழ்கிக் கடற்படையையும் கொண்டுள்ளது. 2008 ஆம் ஆண்டிலிருந்து உருசியாவின் இராணுவச் செலவு கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 44% அதிகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிரியாவிற்கும், எல்லைக்கு அப்பால் ஜார்ஜியாவிற்கும் இப்போது உக்ரேனுக்கும் தனது படைகளை அனுப்புவதன் மூலம் வெளிநாட்டில் படைகளை வெளிப்படுத்தும் திறனை உருசியா எண்பித்துள்ளது.

உருசியா-உக்ரைன் போர் என்பது போர்க்களத்தில் மட்டும் நின்றுவிடவில்லை. முதல் நாளிலிருந்தே, போர் பொருளாதாரத் துறையில் பரவியது, மேற்கத்திய நாடுகள் உருசியா மீது பொருளாதாரத் தடைகளை குவித்தன, அதே நேரத்தில் மேற்கு நாடுகளில் முதலீடு செய்யப்பட்ட 300 பில்லியன் அமெரிக்க டாலர் உருசிய நாட்டுச்  சொத்துக்களை முடக்கியது. ஆனால் இந்த பொருளாதார தாக்குதல்கள் உருசியாவை  சரணடைய வைக்கவில்லை. தலை வெல்ல முடியவில்லை. மாறாக, பொருளாதாரத் தடைகள் மேற்கு நாடுகளின் மீது பூமராங் செய்து, அய்ரோப்பாவில் கடுமையான எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தி, பணவீக்க விகிதங்கள் அதிகரித்து வருகின்றன.

எட்டு மாத யுத்தம் காரணமாக உக்கிரைன்  உட்கட்டமைப்பில் மூன்றில் ஒரு பகுதி அழிக்கப்பட்டு விட்டது. கட்டிடங்கள், வாழ்விடங்கள் தரைமட்டமாகக்கப் பட்டுவிட்டன. மின்சாரம், தண்ணீர் வழங்கல் தடை பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் உதவிகளே உக்ரைன்  முற்றாக மூழ்கிப் போகாமல் மிதக்க வைத்து வருகிறது.

உருசியாவைப் பொறுத்தளவில் அந்த நாடு யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர அவசரப்படவில்லை. அடுத்த ஆண்டிலும் யுத்தத்தைத் தொடர உருசியா திட்டமிட்டுள்ளது. இந்தப் பின்னணியில் உக்ரைனின் சனாபதிபதி செலன்ஸ்கி வெல்ல முடியாத ஒரு யுத்தத்தை எவ்வளவு காலத்துக்கு  தாக்குப் பிடிக்கப் போகிறார் என்பதே இன்றைய கேள்வி ஆகும். (கனடா உதயன் – 21-10-2022)

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply