கிரகணங்களினால் தோசங்கள் ஏற்படுகிறது என்று சோதிடர்கள் தமிழ்மக்களை ஏமாற்றுகிறார்கள்!
நக்கீரன்
இந்த ஆண்டு நிகழவிருக்கும் இரண்டு சந்திர கிரகணங்களில் முதல் சந்திர கிரகணம் நாளை மே 16 ஆம் தேதி நிகழவுள்ளது. தொடர்ந்து நொவெம்பர் 8 ஆம் தேதி, இரண்டாவது சந்திர கிரகணம் நிகழும்.
கிரகணம் (eclipse) வட மொழிச் சொல். தமிழில் நிலா மறைப்பு என்று சொல்கிறோம். வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், இது வழக்கமான ஒரு வானவியல் நிகழ்வு ஆகும். அண்ட வெளியில் பல வானியல் உடலிகள் (heavenly bodies) வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது, சில சமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடலாம். அப்போது அந்த வானியல் உடலிகள் நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும். இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும் போது, மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, சந்திர அல்லது சூரிய கிரகணம் என்று சொல்லப் படுகிறது. கிரகணம் என்பது சமஸ்கிருத சொல். இதனை முறையே ஞாயிறு மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்று அழைக்கிறார்கள்.
பன்னாட்டு நேரப்படி மே16 ஆம் தேதி பவுர்ணமி நாளன்று அதிகாலை 1.32 மணிக்குத் தொடங்கி விடிய காலை 6.50 மணி வரை சந்திர கிரகணம் அல்லது நிலா மறைப்பு (lunar eclipse) நடைபெறயிருக்கிறது. இந்திய நேரப்படி காலை 7.02 மணிக்கு தொடங்கி மதியம் 12.20 மணி வரை நடக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்தச் சந்திர கிரகணத்தை இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து பார்க்க முடியாது. இந்த கிரகனமானது தெற்கு மற்றும் மேற்கு அய்ரோப்பா, வட அமெரிக்காவின் குறிப்பிட்ட பகுதிகள், தென் அமெரிக்கா, இந்திய பெருங்கடலின் சில பகுதிகள், தெற்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் சந்திர கிரகணத்தைப் பார்த்து இரசிக்க முடியும். இந்த ஆண்டில் (2022) இரண்டு சந்திர கிரகணங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டில் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் நிகழும் மிக நீண்ட முழுச் சந்திர கிரகணம் இது ஆகும். இதன் மொத்த காலம் 1 – 2 மணி நேரத்துக்கு மேலாகவும் நிகழ்கிறது. முழு சந்திர கிரகணம் ஆனது தெற்கு அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் பார்க்கக் கூடியதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திர கிரகணத்தை நாசா நேரடி ஒளிபரப்புச் செய்கிறது. அதிகாரப்பூர்வ நாசா இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் அதை நேரடியாகப் பார்க்கலாம். நாசா தனது சமூக ஊடக தளங்களிலும் அதிகாரபூர்வ யூடியூப் சேனலிலும் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பும்.
சந்திரன் பூமிக்கு நடுவில் காலை 7.57 நுழையத் தொடங்குகிறது. மேலும் குறிப்பிட்ட சமயங்களில் சந்திரனின் பகுதி மிகவும் கருமையாகத் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது. முழுச் சந்திரனும் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் இருக்கும் நேரத்தில் செம்பு – சிவப்பு நிறமாக காட்சியளிக்கும் என்பது குறிப்பிடதக்கது. கிரகணத்தின் முழுக் கட்டம் 8.59 மணிக்கு நிகழ்கிறது.
சூரியனுக்கும், இடையில் உள்ள நேர்க்கோட்டில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சூரிய கிரகணம் முழு அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலா /பவுர்ணமி நாளிலும் இடம்பெறுகிறது. அது போலவே சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் ஒரு நேர்க்கோட்டில் நிலா வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரிய ஒளி பூமி மீது விழாமல் சந்திரன் தடுக்கும்.
பொதுவாக ஆண்டில் 2 – 5 முறை சந்திர கிரகணம் நிகழும். முழுச் சந்திர கிரகணம் என்பது மூன்று ஆண்டுகளுக்கு 2 முறையாவது நிகழும். ஒரு முழுமையான சந்திர கிரகணத்தின் போது நிலவு பளிச்சென இரத்தச் சிவப்பு நிறத்தில் மிளிரும் என்பதால் அதை Blood Moon என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
நாம் வாழும் பூமி, சூரிய குடும்பம் என்னும் வான்வெளி குடும்பத்தின் உறுப்பினர். நாம் வான்வெளியில் அந்தரத்தில் மிதந்து கொண்டு இருக்கிறோம். இந்த உண்மை பலருக்குத் தெரியாது. சூரியன் அந்தரத்தில்தான் மிதந்து கொண்டு, தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, அது பிறந்த பால்வழி மண்டலத்தையும் சுற்றி வருகிறது. அது போலவே அதன் ஈர்ப்பு விசையால் அதனைச் சுற்றி எட்டுக் கோள்களும் அவற்றின் துணைக்கோள்களும் அவற்றுக்கு இடையே காணப்படும் ஏராளமான வால் நட்சத்திரங்களும் அடங்கியள்ளன.
நாம் அனைவரும் – மக்கள், வீடுகள், ஆறுகள் மற்றும் மலைகள் – தொடர்ந்து வினாடிக்கு 530 கிலோமீட்டர் வேகத்தில் விண்வெளியில் நகர்கிறோம். நமது விண்மீன் மண்டலத்தின் உள்ளே, நாம் 225 கிமீ/வி வேகத்தில் நகர்கிறோம், அதே சமயம் நமது அண்டம் (galaxy) 305 கிமீ/வி வேகத்தில் விண்வெளியில் விரைகிறது. இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் போதே பூமி உங்களை 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு கொண்டு சென்றுவிடும். ஒவ்வொரு ஆண்டும், சந்திரன் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 4 செ.மீ தொலைவில் நகர்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று பூமியின் சுழற்சி காலம் ஒரு நாளைக்கு 2 மில்லி விநாடிகள் குறைவது ஒன்றாகும்
நமது சூரியன் உட்பட 100 பில்லியன் நட்சத்திரங்களைக் கொண்டுள்ள பால்வெளி அண்டமாகும் (Milkyway Galaxy). இதன் விட்டம் 75 000 Ly ஒளி ஆண்டுகள் ஆகும். இதனுடன் சூரியனை ஒப்பிடுகையில் மிக மிகச் சிறிதாகும். பால்வெளி அண்டத்தின் மத்தியில் இருந்து 2/3 பங்கு தூரத்தில் அதன் சுருளில் அமைந்துள்ளது. அண்டம் எனப் படுவது (Galaxies) நட்சத்திரங்கள், வாயுப் படை மற்றும் தூசுகள் இணைந்த மிகப் பெரிய முகில் அல்லது இவற்றின் மொத்த ஈர்ப்பு விசையின் மையம் ஆகும்.
நமது சூரிய மண்டலம்.
வான் வெளியில் சூரிய மண்டலம் மட்டும் தனியாக இல்லை. இரவு வானில் தென்படும் ஒவ்வொரு விண்மீன்களும், ஒவ்வொரு சூரிய குடும்பம்தான். அதிலும் நம் பூமி போல கோள்களும், அதனைச் சுற்றித் துணைக்கோள்களும் காணப்படுகின்றன. ஒவ்வொரு கோளும் யாரும் பிடித்துக் கொள்ளாமல் தனியாகவே ஈர்ப்பு விசையால் அந்தரத்தில் சுற்றுகிறது. அது போலவே துணைக்கோள்களும் வான் வெளியில் அந்தரத்திலேயே தமது கோளைச் சுற்றி வருகின்றன. எல்லோரும் பள்ளிப் பாடத்தில் சூரியனை பூமி சுற்றுகிறது என்றும், பூமியை சந்திரன் சுற்றிவருகிறது என்றும் படித்திருப்போம். ஆனால் கோள்கள், துணைக் கோள்கள் மற்றும் சூரியனும் அந்தரத்தில் யாருடைய பிடிமானமும் இன்றி சுற்றுகின்றன என்பதே யதார்த்தமாகும்.
500
நமது பூமி சூரியனை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. அதுபோல சந்திரன் பூமியை ஒரு வட்ட பாதையில் சுற்றிவருகிறது. இரு வட்ட பாதைகளும் பூமி சுற்றி வரும் வடபுலத்திலும் மற்றும் தென்புலத்திலும் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளும். இந்த வடபுல வெட்டுப் புள்ளி ‘இராகு‘ எனவும், அதுபோல தென்புல வெட்டுப் புள்ளி ‘ கேது‘ எனவும் கூறப்படுகிறது. சோதிடம் குறிக்கும் ஒன்பது கோள்களில் இந்த இரு கிரகங்களும் சாய கிரகங்கள் என்றழைக்கப்படும் நிழல் கோள்களாகும்.
பண்டைய காலத்தில் சந்திர, சூரிய கிரகணங்கள் எப்படி ஏற்படுகிறது என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இராகு, கேது என்ற பாம்புகள் சந்திரனையும் சூரியனையும் விழுங்குவதாக நினைத்தார்கள். ஊர்ப்புறங்களில் இப்போதும் கிரகணம் முடிந்த பின்னரே சமைக்கத் தொடங்குகிறார்கள். கிரகண காலத்தில் உணவு நஞ்சாகிவிடும் என்ற அச்சமே அதற்குக் காரணம் ஆகும். சோதிடத்தில் இந்த இராகுவும் கேதுவும் எதிர் எதிர் திசையில் பயணம் செய்கின்றன. சூரியன், சந்திரனை பழிவாங்க இராகுவும் கேதுவும் பிரம்மாவிடம் தவமிருந்து வரம் பெற்றனர். ஒரு ஆண்டிற்கு நான்கு முறை சூரியன், சந்திரனின் பார்வை பூமியின் மேல் விழாமல் இருக்கும் என்ற வரத்தை பிரம்மா கொடுத்தார்.
மேற்குலக பண்பாடுகளிலும் இப்படியான புராணக் கதைகள் உண்டு. சந்திர, சூரியனின் வெள்ளி போன்ற ஒளியைத் திருடிக் கொள்வதற்காக அரக்கர்கள் அவற்றைத் திருடிக் கொண்டு போய்விட்டதாக நம்பினார்கள். நாகரீகம் வளர்ச்சி அடைந்து விட்டாலும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய அறிவு இன்னும் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
ஆனால் மேலை நாட்டு வானியலாளர்கள், குறிப்பாக கிரேக்க வானியலாளர்கள், வானியல், இயற்பியல், புவியியல் போன்ற நுண்ணறிவியலுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். சந்திர, சூரிய கிரகணங்கள் ஏதனால் ஏற்படுகின்ற என்பதைக் கணித்து வைத்துள்ளார்கள்.
அறிவியல் அடிப்படைடயில் பூமி உருண்டை என முதலில் கூறியவர் பைலோலாஸ் (கிமு 450) எனும் கிரேக்கர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரோட்டஸ்தனிஸ் எனும் கிரேக்கர் பூமியின் சுற்றளவை தோராயமாக கணக்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய துல்லியமான கணக்கீடு 24902.4 மைல் ஆகும். அதே கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஹிப்பார்க்கஸ் என்பவர் பூமியை நெடுநிரைக்கோடு, அகலக்கோடு எனும் கற்பனைக் கோடுகளால் பூமியைப் பிரித்தார். கிபி இரண்டாம் நூற்றாண்டில் உரோமரின் கீழிருந்த எகிப்தில் வாழந்தவர். இலங்கை உட்பட பூமியை வரைபடமாக வரைந்தார். வானியல் துறைசார் நூலாகிய Almagest (பெருநூல்) என்ற நூலை எழுதினார். அரிஸ்தோட்டலின் புவி மையக் கோட்பாட்டை அப்படியே ஏற்றுக் கொண்டவர்.
இவர்களில் சந்திர கிரகணம் சூரிய கிரகணங்களைக் கணித்தறியும் முறை, வானில் சந்திரன் சூரியன் ஆகியவற்றின் அளவு (சுமார் அரை பாகை), விண்ணில் சூரியன் செல்வது போல் தோன்றும் சூரியப்பாதை, சம இரவு, சம பகல், கதிர்த் திருப்பநாள்கள் பற்றிய கணிப்புகள், ஆகிய வானவியல் ஆய்வுகளுக்கு ஹிப்பார்க்கஸ் முன்னோடி ஆவார். ஒரு கிரகணம் ஏற்பட்ட பின்னர் மறு கிரகணம் எப்போது நடைபெறும் என்பதையும் கணித்துச் சொல்லியிருக்கிறார்.
கிரகண காலங்களில் ஆலயங்களில் வழிபாடுகள் செய்யப்படுவதில்லை. பயம் காரணமாக ஆலய நடையை மூடிவிடுகிறார்கள். கிரகணங்கள் முடிந்த பின்பு நன்றாக சுத்தம் செய்து முடித்த பின்னரே ஆலயங்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்படுகிறது. இந்த சந்திர கிரகணம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் தெரியாது என்பதால் ஆலயங்களில் வழக்கமான வழிபாடுகள் நடைபெறலாம்.
வழக்கம் போல சோதிடர்கள் இந்தச் சந்திர கிரகணத்தால் எந்தெந்த இராசிக்காரர்களுக்கு தோசம், யார் யாருக்கு அதிட்டம் ஏற்படப் போகிறது எனப் பலன் சொல்லப் புறப்பட்டுவிட்டார்கள். எடுத்துக்காட்டாக ஒரு சோதிடது சொல்லும் பலன்களைப் பார்ப்போம்.
மேடம்: மேட இராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் இந்த சந்திர கிரகணம், பல பாக்கியங்களையும் கொடுக்கும். குறிப்பாக தொழில் மற்றும் பணியிடங்களில் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் முன்னேற்றம் அடைவார்கள், பண வரத்தும் இருக்கும். முதலீடு செய்வதற்கும் இது நல்ல நேரமாக இருக்கும்.
சிம்மம்: சிம்ம இராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் மிகவும் சிறப்பாக அமையும். வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறலாம். வருமானம் கூடும். பண வரவு சாதகமாக இருக்கும்.
ரிஷப இலக்னத்தில் பிறந்தவர்கள் காந்தம் போல ஈர்க்கும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் சாதகமான பலனைத் தரும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஆனால், அதை சரியாக பயன்படுத்தி பலனடைவதுதான் உங்கள் கையில் இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களும் வேலை செய்பவர்களும் முன்னேற்றம் அடைவார்கள், செல்வமும் செல்வாக்கும், சொல் வாக்கும் அதிகரிக்கும் நேரம் இது. பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் நல்ல நேரம் இது.
உலக மக்கள்தொகை கணக்கெடுப்பில் 2018 ஆம் ஆண்டில் மக்கள்தொகை 760 கோடியாக உள்ளது. அதே ஆண்டில் இந்திய மக்கள் தொகை 134 கோடியே 80 இலட்சம். சீனாவின் மக்கள் தொகை 141 கோடி
ஆனால் சோதிடர்கள் இந்த 760 கோடி மக்களையும் 12 இராசிகள் 27 நட்சத்திரங்களில் அடக்கி விடுகிறார்கள். அதாவது ஒரு இராசிக்கு தோரோயமாக 64 கோடி மக்கள். இவர்களுக்கு ஒரேவிதமான வாழ்க்கை இருக்கிறதா? இருக்க முடியுமா? ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர்களது வாழ்க்கையே ஒன்றாக இருப்பதில்லை.
உரோம கிரேக்க மக்கள் விண்ணில் வலம் வரும் கோள்களை தெய்வங்களாக நினைத்து போயில் கட்டிக் கும்பிட்டார்கள். ஆனால் அறிவியல் வளர்ச்சி அடைந்தபோது அந்தத் தெய்வங்களை அருங்காட்சியகத்தில் வைத்துவிட்டார்கள். ஆனால் இந்துத் தமிழ்மக்கள் மட்டும் அந்தக் கோள்கள் தெய்வங்கள் என எண்ணிக் கோயில் கட்டி கும்பிடு வருகிறார்கள்.
சோதிடர்கள் கிரகண தோசங்கள் உட்பட எல்லாவித தோசங்களுக்கும் பரிகாரம் காணலாம், காலம் சரியில்லை என்றால் யாகம் செய்யலாம், பூசை செய்யலாம் என்கிறார்கள். எந்த ஒரு செயலும் பூர்வ புண்ணிய விதிப்படிதான் நடக்கும் என்றாலும் பாதிக்கப்பட்ட கிரகங்களுக்கு மந்திர ஜெபங்கள் செய்வதன் மூலம் விமோசனம் கிடைக்கும் என்கிறார்கள்.
கிரகணங்களினால் தோசங்கள் ஏற்படுகிறது என்று சோதிடர்கள் சொல்லி தமிழ்மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள்!
Leave a Reply
You must be logged in to post a comment.