இலங்கைத் தமிழர்களுக்கு பொருள் பொதிந்த அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்!
நக்கீரன்
கெடுகுடி சொற் கேளாது எனச் சொல்வார்கள். இலங்கையின் ஆட்சியாளர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் (UNHRC) நிறைவேற்றப்படும் தீர்மானங்களை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இதுவரை இலங்கைக்கு எதிராக மொத்தம் 09 தீர்மானங்கள் ஐநாமஉ பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ளன. இந்தத் தீர்மானங்களில் 2009 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நீங்கலாக எஞ்சிய தீர்மானங்கள் இலங்கைக்கு எதிரானவை.
2009 இல், யுத்தம் முடிவடைந்து 9 நாட்களுக்குப் பின்னர், இலங்கைக்கு ஆதரவாக ஐநாமஉ பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட அந்தத் தீர்மானத்தின் ஒட்டுமொத்த தொனி பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழித்துக் கட்டிய இலங்கையை பாராட்டுவதாக அமைந்திருந்தது.
2011 இல் இரா. சம்பந்தர் (நா.உ) தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க இராசாங்க அமைச்சின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சு வார்த்தை ஒக்தோபர் 26 தொடங்கி நொவெம்பர் 04 மட்டும் நீடித்தது.
ததேகூ இன் இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 2012 மற்றும் 2013 இல், ஐநாமஉ பேரவையில் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும், இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் மற்றும் நல்லிணக்கம் குறித்து கவலை களைத் தெரிவித்தன. அவற்றையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஐநாமஉ பேரவையில் 2014 இல், நிறைவேற்றப் பட்ட தீர்மானம் இலங்கைபற்றி விரிவான விசாரணையை நடத்துமாறு கேட்டுக் கொண்டது. இந்த தீர்மானங்களை இலங்கை அரசு கடுமையாக எதிர்த்தது.
2015 இல், மங்கள சமரவீர வெளிநாட்டு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அரசு இணை அனுசரணை அளித்தது. இதன் காரணமாக தீர்மானம் 30 -1 வாக்களிப்பின்றி நிறைவேற்றப் பட்டது. 2019 இல் ஆட்சிக்கு வந்த சனாதிபதி கோட்டாபய 2015 ஆம் ஆண்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட னன தீர்மானத்தை இனி மதிக்கப் போவதில்லை என அறிவித்தார்.
2022 ஒக்தோபர் 08 இல் நிறைவேற்றப்பட்ட “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தீர்மானம் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் பற்றி மட்டுமல்ல ஊழல் ஒழிப்பு, நாட்டில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு ஒரு பொருள் பொதிந்த அரசியல் தீர்வை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தீர்மானத்ரதுக்கு 20 நாடுகள் ஆதரவாகவும் 7 நாடுகள் எதிராகவும் 15 நாடுகள் வாக்களிக்காது நடுநிலமை வகித்தன.
இது 2009 மற்றும் 2021 க்கு இடையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்போடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இலங்கை அரச வியத்தகு ஆதரவை இழந்ததைக் சுட்டிக்காட்டுகிறது, அரசாங்கத்தை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 2009 இல் 47 இல் 29 இல் இருந்து, 2022 இல் 47 இல் 7 ஆகக் குறைந்தது. ஐநாமஉ பேரவையில் 47 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்களை உள்ளடக்கிய இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் ஆதரவை இலங்கை அரசு இழந்துள்ளது. கீழ்க்கண்ட அட்டவணை 1 ஐநாமஉ பேரவையில் 2009 இல் இருந்து 2022 ஆண்டுவரை இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு விபரங்களைத் தருகிறது.
அட்டவணை 1
தீர்மானங்களுக்கான ஆதரவும் எதிர்ப்பும் 2009 – 2022
2009 | 2012 | 2013 | 2014 | 2015/ 2017/ 2019 | 2021 | 2022 | |
இலங்கை அரசுக்கு ஆதரவு | 29 | 15 | 13 | 12 | வாக்களிப்பு நடைபெறவில்லை (ஒருமனதான தீர்மானம்) | 11 | 7 |
இலங்கை அரசுக்கு எதிர்ப்பு | 12 | 23 | 25 | 23 | 22 | 20 | |
நடுநிலமை | 6 | 9 | 9 | 12 | 14 | 14 |
பொருளாதார நெருக்கடியில் மனித உரிமைகள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்தும் புதிய தீர்மானம் கவனம் செலுத்தியுள்ளது. இந்தியா, யப்பான், இந்தோனேஷியா, கத்தார் மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 20 நாடுகள் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வாக்களிக்கவில்லை.
“இது ஒன்றும் எதிர்பாராதது. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு சில நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனவே நாங்கள் இதை முன் கூட்டியே அறிந்திருந்தோம். அமைப்பின் அமைப்பு மாறிவிட்டது, சில நட்பு நாடுகள் அங்கு இல்லை, சில விலகிவிட்டன” என்று அமைச்சர் அலி சப்ரி வாக்களிப்பு முடிந்தவுடன் கூறினார். இது விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்று சொன்னவன் கதையாக இருக்கிறது.
அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறுகையில் “இது 2009 ஆம் ஆண்டிலிருந்து (ஐநாமஉ பேரவையின்) நிகழ்ச்சி நிரலில் உள்ளது. உள்நாட்டில் நாம் ஒரு வலுவான உண்மையைத் தேடும் பொறிமுறையைக் கொண்டு வர வேண்டும். இதை 2009 ஆம் ஆண்டிலிருந்து வேறு எந்த நாடும் நமது உள் விவகாரத்தில் தலையிடாத அளவிற்குச் செய்திருக்க வேண்டும். எங்கள் நாட்டுக்கு எதிராக முன்மொழியப்பட்ட இந்த வரைவு தீர்மானம் பற்றிய அசாதாரணமான யோசனை, பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும். இதை அனுமதித்தால் இது மிகப்பெரிய ஆபத்தாக மாறும். இந்த தீர்மானத்தின்படி திட்டங்களை செயல்படுத்துவதாக இருந்தால், அதற்காக 2.8 மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி தேவை.” என்றார்.
இதுகாலவரை ஐநாமஉ பேரவை நிறைவேற்றிய தீர்மானங்கள் போல் அல்லாது புதிய தீர்மானம் மிகவும் கடினமானது. பன்னாட்டு வணிகத்தை கையாள் வதற்கான பலத்தை இலங்கை மேலும் இழக்கும். அல்லது தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் நாடு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், ஐரோப்பிய ஒன்றியம் தனது GSP பிளஸ் வாணிப சலுகையைத் திரும்பப் பெறப் போவதாக ஏற்கனவே அச்சுறுத்தியுள்ளது. ஐரோப்பாவின் GSP பிளஸ் போன்ற வாணிக சலுகைகள் பல முக்கிய மரபுகள், மனித உரிமை களுடன் நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருபத்தாறு ஆண்டுகால யுத்தம் 2009 இல் முடிவடைந்த பின்னர் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக இப்போது நிறைவேற்றப்பட்ட ஐநாமஉ பேரவையின் தீர்மானம் 7 ஆவது தீர்மானமாகும். தீர்மானம் 30 -1 க்கு ஒத்துழைக்க இலங்கை முடிவு செய்ததால் 2015 இல் வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி மற்றும் ஊழல் போன்றவற்றிலிருந்து மீள்வதற்கு அனைத்து வெளிநாட்டு நாடுகளின் ஆதரவையும் இலங்கை நாடியுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் மற்றும் சனாதிபதி அவர்களின் பொருளாதார முறையற்ற நிர்வாகத்தின் பின்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இந்தப் புதிய தீர்மானம் வந்துள்ளது.
புதிய தீர்மானம், இலங்கையின் முன் எப்பொழுதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு காரணமான மூல காரணங்களை நிவர்த்தி செய்வதன் அவசியத்தை கோடிட்டுக் காட்டுகிறது. மனித உரிமைகளை ஊக்குவித்தல், பாதுகாத்தல் மற்றும் ஊழலைத் தடுப்பது மற்றும் எதிர்த்துப் போராடுவது ஆகியவை பரஸ்பரம் வலுவூட்டுகின்றன என்பதையும் இது அங்கீகரிக்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் Volker Turk தனது அறிக்கையில் இராணுவ செலவினங்களைக் கணிசமாகக் குறைக்கவும், ஊழலைத் தீர்க்கமான முறையில் சமாளிக்கவும், சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் மக்கள் நல்வாழ்வு, சமூகப் பாதுகாப்பு மற்றும் கல்வியில் முதலீடுகளை அதிகரிக்கவும், பன்னாட்டு நிதி உதவித் திட்டங்களின் சாத்தியமான மனித உரிமைகள் தாக்கத்தை மதிப்பீடு செய்யவும் மற்றும் அதைக் குறைக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளார்.
மேலும் பழிவாங்கல் அல்லது கைதுக்கு அஞ்சாமல் மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் எதிர்ப்பு தெரிவிக்கவும், தங்கள் கருத்துக்களை வெளிப் படுத்தவும் முடியும் என்பதை உறுதிப்படுத்தவும் அண்மையில் நடந்த போராட்டங்களில் பங்கேற்ற அல்லது ஆதரித்ததாக நம்பப்படும் நபர்களை துன்புறுத்துதல், மிரட்டுதல் மற்றும் தன்னிச்சையாக கைது செய்வதை நிறுத்துதல்; மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத் தினருக்கு எதிரான அனைத்து வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் ஆணையர் கேட்டுக் கொண்டார்.
உலக வாணிக அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளுக்கான (ஜெனீவா) ஐக்கிய இராச்சிய தூதரும் நிரந்தரப் பிரதிநிதியுமான சைமன் மேன்லி, தீர்மான உரை பெரும்பாலும் கடந்த ஆண்டு தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் கடந்த காலத்தின் சில முக்கிய முன்னேற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப் பட்டுள்ளது என்றார். 18 மாதங்கள் பொருளாதார நெருக்கடி, வெகுமக்கள் எதிர்ப்புக்கள் மற்றும் அரசாங்க மாற்றம் உட்பட, இவை அனைத்தும் நாட்டின் மனித உரிமைகள் நிலைமையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தீர்மானத்தில் உள்ள முக்கிய கோரிக்கைகள், கடந்த ஆண்டு தீர்மானத்தில் தொடங்கப்பட்ட பணிகளைத் தொடர முயல்கின்றன. இது உயர் ஆணையர் அலுவலகத்திற்கு நீதித்துறை மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தகவல்களைச் சேகரிக்கவும், ஒருங்கிணைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் பாதுகாக்கவும் வழி கோலியுள்ளது.
“கடந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கையின் உள்நாட்டு சட்டப் பொறிமுறைகளால் ஏற்பட்ட முன்னேற்றம் இல்லாததால் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது” என்றார்.
ஐநாமஉ பேரவையின் தீர்மானம் இலங்கை மீதான பன்னாட்டு விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதிப் பிராந்திய பணிப்பாளர் தினுஷிகா திஸாநாயக்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ஆதரிக்குமாறு அனைத்துலக நாடுகளைக் தாங்கள் கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பழிவாங்கல் அல்லது கைதுக்கு அஞ்சாமல் மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் போராட்டம் நடத்தவும், தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் முடியும் என்பதை உறுதிப்படுத்தவும்; சமீபத்திய போராட்டங்களில் பங்கேற்ற அல்லது ஆதரித்ததாக நம்பப்படும் நபர்களை துன்புறுத்துதல், மிரட்டுதல் மற்றும் தன்னிச்சையாக கைது செய்வது, மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிரான அனைத்து வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்தியா வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தாலும் ஐ.நாட்டுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதுவர் இந்திராணி பாண்டே அவர்களின் உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது. ” இலங்கைத் தமிழர்களின் நியாயமான வேட்கைகளான செழிப்பு, கண்ணியம் மற்றும் சமாதானத்தை வழங்குவதன் மூலம் இலங்கையின் சகல மக்களும் செழிப்பாக வாழலாம். இவை இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும்” என அவர் தெரிவித்தார். உடனடி அண்டை நாடாக, 2009 க்குப் பிறகு இலங்கையில் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கு இந்தியா “கணிசமான பங்களிப்பை” வழங்கியதுடன், சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் சவால்களை எதிர்கொள்ள இலங்கை மக்களுக்கு “முன்னோடியில்லாத உதவிகளை” வழங்கியது. 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தி அதன் மூலம் பொருள் பொதிந்த அதிகாரப்பகிர்வு, மற்றும் மாகாணத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துதல் ஆகியவை தொடர்பான உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்புகளை இந்தியா “கவனித்துக்கொண்டுள்ளது” என்று திரு. பாண்டே கூறினார்.
“இலங்கையில் அதிகாரப் பகிர்வு, தீர்மானத்திலும் குறிப்பிடப்பட்ட ஒரு சிக்கல், நோக்கிய முன்னேற்றம் போதுமானதாக இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். அதற்கிணங்க, இந்த உறுதிமொழிகளை விரைவாக செயல்படுத்துவதற்கு அர்த்தமுள்ள வகையில் செயல்படுமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் இந்திய இராசதந்திரி கூறினார்.
இந்தியாவின் வேண்டு கோள்களை இராசபக்ச ஆட்சி நிராகரிதது போலவே சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. தமிழர்களுக்குத் சொந்தமான காணிகள் அபகரிப்பு, அபகரித்த காணிகளை விடுவிக்க மறுத்தல், பவுத்த மத மரபு சின்னங்கள் என்ற போர்வையில் இந்துக் கோயில்களுக்கு நெருக்கடி கொடுத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
இலங்கை ஆட்சியாளரிடம் காணப்படும் தீவிர இனவாதம், மதவாதம், மொழிவாதம் காரணமகாவே பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து அந்த நாடு ஒட்டாண்டி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது தெரிந்தும் சிங்கள – பவுத் பேரினவாதிகள் அவற்றைக் கைவிட அணியமாக இல்லை. (கனடா உதயன் 14-10-2022)
Leave a Reply
You must be logged in to post a comment.