‘பொன்னியின் செல்வன்’ என்றால் ராஜராஜ சோழனா? உண்மை என்ன?

‘பொன்னியின் செல்வன்’ என்றால் ராஜராஜ சோழனா? உண்மை என்ன?
  • பிரசாந்த் முத்துராமன்
  • பிபிசி தமிழ்

29 செப்டெம்பர் 2022

பொன்னியின் செல்வன் என்ற பெயருள்ள அருண்மொழி வர்மன் வேடத்தில்
படக்குறிப்பு,அருண்மொழி வர்மன் வேடத்தில்

பொன்னியின் செல்வன் திரைப்படம் நாடு முழுக்க பல்வேறு மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது. சோழப்பேரரசில் நெடும்புகழ் வாய்ந்த பேரரசனாகப் அறியப்படும், ராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கு முந்தைய காலத்தை அடிப்படை களமாகக் கொண்டு உருவான பொன்னியின் செல்வன் எனும் நாவல்தான் இந்த திரைப்படத்துக்கு அடித்தளம்.

ஆனால், வாசகர்களுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் இடையில் ஒரு வாக்குவாதத்தை எப்போதும் இளஞ்சூட்டோடு வைத்திருக்கும் களமாகவே பொன்னியின் செல்வன் நாவல் இருந்திருக்கிறது. இந்த வரிசையில், இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படமும் இணைந்துள்ளது.

பொதுவாக, திரைப்படத்தின் காட்சிகளுக்கும் நாவலின் கதைக்கும் முரண் இருக்கும். அது வரலாறு என்றோ முற்றிலும் உண்மை என்றோ சொல்லப்படாத வரை சிக்கலில்லை. ஆனால், அவற்றைக் கடந்து ‘பொன்னியின் செல்வன்’ என்றால் ராஜராஜ சோழனா என்ற வரலாற்றுபூர்வ கேள்விக்கு விடை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஏன் இந்த புரிதல் தேவை?

வரலாற்றைத் தழுவி ஏற்கனவே கற்பனைகளுடன் எழுதப்பட்ட ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் பொன்னியின் செல்வன். இன்னும் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்தத் திரைப்படம் ஒரு ‘தழுவலின் தழுவல்’ என்று கொள்ளலாம்.

சோழர் வரலாற்றைத் தேடும் வரலாற்று நூலாக, பொன்னியின் செல்வனைப் பார்க்கும் வாசகர்களும் இணையவெளிகளில் பொன்னியின் செல்வன் நாவலை மேற்கோள்காட்டி வரலாறு பேசும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த அறிவிப்புக்குப் பிறகு, இந்த வாத, பிரதிவாதங்கள் அதிகரித்துள்ளன. இதில் ராஜராஜ சோழனை ராஜராஜ சோழன் என்று குறிப்பதற்கு பதிலாக பொன்னியின் செல்வன் என்று குறிப்பிட்டு எழுதப்பட்ட பதிவுகளை நீங்களும் பார்த்திருக்கக் கூடும். இதற்குக் காரணம், பொன்னியின் செல்வன் என்றால் ராஜராஜசோழன் என்று நம்பப்படுகிறது. நாவல் அப்படித்தான் சொல்கிறது.

ஆனால், உண்மை இதிலிருந்து வேறாக இருக்கிறது.

சிவப்புக் கோடு
உலவும் கதைகள் என்ன?

அருள்மொழித்தேவன் என்ற இயற்பெயர் கொண்ட ராஜராஜ சோழனுக்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களில் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரும் ஒன்று என்று சொல்லப்படுகிறது.

அதேபோல, ‘பொன்னி’ என்பது காவிரி நதியைக் குறிக்கும் இன்னொரு பெயர். அருள்மொழித்தேவன் சிறுவனாக இருந்தபோது பொன்னி நதியில் தவறி விழுகிறார். அப்போது பொன்னி நதியே காப்பாற்றி தந்ததால் ‘பொன்னியின் செல்வன்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக பொன்னியின் செல்வன் கதை தெரிவிக்கிறது. (இது கதையின் ஒரு பகுதிதான்)

மேலும், கதையின் போக்கில் பல இடங்களில் அருள்மொழித்தேவர் ‘பொன்னியின் செல்வரே’ என்று அழைக்கப்படுகிறார். இதுவும் அவரை பொன்னியின் செல்வன் என்ற பெயருக்கு சொந்தக்காரர் என்று நம்புவதற்கு காரணமாக அமைகிறது.

ராஜராஜ சோழனின் ஓவியம்
படக்குறிப்பு,ராஜராஜ சோழனின் ஓவியம்

கதையில் கதாபாத்திரத்துக்கு பெயர் வைப்பதும் பட்டம் சூட்டுவதும் கதாசிரியரின் கற்பனைக்குட்பட்டவை அதில் நாம் ஏதும் சொல்லத்தேவையில்லை. ஆனால், உண்மையில் ராஜராஜ சோழனுக்கு பொன்னியின் செல்வன் என்று ஏதும் பெயருண்டா என்று தேடி அறிந்து கொள்ள முடியும்.

உண்மை என்ன?

தமிழ்நாட்டில் மையம் கொண்டு ஆட்சி செலுத்திய அரசுகளில் சோழப்பேரரசு குறிப்பிடத்தகுந்தது. அதிலும் விஜயாலய சோழனுக்கு பிறகு (முதலாம் ஆதித்தன்) துவண்டு போயிருந்த சோழ சாம்ராஜயத்தை மீண்டும் பெருமிதமிக்க வழியில் நடத்திய மன்னனான ராஜராஜ சோழனின் காலம் ஒரு பொற்காலம் என்று வரலாற்றாசிரியர் நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய சோழர்கள் நூல் குறிப்பிடுகிறது.

ராஜராஜசோழன் தன் ஆட்சிக்காலத்தில் உருவாக்கிய திட்டங்கள், பங்குபெற்ற போர்கள், அரச பரம்பரை ஆகியவற்றைப் பொறுத்து தனித்துவமிக்க விருதுப்பெயர்களாலும் பட்டங்களாலும் வழங்கப்படுவதுண்டு. இது எல்லா மன்னர்களுக்கும் பொருந்தும். சில சமயங்களில் ஒரே விருதுப்பெயர் இருவேறு மன்னர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதால் ஆய்வில் குழப்பங்கள் ஏற்படுவதும் உண்டு.

அந்த வகையில், ‘தலை கொண்ட சோழன்’ என்ற விருதுப்பெயர் கொண்ட சோழ மன்னன் யார் என்பது வரலாற்றாசிரியர்கள் இன்று வரை ஐயந்திரிபற அவிழ்த்து முடிக்காத முடிச்சு.

ஆனால், பொன்னியின் செல்வன் நாவலின் கதைப்படி, அந்த விருதுப்பெயருக்குரியவர் ஆதித்த கரிகாலன் என்று கதை நகர்கிறது. ஆனால், அது முழுவதும் ஏற்கப்பட்ட அல்லது இறுதியான முடிவு அல்ல.

நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய சோழர்கள் நூல் குறிப்பிடுகிறது.

இப்படித்தான், கதையின்போக்கில் சொல்லப்பட்ட பொன்னியின் செல்வன் என்ற பெயரும் ராஜராஜ சோழனின் பெயர் என்று நம்பப்படுகிறது. ஆனால், மெய்க்கீர்த்திகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் என எந்த சான்றின்படியும் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரால் ராஜராஜ சோழன் குறிக்கப்படவில்லை என்று உணர்த்துகிறது சோழர்கள் நூல்.

1951ஆம் ஆண்டு வெளியாகத் தொடங்கியது பொன்னியின் செல்வன் தொடர். 1935ஆம் ஆண்டு வெளியான நீலகண்ட சாஸ்திரிகளின் ‘சோழர்கள்’ நூலில் ராஜராஜ சோழனின் பட்டங்கள் விருதுகள் குறித்துப் பேசும்போது எந்த இடத்திலும் பொன்னியின் செல்வன் என்று அவர் அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.

கல்கி எழுதிய பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆகிய நூல்களின் அடிப்படையில் சோழர் கால கல்வெட்டுகள் மீதான ஆர்வம் அதிகரித்தது. அந்த காலகட்டத்தில் சோழர்கள் வரலாற்றை வெளிக்கொண்டு வந்தவர்களில் ஒருவராக நீலகண்ட சாஸ்திரிகள் அறியப்படுகிறார். 1935இல் வெளியான இந்த நூலையும் அடிப்படையாகக் கொண்டுதான் பின் நாட்களில் பொன்னியின் செல்வனை எழுதினார் கல்கி.

ஆய்வாளர் இராசமாணிக்கனார் எழுதிய ‘சோழர் வரலாறு’ நூலிலும் ராஜராஜ சோழனை பொன்னியின் செல்வன் என்று குறிப்பிடப்பட்டதற்கான சான்றுகள் இல்லை.

மா.ராசமாணிக்கனாரின் சோழர்கள் வரலாறு நூல்
படக்குறிப்பு,மா.ராசமாணிக்கனாரின் சோழர்கள் வரலாறு நூல்

இந்திய தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்படுத்தப்பட்ட, எஸ்.ஆர். பாலசுப்ரமணியத்தின் இடைக்காலச் சோழர்கள் (முதலாம் ராஜராஜன் தொடங்கி முதலாம் குலோத்துங்கன் வரை) குறித்த நூல் ராஜராஜனின் பட்டப்பெயர்களைப் பட்டியலிடுகிறது.

அந்த ஆவணத்தின்படி, “அருள்மொழி (தேவன்) என்ற இயற்பெயர் கொண்ட ராஜராஜ சோழன் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறார். ஷத்ரிய சிகாமணி, ராஜேந்திர சிம்மன், உய்யக்கொண்டான், பாண்டிய குலசானி, கேரளாந்தகன், நித்தவினோதன், ராஜஸ்ராயன், சிவபாத சேகரன், தெலுங்க குல காலன், ஜனநாதன், ரவிகுல மாணிக்கம், நிகரிலி சோழன், சோழேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், ராஜ மார்த்தாண்டன், சோழ நாராயணன், கீர்த்தி பராந்தகன், மும்முடி சோழன், ஜெயங்கொண்ட சோழன், சிங்களாந்தகன்” ஆகிய பெயர்கள் ராஜராஜனின் பட்டப்பெயர்களாக பட்டியலிடப்படுகின்றன.

இந்திய தொல்லியல் துறை நூலகத்திலிருந்து -1975ல் வெளியான நூல்
படக்குறிப்பு,இந்திய தொல்லியல் துறை நூலகத்தில் இருந்து

இதிலும் ‘பொன்னியின் செல்வன்’ என்று எந்த பெயரும் இடம்பெறவில்லை.

இது நாவலுக்காக அவர் (கல்கி) வைத்துக்கொண்ட பெயர் அவ்வளவே. இதுவரை தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுகள், சோழர் வரலாற்றுக்கான செப்பேடுகள் ஆகிய எதிலும் பொன்னியின் செல்வன் என்று கிடைத்ததில்லை என்கிறார் தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் சொ. சாந்தலிங்கம்.

மேலும், “இதுவரையிலான ஆய்வுகளின்படியும் அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ராஜராஜனின் பட்டப்பெயர்கள், விருதுப்பெயர்களின்படியும் ராஜராஜ சோழனுக்கு பொன்னியின் செல்வன் என்று பெயர் இருந்ததாக கண்டறியப்படவில்லை.” என்றும் தெரிவித்தார்.

‘கதையை’ கதை ஆக மட்டுமே பார்க்க வேண்டும். இந்த திரைப்படத்தின் பின்னணியில் ஏராளமான தகவல்கள் பரவி வருகின்றன.

ஈழத்தை இலங்கை என்று சொல்வது, அருண்மொழி, வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன் மூவரும் இணைந்து வருவது, வேலிக்காத்தான் முட்செடிகள் இடம்பெறும் காட்சிகள் என இந்தத் திரைப்படத்தில், நாவலில் இருந்து வேறுபடும் காட்சிகளை ‘வாசக ரசிகர்கள்’ குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆனால் நமக்கு வேண்டிய புரிதல் ஒன்றே ஒன்றுதான்.

நாவல், திரைப்படம் இரண்டில் எதுவாக இருந்தாலும் சரி, அதன் காட்சிகளும் சம்பவங்களும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையில் ராஜராஜ சோழனுக்கு பொன்னியின் செல்வன் என்று பெயர் இல்லை. இனி யாராவது உங்களிடம் பொன்னியின் செல்வன் என்று சொன்னால் நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டியது ஜெயம் ரவியின் வேடத்தைத்தான். ராஜராஜ சோழனை அல்ல.YouTube பதிவை கடந்து செல்ல, 1காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்.

நாவல், திரைப்படம் இரண்டில் எதுவாக இருந்தாலும் சரி, அதன் காட்சிகளும் சம்பவங்களும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையில் ராஜராஜ சோழனுக்கு பொன்னியின் செல்வன் என்று பெயர் இல்லை. இனி யாராவது உங்களிடம் பொன்னியின் செல்வன் என்று சொன்னால் நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டியது ஜெயம் ரவியின் வேடத்தைத்தான். ராஜராஜ சோழனை அல்ல.

https://www.bbc.com/tamil/arts-and-culture-63072918

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply