நோய், நோய்வருதற்குக் காரணம் அந்நோய் தீர்க்கும் நெறியையும் சரியாகப் பின்பற்றி நோயாளியை குணப்படுத்த வேண்டும்!

நோய், நோய்வருதற்குக் காரணம் அந்நோய் தீர்க்கும் நெறியையும் சரியாகப் பின்பற்றி நோயாளியை குணப்படுத்த வேண்டும்!

 நக்கீரன்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது.

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது அது அவ்வை சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது.

இது கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய  தத்துவப் பாடல் வரிகள். இசை எம்எஸ் விசுவநாதன். பாடியவர் ரிஎம் சவுந்தரராசன். இயக்குநர் வி சீனிவாசன். படம் சூரியகாந்தி. ஆண்டு 1973. இன்றைய இலங்கை அரசியலைப் பார்க்கும் போது  இந்தப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.  இதில் யார் அந்தப் பாம்பு? யார் அந்தக் கருடன்?

Sri Lanka : Dhammika Perera sworn in as Member of Parliament

நிதியமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் இரணில் விக்கிரமசிங்க பதவி  விலக வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா போர்க்கொடி தூக்கியுள்ளார். சாதாரணமாக பிரதமர்தான் அமைச்சர் ஒருவரைப் பதவி விலகுமாறு கேட்பார்.

“இலங்கையின் நிதியமைச்சர்,  பேரழிவிற்குத் திட்டமிட்டுள்ளார் என சாடிய அமைச்சர் பெரேரா, பணப்புழக்கத்தை அதிகரிப்பது, மக்களுக்கு உணவளிப்பது, டொலர்களைக்  கொண்டு வருவது, டொலர் வருமானம், கடன் வாங்குதல்,  கிடைக்கக்கூடிய அத்தியாவசிய உணவுக் கடன்கள் மற்றும் பிற கடன் வரிகள் அனைத்தையும் பிரதமர் தடுத்து வருகிறார்.

“இன்று முதல் அரகலயாவில் இணைகிறேன். நான் ஏழு நாட்கள் அரசாங்கத்தில் இருக்கிறேன். நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். நிதியமைச்சர் என்ற முறையில் தனது அரசியல் விளையாட்டை பிரதமர் நிறுத்த வேண்டும். இரணிலுக்கும் அவரது பொருளாதார நிபுணர்களுக்கும் பகிரங்க ஊடக விவாதத்திற்கு வருமாறு நான் அறைகூவல் விடுகிறேன். ஒருவேளை அவர் என் கேள்விகளுக்குப் பதிலளிக்கலாம். நான் அவரை 2019 இல் ஒரு விவாதத்திற்கு வருமாறு  சவால் விடுத்தேன், அவர் ஓடிவிட்டார். நான் அவருக்கு மீண்டும் அறைகூவல் விடுகிறேன்” என்று அமைச்சர் கடுமையாக பிரதமரைச் சாடினார்.  இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது தெரிந்ததே.

தம்மிக்க பெரேராவின் தாக்குதலுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்வினையாற்றுமாறு எதிர்கட்சியினரிடம் கேட்டபோது அதற்கு பதிலளிக்காமல் பிரதமர் விக்கிரமசிங்க  பின்வாங்கிவிட்டார்.

யூன் 09  அன்று முன்னாள் நிதியமைச்சர் பசில் இராசபக்ச தனது நா. உ பதவியை விட்டு விலகினார். இதனால் நாடாளுமன்றத்தில்  ஒரு வெற்றிடம் இருந்தது. தம்மிக்க பெரேரா  10 யூன் அன்று பொதுசன மக்கள் முன்னணியில் (SLPP) உறுப்பினராகச் சேர்ந்தார்.  இரண்டு வாரம் கழியும் முன்னர்  22 யூன் 2022  அன்று தேசியப் பட்டியல் நா.உ ஆக நாடாளுமன்ற அவைத் தலைவர் அவர்களால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து  முதலீடு மற்றும் ஊக்குவிப்பு  அமைச்சராக சனாதிபதியால் நியமிக்கப் பட்டார். இது போன்ற அமைச்சுப்  பதவி முன்னர் இருக்கவில்லை. இவருக்காகவே அது உருவாக்கப்பட்டது!  இவரது நாடாளுமன்ற வருகை நாடாளுமன்றத்தில்  பதற்றத்தையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது.

யார் இந்த தம்மிக்க பெரேரா? இலங்கையின் மிகப் பெரிய பணக்காரர்களில் இவர் ஒருவர்.  சூதாட்ட மன்னன் (casino king) என அழைக்கப்படுகிறார். இராசபக்சே குடும்பத்துக்கு நெருங்கிய கூட்டாளி ஆவர்.  பல தொழில் நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குதாரராக இருக்கிறார். 09 யூன் அன்று பிரதமர் மகிந்த இராபக்சா தனது பதவியில் இருந்து விலகிய பின்னர் நிதியமைச்சின் செயலாளர் பதவிக்கு அவர் காய்களை நகர்த்தியிருந்தார்.  அமைச்சகம் சார்ந்த இலக்குகள் மற்றும் சாலை வரைபடங்களுடன் நாட்டிற்கான பொருளாதார வளர்ச்சி உத்தி மற்றும் செயல் திட்டத்தையும் அவரது இணையதளம் விளம்பரப்படுத்தியது. இவர் மீது  வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுகள் இருந்தன. அமைச்சர் பதவியை ஏற்கு முன்னர் நிலுவையில் இருந்த பெருந்தொகை வருமான வரியை அரசுக்குச் செலுத்தியிருந்தார்.

Protests in Sri Lanka after Dhammika Perera was slated to be the new Minister of Technology | Photo by Riyal Riffai

தம்மிக்க பேரேரா  அமைச்சராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து  12 யூன்  அன்று அவரது வீட்டிற்கு வெளியே போராட்டங்கள் நடந்தன, கலகத் தடுப்புப் பொலிசார் மற்றும் இராணுவம் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

இப்போது யார் அந்த பாம்பு, யார் அந்த கருடன் என்பது வாசகர்களுக்கு விளங்கியிருக்கும். இராசபக்சாவின் குடும்பத்தின் ஆசீர்வாதம்தான் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க பதவி விலகவேண்டும் என அவரைப் பொதுவெளியில் பேச வைத்துள்ளது.  பொதுவாக அமைச்சர்தான் பிரதமரின் தயவில் தங்கியிருப்பார். இங்கு பிரதமர் இரணில் விக்கிரமசிங்க சனாதிபதி மற்றும் அமைச்சர்களின் தயவில்  தங்கியிருக்கிறார்.

உண்மை என்னவென்றால் இரணில் விக்கிரமசிங்க மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. சனாதிபதி இராசபக்ச பிரதமர் பதவியை இரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க முன்வந்தபோது விக்கிரமசிங்க அதற்காகக் காத்திருந்தவர் போல் நாலு கால் பாய்ச்சலில் போய் ஏற்றுக் கொண்டார்.  பொதுசன முன்னணியின் நாடாளுமன்றக் குழுவின் நிபந்தனையற்ற ஆதரவு தனக்கு இருக்க வேண்டும்  என்ற உறுதி மொழியைய் கூட அவர் பெறவில்லை. இதனால் அவர் பெரிய அவமானத்துக்குள்ளாக நேரிட்டுள்ளது!

இதற்கிடையில் இலங்கையில் உள்ள மல்வத்தை, அஸ்கிரிய, இராமண்ணா மற்றும் அமரபுர பவுத்த பீடங்களைச் சேர்ந்த  நான்கு  மகாநாயக்கர்கள் தேரர்கள் கோட்டாபய இராசபக்சவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.  கடந்த 02 யூலை அன்று வெளியிட்ட அறிக்கையில் சனாதிபதி கோட்டாபய இராசபக்ச  அனைத்துக் கட்சி  இடைக்கால அரசாங்கத்தை 6 மாத காலத்துக்கு அமைக்குமாறு  கேட்டிருக்கிறார்கள்.

“அரசியல் தவறான நடத்தைகளை நிறுத்தி நேர்மையாக இருங்கள் மற்றும் ஆறு மாத காலத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து அனைத்துக் கட்சி அரசாங்கத்தை நியமிக்கவும்” என்று மதத் தலைவர்கள் யூலை 02 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க சனாதிபதி துரிதமாக செயற்பட வேண்டும் என வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே சுமங்கல தேரர், வரகாகொட ஞானரதன தேரர், தொடம்பஹல சந்தசிறி தேரர் மற்றும் வணக்கத்துக்குரிய மகுலேவே விமலாபிதான தேரர் ஆகியோர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

பவுத்த பிக்குகள் சனாதிபதி கோட்டாபய அரசியல் விளையாட்டுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியதோடு, “நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண நேர்மையான முயற்சிகளை” மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

சிக்கல்களுக்கு புதிய அமைச்சரவை தீர்வாகாது என்றும் உரிய தீர்வு இன்றேல், சங்க கட்டளையைப்  பிறப்பிக்கப்போவதாகவும் அவர்கள் எச்சரித்திருந்தனர். மேலும் ஆயிரம் பவுத்த தேரர்களை ஒன்று திரட்டி தலைநகரை முற்றுகை இடப்போவதாக எச்சரித்துள்ளனர். இது மகாநாயக்க தேரர்கள் கடந்த  ஏப்ரில் மாதம் சனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் நாட்டை  அரசியல், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும், பிரதமர் மகிந்த இராசபக்ச தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் கேட்டிருந்தனர். இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இந்தப் பவுத்த மகாநாயக்க தேரர்கள் சனாதிபதி கோட்டாபய பதவி விலக வேண்டும் என்று கேட்கவில்லை. என்ன காரணம்?

காரணம் பிரதமர் மகிந்த இராசபக்சாவை விட சனாதிபதி கோட்டாபய இராசபக்ச தீவிர சிங்கள் – பவுத்த தேசியவாதியாகப் பார்க்கப்படுகிறார். குறிப்பாக இந்த மகாநாயக்க தேரர்கள் நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி முறைமை நீடிக்க வேண்டும் அதனை ஒழிக்கக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி பதவியை ஒழித்தால் 13 ஏ திருத்தத்தின் கீழ் சனாதிபதிக்கும் அவரது முகவரான மாகாண ஆளுநருக்கும் இப்போது இருக்கும் அதிகாரங்கள் பறிபோய்விடும். இது மாகாணசபைக்குப் பதில் வடக்கிலும் கிழக்கிலும் இணைப்பாட்சி உருவாகிவிடும் என்பது இந்த மகாநாயக்கர்களது நிலைப்பாடாகும்.

இது இவ்வாறிருக்க  எதிர்வரும் 09 யூலை அன்று கொழும்பு சுற்றி வளைக்கப்படும் என எதிர்க்கட்சிகள், பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மற்றும் காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருக்கும் போராளிகள் அறிவித்துள்ளனர்.  அவர்களை எதிர்கொள்ள அரசாங்கம் இராணுவம் மற்றும் காவல்துறையை கொழும்பில் குவித்து வருகிறது.

இலங்கைக்கு பெரும் செக் வைத்த இந்தியா | India Gave A Big Check To Sri Lanka

இதற்கிடையில் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரம் அடைந்துள்ளது. மக்கள் எரிபொருள், டீசல், மண்ணெண்ணை போன்றவற்றுக்கு நாட்கணக்கில் எரிபொருள் விற்பனை நிலையங்களில் தவம் கிடக்கிறார்கள். மின்சார வெட்டு மணிக்கணக்கில் நீள்கிறது. இதனால் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. சில நீதிமன்றங்களில் தடையுத்தரவையும் வாங்கியுள்ளன.

எரிபொருட்களோடு கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர சொல்கிறார். ஆனால் அவை வந்தபாடில்லை. வந்தாலும் அதற்குரிய கொடுப்பனவைச் செலுத்த   டொலர் கைவசம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

இந்தியா இதுவரை இலங்கைக்கு 3.5 பில்லியன் டொலரை கடனாகக் கொடுத்துள்ளது. அதில் ஒரு பகுதிதான் இந்தியாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்யப்பயன் படுத்தப்பட்டது. இதற்கு மேலும் நிதியுதவி செய்ய இந்தியா தயங்குகிறது. இப்போது எரிபொருளை வழங்குவதற்காக இந்தியா முன்கூட்டியே பணத்தை எதிர்பார்ப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கொடுத்த கடனுக்கு துணைஈடு (collateral) கேட்கிறது.

அனைத்துலக நாணய நிதியத்தோடு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்படிக் கிடைத்தாலும் அதற்குக் காலம் எடுக்கும். வாங்குகிற கடனை மீள அடைக்கும் வல்லமை – தாங்கிப் பிடிக்கும் திறன் (
sustainability)  இலங்கைக்கு இருக்கிறதா என்பதை நாணய நிதியம் ஆய்வு செய்கிறது.

அமெரிக்கா, பிரித்தானிய உட்பட மேற்குலக நாடுகளும் இலங்கைக்குக் கடன் கொடுக்கப் பின்னடிக்கின்றன.   “சமாதானத்தையும் உறுதித்தன்மையையும் கட்டியெழுப்ப, இலங்கையானது சட்டத்தின் ஆட்சி, அனைவருக்கும் மனித உரிமைகளுக்கான மரியாதை, சமமான பிரதிநிதித்துவம் மற்றும் வெளிப்படையான அரசாங்கம் போன்ற சனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டும்.”

இந்த சனநாயக விழுமியங்கள் வீழ்ச்சியடையும் போது, ​​​​தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் சுதந்திரமான செய்தித்தாள்கள்,  நாட்டின் தலைமை மற்றும்  அரசாங்கத்தை பொறுப்புக் கூற வைக்க வேண்டும். சீனாவும் கொடுத்த கடனை மீள்கட்டமைக்க அணியமாக இல்லை எனச் சொல்லிவிட்டது.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது யப்பானின் Taisei நிறுவனத்திடம் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கேட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று (யூலை 05) முன்வைத்த குற்றச்சாட்டை அடுத்து துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தனது பதவி விலகும் கடிதத்தை சனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு நாடு சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் மொழி, இன, மத பாகுபாடே முக்கிய காரணிகளாகும். அடுத்து குடும்ப ஆட்சி, ஊழல், உறவினர்களுக்குப் பதவிகள், வினைத்திறன் இன்மை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

ஒரு நோயாளியைக் குணப்படுத்த வேண்டும் என்றால் மருத்துவர் நோயினை ஆராய்ந்து நோய்வருதற்குக் காரணமும் ஆராய்ந்து அந்நோய் தீர்க்கும் நெறியையும் சரியாகப் பின்பற்றி நோயாளியை குணப்படுத்த வேண்டும். இல்லையேல் நோயாளி தப்பமாட்டார். (Canada Uthayan July 07, 2022)

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply