6 ஏக்கர்… 75 நாள்கள்… ரூ.2,13,000 நாட்டு எள்… நல்ல லாபம்!
மகசூல்
மக்களிடம் நல்லெண்ணெய் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், எள்ளுக்கான விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நல்ல விலை கிடைப்பதோடு மட்டுமல்லாமல், குறைவான தண்ணீர் மற்றும் பராமரிப்பில் எளிதாகச் சாகுபடி செய்ய முடியும் என்பதால், இயற்கை முறை எள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மணத்திடல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆலிவர், 6 ஏக்கரில் நாட்டு எள் சாகுபடி செய்து, வெற்றிகரமாக விளைச்சல் எடுத்துள்ளார்.
ஒரு பகல் பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். அறுவடை செய்த எள்ளை, சுத்தம் செய்து, எடை போட்டுக்கொண்டிருந்த ஆலிவர், மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘நான் சாகுபடி செஞ்சது நாட்டு ரகச் சிவப்பு எள். நல்லா முழிப்பாவும், திரட்சியாவும் இருக்கு. ரசாயன முறையில சாகுபடி செய்ற வீரிய ரக எள்ளைவிட, இதுல சுவையும் கூடுதலா இருக்கு. எண்ணெய் சத்தும் அதிகம். இதனால் என்னோட எள்ளுக்கு மக்கள்கிட்ட வரவேற்பு அதிகம்” எனச் சொன்னவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.
‘‘முதுகலை பொறியியல் பட்டப்படிப்புப் படிச்சிருக்கேன். எங்க அப்பா விவசாயி. அம்மா அரசுப்பள்ளி ஆசிரியை. எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். பள்ளிக்கூடம் போயிட்டு வந்த பிறகு, மத்த நேரங்கள்ல எல்லாம் எங்க அப்பாகூட வயல்லதான் இருப்பேன். இதுக்கிடையில எங்க அப்பா இறந்ததுனாலயும், நான் வெளியூர்கள்ல தங்கி இருந்து கல்லூரி படிப்பை படிச்சதுனாலயும், எங்க அம்மா தான் விவசாயத்தைப் பார்த்துக்கிட்டாங்க. அவங்களுக்கு விவசாயத்துல அனுபவம் அதிகம். பள்ளிக்கூட ஆசிரியையா வேலை பார்த்தாலும்கூட விவசாயத்தை விட்டுடக் கூடாதுங்கறதுல எங்க அம்மா ரொம்பவே உறுதியா இருந்தாங்க. எங்க அப்பா இறக்குறப்ப, எங்க குடும்பத்துக்கு ரெண்டு ஏக்கர் நிலம்தான் இருந்துச்சு. அதுக்குப் பிறகு எங்கம்மாவோட முயற்சியில 4 ஏக்கர் நிலம் வாங்கினோம். இந்தச் சூழ்நிலையிலதான், நான் பட்டப்படிப்பு முடிச்ச பிறகு, எங்க ஊர்லயே நிரந்தரமா தங்கி இருந்து, முழுநேரமா விவசாயத்தைக் கவனிக்க ஆரம்பிச்சேன். ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி பயன்படுத்திதான் நெல், எள்ளு, உளுந்து எல்லாம் சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தோம். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி… இதுக்கான செலவு அதிகமாகிக்கிட்டே இருந்துச்சு. இதனால் உழைப்புக்கேத்த லாபம் கிடைக்கலை. ஆனாலும்கூட, விரக்தி யோடு, ரசாயன விவசாயத்தைத் தொடர்ந்துகிட்டு இருந்தேன்.
என்னோட தாய் மாமா சென்னை யில வசிச்சுக்கிட்டு இருக்கார். முடிஞ்சவரைக்கும், அங்க கிடைக்குற இயற்கை விவசாய விளைபொருள் களைத்தான் வாங்கிச் சாப்பிடுவார். அவருக்கும் விவசாயத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனா, நான் இயற்கை விவசாயத்துக்கு மாற அவர் தான் முக்கியக் காரணம். அவர் கொடுத்த ஊக்கத்துனாலயும் தைரியத்துனாலயும்தான் கடந்த ரெண்டு வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். இப்போதைக்கு என்னால மாடுகள் வளர்க்குற சூழல் இல்லை. அதனால் இயற்கை இடுபொருள்களை மற்ற விவசாயிகள்கிட்ட இருந்து வாங்கிக்குறேன். ஆனால் அதேசமயம், மீன் அமிலம் மட்டும் நானே தயார் செஞ்சிக்குறேன்’’என்று சொன்னவர், எள் சாகுபடி அனுபவம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.
‘‘முன்னாடி ரசாயன முறையில வீரிய ரக எள் சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தப்ப, கொண்டைப் பூச்சித்தாக்குதல் பெரும் சவாலா இருக்கும். விதைப்பு செஞ்ச 25 நாள்களுக்குப் பிறகுதான் இந்தப் பிரச்னை அதிகமா இருக்கும். அதோட தாக்குதலால் செடிகளோட வளர்ச்சி தடைபடும். கிளைகளும் அதிகமா விடாது. இதைக் கட்டுப்படுத்த எங்க பகுதி விவசாயிகள் விதவிதமா பூச்சிக் கொல்லி அடிப்போம். ஆனாலும், முழுமையா கட்டுப்படுத்த முடியாது. இதனால் செலவு அதிகரிக்குறதோடு மகசூலும் குறையும். இதுக்கு அடுத்தபடியா, 35 – 50 நாள்கள்ல மாவுப்பூச்சியால் பாதிப்பு ஏற்படும். செடிகள் நல்லா செழிப்பா, அடர்த்தியா இருந்தால், அதோட தாக்குதல் அதிகமா இருக்கும். பிஞ்கள்லயும் காய்கள்லயும் ஓட்டைப் போட்டு, சாறை உறிஞ்சிடும். இதனால் எள்ளுல பொக்கு அதிகா இருக்கும். கொண்டைப்பூச்சி, மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த அதிகமா பூச்சிக்கொல்லி பயன்படுத்தக்கூடிய நிலங்கள்ல தேனீக் களோட வருகை தடைப்பட்டு, மகரந்த சேர்க்கை முழுமையா நடக்காது. இதனால் காய் விடுதல் பாதிப்பை கண்கூடா பார்க்கலாம். காய்கள் நெருக்கமா இல்லாமல், நிறைய இடைவெளி இருக்கும். ஆனால் நான் இயற்கை முறையில, நாட்டு ரக எள் சாகுபடி செய்றதுனால, கொண்டைப்பூச்சி, மாவுப்பூச்சி, காய் விடுதல் பிரச்னைகளே இல்லை.
எள் சாகுபடியைப் பொறுத்தவரைக்கும். அடியுரமா, எந்த இயற்கை இடுபொருள்களையும் கொடுக்குறதில்லை. சம்பா பட்டத்துல, நெல் சாகுபடிக்காக அடியுரமா, ஏக்கருக்கு 3 டன் மாட்டு எரு போடுவோம். அதுவே எள் சாகுபடிக்கும் போதுமானதா இருக்கு. எள் விதைப்பு செஞ்ச பிறகு பஞ்சகவ்யா, மீன் அமிலம், திறன்மிகு நுண்ணுயிர் திரவம், தேமோர் கரைசல் கொடுப்போம். பூச்சிகளைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையா, பத்திலை கஷாயம் தெளிப்போம். போன வருஷம் மாசிப் பட்டத்துல ஒரு ஏக்கர்ல மட்டும், இயற்கை முறையில நாட்டு எள் சாகுபடி செஞ்சோம். 320 கிலோ மகசூல் கிடைச்சது. அதை அப்படியே முழுமையா எண்ணெயாக ஆட்டினோம். 160 லிட்டர் நல்லெண்ணெய் கிடைச்சது. ஒரு லிட்டர் 300 ரூபாய்னு விற்பனை செஞ்சோம்.
இயற்கை முறையில உற்பத்தி செஞ்சது னாலயும், எண்ணெய் நல்லா வாசனையாவும் சுவையாவும் இருந்ததுனாலயும் ஏகப்பட்ட வரவேற்பு. எங்க ஊர் மக்கள், எங்க அம்மா கூட ஸ்கூல்ல வேலை பார்க்குற டீச்சர்ங்க, சொந்தக்காரங்க, நண்பர்கள்னு நிறைய பேர் எண்ணெய் கேக்குறாங்க. நாங்க எள்ளா வாங்கிக்கிட்டுப் போயி ஆட்டிக்குறோம்னு சொல்லி, நிறைய பேர் எள்ளும் கேட்டு இருக்காங்க. இதனால்தான் இந்த வருஷம் மாசிப்பட்டத்துல 6 ஏக்கர்ல நாட்டு எள் சாகுபடி செஞ்சோம். போன வருஷத்தைவிட இந்த வருஷம் செடிகள் வளர்ச்சி ரொம்பவே சிறப்பா இருந்துது. கிளைகளும் அதிகமா இருந்துது. ஒரு செடிக்கு 100 – 150 காய்கள் உருவாகி இருந்துச்சு.
ஏக்கருக்கு 360 கிலோ வீதம் எள் மகசூல் கிடைச்சிருக்கு. இதுல 180 கிலோவை எள்ளாகவே விற்பனை செய்யப் போறோம். கிலோவுக்குக் குறைந்தபட்சம் 120 ரூபாய் வீதம், 21,600 ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதி 180 கிலோ எள்ளை, ரோட்டரில கொடுத்து எண்ணெயா ஆட்டினால், 90 லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டருக்கு 300 ரூபாய் வீதம், 27,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
ஆக மொத்தம் ஒரு ஏக்கர் எள் சாகுபடி மூலம், 48,600 ரூபாய் வருமானம் கிடைக்கும். ரோட்டரியில எள்ளோடு, வெல்லம் போட்டு ஆட்டுறதுனாலயும், எண்ணெய் ஆட்டுக்கூலிக்காகவும் என்கிட்ட பணம் வாங்குறதுக்குப் பதிலா, புண்ணாக்கை அவங்களே வச்சிக்குவாங்க. ஒரு ஏக்கர்ல எள் சாகுபடி செய்ய 13,000 ரூபாய்ச் செலவாகும். இந்தச் செலவு போக, 35,600 ரூபாய் லாபமா கிடைக்கும். 6 ஏக்கர் எள் சாகுபடி மூலம் 2,13,600 ரூபாய் லாபம் கிடைக்கும்’’ என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
தொடர்புக்கு, ஆலிவர்,
செல்போன்: 95850 90670.
இப்படித்தான் எள் சாகுபடி
ஒரு ஏக்கரில் எள் சாகுபடி செய்வது குறித்து ஆலிவர் சொல்லியவை பாடமாக இடம் பிடிக்கிறது…
சம்பா பட்டத்தில் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்து, அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் மாசி மாதம், இரண்டு சால் புழுதி உழவு ஓட்டி, மண்ணை ஈரப்படுத்தும் அளவுக்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்த 5 நாள்கள் கழித்து, மண்ணைக் கையில் எடுத்துப் பார்த்தால், கையில் மண் ஒட்ட வேண்டும். அதேசயம், கையை உதறினால், மண் கீழே உதிர்ந்து விட வேண்டும். விதை எள் தெளிப்பதற்கு இந்த மண் பக்குவம் அவசியம். மீண்டும் இரண்டு சால் உழவு ஓட்டி, ஏற்கெனவே விதைநேர்த்தி செய்து தயாராக வைத்துள்ள 3 கிலோ விதை எள்ளை, மாலை நேரத்தில் நிலம் முழுக்கப் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் தெளிக்க வேண்டும். ஏதேனும் ஒரு சில பகுதிகளில் விதை விழாமல் விடுபட்டிருந்தால் அதைக் கண்காணித்து அங்கு விதை தெளிக்க வேண்டும். விதைகளுக்கு இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும். மிகவும் நெருக்கமாக இருந்தால் அதிக எண்ணிக்கையில் கிளைகள் உருவாகாது. இதனால் மகசூல் குறையும்.
15-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் திறன்மிகு நுண்ணுயிர் திரவம்(இ.எம்), 2 லிட்டர் பஞ்சகவ்யா, தலா 100 மி.லி மில்லி அமிலம், வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 25-ம் நாள் சுமார் 20 கிலோ மணலுடன் தலா 250 மி.லி அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா திரவம் கலந்து நிலம் முழுவதும் பரவலாகத் தெளிக்க வேண்டும். 30-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 4 லிட்டர் பஞ்சகவ்யா, 3 லிட்டர் திறன்மிகு நுண்ணுயிர் திரவம், 200 லிட்டர் மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 37-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 1.5 லிட்டர் பத்திலை கஷாயம் கலந்து தெளிக்க வேண்டும். 40-ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 44-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் தேமோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 50-ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 55-ம் நாள் ஏற்கெனவே சொன்ன அளவில் மீண்டும் தேமோர் கரைசல் தெளிக்க வேண்டும். காய்கள் நெத்தாக முற்றி, 70-80 நாள்களில் அறுவடைக்கு வரும்.
எள் வயலுக்கு வரும் தேனீக்கள்
‘‘நாங்க ரசாயன முறையில் எள் சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தப்ப தேனீக்களோட நடமாட்டத்தைப் பார்க்குறது ரொம்பவே அரிதா இருக்கும். ஆனா, இப்ப இயற்கை விவசாயத்துக்கு மாறின பிறகு, அதுவும் குறிப்பா பூப்பூக்கும் தருணத்துல தேமோர் கரைசல் தெளிச்ச அடுத்த சில மணிநேரங்கள்லயே, வயல் முழுக்கத் தேனீக்கள் நிறைஞ்சிருக்குறதை கண்கூடா பார்த்தோம்.
எங்கள் பகுதிகள்ல நெல் சாகுபடியில குருத்துப்பூச்சித் தாக்குதல் அதிகமா இருக்கும். இதைத் தடுக்க, வரும் முன் காப்போம் நடவடிக்கையா இந்தப் பகுதியில உள்ள விவசாயிகள், நாற்று நடவு செஞ்ச 10-ம் நாள் வீரியமான குருணை மருந்து தெளிப்பாங்க. அது நுண்ணுயிரிகளை உடனடியா கொல்லக்கூடிய கொடிய விஷம். குருணை மருந்து தெளிச்ச வயல்கள்ல மண்புழுக்கள் செத்துக்கிடக்கிறதைக் கண்கூடா பார்க்கலாம். ஆனால், எங்க அம்மா ரசாயன விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தப்பகூட, குருணை மருந்தை தவிர்த்துடுவாங்க. குருத்துப்பூச்சித் தாக்குதலைத் தடுக்க, நாற்று நடவு செய்றதுக்கு முன்னாடியே, அடியுரமா எருவோடு வேப்பம் புண்ணாக்கு கலந்து போட்டுடுவாங்க. பூச்சிக்கொல்லிகளையும் முடிஞ்சவரைக்கும் ரொம்ப குறைவாதான் பயன்படுத்துவாங்க’’ என்கிறார் ஆலிவர்.
விதை நேர்த்தி
3 கிலோ விதை எள்ளுடன், தலா 250 மி.லி திறன்மிகு நுண்ணுயிர் திரவம் (இ.எம்), ஆறிய சோற்றுக்கஞ்சி, 100 மி.லி பஞ்சகவ்யா கலந்து 20 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி, அதன் பிறகு சாகுபடி நிலத்தில் தெளிக்க வேண்டும்.
https://www.vikatan.com/news/agriculture/how-to-get-income-from-sesame-cultivation
Leave a Reply
You must be logged in to post a comment.